01
காய்ந்த துணிகள் பறந்து பறந்து
வெயிலைத் துரத்தும் கொடியில்
ஈரமுலர்த்தி
விசுக்கெனப் பறந்த கணம்
பகலை உரசிற்று
சிறகுள்ள மலர்.
02
ஜன்னலில்
அமர்ந்திருப்பது
பறவையா?
பாணனா?
பறக்கவும் இல்லை
பாடவும் இல்லை
இறக்கைகளா ?
நரம்புகளா?
நாள் தோறும்
அதிர்கிறது
நடுநிசி.
03
இந்த யுகத்தின்
இறுதி
மனையுறைக் குருவியாக
புழுதியில் குளித்து
எஞ்சியிருக்கிறேன்
கல் தோன்றி
மண் தோன்றா காலத்தே
முன் தோன்றிய மூத்த குடிகளே
அருந்தக் கொஞ்சம்
தண்ணீர் தாருங்கள்.
The post சிறகுள்ள மலர் first appeared on அகரமுதல்வன்.
Published on July 18, 2024 11:27