அகரமுதல்வன்'s Blog, page 5
January 10, 2025
January 8, 2025
விருதின் ஒத்தசொல் மாமருந்து
விஷ்ணுபுரம் விருது பெற்ற எழுத்தாளர் இரா. முருகன் அவர்களை சென்னை புத்தகத் திருவிழாவில் சந்தித்தேன். புதிய பொலிவுடனும் உற்சாகத்துடனும் இருந்தார். உடலுக்கு புத்தொளி நிரம்பிய ஆரோக்கியம் திரும்பியிருந்தது. வேக நடைப் போட்டியில் பங்கெடுக்கும் அளவுக்கு உறுதியாக இருந்தார். விருதுக்கு இப்படியொரு மருத்துவ குணமுண்டோ இதுவரை நான் அறிந்திலேன். ஆனால் இரா. முருகன் அவர்களை சந்தித்த கணம் விருதும் ஒரு மருந்துதான், சிகிச்சைதான் என்று நினைத்துக் கொண்டேன். அந்த வகையில் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்திற்குதான் நன்றி சொல்லவேண்டும். ஏனெனில் விருது அறிவிக்கப்பட்டு ஆவணப்பட உருவாக்கத்திற்காக இரா. முருகன் அவர்களைச் சந்திக்க சென்றிருந்தேன். அவருடைய நிரந்தரமான சில உடல் உபாதைகளோடு இருந்தார். ஆவணப்படத்தை எவ்வாறு உருவாக்க எண்ணுகிறேன் என அவருக்கு கூறினேன். கேட்டு முடித்தவுடன் “ரொம்பவும் ஆர்வமாக இருக்கிறது. எப்போது படம்பிடிக்கிறோம்” எனக் கேட்டார். அடுத்த வாரம் திட்டமிடுகிறோம் என்று கூறிவிட்டு வந்தேன்.
ஆனால் இரா. முருகன் அவர்களை அவரது சொந்தவூரான சிவங்கைக்கு கூட்டிச் செல்ல முடியாதென நானும் இளம்பரிதி அவர்களும் முடிவு செய்தோம். ஆகவே சிவகங்கையாக காண்பிக்க காஞ்சிபுரத்தின் கிராமப்பகுதியொன்றில் வைத்து படம்பிடிக்க திட்டமிட்டோம். அங்குள்ள ஐயங்கார்குளத்திலும் இரா. முருகன் அவர்களையும் கட்டைக்கூத்து கலைஞரையும் உரையாடும் திரைக்கதை ஒன்றையும் எழுத உத்தேசித்திருந்தேன்.
ஆவணப்பட குழுவோடு சென்று இடங்களைப் பார்த்துவிட்டு வந்திருந்தேன். ஒளிப்பதிவாளர் பிரியேஷ் குருசாமி அவர்கள் வேறொரு மாநிலத்தில் படப்பிடிப்பில் இருந்தார். சென்னை வந்ததும் புகைப்படங்களைக் காண்பித்தேன். அவருக்கும் பிடித்திருந்தது. காஞ்சிபுரத்தில் திட்டமிட்டமைக்கு முழுமுதற் காரணம் இரா. முருகன் அவர்களின் உடல் நிலையே. அவரை காரில் அழைத்துச் சென்று அன்று மாலையிலேயே சென்னைக்கு அழைத்து வந்துவிட முடியுமென எண்ணியிருந்தோம். அதற்கு அவரும் சரியெனவே கூறினார். ஆனால் அடுத்த வாரத்திலேயே அவரது உடல்நிலையில் மேலதிகமாய் ஊக்கம் கெட்டிருந்தது. நான் எதிர்பார்க்காத அளவுக்கு சுகம் அற்றுப் போயிருந்தார். எங்களுடைய திட்டமிடல்கள் அனைத்தும் குழம்பி நின்றன. என்ன செய்வதென யோசித்து விரைவாக முடிவு கண்டோம். இரா. முருகன் அவர்களை வெளியே அழைத்துச் சென்று படம்பிடிப்பதில்லை. அவருடைய உடல் நலம் கொஞ்சம் தேறியதற்கு பிறகு வீட்டில் வைத்தே எடுத்து விடலாம் என திட்டமிட்டோம்.
