அகரமுதல்வன்'s Blog, page 14
June 17, 2024
அந்தூரத்தாமரை
எனக்குத் தெரிந்த இலக்கிய நண்பரொருவர் வினோதமானவர். ஆச்சரியம் அளிக்கக் கூடியவர். நீங்கள் என்ன புத்தகத்தைப் பற்றிச் சொன்னாலும் வாசித்திருப்பார். அல்லது சென்ற நாட்களிலேயே மீள்வாசிப்பு செய்திருப்பார். அவரளவில் ஒளவையின் கற்றது கைம்மண்ணளவு, கல்லாதது உலகளவு” என்பதெல்லாம் வெற்றுப் பம்மாத்து. ஒட்டுமொத்த தமிழிலக்கியம் மட்டுமல்லாமல் மொழிபெயர்ப்பில் வெளியான இந்திய – உலக இலக்கியங்களையும் வாசித்திருக்கிறார் என்பார். இவ்வளவு ஆச்சரியங்களைத் தரக்கூடிய இலக்கிய உபாசகரோடு பழக்கம் வைத்திருப்பதெல்லாம் இந்த ஒற்றை வாழ்வுக்கு நாம் அளிக்கும் தண்டனையன்றி வேறில்லையெனத் தோன்றும். ஆனாலும் நண்பரோடு பேசுவதில் சுவாரஸ்யமும் இருக்கவே செய்யும்.
நேற்றைக்கு மாலையிலும் அவரோடு உரையாடினேன். ராஜீந்தர் சிங் பேடியின் சிறுகதையொன்றை அவரிடம் பகிர்ந்து கொண்டேன். ஆமாம் நானும் வாசித்திருக்கிறேன், அற்புதமான எழுத்தாளரல்லவா! என்றார் நண்பர். சிறந்த எழுத்தாளர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை என்றேன். இவரின் கதைகளை என்னுடைய சிறிய வயதில் வாசித்தேன். ஆனால் பாருங்கள் இன்றுவரை ஞாபகத்தில் உள்ளதென்றார். இந்த நண்பர் எல்லாவற்றையும் சிறிய வயதினிலேயே வாசித்தவர். இப்போது வாசிப்பதற்கு என்ன இருக்கிறது என்று சலித்தும் கொள்வார்.
இது ஒருவகையான வியாதி. வாசிப்பவர்கள் பலரிடமும் காணப்படும் மிகமுக்கியமான பிரச்சனை. அவர்கள் வாசிக்காமல் எந்தப் புத்தகமும் இல்லை. அவர்கள் அறியாமல் எந்தப் பக்கமும் பூமியில் புரட்டப்படவில்லையென கருதுகிறார்கள். எனக்குத் தெரிந்த கல்விப்புல நண்பரொருவர் இலக்கியக் கூட்டங்களுக்குத் தவறாமல் வருபவர். நவீன இலக்கிய வாசிப்பில் தீவிரம் கொண்டவர் என்று எங்கும் தன்னை முன்வைக்கமாட்டார். அமர்ந்திருந்து குறிப்புகள் எடுப்பார். சில புத்தகங்களை வாங்கிச் செல்வார். இந்தப் புத்தகம் வாசித்திருக்கிறீர்களா என்று கேட்டால் உண்மை நிலவரம் என்னவோ அதனையே சொல்வார். இவருடைய உண்மை ஞானத்தை அடைய விரும்பும் ஆற்றல் கொண்டது என்றே தோன்றும். ஆனால் ஆரம்பத்தில் கூறிய நண்பர் அப்படியா என்ன!
