அகரமுதல்வன்'s Blog, page 9
August 10, 2024
காடன் கண்டது – பிரமிள்
The post காடன் கண்டது – பிரமிள் first appeared on அகரமுதல்வன்.
August 9, 2024
எலிசபெத் ஆன்ஸ்கம் – சைதன்யா
இரண்டாம் உலகப் போர் முடிவை தொடர்ந்து இங்கிலாந்தில் ஆண்கள் பெரும்பாலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த பட்டபடிப்புகளில் ஈடுபட்டனர். அதே சமயம் பெண்கள் பெருமளவில் பல்கலைக்கழகங்களுக்கு செல்ல துவங்கினர். இதனால் தத்துவம், கலை, அரசியல் கோட்பாடு போன்ற துறைகளில் பெண்களின் எண்ணிக்கை சரிசமமாக இருந்தது. பெண் சிந்தனையாளர்கள் பலர் உருவாயினர். மேடை அரங்குகளிலும் வானொலியிலும் தத்துவ உரைகளை ஆற்றினர். Oxbridge-ல் தத்துவம், அறக்கோட்பாடு, இலக்கியம் பற்றிய வகுப்புகளை எடுத்தனர். நூல்கள், ஆய்வு கட்டுரைகள் பல எழுதி வெளியிட்டனர்.
The post எலிசபெத் ஆன்ஸ்கம் – சைதன்யா first appeared on அகரமுதல்வன்.
August 7, 2024
மொழிபெயர்ப்பின் அகவழி
நவீன இலக்கியத்தின் வாசகராக இருப்பதில் பெருமையடையும் பலநூறு பேர்களில் நானுமொருவன். ஒரு யாகத்தின் பக்தியோடு இலக்கியத்தை தொழுவது என் தரப்பு. எழுதுகோலும் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம் என்று பாடியவனே என் மொழியில் மகாகவி. இலக்கியமொன்றும் புனிதமில்லை. அது வெறுமென எழுத்துத்தான் என்போரிடம் வாதிப்பது என் வழக்கமில்லை. எழுத்தை அறிவியக்கத்தின் முதன்மையாக கருதுவோரையே நான் மதிக்கவும் போற்றவும் செய்கிறேன். இது குருமரபை ஏற்றுக்கொண்ட என் சமயப் பயிற்சியிலிருந்து வந்ததாகவே எண்ணுகிறேன்.
சலம்பூவொடு தூபம் மறந்தறியேன் தமிழோடு இசை பாடல் மறந்தறியேன் என்று இறைவனை பாடிய அப்பர் பெருமானை நாளும் பொழுதும் நினைத்துக் கொள்கிறேன். அவருடைய மொழியையும் பாடல்களின் பொருண்மையையும் எண்ணி எண்ணி வியந்து தொழுகிறேன். என்னுடைய மொழிக்குருதியில் நற்றுணையாக அமர்ந்திருப்பது அவர்தானோ என்று அடிக்கடி மகிழ்ந்து கொள்கிறேன். இலக்கியத்தை இவ்வளவு ஆழத்திலிருந்துதான் கண்டடைய விரும்புகிறேன். இப்படித்தான் கொண்டாட விரும்புகிறேன். இப்படித்தான் எழுத்திடம் போற்றி பணியவும் தயாராகவிருக்கிறேன். இந்த உறுதியான மரபின் நீட்சியே ஆகுதியின் இலக்கியச் செயற்பாடு.
வாசிப்பின் தொடக்க நாட்களில் தமிழின் முதன்மையான எழுத்தாளர்களின் எழுத்துக்களை கண்டடைந்தேன். அன்றைக்கு எழுதிக் கொண்டிருந்தவர்களையும் வாசிக்கலானேன். அதன்பிறகு மெல்ல மெல்ல மொழிபெயர்ப்பு இலக்கியங்களை வாசிக்க எண்ணினேன். மலையாள இலக்கியங்களை தமிழில் வாசிக்க வேண்டுமென்ற தேடல் உள்ளவர்களுக்கு நிர்மால்யாவின் மொழிபெயர்ப்பை பரிந்துரைக்கும் அளவுக்கு, அவரது பணிகளை கண்டடைந்தேன்.
சாரா ஜோசப் எழுதிய “ஆலாஹாவின் பெண் மக்கள்” என்ற நூலினையே முதலில் வாசித்தேன். என்னை வெகுவாக பாதித்த நூலது. பிறகு எம். சுகுமாரனின் சிவப்புச் சின்னங்கள் என்ற சிறுகதை தொகுப்பு. கமலாதாஸின் என் கதை, சந்தன மரங்கள் என தேடித் தேடி படிக்கலானேன். தமிழின் மொழிபெயர்ப்பு சக்திகளில் “நிர்மால்யா” பெருமை அளிக்கும் பெயராக அமைந்திருக்கிறது என்றால் மிகையில்லை. “மொழிபெயர்ப்பின் அகவழி” என்பதன் ஒத்த சொல்லும் – நிர்மால்யா தான். மலையாள இலக்கியங்களை தமிழில் மொழிபெயர்க்கும் பலருக்கு இவரே ஒரு சிறந்த முன்னோடியாகவும் அமைந்திருக்கிறார்.
ஒரு வாசகராக, எழுத்தாளராக இவரைக் கொண்டாடுவது நன்றியறிவிக்கும் செயலே ஆகும். முப்பதாண்டுகளுக்கு மேலாக இலக்கியத்தில் செயலாற்றும் ஒரு சிறந்த இலக்கியக்காரரை கெளரவிப்பது ஆகுதிக்கு மன நிறைவை அளிக்கிறது.
இந்த ஒருநாள் கருத்தரங்கில் தமிழ் இலக்கியத்தின் மாபெரும் படைப்பாளிகள், மொழிபெயர்ப்பாளர்கள், வாசகர்கள், விமர்சகர்கள், ஆய்வாளர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். அவரது மொழிபெயர்ப்பில் வெளியான புத்தகங்கள் சில தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அவரால் எழுதப்பட்ட மகாத்மா அய்யன்காளி (வாழ்க்கை வரலாறு) நூலும் இந்த அரங்கத்தில் உரையாடப்படவுள்ளது. அனைவரும் வருக! ஆகுதி உங்களை அன்புடன் வரவேற்கிறது.
