அகரமுதல்வன்'s Blog, page 8

August 22, 2024

August 21, 2024

August 20, 2024

August 19, 2024

நாளைக்கான சுடர் – சௌந்தர் . G

அகரமுதல்வனின் முந்தைய படைப்பான ‘மாபெரும் தாய்’ நூல் குறித்து விமர்சனம் எழுதியபோது, வெறும் மரண ஓலங்களையும் , வாதைகளையும்,மீண்டும் மீண்டும்  சொல்லிக்கொண்டிருபத்திலிருந்து, ஒரு சிறிய வெளிச்சம் நோக்கி நகர்வதை பற்றி பேசத்தொடங்கி இருக்கிறார், அது மிகுந்த ஆசுவாசத்தையும் , நம்பிக்கையையும் தருகிறது என்று குறிப்பிட்டு இருந்தேன்.

அவருடைய அடுத்த தொகுப்பான ‘போதமும் காணாத போதம்’  எனும் இந்த நூலில், போருக்கு பின்னான வாழ்வை,  மறு குடியமர்த்தலை , மெதுவாக தலை எடுக்கும் மனிதர்களை காட்டியிருக்கிறார். எனினும் அவர்களின் நினைவலைகள் முழுவதும் தோட்டாக்களின் காயங்களும் , இழந்த அனைத்திற்குமான பொருமல்களும் , ஆதங்கங்களும்  நிரம்பி வழிகின்றன.

இந்த தொகுப்பில் தெய்வங்களும் , மாண்டோரும், திரும்பி வந்து ஸ்தூலமாக உலவுவதும், சன்னதம் வந்தோருடன் உரையாடுவதும் என , எரிந்து அழிந்து போன வாழ்வை மீட்க மனிதர்கள் அமானுஷ்யங்களை நம்பியும் , சார்ந்தும், சிறிது சிறிதாக கட்டமைக்கின்றனர்.  சிறு தெய்வங்களையும், மாண்டோரின் ஆற்றலையும் துணைக்கு அழைத்துக்கொள்வது எல்லா மனிதர்களுக்கும் ஒரு நம்பிக்கையையும் , மேற்கொண்டு  வாழ்வை அமைத்துக்கொள்வதற்கான உத்திரவாதத்தையும் அளிக்கிறது,  ஆகவே கதைகள் நெடுகிலும் தெய்வங்கள் வந்து காக்கிறது , துணை நிற்கிறது, அருள் சொல்கிறது. கோவில் சிலையை திருடும் திருடனுக்கும் அடைக்கலம் தருகிறது.  மாண்டோர் மாற்று உடல்களில் புகுந்து நீர் அருந்துகிறார்கள் , காதல்மொழி பேசி புணர்கிறார்கள், சூட்சுமமாக வந்து காக்கிறார்கள்.

போர்ச்சுழலை கண்டும் கேட்டும் ,பாதிக்கப்பட்டும், வாழ்ந்து, நொந்து மீண்ட அடுத்த தலைமுறைக்கும் , எப்படியோ உயிர் தப்பிய முந்தைய  தலைமுறைக்கும் , நினைவுகளில் பதிந்திருப்பது போரெனும் கோர தாண்டவம் மட்டுமே, ஆகவே மனப்பிறழ்வின் எல்லையை தொட்டவண்ணம் உள்ளனர், முழுவதுமாக பிறழ்ந்து விடாது இருக்கவே , மேலே சொன்ன தெய்வங்களும் , மாண்டோரின் ஆற்றலும் இவர்களுக்கு தேவையாகவுள்ளது. இந்த இரண்டிலும் நம்பிக்கை இல்லாதோர் இன்னும் அடர்ந்த இருளில் இருக்கவே வாய்ப்புள்ளது.

போரின் உக்கிரமான எந்த நிகழ்வும் அதன் அரசியலும், அங்கிருந்த மனிதர்களும், அவர்தம் அன்றாடமும் தெரியாத , மற்ற தேசத்தில் வாழும் இன்றைய தலைமுறைக்கு இந்த நூல் முக்கியமான ஒன்றை சொல்கிறது. ‘நம் வாழ்வு இப்படியும் இருந்தது’-  என்பதே அந்த செய்தி. இதன் உணர்ச்சிகளை புரிந்து கொள்ள முடியாத தலைமுறையாக, எந்த விதத்திலும் தங்கள் வாழ்வோடு பொருத்திப்பார்த்துக்கொள்ள முடியாதவர்களாக, சுக ஜீவனம் நடத்திக்கொண்டிருக்கும் மனிதனாக, தொழில் நுட்ப நுகர்வும், பொருளாதார மேன்மையும் கொண்ட இளைஞனாக உலகம் முழுவதும் அந்த இனத்தின் சுவடுகள் பரவி இருக்கலாம், ஆனால் அவர்களின் ஆழம் அறியும் ஒன்றை பற்றி இந்த நூல் பேசுகிறது.

தியாகங்கள் எல்லாம் ஞாபங்களாக மட்டுமே எஞ்சுவதில்லை அவை தலைமுறைகளின்  சித்தத்தில் ஆழ் மனதில் எங்கோ ஒரு விதையை பதியம் செய்கிறது. அது நம்பிக்கைக்கு இட்டுச்செல்கிறது.  இந்த கதைகளில் வரும் மனிதர்களின் நம்பிக்கை அத்தகையது. ஒரு கதையில்  காமம் கொண்டு நம்பிக்கை பிறக்கிறது. மற்றொன்றில் தெய்வச்சிலை திருடனுக்கு தன் குழந்தையில் இருந்து நம்பிக்கை பிறக்கிறது. வேறொன்றில், இறந்து பட்ட காதலி கேட்கும் புல்லாங்குழல் நாளைய நம்பிக்கையை விதைக்கிறது. இப்படி அத்தனை கதைகளிலும் ஏதேனும் ஒரு சிறு நம்பிக்கை கீற்று.  இந்த சிறு ஒளி சென்று இன்றைய தலைமுறையை தொடுமெனில், இந்த கதைகள் எழுதப்பட்டதன் நோக்கமும், ஆற்றவேண்டிய கடமையும் நிறைவேறுகிறது. அதை செய்யும் என்றே நாமும் நம்புவோம்.

