அகரமுதல்வன்'s Blog, page 27
January 11, 2024
மருபூமி – உரை
The post மருபூமி – உரை first appeared on அகரமுதல்வன்.
January 9, 2024
எழுத்தாளர்களுக்கு மேடைப் பேச்சாற்றல் அவசியமா?
அன்பின் அகரமுதல்வனுக்கு! மருபூமி நூல் வெளியீட்டு விழாவில் உங்களுடைய உரையைக் கேட்டேன். மொழிச்சரளமும் தீவிரமும் கொண்ட உரை. ஆனால் உரையைக் கேட்டதும் எனக்குள் தோன்றிய கேள்வி ‘ஒரு நவீன எழுத்தாளர் மேடைப் பேச்சாற்றலுடையவராக இருப்பது அவசியமா’ என்பதுதான். சமகாலத்து தலைமுறை எழுத்தாளர்களில் அதிக இலக்கிய கூட்டங்களில் சிறப்பாக பேசிவருபவர் நீங்கள்தான் என்பதாலேயே உங்களிடம் இதனைக் கேட்கத் தோன்றுகிறது.
குமரேசன்
தஞ்சாவூர்
வணக்கம் குமரேசன்! நவீன எழுத்தாளர்களாக இருப்பவர்கள் ‘மேடைப் பேச்சு’க்கு உகந்தவர்கள் இல்லையென்கிற கருத்து பரவலாக உள்ளது. பெருமளவில் அந்தக் கருத்து உள்ளது உண்மைதான். ஏனெனில் தொழில்முறை மேடைப் பேச்சாளர்களைப் போல எழுத்தாளர்களால் பேச இயலாது. வெகுசன ரசனைக்கு அப்பாலுள்ள ஓருலகில் மொழியோடு பிணைப்புக் கொண்டிருப்பவர்கள் தீவிர எழுத்தாளர்கள். அவர்களிடமிருந்து ஒருவகையான இறுக்கமும் – கொந்தளிப்பும் – ஆற்றொழுக்கற்றதுமான தன்னியல்பு குலையாத உரைகளே வந்து சேரும். அது குறையல்ல. எழுத்தாளர்களின் உரை. அது அப்படியானதாகவே இருக்கும். நவீன இலக்கிய மேடைகளில் புத்தகம் குறித்து பேசும் சில எழுத்தாள நண்பர்கள் கட்டுரையாக எழுதி வந்து, அதனை வாசித்து – விளக்கவுரைகளை ஆற்றுவதும் நடக்கும். அதனை நாம் பண்டிகை நாட்களில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் பட்டிமன்ற பேச்சுக்களோடு முன்வைத்து ஒப்பிடக்கூடாது. ஏனெனில் எழுத்தாளர்கள் ஆற்ற விழைவது அறிவியக்கத்திற்கான ஒரு உரையைத்தான்.
என்னுடைய நண்பரொருவர் எழுத்தாளர்களுக்கு சுவாரஸ்யமாக பேசவே தெரியாது என்று அடிக்கடி சொல்வார். அவர் கோரும் சுவாரஸ்யத்தை அவரே சமைக்கவேண்டும். ஏனெனில் எழுத்தாளர்கள் ஒவ்வொருவரும் தனியுலகோடு சஞ்சாரம் கொண்டவர்கள். தனிப் பின்னணியோடு மொழிக்குள் ஏந்தப்பட்டவர்கள். தொழில்முறையான மேடைப்பேச்சுக்களில் இருக்கும் ஒரேமாதிரியான உணர்ச்சித் ததும்பல்கள் போல ஒற்றைத்தன்மையான ஏற்ற இறக்கங்கள் போல, ஒரே வார்ப்பில் அமையப்பெற்ற மரபுப்பாடல்கள் போல, எதையும் நவீன எழுத்தாளர்களின் உரைகளில் நீங்கள் காணவியலாது.
நான் சிறுவயது முதலே சைவப் பிரசங்கங்கள் கேட்டு வளர்ந்தவன். பள்ளிக்கூடத்தில் தொடக்க வகுப்பிலிருந்து நடைபெறும் விழாக்களில், பேச்சுப் போட்டிகளில், கவிதை வாசிப்புக்களில் தன்னார்வத்தினால் பங்கெடுத்திருக்கிறேன். நூற்றுக்கணக்கான மக்களுக்கு முன்னின்று கவிதை பாடும் நல்லூழும் பலதருணங்களில் வாய்க்கப்பெற்றன. ஜீவிதம் பக்தியாகவும் – போராட்டக் கொந்தளிப்பாகவும் சடை பின்னப்பட்டிருந்ததனால் பல்வேறு தன்மைகளிலான மேடைகளை சிறுவயது முதல் கண்டிருக்கிறேன். என்னளவில் மேடையென்பது நடுக்கம் தரும் ஒரு மேடு அல்ல. தாயின் வாசனையால் நெய்யப்பட்ட ஒரு சேலையால் கட்டப்பட்டிருக்கும் ஏணை போல. அதுவே எனக்கு சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் அடையாளத்தையும் வழங்குமொரு இனிய பீடமாக அமைந்திருக்கிறது.
நினைவை இழுத்துவந்து சொல்கிறேன் , என்னுடைய ஆறாவது வயதில் ஊரிலேயுள்ள அம்மன் கோவில் திருவிழாவில் ஒலிவாங்கியைப் பிடித்து அன்னதானத்திற்கான அறிவிப்பை செய்தேன். அன்றைக்கு என்னைச் சூழநின்று பாராட்டிய உற்றார்களுக்கு என்றும் நன்றியுடையவன். அங்கிருந்து பற்றிய ஒலிவாங்கியை இன்னும் இறுக்கமாக உறுதியாகப் பிடித்துக்கொண்டது பின்னைய காலங்களில் என்றால் மிகையில்லை. நான் மேடையைக் கையாள்வதிலிருக்கும் லாவகம் எழுத்தாளன் ஆனதற்குப் பிறகு உருவானதில்லை. அது என்னுடைய வாழ்வின் பின்னணியிலிருந்த ஒரு பண்பாடு. அதனை தீர்க்கமாக கைப்பற்றிக்கொண்டேன்.
நவீன எழுத்தாளர்கள் தமது சிந்தனைகளையும், மதிப்பீடுகளையும் தொகுத்து அளிக்கவே உரைகளை ஆற்றுகிறார்கள். ஒரேமாதிரியான, சலிப்பூட்டக்கூடிய தகவல்களையோ, சம்பவங்களையோ அவர்கள் முன்வைக்க முண்டியடிப்பதில்லை. ஆனால் தொழில்முறை பேச்சுக்களில் திரும்பத் திரும்ப சொல்வதெல்லாம் சர்வசாதாரணம். எழுத்தாளர்கள் அப்படியல்ல, அவர்களுடைய அசல் தன்மையோடு சொல்ல வந்ததைச் சொல்வார்கள். அதுதான் பெரும்பாலான நவீன எழுத்தாளர்களின் இயல்பான அமைவு.
