அகரமுதல்வன்'s Blog, page 28
December 31, 2023
போதமும் காணாத போதம் – 14
திருவாசகப்பிள்ளை மாமா அதிகாலையிலேயே வீட்டுக்கு வந்திருந்தார். அமிலம் வேகித் தோலுரிந்தது மாதிரி முகமிருந்தது. தீட்சை அணிந்த மேனியில் வாசனை கமழ்ந்தது. செந்தளிப்பும், புன்சிரிப்பும் உடைந்த மாமாவைப் பார்க்கவே பயமாகவிருந்தது. “நீ கதைச்சால் தான், அவன் விளங்கிக் கொள்ளுவான். மனசு மாறுவான்” என்று அம்மாவிடம் சொன்னார். குங்குமம் இயக்கத்தில் சேர்ந்துவிட்டானா! என்று வியந்தேன். ஊரை உலையில் போட்டு கஞ்சியாக குடித்துவிடும் நரியவன். அவனிடம் இனி மரியாதையாக நடக்கவேண்டுமேயென நினைத்து தலையிலடித்தேன். ஆனால் இயக்கத்துக்கு போனவனை மனசு மாற்றச்சொல்லி அம்மாவிடம் வந்து கேட்கும் மாமாவைப் பார்த்தால் கொஞ்சம் பரிதாபமாகவே இருந்தது. சொந்தச் சகோதரியாக இருந்தாலும் இவ்வளவு நம்பியிருக்க வேண்டாம். தன்னுடைய பிள்ளை இயக்கத்துக்கு போனதும் “பால்ராஜ் மாதிரி ஒரு சண்டைக்காரனோட போய் நில்லு. உனக்கு ரத்தம் கொடுத்தது நானில்லை, நிலம். இரத்தம் நிலத்தினது. என்றவள் அம்மா.
மாமாவையும் அம்மாவையும் ஊடறுத்து என்னுடைய ஷெல்லை இறக்கினேன். அவன் இயக்கத்துக்கு போனால், அவனுக்கு அழிவில்லை. அங்கயிருக்கிற மிச்சப்பேரை நினைச்சுத்தான் எனக்கு கவலை” என்றேன். எடேய், அவன் இயக்கத்துக்கு போகேல்ல, யெகோவா சபையில சேர்ந்திட்டானாம்” என்று சொன்ன அம்மா சிரித்தாள்.
“என்ர தெய்வமே. இயக்கத்துக்கு இன்னும் நல்ல காலமிருக்கு” ஆறுதலடைந்தேன்.
மாமாவின் நெற்றியில் அழியாது காய்ந்திருந்த திருநீற்றை பிளந்தறுக்கும் ரகசியமாய் வேர்வை இறங்கியது. கொஞ்சம் நிமிர்ந்தமர்ந்து “அவனை நேற்றே வீட்டிலிருந்து வெளியேறுமாறு சொல்லியிட்டன்” என்ற மாமா எழுந்தார். “குங்குமம் இப்ப எங்கயிருக்கிறான்” என்று கேட்டேன். கைவிரித்து தெரியாதென்றார்.
மாலையில் யெகோவாவின் ராஜ்ஜியத்தை அறிவிக்கும் சபைக்குச் சென்றேன். கொய்யா மரத்தடியிலிருந்து பைபிளை வாசித்த குங்குமம் என்னைக் கண்டதும் பரபரப்படைந்து மூடி மறைத்தான். என்ன குற்றமிழைத்தான், ஏன் பதறுகிறான். சிறியவர்களாக இருந்தபோது காகிதத்தைச் சுருட்டி பீக்காட்டில் புகைத்த பீடிக்கு கூட அஞ்சாதவன் குங்குமம். என்னை அமரச் சொல்லி கதிரையை எடுத்துத் தந்தான். “பைபிள் என்ன சொல்லுகிறது” என்று எழுதப்பட்ட புத்தகமொன்றும் இருந்தது. காவற்கோபுரம் வண்ணமயமான சஞ்சிகை. ஒருமுறை விக்டர் பிரதரிடமிருந்து வாங்கிச் சென்றேன். ஏதேன் தோட்டத்தில் கனியுண்ணும் ஆதாமும் ஏவாளும் கண்சொருகி தித்திக்கும் கணத்தை வரைந்திருந்தார்கள். பாம்போ அதனை வேடிக்கை பார்த்தது. பாவத்தின் விளைவுகளை அறியாத மானுடரின் மூதாதையர்களை கையிலேந்தியபடி வீட்டுக்குள் சென்றேன்.
வாசலில் அமர்ந்திருந்த உண்ணி ஆச்சி, “கையில என்ன புத்தகமடா மோனே” என்று கேட்டாள். காவற்கோபுரம், பிரதரிட்ட வாங்கி வந்தனான் என்றேன். “பிரதரோ, அது ஆரடா?” புத்தகத்தை வந்து பார்த்தாள், உலக முடிவு எப்போது என்று எழுதப்பட்டிருந்தது. எடேய் சனியனே, உந்த வேதக்காரற்ற தரித்திரியத்தை வீட்டுக்குள் கொண்டு வந்து வைச்சிருக்கிறியே, உனக்கு பாவமாய் தெரியேல்லையோ. எடுத்து எரிச்சுப் போடுவன்” என்றாள். “விழிப்புடன் இருங்கள். ஏனென்றால் உங்களுக்கு அந்த நாளும் தெரியாது, அந்த நேரமும் தெரியாது” – மத்தேயு அதிகாரத்திலிருந்து அச்சிடப்பட்டிருந்த வாசகத்தை ஆச்சிக்கு முன்நின்று சத்தமாக வாசித்தேன். ஆச்சி கழுத்தில் கிடந்த உண்ணிகளை பிய்த்து எறிந்து வருகிற ரத்தத்தை விரல்களில் தொட்டுப் பார்த்தாள்.
உண்ணி ஆச்சி இருந்திருந்தால் குங்குமத்தை தோலுரித்திருப்பாள். இவனின் நல்ல காலத்துக்கு ஆச்சி இறைபதம் அடைந்திருந்தாள். நாங்கள் இருவரும் கதைத்துக் கொண்டிருந்தோம். அப்போதுதான் விக்டர் பிரதர் வந்து சேர்ந்தார். வணக்கம் சொன்னார், எழுந்து நின்று வணங்கினேன். அமரும்படி சைகை செய்தார்.
அம்மா சொன்னதைப் போலவே குங்குமத்தை வீட்டுக்கு அழைத்து வந்தேன். அன்றிரவு பைபிளும் கையுமாக இருந்தான். நீண்ட பிரார்த்தனையைப் போல ஒளிவீசும் குப்பி விளக்கில் வாசித்தான். நுளம்புக்கடி தாங்காது வலைக்குள் உறங்கினேன். விடியும் வரை பைபிளோடோயிருந்தான். தழும்பேறிய சிலுவையைப் போல என் மனத்துள் குங்குமம் உயர்ந்தான். ஏற்றுக்கொண்டதில் தீவிரமாகவிருப்பவன் மதிப்புடையவன். காலையில் ஒன்றாக காட்டுக்குப் போனோம். இரண்டு போராளிகள் சைக்கிளில் வீதியைக் குறுக்கறுத்துப் போயினர். காட்டில் கருமம் முடித்து அடிகழுவி எழுந்தோம்.
“நான் செய்தது பிழையில்லை. ஆனால் அப்பா நடந்து கொண்ட விதம் குரூரமானது. வேதத்துக்கு மாறினால் இவருக்கு என்ன பிரச்சனை” குங்குமம் பனிவிலக்கும் பூமியோடு கதகதப்பை உருவாக்கினான்.
“மச்சான், நீ விரும்புறது தான் உன்ர சமயம். தெய்வம். அதில எவரும் தலைநீட்டேலாது. அது அப்பாவா இருந்தாலும் பொருந்தும்” என்றேன்.
“இறுதி நாளில் உலகம் அழிந்து தேவனின் அரசு நிறுவப்படுகையில் திருவாசகப்பிள்ளை யெகோவாவை நம்புவார். அதுவரைக்கும் என்னை ஏசட்டும். நான் வீடு வீடாகச் சென்று ராஜ்ஜத்தை பிரச்சாரம் செய்யப் போறன்” என்றான்.
வீட்டுக்கு வந்தோம். இயக்கத்தின் பிரச்சார பிரிவுப் போராளிகள் மூவர் வந்து நின்றனர். மாலையில் எங்களுடைய கிராமத்தில் நடைபெறவிருக்கும் தெருநாடகமொன்றிற்கு வரும் கலைஞர்களை வீட்டில் தங்கவைக்க முடியுமாவென அம்மாவிடம் கேட்டார்கள். மறுப்பாளா அவள். இரவு இங்கேயே சாப்பிட வேண்டுமென வேண்டினாள். அவர்கள் பெருவிருப்புடன் தலையசைத்துச் சென்றனர்.
