அகரமுதல்வன்'s Blog, page 13
June 29, 2024
உலக இலக்கியப் பேருரை – எஸ்.ரா
The post உலக இலக்கியப் பேருரை – எஸ்.ரா first appeared on அகரமுதல்வன்.
June 28, 2024
நுரைக்குமிழ்
01
காற்றின் உள்ளங்கையில்
அதிர்ந்து கரைந்த நுரைக்குமிழ்
எந்தக் குழந்தை ஊதியது?
எங்கிருந்து பறந்து வந்தது?
அழுகையில் ஊடுருவி நிற்கும்
இந்த வெளியில்
அந்தக் குழந்தையை
எங்கு தேடுவேன்
நான்.
02
அற்பர்களிடம்
மறவாமல் புன்னகைக்கும்
ரோஜா நான்.
காய்ந்த இலையென
உதிர்க்கும்
குளிர்ந்த தரு நான்.
ஒருபோதும்
என் இமைகள்
தங்களிடம் தாழாது
அற்பரே!
03
ஒளியின் முறிந்த கிளையின் கீழே
சலசலப்பது
இருபத்தோராம் நூற்றாண்டின்
குருதி
நிணமாய் எஞ்சிய நிலமொன்றின் சீழ்.
The post நுரைக்குமிழ் first appeared on அகரமுதல்வன்.
June 26, 2024
மலரடி
01
திசை மீறி
கிளை விரிக்கும் மரத்தின்
நிழல் ஊறி
மலர்கிறது நிலம்.
02
குருதியே!
நின் மலரடி தொழுகிறேன்
இந்த நூற்றாண்டை
விட்டுவிடு.
The post மலரடி first appeared on அகரமுதல்வன்.
June 25, 2024
அடிவான காலடிகள்
01
நீங்கள் நம்பாத போதும்
நீராலானது என் பாதை
தீயாலானது என் பயணம்
ஒவ்வொன்றும்
இவ்வாறே
துடித்து வியக்கும்
திகைத்து நிலைக்கும்
அடிவானத்துக் காலடிகள்
எனது.
02
இந்தப் பெருவெளியில்
என் கவிதையை மொய்த்திருக்கும்
எறும்புகளின் தொகை
எண்ணமுடியாதது
ஒரு தெய்வீகப் பவனியில்
கரைந்த துயரைப் போல
தடங்களின் மீது
கவிதை இனித்து நீண்டிருக்கிறது
எறும்பின் கால்களுக்கு கீழே
இனிமை ஊறி நிற்கிறது.
03
என்றும் அப்படித்தான் நடக்கிறது
இன்றும் அப்படி நடந்திருக்கலாம்
உன் ஊற்றின் மகரந்தத்தில்
பாவி நின்ற ஷணம்
சூறை ஏன் வந்தது?
The post அடிவான காலடிகள் first appeared on அகரமுதல்வன்.
June 24, 2024
ஒளி
01
மலைமுழுதும் சிதறிப் பூத்திருக்கும்
ஒளியின் வாசம்
அடிவானம் திரும்பியதும்
பகலை
அந்தி மேய்கிறது.
02
கூழாங்கல்
தேனாய் இனிக்கும்
நதியின் ஆழம்.
The post ஒளி first appeared on அகரமுதல்வன்.
June 23, 2024
தமிழ் கவிதைகளின் இனிமை – ஜெயமோகன்
எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் அற்புதமான உரை. தமிழ் நவீன கவிதைகள் இனிமைக்குத் திரும்புவதாக முன்வைத்த ஒப்பீடுகள் – உதாரணங்கள் எல்லாமும் இனியவை.
The post தமிழ் கவிதைகளின் இனிமை – ஜெயமோகன் first appeared on அகரமுதல்வன்.
June 21, 2024
நற்திசை நீர் – உள்ளொழுக்கு
இன்றைக்குள்ள தமிழ் – மலையாள சினிமாக்களை ஒப்பிட்டு நண்பர்களுக்குள் விவாதங்கள் எழுவது வழக்கம். நான் மலையாள சினிமாக்களை விதந்தோதுவதாக நண்பர்கள் சிலர் விசனமாவார்கள். நான் பணியாற்றும் கலைச்சூழல் குறித்து விமர்சனம் அல்லாதவொரு பார்வையை முன்வைப்பதே சிலருக்கு மனநோவாக அமைந்துவிடுகிறது. என்னுடைய இயக்குனர் நண்பர்கள் பலரிடமும் மலையாள சினிமாக்களின் ஆழத்தையும் கலையமைதியையும் சுட்டிக்காட்டி பேசிவருகிறேன். அங்கும் சில விதிவிலக்குகள் உள்ளன. ஆழமற்ற கதைக்களங்களைக் கொண்ட வெறும் கேளிக்கை கதைகளையும், இதோ பார் நான் எவ்வளவு அரசியல் பேசியிருக்கிறேன் என்ற கதைகளையும் சினிமாவாக எடுப்பவர்கள் எங்குதான் இல்லை. தமிழ் சினிமாவில் அதிகம் என்பதே எனது கவலையாகும்.