இழந்த பூமியை மீட்டெடுத்தல் , அரசியல் ஆவேசங்கள் , சூளுரைகள், சரி தவறுகள் , போர் நாட்டங்கள்,என எந்த உணர்ச்சிகரமான பாவலாக்களும் இல்லாமல் நம்மோடு பேருந்தில் பயணம் செய்யும் , பக்கத்தில் அமர்ந்து தேநீர் அருந்தும் , தினசரி பத்திரிகை வாசிக்கும் சாமானியனை, அவனுடைய அன்றாடத்தை பற்றி பேசுவதாலேயே இந்த கதைகளில், எங்கோ நடந்த போர்க்கதைகள் என்கிற தொனியும் இல்லாமல், என் இனத்திற்கு இப்படி நடந்து விட்டதேயென்று நிக்கிற போலி ஆவேசமும் இல்லாமல், கதைகளை ஒரு தேர்ந்த கதைசொல்லியிடுமிருந்து கேட்பது போல வாசிக்க முடிகிறது. முதல் கதையில் தொடங்கி இறுதி வரை, ஒரு பாணன் ஒவ்வொரு கதையாக சொல்லிச்செல்கிறான், நாம் காதுகளாக அமர்ந்திருக்கிறோம்.

சமீபத்தில் ஜெயமோகன் அவர்கள் ஜெயகாந்தனை சந்தித்த ஒரு நிகழ்வை சொல்லி , இங்கிருக்கும் அனைத்தும்  ‘  பஸ்மம் ‘ சாம்பலாகவே,  மாறப்போகிறது எனக்கூறி , சைவ சித்தாந்தத்தில் அதன்  படிமத்தை பற்றி பேசியிருப்பார். இந்த கதைகளை படித்த பின் மேலும் ஒரு படிமம் தோன்றியது.  பிரளயம் முடிந்து பூமி முதல் ஆகாயம் வரை நீரால் நிரம்ப , அனைத்தும் அடங்கிய பின், ஆலிலையில் அழகிய குழந்தையென திருமால் அவதரிக்கிறான். ருத்ரன் அனைத்தையும் ‘பஸ்மம்’  என ஆக்குகிறான் , அதில் நீர் நிரப்பி  பிரளயம் உண்டாக்கி, தானே ஒரு விதையென ஆலிலையில் மிதந்து வருகிறான் திருமால்.

போர் எனும் பிரளயத்திற்கு பின் மறுவாழ்வு என குடிகள் மெதுவாக முளைக்கின்றன, மனதில் ஆறாத வடுக்களுடன் , காயங்களுடன், துன்ப நினைவுகளுடன், ஆலிலையில் மிதக்கும் சிறு நோய்மையுற்ற  திருமால்களுக்கு இன்னும் சில தலைமுறைகளில் பூரண சுக வாழ்வு அமையட்டும். ன் மரபிலக்கியத்தில் பரிச்சயமிக்க அகர முதல்வனின் ஒவ்வொரு படைப்புமே முந்தைய படைப்பை தாண்டி சென்று தனக்கான புதிய மைல்கல்களை தாமே நிறுவிக்கொள்பவை.  இந்த நூலும் அகரமுதல்வன் தாண்டவேண்டிய புதிய நீண்ட நெடுங்கோடு ஒன்றை நிறுவியிருக்கிறது. அவர் தொடர்ந்து பயணிக்க வாழ்த்துக்களும், அன்பும்.

 

 

 

The post நாளைக்கான சுடர் – சௌந்தர் . G first appeared on அகரமுதல்வன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 19, 2024 10:57

August 18, 2024

August 17, 2024

ஈழ யுகம் : சொற்களால் ஒரு நடுகல்

போதமும் காணாத போதம் – துங்கதை நூலுக்கு எழுத்தாளரும், கணையாழி ஆசிரியருமான மரியாதைக்குரிய ம. இராசேந்திரன் அவர்கள் எழுதிய விமர்சனக் கட்டுரை இன்று “தமிழ் இந்து திசை’ நாளேட்டில் வெளியாகி பெருத்த கவனத்தையும், புதிய வாசகத் திறப்புக்களையும் வழங்கியுள்ளது. என்னுடைய எழுத்தூழிய பயணத்தில், ம. ரா அவர்கள்  ஆதரவும், உறுதுணையும் வழங்கியவர். என்னுடைய இரண்டு நூல்களை வெளியிட்டு வைத்திருக்கிறார். எல்லா வகையிலும் இந்தக் கட்டுரை முக்கியமானது.

கட்டுரையின் விரிவான வடிவம்

ஈழ யுகம் : சொற்களால் ஒரு நடுகல்

ம .இராசேந்திரன்

 

‘போதமும் காணாத போதம்’ -அறிவும் தொட முடியாத பேரறிவு என்று கடவுளைச் சொல்கிறார் குமரகுருபரர். நமது அனுபவ எல்லைகளைக் கடந்த – நமது காலத்தில் நடந்த – நம்ப முடியாத அனுபவங்களின் திரட்சியாக இருக்கிறது அகரமுதல்வனின் போதமும் காணாத போதம் .
காந்தியைச் சுட்டுக் கொன்ற நினைவு நாளில் இணையத்தில் தொடங்கி இருக்கிறார். இருபத்தைந்து அத்தியாயங்கள்.

