அகரமுதல்வன்'s Blog, page 19

April 19, 2024

ஆகாய மிட்டாய் – கல்பற்றா நாராயணன் கவிதை

மழையே

நீ வெயிலுடனா

காற்றுடனா

மின்னலுடனா

அலைபாயும் மரங்களுடனா

வயதடைந்தபின் செல்வாய்?

வயதாகும்தோறும் 

மழையை மழைக்கு பிடிக்காமலாகுமா?

https://www.kavithaigal.in/2024/03/blog-post_486.html

The post ஆகாய மிட்டாய் – கல்பற்றா நாராயணன் கவிதை first appeared on அகரமுதல்வன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 19, 2024 09:50

April 18, 2024

இந்த வாழ்வு

    01இரவின் பேராற்றைதேங்கச் செய்கிறதுகுழந்தையின் அழுகை.கண்ணீர் கனத்துகன்னங்கள் ஈரலித்துஎதற்காய் அழுகிறான்என் குழந்தை?இத்தனை தளும்பல்கள்இத்தனை பாஷைகள்எதுவும் உணர்த்தாதஅழுகையில்எத்தனையோ  நரம்புகள்அதிர்ந்து ஒலிக்கின்றன.    02இலைகளுதிர்ந்த மரத்தின் கிளையமர்ந்துஇறகுதிர்க்கும் பறவைநினைவின் திசையழிந்த புலனமர்ந்துஅதிர்ந்தெழும்.    03வண்ணத்துப்பூச்சியைவாத்துப்பூச்சிஒட்டகச்சிவிங்கியைஓச்சுவங்கிவரிக்குதிரையைவய்க்குதிரைபுலியைபுய்யிஎன்றழைக்கும் மகனின்மழலைச் சொல்கேட்டு வளர்கிறேன்.எவ்வளவு இனிமையானகாடுஇந்த வாழ்வு.

The post இந்த வாழ்வு first appeared on அகரமுதல்வன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 18, 2024 11:21

April 17, 2024

இந்திக் கவிதைகள் ஒரு அறிமுகம் – எம். கோபாலகிருஷ்ணன்

ஆதி காலக் கவிதைகளை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். முற்காலத்தில் வட இந்தியாவில் புழக்கத்திலிருந்த ‘அபபிரம்ச’ மொழித் தொகுதியிலிருந்து நவீன இந்தி உருவாகி வளர்ந்த காலத்தில் எழுதப்பட்டவை இவை. முதலாவது பக்தியும் சிருங்காரமும் ஒன்றிணைந்த மொழியில் எழுதப்பட்ட ‘சித்த’ இலக்கியம். பௌத்த மதத்தின் வஜ்ராயனப் பிரிவைச் சேர்ந்த துறவிகளால் இயற்றப்பட்டவை இவை. இரண்டாவதாக, ஏழாம் நூற்றாண்டு தொடங்கி பதினான்காம் நூற்றாண்டு வரையிலும் கோரக்நாத் உள்ளிட்ட கவிஞர்களால் ’தோஹா’ (இரண்டடிகள் கொண்ட கவிதை வகை), ‘சௌபாய்’ ஆகிய கவிதைகளான ‘நாத இலக்கியம்’. மூன்றாவது, ஜெயின் சிங் ஆகியோர் ஒழுக்கக் கோட்பாடுகளையும் இயற்கையையும் போற்றிப் பாடிய ’ஜெயின்’ இலக்கியம்.

https://www.kavithaigal.in/2023/03/blog-post_883.html

 

The post இந்திக் கவிதைகள் ஒரு அறிமுகம் – எம். கோபாலகிருஷ்ணன் first appeared on அகரமுதல்வன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 17, 2024 10:23

April 15, 2024

மா. அரங்கநாதன் இலக்கிய விருது – 2024

மா.அரங்கநாதன் இலக்கிய விருது – 2024 நிகழ்வு இன்று நடைபெறுகிறது. பல்வேறு ஆளுமைகள் பங்குகொள்ளும் இந்த விழாவில் நிகழ்ச்சித் தொகுப்பினையும் வரவேற்புரையையும் நிகழ்த்துகிறேன்.

The post மா. அரங்கநாதன் இலக்கிய விருது – 2024 first appeared on அகரமுதல்வன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 15, 2024 22:21

எம்முளும் உளன் ஒரு பொருநன்

மிழிலக்கியத்தின் வாசகர்களில் பெரும்பாலானோர் பட்டியல்களிலும் பரிந்துரைகளிலும் எழுத்தாளர்களைக் கண்டடைபவர்கள். நமது சூழலின் கெடுவாய்ப்பாகப் பட்டியல்களோ பரிந்துரைகளோ பெயர்களை மாற்றுவதில்லை. காலங்காலமாக நிரந்தர நாமங்களைப் பொறித்தே வெளியாகின்றன. முக்கியமான சில படைப்பாளிகளை வாசிப்பின் வழியாக அறியாது போகும் துயர் இப்படியாகத்தான் நிகழ்கிறது. “இளம் வாசர்கள்” எனக் கருதப்படுவோர் “கிளாசிக்” என்று பதிப்பகங்கள் உறுதி செய்யும் பனுவல்களை மட்டுமே வாசிக்கின்றனர். ஏற்கனவே வழிமொழியப்பட்டவை மட்டுமே இவர்களது கிளாசிக் மாயைகள். இதுபோன்ற வாசிப்புப் பண்பாட்டின் மீது சலிப்பும் கசப்பும் எழாமலில்லை.

