அகரமுதல்வன்'s Blog, page 20
April 9, 2024
தலைவி கூற்று – குறுந்தொகை
திணை – நெய்தல்
பாடியவர் – வெண்பூதி
யானே ஈண்டை யேனே; என்நலனே
ஆனா நோயொடு கான லஃதே;
துறைவன் தம்ஊ ரானே;
மறைஅலர் ஆகி மன்றத் தஃதே.
தெளிவுரை – நான் இங்கு உள்ளேன். என் அழகு நலன் தீராத நோயுடன் கடற்கரைச் சோலையில் உள்ளது. தலைவனாகிய துறைவன் தன் ஊரில் உள்ளான். எங்களது மறைவான களவொழுக்கம் அலராக இவ்வூர்ப் பொதுமன்றத்தில் உள்ளது.
The post தலைவி கூற்று – குறுந்தொகை first appeared on அகரமுதல்வன்.
April 8, 2024
துணை
01
காய்ந்த மலரில் பாவும்
வண்ணத்துப்பூச்சி
தேனருந்துமா?
வெயிலருந்துமா?
02
இயேசுவே!
உங்களில்
பாவமில்லாதவன்
முதலாவது
கல்லெறியக் கடவன்
என்றுரைத்தவர் நீரே!
இயேசுவே
நீரே பாவமற்றவன்
நீரே முதற்கல்லை எறியக்கடவன்.
எங்களை மன்னியுங்கள்.
03
தூரத்தில்
நகர்கின்றது காட்சி
தூரத்தில்
படுகின்றது பார்வை
தூரத்தில்
அழிகின்றது தனிமை
தூரத்தில்
துளிர்க்கின்றது துணை.
The post துணை first appeared on அகரமுதல்வன்.
April 7, 2024
கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்
கிருஷ்ணம்மாள் தமிழக காந்திய இயக்கத்தின் முதன்மை ஆளுமைகளில் ஒருவர். இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டார். அதன்பின் காந்தியின் ஆணைப்படி கிராம புத்துருவாக்கப் பணிகளில் பங்களிப்பாற்றினார். நிலக்கொடை இயக்கம் வழியாகவும் தானே முன்னெடுத்த உழுபவருக்கே நிலம் என்னும் இயக்கம் வழியாகவும் ஏராளமான மக்களுக்கு நிலம் கிடைக்க வழிவகுத்தார். காந்திய வழியில் சமூக அமைதிக்காபவும் பணியாற்றினார்.
இரண்டாம் காலகட்டத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தாக்குப்பிடிக்கும் பொருளியல் ஆகியவற்றுக்காக காந்திய வழியில் போராடினார். மக்களை ஒருங்கிணைத்து வன்முறையற்ற நீடித்த போராட்டங்களை நிகழ்த்துவதும், அதற்கு முடிந்தவரை சட்டத்தை துணைகொள்வதும் அவர் வழிகள். பெரும்பாலான போராட்டங்களில் நீண்டகால அளவில் வெற்றியை அடைந்தவர் கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன்.
https://www.jeyamohan.in/197870/
The post கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் first appeared on அகரமுதல்வன்.
April 6, 2024
சோதர
01
அலையெண்ணும் சிறுமி
தேயும் நிலவில் விழி நகர்த்தினாள்
தன் மடியில்
கண் வளர்ந்த நாய்க்குட்டியை
பூமியில் இறக்கினாள்.
பெருங்கடலின் காற்றில் மோதுண்டு
சிறகசைக்கும் கடற்பறவை
சத்தமிட்டது.
எழுந்த சிறுமி
கைகளை ஏந்தியபடி
கடல் நோக்கி விரைந்தாள்.
ஏந்திய கைகளில் கனத்திருப்பது
வெறுமை
கரைப்பாளா?
பெருக்குவாளா?
கொந்தளிக்கும் சமுத்திரம்.
02
இப்பிறவி
பொல்லாத குருதியால்
எழுதப்பட்டிருக்கிறது.
அதுதான்
இன்னும் கசிகிறது.
03
சோதர!
உனக்காக பிரார்த்திக்கிறேன்
உன் வாதைகள் அழிந்துபோம்
நூற்றாண்டு சொன்னது,
ஆனால்
பிரார்த்திக்கும் உங்களாலும் வாதையுண்டு
அவைகளும் அழிந்து போகுமா?
நூற்றாண்டின் மானுடன் கேட்டான்.
04
என்னிடமும் ஒரு கப்பலிருந்தது
வெள்ளப்பெருக்கில்
அதனை விட்டு கையசைத்தோம்.
வீட்டின் முற்றத்திலிருந்து
புறப்பட்டுப் போனது.
அது கடலுக்குச் சென்றிருக்கும்
அது தண்ணீரில் மூழ்கியிருக்கும்
அது காகிதமாய் கரைந்திருக்கும்
என்றவர் பலர்.
கப்பல் என்பதை மறுக்கவில்லை எவரும்.
The post சோதர first appeared on அகரமுதல்வன்.
April 5, 2024
டல்ஸ் மரியா லொய்னாஸ் கவிதைகள்
நான் உனது பெயரைச் சொல்லி ஒருபோதும் அழைத்ததில்லை,
ஆனாலும்
ஒரு வானம்பாடி பாடாதிருக்கும்போதும்
அதன் தொண்டையை
அடைத்திருக்கும் பாடல் போல
என்னுள் நீ நிரம்பியிருக்கிறாய்.
The post டல்ஸ் மரியா லொய்னாஸ் கவிதைகள் first appeared on அகரமுதல்வன்.
April 4, 2024
நத்தார்புடை ஞானன்பசு
அ௫ளியவர் : சுந்தரர்
திருமுறை : ஏழாம்-திருமுறை
பண் : நட்டபாடை
நாடு :ஈழநாடு
தலம் : கேதீச்சுரம்
திருச்சிற்றம்பலம்
நத்தார்புடை ஞானன்பசு
ஏறிந்நனை கவுள்வாய்
மத்தம்மத யானைஉரி
போர்த்தமழு வாளன்
பத்தாகிய தொண்டர்தொழு
பாலாவியின் கரைமேற்
செத்தாரெலும் பணிவான்றிருக்
கேதீச்சரத் தானே.
சுடுவார்பொடி நீறுந்நல
துண்டப்பிறைக் கீளுங்
கடமார்களி யானைஉரி
அணிந்தகறைக் கண்டன்
படவேரிடை மடவாளொடு
பாலாவியின் கரைமேற்
திடமாஉறை கின்றான்றிருக்
கேதீச்சரத் தானே.
அங்கம்மொழி அன்னாரவர்
அமரர்தொழு தேத்த
வங்கம்மலி கின்றகடல்
மாதோட்டநன் னகரில்
பங்கஞ்செய்த பிறைசூடினன்
பாலாவியின் கரைமேற்
செங்கண்ணர வசைத்தான்றிருக்
கேதீச்சரத் தானே.
கரியகறைக் கண்டன்நல
கண்மேலொரு கண்ணான்
வரியசிறை வண்டியாழ்செயும்
மாதோட்டநன் னகருட்
பரியதிரை எறியாவரு
பாலாவியின் கரைமேல்
தெரியும்மறை வல்லான்றிருக்
கேதீச்சரத் தானே.
அங்கத்துறு நோய்களடி
யார்மேலொழித் தருளி
வங்கம்மலி கின்றகடல்
மாதோட்டநன் னகரிற்
பங்கஞ்செய்த மடவாளொடு
பாலாவியின் கரைமேற்
தெங்கம்பொழில் சூழ்ந்ததிருக்
கேதீச்சரத் தானே.
வெய்யவினை யாயஅடி
யார்மேலொழித் தருளி
வையம்மலி கின்றகடல்
மாதோட்டநன் னகரிற்
பையேரிடை மடவாளொடு
பாலாவியின் கரைமேற்
செய்யசடை முடியான்றிருக்
கேதீச்சரத் தானே.
ஊனத்துறு நோய்களடி
யார்மேலொழித் தருளி
வானத்துறு மலியுங்கடல்
மாதோட்டநன் னகரிற்
பானத்துறும் மொழியாளொடு
பாலாவியின் கரைமேல்
ஏனத்தெயி றணிந்தான்றிருக்
கேதீச்சரத் தானே.
அட்டன்னழ காகவரை
தன்மேலர வார்த்து
மட்டுண்டுவண் டாலும்பொழில்
மாதோட்டநன் னகரிற்
பட்டவரி நுதலாளொடு
பாலாவியின் கரைமேற்
சிட்டன்நமை யாள்வான்றிருக்
கேதீச்சரத் தானே.
மூவரென இருவரென
முக்கண்ணுடை மூர்த்தி
மாவின்கனி தூங்கும்பொழில்
மாதோட்டநன் னகரிற்
பாவம்வினை யறுப்பார்பயில்
பாலாவியின் கரைமேல்
தேவன்னெனை ஆள்வான்றிருக்
கேதீச்சரத் தானே.
