நம்பிக்கை
தூரத் தொலைவில் அந்த நடையைக் கண்டேன்
அச்சு அசல் என் நண்பன்.
மறைந்தவன் எப்படி இங்கு வரக்கூடுமெனத் திடுக்கிட்டேன்.
வேறு யாரோ.
அப்படி எண்ணாதிருந்தால் அவனே வந்திருப்பான்.
தனித் தனியே
ஒரு பறவையின் சிறகுகள்
பறவையின்றிப் பறப்பதைக் கண்டேன்
சிறகுகளின்றிப் பின் வந்த பறவை
ஒரு இசையின் குழைவில்
லாவகமாய் தன் சிறகுகளை
தன்னோடு இணைத்துக் கொண்டது.
பறந்து பறந்து
பறவையின்றிப் பறக்கச் சிறகுகளுக்கும்
சிறகுகளின்றி பறக்கப் பறவைக்கும்
கூடி வந்த சூட்சுமம்
என் அகத்தில் விரிந்தபோது
துவண்டுகிடந்த என் மனத்தில்
ஒரு பூ மலர்ந்தது.
The post சுந்தர ராமசாமி கவிதைகள் first appeared on அகரமுதல்வன்.
Published on June 09, 2024 10:46