அகரமுதல்வன்'s Blog, page 11
July 20, 2024
பிரமிள் – ஜெயமோகன்
July 19, 2024
இரவு
01
இரவுக்கு மேல் இரவு
இருந்துமென்ன
விடியலில்
ஒரு மலர்
எனக்காய்
விரியும்
02
ஆழம்
ஆழம்
மெல்ல நீந்து
மெல்ல நீந்து
ஒளியே…
03
நதியை
அழைத்துச் செல்லும்
நதி.
The post இரவு first appeared on அகரமுதல்வன்.
July 18, 2024
சிறகுள்ள மலர்
01
காய்ந்த துணிகள் பறந்து பறந்து
வெயிலைத் துரத்தும் கொடியில்
ஈரமுலர்த்தி
விசுக்கெனப் பறந்த கணம்
பகலை உரசிற்று
சிறகுள்ள மலர்.
02
ஜன்னலில்
அமர்ந்திருப்பது
பறவையா?
பாணனா?
பறக்கவும் இல்லை
பாடவும் இல்லை
இறக்கைகளா ?
நரம்புகளா?
நாள் தோறும்
அதிர்கிறது
நடுநிசி.
03
இந்த யுகத்தின்
இறுதி
மனையுறைக் குருவியாக
புழுதியில் குளித்து
எஞ்சியிருக்கிறேன்
கல் தோன்றி
மண் தோன்றா காலத்தே
முன் தோன்றிய மூத்த குடிகளே
அருந்தக் கொஞ்சம்
தண்ணீர் தாருங்கள்.
The post சிறகுள்ள மலர் first appeared on அகரமுதல்வன்.
July 17, 2024
கிளை நிழல்
01
நீளமானதொரு புல்லாங்குழல்
இந்த இரவு
பல்லாயிரம் துளைகளிலும்
காற்றை நிரப்பி
ஒவ்வொன்றாய் திறக்கிறது
நாளை.
02
பருத்து நீண்ட பாம்பென ஊர்ந்தசையும் கனவு
என்னைத் தான் மீண்டும்
தீண்டும்.
03
பிறந்த என்னை முதலில் ஏந்திய
மகப்பேறு விடுதித் தாதியை
அறிமுகப்படுத்தினாள் அம்மா.
உன் மேலிருந்த ரத்தத்தை துடைத்தவள்
நானே தான் என்றவள்
தாதியுமில்லை
தெய்வமுமில்லை
அவளொரு அநாதி காலத்தின்
கிளை நிழல்.
The post கிளை நிழல் first appeared on அகரமுதல்வன்.
July 16, 2024
மாமங்கலதேவி – படக்கதை
இந்த விழாவின்போது நடக்கும் வழிபாட்டு முறைகள் ஆதிவீரியம் கொண்டவையாக உள்ளன. பக்தர்கள் கொண்டு வரும் காணிக்கை பூசையறையில் கொடுக்கப்படாமல் வாசலுக்கு வெளியே நின்றபடி கோவில் மீது வீசப்படுகின்றன. கோழி வெட்டி குருதி பலி கொடுப்பது இன்று குறியீட்டுச்சடங்காக மாறி பல்லாயிரம் சிவப்புத் துணிகளால் பலிக்கல் மூடப்படுகிறது (படம் 3). சிலம்பொலி அதிர கன்னியின் செவ்வாடை உடுத்து கோவிலைச் சுற்றி வரும் வெளிச்சப்பாடுகள் தங்கள் குருதியை அன்னைக்கு படையலிட்டு வெறிகொண்டு ஆடுகின்றனர். கோயிலின் கூரைக்கம்பியைக் கட்டையால் அடித்து பெருங்கூச்சலிட்டுக் கொண்டாட்ட மனநிலையில் ஓடி வலம் வருகின்றனர் பல்லாயிரம் பக்தர்கள் (படம் 7). பல நூறு ஆண்டுகளாக மாற்றமின்றித் தொடர்கின்றன இந்த வழிபாடுகள்.
https://www.vazhi.net/post/_am01The post மாமங்கலதேவி – படக்கதை first appeared on அகரமுதல்வன்.
July 15, 2024
வரலாற்றின் புழுதி
வணக்கம் , அகரமுதல்வன்!
கவிஞனுக்கும் எழுத்தாளனுக்கும் அறச்சீற்றம் உண்டு. வடிவம் தான் அவர்களை பிரித்து காட்டுகிறதா? இல்லை ஆளுமையில் பெரும் வேறுபாடு உண்டா?