கறையார்கடல் சூழ்ந்தகழி
மாதோட்டநன் னகருட்
சிறையார்பொழில் வண்டியாழ்செயுங்
கேதீச்சரத் தானை
மறையார்புகழ் ஊரன்னடித்
தொண்டனுரை செய்த
குறையாத்தமிழ் பத்துஞ்சொலக்
கூடாகொடு வினையே.
திருச்சிற்றம்பலம்
The post நத்தார்புடை ஞானன்பசு first appeared on அகரமுதல்வன்.
April 3, 2024
உருமாற்றம்
முன்னொரு மாலையில் ப்ரியத்துக்குரிய ஸ்நேகிதியோடு தெருவோரக் கடையில் உணவுண்டேன். அது அதிசுத்தம் என்கிற என்னுடைய விரதத்தைக் கலைக்கும் பொருட்டு ஸ்நேகிதி நடத்திய சீண்டல் தாக்குதல். பொறுத்துக்கொண்டு உண்டேன். கடைக்கருகிலேயே அள்ளி குவிக்கப்பட்டிருந்த சாக்கடை காய்ந்திருந்தது. அதனைப் பார்த்ததும் உள்ளிருந்து குடல் புரண்டு ஓங்காளிப்பு வந்தது. ஸ்நேகிதிக்கு இதெல்லாம் ஒரு பொருட்டில்லை. அந்தக் குவியலுக்கு மேலே ஒரு பழைய பேப்பரைப் போட்டு அமர்ந்திருந்தும் சாப்பிடக்கூடிய துணிச்சல் கொண்டவள். அவளிடம் என்னுடைய பரிதவிப்பை சொல்லிப் பயனில்லை. அன்றிரவு முழுதும் குமட்டல். வாந்திக்கு முன்பான குணங்குறிகள். உறங்கியதே இறையருள். அதிகாலையிலேயே வயிற்றோட்டம் கண் விழிக்கச் செய்தது. இதெல்லாம் ப்ரம்ம முகூர்த்த்தில் தான் தொடங்கவேண்டுமாவென எனக்குள்ளே அரற்றினேன்.
ஸ்நேகிதியை அழைத்து உடலுக்கு நேர்ந்த நிலையைச் சொன்னேன். சிரித்தபடி “இது உன்னுடைய நினைப்பு. நானுந்தானே உன்னோடு சாப்பிட்டேன். எனக்கு எதுவும் ஆகவில்லையே” பெருமை பொங்கச் சொன்னாள். அன்று முழுவதும் கழிப்பறைக்குள்ளேயே குடியிருக்கவேண்டியதாயிற்று. உடலில் நீர்ச்சத்தை சேர்க்கும் வண்ணம் இளநீரும், உப்புக் கரைசலும் அருந்தினேன். மாலையில் மருத்துவரிடம் காண்பித்தேன். வயிற்றுப்போக்கு நிற்க இரண்டு நாட்கள் ஆகியிருந்தன. மூன்று கிலோ எடையிழந்திருந்தேன். பின்பு ஸ்நேகிதியை சந்தித்தேன். எந்தவிதமான அதிர்ச்சியையோ, அனுதாபத்தையோ வழங்கி ஒரு வயலினை இசைக்குமளவு ஸ்நேகிதி இளகிய மனம் படைத்தவர் அல்ல. “உனக்கு இந்தக் கடையே ஒத்துவரமாட்டேங்குதே” என்று சலிப்புற்றது மட்டுமே நிகழ்ந்தது.
நகரத்திலுள்ள சில தெருவோர உணவகங்கள் மீது எனக்கிருக்கும் ஒவ்வாமை அந்தச் சூழலின் சுகாதாரமின்மையை அடிப்படையாக கொண்டது. சாப்பிட்ட பிளாஸ்டிக் தட்டுக்கள் தொடக்கத்தில் அடுக்கப்பட்டு பின்னே குவிக்கப்பட்டிருக்கும். அங்கிருக்கும் தெருவோர நாய்கள் வாடிக்கையாகவே அதனருகிலேயே படுத்திருக்கும். நாம் கண் இமைக்கும் நொடியில் தன்னுடைய நாக்கை வீசி தட்டை நக்கிவிடுவதை பல இடங்களில் கண்டிருக்கிறேன். இன்னொன்று கைகழுவ வைத்திருக்கும் தண்ணீரை அருந்தும் நாய்கள். அவற்றை என்ன செய்ய முடியும். எதுவும் செய்ய இயலாது. துரத்திவிட்டு தண்ணீரை அள்ளி அழுக்குகள் விலக கைகளை அலம்ப வேண்டியதுதான்.
சமீபத்தில் ஒரு கடையில் தோசை உண்டேன். ஊற்றப்பட்ட சாம்பாரில் காப்காவின் கரப்பான்பூச்சி. சரியான உருமாற்றம் என்றால் இதுதான். கொஞ்சம் ருசித்து உண்டிருந்தால் நன்றாக தாளித்த கத்தரிக்காய் தானல்லவா! நெற்றி நிறைய திருநீறு அள்ளிப் பூசியபடி வியாபாரத்தில் இருந்தவரிடம் உருமாற்றத்தை தூக்கி காண்பித்தேன். சனியனைச் சிவனாலும் அழிக்கமுடியாதுப்பா. நான் என்ன பண்ணமுடியும் சொல்லு. இந்த வண்டிக்கடைய வைச்சு பொழைப்பு நடத்தவா. இல்ல கரப்பான்பூச்சிய ஒழிக்கவா என்றார். அவர் சொல்லுவதில் உள்ள நடைமுறைச்சிக்கலை நானும் விளங்கிக்கொள்கிறேன். எனக்கென்று வந்து வாய்க்கும் கரப்பான்பூச்சிகள்.
பிரபல உணவகத்திலும் இதுபோன்றதொரு அனுபவம் எனக்கிருக்கிறது. ஓடோடி வந்த அந்தக் கடையின் முகாமையாளர் “நீங்க பில் பே பண்ணவேண்டாம் சார்” என்றார். “இதென்னங்க அநியாயம் கரப்பான்பூச்சிக்கு நூறு சதவீதம் தள்ளுபடியா” என்றேன். இந்தச் சுத்தமின்மை பற்றிய கவலையுள்ளவர் எவருந்தான் வீட்டைத்தவிர எங்கும் சாப்பிட இயலாது. ஆனால் என் விதியோ சினிமா. அன்றாடம் ஒரு ஹோட்டல் உணவு. செரிக்கும் வரை அல்லற்படுதல் நித்தியப்பாடு. ஆனாலும் ருசியான உணவுகளுக்காய் நெடுந்தொலைவு செல்லவும் தயாராகவே இருப்பேன்.
என்னுடைய இந்த ஒவ்வாமையால் சில நண்பர்களும் இதுபோன்ற கடைகளை தவிர்க்கலானார்கள். நண்பர் குறிஞ்சி பிரபா தெருவோரக் கடைகளின் ருசியினால் பீடிக்கப்பட்டவர். சந்துகளின் இடுக்குகளுக்குள்ளும் உணவகங்களை தெரிந்து வைத்திருப்பார். சிலநாட்களுக்கு முன்பாக இரவுணவு உண்ண நேரம் பிசகியிருந்தது. வீதியிலிருந்து கையேந்தி பவனில் உண்ணலாமே என்றேன். உங்கூட சேர்ந்து எனக்கும் உன் அதிசுத்தம் தொற்றிக்கொண்டு விட்டது என்றார். நோய் போல சுத்தமும் தொற்றுகிறது போலும்! நண்பர் உள்ளூர என்னை திட்டுவதை அறிந்தும் புன்னகைத்தேன்.
பல வருடங்களுக்குப் பிறகு தெருவோரத்திலுள்ள கடையொன்றில் சிக்கன் பக்கோடா வாங்கிச் சாப்பிட்டேன். அந்த தாச்சியில் இருந்த எண்ணெய்யை மாற்றும் காலம் வந்து, பல மாதங்கள் ஆகியிருந்தன. ஆனாலும் கடைக்காரருக்கு ஒரு பிடிவாதம். அதெப்படி என்னை நம்பி வந்ததை தூர ஊற்ற முடியுமென எண்ணியிருப்பார் போலும்… இனிமேலும் கறுக்க இயலாது என்று கொதிக்கும் எண்ணெயில் வீழ்த்தப்பட்ட சிக்கன் பக்கோடாக்கள் நிறமூட்டிகளால் சிவந்தன. சிறிய பிளாஸ்டிக் தட்டில் ஆங்கிலப் பத்திரிக்கையை கிழித்து அதன் மீது பரப்பினார்கள். மிளகு தூவி, அரிந்த வெங்காயம் தருவித்தனர். கால்களுக்கருகில் எலும்புகளை உண்ணும் நாய்களின் ரோந்து. எவர் வீசுவாரெனக் காத்திருக்கும் அவைகளின் கண்கள்.