இந்தச் சூழலில் மா. அரங்கநாதன் என்கிற எழுத்தாளரை அறியாத தமிழிலக்கிய வாசகர்கள் எண்ணிக்கையில் அதிகம். ஏனெனில் பரவலாக எங்குமே அவரது படைப்புகளோ, பெயரோ உச்சரிக்கப்படுவதில்லை. இன்றைக்கு எழுதவந்துள்ள புதுயுக எழுத்தாளர்களில் சிலரே மா. அரங்கநாதனை அறிந்திருக்கிறார்கள். அதிலும் அரிதானவர்கள் மட்டுமே அவரது படைப்புகளை ஒட்டுமொத்தமாக வாசித்திருக்கிறார்கள் என்று எழுதும் போது, மொழியின் மீது ஊழ் கவியாமலிருக்கப் பிரார்த்திக்கிறேன். இன்றைக்கு இலக்கியத்திற்குள் நுழைந்திருப்பவர்களுக்கு இனிவரும் என்னுடைய கூற்று குழப்பத்தையோ, வினோதத்தையோ உண்டாக்கும். ஆனாலும் அதுவே மெய்யானது. “பூர்வகால மொழியொன்றில் நிகழ்ந்த நவீனன் மா. அரங்கநாதன்.”

என்னுடைய வாசிப்பனுபவத்தில் சில படைப்பாளிகள் வியப்புக்குரியவர்கள். அவர்களின் படைப்பு வலிமையை எண்ணியெண்ணி மதிப்பிடுவேன். மு.தளையசிங்கமும் தி.ஜானகிராமனும் அப்படித்தான் என்னை ஆட்கொண்டனர். மரபளித்த சித்தாந்த ஞானம் செறிந்த படைப்பாளிகளுள் புதுமைப்பித்தன் மூலவர். பின்னர் இந்நிரையில் மா. அரங்கநாதன் வீற்றிருக்கிறார். இவரது படைப்புலகின் ஆழத்தையும் செறிவையும் நவீனச் சிந்தனை முறையோடு அறிந்துகொள்ளவே நம்மரபின் அறிமுகம் தேவைப்படும். அவரது படைப்புகளை வாசிக்கும் போழ்துகளில் இந்த எண்ணம் எழுவது தவிர்க்க இயலாதது. இந்த மதிப்பீடுகளை விமர்சகர்கள் உருவாக்கியிருக்க வேண்டும். ஆனால் நம்முடைய விமர்சக சூழலானது ஆளுக்கொரு விமர்சக அளவுகோல்களோடு கசப்புகளும் அவதூறுகளுமாய்த் தலைவிரித்து பிசாசுகளைப் போல அலையும் பாழ்வெளியாயிற்று. உருப்படியாய் இனி விளையுமென எண்ணவில்லை.

மா. அரங்கநாதன் நவீனத்துவ அழகியலைக் கச்சிதமான மொழியாற்றலுடன் முன்வைத்தவர். ஆனால் ஒருபோதும் நவீனத்துவ இறுக்கத்தையோ, இலக்கணத்தையோ அவசியமென எண்ணியவர் கிடையாது.  அவரது படைப்புகளின் வழியாகவே இந்த நெகிழ்வை அறியலாம். மரபு வேரிலிருந்து கிளைக்கும்  செவ்வியல் தன்மையைக் கதைகளாகவும், கதைகளுக்குள்ளும் முன்வைத்து அவர் நம்முடைய அறப்பிரக்ஞையைத்தான் அதிரச் செய்தார். ஒருவகையில் செவ்வியல் மரபிலிருந்து நவீனத்துவ வடிவத்திற்கு புத்துயிர்ப்பை வழங்கிய பங்களிப்பில் மா. அரங்கநாதனுக்கே பெறுபேறு அதிகம். இதுபோன்றதொரு படைப்பாளியின் இலக்கியப் படைப்புகளை மரபின் கனதியோடும் தத்துவார்த்தமான விழிப்புணர்வுடனும் முன்வைத்துப் பேசும் எவரையும் நான் இன்றுவரை சந்திக்கவில்லை. இதுவொரு ஆறாத நொம்பலமாய் என்னில் தரித்திருக்கிறது. “ மா.அரங்கநாதனின் படைப்புகள் வெறும் இலக்கியமாக நின்றுவிடுவதில்லை.  உண்மையில் அவை நிலையான அமைதி தேடும் மனித மனத்தின் சிறு அலைகள்” என்கிறார் அசோகமித்ரன். இந்த அனுமானத்தின் நீட்சியாகவே மா. அரங்கநாதனின் படைப்புகளை கண்டடையத் துணியலாம்.

மா. அரங்கநாதன் இருபதாவது வயதிலேயே எழுத ஆரம்பித்திருக்கிறார். பிரசண்ட விகடனில் வெளியான முதல் ஐந்து கதைகள் இன்று நம் வசமில்லை. இன்றுள்ள தொண்ணூறு சிறுகதைகளையும் இரண்டு நாவல்களையும் வாசிப்பின் நிமித்தம் தொகுத்தால் சிறந்த முன்னுதாரணப் படைப்பாளியாக அமைகிறார். காலத்தை மீறிக்கொண்டெழும் புதுப்பார்வையோடு தமது அக ஆழத்தைக் காணவழியற்று நிற்கும் மானுடரின் சாட்சியாகவும் தனது இலக்கியத்தை வெளிப்படுத்தினார். வாழ்க்கையின் அடிப்படையான அனுபவங்களிலிருந்து உள்ளுணர்வுக்கும் புறவுலக அறிவுக்குமாய் விரிந்த வீரியமான படைப்புக்களே இவரது கதைகள். நமது சிறுகதை மரபில் தமிழ் வாழ்வை அதனுடைய மரபு குலையாமல் உருவாக்கித் தந்தவருள் முதன்மையானவர்களுள் இவரையும் கருதலாம்.  நேரடித்தன்மையாக எதையும் சொல்லாத எழுத்துமுறையைத் தொடர்ந்து முயன்றார். அப்பட்டமானவற்றோடு முழுமையான யாத்திரையைத் தொடர்ந்தார்.

