அகரமுதல்வன்'s Blog, page 6

December 1, 2024

தமிழ்மொழியை கருவிகளுக்குக் கைமாற்றவேண்டிய யுகமிது – ம. இராசேந்திரன்

ம.இராசேந்திரனை கல்விப் புலத்திலும் மொழிப்புலத்திலும் அறியாதவர் வெகு குறைவு. அவர் எழுதிய, பதிப்பித்த நூல்கள் ஏராளம். பெருமைமிகு தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பணி செய்தவர். அவர் ஏற்று நடத்திய பொறுப்புக்கள் நிரையாக அணிவகுத்துள்ளன. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனராக பொறுப்பு வகித்திருக்கிறார். சிறுகதைகள், ஆய்வுகள், கட்டுரைகள், கவிதைகள் என நவீன இலக்கியத்திலும் பலவாண்டுகளாக இயங்கி வருகிறார். தமிழின் சிற்றிதழ் மாண்பின் அடையாளங்களில் ஒன்றான கணையாழி இதழின் ஆசிரியராக இருந்து புதிய இலக்கிய சக்திகளுக்கு வாய்ப்பும் ஊக்கமும் அளிப்பவர். எப்போதும் ஒரு தெள்ளிய சிந்தனாவாதத்தையும், உரையாடலையும் நிகழ்த்த வல்லவர். மொழியியல் சார்ந்தும் மரபு இலக்கியங்கள் குறித்தும் ம.ரா அவர்களுடன் உரையாட வாய்ப்புக் கிடைத்தால் அதுவொரு நல்லூழ். சமீபத்தில் இவரது காலப்பிசாசுகள் என்ற சிறுகதை தொகுப்பு வெளியாகியுள்ளது. இந்திய சுதந்திரத்திற்கு முன்பாக தொடங்கப்பட்ட உன்னத அமைப்பான தமிழ் வளர்ச்சிக் கழகத்திற்கு இப்போது தலைவராக ஆகியிருக்கும் எழுத்தாளர் ம. இராசேந்திரன் அவர்களுடன் நிகழ்த்திய நேர்காணலே இது.

மிழ் வளர்ச்சிக்கழகத் தலைவராகி இருக்கிறீர்கள். தமிழ் வளர்ச்சியில்  எதற்கு முன்னுரிமை தரப் போகிறீர்கள்?

கடந்த காலம் போல மனிதர்களுக்குத் தமிழ் சொல்லித் தந்து தமிழ் வளர்க்கும் காலத்தைக் கடந்து நிற்கிறோம்.

தமிழ்த் தாத்தா உ.வே.சா. மற்றும் சி.வை.தா ஆகியோர் ஓலைச் சுவடியிலிருந்து அச்சுக்குத் தமிழை மாற்றிய காலத்தைக் கடந்து தமிழைக் கருவிகளுக்கு மாற்றும் காலம் இது. ஆம்  இது கருவிகளின் காலம்.  கணினிக்கு  இணையத்திற்கு, செயற்கை நுண்ணறிவுக்குத் தமிழ் சொல்லித்தந்து தமிழ் வளர்க்க வேண்டிய காலம்.

கன்னித்  தமிழ், கணினித் தமிழ் ஆகிக் கொண்டிருக்கிறது. மென்தமிழ், மின்தமிழ் ஆகிக் கொண்டிருக்கிறது. மின் தமிழாகத் தமிழை முழுவதுமாக மாற்றினால் வரும் தலைமுறைகளுக்குக் கருவிகளே  தமிழைக் கற்றுக் கொடுக்கும். ஆகவே இப்போது செயற்கை நுண்ணறிவுக்கும் தமிழைக் கொண்டு சேர்க்க வேண்டும்.

அதற்குத் தகவல்களாக இருக்கும் தமிழ் இலக்கியக் கருவூலங்களை, கல்வெட்டுகளை, நாட்டுப்புறக் கலை இலக்கியங்களை மின் ஆவணப்படுத்தி  அவற்றை எல்லாம் தரவுகளாக ஆக்க வேண்டும்.

தமிழ் வளர்ச்சிக்கழக முதன்மை நோக்கம் கலைக்களஞ்சியங்களை உருவாக்குவதாகத்தான் இருந்திருக்கிறது. கலைக்களஞ்சியங்கள் தேவைப்படும் தகவல்களின் கருவூலம். தகவல் தரும் கலைக்களஞ்சியங்கள் தரவுகளாக வேண்டும். மின் தரவுகளாக வேண்டும்.

அவ்வகையில் ஒரு இலக்கியத்தின் பெயரைக் குறிப்பிட்டுத் தேடினால் அந்த இலக்கியத்தின் ஆசிரியர், காலம், பாடுபொருள் அல்லது பேசுபொருள் சிறப்பு ஆகியவற்றைத் தெரிந்து கொள்ளும் வகையில் இக்கால இலக்கியம் வரைக்குமான இலக்கியக் கலைக்களஞ்சியம் மின் தரவுகளாகத் தயாரிக்கப்பட வேண்டும். அதைப் போலவே மாணவர்களுக்குப் பயன் தரும் வகையில் இலக்கணக் குறிப்புக் களஞ்சியம் வேண்டும். மருத்துவக் கலைக்களஞ்சியம், சித்த மருத்துவக் கலைக் களஞ்சியம் போலவே  தமிழ் வழியில் கற்க,  பொறியியல், கணினியியல் கலைக்களஞ்சியங்கள் வேண்டும்.

உணர்வையும், உரிமையையும் காப்பாற்ற மொழி முக்கியமாகிறது. மொழியுரிமை என்பதே மனிதவுரிமை என்பதில் தான் அடக்கமாகிறது. தமிழ் வளர்ச்சிக் கழகம் என்பதன் முதற்பணியே மொழியைப் பாதுகாப்பதுதான். அதன் பிறகுதான் மொழி வளர்க்கும் செயல்களில் இறங்க வேண்டும். இந்த யுகத்தில் மொழியை எங்கே வைத்துப் பாதுகாக்க வேண்டுமென நாம் யோசிக்க வேண்டும். இன்று உலகை ஆளும் செயற்கை நுண்ணறிவுக்குத் தமிழைக் கொண்டு செல்லுவதுதான் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பணியாக இருக்கவேண்டுமென விரும்புகிறேன். இதுவே இன்றைய யுகத்தின் மொழிவளர்ச்சிக்குப் பாதுகாப்பாக அமையும். ஒரு பொருளுக்கு அர்த்தம் தேடுவதற்கு, அகராதியின் பக்கத்தைப் புரட்டாமல், சொல்லைக் கணினியில் அடித்தால் அனைத்தும் வரவேண்டும். சொல்லடைவுகள் இனி அச்சில் தேவையில்லை. மின் தமிழில் இருப்பதே யுகத்தேவை. இப்படியெல்லாம் தமிழைப் பயன்பாட்டு மொழியாக வளர்த்தெடுக்க வேண்டும்.

 

நீங்கள் சொல்வதை பொன்னம்பலத்திலிருந்து மின்னம்பலத்திற்குஎன்று வரையறை செய்கிறேன். ஆனால் இன்றுள்ள பதின்பருவ தலைமுறையிடம் மொழி பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறது. அவர்களிடம் தமிழை எவ்வாறு கொண்டு செல்ல முடியும்?

எல்லாக்காலத்திலும் மொழிக்கும்  தலைமுறை இடைவெளி இருந்தே வந்திருக்கிறது. ஆனால் மொழியைக் காலத்திற்குக்  கைமாற்ற வேண்டிய பொறுப்பு அந்தந்த காலத்  தலைமுறையிடம் தான் உள்ளது. கலை இலக்கியங்கள் காலம் தோறும் சம காலப்படுத்தப்பட்டு வர வேண்டும்.  சம காலத் தேவைகளின் தீர்வுகளைக் கடந்த கால அனுபவப் பாடங்கள் வழி கண்டையைக் காட்ட வேண்டும். இன்றைக்கு நவீன இலக்கியங்கள் பலவும் அப்படித்தான் கடந்த காலத் தொன்மங்களில் தொழிற்படுகின்றன.

ன்றுள்ள தமிழ்நாடு அரசு மாவட்டங்கள் தோறும் இலக்கியத் திருவிழாக்கள், புத்தகக் கண்காட்சிகளை நடத்தி வருகின்றது. ஆரோக்கியமான களச்செயல். அப்படித் தமிழ் வளர்ச்சிக் கழகத்திற்கு ஏதேனும் எதிர்காலத் திட்டங்கள் உள்ளனவா?

இந்த அமைப்புக்கு அலுவலகமோ, கிளையோ இல்லை. ஆதலால் இந்த அமைப்புக்குக் களப்பணி சாத்தியமில்லை. மாறாகக் களப்பணியில் ஈடுபட்டவர்கள் கொண்டுவரும் தகவல்களைத் தரவுகளாக ஆக்கும் முயற்சியில்  இந்த அமைப்பு ஈடுபடும்.

ப்படியெனில் நவீன படைப்பாளிகளை உங்கள் அமைப்பில் உள்வாங்கும் எண்ணம் உள்ளதா ?

தாராளமாக. புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் அறங்காவலர் குழுவில் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் இணைக்கப்பட்டிருக்கிறார். நவீன சிந்தனைக்கும் இலக்கியத்திற்கும் ஊக்கமளிக்கும் கொள்கை முடிவுகளை எடுப்பதற்குப் பெரு விருப்பத்தோடு இருக்கிறோம்.

மிழ் , தமிழர் அரசியல் என்பதற்கு நீண்ட நெடிய போராட்ட வரலாறு உண்டு. அது இன்று வரைக்கும் எப்படி அவசியமாகிறது ?

இந்த யுகத்தின் பெரியதொரு கொடையாக நான் கருதுவது, எவராலும் இனியொரு மொழியை அழிக்கமுடியாது.  தகுதியான இலக்கியங்களைக் கொண்டிருந்தால் இணையத்தில் சாகா வரம் பெற்று இனி என்றும் வாழும். உதாரணமாக சமஸ்கிருதத்தில் உள்ள இலக்கியங்களால் மட்டுமே அது வாழ்கிறது. தமிழுக்கு உலகம் தழுவிய பாதுகாவலர்கள் உண்டு. சிந்தனையாளர்கள் பெருகி உள்ளனர். மொழி என்பதே ஒரு அரசியல் தான். அதனைக் கைவிட்டு எதனையும் செய்ய இயலாது.

மொ ழி என்பது பண்பாட்டோடு கூடியதுதான் என்பதில் உங்களுக்கும் உடன்பாடு உண்டு. இன்றைக்கு நாட்டுப்புறவியலின் கலை வெளிக்கு ஊக்கச்சத்து தேவைப்படுகிறது என்றே தோன்றுகிறது. இது குறித்து ஏதேனும் திட்டமிடல்கள் உள்ளனவா ?

தமிழர் விழாக்கள் சடங்குகள் குறித்து ஒரு கலைக்களஞ்சியத்தை உருவாக்க வேண்டும்.  எல்லா விழாக்களையும் பதிவு செய்ய வேண்டும். நான் மீண்டும் மீண்டும் கூறுவது ஓலைச்சுவடியிலிருந்து அச்சுக்கும் அச்சிலிருந்து கணினிக்கும் தமிழ் வந்துவிட்டதையே. இந்தக் கலைக்களஞ்சியத்தைக் கூட அச்சாக்கம் செய்யாமல் கணினியில் பதிப்பிக்க வேண்டுமென்பதே விருப்பம். இந்த யுகத்தின் நவீன பார்வையோடுதான் தமிழ் வளர்ச்சிக் கழகம் செயற்படவிருக்கிறது.

சிற்றிதழ் மரபுடன் இன்றுவரை வெளியாகும் இதழாகக் கணையாழியைக் கூறலாம். ஆனால் சிற்றிதழ் பண்பைப் பேணும் வகையில் படைப்புச் சூழல் தமிழில் உள்ளதா?

நல்ல கேள்வி. நாமார்க்கும் குடியல்லோம் என்கிற வார்த்தை தான் சிற்றிதழை நடத்துவோரின் எண்ணம். இன்றைக்கு வணிகச்சூழலுக்கு எல்லோரும் பழகியிருக்கிறோம். கணையாழி இதழில் படைப்புக்கள் வெளியான பலரும் முக்கிய படைப்பாளியாக இருக்கிறார்கள். எழுத வருவோருக்கு நாற்றாங்காலாக அது அமைந்திருக்கிறது. கணையாழி சிற்றிதழாக- மின்னிதழாகத் தொடர்கிறது.