ஒட்டுமொத்தமாக ஏனைய படப்பிடிப்புக்களை முடித்துவிட்டே இரா. முருகன் அவர்களை மீண்டும் சந்தித்தோம். அப்போது அவர் கொஞ்சம் நலம் திரும்பியிருந்தார். ஆகவே அவரைப் படம்பிடித்தோம். நிறைய பேச விரும்பினார். ஒரு பெருங்கடல் கொந்தளிப்பான காலநிலையில் அலைகளை அள்ளிவருவதைப் போல தனது நினைவுகளை திரட்டி வந்தார். ஆனால் அது நிஜத்தில் சாத்தியம் ஆகவில்லை. தன்னுடைய புனைவுலகு சார்ந்து நிறையவற்றைப் பேசினார். குரலில் தெளிவு வர ரொம்பவும் சிரமப்பட்டார். அதில் கவனம் செலுத்தவேண்டாம். முடிந்தவரை அதனை தொழில்நுட்ப உதவி கொண்டு சரிப்படுத்துகிறேன் என்றேன். விழிப்புக்கும் உடல் கோளாறால் ஏற்பட்ட விழிப்பின்மைக்கும் இடையே இரா. முருகன் என்கிற எழுத்தாளர் பேசினார். ஒட்டுமொத்தமாக எழுந்துவந்த நினைவுகளையும், தன்னுடைய எழுத்து சார்ந்த சில மதிப்பீடுகளையும் இடைவெட்டி இடைவெட்டிப் பேசினார். அதற்கு மேல் படம்பிடித்தால் அவரைச் சிரமப்படுத்துவது போலாகிவிடுமென நினைத்து, நன்றி சொல்லி விடைபெற்றோம்.
விருது விழாவில் ஆவணப்படம் திரையிடப்பட்டு முடிந்ததும் இரா. முருகன் அவர்களது கரங்களைப் பற்றி நன்றி என்றேன். அவர் என்னை வாழ்த்தினார். ஆவணப்படத்தின் ஒளியமைப்பு குறித்து சிலாகித்தார். ஒட்டுமொத்தமாக அந்தக் கணங்கள் ஆசிர்வாதமானவை. எனக்கு அவருடைய உடல் நிலை குறித்து ஒருவகையான கவலை பீடித்திருந்தது. ஆவணப்படத்தில் பேசும் போது, இனி நான் எழுதுவேனா தெரியவில்லை, அதற்கு பகவான் அருள் வேண்டுமென்று சொன்ன போது கொஞ்சம் அதிர்ந்து விட்டேன். மொழியை எழுதும் ஒருவனுக்கு இறையருள் பலமடங்கு சேரும். எழுத்தும் தெய்வம் எழுதுகோலும் தெய்வம் என்ற பாரதியின் அடிகளைத் தொடர்ந்து எழுதுபவனும் தெய்வம் என்பேன். அப்படிச் சொல்வதால் எந்தத் தெய்வக்குற்றமும் ஆகாதெனும் பெருத்த நம்பிக்கை எனக்குள்ளது. சென்னைக்கு வந்ததும் என்னைத் தொடர்பு கொண்டு மீண்டும் வாழ்த்தினார். ஆவணப்படத்தின் சிறப்புக்களை அவரது பார்வையில் முன்வைத்தார். வெகு விரைவில் ஒருநாள் சந்திக்கலாம் என்றார். A GARDEN OF SHADOWS என்கிற தலைப்பு குறித்தும் சிலாகித்தார்.
இப்போது சென்னை புத்தகத் திருவிழாவில் அவரைப் பார்த்ததும் மகிழ்ச்சியும் சொல்லிச் சொல்லி இனிமையாகும் உணர்வும் ஏற்பட்டது. இப்போது ஒரு திரைப்படத்தில் கூட இரவு பகலாக இரா. முருகன் அவர்கள் நடிக்கும் அளவுக்கு உடல் ஆரோக்கியத்துடனும் உள வலிமையோடும் இருப்பதாக புரிந்து கொண்டேன். நூல்வனம் அரங்கில் இரா. முருகன் அவர்கள் அமர்ந்து அளாவினார். புதிதாய் செட்டை உரித்த பாம்பின் நடுவெயில் மினுக்கம் அவரது முகத்தில் ஜ்வலித்துக் கொண்டிருந்தது. கைகுலுக்கும் போது அவ்வளவு உறுதியான பற்றுதல். அவ்வளவு உறுதியான பிடிமானம். அவர் கூறிய பகவான் அருளுகிறார் என்றே தோன்றிற்று.
ஜெயமோகன் அவர்களுக்கு மகிழ்ச்சியோடு தகவல் அனுப்பினேன். இரா. முருகன் திடமாக புத்தகத் திருவிழாவில் அவருடைய உதவியாளரின் அனுசரணை இல்லாமலேயே நடந்து போகிறார். இப்போது அவரால் ஒரு திரைப்படத்தில்கூட நடக்க முடியும். விஷ்ணுபுரம் விருது ஒரு சிகிச்சையாகவும் எனக்குத் தோன்றுகிறது என்றேன். முன்னர் எழுத்தாளர் பூமணி அவர்களுக்கும் இது போன்ற அனுபவம் இருப்பதாக அறிந்திருக்கிறேன். ஆனால் இரா. முருகன் அவர்களை நேரிலேயே பார்க்கிறேன்.
