அகரமுதல்வன்'s Blog

September 5, 2025

September 4, 2025

September 3, 2025

மரம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 03, 2025 10:40

September 2, 2025

வருக

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 02, 2025 10:07

September 1, 2025

Tharana- 18 Miles

படகொன்று அலைகளினூடே செல்லும் போது
நாளங்களை அடைத்து மூச்சு நடுங்குகின்றது.
பெருங்கடலின் பேரிரைச்சலில்
கண்கள் வெறிச்சோடி அச்சத்தில் அமிழ்கின்றன

மேலும் மேலும்

பிரபஞ்ச வெளியெங்கும்
புதைத்துக் கொள்ள போதுமானவரை
அவர்களிடம் சவங்கள்,
ஏனெனில்
அவர்களுக்கான நாடு அவர்களிடமில்லை.

எழுந்து ஆர்ப்பரிக்கும் அலைகளிடம்
கண்ணீர் விசும்பிக் கேட்கிறது
குழந்தை
இந்தக் கொடிய பயணம்
எப்போது முடியுமென?

தன்னை இரக்கப்பட இங்கு யாருமில்லையென

ஏதுமறியா இக்குழந்தை எப்படியறியும்?

முன்னர் படகொன்றில் புகலிடம் தேடி
காணாமல்போனவர்களின் குருதிகள் அலை அலையாய் எழுகின்றன.

மரண அறிவுப்புக்கள் படகுகளில் தொங்கும்
கடல்வெளியில் சவக்குழி மணம் நீந்த
அவலப் பாடலை தேம்பி தேம்பி பாடுகிறார்கள்
ஆதி மொழியில்.

 

சில தினங்களுக்கு முன்னர் வெளியான Tharana- 18 Miles என்ற பாடலை நீங்கள் கேட்டிருக்கவும் பார்த்திருக்கவும் வாய்ப்பு உண்டு. “பேச்சுலர் ” திரைப்படத்தின் இயக்குனர் சதீஷ் செல்வகுமார் இந்தப் பாடலை இயக்கியிருந்தார். Think music india நிறுவனம் இதனைத் தயாரித்து இருந்தது. இந்தப் பாடலோடு எனக்கு ஈடுபாடு தோன்றியதற்கான காரணங்கள் பலவுள்ளன. சப்த கலவைகள் எதுவும் செய்யப்படாதவொரு கட்டத்தில், தயாரிப்பு பணிகளில் இருக்கும் போதுதான் இந்தப் பாடலை இயக்குனர் காண்பித்தார். ஒரு முன்னோட்டத் திரையிடலை ஒருங்கிணைப்பு செய்யும் நிமித்தமாக அதனைப் பார்க்க நேர்ந்தது. தூரத்தே கேட்கும் இரைச்சலோடு திரை தோன்ற கொந்தளிக்கும் கடலில் ஒரு பெண் நின்று கொண்டிருந்தாள். பொங்கிப் புரளும் அலைகளுக்கு குறுக்காக வெறித்தபடி நிற்கிற அந்தப் பெண் இந்தக் கடலிடம் வேண்டுவது என்ன? பிரார்த்திப்பது எதனை? என்ற யோசனைகள் ஓடத்தொடங்கின. அவளைக் கண்ட ஒரு இளைஞன் அலைகளை மிஞ்சி நெருங்குகிறான். கடலின் எல்லைகள் பெயரிடப்படுகின்றன. தனுஷ்கோடிக்கும் ஈழத்திற்கும் இடையில் 18 மைல்கள் என்ற தூர அளவுகள் திரையில் உணர்த்தப்படுகிறது. அந்தப் பெண்ணை நெருங்கியவன் “இவ்வளவு ஆழத்தில என்ன பண்ணிட்டு இருக்க?” என்று கேட்பதில் இருந்து பாடலின் உரையாடல் தொடங்குகிறது.

இந்தப் பாடலின்  மிகப்பெரும் உன்னத தருணங்களாக அமைந்தவை எல்லாமும் உரையாடல்களே – ஒரு திரைப்படத்தின் மிகச் சுருக்கமான ஆதாரத்தன்மையை வெளிப்படுத்தும் பண்போடு எழுதப்பட்டிருக்கிறது. “உங்களுக்கு என்ன சத்தம் கேக்குது?” என்று அந்தப்பெண் கடலின் அலைகளில் உலாஞ்சியபடி கேட்கும் இடத்தில் கதை தீவிரம் கொள்ளுகிறது. அதற்கு இளைஞன் கூறும் சூழல் வர்ணனைகள் அந்தப் பெண்ணின் அடுத்த வசனத்தால் அடித்து சுக்குநூறாக்கப்படும் இடம் ஒரு மாபெரும் இனப்படுகொலையை நினைவுகூர வைக்கிறது. எறிகணைகளும், கொத்துக்குண்டுகளும், போர்விமானங்களும், பாலச்சந்திரன்களும், இசைப்பிரியாக்களும், வெள்ளைக்கொடிகளும் முள்ளிவாய்க்காலும் சடுதியாய் சீற்றம் கொண்டதொரு அலைமடிப்பை விடவும் அதிவிரைவாய் நினைவுக்குள் புரள்கிறது.

“பேச்சுலர்” திரைப்படம் இன்றைய தலைமுறையின் உறவுமுறைகளில் நிகழ்ந்திருக்கும் மாற்றங்களையும் அவர்கள் எதிர்கொள்ளும் வாழ்வையும் உணர்த்திய வகையில் சமகாலத்தன்மையை முன் நிறுத்திய படமெனக் கொள்ளலாம். அந்தப் படம் இன்னுமே வெற்றியை சென்று அடைந்திருக்க வேண்டியது. கலைத்தன்மை பிசகாத சிறந்த உருவாக்கமது. Tharana- 18 Miles பாடலைப் பார்ப்பதற்காக சதீஷ் என்னை அழைத்து விஷயத்தைச் சொன்னதும்  “நீங்கள் ஒரு சிறந்த படத்தை இயக்கியவர், ஏன் சுயதீனமான பாடலை உருவாக்கி நேரத்தை வீணாக்குகிறீர்கள்” என்று கேட்டேன். பதிலுக்கு “இல்லை முதல்வன் ஒன்று பண்ணியிருக்கிறேன். நீங்கள் வந்து பாருங்கள். உங்களுக்குப் பிடிக்குமென எண்ணுகிறேன்” என்றார்.

நான் அந்தப் பாடலை பார்த்து முடித்ததும் சதீஷிடம் சொன்ன வரிகள் இவை. “நீங்கள் செய்திருப்பது பெரிய காரியம். என்னளவில் இந்த பதினாறு நிமிடங்கள் ஓடும் பாடலில் சொல்லப்பட்ட பல விஷயங்கள் இதற்கு முன்பாக, இவ்வளவு நேரடித்தன்மையோடும் அழகியல் உணர்ச்சியோடும் முழு நேர்மையாக முன்வைக்கப்படவில்லை. இந்தப் பாடல் ஒரு முன்னுதாரணமற்ற கலைப்படைப்பு. இன்னும் சொல்லப்போனால் நீங்கள் கபிலன். நான் தாரணா என்றேன். உணர்ச்சி மேலிட என் கரங்களைப்பற்றி அணைத்துக் கொண்ட சதீஷ்க்கும் எனக்கும் இடையில் இருக்கும் தூரம் அதே கடல்தான்.”

இந்தியச் சூழலில் ஈழத்தமிழர் விவகாரம் முன்னெப்போதையும் விட இன்று கலைப்படைப்புக்களாக ஆகின்றன. கண்மூடித்தனமான வெறுப்புக்களையும், அவதூறுகளையும் முன்வைத்து திரைப்படங்கள் – வெப் – தொடர்கள் உருவாகின்றன. ஈழத்தமிழர்களின் நியாயமான  வாழும் உரிமைக்கான போராட்டத்தின் அடிப்படையை அறியாத – அறிய  விரும்பாத அறிவுஜீவிகளைப் போல, அரசியலாளர்களைப் போல படைப்பாளிகளும் உள்ளனர். இன்னொரு புறம் இன்றைக்கு உலகளாவிய சந்தை மதிப்புக் கொண்ட கதைகள் – ஈழத்திலிருந்து எழுதப்படுகின்றன. என்னுடைய கதைகளை திரைப்படங்களாகவும், வெப் தொடர்களாகவும் உருவாக்க பல முன்னணி இயக்குனர்கள் விருப்பம் தெரிவித்திருக்கின்றனர். ஆனால் அவற்றுக்கு இங்கே தளங்களும், தயாரிப்பாளர்களும் முன் வருவதில் சுணக்கம் உண்டு.

இந்தச் சூழலில் Tharana- 18 Miles ஐ – சாத்தியமாக்குவது எவ்வளவு பெரிய வலிமையான விருப்பமும் ஈடுபாடுமென எனக்குத் தெரியும். இது என்னுடைய பின் சந்ததிக்காக சொல்லப்படும் கதை. புகையைப் போல் ஒழிந்த எங்கள் வாழ்வையும், நடுக்கடலில் மீன்களின் இரையாய் மிதந்த எங்களின் குழந்தைகளையும், ஒரு கொள்ளியைப் போல எரியுண்ட எங்களின் வாழும் ஆசைகளையும் தூக்கிச் சுமந்து வந்து நின்ற இயக்குனர் சதீஷ்க்கு அப்போது எனது முகம். அதன் நிமித்தம் நான் மகிழ்ந்தேன்.

இந்தப் பாடலை காதல் பாடலாக பொருள் கொள்ளவும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அடிப்படையில் இந்தப் பாடலில் உள்ளது அதுதான். ஆனால் அதனுடைய நிறைவு எல்லை அதுமட்டுமல்ல. “கர்த்தாவே, ஆழங்களிலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன். ஆண்டவரே என் சத்தத்தைக் கேளும்; என் விண்ணப்பங்களின் சத்தத்திற்கு உமது செவிகள் கவனித்திருப்பதாக” என்ற வேதாகமத்தின் வரிகளை நினைத்துக் கொள்கிறேன். அகதிகளாக கடலில் பயணிக்கும் ஒவ்வொருவரின் விண்ணப்பங்களையும் தொகுத்துக்கொண்டால் இந்த நூற்றாண்டின் குரூரம் தெரிந்துவிடும்.