நீ ங்கள் கடந்த காலத்தில் வகித்த உயரிய பொறுப்புகள் யாவும் அரசு சார்ந்தவைகளாக இருந்திருக்கின்றன. குறிப்பாகத் தமிழ் மொழி , சார்ந்த பொறுப்புகள்.  ஆனால் தமிழ் வளர்ச்சிக் கழகம் அரசு சாரா அமைப்பு. எப்படி உணருகிறீர்கள் ?

என்னுடைய பணிக்காலத்தைப் பின்னோக்கிப் பார்க்கும் போது தொடக்கம் முதல் தொடர்ந்து அரசு சாராத அமைப்புக்களின் தமிழ்ப் பணிகளிலும் மதிப்பூதியம் இல்லாமல் ஈடுபட்டே வந்திருக்கிறேன் என்பதை உணருகிறேன். கோடம்பாக்கத்தில் வீட்டின்  மாடியொன்றில் இயங்கிய காஞ்சி மணிமொழியார் தமிழ்க் கல்லூரியில்  தமிழ் படிக்கும் மாணவர்களுக்கு,  என்னுடைய செலவில் சென்று  தமிழ் கற்பித்திருக்கிறேன். பவளக்காரத் தெருவில் இயங்கிய திருவள்ளுவர் தமிழ் கல்லூரியிலும் தமிழ் கற்பித்திருக்கிறேன். தமிழ்ப் பல்கலைக்கழகத் துணை வேந்தராக இருந்த காலத்திலும்  முனைவர் வ.ஐ.சுப்பிரமணியம் இயக்குநராக இருந்த திருவனந்தபுரம் திராவிட மொழியியல் நிறுவனப் பணிகளில் அவருக்குப் பின் ஈடுபட்டு வந்திருக்கிறேன்.  இப்படி என்னுடைய பணிக்காலம் முழுவதும் அரசு சாரா தமிழ்  அமைப்புக்களுடன் இணைந்து தமிழ்ப் பணியில் ஈடுபட்டே வந்திருக்கிறேன்.  தமிழ்ப்பணி என்பதில் அரசு, அரசு சாராத அமைப்பு என்று பார்ப்பதில்லை.

டுத்து  என்ன செய்யப் போகிறீர்கள் ?

அதுதான் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் தலைமைப் பொறுப்பிலிருந்து யோசிக்கையில் சவாலாகத் தோன்றுகிறது. இந்த அமைப்பின் ஒன்பது அறங்காவலர்களில் எட்டுப்பேர் இப்போது இல்லை. மேனாள் ஒன்றிய அமைச்சர் திரு  ப. சிதம்பரம் அவர்கள் மட்டுமே அறங்காவலராக இருக்கிறார்.  ஆகவே அறங்காவலர் குழுவில் புதிய சக்திகளை அமைக்க வேண்டியுள்ளது. அதன்பின் ஆட்சிக்குழு, பொதுக்குழு, நிர்வாகிகள் , பணிகள், திட்டங்கள் என்று அனைத்தையும் சீர்படுத்த வேண்டியுள்ளது.

நன்றி – அமுதசுரபி 

நேர்கண்டவர் – அகரமுதல்வன்

 

 

 

 

The post தமிழ்மொழியை கருவிகளுக்குக் கைமாற்றவேண்டிய யுகமிது – ம. இராசேந்திரன் first appeared on அகரமுதல்வன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 01, 2024 04:24

November 30, 2024

தாதாய்.. தாதாய்.. நேசா!

டைந்து சிதறவும் இயலாத தவிப்பின் வெளியில் என் கூடு மிதந்திருந்த காலத்தில் பாரதி கிருஷ்ணகுமார் அவர்களோடு அறிமுகம் ஏற்பட்டது. நடுமதியப் பொழுதொன்றில் என்னுடைய கவிதைகளை வாசித்துவிட்டு தொலைபேசியில் அழைத்து “தம்பி…நான் பாரதி கிருஷ்ணகுமார் பேசுகிறேன்” என்றார். தம்பி என்பது வெறும் வயதால் அளவிடப்பட்ட உறவுச்சொல்லாக இவரிடம் இருந்து எழவில்லை என்று தோன்றியது. கவிதைகள் குறித்தும் ஈழப் பேரழிவின் குருதிப் பொருக்குலராத மானுடத்துயரையும் பேசினார். விரிவாக நேரில் பேசலாம். என்றேனும் ஒருநாள் அலுவலகத்திற்கு வாருங்கள் என்று வரவேற்றார். உறுதியாக சந்திக்கலாம் என்பதோடு அந்த உரையாடல் தீர்ந்திருந்தது.

அதன்பிறகான நாட்களில் சந்தித்துக் கொண்டோம். எந்தவித அரசியல் உரையாடலுக்கும் விவதாங்களுக்கும் இடமளிக்கும் ஆளுமையாக என்னைக் கவர்ந்தார். இலக்கியத்தையும் அதனது நிலையான தீவிரத்தையும் அவரது நம்பிக்கையில் இருந்து தொடர்ந்து முன்வைத்தார். எழுத்தாளர்களான  அந்தோன் செக்காவ், கந்தர்வன், வேல ராமமூர்த்தி ஆகியோரது படைப்புக்களை எனக்கு அறிமுகம் செய்தார். வாசிப்பின் வழியாக மீண்டெழ வேண்டுமென்ற என் உளத்திமிருக்கு உறுதுணையாக இருந்தவர்களுள் பாரதி கிருஷ்ணகுமார் தலையானவர்.

“அகம் நெகிழப் புகுந்து அமுதூறும் புதுமலர் கழல் இணை” எனத் தொடங்கும் இந்தப்பாடல்  இறைவன் திருவடிகளைத் தந்தும் அதனைப் பற்றிக்கொள்ளாமல் விட்டுவிட்டேன் என மணிவாசகர் கவலை கொள்வது. ஆனால் எனக்கு அதுபோன்ற கவலையில்லை. பாரதி கிருஷ்ணகுமாரின் புதுமலர் கழல் இணைகளைப் பற்றிக்கொண்ட ஏக இளவல் நான். மானுடப் படுகொலை நடந்த மண்ணிலிருந்து புலம்பெயர்ந்து வந்த ஒருவரிடம் எந்த வார்த்தைகளால் உரையாட வேண்டுமென இவர் நன்றாக அறிந்திருந்தார். ஆற்றமுடியாத என்னுடைய யுகக் காயங்களின் மீது மீண்டுமொரு குருதிப் பெருக்கை உருவாக்க எண்ணவில்லை. மாறாக அந்தக் காயத்தில் காட்டுத்தேன் ஊற்றி காயப்பண்ண எண்ணினார்.

நினைவுகள் எல்லோருக்கும் இனிமை பெய்பவை அல்ல. மாறாக அவை தீயூழாகவும் இருக்கிறது என்பதையும் உணர்ந்திருந்தார். இன்னொரு வகையில் என்னிடம் தணல் பூத்திருந்த எழுத்து எனும் வேள்வித் தீயை இனம் கண்டார். எழுதுக! என்பதைத் தாண்டி என்னிடம் வேறு எந்த நிபந்தனைகளையும் அவர் முன்வைத்தவரில்லை. கவிதைகளை விடுத்து கதைகளை எழுத வேண்டுமென முதலில் வலியுறுத்தியவர் என்ற வகையில் எப்போதும் நன்றிக்குரியவர்.

அப்போது திரைப்படம் இயக்கும் பணிகளில் மும்முரமாக இருந்தார். அலுவலகத்தில் எப்போதும் ஆட்கள் வந்து போயினர். இலக்கியம், சினிமா, அரசியல் என அலுவலகம் எப்போதும் நிறைந்திருந்தது. கதை விவாதம் நடந்தது. வேறொரு திரைப்படத்தின் பின் தயாரிப்பு வேலைகளில் இருந்து விலகி பாரதி கிருஷ்ணகுமாரின் திரைப்பட விவாதத்தில் இணைந்து கொண்டேன். அதுவொரு பொற்காலம். என்னுடைய புலம்பெயர்வு வாழ்வில் முதன்மையான காலகட்டம். பல்வேறு படைப்பாளிகளையும், தமிழ்நாட்டின் சமூக, பொருளாதார, பண்பாட்டு முரண்களையும் அங்குதான் அறிந்து கொள்ள முடிந்தது.

பாரதி கிருஷ்ணகுமாரை நான் BK என்று அழைக்கத்தொடங்கும் அளவுக்கு உளத்தாலும், சூழலாலும் நெருக்கமானேன். என்னை எங்ஙனம் அவர் அணைத்துக் கொள்ள எண்ணினார் என்று அறியேன். அன்பைக் கடலில் மிதக்கும் நிலமென ஆக்கி, என்னை அதில் அமரச்செய்தார். கனலும் என் அகத்தையும் முகத்தையும் தன் குளிர் பொருந்திய புன்னகையால், ஸ்பரிசத்தால் ஒத்தடம் தருவித்தார். எனது குருதிக்குள் கொந்தளிக்கும் அலை கடலின் ஆர்ப்பரிப்பை, அதனது உப்பின் ரோஷத்தை, நுரைகளின் கேவலை அவரளவுக்கு ஆழமாக விளங்கிக் கொண்ட ஒருவரை இன்னும் நான் சந்திக்கவில்லை.

அப்பத்தா என்கிற சிறுகதை தொகுப்பை வாசித்தேன். கோடி, அறம் வளர்த்த நாதன், லுங்கி ஆகிய கதைகள் குறித்து நீண்ட நேரம் உரையாடியிருக்கிறோம். “ராமையாவின் குடிசை” ஆவணப்படம் தந்த பாரத்தை எங்கும் இறக்கிவைக்க இயலாது இரண்டு மூன்று நாட்கள் அது குறித்து மட்டுமே பேசினேன். பாரதி கிருஷ்ணகுமார் என்கிற பெயர் பல்வேறு துறைகளில் அறியப்பட்டது. அவருடைய மேடைப் பேச்சு என்பது தமிழ் அறிவியக்கப்பரப்பில் ஏற்படுத்திய தாக்கம் அளவிடமுடியாதது. இடதுசாரி அரசியல் – கலை இலக்கிய மேடைகளில் அவரது உரை கடந்தகாலத்தின் மகத்தான செயற்பாடுகளில் ஒன்று. மேடைப் பேச்சிலுள்ள ஜனரஞ்சகத் தன்மையை முதன்மையாக ஆக்காமல் இலக்கியத்தையும், கருத்துக்களையும் பாமரர்களால் வெளிப்படையாக அறிந்து கொள்ள இயலாத அரசியல் சூழ்ச்சிகளையும் அப்பட்டமாக, நையாண்டியாக முன்வைப்பதில் BK – வுக்கு நிகர் BK தான். தமிழ்நாட்டின் மேடைப் பேச்சின் யுக நாயகர்களின் நிரையில் BK தேயாத பூரணம்.

ஒரு அரசியல் தரப்போடு தன்னை அடையாளப்படுத்தும் படைப்பாளிக்கு எல்லைகள் உண்டு. நிர்ப்பந்தமான சாய்வுகள் உண்டு. விரும்பினாலும் ஏற்க இயலாத நெருக்கடிகள் உண்டு. பாரதி கிருஷ்ணகுமார் என்கிற ஆளுமைக்கும் அதுபோன்ற காலங்கள் இருந்தன என்றே தோன்றுகிறது. படைப்பாளியை நெருக்குவதில் வலதுக்கும் இடத்துக்கும் வித்தியாசமில்லை. பாரதி கிருஷ்ணகுமார் என்கிற படைப்பாளியிடமிருந்து வெளிக்கிளம்பவிருக்கும் கதைகள் ஏராளமுள்ளன. அவற்றில் சிலவற்றை அறிந்திருக்கிறேன்.