விஷ்ணுபுரம் விருது என்பது தமிழ்ச் சமூகத்தில் வழங்கப்படும் இலக்கிய விருதுகளில் முதன்மையும் பெருமிதமும் கொண்டது. வெறும் விருதும் காசோலையும் வழங்கப்படும் ஒரு சடங்கியல் விருது விழா அல்ல. விருது பெறும் படைப்பாளியின் ஒட்டுமொத்த படைப்புக்களையும் வாசித்துவிட்டு வந்திருக்கும் வாசகர்களாலும் அந்த விழா அரங்கம் நிறைந்திருக்கும். இலக்கியத்தை மேன்மையாகக் கருதாத எவரும் அங்கே தலைவைக்க மாட்டார். ஒரு மாபெரும் திரளுக்கு முன்பாக தன்னுடைய எழுத்துக்காக பெறுகிற விருதை ஒரு எழுத்தாளன் தனது எல்லையற்ற கனவின் சிலிர்ப்பாக அங்குதான் பொருள் கொள்ளமுடியும். அங்கு விருதுபெறும் போது கரவொலி எழுப்புவர்கள் யாரும் கடமைக்காக செய்பவர்கள் அல்ல. எழுத்தின் செழுமையை சிறப்பை அறிந்தவர்கள் என்பதே இன்னொரு கெட்டியான கெளரவம்தான். இப்படியொரு நிறைவான விருதையும் சிறப்பையும் பெற்றால் ஒவ்வொரு படைப்பாளியும் இலக்கியத்திற்கு இன்னும் இன்னும் பணி செய்வார்கள். அதற்கான உளவிசையையும், உற்சாக ஆற்றலையும் இப்படியான மதிப்புமிகு கெளரவங்களே வழங்குகின்றன என்றால் மிகையில்லை. விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்திற்கு நன்றி. மங்கலம் பெருகட்டும்.
The post விருதின் ஒத்தசொல் மாமருந்து first appeared on அகரமுதல்வன்.
January 7, 2025
புத்தகத் திருவிழா – நேர்காணல்கள்
சைவ நேர்காணல்
January 6, 2025
குற்றமலர்
வீழ்ந்த கனவே!
சுவடுகளில் மூச்செறிந்து
நிலம் கிளர்த்தி
திசை விரைந்து தேடும்
உனக்கும் எனக்குமிடையே
ஒரு கடல் புகுந்துவிட்டது.
நிலம் பிளந்துவிட்டது.
****
பூமியின் மேனியில்
சருகின் பழுப்பு
உதிர்ந்ததும்
உதிருமா
இலையின்
வண்ணம்.
****
அந்தரத்தில் பாவி
தேன் குடிக்க எண்ணும்
வண்ணத்துப்பூச்சிக்கு
மகரந்தத்தை
ஈயாத
குற்ற மலர்
இப்பெருவெளியில்
காணேன்.
****
The post குற்றமலர் first appeared on அகரமுதல்வன்.
January 4, 2025
அபூர்வ சிங்கீதம்
திரைத்துறையில் பணிபுரிபவர்கள் பலருக்கும் “அபூர்வ சிங்கீதம்” நான்கு பாகங்களும் ஒரு கொடுப்பினை. மாபெரும் ஆளுமைகள் கலந்துரையாடும் நிகழ்வு மட்டுமல்ல. தமிழ்த் திரைப்படத்துறையை எவ்வாறு கட்டி இழுத்து வந்திருக்கிறார்கள் என்று வியக்க வைக்கிறார்கள். இந்த நிகழ்விற்கு நான்கு நாட்களும் சென்றிருந்தேன். கலைஞானி கமல்ஹாசன் அவர்களின் மேதமை குறித்து எண்ண எண்ண மனம் சிலிர்க்கிறது. வாய்ப்புள்ளோர் காண்க.
The post அபூர்வ சிங்கீதம் first appeared on அகரமுதல்வன்.
விழாவில்
மாலையில் அரங்கு நிறைந்த அவையில் இரா.முருகனைப் பற்றி அகரமுதல்வன் இயக்கிய ஆவணப்படம் திரையிடப்பட்டது. ஒரு கூத்துக்கலைஞனின் கூற்று வழியாக படம் விரிவடையும் விதம் அற்புதமான அனுபவமாக இருந்தது. கனவுகளைப்பற்றியும் மாயங்களைப்பற்றியும் விசித்திரங்களைப்பற்றியும் ஏராளமாக எழுதி நிலைத்திருக்கும் இரா.முருகனைப்பற்றிய ஆவணப்படமும் ஒரு கனவுக்காட்சியைப்போல மாயத்தன்மையோடு அமைந்திருந்தது. அகரமுதல்வனின் ஆற்றலைப் புரிந்துகொள்ள இந்தப் படம் ஒரு நல்ல அடையாளமாக இருக்கும் என்று குறிப்பிடத் தோன்றுகிறது.