“இவர்கள் எல்லோரையும் ஒருநாள் யெகோவா மன்னிப்பார்” என்றான். குங்குமத்தின் நல்ல காலம், அம்மா அவர்களை வழியனுப்பச் சென்றிருந்தாள். அவள் காதில் விழுந்தால் மன்னிப்பெல்லாம் இல்லை. உடனடியாக வீட்டை விட்டு வெளியேற்றுவாள். ஜென்மம் தீர்ந்தாலும் படலை திறக்காள். குங்குமம் இவையெல்லாவற்றையும் அறிந்திருந்தும் துடுக்குத்தனமாய் நடந்தான். அம்மா சாப்பாடு போடுகிறேன் என்ற போது வேண்டாமென மறுத்தான். விரதமிருப்பதாக கூறினான். எப்போது பசித்தாலும் சாப்பிடு என்றாள்.
மாமா வீட்டுக்கு வந்தார். பைபிள் படித்துக் கொண்டிருந்த குங்குமம் எழுந்து ஆச்சியின் கொட்டிலுக்குப் போனான். “இவனை ஏன் வீட்டில அண்டி வைச்சிருக்கிறாய்” என்று அம்மாவோடு சண்டை போட்டார். “மாமா அவனை நீங்கள் குறைச்சு மதிப்பிடாதேங்கோ. இப்ப பழைய குங்குமம் இல்ல” என்றதும் “ஓமோம், படிச்சு கம்பெஸ்க்கெல்லே போய்ட்டான்” என்று நக்கல் அடித்தார். தனக்குப் பிடிச்ச சமயத்தில சேர்கிறதொண்டும் ராஜ துரோகம் இல்ல. இப்பிடி அவனைப் போட்டு எதையாவது செய்து கொண்டிருந்தால், நான் இயக்கத்திட்ட போய் சொல்லிப்போடுவன். மதவுணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் இருக்கிறது பாரிய குற்றம்” என்றேன். “நாங்கள் பார்க்காத இயக்கத்தை இப்ப எங்களுக்கு நீங்கள் காட்டுறியள்” என்றார். “அப்பிடி வைச்சுக் கொள்ளுங்களேன்” என்று சொன்னதும் “இனிமேல் இந்த வீட்டுக்கும் நான் வரப்போறதில்லை” என்றார் மாமா.
குங்குமம் ஊழியக்காரனாக தொடர்ந்து செயற்பட ஆரம்பித்தான். இரண்டு மாதங்களுக்கிடையில் சொந்தக்காரப் பெண்ணொருத்தி உட்பட எட்டுப்பேரை சபையில் இணைத்துக் கொண்டான். திருமுழுக்கு நடைபெறும் நாளையும் அவர்களுக்கு குறித்தனர். குங்குமம் களப்பணி அறிக்கையை கொடுத்து டேவிட் பிரதரிடம் பாராட்டுக்களை வாங்கியதாகச் சொன்னான். அவனிடமிருந்த நரித்தனமும் கெடு நினைப்புக்களும் இல்லாமல் சாதுவாகியிருந்தான். யெகோவாவின் அற்புதமே ஓங்குக! என்று ஒருதடவை மனதுக்குள் சொன்னேன்.
உண்ணி ஆச்சி வாசலில் அமர்ந்திருக்கிறாள். அவளுடைய காலுக்கடியில் கறுப்பன் வால் சுருட்டி படுத்திருந்தான். முகத்தில் வளர்ந்திருந்த உண்ணிகளை பிய்த்தெறிந்து ரத்தம் கசிய குந்தியிருந்து “என்னடா மோனே” என்று கேட்டாள். என்னுடைய கையில் கிடந்த துண்டுப் பிரசுரத்தை வாங்கிப் பார்த்தாள். “தமிழீழ விடுதலைக்கு தோள் கொடுங்கள்” என்று எழுதப்பட்டிருந்தது. பார்த்துவிட்டு தருவித்தாள். “இவன் குங்குமம் எங்க” கேட்டாள். அவன் யெகோவா சபையில இருக்கிறான். “அவனைக் கவனமாய்ப் பார், பெரிய பாரத்தை சுமந்து நெடுந்தூரம் போகப்போறான்” என்றாள். குங்குமம் சிலுவையில் அறையைப்பட்டு வானத்துக்கு உயர்ந்து நின்றான். அவனுடைய கால்கள் அசையமுடியாமல் ஆணியில் இறுக்கப்பட்டிருந்தன. முள்முடியில் ஒரு செம்போத்து அமர்ந்திருந்து அவனை கீழ்நோக்கி பார்த்துக் கொண்டிருந்தது. குங்குமத்தின் முகம் மலர்ந்து புன்னகைத்தபடியிருந்தது. கண்ணீர் வழிந்து ஒழுகியது. கண்களைத் திறந்தேன். சித்தம் படபடத்தது. தலைமாட்டிலிருந்த செம்புத் தண்ணீரைக் குடித்தேன். எழுந்து வெளியே வந்தேன். வாசலில் உண்ணித் தோல்கள் பரவியிருந்தன. ஆச்சியின் காலடிகள் வீட்டு முற்றத்திலிருந்து கிணற்றடி வரைக்கும் அழியாமல் இருந்தது. குசினிக்குள்ளிருந்த அம்மாவிடம் ஓடிச்சென்றேன். வானொலியில் திருச்சி லோகநாதன் “நெஞ்சம் கனிந்து முருகா என்று மனதில் நினைக்கின்ற நேரமெல்லாம்” என்று பாடிக்கொண்டிருந்தார். பாடலைக் கேட்டபடி அப்பம் சுட்டுக் கொண்டிருந்த அம்மாவிடம் ஆச்சி கனவில் சொன்னதை தெரிவித்தேன்.
ஒருநாள் மாலையில் குங்குமம் வீட்டிற்கு வந்திருந்தான். யெகோவா சபையின் வேலையாக மூன்று நாட்களில் கொழும்புக்கு செல்லவிருப்பதாக சொன்னான். இயக்கத்திடம் அனுமதி கேட்டிருப்பதாகவும் அது கிடைத்துவிட்டால் பிரதர் டேவிட்டோடு பயணமென்றான். ஆச்சி கனவில் வந்து சொன்னவவற்றை ஒரு சொல்லும் விடாமல் குங்குமத்துக்கும் அறிவித்தேன். “என்னிடத்தில் அக்கிரமம் இல்லாதிருந்தும், ஓடித்திரிந்து யுத்தத்துக்கு ஆயத்தமாகிறார்கள். எனக்குத் துணைசெய்ய விழித்து என்னை நோக்கிப் பாரும்” என கர்த்தரிடமும் ஆச்சியிடமும் பிரார்த்தித்து விட்டேனென குங்குமம் சொன்னான். ஒன்றாக அமர்ந்திருந்து சாப்பிட்டோம். அவனுக்குப் பிடித்தது மண்சட்டியில் வைக்கப்பட்டிருந்த மீன் குழம்பு. அம்மா நிறைவாகச் சாப்பிடுமாறு சொன்னாள். நிலவூறி வளர்ந்த இரவுக்கு சந்தோஷத்தை காணிக்கையாக்கினோம்.
குங்குமம் கொழும்புக்குச் சென்று நான்கு நாட்களில் தொடர்பு கொண்டான். வன்னியன் தொலைத்தொடர்பு நிலையத்தில் நானும் அம்மாவும் சென்றும் கதைத்தோம். அங்குள்ள சபையின் தலைமைக்காரியத்தில் இருப்பதாகச் சொன்னான். நன்றாக படித்து சமயக்குருவாக ஆகிவிடு என்றேன். குங்குமம் சரி மச்சான் என்று சொல்லி தொடர்பை துண்டித்தான். மாமாவுக்கு அவன் கொழும்பு சென்றடைந்ததைப் போய்ச் சொன்னேன். இறுகிப் போய் கேட்டு, தலையை மட்டும் ஆட்டினார்.
இயக்கம் பிரச்சாரத்தின் மூலம் ஆட்களை படையில் சேர்க்கும் ஒரு களமுனையை திறந்திருந்தது. சைக்கிளில் செல்லும் இளையோரை வழிமறித்து “வயது என்ன” என்று கேட்கும் போராளிகள், போராட்டத்தின் அவசியத்தைக் கூறி ஐந்து நிமிடங்கள் பேச எண்ணுவார்கள். பதினெட்டு வயது என்றால் அவர்களுடன் கதைப்பார்கள். குறைவான வயதென்றால் போகலாம் என்பார்கள். “என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக்கூடும்? நான் சத்தியத்தைச் சொல்லியிருக்க, நீங்கள் ஏன் என்னை விசுவாசிக்கிறதில்லை” என்பதைப் போல போராட்டம் வீதியில் பிரச்சாரம் செய்தது. நாங்கள் எங்களுடைய கிராமத்தை விட்டு இடம்பெயருமளவுக்கு யுத்தம் தொடங்கியது. யெகோவா சபைக்குள்ளிருந்த புத்தகங்களையும், பைபிள்களையும் ஒரு மூட்டையில் கட்டி நடக்க ஆரம்பித்தேன்.