ஆனால் இதில் விதிவிலக்கு கொண்டவர்களும் உண்டு. மேடையில் உரையாற்றுவதற்கு முன்பு ஒரு தயாரிப்புடன் வருகிறவர்கள். அது காகிதத்தில் குறித்து வரும் தயாரிப்பல்ல. மாறாக சிந்தனையில் கூர்மையான அளவில் அதனை சேகரித்து வருபவர்கள். நான் பெருமபாலான மேடைகளுக்கு அப்படித்தான் செல்வேன். என்னுடைய உரையைக் கேட்பவர்களுக்கு விளங்கும் வகையிலும், மொழியின் அழகுணர்ச்சி கொண்ட வார்த்தைகளின் மூலமும் ஒரு தொடர்ச்சியான – ஒழுக்கான இசைவோடும் அதனை அமைப்பேன். ஆனால் நவீன இலக்கிய மேடைகளில் சில எழுத்தாளர்களிடம் நான் கவனித்து நொம்பலம் கொள்ளும் விஷயமென்னவென்றால் அசட்டையும் அர்ப்பணிப்புமற்று ஒரு தொகுப்புக்கு பேச வருவது. ஏதேதோ பேசி இறுதியாக ” இந்தத் தொகுப்பை வெளியிடும் இவருக்கு என் பாராட்டுக்கள் ” என்பார்கள். உண்மையில் அரங்கத்தில் கூடியிருப்பவர்களையும், நூல் ஆசிரியரையும் நிந்தனை செய்யும் செயலிது. ஆனால் இப்படி பேசுபவர்களுக்கு குற்றவுணர்ச்சி ஏதும் தோன்றுவதாய் தெரியவில்லை. தொடர்ந்து பல மேடைகளில் அதனையொரு பாணியாகவே முன்னெடுக்கிறார்கள். ஆகுதி ஒருங்கிணைக்கும் கூட்டங்களில் இந்தப் ‘பாணி’ யில் பேசுபவர்களை ஒருநாளும் அழைத்ததில்லை. இனிமேலும் அழைப்பதில்லையென்பதே இந்தக் கட்டுரையை எழுதும் எனக்குள்ள அருகதைகளில் முதன்மையானது.
மேடையில் உரையாற்றுவது ஒரு தனிக்கலை. அதற்குமொரு தீவிரத்தையும் உழைப்பையும் நாம் அளிக்கவேண்டும். ஒருவகையில் வாசிப்பின் மூலம், நம் மரபுகளின் மூலம் சேகரித்து வைத்துக்கொண்ட சிந்தனைகளையும் பெறுமதிகளையும் பிறருக்கு கையளிக்கும் ஒரு முக்கிய பணியை செய்யத்தலைப்படுகிறோம் என்ற பொறுப்புணர்வோடு மேடைக்குச் செல்லவேண்டும். ஒருபோதும் எழுத்தாளர்கள் இப்படித்தான் பேசவேண்டும் என்று யாரும் நிர்ப்பந்திக்கமாட்டார்கள். ஆனால் எழுத்தாளர்கள் எதையும், எப்படியும் பேசுவார்கள் என்ற சகிப்புத்தன்மை வாசகர்களிடமும் இருக்கவேண்டியதில்லை. ஏனெனில் எழுத்தாளர்களை நோக்கி அவர்கள் அமர்ந்திருப்பதே பெற்றுக்கொள்வதற்குதான்.
இலக்கியக் கூட்டங்களில் ஆர்வமாகப் பங்குகொள்ளும் பலரை அறிவேன். இப்போதெல்லாம் அவர்களை எந்த இலக்கிய நிகழ்விலும் காணக்கிடைக்கா. ஆகுதி ஒருங்கிணைத்த எம். கோபாலகிருஷ்ணன் படைப்புலகுக்கு ஒருவர் வந்திருந்தார். அவரைப் பார்த்து நாட்கள் ஆயிற்று. அடையாளம் கண்டு பேசினேன். இப்போதெல்லாம் உங்களை நிகழ்ச்சிகளில் பார்க்க முடிவதில்லையே என்று கேட்டேன். அவர் சலிப்புற்று ” கூட்டங்களில் பேசுகிற பலர் பொறுப்பற்று உரை நிகழ்த்துகின்றனர். வந்திருக்கும் வாசகர்களை மதியாமல் ஏதோவெல்லாம் பேசுகிறார்கள். நாம் அடைவதற்கு எதுவுமற்ற இலக்கியச் சந்திப்புக்களில் இப்போதெல்லாம் கலந்து கொள்வதில்லை. மதியாதார் தலைவாசல் மிதியாதே என்பது இதற்கும் பொருந்தலாமே” என்றார். ஒரு வாசகனை இவ்வளவு சங்கடப்படுத்தியிருக்கிறார்களே என்று உளம் நொந்தேன். அவருடைய கைகளைப் பற்றிக் கொண்டேன். ” இது ஆகுதியின் கூட்டம். அதனாலேயே தலைவாசல் மதித்து மிதித்திருக்கிறேன்” என்று சொல்லி என்னை ஆசிர்வதித்தார். இப்படியான பாராட்டுக்கள் ஆகுதிக்கானவை மட்டுமல்ல . இதுவரைக்கும் ஆகுதியின் நிகழ்வுகளில் உரையாற்றிய ஒவ்வொரு எழுத்தாளர்களுக்கும் சேரும்.
ஒரு நவீன எழுத்தாளர் பேச்சாற்றல் கொண்டவராக இருந்தால் அது இன்னுமே மொழிக்கும், சிந்தனைக்கும் பலமானதுதான். ஏனெனில் ஒரு எழுத்தாளன் வழியாக பொதுசமூகத்தில் விதையும் சொல் என்றுமே பட்டுப்போவதில்லை. ஆகவே அவர்கள் குரல் வழியாகவும் சிந்தனைகள் பரவலாக சென்றுசேர்வதும் அவசியமானதுதான்.
The post எழுத்தாளர்களுக்கு மேடைப் பேச்சாற்றல் அவசியமா? first appeared on அகரமுதல்வன்.
January 8, 2024
அநாதி
01
சிறகிலிருந்து பிரிந்த
இறகொன்று
காற்றின் தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச் சென்றதாகப்
பாடினான்
பிரமிள்.
காற்றின் தீராத பக்கங்களில்
அவனையெழுதும்
கவிதை
மொழியிலிருந்து பிரிந்து
என்னிடம் வந்தது.
02
அநாதியிலும் – ஆதியிலுமிருந்து
அழைத்து வரப்பட்ட எனக்கு
என்ன பெயர் அறியேன்.
ஆனாலும் போதும்
மனிதன் நான்.
03
காகிதங்கள் படகுகளாகின்றன
தாழ்வாரங்கள் அருவிகளாகின்றன.
அருவியில் நனைந்து
காகிதப் படகின் பின்னோடி
நிலத்தில் கால் வைத்தால்
மழையோ
மழை.
The post அநாதி first appeared on அகரமுதல்வன்.
January 7, 2024
போதமும் காணாத போதம் – 15
கரியன் காயப்பட்டு கிளிநொச்சி மருத்துவமனையில் இருப்பதாக தகவல் வந்தது. சைக்கிளை உழக்கிப் பறந்தேன். இயக்கத்தில் சேர்ந்து ஒரு வருடத்திற்குள் நான்காவது தடவை காயப்பட்டுள்ளான். இதற்கு முன்பு மன்னாரில் நடந்த மோதலில் முதுகில் காயமடைந்திருந்தான். “முதுகில் காயப்படுகிறதெல்லாம் அவமானம் கரியா, புறமுதுகு காட்டி ஓடினவனென்று அர்த்தம்” என்றேன். “நெஞ்சைக்காட்டி ஓடியிருந்தால் நான் மிஞ்சிவந்து இப்ப கதைச்சிருக்க மாட்டேன்” என்றபடி தோடம்பழத்தை உரித்தான் கரியன். இந்தத் தடவை கடுமையான தீக்காயமென்று அறிந்தேன்.