எல்லா உயிர்களையும் காப்பாற்ற பாற்கடலில் கலந்த விஷத்தை உண்ட எம்பெருமான் சிரியச் சிறுவன் அயலான் குர்தியை பிணமாக கரை ஒதுக்கியதை மறக்க இயலுமோ உலகத்தீரே! – இந்த நூற்றாண்டை குற்றவுணர்ச்சிக்கு உள்ளாக்கும் இரண்டு சிறுவர்களை எனக்குத் தெரியும். ஒருவர் அயலான் குர்தி, இன்னொன்று பாலச்சந்திரன். இருவரையும் கொன்றது அறமற்ற போரும் அதை வேடிக்கை பார்த்த இந்தக் காலமும்தான். இந்தப் பாடலில் கடலில் மூழ்கும் ஈழத்தமிழ் அகதியான தாரணாவை காப்பாற்றும் கபிலன் கடற்படை அதிகாரியாக இருக்கிறான். அலைகளில் தவிக்கும் ஒரு உயிர் காணும் வெளிமுழுதும் கொடிய தரிசனம். அந்தக் கணத்தில் கபிலன் தாரணாவை காண்கிறான். எப்புறமும் கடல் மோதும் ஒரு கணத்தில் நிலமற்ற ஒருத்தியை சுமந்து நிற்கும் கபிலன் தாரணாவுக்கு ஆலகாலம் அருந்திய சிவனை நினைவுக்கு கொண்டு வந்திருக்குமல்லவா! – ஒரு பெருமுரண் வழியாக உருவாகிறது தாரணாவுக்கும் – கபிலனுக்குமான சந்திப்பும் – நிகழ்தலும் – வழியனுப்புதலும் – உரையாடலும் – காதலுமென சமுத்திரம் சிறிதெனக் கொள்ளும் தருணங்கள் நிறையவே உள்ளன.

இந்தப் பாடல் பெரியளவில் சென்று சேர வேண்டுமென எண்ணியதற்கு காரணம் ஒன்றே ஒன்றுதான். அது கடலில் தத்தளிக்கும் அகதிகளை மட்டுமல்ல, தரையில் அகப்பட்டு பத்துக்கு பத்து கூடாரங்களில் காலங்காலமாய் அவஸ்தைப்படும் துன்பகரமான ஒரு வரலாற்றுச் சாட்சியையும் முன்வைத்திருக்கிறது. என்னளவில் கலைக்கு தேவையானது சத்தம் மட்டுமல்ல. ஆழமும். இந்தப் பாடலில் இடையிடையே வருகிற கபிலன் – தாரணா உரையாடல் மகத்துவமானவை. யாருக்கும் சொந்தமில்லாத பூமியின் கடலில் – நிலம் ஆக்கிரமிக்கப்பட்டவர்களை அலை விழுங்கும் கதையை சொன்னதுதான் Tharana- 18 Miles பாடலின் முதன்மை வெற்றி. அதனைக் கடந்து அந்தப் பாடல் இந்த உலகத்திற்கு சொல்ல விரும்பும் இன்னொரு கதையும் இருக்கிறது. விரைவில் திரைப்படமாக அதனைக் காண்பீர்கள்!

இயக்குனர் சதீஷ் செல்வகுமார் அவர்களுக்கும் அவரது குழுவிற்கும் என்னுடைய பாராட்டுக்களும் வணக்கமும். இதனை தயாரித்த Think music indiaவுக்கும் நன்றி. இந்த வாய்ப்பை எனக்களித்த டோரா திரைப்படத்தின் இயக்குனர் தாஸ் அவர்களுக்கும் நன்றி.

The post Tharana- 18 Miles first appeared on அகரமுதல்வன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 01, 2025 10:41

July 1, 2025

அருங்கணங்கள் நீள்க!

அகம் கேட்கும் தனிமையென ஒன்றுள்ளது. அதனை வழங்காது தவிர்க்கவே கூடாது. நம்மில் பலருக்கும்  தனிமை என்றவுடன் எதிர்மறை எண்ணத்தின் பொருண்மையாகவே அர்த்தம் திரள்கிறது. ஆனால் தனிமை அப்படியானதொரு தன்மை கொண்டதில்லை. தனிமைக்கு இயல்பிலேயே இருக்கக் கூடியது சிருஷ்டிக்கும் ஆற்றல். உள்வாங்கும் தெளிவு. காற்றோடும் மரங்களோடும், வெளியோடும் பிணைந்திருக்க கூடிய பிரபஞ்ச இணைப்பு. எல்லாவற்றுக்கும் மேலான ஒன்றாகக் கைகூடுவது தனது சுயத்தையே மெல்லத் தடவிக் கொடுக்கும் ஆதூரமான கரங்கள் தன்னிடமே இருக்கிறதென வியந்து வியந்து ஆனந்தப் பெருக்கில் கண்ணீரை உகுத்தல். காட்டுத் தேனின் அடையை அப்படியே கவ்விக்கொண்டால் பெருகும் இனிமை உளத்திலே பெருகும்.

தன்னைத் தனிமைக்கு ஒப்புக்கொடுத்தல் ஒருவிதமான கலை. ஆனாலொன்று தனிமையில் அமைந்திருக்கையில் உங்களிடமிருந்து மலர்வது என்னவென்பது முக்கியம். மாபெரும் பூந்தோட்டத்தின் உள்ளே அந்தரத்தில் பறந்து திரியும் வண்ணத்துப்பூச்சி நிறைவில் வந்தமரும் பூவில் தனிமைதான் கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமைந்து எழுந்த பூவின் மகரந்தத்தை ஏந்தி வந்து இப்போது அமரும் பூவிடம் கையளிக்கிறது. நான் கூறும் தனிமை இந்த வண்ணத்துப்பூச்சியினுடையதைப் போல ஆக்கத்தை நோக்கியும், செயலை நோக்கியும், படைப்பை நோக்கியும் மகரந்திக்க வேண்டும்.

ஆற்றங்கரையை ஒட்டி காலை நடைக்குச் செல்கிறேன். மரங்கள் அடர்ந்திருக்கின்றன. பறவைகள் கிளைகளில் பூத்திருந்து ஓசை எழுப்புகின்றன. நகரத்தில் காணவே கிடைக்காத குருவிகள் கெந்திக் கெந்திப் பறப்பதைப் பார்க்கவே தியானத்தில் கிடைக்கும் தரிசனம் போலாகிவிடுகிறது. கூவும் பூங்குயில்கள் திருப்பள்ளியெழுச்சியின் வரிகளை நினைவுபடுத்துகின்றன. இருள் போய் அகல கருணையின் சூரியன் எழுகிறது. இயற்கையின் திருவடியில் எத்தனை ஆடிகள் ஆசைகின்றன. ஒவ்வொரு அசைவுக்கும் ரூபங்கள் புதிது புதிதாய் மிளிர்கின்றன.

நடைக்கு வருபவர்களில் சிலர் வினோதமான பழக்கமுடையவர்கள். வயதானவர்கள் நிமிர்ந்த நடை நடக்க முண்டியடிக்கிறார்கள். இளவட்டங்கள் கையில் போனை வைத்தபடி ரீல்ஸ்சை இயக்கியபடி ஜாக்கிங் செல்கிறார்கள். இன்னும் சிலர் வியர்வையை வெளியேற்றவே நடைக்கு வருகிறவர்கள். அவர்களிடம் அப்படியொரு மூர்க்கம். ஓட்டமும் நடையுமாக ஒருவகை மேல்தட்டு உடல்மொழியை வைத்திருக்கிறார்கள். சிலர் மட்டுமே ஆசுவாசமாக நடைக்குப் பணிகிறார்கள்.

கிளைகளுக்குள் மறைந்திருந்து கூவியழைக்கும் குயிலை நின்று தேடுகிறார்கள். கெந்தியோடும் புலுனிக்குஞ்சுக்கு வழிவிட்டு தாவி நிற்கிறார்கள். கெளதாரிகள் குறுக்கறுக்கும் போது நின்று பார்க்கிறார்கள். பழுத்து விழுந்த தேக்கு இலையை எடுத்து, விசிறிக்கொண்டு கொஞ்சத் தூரம் செல்கிறார்கள். ஆற்றில் தூண்டில் வீசி இரைக்காக காத்திருக்கிறார் ஒரு புலம்பெயர் தொழிலாளி.

இத்தனைக்கு நடுவில் நானும் நடக்கிறேன். எனக்கு மரங்களின் அசைவிலிருந்து பிறக்கும் சப்தம் ஒத்தடமாய் இருக்கும். பூமி புலருவதற்கு முன்பாக தனிமையில் இருப்பதாக மனிதர்கள் எண்ணுகிறார்கள். எனக்கு அப்படித் தோன்றியதில்லை. அது எப்போதும் படைப்பாற்றல் பெருகும் தனிமையோடு தனது பலகோடி கரங்களால் சிருஸ்டித்துக் கொண்டே இருக்கிறது.

“முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே” மணிவாசகர் சிவனை இப்படியும் விளித்திருக்கிறார். தனிமையும் பழம்பொருள் தான். என்னுடைய அனுபவத்தில் தனிமை அழகானதும் படைப்பூக்கமும் கொண்டது. இயற்கையோடு நிழல் விரித்து அமர்ந்திருக்கும் போதெல்லாம் நான் தனிமையாகிவிடுகிறேன். அப்போதெல்லாம் எனது கண்கள் தேடுவது விதையை – மண்ணிற்குள் இருந்து முளைத்தெழும்பும் நம்பிக்கையை. அசையும் மேகத்தை அண்ணாந்து பார்த்தபடி அமர்ந்திருப்பதே ஒருவகையான தனிமை அனுபவம்தான்.

ஆனால் அது மிகமிக எளிமையான தொடக்க நிலை. இன்றைக்கு ஒரு மரங்கொத்தியைக் கண்டேன். எத்தனை அழகான பறவையது. அதனுடைய அலகின் கூர்மையொலியை கேட்டுக் கேட்டு வளர்ந்திருக்கிறேன். பனை மரங்களில் அது துளைபோடுகையில் காற்றள்ளி வருகிற அந்த லயம் – நினைக்கவே மண்ணள்ளித் தருகிறது.

