அகரமுதல்வன்'s Blog, page 16

May 28, 2024

அறிமுக விழா – அழைப்பு

நூல்வனம் வெளியீடான போதமும் காணாத போதம் – துங்கதை நூலிற்கான அறிமுக விழா ஜூன் மாதம் இரண்டாம் திகதி ஞாயிறு மாலை, சென்னையிலுள்ள கவிக்கோ அரங்கத்தில் நடைபெறுகிறது. மரியாதைக்குரிய எழுத்தாளர் பவா செல்லதுரை அவர்களின் தலைமையில் நிகழவிருக்கும் இவ்விழாவில் திருவளர்களான ராஜமாணிக்கம். வீரா, சக்திவேல், விக்கினேஷ் ஹரிஹரன், பி.எஸ். மித்ரன் ஆகியோர் சிறப்புரை ஆற்றுகின்றனர். நிகழ்ச்சித் தொகுப்பினை நிக்கிதா அவர்கள் வழங்குகிறார். அனைவரும் கலந்து கொள்க!

The post அறிமுக விழா – அழைப்பு first appeared on அகரமுதல்வன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 28, 2024 19:41

May 22, 2024

May 21, 2024

தறி வான்

01

கனவுத் தறியில் இழையும்

இவ்விரவின் சடசடப்பில்

குளிர் கூடி

வான் திறக்கும்

மழை.

02

உறைந்த கோபுரங்களை

வெறித்து நிற்கும்

மாடப்புறாவின்

தனிமை.

03

நான் அரிந்த சூரியனை

பிழிந்து ஊற்றிய கணம்

சாறெனப் பொழிந்தது

அந்தி.

 

 

 

 

The post தறி வான் first appeared on அகரமுதல்வன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 21, 2024 09:50

May 20, 2024

May 19, 2024

தூர எல்லை

01

பட்டாம்பூச்சியை பிடித்தபடி

காட்டில் அலையும்

அந்தியை

நேற்றைக்கு

அழைத்து வந்தது

மழை.

 

02

எவ்வளவு நேர்த்தியானவை

இவ்விரண்டு பாதைகள்.

திசைநீளும் போக்கில்

வீசும் காற்றுக்கு

தூர எல்லை

தெரியும்.

 

03

அற்புதமே!

ஒளிரும் சுடரின் உச்சியில்

கரைவது

நீதானே?

 

 

 

 

 

 

The post தூர எல்லை first appeared on அகரமுதல்வன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 19, 2024 10:13

May 17, 2024

May 16, 2024

சிறிய அசைவே

01

இரவின் கிளையில் வந்தமரும்

சிறிய அசைவே

உன் சிறகுதிர்த்து

எதை நினைப்பாய்

சொல்!

 

02

இந்தப் பாதையில்

பற்பல தடங்கள்

எவர் போனார்

எவர் வந்தார்

என்றுணரா

ஞானம்.

 

The post சிறிய அசைவே first appeared on அகரமுதல்வன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 16, 2024 11:05

May 15, 2024

உங்களுக்காய் எங்ஙனம் பிரார்த்திக்க

01

எங்குமில்லாத பேரிருள் வந்தடையும் பழங்குகை

நின் வாழ்வு

மூர்க்கச் சிறகசைக்கும் வெளவால்கள்

வழிமறந்து உறைந்த வீச்சம்

நின் குருதி

ஓயாது  கொடுஞ்சூறை

பற்றி மூளும் யுகத்தில்

நின் வனம்.

 

வாழ்வே

குருதியே

வனமே

உங்களுக்காய் எங்ஙனம் பிரார்த்திக்க!

 

02

எனது மந்திரக்கோலின் நுனிக்கொம்பால்

பூமியைப் பிடித்திழுப்பேன்

வெட்ட வெளியில் தனித்திருந்த

காட்டுப் பூவரசின் மலர்களை

பிய்த்து போட்டதைப் போல

உண்ணிப் பழங்களை உமிழ்ந்து தின்றதைப் போல

பூமிக்கு பெருஞ்சுகம் அளிப்பேன்.

 

03

அலைபட்டு அணையும்

அதுவரை வெறிக்கும் இவ்வாழ்வு

அழிவது கனவா?