இடம்பெயர்ந்து போன இடத்தில் மரத்தடியொன்றின் கீழே அமர்ந்திருந்தோம். அங்கே சமையல் செய்து, உண்டு, உறங்கி நான்கு நாட்களாகியும் பைபிளையே வாசித்தேன்.
“அவைகளைக் கேள்விப்பட்டாயே, அவைகளையெல்லாம் பார், இப்பொழுது நீங்களும் அவைகளை அறிவிக்கலாமல்லவோ? இதுமுதல் புதியவைகளானவைகளையும், நீ அறியாத மறைபொருளானவைகளையும் உனக்குத் தெரிவிக்கிறேன்” என்ற வாசகத்தில் வேரூன்றி நின்றேன்.
கொழும்பில் நடந்த தாக்குதல் ஒன்றில் இராணுவத் தளபதி ஒருவர் கொல்லப்பட்டிருப்பதாக செய்திகள் வரத் தொடங்கின. சூரியன் பண்பலைச் செய்தியில் அது தற்கொலைத் தாக்குதல் என உறுதியளிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தனர். இராணுவ அணிவகுப்பில் நடந்த இந்தத் தாக்குதலில் பலியான சிப்பாய்களின் எண்ணிக்கை பற்றிய விவரம் எதுவும் அப்போது தெரியவில்லை. வன்னியின் வான்பரப்பில் போர்விமானங்கள் ஆவேசங்கொண்டு புகுந்தன. ஆறுக்கும் மேற்பட்ட போர்விமானங்கள் புலிகளை இலக்கு வைத்து குண்டுகளை வீசின என்று ஊடகங்கள் தெரிவித்தன. வழமை போல சனங்களின் பிணங்களை அடுக்கி, வன்னியே ஓலமிட்டது.
நாங்களிருக்கும் இடத்தைத் தேடிக்கண்டு பிடித்த அரசியல் போராளிகள் மாமாவை அழைத்து உங்களுடைய மகன் வீரச்சாவு அடைந்து விட்டார் என்று சொல்லினர்.
“தம்பியவே, அவன் உங்கட கொம்பனியில இல்லை, கொழும்பில இருக்கிறான். அதுவும் யெகோவா சபையில. அவங்கள் சண்டைக்கு எதிரானவங்கள். ரத்தம் குடுக்கவே மாட்டங்கள். நீங்கள் மாறி வந்து நிண்டு கதைக்கிறியள்.”
அய்யா. உங்கட மகனுக்கு குங்கும சிலையோன் தானே பேர்.
“ஓம்”
“அவர் டேவிட் பிரதரோட இருந்தவர் தானே”
“ஓம்”
“இப்ப ஒரு மாசத்துக்கு முன்ன கொழும்புக்கு போனவர் தானே”
“ஓம் “
“நாலு நாளுக்கு முன்னம் கொழும்பில நடந்த தாக்குதலில ஒரு இராணுவத்தளபதியை அடிச்சம் தானே. அதில கரும்புலியாய் இருந்ததில ஒருவர் உங்கட மகன் “மேஜர் இம்மானுவேல்” வீரச்சாவு அடைந்தார்.
மாமா ஓம்…ஓம்…ஓம்… என்பதைச் சொல்லிக் கொண்டே இருந்தார். விஷயம் கேள்விப்பட்ட அம்மாவும் நானும் சனங்களை விலத்திக்கொண்டு மாமாவிடம் ஓடிச் சென்றோம். ஓம்….ஓம்…ஓம் என்று சொல்லிக் கொண்டிருந்த மாமாவைப் பார்க்க இயலாது இருந்தது. ஏற்பற்ற பார்வையால் பூமியைப் பார்த்தார். வானத்தைப் பார்த்தார். அவனது தியாகத்தின் சாகசத்தில் உறைந்து நின்றேன். என்னைக் கண்டதும் கட்டியணைத்து “அவன் உன்னட்டையாவது உண்மையைச் சொல்லியிருக்கலாம் தானே” என்றார்.
“ஓம்”
அன்றிரவு மரத்தின் கீழே உறங்கச் சென்ற போது “உனக்கு அவன் இயக்கமெண்டு உண்மையிலும் தெரியாதோ” கேட்டாள் அம்மா.
“இல்லையம்மா, உங்களுக்குத் தெரியுமோ”
அம்மா எதுவும் சொல்லாமல் நின்றாள். அவளது ரகசிய காப்புக்களை தகர்க்க இயலாது. “உண்ணி ஆச்சி, கனவில சொன்ன பாரம் இப்ப தான் எனக்கு விளங்குது அம்மா” என்றேன்.
“அண்டைக்கு அவன் சொன்னது உனக்கு ஞாபகம் இருக்கோ”
“என்னம்மா”
“பரலோகப் படைகளின்ர யெகோவா எங்களோடு இருக்கிறார். யாக்கோபின்ர கடவுள் எங்களுக்கு பாதுகாப்பான அடைக்கலமாக இருக்கிறார். தேசங்களின் மத்தியில் நான் உயர்ந்திருப்பேன். பூமியில் உயர்ந்திருப்பேன்” என்றானே, மறந்திட்டியோ!
“எதோ சொன்னவன் தான். இப்ப நீங்கள் சொல்லும் போது தான் ஞாபகம் வருது”
“அவனை இனி நீயில்லை நானில்லை. தேசமும் மறக்காது” என்றாள்.
அன்றைக்கு ஆச்சியின் கனவை சொன்ன போது “இஞ்ச எல்லாப்பிள்ளையளும் பாரம் தான் சுமக்கினம். அவனும் சுமக்கட்டும். அது சிலுவையோ, துவக்கோ. என்னவென்றாலும் கவலைப்பட எதுவுமில்லை” என்ற அம்மாவின் வார்த்தைகளையும் என்னால் மறக்க முடியாது.
The post போதமும் காணாத போதம் – 14 first appeared on அகரமுதல்வன்.
புத்தக இரவு
இரண்டாயிரத்து இருபத்து மூன்றாம் ஆண்டின் நிறைவு நாளான இன்று டிஸ்கவரி புத்தக நிலையத்தில் நடைபெறும் புத்தக இரவில் “ஈழ இலக்கியத்தை முன்வைத்து ” உரையாடல் ஒன்றை நிகழ்த்தவுள்ளேன். வாய்ப்பிருப்போர் கலந்து கொள்க.
The post புத்தக இரவு first appeared on அகரமுதல்வன்.
December 30, 2023
சிறுகதை – கவளம் – காளிப்ரஸாத்
காவிரியின் கடைசிக் கிளையாறும் முத்துப்பேட்டையில் கடலில் கடக்க, அதற்குத் தெற்குப் பக்கம் இருந்த நிலமெல்லாம் வானம் பார்த்த பூமியாக ஆனது. அந்த ஆண்டுச் சுழற்சியில் வந்த பிங்களத்தில் மழை நின்றது. பின் துந்துபி ஆண்டு வரை மழைப் பொழிவு இல்லை. பஞ்சத்தில் பயிர் போக, மரநாய், பூனை, சாரைப்பாம்பு எனத் தின்னத் துவங்கி ஊரில் இறுதியாக எஞ்சியிருந்த கடைசி எலியும் தீர்ந்து போன சமயத்தில் ஊரைவிட்டு மொத்தமாக கிளம்பி வடக்குத்திசை பார்த்து நடந்தார்கள். விதைநெல்லை சமைத்து கட்டுச் சோறாக்கிக் கொண்டனர். பத்துக் கல் தூரம் போனதும்தான் அதைப் பிரித்து தின்ன வேண்டும் என சொல்லி வைத்துக் கொண்டனர். ஆனால், ஊர் எல்லையைத் தொடும் முன்னரே ஒருத்தி அதைப் பிரித்து ஒரு கவளம் எடுத்து வாயில் போட்டுக் கொண்டாள்.
https://vasagasalai.com/kavalam-sirukathai-kaliprasath-vasagasalai-85/
The post சிறுகதை – கவளம் – காளிப்ரஸாத் first appeared on அகரமுதல்வன்.
December 29, 2023
ஏகபோகம்
01
செம்பருத்திப் பூவின் வெளிச்சத்தோடு
காமத்தின் உப்புக்கூட்டி
என் பெயர் சொன்னாள்.
உன்னால் ஒரு சூரியனைப் போல எழவும்
உன்னால் ஒரு காயத்தைப் போல உலரவும்
காத்திருப்பவன் நானென்றேன்.
என் குருத்துக்களின் இனிப்பையும்
என் கனிகளின் ஸ்பரிசத்தையும்
சமையல் செய்தவன் நீ தானென்றாள்.
நம்முடலை தூய்மையாக்கும்
அத்தனை சுடர்கள்
அத்தனை மலர்கள்
எங்கும் ஒளிர்ந்தன
எங்கும் மலர்ந்தன.