“புதுமைப்பித்தன் தாழ்ந்து போனவற்றை வெட்ட வெளிச்சமாக்கினார்” என்ற சுந்தர ராமசாமியின் கூற்றினை இந்த நூற்றாண்டில் மா. அரங்கநாதனின் படைப்புக்களுக்கான ஒரு திறவுகோலாக அமைக்க முடியும். ஓர் எளிய அறிமுகத்திற்காக இவரது படைப்புகள் குறித்து எழுதப்பட்டிருக்கும் மிகச்சில கட்டுரைகளில் வைதீக எதிர்ப்பைத் தொடர்ந்தவர் எனக் குறிப்பிடப்படுகிறது. இவரது வைதீக எதிர்நிலைப்பாடானது வெறுமென துண்டுப்பிரசுரமாகவோ, வறட்டுத்தனமான அறிக்கைகளாலோ நிகழ்ந்தது அல்ல. ஒரு பூர்வீக இனக்குழுவின் ஆதார ஞானத்தின் வலிமையினால் கதைகள் இயற்றி வைதீகத்தோடு பொருதினார். ஒருபொழுதும் ஆயத்த முற்போக்கு (Readymade progressive) கருத்துகளாலோ,  இலக்கிய உள்ளீடற்றோ, அவர் சமர் நிகழ்த்தவில்லை. மாறாக இலக்கியச் செழுமை கெடாமல் விவாதித்தார். பண்பாட்டின் உள்ளடக்கத்தோடு படைப்பை நிகழ்த்தினார்.  இவரது “காளியூட்டு” நாவலே இக்கருத்திற்கு மாபெரும் சான்று.

“பறளியாற்று மாந்தர்”களின் கதையானது காலங்களால் வகைப்படுத்தப்பட்டது. பூர்வீக நிலந்துறந்து  பிறிதொரு நிலத்தில் வேர் இறக்கிய வாழ்விலிருந்து நிகழ்கிறது. இயல்புவாத எழுத்தில் நவீன அழகியல் வந்திறங்கிய புதினம் இது. “மண்ணில் உயிரைக் காண்பதுவே ஞானம்” என்று கூறுகிற தம்பிரானை மா. அரங்கநாதனைத் தவிர எவர்தான் எமக்குத் தருவார்கள்.  அடையாளங்களை அழிவுக்கு இரையாக்கியவர்கள். முற்போக்கு என்ற பெயரில் தொன்மங்களைக் கைவிட்டவர்கள். பேருந்தில் உறங்கிக்கிடந்த சிவசங்கரனை மனைவி காந்திமதி எழுப்பி ஊரைக் காண்பிக்கிறாள். அவன் ஊரைப் பார்த்துவிட்டு மீண்டும் உறங்குகிறான் என்று முடியுமிந்த புதினத்தின் ஆற்றாமையும் கையறு நிலையும் ஒவ்வொரு வாசகனாலும் அர்த்தம் பெறுகின்றன. ஆரல்வாய்மொழி என்கிற ஊரின் நனவிடை தோய்தலாக மட்டுமே எஞ்சாதவொரு அசலான புதினம். இன்று உலகளாவிய அளவில் நிலத்தையும் தொன்மத்தையும் எழுதுவதன் மூலமாகப் படைப்பாளிகள் பலர் கொண்டாடப்படுகின்றனர். நவீன புனைவில் மரபின் தீவிரத்தைச் செலுத்துபவர்கள் இவர்கள். மண்ணின் மரபின் மீது பிடிப்பும் ஆவேசமும் கொண்ட நம்காலத்தின் முன்னோடியாக மா. அரங்கநாதனை மதிப்பிடலாம்.

நவீனத் தமிழ் உரை நடை இலக்கியத்தின் செவ்வியல் பரப்பு புதுமைப்பித்தனில் இருந்தே மங்கலமாய்த் தொடங்குகிறது. தமிழும் சைவமும் என்கிற பூர்வீகத் தொடர்ச்சியை நவீனப்பரப்பில் புதுமைப்பித்தனுக்குப் பிறகு மா. அரங்கநாதன் ஒருவரே சாத்தியப்படுத்தினார். அவரது புகழ்பெற்ற கதைகளின் தலைப்புகளும், பாத்திரப் பெயர்களும் இதற்கு எளிய உதாரணங்கள். அசலம் சிறுகதையில் முத்துக்கறுப்பனுக்கும் இராமனுக்குமிடையே நிகழும் உரையாடல் விசித்திரமும் சுவாரஸ்யமும் கொண்டது. அடியாழத்தில் கொந்தளிப்பானதொரு உலகியல் விடுபடல் மனநிலை விவாதம் செய்கிறது. குப்பத்து அருகிலுள்ள மண்டபத்தில் முத்துக்கறுப்பன் அண்ணாச்சி மாலையாக விழுந்து கிடப்பதற்கு முன்பு “இந்தக் கணத்தில நான் சுமந்த ஒண்ணை இறக்கி வைக்கத்தான் முடியும்” என்கிறார். “அண்ணாச்சி – அது ஓர் அசைவு – நிரந்தரமான அசைவு” என்கிறார் இராமன்.  இந்தக் கதையின் ஆதாரம் தலைப்பிலுள்ளது.

