அகரமுதல்வன்'s Blog, page 12
July 10, 2024
மரபு – கலை – தொன்மம்
ஆகுதி ஒருங்கிணைக்கும் மரபு – கலை – தொன்மம் கலந்துரையாடல் நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (14.07.2024) மாலை, டிஸ்கவரி புத்தக நிலையத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் உரையாடப்படவிருக்கும் நூல்கள் அறிவியக்கத்தளத்தில் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. ஆனந்த குமாரசுவாமி அவர்களின் “சிவானந்த நடனம்” நூலினை இதுவரை வாசித்திராத, அறிந்திராதவர்களுக்கு எழுத்தாளர் தாமரைக்கண்ணன் அவர்களின் உரை சிறந்த அறிமுகமாகவும், உந்துதலாகவும் அமையுமென உறுதிப்படக் கூறலாம். பி.கே. பாலகிருஷ்ணனின் “நாவெலனும் கலை நிகழ்வு” புத்தகம் அசாதாரணமானது. தமிழில் மொழிபெயர்த்த மரியாதைக்குரிய அழகிய மணவாளன் அவர்களுக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நூல் குறித்து உரையாற்றவுள்ள எழுத்தாளர் இளம்பரிதி நம்பிக்கைக்குரிய இளம் படைப்பாளி. அ.கா. பெருமாளின் “வயக்காட்டு இசக்கி” நூல் குறித்து உரையாற்றவுள்ள எழுத்தாளர் மயன் பரந்துபட்ட வாசிப்பு கொண்டவர். மண்ணின் கதைகளை எழுதி வருகிறார். எதிர்காலத்தில் தனித்துவமான படைப்பாளியாக மிளிரக்கூடியவர்.
கலை இலக்கிய உரையாடல்கள் மீது தீவிரமும், ஆழமும், அவதானிக்கும் திறனும் கொண்டவர்களை அன்புடன் அழைக்கிறோம். இந்த நிகழ்விற்கு இணை அனுசரணை வழங்கும் டிஸ்கவரிக்கும், ஊடக அனுசரணை வழங்கும் சுருதி தொலைக்காட்சிக்கும் நன்றி.
The post மரபு – கலை – தொன்மம் first appeared on அகரமுதல்வன்.
July 8, 2024
கசிந்துள்ளுருகும் நலம் – தாமரைக்கண்ணன்
https://saivathaen.blogspot.com/2024/07/blog-post_7.html
The post கசிந்துள்ளுருகும் நலம் – தாமரைக்கண்ணன் first appeared on அகரமுதல்வன்.
July 7, 2024
திருவுளம்
01
ஒளியெழும் போழ்தில்
காற்றில் தரிக்கும்
அரூபத்தின் கைகள்
இருளினுடையதா?
தெய்வத்தினுடையதா?
கருணை தேங்கியசையும்
சுடரில்
சிறுசெடியைப் போல
ஒளி துளிர்க்கட்டுமே!
இருளின் தெய்வமே
தெய்வத்தின் இருளே
உங்கள் பெருமூச்சை
இறுகப்பிடித்தபடி
இக்கணம்
திருவுளம்
காண்பியுங்களேன்.
02
நமக்கிடையில்
சிவந்து புரளுவது
வெறுப்பின் குருதியாறு
காயங்கள் பற்றி
எழுந்தாடும் தீயின்
வெறித்தனத்தில்
கசப்பிற்கு இரையான நேசம்
புகைகிறது.
தீயால் பிளவுறும் பொழுதில்
மழை பெய்துதான்
அடங்கவேண்டியுள்ளது
சாம்பலின் கங்கு.
The post திருவுளம் first appeared on அகரமுதல்வன்.
July 6, 2024
திருவாசகம் எனும் மொழியருள்
அன்புமிக்க அகரமுதல்வனுக்கு!