ஒருநாள் மதியத்தில் மழை தூறி விட்டிருந்தது. அம்மம்மாவின் வீட்டு வளவில் நின்ற வடக்குமூலை பனையில் மரங்கொத்தி லயம் எழுப்பியது. நான் பனைமரத்தின் கீழே அமர்ந்திருந்து பார்த்தேன். பத்து நிமிடங்களுக்கு மேலாக அது தொடர்ந்தது. பிறகு அது பறந்துவிட்டது. ஆனாலும் என்னுடைய அகத்தில் மரங்கொத்தியின் லயம் கேட்டுக்கொண்டே இருந்தது. கண்கள் உறைந்து அப்படியே அண்ணாந்து பார்த்தபடி அமர்ந்திருந்த சம்பவம்தான் “இவனுக்கு விசர் முத்திப் போட்டுது” என்று அம்மம்மாவைப் பகிடியாகச் சொல்ல வைத்தது. தனித்திருத்தலும் தனிமையும் ஒன்றல்ல. அதுபோலவே தனிமையும் தனிமையுணர்வு ஒன்றல்ல.

இன்றைய தலைமுறையைச் சேர்ந்த பலரும் தனிமையில் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள் என்று சிலர் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். ஆனால் அவர்கள் தனிமையால் அல்ல தனிமையுணர்வால் பீடிக்கப்பட்டிருக்கிறார்கள். அது ஒரு விஷக்கொடியைப் போல அவர்களிடம் திரண்டு வளர்கிறது. இந்தச் சிறு பிராயத்திலேயே தனிமையுணர்வை நோயாக்கிக் கொண்டிருக்கிறார்கள். மன அழுத்தமும், கசப்பும், விலக்கமும் நேரும் போது அவர்கள் அதனிடம் சரணடைகிறார்கள்.

தோல்வியையோ, இழப்பையோ, அதிர்ச்சியையோ, கசப்பையோ, துரோகத்தையோ எதிர்கொள்ளும் திராணியற்று அதனிடம் மடிகிறார்கள். அவர்கள் இருட்டைப் போர்த்திக்கொண்டு மிரள்கிறார்கள். அவர்கள் முதலில் முடங்கிக்கிடக்கும் அறையின் ஜன்னல் கதவைத் திறக்க வேண்டும். ஒளி காணும் கண்கள் வாழ விரும்பும். காற்றை உணரும் தேகம் நம்பிக்கை கொள்ளும். நினைத்துப் பாருங்கள் இந்தப் பேரண்டம் தனிமையுணர்வு கொண்டால், இங்கு வாழும் உயிரினங்களின் கதி என்னவாகும்.

பேரண்டம் கருணை மிக்கது. நாளும் புத்தொளி தந்து நம்மைக் காக்கிறது. அளிக்கப்பட்டிருக்கும் வாழ்வில் ஒளியை நோக்கி மட்டுமே அமர்ந்திருக்க வேண்டும். நமக்கு ஒளி படையலிடப்பட்டிருக்கிறது. ஆகவே இருளுக்கு நாம் பலியாக முடியாது.

தனிமையுணர்வால் சிதைக்கப்பட்ட நண்பரொருவர் இப்போது மீண்டு வந்திருக்கிறார். மாத்திரைகளுக்கும் மருத்துவர்களுக்கும் தன்னை ஒப்புக்கொடுத்தளவில் மிகச் சிறு அளவிலேனும் தன்னை தனக்கே ஒப்புக்கொடுத்திருக்கலாம். மருத்துவர்களும் அதனைத் தான் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார்கள். மீள்வதற்கான வெளிச்சத்தை கண்டடைய அவர்கள் வழிகாட்டுகிறார்கள். இந்த நண்பர் நீண்ட வருடங்களாக சிகிச்சையில் இருந்தவர். இப்போது மாத்திரைகளை குறைத்துக் கொண்டு தனிமையுணர்விலிருந்து தப்பித்து வந்துவிட்டார். அவரது மந்தகாச புன்னகை பேரழகு.

“இந்தப் பாலைவனத்தின் அற்புதமே, எங்கோவொரு மூலையில் நீரூற்றை ஒளித்துவைத்திருப்பது தான்” – குட்டி இளவரசன் நாவலில் வருகிற இந்த வரிகளைத் தான் அவரைப் பார்க்கும்போது நினைவில் வரும். இன்றைக்கு அவர் முழுக்கு முழுக்க மதுரம் பெருகும் நீரூற்று. பாலை அவரிடமிருந்து புயலெனப் புறப்பட்டுவிட்டது. தனிமையுணர்வு காலங்களில் என்னுடன் உரையாடியிருக்கிறார். சில கடிதங்களை எழுதவும் செய்திருக்கிறார். எப்போதும் அவரிடம் சொல்லுவதுண்டு “ இங்கே செயலாற்றவே வந்திருக்கிறோம். என்றுமே அணையாத பெருஞ்சுடர் ஒவ்வொரு மனிதர் கையிலும் உள்ளது. அதனைப் பக்குவமாக பொறுப்புடன் இனி வரும் தலைமுறைக்கு கைமாற்றப் பணிக்கப்பட்டிருக்கிறோம். ஆகவே இதுபோன்ற இருளில் நமக்கு வேலையில்லை. எழுந்து வருக” என்பேன். அவர் பெருஞ்சுடரை அணைய விடாமல் மீண்டிருக்கிறார்.

நீண்ட நாள் கழித்து இன்றைக்கு என் அகம் தனிமையைக் கேட்டது. ஒருவகையான கொந்தளிப்பும், கோபமும் மேலறி பின் இறங்கித் தணிந்தது. திடீர் அலைச்சீற்றம் போல எப்போதாவது உளத்தில் நிகழக்கூடிய ஒன்றுதான். ஆனாலும் தனிமையை வழங்க வேண்டியிருந்தது. நடைக்குச் செல்லும் பாதையில் மேற்குத் திசை பார்த்தபடி அமர்ந்திருந்து இருவர் தியானம் செய்துகொண்டிருந்தனர். அவர்கள் முதுகில் கதிர்களை ஏவி சூரியன் எழுகிறான். ஆனாலும் அவர்கள் புறமுதுகு காட்டியபடி அமர்ந்திருந்து கண்களை மூடி மூச்சை உள்ளிழுத்து வெளியேற்றுகிறார்கள். அவர்களைக் கடந்து போனேன்.

இலைகள் உதிர்ந்த காட்டுத்தேக்கில் செம்பழுப்பு நிறத்தில் ஒரேயொரு இலைமட்டும் காற்றில் அசைந்து கொண்டிருந்தது. கொஞ்ச நேரம் அதனையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

எத்தனை அபிநயம்! எத்தனை அசைவுகள்! – தனிமை தருகிற ஆக்கம் பேராற்றல் கொண்டது. பிறகுதான் அந்த இலையின் கீழே பார்த்தேன். பெயர் தெரியாத பூச்சியொன்று வாழ்ந்து கொண்டிருந்தது.

அந்த தேக்கிலை பூச்சிக்கு  நிலம்.

என் தனிமைக்கு அருங்கணம் .

பூச்சியே வாழ்க! அருங்கணங்கள் நீள்க!

 

The post அருங்கணங்கள் நீள்க! first appeared on அகரமுதல்வன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 01, 2025 11:30

June 30, 2025

ரத்தங்களின் கூப்பிடல்கள்

நீதிமான்களுடைய நினைவுகள் நியாயமானவைகள். துன்மார்க்கருடைய ஆலோசனைகளோ சூதானவைகள்” வேதாகமத்தின் இந்தக் கூற்று, ஈழத்தமிழரின் மாபெரும் துயரத் தொடர்ச்சியோடும் பொருந்துகின்றன. முன்னர் தாம் கொல்லப்படுவதற்கு எதிராகப் போராடினார்கள். இன்றோ கொல்லப்பட்ட தமது உறவுகளை நினைவுகூரவும் போராடுகிறார்கள். இனப்படுகொலைக் களத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்ட மகவுகளையும், அம்மைகளையும், அப்பன்களையும் எங்கேயெனக் கேட்டுப் போராடுகிறார்கள். சமகால ஈழ இலக்கிய ஆன்மாவின் குருதியூற்றில் “காணமலாக்கப்பட்டோர்” என்பது ஆதாரமானதாய் உருப்பெற்றுள்ளது. போர் சார்ந்த மானுடத்துக்கத்தை இனிவரும் நூற்றாண்டுகளுக்கும் ஈழர்கள் எழுதுவார்கள் என்பது மிகையல்ல.

கவிஞர் கருணாகரனின் “காணாமலாக்கப்பட்டோருக்காக இரண்டு செயலிகள்” கவிதைத்  தொகுப்பிலுள்ள கவிதைகள் மூச்சூறி மூளும் பிரார்த்தனையின் கடுந்தவமாய்த் கொதிக்கின்றன. ஆதியில் கனவின் மீது எழுப்பப்பட்ட யுகமொன்றின் அந்தம் அணைந்த நாட்களில் விண் எழுந்த ஓலங்களின் நோவை மொழிபிளந்து ஆறாத காயத்தின் அனலாக தகிக்க வைத்திருக்கிறார் கருணாகரன். யுத்தத்திற்கு பிந்தைய வாழ்வின் பிடிமானத்திற்கு நினைவுகளும் – நினைவுகூரல்களும் அவசியமாகவேயுள்ளன. போரின் எச்சங்களாய்த் தப்பி நிற்கும் தெய்வங்களுக்கு முன்பாக தங்களுடைய கண்ணீரைப் படையலிட்டபடியிருக்கும் சனங்களுக்கு இந்த நூல் சமர்ப்பணம் செய்யப்பட்டிருக்கிறது. அப்பாவிகளின் கண்ணீரால் முடிவிலா ஈமத்தீ மிளாசுகிறது. அதன் மூட்டம் இந்தத் தொகுப்பு முழுவதும் பரவுகிறது.