நான் மருத்துவமனைக்குள் நுழைந்து காயப்பட்ட போராளிகளை வைத்திருக்கும் பகுதிக்கு சென்றேன். உள்ளே செல்வதற்கு அனுமதியில்லையென கூறினார்கள். அதன் பொறுப்பதிகாரியாக இருந்தவரிடம் கெஞ்ச வேண்டியிருந்தது. உள்ளே வலி பொறுக்கவியலாது கதறுங்குரல்களை கேட்கவே வேடிக்கையாகவிருந்தது. போர்க்காயங்களைப் பார்ப்பதில் ஆர்வம் கூடியிருந்தது. சொற்ப நிமிடங்கள் மட்டும் ஒதுக்கித் தந்தனர்.
உள்ளே போனதும் கரியனின் இயக்கப்பெயரைச் சொல்லி எங்கே இருக்கிறார் என்று கேட்டேன். மருத்துவப் பிரிவுப் போராளி என்னை கரியனிடம் கூட்டிச் சென்றார். உடல் முழுக்க எரிந்துலர்ந்திருந்தது. தீமிதிக்கும் கிடங்கில் சாம்பலுக்கு மத்தியில் கங்குகள் ஒளிர்வதைப் போல ஊண் சிவந்து தகித்தது. அரை உயிரோடு நெருப்பிலிருந்து ஊர்ந்து சென்ற சாரைப் பாம்பை ஞாபகப்படுத்துவதைப் போல கட்டிலில் கிடந்தபடி கைகளை அசைத்தான். பக்கத்தில் நின்று “ நான் ஸ்பார்ட்டகஸ் வந்திருக்கிறேன். எப்பிடி இருக்கிறாய்” கேட்டேன். கண்களைத் திறந்து பார்த்து “மச்சான், இந்த ஆர்மிக்கார புண்டையாண்டியளால எல்லாமும் நாசமாய் போய்ட்டுது “ என்றான். கரியனிலிருந்து நான்காவது கட்டிலில் படுத்திருந்தவரின் கால் நீக்கப்பட்டிருந்தது. அவர் சத்தமாக என்னவெல்லாமோ சொல்லிக்கொண்டார். “அவனுக்கு இப்ப தான் மெல்ல மெல்ல மயக்க மருந்து தெளியுது. காலமையிலிருந்து ஒரே சத்தம் தான். பச்சைத் தூஷணத்தில எல்லாரையும் திட்டுறான்” கரியன் சொன்னான். சிகிச்சை அளிப்பதற்காக மயக்க மருந்து வழங்கப்பட்ட போராளிகள் இப்படித்தான் பேசுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இன்றுதான் முதன்முறையாக அனுபவிக்கிறேன்” என்றேன்.
“இவனெல்லாம் பரவாயில்லை. நேற்றைக்கு இம்ரான் பாண்டியன் படையணிக்காரர் ஒருவர் இஞ்ச இருந்தவர். அவருக்கு அடிவயிற்றில பெரிய காயம். இரவு முழுக்க ஒரே கச்சேரிதான். எல்லாருக்கு ஏச்சுத்தான். இயேசுவை சுடவேணுமெண்டு சொல்லுறார். மகாத்மா காந்திக்கு தண்டனை அளிக்க வேண்டுமென்று என்னவெல்லாமோ கதைச்சார். ஒரே சிரிப்புத்தான் எங்களுக்கு. அதிகாலையில தான் இஞ்ச இருந்து ஆள் போனது”
“எங்க , மெடிஸ்க்கு மாத்திட்டாங்களோ”
“இல்லையில்லை. ஆளுக்கு பஞ்சு. அதிகாலை நாலு மணியிருக்கும் ஒரு பெரிய சத்தம். மூச்சை வானுக்கு எறிஞ்சு நிலத்தில விழுத்திற எத்தனத்தோட ஒரு மூர்க்கம். அப்பிடியே கையைத் தொங்கவிட்டுட்டார்”
“அய்யோ, வீரச்சாவே!”
“பின்ன, அவ்வளவு பெரிய மூச்சை விட்டால்…” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே, இன்னொரு கட்டிலில் இருந்து சத்தம் எழுந்தது.
“அன்பார்ந்த தமிழீழ மக்களே! நான் மரணத்தைப் பார்த்துவிட்டேன். அதனுடைய பாறை மேல் அமர்ந்திருந்து தவளையைப் போல உலர்ந்திருக்கிறேன். மரணம் அவ்வளவு மர்மானதொன்றுமில்லை. எங்களுடைய வேவு அணிக்காரர்கள் போல கண்டறியமுடியாததும் இல்லை. பயத்தின் நுகத்தடியில் அது பிணைக்கப்பட்டிருக்கிறது. மரணத்தின் நுழைவாயிலில் நின்று மிழற்றும் என் காற்றுக்கு எதுவும் தெரியவில்லை. ஆனாலும் ஒன்றைச் சொல்கிறேன், நான் மரணத்தினாலும் மீதம் வைக்கப்படுவேன். நன்றி. வணக்கம்” என்று உரையை முடித்தார்.
“இவன் அரசியல்துறையில இருந்து படையணிக்கு போயிருப்பான் போல, தமிழ்ச்செல்வண்ணையை விட வித்துவமாய் கதைக்கிறான்” என்றான் கரியன்.
அந்தப் பகுதி முழுக்கவே போர்க்களத்தில் காயப்பட்டு வந்திருந்த போராளிகள் மட்டுமே சிகிச்சைக்காக தங்க வைப்பட்டிருந்தனர். சிறிய காயங்களோடு இருந்தவர்கள் ஏனையோருக்கு ஒத்தாசை புரிந்தனர். கையில் ஒரு விரல் மட்டும் இல்லாமல் போயிருந்தவரைப் பார்த்து பெரிய காயக்காரரொருவர் “ எடேய் உந்தச் சுண்டுவிரல் இல்லாமல் போனத காயமெண்டு சொல்லி களத்த விட்டு வந்திருக்கிறியே. உனக்கு வெக்கமா இல்லையோ” என்று கேட்டதும் எல்லோரும் சிரித்தார்கள். சுண்டுவிரல் காயக்காரன் கைகள் இரண்டையும் மேல்நோக்கித் தூக்கி, நாளை நான் களத்திற்குச் சென்றுவிடுவேன். ஆனால் இந்தச் சுண்டுவிரலுக்கும் ஒரு பெறுமதி இருக்கெண்டு உங்களுக்கு சொல்ல வேண்டுமெனத் தோன்றுகிறது” என்றான். அன்றைக்கு மாலையிலேயே சின்னக்காயங்களோடு வந்தவர்கள் மீண்டும் களமுனைக்குச் செல்ல ஆயத்தமாகினார்கள். கரியனோடு களமுனையில் இருந்த போராளியொருவன் நெற்றியில் சிறியக் காயப்பட்டிருந்தான். அவனும் என்னோடு வந்தமர்ந்து கொண்டான்.