செவ்வியல் பின்னணியுடனான படைப்பாளியின் ஆக்கங்களின் விஸ்தீரணத்தை அறிந்துகொள்வது எளிய காரியமன்று. அதற்குமொரு பண்பாட்டுப் பின்னணி தேவைப்படுவது அவசியமாகிறது. படைப்பியக்கத்தின் அசலான வெளிப்பாடும் வாழ்வியல் அம்சங்களும் எழுத்தில் திரளும் போது இனக்குழுக் கூறுகளும் அணியாகின்றன. மா. அரங்கநாதனின் படைப்புகளில் வெளிப்படும் வேளாள வாழ்க்கைக் கூறுகள் வெறும் பெருமித உரைப்புகள் அல்ல. மாறாக அது அவர்களது ஆதிக்கத்தை நக்கல் செய்து சீண்டுகிறது.

அசலம் கதையில் வருகிற மேலத்தெரு ஆவுடையப்பப் பிள்ளை முத்துக்கறுப்பன் அண்ணாச்சியின் மறைவுச் செய்தியை சொல்லும் போது “ அண்ணாச்சி போயிட்டாகளாம் – ஆத்து மண்டபத்தில கிடக்காக – போயும் போயும் குப்பத்துப் பக்கம் தானா போயி கண்ணை மூடணும்” என்கிறார். ஆனால் கதை “குப்பத்துக்கு அருகில் மண்டபத்தில் சாய்ந்த மனிதருக்கு இதெல்லாம் தெரியாது. அவர் மாலையாய் விழுந்து கிடந்தார்” என்று முடிகிறது. இந்தக் கதையின் இறுதியில் நிகழ்வது ஒரு சீண்டல். அங்கேயா போய்ச் சாகவேண்டும் என்று கேட்கும் ஆவுடையப்பப் பிள்ளையின் கேள்விக்கு – சாய்ந்த மனிதருக்கு இதெல்லாம் தெரியாது என்பது எவ்வளவு ஆழமான பதில். அது எல்லாவற்றுக்குமான பதிலெனத் தோன்றுகிறது.

சமீபத்தில் என்னைச் சந்திக்க வந்திருந்த வாசகர்கள் சிலர், யாரையெல்லாம் வாசிக்கலாமெனப் பரிந்துரையுங்கள் என்றனர். எனக்குப் பரிந்துரைகள் மீது உவப்பில்லை என்றேன். ஆனாலும் அவர்கள் விடுவதாயில்லை. சரி சந்திப்பின் இறுதியில் சொல்ல முயற்சிக்கிறேன் என்று காலம் தாழ்த்தினேன். உரையாடலில் மா. அரங்கநாதனின் “வீடுபேறு” கதையைச் சொன்னேன். அவர்களில் சிலருக்குக் கதை புரிந்தபாடில்லை. நாற்பது வருடத்திற்கு முன்பிருந்த வீட்டினைப் பார்க்க வந்த பாலகிருஷ்ணனுக்கும் முத்துக்கறுப்பனுக்கும் இடையே நிகழும் உரையாடலிலும் எதுவும் புலப்படவில்லை என்றனர். வாய்ப்பிருந்தால் கதையை வாசியுங்கள் என்றுகூறி புத்தகத்தைக் கொடுத்தேன். ஒருவர் சத்தமாக வாசித்தார். நிறைவில் பாலகிருஷ்ணன் ஏன் அந்த அறையைப் பார்க்காமல் செல்கிறான்? வந்த வேலையை விட்டு இப்படிச் செல்கிறானே பைத்தியம் எனச் சிலர் ஏசவும் செய்தனர். இந்தத் தலைமுறையிடம் செறிவும் ஆழமும் கொண்ட தரிசனத்தைத் தேடுகிற பயிற்சியோ பக்குவமோ இல்லாது போனதன் சாட்சியாக அந்த அமர்வு இருந்தது. இந்தக் கதையை தத்துவார்த்த பின்புலத்தோடும் மரபின் பார்வையோடும் வாசித்தால் பாலகிருஷ்ணன் அறையப்பார்க்காமல் செல்வதற்கான காரணங்களை அறியலாம் என்றேன். கதையில் எதுவுமில்லையே என்றனர். ஒருகதை எல்லாவற்றையும் சொல்லாது என்று பேச்சை முடித்துக் கொண்டேன். வீடுபேறு கதையின் இறுதிப் பகுதியில் தான் மா. அரங்கநாதன் என்கிற நவீன செவ்வியலாளனின் உக்கிரம் படிந்திருக்கிறது என்று கருதுகிறேன்.

முத்துக்கறுப்பன் கேட்கிறார். “ பாலகிருஷ்ணன் – மறந்திட்டேளே – நீங்க பாக்கலியே- அந்த அறை – மேலே என்று கைதூக்கிக்  காட்டினார்.

இரண்டு அடிகள் அந்தப் பக்கமாகச் சென்றவர் திரும்பி வந்தார்

“நாங்க ஒருதடவை கான்ஸாஸ் ஸிட்டி வரை பஸ் பயணம் செய்தோம். வழியிலே ஒரு கிழவி – நூறு வயது சொல்லலாம் – பஸ் படிக்கட்டில் ஏற முடியாமல் – ஆனால் – கம்பீரமாக முயன்று கொண்டிருந்தாள். எடித் முதலில் அவளை ஏற்றி சீட்டில் உட்கார வைத்தாள். ரொம்ப காலமாகிப் போச்சு – நேற்றைக்குத் திண்டிவனத்திலே பஸ் ஸ்டாண்டில் ஒரு கிழவி கம்பையூன்றிக் கொண்டே ஏற, எடித் உதவி செய்ய எழுந்தாள். பிறகு பேச்சுக்கொடுத்துப் பார்த்தேன் – அந்தக் கான்ஸாஸ் ஸிட்டி சம்பவம் அவளுக்கு ஞாபகமேயில்லை.”