ஞானசேகரன்
அன்பின் ஞானசேகரன்!
உங்களுடைய கேள்வியில் கவிஞருக்கும், எழுத்தாளருக்கும் அறச்சீற்றம் இருப்பதாக உறுதிப்பட தீர்ப்பு எழுதியுள்ளீர்கள். இதுவே நெருக்கடியை ஏற்படுத்தும் சுமைதான். இலக்கியம் என்பதே அறச்சீற்றத்தின் வெளிப்பாடு மட்டுமில்லை. அது படைப்பாளியின் தனிப்பட்ட உணர்வுகளின் உள்முகமாகவும் அமையும். எழுதுபவர்களின் ஆற்றாமையும், தத்தளிப்பையும் ஏந்திக்கொள்ளவும், தாங்கிக்கொள்ளவும் இலக்கியம் இருக்கிறது. இன்னொரு தரப்பு கசப்பையும் இருளையும் மட்டும் சொல்லுவதே இலக்கியமென கருதுகிறார்கள். இதுதான் இலக்கியம் என ஒற்றைத்தன்மையாக அறிக்கையிடும் எந்தத் தரப்பின் குரலும் ஒருவகையில் தூய்மைவாதத்தையே சேரும். ஆகவே பரந்தளவில் இலக்கியத்தை அறியத் துடிக்கும், எழுத விரும்பும் ஒவ்வொருவரும் அறச்சீற்றத்தை மட்டுமே கையிலெடுக்க வேண்டுமென்கிற அவசியம் இல்லை. கலை கோரும் திசையில் தனது தலையை அளிப்பவனை எழுத்து பீடிக்கும்.
கவிஞர்களும் எழுத்தாளர்களும் ஓருலகம் சார்ந்தவர்களோ, ஒரே தன்மை கொண்டவர்களோ இல்லை. இவர்கள் இருவருக்கும் இடையே சிந்தனையிலிருந்து, முன்வைக்கும் அவதானங்கள் வரை பாரிய வித்தியாசங்கள் உள்ளன. கவிஞர்கள் உணர்ச்சிவசமானவர்கள். நீங்கள் கூறும் தீவிரத்தன்மையான அறவுணர்ச்சியும் அதில் அடக்கமே தவிர, அதுமட்டுமில்லை.
ஒளவையின் தனிப்பாடல் ஒன்றை உதாரணமாகச் சொல்கிறேன்.
அற்றதலை போக அறாததலை நான்கினையும்
பற்றித் திருகிப் பறியேனோ – வற்றும்
பரமனை யானுக்கிந்த மானைவகுத் திட்ட
பிரமனையான் காணப் பெறின்.
படைத்தலைச் செய்யும் பிரம்மனின் மிஞ்சியிருக்கும் நான்கு தலைகளையும் திருகி எறிவேன் என்கிறாள். இந்தப் பாடல் பிறந்த கதையையும் முழுமையான பொருளையும் தேடி வாசியுங்கள். கவிஞர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் இடையில் இருப்பது வடிவ பேதம் மட்டுமல்ல. கொந்தளிக்கும் அகத்துள் ஒருவிதமான வெக்கைச் சலனத்தை ஏற்படுத்தி, கங்கு தணியாமல் காத்திருப்பார்கள் கவிஞர்கள். அந்தத் தணலில் இருந்து ஒரு சொல் கனிந்த தீயாகி மேலெழும்புகிறது.
“சாகத் துணியில் சமுத்திரம் எம் மட்டு
மாயையே – இந்தத் தேகம் பொய்
என்றுணர் தீரரை என் செய்வாய் மாயையே”
பாரதியின் இந்த மாயையைப் பழித்தல் எவ்வளவு பெரிய தீக்கிடங்கில் இருந்து பழுத்துச் சிவந்த ஆற்றல். பாரதி மரணமில்லாத பெருவாழ்வை மொழியில் பதிந்து விட்டிருக்கிறான் அல்லவா! இங்கே இந்த உணர்ச்சிவயப்படலை அறச்சீற்றம் என்றும் கருதலாம்.