“சினிமா என்றால் வணிகம். இங்கு போய் வாழ்வியலை எடுத்துச் சொல்லி கலையெல்லாம் வளர்க்க முடியாது. தமிழ் ஆடியன்ஸ் என்ன ரெஸ்பான்ஸ கொடுப்பாங்கன்னு எவராலும் தீர்மானிக்கமுடியாது” என்று பழையகாலத்து வசனமொன்றை விவாதத்தில் உதிர்ப்பவர்கள் இன்றும் உள்ளனர். சினிமா என்றால் வணிகம் என்பதை அறியாத பாலகனில்லை நான். ஆனால் மலையாளத்திலும் ஒரு தயாரிப்பாளர் இருக்கிறார் அல்லவா. அவரும் பணம் போட்டுத்தானே படம் எடுக்கிறார். அங்கும் அதே வணிகம் தானே சினிமா என்று கேட்டால் வாயடைத்து நிற்பார்கள் இந்த வியாக்கியானப் பேர் வழிகள்.
தமிழில் கடந்த பத்தாண்டுகளில் உருவாகியிருக்கும் புதிய படைப்பாளிகளின் சில படைப்புகள் பெருமை தரக்கூடியன. ஆனால் அவர்களும் நட்சத்திர நடிகர்களிடம் சென்றதும் தமது அசலான கதைகளை கைவிட்டு விடுகின்றனர். நட்சத்திர நடிகர்களுக்குப் பிடிக்கும் வகையில் தமது கதையைக் கொத்துப்பரோட்டா போடுகிறார்கள். இந்த அழிவுக்கு நிறைய உதாரணங்கள் உள்ளன. வணிக ரீதியாக சந்தை மதிப்புக் கொண்ட பெரிய நடிகர்களை வைத்து கடந்த பத்தாண்டுகளில் உதயமான இயக்குனர்கள் எடுத்த திரைப்படங்களைப் பார்த்தாலே விஷயம் எளிதில் புலனாகும்.
சமீப காலங்களாக வெளிவரும் பெருமளவிலான மலையாளப் படங்கள் வியக்க வைக்கின்றன. இது மிகையான புல்லரிப்பு அல்ல. நேற்றைக்கு வெளியான “உள்ளொழுக்கு” யதார்த்தவாத மலையாள சினிமாக்களில் என்றைக்குமான உச்சமாகியிருக்கிறது. பார்வையாளருக்குள் கட்டுப்படுத்த இயலாத கொந்தளிப்பையும், ஆற்றாமையையும் உருவாக்கும் கலைப்படைப்பு. யதார்த்தவாத சினிமாக்காரர்களை ஆட்கொள்ளப்போகும் பேரிடர் காலத்துக் கதை. இரு பெண்களின் அகவுலகில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் மாபெரும் செய்திகள் ஒன்றை விழுங்கி இன்னொன்றாக உருப்பெறுகிறது. மிகையற்ற உணர்வெழுச்சியின் ஆழம் புகுந்த கதாபாத்திர வடிவமைப்பு. தாய்மை – காதலியெனும் பெண்ணுலகின் இருவேறு நிலைகளை ஊழியின் முன்பாக அமரச்செய்து உரையாடியிருக்கிறது. கொஞ்சம் பிசகினால் தொடர் நாடகத்தின் சலிப்புத்தட்டும் பாவனைகளை ஏந்திக்கொள்ளவும் செய்கிற கதையை, இயக்குனர் கையாண்டிருக்கும் விதம் அபாரம்.