விட்டத்தை ஒருதடவை பார்த்துவிட்டு வேண்டாம் என்றார். “ நமக்கு கூடிப்போனால் இன்னும் இருபது வருஷம் ஆயுளிருக்கும். அது போதாது – என்ன தோன்றுகிறது என்றால்…”

ஆனால் முடிக்கவில்லை. “இல்லை” என்பது போல தலையசைத்துக் கொண்டார். இருவருக்கும் ஒரே சமயத்தில் ஏற்பட்ட சிரிப்பால் ஒரு புதுமலர்ச்சி தோன்றிற்று.  “நான் போய் வாரேன்”  என்று பாலகிருஷ்ணன் இறங்கி அந்தச் சாலையில் ஆசையாய் நடந்தார்.

இதுதான் வீடுபேறு கதையின் நிறைவுப்பகுதி. கான்ஸாஸ் ஸிட்டியில் வந்த நூறு வயது கிழவியும் திண்டிவனத்தில் கம்பூன்றி நின்ற கிழவியும் பாலகிருஷ்ணனுக்கு அளிக்கும் தரிசனத்தை ஒரு சாதாரண வாசிப்பால் பெற்றுவிடமுடியாது. இந்தக் கதையில் வருகிற பாலகிருஷ்ணனின்  “தாய்” ஒரு தத்துவார்த்த படிமம். வீடுபேறு என்றால் சொர்க்கம் புகுதல் என்ற நம்பிக்கையைப் பறைசாற்றும் சொல்லாடல் என்று தெரிந்து கொண்டதன் பிறகு இந்தக் கதையை வாசித்தால் அர்த்தம் மேலோங்கும்.

எழுத்தாளர் ஜெயமோகனின் முக்கிய கூற்றொன்று உள்ளது. “அகமன இயக்கத்தின் வெளிப்பாடான தீவிர இலக்கியப் படைப்புக்கு நாம் செய்யும் முதல் கவுரவம் அதை நம் போதத்தால் முழுமையாக வகுத்துக் கொள்ள முயலாமலிருப்பதே. படைப்பின் அகமன வெளிப்பாட்டைவிட நமது தர்க்கம் பெரிதானது என்று அபத்தமாகக் கற்பனை செய்யாமலிருப்பதே” என்கிறார். மா. அரங்கநாதனின் கதைகளுக்கு முன்பாக நமது தர்க்கங்கள் அபத்த கற்பனையாகவே எஞ்சுகின்றன.

“அப்பா எங்கோ தூரத்தில் பார்த்துக் கொண்டிருந்தார். அங்கே பார்க்கும் படியாக ஒன்றுமில்லை.  அதைப் பற்றிக் கேட்டுவிட முடியாது.  எதுவுமில்லைதான் – ஆனால் ஏதாவது தோன்றும் என்பதாகத்தான் பதில் இருக்கும். இந்த இடம் என்றில்லை. எங்கே சென்றாலும் அவர் தூரத்தைத்தான் பார்த்துக் கொண்டிருப்பார்” மெய்கண்டார் நிலையம் கதையின் தொடக்க வரிகள் இவை. இந்தக் கதையின் அகமன வெளிப்பாட்டை வாசக போதம் பொது முழுமையால் வகுக்க முடியாது.

இதுமாதிரியான அகமனவெளிப்பாடு மா. அரங்கநாதனின் உத்திகளில் ஒன்று. இதுவே அவரது விஷேடமும். ஒருவகையில் கதைகளை மிகையாக்காமல் ஈர்ப்புமிக்கதாய் ஆக்குகிறார். ஆனால் ஒவ்வொன்றின் பெறுமதியையும் மதிப்பீடுகளையும் கச்சிதமாகப்  புலப்படுத்துகிறார்.  முன்னைய தலைமுறையினரோடு மதிப்புமிகுந்த தன்மரபில் நின்று அப்பட்டமாகவே பேசுகிறார். இதற்கு சரியான உதாரணம் சொல்லலாமென்றால் ஜேன் ஆஷ்டினை படித்துவிட்டுத் தமிழைச் சவாலுக்கு அழைக்கும் தனது மகளின் கேள்விக்கு மெய்கண்டார் நிலையத்தில் வருகிற அப்பா பதில் அளிக்கும் பகுதியே.

“நம்மிடையே பெண் எழுத்தாளரென்று யார் இருக்கிறார்கள்”

அதற்கு அப்பா சொன்னார்

“ஏன் – நம்ம காரைக்காலம்மையாரை நீ படிக்கலே – அதுதான்” என்கிறார்.

இந்தக் கதையை வாசித்து முடித்ததும் முதலில் ஏற்படுவது ஒருவகையான குழப்பம்.  எதைச் சொல்ல வருகிறது என்கிற தவிப்பு. தூரத்தையே பார்த்துக் கொண்டிருக்கும் அப்பா. வீட்டிற்குப்  பெயர் வைக்கக் காத்திருக்கும் பிள்ளை என்று சுருக்கிக்கொண்டால் எதுவும் இல்லை. ஆனால் மெய்கண்டார் நிலையம் என இந்தக்கதைக்கு எங்ஙனம் பெயர் வந்திற்று என்று சிறுபொறி மூண்டால் இக்கதையை நாமும் தூரத்திலிருந்து பார்த்தாலும் எதாவது தோன்றும். ஒரு படைப்பின் ஆதாரமாக இருக்கும் சக்தி எழுத்தாளனால் எழுதப்படுவதில்லை. மாறாக அந்தப் படைப்பின் ஆகிருதியில் ஏதோவொரு சொல்லில்கூடப் புதைந்திருக்கும். இன்னும் அழுத்திச் சொன்னால் கலையின் செயலானது எதையும் முன்னிறுத்துவது அல்ல. மாறாக அதுவே செயல்படுவது.