The post விழாவில் first appeared on அகரமுதல்வன்.
January 2, 2025
சில நூல்கள் – பரிந்துரை
அன்பின் அகரமுதல்வனுக்கு!
சென்னைப் புத்தக திருவிழாவிற்கு ஆறாம் திகதி வரத்திட்டமிட்டு இருக்கிறேன். சில பதிப்பக நூல்களை குறிப்பெடுத்து வைத்திருக்கிறேன். உங்களிடமிருந்தும் சில பரிந்துரைகளை அறிய ஆவலாய் உள்ளேன். ஏற்கனவே நீங்கள் கூறிய புத்தகங்களை வாசித்து இருக்கிறேன். எனக்கு உங்கள் பரிந்துரையில் எந்த ஏமாற்றமும் இல்லை என்பதாலேயே மீண்டும் கேட்கிறேன். பரிந்துரையுங்கள்.
அருணாச்சலம்
வணக்கம்! இந்தப் புத்தகத் திருவிழாவில் வெளியான சில புத்தகங்களை வாங்கி வாசித்து முடித்தேன். பெருமளவில் ஏமாற்றங்களே நிகழ்ந்துள்ளன. ஆனால் அதுகுறித்து எந்த முன் எதிர்பார்ப்பும் இல்லாததால் பெருங்கவலை இல்லை. நீங்கள் வாசிக்க விரும்பும் புத்தகங்கள் ஏதென்று எனக்குத் தெரியவில்லை. நான் சில நூல்களை குறிப்பிடுகிறேன். வாய்ப்பிருப்பின் வாங்குக!
1 மலைச்சாமியின் வயலை இருபத்தியொன்றாம் நூற்றாண்டு மேய்கிறது – மண்குதிரை
2 கொடுக்கு – முத்துராசாகுமார்
3 வேறு வேறு சூரியன்கள் – சந்திரா தங்கராஜ்
4 தரூக் – கார்த்திக் பாலசுப்ரமணியன்
5 கலாதீபம் லாட்ஜ் – வாசு முருகவேல்
6 மனித குலம் நமபிக்கையூட்டும் வரலாறு – ருட்கர் பிரெக்மன்
7 இராணுவ நினைவலைகள் – கர்னல் ஜேம்ஸ் வெல்ஷ்
8 கிளர்ச்சியாளர் யூசுப்கான் – எஸ்.சி.ஹில்
9 சுவாசம் காற்றில் கரைந்தபோது – பால் கலாநிதி
10 பசி – காதல் – பித்து – முகமது அப்பாஸ்
11 அனாகத நாதம் – செந்தில் ஜெகன்னாதன்
12 மறக்கவே நினைக்கிறேன் – மாரி செல்வராஜ்
13 தமிழகத் தொல்குடிகள் – எட்கர் தர்ஸ்டன்
14 கார்த்திக் புகழேந்தி கதைகள்
15 இரவோடி – என்.ஸ்ரீராம்
16 மருபூமி – அஜிதன்
17 இரண்டாம் ஆட்டம் – லக்ஷ்மி சரவணகுமார்
18 அக்காவின் எலும்புகள் – வெய்யில்
19 ஆ.மாதவன் கதைகள்
20 திருவேட்கை – தெய்வீகன்
The post சில நூல்கள் – பரிந்துரை first appeared on அகரமுதல்வன்.
January 1, 2025
“A GARDEN OF SHADOWS” – நன்றி நவில்தல்கள்
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் இரண்டாயிரத்து இருபத்து நான்காம் ஆண்டிற்கான விருதினைப் பெற்றவர் எழுத்தாளர் இரா. முருகன். அவரது படைப்புகளின் முக்கியமான பங்களிப்பை வெளிப்படுத்தும் ஒரு ஆவணப்படத்தினை இயக்கும் வாய்ப்பினை எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் எனக்கு வழங்கினார். “A GARDEN OF SHADOWS” என்ற ஆவணப்படத்தினை இயக்கியிருந்தேன்.