சாப்பிட்டவர்கள் கை கழுவ வைத்திருக்கும் தண்ணீரை வழமைக்கு மாறாக ஒரு பூனை அருந்தத் துடித்துக் கொண்டிருந்தது. வலது கண்ணுக்கு கீழே இரத்தக் கண்டல் ஆகியிருந்த அந்தப் பூனையைப் பார்க்கவே பயமாகத்தானிருந்தது. சிக்கன் பக்கோடாவின் முதல் துண்டை உண்டேன். அற்புதச் சுவை! மின்ட் சிக்கன் பக்கோடா என்று பலகையில் எழுதப்பட்டதைப் பிறகுதான் பார்த்தேன். நூறு கிராமும் தீர்ந்தது. நாயொன்று துண்டுக்காய் காத்திருந்தது. அதனிடம் உனக்கு ஈவதற்கு எதுவுமில்லையே என்று கவலையோடு சொன்னேன்.
இன்றைக்கு ப்ரம்ம முகூர்த்தத்திலேயே விழிப்புத்தட்டிற்று. கண்களைத் திறவாமல் வயிற்றைத் தடவிக் கொடுத்தேன். என்னை நீ சோதிக்க கூடாது என்று வேறு எப்படி பிரார்த்திப்பது? கண்களைத் திறந்தால் விபரீதம் எதுவும் நிகழத்தொடங்குமென எண்ணினேன். ஏதோ சிறுகுமட்டல் உணர்வு. மெல்ல எழுந்து கழிப்பறைக்குள் சென்றேன்.
ஸ்நேகிதி அன்று சொன்ன வசனம் அழியாததன்மை கொண்டது போலும்!
“உனக்கு இந்தக் கடையே ஒத்துவரமாட்டேங்குதே”!
இளநீர், உப்புக் கரைசைல் என்று நீர்ச்சத்து வழங்கியபடி இனிமேலும் சாப்பிடக்கூடாது என்று வயிற்றைப் பிடித்து சத்தியம் செய்வது தவிர வேறு வழி.
The post உருமாற்றம் first appeared on அகரமுதல்வன்.
April 2, 2024
நற்றிணை – தோழி கூற்று
திணை – குறிஞ்சி
பாடியவர் – மதுரை மருதன் இளநாகனார்
கொழுஞ்சுளைப் பலவின் பயங்கெழு கவாஅன்
செழுங்கோள் வாங்கிய மாச்சினைக் கொக்கின்
மீன்குடை நாற்றந் தாங்கல்செல் லாது
துய்த்தலை மந்தி தும்மும் நாட – 5
நினக்கும் உரைத்தல் நாணுவல் இவட்கே
நுண்கொடிப் பீரத்தின் ஊழுறு பூவெனப்
பசலை ஊரும் மன்னோ பன்னாள்
அறிஅமர் வனப்பினெங் கானம் நண்ண
உண்டெனும் உணரா வாகி
மலரென மரீஇ வரூஉம் இவள் கண்ணே – 10
தெளிவுரை – செழுமையான சுளைகளைக் கொண்ட பலா மரங்கள் மிகுதியான மலைப்பக்கத்தில் காய்கள் மிகுதியாக உள்ளதால் வளைந்த கிளைகளில் கொக்குகள் வந்து தங்கும். அவை மீன்களைக் கொணர்ந்து குடைந்து தின்றதால் நாற்றம் புலால் நாற்றம் மிகுதியாக வீசும். அங்குள்ள மந்தி புலால் நாற்றத்தைப் பொறுக்க இயலாது தும்மும் இத்தகைய மலைநாடனே! உன்னால் அறியப் பெற்ற விருப்பம் மிகுந்த அழகுமிக்க எங்கள் தோட்டத்தை நீ சேர்தல் உண்டு என்றாலும், வண்டு என்று எண்ணத்தக்க நீலமலர் போன்ற இவளுடைய கண்களில் நுண்ணிய கொடியை உடைய பீர்க்கம் பூவின் வாடல் போல பசலை த்நோரியத்தை நீ அறியவில்லை. அதற்குரிய காரணமும் எமக்கு விளங்கவில்லை. இத்தனை உன்னிடம் கூறவும் எமக்கு வெட்கமாக இருக்கின்றது. இருப்பினும் தலைவியின் துன்பத்தை நீ போக்குவாயாக!
The post நற்றிணை – தோழி கூற்று first appeared on அகரமுதல்வன்.
April 1, 2024
கூற்றாயின வாறு
அ௫ளியவர் : திருநாவுக்கரசர்
திருமுறை : நான்காம் திருமுறை
பண் : கொல்லி
நாடு – நடுநாடு
தலம் : அதிகை வீரட்டானம்
திருச்சிற்றம்பலம்
கூற்றாயின வாறுவி லக்ககிலீர்
கொடுமைபல செய்தன நானறியேன்
ஏற்றாயடிக் கேஇர வும்பகலும்
பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாதென் வயிற்றின் அகம்படியே
குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன் அடியேன்அதி கைக்கெடில
வீரட்டா னத்துறை அம்மானே.
நெஞ்சம்முமக் கேயிட மாகவைத்தேன்
நினையாதொரு போதும் இருந்தறியேன்
வஞ்சம்மிது வொப்பது கண்டறியேன்
வயிற்றோடு துடக்கி முடக்கியிட
நஞ்சாகி வந்தென்னை நலிவதனை
நணுகாமல் துரந்து கரந்துமிடீர்
அஞ்சேலுமென் னீர்அதி கைக்கெடில
வீரட்டா னத்துறை அம்மானே.
பணிந்தாரன பாவங்கள் பாற்றவல்லீர்
படுவெண்டலை யிற்பலி கொண்டுழல்வீர்
துணிந்தேயுமக் காட்செய்து வாழலுற்றாற்
சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர்
பிணிந்தார்பொடி கொண்டுமெய் பூசவல்லீர்
பெற்றமேற்றுகந் தீர்சுற்றும் வெண்டலைகொண்
டணிந்தீரடி கேள்அதி கைக்கெடில
வீரட்டா னத்துறை அம்மானே.
முன்னம்மடி யேன்அறி யாமையினான்
முனிந்தென்னை நலிந்து முடக்கியிடப்
பின்னையடி யேனுமக் காளும்பட்டேன்
சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர்
தன்னையடைந் தார்வினை தீர்ப்பதன்றோ
தலையாயவர் தங்கட னாவதுதான்
அன்னநடை யார்அதி கைக்கெடில
வீரட்டா னத்துறை அம்மானே.
காத்தாள்பவர் காவல் இகழ்ந்தமையாற்
கரைநின்றவர் கண்டுகொ ளென்றுசொல்லி
நீத்தாய கயம்புக நூக்கியிட
நிலைக்கொள்ளும் வழித்துறை யொன்றறியேன்
வார்த்தையிது வொப்பது கேட்டறியேன்
வயிற்றோடு துடக்கி முடக்கியிட
ஆர்த்தார்புன லார்அதி கைக்கெடில
வீரட்டா னத்துறை அம்மானே.
சலம்பூவொடு தூபம் மறந்தறியேன்
தமிழோடிசை பாடல் மறந்தறியேன்
நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன்
உன்னாமம் என்னாவில் மறந்தறியேன்
உலர்ந்தார்தலை யிற்பலி கொண்டுழல்வாய்
உடலுள் ளுறுசூலை தவிர்த்தருளாய்
அலந்தேன்அடி யேன்அதி கைக்கெடில
வீரட்டா னத்துறை அம்மானே.
உயர்ந்தேன்மனை வாழ்க்கையும் ஒண்பொருளும்
ஒருவர்தலை காவலி லாமையினால்
வயந்தேயுமக் காட்செய்து வாழலுற்றால்
வலிக்கின்றது சூலை தவிர்த்தருளீர்
பயந்தேயென் வயிற்றின கம்படியே
பறித்துப்புரட் டியறுத் தீர்த்திடநான்
அயர்ந்தேன்அடி யேன்அதி கைக்கெடில
வீரட்டா னாத்துறை அம்மானே.
வலித்தேன்மனை வாழ்க்கை மகிழ்ந்தடியேன்
வஞ்சம்மன மொன்று மிலாமையினாற்
சலித்தாலொரு வர்துணை யாருமில்லைச்
சங்கவெண்குழைக் காதுடை எம்பெருமான்
கலித்தேயென் வயிற்றி னகம்படியே
கலக்கி மலக்கிட்டுக் கவர்ந்துதின்ன
அலுத்தேனடி யேன்அதி கைக்கெடில
வீரட்டா னத்துறை அம்மானே.
பொன்போல மிளிர்வதொர் மேனியினீர்
புரிபுன்சடை யீர்மெலி யும்பிறையீர்
துன்பேகவ லைபிணி யென்றிவற்றை
நணுகாமற் றுரந்து கரந்துமிடீர்
என்போலிக ளும்மை இனித்தெளியார்
அடியார்படு வதிது வேயாகில்
அன்பேஅமை யும்மதி கைக்கெடில
வீரட்டா னத்துறை அம்மானே.