கருணாகரனின் கவிதைகளில் காலம் ஓர் ஆற்றலுடைய சக்தியாக அமைந்துள்ளது. ஈழக் கவிதைகளின் தனித்துவமாக கருதப்படும் மரபுச் செறிவும், கலை மனதால் உள்வாங்கப்பட்டு வெளிப்பட்ட வாழ்வனுபவமும் அவரது படைப்புக்களுக்கு இன்றுவரை சிறப்பையே தருகின்றன. இத்தொகுப்பில் முக்கிய அம்சங்கள் நான்குள்ளன. ஒன்று: அழித்தொழிப்பின் சாட்சியங்களாகியிருக்கும் பெண்களின் உத்தரிப்பு. இரண்டு: ஊழிக்காலத்தின் சாட்சியாகவும் ஒப்பாரியாகவும் தொடரும் ஒரு வாழ்வுமுறை. மூன்று: என் பிள்ளை எங்கே? என் தந்தை எங்கே? என் அம்மா எங்கே? என் சோதரர் எங்கே? என்று கேட்கும் கதியற்றோரின் நோன்பு. நான்கு: ஈழக் கவிதைகளின் பொதுவான போர் சித்திரங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன. இன்னும் அழுத்தமாகச் சொன்னால் நேரடியான போர் விவரணைகளை – அதனது அவல  அனுபவங்களை விட்டு வெளியேறிய முதல் கவிதைத் தொகுப்பு எனவும் இதனைக் கூறலாம். ஈழ இலக்கியத்தின் முன்னோடிக் கவிஞர்களின் நிரையில் கருணாகரனுக்கு எப்போதும் இடமுண்டு. இத்தொகுப்பு இன்றுள்ள இளைய படைப்பாளிகளுக்கும் முன்னுதாரணமாக அமைந்திருக்கிறது.

“நீ இன்னும் வரவில்லை

உனக்கென எடுத்து வைத்த சோற்றுள்

இன்றும் நீரூற்றுகிறேன்

வருவாய் நீயெனத் திறந்து வைத்த

கதவுகளை சாத்தவில்லை

நீ வரவில்லை இன்னும்

இரவும்

மென்குளிரோடு அதிகாலையும் வரும்

பிறகொரு

செம்மாலைப்பொழுதும்

நீயின்றி…

நீயின்றித்தானா?”

இந்தியாவின் நெருக்கடிநிலை காலத்தில் கேரளத்தில் காணாமலாக்கப்பட்ட பேராசிரியர் டி.வி. ஈச்சரவாரியரின் மகன் ராஜன் வழக்கை சிலர் அறிந்திருக்ககூடும். காணாமலாக்கப்பட்ட பிள்ளைகள் வீடு திரும்புவார்கள் என்று காத்திருக்கிறார்கள். நம்புகிறார்கள்.

“ராஜன் வந்துவிடுவான் என்பதில் எனக்கு முழு நம்பிக்கையிருந்தது. இரவு எப்போதுமே ஒரு இலைச்சோறு தயாராக வைத்திருக்கும்படி நான் என் மனைவியிடம் சொல்லி வைத்திருந்தேன். அவன் திடீரென்று வந்துவிடுவான். பட்டினி கிடந்தது பசித்த வயிற்றுடன் சோர்ந்துபோன சரீரமுமாக அவன் வருவான். அப்போது சாப்பாடு தயாராக இருக்க வேண்டும். நிச்சயமாக அவன் வருவான். அவனால் வராமலிருக்க முடியாது.”  ஈச்சரவாரியரின் நினைவலைகளில் என்னைப் பீடித்த வார்த்தைகள் இவை.

பிராந்தின் நிழல் கவிந்தும், தமது சிறகுகளை துரிதமாக்கி தன்னுடைய கூடடையும் குஞ்சுப் பறவையாக மகவுகள் தப்பிக்கவேண்டுமென எண்ணுகிறார்கள். கருணாகரனின்  இந்தக் கவிதையில் அன்றாடம் அழிந்திருக்கிறது. பொழுதுகள் குலையாமல் நிகழ்கின்றன. ஆனால் எல்லாப்பொழுதிலும் காத்திருத்தலே இயற்கையாக அமைகிறது.

இத்தொகுப்பின் கவிதைகளில் விவரிப்பின் துல்லியமும் கலையமைதியும் வலுவாயுள்ளன. மீண்டும் மீண்டும் காலத்துடனும் இயலாமையுடனும் போரிட்டபடியே இருக்கும் ஒரு தொல்குடியின் நீதிக்கான பரிதவிப்பு தீவிரமாக்கப்பட்டிருக்கிறது. துயரம் கொண்ட எந்த மானுடரும் அவரது கவிதைகளோடு நெருக்கம்  கொள்வார். “காணமலாக்கப்பட்ட தந்தையை தேடிக்கண்டறிய ஒரு செயலி வேண்டுமென்று” சிந்திக்கும் சிறுவனின் குரல் வாசிக்கும் நம்மை நடுக்குவிக்கிறது.

ஈழத்தமிழர்க்கு நேர்ந்த கோரங்களையும் சிறுமைகளையும் எண்ணி உலக நாகரீகம் வெட்கப்படுமென்று நம்பிய காலங்கள் குருதிக்குமிழிகளாய் உடைந்து மாய்ந்து போயின. துக்கம் துக்கம் என்றொரு வார்த்தையால் படுகொலைகள் மறக்கடிக்கப்பட்டன. கருணாகரனின் கவிதைகள் இழப்பையோ அவலத்தையோ அறிக்கை செய்யவில்லை. கண்பிளந்திருக்கும் காயங்களோடு ஈழத்தில் எஞ்சியிருக்கும் வாழ்வின் சாத்தியத்தை விசாரணை செய்கிறார். காணாமலாக்கப்பட்டவர்களுக்காய் சதா கதவுகளை அகலத்திறந்து காத்திருக்கும் ஈழத்தின் ஒவ்வொரு வீடுகளிலும் அலைவுறும் வார்த்தைகள் தான் இந்தக் கவிதைகள்.

நன்றி – இந்து தமிழ் திசை

https://www.hindutamil.in/news/literature/1361948-kanamalakapattorukku-irandu-seyaligal-book-review-in-tamil.html

The post ரத்தங்களின் கூப்பிடல்கள் first appeared on அகரமுதல்வன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 30, 2025 11:30

March 24, 2025

கலியுகமப்பா! கலியுகம்

தர்மப்பசு ஒற்றைக்காலில் நிற்கும் காலத்தை கலியுகம் என்பார்கள். நாம் நின்று கொண்டிருப்பதும் அதே யுகத்தில்தான். தர்மம் என்பது எந்தக் காலத்து அடிசில் என்று கேட்பவர்களும் நம்மில் உளர். அதனாலேயே தர்மம் குறித்து மேடைகளிலும், ஊடகங்களிலும் வழங்கப்படுகிற போதனைகளும் பாவனைகளாய் வேஷம் தரித்திருக்கின்றன. இயற்கை அப்படியில்லை. அதற்கு வேஷமோ, முழக்கமோ தெரியாது. ஆனால் அது தர்மத்தோடு நிகழ்கிறது. “தர்மம் தலை காக்கும்” என்பதையெல்லாம் மறந்தொழிந்து போனோம். இப்படித்தான் அந்தப் பசுவை ஒற்றைக்காலில் நிற்க வைத்திருக்கிறோம். வெறும் உலகியலில் மட்டுமல்ல அறிவுச்சூழலிலும் கலியுகம்தான் போலும்!

சமீப காலங்களில் அறிஞர்கள் என்று சபைகளில் அறிவிக்கப்படும் பெயர்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. ஆய்வாளர்கள் புற்றீசல்கள் போல எங்கிருந்து கிளம்புகின்றனரோ! அப்புறம் கவிஞர்களும், எழுத்தாளர்களும் நலிந்தவர்களா என்ன! ஒரு கதையை எழுதி, இலக்கிய இணையத்தளமொன்றில் வெளியானதும் வியாசர் எல்லாம் தனக்கு எம்மட்டு என்று கேட்கிறார்களே. என் ஒற்றைக்கதைக்கு முன்பாக மகாபாரதம் எல்லாம் எம்மாத்திரம் சகாவே – என்று கேட்ட ஒரு எழுத்தாளர் என்னுடைய நட்பில் இருந்தார். இந்தக் கேள்விக்குப் பிறகு அந்த நட்பை நீட்டிக்க விரும்பாத என்னையே எனக்குப் பிடித்தது.

காந்தி, பாரதி, சங்ககாலம், சங்கத்துக்கு முந்தைய/ பிந்தைய காலம், கல்வெட்டு, நாட்டாரியல், மானுடவியல் என நீளும் எண்ணுக்கணக்கற்ற தளங்களில் ஆய்வாளர்கள் என்று நம்பப்படும் சிலரின் அறிவை நினைத்தால் திக்கென்று இருக்கிறது. ஆய்வு என்பது அவ்வளவு எளிமையானதில்லை என்று அறிந்திருப்பதால் தான் என்போன்றோருக்கு இந்த நோவு வருகிறது. இதுமட்டுமா! இன்று கவிஞர்களைப் பார்க்கிலும் எண்ணிக்கையில் தன்னம்பிக்கை பேச்சாளர்கள் பெருகிவிட்டனர். “நான் கவிஞர் அல்லது எழுத்தாளர்  இல்லையா, என்னை ஏன் அந்த மூத்த எழுத்தாளர் பட்டியலில் சேர்க்கவில்லை? இதில் உள்ளரசியல் இருக்கிறது” என்று போர்க்கொடி தூக்கும் முகநூல் பதிவர்களின் பெருக்கமும் நிகழ்ந்துவிட்டன. களை பெருகி, பயிர் அழிக்கும் காலமிது.

கலியுகமப்பா! கலியுகம்!