ஒரு களப்பணியாளராக, லட்சியவாத தலைமுறையின் முக்கிய ஆளாக இவரின் தன்னனுபவங்கள் எழுதப்படவேண்டும். சனங்களின் மீதும் அவர்களின் வாழ்வின் மீதும் அக்கறை கொண்ட அவரது அனுபவங்கள் ஒவ்வொன்றும் வியப்புக்குரியன. இன்றுள்ள பேச்சாளர்களில் பாரதி கிருஷ்ணகுமார் அரிதான சக்தி படைத்தவர். நவீன இலக்கியத்தோடும், மரபு இலக்கியத்தோடும், கார்ல் மார்க்சுடனும், மாணிக்கவாசகருடனும், கம்பனுடனும், திருவள்ளுவருடனும், குர் – ஆனோடும், பைபிளோடும், கீதையோடும் தன்னுடைய உரைகளை நிகழ்த்த வல்லவர். வாசிப்பின் வழியாக ஒரு மனிதன் அடையும் கம்பீரமும் உயர்வும் எப்படியாகப் பட்டதென்றால் அது BK போல என்றால் மிகையில்லை.

அகரமுதல்வன்

 

 

 

 

The post தாதாய்.. தாதாய்.. நேசா! first appeared on அகரமுதல்வன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 30, 2024 10:30