உள்ளொழுக்கு திரைப்படத்தின் பின்னணி நீராலானது. அது மழையால் உருவான வெள்ளம் தொட்டு, கட்டுமரத்தில் பயணிக்கும் நிரந்தர நீர்வெளியாகவும் அமைந்திருக்கிறது. மாண்புமிக்க குடும்பமொன்றில் நிகழும் திருமணமும் அதன்பிறகு நிகழும் மரணமும் கதையின் மையச் சுழியாகவுள்ளது. மானுடர் ஒவ்வொருவருக்குள்ளும் நிகழும் போராட்டம் ரகசியமானவை. அதைப் பாதுகாக்கும் பொருட்டு எவ்வளவு காப்பரண்கள், தடுமாறல்கள். குடும்ப அமைப்பின் நெருக்குவாரத்தில் ரகசியமென்பதுவும் தகர்க்கப்படும். இத்திரைப்படம் விதவைத் தாயின் முன்னால் கர்ப்பிணிப் பெண்ணை காட்டிக்கொடுக்கிறது. வீட்டைச் சுற்றியிருக்கும் மழைவெள்ளம் போல மரணமும் – சவமும் அகல மறுக்கிறது. மானுடரின் தீர்க்க முடியாத அவஸ்தைகள் என்று நிறையவே உள்ளன. அவற்றைப் பேசுவதே கலைத்துணிவு. எனக்குத் தாஸ்தோவொஸ்கி அப்படித்தான். இத்திரைப்படம் எனக்கு தாஸ்தோவொஸ்கியின் எழுத்துக்களில் நான் கண்டடையும் உச்ச நிலைகள் பலவற்றை உணர்த்தியது. இது மிகையான அளவீடு அல்லவென்று அழுத்திச் சொல்லவும் விரும்புகிறேன். அப்பட்டமான வாழ்வின் கணங்கள் கலைக்கு உறுதுணை செலுத்துகின்றன.
பத்தாண்டுகளில் மலையாளத்தில் வெளியான திரைப்படங்களில் முதன்மையான அசல் மிகுந்த படம் “உள்ளொழுக்கு” தான். உலக சினிமா என்பது இன்னொரு எடுத்துக்காட்டு என்று இதனைச் சுட்டலாம். எளிமையும் – முரண்களை கையாளும் விதமும் சிறப்பு. இந்தப் படம் காதலின் வழியாக ஏந்திநிற்கும் கருவையும், திருமணத்தின் மூலமாக சுமந்து நிற்கும் மரணத்தையும் ஒற்றைப் பின்னலாக்கியிருக்கிறது. தாய்மை என்பது இதுதான் என்று ஒருபக்க வசனம் பேசாமல், ஒரு சொல் வீசாமல் உணர்த்துகிறது. பெண்ணைப் புனிதப்படுத்தி சமரசங்களுக்கு இட்டுச்செல்லும் பழமைவாதச் சிந்தனை இல்லை. மகத்தானவைகள் எல்லாமும் கொந்தளிப்புக்களாலும், புதையுண்டவைகளாலும் எழுந்தவை அன்றோ! – இத்திரைப்படத்தில் உருவாகும் பல தருணங்கள் ஆற்றல் மிக்க தத்தளிப்பை கொண்டுள்ளன.
வெகுவிரைவில் திரைப்படமொன்றை இயக்கவிருக்கும் நண்பருடன் படம் பார்க்கச் சென்றிருந்தேன். இன்றைக்கு முதல் வரிசையிலிருக்கும் ஒரு நடிகரிடம் தனது கதையைச் சொன்னதும், இந்தக் கதை ரொம்ப சிம்பிளாக இருக்கிறதே பாஸ்” என்றிருக்கிறார் நடிகர். படம் பார்த்து முடித்ததும் “உள்ளொழுக்கு கதைய தமிழில உள்ள எந்த நடிகருக்குச் சொன்னாலும், “என்னங்க, பிணம், பிள்ளைத்தாச்சின்னுக்கிட்டு…” என்று சலித்திருப்பார்கள் என்றார் நண்பர். இதுதான் உண்மையும் கூட.