சமீபத்தில் காந்திய ஆய்வாளர் என்று அறியப்படுகிற ஒருவரின் புத்தகத்தை வாசிக்க நேர்ந்தது. ஏற்கனவே பல நூல்களில் எழுதப்பட்ட தகவல்கள், அதனைச் சுருக்கி சுருக்கி வேறெந்தப் புதிய அணுகுமுறையோ, ஆற்றலோ அல்லாமல் ஆக்கப்பட்டிருக்கும் தொகுப்பு. இந்த நூலின் பின்னணியில் அந்த ஆசிரியர் பற்றிய குறிப்பில் இவர் ஒரு காந்திய ஆய்வாளர் என்று அடையாளமிடப்பட்டிருந்தது. இவரது ஏனைய நூல்கள் என்ன என்று தேடினால், முதல் புத்தகமே இதுதான் என்கிறார்கள். வேதனை! இப்படியானவொருவரை காந்திய ஆய்வாளர் என்று விளிப்பவர்களை நினைத்தால் நம் சாத்வீகத்திற்கு பங்கம் ஆகிவிடும். போகட்டும். பாரதிக்கும் இது போன்ற ஆய்வாளர்கள் வாய்க்கப் பெற்றுள்ளனர். அதனை நினைத்தால் நெஞ்சில் உதிரம் வடியும். குறிப்புக்களைத் தேடித் தொகுப்பதை மட்டுமே செய்பவர்  பதிப்பாசிரியரே அன்றி ஆய்வாளர் அல்ல என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.

பண்பாட்டு ஆய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதியை அறிந்திருப்பீர்கள்! அவருடைய ஆய்வுக் கட்டுரைகள் வியப்பளிக்கும் புரிதல்களையும், சிறந்த கருத்துருவாக்கங்களையும் தமிழ்ச் சூழலில் பிரசவித்திருக்கின்றன. அ.கா.பெருமாள் அவர்களின் உழைப்புக்கும் கள ஆய்வுகளுக்கும் நிகராக வேறு உதாரணங்கள் உண்டோ, இந்தப் பாமரம் அறிகிலேன்!. ஆ. சிவசுப்பிரமணியனின் எத்தனையெத்தனை நூல்கள். வியப்பும் பெருமையும் அடையும் வரலாற்றின் கசப்பான பக்கங்களையும் தோலுரித்துக் காண்பித்தவர். தொ. பரமசிவன் அவர்களின் “அழகர் கோயில்” ஆய்வு, காலம் முழுதும் நிலைக்கவல்லது. காந்தி என்கிற அவதார புருஷரை தனது ஆய்வுகளின் வழியாக நம்மிடம் அழைத்து வருகிற ராமச்சந்திர குஹாவின் அருஞ்செயல்களை எண்ணினால் மலைப்பாக இருக்கிறது. நம் கோவில்களின் கல்லெல்லாம் கதை சொல்லும் என்று நமக்கு அறிவூட்டிய குடவாயில் பாலசுப்ரமணியன் கல்வெட்டு ஆய்வுகளும் வரலாற்று ஆய்வுகளையும் எண்ணி எண்ணி வியக்கிறேன். கரசூர் பத்மபாரதி என்கிற ஆய்வாளர் நரிக்குறவர் இனவரைவியல் , திருநங்கையர் சமூக வரைவியல் ஆகிய இரண்டு மிகமுக்கியமான ஆய்வுகளை நமக்குத் தருவித்திருக்கிறார். இப்படியான பெருமைகொள்ளும் நிரையும் நிறையும் கொண்டது தமிழ் அறிவுச்சூழல். இன்னும் எத்தனையோ பெயரை இங்கே குறிப்பிட முடியும்.

பிறர் ஆய்வுகளை வாசித்து மனப்பாடம் செய்து இன்னொரு மேடையில் ஒப்பிப்பதால் ஒருவர் ஆய்வாளர் ஆகிவிடும் அற்பச் சூழலிது. தர்மம் மலிந்து போனபின் ஞானம் எங்கே பிழைக்கும் என்பதெல்லாம் தெரிகிறது. ஆனால் மனத்தில் பிலாக்கணம் கொதிப்பது நிற்கவில்லையே!

ஒரு கல்லூரிக்கு அழைக்கப்பட்டிருந்தேன். என்னுடன் உரையாற்ற ஆய்வாளர் ஒருவரும் அங்கிருந்தார். அவரது ஆய்வுகளை வாசிக்கும் அளவுக்கு கும்ப ராசியானாலும் ஜென்ம சனி என்னைப் பாதிக்கவில்லை. தனக்கு இணையான ஆய்வாளர் யாரும் தமிழில் இல்லை என்பதே அவரது மூடநம்பிக்கை. ஏனையவற்றில் அவரொரு முற்போக்கர். என்னுடைய நெற்றியில் நீறு அணிந்திருந்தேன். நீங்கள் ஒரு இலக்கியவாதி இப்படி நீறணியலாமா என்று புன்னகையோடு கேட்டார்.

அணியலாமே! நான் முதன்மைக்கும் முதன்மையான எனது இலக்கிய முன்னோடியாக கருதும் அப்பர், சம்பந்தர், சுந்தரர், மணிவாசகர் என எல்லோரும் அணிந்தார்கள். என்னுடைய பேயவள் – காரைக்கால் அம்மை அணிந்தாள். இலக்கியவாதி நீறணியக்கூடாது என்று மொழியின் ஆசாரக்கோவையின் எந்தவொரு ஒழுக்க விதியும் கூறவில்லை என்றேன்.

ஆய்வாளர்  ஆசாரக்கோவை என்கிற சொல்லை குறிப்பெடுத்துக் கொண்டே, “நான் எதற்கு மணிவாசகர் எழுதிய ஆசாரக்கோவையையும், திருப்பாவையையும் வாசிக்க வேண்டும்” கேட்டார். ஒரு சைவராக இருந்தும் ஆசாரக்கோவைக்கும் மணிவாசகருக்கும் தொடர்பை ஏற்படுத்த முடியாத என் போதத்தை யான் என் செய்வேன்! அமைதியாக இருந்துவிட்டேன்.

அன்று அவருடைய உரையைக் கேட்டிருந்தால், தமிழின் உன்னதமான ஆய்வாளர்களும் அறிஞர்களும் வெட்கித்ருப்பார்கள். வரலாற்றுத்தகவல்களில் அவ்வளவு பிறழ்வுகள். மொழி சார்ந்தும் அதனது இலக்கியம் சார்ந்தும் அவரது அறியாமையை அறிய முடிந்தது. பதினெண்கீழ்க்கணக்கில் உள்ள ஆசாரக்கோவையையே மணிவாசகரின் திருவாசகத்தோடு இணைத்தவர் இல்லையா இந்த தகைசால்! – கலியுகமப்பா கலியுகம்!

இன்று இலக்கியத்தை புதிதாக கண்டடைய எண்ணும் புதிய வாசகர்கள் இவ்வளவு களைகளையும் சுழிகளையும் சாதுரியமாக நீந்திக்கரையேற வேண்டியுள்ளது. தலை மூடும் அளவுக்கு களை எழுந்த களத்தில் நற்திசை தொடுவதெல்லாம் மாபெரும் சவால். இன்று இன்ஸ்டாகிராம் வழியாக தமிழின் நவீன கவிதையின் வரலாற்றை அறிந்து கொள்ள முடியுமென எத்தனிக்கும் வீணர்களை எனக்குத் தெரியும். “அன்பென்பது என்ன – இன்னும் நீ சுவைக்கத்தராத உன் விஷம்” மாதிரியான கசடுகள் பகிரப்பட்டுக் கொண்டே உள்ளன. ஆஹா! என்னே கவிதை! என்று வேறு பின்னூட்டங்கள் இடப்படுகின்றன.

சிறந்தவற்றை அல்ல நல்லவற்றைக் காண்பதுவே அரிதாகிவிட்ட சூழல் இது. முகநூல் வழியாக தோன்றிய ஒரு அழிவுச் சுழி. அங்கிருந்த மெல்ல நாளேடுகள் வரைக்கும் சமூக ஊடகங்களின் கசடுகள் வந்தேறுகின்றன. இவற்றையெல்லாம் கடந்தும் ஒருவர் சிறந்த இலக்கியங்களை நோக்கி வந்தடைகிறார் என்றால் அந்த வாசகர் மிக முக்கியமானவர். அப்படியானதொரு திரளை நோக்கித்தான் இலட்சியமிக்க நற்செயல்களை கையளிக்க மெய்யான அறிவுஜீவிகள் உழைத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆசாரக்கோவைக்கும் திருக்கோவைக்கும் வித்தியாசம் தெரியாத மொழி ஆய்வாளர்களுக்கும் அறிஞர்களுக்கும் ஒருபடி மேலானவர்கள் இந்த வாசகர்கள். அவர்கள் புதிய வெளிச்சத்தை நோக்கி வருகிறார்கள். தம்மை ஒரு பண்பாட்டு நடவடிக்கைக்கு ஒப்புக்கொடுக்கிறார்கள். வாசிப்பை ஒரு வேள்வியாக கருதுகிறார்கள். அப்பழுக்கற்ற தமது தேடல் மூலம், மொழியில் நிகழும் வாழ்வை வாழ்ந்து விடத்துடிக்கிறார்கள். தம்மை எப்போதும் இலக்கியத்தைக் கொண்டாடும் ஒருவகையான களிப்புடன் எதிர்கொள்கிறார்கள். நான் மேற்கூறிய பாதிவெந்த பாவனை அறிவுஜீவிகளை இவர்கள் எளிதில் அடையாளம் காண்கிறார்கள். வாழும்                 தி. ஜானகிராமன், வாழும் கு. அழகிரிசாமி என்று தமக்குத்தாமே பட்டம் சூட்டிக்கொண்டு அலையும் வீணர்களை எளிதில் நிராகரிக்கிறார்கள். இன்னொரு வகையில் கரையேறி வந்தபின் தம்மை மூடிநின்ற களைகளை இந்த வாசகர்களே அகற்றித் தள்ளுகிறார்கள். இவர்களைத்தான் நான் மிகவும் நம்புகிறேன்.