சொற்கள் உறங்கின.
02
நடுப்பகல் கலவியில்
மூச்சின் நறுமணம்
சரீரத்துக் கனலில்
துள்ளும் சிறுபடகு
காமத்தின் கரத்தில்
வந்தமரும் தும்பி
இறைக்கைகள் அதிர
அறையில் புலர்கிறது
ஏகபோகம்.
03
எனக்கும் அவளுக்குமிடையே
நிகழ்ந்தது ஒரு பகல்.
அமுதம் கடைந்தருந்திய
களிப்புடன் பாடினாள்
என், இனிய மேய்ச்சல்காரனே
என்னைக் கூட்டிச்செல்லும்
மலையுச்சியில்
மலர்ந்திருக்கும் நீலமலரால்
கொஞ்சம் நிழலூட்டு.
ஜீவனின் வேட்கையைத் தாங்காது
நம்முடல்.
The post ஏகபோகம் first appeared on அகரமுதல்வன்.
December 28, 2023
புதுத்தளிர்
தன்னறம் பதிப்பகத்தின் வெளியீடான “சுதந்திரத்தின் நிறம்” புத்தகத்தை வாசித்துவிட்டு இன்றுவரை பலநூறு பேரிடம் அதனைப் பரிந்துரை செய்கிறேன். காந்தியவாதி கிருஷ்ணம்மாள் அவர்களை சென்று சந்திக்க வேண்டுமென உளம் கிடந்தது துடியாய் துடிக்கிறது. இந்தப் போராளியின் கால்களைத் தொட்டு வணங்க வேண்டுமென்பது என் கடன். அவரது பாதங்களில் வரலாறு ரேகைகளாக இருக்கும். அவரது உள்ளங்கை பற்றி “மாபெரும் தாயே” என்று கண்ணீர் பெருகி பாடுவேன். விரைவில் திண்டுக்கல் சென்று தரிசிக்க வேண்டும்.
எழுத்தாளர் ஜெயமோகன் தளத்தில் வெளியான “அன்னையுடன் ஒரு நாள் ” என்று கட்டுரையினை வாசித்தேன். ஞானசேகரன் ரமேஷ் மாபெரும் தாயைப் பார்த்துவிட்டு வந்த அனுபவத்தை எழுதியிருந்தார். மிக மிக அபூர்வமான அனுபவப் பதிவு. ஞானசேகரனை ஏற்கனவே அறிந்திருக்கிறேன். உரையாடியிருக்கிறேன். கவிதைகள் எழுதுவதில் ஆர்வமுள்ள அருகன். மொழிச்சிடுக்கையும், படிமச் சுழற்சியையும் வைத்து எழுதிய கவிதைகளை வாசித்துமிருக்கிறேன். நவீன கவிதை சார்ந்து அவருடன் நீண்ட நேரம் பேசியிருக்கிறேன். அவருடைய கவிதைகளின் போதாமை, மற்றும் பாவனை குறித்து விமர்சித்துமிருக்கிறேன். அந்தச் சந்திப்புக்கு பிறகு அவர் எழுதும் கவிதைகளுக்காக காத்திருந்தேன். ஆனால் இப்படியொரு கட்டுரை மூலம் ஒரு புதிய தளிராக ஒளிதேடிச் சென்றதை கூறியிருக்கிறார். அவருக்கு என் வாழ்த்துக்கள். தொடர்ந்து தேடலின் வழியாக அற்புதங்களை தரிசியுங்கள் ஞானம்!
The post புதுத்தளிர் first appeared on அகரமுதல்வன்.
December 26, 2023
ஆதி அந்தம்
01
என் ஜன்னலில்
எப்போதும்
அஸ்தமிக்காத சூரியனை
இலையெனச் சுருட்டி
உள்ளே புகுகிறது
இப்பொழுதின்
புழு.
02
கிழக்கில் ஆதியும்
மேற்கில் அந்தமும்
கொண்ட சூரியனின்
சோதியில்
துளிர்க்கிறது
விதை.
03
இந்த இரவில்
யாரேனும் ஒருவன்
பாடினால்
உறங்குவதற்கு
வசதியாகவிருக்கும்.
The post ஆதி அந்தம் first appeared on அகரமுதல்வன்.
December 24, 2023
போதமும் காணாத போதம் – 13
தமிழீழ விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாமிலிருந்து தப்புவது சாதாரணமானது அல்ல. அடர்ந்து காட்டிற்குள் திசையறியாது சுற்றிச் சுற்றிச் உணவற்று மாண்டவர்களும் இருக்கிறார்கள். ஆனால் தாயம் கடலில் கலக்கும் நதியைப் போல, தடம் பிசகாமல் வீடு வருகிறான். எந்தச் சவாலுக்கும் ஈடுகொடுக்கும் உடல் வலிமை. எதற்கும் அஞ்சாத உளம். நிராயுதபாணியாக தப்பும் தன்னை, உங்கள் ஆயுதங்களாலும் தேடிக் கண்டுபிடியுங்கள் எனும் சவால். தாயம் புலிகளுக்கு பெரிய தலையிடியாக இருந்தான். பன்னிரெண்டு அடியளவில் உயர்த்தப்பட்ட பாதுகாப்பு வேலி, கண்காணிப்புக்காய் நிற்கும் போராளிகளின் விழிப்பு. இவற்றையெல்லாம் உச்சிவிட்டு எப்படி தப்புகிறானோவென்று தெரியாத குழப்பம் இயக்கத்திற்கு வந்தது. ஒவ்வொரு பயிற்சி முகாமிலிருந்தும் குறிப்பிட்ட நாட்களிலேயே தாயம் வெளியேறிவிடுகிறான் என்று கண்டடைந்தனர். முத்தையன்கட்டு, ஒட்டுசுட்டான், முல்லைத்தீவென எந்தப் பயிற்சி முகாமிலிருந்தும் அவனால் தப்பிக்க முடிவதை எங்களாலும் நம்பமுடியாமலிருந்தது.
ஒரு நாளிரவு இயக்கத்தின் ஆட்சேர்ப்பு பிரிவினர் வீட்டைச் சுற்றிவளைத்தனர். தாயம் தப்பித்தோட வாய்ப்பிருப்பதாக எண்ணியிருந்தார்கள். அவன் மாட்டிறைச்சி குழம்போடு இரண்டு றாத்தல் ரோஸ்ட் பாணைச் சாப்பிட்டு முடித்து அவர்களோடு போனான். ஊரிலுள்ளவர்கள் வியக்குமாறு தாயம் சாகசக்காரனாய் போராளிகளுக்கு நடுவில் நடந்தான். அமளிச் சத்தம் கேட்டு உறக்கமழிந்த தாயத்தின் தங்கச்சி சாதனா ஆயுதமேந்திய போராளிகளை விலக்கியபடி ஓடிப்போனாள். பொத்திய தனது கைக்குள்ளிருந்து இரண்டு தேமாப் பூக்களை தாயத்திடம் கொடுத்தாள். சாதனாவை முத்தமிட்டு “ அண்ணா, வெள்ளனவா வந்திடுவன். நீ குழப்படி செய்யாமல் அம்மாவோட இருக்கவேணும். போய் நித்திரை கொள்ளு” என்றான். வாகனம் புறப்பட்டது. சாதனா வீட்டின் முன்பாக நிற்கும் தேமா மரத்தடிக்கு லாம்போடு ஓடிச்சென்றாள். அங்கு மண்ணால் உருவாக்கப்பட்டிருந்த தெய்வ உருக்களின் முன்பு நின்று கண்ணீர் கசிந்து “கடவுளே அண்ணா, திரும்பி வந்திடவேணும். வந்தால் உனக்கு அவல் தருவேன்” என்றாள்.