என் ஆசிரியர் அடிக்கடி ஒன்று சொல்லுவார், தராசின் ஒருபக்கத்தில் பக்தி நூல்களையும், மறு பக்கத்தில் திருவாசகத்தையும் வைத்தால், திருவாசகம் தான் முன்னோக்கி இருக்கும் என்று. சட்டென பார்க்கும் போது இந்தத் தொடர் ஒரு மிகை கூற்றாக தெரியலாம். ஆனால் படிக்கும் போது தான் தெரிகிறது அதனது உண்மை. நண்பர்களாக திருவாசகம் படிக்க வேண்டும் என்று ஆசை எழுந்தது. படிக்க ஆரம்பித்தோம். உங்களிடம் சில ஆலோசனைகளும் கேட்டோம். நீங்களும் சில அமர்வுகளில் கலந்து கொண்டு நெறிப்படுத்தினீர்கள். தற்போது 25 ஆவது வாரத்தை அடைந்துள்ளோம். இதை சிறப்பு அமர்வாக மாற்ற முடிவு செய்ய திட்டமிட்டோம். முதலில் ஒரு இணையத்தளத்தை தொடங்கி அதில் பல அறிஞர்களிடம் இருந்து சைவம் சார்ந்த கட்டுரைகளை வாங்கி பதிவேற்ற உள்ளோம். மேலும் அன்று ஒரு சிறப்பு உரையாடல் நடத்த திட்டமிட்டோம். யாரை அழைப்பது என்ற யோசனையே எங்களுக்கு வரவில்லை. கரு ஆறுமுகத்தமிழன் இருக்கும் போது வேறு யாரை அழைக்க முடியும்? அவரிடம் தொடர்பு கொண்டு பேசினோம். மிகுந்த பணிச்சுமைக்கு நடுவில் வர சம்மதித்துள்ளார். எந்த இலக்கிய நிகழ்வாக இருந்தாலும் அகரமுதல்வன் என்ற பெயர் நிச்சயம் வந்துவிடுகிறது. இந்த நிகழ்வும் அப்படித்தான். அழைத்தோம். நீங்களும் மறுக்காமல் சம்மதித்தீர்கள். திருவாசகம் என்ற தேனைப் பருக வரும் ஞாயிறு அன்று கூடுவோம். “மேன்மைகோள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்”
நன்றி
முத்துமாணிக்கம்
அன்பின் முத்துமாணிக்கம்! உங்களுடைய இந்த முயற்சி பாராட்டுக்கும் போற்றுதலுக்கும் உரியது. சின்ன அளவில் தொடங்கும் நற்கருமங்கள் அனைத்தும் – தொடர் செயற்பாட்டின் வழியாக தன்னை அசைவியக்கமாக மாற்றும். நீங்கள் கடுமையான உளச்சுழலில் இருந்த காலத்தில் திருவாசகத்தை வாசிக்கவேண்டுமென விரும்பினீர்கள். “அவன் அருளாலே அவன் தாள் வணங்கி” என்கிற சிவபுராண வரிகளை நினைத்துக் கொள்கிறேன். இருபத்தைந்து வாரமும் அவனருள் உங்களை வந்தடைந்திருக்கிறது. வாழ்த்துக்கள். தொடர்ந்து ஈடுபடுங்கள். இனியவை யாவும் மொழியால் உங்களை வந்தடையட்டும்.
The post திருவாசகம் எனும் மொழியருள் first appeared on அகரமுதல்வன்.
July 5, 2024
ஃப்ரன்ஸ் காஃப்காவும் எஸ்.ராவும்
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் “ஃப்ரன்ஸ் காஃப்கா: வாழ்வும் எழுத்தும்” என்ற தலைப்பில் ஆற்றிய மிகச் சிறந்த உரை. ஏற்கனவே அவரின் உருமாற்றம், விசாரணை ஆகிய நூல்களைப் படித்திருந்த போதும், இந்த உரைக்குப் பின்பாக வாசித்தால் இன்னொரு காஃப்காவை புரிந்து கொள்ள முடியுமென நினைக்கிறேன். வாய்ப்புள்ளோர் காண்க.
The post ஃப்ரன்ஸ் காஃப்காவும் எஸ்.ராவும் first appeared on அகரமுதல்வன்.
July 4, 2024
தெய்வ தசகம்: நாராயண குரு, உரை: நித்ய சைதன்ய யதி
‘பதம்’ என்பதை வாக்கு அல்லது சொல் என்று கொண்டால் அது பரந்துபட்ட பொருளை தருவதாகிறது. மாண்டூக்ய உபநிடதம் ஆன்மாவை நான்கு கால்கள் கொண்ட ‘ௐ’காரமாய் சித்தரிக்கிறது. ஜாக்ரத்-ஸ்வப்னம்-ஸுஷுப்தி-துரியம் என்ற நான்கு பாதங்களின் மறைபொருளை உணர்ந்தவரே ப்ரணவத்தை உணர்ந்த குரு.
https://www.kurugu.in/2023/04/blog-post_95.html
The post தெய்வ தசகம்: நாராயண குரு, உரை: நித்ய சைதன்ய யதி first appeared on அகரமுதல்வன்.