“உனக்கு என்ன மச்சான் நடந்தது. உடம்பெல்லாம் அடி வாங்கியிருக்கிறாய். என்ன ஏதேனும் புகைக்குண்டுக்குள்ள மாட்டுப்பட்டனியோ” கேட்டேன்.
“அதைச் சொன்னால் வெக்ககேடு. உன்னை நம்பிச்சொல்லமுடியாது. நீ வன்னியில இருந்து பி.பி.சிக்கு செய்தி அனுப்புவாய்” கரியன் சிரித்தான். எடேய், சும்மா சொல்லு. “இது என்ன இயக்க ரகசியமே. மறைக்கிறதுக்கு. நாளைப்பின்ன நீ வீரச்சாவு அடைந்தால் ஊருக்குள்ள சொல்லித்திரிய கதை வேண்டாமே” என்றேன். ஸ்பார்ட்டகஸ் உன்னை நம்பி சொல்லுறது தான் தயக்கமாய் இருக்கு. ஆனாலும் வேற ஆரிட்டையும் சொல்லக்கூடாது. சத்தியம் பண்ணு” என்று கையை நீட்டினான். ஆர் மேல சத்தியம் செய்யவேண்டுமெனக் கேட்டேன். உனக்குப் பிடிச்ச ஆளோட பெயரைச் சொல்லி செய் என்றான். “என்ர நண்பன் கரியன் மேல சத்தியமாய் ஆரிட்டையும் சொல்லமாட்டேன்” என்றேன். “என்ர சாவைப் பார்க்கிறதில உனக்கு என்ன விருப்பமோ. சரி நடந்ததைச் சொல்லுறன். கேள்.” என்றான்.
பத்து நாளைக்கு முன்னால கடுமையான சண்டை. எங்கட இரண்டு கிலோமீட்டர் பகுதியை இராணுவம் கைப்பற்றியது. எங்களில இருபதுக்கு மேற்பட்டோர் வீரச்சாவு. மூண்டு பேருடைய வித்துடல் அவங்களிட்ட விடுபட்டு போச்சுது. பெரிய சோர்வும் கொந்தளிப்புமாய் ஆகிட்டுது. எங்கட தளபதிக்கு அதுவொரு கெளரவ பிரச்சனை ஆகிட்டுது. தக்க வைச்சிருக்கிற இடத்தை இழந்திருக்க கூடாதெண்டு எல்லாருக்குள்ளையும் ஒரு கருத்திருந்தது. பிறகு தளபதி ஒரு திட்டம் போட்டு, வலிந்து ஒரு தாக்குதல் செய்ய முடிவெடுத்தார். நாங்கள் நினைச்ச மாதிரி சண்டையில்லை. அது வேற. கட்டளைகள் ஒவ்வொன்றுக்கும் பின்னால், எதிரிக்கு பேரிழப்பு நிகழ்ந்தபடியிருந்தது. ஒருநாள் நள்ளிரவு தொடங்கிய சண்டையில் முன்னணி போர்முனையிலிருந்து தாக்குதலைச் செய்த அணியில் நானுமிருந்தேன். துவக்கின் வாய்முனை தகித்து பூத்தது.
என்னோடிருந்த போராளி “மொஸ்கோ” துவக்கைத் தன்னுடைய நெஞ்சோடு அணைத்து வைத்திருந்தபடி “என்னால ஒருத்தனையும் நோக்கிச் சுட ஏலாமல் கிடக்கு. ஆனால் என்னைச் சுடமுடியுமெண்டு நினைக்கிறேன்” என்றான்.
“மொஸ்கோ உனக்கேதும் விசரா. துவக்கை கீழ போட்டுட்டு சும்மா இரு. நான் சண்டை செய்கிறேன்” என்றேன். அவன் துவக்கை கீழே போட்டான். ஆனால் அதற்கு முன்பாகவே ஒரேயொரு தடவை தன்னுடைய டிகரை அழுத்தி தாடைக்கு கீழிருந்து பாய்ச்சினான். அவன் தற்கொலை செய்து கொண்டதை எல்லோரிடமும் மறைத்தேன். அவன் வீரச்சாவு என்ற செய்தியை நானே கட்டளைப்பணியகத்துக்கு அறிவித்தேன்.
“அது பிழையான விஷயமில்லையே”
“ஒருத்தன் களத்தில் ஆயுதமேந்தி சண்டை செய்து, ஏதோவொரு நாள் தன்னால எதிரியைச் சுட முடியேல்ல எண்டு சொல்லி தன்னைத்தானே அழிக்கிறான். அவனும் வீரன்தான். அவனும் வீரச்சாவுதான். எல்லாத்துக்கும் மேல அவனோட உயிர்போன முகத்தைப் பார்த்தன். நல்ல செழிப்பு. ஏதோவொன்றை சாதித்துவிட்ட இளைப்பாறல்” என்கிற கரியனைப் பார்த்து வியந்தேன்.
“சொல்லுறத கேள்”
“ஓம், சொல்லு”
“அவனுடைய வித்துடலை எடுத்துக் கொண்டு பின்னால போய்ட்டாங்கள். ஆனால் அவன்ர துவக்கு என்னட்டத்தான் இருக்கு. நான் அதை வைத்துக் கொள்வதாக அறிவித்தேன். இராணுவம் நினைத்ததைப் போல எங்களை ஒன்றும் செய்ய முடியாமல் விழி பிரட்டி நின்றது. தளபதிக்கு உற்சாகமான களமாக அது மாறியது. இராணுவம் மெல்ல மெல்ல பின்வாங்கத் தொடங்கியது. நீயும் நானும் பனம்பழம் பொறுக்கப் போவமெல்லே, அப்ப ஜெயக்கொடியோட பனந்தோப்பில பழங்கள் விழுந்து கிடக்கிற மாதிரி வெளிமுழுதும் இராணுவத்தின் பிணங்கள். போராளிகள் முன்னேறினோம். இராணுவத்தின் பைகளைப் பிரித்து அவர்களது உணவுகளை எடுத்தேன். பிஸ்கட் பை, பணிஸ் என்று நிறைய இருந்தது. சிகரெட் பெட்டியும் இருந்தது. ஒன்றை அடித்தால்தான் என்ன என்று தோன்றியது.
“அய்யோ, கெடுவானே ஆராவது பார்த்தால் சுட்டிருப்பாங்களே”
“ஆருக்கும் தெரியாமல் எடுத்து பொக்கெற்றுக்குள்ள வைச்சிட்டன். கொஞ்ச நேரத்தில் பிடிச்ச பகுதியில அரண் அமைச்சு இருந்தம். சண்டை ஓய்ந்திருந்தது. ஆனால் நூறுக்கும் மேற்பட்ட ஆர்மிக்காரர்களோட சடலங்கள் இப்ப எங்கட கட்டுப்பாட்டுக்குள்ள இருக்கு. எனக்கு ஒரே வேடிக்கையா இருந்தது. பாவம் செத்துப்போன ஆர்மியள். சம்பளம் வாங்கி சாக வந்தவங்களை நினைச்சு கவலைப்பட்டும் பிரியோசனம் இல்லை என்று தோன்றியது. களமுனையில் ஆசுவாசம் கொள்ளும்படியாய் காற்று எழுந்தது. கந்தக நெடில் ஒருபக்கம் தலை சுற்றியது. மின்மினிகள் ஏனென்று தெரியாமல் அபத்தமான வெளிச்சம் அடித்து திரிந்தன.”