November 29, 2024

மொழியின் மற்றொரு தனிமை

எழுத்தாளர் தமயந்தியின் வெளிவரவிருக்கும் “அந்திவானின் ஆயிரம் வெள்ளி” என்கிற சிறுகதை தொகுப்புக்கு நான் எழுதிய அணிந்துரை.

~~~

மயந்தியின் படைப்புக்களில் ஆவேசத்துடன் துடிக்கும் காலங்களும் கனவுகளும் ஆசைகளும்  நம்மில் உருவாக்க எண்ணுவது எதனை? கசப்பின் கைப்பிடிக்குள் தளும்பும் நீரா இவ்வாழ்வு? ஞாபகத்தின் வெதுவெதுப்பில் நஞ்சூறிக்கிடக்கும் கடந்தகாலத்தின் காயங்களில் கசிந்தபடியிருக்கும் குருதியின் வீச்சமா இன்றின் சுவடு? நிர்ப்பந்த இருளில் ஒளியெண்ணி மூச்சுத்திணறும் உடல்களும் உளங்களும் பொசுங்கும் வாடைதான் வாசனையா? தமயந்தியின் கதைகளைப் பின்தொடர்ந்தால் செவியறையும் கூக்குரல்கள் இவை.

 சில நேரங்களில் கலைகோரும் அளவீடுகளையும் தாண்டி கதைகளிலுள்ள அவலத்தின் அடர்த்தி அதிர்ச்சி அளிக்கிறது. குஞ்சுகளும் பறந்து போனதற்கு பிறகு முன்னிருந்த சில தடயங்கள் மட்டுமே எஞ்சியிருக்கும் பறவைக்கூட்டின் வெறுமையை ஒத்த நிர்க்கதியோடு உச்சிக்கிளையில் வலித்திருக்கிறது இவர் கதைகள். ஒரு கொடுஞ்சூறைக்காக காத்திருக்கும் அந்த நிர்க்கதித்தன்மை, பறவைக்கூட்டின் வெறுமையை இல்லாதொழிக்கும். அது காற்றில் அலைக்கழிக்கப்படும். அதனுள் எஞ்சிக்கிடக்கும் இறகொன்று மேல்நோக்கி எழுந்து பறக்கும்.

அப்போது வெறுமையின் பெருமூச்சும், தத்தளிப்பும் அற்றுப் போகும். காற்றில் தனித்துப் புரளும் ஒவ்வொரு இறகும் ககன வெளியின் வெறுமையை ஒழிக்கிறது. தமயந்தியின் கதைகளும் அப்படியானவைதான்.  இவரின் இறகுகள் உயரவெழுந்து ஆழத்தை அடைகின்றன என்பேன். ஏனெனில் சமூகத்தினாலும், அதனுடைய கட்டித்துப் போன விதிமுறைகளாலும் நிகழும் வன்முறையைச் சகித்துக்கொள்ளும் உறவு அமைப்புக்களாலும் முடக்கப்பட்டு பிணியுற்ற கதாபாத்திரங்களை வாசிக்கவே பேரதிர்ச்சியாக இருக்கிறது.

தமிழ்ச் சிறுகதையுலகில் எண்பதின் இறுதியில் எழுதப் புகுந்தவர் தமயந்தி. நவீன வாழ்வை என்றுமுள்ள சிக்கல்களோடும், காயங்களோடும் எழுதத் துணிந்தவர்களுள் இவரும் ஒருவர். ஏற்கனவே எழுதிக் கொண்டிருந்த படைப்பாளிகளின் நீட்சியாக கதைகளை முன்வைத்தார். பெண்ணின் நிலைபற்றி கொதிக்கும் ஆவேசங்களோடு நிகழ்ந்தது தான் இவரின் இலக்கியப் பிரவேசம். இன்றைக்கு எழுத வருகிற பெரும்பான்மையானவர்களுக்கும் இதே ஆவேசக் கருதுகோள்களே உள்ளன. வெறும் கொதிப்பும் வலியுமிருப்பின் மட்டுமே அவைகள் கதைகளாகிவிடுமா? சிறுகதைக்கான கலை நேர்த்தியை ஆவேசம் அடித்துச் சென்றால் குறையில்லையா? என்ற விமர்சனப் பார்வையை அன்றைய காலத்தில் கேட்பது நியாயமற்றதாக இருந்திருக்கும். பெண்ணின் எழுத்தையும், அதனுடைய அதிரடியான வெளிப்பாட்டு முறையையும் பெரும்பான்மை ஆண் மையச் சமூகம் கடுமையாக விமர்சித்தது.

ஆனால் எழுத வந்தோர் அனைவரும் கலையைக் காவு கொடுத்து பிரகடனங்களாய் மட்டுமே எஞ்சியவர்கள் இல்லை. ஆர். சூடாமணி, ஹெப்சிபா ஜேசுதாசன், அம்பை, உமா மகேஸ்வரி ஆகியோரை கலைகுன்றாத இலக்கியக்காரர்களாகக் குறிப்பிடமுடியும். இந்த நிரையில் தமயந்தியும் ஒருவர் என்பது மிகையற்றது.

நவீனத் தமிழ் இலக்கியத்தில் பெண்ணிய நோக்கில் எழுதப்பட்ட படைப்புக்களில் தமயந்தியின் சில கதைகளுக்கும் இடமுள்ளன. ஆனாலும் அந்தக் கதைகள் அதனையே முதல் நோக்கமாகக் கொண்டு நிகழ்ந்தவை அல்ல. அதுவரைக்குமான பெண்ணெழுத்தின் பொதுவான அம்சங்களை இவர் கதைகள் உதறின.

உரையாடல்களின் வழியாக கதையை நகர்த்தும் லாவகத்தாலும், மெல்லிய பகிடிகளாலும் தன்னையொரு தனித்துவப் படைப்பாளியாக உருவாக்கிக் கொண்டார். பெண்ணுலகின் கதைகள் பொதுவான சிக்கல்களையோ, தன்மைகளையோ கொண்டிருப்பதில்லை என்பதற்கான மிகச்சிறந்த சான்றாக தமயந்தியின் கதைகளை முழுவதுமாக வாசிக்கையில் வாசகர்கள் கண்டடைய முடியும்.

நகரம் – நகரமால்லாத நிலவெளியில் நவீன வாழ்வு எதிர்கொள்ளும் வித்தியாசங்களும், எதிர்கொள்ளலும் பல அடுக்குகளில் அமைந்திருக்கிறது. தமயந்தியின் கதைகளிலுள்ள தொடக்க விவரிப்புக்கள் பலவற்றில் கவித்துவமும் அனுபவமும் இழையோடிருக்கிறது. கால்களில் பூட்டப்பட்ட தளைகளை அறுப்பதற்கு கவித்துவம் கூர்மையான ஆயுதம் என்பதை அறிந்தவர்களுள் தமயந்தி முதன்மையானவர்.

தமயந்தியின் சொற்சிக்கனம் அலாதியானது. தமிழ்க் கதைப் பரப்பில் அவரளவுக்கு குறைவான சொற்களால் பெரிய சித்திரம் தீட்டிக்காட்டும் எழுத்து வன்மை மிகவும் குறைவானவர்களுக்கே சாத்தியப்பட்டிருக்கிறது. பரீட்சார்த்தமான கதை சொல்லல்களின் வழியாகவும் அந்நியப்பட்டுப் போகாமல் வாசகர்களுக்கு நெருக்கமாகும் கதைகள் என்கிறார் எழுத்தாளர் பிரபஞ்சன்.

இந்தக் கருத்துக்களோடு சேர்த்து சிலவற்றை சொல்ல வேண்டும். தமயந்தியின் கதையுலகின் அதிசிறப்பான அம்சமாக இருப்பது அவருடைய பிராந்தியத்தன்மை. இந்த தன்மையே அவருடைய படைப்புகளுக்கும் தனித்த விஷேசத்தை உண்டு பண்ணுகிறது. ஒருவகையில் தாமிரபரணி நிலவியலிருந்து எழுத வந்த பெண் படைப்பாளிகளுள் தமயந்தி தலையாய சக்தியாகவும் இருக்கிறார். படைப்பாளிக்கு பிராந்தியந்தன்மை மிக முக்கியமான ஒன்று. அதனைக் காவு கொடுத்து உலகத்தார் அங்கீகாரம் பெறுவதற்கு முண்டியடிக்கும் “எல்லோர்க்கும் பொதுவான மொழி” இலக்கியக்காரர்கள் குறித்து விசனமில்லை. ஆனால் மு. சுயம்புலிங்கத்தின் புகழ்பெற்ற கதையான  “ ஒரு திருணையின் கதையில் வருகிற “திருணை” என்கிற சொல்லே எழுத்தாளனுக்கும் மண்ணுக்குமான பந்தத்தை காண்பிக்கிறது. தமயந்தியின் தலைப்புக்களில் பிராந்தியமில்லை. கதைகளில் நிறைந்திருக்கின்றன.

அந்திவானின் ஆயிரம் வெள்ளி என்கிற இந்தத் தொகுப்பிலுள்ள சில கதைகள் அபாரமான நுட்பங்களோடு அமைந்திருக்கின்றன. உறவு முறைகளின் மீது கட்டாயமாகப் போர்த்தப்பட்டிருக்கும்  அன்பெனும் மாயையை கண்ணீர் கொண்டு கிழிக்கிறது. நீண்டலையும் நிழல் கண்டு அச்சம் கொண்டிருக்கிறீர்களா எனத்தொடங்கும் கதை முடிகிறபோது உடல் அதிர்கிறது. மின்மினிப் பூச்சி போல அலையும் வார்த்தைகளை ஒற்றை விரலால் நகர்த்தி அணைக்க முனையும் சாட்சியாக கதை சொல்லி அமர்ந்திருக்கிறார். தன்மை நிலையில் விவரிக்கப்பட்ட கச்சிதமான கதை. துக்கத்தின் கதுப்புச் சுவையை வாசகருக்கு கையளிக்கும் எழுத்துத்திறனால் பெருமூச்செறிய செய்கிறார். அன்றாட வாழ்க்கையின் மீது சலிப்புற்றவர்களின் குரல்கள் இலக்கியத்திலேயே அதிகமாக கேட்கின்றன.

கடுமையான மீறமுடியாத சமூக யதார்த்தத்தின் வெளிச்சத்தில் பார்த்தால், சமூக விழுமியங்கள் என்பவை பெரும்பாலும் சுய ஏமாற்று என்பதற்கு அப்பால் வேறொன்றுமில்லை. ஆனால் சாமானிய மனிதன் அந்த விழுமியங்களை நம்பித்தான் ஆகவேண்டும். அவன் மனம் நிறைந்து ஆத்மார்த்தமாக தானே உருவாக்கிய அந்த மாயையை தானே நம்பவும் செய்கிறான். தடையின்றி வாழ்க்கை நிலை நிற்க வேண்டும் என்ற விலங்கியல்பின் மீறமுடியாத உந்துதலால் மனிதன் செய்யும் செயல்கள் நெறிகளாக, கலாச்சார கூறுகளாக மாறுவேடம் போட்டுக்கொள்கின்றன. இந்தச் செயற்பாட்டிற்கு நேரடியான உதாரணம் மனிதனின் திருமணம் என்ற ஏற்பாடு – என்கிறார் இலக்கிய விமர்சகர் பி. கே பாலகிருஷ்ணன்.

இந்தக் கூற்றிலிருந்து தமயந்தியின் இன்னும் சில கதைகளின் அகக் கொந்தளிப்புக்களை கண்டடைய முடியும். இப்படிக்கு வாழ்க்கை என்ற கதையில் வருகிற யாழினிக்கும் – பிரபாவுக்கும் இடையிலான உறவு நிகழும் காலத்தில் கதை நகர்கிறது. ஆனாலும் இந்தக் கதையின் ஆதாரம் யாழினியின் கடந்தகாலத்திலிருந்தே உருக்கொள்கிறது. வாழ்வைச் சுற்றியுள்ள புறவயங்கள் நமது விருப்பு வெறுப்புக்கு அசைவன அல்ல. அதனது விசையை நம்மால் கட்டுப்படுத்த இயலாது. ஆனால் யாழினியின் விடுபடல், இடர்களை எதிர்கொள்ளும் துணிவு, அவளது காதல் ஏக்கம் என்பன அகவயத்தில் ஒரு விடுதலையை அளிக்கிறது.

தமயந்தியின் கதைகள் மனித மனங்களின் பலஹீனங்களையே மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றன. இனிமைக்குத் திரும்பவியலாத கசப்புகளின் பிரார்த்தனையாக எதிரொலிக்கின்றன. தொடக்ககால பெண்ணெழுத்தின் முத்திரையாகவிருந்த யதார்த்த பாணியிலான கதைகள் ஒரு சாராரால் இன்றுவரையும் தொடர்கின்றன. இதனைக் கடந்துயுயரும் தீவிரமான எழுத்துச் செயலுக்குள் தமயந்தி புகவேண்டுமென விரும்புகிறேன். ஏனெனில் தமிழ்ச் சிறுகதையுலகில் புறமொதுக்கமுடியாத இவரைப் போன்ற எழுத்தாளுமைகள் படைப்புத்தளத்திலிருந்து விலகவோ, இடைநிற்கவோ கூடாது என்பது என்னுடைய பெருவிருப்பு. இந்தத் தொகுப்பிலுள்ள கக்கா, குவாரண்டைன், மீச ஆகிய கதைகள் நுட்பங்கள் வழியாக எந்தப் பெறுமானத்தையும் பெறவில்லை. ஆனால் கதையுலகின் விஸ்தீரணத்தை செழுமை குறையாமல் முன்வைக்கும் புனைவாற்றல் ஆச்சரியம் தருகிறது.

எழுத்தாளர் உமா மகேஸ்வரி பெண் புனைகதையாளர்களில் முதன்மையானவர். ஆழ்ந்த உணர்ச்சிகரம் கொண்ட படைப்புக்களை தமிழுக்கு அளித்தவர். அவரது “யாரும் யாருடனும் இல்லை” என்ற மெய்யியல் தன்மையிலான அந்தக் கூற்றே, தமயந்தியின் கதையுலகில் செல்வாக்குச் செலுத்துகிறது. தன் ஸ்வாதீனத்தின்மீது நிர்ப்பந்தத்தை விளைவிக்கும் புறக்காரணிகள் மீது கசப்புணர்வோ அவற்றுக்கு எதிராக வளர்த்தெடுத்துக்கொண்ட வன்மமோ உமா மகேஸ்வரியின் படைப்புகளில் வெளிப்படுவதில்லை என்று மதிப்பிடுகிறார் கவிஞர் மோகனரங்கன். தமயந்தியின் படைப்புக்களிலும் அதுவே நிகழ்கின்றது. ஆனால் கசப்பான புறவுலகத்தை பதிவு செய்கிறார். இந்தத் தொகுப்பிலும் அதற்கான சாட்சிகள் உண்டு .