உலகம் போற்றும் மனுஷத்துவம், முகம் குப்புற நந்திக் கடலில் மிதந்தது. அதன் பிடரியில் எத்தனையோ தேசங்களின் தோட்டாக்கள் துளைத்திருந்ததைக் கண்டேன்.’ என்பதால் கனவும் நினைவுமாகப் படைக்கப் பட்டிருக்கிற இது, அவரது தன் கதையாகவும் இருக்கிறது.

தமிழின் முதல் ‘துங்கதை’ என்று கூறுகிறார். ‘துங்கதை தன்னொடு துண்ணென் றெய்திற்றே’ என்பது கந்த புராணத்தில் சூரபத்மன் யுத்தப்படல வரி.
தமிழீழ யுத்தப் படலம், கதைக் களமாகி இருக்கிறது. ‘குந்த ஒரு பிடி நிலமும் எரிய ஒரு பிடி நிலமும் சொந்தமாய் வேணும்’ என்று போராடியவர்கள் தோற்றுப் போயிருக்கிறார்கள். புராணங்களில் மட்டும்தான் கெட்டவர்கள் தோற்கிறார்கள். புராணங்கள் வெற்றியைக் கொண்டாடும். கலிங்கத்துப் பரணி கூட , களத்தில் பார்ப்பன சமண புத்த பேய்களுக்குக் கூழ் வார்த்து வெற்றியைக் கொண்டாடுகிறது.
ஆனால், மக்கள் தங்களுக்காகப் போரிட்டு மாண்டவர்களின் வீரத்தைக் கொண்டாடுகிறார்கள்.

‘சொந்த வீட்டிற்குச் செல்வதற்கும் வழியற்றிருக்கும்’ அவர்கள் புதைக்கப்படுவதில்லை; விதைக்கப்படுகிறார்கள்; அது புதைகுழி அல்ல விதைகுழி; உயிர் பிரிந்த பிறகு அவர்களின் உடல் வெற்றுடல் இல்லை, வித்துடல் என்றெல்லாம் போதமும் காணாத போதம் கொண்டாடுகிறது. அதனால்தான் ‘வெம்மை கலந்து வெளிப்படும் மூச்சு’ என்று அகரமுதல்வன் குறிப்பிடுகிறார்.

தமிழீழப் போர்க் காலத்திலும் களத்திலும் அடிக்கடி ‘ இடம் பெயர்ந்த அகரமுதல்வனின் சிறு பாதங்களை ஏந்திக் கொஞ்சிய அம்மா “ஒரு நாளைக்கு இந்த நடை யெல்லாம் நிண்டு நிம்மதி வந்திடும் ராசா” என்று நம்பிக்கை தந்திருக்கிறார். ‘ முள்ளி வாய்க்கால் வரை அப்படியான நிம்மதிக்காகவே காத்திருந்தோம்’ என்று முன்னுரையில் சொல்கிறார். ஓரிடத்தில் கூட நிலையாக இருக்க முடியாமல் இடம் பெயரும் அல்லல்கள். கூடவே கும்பிடும் தெய்வங்களை மனதிலும் உடலிலும் சுமப்பதும் மண்ணுக்குள் புதைப்பதுமான அவலங்கள்.
மதுரா விஜயம் எனும் வடமொழி நூலில் திருவரங்கப் பெருமாளின் செப்புத் திருமேனியைப் பாதுகாக்க, திருநாராயணபுரம் எனும் மேலக்கோட்டை, திருமாலிருஞ்சோலை, கோழிக்கோடு, பொங்கலூர் வழியாக திருப்பதி வரை தூக்கிச் சென்று மீண்டும் திருவரங்கக் கோயிலிலே வைக்கப்பட்டதைக் குமார கம்பண்ணன் மனைவி கங்காதேவி பதினைந்தாம் நூற்றாண்டில் பதிவு செய்திருக்கிறார்.

ஆனால் தமிழீழத்தில் அது சாத்தியமாகவில்லை.
“எங்கள் வானத்தில் ஒளிரும் நட்சத்திரங்கள் ஏன் நடு நடுங்குகின்றன… அரிசியும் உப்பும் விளைந்த நிலத்தில் சவக்குழிகள்…. பெரும் கனவின் ரத்த கொப்புளங்கள் இதில் உள்ளன. அம்மாவின் நிழலே நிலம்.” எனும் வரிகளில் அவர்களின் வலிகள்.

ஒரு நாள் குமார கம்பண்ணன் முன் ஒரு வீரப்பெண் தோன்றித் தமிழகம் படும் அவல நிலையையும் பார்ப்பனச் சேரிகளில் புலால் நாற்றம் வீசுவதையும் மிருதங்க இசை நிறைந்த தெருக்களில் ஆந்தைகளின் அலறல் கேட்பதையும் வெண்மையாக ஓடி வரும் தாமிரபரணி ஆறு கொல்லப்பட்ட பசுக்களின் குருதியால் செந்நீராகி வருவதையும் எடுத்துரைத்துத் தன் கையிலிருந்த ஆற்றல் மிக்க வாளையும் அவன் முன் வைத்துப் படை எடுக்க ஆணையிட்டாள் என்று மதுரா விஜயம் விவரிக்கிறது.