போர்த்தாயங்கோ ரானையின் ஈருரிதோல்
புறங்காடரங் காநட மாடவல்லாய்
ஆர்த்தானரக் கன்றனை மால்வரைக்கீழ்
அடர்த்திட்டருள் செய்த வதுகருதாய்
வேர்த்தும்புரண் டும்விழுந் தும்மெழுந்தால்
என்வேதனை யான விலக்கியிடாய்
ஆர்த்தார்புனல் சூழ்அதி கைக்கெடில
வீரட்டா னத்துறை அம்மானே.
திருச்சிற்றம்பலம்
The post கூற்றாயின வாறு first appeared on அகரமுதல்வன்.
March 30, 2024
பிரிவுக்குறிப்பு
மழைக்காலம் தொடங்கி மூன்றுநாட்கள் ஆகியிருந்தன. வாய்க்கால்களில் நீரோட்டம் அதிகரித்திருந்தது. ஒரு மதிய நேரத்தில் நானும் உருத்திரனும் மழையில் நனைந்துகொண்டு புல்வெளியில் படுத்துக்கிடந்தோம். துளிகள் தீண்டும் சிலிர்ப்பு உடலெங்கும் ஊர்ந்தது. புற்களிலிருந்து சிதறி எழுகிற பூமியின் வாசத்தை மழை எழுப்பிக்கொண்டேயிருந்தது. நாம் படுத்திருக்கும் இந்தப் புல்வெளிக்கு அருகே ஓடிக்கொண்டிருக்கும் வாய்க்காலில் அழகுக்கு கையளிக்கப்பட்ட திரவம் போல நீர் சப்தத்தோடு நகர்ந்துகொண்டிருந்தது. உருத்திரன் மழையில் நனைந்தபடி கண்கள் சொருகி நித்திரையானான். அவனின் மேனி தழுவி பூமியில் வழியும் மழைத்துளிகளுக்கு வெளிச்சம் நிறைகிறது. எம்மிருவரின் துவக்குகளும் பெரியமரமொன்றின் பொந்திற்குள் சாத்திவைக்கப்பட்டிருந்தன. இனிமையாக இருக்கும் இப்படியொரு நீர்மையான இளைப்பாறல் அந்தரங்க ரகசியமாய் எனக்குள் பூத்தது. மேகங்கள் கருந்திரளாய் தொங்கிக்கொண்டே இருந்தன. மழையின் கனிவு நம்மிருவருக்கு மட்டும் சுரப்பதைப் போலிருந்தது. மின்னல் திறக்கையில் கண்ணை மூடிக்கொண்டேன். உருத்திரன் மழையை போர்வையாக்கி, ஓடும் நீரை படுக்கையாக்கி, இடியையும் மின்னலையும் சொப்பனமாக்கி நீண்டநேரமாயிருந்தது. என்னுடைய சிந்தையின் துவாரங்களில் வீசி நுழையும் விரல் போன்ற குளிர்காற்றில் வந்தமர்ந்தாள் வான்மலர். அவளின் இமை திறந்து மயில் போல அகவும் சின்னஞ்சிறு அசைவு என் ஞாபகத்தில் காய்த்தது. உடலுக்குள் பெருங்காற்றின் ஒலி அதிர்கிறது. வான்மலரின் வாசம் என்னைச் சூழ்ந்துவிட்டது. முத்தத்தின் கதகதப்பு தெரிந்த கம்பளிப்புழுக்களாய் என்மீது ஊர்ந்துகொண்டிருக்கும் பேருணர்ச்சிக்கு பெயரென்ன? நினைவுகளில் தத்தளிக்கும் பசலையின் பாசியில் நானொரு கல்லென வளர்ந்துகொண்டிருந்தேன். இந்தக் கதையின் துயர்மிகுந்த பகுதிகள் நீக்கம் செய்யப்பட்டதனாலும் குறிப்பாக கதைசொல்லியின் காதல் கதை இல்லை என்பதனாலும் சற்றே நிமிடங்களில் நிறைவுறும் இந்தக் கதையை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து ஒருவருக்கு சொல்லத்தொடங்கினேன். விமானம் சென்னையை நோக்கி பறக்கத்தொடங்கிற்று.
உருத்திரனும் நானும் இயக்கத்திற்கு கட்டாயமாக சேர்க்கப்பட்டவர்கள். அவனுடைய தந்தை வன்னியிலுள்ள பள்ளிக்கூடமொன்றின் அதிபராக இருந்தார். தன்னுடைய மகனை இயக்கம் இவ்வாறு சேர்த்துக்கொண்டதனையடுத்து இயக்கத்தின் மீது அவருக்கு அதிருப்தி ஏற்பட்டிருந்தது. வான்மலர் என்னிலும் பார்க்க மூன்று வயது மூத்தவள். அவளை முதன்முறையாக மன்னார் களமுனையில் சந்தித்தேன். அன்றிரவு நடந்த இராணுவத்துடனான மோதலில் எழுபதிற்கும் மேற்பட்ட பெண் போராளிகள் வீரச்சாவை அடைந்திருந்தனர். அதிலும் நிறைய வித்துடல்கள் இராணுவத்தின் கையில் அகப்பட்டிருந்தன. தொடர்ந்தவண்ணமிருந்த தாக்குதல்களை இயக்கத்தினால் எதிர்கொள்ளமுடியாமலிருந்தது. இரண்டு நாட்கள் கழித்து களமுனையில் சத்தம் ஓய்ந்திருந்தது. வான்மலரும் நானும் ஒரே அணியில் சேர்க்கப்பட்டு நான்கு நாட்கள் ஆகியிருந்தது. உருத்திரன் எனக்கு முன்னதாகவே களமுனைக்கு அனுப்பப்பட்டிருந்தான். ஆனால் இங்கு அவனைக் காணமுடியவில்லை. சிலவேளைகளில் முகமாலை களமுனைக்கு அவன் அனுப்பப்பட்டிருக்கலாம் என்று தோன்றியது.
வான்மலர் ஓரிரவு முழுக்க வயிற்றுவலியால் துடித்தாள். அவளோடு நின்றிருந்த ஏனைய பெண்போராளிகள் சுடுதண்ணீர் வைச்சுக் கொடுத்தனர். அவளுக்கு மாதவிடாய் வருகிற முதல் நாளில் இப்படி ஆவது வழமையென இன்னொரு போராளி சொன்னாள். நாங்களிருக்கும் மூன்று பதுங்குகுழிகளிலும் மொத்தமாக பன்னிரண்டு பேர்கள் இருந்தோம். வான்மலர் உடல் சோர்ந்து களைப்புற்றுக் கிடந்தாள். களமுனைக்கு காலையுணவோடு வந்துகொண்டிருந்த வாகனத்தின் மீது கிளைமோர் தாக்குதல் நடந்துவிட்டதாக தகவல் வந்தது. இனி மதியந்தான் சாப்பாடு என்று சொன்னதும் “ஏன் மதியத்தில் கிளைமோர் வெடிக்காதோ” வான்மலர் அனுங்கிய குரலில் சிரித்துக்கொண்டு கேட்டாள். மதியம் வரைக்கும் பசிதாங்கலாம் ஆனால் வான்மலர் இன்றைக்கிருக்கும் நிலையில் பசியோடு இருத்தல் கூடாதென்று தோன்றிற்று. பதுங்குகுழியை விட்டு வெளியேறி தென்னைமரமிருக்கும் காணிக்குள் சென்று மூன்று இளநீ பிடுங்கிக்கொண்டு வந்தேன். துவக்கின் முன்னிருக்கும் கூர்மையான கத்தியால் இளநீரில் துளையிட்டுக் கொடுத்தேன். வான்மலர் வேண்டாமென்று சொல்லாமல் மூன்றையும் குடித்து முடித்தாள்.