ஆசிரியர் வெளிப்படாத மா. அரங்கநாதனின் சில கதைகளில் சித்தி மிகமுக்கியமானது. மிகச் சாதாரணமான ஒருவனின் ஓட்டத்துடன் ஆரம்பிக்கும் இந்தக் கதையில் வருகிற பெரியவர் எதை உண்டாக்க விரும்புகிறார்? மைதானங்கள் குறைந்த இடத்தில் காவல்காரனிடம் ஓடுவதற்கு அனுமதி கேட்கவேண்டுமென அறிவுறுத்தப்படுகிறான். அவனை ஓர் உலகளாவிய மதிப்புமிக்கப் போட்டியில் பங்கெடுக்கும் வகையில் உருவாக்குகிறார் அந்தப் பெரியவர். உலகிலுள்ள எல்லாக்காரியங்களையும் இயந்திரங்களைக் கொண்டு நடத்திவிடலாம் என நம்புகிற பெரியவர் ஓட்டத்தில் தீவிரமாக இருப்பவனைத் தன்னால் பயிற்றுவிக்கப்பட்டப் போட்டியாளராக மாற்ற எண்ணுகிறார்.  கதையின் இறுதியில் நடக்கும் உரையாடல்…

ஒருவிதமான அச்சத்தைத் தரவல்லது. “அந்த மண் உலகிலே விசேடமான  மண் போலும். அங்கே தான் அவன் ஓடிக்கொண்டிருந்தான்” என்று கதைநடுவில் வருகிற இந்த வாக்கியமே இந்தக் கதையை எனக்கு நெருக்கமாக்கியது. மிகக் கனதியான ஓர் அரசியல் கதையாகவும் சுட்டலாம்.

முத்துக்கறுப்பன் வராத கதைகள் அரிது. அந்தப் பாத்திரம் கீழைத்தேய சிந்தனை, மரபுகளைப்  பறைசாற்றவல்ல அறச்சித்திரம் என்றே தோன்றுகிறது. “மனிதனின் வீழ்ச்சியை முத்துக்கறுப்பனின் வீழ்ச்சியாகவும் எடுத்துக்கொள்ளலாம். எழுத வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதே முத்துக்கறுப்பனை இன்றைய காலகட்டத்திற்குக் குறியீடாகக் கொள்ள முடியும் என்பதால்தான்” என்று மா.அரங்கநாதன் கூறினார். ஒட்டுமொத்த மானுடத்திரளின் பிரதிநிதியாக முத்துக்கறுப்பனை நம்மிடம் கையளிக்கிறார். நவீனத்துவத்தின் முக்கிய அசைவாகவிருந்த “நான் மனிதனில் நம்பிக்கையற்றவன்” எனும் ஆல்பெர்  காம்யுவின் வாக்கியத்திற்கும் முத்துக்கறுப்பன் என்ற குறியீடும் எதிர் எதிர் திசையில் அமைந்தவை. வீழ்ச்சியுறும் மானுடத்திரளைத் தாங்கி நிற்க முத்துக்கறுப்பன் என்கிற பெருங்கரத்தை ஏந்தி நிற்கிறார். மீண்டும் மீண்டும் பிறரில் நம்பிக்கை கொள்கிறார். தெய்வங்களோடு சிநேகிதம் பாராட்டுகிறார். தமிழ் கூறும் சிவன் ஒரு சித்தன் என்கிற குருதி மரபின் அடையாளத்தைச்  சொல்லுகிறார். இந்த வகையில் பூர்வ கால மொழியொன்றின் அக விசையிழுத்து எய்த படைப்புகள் மா. அரங்கநாதனுடையவை என்பதைக் கூர்ந்து வாசித்தால் அறியலாம்.

மா. அரங்கநாதனின் சிறுகதைகள் நிதர்சனத்தை முன்வைத்தன. சமூக இறுக்கம் புரையோடிய பின்னணியில் அவரால் எழுதப்பட்ட கதைகள் அதைச் சாடுகின்றன. ஆனால் நிதர்சனத்தைச் சொல்வதற்காக யதார்த்தவாதத்தை அவர் பெரிதும் நம்பியதாகத் தெரியவில்லை. கறாரான வகையில் தனக்கென ஒரு புதுப்பாணியைக் கண்டடைந்தார். அவை மெய்யியல் தளத்தில் விரிந்தன. புனைவு எழுத்தாளரொருவர் தொடர் தீவிரத்துடன் தனது கலையின் உலகை மரபுடன் தரித்து சிருஷ்டிக்க ஒரு நிமிர்வு வேண்டும். ஜீவிதக் கனதியும் மொழி மீது நேசமும் புலமையும் கொண்டதொருவரால் மட்டுமே இப்படியானதொரு புதுத்திசையை இலக்கியத்திற்கு வழங்கமுடியும். எப்போது எண்ணினாலும் வியந்து சொல்கிற படைப்புக்கள் மா. அரங்கநாதனால் எழுதப்பட்டுள்ளன.