லா.ச.ரா இவர் வாசிக்க வேண்டுமென்று தான் “அபிதா”வையே எழுதினார். ஜான் பெர்க்கின்ஸ் தன்னைப் பொருளாதார அடியாள் என்று ஒப்புதல் அளித்து எழுதியதும் முதல் அத்தியாயத்தையே நண்பருக்குத் தானே அனுப்பி வைத்தார். தகழியின் கயிறு நாவலை வாசிக்கும் போது நண்பருக்கு ஏழு வயதென்பது பொய்யா என்ன! எட்டாவது வயதிலேயே நல்லுரைக்கோவையை படித்ததுவும், பத்தாவது வயதினிலேயே தி. ஜானகிராமனின் மொத்தப் படைப்புக்களையும் வாசித்து முடித்ததுவும் உண்மையா என்ன! – நண்பருக்கு பொய்யின் மீது ஏனிந்த இரக்கமோ அறியேன். எதன் பொருட்டும், எவர் பொருட்டும் இந்த நிலையை விட்டு அவர் இறங்கியதில்லை. டி.டி கோசாம்பி எழுதிய “பண்டைய இந்தியா” புத்தகத்தை மீள் வாசிப்புச் செய்யவேண்டுமென்றார்.
“முன்னர் எப்போது வாசித்தீர்கள் ?” என்று கேட்டேன்.
“பன்னிரெண்டு வயசிலேயே படிச்சாச்சு” என்றார்.
“அடேயப்பா. ஆச்சரியம் தான்” என்றேன். அவருக்குள் ஒரு வீண் பெருமை. என்னை நம்ப வைத்துவிட்டாராம்.
“லோகமாதேவி எழுதிய அந்தரத்தாமரைன்னு ஒரு புத்தகம் வாசித்தீர்களா?” கேட்டேன்.
“என்ன நண்பரே! இப்பிடிக் கேட்டிட்டிங்க. அந்த நாவல் என்னோட பால்ய நினைவுகள்ள ஒன்னு. ஊர்ல உள்ள நூலகத்தில இருந்து வாசிச்ச நினைவு இருபது வருஷமாகியும் இப்பவரைக்கு எனக்குள்ள இருக்கு. அந்த நாவலோட பெயர்தான் மறக்க இயலாதது “அந்தூரத்தாமரை” என்று இனிப்புண்டவரைப் போல பாவனை செய்தார். அவ்வளவு இனிமையான நாவலாம் அது. புரிகிறதா?
“அதிருக்கட்டும் அந்தப் புத்தகத்தை எதுக்கு இப்ப கேட்டீங்க. மறுபதிப்பு வந்திருக்கா” என்னிடம் கேட்டார்.
“மறுபதிப்பில்லை. முதல் பதிப்பே இப்பதான் வந்திருக்கு. அது நாவலோ, சிறுகதையோ, ஏன் நினைவுக் குறிப்போ இல்லை. கட்டுரை தான். தாவரவியல் கட்டுரைகள்” என்றேன்.
“அப்பிடியா! இல்லையே நான் இவரின் நாவலை வாசித்திருக்கிறேனே,அப்படியெனில் அந்தூரத்தாமரை எழுதிய லோகமாதேவி வேறு யாரோவா?” விழுந்தும் மீசையில் மண் ஒட்டாத மடப்பேர்வழியாய் சமாளித்தார்.
“யோவ். உனக்கு தெரியாது. இன்னும் வாசிக்கவில்லைன்னு சொல்றதுக்கு என்னய்யா பிரச்சனை” என்று கேட்டதும் நண்பர் திகைத்துவிட்டார்.
“என்னங்க இப்பிடி மிரட்டுறீங்க”
“அப்புறம் உனக்கு இதில என்னதான் சுகம் கிடைக்குது. இன்னும் வாசிக்கல. இந்தப் புத்தகத்த கேள்விப்படலன்னு சொல்றதில, நீ எங்க குறைஞ்சு போறாய்” கேட்டேன்.
“இல்ல நண்பரே. அதுவந்து” என்று இழுத்தார்.
“யோவ், இந்த இலக்கியம், அறிவு, அறிவுஜீவி இதெல்லாத்தையும் விட வாய்மை முக்கியம். அதைப் புதைச்சிட்டு இதை எதையும் உன்னால நெருங்கமுடியாது. பெருமைக்கு பொய் பேசினாலும் சோறு கிடைக்காது. ஞாபகம் வைச்சுக் கொள்” என்றேன்.