தமிழ்ச் சூழலில் எழுத்தாளர்கள் குறித்த ஆவணப்படங்களுக்கென பொதுவான பாணிகளே உண்டு. பூங்காங்கக்கள், நடைபாதைகள், மொட்டைமாடிகள், பாழடைந்து பொருக்கு உதிரும் பாசிச்சுவர்கள் என அங்குதான் படம்பிடிக்க வேண்டுமென ஒரு நினைப்பும் உண்டு. சம்பந்தப்பட்டவரைப் பற்றி ஏனைய எழுத்தாளர்கள் தமது அபிப்பிராயங்களை முன்வைப்பதையே படம்பிடித்து தொகுத்து வழங்குவார்கள். என்னளவில் அவற்றை ஆவணப்படம் என்று அழைக்கவியலாது.
இன்று உலகளவில் தயாரிக்கப்படும் ஆவணப்படங்கள் பெரிய பொருட்செலவிலான திரைப்படங்களுக்கு மேலான கவனங்களைப் பெறுகின்றன. எழுத்தாளன் குறித்த ஆவணப்படத்தில் மரத்திலிருந்து இலை விழுவதையும், சருகுகள் மீது நிழல் விழுவதையும் காட்டி, அந்த எழுத்தாளனை வழிநெடுக அழைத்துச் செல்வது இல்லையென்ற தீர்மானம் என்னிடமிருந்தது. ஆகவே எனக்கு நானே வரித்துக் கொண்ட முதல் சவால் இதுதான். அப்படியெனில் அடுத்து என்ன?
எழுத்தாளர் இரா. முருகன் அவர்களை முதன்முறையாக நண்பர்களோடு சந்திக்கச் சென்றேன். அவருடைய உடல் நிலையின் தீவிரத்தை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. ஆகவே அவரோடு ஒரு மணிநேரத்துக்கும் குறைவாக உரையாடி முடித்து, ஆவணப்படத்திற்கான படப்பிடிப்பை எப்போது நடத்தலாம் என நீங்களே சொல்லுங்கள் என கூறிவிட்டு வந்தேன். இடையிடையே தொலைபேசி உரையாடல்கள். இரா. முருகன் அவர்கள் நான் கூறிய ஒரு புதுமுறையைப் பாராட்டினார். அவரது கதாபாத்திரங்களான பனியன் சகோதரர்களை முன்வைத்து எழுதிய திரைக்கதையைக் கூறினேன். ஆர்வமாக இருக்கிறது. புதிதாக இருக்கிறது எனப் பாராட்டினார்.
இரா. முருகன் அவர்களின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, அவரது சொந்தவூருக்கு செல்லாமல் காஞ்சிபுரத்தை ஒட்டியுள்ள சிறிய கிராமத்தை தேர்வு செய்தேன். அங்குள்ள ஆலயத்தின் பின்புறத்திலுள்ள குளத்தில் வைத்து இரா. முருகன் அவர்களை படம்பிடிக்க எண்ணினேன். வழி இணைய இதழின் ஆசிரியர், எழுத்தாளர் இளம்பரிதி உட்பட என்னுடைய நண்பர்களோடு இடம் பார்க்க பயணப்பட்டேன். இடங்களை உறுதி செய்துகொண்டோம். அங்குள்ள கட்டைக் கூத்துப் பள்ளிக்குச் சென்றும் இடம் பார்த்தோம். கலையை வளர்க்கும் வளாகத்தில் நிலவொழுகும் இரவில் நின்று ஆவணப்படத்தின் காட்சிகளை ஓட்டிப்பார்த்தேன். காஞ்சிபுரத்தில் படம் பிடித்துவிடலாம் என திட்டமிட்டு உறுதி செய்து கொண்டோம்.
சிறந்த ஒளிப்பதிவாளர் ஒருவர் கிடைத்தால் மட்டுமே, நான் நினைப்பதை, நினைத்தது போல ஒளியூட்டி ஆக்கித்தருவார் என்று விரும்பினேன். என்னுடைய நண்பரும் திரைப்பட ஒளிப்பதிவாளருமான பிரியேஷ் குருசாமி அவர்களிடம் விஷயத்தைக் கூறினேன். “கண்டிப்பாக பண்ணலாம். எனக்கு ஊதியம் எதுவும் வேண்டாம்” என்றார். பல மொழி திரைப்படங்களிலும், விளம்பரப்படங்களிலும் ஒளிப்பதிவாளராக செயற்படுபவர் பிரியேஷ். என்னுடைய அணுக்க நண்பர். அந்த நட்பின் கை என்னைப் பற்றிக்கொண்டதும் இந்த ஆவணப்படத்தின் சிறந்த தோற்றம் என் கண்முன்னால் காட்சியாகியது. திரைத்துறையில் இதுபோன்ற ஆக்கச் செயல்களுக்கு தமது திறமைகளை அள்ளித்தருவோர் அரிது.