அப்படித் தமிழீழப் போரில் தானாக முன்வந்து தெய்வங்கள் உதவியதாகத் தெரியவில்லை. மக்கள் உருகி உருகி வேண்டியும் தெய்வங்கள் காதில் போட்டுக்கொள்ளவில்லை. மாறாக இராணுவத்திடமிருந்து மக்கள் காப்பாற்ற வேண்டிய நிலையில் கடவுள்கள் இருந்திருக்கின்றனர் எனும் குமுறல்களைப் போதமும் காணாத போதத்தில் காண முடிகின்றன.

இது தமிழீழக் கனவுகளுக்குச் சொற்களால் அவர் எழுப்பியிருக்கும் நடுகல். இதில் வழிபாடும் உண்டு விசாரணையும் உண்டு. தொல்காப்பியம் தொடங்கி இன்றைய நினைவேந்தல் படத்திறப்பு வரையிலான தொடர்ச்சியில் இப்போதும் இருக்கிறது முன்னோர் வழிபாடு.
ஆனால் நடுகல் என்பது வெற்றி பெற்றதற்காக எடுக்கப்படுவது இல்லை. களத்தில் வீரச் சாவு அடைந்தவர்களுக்காக எடுக்கப்படுவது.

மக்களைக் காப்பாற்றத் தங்கள் உயிரைத் தந்தவர்களை வழிபடுவது. ஒருவகையில் நன்றிக்கடன் கூட.
ஆனால் நடுகல் வழிபாட்டிலும் நடந்தவற்றிற்கு நியாயம் கேட்கிறார் அகரமுதல்வன். ‘கடவுள் பக்தனைக் கைவிட்ட போதும் பக்தன் கடவுளை இறுகப் பற்றிக் கொண்டிருக்கும் கதைகளுக்கு’ இடையே அகரமுதல்வன் தெய்வங்களையும் விசாரணைக்கு உட்படுத்தி இருக்கிறார்.

சிலப்பதிகாரக் கண்ணகி “தெய்வமும் உண்டுகொல் தெய்வமும் உண்டுகொல் .. காய்கதிர்ச் செல்வனே கள்வனோ என் கணவன்?” என்று மதுரை வீதியில் நீதி கேட்ட ஊர்சூழ்வரியை முன்னுரை ஆக்கியிருக்கிறார்.
“வைரவர் கோவிலில் இருந்த விக்கிரகத்தையும் சூலத்தையும் தூக்கி வந்து பதுங்குகுழிக்குள் பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். அவர் ‘பங்கர் வைரவர்’ ஆகியிருக்கிறார்.

“ நீ ஒரு சக்தியுள்ள தெய்வமெண்டால் என்ர மகள காப்பாத்திப் போடு” என்று சவால் விட்டிருக்கிறார்கள்.

“ ஆயிரம் தலைகொண்டு பூமியைத் தாங்கும் ஆதிசேஷன் பாதாளத்திலிருந்து ஏதேனும் செய்தி அனுப்புகிறாரோ” என்று பகடி செய்திருக்கிறார்கள்.

“இஞ்ச எல்லாப் பிள்ளையளும் பாரம்தான் சுமக்கினம். அவனும் சுமக்கட்டும். அது சிலுவையோ துவக்கோ என்ன வென்றாலும் கவலைப்பட ஏதுமில்லை.” இப்படி, சிலுவையும் துப்பாக்கியும் ஒன்றுதான் என்ற பார்வையைத் தருகிறார்.

மேலும் “எங்கட பாதர் சொல்லும் ‘தீர்ப்பு வழங்கப்படும் நாள்’ எப்ப வரும்?” என்ற கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை.

மூலஸ்தானத்திலிருந்த கலசத்தைக் காலணியால் ஓங்கி உதைத்திருக்கின்றனர். கனவில் வரும் காளியின் தலையில் கூட ஷெல் காயம் இருக்கிறது. ”ஒரு பீஸ் துண்டு காளியின் தலைக்குள்ள இப்பவும் இருக்கு. வெயில் நேரத்தில் அது குத்தி நோக வெளிக்கிடுது. மண்ட பீஸ். காளி அதை நினைச்சு பயப்பிடிடுறா” என்று காளியைப் பற்றி கவலைப்பட்டிருக்கிறார்கள்.

“ தக்கன்ர சிரச, கைவாளினால் அறுத்த வீரபத்திரர் எங்களைக் காப்பாற்றாமல் நிக்கேக்கே அவர் வீரச் சாவு அடைஞ்சிட்டார். என்று உங்களுக்கு விளங்கேல்லையோ…” என்று காப்பாற்றாத கடவுள்களையும் எடுத்து விதைக்கப் போறேன்.” என்று வீரபத்திர சூலத்தைப் பீடத்திலிருந்து கிளப்பி விதைகுழிக்குள் வைத்திருக்கின்றனர்.

“ கர்த்தாவே! இது எத்தனை காலம் தொடரும், எதுவரைக்கும் நீர் எங்களை உதாசீனப்படுத்துவீர்? என்றென்றும் உமது கோபம் நெருப்பைப் போல் எரியும் என்றார்கள். எமக்காக ஒரு தீக்குச்சி அளவு கூட எரிய மாட்டேன் என்கிறீர்கள். எங்கள் ஆயுள் எத்தனை குறுகியது என்பதை.நினைவுகூரும். குறைந்த காலங்கள் வாழ்ந்து மடியும் படியா நீர் எங்களைப் படைத்தீர்? “ என்று கேட்டிருக்கிறார்கள்.

