அகரமுதல்வன்'s Blog, page 21

March 28, 2024

எஸ். ராவிடம் கேளுங்கள்

மிக முக்கியமானதொரு ஏற்பாடு.

 

The post எஸ். ராவிடம் கேளுங்கள் first appeared on அகரமுதல்வன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 28, 2024 11:10

March 27, 2024

திருநீற்றுப்பதிகம்

அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்

திருமுறை : இரண்டாம்-திருமுறை

பண் : காந்தாரம்

நாடு :பாண்டியநாடு

தலம் : ஆலவாய் (மதுரை)

திருச்சிற்றம்பலம் 

மந்திர மாவது நீறு
வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு
துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு
சமயத்தி லுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன்
திருஆல வாயான் திருநீறே.

வேதத்தி லுள்ளது நீறு
வெந்துயர் தீர்ப்பது நீறு
போதந் தருவது நீறு
புன்மை தவிர்ப்பது நீறு
ஓதத் தகுவது நீறு
உண்மையி லுள்ளது நீறு
சீதப் புனல்வயல் சூழ்ந்த
திருஆல வாயான் திருநீறே.

முத்தி தருவது நீறு
முனிவ ரணிவது நீறு
சத்திய மாவது நீறு
தக்கோர் புகழ்வது நீறு
பத்தி தருவது நீறு
பரவ இனியது நீறு
சித்தி தருவது நீறு
திருஆல வாயான் திருநீறே.

காண இனியது நீறு
கவினைத் தருவது நீறு
பேணி அணிபவர்க் கெல்லாம்
பெருமை கொடுப்பது நீறு
மாணந் தகைவது நீறு
மதியைத் தருவது நீறு
சேணந் தருவது நீறு
திருஆல வாயான் திருநீறே.

பூச இனியது நீறு
புண்ணிய மாவது நீறு
பேச இனியது நீறு
பெருந்தவத் தோர்களுக் கெல்லாம்
ஆசை கெடுப்பது நீறு
வந்தம தாவது நீறு
தேசம் புகழ்வது நீறு
திருஆல வாயான் திருநீறே.

அருத்தம தாவது நீறு
அவலம் அறுப்பது நீறு
வருத்தந் தணிப்பது நீறு
வானம் அளிப்பது நீறு
பொருத்தம தாவது நீறு
புண்ணியர் பூசும்வெண் ணீறு
திருத்தகு மாளிகை சூழ்ந்த
திருஆல வாயான் திருநீறே.

எயிலது வட்டது நீறு
விருமைக்கும் உள்ளது நீறு
பயிலப் படுவது நீறு
பாக்கிய மாவது நீறு
துயிலைத் தடுப்பது நீறு
சுத்தம தாவது நீறு
அயிலைப் பொலிதரு சூலத்
தாலவா யான் திருநீறே.

இராவணன் மேலது நீறு
எண்ணத் தகுவது நீறு
பராவண மாவது நீறு
பாவ மறுப்பது நீறு
தராவண மாவது நீறு
தத்துவ மாவது நீறு
அராவணங் குந்திரு மேனி
ஆலவா யான்திரு நீறே.

மாலொ டயனறி யாத
வண்ணமு முள்ளது நீறு
மேலுறை தேவர்கள் தங்கள்
மெய்யது வெண்பொடி நீறு
ஏல உடம்பிடர் தீர்க்கும்
இன்பந் தருவது நீறு
ஆலம துண்ட மிடற்றெம்
மாலவா யான்திரு நீறே.

குண்டிகைக் கையர்க ளோடு
சாக்கியர் கூட்டமுங்கூட
கண்டிகைப் பிப்பது நீறு
கருத இனியது நீறு
எண்டிசைப் பட்ட பொருளார்
ஏத்துந் தகையது நீறு
அண்டத்த வர்பணிந் தேத்தும்
ஆலவா யான்திரு நீறே.

ஆற்றல் அடல்விடை யேறும்
ஆலவா யான்திரு நீற்றைப்
போற்றிப் புகலி நிலாவும்
பூசுரன் ஞானசம் பந்தன்
தேற்றித் தென்னனுடலுற்ற
தீப்பிணி யாயின தீரச்
சாற்றிய பாடல்கள் பத்தும்
வல்லவர் நல்லவர் தாமே.

திருச்சிற்றம்பலம்

The post திருநீற்றுப்பதிகம் first appeared on அகரமுதல்வன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 27, 2024 10:16

March 25, 2024

இரு பெருநிலைகள் – கட்டண உரை

கட்டண உரைத் தொடர்களில் அடுத்த உரை நடைபெறவுள்ளது. எழுத்தாளர் ஜெயமோகனின் இந்தவகை உரைகள் எல்லோராலும் எளிதில் புரிந்துகொள்ள இயலாதது. இலக்கியத்தில் தீவிரமும் கூர்மையான அவதானமும் கொண்டவர்களே கட்டண உரை நிகழ்வுகளில் பங்குகொள்கின்றனர்.