“எடேய், இன்னும் நீ காயப்பட்ட கதைக்கு வரேல்ல”
ம். பிறகு நான் கொஞ்சம் காலாற நடந்து வரவிரும்பினேன். எங்கே நடப்பது? மொஸ்கோ தற்கொலை செய்து கொண்டவிடத்திற்குச் சென்று விட்டு திரும்புவதாக உத்தேசித்தேன். பொக்கேற்றுக்குள் இருக்கிற சிகரெட்டை எடுத்து கைக்குள் திணித்தேன். ஒரு வீட்டின் சிறிய கிணறு வடிவாய் இருந்தது. சக போராளிகளின் நடமாட்டம் எதுவுமில்லை. மெல்ல அதற்குள் இறங்கி, படியில் அமர்ந்து சிகரெட்டை ஊதினேன். இவ்வளவு சுதியான சிகரெட். அருமையான வாசனையும், உறைப்பும் விறுவிறுத்து தொண்டைக்குள் இறங்கியது. வேக வேகமாய் படிக்கட்டில் ஏறி மேலே வந்தேன். தற்கொலை செய்து கொண்ட இடத்தை அடைந்ததும், அவனுடைய ரத்தம் காய்ந்திருந்ததைப் பார்த்தேன். அது ஒரு சிறிய செந்தழல் பூவாக நிலமீது ஊர்ந்து என்னை நோக்கி வந்தது. கண்களை கசக்கியபடி மீண்டும் பார்த்தேன். காய்ந்த ரத்தம். பிறகு நிலமீது ஊர்ந்து வரும் பூ. அங்கே நிற்கவே ஏதோவொரு நடுக்கம் தோன்றியது. அவன் இறுதி நாளன்று பேசிய வார்த்தைகள் நினைவுக்கு வந்தன.
“துவக்கை விடவும் விடுதலையை எங்களிடம் கூட்டிவர வேற வழியில்லையோ. அல்லது நாங்கள் இன்னும் அதை யோசிக்கலையோ”
“மொஸ்கோ, துவக்கோ, தடியோ எங்களைக் காப்பாற்றிவிடுமெண்டு நாங்கள் நம்பேல்ல. ஆனால் எங்களை அழிக்கத் துடிச்சவனை ஆயுதத்தால தான் பயமுறுத்த முடியும், இல்லையே”
“ஆனால், எதிரியைப் பயப்பிடுதுறது வேலை இல்லையே, விடுதலை தானே வேணும்”
“அதுக்குத்தான் நாங்கள் உயிரைக் கொடுத்துப் போராடுறம். நீ இத்தனை வருஷமாய் சண்டை செய்கிறதுக்கு அதுக்குத் தானே”
“உயிர் எடுத்தல் – கொடுத்தல் இந்த இரண்டு பாதையிலும் விடுதலையை சந்திக்க இயலுமே”
“மொஸ்கோ, நீங்கள் கனக்க படிச்சனியள். எனக்கு மூத்த போராளி. உங்கட பட்டறிவுக்கு முன்னால் என்ன பதில் சொல்லியும் என்னால உங்களைத் திருப்தி படுத்த ஏலாது”
“அப்ப உயிர் கொடுக்கிறதில, எடுக்கிறதில விடுதலை வராது எண்டு ஒத்துக்கொள்ளுறியள், அப்பிடித்தானே”
எனக்கு தலையில் ஒருவித சுழிப்பு மின்னல் அடிக்கத் தொடங்கியது. மெல்லிய தந்திகள் அதிரும் தோரணையில் உள்ளிருந்து ஏதோவொரு சத்தம் கேட்கத் தொடங்கியது. வேகவேகமாய் முன்னரங்குக்கு ஓடினேன். சடலங்கள் மீது இலையான்கள் அமைதியாக அமர்ந்திருந்தன. வானத்தை பார்க்க மறுத்து குப்புறக் கவிழ்ந்து கிடக்கும் இராணுவச் சீருடைகளைப் பார்க்கையில் பரவசம் எழுந்தது. ஒருவனின் சடலம் மட்டும் வானத்தைப் பார்த்திருந்தது. அவனது முகத்தில் கறுப்பு வண்டொன்று ஏறியது. அதனைப் பிடித்து தூக்கி எறிந்து, முகத்தை துடைத்துவிட்டேன். நல்ல வடிவான பெடியன். அவனுக்கு நெஞ்சில் வெடி விழுந்திருக்கிறது. கைகள் ரத்தத்தில் பதிந்திருக்கின்றன. ரத்த வெடுக்கு வீசும் குரோட்டன் செடியைப் போலவிருந்த அவனது கையை எடுத்து உடலில் வைத்தேன். கண்கள் ஒளியிழந்து தலை சுற்றத் தொடங்கியது.
களமுனையில் மீண்டும் சத்தம் கேட்கத் தொடங்கியது. ஓடிச் சென்றேன். போராளிகள் மீண்டும் தாக்குதலை தொடங்கினர். அது மெல்ல மெல்ல சூடு பிடிக்கும். இன்றைக்கு மிச்சப்பகுதிகளையும் மீட்டுவிடுவதென திட்டம். ஆனால் இராணுவமும் தாக்குதலை திறனாக எதிர்கொண்டது. நாங்கள் கடுமையான வியூகங்கள் அமைத்து சண்டையிட்டோம். எதிர்த்தாக்குதல் மெல்லப் பலமிழந்து பின்வாங்கல் தொடங்கியது. போராளிகள் முன்னகர்ந்தோம். மீண்டும் இராணுவ அணியினர் உயிரிழக்க வேண்டியதாயிற்று. உக்கிரமான தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. கால்களுக்கடியில் இறைஞ்சும் சொற்கள் நசிபட முன்னேறி ஓடினோம்.
ஒரு இராணுவத்தினன் கனரக ராக்கெட் ஆயுதத்தோடு சாவடைந்திருந்தான். அவனுடைய ஆயுதத்தை அப்படியே கைப்பற்றினேன். என்னுடைய கால்கள் அந்தரத்தில் மிதப்பதை உணர்கிறேன். போர்க்களம் கானல் அலையென கண்களுக்குள் பொங்கியெழ ஆட்லறிகளும், துப்பாகிகளும், எதிரிகளும், போராளிகளும் சின்னஞ்சிறு மீன் குஞ்சுகளைப் போல நீந்தி விழுகின்றனர். இராணுவத்தின் தாக்குதல் திடீரென பலங்கொண்டு கனைத்தது. போராளிகள் திடுதிடுமென திணறத் தொடங்கினர். பல்குழல் எறிகணைகள் வெளிமுழுதும் சொரிந்து விழுந்து வெடித்தன. என்னுடைய அணியில் இருந்தவர்கள் நான்கிற்கு மேற்பட்டவர்கள் வீரச்சாவு அடைந்தனர். என்ன செய்வதெனத் தெரியாமல் கண்கள் சொருகின.