சற்றுநேரம் அமைதியாக நின்ற நண்பர் மெல்லிய இருமலுடன் கேட்டார். “நான் சொல்றதெல்லாம் பொய்யின்னு தெரிஞ்சு இத்தனை வருஷம் கேட்டிட்டு இருந்தீர்களே ஏன்?”
“உண்மையிலும் ஒருநாள் உங்களை இலக்கியம் வாசிக்க வைத்துவிடலாம்ங்கிற நம்பிக்கைதான்”
“ஆனா, நீங்க ஜூனியர் விகடன்ல எழுதின தொடரை வாசிச்சிருக்கிறேன். தெய்வம், பேய், நிலம், , கடவுள். நல்ல தொடர்.” என்றார்.
இதற்கும் மேலும் அவருடன் பேசினால், இலக்கியத்தின் பேரினால் ஏதேனும் அனர்த்தம் நிகழவும் வாய்ப்பிருக்கெனத் தோன்றியது. விடைபெற்றுக் கொண்டேன். இரவு நண்பரிடமிருந்து பகிரி வழியாக ஒரு தகவல் வந்தடைந்திருந்தது.
“நான் உங்களைப் போல புத்தகங்களை படிப்பவன் அல்ல. மனிதர்களை வாசிப்பவன். மனிதர்களை எவனால் வாசிக்கமுடியுமோ அவனே கலைஞன்”
அவருக்குப் பதிலாக ஒரு நன்றாகச் சிவந்திருக்கும் இதய வடிவிலான ஸ்டிக்கரை அனுப்பி வைத்தேன்.
‘மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்’ என்ற பாரதியின் வரிகளை சற்று மாற்றி “மானுடர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்” என்று எனக்கு நானே சொல்லிவிட்டு உறங்கினேன்.
The post அந்தூரத்தாமரை first appeared on அகரமுதல்வன்.
முதல் சிறுகதை தொகுப்புகள் மீதான உரைகள்
ஆகுதி ஒருங்கிணைத்த முதல் சிறுகதை தொகுப்புகள் மீதான கலந்துரையாடல் நிகழ்வின் உரைகள் வெளியாகியுள்ளன. புத்தம் புது தலைமுறையைச் சேர்ந்த வாசகர் – படைப்பாளிகளிடம் உள்ள அவதானங்கள் பலவும் வெளிப்பட்டுள்ளன. இந்த உரைகள் இன்றையை காலகட்டத்தின் அவதானிப்பாகவும் குரலாகவும் அமைந்துள்ளன. அனைவருக்கும் வாழ்த்தும் அன்பும்.
The post முதல் சிறுகதை தொகுப்புகள் மீதான உரைகள் first appeared on அகரமுதல்வன்.
June 16, 2024
சுடர்
01
மழையை
அழைத்து வந்தவர்
எவர்?
வெம்மையை
இப்படித்தான்
நனைக்குமா?
அறிந்தவர்
எவர்?
02
எங்குமில்லாத
இருள்
எங்குமில்லாத
ஒளி
எங்குமில்லாத
வெளி.
எங்குமில்லாத
எங்கும்.
03
சுடர்
அழியா
ஒரு நிழல்
நான்.
The post சுடர் first appeared on அகரமுதல்வன்.
June 15, 2024
அம்மை
01
இதுவொரு
சொல்.
அம்மை
என்றால்
சொல் மட்டுமா?
சொல்.
02
இலையுதிரும்
பூங்காவில்
உறங்குபவனுக்கு
கால் நீட்டி
ஆசுவாசம் காண
அந்தக் கல்லிருக்கை போதவில்லை.
ஆனாலும்
அவன் தலைமாட்டில்
அமர்ந்திருக்கிறது
அந்த
நாய்.
03
மேலும்
கீழுமாய்
அசைய
அமர்ந்திருக்கும்
குழந்தைக்கு
வானமுமில்லை
நிலமுமில்லை
அக்கணம்
எல்லாமும்
ஊஞ்சல்.