எழுத்தாளர்கள் சற்று வேறுவிதமானவர்கள். அவர்களுக்கும் கொந்தளிப்பும் பதற்றமும் பெருமளவில் உள்ளது. ஆனால் உலகம் முழுவதும் பெரும்பாலான எழுத்தாளர்கள் தங்களுடைய சிறுபிராயத்தின் நினைவுகளால் வழிநடத்தப்பட்டிருக்கிறார்கள். சற்றும் எதிர்பாராத ஒரு சந்தர்ப்பத்தில் தங்களுடைய நிகழ்காலத்தைச் சந்தித்தால், உணர்ந்தால் பல எழுத்தாளர்கள் வெறுமை கொண்டுவிடுகிறார்கள். கடந்தகாலத்தின் கனவுள் படிவது அவர்களுக்கு சுகமளிக்கிறது. கனன்று சுழலும் ஒருவெளியில் தனித்து நிற்க அஞ்சுவதில், அவர்களுக்கு ஒரு இளைப்பாறல் கிடைக்கிறது. நிகழ்காலத்தை இறந்தகாலமெனும் அருங்காட்சியகத்தில் காண்பதில் பிரியமாக இருக்கிறார்கள். நிகழ்காலத்தின் கசப்பை மட்டுமல்ல, இனிமையை, மகிழ்ச்சியை, தோல்வியைக் கூட அவர்கள் சந்திக்க விரும்புவதில்லை. தேனில் ஊறவைத்து நெல்லிக்காய் உண்பவர்களை அறிவீர்கள் அல்லவா! அப்படித்தான் பல எழுத்தாளர்கள்.
நான் எப்போதும் கவிதைகளை வாசிப்பவன். ஒவ்வொரு நாளின் உரையாடலிலும் கவிஞர் ஒருவரின் கவிதையை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளும் வழக்கம் உள்ளது. எழுத்தாளனுக்கும் கவிஞனுக்கும் இடையே இருப்பது மாபெரும் ஆளுமை வேறுபாடு.
என் நூற்றாண்டு
துணியால் வாயைப் பொத்தி அழுதபடி
ஒரு பெண் சாலையில் நடந்து போகிறாள்
என் பஸ் நகர்ந்து விட்டது.
படிவங்களை நிரப்பத் தெரியாமல் ஒரு முதியவர்
மருத்துவமனையில் திகைத்து நிற்கிறார்
என் வரிசை நகர்ந்து விட்டது.
தண்டவாளத்தில் ஒரு இளைஞன் அடிபட்டு
தண்ணீர் தண்ணீர் என்று
கையசைத்துக் கொண்டிருக்கிறான்
என் டிரெயின் நகர்ந்து விட்டது
எவ்வளவு நேரம்தான் நான் இல்லாமல் இருப்பது
எவ்வளவு முடியுமோ அவ்வளவு நேரம்
இருபத்தொன்றாம் நூற்றாண்டு எவ்வளவு நேரமோ
அவ்வளவு நேரம்.
தேவதச்சன் இந்த நூற்றாண்டைப் பற்றி கூறுகிற சித்திரத்தை தமிழ் எழுத்தாளன் புனைவில் இன்னும் தரவில்லை. வேடிக்கையாக சொன்னால், எழுத்தாளர்கள் அடுத்த நூற்றாண்டுக்காக காத்திருக்கிறார்கள். கவிஞர்கள் இந்த நூற்றாண்டை பட்டவர்த்தனம் ஆக்குகிறார்கள். ஈழத்துக் கவிஞர் சேரனின்,
“முகில்கள்மீது நெருப்பு
தன் சேதி எழுதியாயிற்று
சாம்பல் பூத்த தெருக்களில் இருந்து
எழுந்து வருக”
புகழ்பெற்ற இந்தக் கவிதை வரிகளை தமிழர் எவரும் மறப்பாரோ! மறக்கும் வரிகளா இவை. அன்றைக்கு முகில்களின் மீது நெருப்பு எழுதிய சேதி இன்னும் தான் அணையவில்லை அல்லவா! சாம்பல் பூத்த தெருக்கள் இன்றும் உலகில் உள்ளது அல்லவா!
பதினான்கு தலைமுறைக்கு ஒரு முறை
வாய்க்கிறது
சுதந்திரம் தூக்கலான ஒரு எதிர்ச்சொல்
குருதிக்கறை கொண்ட
உடைந்த பல்
அதிகம் சிரிக்கிறது
ஒரு புதிய அர்த்தத்தில்.
அதோ!
அதிகாரி வீட்டுக்குள்
பன்றிக்குடல் எறிந்துவிட்டு ஓடுகிற சிறுவன்
வரலாற்றில்
புழுதி கிளப்பப் போகிறான்.