“நீர் எங்கள் பகைவர்கள் அனைவரையும் மகிழ்ச்சி அடையச் செய்தீர்? போர்ப் பகைவர்கள் அவனை வெற்றி கொள்ள அனுமதித்தீர்.எம் அரசன் யுத்தத்தில் வெல்ல நீர் உதவவில்லை. நீர் அவனை வெல்ல விடவில்லை. நீர் அவனைத் தரையில் வீசினீர். நீர் அவனது ஆயுளைக் குறைத்தீர். நீர் அவனை அவமானப்படுத்தினீர்.” என்று குற்றம் சாட்டியிருக்கிறார்கள்.

கோயில் சிலைகளைத் திருடுகிறவன் கூட “முருகனே.நான் செய்யுறது பிழைதான். ஆனால் வேற என்ன செய்ய ஏலும் சொல்லு. இத்தனை துன்பங்களைத் தந்த அரசாங்கத்தையே தண்டிக்காத நீ உன்னட்ட களவெடுத்த என்னையும் தண்டிக்க மாட்டாய் என்றொரு நம்பிக்கை”யைப் பெற்றிருக்கிறான். அவனைக் காவல் தெய்வம் வழி மறித்திருக்கிறது.

“சமாதானத்திற்கான யுத்தம். நல்லிணக்கத்திற்கான அரசு, போர்க்குற்ற உள்ளக விசாரணை போலக் காத்து நிற்கும் தெய்வம், எவ்வளவு பெரிய பம்மாத்து. சனியனே தள்ளி நில் என்று சுட்டியை எடுத்து ஓங்கியவனைக் கண்ட தெய்வம்” மறைந்திருக்கிறது.

கோவிலில் தீபாராதனை நடந்துகொண்டிருந்தபோது.தன்னுடைய பாவாடையைக் கழற்றிக் கருவறைக்குள் வீசிய அக்காவை – அவருக்கிருந்த ஒரே காலைக் கயிற்றால் கட்டிப் போட்டிருந்ததை வீட்டுக்கு வந்தவர்கள் பார்த்து, இவர்களைப் போன்ற கல் மனம் கொண்டவர்கள் யாரும் இல்லை எனச் சொன்னபோது “தெய்வத்தை விடவுமா” என்று கேள்வி கேட்டவர்களுக்கு யார் பதில் சொல்ல முடியும்?

“வீரபத்திரர் மட்டுமா தெய்வம் . இஞ்ச எங்களைக் காப்பாத்திற எல்லாரும் தெய்வம்தான்” என்று அவர்களைக் கொண்டாடும் போதே இயக்கத்தின் மீதும் விசாரணை படருகிறது
சங்கிலி பெரியப்பா வேறொரு அமைப்பைச் சேர்ந்தவர். அவரும் தமிழீழத்திற்காகத்தான் ஆயுதம் ஏந்தியிருக்கிறார். பிறகு அந்த அமைப்போடு முரண்பட்டு, விலகி புலிகள் இயக்கத்தில் சரண் அடைந்திருக்கிறார். 1972 மே 2 ஆம் நாள் சங்கிலி பெரியப்பாவைப் புலிகள் இயக்கம் சுட்டுக்கொன்றிருக்கிறது. மூன்று பிள்ளைகளையும் அழைத்துச் சென்று வீதியில் கிடந்த கணவனின் உடலத்தின் முன்பாக விழுந்து கிடுகு பெரியம்மா கதறியிருக்கிறார். சுட்டதற்குக் காரணம் துரோகம் என்று சொல்லியிருக்கிறார்கள். துரோகம் என்றால் என்னம்மா என்ற மகனிடம் “நாங்கள் மனுஷராய்ப் பிறந்தது. அதுவும் இந்த மண்ணில் பிறந்ததுதான் துரோகம் “ என்று சொல்லியிருக்கிறார்.

இந்திய அமைதிப் படையின் தூக்கம் தொலைத்தவர் அதியமான்- பதுங்கிப் பாய்வதில் ருத்திர வேங்கையாக இருந்தவர். ‘சமர்க்கள மன்னன்’ என்று தலைவராலேயே பாராட்டப்பட்டவர். பிறகு முள்ளிவாய்க்காலில் வைத்து இயக்கத்தால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்.

படையியல் ரகசியங்களை எதிரிகளிடத்தில் சொல்லிவிட்டர் என்று காரணம் சொல்லப்பட்டிருக்கிறது.
தகவல் அறிந்த அம்மா, “இத்தனை வருஷமாய் சண்டையிலே நிண்டு வாழ்க்கையை இழந்தவனுக்கு நீங்கள் கொடுக்கும் மரியாதை இதுவோ என” முக்கிய பொறுப்பாளர்களைத் தேடிச் சென்று திட்டியிருக்கிறார்.