தமிழில் சிறந்த அசலான கதைகள் வராமல் போவதற்கு மிக முக்கிய காரணிகள் இரண்டுள்ளன. நடிகர்கள் கதைகளை உணர மறுக்கிறார்கள். எந்தப் படம் வெற்றியடைகிறதோ, அதே பார்முலாக்களை கொண்ட கதையை, திரைக்கதையைக் கேட்கிறார்கள். ஏதேனும் படம் பண்ணிவிட்டு வாங்க. முதல் படம் பண்ணும் இயக்குனர்களுக்கு நான் பண்ணமாட்டேன் என்கிறார்கள். இன்னொரு காரணி தயாரிப்பாளர்கள். இதே உள்ளொழுக்கு கதையையை எடுத்துக் கொள்வோமே. தமிழில் இதுபோன்று எவ்வளவு கதைகளை வைத்துக் கொண்டு புதிய சக்திகளாக உதவி இயக்குனர்கள் இருக்கிறார்கள். அவர்களைச் சந்திக்க கூட பெயர் பெற்ற தயாரிப்பாளர்கள் சம்மதிக்க மாட்டார்கள். வென்ற குதிரைகளின் மீது பந்தயம் கட்டவே அவர்கள் காத்திருக்கிறார்கள். சமீபத்தில் இயக்குனர் ராஜூ முருகனின் உதவி இயக்குனர் மு. நவீன் இயக்கிய “Little Wings” என்கிற குறும்படத்தைப் பார்த்தேன். நம்பிக்கை தரவல்ல இயக்குனர்களில் ஒருவராக இருக்கிறார். மு. நவீன் போன்ற புதிய இளம் சக்திகள் மாபெரும் மலையின் முன்பாக நின்று தமது கதைகளைச் சொல்லி, தகர்த்து பாழ்வெளி கடக்கவேண்டியிருப்பது தமிழ் சினிமாவின் ஊழ். கூழாங்கல் என்றொரு சினிமா. உலகளாவிய கவனம் பெற்றது. இயக்குனர் ராம் அந்தச் சினிமாவை கண்டுகொள்ளாவிட்டிருந்தால், இன்றைக்கு அந்த அசலான கலைஞன் யாருக்கும் தெரியாமல் போயிருப்பான். இன்று தமிழ் சினிமாவுக்கு பெருமை தேடித் தந்த இளம் கலைஞனாக வினோத்ராஜ் திகழ்கிறார்.
உள்ளொழுக்கு மாதிரியான திரைப்படங்களை இயக்க காத்திருக்கும் நிறைய உதவி இயக்குனர்களை அறிவேன். அவர்கள் வாழ்வின் தணலை அணைய விடாமல் கைகளில் ஏந்தியிருக்கிறார்கள். கனவுகளைச் சுமந்து வாய்ப்புத் தேடி அலைகிறார்கள். அவர்களிடமிருந்து மகத்தான இருபத்தோராம் நூற்றாண்டின் கதைகள் உள்ளன. மலையாளத் திரைப்படங்களின் கதைகளை விடவும், இயக்குனர்களை விடவும் கதைகளை ஏற்று தயாரிக்கவும், நடிக்கவும் முன்வருபவர்களுக்கு ஒரு வணக்கம் சொல்ல விரும்புகிறேன். இந்தக் கதையில் நடித்திருக்கும் ஊர்வசியும், பார்வதியும் ஆளுமைகள். ஒரு திரைப்படத்தினுள்ளே கண்ணீர் பெருகும் போது, திரையரங்கில் விம்மும் தீன அழுகைகள் கேட்பதெல்லாம் மகத்தான கலையின் பலம்.
இத்திரைப்படம் தண்ணீரால் சூழப்பட்டது போலவே, நேர்மறை எண்ணங்களால் எழுப்பப்பட்டிருக்கிறது. மனிதர்களின் மன்னிப்பின் வழியாக எல்லோருக்குள்ளும் ஒரு இனிமை பரவுகிறது. குற்றவுணர்ச்சிகளின் வழியாக தத்தளித்தவர்கள் ரகசியத்தை கட்டவிழ்க்கும் போது வான்மழை பெய்கிறது. இயற்கை சாட்சியாக நிற்கையில் ஒரு பிரளயம் தோன்றி மறைகிறது, தேங்கி வற்றும் நீரைப் போல. பூமியில் ஈரம் மட்டுமே நிரந்தரம். அவ்வளவு நேரமும் மழை பொழிந்து வெள்ளமாகிய நிலமது. படத்தின் இறுதிக்காட்சியின் நிறைவு நொடியில் ஊர்வசிக்கு அருகில் அமர்ந்திருக்கும் பார்வதி பெய்யும் மழைக்கு குடை விரிக்கிறாள்.
ஒரு குடையின் விரிவில் அவ்வளவு நெருக்கம் அளிக்கும் இந்த மழையே உள்ளும் ஒழுகேன் என்று சொல்லத்தோன்றியது. மகத்தான கலை என்றால் என்னவென அர்த்தம் தேடுபவர்கள் உள்ளொழுக்கு பாருங்கள்.
The post நற்திசை நீர் – உள்ளொழுக்கு first appeared on அகரமுதல்வன்.
நீ என்னும் எழுத்து – ரமேஷ் பிரேதன்
01
எழுத்து சொல் பொருள் இவை ஒவ்வொன்றிலும்
உன் ஞாபகங்கள் கிளர்கின்றன
இலக்கண விதிகள் என் பேச்சை மட்டுமல்ல
வாழ்க்கையையும் வழிநடத்துகின்றன
வாழ்க்கை ஞாபகங்களால் அர்த்தமாகிறது
ஞாபகங்கள் வார்த்தைகளால் ஆனவை.