மயக்கமா? மரணமா? உடல் முழுதையும் சோதனை செய்கிறேன். எங்கேனும் காயப்பட்டு ரத்தம் போய்விட்டதா என்கிற சந்தேகம். உடலில் எங்கும் எதுவுமில்லை. நன்றாகவேயுள்ளேன் என்ற உறுதிப்பாடு. கையில் கிடந்த ராக்கெட் ஆயுதத்தை எடுத்துக்கொண்டு முன்னரங்கில் இருக்கிற மண் அணைக்கு மேலே ஏறிச்சென்று எதிரிகளின் திசை நோக்கி வீசினால் என்னவென்று நீதான் என்னிடம் சொன்னாய் ஸ்பார்ட்டகஸ்.
“நானா, உனக்கு மூளையும் எரிஞ்சு போச்சு போலகிடக்கு”
ஸ்பார்ட்டகஸ். நீதான் சொன்னாய். என்னை நம்பு. உன்னுடைய கதையைக் கேட்டு மண் அணைக்கு மேலே ஏறி நின்று, ராக்கெட்டை இயக்கினேன். அது புறப்படும் போது வெளித்தள்ளிய நெருப்புச் சுவாலை என்னை இப்படியாக்கிவிட்டது. நான் மண் அணையிலிருந்து தூக்கி வீசப்பட்டேன். பிறகு சுயநினைவற்று எரிகாயத்தோடு கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறேன். இனிக் காயம் மாறியதும் இயக்கம் தண்டனை வழங்குமென நினைக்கிறேன்”
“உனக்கெதுக்கு தண்டனை. நீதான் சண்டை செய்து காயப்பட்டிருக்கிறியே”
“அதுசரி, ஆனாலும் போதை மருந்து புகைச்சது இயக்க ஒழுக்கத்திற்கு எதிரானது தானே”
“போதை மருந்தா, எது சிகரெட்டா”
“அது சிகரெட் மாதிரி கொடுக்கப்பட்ட போதை மருந்தாம். இராணுவத்தில இருக்கிறவங்கள் பயம் தெரியாமல் சண்டை செய்ய கொடுக்கப்படுகுதாம்” என்றான் கரியன்.
“அப்ப, நீ வெறியில தான் ஏறி அடிச்சனியோ”
“பின்ன, நான் அண்டைக்கு தன்னைச் சுட்டுச் செத்தானே மொஸ்கோ அவனை மாதிரி என்ன வீரனே?”
எதுவும் சொல்லாமல் கரியனையே பார்த்துக் கொண்டிருந்தேன். சிரித்தபடி “உன்னட்ட ஒண்டக் கேக்க வேணும்” என்றான்.
“என்ன”
“அவன் செத்த இடத்தில் ஒரு பூ ஊர்ந்து வந்தமாதிரி இருந்ததே, அது என்னெண்டு நினைச்சனி”
“உனக்கு வெறியில அப்பிடி தெரிஞ்சிருக்கு”
“அதுதான் இல்லை. அது மொஸ்கோவின்ர மூளை. வீரனோட மூளை, போர்க்களத்தில பூ மாதிரி கிடக்கிறத சொன்னால் நீங்கள் நம்பமாட்டியள். நான் போதைவஸ்த புகைச்சது தான் காரணமெண்டுவியள்”
“சரி. அது வீரனோட மூளைதான். ஒத்துக்கொள்கிறேன். இப்ப நீ படு. நான் நாளைக்கு வருகிறேன்” என்று புறப்பட்டேன். அப்போது என்னுடைய கையைப் பிடித்துச் சொன்னான் “ இந்த விஷயத்தை ஆரிட்டையும் சொல்ல மாட்டனெண்டு எனக்கு சத்தியம் செய்திருக்கிறாய் மறந்திடாத”
“சத்தியமாய் சொல்லமாட்டன்” என்று விடைபெற்றேன்.
கரியன் சில மாதங்கள் மருத்துவ விடுமுறையில் இருந்தான். அவனை பராமரித்து வந்த மருத்துவ முகாம் காட்டுப் பகுதிக்குள் இருந்ததால் போராளிகளைத் தவிர எவராலும் போக முடியாது. உடல் நிலை தேறி, நேராகவே களமுனைக்குச் சென்றான். போர்க்களத்தில் நிறையப் பாராட்டுக்களைப் பெற்றான். எதிரிகளை கொன்று குவிப்பதில் பெயர் பெற்றான். ஒருவேலையாக கிளிநொச்சிக்கு வந்திருந்த சமயம், என்னை வீதியில் கண்டு வாகனத்தை நிறுத்தினான். ஓடிவந்து அணைத்துக் கொண்டான்.
“ஸ்பார்ட்டகஸ். நிலமூர்ந்து வரும் பூக்கள் களத்தில் நிறையவே மலர்கின்றன. அவர்கள் வீரர்கள்”
“இப்படி ஏன் நடக்கிறது. எதைக் கண்டு அஞ்சுகிறார்கள்” கேட்டேன்.
“தெரியவில்லை ஸ்பார்ட்டகஸ். ஆனாலும் அடிக்கடி அப்படி நடந்து விடுகிறது. மொஸ்கோவைப் போல இதுவரைக்கும் பத்துப் பேர், நிலமூர்ந்து வரும் பூக்களை மண்ணில் விதைத்து விட்டார்கள்”
“நாளாந்த கள அறிக்கையில் இதனை அழுத்தம் திருத்தமாக எழுதி அனுப்பி. தளபதி பார்க்கட்டும்”
“ஒன்று சொன்னால் கோபித்துக்கொள்ளாதே, தளபதியே நேற்று அப்படியொரு முடிவை எடுத்து தப்பியிருக்கிறார்”
“அய்யோ என்ன சொல்லுகிறாய். அவருக்கே இப்படித் தோன்றுகிறதா”
“எனக்கும் தோன்றிவிட்டது ஸ்பார்ட்டகஸ்”
“விசரா உனக்கு. மொஸ்கோவைப் போல அழித்துக் கொள்வதெல்லாம் வீண்சாவு. அதனைச் செய்யாதே. ஒரு மதிப்புமிருக்காது” என்றேன்.
கரியன் சிரித்தபடி வாகனத்தில் ஏறினான். விடுப்பில் வருகிறபோது சந்திக்கலாம் என்று புறப்பட்டான்.
இரண்டு நாள் கழித்து மேஜர் மொஸ்கோவாக வீட்டிற்கு கொண்டுவரப்பட்டிருந்த வித்துடலின் தலைப்பகுதியை ஓடிச்சென்று பார்த்தேன்.
நிலமூர்ந்து போகும் பூ கரியனிடமே இருந்தது. கரியன் வீரன்.
The post போதமும் காணாத போதம் – 15 first appeared on அகரமுதல்வன்.
January 4, 2024
மருபூமி நூல் வெளியீட்டு விழா
புதிய ஆண்டில் ஆகுதி ஒருங்கிணைப்பின் முதல் நிகழ்வாக எழுத்தாளர் அஜிதனின் மருபூமி வெளியீட்டு விழா அமைகிறது என்பதில் மகிழ்ச்சியும் உவகையும். அனைவரையும் அழைக்கிறேன்.
இடம் டிஸ்கவரி புத்தகநிலையம், கேகே நகர், சென்னை
நாள் 7 ஜனவரி 2023 (ஞாயிறு)
பொழுது காலை 10 மணி
பங்கேற்போர்: பாவண்ணன், தமிழ்ப்பிரபா, சுசித்ரா, அகரமுதல்வன், ரஃபீக் இஸ்மாயில், நிகிதா .
