அகரமுதல்வன்'s Blog, page 29

December 19, 2023

தேரின் நிழல் – நினைவின் குற்றம்

வீனமளிக்கும் துக்கிப்பின் புழுக்கம் தாளாது மூச்சுத்திணறுகிறார்கள் மனிதர்கள்.  இழந்த ஞாபகங்கள் திடுக்குற வைக்கும் அவர்களிடம் மிஞ்சியிருப்பது கசப்பும் மீளமுடியாத இருள் திசையும். அறவீழ்ச்சிகளின் சிதிலங்களின் மீது அதிநவீனத்தின் நுகர்வு வெளிச்சம். அனைத்து தனித்துவங்களும் அழிந்து போனதொரு நிலவெளியில் நிறுத்தப்பட்டிருப்பவர்களின் பன்னெடுங்கால மரபையும் மனோபாவத்தையும் கதைகளின் வழியாக நினைவூட்டுவது எளிய இலட்சியமன்று. எல்லோருக்கும் ஒரு வாழ்வு இருக்கிறதென கரிசனம் கொள்ளும் எழுத்துக்கள் கலையின் அர்த்தத்தோடு முதன்மை பெறுகின்றன. கார்த்திகை பாண்டியனின் “ஒரு சாகசக்காரனின் கதை” என்கிற சிறுகதைத் தொகுப்பு பரிதவிக்கும் கனவுகளின் ஆத்மார்த்த வாழ்வுக்காய் தன்னைப் படையல் அளிக்கிறது.

 மனத்தின் மிகச் சுருக்கமான பகுதியோடு கொண்டிருக்கும் தொடர்பையே நான் என எண்ணி இயங்குகிறான் மனிதன்” எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் கூற்றினை அடிக்கடி நினைத்துக் கொள்ளும் வாய்ப்பை இந்த தொகுப்பிலுள்ள கதைகள் நல்கின. ஏனெனில் வாழ்வின் எண்ணற்ற சித்திரங்களாக உழன்று எரியும் மனிதர்களின் சிதையருகில் அமர்ந்திருந்து வெறிக்கின்ற கதைசொல்லியின் இயலாமை மானுட அல்லல். “நான்” என்கிற அகங்கார அடையாளத்தின் மீது கோடாரியால் பிளக்கும் காலத்தைத்தான்  கார்த்திகை பாண்டியன் கதைகள் தமது உலகெனக் கருதியுள்ளன. அனைவர் சுயமழிக்கும் லட்சியத்தோடும் இயங்கும் அரூபம் இறைவன் அல்ல. அது உலகமயமாக்கல் எனும் ஒரு பிசாசு. எல்லா அடையாளங்களும் அழிவுற்ற பிறகு, அது கடைசியில் மனிதர்களை விழுங்கிக் கொள்ளும் சுகத்திற்காக காத்திருக்கிறது.

காப்காவின் கரப்பான் பூச்சி படிமம் துர்சகுனத்தின் அபாய சமிக்ஞை. மனித குலம் இன்று எதிர்கொள்கிற மூச்சுத்திணறல்களை அந்தப் படிமம் அப்படித்தான் எதிர்வு கூறியது. அவ்வளவு வெறுமையும், அழுத்தமும் கூடிய நூற்றாண்டொன்றில் உருவான கரப்பான் பூச்சி நடப்பு நூற்றாண்டில் வண்ணத்துபூச்சியாக உருமாற்றம் அடைந்திருக்கிறது. கார்த்திகை பாண்டியனின் “வண்ணத்துப்பூச்சிக்கெல்லாம் ஒரே நிறம்” என்ற சிறுகதை வாசகனுக்கு அளிக்கும் பதற்றம் நேரடியானது அல்ல. மாறாக வெறுமையையும் கசப்பையும் தணிக்க இயலாது குறுகும் மனத்தின் எதிர்வினையை எங்ஙனம் எதிர்கொள்வது எனும் கொந்தளிப்பே எழும். இதுபோன்ற மனோபாவங்களைக் கொண்ட கதைகளைப் படைப்பது சாதாரணமல்ல.  ஒரு தனியுலகையே சவாலுக்கு அழைக்கும் திராணி வேண்டும். அது கார்த்திகை பாண்டியனுக்கு நிறையவே உண்டு.

ஒரு படைப்பாளி உளவியலை எவ்வாறு கையாள்கிறான் என்பது மிக முக்கியமானது. அதுகுறித்த அவனின் வெளிப்பாடுகள் ஒரு மரபை அடியொற்றி நிகழ்கிறதாவென ஆராய்வேன். பிராய்ட்டின் சில  கருத்துக்கள்  நமக்கு ஒத்துப்போகாதவை. காலங்காலமாக நிலம்புகுந்து கிளைவிரித்த மரபின் மீதே எம் இலக்கியங்கள் அமைகின்றன. துரதிஸ்டவசமாக நாம் இழந்த கதைகளும், நம்பிக்கைகளும், அறங்களும் ஏராளம். சட்டங்களின் முன்பாக குற்றமாக்கப்பட்ட சாமானியர்களை அர்த்தமான பாத்திரங்களாக ஆக்கியதில் ஆச்சரியப்பட வைக்கிறார் கார்த்திகை பாண்டியன்.

உதாரணாமாக “பிளவு” கதையில் வருகிற மாரிச்சாமி அண்ணாவின் பாத்திரம். எத்தனை தடவை சொன்னாலும் ஆறாத ரணங்களால் ஆனவை. எழுத்தாளர் ஜி.நாகராஜனின் “ஓடிய கால்கள்” கதையின் நீட்சி. “அடி, உதை, அவமானம், இன்னும் குறையாத போதை, இத்தனைக்கும் கீழே ஒரு வகையான விகாரமற்ற அமைதி, இத்தனையையும் பொறுத்துக்கொண்டு விட்டோமே என்ற உள்ளார்ந்த எக்களிப்பு, இவற்றின் விளைவால் உறங்கிக் கொண்டிருந்தான் கைதி” என்று ஜி.நாகாராஜன் எழுதியிருக்கிறார். இந்தக் கதையில் வருகிற மாரிச்சாமி தனது மகளைக் காணவில்லையென முறைப்பாடு அளிக்கச் சென்ற போது அடையும் அவமானமும் வதையும் மாபெரும் தத்தளிப்பு. ஆற்றமுடியாத சீழ்ப்புண். சாமானியனை வீழ்த்தும் அதிகாரத்தின் வன்முறையை சகிக்க இயலவில்லை. ஓடிய கால்களுக்கும் பிளவுக்குமிடையே சரியாக முப்பத்தாறு ஆண்டுகள் கரைந்திருக்கின்றன. ஆனால் மாரிச்சாமி போன்றவர்கள் அடைந்த காயங்கள் ஆறாத தழும்புகள்.

மனிதனின் உலகியல் ஆசைகளுக்கும் ஏக்கங்களுக்கும் இடையே அதிகாரம் பின்னிய கண்ணியில் இரையாகும் மாரியின் உளத்தவிப்பு நாகரீகமான லட்சிய மனம்கொண்ட மனிதர்களை தலைதாழ்த்தச் செய்கிறது. கார்த்திகைப் பாண்டியனின் இந்தக் கதை மிகமிக முக்கியமானது. ஏனெனில் இதில் நிகழக்கூடிய குற்றங்கள் ஆழமானவை. கலையம்சம் பிசகாது வாசக நேர்த்தியைக் கோரும் கதை. தமிழ்ச் சிறுகதைப் பரப்பில் விவாதிக்கப்படவேண்டிய அவதானிக்கப்படவேண்டிய கதையாகவே அறிவிக்கிறேன்.

“இருள் உலகின் தெய்வங்களுடன் நிரந்தரமாக போரிட்டபடியே வாழ்ந்தவர்” தாஸ்தோவெஸ்கி என்கிறார் நீட்சே. ஏனெனில் குற்றங்கள் பற்றிய அவரின் கலைத்துவச் செழுமை கண்டு வியக்காதவர் எவர்? கார்த்திகை பாண்டியன் வெறுமையும் கசப்புமாய் அலைதிரட்டும் கடலின் அலைகளில் குற்றங்களோடு மிதப்பவர்களைப் பார்க்கிறார். அவர்களில் அரிதிலும் அரிதாக சிலரை மட்டுமே தன்னுலகிற்குள் அழைத்து வருகிறார். அதன் விளைவாகவே இந்தத் தொகுப்பின் ஏனைய கதைகளிலும் நினைவுகளும், குற்றங்களும் தகிக்கின்றன. நினைவே பெருங்குற்றம் என்பதும் உண்மை.  “உயரமாய் நின்றிருந்த மரத்தேரின் சக்கரங்கள் இறந்தகாலத்தில் உறைந்திருந்தன” என்ற வரிகள் இந்தத் தொகுப்பின் முகவரியாகவே எனக்குத் தோன்றுகிறது. மூளைகள் பெருகிவிட்ட தமிழ்ச் சிறுகதைப் பரப்பில் உளத்துக்கு உற்றதுணையாகும் ஒருவித மீட்சியே இத்தொகுப்பு.

கார்த்திகை பாண்டியன்  சிறுகதை வடிவத்தின் மீது தீராத ப்ரியம் கொண்டவர். அவருடைய எந்தக் கதைகளிலும் பொருள் மயக்கமில்லை. விளக்கங்கள் அளிக்கும் கலைக்குதவாத அபத்தச் சேட்டைகள் இல்லை. வலிகளைச் சகித்து தீவிரமாகப் பாதிக்கப்பட்டு குரல் நெரியுண்டிருக்கும் சமகால வாழ்வின் கீழ்மையைப் பற்றி துல்லியமாக எழுதுகிறார். “நான் தோற்று விட்டேன். எல்லாவற்றிலும். வாழ்க்கையிலும். இதிலிருந்து என்னால் ஒருபோதும் மீள முடியாது.” எனும் குரல்கள் இந்தத் தொகுப்பின் எழுத்தாளருக்கு மட்டுமே கேட்கின்றன. ஏனெனில் இவை எல்லோரையும் வந்து சேர்வதில்லை. ஏன்? அதுவொரு அசாதாரண கொடை. தமிழ்ச் சிறுகதையுலகில் கார்த்திகை பாண்டியனின் பங்கு தொடர்ந்து சிறந்து விளங்கவேண்டுமென்பதே எனது இனிய அவா.

அகரமுதல்வன்

 

The post தேரின் நிழல் – நினைவின் குற்றம் first appeared on அகரமுதல்வன்.

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 19, 2023 10:30

December 17, 2023

போதமும் காணாத போதம் – 12

கிளிநொச்சி சந்தையில் மரக்கறிகளை வாங்கி அவசர அவசரமாக வெளியே வந்த “பச்சை” இரணைமடுவுக்குச் செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்தார். உளமழுத்தும் இன்னல் முகம் முழுதும் நின்றது. வியர்வையில் தோய்ந்திருந்தார். இன்னுமிரண்டு நாட்களில் பயணம் சரிப்பட்டால் பிள்ளைகளைக் காப்பாற்றி விடமுடியுமென்ற வேண்டுதல். பச்சைக்கு அருகில் வந்தமர்ந்தார் கருவாட்டி யாபாரி மாசிலா. அவரின் பொய்க்கால் நன்றாகப் பழுதடைந்திருந்தது. வெண்புறா நிறுவனத்தில் புதிய பொய்க்கால் வேண்டிப் பதிவு செய்துள்ளதாக பச்சையிடம் தெரிவித்தார். இரணைமடு பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய பச்சை, ஜன்னல் வழியாக மாசிலாவைப் பார்த்தார். மாசிலா தனது பொய்க்காலை சரிப்படுத்தி கொஞ்சம் ஆசுவாசமாக அமர்ந்திருந்தான்.