அதன்பிறகு என்னுடைய எண்ணத்திற்கு உரையாடல் எழுதவல்ல ஒருவரைக் கண்டடைய வேண்டும். எழுத்தாளர் இரா. முருகன் அவர்களது படைப்புகளை நிறைவாக வாசித்தும், ஒரு காட்சியை வசனங்களால் கொண்டு நகர்த்தும் அளவுக்கு திறனும் உள்ள இலக்கியக்காரராக இருக்கவேண்டுமென எண்ணினேன். உடனடியாக ஜா.ஜா என்றழைக்கப்படும் ஜா. ராஜகோபாலன் அவர்களை அழைத்துப் பேசினேன். கடுமையான பணி நெருக்கடியில் இருப்பவர். நான் சொன்னவற்றை கேட்டு முடித்து காட்சிகள் ஒவ்வொன்றையும் பிரித்து, அசலான திரைக்கதை ஆசிரியர் போலவே அனுப்பி வைத்தார். வியக்க வைக்கும் எழுத்து. மீண்டும் நேரில் சென்று சந்தித்து எனக்குத் தேவையான சிலவற்றை கேட்டுப் பெற்றேன். ஜா. ஜாவின் பங்களிப்பு இன்றி இந்த ஆவணப்படம் சிறப்பாக நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை.
ராஜாவுக்கும் சாமானியனுக்கும் இடையே நிகழும் உரையாடல் வழியாக இரா. முருகன் அவர்களின் சரிதத்தை சுருக்கமாகவும், அவரது படைப்புகளில் உள்ள எள்ளலான மொழி வழியாகவே ஒரு நிகழ்த்துக்கலையை உருவாக்க வேண்டுமென விரும்பினேன். ஆலம் விழுதைப் பற்றியாடும் சிறுமியைப் போல மாயத்திற்கும் யதார்த்திற்கும் இடையே அந்தரத்தில் அசைந்து பரவசம் அடையவேண்டுமெனவும் எண்ணினேன். அந்தப் பரவசத்தை அளிக்கும் வல்லமை ஒரு அசலான கூத்துக் கலைஞனுக்கு இருக்கும். எனக்கு கட்டைக்கூத்து கலைஞர் மூர்த்தியை அறிமுகப்படுத்தியது “வழி” இளம்பரிதிதான். மூர்த்திக்கு கேமராவுக்கு முன்நின்று நடித்துப் பெரிய பழக்கம் இல்லை. ஏதோ திரைப்படம் ஒன்றுக்கு அழைக்கப்பட்டு வழமை போல தன்னுடைய உழைப்பை வழங்கியிருக்கிறார். ஆனால் சினிமா அவரை ஏமாற்றி அனுப்பியிருக்கிறது. இந்த ஆவணப்படத்தில் கிட்டத்தட்ட பத்து மணிநேரங்களுக்கு மேலாக அதே வேஷத்தோடு இருந்தார் மூர்த்தி. உண்மையில் அவரது உழைப்பும் அர்ப்பணிப்பும் சகிப்புத்தன்மையும் போற்றுதலுக்குரியது. கட்டைக்கூத்து கலைஞர் மூர்த்திக்கு பெருமளவில் வாய்ப்புக்கள் வரவேண்டும்.
சாமானியனாக நடித்திருக்கும் மிதுன் ருத்ரன் என்னுடைய நண்பர். கூத்துப்பட்டறை ந. முத்துசாமி அவர்களிடம் நடிப்புக்கலை பயின்றவர். பத்தாண்டுகளுக்கு மேலே திரைத்துறையில் சரியான வாய்ப்புக்காக உழைப்பவர். மெஹந்தி சர்க்கஸ் என்கிற திரைப்படத்தில் நாயகனின் நண்பராக நடித்திருக்கிறார். சிறந்த நடிப்பாற்றல் கொண்டவர். திரைத்துறையில் தகுந்த வாய்ப்பு வரும்வரை அதற்காக விடாப்பிடியாக உழைப்பவனே வெற்றி காண்பான். மிதுன் வெற்றி காணும் திறனுள்ளவர். இந்த ஆவணப்படத்தில் அவரது முகபாவம் ஒரு சாமானியனின் அப்பாவித்தனத்தை தகுந்தளவில் வெளிப்படுத்தி இருப்பதாக பார்த்த சிலர் அடையாளமாக கூறினார்கள்.