02
சொற்கள் மொய்க்கும் தேனடை மனம்
ஞாபக அறைகளில் இனிக்கும் குருதி
தெய்வமுண்டு மகளே தெய்வமுண்டு
தெய்வத்தோடு பேசும் தனிமொழி
ஒவ்வொரு மனிதர்க்குமுண்டு
சொற்கள் மொய்க்கும் காயத்தில்
பேசும் உதடுகள் துடிக்கும்
நடுங்கும் சுடர் அறியும்
எண்ணெய் காய்ந்த திரியால் நேரும் அநித்தியம்.
03
மழையில் நனைந்த குருட்டுப் பூனை
மூடிய வாசல் எதிரே நின்று கத்துகிறது
அதன் கூப்பாட்டில் இரண்டொரு தமிழ்ச்சொற்கள்
இன்னும் விடியாத இரவை அசைக்கின்றன
கவிஞன் வளர்க்கும் பேசும் பூனை
அதன் குருட்டு மொழி
மியாவ் என்பது உனக்கு ஓசை
எனக்குச் சொல்
சொல்லனைத்தும் பொருளுடைத்து மகளே
04
எழுத்து சொல் பொருள்
நீ ஓர் எழுத்து
மட்டுமல்ல ஒரு சொல் மற்றும் பொருள்
நீ ஒரு சொல் உயிரி
The post நீ என்னும் எழுத்து – ரமேஷ் பிரேதன் first appeared on அகரமுதல்வன்.
June 20, 2024
ஆதிக்குணம்
01
பூமியில் தனித்துவிடப்பட்ட அலையிடம்
கொஞ்ச நேரம் தன்னை
ஒப்படைத்து
இளைப்பாறியது கடல்
உப்பு விளைந்து
புதுமொழியை ஈன்றதும்
ஒற்றை இரவின் மீது
நிலவெழுந்தது.
02
கடல்
முலைபொருத்தி அமுதூட்டிய
ஞானம்.
அலை
சந்தோச சரீரத்தின்
அவதாரம்.
03
அவ்வளவு ஆழமானது
கடல் அல்ல
அவ்வளவு ஆபத்தானது
அலை அல்ல
நீரின்றி அமையாது
உலகு.
உப்பின்றி அமையாது
காமம்.
04
கூடலில் அவதரிக்கும் கடல்
மச்ச அவதாரமாய் உடல்
வலைகளை அறுத்து
நீந்தும் போகம்
ஆதிக்குணம்.
05
கடல்
ஈன்று
ஈன்று
அலையை
எவர்க்கு அருளுகிறது?
The post ஆதிக்குணம் first appeared on அகரமுதல்வன்.
June 19, 2024
தினசரி
01
சுவரில்
அவ்வளவு பொருத்தமற்றிருக்கும்
ஓவியத்தை
வரைந்தது
காலமா?
விதியா?
02
உழுந்து வடையும்
மசால் வடையும்
குவிக்கப்பட்டிருக்கும்
தேனீர் கடையில்
காலம் காலமாய்
கிழிபடும்
தினசரியின்
செய்தி.
03
காக்கா முட்டா
காக்கா முட்டாயென்று
பாடும் மழலையே
உன்
அடைகாக்கும்
ராகத்தை
பிசிறில்லாமல்
ஏந்தி வா.
உனக்குமிருக்கிறது
வனம் முழுதும் கிளைகள்.
04
மழையில்
நனைந்து
மடிப்பிச்சை கேட்கிறாள்
தாயொருத்தி
நடுங்குமொரு பொழுதாகிய உடலை
சுமந்தலையும் அவளது பாதங்கள்
நெருப்பில் புதைகின்றன.
இறுகச் சாத்தப்பட்ட கதவுகளைத்
திறக்காமலேயே
ஜன்னல் திரைச்சீலை விலக்கி
அவள் முகத்தைப் பார்க்கின்றனர்
நாகரீக கனவான்கள்.
ஏந்திநிற்கும் சேலையின் குழியில்
மழைத்துளிகள் விழுந்து
நிறைகின்றன.
“தரித்திர மழையே
தரித்திர மழையே
உன் தாராளம் நிறுத்து
பசித்தவர்க்கு இரங்காத
பாவிகள் இவர்க்கு
உன் தாராளம் நிறத்து”
ஏசினாள் இரந்து நின்றவள்
வானம் இட்டது
அவள் கேட்ட பிச்சை.
The post தினசரி first appeared on அகரமுதல்வன்.
அகரமுதல்வன்'s Blog
- அகரமுதல்வன்'s profile
- 17 followers