வீட்டில் நின்ற இரண்டு கிடாய்களுக்கும் தவிடு கரைத்து வைத்த “கொண்டோடி” சுகந்தா படலைக்குள் நுழையும் பச்சையை பார்த்தாள். புருஷனின் நடையில் ஏதாவொரு குழப்பமிருப்பதாக உணர்ந்தாள். “என்னன, ரத்தச் சோகை வந்த ஆக்கள் மாதிரி தெம்பில்லாம நடக்கிறியள்” என்று கேட்டாள். பச்சையிடம் பதிலில்லை. வாசலிலிருந்த வாளி நீரில் கால்களைக் கழுவி, வீட்டிற்குள் நுழைந்தார். இரண்டு கிடாய்களும் தவிட்டுத் தண்ணியை மூசி மூசி உள்ளிளுக்கும் சத்தம் மத்தியான வெயிலோடு கூடியிருந்தது. கறுத்து மினுமினுத்து நன்றாக உயர்ந்து நிற்கும் முதல் கிடாய் சித்திரனுக்கும், செவி நீண்ட கறுப்பு நிறத்திலான துடியான மற்ற கிடாய் அப்பனுக்குமென பாலத்தடி சிவன் கோவிலுக்கு நேர்த்தியாக வளர்த்தாள்.

ஆனால் பிள்ளைகளை காப்பாற்ற தெய்வத்தால் முடியாதென்றும், அது தெய்வத்தையே படைத்த மனுஷனாலேயே ஆகும் காரியமெனவும் பச்சை நம்பினார். தன்னிடமிருந்த பணத்தையும், சொத்துக்களையும் மனம் நிறுத்தி எண்ணினார். கனகாம்பிகைக் குளத்தடியில் ஏக்கர் கணக்கிலிருந்த தென்னந்தோப்பும், முறிகண்டியில் தரிசாகக் கிடக்கும் எழுபது ஏக்கர் நிலமும் வேண்டாமெனத் தோன்றியது. கையிருப்பிலிருந்த பணம் பல லட்சங்கள். வங்கியில் வைப்பிலுள்ள பணத்தையும் கணக்குப் போட்டார். தமிழீழ வைப்பகத்தில் இருக்கிற பணத்தை எடுப்பதில்லை என முடிவு செய்தார். சொத்துக்களை விற்பது இயக்கத்திற்கு தெரிந்தாலும் ஆபத்து நேரும். எதுவும் வேண்டாம். “உயிர். அந்த பொக்கிஷத்தை மட்டும் மீட்டுவிட்டால் போதுமானது. “எத்தனை காலம் இந்த மயிரெல்லாம் நீடிக்கப்போகிறது. இவர்கள் எல்லாம் அழிந்து போகுமொரு நாள் வராமலா போகும். நிலத்துக்காக சாவதெல்லாம் விஷர்த்தனம். ஆயுத வெறி. இத்தனை வசதிகளோடு இருக்கும் எனது பிள்ளைகள் ஏன் துவக்கெடுத்து சண்டை செய்ய வேண்டும்?” என்று கற்பூரத்தைக் கொளுத்தி பாலத்தடி சிவனை வழிபட்டார் பச்சை.

“கொண்டோடி”சுகந்தாவிடம் பச்சைத் தண்ணீர் கேட்டால் கூட கிடைக்காது. கோவில் உண்டியலில் ஒரு ரூபாய் போட்டுக்கூட சனங்கள் பார்த்ததில்லை. இயக்கம் சனங்களிடம் நகையும், பணமும் கேட்ட காலத்தில் தன்னுடைய இரண்டு தோட்டையும் கழற்றிக் கொடுத்ததாக ஒரு வரலாறு சொல்லுவாள். ஏற்பாடுகள் எதனையும் சுகந்தாவிடம் பச்சை சொல்லவில்லை. அவளை நம்பமுடியாது. யாரிடமாவது வாய்தவறிச் சொல்லவும் செய்வாள். சித்திரன் பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். அப்பன் பதினோராவது வகுப்பு. இருவரும் நல்ல கெட்டிக்காரர்கள். இந்தியாவிற்கு அழைத்துச் சென்று தனது பிள்ளைகளை பெரிய படிப்பெல்லாம் படிக்க வைக்கவேண்டுமென பச்சை ஆவலாதிப்பட்டார். முதன்முதலில் சித்திரனுக்கு தனது திட்டத்தைச் சொல்லலாமென பச்சை உறுதி பூண்டார். வீட்டுக்குப் பின்னாலுள்ள மாந்தோப்பில் கட்டிலில் உறங்கியிருந்த சித்திரனை தட்டியெழுப்பினார். எப்போதுமற்ற பழக்கமொன்றை எதிர்கொண்ட திகைப்பில் கொஞ்சம் நேரம் கதையாமல் இருந்தான். ஆனாலும் பச்சை கதைக்கத் தொடங்கினார்.

“சித்து, நாங்கள் இஞ்ச இருந்து வெளிக்கிடலாம், இயக்கம் நல்லா இறுகப்போகுது. பிள்ளையளை பிடிச்சு போருக்கு படைக்கப்போறாங்கள். நான் எல்லா ஏற்பாட்டையும்  செய்திட்டன். நாளைக்கு பின்நேரமாய் இஞ்சயிருந்து வெளிக்கிட்டு போய்டலாம். பிறகு கடலால இந்தியாவுக்கு”

“அப்பா, உங்கட திட்டம் சரி வருமே, ஏதேனும் தகவல் கசிஞ்சால் கூட இயக்கம் மன்னிக்காது. எல்லாத்தையும் பறிச்சுப்போட்டு உள்ள தள்ளிடுவாங்கள்”

சித்திரன் ஒத்துக்கொண்டது நல்ல சகுனமென எண்ணினார். பச்சைக்கு கொஞ்சம் தெம்பு வந்தது. “அதைப் பற்றி நீ கவலைப்படாத. கொம்மாவை மட்டும் சம்மதிக்க வைச்சுப் போடு. அதுதான் இப்ப ஒரே தலையிடி.” என்றார். “நாங்கள் எல்லாரும் வெளிக்கிடப் போகிறம் எண்டால் அம்மா இஞ்ச தனிய இருப்பாவே, வரத்தானே வேணும்” காலில் ஒட்டியிருந்த மண்ணைத் தட்டிவிட்டு, நான் அம்மாவிட்ட கதைக்கிறன்” என்றான் சித்திரன்.

அன்றிரவு வீட்டில் கடுமையான வாக்குவாதங்கள் நிகழ்ந்தன.  “இத்தனை சொத்துக்களையும், நிலங்களையும் அம்போவிண்டு விட்டிட்டு ஆள்தெரியாத ஊருக்கு எதுக்கு ஓடோணும். செத்தால் சாவம். எல்லாற்ற பிள்ளையளுக்கும் நடக்கப்போறது தானே எனக்கும் நடக்கப்போகுது. நான் அதைத் தாங்கிக் கொள்வன். ஆனால் இந்த ஊரை விட்டு என்னால வர ஏலாது” சுகந்தா மறுத்தாள். அப்பனுக்கு எந்த விருப்பும் வெறுப்பும் இல்லை. அவன் எல்லாவற்றையும் அமைதியாக கவனித்துக் கொண்டிருந்தான். “சுகந்தா நாட்டில நடக்கப்போறது என்னெண்டு தெரியாமல் கதையாத, இஞ்ச இருக்கிற ஒருத்தரும் மிஞ்சப்போவதில்லை. அந்த நிலைமைக்குத் தான் இவங்கள் ரெடியாகுறாங்கள்”பச்சை சொன்னார்.

“உயிர் சாம்பலாய்ப் போனாலும் இந்த மண்ணில போகட்டும். இவ்வளவு சனமும் இஞ்ச இருக்க நாங்கள் மட்டும் சாகப்பயந்து ஓடித்தப்புறத நினைக்க குமட்டுது. அவமானம்”

“எடியே வேஷை, உனக்கு அப்பிடியென்னடி கரப்பன் வியாதி. இஞ்ச ஆரோடையோ படுக்க நாள் பார்த்து வைச்சிருக்கிறியோ. நான் என்ன சொல்லுறனோ. அதைச் செய்”

அப்பன் வெகுண்டு துடித்தான். அவனது கை நரம்புகளில் கொலைத்துடி எழுந்தது. பச்சையை நோக்கி நடந்து போய் பளார் என்று கன்னத்தில் அறைந்தான். சித்திரன் அதிர்ச்சி அடைந்து அப்பனை இழுத்துப் பிடித்தான். பச்சை கன்னத்தைப் பிடித்தபடி பார்வை மங்க அமர்ந்தார். உடல் சிவந்து தளும்பி அழுதார். சுகந்தா அப்பனை அரவணைத்து நின்றாள்.

மாந்தோப்பிலிருந்த கட்டிலில் அமர்ந்திருந்த பச்சையிடம் “ அப்போய், இவையள் வராட்டி என்ன நீங்களும் நானும் வெளிக்கிடுவம்” சித்திரன் சொன்னது அவ்வளவு தீவிரமாயிருந்தது. அது பச்சையின் உடலில் எரிந்தடங்க மறுத்த காயத்தின் எரிச்சலுக்கு குளிர் பரப்பியது.  ஆனாலும் வேண்டாமென்று மறுத்தார். எல்லாரும் மனம் ஒத்து வெளிக்கிடுவம். அது விரைவிலேயே நடக்கும். பொறுத்திருப்பம்” என்றார். “அதுக்குள்ள தமிழீழம் கிடைச்சால் என்ன செய்யிறது” சித்திரன் கேட்டான். பச்சை தன்னுடைய கன்னத்திலிருந்த கையை எடுத்து “எழும்பிப் போடா மடப்புண்டையாண்டி” என்று ஏசினார்.

ஒரு சில மாதங்களில் வன்னியில் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்தன. “புலிகள் படையில் சேர்க” என்ற பிரச்சாரங்கள் வீதிகள் தோறும் நிகழ்ந்தன. பள்ளிக்கூடம் சென்று வருகிற இளவட்டங்களை நிறுத்தி வைத்து போராட்டத்தின் அவசியத்தையும் இக்கட்டையும் பிரச்சாரப் பிரிவு போராளிகள் முன்வைத்தனர். கதைத்து விளங்கவைத்து இயக்கத்தில் இணையுங்கள் என்பது மேலிடத்து ஆணையாம். சுகந்தாவுக்கு சில சம்பவங்கள் அச்சத்தை ஏற்படுத்தின. சித்திரன் நாளும் பொழுதும் தாயிடம் ஒப்புக்கொள்ளல் வாங்கவே நேரம் செலவழித்தான்.  பச்சை முல்லைத்தீவுக்குச் சென்று ஓட்டியைச் சந்தித்து வந்தார். ஏற்கனவே நடந்ததைப் போல ஏமாற்றம் எதுவும் இந்தத் தடவை நிகழாதென ஓட்டிக்கு உறுதியளித்தார்.

சுகந்தா ஆடுகளையும் வீட்டிலுள்ள சில பொருட்களையும் சொந்தக்காரர்களிடம் ஒப்படைக்க  விரும்பினாள். “எதுவும் செய்ய வேண்டாம். நாங்கள் இல்லையென அறிந்த பிறகு மாமாவே  எல்லாவற்றையும் வந்து எடுத்துவிடுவார்” என்றான் சித்திரன். கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் பச்சை இறங்கினார். அங்கிருந்து இரணைமடுவுக்கு செல்லும் பேருந்துக்காக காத்திருந்தார்.

சித்திரன் தன்னுடைய நண்பர்களோடு கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தான். அப்பன் வீரபத்திரர் கோவிலுக்குப் பின்புறமுள்ள பெரிய கல்லொன்றில் அமர்ந்திருந்தான். சுகந்தா தன்னுடைய நகைகளை எடுத்து ஒரு பெரிய தலையணைக்குள் பதுக்கினாள். தங்கத் தலையணை. அதற்கு மேல் எத்தனையோ மெழுகுத்தாள்களால் அரண் அமைத்தாள். எல்லோருக்குள்ளும் நெடிய வலி குறுக்குமறுக்காக தையலிட்டது. எதன்பொருட்டு நிலம் பிரிந்தாலும் வருந்துயர் ஆறாதது.