அதியமான் இப்படியான துரோகத்தைச் செய்வார் என நாங்களும் முதலில் நம்பவில்லை என அவர்கள் பதில் சொல்லியிருக்கிறார்கள். விசாரணை செய்தவர்கள் ஏதோ பிழையாகத் தீர்ப்பு வழங்கி இருக்கிறார்கள் என்ற போது அவர்கள் ஒரு அசட்டுச் சிரிப்புடன் அங்கிருந்து விலகி நடந்திருக்கிறார்கள்.
“சனங்களின் ஆற்றாமையையும் கேள்விகளையும் பொருட்படுத்தாமல் விலகி நடக்கும் பாதங்கள் போராளிகள் உடையது அல்ல. அவர்கள் தங்களை ராஜாக்களென எண்ணுபவர்கள். தேசத்தில் உள்ள ஒரு தாயின் கண்ணீரை மதியாதவன் எதன் நிமித்தமும் விடுதலைக்கு வழி சமைப்பவன் அல்ல. உங்களுடைய துவக்குகளுக்கு இலக்குகள்தான் தேவையென்றால் என்னைப் போன்றவர்களைச் சுடுங்கள். ஒருபோதும் அதியமான் போன்ற அதிதீரர்களைக் கொல்லாதீர்கள். அவர்களின் ஆன்மாவுக்குத் துரோகம் இழைக்காதீர்கள் அவனைத் துரோகி எனச் சொல்ல யாருக்கும் அருகதை இல்லை எனக் கோபம் கொண்டு கத்தியிருக்கிறார்.“
“இயக்கம் அழிந்து போகப் போகிறது என அம்மாவும் சொல்லிய ஒரு பகல் பொழுதில் இரக்கமற்ற வகையில் வரலாற்றின் பாறையில் சூரிய ஒளி மங்கிச் சரிந்தது.” என்ற அகரமுதல்வனின் கோபத்தில் நியாயம் தெரிகிறது.
இவ்வளவு நடந்தபிறகும் – “எல்லாரும் எல்லாமும் சாம்பலா போச்சு எண்ணுக் கணக்கு இல்லாமல் பூமிக்குத் தின்ன கொடுத்தாச்சு” என்று கையறுநிலைக்கு ஆளாக்கும் குரல் ஒரு பக்கம் இருந்தாலும் அதையும் கடந்து ‘ரத்தம் கொடுத்தது நான் இல்லை நிலம்’ என்று நினைத்திருக்கிறார்கள்.

புலியாக இருந்த ஆதாவும் இராணுவ வீரனாக இருந்து சமிந்தாவும் போர் முடிந்த கலத்தில் சந்திப்பதும் காதலிப்பதும் அவர்கள் யுத்த காலத்தை மறக்க நினைக்கிற தருணங்களாக இருக்கின்றன. யுத்த காலத்திலும் யுத்த கொடூரங்களிலிருந்து மக்கள் தப்பிக்கும் தருணங்கள் அவர்கள் காதலிக்கிற காலங்களாகவே இருந்திருக்கின்றன என்பதும் ‘யுத்தம் ஒட்டுமொத்த மனுஷனிட்ட தோக்கிற இடம் இதுதான்’ என்பதையும் உளவியலோடு அகர முதல்வன் உறுதிப்படுத்துகிறார்.

எல்லாம் முடிந்த பின்பும் விசாரணை நிற்கவில்லை. அப்போதும் இயக்கத்தை விட்டுக் கொடுக்காமல் ‘என்றைக்கும் ஆதரிப்பேன்’ என்று நிற்கிறவர்களைப் பார்க்க முடிகிறது. ஏனெனில் ‘மண்ணை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்’ என்று நம்புகிறார்கள்.

“ஒரு கதைக்கு மாவீரரே எழும்பி வந்தாலும் இவங்கள் பிடிச்சுக் கொண்டு போய் பயிற்சி குடுப்பாங்கள்” என்று நினைக்கிறார்கள்.
இப்படியான கொந்தளிப்பான வாழ்க்கை நினைவுகளை ஈழத் தாழியிலிருந்து அகழ்ந்தெடுத்திருக்கிறார் அகரமுதல்வன்.

“வீர யுகத்தின் அந்தி நந்திக் கடலில் சாய்ந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன” என்று கடலில் தொடங்குகிறார். “அம்மாவின் குருதியிலிருந்து அந்தத் தோட்டாவை எடுத்துக் கடலில் வீசினேன். உயிர் ஈந்த தேவபித்ருக்களோடு அதுவும் நீந்தியது” என்று தொடரும் இயக்கத் தொடர்ச்சியைக் கடலில் முடிக்கிறார்.

கடல், காலத்தால் அழிக்க முடியாத குறியீடு. கையில் உள்ள துளி கரைந்து போகாமல் கடலில் கலக்க விட்டது போலத் தோட்டாவைக் கடலில் வீசுகிறார். அதுவும் நீருக்குள் அமிழாமல் நீந்தியது என்று சொல்கிறார்.

சிறுவயதிலிருந்தே எழுத்தையும் இலக்கியத்தையும் உறவாக்கிக் கொண்டவர் சைவப் பதிகங்கள்,சைவச் சமயச் சொற்பொழிவுகள், நிகழ்த்து கலைகள் எனும் பண்பாட்டுப் பின்னணியோடு கூடிய போர் அவல அனுபவங்கள் எடுத்துரைப்பில் செழுமை சேர்த்திருக்கின்றன. பைபிள் தமிழும் பக்தித் தமிழும் சங்கத்தமிழும் கலந்த மொழி ஆளுமை வியக்க வைக்கிறது.

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை அவநம்பிக்கையின் ஆதிக்க வெளியில் வாழ்க்கை நடந்த போதும் சொற்களால் இதில் வரும் அம்மா புதிய நம்பிக்கையை விதைக்கிறார்.
“ எங்கட முதுசமாய் இருக்கிற வித்துடல்.அது எண்டைக்கோ ஒருநாள் உயிர்த்தெழுமடா தம்பியா” -ஆரின்ர வித்துடல் என்று அறம்பாவை அத்தையிடம் கேட்டதும் என் பின்னே வந்து நின்ற அம்மா “எங்கட மண்ணோட வித்துடல் என்றாள்”.