நன்றி.
அகரமுதல்வன்
The post மொழிபெயர்ப்பின் அகவழி first appeared on அகரமுதல்வன்.
தொகை பதிப்பகம்
என்னுடைய நண்பர் னோ அவர்களுக்கு சமீபத்தில் பிறந்தநாள் வந்திற்று. அழைத்துப் பேசவேண்டுமென்று நினைத்ததுதான் மிச்சம். அவ்வின்பம் வாய்க்கவில்லை எனக்கு. அன்று முழுதும் ஒரு திராபையான சினிமாவுக்கு கதை விவாதத்தில் இருந்தேன். அந்தக் கதை எழுதிய இயக்குனர் அக்குரோ குரோசாவை ஏழு தலைமுறைக்கும் சேர்த்துப் பார்த்திருக்கிறேன் என்றார். ஆனால் சவத்த மூதிக்கு ஒரு காட்சி எழுதவரவில்லையென தெக்கத்தி நண்பரொருவர் கொதித்தார். அவர் கதை விவாதத்தை விட்டு அவசரகதியில் வெளியேறினார். வழிமறித்த இயக்குனர் எங்கே போகிறீர்கள் என்று கேட்டமைக்கு தெக்கத்தி நண்பர் அளித்த பதில் இவ்வாறு வெளிப்பட்டது.
“எலே…நீ பார்த்த குரோசவாவை நானும் பார்க்கணும். அதுக்குத்தான் போய்ட்டு இருக்கேன். குமரன் காலனியில அவரு சிக்கமாட்டாரா என்ன” என்றபடிக்கு விறுவிறுவென விலகினார். அந்தக் களேபரங்களுக்கு மத்தியில் நண்பர் னோவை அழைத்து வாழ்த்துச் சொல்ல மறந்திருந்தேன்.
இன்று காலை னோ அவர்களை வேறொரு தேவைக்கு அழைக்க வேண்டியிருந்தது. அவருடைய தொகை பதிப்பகத்தில் வெளியான புத்தகமொன்றைப் பற்றி அறிவதே அந்த அழைப்பின் நோக்கம். அழைப்புப் பாடல் ஒலிக்கத் தொடங்கியது. “அத்தனை செல்வமும் உன்னிடத்தில், நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்” என்ற அந்தக்குரலில் எவ்வளவு தூய்மையும் பிரார்த்தனையும் பொழிகிறது. இணைப்புத் துண்டிக்கப்பட்டது. மீண்டும் அழைத்தேன். பாடல் தொடங்கும் போதே “சொல்லுங்க எழுத்தாளரே நலமாக இருக்கிறீர்களா? என்று பதில் அளித்தார். “அடேயப்பா உங்களோடு பேசுவது குதிரைக் கொம்பாக ஆகிவிட்டது” என்றேன். ஒரு மெல்லிய சிரிப்பும் அதனை ஒத்துக்கொள்வதைப் போலான அமைதியும் எதிர்புறத்தில் இருந்து வந்தது.
“சொல்லுங்கள் என்ன விஷயம். சும்மா அழைக்கமாட்டீர்களே” னோ கேட்டார்.
ஆமாம் உங்களுடைய பதிப்பகத்தில் சென்ற மாதம் வெளியான “ஜஜஜ” கவிதை தொகுப்பின் நிறையப் பிரதிகளை ஒரு பழைய புத்தகக் கடையில் காண முடிகிறதே, என்ன நடந்தது? ஒருமாதத்தில் இப்படியான முடிவுகளை எடுத்தது கவிஞரா? பதிப்பகமா? என்று கேட்டேன்.
எந்தப் பழைய புத்தக கடையென்று கேட்டார். மயிலாப்பூரில் உள்ள நடைபாதைக் கடையை அடையாளமாகச் சொன்னேன். அப்படியா அந்த நூலின் ஆசிரியர் அங்குதான் இருக்கிறார். நேற்றைக்கு முன்தினம் முப்பது பிரதிகளை வாங்கிக்கொண்டு போனார். எதற்கும் நான் விசாரித்துப் பார்க்கிறேன் என்றார்.
“அந்தக் கவிஞரது சொந்தவூர் வேறெங்கோ போட்டிருந்ததாக ஞாபகம்” என்றேன்.
“ஆமாம்… எள்ளூர் பக்கம் ஒரு சிறுகிராமம். இங்கதான் ஏதோவொரு காலேஜ்ல படிக்கிறதா பையன் சொன்னாப்டி” என்றார் னோ.
“கவிதைகள் எதுவும் தேறாது. ஆனா கண்டிப்பா புக் போடணும்னு அடம்பிடிச்சு ஆபிஸ் வந்திட்டே இருந்தான். அதுதான் புத்தகமாக்கினேன். நாம அழிஞ்சாலும் பரவாயில்லை. கவிதை வாழணும்ல” சொல்லிவிட்டு னோ சிரித்தான்.
நான் கடுமையாக கோபம் கொண்டு, நீ என்ன சும்மாவா போட்டிருப்பாய், அந்தப் பையங்கிட்ட எவ்வளவு தீட்டினாய் என்று கேட்டேன்.
“அடேய் எழுத்தாளா உன் அறவுணர்ச்சி கொண்ட விசாரணையைத் தொடங்கிட்டியா- என்று கேட்டபடிக்கு இருநூறு காப்பி – முப்பதாயிரம் என்றான்.
இந்தப் பாவம் எல்லாம் உன்னைத் தண்டிக்காதுன்னு நினைக்கிறியா னோ? – கேட்டேன்.
இல்லைத் தண்டிக்காது. எனக்கு முன்ன இப்பிடித் தொழில் பண்ணின பலரு இன்னைக்கு நல்லாத்தானே இருக்காங்க என்றான்.
சொல்வதற்கு எதுவுமில்லையென அழைப்பைத் துண்டித்தேன்.