அப்பனுக்குப் பின்னால் வந்து நின்றாள் நறுமுகை. அவளது கைகளில் பனங்காய் பனியாரம் நிரம்பியிருந்தது. நிலத்தின் வாசனையோடு கமழும் பொழுது. அப்பன்  அவளை இறுகக் கட்டியணைத்து முத்தமிட்டான். அவளுடைய கைகள் தளர்ந்தன. மண்ணில் சிறுமுலைக்காம்புகள் தோன்றியதைப் போல பனங்காய்பனியாரம் சிதறுண்டன. கல்லின் மீது யாக்கைகள் கனன்றன. அமுதுண்ணும் பொலிவுடன் வண்டுகள் பறந்தன. அப்பனின் மூச்சில் சிவந்த உதடுகளால் நறுமுகை தாகம் பெருகி மிடறு எச்சில் விழுங்கினாள். அப்பனின் தவிப்புக்கூடியது. அவன் சொன்னான் “ நாங்கள் இஞ்ச இருந்து தப்பியோடப் போகிறம்”

“எங்க”

“இந்தியாவுக்கு. அப்பா ஏற்பாடு செய்திட்டார். படகில போகப் போகிறம்”

“உங்கட குடும்பத்துக்கு  என்ன விசரே, கடல் முழுக்க இயக்கம் தான். அலைகளையே எண்ணிக் கொண்டிருப்பினம். இதில நீங்கள் எங்க தப்பி, எங்க போகப்போறியள்”

“தெரியேல்ல, நடக்கிறது நடக்கட்டும். எல்லாரும் போய், நான் மட்டும் நிண்டால் இயக்கம் என்னைத்தான் சிறையில அடைக்கும்”

“நீ, போய் இயக்கத்திட்ட சொல்லு. அப்படியெண்டால் உனக்கு தண்டனை இருக்காது”

“அய்யோ, குடும்பத்தைக் காட்டி குடுக்கச் சொல்லுறியோ, அம்மா பாவம்”

“அப்ப, கடலில போய் சாகப்போறாய். அப்பிடித்தானே?”

“நீ இயக்கத்தில போய் சொல்லிப்போடாத, எனக்கு பயமாயிருக்கு. எதோ ஒரு குறுகுறுப்பில உன்னட்ட சொல்லிட்டேன்”

“எனக்கு அது வேலை கிடையாது. ஆனால் உங்கட அப்பா, இதுமாதிரி திட்டத்தில இருக்கிறார் என்று இயக்கத்துக்கு தெரியாமல் இருக்காது. ஊரில இருக்கிற முகவர்கள் ஆரேனும் மணந்து பிடிச்சிருப்பினம்”

“எப்பிடி உறுதியாய் சொல்லுறாய் நறுமுகை”

“இஞ்ச எதையும் ஆரும் ரகசியமாய் செய்து தப்ப ஏலாது. ஏனென்டால் இயக்கத்தை விடவும் அதைச் செய்ய உலகத்தில ஆளில்லை. ஆனா நீ உந்தப் பயணத்தில சேராத. எனக்காக மட்டுமில்ல, உனக்காகவும் சொல்லுறன்” என்று சொல்லிய நறுமுகை மண்ணில் விழுந்து கிடந்த பனங்காய் பணியாரங்களை ஊதி ஊதி அவனுக்கு தீத்திவிட்டாள். “இவ்வளவு உருசையாய் கிடக்கு” அப்பன் கேட்டான், “மண்ணில இருந்தெடுத்தால” என்ற நறுமுகை அங்கிருந்து புறப்பட்டாள்.

அப்பன் அதே கல்லிலேயே அமர்ந்திருந்தான். இரவு முழுவதும் அவனைக் காணாது தேடிய சித்திரன் அதிகாலையில் அப்பனைக் கண்டான். வீட்டிற்கு தன்னால் வரமுடியாதென மறுத்து அங்கேயே அமர்ந்தான். சுகந்தா சென்றழைத்தும், பச்சை கெஞ்சிக் கேட்டும் வரப்போவதில்லையென உறுதியாக கூறிவிட்டான்.

குறிப்பிட்ட நாளில் மூவரும் வீட்டிலிருந்து புறப்பட்டனர். அப்பன் அதே கல்லிலேயே அமர்ந்திருந்தான். சுகந்தா சென்று பயணம் சொன்னாள். அவன் கைகளை காட்டி செல் என்றான். இரண்டு நாட்கள் வெவ்வேறு இடங்களில் பதுங்கியிருந்த மூவரும் கடற்கரைக்கு ஓட்டியொருவரால் அழைத்துச் செல்லப்பட்டனர். பச்சை ஒரு தலைக்கு ஐம்பதாயிரம் ரூபாய்ப் படி பணத்தை அளித்தார். படகு இந்தியாவை நோக்கிப் புறப்பட்டது. அடுத்தநாள் காலையிலேயே படகு ஆளற்ற கரையை அடைந்தது. கண்டல் செடிகளும் தென்னைகளும் நிரம்பி நின்றன.

“வந்திட்டமா” பச்சை ஓட்டியிடம் கேட்டார்.

“ஓம் அண்ணே, இன்னும் கொஞ்சத் தூரம் நடந்து போனால் ராமேஸ்வரம் கோவிலே வந்திடும். இறங்குங்கோ. அக்கா பார்த்து இறங்க வேணும்”  என்றான் ஓட்டி. சித்திரன் பாய்ந்து இறங்கி தாய்க்கு கைகொடுத்தான். கடல் மணலில் புதையுண்ட பாதங்களை முன்நகர்த்தாமல் பின்நோக்கித் திரும்பி அவள் இரு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி “என்ர பாலத்தடி சிவனே, அப்பனைக் காப்பாற்றிப் போடு” என்று வணங்கினாள்.

கொஞ்சத் தூரத்தில் நடந்து சென்றதும் ஓட்டி சொன்னதைப் போலவே விசாரணை அதிகாரிகள் அவர்களை அகதிகளாக பதிவு செய்தனர். பிறகு அவர்களை கூட்டிச் சென்றதொரு வாகனத்தில் ஏற்றினார்கள். வாகனம் சில நிமிட பயணத்துக்குப் பின்பு வீதிக்கு வந்தது.  முல்லைத்தீவு என்று கடைப்பலகைகள் தொங்கின. பச்சை அதிகாரிகளிடம் கேட்டார் “ இஞ்சையும் ஒரு முல்லைத்தீவு இருக்கோ”

“இருக்கு. அதுக்கு நீங்கள் விசுவமடுவாலையே வந்திருக்கலாம். ஏன் இப்பிடி சுத்தி படகில வந்தனியள்” – அதிகாரியொருவர் கேட்டார்.

பச்சைக்கு வியர்த்துவிட்டது. சித்திரனுக்கு நடுங்கத் தொடங்கியது. சுகந்தா தனது கைகளை மேலே உயர்த்தி என்ர அப்பனே, உன்னட்டையே கூட்டிக்கொண்டு வந்திட்டாய்” என்றாள். பச்சை அழுது புலம்பி அவர்களின் கையப்பிடித்து “தம்பியவே என்னை மன்னிச்சுக் கொள்ளுங்கோ” என்றார். “இயக்கத்தைச் சுத்திப் போட்டு போகலாமெண்டு நினைச்சியளோ” என்று கேட்டார்கள். “ ஓம். அதுக்கு என்ன, பிள்ளையள அம்மா அப்பா ஏமாத்தக் கூடாதோ?”

“அம்மா, நீங்கள் வீட்டுக்கு போகலாம். இவர்களை மட்டும் விசாரணை செய்து விட்டு அனுப்பி வைக்கிறோம்” என்றார்கள்.

சுகந்தாவை இன்னொரு இயக்க வாகனத்தில் வீட்டில் கொண்டே இறக்கினார்கள். அவள் நேராக அப்பன் அமர்ந்திருக்கும் கல் நோக்கி ஓடினாள். அப்பன் அப்படியே அமர்ந்திருந்தான்.

“பிள்ளை, அம்மா வந்திட்டன். எழும்பி வா. இனி எங்கையும் போகேல்ல”

“நானும் தான். இனி இதுதான் என்னோட இடம். என்னைப் பார்க்க ஆர் வந்தாலும் இங்க வரட்டும்” என்றான்.

இயக்கத்தினரால் விசாரணை செய்யப்பட்ட பச்சைக்கும் சித்திரனுக்கும்  ஆறுமாதம் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.  தண்டனைப் பணமாக லட்சங்கள் அளிக்கப்பட்டன. பச்சை சிறைக்குள் தனது ஓட்டியை ஒருநாள் கண்டார். புலிச்சீருடையணிந்த அவனது இடுப்பில் கைத்துப்பாக்கி பட்டியில் இருந்தது. அவனுக்குப் பின்னால் பொய்க்காலால் தாண்டித் தாண்டி கருவாட்டு யாபாரி மாசிலா புலிச்சீருடையோடு வந்திருந்தார். பச்சைக்கு நடுநடுங்கியது. மாசிலாவை அழைத்த பச்சை “நீயும் இயக்கமே, என்னட்ட ஒருநாளும் சொன்னதேயில்லையே” என்றார். உங்களுக்கும் எனக்குமிடையே கருவாட்டில் விலைகுறைப்பதற்கு தானே பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. கருவாடு வாங்கிற எல்லாரிட்டையும் நான் இயக்கமெண்டு சொல்லி என்ன நடக்கப்போகுது “ என்றார்.

கல்லின் மீது அமர்ந்திருந்த அப்பன் ஒரு நாள் காணாமல் போனான். நறுமுகையையும் காணவில்லை. ஊரிலுள்ளவர்கள் தேடும் போது  இருவரும் மறுகரையில் படகை விட்டு கீழே இறங்கினர்.  வேதாரண்யம் கடற்கரையில் மீனவர்கள் சிலர் அவர்களைக் கண்டனர். ஓடிச் சென்று அரவணைத்தனர். அப்பனும் நறுமுகையும் அவர்களிடம் குடிப்பதற்கு தண்ணீர் தாருங்கள் எனக்கேட்டனர். அளிக்கப்பட்ட நீரை அள்ளித்தரும் மீனின் வாசனையோடு பருகினர்.

“இருவரும் கணவன் மனைவியா”

“ஓம்”

“சின்னஞ்சிறுசுகளாக இருக்கிறீர்களே”

“எங்கள் நாட்டில் எல்லோரும் சீக்கிரமாக வளர்ந்து விடுவோம்”

“ஏன்”

“துவக்கேந்த வேண்டும்” என்றான் அப்பன்.

 

 

The post போதமும் காணாத போதம் – 12 first appeared on அகரமுதல்வன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 17, 2023 10:30

December 15, 2023

புத்துயிர்ப்பு

அன்பின் அகரமுதல்வனுக்கு!

இந்த ஆண்டின் விஷ்ணுபுரம் எழுத்தாளர் கலந்துரையாடல் அமர்வில் வாசு முருகவேல் அழைக்கப்பட்டிருக்கிறார். அவருடைய “கலாதீபம் லாட்ஜ்” நாவலை வாசித்தேன். சொல்லிக் கொள்ளும்படியான ஆக்கமாக அதில்லை. ஆனால் “மூத்த அகதி” நாவல் குறிப்பிடத்தகுந்ததே. உங்களுடைய அவதானிப்பில் வாசு முருகவேலின் நாவல்களின் முக்கியவத்தும் என்ன?