முதுசொம் – முந்தைய தலைமுறையிலிருந்து கிடைக்கும் சொத்து.
அகரமுதல்வன், தமிழீழ நினைவுகளைத் தமிழுக்கு முதுசொம் ஆக்கியிருக்கிறார்.

***

 

The post ஈழ யுகம் : சொற்களால் ஒரு நடுகல் first appeared on அகரமுதல்வன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 17, 2024 10:05

August 16, 2024

தீவிரத்தின் கனவும் செயலும் – ஜெயமோகன் உரை

எப்போதும் ஒரு காலத்தை நிறுவுகிற கனவும், கொந்தளிப்பும் கொண்டவர்களுக்கு இந்த உரையளிக்கும் உந்துதலை சொற்களால் விபரிக்க இயலாது. பாக்யமுடையோர் கேளுங்கள் !

 

 

The post தீவிரத்தின் கனவும் செயலும் – ஜெயமோகன் உரை first appeared on அகரமுதல்வன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 16, 2024 10:12

August 13, 2024

புக்பிரம்மா இலக்கிய நிகழ்வு – ஜெயமோகன் உரை

பெங்களூரில் புக்பிரம்மா அமைப்பு நடத்திய இலக்கியத் திருவிழாவில் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் ஆற்றிய உரையொன்றின் சுருக்கமான வடிவம்.

 

னைவருக்கும் வணக்கம். அமெரிக்காவில் ஒரு பேட்டியில் என்னிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது, எனக்கு எத்தனை மொழிகள் தெரியும் என்று. நான் இரண்டுமொழிகள் மிக நன்றாகத் தெரியும், ஆங்கிலத்தில் சமாளிப்பேன் என்று பதில் சொன்னேன். ஆச்சரியத்துடன் எவ்வாறு இரண்டுமொழிகள் தெரியும் என்று கேட்டனர். என் தாய்மொழி மலையாளம், எழுதும் மொழி தமிழ் என்று பதில் சொன்னேன். அது இன்னும் ஆச்சரியத்தை அளித்தது.

ஆனால் நமக்கு இது வியப்பூட்டுவது அல்ல. தென்னகத்தின் யதார்த்தம் இது. இந்த அரங்கில் இருப்பவர்களிலேயே எம்.கோபாலகிருஷ்ணனின் தாய்மொழி கன்னடம். இன்னொரு எழுத்தாளரான சு.வேணுகோபாலின் தாய்மொழியும் கன்னடம். இங்கிருக்கும் எங்கள் பெருங்கவிஞரான சுகுமாரனின் தாய்மொழி மலையாளம். நெடுங்கால இடப்பெயர்வுளால் நம் ஒவ்வொரு பகுதியும் பன்மொழித்தன்மை கொண்டதாக ஆகிவிட்டிருக்கிறது.

இதுவே தென்னகப் பண்பாடு. தென்னகத்திற்கென ஒரு தனிப்பண்பாடு உண்டு. நாம் ஒரு தனிப் பண்பாட்டுத்தேசம். பெர்னாட் ஷா சொன்னார், அமெரிக்காவும் பிரிட்டனும் ஒரே மொழியால் பிரிக்கப்பட்ட இரண்டு நாடுகள் என்று. நாம் ஐந்து மொழிகளால் இணைக்கப்பட்ட ஒரு தேசம். இந்த தென்னக இலக்கியவிழாவை முன்னெடுக்கும் புக்பிரம்மா அமைப்புக்கு என் வாழ்த்துக்கள்.

என் மொழியின் இலக்கியத்தின் போக்குகளைப்பற்றி சில சொற்கள் சொல்லும்படி சொன்னார்கள். தமிழில் இரண்டு போக்குகளின் கீழிறக்கமும், இரண்டு போக்குகளின் மேலெழலும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்று சொல்வேன். பின்நவீனத்துவம் கீழிறங்கிவிட்டது. இன்று எந்த குறிப்பிடத்தக்க இளம் எழுத்தாளரும் தன்னை பின்நவீனத்துவர் என்று சொல்லிக்கொள்வதில்லை. தலித் இலக்கியம் பின்னகர்ந்து வருகிறது. தலித் இலக்கிய முன்னோடிகளான மூத்த படைப்பாளிகளே தங்களை அவ்வாறு அடையாளப்படுத்தலாகாது என வெளிப்படையாக அறிவித்துள்ளனர்.

இரு போக்குகள் மேலெழுகின்றன. ஒன்று, மையப்போக்கு. அதை நான் நுண்மையின் அழகியல் என்பேன். இன்றைய இளையதலைமுறை நவீன உலகில் வாழ்கிறது. அதற்கு வரலாறு, தத்துவம் ஆகியவற்றில் ஈடுபாடில்லை. அரசியலார்வகங்ளும் பெரிதாக இல்லை. அதிநவீன நுகர்வுக்கலாச்சாரமும், பெருகிவரும் உயர்தொழில்நுட்ப உலகமும்தான் அதன் பிரச்சினை. அது உருவாக்கும் உறவுச்சிக்கல்கள், ஆளுமைச்சிக்கல்களே அவர்களின் பேசுபொருட்கள்.

அவர்கள் அதற்கான அழகியலை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள். அது பல அடுக்குகள் கொண்டது அல்ல. சிக்கலானதும் அல்ல. ஆனால் மிகமிக நுட்பமான கூறுமுறையும், பூடகமான சந்தர்ப்பங்களும் கொண்டது. மிக உள்ளடங்கியது. கடிகாரம் பழுதுபார்ப்பவரின் கருவி போல என்று உவமை சொல்லலாம். மிகச்சிறிய, மிகநுணுக்கமான ஒன்று. அந்த அழகியலை முன்வைக்கும் இளையபடைப்பாளிகள் என்று சுனீல்கிருஷ்ணன், சுரேஷ்பிரதீப், விஷால்ராஜா, கார்த்திக் பாலசுப்ரமணியன், சி.சரவணகார்த்திகேயன், அனோஜன் பாலகிருஷ்ணன், சுஷீல்குமார் என பலரை குறிப்பிடமுடியும்.

