01
பூமியில் தனித்துவிடப்பட்ட அலையிடம்
கொஞ்ச நேரம் தன்னை
ஒப்படைத்து
இளைப்பாறியது கடல்
உப்பு விளைந்து
புதுமொழியை ஈன்றதும்
ஒற்றை இரவின் மீது
நிலவெழுந்தது.
02
கடல்
முலைபொருத்தி அமுதூட்டிய
ஞானம்.
அலை
சந்தோச சரீரத்தின்
அவதாரம்.
03
அவ்வளவு ஆழமானது
கடல் அல்ல
அவ்வளவு ஆபத்தானது
அலை அல்ல
நீரின்றி அமையாது
உலகு.
உப்பின்றி அமையாது
காமம்.
04
கூடலில் அவதரிக்கும் கடல்
மச்ச அவதாரமாய் உடல்
வலைகளை அறுத்து
நீந்தும் போகம்
ஆதிக்குணம்.
05
கடல்
ஈன்று
ஈன்று
அலையை
எவர்க்கு அருளுகிறது?
The post ஆதிக்குணம் first appeared on அகரமுதல்வன்.
Published on June 20, 2024 11:21