இசையமைத்த ஸ்டீபன் திவாகர் கனவுகளை ஏந்தி நிற்கும் இளைஞன். கொதியும் வலியும் கொண்ட வாழ்க்கைப் பின்னணி கொண்டவர். இசையை ஏந்தி வீதிகள் தோறும் சனங்களை விழித்தெழச் செய்த இசைக்கலைஞனின் மகன். பொருளாதார வலிமை கொண்ட என்னுடைய இரண்டு விளம்பரப்படங்களுக்கு ஏற்கனவே இசையமைத்திருக்கிறார். இந்த ஆவணப்படத்தில் அவரது பின்னணி இசை ஒருவகையான பக்குவமான செயலாகவே தோன்றியது. ஆர்மோனியம், உடுக்கு, புல்லாங்குழல், மேற்கத்தேய இசையென அளவு மீறாமல் தருவித்திருந்தார். அவரின்றி அழகும் உணர்வும் இந்த ஆவணப்படத்தில் சேர்ந்திருக்காது.
படத்தொகுப்பாளர் விக்கினேஷ் ராஜா. தன்னுடைய பாணியில் கதைகளைச் சொல்ல வேண்டுமென ஆசைப்படும் சரியான தொகுப்பாளர். அவருக்கு இன்னும் தீவிரம் கூடிவரும். இந்த ஆவணப்படத்தின் கதைசொல்லும் முறையை நான் தீர்மானித்த போது சரிப்பட்டு வருமா என்று சந்தேகித்தார். இரண்டு காட்சிகளை அடுக்கிப் பார்த்தப் பின்னர் இதுதான் சரியாகும் என்று இசைவு தெரிவித்தார். கொஞ்சம் கடுமையான பணி. கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரத்துக்கு மேலான காட்சிகளை வெட்டித் தொகுக்க வேண்டியிருந்தது. எதிர்காலத்தில் சிறந்த படத்தொகுப்பாளராக ஆகக்கூடியவர்ன் விக்னேஷ் ராஜா.
இரா. முருகன் அவர்கள் பேசுவதை படம்பிடித்தவர் ஒளிப்பதிவாளர் ராஜேஷ். என்னுடைய சகோதரரும் நண்பரும். மிக விரைவில் அறியப்படும் ஒரு தொழில்நுட்ப கலைஞராக ஆகும் திறன் படைத்தவர். என்னுடைய கடுமையான நேர நெருக்கடிகளை புரிந்து அதற்கு இசைவாக பணியாற்றும் சூதனம் தெரிந்த தம்பி அவர்.
விளம்பர வடிவமைப்பை உருவாக்கி அளித்த சிவா அன்புக்குரியவர். இளந்தலைமுறை கொண்டிருக்கும் நவீன அறிவாற்றலை அவரது துறையில் நிறைத்து வைத்திருக்கிறார். அவருடைய வேலைப்பளுவின் மத்தியில் இதனை சிறப்பாக வடிவமைத்திருந்தார்.
வண்ணக்கலவையை ஆக்கி அளித்தவர் மனோஜ் ஹேமச்சந்தர். என்னுடைய இயக்குனர் தனா அவர்களின் மூலமாகவே இது சாத்தியப்பட்டது. மூன்று நாட்கள் கடுமையான தொடர் வேலை. மனோஜ் வளர்த்து வரக்கூடிய வண்ணக்கலைஞன்.
இந்த ஆவணப்படத்தின் கட்டைக்கூத்து உரையாடல் காட்சியை படம்பிடித்த கொசஸ்தலை ஆறு பாகசாலை என்கிற கிராமத்தின் பகுதியாக இருந்தது. அங்கு உறுதுணையாக இருந்த, சிவனடியார் பாகசாலை ஜெயக்குமார் அவர்களுக்கு நன்றி. எப்போதும் உறுதுணையாக இருக்கும் பச்சையப்பன் அவர்களுக்கும் நன்றி.
“A GARDEN OF SHADOWS” என்று பெயரிடப்பட்டதும் ஆங்கிலத்திலா என்று வியப்படைந்தார்கள். சிலர் அருமையாக இருக்கிறது. நிழல்களின் தோட்டமா என்று கேட்டார்கள். இரா. முருகன் எழுத்தைப் போலவே இருக்கிறது என சிலர் பாராட்டினார்கள். அரசூர் வம்சம் என்றே வைத்துவிடுங்கள் அதுதான் நன்றாக இருக்குமென சிலர் கட்டணமில்லாத ஆலோசனைகள் வழங்கினர்.
மாலையில் ஆற்றின் நடுவே நீரற்றுக் கிடந்த மணல் திட்டில் படம் பிடிக்க ஆரம்பித்தோம். நள்ளிரவு கடந்து போகையில் ஆற்றில் நீர் நிரம்பிக் கொண்டிருந்தது. கால்களில் நதி முட்டியது. எங்கள் இடையில் ஓடும் நதியில் கால் நனைத்து மேடேறினோம். இடையில் ஓடும் நதிக்குள் நின்றபடி “A GARDEN OF SHADOWS” என்ற தலைப்பை நானும் இளம்பரிதியும் முடிவு செய்து கொண்டோம். என்னுடைய உதவி இயக்குனர்களாகவிருந்த அன்பு ஹனீபாவும், விஷாலுக்கும் நன்றி. ஹனீபா படப்பிடிப்புத்தளத்தில் சிறந்த உதவி இயக்குனர்.