அன்றைக்கிரவும் களமுனையில் மோதல் தொடங்கியது. வான்மலர் சண்டை செய்யவில்லை. ஆனால் எழுந்திருந்தாள். அவளின் கையில்தான் வோக்கியிருந்தது. கட்டளைப் பீடத்தில் இருந்து வருகிற உத்தரவுகளையும் அதன் சாத்தியங்களையும் வான்மலரே விவாதித்துக்கொண்டிருந்தாள். என்னுடைய கைகளை துவக்கு உதறுகிறது. காப்பெடுப்பதும் மீண்டும் தலைதூக்கி இலக்கைப் பார்த்து சுடுவதுமென ஒரு குட்டிப்பாம்பு புற்றிலிருந்து பூமியைப் பார்த்து நாக்கை அசைப்பது மாதிரியிருந்தது என்னுடைய இயங்குதல். போர் பூமியை மட்டுமல்ல,காலடி மண்ணையும் நடுக்குவிக்கிறது. அதனுடைய நாளங்களில் குவிந்திருக்கும் ஒலிகள் இதயத்தின் பலத்தை சுக்குநூறாக கிழிக்கிறது. சன்னங்களை நோக்கி சன்னங்கள். வீழ்த்தப்பட்ட உயிர்களின் பேரால் வீழ்த்தப்படுகிற உயிர்கள். போர், ஊழியின் ஜன்னல் இருக்கை. சண்டை ஓய்ந்து போயிருந்தது. களமுனையில் காயமே நிறைந்திருந்தது. வான்மலர் அடுத்தடுத்த நாட்களில் தேறிவந்துவிட்டாள். ஒரு நிலவின் ஒளியை ரசிக்கவல்ல படிமத்தை கிளைகள் தருவதை மாதிரி அவளின் முகத்திடையே நழுவி விழுந்துகொண்டிருந்தது கூந்தல். சிலநேரங்களில் வான்மலரின் பார்வையும் கண்களின் அசைவுகளும் எனக்குள் பனிபோல் விழுந்துருகும். ஆறுமாதங்களுக்கு பிறகு வான்மலரும் நானும் காதலிக்கத்தொடங்கியிருந்தோம். களமுனையில் இழப்புகளுக்குள்ளும்,பின்வாங்கல்களுக்குள்ளும் இயக்கம் அமிழத்தொடங்கியிருந்தது. பின்தளத்தில் இருந்து களத்திற்கு வருகிற வழங்கல்கள் வான்படைத் தாக்குதல்களால் இலக்குவைக்கப்பட்டன. வான்மலரும் நானும் கதைத்துக்கொண்டிருந்தோம். மூன்றுநாட்களாய் ஆர்மி முன்னேறாமல் இருக்கிறான், ஏதோ பெரிய திட்டமிருக்குமென்று நினைக்கிறேன் நீங்கள் என்ன நினைக்கிறியள்? ஓம் அவங்களிட்ட திட்டமுமிருக்கு,ஆயுதங்களுமிருக்கு,இந்தியாவுமிருக்கு என்றாள் வான்மலர்.
அணியிலிருந்த மற்றவர்கள் எங்களிருவருக்கும் சேர்த்து இளநீ பிடுங்கிக்கொண்டு வந்தனர்.சேர்ந்து குடித்தோம். இருவரும் தனியாக இருப்பதை விரும்புகிறோம் என்பதை ஏனையவர்கள் புரிந்துகொண்டு விலகிப்போய் நின்றனர். புலுனிக்குஞ்சுகள் தெத்தி தெத்தி கிளைகளில் இருந்தன.நாமிருந்து கதைத்துக்கொண்டிருந்த தென்னைமரக்குத்தியின் முன்னாலிருந்த மட்டைக் கும்பிக்குள்ளிருந்து இரண்டு நாகபாம்புகள் சீறிச் சீறி சண்டை போட்டபடியிருந்தன.வான்மலர் கண்களை அகலவிரித்து சுவாரஸ்யமாக அதனைப் பார்த்தாள்.இரண்டு பாம்புகளும் மூச்சு வாங்கி ஆளுக்கொரு திசையில் நெளிந்து போனதும் இருவருக்குமிருந்த இடைவெளியின் தூரம் உதிர்ந்துவிட்டிருந்தது.எனக்குள் குழைந்திருந்த முத்தத்தின் சுவர்களில் தும்பைப் பூக்கள் மலர்ந்தன.வான்மலரின் கிழங்குநிற உதட்டில் முத்தத்தின் நீரலைகள் கசிந்தன.இருவருக்குள்ளும் வேர்கொண்டிறங்கியது நதி.போதத்தின் தாழி நிறைந்தது. வான்மலரின் தேகத்திலிருந்து மூச்சு முட்டியது.அந்தக் கணத்தில் குகை ஓவியமொன்று மூச்சுவிடுவது மாதிரி என் கண்களுக்குள் யாக்கை எரிந்தது.
மூன்றுநாட்களில் அந்தக்களமுனையில் இருந்து வேறொரு வேலைக்காக இடம் மாற்றம் செய்யப்பட்டேன்.வான்மலரின் கைவிரல்கள் எனது கன்னத்தை தடவின.அறுந்து துடிக்கும் பல்லியின் வாலை நினைவுபடுத்துவது மாதிரியிருந்தது அவள் விரலின் அப்போதைய ஸ்பரிசம்.என்னிடம் அவள் எழுதிய பிரிவுக்குறிப்பை நீட்டினாள். வாங்கிக்கொண்டு களமுனையிலிருந்து இரண்டு கிலோமீட்டர்கள் நடந்துபோய் கட்டளைப்பணியகமாக இயங்கிக்கொண்டிருந்த வீட்டிற்குள் நுழைந்தேன்.வாசலில் நின்ற போராளி ஒருவர் மறித்து என்னை விசாரித்தார். தகுந்த உறுதிப்படுத்தல்களுக்கு பின்னர் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டேன். சதுரவடிவில் சீமெந்தால் கட்டப்பட்ட பதுங்குகுழிக்குள் கட்டளைத்தளபதியும் இன்னும் சில பகுதித்தளபதிகளும் இராணுவத்தின் முன்னேற்ற நடவடிக்கையை தடுத்து நிறுத்துவதற்கு திட்டமிட்டுக்கொண்டிருந்தார்கள். கிபிர் விமானங்களின் இரைச்சல் தூரத்தில் கேட்டது. குண்டு விழுந்து வெடிக்கும் பேரோசை கடலையும் அழிப்பதைப் போலிருந்தது. வீட்டின் கல்சுவர்கள் அதிர்ந்து விலகின.வானமே புழுதியாகி கூரை மேல் விழுகிறது என்பது மாதிரி குண்டுகளின் சிதறல் வீடெங்கும் பொழிந்தன. பதுங்குகுழிக்குள் ஓடிப்போனேன்.
தளபதி தன்னுடைய கால்களை நீட்டிக்கொண்டு களத்தில் நடைபெறவிருக்கும் திட்டங்களைச் சொல்லிக்கொண்டிருந்தார். நிலத்தின் இரத்தம் புகைகளில் எழும்புகிற வாடையை நமது நாசிகள் உணர்ந்தன.சொற்ப நிமிடங்களில் தாக்குதல்கள் தீர்ந்திருந்தன. போர்விமானங்களின் சத்தம் தடயமற்று மறைந்தது.பதுங்குகுழியை விட்டு வெளியேறினோம். தளபதி எங்களுக்கு முன்னால் விரைந்தார்.சிதைவுற்ற பூமியின் மீது துளிர்விட்டிருந்த மரங்கள் யாவும் எரிந்து போயின. வாசலில் நின்றிருந்த போராளியின் கால்களிலொன்று முறிந்து கிடந்த மரக்கிளைகளுக்குள் வித்தியாசமற்று இருந்தது.அவனின் உடலைத் தேடிக்கண்டுபிடிப்பது இயலாமல் போயிற்று.துவக்கினுடைய பின்பக்கத்தின் சிறிய துண்டு அவன் நின்றுகொண்டிருந்த இடத்திலேயே பிய்ந்து கிடந்தது. கிளைகளுக்குள் இருந்த அவனின் ஒரு காலை என்னுடைய கரங்கள் தூக்கின. நிலத்தின் இரத்த நாளங்கள் ஓடிக்கொண்டிருந்த விடுதலையின் சூடு மிஞ்சிக் கிடந்த காலில் இன்னும் ஆறாதிருந்தது.துயரின் கன்னங்கரேலான கொந்தளிப்பு என்னில் புரண்டது.இந்தத் தாக்குதல் நடைபெற்று இரண்டுநாட்களில் தளபதி மன்னாரில் இருந்து கிளிநொச்சிக்கு சென்றார். அவருக்கு பதிலாக வந்திருந்த தளபதி கொஞ்சம் இறுக்கமானவர் என்று கேள்விப்பட்டிருந்தேன். ஆனால் அடுத்தநாள் காலையில் நானும் இன்னொரு போராளியும் அங்கிருந்து வெளிக்கிடும்படியாயிற்று. நீண்ட தூரம் வந்ததற்கு பிறகு அவனே கதையைத் தொடங்கினான்.
என்ர பேர் நந்தியன்,விசேட வேவுப்பிரிவு, நீங்கள்?