July 3, 2024
இரை
01
வெறித்திருக்கும் பகலில்
வெளிச்சம் பிளந்து
வீழ்கிறது மழை
ஒரே தாவலில்
குருவியைக் கவ்வுகிறது
குட்டிப் பூனை.
சிறுநீர் பிரிய கல்லிருக்கையில்
உறங்கித் திளைக்கிறான்
அந்நியன்.
பூங்காவை நிரம்பியிருக்கும்
வெள்ளத்தில்
காகங்கள் நீராடுகின்றன
விழித்த அந்நியன்
வீழும் மழையை
வெறித்தான்
நடுக்கமில்லை
ஈரமில்லை
எல்லாமும்
கானல்
என்றபடிக்கு
கல்லிருக்கையில்
மீண்டும்
உறங்கினான்
மகாகவி.
02
கொடுங்கனவின் வேட்டை இரை
என் காயம்
அனலில் வாட்டப்படும் இறைச்சி
என் நிலம்
இருளில் திகைக்கும் காடு
என் மொழி
காயம் துளிர்த்து
நிலம் கிளைத்த
மொழியில்
என் நிலவு தளும்பும்.
03
என்றைக்கும்
என் கடலில்
ஒதுங்கும்
பிணங்கள்
இருபத்தோராம் நூற்றாண்டின்
கரையில்
ஓயாதும் புரளும்
முள்ளிவாய்க்கால்.
The post இரை first appeared on அகரமுதல்வன்.
July 2, 2024
காலம்
01
பழங்கால இடுகாட்டின் நெருக்குவாரத்தின்
குழியொன்றில்
வால்சுருட்டி உறங்கியிருக்கிறது
நெடும்பகல் நாய்.
நேற்றைக்கு மூடப்பட்ட ஆறடி மேட்டில்
அமர்ந்திருந்து
அலகால் இறகுகளை நீவிய புறாக்கள்
படபடத்து எழுந்து பறக்கின்றன
உயரமான கல்லறையின் மீது ஏறிநின்று
கண்களை மூடி
பூமியை நோக்கி விழுந்தான்
ஒருவன்.
கல்லறை மீது தலைதூக்கும்
ஓணானை
பாய்ந்து கவ்வியது
நெடும்பகல் நாயின்
உறக்க வேஷம்.
இப்படியொரு இளைப்பாறல்
இப்படியொரு அமைதி
இப்படியொரு விடுபடல்
இப்படியொரு இல்லாமை
யாருக்கு வேண்டும் இப்போது?
02
இருள் யுகத்தின்
குகையிடுக்கில்
கசியும் காயம்
எனது.
குருதியே அகல்
குருதியே திரி
குருதியின் ஒளி
எனது.
03
கைவிடப்பட்டவர்கள்
தாழ்வாரத்தில் ஒதுங்கி
மழையை வெறிக்கிறார்கள்
பறவைகள் உலர்ந்து
மீண்டும் பறக்கும் வரை
நீரில் அவர்கள் நடப்பதில்லை
தீயின் பாலையில்
அணையை மறுத்து
பிராயணம் போகிறவர்கள்
பற்றியெரியும்
ஒரு மழைக்காக காத்திருக்கிறார்கள்.
The post காலம் first appeared on அகரமுதல்வன்.
July 1, 2024
பக்தி இலக்கியம்
அன்புமிக்க அகரமுதல்வன் அண்ணே!
ஒரு நவீன இலக்கிய வாசகர் பக்தி இலக்கியத்தை கவிதையாக, மொழி அழகியலயாக, தத்துவமாக, பக்தியாக என நீளும் குழப்பங்களில் எவ்வாறு வாசித்துக் கண்டடைய வேண்டுமென நினைக்கிறீர்கள்?
முத்துமாணிக்கம்
அன்பின் முத்துமாணிக்கம்!
நவீனத் தமிழ் இலக்கிய வெளியில் பக்தி இலக்கியம் குறித்த பிரக்ஞை குறிப்பிடப்படுமளவு இல்லை. பக்தி இலக்கியத்தைக் குறித்து உரையாடினாலே பிற்போக்குத்தனமென்று உதறித்தள்ளும் பாவனை முற்போக்கு இரைச்சல் எழுந்துவிடும். இதன் விளைவாகவே நவீனத் தமிழ் இலக்கிய வெளி தன்னுடைய பாவனை முற்போக்கு தந்திரங்களுக்காக பக்தி இலக்கியங்களை கைவிட்டுவிட்டது. இதனால் பக்தி இலக்கியத்திற்கு எந்த இழப்பும் இல்லை. மாறாக நமக்குத்தான் பேரிழப்பு.