பதிப்பகமொன்றை ஆரம்பிக்கவிருப்பதாக னோ என்னிடம் சொன்னதும் நிறையப் பெயர்களைப் பரிந்துரைத்தேன். “தோகை”அவனுக்குப் பிடித்திருந்தது. ஆனால் நெடிலை குறிலாக்கி “தொகை பதிப்பகம்” என நாமம் அளித்தான். எட்டுத்தொகையிலிருக்கும் தொகை என்று என்முன்னேயே மார் தட்டிக்கொண்டான். அவனை வாழ்த்தினேன். எனக்குத் தெரிந்த புத்தக வடிவமைப்பாளர், அச்சகத்தார் ஆகியோரை அறிமுகப்படுத்தினேன். அட்டை ஓவியம் வரை வளர்ந்து வருகிற ஓவியர் ஒருவரை அழைத்துச் சென்று சந்திப்பை ஏற்படுத்திக் கொடுத்தேன். யாரேனும் ஒரு நல்ல எழுத்தாளரின் புத்தகத்தையே முதல் வெளியிடவேண்டுமென ஆசைப்பட்டான். அந்த ஆசையில் மண் விழுகிற வகையில், அவனது கூடா நட்பொன்றின் மூலம் முகநூல் வழியாக வந்தடைந்த “அன்பே…இன்று உன்னுடைய இன்ஸ்டாவின் ஸ்டோரி என்ன?” எனும் புகழ்பெற்ற கவிதாயினி ஒருவரின் நூலையே வெளியிட வேண்டியதாயிற்று.
அந்த நூல் உருவாக்கத்திற்கு தேவையான பொருளுதவியில் மூன்றில் ஒருபங்கை நான் பொறுப்பேற்றுக் கொண்டேன். னோ மிகுந்த நன்றியோடு அதனைப் பெற்றுக்கொண்டான். பிறகு சில மாதங்களில் ஒரு பதிப்பகமாக தன்னை முன்னிறுத்த னோ வழிகள் கண்டான். இன்று தொகை பதிப்பகத்தை அறியாவதவர் எவருமில்லை. எட்டுத்தொகையை மறந்தாலும் மறப்பான் தமிழன் – என் தொகைப் பதிப்பகம் மறந்திடுமோ என்று னோ சவால் விடுகிறார் என்றால் பாருங்களேன். னோ ஐந்தாறு மாதங்களில் பதிப்பகத்தை டெவலப் செய்தார். அவர் படிப்பதெல்லாம் கவிதை, ஏனெனில் அதன்பொருட்டு கிடைப்பது எல்லாம் பொன். தொகை பதிப்பகத்தில் ஒரு நூல் வரவேண்டுமெனில் கவிதைகளோ, கதைகளோ, கட்டுரைகளோ தொகையாக இருக்கவேண்டுமென இல்லை. ஆனால் தொகை மட்டும் தொகையாக வேண்டுமென அறிவிக்குமளவு டெவலப் அடைந்திருக்கிறது.
தமிழில் தொகை பதிப்பகம் மட்டுமா இப்படி இயங்குகிறது? உனக்கு நான் செய்வது மட்டுந்தான் தெரிகிறதா? என்றெல்லாம் அழுதுவடிக்கும் எந்தச் சமரசமும் னோவிடம் இல்லை. அவன் தன்னுடைய பதிப்பகத்திற்கு எழுத்தாளர்களையும், கவிஞர்களையும் கண்டடையும் இடமாக முகநூலை ஆக்கிக்கொண்டான். எனக்குத் தெரிந்த மருத்துவர் ஒருவர் எழுதிய சிறிய பத்தியொன்று கைபேசியில் எழுதப்பட்டு முகநூலில் பதிவேற்றம் செய்திருந்தார். ஆதலால் அது வடிவம் குழம்பி சொற்கள் மடிந்து மடிந்து கீழே கீழேயென பார்ப்பதற்கு கவிதையைப் போலிருந்தது. உள்பெட்டியில் னோ மருத்துவருக்கு ஒரு தகவல் அனுப்புகிறார்.
அன்புள்ள கவிஞருக்கு ! உங்களுடைய இந்தக் கவிதையின் சொற்சேர்க்கைகள் அபாரமாயுள்ளன. இதுபோலவே இன்னும் ஐம்பத்து ஒன்பது கவிதைகளை எழுதினால் மொத்தமாக அறுபது கவிதைகளைச் சேர்த்து ஒரு தொகுப்பாக கொண்டு வரலாம். நன்றி. நிறுவுனர் – தொகை பதிப்பகம்
என்னுடைய இன்னொரு நண்பருக்குச் சுட்டுப்போட்டாலும் இலக்கியம் வராது. அதுவும் தமிழ் இலக்கிய வாதிகளைக் கண்டால் ஆகாது. ஒரு அரசியல் கட்சியின் தீவிரமான அபிமானி. முகநூலில் நாளும் பொழுதும் எழுதும் பதிவுகளின் வழியாகவே தனது இருப்பை தன்னிடமே உறுதி செய்யும் தற்குறி. எந்த எழுத்தாளரையும் வெறிகொண்டு அவதூறுகளால் கடித்துக் குதறக் காத்திருக்கும் வெறிநாய் மூர்க்கம் அவருடையது. தன்னுடைய நண்பனின் மரணத்திலிருந்து மீளமுடியாமல் அவர் எழுதிய அஞ்சலிக்குறிப்பைப் பார்த்துவிட்டு, னோ உள்பெட்டியில் ஒரு தகவல் அனுப்புகிறான்.
அன்புள்ள எழுத்தாளருக்கு! உங்களுடைய இந்தச் சிறுகதையின் சம்பவ நேர்த்தி அபாரமாயுள்ளது. இதுபோலேவ இன்னும் ஒன்பது கதைகளை எழுதினால் மொத்தமாக பத்து கதைகளைச் சேர்த்து ஒரு தொகுப்பாக கொண்டு வரலாம். நன்றி. நிறுவுனர் – தொகை பதிப்பகம்.
இந்த நண்பர் என்னை அழைத்து னோவின் தொடர்பு எண்ணைக் கேட்டார். விஷயம் தெரியாமல் கொடுத்துவிட்டேன். னோவை சில நாட்கள் இலக்கிய விழாக்களில் பார்த்தாலும் என்னோடு பேசுவதில்லை. பிறகுதான் என்னடா ஆச்சு என்று கேட்டால், நண்பர் கடுமையாகத் திட்டியதைச் சொன்னான்.