ஜாகிர்

அன்பின் ஜாகிர்! எழுத்தாளர் வாசு முருகவேல் ஈழர் இலக்கியத்தில் ஒரு புத்துயிர்ப்பான நம்பிக்கை. அவருடைய முதல் நாவலான “ஜெப்னா பேக்கரி” தொட்டு மூத்த அகதி வரை வாசித்திருக்கிறேன். இந்த ஆண்டு வந்த “ஆக்காண்டி” நாவலை இன்னும் வாசிக்கவில்லை. வாசு முருகவேலின் எழுத்துக்கள் பிற ஈழ இலக்கியப் படைப்புக்களில் இருந்து வித்தியாசமானது. ஏனெனில் கொதிநிலையான போரையோ, போராட்டத்தின் உணர்வுத் தளங்களையோ அவர் படைப்புக்கள் கொண்டிருக்கவில்லை. மாறாக எவரும் தொடத்துணியாத அரசியல் சம்பவங்களையும், காலங்களையும் எழுதுகிறார். “ஜெப்னா பேக்கரி” நாவல் ஏற்படுத்திய அதிர்வுகள் கவனிக்கத்தக்கது. “மூத்த அகதி” நாவல் புலம்பெயர்வு இலக்கியத்தில் ஒரு சிறந்த முயற்சி. வாசு முருகவேலின் “கலாதீபம் லாட்ஜ்” நாவல் பற்றிய உங்கள் மதிப்பீட்டினை புரிந்து கொள்கிறேன். ஆனாலும் அந்த நாவலில் தத்தளிக்கும் இரண்டு காலங்களும், நிலங்களும் கடல்வழியாக பயணம் செல்லும் சம்பவங்களும் முக்கியமானவை. அது எழுதப்பட்ட விதம் சார்ந்து சில குறைகள் இருக்கின்றன. அதனை சுட்டிக்காட்டலாம். ஆனால் அது பொருட்படுத்த வேண்டிய நாவல் தான் என்பது என்னுடைய தரப்பு. எழுத்தாளர் வாசு முருகவேல் ஈழ இலக்கிய நிரையில் தனக்கென ஒரு இடத்தை உண்டாக்கியிருக்கிறார். அவருடைய நாவல்களின் முக்கியத்துவம் பற்றி விரிவாக எழுதும் நாளொன்றுக்காக நானும் காத்திருக்கிறேன். இந்தப் பதிலை எழுதும் போதும் அதற்கான தேவை இருப்பதாகவே உணர்கிறேன். நன்றி

The post புத்துயிர்ப்பு first appeared on அகரமுதல்வன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 15, 2023 13:15

ஊண்

01

அப்படியொரு போதும்

மண்டியிடேன்.

வேண்டுமானால்

உனக்கொரு போர் வாளை

தருவிக்கிறேன்

நிமிர்ந்து நிற்கும்

என் சிரசை

கொய்.

02

பூமியின் மகரந்தம்

என் ஊண்.

புழுக்கள்

வண்ணத்துப்பூச்சிகளாகும்.

 

03

இருளை அழைத்து வருகிறவர்கள்

என்னிடம் விட்டுச் செல்கிறார்கள்.

எனது பெருவிரலில்

சூரியன் எழுவான்.

 

 

 

The post ஊண் first appeared on அகரமுதல்வன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 15, 2023 07:45

December 13, 2023

ஈழமும் சைவமும்

அன்புள்ள அகரமுதல்வனுக்கு!

வணக்கம். தங்களின் சமீபத்திய பேட்டியை  (திரு. பரிசல் கிருஷ்ணா அவர்களால் எடுக்கப்பட்டது ) கேட்க கிடைக்கப்பெற்றது என்னின் நல்லூழ் என்றே சொல்வேன். ஆசிரியர் ஜெயமோகன் தளத்திலும், ஸ்ருதி டிவியிலும் தங்களைப் பற்றி மேலோட்டமாக அறிந்திருந்தாலும் இந்தப் பேட்டியின் வழியாக நீங்கள் யார் என அறிந்தேன். மிக்க நன்றி. நான் இவர்களை மட்டுமாவது வாசித்துவிட வேண்டும் என நினைத்திருந்த எழுத்தாளுமைகளில் நிச்சயம் நீங்களும் ஒருவராக ஆகிவிட்டிருக்கிறீர்கள். இந்த நேரத்தில் உங்களை அவரைப் போல நன்நெறியும் தீவிரமும் உள்ளவர் நீங்கள் என சிலரின் பெயர் குறிப்பிட்டு  சொல்ல நினைத்தேன். ஆனால் வேண்டாம் . நீங்கள் நீங்களாகவே இருப்பது எனக்கு மகிழ்ச்சி . பரிசல் கிருஷ்ணாவின் கேள்விகளும் தங்களின் பதில்களும் ‘போர் தெரிந்த வீரர்கள் இருவர் தனிப்பட்ட காழ்ப்பில்லாமல் போர் புரிவதைப்’  போலிருந்தது. எனது முதல் கடிதத்தின் வாயிலாக சில கேள்விகளையும் தங்களிடம் சமர்ப்பிக்கிறேன் . நேரம் இருப்பின் பதிலளிக்க வேண்டுகிறேன்

1) ஈழ வரலாற்றை அரசியல் குறுக்கீடு இல்லாமல் அறிந்து கொள்ள நூல்கள் எவை ?

2) தமிழ் பக்தி இலக்கியங்களை அறிய தாங்கள் பரிந்துரைக்கும் நூல்கள் / பாடத்திட்டம் என்ன ?

உங்களின் பேச்சை கேட்டவன் என்ற முறையில் நான் அவதானித்தது ‘நீங்கள் ஒரு சட்டகத்துக்குள் அடைபடக்கூடாதவர் ‘ அது ஈழ எழுத்தாளர் என்று கூட! இது எனது தாழ்மையான தனிப்பட்டக்  கருத்து ‘காதுள்ளோர் கேட்க கடவர் ‘ என நீங்கள் அதில் சொல்வீர்கள். உண்மையிலேயே அது உங்கள் பேட்டிக்கும் சரியாக பொருந்தும். கண்ணுடையோர் தங்களை படிக்கக் கடவர்.

அன்புடன்

கே.எம். ஆர் .விக்னேஸ்

 

அன்பின் கே. எம்.ஆர். விக்னேஸ்!

தங்களின் முதல் கடிதம் அவ்வளவு மகிழ்ச்சியைத் தருகிறது. எழுத்தாளராக இருப்பதில் அடையும் மேன்மை இதுபோன்ற கடிதங்களின் வழியாகவும் அமைகிறது. நீங்கள் சொல்வது போலவே அந்த நேர்காணல் பலரால் குறிப்பிடப்படுகிறது. பரிசல் கிருஷ்ணாவின் கேள்விகள் நல்ல நோக்கத்திலிருந்து பிறக்கின்றன. வாசகர்களுக்கு எழுத்தாளரை இன்னும் இன்னும் அணுக்கமாக, துலக்கமாக அடையாளப்படுத்தவே இந்த நேர்காணல் தொடர். எழுத்தாளர்களை தொடர்ந்து பேட்டி காணும் பரிசல் கிருஷ்ணாவுக்கு எனது பாராட்டுக்கள்.

ஈழ வரலாற்றை அரசியல் குறுக்கீடு இல்லாமல் அறிய முற்படுவது சாத்தியமற்றது. ஏனெனில் வரலாறு நெடுகிலும் அரசியலால் சூழப்பட்டதொரு தீவு அது. ஈழம் என்கிற சொல்லாடலை இன்றுவரை தமது அரசியல் நிலைப்பாடுகளால் உச்சரிக்க மறுக்கிற பலருண்டு. ஆதலால் ஈழம் என்றுமே அரசியல் அர்த்தம் கொண்டதொரு சொல்லாகவே முதன்மை பெறுகிறது. இன்றுள்ள தலைமுறைக்கு இதுபோன்ற அறிவுத் தேடல்கள் இருக்கவேண்டுமென விரும்புகிறேன். ஏனெனில் நீங்கள் கேட்டிருக்கும் இரண்டு கேள்விகளும் வேறுவேறானவை அல்ல. இரண்டுமே ஒன்றோடொன்று பிணைந்தவை. “சைவமும் தமிழும்” என்பது காலனியவாதிகளை எதிர்த்த ஈழத்தமிழர்களின் விடுதலைப் பேரிகையின் கோஷம்.  இதுபற்றி வேறொரு சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன்.

நான் சில புத்தகங்களை உங்களுக்கு பரிந்துரை செய்கிறேன்.  இவற்றினை வாசித்தாலே ஒட்டுமொத்த இலங்கைத் தீவின் வரலாற்றையும் அரசியல் சம்பவங்களோடு அறிந்து கொள்ளமுடியுமெனக் கருதுகிறேன்.  ஈழ வரலாற்றை அறிய முற்படுவோருக்கான சில அடிப்படையான புத்தகப் பரிந்துரைகளை தருவிக்கிறேன். இந்த புத்தகங்கள் விஸ்தீரணமான சித்திரத்தை வழங்கும் என்பதே துணிபு.

1 ~ இலங்கை வாழ் தமிழர் வரலாறு  ~ பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை

2 ~ ஈழத்தவர் வரலாறு ~ கலாநிதி க. குணராசா

3 ~ இலங்கைத் தமிழர் யார்? எவர்? – அறிஞர் கா. சிவத்தம்பி

4 ~ வரலாற்றில் வாழ்தல் –  எழுத்தாளர் எஸ்.பொன்னுத்துரை

5 ~ யாப்பு – டொனமூர் முதல் சிறிசேனா வரை –  அறிஞர் மு. திருநாவுக்கரசு

6 ~  சமஷ்டியா? தனிநாடா? – அறிஞர் மு. திருநாவுக்கரசு

7 ~ இலங்கைத் தமிழரின் அரசியல் வரலாறு –  அறிஞர் மு. திருநாவுக்கரசு

8 ~ இலங்கை இனப்பிரச்சனையின் அடிப்படைகள் – அறிஞர் மு. திருநாவுக்கரசு

9 ~ இந்து சமுத்திரப் பிராந்தியமும் இலங்கை இனப்பிரச்சினையும் ~ உதயன் –விஜயன்

10 ~ போரும் சமாதானமும் – கலாநிதி அன்ரன் பாலசிங்கம்

11 ~ ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம் – சி. புஸ்பராஜா

தமிழ் பக்தி இலக்கியங்கள் என்பது பெருவுலகு. அங்கே நானறிந்ததெல்லாம் சைவப் பதிகங்களை மட்டுமே. அதனை ஒரு மரபார்ந்த கற்கை நெறியில் பெற்றேன் என்ற பெருமிதமும் உண்டு. ஆனால் வேறு பக்தி இலக்கியங்கள் பற்றி விளக்கம் அளிக்கும் அருகதை எனக்கில்லை. வைணவர்களின் நாலாயிரத் திவ்ய பிரபந்தம் குறித்து நவீன மனத்தோடு அதனது அழகியல் செழுமைகளை உணர்த்தவல்லவர் இலக்கியத் திறனாய்வாளர் ஜா. ராஜகோபாலன். அவருடைய உரையொன்றை கேட்டிருக்கிறேன். ஆழ்வார்களின் மொழியழகில் மயக்கமுற்று அமர்ந்திருக்கிறேன். ஆனாலும் என் சைவ மனம் விழித்துக் கொண்டு “என்னப்பன் எம்பிரான் எல்லார்க்குந்தான் ஈசன் ” என்று பாடத்தொடங்கிவிட்டது.

சைவ பக்தி இலக்கியங்களில் தேவராப் பதிகங்கள் முதன்மையானவை. பதிகங்களை வாசிக்கவோ படிக்கவோ  சிறந்த பொழிப்புரைகள் கொண்ட புத்தகங்களே போதுமானவை. ஆனால் அதனோடு உறவைப் பேண, தொடர்ந்து அமைய பக்தியுடன் கூடிய பயிற்சி தேவை. பதிகங்களை இசைக்கும் போதே மனத்துள் மொழியூறுகிறது. தெய்வம் எழுகிறது. கண்ணீர் ததும்பும் அருங்கணங்கள் மொழியால் இறைவனுக்குப் படைக்கப்படுகின்றன. நான் முறையாக திருமுறைகளை கற்ற நாட்களில் என் புலன்களோடு இருந்த சொற்கள் இனியவை மட்டுமே. சைவ அறநெறி வகுப்புகளில் பதிகங்களை இசைக்கும் போது கடைப்பிடிக்கப்படவேண்டிய விதிமுறைகள் சில இருந்தன. பண்ணிசை வகுப்புக்களில் தாளம் பிசகிப் பாடினால், அப்பருக்கு நேர்ந்த சூலை நோய் எனக்கு வந்துவிடுமென அஞ்சிய நாட்களுமுண்டு. எல்லாமும் பக்தியாலும் மொழியாலும் உண்டான உணர்வுகளே. ஆசான்களும் ஓதுவார்களும் அப்படித்தான் என்னைப் பதியமிட்டனர்.