வீட்டிலிருந்து இழுத்துச் செல்லப்பட்டவனை கிளிநொச்சியிலுள்ள முகாமொன்றில் தங்கவைத்தனர். அவனுடைய தப்பித்தல் அனுபவங்கள் குறித்து போராளியொருவர் விசாரணை செய்து அறிக்கை தயாரித்தார். தாயத்தின் சொந்தக்காரர்கள் யார் இயக்கத்தில் இருக்கிறார்கள் என்பது வரை விசாரணை ஆழம் பாய்ந்து முடிந்தது. அதன்பிறகு நிலக்கீழ் அறைக்குள் தாயம் இறக்கப்பட்டான். “பூமியின் தடங்கள் மறக்கும் வரைக்கும் உள்ளேயே இருப்பீர்கள்” என்பது உத்தரவு. “இங்கிருந்து தப்ப இயலாது” என்பது எள்ளலாக வீசியெறியப்பட்டது. தாயம் பூமியின் கீழே விழிபிதுங்கி அமர்ந்தான். மூச்சுத்திணறியது. இருட்குகையில் மோதுண்டு அழியும் காற்றுப் போல கைகளை விரித்து சுவர்களை அறிந்தான். எத்தனை நாட்கள் இருள் தோயவேண்டும். இப்படியொருவன் மூச்சுத்திணற வைக்கப்பட்டு போராட்டத்தில் இணைக்கப்படவேண்டுமா? தாயம் உள்ளேயே சப்பாணிகட்டி அமர்ந்து கொண்டான். தன்னுடைய இறுக்கமான உள்ளாடையை கழட்டி எறிந்து நிர்வாணமானான். சாதனா கொடுத்த தேமா மலர்களை கைகளில் ஏந்தி இருளின் திரட்சியை அழிக்கும் வாசனையை முகர்ந்தான். வீட்டின் முன்பாக தங்கையோடு பூசை செய்து விளையாடும் பொழுதுகள் புலனில் உதித்தன. பூமியின் கீழே பாதைகள் இல்லை. ஆனாலும் தாயம் கண்ணீர் சிந்தவில்லை. அச்சப்படவில்லை. மெல்ல மெல்ல ஆசுவாசத்துக்கு திரும்பினான். போராளிகள் எதிர்பார்த்ததைப் போல கதறியழுது என்னை மீட்டுவிடுங்கள் என்ற இறைஞ்சுதல்கள் எதுவும் நிகழவேயில்லை. உள்ளேயே தாயக்கோட்டினைக் கீறி மண்ணை உருண்டைகளாக்கி தாயம் விளையாடத் தொடங்கினான்.
மூன்று நாட்கள் கழித்து பூமியின் மேல் இழுத்து வரப்பட்ட தாயம் ஒளியைக் கண்டு கூசினான். வெளிச்சம் பொல்லாத சாத்தானைப் போல அவனைத் தண்டித்தது. அவனது உடலில் எந்தச் சோர்வும் இருக்கவில்லை. சாதனா தருவித்த இரண்டு தேமா மலர்களும் வாடாமலிருந்தன. “எனக்குப் பசிக்கிறது உணவளியுங்கள்” என்கிற ஓலமான குரலைப் பொருட்படுத்த அங்கு எவருமில்லை. பொறுப்பாளர் கீரன் உணவளிக்குமாறு உத்தரவிட்டார். நெத்தலித் தீயலும், குத்தரிசிச் சோறும் கொடுத்தார்கள். ஒரு சட்டித் தீயலை தின்றுமுடித்து, சோற்றுப்பானையைக் காட்டி கொஞ்சமிருக்கு ஏதேனும் பழைய குழம்பு இருக்கிறதா என்று கேட்டான். பருப்புக் குழம்பை கொடுத்தார்கள்.
இதுவரைக்கும் தப்பித்த பயிற்சி முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, எப்படித் தப்பினான் என்பதை விசாரணை செய்ய குழுவொன்று தயாராகவிருந்தது. தாயம் சரியென்று தலையசைத்தான். முத்தையன்கட்டிலுள்ள முகாமில் அதனைச் செய்து காட்டினான். அடிக்கணக்காக உயர்ந்து நிற்கும் முட்கம்பி வேலியில் ஏறி, கீழே குதித்து ஓடுவதை ஒன்றும் விடாமல் செய்து காட்டினான். மீண்டும் கிளிநொச்சிக்கு அழைத்து வந்து தாயத்தை வீட்டுக்குச் செல்லுமாறு பணித்தனர்.
“நான், ஏன் போகவேண்டும். எனக்கு வயிறு கொதிக்கிறது சாப்பாடு தாருங்கள்” குரல் உயர்த்தினான்.
“நீதானே பயிற்சி முகாமிலயிருந்து ஓடிப்போகிறாய். இப்ப நாங்களே உன்னை விடுகிறம். நீ போ” என்றனர்.
தாயத்தினால் இப்படியொரு பரிவை தாங்கிக்கொள்ள முடியவில்லை.
“அண்ணே, என்னை நீங்கள் பிடிச்சுக்கொண்டு போய் பயிற்சி தந்தால் ஓடிப்போவன். இப்பிடி நீங்கள் போகச்சொல்லுறது எனக்கு அவமானம். இப்ப நான் போகமாட்டன்”
“சரி, அப்ப நீ இஞ்சயே இரு. உனக்கு எப்ப போகவேணுமெண்டு இருக்கோ. அப்ப வெளிக்கிடு”
தாயம் எதிர்பாராததை இயக்கம் வழங்கியது. அவனால் முகாமை விட்டு வெளியே போகமுடியவில்லை. அங்கிருக்கும் சில வேலைகளைச் செய்து வந்தான். பொறுப்பாளர் கீரனோடு வெளியே சென்று வரத்தொடங்கினான். தாயனைப் பார்த்த ஊரவர்கள் சிலர், “என்னடா இயக்கமாகிட்டுயோ” என்று கேட்டார்கள். எதுவும் பதிலளிக்காமல் தாயம் குமைந்தான். அரசியல் போராளிகளோடு வெவ்வேறு இடங்களுக்கு பயணமானான். இயக்கத்திற்கென இழுத்து வரப்பட்டவர்கள் குவிக்கப்பட்டிருக்கும் முகாமொன்றிற்கு சென்ற தாயம் திடுக்குற்று பொறுப்பாளர் கீரனிடம் “ அண்ணை, இப்பிடி பிடிச்சுக் கொண்டு போய், சண்டை செய்துதான் நாட்டை மீட்கவேணுமே” கேட்டான். இதுக்கு நான் பதில் சொன்னால் இயக்கத்துக்கு துரோகியாகிவிடுவன். என்னை நீ பூமிக்கு கீழ வைக்கப் பார்க்கிறாய்” என்றார் கீரன்.
“உங்களுக்கு இதில உடன்பாடு இல்லைத்தானே, பிறகு ஏன் செய்கிறீர்கள். கட்டாய ஆட்சேர்ப்பின் தீவினை குறித்து தலைமைக்கு ஒரு கடிதம் எழுதுங்களேன்” என்றான்.
“எல்லாம் கைமீறிப் போய்ட்டுது. உன்னைப் போல எத்தனயோ பிள்ளைகள் பயந்து நடுங்கியிருக்கிறாங்கள். அது தெரியாமல் யாரும் இல்லை” கீரன் சொன்னார். தாயம் தன்னுடைய உடமைகளை எடுத்துக் கொண்டு பயிற்சி முகாம் நோக்கி செல்லும் அணியில் கலந்தான்.]
ஆனைவிழுந்தான் குளத்தில் நீராடி முடித்து தாயம் கரையேறி ஈரந்துடையாமல் வீதிக்கு வந்தான். மாடுகளை சாய்த்தபடி எதிர்திசையில் வந்த பீதாம்பரம் “ எடேய் பெடியா, இயக்க வாழ்க்கை என்ன சொல்லுது” என்று கேட்டார். “இவ்வளவு நாளும் பயிற்சி அண்ணை, இனிமேல் தான் சண்டைக்கு போகவேணும்” என்றான். “அப்ப நீ இன்னும் ஒரு சண்டைக்கும் போகேல்லையோடா, அங்க போயும் சும்மா தான் இருக்கிறாய் என்ன” என்றார் பீதாம்பரம். ஊரியிலான வீதியைக் குறுக்கறுத்து திடுமென அசையாது நின்ற சாரைப்பாம்பில் வன்னி வெயில் ஊர்ந்தது. பீதாம்பரத்துக்கு எந்தப் பதிலும் சொல்லாமல் விலகி நடந்து, வீதியோரத்தில் அடர்ந்திருந்த பற்றைகளில் நாயுண்ணிப் பழங்களை பிடுங்கி உண்டான்.
காலையிலேயே கழுத்து வெட்டி சாவல் குழம்போடு இருபது இடியப்பத்தை தீர்த்த பிறகும் வயிறு கொதித்தது. சாப்பாட்டு இடிஅமீன், இந்தப் பட்டப்பெயரைத் தாயத்துக்கு சூட்டியது மாஸ்டர் கனல் குன்றன். பயிற்சி முகாமில் வழங்கப்படும் அளவுச் சாப்பாடுகள் போதாதுவென தாயம் உண்ணா நோன்பிருந்தான். எருமை மாட்டிறைச்சி குழம்பில் மூவருக்கு வழங்கப்படும் அளவிலான துண்டங்களை இவனுக்கு வழங்குமாறு மாஸ்டர் உத்தரவளித்தார். தாயத்திற்கு வழங்கப்பட்ட விடுப்பு நாளையுடன் முடிவடைகிறது.