தொகையைப் போல பதிப்பகங்கள் வெவ்வேறு பெயர்களில் நிறையவே உள்ளன. எழுத வருவோரிடம் பணம் வாங்கிக்கொண்டு அந்தப் பணத்திற்கு ஏற்ற அளவில் பிரதிகளை வழங்காமல் ஏமாற்றும் செயலைப் புரிபவர்களை னோ அறிந்திருக்கிறான். அவர்களையே தனது முன்னோடியாகக் கூறுவான். தொகை பதிப்பகத்தில் வெளியான சில புத்தகங்களை இலக்கியக்காரர் ஒருவருடைய வீட்டில் பார்த்தேன். அதெல்லாம் வீண். வெறும் காகித குப்பைகள் என்றார் அந்த இலக்கியக்காரர். சிலவற்றை எடுத்துப் புரட்டிப்பார்த்தேன். அவர் கொஞ்சம் நாகரீகமாக அவற்றை விமர்சனம் செய்திருக்கிறார் என்றுதான் தோன்றிற்று.
இலக்கியம் சோறு போடுமா என்று எழுதுபவர்களைப் பார்த்துக் கேட்பது புதுமைப்பித்தன் காலத்திலிருந்து இன்று எழுத வந்திருக்கிற என்னிடமும் கேட்கப்படுகிறது. அது சோறு போடுமென்று யாரும் எழுதவரவில்லை. இலக்கியத்திற்கு உண்மை தெரியும்.,எழுத்தாளனுக்கு இருப்பது சோற்றுப்பசியல்லவென்று. ஆனால் சில பதிப்பகங்கள் எழுத்தாளர்களை, எழுத வருவோர்களை வஞ்சிக்கும் ஒரு துயர வரலாறு தொடர்வது பெருஞ்சாபம். தொகை போன்ற பதிப்பகங்கள் எழுத முனைவோரிடம் தமக்கு நேர்கிற பணச்செலவை மட்டும் அறவிடுவது குறித்து சந்தை நிலவரம் அறிந்தவொருவராக எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. ஆனால் உழைப்புக்கான ஊதியத்தை விடவும் மூன்று மடங்கு அதிகமாக பணத்தைப் பிடுங்கித் தின்பதெல்லாம் கேடு.
உபகதை
நண்பர் னோவுக்கு இந்தப் பத்தியை அனுப்பி வைத்தேன். அவர் இப்படி பதில் மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.
அன்புள்ள நண்பனுக்கு ! உங்களுடைய இந்தப் பத்தியில் வெளிப்படும் ரெளத்திரம் அபாரமாயுள்ளது. இதுபோலவே இன்னும் ஒன்பது பத்திகளை எழுதினால் மொத்தமாக பத்து பத்திகளை சேர்த்து ஒரு தொகுப்பாக கொண்டு வரலாம். நன்றி. நிறுவுனர் – தொகை பதிப்பகம்
நான் இப்படி ஒரு பதில் மின்னஞ்சல் அனுப்பினேன்.
“பாவப்பட்டவர்களிடம் எஞ்சியிருக்கும் உணவுகளை, செல்வங்களை வழிப்பறி செய்கிற கொள்ளையர்களைப் பார்க்கிலும், நீங்கள் ஆபத்தானவர்கள் நண்ப! – உங்கள் தொகை வளரவும் பெருகவும், நீங்கள் செய்வதெல்லாம் ஒருவகையான கொள்ளைதான் என்று உணர்க!
அவனிடமிருந்து பதில் வந்திருந்தது.
அன்புள்ள நண்பனுக்கு ! உங்களுடைய இந்தப் பதிலில் வெளிப்படும் சொற்சித்திர தன்மை அபாரமாயுள்ளது. இதுபோலவே இன்னும் தொன்னூற்று ஒன்பது சொற்சித்திரங்களை எழுதினால் மொத்தமாக நூறாக்கி ஒரு தொகுப்பாக கொண்டு வரலாம். நன்றி. நிறுவுனர் – தொகை பதிப்பகம்.
நான் இப்படி ஒரு பதில் மின்னஞ்சல் அனுப்பினேன்.
உங்கள் பாவத்தின் தொகை எண்ணப்படும் நாளில் என்னுடைய சொற்களை சித்திரமாக ஆக்குவேன். அதுவரை அது உங்களைப் போன்ற அநியாயவான்களை தூங்கவிடாமல் செய்கிற நாயின் குரைப்பொலியாய் கேட்கும். நன்றி.
னோ என்னை அழைக்கத்தொடங்கியிருந்தார். நான் அழைப்பை எடுக்கவில்லை. ஆனால் அவருக்கு என்னுடைய கைபேசி அழைப்பின் பாடல் மீண்டும் மீண்டும் கேட்கவேண்டுமென விரும்பினேன்.
மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப் பயலே இது
மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலை
—
The post தொகை பதிப்பகம் first appeared on அகரமுதல்வன்.
August 6, 2024
கோடி – பாரதி கிருஷ்ணகுமார்
அறை எங்கும் பரவிக்கொண்டு இருந்த சின்னச் சின்ன ஓசைகள் அடங்கி, கண் இமைக்கும் நேரத் துக்கும் குறைவான நொடியின் இடைவெளியில் மௌனம் வெடித்துக் கிளம்பியது. எல்லோரும் அண்ணாச்சியைத் திரும்பிப் பார்க்க, ஏதும் பேசாமல் என்னைத் தோள் தொட்டு ஆதரவாக முன்னே நகர்த்தினார் அண்ணாச்சி. கூட்டம் தன்னிச்சையாக விலகி, உருவாக்கிய வழிக்கு நேர் எதிரில், அத்தை நிமிர்ந்து என்னைப் பார்த்தது. இரண்டு கைகளையும் கழுத்து வரை உயர்த்தி, கைகளைச் சேர்க்காமல் வணங்கினேன். எல்லா வற்றையும் உணர்ந்துகொண்டதான பாவனையில், மெள்ளத் தலையசைத்துத் தன்னருகே வருமாறு கூப்பிட்டது அத்தை. அத்தையை நோக்கி நகர்ந்து, பைக்குள் இருந்த புடவையை எடுத்த கணத்தில், ஏதோ ஒரு கை பையை என்னிடம் இருந்து ஆதர வாக வாங்கிக்கொண்டது.