திருமுறைகளை பல ஓதுவார்கள் இசைத்து செயலி வழியாக பதிவேற்றம் செய்திருக்கின்றனர். மிக மிக அற்புதமான பணி. Shaivam.org என்கிற செயலியை பதிவிறக்கி வைத்துக் கொண்டால் பெருந்துணை கிட்டும். விஜயா பதிப்பகம் வெளியிட்டிருக்கும் திருமுறை பதிப்பை வாங்கிக் கொள்ளலாம்.  “சொல்லரசு புலவர் வீ. சிவஞானம் எம். ஏ.பி.எட்” உரையில் தினந்தோறும் இரண்டு பாடல்களை வாசித்தும் கேட்டும் கற்கையை தொடங்கலாம். இதுவே இன்றுள்ள எளியதும் சிறந்ததுமான வழி.

தொடக்கத்தில் சுலபமான பதிகங்களை வாசித்துக் கேட்டு அறிந்து கொள்வது ஒரு ஊக்க மருந்து. உதாரணமாக “நத்தார் புடை  ஞானன் பசு” வரிசையில் சுந்தரர் அருளிய திருக்கேதீஸ்வர பதிகங்களை குறிப்பிடுகிறேன்.  அதுபோல திருஞான சம்பந்தர் அருளிய “சூலம்படை சுண்ணப்பொடி சாந்தஞ்சுடு நீறு” நின்றியூர் திருத்தலப் பதிகங்களையும் சொல்லலாம். அப்பரின் “சொற்றுணை வேதியன், சோதி வானவன்” என்று பலராலும் அறிந்த பதிக வரிசையையும் குறிப்பிடுகிறேன்.

ஒவ்வொரு நாளும் இசைக்க வேண்டிய பதிகமென” திரு அங்கமாலை”யைக் குறிப்பிடுவேன். சிறுவயது தொட்டு இன்றுவரை பாடாத நாளில்லை. அவ்வளவு நெருக்கமான பதிகங்கள். தலை, கண், காதென உடலைப் பாடிமுடித்து இறையை எங்கே கண்டுகொள்கிறோம் என்று பாடல். மெய்சிலிர்க்க கோவிலை வலம்வந்து பாடிய சிறுவனாகிய என்னை இன்று நினைத்தாலும் மதிக்கிறேன். பெருமை கொள்கிறேன். என் பிள்ளை வளர்ந்து “தோடுடைய செவியன்” பாடத்தொடங்குகையில் அவனிலும் அதே சிறுவனாகிய என்னையே காண்பேன். அதுவே இறை எனக்குத் தரும் அருள் பாலிப்பு.

நன்றி! கே. எம்.ஆர். விக்னேஸ்.தொடர்ந்து வாசியுங்கள். உரையாடுங்கள். உங்கள் எல்லா முயற்சிகளுக்கும் இறையருள் கிட்டும்.

 

 

 

 

 

 

 

The post ஈழமும் சைவமும் first appeared on அகரமுதல்வன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 13, 2023 10:30

December 12, 2023

சொல்லுடல்

01

நடுவீதியில்

தனித்து நிற்கிறது

தேர்

நிலமோடித் திரண்ட

வடக்கயிறு

வேர்

உறைந்தும்

பழக்கத்தில் அசைகிறது

தெய்வம்.

 

02

அழிந்தவொரு

சொல்

என்னிடமுள்ளது

எரிந்தவொரு

உடல்

சொல்லிடமுள்ளது.

எங்கே

விதைப்பது

எங்கே

புதைப்பது?

 

03

சவம் போகும் நடுமதியம்

பலிச்சோறு கேட்டு

கரைகிறது

தனித்துப் பறக்கும் காகம்.

 

 

 

 

The post சொல்லுடல் first appeared on அகரமுதல்வன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 12, 2023 10:30

December 11, 2023

மாபெரும் தாய் – தொடும் நடனம்

காலையில் எழுந்து நேரத்திற்கு காப்பி, காலை நடையில் போகிற போக்கில் பேசும் அரசியல், வந்தவுடன் சுடுநீரில் இதமான குளியல், நல் உணவு, வீட்டைவிட்டு அலுவலகம் செல்லும் போது சொல்லிவைத்தார் போல வீட்டில் வளரும் நாய், எஜமானனை பார்த்து குழைந்து இருப்பது, பின் அலுவலகம், மாலை வீடு திரும்பி அதே காப்பி அரட்டை உணவு உறக்கம் என்ற சராசரிக்குள்ளே வாழும் பல்லாயிரம் உயிர்கள் போல அல்லாமல் “மாபெரும் தாய்” தொகுப்பில் வரும் உயிர்கள் வேறுபட்டவை. அடுத்த நொடி நம் வாழ்வு ஒரு லட்சியத்திற்காக போகும் என்ற துணிவும், திராணியும் கொண்ட மனங்களை , இந்த பல்லாயிரக்கணக்கான சராசரி மனங்கள் ஒரு போதும் புரிந்துள்ள முடியாது.

அங்கே அழுகையும், வெம்மையும், வெறுப்பும், கசப்பும் இருக்கிறது. ஒரு தீவிர போராளியான நளாயினிக்கு மாப்பிள்ளை தேடும் போது “வெ” ஆட்களா அவள் என்று புரோக்கர் கேட்கும் போது, அவள் யுத்த காலத்துலே மடிந்துவிட்டிருக்கலாம் என்றும் தோன்றுகிறது. அவளிற்கு கல்யாணம், குடும்பம், ஏன் ஒரு கட்டத்தில் போராட்டத்தை விடவும் அவள் வளர்க்கும் “லாரா” என்ற பூனை உயிருக்கு உயிராக தெரிகிறது, இறக்கும் தருவாய் வரையில்…

பாலன் கதையில் “ஏரோது ராஜாவின் கொலைப் படைக்கு பயந்து மரியாள் உம்மை மறைத்து வைத்ததைப் போல, எங்கள் குழந்தைகளை எங்கே மறைப்பது? எங்கள் வனாந்திரங்கள் இராணுவ முகாம்ளாகி விட்டன. வணக்கஸ்தலங்களை குண்டுகள் தகர்த்தது. அதுவும் போதாதென இராட்சத இயந்திரங்களால் உடைக்கிறார்கள்’ என்று பாலாவின் தாய் சிலுவையை சுமக்கும் இறையிடம், தன் சிலுவையை சுமந்து கொண்டு கேட்டு மன்றாடுகிறாள்.

இயக்கம் அழிவைச் சந்தித்த இறுதி நாளில், பெட்டி நிறைய மத்தாப்புகளை வாங்கி, வீட்டின் நடுவே கொளுத்தி மகிழ்ச்சி அடைந்த பூனைச் சுமதியை, வளசரவாக்கம் ஸ்ரீ தேவிகுப்பம்  கொத்து ரொட்டி கடையில்  பார்த்து கண்டுகொண்ட திருச்செல்வம், தன் இயக்கத்திற்கு எதிராக இருந்து வந்த பூனைச் சுமதியை காதலித்து வாழும்  மன்னிப்பின் கோர்வையும் நம்மை ஏதோ செய்துவிடுகிறது.

இப்படி இந்த தொகுப்பில் பன்னிரெண்டு கதைகள் உள்ளன. அனைத்து கதைகளும் போருக்கு பின்னே நிகழும் எதார்த்தமும் அது தரும் குரூரமும் ஏதோ, ஒரு போதும் போரை பார்க்காத ஒருவனுக்குக் கூட மன அழுத்தம் தருகிறது.  போராட்டம் நடக்கும் தருவாயில் வரும் எழுத்து ஒருவகை எழுச்சி தரும். காரணம் முடிவு தெரியாது.  நாம் தான் நிச்சயம் வெல்வோம் என்ற ஒளிக் கீற்று மட்டுமே இருக்கும்.

ஆனால் லட்சியத்திற்காக  போரில் இறங்கியவர்களை  வஞ்சித்த  போரில் உலவிய மனிதர்கள் பற்றியும், காதல், ஏமாற்றம், வஞ்சகம், சூழ்ச்சி இவை எல்லாம் கண் முன் தெரியும் போது மனம் நிலை தடுமாறாமல் இருக்கவே முடியாது. தேவதச்சனின் ஒரு கவிதை இப்படி இருக்கும்.

“காற்றில் இலைகள் நடனமாடிக்கொண்டு இருந்தன

என்னால் தொடமுடிந்தது

இலையைத்தானே தவிர

ஒரு போது தொட முடியவில்லை

அதன் நடனத்தை.”

இந்தத் தொகுப்பை படித்த உடன் என்னால் இலையை மட்டுமே தொடமுடிந்தது. அது தான் சாத்தியமும் கூட. அதன் கோர நடனத்தை இனி யாருமே தொட வேண்டாம் என்று நினைத்துக்கொண்டு, இந்தக் கதைகளை எழுதிய அகரமுதல்வனுக்காய்  தளுதளுப்போடு சில துளிகளை சிந்திந்திக் கொள்கிறேன்.

 – உ. முத்துமாணிக்கம்

The post மாபெரும் தாய் – தொடும் நடனம் first appeared on அகரமுதல்வன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 11, 2023 10:30

December 10, 2023

போதமும் காணாத போதம் – 11

 

ருண்டு கொட்டும் மழையில் வீட்டின் கதவு தட்டிக் கேட்டது. சிறிய கோடாக உடைந்திருந்த ஜன்னலில் கண் புதைத்துப் பார்த்த அம்மா, ரகசியமாய் சுதாகர் என்றாள். மீண்டும் கதவு தட்டும் சத்தம் கொஞ்சம் மூர்க்கமாக ஒலித்தது. என்னை அறைக்குள் போய் இருக்குமாறு கைகாட்டினாள். ஒரு நாடகத்தின் தொடக்கம் போல திரைவிலக வசனம் தொடங்கிற்று. “ஆர் வந்திருக்கிறது?” “நான் தான் சுதாகர் கதவைத் திறவுங்கள்”. அம்மா கதவைத் திறந்தாள். நனைந்திருந்தவரிடம் பெரிய துவாயைக் கொடுத்தாள். சேர்ட்டைக் கழற்றி உடம்பைத் துடைத்தார். அணிந்திருந்த ஜீன்சை கழற்றுவதற்கு முன்பாக பிஸ்டலை வெளியே எடுத்து தண்ணீரை துடைத்தார். ஒரு சாறமும் சேர்ட்டும் கொடுத்து மாற்றிக் கொள்ளச் சொன்னாள். சுடச்சுட இஞ்சி போட்டு ஒரு தேத்தண்ணி கொடுத்தாள். கொஞ்சம் இளைப்பாறிய பின் “இந்த நேரம் எதுக்கடா இஞ்ச வந்தனி” என்றாள். சின்னதொரு வேலையாய் ஊரெழு வரைக்கும் போய்ட்டு வந்தனான். கொஞ்சம் பிந்தீட்டுது. மழை வேற பேயாய் அடிக்குது. அதுதான் இஞ்ச வந்தனான்.” என்றார். “வேற எதுவும் திருகுதாளம் பண்ணிட்டு பாதுகாப்புத் தேடி இஞ்ச வரேல்ல தானே” அம்மா எச்சரிக்கையோடு கேட்டாள். அவர் கண்களைத் தாழ்த்தி தேத்தண்ணியைப் பார்த்தபடி ஆவி நுகர்ந்தார். பிறகு கொஞ்சம் ஆசுவாசப்படுத்தி தைரியத்தை வரவழைத்திருப்பார் என்றே தோன்றுகிறது.

“அண்ணி, அப்பிடி ஒண்ட செய்திட்டு உங்களிட்ட வந்தாலும், நீங்களே என்னைச் சொல்லிக்குடுத்திடுவியள் தானே” சுதாகர் கேட்டார்.

“பின்ன, உங்களைப் பாதுகாத்து சனங்களுக்கு என்ன பயன்” அம்மா கேட்டதும் சுதாகருக்கு ஆத்திரமும் அடக்கமுடியாத அவமானமும் தோன்றியிருக்கலாம். உடனடியாக கதவைத் திறந்து வீட்டின் வெளியே போனார். மழையின் பேரிகை விடாது ஒலித்தது. திறந்திருந்த கதவின் வழியாக சாரல் புகுந்தது.