ஏற்புரை – அஜிதன்The post மருபூமி நூல் வெளியீட்டு விழா first appeared on அகரமுதல்வன்.
January 3, 2024
Oh… Butterfly
01
ஒரு காகிதப்படகில்
என் நதியை இழுத்துச் செல்லும்
மழையை
தாழ்வாரத்தில்
அமர்ந்திருந்து பார்க்கிறது
போழ்து.
02
எனதொரு பாடலை
தாயமாடி
பாம்பின் வயிற்றில் இறைத்தேன்.
எத்தனை கட்டங்கள்
நகர்ந்து
ஏணிக்குப் போகவேண்டும்
வாலின் சொற்கள்.
03
மதுக்கூடத்தில்
Oh… Butterfly பாடுகிறாள்
மாதொருத்தி.
அவளது குரலில் உண்டாகிற
ஏதேன் தோட்டத்தில்
பாவம் தரிக்கும் ஆப்பிள்கள்
வேடிக்கை பார்க்கும் பாம்புகள்
எத்தனை தடவை மனிதன்
கடவுளிடம் தோற்றுப் போகவேண்டும்.
Oh… Butterfly…. Butterfly…..
Butterfly.
02
The post Oh… Butterfly first appeared on அகரமுதல்வன்.
January 2, 2024
சிறுகதை – திருவேட்கை – தெய்வீகன்
அவளுக்கும் எனக்குமிடையே காதல் உண்டானமைக்குப் பெரிய காரணங்கள் எதுவுமில்லை. அவளுடைய மூதாதையர்களைப் போல நானும் ஆஸ்திரேலியாவுக்குக் கடல் வழியாக வந்தவன். சொந்த மண்ணில் யுத்தத்தினால் கசக்கி வீசப்பட்ட கைக்குட்டைகளைப் போல குழந்தைகளும், பெண்களும் கொல்லப்பட்டார்கள். கரோலினாவைத் திருடியென வீதியில் அறைந்ததைப் போல, எங்களைத் தமிழர்கள் என்று கொன்று குவித்த தீவிலிருந்து வந்தடைந்தேன். மிஷேலும் நானும் முதன் முறையாகக் கலவியில் முயங்கி மீந்திருந்தபோது, அவள் சொன்னாள்.
“நானும் நீயும் ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்ளும்போது பூமிக்கு நீதி திரும்பிவிடும்”
“அப்படியான எந்த அசட்டு நம்பிக்கையும் எனக்கில்லை மிஷேல். பூமிக்கும் நீதிக்குமிடையே பெரும்பாழ் தோன்றிவிட்டது” என்றேன்.
The post சிறுகதை – திருவேட்கை – தெய்வீகன் first appeared on அகரமுதல்வன்.
அம்புலி
01
பகல் தரித்து
இரவு கிளைத்த
பூமியில்
சிறகுலர்த்தும்
பறவைகள்
வந்தமர்ந்த
யுகமரத்தில்
தாம் புசித்தும்
தீராமல்
ஒட்டியிருந்த
கனியை
அலகு கூட்டி
உண்ண
வளர்கிறது
அம்புலி.
02
யானைகள் கனவில் வருகிறதென
சொன்ன ஆச்சியை
காட்டுக்கு அழைத்துச் சென்றேன்.
முதுமரத்தின் சுள்ளிகளைப் பொறுக்கி
யானைகளின் தந்தம் என்றாள்.
அடிவேரைத் தொட்டு
யானைகளின் கால்களைப் பார் குளிர்கிறதென்றாள்
மரத்தை யானை என்றாள்
ஆச்சியை காடென்றோம்
03
இரவில் ஓலம் கேட்கும்
செவிகள் எனது.
தண்ணீரைத் திறந்தால் குழாயில்
பெருகி வழிகிறது.
வெளிச்சத்தைப் போட்டால்
அறையெங்கும் பரவுகிறது.
மின் விசிறியைச் சுற்ற விட்டால்
வெளியெங்கும் அலைகிறது
என் தலையில் வழிவது
அற்பம் அற்பம் அற்பம்
ஓலம் வழிவது அற்பம்.
The post அம்புலி first appeared on அகரமுதல்வன்.
January 1, 2024
வெண்முரசு செந்தில் – ஒரு தமிழ் வாசக கர்வம்
சனநெரிசல் மிகுந்த வீதியின் இரைச்சலுக்கு மத்தியில் ஒதுங்கி நின்றேன். அந்தி வெயிலில் கொஞ்சம் கடல் காற்று ஏறியிருந்ததது. எனக்கு எதிரேயிருந்த பழைய புத்தகக் கடையில் நின்றுகொண்டிருப்பவர் “உச்சவழு” புத்தகத்தை வாசித்தபடியிருந்தார். தொடர்ந்து அவரையே அவதானித்தேன். வாடிக்கையாளர்களுக்கு தேவையான புத்தகங்களை கொடுத்து வியாபாரம் செய்துவிட்டு மீண்டும் உச்சவழுவை வாசிக்கிறார். கொஞ்சம் அதிசயப்பட்டேன். ஆச்சரியப்பட்டேன். இவ்வளவு நகர இரைச்சலிலும் யாபாரம் பார்த்தபடி வாசிக்கும் இவரோடு சென்று பேசினால் தான் என்ன என்று தோன்றியது. அவருடைய நடைபாதைக் கடையில் விற்பனை செய்யப்படும் நூல்கள் எல்லாமும் பாடத்திட்டங்களுக்குரியவை. போட்டித் தேர்வுக்குரியவை. ஆனால் நான்கைந்து இலக்கியப் புத்தகங்கள் மட்டுமே இருந்தன. எல்லாமும் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய நூல்கள். இவரை நான் எந்த இலக்கியக் கூட்டத்திலும் பார்த்ததில்லையே! இவருக்கும் இலக்கியக் கூட்டகளுக்கும் தான் தொடர்பில்லையே தவிர இலக்கியத்துக்கு நெருக்கம் இருக்கிறதென உணர்ந்தேன்.
இந்தப் புத்தகங்கள் என்ன விலையெனக் கேட்டேன். அய்யய்யோ, இவை எல்லாமும் நான் வாசிக்கும் புத்தகங்கள். என்னுடைய ஆசான் ஜெயமோகனுடையது என்றார். ஆசான், என்கிறாரே விஷ்ணுபுரம் அமைப்பில் பலரை எனக்குத் தெரியும். ஆனால் இவரை நான் கண்டிருக்கவிலையே என்கிற குழப்பம். அவர் என்னையே பார்த்துக் கொண்டு நின்றார். நீங்கள் ஜெயமோகனுடைய வேறு என்ன புத்தகங்களை வாசித்திருக்கிறீர்கள் என்று கேட்டேன். புனைவுகள் எல்லாவற்றையும் வாசித்திருக்கிறேன். வெண்முரசு உட்பட என்றார். என்ர தெய்வமே! இந்த பாக்யவான் யார்? இப்படியொரு வாசகனா! எனக்குள் பொறாமைச் சீற்றம். எச்சிலை விழுங்கிக் கொண்டு உங்களை எந்த இலக்கிய விழாவிலும் பார்ப்பதில்லையே என்றேன். வாசிக்கிறேன் வேறு எதுவும் தெரியாது என்று சுருக்கமாக முடித்தார். “சரி, நீங்கள் ஜெயமோகனைப் பார்த்து இருக்கிறீர்களா?” கேட்டேன். “இல்லை அந்தவொரு நாளுக்காக தவமிருக்கிறேன்” என்றார். சரி நான் ஜெயமோகனிடம் உங்களைப் பற்றி சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு புறப்படத் திரும்பினேன்.