The post கோடி – பாரதி கிருஷ்ணகுமார் first appeared on அகரமுதல்வன்.
August 5, 2024
தமிழ் மரபிலக்கிய பயிற்சி வகுப்பு
August 4, 2024
பரதேசி வந்தான் – தி. ஜா
https://azhiyasudargal.blogspot.com/2017/03/blog-post_13.html
The post பரதேசி வந்தான் – தி. ஜா first appeared on அகரமுதல்வன்.
August 2, 2024
தமிழ்விக்கி – தூரன் விழா 2024: அழைப்பிதழ்
விஷ்ணுபுரம் இலக்கியவட்டம், ஈரோடு அமைப்பின் சார்பில் 2024 ஆம் ஆண்டுக்கான ‘தமிழ்விக்கி- தூரன் விருது’ விழா ஈரோட்டில் நிகழவிருக்கிறது.
தமிழ்ப்பண்பாட்டாய்வில் பணியாற்றிய ஆய்வாளர்களுக்கு வழங்கப்படும் 2024 ஆம் ஆண்டுக்கான தமிழ்விக்கி – தூரன் விருதை சுவடியியல் ஆய்வாளர் மோ.கோ.கோவைமணி அவர்களுக்கு வழங்கப்படுகிறது.
நிகழ்வு நாள், பொழுது: ஆகஸ்ட் 14 மாலை முதல் ஆகஸ்ட் 15 மாலை வரை.
நிகழ்வு இடம்: ராஜ்மகால் திருமணமண்டபம், கவுண்டச்சிப்பாளையம், சென்னிமலை சாலை. ஈரோடு
The post தமிழ்விக்கி – தூரன் விழா 2024: அழைப்பிதழ் first appeared on அகரமுதல்வன்.
August 1, 2024
எழுத்தாளர் வெட்டுக்கிளி
வெட்டுக் கிளியோ நம்மோடு
விஷமப் பதிவுகள் நாளோடு
வன்மம் அவர் எழுத்தின் எல்லை
இலக்கியத்துக்கு அவர் சொந்தம் இல்லை
எழுத்தாளர் வெட்டுக்கிளியை சந்திப்பேனென்று நினைத்திருக்கவில்லை. பழைய காலத்து ஜோல்னா பையுடன் பழையதுக்கும் முந்தைய கால டீக்கடையில் நின்றபடி “மாதவா…ஒரு கட்டஞ்சாய்” என்று குரல் கொடுத்தார். அவருடைய கிர்தா ஸ்டைலும் மாறவில்லை. புத்தக பின்னட்டையில் அவரது புகைப்படத்தில் தெரிகிற அதே கிர்தா. என்னை ஏற இறங்கப் பார்த்துவிட்டு சிகெரட்டை புகைக்கத் தொடங்கினார். ஆனால் எனக்கோ இருப்புக் கொள்ளவில்லை. வெட்டுக்கிளியின் புத்தகங்கள் சிலவற்றை வாசித்திருக்கிறேன். ஒன்றுக்கும் உதவாத இருபதுக்கு மேற்பட்ட சிறுகதைகள் அடங்கிய தொகுப்பை பழைய புத்தக கடையில் பாதி விலைக்கு வாங்கி நொந்திருக்கிறேன். ஒரேயொரு நாவல் தேறும். ஆனால் அதுகூட அசலானது அல்ல. ஏற்கனவே எழுதப்பட்ட இன்னொரு எழுத்தாளரின் சிறுகதையை நாவலாக எழுதிய கொடுமை. ஆனால் வெட்டுக்கிளி இன்றும் அறவுணர்ச்சி கொண்ட எழுத்தாளர் என்றால் மிகையில்லை என்பவரும் உண்டு. வெட்டுக்கிளி மீண்டும் என்னையே பார்த்தார். அவருக்கு என்னைப் பார்த்ததும் தன்னுடைய வாசகன் என்று தெரிகிறதா என்று சந்தேகம் எனக்கு ஏற்பட்டது. எழுத்தாளர்கள் இப்படி ஒவ்வொரு மனிதரையும் விசேடமாக பார்ப்பார்கள் என்றால் எல்லோரும் வாசகராகிவிடுவார்கள்.
வெட்டுக்கிளியை நோக்கி வணக்கம் வைத்தேன். எதிர்பார்த்து காத்திருந்தவர் போல தலையை மேலும் கீழுமாய் ஒரு வித்துவச் செருக்கோடு ஆட்டினார். கையில் புகைந்து கொண்டிருந்த சிகரெட் கடைசி இழுப்புக்காக காத்திருந்தது. ஆனால் வெட்டுக்கிளி அதனை காலுக்கு கீழே போட்டு அணைத்தார். மாதவனின் கட்டஞ்சாய் வழக்கம் போலவே சுமார் தான் போலும். வெட்டுக்கிளி அதிலும் பாதி மிச்சம் வைத்திருந்தார். என்னுடைய புத்தகங்களை வாசித்திருக்கிறாயா கேட்டார். ஆமாம், உங்களுடைய நேர்காணல் நாவலை ஒரே சிட்டிங்கில் வாசித்து முடித்திருக்கிறேன் என்றேன். அவருக்குள்ளிருந்து ஒரு மந்தகாசம் வெளிப்பட்டு உதட்டில் சிறுநொடி நிலைத்து திடீரென மறைந்தது. சிலவேளை அவருக்கு அந்த நாவல் நினைவில் வந்திருக்கலாமென்று நினைத்தேன். இப்போது புதியதாக வந்த நாவலை வாசித்தாயா? கேட்டார். நீங்கள் இப்போதும் எழுதுகிறீர்களா என்று பாவனையாக வியப்புற்றேன். அதே மந்தகாசம், அதே உதட்டு நிலைப்பு. அப்புறம் நான் செத்தாலும் எழுதுவேன் என்றார். நான் சரியாப் போச்சு என்று உள்ளே சொல்லிக்கொண்டு, வெளியே அற்புதம் அய்யா என்று அவரிடம் வியந்து நின்றேன்.