என்னுடைய பேரைச்சொல்லி பிரிவையும் சொன்னேன்.அடுத்ததாக நீங்கள் எப்போது இயக்கத்திற்கு வந்தீர்கள் என்று கேட்பான்.நான் எங்கே இயக்கத்திடம் வந்தேன், இயக்கம் தான் வீட்டிற்கு வந்தது என்று அவனுக்கு சொல்லவேண்டுமென்று நினைத்துக்கொண்டேன்.அவன் அப்படியொரு கேள்வியைக்கேட்கவில்லை. கடுமையான வேகத்தில் வாகனத்தை ஓட்டினான்.அவனளவில் இந்தவேகம் போதுமானதாக இல்லையென்று குறைபட்டுக்கொண்டான்.இருமருங்கிலும் அடர்ந்த காடு,அதன் நடுவே விரிந்துகிடக்கும் புழுதிப்பாதை காய்ச்சல்காரனின் நாக்கைப் போல வெளிறிக்கிடந்தது.கிளைமோர் தாக்குதல் அதிகமாக நடந்துகொண்டிருக்கும் இந்தப் பாதையில் போராளிகள் ரோந்து செய்துகொண்டிருந்தனர்.அவர்களை மிகநெருக்கத்தில் காணும் வரை அது ஆழஊடுருவும் படையணியா? போராளிகளா? என்கிற குழப்பமே பயத்தின் முகிலுரசும்.அண்மையில் நடந்த கிளைமோர் தாக்குதலில் போராளிகள் வேஷத்தில் வந்திருந்த ஆழஊடுருவும் அணி வாகனத்தை நிறுத்தி அனைவரையும் சுட்டுக்கொன்று கிளைமோரை வெடிக்கச்செய்திருந்தது. இந்தச்சம்பவத்தின் பிறகு இடையில் எவர் மறித்தாலும் வாகனத்தை நிறுத்திவிடக் கூடாது என்பது அறிவுறுத்தலாக இருந்தது. நாம் கிளிநொச்சியை வந்தடைந்த அன்றைக்கிரவு ஒரே முகாமில் தங்கியிருந்தோம்.நந்தியன் அடுத்தநாள் அதிகாலையில் கையைக்குலுக்கிக் கொண்டு விடைபெற்றான்.
மன்னார் களமுனை நிலவரங்களை தெரிந்துகொள்வதற்கு அங்கிருந்த வோக்கியில் சிலரைத்தொடர்பு கொண்டு கதைத்தேன்.நேற்று பகலிலிருந்து இராணுவம் முன்நகர்வு நடவடிக்கையை செய்யவில்லை என அறிந்துகொண்டதன் பிறகு காலையுணவை சாப்பிட்டேன். நான் இங்கு வரவழைக்கப்பட்டிருக்கும் காரணம் மிகமிக ரகசியாமனது என்றெல்லாம் கிடையாது. ஆனால் யாருக்கும் சொல்லமுடியாதது ஏனெனில் எனக்கும் அதுவரை சொல்லப்படாமல் இருந்தது.வாகனத்தில் என்னை ஏற்றிச்சென்று வேறொரு முகாமில் சேர்த்தனர். அங்குதான் உருத்திரன் நின்றான்.
“வாடா மச்சான்,உன்ர பேரை நான் தான் குடுத்தனான்.உடனையே உன்ன களத்தில இருந்து பின்னுக்கு எடுக்கிறம் எண்டு சொல்லிட்டனம்”
எங்களை சந்தித்த இயக்கத்தின் மிகமுக்கிய தளபதிகளில் ஒருவர் புதிதாக அமைக்கப்படவிருக்கும் தாக்குதல் அணியொன்றிற்காக நாங்கள் ஒருங்கிணைக்கப்பட்டிருப்பதாக சொன்னார்.கூட்டத்தில் இருந்த ஒருவன் நீரைவிலக்கி குளிப்பதுவாய் சாவுறுதி என்றான்.அவனின் கண்களைத் திரும்பிப்பார்த்தேன். லாவகமாக கண்களை இமைத்துக்கொண்டு தளபதி பேசுவதை பார்த்துக்கொண்டிருந்தான்.சிலர் முகங்கள் நெய்யப்பட்ட மரண இழைகளில் இறுகிப்போனது.தாக்குதல் அணியின் முதல் அறிவிப்பு எங்களை துயரின் ஓடையில் உறைவித்தது.சிலரோ பயம் குடையும் தம்முயிரை எண்ணி வெறித்தார்கள். சிலர் இப்படியொரு அணியில் இருந்து களமாடுவதே சுவர்க்கம் என்று மகிழ்வு அப்பிய தங்களது முகங்களால் புன்னகைத்தார்கள்.பயிற்சிக்காக கொண்டுசெல்லப்படும் வரை அதேமுகாமிலேயே தங்க வைக்கைப்பட்டிருந்தோம். அணியின் தலைவராக உருத்திரன் நியமிக்கப்பட்டிருந்தான். ஓய்வுநேரத்தில் இருவரும் கதைத்துக்கொண்டிருந்தோம்.
லீவில வீட்ட போனியா ?
உருத்திரன் போய்வந்திருப்பான் என்று இந்தக் கேள்வியே எனக்கு உணர்த்திற்று. இல்லை என்று சொன்னேன். இந்தப்பயிற்சி முடிஞ்சதும் வீட்டுக்கு அனுப்பித் தான் எடுப்பினம் எண்டு நினைக்கிறேன்,யோசியாதே என்றான். பள்ளிக்கூடம் மீது நடத்தப்பட்ட விமானத்தாக்குதலில் அவனுடைய தந்தையாருடன் சேர்த்து பள்ளி மாணவர்கள் மூவர் இறந்துபோன சம்பவத்தைச் சொல்லிக்கொண்டிருந்தான். செத்தவீட்டிற்காக இயக்கம் கொடுத்த நான்கு நாள் லீவை முடித்துக்கொண்டு வந்துவிட்டதாகவும்,தாய் நடந்துமுடிந்த இந்த நிகழ்வைக் காரணங்காட்டி தன்னை இயக்கத்தில் இருந்து விலத்தி எடுத்துவிடமுடியுமென சொன்னதாகவும் கோபப்பட்டான்.அது நல்லது தானே,இயக்கம் அபூர்வமாக தலையாட்டி விடும், அம்மா முயற்சி செய்யட்டும் என்றேன். முகாமின் முன்னால் வாகனமொன்று வந்துநிற்கும் சத்தம் கேட்டது. முகாமின் பொறுப்பாளர் தன்னுடைய அறையில் இருந்து முகப்பு வாசலை நோக்கிச் சென்றார்.
“இயக்கம் போவென்று சொன்னாலும் நான் போறதாய் இல்லை, இனிமேல் உருத்திரன் செத்தால் அது வீரச்சாவு தான். நீ அம்மா கதைக்கிற மாதிரி என்னோட விசர்க்கதை கதையாதே” சொல்லிமுடித்து எழும்பினான் உருத்திரன். அவனிடமிருந்து இப்படியானதொரு பதிலை நான் மட்டுமல்ல, வன்னியே எதிர்பார்த்திருக்காது.வாழ்வில் விந்தைகள் நிறைந்த காலத்தின் வெளி விரிந்துகொண்டேயிருந்தது. வாகனத்தில் அனைவரும் ஏற்றப்பட்டு இரண்டுமாதங்கள் வரையிலும் பயிற்சி அளிக்கப்பட்டனர். பயிற்சி முடிவடையும் பருவத்தில் வான்மலரை உருத்திரனுக்கு சொன்னேன். அவளின் படையணியை கேட்டுத்தெரிந்து கொண்டவன் நான் இங்கிருக்கும் தகவலை தெரியப்படுத்திவிடுவதாக உறுதியளித்தான். வான்மலருக்கு களமுனையில் எதுவும் நடந்துவிடக்கூடாது என்கிற வேண்டுதலுக்காய் நானிருந்த விரதங்களை பகிடி செய்திருந்தான். வான்மலர் எழுதித்தந்த பிரிவுக்குறிப்பை வாசிக்கவேண்டுமென்று அடிக்கடி தோன்றுகிற சிந்தையை பூமியின் சிறந்த சிதைமேட்டில் எரியூட்டவேண்டும். எழுதப்பட்டவைகள் யாவும் வாசித்து தீர்க்கவேண்டியவை அல்ல, வார்த்தைகளைக் கவ்விக்கொண்டு சட்டென்று மீறத்துணியும் காதலை நான் எப்போதும் அரைக்கண்ணால் பார்க்கிறேன். நாணல் சேற்றுக்குள் புதைபடும் விலங்கின் கைகளைப்போல பிரிவு மீளத்துடிக்கிறது. மஞ்சத்தில் ஒருசேர திளைப்பதற்கு கூட வேண்டாம் களமுனையில் ஒரு சேர உயிர்திறப்பதற்கேனும் காதலிற்கு வல்லபம் பிறக்கவேண்டுமென்று என்னுடைய குறிப்பில் எழுதினேன்.