குளத்திலிருந்து வீட்டிற்கு வந்ததும் புதிய ஆடைகளை அணிந்து, திருநீற்றை அள்ளி பூசினான். சாதனா தேமா மரத்திற்கு அவனை அழைத்துச் சென்று மந்திரங்கள் ஓதுமாறு சொன்னாள். தாயம் “கஜானனம் பூத கணாதி ஸேவிதம், கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம், உமாஸுதம் சோக வினாச காரணம், நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம் “ என்று பாடினான். சாதனா திருநீறள்ளி பூசிவிட்டாள். சுடச்சுட வேர்க்கொம்பு போட்ட தண்ணியை ஆக்கி கொடுத்தாள் தாய். அவனுக்கு வயிறு கொதித்தது. “இடியப்பம் இருக்கே” என்று கேட்டான். “முடிஞ்சுது, சோறு வடிச்சிடுவன். கொஞ்சம் பொறு” என்றாள் தாய். வீட்டின் முன்பாகவிருந்த பூவரசமரத்தின் கீழே அமர்ந்திருந்து வேர்க்கொம்புத் தண்ணியை உறிஞ்சிக் குடித்தான். சாதனா அவனிடம் கேட்டாள்.
“அண்ணா, சண்டைக்கு போக உனக்குப் பயமா இல்லையோ”
“பயமில்லையோ. சரியான பயமாய் இருக்கு”
“பயப்பிடு. மாமாவைப் போல பயமில்லாமல் சண்டை செய்து சாகாத.”
“சாதனா, நான் செத்துப்போனால் நீ எத்தனை நாள் அழுவாய்”
“இப்பிடி பயந்தால் சாகமாட்டாய். எனக்கு அழுகிற வேலை இல்லை”
“எடியே, எனக்கு பயமே இல்லை. நான் செத்துப்போடுவனெண்டு சும்மா வைச்சுக் கொள்ளன். எத்தனை நாள் அழுவாய்”
“அண்ணா, நீ சாகவே மாட்டாய். பயப்பிடாதவன் சாவுக்குப் பிறகானதை பற்றி கதைக்க மாட்டான்” என்று சொல்லிச் சிரித்தாள்.
“சரி நீ செத்துப்போனால் நான் எத்தன நாளைக்கு அழ வேண்டும் சொல்”
“நீ அழவே கூடாது சாதனா”
“சரி, நான் தேமாவுக்கு பூசை செய்து, உன்ர பெயரை நூற்றி எட்டுத் தடவை சொல்லுறன். காணுமே”
“நான் என்ன கடவுளே”
“செத்தால் எல்லாரும் கடவுள் தான்”
“சரி அலட்டாத. காணும்” என்றான். சாதனா தன்னுடைய கைக்குள்ளிருந்த இரண்டு தேமா மலர்களை அவனுக்கு கொடுத்து எப்பவுமே உன்னோட வைச்சிரு என்றாள். தாயம் அவளைக் கொஞ்சி தலையில் குட்டினான்.
ஒரு வருடத்திற்கு முன்பான மாலை வேளையொன்றில் தாயம் இயக்கத்தில் சேர்ந்தான். அவன் எழுதி வைத்துச் சென்ற கடிதத்தில் “அம்மா, நான் இயக்கத்துக்கு போகிறேன். நீ கவலைப்படாமல் சாப்பிடு. சதனாவை, தேமா மரத்தை பார்த்துக் கொள். நான் போயிட்டு வாறன்” என்று எழுதப்பட்டிருந்தது. லட்சியத்தை நோக்கிய தாயத்தின் புறப்பாடு ஊரையே அதிர்ச்சியாக்கியது. “இவனையெல்லாம் படையில சேர்த்தால் மற்ற இயக்கப் பிள்ளையளுக்கு சோறும் மிஞ்சாது. சொதியும் மிஞ்சாது. இவன்ர வயிறு ஊரெழுக் கிணறு மாதிரி. அடிதெரியாமல் போய்க்கொண்டே இருக்கும்” என்றார் கொய்யாத்தோட்டம் பூசாரி. கோவில் அன்னதானங்களில் தாயம் உக்கிரம் காண்பான். அள்ளியெறிய ஏந்திக் கொள்ளும் பாதாளமாய் அவனது வயிறு திறந்துவிடும். எங்கிருந்து பொங்கிவரும் பசி இவனுள்ளே ஓடிநிரம்புகிறது என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்பார்கள்.
“இவன் வயித்தில இருக்கேக்க, கடுமையான யுத்தம். ஆசைக்குத் தின்னக்கூட சோட்டைத்தீன் இல்லை. அரசாங்கம் ஒண்டையும் உள்ள விடேல்ல. என்ன கிடைச்சுதோ அதைத் திண்டு பசி போக்கினேன். முனுசு தோட்டத்தில விழுந்த குரும்பட்டியையும் எடுத்துக் காந்துவன்” என்றாள் தாயத்தின் தாயார்.
எனக்கும் தாயத்துக்கும் இடையே சிநேகிதம் உண்டாகிய தொடக்கத்தில் வீட்டுக்கு அழைத்துச் செல்வேன். அவனுக்கு ஒடியல் புட்டும், மீன் குழம்பும் பிடித்தமானது. பீங்கான் தட்டில் உணவைப் பரிமாறி அளிப்பேன். குழைத்து உண்ண வசதி இல்லையென, வாழை இலை கேட்பான். மான் இறைச்சியோடு கீரைப்புட்டுச் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். தட்டில் உணவைக் கண்டாலே பதற்றமுற்று குழைத்து உள்ளே தள்ளுகிறான். விக்கல் எடுத்தாளும் நீரருந்தேன் என்கிற சத்தியமாயிருக்கும். கறித்துண்டுகளை, எலும்புகளையும் அரைத்து விழுங்கினான். ஏனென்று தெரியாத கடலின் மூர்க்கம் போல உடல் முழுதும் வெக்கை கொள்கிறது. வழியும் உடலின் ஈரத்தில் ஒருவர் தாகம் தீருமளவு வியர்வை. அன்றுதான் தாயம் இயக்கத்தில் இணையவிருப்பதாக என்னிடம் சொன்னான். அப்போது நானும் நம்பவில்லை. ஆனால் இன்று தாயம் ஒரு விடுதலைப் போராளி. அதனை நம்பாமல் இருக்கமுடியவில்லை.
தாயம் விடுப்பு முடிந்து வட போர்முனைக் களத்திற்கு புறப்பட்டான். கிளிநொச்சி வரைக்கும் அவனை உந்துருளியில் அழைத்துச் சென்று இயக்க வாகனத்தில் ஏற்றினேன். “சரி மச்சான், அடுத்தமுறை வந்தால் சந்திப்பம்” என்றான். “வராமல் எங்கையடா போகப்போறாய், உதில இருக்கிற முகமாலை தானே. விடுப்பு கிடைக்காட்டி ஓடி வா” என்றேன். தாயம் பதில் எதுவும் கதையாமல் என்னைப் பார்த்துச் சிரித்தான். வாகனம் முன்நகர்ந்தது.
சில மாதங்களுக்கு பின்னர் தாயத்தின் வீரச்சாவு செய்தி வந்தடைந்தது. வீட்டின் தேமா மரத்திற்கு பூசை செய்து கொண்டிருந்த சாதனாவுக்கு தெரியவேண்டாமென அவளை வட்டக்கச்சிக்கு அழைத்துச் சென்றோம். அவனுடைய வித்துடல் கிடைக்கவில்லை. வெறும் புகைப்படமாக மட்டுமே வந்தடைந்தான் “வீரவேங்கை நளன்.” எல்லாவிதமான நிகழ்வுகளும் முடிவடைந்து ஆறாவது நாள், சாதனாவை வீட்டுக்கு கூட்டி வந்தோம். ஓடிச்சென்று தேமா மரத்தின் கீழேயிருந்து மந்திரங்கள் ஓதி, பதிகம் பாடி அமைந்தாள். பூக்களை ஏந்தி வந்து வீட்டினுள்ளே புலிச்சீருடையில் புகைப்படமாய் இருக்கும் தாயத்தின் முன்பு படைத்து “ அண்ணா, நீ வெள்ளனவா ஓடி வா, பூசை செய்து விளையாட வேண்டும்” என்றாள். வீரச்சாவு அடைவதற்கு இரண்டு வாரம் முந்தி தாயம் எனக்கு கொடுத்தனுப்பிய கடிதத்தில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது.
“அன்பின் மச்சான்!