என் முன்னோடிகளான படைப்பாளிகளாகிய சுந்தர ராமசாமி, அசோகமித்திரன் போன்றவர்கள்  கற்பனாவாதத்திற்கு நவீன இலக்கியத்தில் இடமில்லை என்னும் கொள்கை கொண்டிருந்தனர். கற்பனாவாதத்தின் அடிப்படையான உயர் இலட்சியவாதம் மீது கொண்ட அவநம்பிக்கையால்தான் நவீன இலக்கியம் உருவாகியது என்றனர். ஆனால் அவர்களின் சமகாலத்திலேயே மாபெரும் இலட்சியவாதியும் கற்பனாவாதியுமான வைக்கம் முகமது பஷீர் எழுதிக்கொண்டிருந்தார்.

இன்று சில படைப்பாளிகள் பஷீரை தங்கள் ஆதர்சமாகக் கொண்டிருக்கிறார்கள். உயர் இலட்சியவாதமின்றி உயர் இலக்கியம் இல்லை என நினைக்கிறார்கள். ஆன்மிகமான அடிப்படைகளை முன்வைக்கும் படைப்புகளை உருவாக்குகிறார்கள். ஆகவே அவர்களின் அழகியல் கற்பனாவாதம் சார்ந்ததாக உள்ளது. அதை நவீன கற்பனாவாதம் என்பேன். இன்னும் குறிப்பாக ஆன்மிகக் கற்பனாவாதம் என்பேன். அந்த வகை எழுத்துக்களை அஜிதன் எழுதி வருகிறார். இன்னொருவகை கற்பனாவாதம் அகரமுதல்வன் எழுதுவது. அகரமுதல்வன் இந்தியாவில் குடியேறிய ஈழத்தவர். தன் நாட்டின், தன் பண்பாட்டின் எழுச்சியை அவர் கனவு காண்கிறார். ஆகவே இயல்பாகவே கற்பனாவாதம் அவரில் திரள்கிறது.

இந்த இரு போக்குகளையும் ஒன்றோடொன்று மோதி முன்னகரும் முரணியக்கமாகச் சொல்லலாமா என்று தெரியவில்லை. அதை எதிர்காலம்தான் சொல்லவேண்டும். நன்றி.

 

The post புக்பிரம்மா இலக்கிய நிகழ்வு – ஜெயமோகன் உரை first appeared on அகரமுதல்வன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 13, 2024 11:20

August 12, 2024

August 11, 2024

கா. கைலாசநாதக் குருக்கள்- தமிழ் விக்கி பக்கம்

சமஸ்கிருத மொழி, இந்து நாகரீகம் குறித்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு இலங்கை மற்றும் அயல் நாடுகளில் பல கருத்தரங்குகளை நிகழ்த்தினார்.

1954-ம் ஆண்டு இறுதி பி.எச்.டி. பட்ட ஆய்வுக்காக இந்தியா புறப்பட்டு வந்தார். 1955 – 56 ஆண்டுகளில் பூனே பல்கலைக்கழகத்தில் பண்டர்க்கார் ஆராய்ச்சி நிலைய இயக்குனர் பேராசிரியர் ஆர். என். தண்டேகர் தலைமையின் கீழ் மகாபாரதம், இராமாயணம், பதினென்கீழ்கணக்கு நூல்களில் காணப்படும் சைவமதம் பற்றிய ஆய்வை மேற்கொண்டார். இவ்வாய்வு தென்னிந்தியாவிலும், இலங்கையிலும் உள்ள கோவில்களின் ஆகம ரீதியான வழிபாட்டு முறைகளுடன் தொடர்புடையது.

1960-ம் ஆண்டு பூனே பல்கலைக்கழகத்தில் இவர் சமர்ப்பித்த 1035 பக்கங்கள் கொண்ட ஆய்வுக் கட்டுரை பேராசிரியர் பிலியோசா, பேராசிரியர் புகல்கார், பேராசிரியர் தண்டேகர் ஆகியோரால் மதிப்பிடப்பட்டு பி.எச்.டி டாக்டரேட் பட்டம் வழங்கப்பட்டது.

1961-ம் ஆண்டு தமிழ் மொழி மூலமான சமஸ்கிருத மொழியின் பொது சிறப்பு பட்டங்களுக்காக சமஸ்கிருத துறையின் கற்கை நெறி ஒருங்கிணைப்பாளர் ஆனார். 1962-ல் எழுதிய சமஸ்கிருத இலகு போதம் II வடமொழி இலக்கிய வரலாறு நூலுக்கு இவருக்கு சாகித்திய அகாடமி விருது கிடைத்தது.

இவர் எழுதிய சைவத் திருகோவிற் கிரியை நெறி இந்து சைவ ஆகம நூல்களில் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.

தமிழ் விக்கி பக்கம் –  கா.கைலாசநாதக் குருக்கள் 

The post கா. கைலாசநாதக் குருக்கள்- தமிழ் விக்கி பக்கம் first appeared on அகரமுதல்வன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 11, 2024 11:09

அகரமுதல்வன்'s Blog

அகரமுதல்வன்
அகரமுதல்வன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow அகரமுதல்வன்'s blog with rss.