கட்டண உரைத்தொடர்களில் அடுத்த உரை பெங்களூரில் நிகழ்கிறது. விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தினர் ஒருங்கிணைக்கும் “இரு பெருநிலைகள்” என்ற தலைப்பே ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் உண்டாக்கியிருக்கிறது. இந்த நிகழ்வில் பங்கெடுக்க விரும்புவர்கள் – கட்டணம் செலுத்தி நுழைவுச் சீட்டினை பெற்றுக்கொள்ளலாம்.

இணைப்பு – https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeM4nWzQvHbLIfISzT64ExVcYlZLtJflokFd_lvRlFvXzE4aA/viewform

The post இரு பெருநிலைகள் – கட்டண உரை first appeared on அகரமுதல்வன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 25, 2024 10:09

March 22, 2024

March 21, 2024

March 20, 2024

சுபம்

சென்னையில் நடைபெறும் இலக்கிய நிகழ்ச்சிகள் சிலவற்றில் அவரைக் கண்டிருக்கிறேன். இளம் வயதுதான். லேசாக முடி நரைத்திருக்கும். நவீன இலக்கிய வாசிப்பு மட்டுமல்ல, வாழ்வில் ஒரு நாளிதழைக் கூட புரட்டிப்பார்க்காதவர். ஒருநாள் பெருமிதத்தோடு அவரே சொல்லிக்கொண்டார். ஆனால் இலக்கியம் அவருக்கும் பிடிக்கும். இலக்கியவாதிகளின் கருத்துக்கள் முக்கியமானது என்றார். திரைத்துறையில் பணிபுரிவதாகவும் இன்னும் சில மாதங்களில் படப்பிடிப்புச் செல்லவிருப்பதாகவும் கூறியதும் நினைவுண்டு. இலக்கிய நிகழ்ச்சிகளில் முதல் ஆளாக வந்து கடைசி வரிசையின் வலது மூலையில் அமர்ந்துவிடுவார். அவர் இல்லாததை வலது மூலையிலுள்ள வெறும் நாற்காலியே உணர்த்திவிடும். கொஞ்ச வருடங்களாக அவரைக் காணக் கிடைக்கவில்லை. ஏதேனும் திரைப்பட முயற்சிகளில் ஈடுபட்டிருக்கலாம் என்று தோன்றியது. நேற்றைக்கு முன்தினம் வந்திருந்த மின்னஞ்சல்களை வாசித்துக் கொண்டிருந்தேன். “போதமும் காணாத போதம்” வெளியீட்டு விழாவின் உரைகள் பற்றி பலர் எழுதியிருந்தனர்.  ஒவ்வொரு கடிதத்தையும் வாசித்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் இவர் அனுப்பியிருக்கும் மின்னஞ்சலும் வந்திருந்தது.

தன்னுடைய திரைக்கதை – வடிவத்தை அனுப்பிவைக்க விரும்புவதாகவும், மூன்று நாட்களுக்குள் படித்துவிட்டு சொல்லவேண்டுமெனவும் கட்டளைத் தொனியில் எழுதப்பட்டிருந்தது. ஏற்கனவே அவர் இயக்கிய திரைப்படம் பல்வேறு காரணங்களால் வெளியாகவில்லையென தடித்த எழுத்துக்களால் அடையாளப்படுத்தப்பட்டிருந்தன. இயக்குனர் என தன்னை பாவிக்குமாறு உணர்த்துகிறார் போலும்! நான் அவரை மறந்திருக்ககூடுமென எண்ணி தனது புகைப்படத்தையும் சேர்த்தே அனுப்பியிருந்தார். மூன்று நாட்களுக்குள் உங்கள் திரைக்கதையை வாசித்துச்சொல்லும் நல்வாய்ப்பினை வாழ்கை எனக்களிக்கவில்லை என்று பதில் எழுதினேன். அடுத்தநாளே அவரால் எழுதப்பட்டிருந்த இன்னொரு மின்னஞ்சல் வந்தது. முதல்வனுக்கு! உங்களையொரு எழுத்தாளராக மதித்துக் கேட்டது என்னுடைய தப்பு. திரைத்துறையிலிருந்து தங்களுக்கொரு வாய்ப்பு கிடைக்காதா என ஏங்கும் எத்தனையோ எழுத்தாளர்களை எனக்குத் தெரியும். அவர்களையெல்லாம் விட்டுவிட்டு உங்களுக்கு இந்த வாய்ப்பைத் தர எண்ணியது என்னுடைய குற்றமேயென வருந்தி எழுதியிருந்தார். நான் சுபம் என்று எழுதி முடித்துக்கொண்டேன்.

