வரலாற்று ஆய்வைப் புதைத்துவைப்போம்!

மறைந்த தமிழறிஞர் வ.அய். சுப்பிரமணியம் நாகர்கோவில் எஸ்.எல்.பி. மைதானத்தில் மாலை வேளையில் நடைப்பயிற்சிக்கு வருவதுண்டு. நடுவே ஒரு சிறிய சுவரில் அமர்ந்து ஓய்வெடுப்பார். பல சமயம் அவருடன் நண்பர்கள் இருப்பார்கள். நான் ஓரிரு முறை சென்று மரியாதை நிமித்தம் வணக்கம் சொல்லிவிட்டு வந்தேன். அதிக நெருக்கமில்லை.

ஒருநாள் அவர் தனியாக அமர்ந்திருந்தார். என்னுடன் ஒரு தமிழறிஞர் இருந்தார். அவர் வ.அய். சுப்பிரமணியத்திடம் பேச விரும்பினார். நான் தயங்கினாலும் தமிழறிஞர் நேராகச் சென்று அறிமுகம் செய்துகொண்டார். ‘ஐயா அவர்கள் எனக்கு ஆய்வுக்கு உதவிசெய்ய வேண்டும். உங்கள் நிறுவனத்தின் ஏதாவது சிறிய நிதியுதவியாவது கிடைத்தால் போதும்‘என்றார். வ.அய். சுப்பிரமணியம் அப்போது குப்பம் திராவிடப் பல்கலைக்கழகத்துடன் தொடர்புகொண்டிருந்தார்.

‘நீங்கள் ஏன் ஆய்வுசெய்ய வேண்டும்?’என்றார் வ.அய். சுப்பிரமணியம்.

‘அய்யா, புரியவில்லை”

‘நீங்கள் ஆய்வு செய்ய வேண்டிய தேவை என்ன?’

‘அய்யா…அதாவது இந்த விஷயம்…இது…’ தமிழறிஞர் எதையோ விளக்க முற்பட்டார்.

‘அதை நாங்கள் பல்கலைக்கழகத்திலே செய்துகொள்கிறோம். நீங்கள் என்ன செய்கிறீர்கள்?’

‘நான் அரசு ஊழியர்…’

‘அதைச் செய்யுங்கள்…போகலாம்‘என்று கைகூப்பிவிட்டார்.

நான் மேலும் சில நாட்கள் கழித்து வ.அய். சுப்பிரமணியத்தை மீண்டும் சந்தித்தேன். ‘முறையான கல்வித் தகுதி உடையவர்கள் மட்டும்தான் ஆய்வுசெய்ய வேண்டும், மற்றவர்கள் வேறு வேலை பார்க்கட்டும் என நினைக்கிறீர்களா?’என்றேன்

‘கே.என். சிவராஜ பிள்ளைதான் தமிழிலக்கிய வரலாற்றாய்வுக்கு முன்னோடி. அவர் தமிழ் படித்த பேராசிரியர் இல்லை. காவல் துறை அதிகாரியாக இருந்தவர்‘என்றார் வ.அய். சுப்பிரமணியம்.

‘ஆனால்..’என நான் ஆரம்பித்தேன்.

கையை ஆட்டி இடைமறித்து ‘உலகம் முழுக்கத் தொழில்முறை ஆய்வாளர்கள் அல்லாத ஆய்வாளர்கள் பெரிய பங்களிப்பாற்றியிருக்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் அவர்களை எல்லாம் கொஞ்ச காலத்துக்கு முழுமையாகவே தவிர்க்க முடிந்தால்தான் ஏதாவது உருப்படியாக நடக்கும்‘என்று உரத்த குரலில் சொன்னார்.

அன்று வ.அய். சுப்பிரமணியம் சொன்னவற்றை இவ்வாறு சுருக்கிச் சொல்லலாம். எந்த ஓர் ஆய்வுக்கும் அதற்கான முறைமை என ஒன்று உண்டு. ஆய்வாளனுக்கும் அவனுடன் விவாதிப்பவர்களுக்கும் அது இன்றியமையாதது.

ஓர் ஆய்வாளன் முதலில் எல்லாத் தரவுகளையும் முழுமையாகத் திரட்டவேண்டும். அந்தத் தரவுகளைச் சீராகத் தொகுத்து அதன் வழியாக தன் முடிவுகளை அடைய வேண்டும். அந்த முடிவுகளை அடைந்த தர்க்க முறையை விளக்கி அம்முடிவுகளைப் பொதுப் பார்வைக்கு வைக்க வேண்டும்.

எந்த ஓர் ஆய்வு முடிவும் அதை மறுப்பதற்கான வழி என்ன என்பதையும் சேர்த்தே முன்வைக்கப்பட வேண்டும். அதாவது பொய்ப்பித்தலுக்கான பாதை திட்டவட்டமாக இல்லாத முறைமை என்பது அறிவுலகில் இருக்க முடியாது. இந்தந்த ஆதாரங்களின் அடிப்படையில் இந்தந்த தர்க்கங்களைச் சார்ந்து இக்கருத்தை நான் உண்மை என முன்வைக்கிறேன், இந்த ஆதாரங்களைத் தவறென நிரூபித்தாலோ இந்த தர்க்க முறைகள் பொருத்தமற்றவை என்று நிறுவினாலோ நான் இந்தக் கருத்து பொய் என ஒப்புக்கொள்கிறேன் என்று சொல்லி முன்வைக்கப்படுவதே ஆய்வுண்மை.

