மாபெரும் தாய் – தொடும் நடனம்
காலையில் எழுந்து நேரத்திற்கு காப்பி, காலை நடையில் போகிற போக்கில் பேசும் அரசியல், வந்தவுடன் சுடுநீரில் இதமான குளியல், நல் உணவு, வீட்டைவிட்டு அலுவலகம் செல்லும் போது சொல்லிவைத்தார் போல வீட்டில் வளரும் நாய், எஜமானனை பார்த்து குழைந்து இருப்பது, பின் அலுவலகம், மாலை வீடு திரும்பி அதே காப்பி அரட்டை உணவு உறக்கம் என்ற சராசரிக்குள்ளே வாழும் பல்லாயிரம் உயிர்கள் போல அல்லாமல் “மாபெரும் தாய்” தொகுப்பில் வரும் உயிர்கள் வேறுபட்டவை. அடுத்த நொடி நம் வாழ்வு ஒரு லட்சியத்திற்காக போகும் என்ற துணிவும், திராணியும் கொண்ட மனங்களை , இந்த பல்லாயிரக்கணக்கான சராசரி மனங்கள் ஒரு போதும் புரிந்துள்ள முடியாது.
அங்கே அழுகையும், வெம்மையும், வெறுப்பும், கசப்பும் இருக்கிறது. ஒரு தீவிர போராளியான நளாயினிக்கு மாப்பிள்ளை தேடும் போது “வெ” ஆட்களா அவள் என்று புரோக்கர் கேட்கும் போது, அவள் யுத்த காலத்துலே மடிந்துவிட்டிருக்கலாம் என்றும் தோன்றுகிறது. அவளிற்கு கல்யாணம், குடும்பம், ஏன் ஒரு கட்டத்தில் போராட்டத்தை விடவும் அவள் வளர்க்கும் “லாரா” என்ற பூனை உயிருக்கு உயிராக தெரிகிறது, இறக்கும் தருவாய் வரையில்…
பாலன் கதையில் “ஏரோது ராஜாவின் கொலைப் படைக்கு பயந்து மரியாள் உம்மை மறைத்து வைத்ததைப் போல, எங்கள் குழந்தைகளை எங்கே மறைப்பது? எங்கள் வனாந்திரங்கள் இராணுவ முகாம்ளாகி விட்டன. வணக்கஸ்தலங்களை குண்டுகள் தகர்த்தது. அதுவும் போதாதென இராட்சத இயந்திரங்களால் உடைக்கிறார்கள்’ என்று பாலாவின் தாய் சிலுவையை சுமக்கும் இறையிடம், தன் சிலுவையை சுமந்து கொண்டு கேட்டு மன்றாடுகிறாள்.
இயக்கம் அழிவைச் சந்தித்த இறுதி நாளில், பெட்டி நிறைய மத்தாப்புகளை வாங்கி, வீட்டின் நடுவே கொளுத்தி மகிழ்ச்சி அடைந்த பூனைச் சுமதியை, வளசரவாக்கம் ஸ்ரீ தேவிகுப்பம் கொத்து ரொட்டி கடையில் பார்த்து கண்டுகொண்ட திருச்செல்வம், தன் இயக்கத்திற்கு எதிராக இருந்து வந்த பூனைச் சுமதியை காதலித்து வாழும் மன்னிப்பின் கோர்வையும் நம்மை ஏதோ செய்துவிடுகிறது.
இப்படி இந்த தொகுப்பில் பன்னிரெண்டு கதைகள் உள்ளன. அனைத்து கதைகளும் போருக்கு பின்னே நிகழும் எதார்த்தமும் அது தரும் குரூரமும் ஏதோ, ஒரு போதும் போரை பார்க்காத ஒருவனுக்குக் கூட மன அழுத்தம் தருகிறது. போராட்டம் நடக்கும் தருவாயில் வரும் எழுத்து ஒருவகை எழுச்சி தரும். காரணம் முடிவு தெரியாது. நாம் தான் நிச்சயம் வெல்வோம் என்ற ஒளிக் கீற்று மட்டுமே இருக்கும்.
ஆனால் லட்சியத்திற்காக போரில் இறங்கியவர்களை வஞ்சித்த போரில் உலவிய மனிதர்கள் பற்றியும், காதல், ஏமாற்றம், வஞ்சகம், சூழ்ச்சி இவை எல்லாம் கண் முன் தெரியும் போது மனம் நிலை தடுமாறாமல் இருக்கவே முடியாது. தேவதச்சனின் ஒரு கவிதை இப்படி இருக்கும்.
“காற்றில் இலைகள் நடனமாடிக்கொண்டு இருந்தன
என்னால் தொடமுடிந்தது
இலையைத்தானே தவிர
ஒரு போது தொட முடியவில்லை
அதன் நடனத்தை.”
இந்தத் தொகுப்பை படித்த உடன் என்னால் இலையை மட்டுமே தொடமுடிந்தது. அது தான் சாத்தியமும் கூட. அதன் கோர நடனத்தை இனி யாருமே தொட வேண்டாம் என்று நினைத்துக்கொண்டு, இந்தக் கதைகளை எழுதிய அகரமுதல்வனுக்காய் தளுதளுப்போடு சில துளிகளை சிந்திந்திக் கொள்கிறேன்.
– உ. முத்துமாணிக்கம்The post மாபெரும் தாய் – தொடும் நடனம் first appeared on அகரமுதல்வன்.
அகரமுதல்வன்'s Blog
- அகரமுதல்வன்'s profile
- 17 followers