ஏனெனில் இவர்கள் தாங்கள் கற்றுக்கொள்ளும் கலைக்கு குருவைத் தேடுகிறார்கள். மாணாக்கருக்கு இருக்கக் கூடிய மெய்யான பணிவும் ஞானத்தை ஏந்தத்துணியும் ஆற்றலும் இவர்களிலும் எல்லோருக்கும் வாய்க்காது. வாசிக்க வாசிக்க அறிவுச் சேகரத்தில் குவிந்திருக்கும் தகவல்களும் தெரியும் என்கிற மமதையும் சிலரை இங்கிருந்தும் நீக்கிவிடும். ஒளியை நோக்கி தவமிருப்பவர் கண்களைத் திறவாதிருப்பதைப் போல குருவிடம் நடந்து கொள்ள வேண்டும். அப்படித்தான் அறிய வேண்டும் என்றால் அதுபோலொன்று தேவையே இல்லை என எண்ணுவோர் அடைந்த உயரம் என்று எதுவும் இல்லை.

சமீபத்தில் “ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம்” என்கிற உ.வே.சாமிநாதையர்  அவர்கள் எழுதிய புத்தகத்தை வாசித்தேன். தமிழில் குருமரியாதைக்கு சிறந்த எடுத்துக்காட்டுகளில் அந்த நூல் எழுதப்பட்டிருக்கும் முறையே ஒன்றெனலாம். குருவின் அடையாளத்தை மாணவர் சொல்லச் சொல்ல வரைந்த ஓவியமே இன்று வரலாற்றுக்கு கையளிக்கப்பட்டிருக்கும் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் உருவமாக இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா! – ஆச்சரியம் தான்.

என் தலைமுறையில் எழுதப் புகுந்தோர் பலரும் தானொரு சுயம்பு என்கிறார்கள். இந்தச் சுயம்பு பெருமையைப் பலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன். அவர்கள் காலத்தின் இடையிலேயே நிழல் போல தடமற்று அழிந்திருக்கிறார்கள். ஏனெனில் அவர்கள் குருவணக்கத்தை மறந்தவர்கள் என்று நண்பர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தேன்.  “நீங்கள்  என்ன வீட்டிலுள்ள பழசுகள் மாதிரி.. என்று சலித்தார்கள்.

கலியுகமப்பா! கலியுகம். வாய்பொத்திக் கொள்கிறேன்.

 

 

The post கலியுகமப்பா! கலியுகம் first appeared on அகரமுதல்வன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 24, 2025 01:16

March 8, 2025

அது நிகழ்ந்தது

ன்றிலிருந்து நாய்கள் மீது பிடிப்பில்லாமல் போனதென துல்லியமாக நினைவுக்கு வரவில்லை. “இப்படி ஆகிவிட்டேனே” என்ற தன்னிரங்கலின் சூடு அடிக்கடி என்னைப் பொசுக்குகிறது. “அதையே அளைந்து கொண்டிராதே, ஏதேனும் உண்ணி இருந்தால் உன்ர உடம்பில ஒட்டிப்போடும்” அடிக்கடி சொல்லும் அம்மம்மாவே விண்ணுலகில் இருந்தபடி இந்த மாற்றத்தைக் குறித்து எண்ணுவாள். நாய்களோடு காட்டுப் புழுதியிலும், பனங்கூடல்களிலும் அலைந்து திரிந்து குளத்தில் ஒன்றாகக் குளித்துக் கரையேறியதெல்லாம் பொய்யாய்ப் பழங்கதையாய் கனவாய் மெல்லப் போனதுவோ அறியேன்.

வன்னியின் சிறந்த வேட்டையாடிகளில் ஒருவரான அப்புவோடு உடும்பு வேட்டைக்காக போகத்தொடங்கிய நாட்களில்தான் நாய்களோடு நெருக்கமானேன். வேட்டை நாய்களின் தடம் பற்றி காடளந்த கதைகள் ஏராளமுள்ளன. எனக்கு சூரன் மீதுதான் விருப்பம். வெல்வெட் மினுக்கத்தில் கறுப்பு நிறம் கொண்டவன். அவனது நெற்றிச்சுழியிலிருந்து கீழிறங்கும் வெள்ளை நிறம் ஒரு விழியுருட்டலில் தீர்ந்து போகும் அளவுக்கு சிறிது. அழகின் கொடுப்பினையே அந்தரத்தில் அழிவதுதான். காதுகள் மிகமிகச் சிறியவை. கட்டைக்கால்கள். ஆனால் சூரன் வேட்டையாடுவதில் துடியானவன். காடே மணக்கும் அவனது வியர்வை வாசத்தில் என்பார் அப்பு.

இந்தச் சூரன் எங்களுடைய வீட்டில் பிறந்தவன். ஆறு குட்டிகள் ஈன்ற தவிட்டின் குழந்தை இவன். அப்பு குட்டியிலேயே வந்து அவனைத் தூக்கிச் சென்று வேட்டையாடுவதற்கு ஏற்றபடி வளர்த்தெடுத்தார். வேட்டைக்காக வளர்க்கப்படும் நாய்களின் வாழ்வுமுறை குறித்து வேறொரு தருணத்தில் எழுதியே ஆகவேண்டும். ஏனெனில் விலங்குகளில் நாய்களைப் போல மனிதர்க்கு தோழமையாக இருக்கும் வேறொன்று இருப்பதாக என்னால் நம்பமுடியாது. கட்டளைக்கு கீழ்ப்படிவது பயிற்சியால் அல்ல. விசுவாசத்தால் என்றே தோன்றும். மனிதர்களுக்குள்ளேயே இல்லாத இந்த விசுவாசம், மனிதர்களால் வளர்க்கப்படும் நாய்களுக்கு எப்படி உருவாகிவருகிறதென்பது குழப்பமே.

என்னுடைய ஆறு வயதில் அக்காளொருத்தி வெள்ளை நிறச் சடை நாயை வாங்கி வந்திருந்தாள். இந்த வகை பொமேரியன் (Pomeranian) நாய்களுக்கு யாழ்ப்ப்பாணத்தில் அதிக மவுசு ஏறியிருந்த காலமது. எங்களுடைய சொந்தக்கார வீட்டில் வளர்க்கப்பட்ட நாய். அவர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பிற்கு இடம் மாறுவதால் அக்காவிடம் அதனை விட்டுச்சென்றார்கள்.

நாங்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள எங்களுடைய அம்மாவின் பூர்வீக கிராமத்தில் இடம்பெயர்ந்து வாழ்ந்து வந்தோம். கட்டி முடிக்கப்படாமல் கைவிடப்பட்டு பழைய வீடாக மாற்றம் கண்டிருந்த கல்வீட்டில் அந்த நாய் எங்களோடு நெருங்கியிருந்தது. அதற்கு “ரோஸியோ, ரொக்சியோ, ரொம்மியோ” என்று பெயர். நான் “சடை” என்றுதான் கூப்பிடுவேன். அதற்கு வாராவாரம் குளிப்பாட்டுதல். அலங்காரம் செய்தல் என்பன நிகழும். அக்காவை விட்டு கீழிறங்காது. அக்காவின் வாசனையே மெள்ள மெள்ள சடையனுடையதாக மாறிவிட்டது. “நாய்க்குட்டி விசரி அதக் கீழ இறக்கி விடடி” என்று சொல்லாதவர்கள் மிகக் குறைவு.

பூட்டம்மா எங்களுடைய வீட்டிற்கு வரவே மறுத்தாள். அப்படி வந்தாலும் தண்ணீர் குடிக்கவே விரும்பாதிருந்தாள். வீடெங்கும் நாய் மயிர் என்றாள். அவள் சொன்னது முழு உண்மைதான். பஞ்சு பறப்பது போல மயிர் மயிராய் வீடு மிதந்தது. அக்காவுக்கு அதொன்றும் குறையில்லை. இந்த நாயோட தன்மையே அப்படித்தான் என்று விளக்கம் அளித்து முடித்தாள். ஒரு பருவத்துக்கு அப்படி மயிர் உதிரும். பிறகு அது நேராது என்று அவள் சொன்னதுதான் நடந்தது.

“இடம்பெயர்ந்து வந்து சாப்பாட்டுக்கும் வழியில்லாமல் இருக்கிறவைக்கு பொமேரியன் நாய் ஒரு கேடா” என்று கேட்ட யாழ்ப்பாணத்துச் சொந்தக்காரர்களுக்கு வந்த கொதிப்பின் பின்னணியை அறிந்தபோது கொஞ்சம் குமட்டி விட்டது. அதாவது அந்தக்காலத்தில் இதுபோன்ற வெளிநாட்டு நாய்களை வளர்ப்பது பணக்காரர்களின் அடையாளமாம். அதெப்படி இவர்கள் வளர்க்கலாம் என்ற மேல்நிலை மனோபாவத்தின் புகைச்சலன்றி வேறில்லை. பிறகு சடையனுக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. நாங்கள் மீண்டும் வன்னிக்குப் போனபோது யாரிடமோ கொடுத்துச் சென்றோம் என்றே நினைக்கிறேன்.

வன்னியில் எங்களுடைய வீட்டில் நான்கு நாய்கள் இருந்தன. முறையே வரியன், இரும்பன், தவிடு, பீமன் என்ற நாமங்கள். இதில் தவிடு மட்டும் பெட்டைகுட்டி. சூரனை ஈன்றது இவளே. வரியன் நன்றாகச் சாப்பிடக்கூடியவன். மாட்டிறைச்சி மணந்தால் போதும், அந்த வாசனையிலேயே மூன்று சட்டி சோறை முடித்துவிடுவான். சாப்பிட்டுவிட்டு ஒரு பனையின் கீழே சென்று மண்ணைக்கிளறி ஈரப்படுக்கையில் பள்ளிகொள்வான். அவனுக்கு சோறும் உறக்கமும் மட்டுமே விதிக்கப்பட்ட வினையாக்கும். இரும்பன் எவரைக் கண்டும் அஞ்சுவதில்லை. குரைக்காமலேயே காரியத்தில் கண்ணாயிருப்பவன். ஒவ்வொருவரின் காலடியின் நோக்கமும் அறிந்து வாலாட்டவும், கவ்விப்பிடிக்கவும் தெரிந்தவன். பெரிதாக பந்த பாசங்களிலும் பிடிப்போ நாட்டமும் இல்லாதவன். எப்போதும் தன்னுடைய பூசலான கண்களின் வழியாக தெருவையே பார்த்துக் கொண்டிருப்பான்.