ஒட்டுமொத்தமாக மா. அரங்கநாதன் படைப்புகளின் சிறப்பம்சம் அவை யதார்த்தத்திற்கும் தத்துவத்திற்குமான முன்றிலில் நிகழ்கின்றன. செவ்வியல் மரபு அவரது படைப்புகளில் மேலோங்காமல் நவீனத்திற்கு வழி சமைக்கிறார். உலகியல் நெருக்கடியை விபரிக்கும் ஒரு கதையில் கூட ஏதேனும் தத்துவ – ஆன்மீக விசாரத்தை செய்து பார்க்கிறார்.  எல்லாவற்றிலும் விசாரம்.  அகமனம் சில கதைகளில் ஆசிரியரின் பிடிக்குள் நிற்கிறது. ஆனாலும் மொழிநடையில் புலமையின் வடிவு. இவரின் பெரும்பாலான கதைகள் விமர்சக ஏற்பைப்  பெற்றவை.  தன்னுடைய பிற்காலத்தில் அதிதீவிரமாக எழுதவந்த நாட்களில் தமிழ்ச் சிறுகதையுலகில் புதிய வடிவங்கள் சோதனை செய்யப்பட்டன. இவரது அரணை, தீவட்டி, காடன் மலை கதைகள் தமிழுக்குப் புதிய தன்மையை வழங்கின. இதோ நான் எப்படி எழுதியிருக்கிறேன் பார் என்று மொழிதிருகிக் கதைகள் மாண்ட காலத்தில் மா. அரங்கநாதன் மண்ணின் பண்பாட்டை நுட்பமாகக் கதைகளாக்கினார். ஒரு கதைதானும் மேலோட்டமானதல்ல.

தமிழ்ச் சிறுகதை மரபில் மா. அரங்கநாதன் ஒரு முன்னோடி. இன்றுள்ள புதிய வாசகர்கள் இவரைத் தேடிக் கண்டடைய வேண்டும். அப்படி அடைவதில் ஒரு பெருமையிருக்கிறது. திடீரென வீட்டின் கொல்லைப்புறத்தில் ஒருதொகை ஓலைச்சுவடிகளைக் கண்டால் நேரும் மகிழ்வைப் போலவே நவீன இலக்கியத்தின் சுவடியாக மா. அரங்கநாதனை இன்றுள்ள வாசகர்கள் கண்டடையவேண்டும் என்பது என் அவா.

மா. அரங்கநாதன் எக்காலத்திலும் நிலைக்கும் கதைகளை அளித்தவர். அவருடைய கதைகளுக்கு நிகர்த்த கதைகள் இன்னும் எழுதப்படவில்லை. அவர் தேர்ந்தெடுத்த மையக்கருக்கள், அணுகுமுறைகள் இன்னும் காலாவதி ஆகவில்லை. மா. அரங்கநாதன் மொழியின் பீடத்தில் நிலைத்து நிற்கும் காலம். உறையாமல் எப்போதும் அசையும் காலம்.

ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஆறாம் ஆண்டில் வெளியான இவரது “காடன் மலை” சிறுகதைத் தொகுப்புக்கு அஞ்சலட்டையில் வந்த இரண்டு வரிகளாலான குறிப்பொன்றை  எழுத்தாளர் சி. மோகன் தனது கட்டுரையொன்றில் நினைவு கூருகிறார். “காடன் மலை கிடைத்தது. தமிழகத்தின் போர்ஹே நீங்கள்” இது  எழுத்தாளர் தமிழவன் அவர்களால் எழுதப்பட்ட அஞ்சலட்டைக் குறிப்பு. மா. அரங்கநாதனுக்குத் தமிழகத்தின் போர்ஹே நீங்கள் என்று வந்த குறிப்பு இக்கணம் ஒரு தொன்மமாக மாறியிருக்கிறது.  நான் போர்ஹேவிற்கு கடிதம் எழுதினால் “எம்முளும் உளன் ஒரு பொருநன்” என்று மா.அரங்கநாதனைச் சுட்டிக்காட்டுவேன்.

எனக்கு ஒரு தபால்காரனால் வழங்கப்படும் அஞ்சலட்டையில் “மா. அரங்கநாதனின் மரபு நீங்கள்” என்று வாசகர் ஒருவரால் எழுதப்பட்டிருந்தால் அது என்னுடைய நல்லூழ். மூதாதையர்களின் ஆசி என்றே கருதுவேன்.

அகரமுதல்வன்

 

 

 

 

The post எம்முளும் உளன் ஒரு பொருநன் first appeared on அகரமுதல்வன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 15, 2024 10:02

April 14, 2024

ப்ளம் மரங்கள் மலர்ந்திருந்ததா? – லோகமாதேவி

போதமும் காணாத போதம் துங்கதை நூல் குறித்து எழுத்தாளர் லோகமாதேவி அவர்கள் எழுதிய மதிப்புரை சொல்வனம் சித்திரை மாத இதழில் வெளியாகியுள்ளது. சிறந்த அவதானங்களை முன் வைத்திருக்கிறார். நூல் குறித்து வெளியாகும் சிறந்த தொடக்கமா இக்கட்டுரை அமைந்திருக்கிறது. மகிழ்ச்சி.

“அகரமுதல்வனின் மொழியில்  காடுறை தெய்வங்கள் கண் மலர்த்தி கசிந்த கண்ணீர் எரியூட்டும் இரவுகளை,  உக்கிரமான தாக்குதல்களின் போது  காலடியில் இறைஞ்கும் சொற்களை மிதித்து நசுக்கிவிட்டு முன்னேறி ஓடுகின்ற சனங்களை, போர்க்களத்தில்  பூ மாதிரி கிடக்கும் போராளி ஒருவனின் மூளையை,  காற்றில் அசையும் கருங்காலி மரத்திலிருந்து உதிரும் ரத்தம் கண்டிய பெருவிரலொன்றை, ஆலமரத்தின் வேர் இடுக்கில் கிடக்கும் கால்துண்டொன்றை காணும் நெஞ்சுரமும் நமக்குண்டாகி விடுகின்றது

பொய்யாய் பழங்கதையாய் கனவாய் மெல்லப் போனவைகளை சொல்லிச்செல்லும் கதையோட்டத்தில் காதல் முகிழ்க்கிறது காமம் தகிக்கிறது.  காதலின் வெம்மை பொங்கும் ஐந்து அத்தியாயங்களும் இருக்கின்றன இதில்.”