“சிருஸ்டி நியதியில் எனக்கு நான் யார் என்று தெரியாது என்பதனால் என் உருவம் எனக்குப் புலப்பட, என் உலகம் எதுவென்று கண்டுபிடிக்க எழுத்தை நாடுகிறேன்.” என்றார் நகுலன். ஆனால் தமயந்தியோ ஏனைய பெண் புனைகதையாளர்களோ தமது உலகை ஏற்கனவே கண்டடைந்தவர்கள். ஆனால் அந்த உலகில் சிறு ஒளியை ஏற்றவே அவர்கள் எழுத்தை நாடுகிறார்கள். இந்தத் தொகுப்பிலுள்ள பாட்டுக் கச்சேரி என்ற கதையில் அப்படியொரு ஒளி ஏற்றப்படுவதை வாசகர்கள் தமது அனுபவத்தில் உணருவார்கள். அன்றாட உண்மையின் பிரக்ஞைக்கு அப்பால் ஓருலகில் எழுத்து உருவாக்கும் வாழ்வின் அடர்த்தியே கலையாகும். அதன் அர்த்தங்கள் வார்த்தைகளால் ஆனவை அல்ல. உணர்ச்சியாலும், பரஸ்பர ஒத்திசைவாலும் அந்தக் கலை வாசகரின் மனத்தை வென்றுவிடுகிறது.

அந்திவானின் ஆயிரம் வெள்ளி என்கிற இத்தொகுப்பிலுள்ள சில கதைகள் தன்னளவில் நிறைவு கொள்ளாதுள்ளன. ஒரு கொடி ஒளியின் திசைநோக்கி தன்னுடைய வளருமுடலை படர்த்துவது போல கதைகளை அதனது சுபாவத்தில் வளர விடுவதும் சிறந்த எழுத்துச் செயலே. இன்னொரு பிரதானமான குறைபாடாகத் தோன்றுவது கதைகளுக்கு நடுவே வருகிற மேலோட்டத்தன்மையான துணுக்குகள் போன்ற உரையாடல்கள்.

இற்றைக்கு தமயந்தி ஒரு தலைமுறையைக் கண்ட எழுத்தாளர். அவருடைய தொடக்ககால கதைகளிலிருந்த கச்சிதத்தன்மை இன்றுள்ள கதைகளில் சிதறுண்டு போயுள்ளன. வாழ்வின் ஒரு கூறை மட்டும் வேறுபடுத்தி இனங்கண்டு, அதில் மட்டுமே கவனம் கொள்ளும் புனைகதை வடிவமான சிறுகதைக்கு ஒருமையே உயிர் மையம் என்பதை அறிந்திராதவரில்லை தமயந்தி. சில வேளைகளில் இந்தச் சிதறுண்டிருக்கும் வடிவத்தை மனவோட்டத்தோடு முயங்கி கண்டடைந்திருக்கவும் கூடும். வாழ்வின் எல்லாச் சரடுகளும் சிதறுண்ட காலத்தில் கதைகள் மட்டும் ஏன் கச்சிதமாக இருக்கவேண்டும் என்று குரல் எழுப்பும் தரப்புத்தான் தமயந்தியினுடையது என்பதையும் அறிந்துமிருக்கிறேன்.

“இருளில் நடக்கிற சனங்கள்; பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்” என்கிறது வேதாகமம். இப்படியானதொரு வெளிச்சமே எழுத்து. இருளில் இருந்து எழுதுவதே ஒளிக்காகவே. ஒரு புனைகதையாளராக மட்டுமின்றி கவிஞராகவும், மொழிபெயர்ப்பாளராகவும், பாடலாசிரியராகவும் எழுத்தில் இயங்கும் தமயந்தி அவர்கள் வெளிச்சத்தின் ஆரங்கள் பூண்ட வார்த்தைகளை வைத்திருக்கிறார். அவர் எழுதுவதற்கு எத்தனையோ நிழலிரவுகளும், வதைகளும் உள்ளன. முழுவீச்சோடு படைப்பாளி என்ற செயற்பாட்டில் அவர் இடையறாது தொடரவேண்டும். இரண்டாயிரங்களில் எழுந்த பெண்ணியக் கவிதை அலையில் முக்கிய கவிஞர் ஒருவரோடு உரையாடிக் கொண்டிருந்தேன். அப்போது தான் எழுத வந்தமைக்கு முக்கிய உந்துதலையும் துணிச்சலையும் வழங்கியது தமயந்தியின் எழுத்துக்களே என்று என்னிடம் பகிர்ந்து கொண்டார்.

எழுத்தாளர் தமயந்திக்குப் பிறகு எழுதவந்த பெண் படைப்பாளிகள் பலருக்கும் ஏதோவொரு வகையில் உந்துதல் அளித்தவராக கூறமுடியும். இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறிய “ஒரு பறவைக்கூட்டின் வெறுமை” என்கிற சித்திரம் வெறும் அழகியல் உணர்ச்சிக்காக கூறப்பட்டதல்ல. அதுவே தமயந்தி கதைகளின் உருவகமும்.  இனிவரும் காலங்களில் கசப்பழிந்த திசைகளில் அவர் கதையுலகம் புகும். அவர் பாதங்களில் இனிமையின் கடல் படரும்.

அகரமுதல்வன்

The post மொழியின் மற்றொரு தனிமை first appeared on அகரமுதல்வன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 29, 2024 22:39

September 13, 2024

மதுரையில்

மதுரையில் நடைபெறும் புத்தக கண்காட்சியில் இன்றும் நாளையும் இருப்பேன். மதுரை எனக்கு எப்போதும் நெருக்கமான நிலம். சகோதரர்கள் நிரம்பிய ஊர். எங்கே, யாருடன் சாப்பிடுவது என்று முடிவெடுப்பதே சிரமமாய் இருக்கும். உபசரிப்புக்கு குறைவைக்காத விருந்தோம்பல் மாண்புடையவர்கள்.

இம்முறை திருவாதவூர் செல்ல வேண்டும்.. மணிவாசகர் சந்நிதியில் அமர்ந்திருந்து “யானே பொய், என் நெஞ்சும் பொய்” என்று பாடவேண்டும் போல் உள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்ல வேண்டும். ஆதீரன் பிறப்பதற்கு முன்னர் மனைவியோடு சென்றது. அம்மையே அப்பா என்று பாடிவிட்டு எழுந்து வந்தால் போதும்.

ஒரு ஈழப்படைப்பாளியாக மதுரைக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன். ஈழ இனப்படுகொலைக்கு பின்பாக தமிழ்நாட்டின் அறிவுச்சூழலில் ஈழ இலக்கியம் குறித்து தீவிரமான உரையாடலை தோற்றுவித்தது மதுரையில் இயங்கிய கூழாங்கற்கள் இலக்கிய அமைப்புத்தான். கவிஞர் கடங்கநேரியான் முன்னெடுப்பில் அணியம் ஆனவர்கள் அனைவரும் ஈழத்தோடும் ஈழ இலக்கியங்களோடும் தார்மீகமான உணர்வோடு கலந்தவர்கள். எப்போதும் அவர்கள் ஒவ்வொருவரையும் நினைத்துக்கொள்வேன்.

மதுரையே வருகிறேன்!

The post மதுரையில் first appeared on அகரமுதல்வன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 13, 2024 11:30

September 12, 2024

துகளறாபோதம் – நரேன்

சமீபமாக நாம் காணும் நுண்கலை வடிவங்கள் அத்தனையிலும் பிரதானமாக வெளிப்படுவது போர் குறித்த சித்திரங்களே. நவீன ஓவியக் கண்காட்சிகளிலும் உலகத் திரைப்பட விழாக்களிலும் முதன்மையாகக் காட்சிப்படுத்தப்படுவது போரின் அழிவு குறித்த கதைகளும், ஒடுக்கப்படுபவர்களின் வாழ்வும், போர்களின் கோரங்களும் அவலங்களுமே. கடந்த திரைப்பட விழாவிற்குச் சென்றிருக்கையில், ஒரு நண்பர் சலித்துப் போய் கேட்டார். ‘ஏன் எல்லா கலைப் படங்களும் பாலஸ்தீனத்திற்கும், உக்ரைனிற்கும், ஒடுக்கப்படும் பெண்களின் சார்பாகவுமே பேசுகிறது. ஏன் எப்போதும் வலது சாரிகளுக்கும் பெரும்பான்மையினருக்கும் எதிராகவே அத்தனை கலைப் படைப்புகளும் நிற்கிறது.’ அவர் சலிப்பிற்கான காரணத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது.

 

ஒரு உலகத் திரைப்பட விழாவில் நூற்றியெண்பது திரைப்படங்கள் திரையிடப்படுகிறதென்றால் அதில் குறைந்தது நூற்று இருபது படங்கள் உள்நாட்டுப் போர்களையும் உலகப் போர்களையும் நினைவுபடுத்திக் கொண்டே இருப்பவைதான். ஆனால், அது அப்படித்தானே இருக்கமுடியும். கலை மனிதர்களுக்குத் திரும்பத் திரும்ப நினைவூட்ட வேண்டியவை அல்லவா இவை? மனிதர்கள் வரலாற்றிடமிருந்து பாடம் கற்பதே இல்லை என்பதை ஒவ்வொருநாளும் செய்தித்தாளை விரிக்கையில் உணர்ந்துகொண்டுதானே இருக்கிறோம். ஒரு உயிரினமாக, செய்யும் தவறுகளைத் திரும்பத் திரும்பச் செய்யும் வழக்கம் கொண்டவர்கள் நாம்.

 

ஒரு நிலத்தில் ஒடுக்கப்படும், அடிமைப்படுத்தப்படும், போரின் பேரழிவிற்கு உள்ளாகும் ஒரு இனம் வேறொரு நிலத்தில் அதே அவலத்தை மற்றொரு இனத்தின் மீது செலுத்தும் விந்தை மனித இனம் தவிர்த்த மற்ற உயிரிகளிடம் உண்டா எனத் தெரியவில்லை. அதனால் ஒரு அறிவுச்சூழலில், கலை பண்பாட்டு வெளியில் இவை திரும்பத் திரும்ப நினைவு படுத்த வேண்டியிருக்கிறது. ஒரு பொது வாசகன் சலிப்படையக் கூடுமெனினும் அது மீண்டும் மீண்டும் இங்கு முன் நிறுத்தப்பட வேண்டும்.

 

உதாரணமாக, தொடர்ச்சியாக உக்ரைன் போர் குறித்த படங்கள் பார்த்து மீண்ட பொழுது என் மனதில் இறுதியாக வந்து நிற்பது ஒரு படிமம் மட்டும்தான். கைவிடப்பட்ட ஒரு பெரிய இராணுவ டாங்கர் லாரியில் தேங்கியிருக்கும் மழை நீரை அள்ளிக்கொண்டு போகும் ஒரு சிறுவன். கந்தக நெடியென அக்காட்சி நாசியில் இன்றும் நிற்கிறது. நூற்றுக்கணக்கான காட்சிகளைப் பார்த்திருந்தாலும் இப்படி ஏதோவொரு படிமம் மனதில் தங்கிவிடும். அந்தப் படிமம் இந்த ஒட்டுமொத்த அநீதியை நம் ஆழ்மனதில் மீண்டும் மீண்டும் நினைவுறுத்திக்கொண்டிருக்கும், நெருஞ்சி முள்ளென நிற்கும். எந்த ஊர் என்ன பெயர் என எதுவும் தேவையில்லை. அரசியல் சரி தவறுகளுக்கு அப்பாற்பட்டு மனித இனத்தின் உயிரும் வாழ்வும் சேதமுறுவதே இங்கு முதன்மையானது.

 

***

 

இந்தத் திரமேற்றப்பட்ட, திரும்பத் திரும்ப ஒன்றையே முன் வைக்கும் போர் இலக்கியங்களின் விளைவுகளில் முக்கியமானவை இரண்டு. ஒன்று  போர் குற்றவாளிகளைக் குற்ற உணர்வு கொள்ளச் செய்வது. அத்தனை கலை வெளிப்பாடுகளின் மூலமாகப் போரின் அழிவுகளைப் பேசிக்கொண்டே இருப்பது தலைமுறைகளைக் கடந்தும் குற்ற உணர்வை நிலை நிறுத்துகிறது. இன்றும் நாஜிக்கள் உண்டாக்கிய அழிவு குறித்த நாவல்களும் திரைப்படங்களும் ஆவணப் படங்களும் தொடர்ந்து வெளி வந்துகொண்டே இருக்கின்றன. விளைவாக, ஜெர்மானியர்களும் தங்கள் முந்தைய தலைமுறையினர் நிகழ்த்திய கொடூரங்களை மறைக்காமல் இன்று மன்னிப்பு கோருகின்றனர். இனி வரும் தலைமுறையினரும் அக்குற்ற உணர்வுகளை தங்கள் தோள்களில் சுமக்க வேண்டும். அவர்களின் அன்றாடம் கிட்டதட்ட தினமும் காலையில் ‘ஆமாம் மன்னியுங்கள்’ என்ற ஒப்புதலோடுதான் துவங்குகிறது. பல்லாயிரக்கணக்கான கலை இலக்கியப் படைப்புகள் அவர்களைக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கும் இடம் அது.

 

இரண்டாவது, பிம்பங்களை உடைத்தல். மீண்டும் மீண்டும் கூறப்படும் கதைகளின் மூலமாக போரின் ஆகிருதிகளை அழிப்பது. அது ஒரு மாபெரும் போர் கதாநாயகனாக இருக்கலாம், உலகைக் கட்டியாண்டு கோலோச்சிய நாடாக இருக்கலாம் அல்லது வீரம் என்ற சிறப்பேற்றப்பட்ட உணர்வாக இருக்கலாம் அல்லது மக்களை காக்கத் தவறிய தெய்வங்களாகவும் இருக்கலாம். இந்தப் பிம்பங்களை உடைப்பதை முதன்மையாக நிறுவுகின்றன கூறியது கூறும் கலைப் படைப்புகள். சர்ச்சில் என்ற பிம்பம் இன்று பலவாறு உடைக்கப்படுகின்றன. நவீன படைப்புகளும் திரைப்படங்களும் அவர் ஆளுமையை இன்று கேள்வி கேட்கின்றன. இன்று வேறு எந்த நாட்டை விடவும் அதிகம் கிண்டலுக்கும் கேளிக்கும் உள்ளாக்கப்படுவது பிரிட்டன் தான்.

 