ஆவணப்படத்தினைப் பார்த்தவர்கள் பலரும் கடிதங்களின் மூலமும் நேர்ப்பேச்சிலும் பாராட்டுகிறார்கள். எல்லோருக்கும் நன்றி.
எல்லாம் செயல்கூடும் என்னாணை யம்பலத்தே
எல்லாம்வல் லான்ற னையே ஏத்து.
வள்ளலார்
The post “A GARDEN OF SHADOWS” – நன்றி நவில்தல்கள் first appeared on அகரமுதல்வன்.
December 31, 2024
பப்பற வீட்டிருந்துணர
அன்புமிக்க எழுத்தாளர் அகரமுதல்வன் அவர்களுக்கு!
இன்றைக்கு தமிழ்நாட்டில் சைவம் என்றால் என்ன என்று யாரிடமாவது கேட்டால் புகழ் பெற்ற சைவ உணவங்களின் பெயரைச் சொல்லி புகழ் பாடுவார்கள். சைவம் என்பது ஒரு சமயம் என்ற புரிதல் கூட இல்லாமல் தான் பலர் இருக்கிறார்கள். அப்படியே சைவ சமயத்தை பற்றி தமிழகத்தில் தெரிந்திருந்தாலும் அதில் உள்ள சித்தாந்தத்தை அறியும் முனைப்புடன் இன்றைய தலைமுறையினர் யாருமே இல்லை. நீங்கள் ஈழத்துச் சைவர்.
அங்கு பள்ளிப்பாடத்திலேயே சைவநெறி உள்ளது. சிறு வயதினிலேயே பதி, பசு, பாசம் என்பணவரடர் இருந்து வந்தவர். அங்கே தமிழகம் போல் அல்லாமல் பாடத்திலே சைவ சமயம் உள்ளது. எனவே பதி பசு பாசம் என்பவனற்றை பள்ளிச் சிறுவர்களே பரவலாக தெரிந்து வைத்திருக்கிறார்கள்.
இங்கே, இப்படி குறை கூறுவதனால் ஒரு பயனும் இல்லை. என்ன பங்காற்றப் போகிறோம். அதே நேரத்தில் அதன் மூலமாக அறிவார்ந்த தளத்தில் நாமும் எப்படி வளரப் போகிறோம் என்று யோசனையின் விழைவாக ” சித்தாந்தம்” என்ற இணைய இதழை இத்தருணத்தில் தொடங்குகிறோம்.
இது முழுக்க முழுக்க சைவ சித்தாந்தத்தின் அனைத்து அடிப்படைக் கூறுகளையும் அறிமுகப்படுத்த இருக்கின்றன.
தொடர் கட்டுரைகள், நேர்காணல்கள், சிந்தாந்த அறிஞர்கள் பற்றின முழுமையான அறிமுகங்கள், முக்கிய சித்தாந்த நூல்களை நவீன மொழிநடைக்கு மறு ஆக்கம் செய்தல் என்று செயல்கள் பலவாறாக திட்டமிடப்பட்டிருக்கின்றன. இது ஏதோ சமய மத பிரச்சார நோக்கத்திற்கான இதழ் அல்ல.
தமிழ்நாட்டில் தோன்றிய ஆழமான செறிவான முக்கிய தத்துவம் ஒன்று அருகி வரும் நிலையில், அதனைத் தடுத்து இளம் தலைமுறைக்கு கையளிக்க வேண்டும் என்ற கடப்பாடோடு இந்த இதழைத் தொடங்குகிறோம்.
இந்த இதழை நல் முறையில் அ.வே. சாந்திகுமாரசுவாமிகள் அவர்களின் திருக்கரங்கள் மூலம் திறந்து வைத்துள்ளார் . மேலும் இவ்விதழை நடத்த நல்லூழ் அமைய வேண்டும். பல்லோர் துணைபுரிய வேண்டும். பப்பற வீட்டிருந்துணர வேண்டும்.
இப்படிக்கு
இதழ் ஆசிரியர்கள்
உ.முத்துமாணிக்கம்
செ.பவித்ரா
The post பப்பற வீட்டிருந்துணர first appeared on அகரமுதல்வன்.
அகரமுதல்வன்'s Blog
- அகரமுதல்வன்'s profile
- 17 followers