 

ப்ளம் மரங்கள் மலர்ந்திருந்ததா?

The post ப்ளம் மரங்கள் மலர்ந்திருந்ததா? – லோகமாதேவி first appeared on அகரமுதல்வன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 14, 2024 10:11

April 13, 2024

April 12, 2024

அம்மை பார்த்திருந்தாள் – நாஞ்சில் நாடன்

வாளி ததும்பத் ததும்ப பாலூற்றித் தந்தார். நன்றியுடன் அவர் முகமேறிட்டுப் பார்த்து வாளியை வாங்கி, தலை கவிழ்ந்து, மடங்கி வடக்காக நடந்தான் சுப்பையா. மனம் குறுகி வலித்தது. பால் நிறைந்திருந்த மூடியில்லாத தூக்குவாளி அலம்பிச் சிந்திவிடாமல் பதனமாய் நடந்தான். திரும்பி நடக்கையில் ஆறு வலப்பக்கம் ஓடியது. இடதுசாரியும் வலதுசாரியும் நடப்பதைப் பொறுத்ததுதான். ஆற்றங்கரையில் இறங்கி இரண்டு எருமைகளைக் கூனாங்காணிப் பாட்டா மேய்த்துக்கொண்டிருந்தார். வாளியைச் சாலையோரம் வைத்துவிட்டு, ஆற்றில் இறங்கி, ஓரமாய்ச் செழித்து வளர்ந்து காற்றில் ஆடி நிற்கும் சேம்பு இலையொன்று பறித்து வந்து வாளி மேல் கவிழ்த்து மூடி எடுத்துப் போகலாமா என்று தோன்றியது. வாளியை வைத்துப் போனால் கருங்காகம் பறந்து வந்து அமர்ந்து கவிழ்த்துப் போய்விடக்கூடும். அல்லது எதையெதையோ கொத்தித் தின்றுவிட்டு வந்து முழு அலகையும் பாலினுள் விட்டுக் குடிக்கவும் கூடும்.

 

அம்மை பார்த்திருந்தாள் (சிறுகதை)

The post அம்மை பார்த்திருந்தாள் – நாஞ்சில் நாடன் first appeared on அகரமுதல்வன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 12, 2024 11:16

April 11, 2024

இவ்வுலகு

01

கிளை மலரும்

உதயத்தில்

இலையின் ரேகைகள்

முழுதும் ஈரத்தடங்கள்

பதித்து அசைகிறது

புழு.

02

உறங்கி விழிக்கும்

பெருமை உடைத்து இவ்வுலகு.

03

பகலின் ஆந்தை

அமர்ந்த கிளையில்

தியானம்

 

 

 

 

The post இவ்வுலகு first appeared on அகரமுதல்வன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 11, 2024 11:27

April 10, 2024

என் பாதங்களில் படரும் கடல்

தமயந்தியின் கவிதைகள் வாழ்வின் சுவடுகளை ஈரப்படுத்தும் தவிப்புக்களாலானவை. கவிதை நெடுக நிழலளிக்கும் ஓரிடத்தை எல்லோர்க்குமாய் கேட்கும் வாஞ்சை ஓயாத அலையாக ஒலிக்கிறது. கசப்பின் தறியில் நெய்யப்பட்ட மறக்க இயலாத தழும்புகள், தாகம் கொண்டு வாய்பிளந்து தத்தளித்து பெருக்கும் கண்ணீர் இத்தொகுப்பில் நிறையவே ஓடுகிறது. தமிழ்க் கவிதை வெளியில் தமயந்தி தன்னுடைய புனைவுகளின் வழியாக அறியப்பட்டவர். ஹெப்சிபாவிற்கு பின்னாக எழுதவந்த அவர் பிராந்தியத்தைச் சேர்ந்தவருள் தமயந்தி குறிப்பிடத்தகுந்தவர். அவரது நிழலிரவு நாவல் முக்கிய பேசு பொருளை மையமாக கொண்டது. இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் ஆவேசமான பெண் மனத்தின் வெளிப்பாடு. சுகந்தி சுப்ரமணியனின் “அறை” என்கிற கவிதையை கவிதை வாசகர்கள் அறியாமல் இருக்க வாய்ப்பில்லை. தமயந்தியின் கவிதைகள் சுகந்தி சுப்ரமணியன் அவர்களின் நீட்சியாலும் அளவிடப்படக்கூடியவை. ஆனால் வெறுமென இக்கவிதைகள் கொந்தளிப்பை உள்ளடக்கி இருக்கின்றன என்றும் சொல்ல முடியாது.

தனித்துப் பறக்கும்

எல்லா இறகிற்கும் தெரியும்

ஒரு பறவையின் பாரம்.

என்ற கவிதை உணர்த்துவது பறவையின் பாரத்தை அல்ல. என் வாசிப்பில் இதுவொரு தியானச் செறிவு. பறவையின் பாரம் தெரிந்த இறகு என்பதே ஒரு சிறந்த விசாரம். இந்த மொத்த தொகுப்பிலும் தனித்துப் பறக்கும் ஒரு இறகின் அசைவை என்னால் உணர முடிகிறது. அது தமயந்தி என்கிற பறவையின் பாரமறிந்தது என்பதே என் துணிபு. கவிஞர்களே  மொழிக்கு இறகையும் பறவையையும் தனிமையையும் அளிக்க வல்லவர்கள். தமயந்திக்கு வாழ்த்துக்கள்.

The post என் பாதங்களில் படரும் கடல் first appeared on அகரமுதல்வன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 10, 2024 05:30

அகரமுதல்வன்'s Blog

அகரமுதல்வன்
அகரமுதல்வன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow அகரமுதல்வன்'s blog with rss.