நான் சைவ அறநெறி வகுப்புக்களின் மூலமாக பதிகங்களைக் கற்றுக்கொண்டவன். பண்ணிசையால் திருமுறைகளை ஓதியவன். நான் பக்தி மரபை ஆராதிப்பவன். அதன் வழியாகவே பதிக வரிகளை ஆய்ந்து நோக்கும் ஆசான்கள் எனக்கு கிடைத்தனர். காரைக்கால் அம்மையார் முதல் – மணிவாசகர் என நீளும் மாபெரும் பக்தி இலக்கியக்காரர்களை அப்படித்தான் அறிந்தேன். பக்தியாகவும், இலக்கியமாகவுமே அவற்றை தொடக்கத்தில் உணர்ந்தேன்.
ஆனால் பக்தி இலக்கியத்தை ஒருவர் எவ்வாறு புரிய விரும்புகிறாரோ, அதுபோலவே கண்டடைந்து கொள்ளலாம். அங்கு எந்த கட்டித்துப்போன வாசிப்பு முறைமையும் இல்லை. ஏனெனில் இன்று பக்தி இலக்கியங்களை வாசிப்பதற்கும் உரையாடுவதற்கும் சிறுதொகையினரே இலக்கியச் சூழலில் இருக்கிறார்கள். சங்க இலக்கியத்திற்கும் இதே நிலையத்தானே நாம் வழங்கியிருக்கிறோம். ஒரேயொரு செம்புலப்பெயல் நீரை வைத்துக் கொண்டு தானே மேடையிலும், இலக்கிய உரையாடல்களிலும் பலர் கம்பு சுத்துகிறார்கள். ஒரு திருக்குறளை இரண்டு தடவைகள் ஏற்ற இறக்கத்தோடு சொல்லி, திருவள்ளுவரை ஒரு சக படைப்பாளியாக ஆக்கிவிடும் தந்திரப் பாவனைகள் நம் சூழலுக்கு போதுமானதாகிவிடுகிறது.
கடும்பகல் நட்ட மாடிக்
கையிலோர் கபால மேந்தி
இடும்பலிக் கில்லந் தோறு
முழிதரும் இறைவ னீரே
நெடும்பொறை மலையர் பாவை
நேரிழை நெறிமென் கூந்தற்
கொடுங்குழை புகுந்த வன்றுங்
கோவண மரைய தேயோ.
அப்பர் பெருமானின் இந்த வரிகள் எனக்கு பக்தியாகவும், கவிதையாகவும், தத்துவமாகவும், மொழியழகியலாகவும் பிடித்தது. மேற்கொண்டு என் துணையாகவும். தீவிரத்தோடும் அர்ப்பணிப்போடும் எந்தக் கலையிடமும் நாம் பணிந்தோம் எனில் அது எல்லாமுமாக எம்முள் சடை விரிக்கும்.
The post பக்தி இலக்கியம் first appeared on அகரமுதல்வன்.
June 30, 2024
குரவை
01
என் கானகத்தில்
புராதன விலங்கொன்றை
கண்டேன்
மலையடிவாரத்து
வெட்சியின் அடர்வுக்குள்
பதுங்கி மறைந்திருந்தது
கணத்தில் மனம் களித்து
நெருப்பாலும்
நினைவாலும்
சூல் கொண்ட
தாளத்திற்கு
உடல் அதிர
பாதங்கள் அசைய
வெறிக்குரவையாடியது
குருதி
வெஞ்சுடர் திகைத்திறங்க
வெட்சி மலர்கள் ஆடி அசைய
மலைப் பாதையில்
சுவடு பதித்தது
அது.
02
நேற்றைக்கு
உதிர்ந்து போன
பூவை
ஏந்தியிருக்கிறது
இன்று
அநித்தியத்தின்
நித்திய
சாட்சியானவைகளே
மலர்க!
03
நகரப் பூங்காவின் கல்லிருக்கையில் அமர்ந்து
கண்ணீர் விடுகிறவன்
அந்நியன் இல்லையெனக்கு
அவனது கைகளைப் பற்றிக்கொண்டு
என் கண்ணீரையும் விடுவேன்.
கண்ணீருக்கு சொந்தமானவர்கள்
கைகுலுக்கிக் கொள்ள
கண்ணீரைத் தவிர வழியுண்டோ
அறியேன்.
The post குரவை first appeared on அகரமுதல்வன்.
அகரமுதல்வன்'s Blog
- அகரமுதல்வன்'s profile
- 17 followers