“எடேய், நீ உள்ள வாறதெண்டால் வா. இல்லாட்டி நான் கதவைச் சாத்தப் போறன்” அம்மா குரல் கொடுத்தாள். “இல்ல நான் வெளியேயே படுக்கிறேன், வெள்ளனவா எழும்பிப் போகிறேன்” என்றார்.

“அடிசக்கை, பெரிய ரோஷக்காரன்ர வீம்பு. இதில கொஞ்சம் ரோஷம் உண்மையா இருந்திருந்தால் ஆர்மிக்காரனோட சேர்ந்து பிள்ளையள சுட்டுத் தின்ன மனம் வராது” என்று சொல்லி கதவை அடித்துச் சாத்தினாள். மழையை மிஞ்சி கதவில் ஒலித்தது இடி.

அதிகாலையிலேயே எழுந்து சென்றுவிட்டார். அவர் படுத்திருந்த இடத்தில் சீவல் பாக்கு கொட்டுண்டு இருந்தது. அம்மா பூக்களை ஆய்ந்து வந்து அப்பாவின் படத்திற்கு வைத்தாள். நான் எழும்பி குளித்துமுடித்து படிக்க அமர்ந்தேன். முட்டைக் கோப்பியை அடித்து பொங்கச் செய்த அம்மாவின் முன்னேயே ஒரே மிடறில் அருந்தினேன்.

“இனிமேல் சுதாகர் வீட்டுக்கு வந்தால் அவனை அண்டக்கூடாது பெடியா” சொன்னாள் அம்மா.

“ஓம் அம்மா, ஆளைப்பார்க்கவே பயமாய் இருக்கிறது. தாடியும் தலைமுடியும். கண்ணெல்லாம் பாழிருட்டு. விடிவற்ற முகம்”

“இவங்களுக்கு எங்க விடியும். மாறி மாறி ஆக்களை காட்டிக் குடுக்கிறதும். கடத்திக் கொண்டே சுடுகிறதும் வேலையா வைச்சிருக்கிறாங்கள். உலகம் அழியிறதுக்கு முதல் இவங்களும் – இவங்களின்ர இயக்கமும் அழியவேணும்.”

“எங்கட இயக்கம் இவங்களை அழிக்காதோ”

“முந்தியொருகாலம் அதெல்லாம் செய்தவங்கள். இப்ப கொஞ்சம் யோசிக்கிறாங்கள்  காட்டு யானை மாதிரி ஒருநாள் வெளிக்கிட்டால் எல்லாரையும் முறிச்சு எறிவாங்கள்” என்றாள் அம்மா.

பல வருடங்களுக்குப் பிறகு அதிசயமாக காந்தி மாமா வீட்டிற்கு வந்திருந்தார். அமைதிக்காலமென்றாலும் வன்னியிலிருந்து யாழ்ப்பாணத்திற்குள் வருவதற்கு இயக்கம் எல்லாப் போராளிகளுக்கும் அனுமதி வழங்கவில்லை. காந்தி மாமா வீட்டிற்கு வந்ததையடுத்து மீனும், கணவாயும் சமைத்தோம்.

“எப்பிடி மேலிடம் உனக்கு பெம்மிஷன் தந்தது. ஆச்சரியமாய் இருக்கு” கேட்டாள் அம்மா. “தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் தரப்படும் எண்டு சொல்றது இதைத்தான். பன்னிரெண்டு தடவை கடிதம் எழுதியிருக்கிறன். இண்டைக்குத் தான் அனுமதி கிடைச்சது” என்றார்.  “நல்ல விஷயம். நாளைக்கு தெல்லிப்பழை துர்க்கை அம்மன் கோவிலுக்கு போவம். அங்க உனக்காக வைச்சவொரு நேர்த்தி செய்ய வேண்டியிருக்கு” என்றாள் அம்மா.

“எனக்காக என்ன நேர்த்தி வைச்சனியக்கா?”

“உன்ர அலகில ஐஞ்சடிக்கு வேல் குத்தி காவடி எடுக்கிறனென்டு ஒரு சின்ன நேத்தி” சொன்ன அம்மா கொடுப்புக்குள் சிரித்தாள். மாமா அதெல்லாம் ஒன்று பெரிய பிரச்சனை இல்லையென கண்ணைக் காட்டினார். காந்தி மாமாவின் இடது தோள்பட்டையில் விழுப்புண் தழும்பு மெழுகேறிக் கிடந்தது. எப்போதாவது அதனைத் தடவிக் கொள்கிறார். போராளி தனது விழுப்புண்ணின் தழும்பை தடவிப் பார்ப்பது எதனால்? அவர்களுக்கு ஏதோவொரு தியானத்தை அது வழங்குகிறதா? நினைவுகளை அது கொதிக்கச் செய்கிறதா? லட்சியத்தின் தீ வளர்க்க அந்த வருடல் அவசியமோ என்றெல்லாம் கேள்விகள் தோன்றின.

கோயில் செல்ல ஆயத்தமாகி காந்தி மாமாவும் நானும் வீட்டின் வெளியே அமர்ந்திருந்தோம். அம்மா கதவைச் சாத்திவிட்டு “சரி வெளிக்கிடுவம்” என்றாள். வீதிக்கு வந்து பேருந்துக்காக காத்திருந்தோம். கோவில் வரை செல்லும் பேருந்து வருவதற்கு தாமதம் ஆனது. ஓட்டோ பிடிச்சால் போய்ட்டு வந்திடலாமென்றார் மாமா. அதுக்கு குடுக்கிற காசில பத்து நாள் வீட்டுச் சீவியம் போக்கிடலாம் சும்மா இரு காந்தியென்றாள் அம்மா. பேருந்து முடக்கத்தை தாண்டி வருவதைக் கண்டதும் “அம்மன் எங்களைக் கைவிடாது. வாகனம் வந்திட்டு பாத்தியோ” என்று ஆனந்தித்தாள். காந்தி மாமா வேட்டி உடுத்தியிருந்தார். அகலக் கரை அவருக்கு பிடித்தமானது என்று அம்மா சுன்னாகத்தில் வாங்கிவந்தது. எடுப்பாக ஒரு தங்கச் சங்கிலி. அணிய மாட்டேனென்று எவ்வளவு சொல்லியும் அம்மா வேண்டிக் கேட்டதால் அணிந்தார். நெற்றி நிறைந்த திருநீற்று பட்டை.

“மாமா, வடிவான ஆள்தான் நீங்கள், இந்தியாவுக்கு போனால் விஜய்க்கு சகோதரனாய் நடிக்கலாம்”

“சிறுவா, உனக்கு இண்டைக்கு மாட்டு இறைச்சியில கொத்துரொட்டி வாங்கித்தரலாமெண்டு நினைச்சனான். அதை கட் பண்ணிட்டன்”

“மாமா, இப்ப நான் சொன்னதில என்ன பிழை.”

“நீ சொன்னது எல்லாமும் பிழை தான் சிறுவா” என்று எனது காதைத் திருகினார். நான் செல்லமாக பாவனையழுகையை எழுப்பினேன். அம்மா எங்களிருவரையும் பார்த்து புன்னகைத்தாள்.

கோவிலை வந்தடைந்து மாமாவின் பெயரில் அர்ச்சனை செய்தோம். அடுத்த மாதத்தில் ஒருநாளில் அபிஷேகத்திற்கு அம்மா திகதி கேட்டு வந்தாள். வன்னியில நீங்கள் எந்த இடமென்று ஐயர் மாமாவிடம் கேட்டார். உடனடியாக ஜெயபுரம் என்றார் மாமா. என்ன வேலை செய்கிறீர்கள் அடுத்த கேள்வி வந்ததும் தேங்காய் யாபாரம் என்று சொன்ன மாமாவைப் பார்த்தேன். எத்தனையோ ஆண்டுகாலம் தேங்காய் யாபாரம் செய்யும் சிவத்தான் மாமாவை விடவும் உடல் மொழியைக் கொண்டு வந்திருந்தார்.

“மாமா, உங்கள நான் விஜய்க்கு அண்ணாவாக நடிக்கலாமெண்டு சொன்னது பிழைதான். நீங்கள் சிவாஜிக்கு அண்ணா”

“என்ன தேங்காய் யாபாரியை வைச்சு சொல்லுறியோ”

“ம். அப்பிடியே சிவத்தான் மாமா மாதிரியெல்லெ நிண்டனியள்”

“பின்ன, இப்ப என்ர படையணி, இயக்கப்பெயர், தகட்டிலக்கம், ராங்க் எல்லாத்தையும் சொல்லவே முடியும்”

“அதுவும் சரிதான். ஆனால் ஐயர் உங்களை இயக்கமெண்டு கண்டுபிடிச்சிட்டார்”

“அதனால அற்புதமும் இல்லை. ஊழும் இல்லை. நான் அவரிட்ட அதை மறைக்கேல்ல. ஆனால் சொல்லவுமில்லை. அவ்வளவு தான்”

நாங்கள் வீட்டினை அடைந்தோம். நாளைக்கு நல்லூர் கோவிலுக்கு போகலாமென நானும் மாமாவும் முடிவு செய்திருந்தோம். அம்மா கதவைத் திறந்து உள்ளே போனாள். கொஞ்சம் இருண்டிருந்தது. மின்விளக்குகள் ஒளிர்ந்தன. புட்டும் பழைய மீன்குழம்பும் ருசி குழைத்துண்டோம். மாமாவின் கைக்குழையல். உருசையூறும் கணம். அம்மா சின்ன வெங்காயத்தை உரித்து வைத்தாள். வீட்டின் கதவு தட்டும் சத்தம் கேட்டது. அம்மா உடைந்த ஜன்னல் வழியாக கண்களை ஒத்திப் பார்த்தாள். சுதாகரும் அவனது கூட்டாளி தாடி ஜெகனும். சாப்பிட்டுக் கொண்டிருந்த எங்களிடம் தகவல் சொன்னாள். மாமாவை மறைந்திருக்குமாறு சொன்னேன். அவர் அடுப்படிக்குள்ளிருந்த புகைக்கூட்டிற்குள் பதுங்கினார். அங்கே அதற்கான நிரந்தர ஏற்பாடுகளை ஏற்கனவே செய்து வைத்திருந்தோம். கதவைத் திறந்ததும் சுதாகர் உள்ளே வந்தார். அப்பாவின் புகைப்படம் முன்னே காய்ந்திருந்த பூக்களை விரல்களால் ஒவ்வொன்றாக தவர்த்திப் பார்த்துவிட்டு “அண்ணி, அண்டைக்கு நீங்கள் அப்பிடி கதைச்சிருக்க கூடாது. ஒரே கவலையாய் போயிற்றுது” என்றார்.

“பின்ன, நீங்கள் செய்யிற அநியாயத்த பார்த்துக் கொண்டு நாங்கள் ஐஸ்பழமே குடிக்கிறது. உங்களுக்கு கொலையெண்டால் கொப்புலுக்கி நாவல் பழம் தின்னுற மாதிரியெல்லே”

“இஞ்ச எல்லாருக்கும் அப்பிடித்தான். முதலில ஆர் கொப்பு உலுக்கிறது எண்டு தான் போட்டி. மிச்சப்படி எல்லாரும் அப்படித்தான் நாவல் பழம் சாப்பிடினம்”

“சுதாகர், உன்னை முந்தியொருக்கால் அவங்கள் சுட வெளிக்கிடேக்க மடிப்பிச்சை கேட்டு தப்ப வைச்சனான். இப்ப அப்பிடியெல்லாம் கருணை காட்ட மாட்டங்கள். நீ உதெல்லாத்தையும் விட்டிட்டு எங்கையாவது வெளிநாட்டுக்கு வெளிக்கிடு.”