04
இன்றெனது வாசலில்
இரந்து நின்றாள் ஒளவையொருத்தி
அவளுக்கு ஈய
என்னிடம்
சிறிய கள்ளும் இல்லை
பெரிய கள்ளும் இல்லை.
“எத்திசை சென்றினும் அத்திசை சோறு” என்றவளே
இத்திசையில் சோறு இல்லை
சென்று வருக
என்றுதான் சொன்னதாய் ஞாபகம்.
The post அம்மை first appeared on அகரமுதல்வன்.
June 14, 2024
முதல் சிறுகதை தொகுப்புகள் உரையாடல் நிகழ்வு – அழைப்பிதழ்
ஆகுதி ஒருங்கிணைக்கும் முதல் சிறுகதை தொகுப்புகள் பற்றிய உரையாடல் நிகழ்வு அழைப்பிதழ். இவ்விழாவில் உரையாற்றவிருக்கும் ஒவ்வொருவரும் இலக்கியத்தை தமது வாழ்வின் அங்கமாக கொண்ட இளம் வாசகர்கள். அவர்களுக்கு எனது வாழ்த்தும் அன்பும்.
The post முதல் சிறுகதை தொகுப்புகள் உரையாடல் நிகழ்வு – அழைப்பிதழ் first appeared on அகரமுதல்வன்.
June 13, 2024
காலமலர்
01
இருள் என்று ஏதுமில்லை
ஒளி என்று ஏதுமில்லை
சொல் என்பதே
அணையா வெளி.
02
இன்றுமல்ல
நேற்றுமல்ல
எல்லாமும்
காலமலர்.
03
என் இதயம்
விழித்திருக்கும் ஆந்தை
அமர்வதற்கு
கிளை தானில்லை.
The post காலமலர் first appeared on அகரமுதல்வன்.
June 12, 2024
முதல் சிறுகதை தொகுப்புகள் – உரையாடல் – கதைகள்
ஆகுதி ஒருங்கிணைக்கும் முதல் சிறுகதை தொகுப்புகள் பற்றிய உரையாடல் நிகழ்வு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நிறைய வாழ்த்துமடல்களும் ஊக்குவிக்கும் ஆசிகளும் வந்தடைந்துள்ளன. இவ்விழாவில் உரையாற்றவிருக்கும் ஒவ்வொருவரும் இலக்கியத்தை தமது வாழ்வின் அங்கமாக கொண்ட இளம் வாசகர்கள். இந்த நிகழ்வில் பார்வையாளராக பங்கெடுப்பவர்கள் சிலவேளைகளில் தொகுப்புகளை வாசித்திருக்கலாம். பெரும்பாலானவர்களுக்கு அது வாய்த்திராது. ஆகையால் ஒவ்வொரு படைப்பாளியின் ஒரு சிறுகதையை இணைத்துள்ளேன். இதனை வாசித்துவிட்டு வருக! உரையாடலாம்.
The post முதல் சிறுகதை தொகுப்புகள் – உரையாடல் – கதைகள் first appeared on அகரமுதல்வன்.
June 11, 2024
கூவு குயிலே
01
எத்தனை நாட்களுக்கு
இதே கிளையிலிருப்பாய்
உன் ஒவ்வொரு கூவுதலுக்கும்
எவ்வளவோ மரங்கள் துளிர்த்துவிட்டன.
எவ்வளவோ மலர்கள் மலர்ந்துவிட்டன.
இனிமேலேனும்
உன் கூவுதலில்
கொஞ்சமேனும் இன்பம் ஏற்றேன்
செல்லக் குயிலே!
02
நகரப் பூங்காவில்
தியானம் கலைந்ததும் கண்களைத் திறந்து
வானத்தைப் பார்க்குமொருவனை
இன்று அருளியது எனக்கு.