நீங்கள் வெட்டுக்கிளி எழுதிய சிறுகதைகளையோ, நாவல்களையோ வாசித்திருப்பீர்கள். அதுமட்டுமா பல்வேறு உலகமொழிகளிலிருந்து தமிழுக்கு பலநூறு படைப்புக்களை மொழிபெயர்க்கவும் செய்திருக்கிறார். ஆனால் வெட்டுக்கிளியை இலக்கிய உலகின் உள்ளக அணியினர் ஓடுகாலி என்று தான் அழைப்பார்கள். ஏனென்றால் அவருடைய படைப்புக்கள் வெளியான பல பதிப்பகங்களுடன் உறவை முறித்துக் கொண்டு சீக்கிரமே வெளியேறிவிடுவார். ஒருமுறை அவரது புத்தகம் அச்சுக்கு சென்றிருந்த வேளையில், அந்தப் பதிப்பகத்துடன் உறவை முறித்துக் கொண்டு அதே வேகத்துடன் மாற்றுப் பதிப்பகம் சென்றவர். அதனாலேயே வெட்டுக்கிளியிடம் இருப்பது படைப்பூக்கம் அல்ல. பதிப்பகவூக்கம் என்பார்கள்.
வெட்டுக்கிளி இலக்கிய விழாவொன்றில் ஆற்றிய உரையை அடிப்படையாக கொண்டு சமூக ஊடகங்களில் நிகழ்ந்த வாக்குவாதங்கள் பலவும் இவரால் ஊக்குவிக்கப்பட்டவையே. எழுத்தாளர்கள் சிலர் வினோதமானவர்களாக இருப்பார்கள். சிலருக்கு சிரிப்பது கூட மறந்துவிடும். எதிரே இருப்பவரைப் பார்த்து ஒரு புன்னகையை உதிர்த்து விட்டால் எழுதும் கலையை இழந்துவிடுவோமெனே அஞ்சும் எழுத்தாளர்களும் உண்டு. சில எழுத்தாளர்களுக்கு தன்னை எவனும் பாராட்ட வேண்டாம், அதே போல மற்றைய எழுத்தாளர்களையும் எவனும் பாராட்டி விடக்கூடாது என்று தவமிருக்கும் பழக்கம் உண்டு. வெட்டுக்கிளி இவற்றிலிருந்து மாறுபடுகிறவர். அவருக்கு எல்லோரைப் பற்றியும் சொல்வதற்கு ஒரு கருத்துண்டு. அதுவும் இவருடைய விமர்சன அளவுகோலின்படி தமிழில் புதுமைப்பித்தனுக்கு பிறகு நிகழ்ந்த ஒரே சிறுகதை ஆசிரியர் வெட்டுக்கிளி மட்டும்தான்.
வெட்டுக்கிளியின் நாளாந்தம் கொடூரமானது. அதிகாலையில் எழுந்ததும் முகநூலைத் திறந்து பார்க்கும் வியாதியால் பீடிக்கப்பட்டிருக்கிறார். ஆதலால் முகநூலில் பிறிதொரு எழுத்தாளரின் கதைக்கோ, நூலுக்கோ யாரேனும் பாராட்டி பதிவு எழுதினால் தாங்கிக்கொள்ளமாட்டார். இரத்த அழுத்த மாத்திரைகளை வெறும் வயிற்றில் விழுங்கியபடி ஒரு அந்தக் கதையைத் திட்டி ஒரு பதிவு போடுவார். அன்றைக்கும் முழுவதும் ஐந்தாறு பதிவுகள் எழுதித் தீர்த்துவிடுவார். அப்படித்தான் என்னுடைய நண்பரொருவர் எழுதிய கதை நூற்றுக்கணக்கான பேரினால் பாராட்டப்படும் போது வெட்டுக்கிளி வெகுண்டெழுந்து இதெல்லாம் ஒரு கதையா…தொடர் நாடகம், கண்ணீர் உருகியோடும் சினிமா என்று கடுமையான காழ்ப்பு பதிவுகளை எழுதித் தள்ளினார். உண்மையில் அன்று அவருடையை கையிருப்பில் ரத்த அழுத்த மாத்திரை இருந்திருந்தால் அவ்வளவு பதிவுகள் வந்திருக்காது என்பது வேறு கதை.
வெட்டுக்கிளியின் அகச்சிக்கல்கள் சொல்லி மாளாதவை. அவருடைய தனிப்பட்ட துயரங்கள் தணிய வேண்டும். அவற்றிலிருந்து அவர் மீண்டு வரவேண்டுமென இறைவனை பிரார்த்திக்கிறேன். ஆனால் அதற்காக இவர் உமிழும் கசப்புக்களையும், காழ்ப்புக்களையும் தாங்கிக் கொள்ள வேண்டுமென்றில்லை. வெட்டுக்கிளிக்கு எல்லோரிடமும் கசப்பும் முரண்பாடும் பெருகிக் கிடக்கிறது. அவருடைய சிறுகதைகள், நாவல்கள், எல்லாமும் வாசகர்களை இன்னும் பெறாமல் தேங்கிக் கிடக்கிறது. பதிப்பகங்கள் சிலவற்றில் அச்சகத்திலிருந்து வந்த கட்டுக்கள் பிரிக்கப்படாமலே வெட்டுக்கிளி படைப்புக்கள் தூசு மண்டிக்கிடக்கின்றன. ஆனால் வெட்டுக்கிளிக்கு அதனைப் பற்றிய கவலை இல்லை. நாளும் தூற்றுவதற்கும், காழ்ப்பை உமிழ்வதற்கும் முகநூல் இருக்கிறது. அதுபோதுமே!