செந்தில் உணர்ச்சிவசப்பட்டு என்னங்க சும்மா வந்தீங்க, பேசினீங்க, ஆசானிட்ட சொல்றேன்னுட்டு போறீங்க, யாருங்க நீங்க?” என்றார். எனக்கு எழுத்தாளர் ஜெயமோகனைத் தெரியும். அவரைப் பார்க்கும் போது உங்களைப் பற்றிச் சொல்கிறேன் என்றேன். என்னுடைய தொடர்பு இலக்கத்தை வாங்கிவைத்து விட்டு கண்டிப்பாக சொல்லுவீர்களா என்று கேட்டார். கண்டிப்பாக என்று உறுதியளித்து விட்டு வந்தேன்.
ஆனால் அன்றிரவு செந்தில் போன்றதொரு வாசகனைப் பலருக்கும் தெரியப்படுத்த வேண்டுமென எண்ணினேன். அவரை ஒரு நேர்காணல் செய்து வெளியுலகிற்கு மெய் வாசகர் யாரென அடையாளப்படுத்த வேண்டுமென எண்ணினேன். அடுத்த நாள் அவரை அழைத்து உங்களை ஒரு நேர்காணல் செய்ய விரும்புகிறேன் தருவீர்களா என்று கேட்டேன். முதலில் தயங்கினார். பிறகு அவரை ஊக்கமளித்து ஒப்புக்கொள்ளச் செய்தேன். அந்த நேர்காணல் “ஜெயமோகனுக்காக சங்கறுத்து குருதிப்பலி கொடுப்பேன்” என்ற முகப்பு அறிவிப்போடு வெளியானது. அவரை நேர்காணல் செய்த அன்றேன் ஜெயமோகன் அவர்களை அழைத்து செந்திலிடம் பேசுமாறு கோரிக்கை வைத்தேன். உடனேயே கொடுங்கள் என்றார்.
செந்தில் ஏற்கனவே பல ஆண்டுகள் பழகிய ஒரு மனிதரிடம் பேசுவதைப் போல ஜெ வீட்டிலுள்ள எல்லோரையும் சுகம் விசாரித்தார். உண்மையில் தரையில் கால் பதியாத பரவசமும் பக்தியும் கொண்டதொரு மனிதனின் உடல் அடையும் நடுக்கத்தை செந்தில்குமாரிடம் பார்த்தேன். ஆனந்தக் கண்ணீர் பெருகிய அவரது விழிகளில் ஆசானின் ஆசிர்வாதம் ஒளியாகத் திரண்டிருந்தது. செந்தில் என்னுடைய கைகளைப் பிடித்துக் கொண்டு நன்றி நன்றியென பலதடவைகள் சொல்லி கட்டியணைத்துக் கொண்டார். இந்த நேர்காணல் வெளியானதன் பிறகு குருதிப்பலி செந்தில் என்று அழைக்கப்பட்டு பிறகு வெண்முரசு செந்திலென பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். ஓரிரு இலக்கிய மேடைகளில் உரையாற்றவும் செய்தார்.
கடந்த இரண்டாயிரத்து இருபத்து மூன்றாம் ஆண்டில் வெண்முரசு செந்தில் வாசித்த புத்தகங்களின் பட்டியலை என்னிடம் காண்பித்தார். அதில் மீள் வாசிப்பு செய்யப்படும் வெண்முரசு வரிசை நூல்கள். திகைக்க வைக்கிறார். வாசிப்பது என்றால் பக்கங்களை புரட்டித் தள்ளுவது அல்ல. ஆழமாக செறிவாக கண்டடைவுகளோடு நிதானமாகச் செல்கிறார். இவரைப் போன்ற வாசகர்கள் சமூக ஊடகங்களில் இருந்து, தற்போது வாசிப்பில் என்று புகைப்படம் மட்டும் பதிவேற்றம் செய்யாதவர்கள். செந்திலைப் போன்ற இன்னொரு வாசகனை இன்னும் நான் காணவில்லை.
இரண்டாயிரத்து இருபத்து மூன்றாம் ஆண்டில் அவர் வாசித்த நூல்கள்
குகை.ஈராறு கால் கொண்டு எழும் புரவிஅந்த முகில் இந்த முகில்.சங்க சித்திரங்கள். (மீள் )அறம்.(மீள் )ஆயிரம் ஊற்றுகள்.ஜெயமோகன் சிறுகதைகள்.தெய்வங்கள் பேய்கள் தேவதைகள்.இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்.பொன்னிறப் பாதைமலர்துளி.துணைவன்கதாநாயகிமுதுநாவல்.பேய் கதைகளும் தேவதை கதைகளும்.எழுகதிர்.பொழிவதும் கலைவதும்.ஆலம்.கன்னி நிலம்விசும்பு.கோபல்ல கிராமம்அல்கிஸாபயணக் கதைகள்.குள்ள சித்தன் கதைகள்ஆரோக்கிய நிகேதனம்.குற்றமும் தண்டனையும்அசடன்வெண்ணிற இரவுகள்.ஆராச்சார்யாத்வஷேம்.பத்து இரவுகளின் கனவுகள்சுழலும் சக்கரங்கள்கழிவறை இருக்கைபிஞ்சகன்கையளவுசூடியப்பூ சூடற்க (மீள் )பட்ட விரட்டிபேய்ச்சி.கடல்புறத்திலேசுதந்திரத்தின் நிறம்காலதானம்.சிவப்புக்கல்த்துடன் ஒரு பச்சை பறவைமீச்சிறுத்துளிவிரிசல்கறப்பழி.பாராபாஸ்கடவுள் பிசாசு நிலம்பேட்டைகோசலைமானக்கேடுசெம்மீன்அம்மன் நெசவுவிலங்கு பண்ணைதீர்க்கதரிசிமுதற்கனல்.(மீள் )மழைப்பாடல்.(மீள் )நீலம்.(மீள் )பிரயாகை.(மீள்)யதி- தத்துவத்தில் கனிதல்The post வெண்முரசு செந்தில் – ஒரு தமிழ் வாசக கர்வம் first appeared on அகரமுதல்வன்.
சொற்றுணை பதிப்பகம்
எழுத்தாளர் செந்தில் ஜெகன்னாதன் “சொற்றுணை” என்கிற பதிப்பகத்தை ஆரம்பித்திருக்கிறார். அற்புதமான பெயர். திருநாவுக்கரசரின் “சொற்றுணை வேதியன்” என்ற வரியை ஏந்தியிருக்கிறார். “சொற்றுணை”தான் எழுத்தாளர்களுக்கு “நற்றுணை” அளிப்பது. எழுத்தாளர் செந்தில் ஜெகன்னாதனுக்கும் அத்துணை வாய்க்கும். சொற்களின் துணையுடன் எழுக! சொற்களின் விசையுடன் பணிக! வாழ்த்துக்கள்
The post சொற்றுணை பதிப்பகம் first appeared on அகரமுதல்வன்.
அகரமுதல்வன்'s Blog
- அகரமுதல்வன்'s profile
- 17 followers