அழிவது ரணமா?

அதுவரை நிலைக்கும் இவ்வாழ்வு.

 

 

 

 

 

 

 

 

The post உங்களுக்காய் எங்ஙனம் பிரார்த்திக்க first appeared on அகரமுதல்வன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 15, 2024 11:27

May 14, 2024

குயிற்பத்து

அ௫ளியவர் : மாணிக்கவாசகர்
நாடு :சோழநாடு காவிரி வடகரை
தலம் : கோயில்

              திருச்சிற்றம்பலம் 

கீதமினிய குயிலே கேட்டியேல்
எங்கள் பெருமான்
பாத மிரண்டும் வினவில் பாதாளம்
ஏழினுக் கப்பால்
சோதி மணிமுடி சொல்லிற் சொல்லிறந்து
நின்ற தொன்மை
ஆதிகுண மொன்று மில்லான் அந்தமி
லான்வரக் கூவாய்.

ஏர்தரும் ஏழுல கேத்த எவ்வுரு
வுந்தன் னுருவாய்
ஆர்கலி சூழ்தென் னிலங்கை அழகமர்
வண்டோ தரிக்குப்
பேரருளின்ப மளித்த பெருந்துறை
மேய பிரானைச்
சீரிய வாயாற் குயிலே தென்பாண்டி
நாடனைக் கூவாய்.

நீல வுருவிற் குயிலே நீள்மணி
மாடம் நிலாவுங்
கோல அழகில் திகழுங் கொடிமங்கை
உள்ளுறை கோயில்
சீலம் பெரிதும் இனிய திருவுத்
தரகோச மங்கை
ஞாலம் விளங்க இருந்த நாயக
னைவரக் கூவாய்.

தேன்பழச் சோலை பயிலுஞ் சிறுகுயி
லேயிது கேள்நீ
வான்பழித் திம்மண் புகுந்து மனிதரை
ஆட்கொண்ட வள்ளல்
ஊன்பழித் துள்ளம் புகுந்தென் உணர்வது
வாய வொருத்தன்
மான்பழித் தாண்டமென்னோக்கி மணாளனை
நீவரக் கூவாய்.

சுந்தரத் தின்பக் குயிலே சூழ்சுடர்
ஞாயிறு போல
அந்தரத் தேநின் றிழிந்திங் கடியவ
ராசை அறுப்பான்
முந்தும் நடுவும் முடிவு மாகிய
மூவ ரறியாச்
சிந்துரச் சேவடி யானைச் சேவக
னைவரக் கூவாய்.

இன்பந் தருவன் குயிலே ஏழுல
கும்முழு தாளி
அன்பன் அமுதளித் தூறும் ஆனந்தன்
வான்வந்த தேவன்
நன்பொன் மணிச்சுவ டொத்த நற்பரி
மேல்வரு வானைக்
கொம்பின் மிழற்றுங் குயிலே கோகழி
நாதனைக் கூவாய்.

உன்னை உகப்பன் குயிலே உன்துணைத்
தோழியும் ஆவன்
பொன்னை அழித்தநன் மேனிப் புகழில்
திகழும் அழகன்
மன்னன் பரிமிசை வந்த வள்ளல்
பெருந்துறை மேய
தென்னவன் சேரவன் சோழன் சீர்ப்புயங்
கன்வரக் கூவாய்.

வாவிங்கே நீகுயிற் பிள்ளாய் மாலொடு
நான்முகன் தேடி
ஓவியவ ருன்னி நிற்ப ஒண்தழல்
விண்பிளந் தோங்கி
மேவிஅன் றண்டங் கடந்து விரிசுட
ராய்நின்ற மெய்யன்
தாவி வரும்பரிப் பாகன் தாழ்சடை
யோன்வரக் கூவாய்.

காருடைப் பொன்திகழ் மேனிக் கடிபொழில்
வாழுங் குயிலே
சீருடைச் செங்கமலத்தில் திகழுரு
வாகிய செல்வன்
பாரிடைப் பாதங்கள் காட்டிப் பாசம்
அறுத்தெனை யாண்ட
ஆருடை அம்பொனின் மேனி அமுதினை
நீவரக் கூவாய்.