வாழ ஆசையாக இருக்கிறது. ஆனாலும் இந்த நிர்ப்பந்தம், கெடுபிடி, போர், பேரழிவு இல்லாமல் இந்தப் பிறவியில் வாழ முடியாது என்றே தோன்றுகிறது. நீ அடிக்கடி சொல்வதைப் போல, இந்த வாழ்க்கையில் எத்தனை நாணயங்களை சுழற்றினாலும் பூவோ, தலையோ எமக்கில்லை. தாயம் வீரச்சாவு அடைந்தான் என்றால் அதில் பெருமை கொள்ளாதே. நான் வீரன் இல்லை. வாழ ஆசைப்படும் அற்பன். இந்தக் குருதியூற்றில் தேமா மலர்களோடு அமர்ந்திருந்து பதிகம் இசைக்க எண்ணும் சாதாரணப் பிறவி. என்னை நீ வீரனாக எழுதாதே. உன் கவிதைகளில் என்னைப் பாடாதே. இத்தனை பேர் உயிரைத் தியாகம் செய்யும் இக்களத்தில் நடுநடுங்கும் என்னை ஒரு சொல்லாலும் புகழாதே. யாழ்ப்பாணத்திலிருந்து இராணுவம் ஒவ்வொரு நாளும் முன்னேறத் துடிக்கிறான். போராளிகள் களமாடுகிறார்கள். என்னுடைய துவக்கை இயக்குவதற்கு கூட துணிச்சல் இல்லாமல் ஒடுங்கியுள்ளேன். சாதனா என்னிடம் சொன்னதைப் போலவே பயந்தவன் சாவதில்லையென்றால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் இங்கு வீரர்கள், கோழைகள், எதிரிகள், எல்லோரும் சாகிறார்கள். நான் வீரனுமில்லை எதிரியுமில்லை. செத்தால் எல்லாரும் கடவுள் என்ற சாதனாவுக்கு நான் கடவுளாக தெரியக்கூடாது. அண்ணனாகவே இருக்க விருப்பம். அவளைக் கவனமாகப் பார்த்துக் கொள். அம்மா தவித்துவிடுவாள். அதற்காக தாயகத்திற்காக தாயம் தன்னுயிரை ஈகம் செய்தானென்று மட்டும் அவளிடம் ஆறுதல் சொல்லாதே. தாய்மார்கள் அழட்டும். அவர்களின் கண்ணீராலேனும் மண்ணின் பாவங்கள் கரைந்து மூழ்கட்டும். சாதனாவுக்கு தேமா மரத்தில் பூசை செய்து விளையாட ஆளில்லை. எப்போதாவது நேரம் வாய்த்தால் அவளது பூசையில் பங்கெடு. ஆக்கினைகள் எல்லாமும் உதிரட்டும். பூக்கள் மலரட்டும். அவள் தந்தனுப்பிய இரண்டு தேமா மலர்களை என்னுடைய ஆயுத அங்கியில் வைத்திருக்கிறேன். இத்தனை ஆயுதங்களுக்கு மத்தியில் இரண்டு பூக்களோடு அமர்ந்திருக்கிறேன். எதிரியானவன் எப்போது வந்தாலும் தேமா மலர்களை நீட்டி, வணக்கம் சொல்வேன். அவனிடமிருக்கும் துவக்கு என்னிடமுமிருக்கிறது. அவனிடமும் மலர்கள் இருந்திருந்தால் என்னிடம் இயக்கம் துவக்கை தந்திருக்காது அல்லவா!
இப்படிக்கு
நளன் ( தாயம்)
ராதா வான்காப்பு படையணி
முகமாலை, வடபோர் முனை.
The post போதமும் காணாத போதம் – 13 first appeared on அகரமுதல்வன்.
ஈழத்து “தோழமை”
தமிழ்நாட்டின் அறிவியக்கச் சூழலில் ஈழம் பற்றிய உரையாடல் ஆதரவு – எதிர்ப்பு என்று உருவானமைக்கு நேரடியான அரசியல் காரணங்கள் பலதுள்ளன. தமிழினம் என்கிற ஒருமித்த உணர்வுவெழுச்சி ஆதரவு நிலைக்கு முழுமுதற் காரணம். ஈழத்தை ஆதரித்தாலோ, அது குறித்து நேர்மறையாக உரையாடினாலோ நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டிய காலமும் இருந்தது.
இன்று ஒட்டுமொத்த மானுட குலத்தின் அறச்சொல்லாக ஈழம் பொருண்மை பெற்றிருக்கிறது. மாபெரும் இனப்படுகொலையை எதிர்கொண்ட உலகின் தொன்மையான தமிழினம் நீதிக்காக போராடுகிறது. தன்னுடைய பேரழிவின் கதைகளைச் சொல்கிறது. எழுதித் தீராத வெந்துயர் படலங்களை பாடுகின்றது. இதுவரை போதிக்கப்பட்ட உலகின் அறங்களை கேள்வி கேட்கிறது. ஈழம் என்பது அறத்தை விளைவிக்கும் ஒரு லட்சிய சொல்லாக உருமாறியிருக்கிறது.
ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டம் சம்பந்தமான புத்தகங்களை தமிழ்நாட்டில் பதிப்பித்தது தோழமை பதிப்பகம் தான். நேரடியான அரசியல் நெருக்கடிகளை, எதிர்வினைகளை எதிர்கொண்டும் அதனை தொடர்ச்சியாக முன்னெடுத்தது. ஏனெனில் தோழமை பூபதியின் உறுதியும் ஈழ ஆதரவு நிலைப்பாடும் செம்மார்ந்த பண்புகளைக் கொண்டது. ஒருகாலத்தில் ஈழத்தமிழ் படைப்பாளிகளின் ஆக்கங்களையும், அரசியல் கட்டுரைகளையும் வெளியிடுவதில் அவருக்கிருந்த ஆர்வமும் துணிச்சலும் பிறிதொருவருக்கு இருந்ததில்லையென்றே கருதுகிறேன். ஈழம் பற்றிய பலவிதமான அனுபவ – அவதானிப்புக்கள் கொண்ட கட்டுரை நூல்கள் தோழமையின் வழியாகவே பதிப்புக்கள் கண்டன.
என்னுடைய முதல் சிறுகதை தொகுப்பான “இரண்டாம் லெப்ரினன்ட்” தோழமை பதிப்பகத்தின் மூலமே வெளியானது. தோழமை பூபதி தமிழ் பதிப்புத் துறையில் லட்சியத்தன்மை கொண்ட பதிப்பாளர்களில் ஒருவர். குறிப்பாக ஈழம் பற்றிய உரையாடல் தமிழ்நாட்டின் அறிவியக்கப்பரப்பில் தீவிரமாக உருவாகியமைக்கு தோழமை பதிப்பித்த நூல்கள் ஒரு திறவுகோல் என்றால் மிகையில்லை. ஈழப்போராட்டம் குறித்து மிகையாக எழுந்து வந்த பொய்ப் பிரச்சாரங்களோடு ஒரு பதிப்பகம் போரிட்டது என்றால் அதன் பெயர் தோழமை.
ஒரு ஈழத்தமிழராக, ஈழப்படைப்பாளியாக “தோழமை” பதிப்பகத்திற்கு அன்பையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
The post ஈழத்து “தோழமை” first appeared on அகரமுதல்வன்.
December 23, 2023
நீந்துங்கள்
01
கிளையில்
அமராத
பறவையின்
நிழலுக்கு
சிறகில்லை
02
மீன்கள்
வாயைத் திறந்து
தொட்டி மூலையில்
குவிகின்றன.
என்ன கலகம்
என்ன கிளர்ச்சி
போதும் வாய்மூடி
நீந்துங்கள்
என்கிறாள்.
03
இத்தனை புத்தகங்களை
இத்தனை பக்கங்களை
வாசித்து என்ன தான் கண்டாய்?
இன்னும் எத்தனை எத்தனையோ
பக்கங்கள் உள்ளனவென்று
கண்டேன்.
The post நீந்துங்கள் first appeared on அகரமுதல்வன்.
December 22, 2023
கனல்வது
விஷ்ணுபுரம் இலக்கிய விருது -2023 ஆண்டுக்கான விழாவுக்கு சென்றேன். இரண்டு நாட்கள் நடைபெறும் இலக்கிய ஒன்றுகூடல். தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகளிலிருந்து இன்று முளைத்தெழும்பிய படைப்பாளிகள் பலரும் பங்குகொள்ளும் நேர்த்தியான விழா. இந்த ஆண்டு விருது பெற்றவர் நேசத்திற்குரிய எழுத்தாளரும் கவிஞருமான யுவன் சந்திரசேகர். கவிதைகளுக்காக மட்டும் எம்.யுவன் என்று நாமம் தரித்தவர்.
சென்னையிலிருந்து நண்பர்களோடு காரில் பயணம். எழுத்தாளரான வாசு முருகவேல் விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். ஒருவித பரபரப்போடு பயணம் முழுக்கவே இருந்தார். விஷ்ணுபுரம் விழாவில் உரையாடலை எதிர்கொள்வது சவாலான காரியம். பெரும்பாலானவர்கள் படைப்புக்களை வாசித்தே கேள்விகளைத் தொடுக்கின்றனர். எழுத்தாளர்கள் பெருமை கொள்ளும் தருணங்களை வழங்குகிறார்கள். உண்மையில் எழுத்தாளர் சாதாரணன் இல்லையென்னும் உன்னதமான அறிவிப்பை வாசகர்கள் தம் கேள்விகளால் முழங்குகிறார்கள். ஒரு எழுத்தாளருக்கு காழ்ப்பையோ கசப்பையோ அந்தவுரையாடல் தந்துவிடக் கூடாது என்பதே முதல் எண்ணமாக அது நிகழ்ந்தேறும். ஏனெனில் அங்கு திரள்பவர்கள் இலக்கியத்தை ஒரு லட்சியமாக கருதுபவர்கள்.