இப்படி போர் குற்றவாளிகளின் மீது குற்ற உணர்வைத் திணித்து நிறுத்தி வைப்பதிலும் வீரம் என்றால் என்ன தெய்வம் என்பது யாது என்ற கேள்வி கேட்பதிலும் அகரமுதல்வனின் ‘போதமும் காணாத போதம்’ முன் நிற்கிறது. ஏனென்றால் அவர்கள் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள். அவர்களுக்கு ஒரு கடப்பாடு உண்டு. இக்கதைகள் அத்தெய்வங்களுக்கு அதை ஞாபகமூட்டிக்க்கொடிருக்கின்றன. இந்தத் தொகுப்பிலுள்ள கதைகளை வாரம் ஒன்றாக ஒரு தொடரைப் போல எழுதி வெளியிட்டார் அகரமுதல்வன். இந்தக் கதைகள் அத்தனையையும் இப்போது ஒன்றாகப் படிக்கும்போது அகரமுதல்வனின் மனம் சென்ற திசையையும் உணர முடிகிறது. அவரை ஆட்கொண்ட உணர்வுகள் பயணப்படுவதைக் காண முடிகிறது.

 

இத்தொகுப்பிலுள்ள முதல் சில கதைகள் மிக உக்கிரமான வெளிப்பாடு கொண்டவையாக இருக்கின்றன. வீரர்கள் புதைகுழியிலிருந்து மீண்டெழுந்து மண் மீது உலவுகிறார்கள். தெய்வங்கள் பீடத்திலிருந்து பிளக்கப்பட்டு மண்ணுக்குள் புதைக்கப்படுகிறார்கள். இரண்டாவதாக தனி மனித உறவுகள் பிளவுபடும் வகையிலான கதைகள். அடுத்து சற்றே கூர்மை தீட்டி காமம் அலைந்துருகும் கதைகள். ‘இத்தனை போருக்கு மத்தியிலும் குழந்தைகள் பிறக்கத்தானே செய்கின்றன’ என்ற ஒரு வரியின் மூலம் வாழ்வின் மீதும் உடலின் மீதும் மனிதர்களால் கைவிட முடியாத பற்றுதான் இத்தனை கொடூரங்களின் மத்தியிலும் அவர்களைப் பிழைத்திருக்கச் செய்கிறது என்று நிறுவுகிறது.

 

இக்கதைகளின் தீவிரமான கணங்கள் எல்லாம் கொடுங்கனவுகளாகவே வெளிப்பட்டிருக்கின்றன. போரில் ஏற்படும் உயிர் இழப்புகள், பொருள் உடைமை சேதங்கள் எல்லாம் மீறி மனிதனின் அகம் சேதமடைவதைப் பற்றி அதிகம் பேசுவதில்லை என்பதே உளவியலாளர்களின் கருத்து. போரில் உயிர் காத்து மீண்டு வருபவர்களின் வாழ்க்கை கொடும் பேய்களின் ஊடே வாழ்வதைப் போலத்தான்.

 

இக்கதைகளில் வரும் கொடுங்கனவுகள் இரண்டு விதங்களில் முக்கியமானவை. ஒன்று கனவுதான் கடவுளர்கள் மனிதனின் அகத்திற்குள் வந்து பேசும் பாதை. ஒரு போர்ட்டல் போல. ஆதி மனிதனின் அகத்துக்குள் கற்பனையை முதன்முதலில் விதைத்தது கனவுதான். கடவுளை மனிதன் படைத்ததும் கனவின் மூலமாகத்தான். போரில் உயிர் பிழைத்திருக்கும் இவர்களின் கனவுகளில் தெய்வங்கள் எழுந்து வருகின்றன. மன்னிப்பு கோருகின்றன. இதற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென ஒதுங்கி நின்று மன்றாடுகின்றன. ஒருவகையில் உக்கிரமாகத் திரியும் தெய்வத்தை மனிதன் இக்கொடுங்கனவுகளின் மூலமாகப் புரிந்துகொள்கிறான். தெய்வங்களின் எல்லைகளை அறிந்துகொள்கிறான்.

 

இரண்டாவதாக இக்கனவுகளின் மூலமாகத்தான் சேதமுற்ற அபோத மனம் வெளிப்படுகிறது.  சூலம் போன்ற கைகளுடைய குழந்தையை ஒருவன் கனவு காண்கிறான். இறந்து போன கணவன் கனவில் வந்து கொஞ்சச் சொல்லிக் கேட்கிறான். மரணம் வாசலில் செருப்பவிழ்த்துவிட்டு உள்ளே வந்து கொஞ்சிச் செல்கிறது. வலிகள் தன் முனகல்களை வெளியே விட்டு கனவில் புகுந்து அரவணைத்துக் கொள்கின்றன. கனவுகள் அவர்கள் வாழ் நிலத்தின் உருவகங்களும்தான். ஒரு இரவு அபோத மனத்தை மரணிக்கச் செய்கிறது மறு இரவில் அமுதூட்டி இனிக்கச் செய்கிறது.

 

இத்தொகுப்பில் இருக்கும் கதைகளில் முக்கியமானதாக நான் கருதுவது – நளன்/தாயம் என்ற வீரனின் கதை. வீரம் என்பது இங்கே நகை முரணாகும் கதை இது. வீரம் என்ற போதத்தை அழிக்கும் கதை இது. தன்னளவில் தாயம் ஒரு வீரன். இயக்கத்தினர் இவனைக் கட்டாயமாகப் பயிற்சிக்கு அழைத்துச் சென்றால் தப்பி விடுவான். அத்தனை துப்பாக்கிகளையும் மீறி போர் வீரர்களிடமும் போக்கு காட்டும் சிறந்த வீரன் இவன். பாதாளம் போன்ற வயிறு கொண்டவன். எவ்வளவு உணவும் அவன் வயிற்றுக்குள் போய்விடும். குழிதோண்டி பாதாளத்தில் நாட்கணக்கில் மூடி வைத்தாலும் எந்தச் சலனமும் இன்றி கிடப்பவன். பாதாளத்தை தன் மனதிலேயே கொண்டிருப்பவன். புராணங்களில் வரும் அசுரர்களுக்கு இணையானவன். தங்கை மீது மிகுந்த பாசம் கொண்டவன். போருக்கு எதிரான மனநிலை கொண்டவன். வாழ வேண்டும் என்ற விழைவு கொண்டவன். ஆனால் இப்படியான ஒரு போர் சூழ்நிலையில் சும்மா உயிர் வாழ்வதை விடவும் போரிட்டுச் சாவதே மேல் என்ற எண்ணம் கொண்டு போரில் ஈடுபட்டு உயிர் துறக்கிறான். தன் கடைசி கடிதத்தில் அவன் மன்றாடி இறைஞ்சுவது, என்னை எவ்விதத்திலும் வீரனாக அழைக்காதே என்பதுதான். வீரம் என்பதின் அர்த்தத்தை அவன் அக்கடிதத்தின் மூலம் மாற்றியமைக்க முயல்கிறான்.

 

இதற்கிணையான மற்றொரு கதையில் வீரர்கள் இயக்கும் முதல் தோட்டா பெரும்பாலும் தற்கொலை செய்துகொள்வதாகத்தான் அமைகிறது. போர் முனையைத் தாள முடியாமல் தற்கொலை செய்துகொள்கிறார்கள். ஆனால் போர் முனைக்கு வராமலும் இருக்க முடியாது. உறவுகள் கணக்கின்றி பூமி துறந்துவிட்டன. நிலமும் அதிகாரத்தின் இழுப்பிற்குத் தலை கொடுத்து காலின் கீழே நழுவிப்போகிறது.  மற்றொரு முனையில் சிங்கள இராணுவத்தினன் காசுக்காகப் போரில் நிற்கிறான். உயிரை காசுக்கு இணை வைத்து துறப்பதும் தற்கொலையே. தலை வெடித்து மூளை தரையில் ஒழுகுவதை நிலமூர்ந்து வரும் பூ என்று வர்ணிக்கிறார் அகரமுதல்வன். தரையில் பூ ஊர்ந்திருக்கிறதா என்பதைப் பொருத்து இறந்தவனின் வீரத்தை எடை போடுகிறான் ஒருவன். வீரம் யார் பக்கம் என்ற அபத்தக் கேள்வியாக உருக்கொள்கிறது இக்கதை.

 

இக்கதைகள் அத்தனையும் தீவிரமான குற்ற உணர்ச்சியை  வாசக மனங்களில் ஏற்றி விடுகிறது. நாம் எவ்வகையிலும், எந்நிலையிலும் இப்பேரழிவை, இக்கொடுங்குற்றத்தை மறந்துவிடமுடியாதபடி குற்ற உணர்ச்சியை நம் தலைகளில் நிறுத்திவிடுகிறது. இரண்டாவதாக, இவ்வழிவைத் தடுத்திருக்கக் கூடியவர்கள் யார்? அதி வீரமா, தெய்வமா, அரசா, தனி மனிதனா? இவர்கள் யாராலும் அது முடியவில்லை எனில் அந்த பிம்பங்களெல்லாம் உண்மைதானா என்ற கேள்வியை முன் வைக்கிறது.

 

 

****

 

இக்கதைகள் எந்த வடிவத்திலானவை என்பதைப் புரிந்துகொள்வதும் அவசியம். கவித்துவமான மொழி உண்டு. அசாத்தியமான படிமங்களை உருவாக்கும் சொற்றொடர்கள் உண்டு. கவிதைகள் அல்ல, இவை நிச்சயம் சிறுகதைகளும் அல்ல. சிறுகதைகளுக்கான தனித்துவமும் கூர்மையும் அமையாத கதைகள் இத்தொகுப்பில் உண்டு. சில கதைகளில் வரும் மாய எதார்த்த தருணங்கள் பொருந்தாத இடங்களும் உண்டு. அவை நீள் கதைகளில் நாவல் வடிவில் இதைவிடச் சிறப்பான அர்த்தங்களை உருவாக்கும் சாத்தியங்கள் உண்டு என்று தோன்றுகிறது. ஆனால், இவற்றை ஆசிரியரே துங்கதை என்று அழைக்கிறார். இக்கதைகள் ‘Ode’ என்ற வடிவத்தைச் சாரும் என்பது கிட்டத்தட்டச் சரிதான். ‘ode’ என்ற வகைப் பாடல்கள் அல்லது உரைநடை குறிப்பிட்ட ஒரு உணர்வை மட்டும் முன் வைத்து எழுதப்படுவது. தொடர்ந்து அந்த உணர்வை மீட்டுக்கொண்டே இருப்பது.

 

ஒருமுறை நண்பர்களுடன் ஈரோடு கடம்பூர் மலைப்பகுதிக்குச் சென்றிருந்தபோது, நண்பர் ஒருவரின் நிலத்தில் ஒரு புலிக்குத்திக் கல்லைக் கண்டோம். அந்நிலத்தையோ மக்களையோ காக்க ஒரு வீரன் புலியுடன் சண்டையிட்டு வீர மரணமடைந்ததைச் சுட்டிக் காட்டும் சித்திரம் அதில் இருந்தது. முதல் தளத்தில் அவர் புலியுடன் போர் இடுவதும், இரண்டாவது தளத்தில் வீரனைப் பூத கணங்கள் கைலாயத்திற்குத் தூக்கிச் செல்வதும், மூன்றாவது தளத்தில் அவன் கைலாயத்தில் ஈசனடி அடைந்ததையும் காட்டி நின்றது. அவன் யார்? அவன் எந்நிலத்தைச் சார்ந்தவன்? எந்த மொழி பேசிக்கொண்டிருந்தான்? யாரைக் காத்தான்? இப்படி எதைப் பற்றியும் எந்தக் குறிப்பும் இல்லை. அவனின் வீரத்தை மட்டுமே பறை சாற்றும் சித்திரம் அது. இதைப் பார்த்தபோது ஒரு கேள்வி எழுந்தது. உண்மையில் இங்கே வெற்றி பெற்றது அந்தப் புலிதான். ஆனால் இறந்தவனுக்குத்தான் நினைவுச் சின்னம். இப்படியான சண்டையில் புலி இறந்திருந்தால் அதற்குச் சின்னம் இருக்குமா? அதற்கு விடையாக அடுத்த சில நாட்களிலேயே சில கற்களைக் கண்டோம்.

 

பர்கூர் மலைப் பகுதிகளில் ஒரு சிறிய நினைவுச் சின்னங்களின் வளாகம் என்று சொல்லத்தக்க வகையில் பத்திற்கும் மேற்பட்ட நடுகற்களைக் கண்டோம். அக்கற்கள் சிலவற்றில் புலிக்கென சிற்பம் இருந்தது. வீர மரணம் அடைந்த புலி அது. அது சண்டையிட்டு இறக்கும்போது கருவுற்றிருந்திருக்கலாம். அதன் அருகே ஒரு புலிக்குட்டியின் சிற்பமும் இருந்தது. இப்படி தமிழகம் முழுவதும், இந்தியா முழுவதும், ஏன் உலகம் முழுதும் கண்டெடுக்கப்படும் கற்கள் அத்தனையும் குறித்து நிற்பது ஒரேயொரு உணர்வைத்தான். வீரம் என்ற ஒரு உணர்வு மட்டும்தான். வேறெந்த தகவலும் அக்கற்கள் கொடுப்பதில்லை. அது அவசியமும் இல்லை.

 

அவ்வகையிலே அகரமுதல்வனின் போதமும் காணாத போதம் – துங்கதை  தொகுப்பை வாசித்து முடித்ததும், கதாபாத்திரங்களின் பெயர்கள் நினைவில் இல்லாமல் போகலாம். கதை தருணங்களும் கூட தனித்து நிற்காமல் இருக்கலாம். ஆனால் அடுத்தடுத்த பக்கங்களில் தொடர்ந்து எழும் ஓலம் வாசகனிடத்தில் ஒரே ஒரு சுவையை மட்டும் இட்டுச் செல்லும். அந்தச் சுவையை மட்டும் கொடுப்பதுதான் இத்துங்கதைகளின் வேலை. அப்படி இந்த நூல் வாசிப்பின் இறுதியில் நாவில் ஒரு துளி குருதிச்சுவையை அளிப்பதில்தான் வெற்றியடைந்திருக்கிறது.

 

பிரசுரம் – கணையாழி இதழ்

 

The post துகளறாபோதம் – நரேன் first appeared on அகரமுதல்வன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 12, 2024 11:30

வாழை – வல்லிருட்டின் பங்குச் சோறு