அவனது கண்களில்
ஒளியுமில்லை
அமைதியுமில்லை
பழுத்து உதிர்ந்த ஒரு இலையை
ஏந்திய
குழந்தைக்கு வாய்த்தது
ஒளியும்
அமைதியும்.
03
மழை நின்றுவிட்டது
கொஞ்சம் வெளியே வந்து உலர்த்திக்கொள்
ஈரம் நல்லது.
அப்படியே இருக்க விடு.
The post கூவு குயிலே first appeared on அகரமுதல்வன்.
June 10, 2024
முதல் சிறுகதை தொகுப்புகள் மீதான உரையாடல் நிகழ்வு
ஆகுதி ஒருங்கிணைக்கும் முதல் சிறுகதை தொகுப்புக்கள் மீதான உரையாடல் நிகழ்வொன்று சென்னையில் நிகழவுள்ளது. வருகிற ஞாயிற்றுக்கிழமை 16.06.2024 – அன்று மாலையில் டிஸ்கவரி புக் பேலஸ் ஓவிய அரங்கத்தில் நடைபெறுகிறது. இந்த நிகழ்விற்கு டிஸ்கவரி புக் பேலஸ் அனுசரணை தருகின்றது. ஆறு இளம் எழுத்தாளர்களின் முதல் சிறுகதை தொகுப்புக்கள் குறித்து, இளம் வாசகர்கள் உரையாற்றுகிறார்கள். வருங்காலத்தில் எழுத்தாளர்களாக வரவிருக்கும் வாசகர்களும் இவர்களுள் அடக்கம். ஆகுதி ஒருங்கிணைக்கும் நிகழ்வின் வழியாகவே தமது முதல் மேடையைச் சந்திக்கவிருக்கிறார்கள். ஒருவகையில் ஆகுதி பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறது. இந்த நிகழ்வில் உரையாடவிருக்கும் புத்தகங்களை தெரிவிக்கிறேன். உரையாளர்களை அழைப்பிதழின் மூலம் அறிவிக்கிறேன்.
மழைக்கண் – எழுத்தாளர் செந்தில் ஜெகன்னாதன்
கடவுளுக்குப் பின் – எழுத்தாளர் பொன்முகலி
தீடை – ச. துரை
மிருக மோட்சம் – விஜயகுமார் சம்மங்கரை
ரோல்ஸ் ராய்ஸுயும் கண்ணகியும் – மதிஅழகன் பழனிச்சாமி
மருள் – பிரபாகரன் சண்முகநாதன்
The post முதல் சிறுகதை தொகுப்புகள் மீதான உரையாடல் நிகழ்வு first appeared on அகரமுதல்வன்.
June 9, 2024
சுந்தர ராமசாமி கவிதைகள்
நம்பிக்கை
தூரத் தொலைவில் அந்த நடையைக் கண்டேன்
அச்சு அசல் என் நண்பன்.
மறைந்தவன் எப்படி இங்கு வரக்கூடுமெனத் திடுக்கிட்டேன்.
வேறு யாரோ.
அப்படி எண்ணாதிருந்தால் அவனே வந்திருப்பான்.
தனித் தனியே
ஒரு பறவையின் சிறகுகள்
பறவையின்றிப் பறப்பதைக் கண்டேன்
சிறகுகளின்றிப் பின் வந்த பறவை
ஒரு இசையின் குழைவில்
லாவகமாய் தன் சிறகுகளை
தன்னோடு இணைத்துக் கொண்டது.
பறந்து பறந்து
பறவையின்றிப் பறக்கச் சிறகுகளுக்கும்
சிறகுகளின்றி பறக்கப் பறவைக்கும்
கூடி வந்த சூட்சுமம்
என் அகத்தில் விரிந்தபோது
துவண்டுகிடந்த என் மனத்தில்
ஒரு பூ மலர்ந்தது.
The post சுந்தர ராமசாமி கவிதைகள் first appeared on அகரமுதல்வன்.
அகரமுதல்வன்'s Blog
- அகரமுதல்வன்'s profile
- 17 followers