இரண்டு நாட்களும் நடைபெறும் விழாவில் பங்குகொள்வதற்கு உலக நாடுகள் சிலவற்றிலிருந்தும் வாசகர்கள் எழுத்தாளர்கள் வந்திருந்தார்கள். எதிர்ப்படும் எல்லோரிடம் புன்னகையும் தழுவல்களும் சுகவிசாரிப்புக்களும் நிகழ்ந்து கொண்டேயிருந்தன. ஒரு பொற்கனவின் ஒத்திசைவால் ஒன்று சேர்ந்த பெருந்திரள். எழுத்தாளர்கள் பலரையும் சூழ்ந்து கூட்டம் கூட்டமாக பேசிக்கொண்டிருந்தனர். வாசகர்கள் சூழ்ந்து நிற்க இயல்பு குலையாமல் பேசுகிற எழுத்தாளர்களின் அழகை அறியவேனும் விஷ்ணுபுரம் சென்று வரலாம். குறித்த நேரத்திற்கு ஆரம்பித்து – முடியும் அமர்வுகள். தேனீர், உணவு என திருமண வீட்டின் உபசரிப்பு. நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க, வாசகர்களுக்கு ஒலிவாங்கி தருவதற்கென ஒழுங்கு குலையாமல் தொண்டாற்றும் விஷ்ணுபுரம் நண்பர்கள். இலக்கியத்தில் கோருகிற அறத்தையும் ஒழுங்கையும் இலக்கிய விழாவிலும் நிகழ்த்தும் ஒரு லட்சியக் கூட்டம்.
சென்னையிலிருந்து கோவையைச் சென்றடையை நள்ளிரவு ஒரு மணியாகியிருந்தது. அன்புச் சகோதரர் மொழிபெயர்ப்பாளர் சிறில் அலெக்ஸ் கார் ஓட்டியதில் கொஞ்சம் சோர்வுற்றிருந்தார். பதினொரு மணிக்கு கொஞ்சம் முன்பாக சேலம் செல்வி மெஸ்ஸில் உணவுண்டோம். நாங்கள் தேடிச் சென்ற ஆடு தீர்ந்து போயிருந்தது. வழமை போல கோழியும், முட்டையும் தட்டில் விழுந்தன. கடை மூடும் நேரமென்றாலும் அதே ருசி. நல்ல உணவு என்பது பரிமாறப்படும் வகையிலும் ருசி பெறுகிறது. செல்வி மெஸ்ஸில் எப்போதும் ருசி நிறைந்திருக்கிறது. நாங்கள் கோவையை சென்றடைந்ததும் தேநீர் குடிக்க விரும்பினோம். ஆனாலும் அது வாய்க்கவில்லை. ஹோட்டல் அறைக்குச் சென்று அங்கிருந்த கேற்றிலில் தண்ணி சுடவைத்து கறுப்புக் கோப்பி அடித்தோம்.
நேரத்துக்கு எழுந்து குளித்து காலையிலேயே விஷ்ணுபுரம் விழா நடைபெறும் அரங்கிற்கு சென்றேன். போன தடவை விருந்தினராக கலந்து கொண்டதனால் அறிமுகமான பலரை சந்திக்க முடிந்தது. காலையிலேயே பெங்களூரில் இருந்து நண்பர் பாலாஜி வந்திருந்தார். உரையாடலின் வழியாக அடைந்த நட்பு. போதமும் காணாத போதம் தொடர் குறித்து சிலாகித்தும், அதனுடைய ஆழத்தைப் பற்றியும் மதிப்புமிகுந்த ஈரோடு கிருஷ்ணன் அவர்கள் கருத்தினைப் பரிமாறியது மகிழ்ச்சியைத் தந்தது. என்னுடைய ஏனைய படைப்புக்கள் பற்றியும் சிலர் தங்களுடைய வாசிப்பனுபவத்தை தெரிவித்தனர். ஒவ்வொரு எழுத்தாளர்களையும் சூழ்ந்து நிற்கும் வாசகர்கள். தீவிரமான வாசிப்பின் வழியாக எழுத்தாளர்களை கொண்டாடுகிறார்கள். இந்தக் கனவைப் படைப்பதற்கு விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் லட்சியத்தன்மையே காரணமெனக் கருதுகிறேன்.
இலக்கியக் கூட்டமென்றால் முப்பது பேர் வந்தாலே போதும் என்பார்கள். இந்த பேச்சில் ஆரம்பத்திலிருந்தே எனக்கு மாற்றுக்கருத்து உண்டு. ஆகுதி ஒருங்கிணைக்கும் நிகழ்வுகளுக்கு எப்படியேனும் ஒரு திரளை அழைத்து வர முழுமுயற்சியையும் செய்வேன். குறிப்பிட்ட கட்டத்திற்குப் பின்னர் தானாகவே ஆகுதி ஒருங்கிணைக்கும் நிகழ்வுகளுக்கு வாசகர்கள் வரத்தொடங்கினர். பெருநகரத்தில் இதனை ஒரு இலக்கிய அமைப்பாக சாத்தியப்படுத்துவது அவ்வளவு எளிதானதல்ல. அரங்கு நிறைந்து வழிந்த எத்தனையோ நிகழ்வுகள். வாசகர்கள் இலக்கிய அமைப்புக்களின் தரத்தை அளவிடுகிறார்கள். அதன் பொருட்டே ஒரு நிகழ்விற்கு செல்லலாமா வேண்டாமாவென முடிவு செய்கிறார்கள்.
விஷ்ணுபுரம் விருது நிகழ்வில் வியப்புக்குரியது என்னவென்றால் புதிய வாசர்களின் வருகை. ஒவ்வொரு ஆண்டும் இலக்கிய வெளிக்குள் நுழையும் புதியவர்கள் தேர்ந்தெடுத்துக் கொண்ட முதல் நிகழ்வாக விஷ்ணுபுர விருது விழாவினை சுட்டுகிறார்கள். ஒருவகையில் தமிழ் இலக்கியத்திற்கு புதிய சக்திகளை போந்தளிக்கும் அமைப்பாக விஷ்ணுபுரம் உருவாகியிருக்கிறது. எழுத்தாளர் ஜெயமோகனைச் சூழ்ந்து ஒரு பெருந்திரள் பாதை நெடுக பயணிக்கிறது. அந்தக் காலடிகளுக்கு உந்துதல் அளிப்பது சிருஷ்டியின் சொற்கள்.
உடம்பு கொஞ்சம் சுகவீனப்பட்டிருந்தது. ஆதலால் அறைக்கு சென்று உறக்கம் வரத்துடித்தேன். தம்பிகளும், நண்பர்களும் பேசிக்கொண்டே இருந்தனர். எல்லோரிடமும் தீவிரமான கனவும், அதற்கான பயணம் பற்றிய பயமும் இருப்பதை உணர முடிந்தது. அவர்களில் சிலர் புறப்பட்டதும் உறக்கத்திற்கு வழியமைத்த இயன்முறை மருத்துவர் நவீனின் சிகிச்சை தெய்வத்தின் வருடல். உறங்கியது தான் தெரியும். காலையில் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்த வாசு முருகவேலின் முகத்தில் முழித்தேன்.
“வாசு நேற்றைக்கே உங்கள் அமர்வு முடிந்துவிட்டதே, இப்ப என்ன நடுக்கம் வேண்டிக் கிடக்கு” என்று கேட்டேன்.
எப்போதும் போல ஒரு பார்வை. எதுவும் பேசாதே என்ற சைகை. இரண்டு காதுகளையும் அடைத்து வைத்திருந்த குளிர் விரட்டியை மீண்டுமொரு தடவை இறுக்கி அழுத்தினார்.
“வாசு, ஏதேனும் கதையுங்கள். குளிர் தெரியாமல் இருக்கும்” என்றேன்.
எதனையும் பொருட்படுத்தாமல் அமர்ந்திருந்தார்.
விஷ்ணுபுரம் விருது விழாவின் மேடையில் ஏறி உட்கார்ந்ததற்கு பிறகு, உடல் மொழியில் எத்தனையெத்தனை கம்பீரம். ஒரு அறிவார்ந்த சபை எழுத்தாளராக கருதியதன் சாட்சி. குளிரில் நடுங்கியபடியிருக்கும் எழுத்தாளனின் உள்ளே கனல்வது ஒரு பெருங்கனவு. அது அவனது படைப்பூக்கத் தழல். அதனை அணையாது மூட்டும் பெருஞ்செயல் விஷ்ணுபுரம் விருது விழா என்றேன்.
அது வாசுவுக்கு கேட்டிருக்க வேண்டும். ஓம் என்பதைப் போல தலையசைத்தார்.
The post கனல்வது first appeared on அகரமுதல்வன்.
அகரமுதல்வன்'s Blog
- அகரமுதல்வன்'s profile
- 17 followers