னிதன் எப்படிப்பட்டவன் என்பதை நீங்கள் அவனுக்கு காட்டினால், அவன் மேம்படுவான் என்றார் எழுத்தாளர் அன்டன் செக்கோவ். இந்த நேர்மறையான சிந்தனை படைப்பாளிக்கு மட்டுமே வரக்கூடியது. மனித குலத்தை சீர்படுத்தும் வலிமை உலகளாவிய நீதி அமைப்புக்களை விடவும் கலைப்படைப்புக்களுக்கு அதிகம் இருப்பதாக நம்புகிறவன் நான்.

வேடிக்கையாகச் சொன்னால், விக்டர் பிராங்கிளின் எழுதிய “Man’s Search For Meaning” – வாழ்வின் அர்த்தம் மனிதனின் தேடல் புத்தகத்தை வாசிக்கும் வாய்ப்பு ஹிட்லருக்கு கிடைத்திருந்தால் தான் நிகழ்த்திய மானுடப்படுகொலையை எண்ணி வெட்கித்துப் போயிருக்கவும்  ஒட்டுமொத்த மானுடத்திரளின் முன்நின்று தன்னுடைய இறுதிக்கணங்களின் மன்னிப்பை கேட்டிருக்கவும் கூடுமென நம்புகிறேன். ஏனெனில் அந்தப்படைப்பின் ஆழமும் கொதிப்பும் அப்படியானது.

பாதிக்கப்பட்டவர் தன்னுடைய அனுபவத்தை சட்ட அமைப்புக்களின் முன் வாக்குமூலம் அளிப்பது போலில்லை, பாதிக்கப்பட்ட தரப்பிலுள்ள படைப்பாளியின் கலைப்படைப்பு. அது எல்லாச்சுவர்களையும் தகர்த்தெறிந்து எல்லோருக்குமான காற்றாக மானுட வெளியில் கலந்து நிற்கிறது. தனக்கும் தனது தரப்பினருக்கும் நிகழ்ந்த அவல அனுபவத்தை ஒட்டுமொத்த மானுடத்திரளின் அனுபவமாக மாற்றுகிறது.

இப்படியான அனுபவமாக மாற்றும் ஆற்றல் கொண்டவர்களே மாபெரும் திரைக் கலைஞர்களாக உலகு முழுதும் கொண்டாடப்படுகிறார்கள். Steven Spielberg, Otto Preminger, Don Siegel, Oliver Stone, Stanley Kubrick என்று நாம் பார்த்துப் பார்த்து வியப்பவர்கள் அனைவரும் தமது யூத துயரவாழ்வை ஒட்டுமொத்த மனித துக்கமாக மாற்றி கலைவழியாக வெற்றி கண்டவர்கள்.

இயக்குனர் மாரி செல்வராஜ் தமிழ்ச் சூழலில் வியத்தகு கலைஞன். வாழை திரைப்படம் தமிழ் ரசிகர்களை உறையச் செய்திருக்கிறது. அவருடைய “பரியேறும் பெருமாள்” கலைப்படைப்பு உருவாக்கிய அதிர்வும், உரையாடலும் மாரி செல்வராஜ் என்கிற படைப்பாளியின் வருகைப் பாடல் மட்டுமே. ஒருவகை அறிவிப்பு பிரகடனம் என்று சொல்லலாம். பாதிக்கப்பட்ட தரப்பின் கதைகளைச் சொல்லும் போது தார்மீகமான கோபமும் ஆற்றாமையும் மேலோங்கி கலையின் ஆதாரத்தையும் அழகையும் குன்றச் செய்துவிடும்  உதாரணங்கள் தமிழில் நிறையவே உண்டு.

ஆனால் மாரி செல்வராஜ் கலையின் அடிப்படையானவற்றை மட்டுமல்ல, உச்சமானவற்றையும் அறிந்திருக்கிறார். வாழை திரைப்படத்தில் மிக முக்கியமானது – நேர்கோட்டுக்கு மாறான கதை கூறல் முறை. சிவனனைந்தனுடைய கதறலுடன் ஆரம்பிக்கிற திரைப்படத்தின் மீது, ஒருவிதமான தீவிரத்தன்மை உருவாகி விடுகிறது. அது கடந்தகாலத்தின் அன்றாட வாழ்க்கைக்குள் சென்றாலும், இந்தச் சிறுவனின் கதறல் யாருக்கானது? யாருக்கு அவலம் நிகழ்ந்ததோ என்ற பதகளிப்பு தோன்றிவிடுகிறது.

கையில் கயிற்றுடன் நின்று அலறுகிற சிறுவன் உயரமான பாதையில் ஓடிச் செல்வது எதற்காக? ஓடும் கால்கள், கலங்கி நிற்கும் கண்கள், யாரையோ தேடி நிற்கும் தீனமான கூக்குரல் இவையாவையும் சுமந்தபடிதான் வாழையின் களத்திற்குள் நம்மால் செல்ல முடிகிறது.

எழுத்தாளர் சுந்தர ராமசாமி ஒரு கட்டுரையில்  “ஆழமான அனுபவங்கள் ஆழமான படைப்புகளுக்கு வழிகோலும் உத்தரவாதமில்லை. ஆனால் படைப்புக்குள் ஆழங்கள் இருக்குமென்றால் அவற்றின் பின் ஆழமான அனுபவங்களும் இருந்தாகவேண்டும். இந்த அனுபவ ஆழம் இல்லையென்றால் கற்பனை பயன் இல்லை. அனுபவ ஆழம் இருக்கும் போது சாராம்சத்தைக் கண்டடைய உபயோகப்படும் கற்பனை, அனுபவ ஆழம் இல்லாத நிலையில் மேலோட்டமான பரப்பில் பரந்து தத்தளிக்கிறது” என்கிறார்.

வாழை திரைப்படம் ஆழமான அனுபவங்களின் வழியாக பன்மடங்கு ஆழமான ஒரு படைப்பாகியிருக்கிறது.

“தன் பின்னணியைச் சார்ந்து இயங்குவது படைப்பாளிக்கு இயற்கையாக இருப்பது போலவே தன் பின்னணியைத் தாண்டும் சவாலை மேற்கொள்வதும் படைப்பாளிக்குரிய இயற்கைகளில் ஒன்றாகவே இருக்கிறது.” என்ற சுந்தர ராமசாமியின் இன்னொரு கூற்றையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

வாழை என்பது இன்றைக்கு ஒரு மனித திரளின் துக்கமாக மாற்றப்பட்டுவிட்டது. வேம்பு அக்காவின் மருதாணி காயாத உள்ளங்கையும், அலறித்துடிக்கும் கனியின் மருதாணி அணிந்த உள்ளங்கையும் மாபெரும் இருளின் முன் அவலத்தின் எஞ்சிய ஞாபகமாக பார்வையாளனிடம் தாக்கம் பெறுகிறது. வல்லிருட்டில் உயிருக்காகப் போராடும் உடல்களை மீட்கத் துணியும் எஞ்சியோர் மீது நீரும், சேறும் கண்ணீரும் அழுகுரலும் பெய்கிறது. கூலிக்காகப் போராடியதால் ராமையாவின் குடிசையில் தீமூட்டிய மிலேச்சர்களுக்கும், பாரவூர்தியில் பயணப்பட வைத்து உயிரைப் பறித்தவர்களுக்கும் ஏதும் வித்தியாசம் இல்லை. வேம்பு, சேகர், கனி ஆகியோரின் ஆசையாலும், உதவியாலும் அதிஸ்டவசமாக உயிர் தப்பிய சிவனனைந்தன் ஊழியின் சாட்சியாக மிஞ்சி நிற்கிறான்.

பல்வேறு உண்மைத் தருணங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்தத் திரைப்படம் கதை சொல்லியின் அனுபவமாக மட்டும் மிஞ்சவில்லை. அது ஒரு பெருந்திரளின் முன்பாக வைக்கப்பட்ட பங்குச் சோறாக மாற்றப்பட்டிருக்கிறது. வேற்றுமைகளின் வழியாக நிகழ்த்தப்பட்ட அவலங்களை ஒரு கலைப்படைப்பு பதிவு செய்து மானுட மேன்மை என்கிற ஒற்றுமைக்கு திரளை அழைத்துவருவதே வாழை படத்தின் அழகியல். அந்த வகையில் மாரி செல்வராஜ் ஒரு மகத்தான கலைஞன்.

வாழை படத்திலுள்ள படிமங்கள் குறியீடுகள் குறித்து சிவனனைந்தன் கதாபாத்திரம் வழியாகவே நிறையவற்றைக் குறிப்பிட முடியும். பசியில் தவித்த அவன், வாழை மரத்தில் ஒரு கனியைத் தேடுகிற சிறு அவகாசம் மனம் பதபதைக்கச் செய்கிறது. அண்ணாந்து பார்ப்பது என்கிற ஒரு சொல்லின் பின்னே உள்ள ஆற்றாமையை அறிய நேர்கிறது. மாடு தொலைந்து போனதும் தெய்வத்தின் முன்னே நின்று, வேண்டுகிற அவனது நமபிக்கை, கனி வந்து தகவலைச் சொன்னதும் முகத்தில் நேர்கிற அச்சம்.

வாழைப்பழத்தை தின்றதால் யார் வீட்டு பழத்தை யார் உண்பது என்று கேட்டு அடிக்கும், ஒரு பாதகன் முன் சிவனனைந்தன் விழுந்து புரள்வதும் ஒரு கட்டத்தில் அவனை வீழ்த்திவிட்டு ஓடுவதும் கோலியாத்தை வீழ்த்திய தாவீதுவை நினைவுக்கு கொண்டு வருகிறது. பசியின் நிமித்தம் அலையும் சிவனனைந்தனின் ஒவ்வொரு காட்சியும் காய் சுமக்கச் செல்வதற்கு ஒப்பானது.

நீங்கள் எப்போதாவது பசியுடன் இருந்திருக்கிறீர்களா? ஒரு வேளை சோற்றுக்கு அல்லற்படுகிற வாழ்க்கை குறித்து உங்களுடைய கருத்து என்ன? என்றெல்லாம் நேரடிக் கேள்விகள் எழுப்பவில்லை. எந்த வகையிலும் எக்கணத்திலும் அதுபோன்றதொரு பிரச்சார நெடியையோ, பரிவையோ கோராத ஒரு அசலான படைப்பு இது. வீடு தோறும் பிணங்கள் கிடக்க பசியின் இருளில் அலைகிற சிவனனைந்தனின் கண்கள் துக்கத்தில் அழவில்லை. அவனுக்குள் இந்தத் துக்கத்தீ பற்றி மூளவேயில்லை.

சேகருக்கு என்ன நடந்தது? அவன் ஏன் இப்படிக் கிடக்கிறான்? என்ற கேள்விகள் மூலம் அவனுக்குள் நிகழ்வது வேறொன்று என்று தெரிகிறது. தெய்வங்கள் வேடிக்கை பார்க்கின்றன. இசக்கி தன்னுடைய குழந்தையை ஏந்தியபடி எதற்காக காத்திருக்கிறாள். அவளது சினம் மங்கிப்போனது? பாதிக்கப்பட்ட தரப்பிலிருந்து எழுகிறவர்கள் அவர்களது தெய்வங்களையும் விசாரணை செய்யத் துணிகிறார்கள். வாழை அதனையும் செய்திருக்கிறது.

உயரத்திலிருந்து படம்பிடிக்கப்பட்ட வாழையின் பசுமை அடர்ந்த அந்த வெளியை ரசிக்க முடியவில்லை. பச்சைப் பசேல் என்ற வெளி என்கிற ஒரு சித்திரம் மனதுக்குள் எழவில்லை. தன்னுடைய பிள்ளையை கட்டாயமாக வேலைக்கு அனுப்பிவிட்டு அடைப்புக்குள் இருக்கும் கோழியையும், குஞ்சுகளையும் திறந்துவிடுகிற தாய் அந்நேரத்தில் யார்? அவளுடைய இன்னல்கள், மனச்சுமைகள் சொல்லிமாளாதவை. இறுதிக் காட்சியில் ஒரு வாய் சோறு சாப்பிடுவதற்கு கூட பிள்ளையை அனுமதிக்காத பாவி ஆகிவிட்டேன் என்று தலைவிரிகோலமாக கதறி அழுகிறவள் சிவனனைந்தனுடைய தாய் அல்ல. நான் ஏற்கனவே கூறிய மானுடத்திரளின் குற்றவுணர்வு. இப்படியான அவலத்தை வேடிக்கை பார்த்த நிகழ்த்திய ஒரு குரூர காலத்தின் அழுகுரல் அது. கண்ணன் வாடே…அம்மா அடிக்க மாட்டங்க என்று சொல்லியும் அவனால் நம்பமுடியாமல் ஓடுகிற காட்சி….இந்த சமூகத்தின் மீதான அவனது அச்சம் அன்றி வேறில்லை.

திரைப்படத்திலுள்ள மிக முக்கியமானதொரு சித்திரம் என் நெஞ்சில் இருந்து அகல மறுக்கிறது. கிராமத்தின் ஒட்டுமொத்தமான அழுகுரல்களுக்குள் மத்தியில் ஒரு சடலத்தின் முன்பாக பெண்ணொருத்தியின் மடியில் அமர்ந்திருக்கும் சிறுவன் ஒருவன் கையில் கனிந்த வாழைப் பழத்தோடு அமர்ந்திருக்கிறான். இத்தனை அழுகுரல்களால், மரணங்களால், கனிந்த ஒரு வாழைக் கனி அது. அந்தச் சிறுவன் ஏந்தி நிற்பது கனியை அல்ல. ஒரு காலத்தின், நினைவின் ஊழியை என்றே சொல்லத்தோன்றிற்று.

சில வருடங்களுக்கு முன்பாக மாரி செல்வராஜ் அவர்கள் வாழை கதையை என்னிடம் சொல்லி முடித்ததும் Cary Joji Fukunaga இயக்கிய Beasts of No Nation என்கிற திரைப்படத்திற்கு சற்றும் குறைவில்லாதவொரு திரைப்படமாக வாழையைக் கூற முடியும் என்றேன். படம் பார்த்ததற்கு பிறகும் அந்த ஒப்பீட்டில் ஒரு மாற்றமும் இல்லை. இனிமேல் வாழையைப் போல Beasts of No Nation என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம்.

 

The post வாழை – வல்லிருட்டின் பங்குச் சோறு first appeared on அகரமுதல்வன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 12, 2024 00:00

வாழை – வல்லிருளின் பங்குச் சோறு