ஆனால் நம் அறிவுச் சூழலில் முறைமையே காணக் கிடைப்பதில்லை. இங்கே பலரால் ஆய்வு என்ற பேரில் முன்வைக்கப்படுபவை பெரும்பாலும் உணர்ச்சிரீதியான நம்பிக்கைகள்தான். அந்த நம்பிக்கைகளுக்கான ஆதாரங்களைத் தேடிக் கண்டுபிடிப்பதைத்தான் ஆய்வு என்ற பேரில் முன்வைக்கிறார்கள். அந்தத் தரப்பு மறுக்கப்பட்டால் கொதித்து எழுகிறார்கள். ஆய்வாளர்களுக்கான சமநிலையை இழந்து தாக்குதல்களை ஆரம்பிக்கிறார்கள்.

இன்று தமிழகத்தில் சாதி அரசியலின் காலகட்டம். இன்று ஒவ்வொரு சாதியும் ஒருபக்கம் தன்னை ஒடுக்கப்பட்ட சாதியாக முன்வைக்கிறது. மறுபக்கம் தன்னை ஆண்ட பரம்பரை என்று சித்தரிக்க முயற்சி எடுத்துக்கொள்கிறது. அதற்கு அவர்கள் படையெடுக்கும் களம் வரலாற்றாய்வும் இலக்கிய ஆய்வும். உண்மையான போர் இன்று அங்கேதான் நடந்துகொண்டிருக்கிறது. எந்த நெறிகளும் இல்லாத நேரடியான வன்முறை அது.

சாதாரணமாக நம் சுவரொட்டிகளைப் பார்த்தாலே போதும் வரலாறு என்ன பாடுபடுகிறது என்று தெரியும். தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்களும் தாங்களே என்று தமிழகத்தின் ஐந்து சாதிகள் அறைகூவுகின்றன. பல்லவர்கள் தாங்களே என்று சொல்கிறார்கள் சிலர். முந்நூறு வருடம் தமிழகத்தை ஆண்ட களப்பிரர் நாங்களே என்று இரண்டு சாதிகள் முட்டிக்கொள்கின்றன. இந்தச் சண்டை அதன் கீழ்த்தர எல்லையில் இணைய உலகில் வசை மழையுடன் நடந்துவருகிறது.

தமிழ்ப்பெருமித வரலாற்றை நீங்கள் எழுதுவதாக இருந்தால் ஆதாரமே தேவையில்லை. ஓங்கிச்சொன்னாலே போதும், அது வரலாறு என கொள்ளப்படும். இன்னொரு பக்கம் ஒவ்வொரு சாதியும் தனக்கான வீர நாயகனை வரலாற்றில் இருந்து கண்டெடுக்கிறது. நேற்றுவரை இவர்கள் எங்கிருந்தார்கள் என்று ஆய்வாளர் கேட்க முடியாது. கேட்டால் அவர்களை மறைத்த பழிக்கு கேட்டவர்களே ஆளாக நேரிடும்.

தமிழக வரலாறு என்பது மிகமிகக் குறைவான தகவல்களின் அடிப்படையில் பெரும்பாலும் ஊகங்களாக மட்டுமே எழுதப்பட்டிருக்கும் ஒன்று. இலக்கியச் செய்திகள், ஓரிரு கல்வெட்டு வரிகளைக் கொண்டு நம் வரலாற்றை எழுதியிருக்கிறோம். சங்க காலத்து மாமன்னர்கள் பலரைப் பற்றி ஒரு தொல்லியல் ஆதாரம்கூடக் கிடையாது

இந்தக் குறைவான ஆதாரங்களில் இருந்து ஒரு வரலாற்றை ஊகிக்க முடிந்த நம் முன்னோடி வரலாற்றாசிரியர்கள் வணக்கத்துக்குரியவர்கள். எஞ்சியவற்றை எழுதும் பெரும் பணி மிச்சமிருக்கிறது.

சாதியவாதிகள் இந்தத் தெளிவின்மையைத்தான் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். இலக்கியச் சொற்களை விருப்பம்போல திரித்து ஆதாரமாகக் காட்டுகிறார்கள். ஒவ்வொரு சாதியும் வரலாற்றை ஒவ்வொரு திசைக்கு இழுக்கும்போது உண்மையான வரலாற்று விவாதத்துக்கான இடமே இல்லாமல் ஆகிறது.

ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த குழந்தை மாதிரி இருக்கிறது தமிழக வரலாற்றாய்வு. அதை மீட்க இப்போதைக்கு ஒருவழிதான் உள்ளது. வரலாற்றாய்வையும் இலக்கிய ஆய்வையும் அறிவுலக எல்லைக்குள்ளேயே நிறுத்தச் சொல்வோம். அதற்கு வெளியே சொல்லப்படும் எந்த ஒரு வரியையும், அது நம் சாதிக்கோ மதத்துக்கோ சாதகமானதாக இருந்தாலும், செவிகொடுக்க மறுப்போம். ‘உன் ஆய்வை சக ஆய்வாளர்களிடம் போய் சொல், அவர்களை ஏற்றுக்கொள்ளச் செய், அதன்பின் எங்களிடம் பேச வா‘என்று இந்த கத்துக்குட்டி ஆய்வாளர்களிடம் சொல்வோம்.

அறிவியக்கம் என்பது சமநிலை கொண்ட விவாதங்கள் மூலம்தான் நிகழ முடியும். பிரச்சாரம் மூலம் அல்ல. காலப்போக்கில் அவற்றில் தகுதியுள்ளவை தங்களை நிறுவிக்கொள்ளும். அதுவே வரலாறு என்பது! 

Sep 23, 2013 தமிழ் ஹிந்து நாளிதழில் வெளிவந்த கட்டுரை

 

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 19, 2022 11:35
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.