விடுமுறையில் வீட்டிற்கு சென்று நான்கு நாட்களில் திரும்பிவருமாறு அறிவிக்கப்பட்டது. உருத்திரனும் சேர்ந்து என்னோடு வந்தான். அப்பா பன்றி வேட்டைக்கு போய்வந்து எதுவும் மாட்டவில்லை என்று நான்கு நாட்களும் கவலையுற்றார். அம்மா ஒவ்வொரு நாள்காலையிலும் கள்ளூற்றி புளிக்க வைத்த அப்பத்தைச் சுட்டுதந்தாள். பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் சிலர் விருந்துக்கு அழைத்திருந்தனர். வீட்டை விட்டு முகாமிற்கு வெளிக்கிடும் போது அம்மா என்னுடைய கையிலும் உருத்திரனின் கையிலும் கோயில் நூலைக்கட்டி விட்டாள். அப்பா எங்கேயோ கேட்டு விசாரித்து பன்றி இறைச்சி வத்தல் வாங்கிவந்து தந்தார். அடுத்தமுறை வரேக்க கண்டிப்பாய் உங்களுக்கு எண்டு ஒரு பண்டி மாட்டும் என்று சொன்ன அப்பாவின் கண்களில் புத்திர சோகத்தின் அறிகுறிகள் முட்டிமோதுவதைக் கண்டேன். ஆனால் அதனை உணர்ந்துகொண்டு அவருக்கருகில் சென்றுவிடக்கூடாது. உடைப்பெடுத்து ஓடும் அணையின் இரைச்சலோடு அப்பா உதிர்வதை என்னால் பார்க்கவியலாது. எம்மிருவரின் முதுகிலும் துவக்கை கொழுவிமடித்துக் கொண்டு வீட்டை விட்டு வீதியில் இறங்கி நடக்கலானோம். எதிர்கொள்ளும் சனங்களின் முகங்களில் சொல்லவியலாத நித்தியம் பலாத்காரமாய் நகர்ந்துகொண்டிருந்தது. யுத்தத்தின் அடங்காத துர்சகுனம் சனத்தின் புன்னகையை மொய்த்துவிட்டது. திக்கற்றுச் சிதறும் பீங்கான் போல அவர்களின் உயிர் அச்சத்தில் மண்டிக்கிடக்கிறது. போர்விமானங்கள் குண்டுகளால் கயிறு செய்து அவர்களின் தலையறுக்கும் கோரங்கள் ஊர்முழுக்க உறுமுகிறது. நாம் யுத்தத்தில் இருந்து விடுதலை அடைவதற்கு யுத்தமே வழியாகி நிற்கிறது.இந்த வீதியின் மருங்குகளில் நிற்கிற பூவரசமரங்களின் கிளைகளில் நின்று வாலாட்டும் அணில்களைக் கூட குண்டுகள் மிச்சம் வைக்காது. நாம் இந்தத் துவக்கோடு நின்று சண்டை செய்து உதிரத்தை இழப்பது எங்களுக்காகவில்லை. எம் பிள்ளைகளுக்காக, அடிமையின் குழந்தை அருந்தும் தாய்ப்பாலும் செமிக்காது.
உருத்திரன் இவ்வாறு தொடர்ச்சியாக கதைப்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பேருந்தில் ஏறி இருந்தும் அவனே கதைத்தான். நாம் இப்போது எந்தக் களமுனைக்கு கொண்டு செல்லப்படுவோம் என அவனுக்கு ஒரு தீர்மானம் இருந்தது. முகமாலைக்கு தான் பெரும்பாலும் அனுப்பப்படுவோம் என சொன்னான். முகாமிற்குள் நுழைந்ததும் விடுமுறை முடித்துவந்திருந்த பெடியள் கதைத்துக்கொண்டிருந்தனர். நீண்ட நேரமாகியும் வராதவர்களின் பெயர் விபரங்கள் கோப்புக்களில் இருந்து எடுக்கப்பட்டு அவர்களின் வீட்டு முகவரிக்கு போராளிகள் அனுப்பட்டார்கள். இரவாகியும் வராதவர்களின் எண்ணிக்கை பத்துக்கும் மேற்பட்டதாயிருந்தது. தேடிச்சென்ற போராளிகள் மட்டுமே முகாமிற்கு திரும்பிவந்தார்கள். உருத்திரன் சொன்னதுவே இறுதியில் உண்மையானது. முகமாலைக் களமுனையில் தாக்குதலை செய்வதுதான் முதல் திட்டமென எங்களுக்கு அறிவிக்கப்பட்டது. வரைபடத்தில் விளக்கமளித்துக்கொண்டிருந்த தாக்குதல் தளபதி இந்தக் களமுனையில் இருந்து சிங்களவனின் முன்னேறுகிற கனவை நாம் சுக்குநூறாக சிதைக்கவேண்டும். யாழ்ப்பாணத்தில் நின்று கொண்டு ஆனையிறவுக்கு கால்விரிக்கும் இராணுவத்தின் கால்களை நமது கண்ணிவெடிகள் அறுக்குமென்றார். நாம் முகமாலைக்கு ஒரு துருப்புக்காவியில் ஏற்றிச்செல்லப்பட்டோம். தாக்குதல் அணி மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டது. மூன்றுக்கும் ஒரு அணித்தலைவர் நியமிக்கப்பட்டார். முகமாலைக் களமுனையானது எல்லோர் நெஞ்சிலும் திகில் ஒழுக கை வைத்தது. துருப்புக்காவிக்குள் இருந்த சிலருக்கு இந்தப்பயணம் பரவசத்தை தந்தது. வான்மலர் பருத்திக்காட்டில் பறந்திடும் பஞ்சுபோல எனக்குள் பிம்பமாக அலைந்தாள். இந்தத் துருப்புக்காவி வாகனம் இப்படியே திரும்பி மன்னார் நோக்கிச் செல்லுகிறது என்று சொன்னால் போகும் வரை அதன் சக்கரமுமாவேன் என்றதும் விழுந்து சிரித்தான் உருத்திரன். வான்மலரின் பிரிவுக்குறிப்பு எனது சீருடை பொக்கேற்றுக்குள் இப்போதும் இருக்கிறது. அதனை திறந்துபடியென்று மனம் சொல்கிறது. காதல் மறுக்கிறது. சூன்யம் பொதிந்த தாழியைத் தூக்கிச் சுமந்தவர்களைப் போல இந்தப் பிரிவுக்குறிப்பை ஏன் திறக்க அஞ்சுகிறாய்? உருத்திரன் கேட்டான். எல்லாவற்றுக்கும் பதில் தராத பகிரங்கம் தான் அன்பு. நான் எதுவும் கதைக்காமல் இருந்தேன்.
களமுனையில் நிறுத்தப்பட்டு இரண்டு நாட்கள் ஆகியிருந்தன. வடபோர்முனையின் கட்டளைத்தளபதியாக இருந்த கேணல் தீபன் எமது தாக்குதல் அணியோடு சிறிய சந்திப்பை நிகழ்த்தினார். இராணுவத்தின் முன்னேற்ற ஏற்பாடுகள் ஒரு பாரிய படையெடுப்பை நோக்கமாக கொண்டிருப்பதாகவும் அதனை முறியடிப்பது அவசியமென்றும் சூளுரைத்தார். புதிய களமுனையில் ஐந்து நாட்கள் ஆகியிருந்தன. யுத்தம் ஒருகண அதிர்வில் விஷம் போல பரவிற்று. இராணுவத்தின் எறிகணைகள் நொங்குகுக் குழைகள். சன்னங்கள் உலோகச் சிறுவிரல்கள். எங்கள் திசை நோக்கிச் சரிந்தன பல்குழல் பீரங்கிக்குண்டுகள். சற்று நிமிடங்களுக்கு முன்னர் நான் பார்த்த களமுனை உருமாறிற்று. கட்டளைகள் பிறந்தன. எங்கள் துவக்குகள் இயங்கின. கூவிவிழும் எறிகணைகள் போதாதென வான்வழியாய் ஒழுகி விழுந்தன ராட்சத குண்டுகள். நீண்ட நேரமாகியும் ஓரடி கூட முன்னேற முடியாத இராணுவம் சற்று இடைவேளைக்கு திரும்பியது. களமுனை இப்போது ஜடம். அதன் மீது புகையும் குருதிகளும் எழும்புவதும் வடிவதுமாக இருந்தன. இருபதிற்கு மேற்பட்ட போராளிகள் வீரச்சாவு அடைந்திருந்தனர். உருத்திரன் எங்களுடைய அணியில் உள்ள ஒருவன் காயமடைந்ததாக வோக்கியில் அறிவித்தான். அவன் தப்புவது கடினமென்று சொல்லிமுடித்து மீண்டும் இருமிக்கொண்டு சொன்னான், அவனோட சேர்த்து இருபத்தி ஒன்று. இது தான் யுத்தம் பிளக்கும் உள்ளங்களின் வார்த்தை.