என்ற கவிஞர் வெய்யிலின் கவிதைகளையும் குறிப்பிட விரும்புகிறேன். பன்றிக்குடலை எறிவதில் அறவுணர்ச்சி மட்டுமல்ல. ஒடுக்குமுறைக்கு எதிரான விடுதலையின் அழகியலும் உள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக அது ஒரு கவிதையாக தன்னை முழுமையாக்கி உள்ளது.
என்றும் நிலைத்திருக்கும் மொழியில் கவிஞன் முதன்மையானவன். ஆதியும் அந்தமும் அற்ற சிவனுக்கு அம்மையாகத் தெரிபவள், கவிஞர் காரைக்கால் அம்மைதான். மொழிக்கு மட்டுமல்ல அறத்துக்கு மட்டுமல்ல தெய்வத்துக்கும் கவிஞன் முதன்மையானவன். அவனே ஆளுமையில் வியப்பளிப்பவன் என்பது என்னுடைய கருத்து. என்றுமுள்ள மொழிக்கு என்றைக்கும் அருளுபவன் கவிஞன்.
நன்றி
The post வரலாற்றின் புழுதி first appeared on அகரமுதல்வன்.
July 14, 2024
அருவி – வள்ளி வாண தீர்த்தம் ஆடின கதை – 1
பாதித்தூரம் ஏறுமுன்னே எனக்கு கால் நோவு மிகுதியாய் விட்டது. பிதாவிடம் சொன்னால் முன்பு வண்டி வேண்டாமென்று சொன்ன காரணத்தை கொண்டு அவர் மிகவும் கோபம் கொள்ளுவார். கிட்டண்ணாஎன்னிடம் அடிக்கடி: – ” கால் வலிக்கிறதா ? இரையாதே பல்லை கடித்துக்கொண்டிரு . இல்லாவிட்டால் அண்ணா வைவார். கதைகள் சொல்றேன் கேள் ” என்று பல விதங்களிலே சமாதானம் பண்ணுவார் . ஒரு மட்டிலும் ஏறி உச்சிக்கு வந்து சேர்ந்தோம். அங்கே ஒரு சின்ன மைதானம்.
https://www.vazhi.net/post/அர-வ-வள-ள-வ-ண-த-ர-த-தம-ஆட-ன-கத-1
The post அருவி – வள்ளி வாண தீர்த்தம் ஆடின கதை – 1 first appeared on அகரமுதல்வன்.
July 13, 2024
சிவப்பு மச்சம் – எஸ்.ராமகிருஷ்ணன்
July 12, 2024
கண்ணாளா, ஈதென் கருத்து – ஜா. ராஜகோபாலன்
சித்தாந்தம் முழுமையாக நூலாக்கப்படுவதற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே பாடப்பட்ட பாடல்கள் இவை என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். இறைவன் மீது கொண்ட பக்தியும், கல்வியும், ஞானமும் கலந்த பாடல்கள்.
https://saivathaen.blogspot.com/2024/07/1_7.html
The post கண்ணாளா, ஈதென் கருத்து – ஜா. ராஜகோபாலன் first appeared on அகரமுதல்வன்.
July 11, 2024
யுத்தம் ஒழிக! யுத்தம் ஒழிக! – கார்த்திக் புகழேந்தி
விடுதலைக் கருவிகளைத் தோள்களில் சுமந்தவர்கள் தெய்வங்களானதும், தெய்வங்கள் அவரவர் வாழிடங்களில் பெருகிய ஒப்பாரிப் பாடல்களைச் சகியாமல் கண், காதுகளைப் பொத்திக்கொண்டு வெளியேறியதுமான நிலத்தில் நின்று, ஈழத் தமிழரின் மீள்குடியேற்ற வாழ்வை இந்த நூலில் எழுதுகிறார் அகரமுதல்வன்.
செட்டிக்குளம் அகதி முகாமில் அடைக்கப்பட்டு பலாத்காரங்களுக்கும் வன்முறைக்கும் உள்ளான சனங்களை அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்புகிறது ராணுவம். செத்தே போனாலும் சொந்தக் காணியில் என் உயிர் போகட்டும் என்ற எண்ணம் கொண்டவர்களுக்கு அந்நேரத்தில் நிம்மதி திரும்பியது என்று தொடங்குகிறது ‘போதமும் காணாத போதம்.’