தவிடு ஊரறிந்தவள். பிள்ளைகளை ஈன்று ஈன்றே நோவில் கிடப்பவள். ஒருகாலத்தில் எங்களூரின் பெருமளவிலான நாய்களை ஈன்ற அன்னை தவிடுதான்.

பீமன் – நாங்கள் அவனை வீமன் என்றுதான் அழைப்போம். பெயருக்கு ஏற்ற பலசாலி. சூரனின் தந்தையாக நான் நினைத்துக் கொள்வது இவனைத்தான். அயலில் மேய்ந்துகொண்டிருக்கும் கோழிகளை விரட்டிப்பிடிப்பதில் வீமன் கொஞ்சம் அவப்பெயர் பெற்றிருந்தான். வேறு வேறு காலங்களில் ஒரே வீட்டின் நான்கு கோழிகளையும் வீமன் விரட்டிப்பிடித்து தின்றதை சிலர் பார்த்திருக்கிறார்கள். அதனால் கோபமுற்ற அந்த கோழி வீட்டுக்காரர் உணவில் நஞ்சைக் கலந்து பீமனுக்கு அளித்திருக்கிறார். வீமன் அதனை நுகர்ந்து பார்த்து சாப்பிடாமல் தட்டிவிட்டிருக்கிறான். அதனால் கோபமுற்றவர் வீமனை அடிக்க தடிகொண்டு வந்திருக்கிறார். அவன் நகராமல் நின்றபடி அவர் மீது பாய்ந்து வந்திருந்தான். எந்தக் கடியும் இல்லை. எந்தக் கீறலும் இல்லை. சும்மாவொரு விளையாட்டு என்பதைப் போல வீட்டில் தணிந்திருந்தான். அயலவருக்கு நான்கு கோழிகளையும் வாங்கிக் கொடுத்து வீமனைக் கண்டித்தோம். ஆனாலும் அந்தச் செயலை வீமன் தொடர்ந்து செய்து வந்தான்.

ஊரில் நாய்களோடு வாழ்வது கொடுப்பினை. அவற்றின் செல்லச் சிணுங்கல்கள். காதசைவுகள். வால் அசைவில் அதிகரிக்கும் குழைவு என எல்லாமும் ஒருவகை போதை நிலை. சில மதிய வேளைகளில் என்னுடைய முகத்தை நக்கி, உறக்கத்தில் இருந்து எழுப்பும் வீமன் ஸ்நேகிதன் போல. தன்னந்தனியாக காட்டிலும், வீதியிலும் நடந்து செல்லும்போது மூச்சிரைக்க ஆனந்தித்து ஓடிவரும் அவன் வழிக்காவல். காய்ச்சலோ, உடம்பு நோவோ வந்து வீட்டிற்குள் முடங்கிக்கிடந்தால் உள்ளே வந்துபார்த்து என் பாயின் அருகிலேயே அமர்ந்திருக்கும் போது வைரவர். எக்கணமும் உன்னோடு, எத்திசையும் உன்னோடு என்றிருப்பது காதல் அன்றி வேறேது. வீமன் அப்படித்தான் இருந்தான். நானும் அப்படித்தான் மண்ணில் விழுந்த நாவல் பழமென நாய்களோடு ஒட்டிக்கிடந்தேன்.

பின்னைய காலங்களில் மீண்டும் சடை நாய்க்குட்டியை வளர்க்க வேண்டியிருந்தது. அம்மாவிற்கு தெரிந்த ஒருவரின் வீட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட குட்டி. அக்காவுக்கு அதை வளர்ப்பதில் ஒரு நிறைவு. போர் தொடங்கி கடுமையான சூழலை நோக்கி வன்னி விரைந்து கொண்டிருந்தது. போர் விமானங்களின் இரைச்சல் கேட்டாலே அது குரைக்கத் தொடங்கிவிடும். ஒருநாளில் அது குரைக்காமல் இருக்கும் மணிநேரங்கள் மிகமிகக் குறைவே. ஏனெனில் அது குரைப்பதற்கு பிறந்ததென்று நம்பியது என்றே தோன்றுகிறது.

நாங்கள் இடம்பெயர்ந்து ஒவ்வொரு இடங்களுக்குப் போகும்போதும் அழைத்துச் சென்றோம். இறுதியாக முள்ளிவாய்க்காலிலும் அது பிழைத்திருந்தது. கடுமையான எறிகணைகள், அழுகுரல்கள், மனித மாம்சங்கள் என மானுட அழிவின் பிரளயத்தைப் பார்த்து குரைப்படங்கி நின்றது. அதனுடைய கண்கள் பதுங்கு அகழியின் இருண்ட மூலையிலேயே உறைந்து நின்றது. உண்பதற்கு உணவில்லாத நாட்கள் அவை. ஒரு வாயில்லாப் பிராணியை இப்படி வைத்து வதைக்கிறோமே என்று நொம்பலித்து அழுதாள் அக்கா. “இங்கு எங்கேயும் சாப்பாடு இல்லை. வேண்டுமானால் கடல் மண்ணைத்தான் அள்ளித் தின்ன வேண்டும்” என்றேன்.

ஆனால் அதுவும் பட்டினி கிடந்து உயிர்பிழைத்திருந்தது. இறுதி நாட்களில் ஒருநாள் அதிகாலையில் கடுமையான எறிகணை வீச்சுக்களுக்கும், போர் விமானத் தாக்குதல்களும் நடந்த வேளையில் பதுங்குகுழியை விட்டு அது மேலறி பூமியின் மேலே நின்றது. அக்கா உள்ளேயிருந்து அதை அழைத்தபடி இருந்தாள். அது உள்ளே வராமல் போனால், தானும் வெளியேறி விடுவதாகச் சொன்னாள். அவளை கோபம் கொண்டு அறைவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை.

“ஒரு நாய்க்காக உன்ர உயிரை விடப்போகிறியோ” என்று கேட்டேன்.

“என்னடா சொன்னீ….! ஒரு நாய்க்காகவோ!. அது என்ர ரோஸி” என்று சொன்ன அக்கா, பதுங்குகுழியை விட்டு வெளியேறினாள்.

ரோஸியைக் காணவில்லை. அவள் ஆயிரக்கணக்காக காணாமல் ஆக்கப்பட்டவர்களைப் போல காணாமலேயே போனாள். அக்கா மாரில் அடித்துக் கொண்டு அழுததை வானம் பார்க்கவில்லை. அதனை மறைத்தபடி கந்தகப் புகை பெருவளியை மறைத்திருந்தது.

ரோஸி போலவே எங்களது எல்லாமும் காணாமல் போனது ஊழிக்கதை.

***

இன்று நாய்களைக் கண்டாலே ஆகமாட்டேன் என்கிறது. சென்னையின் தெருக்கள் சிலவற்றில் இரவில் பயணம் போவது திகிலாகவே உள்ளது. நாய்கள் அண்டாமல் இருக்க ஏதேனும் கொசுவிரட்டி போல இருந்தால் உடலில் தடவிக்கொள்ளவும் தயாராகவே இருக்கிறேன். நண்பர் ஒருவர் “நீங்கள் நாயைக் கண்டதும் உள்ளூர பயப்படுகிறீர்கள். அதற்கு அந்தப் பயம் தெரிந்துவிட்டால் உங்களை நோக்கியே வரும்” என்கிறார். உள்ளூரவெல்லாம் பயப்பிடவில்லை. வெளியவே பயப்படுகிறேன். உங்களுக்குத் தெரியவில்லையா என்று கேட்டேன்.

நகரத்தில் ஐந்து ரூபாய் பிஸ்கட் பைகளை வாங்கி நாய்களுக்கு தானம் அளிக்கும் பாரிகள் நிறையவே கண்களில் தெரிவர். அவர்கள் எந்தக் கடையில் வாங்குகிறார்களோ, அந்தக் கடையின் முன்பே அதனை உதிர்த்துக் கொட்டுவார்கள். நாய்கள் குழுமி நின்று பிஸ்கட்டுக்காக கடியுண்டு சண்டை போடும். வீதியில் வருகிறவர்கள் மிரண்டு தடம் மறப்பார்கள். அப்படியான நாய்கள் வீதியை குறுக்காக ஓடி ஓடி அளப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இந்தச் சங்கடங்கள் மென்மையானவை தான். ஆனால் எனக்கு உடல் சிலிர்க்கிறது.

நாய்களோடு அணுக்கம் பாராட்டும் என்னை நான் இனிமேல் சந்திக்க முடியாதென்றே நினைக்கிறேன். ஏனெனில் அந்த ஒட்டுதலில் இருந்து வெகுதூரம் விலகிவிட்டதாகவே எண்ணுகிறேன். சில நாய்களின் கண்கள் எனக்கு வீமனையோ, தவிட்டையோ ஞாபகப்படுத்துகின்றன. ஒருகணத்தில் அங்கிருந்து விழிப்படைந்து கால்களை பின் இழுத்துக் கொள்கிறேன். சில வேளைகளில் என் வீமனும் தவிடும் வரியனும், இரும்பனும் என்னோடு நின்றுவிட்டார்களா தெரியவில்லை.

வெகுநாட்களாக என்னுடைய காலடியில் ஒரு கறுப்பு நிறத்திலான நாய் அமர்ந்திருப்பதைப் போலவே தோன்றுகிறது. அது சூரன். அவனை நாங்கள் அப்படி கையறு நிலையில் விட்டுவிடவில்லை. வேட்டைக்கு போயிருந்த போது ஏதோ கடித்து இறந்து போனான். அவனை மண்ணிற்குள் இறக்கும் போது, காட்டுப் பூக்களும், உப்புக்கல்லும் போட்டுப் புதைத்தோம். எங்களுடைய வளவிலுள்ள தேசிக்காய் மரத்தடியில் அவன் வேராகிக் கிடப்பான். அவனை அங்கு புதைத்த பிறகே தேசிக்காய் மரம் பூத்துக் காய்த்தது. இப்போது என் காலடியில் சூரன் அமர்ந்திருக்கிறான். இந்தக் கட்டுரையை எழுதும்போதும் அவன் நாக்கின் ஈரம் என் கால் பெருவிரலை நனைக்கிறது.