அடுத்தநாள் இரவு எங்களுடைய அணியை ஒன்றுசேர்த்து தாக்குதல் ஒன்றை செய்வதாக திட்டமிடப்பட்டது. நாங்கள் அனைவரும் தயாரானோம். அன்றைக்கு அமாவாசை இரவைப் போன்ற இருள். நாம் தாக்குதலை தொடுத்தோம். இராணுவம் எதிர்பார்க்கவில்லை. அவர்களால் திடுமென தங்களை நிலைப்படுத்தி பதிலுக்கு தாக்கமுடியாமல் போயிற்று. அவர்களுக்கு அருகில் ஊடுருவி நின்று பலமான தாக்குதலை செய்வோமென எண்ணியிருக்கமாட்டார்கள். பெயர் தெரியாத பட்சிகள் வீழ்ந்து மாய்கிற சித்திரம் மாதிரி என்ன ஆயுதங்கள் என்று கண்டுபிடிக்கவேமுடியாதளவுக்கு அவர்கள் பதில் தாக்குதலை நிகழ்த்துவார்கள் என்று எதிர்பார்த்தோம். எங்கள் அணியிலிருந்த ஒரு முக்கியமான சண்டைக்காரன் சினைப்பரால் வீழ்த்தப்பட்டான். எமது இடத்தை இராணுவம் கண்டுபிடித்து விட்டது. இனி கேட்பதெல்லாம் குண்டுகளின் எதிரொலி அதன் மூலமோ எங்களின் குருதியிழப்பு என்று எனக்குத் தோன்றிற்று. தாக்குதல் நடந்தபடியிருந்தது. இராணுவத்தின் திசையிலிருந்து இசைக்குறிப்பின் சீர்படுத்தப்படாத லயத்தோடு குண்டுகள் வரத்தொடங்கின. தரையிலிருந்து சமவெளியாக பெய்யும் உலோக மழை தொடங்கிற்று. கிட்டத்தட்ட அந்தத் தாக்குதலில் நாங்கள் ஐவரை இழந்திருந்தோம். அவர்களில் ஒருவன் காயமடைந்து வலி தாங்காமல் சயனைட்டைக் கடித்திருந்தான். மூன்று மணித்தியாலங்கள் நடந்த தொடரான இந்த நடவடிக்கையில் எமது தாக்குதல் அணிக்கு வெற்றி கிடைத்தது. முப்பதிற்கும் மேற்பட்ட இராணுவத்தின் உடல்களை நாம் கைப்பற்றியிருந்தோம். நிறைய ஆயுதங்களை மீட்டிருந்தோம். படையணிகள் மத்தியில் எங்களுடைய தாக்குதல் அணியின் பேர் பேசுபொருளாகியது. உருத்திரனுக்கு இந்த வெற்றி இன்னும் “தாவிப்பாய்” என்று உத்வேகம் அளித்தது.
ஒரு மாதத்திற்குள் மூன்று தாக்குதல்களை செய்திருந்தோம். உருத்திரன் தனது விதைப்பையில் காயமடைந்திருந்தான். அவன் உயிர்தப்புவது சந்தேகமென்று அறியநேர்ந்தது. நான் அதிலிருந்து இரண்டு வாரங்களில் காயமடைந்திருந்தேன். அப்போது இயக்கம் அந்தக் களமுனையில் மிகவும் பலமாக இருந்த போதிலும் இராணுவம் அதனை விடவும் பலத்துடன் இருந்தது. நான் காயமடைந்து கிளிநொச்சி ஆசுப்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தேன். வான்மலர் பற்றிய தகவல்களை அறிய வேண்டுமாற் போலிருந்தது. அங்கு காயப்பட்டு சிகிச்சைக்காக வந்திருக்கும் சில பெண் போராளிகளிடம் பேர் சொல்லி விசாரித்தேன். அவர்கள் யாருக்கும் அவளைத் தெரியாதிருந்தது. என்னுடைய நீக்கப்பட்ட வலதுகண்ணிலும் அவளின் பிம்பம் வண்டுகளைப் போல ஊர்ந்தன. சிலவாரங்கள் கழித்து உருத்திரன் நலமடைந்திருந்தான். அவனுக்கு தற்காலிக ஓய்வு அறிவிக்கப்பட்டிருந்தது. அவனோ களத்திற்கு செல்லவேண்டுமென்று அடம்பிடித்தான். இருவரும் ஓரிருமாதங்களுக்கு பிறகு களமுனையில் ஒன்றாக சந்தித்தோம். வான்மலரின் தொடர்பு கிடைத்ததா? என்று அவனே கேட்டான். நான் தலையை அசைத்து “இல்லை”என்றேன். மன்னாரில் நடந்து முடிந்த உக்கிரமான மோதல்களில் இயக்கம் பின்னடவை சந்தித்திருந்தது. நிறையப்பேர்களை இழந்துமிருந்தோம். பெரும்பாலும் பெண் போராளிகளின் வீரச்சாவு எண்ணிக்கைகள் அதிகமாயிருந்தன. அன்யோன்யமான ஒருத்தியின் நினைவுகள் பளீரெனத் துலங்கும் சலனாமானவன் நான். பிரிவு நெடுந்தூரம் அலைக்களித்து நலிந்த சமரனின் சரீரத்தில் பசலையின் விரட்டல். நேருக்கு நேர் நின்று எதிரிகளோடு மோதுகிற உக்கிரங்களிலும் என்னைச் சுற்றிவளைப்புச் செய்திருப்பவள் வான்மலர். அவள் எழுதித் தந்த பிரிவுக்குறிப்பை வாசித்தால் என்னவென்று இப்போது எனக்குத் தோன்றியது. பறவையின் அலகிலிருந்து தவறிக் கடலில் விழுந்த விதையைப் போல அங்குமிங்கும் மிதந்து ஆடுகிறேன். நான் துளிர்ப்பதற்கு வான்மலர் எக்காலமும் ஓரொளி. களத்தில் நிறைய நாட்கள் அமைதி நிலைத்துநின்றது. நானும் உருத்திரனும் விடுமுறைக்காக காத்திருந்தோம். தரப்பட்ட ஐந்து நாட்களின் மூன்றாவது நாளில் மழையில் நனைந்தபடி இந்த வாய்க்கால் கரையோரம் நானும் அவனும் உணர்கொம்புகள் கொண்ட நத்தைகளைப் போல மண்ணில் கிடந்தோம்.
அன்றிரவு வான்மலர் வீரச்சாவடைந்த செய்தியை புலிகளின் குரல் வானொலியில் கேட்டேன். விடுமுறையின் நான்காவது நாள் காலையில் வான்மலரின் வீட்டிற்கு நானும் உருத்திரனும் சென்றிருந்தோம். உடலைப் பார்க்கமுடியாது பேழை சீல் செய்யப்பட்டிருந்தது. அதனை உடைத்து பிள்ளையின் முகத்தைப் பார்க்கவேண்டுமென்று வான்மலரின் தந்தை கங்கணமாய் நின்றார். அங்கிருந்த மகளிர் போராளிகள் அவரைச் சமாதானப்படுத்தினார்கள். கிளிநொச்சி துயிலுமில்லத்தில் அவளை விதைத்து இரண்டு வருடங்களில் யுத்தம் எங்களைப் புதைத்திருந்தது. அற்புதங்கள் நிகழ மறுத்த கடற்கரையில் அற்புதங்களின் பாடல்கள் தகர்ந்து போனது. முள்ளிவாய்க்காலில் சரணடைந்த போராளிகளை ஒரு வாகனத்தில் அடைத்து ஏற்றிய அன்றைய காலைப்பொழுதில் எங்கள் கைகளில் விலங்குகள் இடப்பட்டன. பெண் போராளிகள் இன்னொரு வாகனத்தில் ஏற்றப்பட்டனர். அப்போது தான் வான்மலரை பார்த்தேன். இராணுவ உடையில் நின்று கொண்டு சரணடைந்த பெண் போராளிகளை விசாரித்தபடி நின்றாள். அவளின் மிதப்பான தோரணை தோற்றுவந்த எம்மிடம் இரக்கம் காட்டுவதாய்க் கூட இல்லை. சென்னையில் விமானம் தரையிறங்கியதும் தன்னுடைய இருக்கைப்பட்டியை கழற்றிக்கொண்டு இதுவரை நேரம் கதையைக் கேட்டவர் இப்படியொரு கேள்வியைக் கேட்டார்.
இயக்கம் வீரச்சாவு எண்டு கிளைம் பண்ணியிருக்கு ஆனால் அவள் ஆர்மியிட்ட உயிரோட பிடிபட்டு பிறகு சி.ஐ.டியாய் ஆகியிருக்கிறாள் அப்பிடித்தானே?
அவளின் பிரிவுக்குறிப்பு இப்போதும் என்னிடமே இருந்தது. நம்பமுடியாத ஒரு கணத்தின் மேன்மை சாம்பலாகிய இந்தவிடத்தில் இத்தனை வருடங்களுக்கு பிறகு அதனைத் திறந்து படித்தேன்.
“என்னோடு வா, சில நேரங்களில் கூட நீ உறுதியாக இறந்துபோகமாட்டாய்” என்று எழுதப்பட்டிருந்தது. காலம் அதிர்ச்சியில் உறைந்தது.
நன்றி – தடம் – ஒக்டோபர் – 2018
The post பிரிவுக்குறிப்பு first appeared on அகரமுதல்வன்.
அகரமுதல்வன்'s Blog
- அகரமுதல்வன்'s profile
- 17 followers