“அண்ணி, நீங்கள் வெருட்டுறத பார்த்தால் எனக்குச் சிரிப்புத்தான் வருகுது. நாங்களும் போராளிகள் தான். இந்த நாட்டோட விடுதலைக்காக போராடத்தான் ஆயுதமேந்தினாங்கள். சுட்டால் சுடட்டும். அதுக்காக இவையளுக்கு பயந்து ஒடேலுமோ”

“நீங்களும் போராளியள் எண்டு சொல்ல வெக்கமாய் இல்லையோடா, இல்ல கேக்கிறன். அரசாங்கம் தருகிற மாஜரின சனங்களின்ர பிணங்களில பூசி தின்னுறதெல்லாம் விடுதலைப் போராட்டம் இல்ல. விளங்குதா”

“நாங்கள் எந்த இயக்கத்துக்கும் பயப்பிடேல்ல. உண்மையா போராட விரும்பினாங்கள். ஆனால் இண்டைக்கு நானும் தாடி ஜெகனும் எங்கட அமைப்பில இருந்து விலகலாமெண்டு முடிவெடுத்திட்டம். ஆனால் எங்கள ரைகேர்ஸ் மன்னிக்க மாட்டாங்கள். அவங்களிட்ட நாங்கள் சரணடையவும் மாட்டம். எங்கட வாழ்க்கையும் நாங்களுமெண்டு இருப்பம்” என்றார்.

“இயக்கம் மன்னிக்காது எண்டு என்னால உறுதியாய் சொல்ல முடியாது. ஆனால் நீங்கள் உடன விலகிடுங்கோ. அதை எப்பிடியாச்சும் இஞ்ச உள்ள அரசியல்துறை செயலகங்களுக்கு தெரியப்படுத்துங்கோ” என்றாள்

“இல்ல, அதுக்கான நேரமில்லை. நாங்கள் விலகப் போற தகவல் எங்கட அமைப்புக்குள்ள தெரிஞ்சு போச்சு. எங்கட லீடர் தோழருக்கு தெரிஞ்சால் அவ்வளவுதான்” என்றார் சுதாகர்.

“தெரிஞ்சால் என்ன செய்வாங்கள். நீ அந்த பேப்பர்காரனை சுட்டுக்கொண்டது, எம்.பியை சுட்டுக்கொண்டது, மானவர் பேரவை பெடியனைச் சுட்டுக்கொண்டது மாதிரி உன்னையும் சுடுவாங்கள் அதுதானே. “விதை விதைத்தவன் வினை அறுப்பான்” எண்ட பழமொழி எல்லாத்துக்கும் பொருந்தும். சுதாகர் நான் சொல்றத கேள். இப்பவே ஏதேனும் ஒரு அரசியல்துறை பேஸ்ல போய் சரணடையுங்கோ. அதுதான் உங்களுக்குப் பாதுகாப்பு”

வீட்டின் முகப்பு வாசலில் வெள்ளை வேன் வந்து நின்றது. சுதாகர் அதைப் பார்த்து “அண்ணி, எங்கடை ஆக்கள் தேடி வந்திட்டாங்கள். என்னை காப்பாத்துங்கோ” என்று பயந்தடித்து அழுதார். தாடி ஜெகனுக்கு கால்கள் நடுங்கி கண்ணீரோடு மூத்திரமும் கழன்றது. அம்மா கதவை இறுகச் சாத்திவிட்டு தாழ்ப்பாள் போட்டுக் கொண்டாள். கண்ணாடியில் கண்களைப் பதித்து வெளியே எத்தனை பேரெனப் பார்த்தாள். இருவர் மட்டுமே வந்திருந்தனர். ஒருவனுடைய வலது தோள்பட்டையில் ஏகே -47 ரக துவக்கு தொங்கிக் கொண்டிருந்தது. கதவைத் தட்டத் தொடங்கினார்கள். அம்மா கொஞ்சம் வேடிக்கை பார்த்தாள். வெளியே நின்றவன் பெரிதாக “ ரைகேர்சுக்கு வாலாட்டுற வேஷை கதவைத் திறவடி. உன்ர சாமானில வெடி வைக்கிறன்” என்று கூச்சல் போட்டான்.

“காந்தி இஞ்ச ஒருக்கால் வா” அம்மா மெதுவாக குரல் கொடுத்தாள். புகைக்கூண்டுக்குள் பதுங்கியிருந்த புலி கதவருகே வந்தது. “படத்தட்டுக்குப் பின்னால ஒரு உப்பு  பையிருக்கு அதுக்கு கீழே உள்ள பெட்டியை எடுத்துக் கொண்டு  வா” என்றாள். மாமாவிடம் கொண்டு வந்து கொடுத்தேன். பளபளக்கும் உலோகம். மாமா பிஸ்டலை ஏந்தி நின்றதும் இன்னும் வடிவு கூடியிருந்தார். சுதாகரும் தாடி ஜெகனும் விழிபிதுங்கி கீழே அமர்ந்திருந்தார்கள்.

ஒரு நாடகத்தின் தொடக்கம் போல திரைவிலக வசனம் தொடங்கிற்று. “ஆர் வந்திருக்கிறது” என்று கேட்டபடியே பதிலுக்கு நேரமளிக்காமல் கதவைத் திறந்தாள். மாமாவின் கையிலிருந்த உலோகத்திலிருந்து சத்தமற்று வெளிச்சம் மட்டுமே பாய்ந்தது. வாசலிலேயே ரத்தம் கொப்பளிக்க கிடந்த இரண்டு பிணங்களையும் அள்ளி ஏற்றிக் கொண்டு அதே வெள்ளை வேன் புறப்பட்டது.  சுதாகரும் தாடி ஜெகனும் அதற்குள்ளேயே அமர்ந்திருந்தனர். காந்தி மாமா வாகனத்தை இயக்கினார்.

அம்மா ஓடிச்சென்று “காந்தி இவர்களை நீ எதுவும் செய்யக்கூடாது. அரசியல் துறையினரிடம் ஒப்படைத்து விடு” என்றாள்.

சரியென்று தலையசைத்தபடி மாமா புறப்பட்டார். அடுத்தநாள் காலையில் நான்கு பிணங்களைச் சுமந்த வெள்ளை வேன் ஒன்று வீதியின் நடுவே நின்றது. சடலங்கள் அடையாளம் காணப்பட்டன. சுற்றி நின்று பார்த்த சனங்கள் சுதாகரைப் பார்த்ததும் “ஓ…இவையளே பெடியள் கொஞ்சம் பிந்தினாலும், சரியாய் செய்து போடுவாங்கள்” என்றனர்.

வீட்டிற்கு வந்திருந்த மாமாவிடம் நீ அவர்களைச் சுட்டிருக்க கூடாது என்று கோபமாக கத்தினாள். இருவரும் தம்மைத் தாமே சுட்டுக்கொன்றார்கள் என்றார் மாமா. இரவு சாப்பிடும் போது கேட்டேன்.

“மாமா, அவர்களை  நீங்கள் சுடேல்லையோ?”

“சிறுவா, மாமாவோட பேர் என்ன”

“காந்தி”

“மாமா, பொய் சொல்லுவேனா”

“இல்லை. ஆனால் சுடுவியள் தானே”

மாமா உறுதியாக ஓமென்று தலையசைத்தார்.

“காந்தி நீயே சுட்டனி” கேட்ட அம்மாவைப் பார்த்து, உறுதியாக இல்லையென்று தலையசைத்தார்.

சூரியனாய் தகிக்கும் ஒருபெரும் கனவின் நெடும்பயணத்தில் அஞ்சாமல் துஞ்சாமல் நிமிர்வின் குரலாக எதிரொலிக்கும் ஒவ்வொரு கணத்திலும் வரலாற்றின் கடைவாயில் துரோகக் குருதி வழிந்தது.  கொப்பளித்தடங்கிய எரிமலையின் நாளங்களில் தீயின் உறைதல் திவலையாய்த் தேங்கின. பலிபீடத்தின் விளிம்பில் பதுங்கியமர்ந்த புலியின் கண்களில் “எவ்வளவு வலிமையானது தியாகம்” என்ற திருப்தி. கண்களைத் திறந்தபடி பாயில் படுத்திருந்த மாமாவுக்கு திருநீற்றை பூசிய அம்மா, “வேதத்திலுள்ளது நீறு, வெந்துயர் தீர்ப்பது நீறு, போதந் தருவது நீறு, புன்மை தவிர்ப்பது நீறு” என்ற பதிகவரிகளை பாடிக்கொண்டே அருகில் அமர்ந்தாள். உறக்கத்தின் கிளைகள் மாமாவை அடர்ந்து மூடின. இதுவரை வஞ்சித்த இரவின் ஜன்னல் வழியாக காற்றுப் புகுந்தது. கருணையின் வளைவற்ற பாதையைப் போல நீட்டி நிமிர்ந்து ஆழ்ந்துறங்கிய மாமாவின் கைவிரல்களை முத்தமிட்டேன்.  எண்ணிறைந்த ஒளித்துளியுள் நினைவின் குளிராக எப்போதும் உள்ளது அன்றிரவு.

The post போதமும் காணாத போதம் – 11 first appeared on அகரமுதல்வன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 10, 2023 13:08

December 8, 2023

இயக்குனர் “பூ” சசி – வாசக கலைஞன்

இலக்கிய வாசிப்பை மதிப்புமிகுந்த செயலாக கருதுபவர்கள் திரைத்துறையில் சொற்பமானவர்களே. ஆனால் சில இயக்குனர்கள் அதனை ஒரு தவம் போல எண்ணுகிறார்கள். இன்றைக்கு நவீன இலக்கியத்திலிருந்து திரைப்படங்களை உருவாக்க பலர் முன்வருகிறார்கள். எழுத்தாளர்களை நாளும் பொழுதும் அழைத்துப் பேசி கதைகளை விவாதிக்கிறார்கள். தமிழ் திரைப்படங்களோடு நவீன எழுத்தாளர்கள் பலர் இணைந்து பணியாற்றும் ஒரு பொற்காலமாக நடப்பு நாட்களைக் குறிப்பிடலாம். இயக்குனர் வெற்றிமாறன் தொடர்ச்சியாக படைப்பிலக்கியங்களை திரைப்படமாக ஆக்குகிற முயற்சிகளை முன்னெடுக்கிறார்.  அவருடைய தயாரிப்பில் வெளியான சங்கத்தலைவன்  என்றொரு திரைப்படமும் தமிழ்நாவலொன்றை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் இன்றைக்கு இதுபோன்ற முயற்சிகளுக்கு ஒரு விஷேட கவனமிருக்கிறது. இந்தக் காலத்திற்கு முன்னரே “வெயிலோடு போய்” சிறுகதையை “பூ” என்ற திரைப்படமாக்கி பெரிய வெற்றி பெற்றவர் இயக்குனர் சசி. அவருடைய கதைத் தேர்வும், அதனை திரைக்கதையாக மாற்றி திரையில் உருவாக்கிய வாழ்வும் பாராட்டுக்குரியது. “பூ” சசி என்கிற உதிராதவொரு பெயரை அவருக்கு பெற்றுக்கொடுத்த படமது. நவீன இலக்கியங்களைத் தொடர்ந்து வாசிப்பின் வழியாகவே அவதானிக்கும் இயக்குனர்களில் மிக மிக முக்கியமானவர் சசி.

எனக்கொரு அழைப்பு வந்தது. “எழுத்தாளர் அகரமுதல்வன் தானே!” என்ற குரலில் ஒரு எதிர்பார்ப்பு. “நீங்கள்?” என்றேன். நான் இயக்குனர் சசி பேசுகிறேன் என்றார். சொல்லுங்கோ என்றேன். உங்களுடைய “மாபெரும் தாய்” சிறுகதைத் தொகுப்பினை வாசித்தேன், நேரில் சந்திக்க வேண்டுமென விரும்பினார். பிறகு சிறிதாக மலர்ந்து கமழ்ந்த உரையாடலை நேரில் பார்க்கையில் நீட்டிக்கொள்ளலாம் என துண்டித்துக் கொண்டோம். அடுத்தநாள் இயக்குனர் “பூ “சசியும் நானும் சந்தித்தோம். என்னுடைய சகோதரரும் கவிஞருமான கடங்கநேரியானும் உடனிருந்தார். என்னைப் பார்த்ததும் நீங்கள் தான் அகரமுதல்வனா என்று கேட்டார். அவருடைய எண்ணத்தில் நான் கொஞ்சம் வயதான ஆளாக இருந்திருக்க வேண்டுமென்று தோன்றியது. ஊஞ்சல் போன்ற இருக்கைகளில் எதிரும் புதிருமாக அமர்ந்தோம். என்னுடைய கதைகளைப் பற்றி சிலாகித்துப் பேசினார். உணர்ச்சி மேலிட்ட அவரின் பேச்சில் இலக்கிய வாசிப்புக் கொண்ட ஒருவரின் ஆழமான பதங்களே நிரம்பியிருந்தன. வெறுமென கதையை மட்டும் பேசாது, கதை மொழி, விவரணை, கதையின் கட்டமைப்பு என ஒரு விமர்சக அளவு கோலோடு பாராட்டினார். அதன் பிறகு நெகிழ்ச்சியான உரையாடல்கள் நீண்டன.  அன்றே என் எழுத்தூழிய வாழ்வில் மறக்க முடியாதவொரு பரிசினை மகா கலைஞன் “பூ” சசி எனக்களித்தார். அது எப்போதும் தட்பவெப்பமாக என்னோடு இருப்பது. என்னுடன் மட்டுமே இருப்பது.