“சூரா….கொஞ்சம் அமைதியாக இரு” எழுதிக் கொண்டிருக்கிறேன்.

அமைதியாக இருக்கிறான்.

அக்காவுக்கு இந்தக் கட்டுரைய அனுப்பி வைத்தேன் படித்துவிட்டு இப்படி எழுதியிருந்தாள்.

அன்பின் தம்பிக்கு!

என்றிலிருந்து நாய்கள் மீது பிடிப்பில்லாமல் போனதென துல்லியமாக நினைவுக்கு வரவில்லையென நீ எழுதியிருக்கிறாய். ஆனால் அந்தநாள் எனக்கு நினைவில் இருக்கிறது

“ஒரு நாய்க்காக உன்ர உயிரை விடப்போகிறியோ” என்று என்னை நீ கேட்ட நாளிலே தான், அது நிகழ்ந்தது”

 

 

 

 

 

 

The post அது நிகழ்ந்தது first appeared on அகரமுதல்வன்.

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 08, 2025 22:18

March 3, 2025

அந்தரத்தில் ஏந்திய பாதம்

சென்னையில் சில இடங்களுக்கு அடிக்கடி போவேன். புனித தோமையார் மலையிலுள்ள தேவாலயத்தில் பலநூறு ஆண்டுகால ஆலமரம் ஒன்றுள்ளது. அந்த மரத்தடியில் இருக்கும் கல்லிருக்கையில் அமர்ந்திருப்பேன். அந்த நிழல் சாதாரண மரநிழல் இல்லை. அந்தக் கல்லிருக்கையில் அமர்ந்திருந்தால் எதிர்ப்புறத்து கல்லிருக்கையில் வீடற்ற இயேசு (Homeless Jesus) உறங்கியபடி இருப்பார்.

அந்தச் சிற்பத்தை பார்த்துக் கொண்டிருப்பது ஒருவகை ஒத்தடம். வாழ்வின் களைப்பும் சோர்வும் அழிந்து போகுமொரு சிகிச்சையாக அமைகிறது. நண்பர்களையும் அங்கு அழைத்துச் சென்று உரையாடியிருக்கிறேன். எல்லோருக்கும் நெருக்கமானவராகி விடுகிறார் வீடற்ற இயேசு.

ஒரு நண்பர் அங்கிருந்து வரமறுத்தார். நேரம் ஆகிவிட்டது கீழே இறங்கலாமென்று சொல்லியும், இன்னும் கொஞ்ச நேரம் உட்காரலாம் என்றார். ஏனென்று தெரியாமல் கண்ணீர் உகுத்து விம்மினார். நான் இப்படியான அனுபவதத்தை இவ்விடத்தில் அடையவில்லை. அவர் கசிந்துருகினார். வீடற்ற இயேசுவின் கால்களையே பார்த்துக் கொண்டிருந்தார். “எவ்வளவு தூரமும் பாரமும் ஏந்திய பாதங்கள் இவை. அக்கிரமங்களை ஒழித்து சனங்களுக்காய் உழைத்த சரீரம்” என்றேன்.

“இவ்வளவு அகங்காரமும், கீழ்மையும் கொண்ட இந்த அற்ப மனுஷர்களுக்கு முன்பாக இப்படியொரு மானுடன் வீடற்று ஏன் இருக்க வேண்டும்?” என்றார் அந்த நண்பர்.

நாங்கள் அங்கிருந்து புறப்படுகையில் ஆலிலை ஒன்று உதிர்ந்து கீழே வந்தது. அதை அந்தரத்தில் வைத்தே பிடித்தேன். இலையில் சில தழும்புகள். சில ஓட்டைகள். பச்சையம் அழிந்து கரைந்து பாதிச் சருகாகியிருந்தது. இது இயேசுவின் ஒற்றைப்பாதம் என்றேன். நண்பரும் அதையேதான் நினைத்தார் என்றார்.

எனக்கு கடற்கரையில் அமர்ந்திருக்கப் பிடிக்கும். அப்போது தேவையானது அகத்தின் திரிதீண்டும் நேர்மறை எண்ணங்கள் மட்டுமே. அந்த ஒளியைப் பெருக்கத்தான் அநாதியான இயற்கையின் முன்பாக ஒரு மணல் துகளாக அமர்ந்திருக்கிறேன். ஒவ்வொரு அலை வருகையின் போதும் அழிவது எதிர்மறைகளே. மனிதர்கள் கடலுக்கு முன் அமர்ந்திருந்து தங்களுடைய இன்பங்கள் பெருகப் பிரார்த்திக்கிறார்கள். துன்பங்கள் நீங்க வேண்டுகிறார்கள்.

“அடிக்கடி கடலுக்கு செல்கிறீர்களே சலிப்பதில்லையா” என்று நண்பர்கள் கேட்பதுண்டு. நான் கடலுக்குச் செல்வதில்லை. கடலின் கரைக்குச் செல்கிறேன். அங்குதான் மானுடன் ஒரு பொருட்டில்லை என்பதை அவனது பாதங்கள் வரை வந்து தொடும் வெறும் நுரைகள் அறிவிக்கின்றன.

சென்னையில் பெசன்ட் நகர் கடற்கரை பிடித்தமானது. அந்தியை அழகாக்குவது கடல் வெளி. அந்தக் கடல் வெளியை அழகாக்கும் மெளனத் தியானிப்பு மனிதருள் புதைந்திருக்கும் அற்புத போதம். பெசன்ட் நகர் கடற்கரையின் மணல் வெளியில் அமர்ந்திருந்தால் சோதிடம் – குறி சொல்பவர்கள்  உள்ளங்கையைக் காட்டுங்கள் என்பார்கள். நெற்றி நிறைய குங்குமம் அணிந்த அம்மைகள் தங்களின் கையில் வைத்திருக்கும் பிரம்பினால் ஆரூடம் சொல்ல விரும்புகிறார்கள்.

சிலரிடம் மறுப்புச் சொல்லவே இயலாது. அம்மாவின் கனிவை அவர்களில் கண்டுவிடலாம். எப்போதாவது அப்படி ஒரு விடுபடல் வேண்டுமெனத்  தோன்றினால் உள்ளங்கையை விரித்துக் காண்பிப்பேன். இறந்தகாலம் – நிகழ்காலம் – எதிர்காலமென எல்லாவற்றையும் சொல்லுவார்கள். இங்கே நம்முடைய அறிவை நிலைநாட்ட வேண்டியதில்லை. எடுத்துக்கொள்ள விரும்பினால் ஏற்க விரும்பினால் பற்றிக்கொள்ள விரும்பினால் மறுதலிக்க விரும்பினால் ஏதெனினும் எல்லாமும் ஒரு பொழுது அனுபவம் மட்டுமே.

சென்னையிலிருந்து இரண்டு மணிநேர பயணத்தில் வருகிற திருவாலங்காட்டிலுள்ள இரண்டு கோவில்கள் எனக்குப் பிடித்தமானது. ஒன்று ஐம்பெரும் அம்பலங்களில் ஒன்றான ரத்தினசபை – திருவாலங்காட்டு சிவன் கோவில். மற்றொன்று அதன் அருகேயுள்ள பழையனூர் சாட்சி பூதேஸ்வரர் சிவன் கோவில். அப்பர், சம்பந்தர், சுந்தரர் என மூவரின் பாடலும் தாங்கிய  திருத்தலம் திருவாலங்காடு.

அதற்கு முன்பாகவே பேயார் காரைக்கால் அம்மையின் பதிகம் இந்தத் திருத்தலத்தில் எழுந்தது. ஆலங்காடு என்று அம்மை முடிக்கும் பதிகங்கள் எல்லாமும் மெய்சிலிர்க்க வைப்பவை.

சாட்சி பூதேஸ்வரர் சிவன் கோவில் வியக்க வைக்கும் பின்னணிக் கதை கொண்டது. சத்தியத்திற்காக தீயில் விழுந்து உயிர்துறந்தோர் – இறைவனை சாட்சியாக வைத்து அதனைச் செய்ததால் அங்குள்ளவர் சாட்சிபூதேஸ்வரர் ஆனார்.

இன்றைக்கு நாம் வாழும் காலத்தில் அறம் யாவையும் சாம்பலாக்கிக் கொண்டிருக்க, நம் முன்னோர் அறத்திற்காக தீயில் விழுந்த கதையை எவ்வாறு தரிசிக்க அருகதை உள்ளவர்களாக இருக்கிறோம் என்பது தனிக்கதை. இந்தக் கோவிலின் சூழல் ஆசுவாசம் தரக்கூடியது. அளவிற் சிறிய கோவில் எனினும், ஒரு நேர்மறை அதிர்வை, படைப்பூக்கத்தை தரவல்ல சக்தி அங்கேயுள்ளது என்பது என் அனுபவம்.

நான் அடிக்கடி செல்லும் இந்த இடங்கள் எல்லாமும் ஏதோவொரு வகையில் என்னைக் குணப்படுத்தும் திறனுடையவை. சிலவேளைகளில் தி. ஜானகிராமனின் சண்பகப் பூவையோ ஜெயமோகனின் மாடன் மோட்சத்தையோ சு. வில்வரத்தினம் கவிதையையோ படிப்பதைப் போலவே இவைகளும் அளிக்கின்றன செயலூக்கத்தையும் உற்சாகத்தையும் என்றால் சிலரால் நம்ப இயலாது.

உதிரும் ஆலிலையை அந்தரத்தில் ஏந்தி, இயேசுவின் பாதம் என்று சொல்லும் உனது அனுபவத்தை நான் ஏன் நம்பவேண்டுமென்று நீங்கள் கேட்பீர்களாயின்!

உதிரும் ஆலிலையையாவது நம்புங்கள்!

 

 

 

 

 

 

 

The post அந்தரத்தில் ஏந்திய பாதம் first appeared on அகரமுதல்வன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 03, 2025 22:05

அகரமுதல்வன்'s Blog

அகரமுதல்வன்
அகரமுதல்வன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow அகரமுதல்வன்'s blog with rss.