வெட்டுக்கிளி சென்னைக்கு ஏன் வந்திருக்கிறார் என்று அறிய ஆவலாயிருந்தது. மாதவன் டீ கிளாஸை எடுத்துக் கொண்டு உள்ளே போனார். “நீ என்ன பண்ணுகிறாய்? என்று கேட்டார். சினிமாவில் வேலை பார்க்கிறேன். திரைப்படம் எடுக்கும் முயற்சி என்றேன். ஒரு அசட்டுப் புன்னகை, மெல்லிய எள்ளலோடு ஓ…என்ற சப்தம் எழுப்பினார். நீங்கள் என்ன விஷயமாக சென்னைக்கு வந்திருக்கிறீர்கள் என்று கேட்டேன். நானொரு பிஸ்னஸ் விஷயம் என்றார். புதிதாக ஏதேனும் தொடங்கியிருக்கிறீர்களா? என்று கேட்டேன். என்ன? என்று என்னைப் பார்த்தார். பிஸ்னஸ் ஏதேனும் தொடங்கியிருக்கிறீர்களா என்று விபரமாக கேட்டேன். ஆமாம் என்னுடைய கதையொன்றை திரைப்படம் ஆக்கவிருக்கிறார்கள் என்றார். ஓ…எனதருமை தமிழ் சினிமாவே! என்றொரு ஓலம் எனக்குள்ளிருந்து வெளியேறத் துடித்தது. நல்ல விஷயம். எந்தக் கதை என்று கேட்டேன். அது வெளியாகவில்லை. இயக்குனர் எனக்குத் தெரிந்தவர் என்பதால் படித்திருந்தார். அவருக்குப் பிடித்துப் போய் பேச்சுவார்த்தை போய்ட்டு இருக்கு என்றார். நல்ல காசாய்க் கேட்டு வாங்குங்க…சினிமாக்காரங்க ஏமாத்திடுவாங்க என்று சொல்லி வைத்தேன். எழுத்தாளன ஏய்க்க முடியுமா….பத்து லட்சம் கேட்டிருக்கிறேன். எல்லாம் சரியாகி நாளைக்கு ஒப்பந்தம் ஆகுது என்றார். பத்து லட்சமா? எத்தனை சிறுகதைகள் என்று மீண்டும் கேட்டேன். ஒரேயொரு கதைதான் என்றார். நான் வெட்டுக்கிளியிடமிருந்து விடைபெற்றுக் கொண்டேன். மறக்காமல் புதிதாக வந்திருக்கும் நாவலை வாங்கிப்படிக்குமாறு கூறி வழியனுப்பினார்.
சென்னையிலுள்ள தேனீர்க் கடையில் ஒரு கட்டஞ்சாயா குடித்துக் கொண்டிருந்த பொழுது என்னுடைய வாசகர் ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது. என்னுடைய கால்களைத் தொட்டு வணங்கி கட்டியணைத்துக் கொண்டான். இந்த நாள் எவ்வளவு பெருமையான, கம்பீரமான நாளென்று எழுத்தாளனான எனக்குத் தெரியும். என்னுடைய படைப்புக்களின் கதாபாத்திரங்களையும் அதனுடைய குணவியல்புகளையும் விதந்தோதிப் பேசிய அந்த வாசகனோடு ஒரு புகைப்படம் எடுக்காமல் விட்டுவிட்டேன் என்ற சோகம் என்னைத் தூங்க விடாது. மிக விரைவில் என்னுடைய சிறுகதையை மையப்படுத்தி தமிழில் ஒரு திரைப்படம் உருவாக உள்ளது. என்னை வாழ்த்தலாமே நண்பர்களே! அன்றைக்கு இரவு வெட்டுக்கிளியின் முகநூலில் எழுதப்பட்டிருந்த பதிவு இது.
சரியாக ஒருவருடமும் இரண்டு மாதமும் கழித்து வெட்டுக்கிளியைச் இன்றைக்குச் சந்தித்தேன். கிளைபிரிந்தோடும் வாழ்வின் வழிகளில் அகலமும் நீளமும் குறைந்த முட்டுச் சந்தில் அவரைக் காண நேர்ந்தது என் பாக்யமன்றோ! நாற்றம் குடலைப் புடுங்கினாலும், மூக்கைப் பொத்திக்கொண்டு இருவரும் சிறுநீர் கழித்து முடித்திருந்தோம். நகரத்தில் இதுபோன்ற மூத்திரச் சந்துகள் ஏராளமுள்ளன. இந்தச் சந்திப்பைப் போல வரலாற்றில் வேறொன்றில்லை என்பது அடியேனின் தாழ்மை பொருந்திய பிரகடனம். வெட்டுக்கிளியிடம் மீண்டும் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். அந்தச் சூழலில் கைகுலுக்கி கொள்ள வேண்டாமெனத் தோன்றியது. வெட்டுக்கிளி எல்லாவற்றையும் கட்டுடைக்க விரும்புவர், அவர் உடைக்காதவைகள் மிகக் குறைவு. என்னுடைய கைகளைப் பற்றிக்கொண்டு “வாசகா” என்று கட்டியணைத்தார். சந்தில் நின்றிருந்தவர்கள் திகைப்புடன் எங்கள் இருவரையும் பார்த்தார்கள். வெட்டுக்கிளியின் அணைப்பில் இருந்து என்னை விடுவித்துக் கொண்டேன். நகரத்தின் இருளில் மூத்திரச் சந்தில் இவ்வளவு நெருக்கமாக இலக்கியம் வளர்க்க வேண்டுமாவென என்னை நானே கேட்டேன். ஆனாலும் எழுத்தாளர் வெட்டுக்கிளியை சந்திப்பதற்கு வேறு எப்படி வாய்ப்புக் கிட்டும். எப்போதும் பிஸியாக இருக்கும் எழுத்தாளர். பதிப்பாளர்கள் விரட்டி விரட்டி புத்தகம் கேட்டுக் கொண்டே இருப்பார்கள் என்பதால் வீட்டின் முகவரியைக் கூட யாரிடமும் சொல்வதில்லை. இப்போது தமிழ் சினிமாவின் இயக்குனர்கள் வேறு அப்படி விரட்டுகிறார்களாம்.
“அந்தப் பத்து லட்சம் ஒப்பந்தம் போடப்பட்ட உங்கள் சிறுகதை படமாக வெளியாகிவிட்டதா?” கேட்டேன்.
“இல்லை. அந்த இயக்குனர் சரியான ஆளில்லை. அதுதான் இன்னொருவரிடம் கொடுத்துள்ளேன். பெரிய படமாக பண்ணவிருக்கிறார்”
“அப்படியானால் அன்றைக்கு ஒப்பந்தம் ஆகவில்லையா?”