னிதன் எப்படிப்பட்டவன் என்பதை நீங்கள் அவனுக்கு காட்டினால், அவன் மேம்படுவான் என்றார் எழுத்தாளர் அன்டன் செக்கோவ். இந்த நேர்மறையான சிந்தனை படைப்பாளிக்கு மட்டுமே வரக்கூடியது. மனித குலத்தை சீர்படுத்தும் வலிமை உலகளாவிய நீதி அமைப்புக்களை விடவும் கலைப்படைப்புக்களுக்கு அதிகம் இருப்பதாக நம்புகிறவன் நான்.

வேடிக்கையாகச் சொன்னால், விக்டர் பிராங்கிளின் எழுதிய “Man’s Search For Meaning” – வாழ்வின் அர்த்தம் மனிதனின் தேடல் புத்தகத்தை வாசிக்கும் வாய்ப்பு ஹிட்லருக்கு கிடைத்திருந்தால் தான் நிகழ்த்திய மானுடப்படுகொலையை எண்ணி வெட்கித்துப் போயிருக்கவும்  ஒட்டுமொத்த மானுடத்திரளின் முன்நின்று தன்னுடைய இறுதிக்கணங்களின் மன்னிப்பை கேட்டிருக்கவும் கூடுமென நம்புகிறேன். ஏனெனில் அந்தப்படைப்பின் ஆழமும் கொதிப்பும் அப்படியானது.

பாதிக்கப்பட்டவர் தன்னுடைய அனுபவத்தை சட்ட அமைப்புக்களின் முன் வாக்குமூலம் அளிப்பது போலில்லை, பாதிக்கப்பட்ட தரப்பிலுள்ள படைப்பாளியின் கலைப்படைப்பு. அது எல்லாச்சுவர்களையும் தகர்த்தெறிந்து எல்லோருக்குமான காற்றாக மானுட வெளியில் கலந்து நிற்கிறது. தனக்கும் தனது தரப்பினருக்கும் நிகழ்ந்த அவல அனுபவத்தை ஒட்டுமொத்த மானுடத்திரளின் அனுபவமாக மாற்றுகிறது.

இப்படியான அனுபவமாக மாற்றும் ஆற்றல் கொண்டவர்களே மாபெரும் திரைக் கலைஞர்களாக உலகு முழுதும் கொண்டாடப்படுகிறார்கள். Steven Spielberg, Otto Preminger, Don Siegel, Oliver Stone, Stanley Kubrick என்று நாம் பார்த்துப் பார்த்து வியப்பவர்கள் அனைவரும் தமது யூத துயரவாழ்வை ஒட்டுமொத்த மனித துக்கமாக மாற்றி கலைவழியாக வெற்றி கண்டவர்கள்.

இயக்குனர் மாரி செல்வராஜ் தமிழ்ச் சூழலில் வியத்தகு கலைஞன். வாழை திரைப்படம் தமிழ் ரசிகர்களை உறையச் செய்திருக்கிறது. அவருடைய “பரியேறும் பெருமாள்” கலைப்படைப்பு உருவாக்கிய அதிர்வும், உரையாடலும் மாரி செல்வராஜ் என்கிற படைப்பாளியின் வருகைப் பாடல் மட்டுமே. ஒருவகை அறிவிப்பு பிரகடனம் என்று சொல்லலாம். பாதிக்கப்பட்ட தரப்பின் கதைகளைச் சொல்லும் போது தார்மீகமான கோபமும் ஆற்றாமையும் மேலோங்கி கலையின் ஆதாரத்தையும் அழகையும் குன்றச் செய்துவிடும்  உதாரணங்கள் தமிழில் நிறையவே உண்டு.

ஆனால் மாரி செல்வராஜ் கலையின் அடிப்படையானவற்றை மட்டுமல்ல, உச்சமானவற்றையும் அறிந்திருக்கிறார். வாழை திரைப்படத்தில் மிக முக்கியமானது – நேர்கோட்டுக்கு மாறான கதை கூறல் முறை. சிவனனைந்தனுடைய கதறலுடன் ஆரம்பிக்கிற திரைப்படத்தின் மீது, ஒருவிதமான தீவிரத்தன்மை உருவாகி விடுகிறது. அது கடந்தகாலத்தின் அன்றாட வாழ்க்கைக்குள் சென்றாலும், இந்தச் சிறுவனின் கதறல் யாருக்கானது? யாருக்கு அவலம் நிகழ்ந்ததோ என்ற பதகளிப்பு தோன்றிவிடுகிறது.

கையில் கயிற்றுடன் நின்று அலறுகிற சிறுவன் உயரமான பாதையில் ஓடிச் செல்வது எதற்காக? ஓடும் கால்கள், கலங்கி நிற்கும் கண்கள், யாரையோ தேடி நிற்கும் தீனமான கூக்குரல் இவையாவையும் சுமந்தபடிதான் வாழையின் களத்திற்குள் நம்மால் செல்ல முடிகிறது.

எழுத்தாளர் சுந்தர ராமசாமி ஒரு கட்டுரையில்  “ஆழமான அனுபவங்கள் ஆழமான படைப்புகளுக்கு வழிகோலும் உத்தரவாதமில்லை. ஆனால் படைப்புக்குள் ஆழங்கள் இருக்குமென்றால் அவற்றின் பின் ஆழமான அனுபவங்களும் இருந்தாகவேண்டும். இந்த அனுபவ ஆழம் இல்லையென்றால் கற்பனை பயன் இல்லை. அனுபவ ஆழம் இருக்கும் போது சாராம்சத்தைக் கண்டடைய உபயோகப்படும் கற்பனை, அனுபவ ஆழம் இல்லாத நிலையில் மேலோட்டமான பரப்பில் பரந்து தத்தளிக்கிறது” என்கிறார்.

வாழை திரைப்படம் ஆழமான அனுபவங்களின் வழியாக பன்மடங்கு ஆழமான ஒரு படைப்பாகியிருக்கிறது.

“தன் பின்னணியைச் சார்ந்து இயங்குவது படைப்பாளிக்கு இயற்கையாக இருப்பது போலவே தன் பின்னணியைத் தாண்டும் சவாலை மேற்கொள்வதும் படைப்பாளிக்குரிய இயற்கைகளில் ஒன்றாகவே இருக்கிறது.” என்ற சுந்தர ராமசாமியின் இன்னொரு கூற்றையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

வாழை என்பது இன்றைக்கு ஒரு மனித திரளின் துக்கமாக மாற்றப்பட்டுவிட்டது. வேம்பு அக்காவின் மருதாணி காயாத உள்ளங்கையும், அலறித்துடிக்கும் கனியின் மருதாணி அணிந்த உள்ளங்கையும் மாபெரும் இருளின் முன் அவலத்தின் எஞ்சிய ஞாபகமாக பார்வையாளனிடம் தாக்கம் பெறுகிறது. வல்லிருட்டில் உயிருக்காகப் போராடும் உடல்களை மீட்கத் துணியும் எஞ்சியோர் மீது நீரும், சேறும் கண்ணீரும் அழுகுரலும் பெய்கிறது. கூலிக்காகப் போராடியதால் ராமையாவின் குடிசையில் தீமூட்டிய மிலேச்சர்களுக்கும், பாரவூர்தியில் பயணப்பட வைத்து உயிரைப் பறித்தவர்களுக்கும் ஏதும் வித்தியாசம் இல்லை. வேம்பு, சேகர், கனி ஆகியோரின் ஆசையாலும், உதவியாலும் அதிஸ்டவசமாக உயிர் தப்பிய சிவனனைந்தன் ஊழியின் சாட்சியாக மிஞ்சி நிற்கிறான்.

பல்வேறு உண்மைத் தருணங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்தத் திரைப்படம் கதை சொல்லியின் அனுபவமாக மட்டும் மிஞ்சவில்லை. அது ஒரு பெருந்திரளின் முன்பாக வைக்கப்பட்ட பங்குச் சோறாக மாற்றப்பட்டிருக்கிறது. வேற்றுமைகளின் வழியாக நிகழ்த்தப்பட்ட அவலங்களை ஒரு கலைப்படைப்பு பதிவு செய்து மானுட மேன்மை என்கிற ஒற்றுமைக்கு திரளை அழைத்துவருவதே வாழை படத்தின் அழகியல். அந்த வகையில் மாரி செல்வராஜ் ஒரு மகத்தான கலைஞன்.

வாழை படத்திலுள்ள படிமங்கள் குறியீடுகள் குறித்து சிவனனைந்தன் கதாபாத்திரம் வழியாகவே நிறையவற்றைக் குறிப்பிட முடியும். பசியில் தவித்த அவன், வாழை மரத்தில் ஒரு கனியைத் தேடுகிற சிறு அவகாசம் மனம் பதபதைக்கச் செய்கிறது. அண்ணாந்து பார்ப்பது என்கிற ஒரு சொல்லின் பின்னே உள்ள ஆற்றாமையை அறிய நேர்கிறது. மாடு தொலைந்து போனதும் தெய்வத்தின் முன்னே நின்று, வேண்டுகிற அவனது நமபிக்கை, கனி வந்து தகவலைச் சொன்னதும் முகத்தில் நேர்கிற அச்சம்.

வாழைப்பழத்தை தின்றதால் யார் வீட்டு பழத்தை யார் உண்பது என்று கேட்டு அடிக்கும், ஒரு பாதகன் முன் சிவனனைந்தன் விழுந்து புரள்வதும் ஒரு கட்டத்தில் அவனை வீழ்த்திவிட்டு ஓடுவதும் கோலியாத்தை வீழ்த்திய தாவீதுவை நினைவுக்கு கொண்டு வருகிறது. பசியின் நிமித்தம் அலையும் சிவனனைந்தனின் ஒவ்வொரு காட்சியும் காய் சுமக்கச் செல்வதற்கு ஒப்பானது.

நீங்கள் எப்போதாவது பசியுடன் இருந்திருக்கிறீர்களா? ஒரு வேளை சோற்றுக்கு அல்லற்படுகிற வாழ்க்கை குறித்து உங்களுடைய கருத்து என்ன? என்றெல்லாம் நேரடிக் கேள்விகள் எழுப்பவில்லை. எந்த வகையிலும் எக்கணத்திலும் அதுபோன்றதொரு பிரச்சார நெடியையோ, பரிவையோ கோராத ஒரு அசலான படைப்பு இது. வீடு தோறும் பிணங்கள் கிடக்க பசியின் இருளில் அலைகிற சிவனனைந்தனின் கண்கள் துக்கத்தில் அழவில்லை. அவனுக்குள் இந்தத் துக்கத்தீ பற்றி மூளவேயில்லை.

சேகருக்கு என்ன நடந்தது? அவன் ஏன் இப்படிக் கிடக்கிறான்? என்ற கேள்விகள் மூலம் அவனுக்குள் நிகழ்வது வேறொன்று என்று தெரிகிறது. தெய்வங்கள் வேடிக்கை பார்க்கின்றன. இசக்கி தன்னுடைய குழந்தையை ஏந்தியபடி எதற்காக காத்திருக்கிறாள். அவளது சினம் மங்கிப்போனது? பாதிக்கப்பட்ட தரப்பிலிருந்து எழுகிறவர்கள் அவர்களது தெய்வங்களையும் விசாரணை செய்யத் துணிகிறார்கள். வாழை அதனையும் செய்திருக்கிறது.

உயரத்திலிருந்து படம்பிடிக்கப்பட்ட வாழையின் பசுமை அடர்ந்த அந்த வெளியை ரசிக்க முடியவில்லை. பச்சைப் பசேல் என்ற வெளி என்கிற ஒரு சித்திரம் மனதுக்குள் எழவில்லை. தன்னுடைய பிள்ளையை கட்டாயமாக வேலைக்கு அனுப்பிவிட்டு அடைப்புக்குள் இருக்கும் கோழியையும், குஞ்சுகளையும் திறந்துவிடுகிற தாய் அந்நேரத்தில் யார்? அவளுடைய இன்னல்கள், மனச்சுமைகள் சொல்லிமாளாதவை. இறுதிக் காட்சியில் ஒரு வாய் சோறு சாப்பிடுவதற்கு கூட பிள்ளையை அனுமதிக்காத பாவி ஆகிவிட்டேன் என்று தலைவிரிகோலமாக கதறி அழுகிறவள் சிவனனைந்தனுடைய தாய் அல்ல. நான் ஏற்கனவே கூறிய மானுடத்திரளின் குற்றவுணர்வு. இப்படியான அவலத்தை வேடிக்கை பார்த்த நிகழ்த்திய ஒரு குரூர காலத்தின் அழுகுரல் அது. கண்ணன் வாடே…அம்மா அடிக்க மாட்டங்க என்று சொல்லியும் அவனால் நம்பமுடியாமல் ஓடுகிற காட்சி….இந்த சமூகத்தின் மீதான அவனது அச்சம் அன்றி வேறில்லை.

திரைப்படத்திலுள்ள மிக முக்கியமானதொரு சித்திரம் என் நெஞ்சில் இருந்து அகல மறுக்கிறது. கிராமத்தின் ஒட்டுமொத்தமான அழுகுரல்களுக்குள் மத்தியில் ஒரு சடலத்தின் முன்பாக பெண்ணொருத்தியின் மடியில் அமர்ந்திருக்கும் சிறுவன் ஒருவன் கையில் கனிந்த வாழைப் பழத்தோடு அமர்ந்திருக்கிறான். இத்தனை அழுகுரல்களால், மரணங்களால், கனிந்த ஒரு வாழைக் கனி அது. அந்தச் சிறுவன் ஏந்தி நிற்பது கனியை அல்ல. ஒரு காலத்தின், நினைவின் ஊழியை என்றே சொல்லத்தோன்றிற்று.

சில வருடங்களுக்கு முன்பாக மாரி செல்வராஜ் அவர்கள் வாழை கதையை என்னிடம் சொல்லி முடித்ததும் Cary Joji Fukunaga இயக்கிய Beasts of No Nation என்கிற திரைப்படத்திற்கு சற்றும் குறைவில்லாதவொரு திரைப்படமாக வாழையைக் கூற முடியும் என்றேன். படம் பார்த்ததற்கு பிறகும் அந்த ஒப்பீட்டில் ஒரு மாற்றமும் இல்லை. இனிமேல் வாழையைப் போல Beasts of No Nation என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம்.

 

The post வாழை – வல்லிருளின் பங்குச் சோறு first appeared on அகரமுதல்வன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 12, 2024 00:00

September 10, 2024

September 9, 2024

September 4, 2024

அகரமுதல்வன்'s Blog

அகரமுதல்வன்
அகரமுதல்வன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow அகரமுதல்வன்'s blog with rss.