பல ஆண்டுகளுக்குப் பிறகு விஷேச வீடொன்றில் நண்பரொருவரைச் சந்தித்தேன். அவருக்கு இலக்கியம் என்பது பாட்டாளிகளின் பாடுகளைச் சொல்வது மட்டும் தான். ஏனையவை எல்லாம் வெறும் குப்பைகள் என்பார். அவரோடு எப்போதும் இலக்கியம் பேசி நேரத்தை வீணடிப்பதில்லை என்பது என்னுடைய அணையாத கொள்கை. இந்த முறை சினிமாப்பக்கம் அவர் கரையொதுங்கி நின்றார். விடுதலை பார்த்தீர்களா என்று கேட்டதும் நான் விழிப்புற்று இல்லையென்றிருந்தால் பிரச்சனை இருந்திருக்காது. ஆனாலும் வாய் விடாது அல்லவா… பார்த்தேன், எனக்குப் பிடித்திருந்தது என்று சொல்லிவிட்டேன். அவர் கொந்தளிப்புற்று “அந்தப் படத்தில் என்னதான் நல்லாயிருக்கு தோழர்” என்றார். எனக்கு தோழர் என்று கேட்டதுமே உறைத்துவிட்டது. காலையில் நாட்காட்டியில் எனது நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் என்று வாசித்தும் நினைவில் வந்தது.

அமைதியாக இருப்பதை விட இந்தச் சூறையை எதிர்கொள்ள வேறுவழியில்லையென விஷேச வீட்டு ஆட்களை வேடிக்கை பார்த்தேன். ஆனாலும் நண்பர் விடுவதாயில்லை. “இவங்களுக்கெல்லாம் கம்யூனிஸ்ட்டுகள பற்றி என்ன தெரியும்னு படம் எடுக்கிறாங்க. இல்லை நாம அவங்கிட்ட போய் கேட்டமா. அந்த எழுத்தாளனே ஒரு வலதுசாரி. அவன் எழுதின கதையை வைச்சு சினிமா பண்ணி தேறுமா சொல்லுங்க” என்றார். இதுபோன்ற வேளைகளில் எவ்வளவு காட்டுக்கூச்சலான பாடலும் இன்பம் தரும். ஒலித்த பாடலையே கேட்டு மெய்மறந்ததைப் போல பாவனை செய்தேன். எனக்குத்  துன்பம் நேர்கையிலே யாழெடுத்து இன்பம் சேர்த்த இசையமைப்பாளருக்கு இசையென்றால் என்னவென்று கொஞ்சமேனும் தெரிந்திருந்தால், இப்படியொரு பாடலை அமைத்திருக்க மாட்டார் என்று உள்ளூர நொந்தேன்.  நண்பர் “சினிமாக்காரன் என்னத்த படிச்சுக் கிழிக்கிறான், அவனுக்கு கிசுகிசு படிக்கவே நேரம் போதாது. இதில இலக்கியமும் இசங்களும்” என்றார்.

அப்போதுதான் எனக்கு சந்திராஷ்டமம் அணையுடைத்தது. என்னுடைய அமைதியை நண்பருடைய இந்த பொத்தாம் பொதுவான ஏளன இரைச்சல் தொந்தரவு செய்தது. அவரைப் பார்த்துக் கேட்டேன் “சினிமாக்காரன் கிசுகிசு படிக்கிறானா, அல்லது சினிமாக்காரன் கிசுகிசுவ நாம படிக்கிறமா? வாய்க்கு வந்தது மாதிரி பேசாதீங்க” என்றேன். “அப்புறம் என்ன, எந்த சினிமாக்காரன் இலக்கியம் வாசிக்கிறான் சொல்லுங்க, சும்மா சில புத்தகங்களோட பேரைத் தெரிஞ்சு வைச்சுக்கிட்டு கம்பு சுத்துறாங்க” என்றார்.  “உங்களைப் போன்று அவர்கள் பொய் சொல்ல வேண்டுமென்று எந்த அவசியமும் இல்லை. வாசிக்கிறேன் என்று சொல்வதால் நாளையே அவர்களுக்கு நூறு தயாரிப்பாளர்கள் வந்து படம் பண்ணு என்று சொல்லமாட்டார்கள்” என்றேன்.

அவர் பதற்றப்பட்டு “நான் எப்போது பொய் சொன்னேன், இன்றும் கூட ஐம்பது பக்கம் வாசித்து விட்டுத் தான் வருகிறேன்.” என்றார். என்ன புத்தகம் வாசிக்கிறீர்கள் என்றதும் “அதுவொரு மொழிபெயர்ப்பு நாவல், ஆனால் பெயரை  மறந்து விட்டேன்” என்றார். சரி நம்புகிறேன். ஆனால் சினிமாக்காரன் வாசிக்கவில்லை என்று பொத்தாம் பொதுவாகச் சொல்லாதீர்கள். அவர்களில் ஒரு தொகுதியினர் மீண்டும் மீண்டும் இலக்கியத்தை வெகுஜன பரப்பில் தீவிரத்தோடு முன்வைக்க முயற்சிக்கிறார்கள் என்றேன். நண்பர் சிரித்துக் கொண்டே “ ஏன் உங்களுடைய கதை ஏதேனும் திரைப்படம் ஆகப்போகிறதா” என்று கேட்டார்.

இதுவொரு சாதாரணனின் சீண்டல். அதற்கு நான் பலியாகப் போவதில்லை. ஆனால் அந்த நண்பரிடம் மறுபடியும் அழுத்தம் திருத்தமாகச் சொன்னேன் “ எழுத்தாளன் ஏதேனுமொரு வகையில் யாருக்கேனும் கால்பிடித்து, தாளமிட்டு தன்னை முன்னிறுத்துவான் என்று கருதும் உங்களுடைய எண்ணத்தை நினைத்துக் கவலை கொள்கிறேன். இதைப்போன்று இலக்கியம் வாசிக்கும் திரைப்படத்துறையினர் எழுத்தாளனை எண்ணுவதில்லை” என்றேன். நண்பர் கொஞ்சம் வெட்கித் தலைகுனிந்தார். ஆனாலும் அவருக்குள் இருந்து ஏதோவொரு கோஷம் வெளியே வந்தது. “இவர்கள் எல்லோரும் பெருமுதலாளிகளுக்கு சம்பாதித்து தருபவர்கள். இவர்களின் கலை பாட்டாளிகளைப் பற்றி கவலைப்படுவதில்லை” என்றார்.

ஆமாம் நண்பா! அவர்கள் அதற்காக பட்டினி கிடந்து அவமானப்பட்டு இந்தப் படுகளத்தில் தங்கள் குடல் உருவி கொடியேற்றவில்லை. மாறாக அவர்கள் கலையை வைத்து முடிந்தளவு சமரசங்கள் செய்யாது, அறத்தைப் பேசுகிறார்கள்” என்றேன்.

நண்பருக்கு அது விளங்கியிருக்க வேண்டும். இல்லையேல் அவர் பேச்சை முறித்துக் கொண்டு வெளியேறியிருக்கிறார் என்று பொருள்.  இந்த நண்பரை அழைத்துக் கொண்டு இலக்கிய வாசிப்புக் கொண்ட இயக்குனர்கள் சிலரைச் சந்திக்கச் செல்ல வேண்டுமென விரும்பியிருக்கிறேன்.  அவர்கள் படித்த மூன்றிலொரு பங்கு புத்தகத்தை தானும் வாசித்ததில்லை என்பதை அப்போதாவது அவர் உணரவேண்டும். அப்படியாக நண்பரை அழைத்துச் செல்ல விரும்புவது பூ சசியின் அலுவலகத்திற்கு தான். அவர் வாசித்து புத்தகங்களையும், வாசிக்க இருக்கும் புத்தகங்களையும் காண்பிக்கலாமென்று நினைத்திருக்கிறேன்.

இயக்குனர் “பூ” சசி மாதத்தில் இரண்டு தடவைகள் டிஸ்கவரி புத்தக நிலையம் சென்று புத்தகங்களை வாங்கிக் கொள்கிறார். தொடர்ந்து புத்தக கண்காட்சிகளுக்கு வருகை தருகிறார். இடைவிடாத வாசிப்பின் வழியாக அவர் இன்னொரு “பூ”வை தமிழ் திரைப்பட உலகுக்கு சூடுவார் என்றே நம்புகிறேன். ஏனெனில் அவரது வேர் ஆழமாக இலக்கியத்தில் பதிந்துள்ளது.

The post இயக்குனர் “பூ” சசி – வாசக கலைஞன் first appeared on அகரமுதல்வன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 08, 2023 10:30

December 7, 2023

விஷ்ணுபுரம் விருது விழா – 2023

இரண்டாயிரத்து இருபத்து மூன்றாம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது விழா நிகழ்வு இந்த மாதம் பதினாறாம், பதினேழாம் திகதிகளில் கோவையில் நடைபெறுகிறது. நவீன இலக்கிய வாசகர்கள் தவற விடக்கூடாத நிகழ்வு. பெறுமதியான உரையாடல்களும் அறிமுகங்களும் இங்குதான் கிடைக்கும். பதினாறு காலை பத்து  மணிமுதல் இலக்கிய அரங்கு தொடங்கும். விஷ்ணுபுரம் விருந்தினர்களான-  எழுத்தாளர்கள் வாசகர்களைச் சந்திப்பார்கள். வாசகர்களின் கேள்விகளுக்குப் பதிலளிப்பார்கள். இந்த உரையாடலில் கடந்த ஆண்டு விருந்தினராக கலந்து கொண்டிருக்கிறேன். எழுத்தாளராகவும் இலக்கிய வாசகனாகவும் பெருமை கொள்ளக்கூடிய தருணமது. இம்முறை எனதருமை சகோதரர் எழுத்தாளர் வாசு முருகவேல் விருந்தினராக அழைக்கப்பட்டிருக்கிறார். அவருக்கும் வாழ்த்துக்கள்.  எழுத்துக்களை வாசித்து விட்டு கேள்விகளை கேட்கும் முன்னுதாரணமற்ற வாசகர்களை இங்குதான் காணமுடியும்.

பதினேழாம் திகதி மாலை ஐந்து முப்பது விருது விழா நடைபெறும். எனது ஆசான்களில் ஒருவரான யுவன் சந்திரசேகர் விருது பெறுகிறார். ஆதலால் இன்னும் கூடுதலான  கொண்டாட்டமான விழாவாக அமைந்திருக்கிறது. சிறப்பு விருந்தினராக  இந்திய வரலாற்றாளர் ராமச்சந்திர குகா கலந்து கொள்கிறார். அவருடைய இரண்டு புத்தங்களை வாசித்திருக்கிறேன். சிறந்த மதிப்புக்குரிய ஆய்வாளர்.  அவரோடு நிகழும் உரையாடலுக்காக காத்திருக்கிறேன்.

விஷ்ணுபுரம் இலக்கிய நிகழ்வில் சந்திக்கலாம். நன்றி.

 

The post விஷ்ணுபுரம் விருது விழா – 2023 first appeared on அகரமுதல்வன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 07, 2023 10:30

அகரமுதல்வன்'s Blog

அகரமுதல்வன்
அகரமுதல்வன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow அகரமுதல்வன்'s blog with rss.