அன்று, கடல் வாசல் தெளிக்கும் வீட்டுக் கூரைகளில் கறையான் படை. பனைமரக் காடு புதர்மண்டிக் கிடக்கிறது. பறவைகள் கூடுகள் சிதைந்து கிடக்கின்றன. மறுமுறை ஒருமுறை பார்க்க ஏங்கிய வாழ்நிலத்தைக் கண்ணாரக் கண்டபோது, எல்லோருடைய உதடுகளும் புன்னகையை மறந்திருந்தன. வெறும் கூடுகளான உடலுக்குள் இருந்து கண்ணீர் மட்டும் அளவில்லாமல் சுரக்கிறது. எந்தத் துயரத்திலும் கண்ணீர் சிந்தாத தாய், தனது காலடி மண்ணை இரண்டு கைகளாலும் அள்ளி வான் நோக்கி எறிகிறாள். அது சாபமா, பிரார்த்தனையா என்ற கேள்விதான் இந்த நூலின் 25 அத்தியாயங்களுக்குள் கதையாக நிகழ்கின்றன.
போரால் உயிரிழந்தவர்கள், உறவிழந்தவர்கள், உறுப்பிழந்தவர்கள், வடுக்களைச் சுமர்ந்தவர்கள் எனக் கதைமாந்தர்களை வரிசைக்கிரமமாக அறிமுகப்படுத்துகிறார் அகரமுதல்வன். அவர்கள் ஒன்றுகூடி தங்களின் போர்க்கால ‘பரணியைப்’ பாடுகிறார்கள். துயர்நீங்க தங்கள் உரையாடலுக்குள் ‘பாணாற்றுப்படை’ நிகழ்த்துகிறார்கள். ‘துயிலெடை நிலை’ பாடி நிலத்தடியில் உறங்கிப்போனவர்களை மீள எழுப்புகிறார்கள்.
மலை, ஆறு, நாடு, ஊர், மாலை, படை, குடி, முரசு, கொடி, தெய்வமென இழந்த ஞாபகங்களால் மிச்சமிருக்கும் வாழ்வை நம்பிக்கைக்கு நெருக்கத்தில் கொண்டுவந்து நிறுத்துகிறார்கள். கொட்டடி காளியும், வீரபத்திரரும், பூதவராயரும், கருங்காலி முனியும், மாடன்களும் மீளக் குடியேற்றத்தில் பங்கேற்கிறார்கள். போர்த் துயருக்குப் பிறகான வாழ்வின் வெக்கையும் ஞாபகங்களின் தகிப்புமே “போதமும் காணாத போதம்.”
போரின் மிச்சத் துகளைத் சுமந்தலையும் திலகா அக்கா, மன்னார் களமுனையில் சமராடி, இறுதிப் போரில் காணாமலான பூதவதி, சுடுகலன் தாங்கிய பகைவர்க்கு நடுக்கம் வரச் செய்த அதியமானின் உடலைத் துளைத்த தோட்டா, ‘இனி மிச்சமிருக்கப்போவது தாய் நிலமல்ல, ஓர் உன்னதச் சகாப்தத்தின் நிர்மலமான இறந்தகாலம்’ என்று முன்னறிவிப்பு செய்யும் ஈகையாள், நந்திக்கடலின் உப்புத் தண்ணீரில் விளக்காய் எரியும் அதிபத்தன், யுத்தம் ஒழிக! யுத்தம் ஒழிக! என்று முயங்கும் யசோ என…. கதைமாந்தர்கள் எல்லோருமாகச் சேர்ந்து ஒரே குரலில் பாடுகிறார்கள்.
“இந்த நூற்றாண்டின்மீது எங்கள் குருதி படிந்திருக்கிறது. பழம்பாடலின் வழியாக நிலத்தின் தொன்மங்களுக்குள் ஒளிந்து கிடக்கும் எங்கள் தெய்வங்களை விடுவிக்கிறோம். பாஸ்பரஸ் வாசனைக்கு நடுவே நம்பிக்கையின் ஒளியைக் கண்டடைகிறோம். ஞாபகங்கள் போல வதையுமில்லை… ஞாபகங்களைப் போல சிறையுமில்லை… ஞாபகங்களைப் போல விடுதலையுமில்லை” என்கிறார் அகரமுதல்வன்!
https://www.vikatan.com/literature/books/padipparai-book-review-july-17-2024The post யுத்தம் ஒழிக! யுத்தம் ஒழிக! – கார்த்திக் புகழேந்தி first appeared on அகரமுதல்வன்.
அகரமுதல்வன்'s Blog
- அகரமுதல்வன்'s profile
- 17 followers