கொந்தண வும்பொழிற் சோலைக் கூங்குயி
லேயிது கேள்நீ
அந்தண னாகிவந்திங்கே அழகிய
சேவடி காட்டி
எந்தம ராம்இவ னென்றிங் கென்னையும்
ஆட்கொண்டருளும்
செந்தழல் போல்திரு மேனித் தேவர்
பிரான்வரக் கூவாய்.

               திருச்சிற்றம்பலம் 

The post குயிற்பத்து first appeared on அகரமுதல்வன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 14, 2024 09:05

May 13, 2024

எம். யுவன் கவிதைகள்

         

 

                    யாதுமாகி 

அப்போது

பட்டாம் பூச்சியாயிருந்தேன்.

கணக்கற்று மலர்ந்தவற்றில்

தன் பூ தேடி

சிறகு துடிக்க அலைகிறது

பட்டாம் பூச்சி

பின் ஒரு

பூவானேன்.

ஆள் நிழல் காணா

நதியின் கரையில்

அன்றாடம் மலரும்

ஒரு பூ

கொஞ்ச காலம்

நதியாயுமிருந்தேன்.

தனக்குள் தான் விரையும்

நதியின் விசையில்

அசையும் பூ மேல்

அமர்ந்தது பூச்சி

 

          கடல் பார்க்க வந்தவன் 

காலடி மண்ணை அரிக்கும்

சமுத்திரத்துக்கு தப்பிய

ஒற்றைத் துளி

என் புறங்கையில் அமர்ந்தது:

‘உன் போல்தான் நானும்

கடல் பார்க்க வந்தவன்;

அலைகளில் மாட்டிக் கொண்டேன்.’

பின் காற்றில் உலர்ந்தது

அடுத்த சுற்றி நோக்கி.

 

            ஹம்பி

அழிக்கப்பட்ட பெருநகரின் வீதிகளில்

ஆவிபோல அலைகிறேன்.

ஆந்தையின் கனவில்

புலரும்

இரவில் நிரம்பிய வெளிச்சமென

துலக்கமாய்க் கிடக்கிறது யாவும்.

 

திரும்பும் திக்கெல்லாம்

கல்பூத்த கட்டாந்தரை.

பிடிப்பு இன்றி

வீழும் அறிகுறியின்றி

தன்மேல் நடந்து சென்ற

யுகங்களின் தடயமின்றி

பாறைமேல் அமர்ந்த பாறைகள்.

 

விதானமும் நொறுங்கிய

கடைவீதியில்

காட்சிக்கு நின்றிருந்த தூண்கள்.

 

படிக்கட்டு சிதைந்த கலையரங்கில்

நிசப்தத்தின் பாடலுக்கு

வெறுமை அபிநயிக்கிறது.

 

அரசியர் நீராட அமைந்த

தடாகத்தின் வெற்றுத் தரையில்

புற்குச்சங்களில் பூச்சி தேடி

தவளைக்குஞ்சு தத்திச் செல்கிறது

 

அரைகுறையாய் நிற்கும்

கற்சிலையின் காதருகில்

ஒயிலாய்ப் படிந்திருக்கும் ஓணான்

என்றைக்குரிய ரகசியத்தை உரைக்கிறது?

 

நொறுங்கிய நகரத்தின்

நொறுங்காத உயிரோட்டமாய்

பாறைகள் மற்றும்

சகாப்தங்களுக்கிடையில்

ஊர்ந்து நகர்கிறாள்

துங்கபத்திரை.

 

அதோ, நீராடி

திரும்பி நின்று

உடைமாற்றும் பேரிளம்பெண்

தன்னுணர்வின்றிக் காட்டும்

ஒற்றை முலை வீசும் வசீகரம்

எந்த நூற்றாண்டைச் சேர்ந்தது?

 

 

 

 

 

 

 

 

The post எம். யுவன் கவிதைகள் first appeared on அகரமுதல்வன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 13, 2024 10:11

அகரமுதல்வன்'s Blog

அகரமுதல்வன்
அகரமுதல்வன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow அகரமுதல்வன்'s blog with rss.