“இல்லை”
அந்த இயக்குனர் தான் படித்த கதை – இந்தக் கதை இல்லை. அது வேறு கதை என்று சொல்லிவிட்டான்.
புரியவில்லையே!
“என்னுடைய மேசையில் நான் அழியாச்சுடர்கள் இணையத்தளத்தில இருந்து ஒரு பெரிய எழுத்தாளர் எழுதிய கதையை பிரிண்ட் எடுத்து வைச்சிருந்தேன். அவன் அந்தக் கதையை என்னோட கதைன்னு நினைச்சு. படம் பண்ணலாம்னு சொல்லியிருக்கான். அவன் படிச்ச கதை வேறொருத்தரோட கதைதான். ஆனால் அந்தக் உலகத்தோட சம்பந்தப்பட்ட கதையை நானும் எழுதியிருக்கேன். அதைப் பண்ணுன்னா. மாட்டேங்கிறான்.” சலித்துச் சொன்னார்.
இப்ப பேசிட்டு இருக்கிறது உங்க கதையா?
“அப்புறம். இந்த இயக்குனர் என்னோட நாவலில ஒரு பகுதியை எடுத்து டெவலப் பண்ணி வைச்சிருக்கான். நல்ல கூரான பையன். பதினைஞ்சு கேட்டிருக்கேன். தயாரிப்பு நிறுவனம் ஒத்துக்கிட்டாங்க”
இது உங்களோட எந்த நாவல்?
“ஜே. ஜே பல குறிப்புக்கள்”
இது என்ன நாவல் பெயர், சு.ராவினோட சில குறிப்புக்களுக்கு எதிர்நாவலா?
நீ வேற…சு.ராவுக்கு எதிர்நாவல் எழுத முடியுமா என்ன! – உண்மையிலுமே இந்த நாவலுக்கு அட்டையில அந்தப் பெயரைத் தான் போட்டிருக்கணும். ஆனா….
ஆனா… என்ன?
“அப்புறம் யோசிச்சு பார்த்தன். மொத்தமா அந்த நாவலையே எடிட் பண்ணி என்னோட சில கதைகளையும் சேர்த்து சில குறிப்புக்களை பல குறிப்புக்களாய் ஆக்கிட்டேன். நல்லா வந்திருக்கு”
“விஷயம் தெரிஞ்சா அவமானமாய் போய்டும். கேக்கவே ஏதோ செய்யுது”
“உனக்கென்னப்பா பிரச்னை. சு.ரா இருந்திருந்தாலும் இதை மன்னிச்சு விட்டிருப்பார். இந்த நாவல் தமிழில் தவிர்க்க முடியாதது. ஒருவகையில முன்மாதிரி.”
எது? முன்மாதிரியா?
“அப்புறம். இப்படி யாராச்சும் இதுக்கு முன்னாடி பண்ணியிருக்காங்களா. நீயே சொல்லு”
“நீங்க இதுவரைக்கும் பண்ணின அத்தனையும் அப்படித்தானே?” என்றேன்.
வெட்டுக்கிளி விறுவிறுவென நடந்து போனார். அவருடைய முகநூலில் ஒருபதிவு ஐந்தாவது நிமிடத்தில் வந்து விழுந்தது.
இன்றைக்கு வேற்றுமுகாமை சேர்ந்த வாசகரைக் கண்டேன். அவன் என்மீது காழ்ப்புக் கொண்டு விஷமக்கருத்துக்களை வீசினான். அவனுக்கு என்னுடைய எழுத்துக்களின் மீது அவதூறுகளை வீசுவது ஒரு வேலையாக கொடுக்கப்பட்டிருக்கிறது. நாயே…பேயே…. என்று எழுதியிருந்தார். உண்மையான வெட்டுக்கிளியை உழவர்களின் எதிரி என்று அழைப்பார்கள். எழுத்தாளர் வெட்டுக்கிளியோ உண்மையின் எதிரி. அவ்வளவு தான் நண்பர்களே!
The post எழுத்தாளர் வெட்டுக்கிளி first appeared on அகரமுதல்வன்.
July 30, 2024
உங்களது இரண்டுமணிநேரத்தை எனக்கு கொடுத்தால் உங்களை ஓலை வாசிப்பவராக என்னால் மாற்ற முடியும் – கோவைமணி
ஓலைச்சுவடிகளில் மட்டும் என்றல்ல, தற்போதும் உங்கள் வீட்டிலுள்ள பத்திரங்களில்கூட இந்தக் குறியீடுகளைக் காணலாம். ‘மேற்படி’ என்றால் அதற்கு ஒரு குறியீடு உண்டு, வருடம் என்ற சொல்லுக்கு அதேபோல ஒரு குறியீடு உண்டு. பெரும்பாலான ஆவணங்களில் இதுபோன்ற குறியீடுகள் நெடுங்காலம் புழங்கி வந்துள்ளன. ஓலைச்சுவடி குறியீடுகளில் கூட்டெழுத்துக்களுக்கு எழுத்துக் குறியீடுகளும் சொற்களுக்கான சொற்குறியீடுகளும் உண்டு. நெல் என்னும் சொல்லுக்குக் குறியீடு உண்டு. பஞ்சாங்கத்தில் வருடம் இன்னும் குறியீடாக பதிப்பிக்கப்படுகிறதே. அக்காலத்தில் வழங்கிய வீசம், பலம், மணங்கு, குழி முதலிய அளவை முறைகளுக்குக் குறியீடுகள் உள்ளன. இவற்றில் முழு எண் அளவைகளும் பின்ன எண் அளவைகளும் உள்ளன. இவையெல்லாம் உங்களுக்கு இலக்கியச் சுவடிகளில் வராது, நில அளவைகள், மருத்துவம் முதலிய சுவடிகளில் தான் இவற்றை அதிகமாகக் காண முடியும்.
https://www.kurugu.in/2024/07/kovaima...
The post உங்களது இரண்டுமணிநேரத்தை எனக்கு கொடுத்தால் உங்களை ஓலை வாசிப்பவராக என்னால் மாற்ற முடியும் – கோவைமணி first appeared on அகரமுதல்வன்.
அகரமுதல்வன்'s Blog
- அகரமுதல்வன்'s profile
- 17 followers