இவரைப் போன்ற பலரை எனக்குச் சினிமாவில் தெரியும். எழுத்தாளர்கள் என்றால் இவர்களின் வாசலில் நின்று இரந்துநிற்பவர்கள் என்று கற்பனை செய்கிறார்கள். பாவம் எழுத்தாளர் என்று சில்லறைகளை வீசி எறிவதாக கனவு காண்கிறார்கள். நிமிர்வு கொண்ட ஒரு எழுத்தாளனையாவது சந்திக்காதது இவர்களின் வாழ்நாள் துயர். எழுத்தாளர்கள் என்று தம்மை நம்பும் சிலர், திரைத்துறையினரிடம் காட்டும் பணிவு கண்டு நான் அதிர்ச்சியுற்றிருக்கிறேன். ஆனால் திரைத்துறையில் சாதனை படைத்த, அழியா நிலைபெற்ற  கலைப்படைப்புக்களைத் தந்தவர்கள் பலர் எழுத்தாளர்களுக்கு அளிக்கும் மரியாதை கண்டிப்பாக பதிவு பண்ணப்படவேண்டியது. இயக்குனர் மணிரத்னம் அவர்களோடு பணியாற்றுகையில், எழுத்தாளரான எனக்கு அவர் அளித்த மரியாதை எப்போதும் பெருமை தரக்கூடியது. இப்படி நிறைய அனுபவங்கள் எனக்குண்டு. இயக்குனர் ராம் என்னுடைய நேசன். ஒருவகையில் என் மேய்ப்பர்களில் ஒருவர். ஆனால் எல்லா உரையாடல்களிலும் எழுத்தாளர் என்ற அடையாளத்தின் மூலமாகவே பிறருக்கு அறிமுகம் செய்வார்.

பேரன்புக்குரிய இயக்குனர் மிஷ்கின் எல்லையற்ற வாசக நேசத்தை எழுத்தாளர்கள் மீது காட்டக்கூடியவர். சமீபத்தில் அவருடைய படப்பிடிப்புத்தளத்திற்கு சென்றிருந்த போது அவர் தருவித்த வரவேற்பும், விருந்தும் எழுத்தாளர் என்கிற அந்தஸ்த்துக்கு உரியன. இயக்குனர் தயாரிப்பாளர் சிவா அனந்த் என் மானசீகமான வழிகாட்டி. எழுத்தாளர்களோடு அவர் உரையாடும் விதம் கண்டு மகிழ்ந்திருக்கிறேன். இயக்குனர் வசந்தபாலன் எழுத்தாளர்களைக் கொண்டாடுவதில் உவகை அடைபவர். நான் மேற்கூறிய நிரையில் இன்னும் பலர் உண்டு. ஆனாலும் இந்தப் பாண்பாட்டில் தம்மை இணைத்துக்கொண்டவர்கள்  தமிழ்த்திரைத்துறையில் மிகச் சொற்பம். இங்கேதான்  எழுத்தாளரைக் கொண்டாடுவது தம்முடைய தாராளத்தைச் சேர்ந்தது என்று கருதுகிறவர்கள் பலர். நான்தான் அந்த எழுத்தாளர் பாவமென்று ஒரு வாய்ப்பும் வழங்கினேன் என்று சொல்லவே பலர் துடியாய்த் துடிக்கின்றனர். இவர்களிடம் பரிசிலுக்கு வரிசைக்கு நிற்கும் வாழ்க்கை இன்று எழுத்தாளருக்கு இல்லை.

ஒருமுறை பலகோடி நிதி ஆதாரத்தில் உருவாக்கப்பட்ட திரைப்படக் குழுவிடமிருந்து எனக்கொரு அழைப்பு. அந்தத் திரைப்படத்தின் தொழில்நுட்பக் கலைஞர் ஒருவர் என்னிடம் பேசினார். இவர் நாடறிந்த ஒளிப்பதிவாளர். காலையில் ஒன்பது மணிக்கு அழைத்துப் பேசினார். அன்றுதான் முதன்முறையாக என்னிடம் உரையாடுகிறார். “உங்களைச் சந்திக்க வேண்டும் கிளம்பி தேனாம்பேட்டையில் உள்ள எங்களுடைய அலுவலகம் வாருங்கள்” என்றார். “நான் ஓய்வாக இருக்கும்போது சொல்கிறேன். அன்று சந்தித்துக்கொள்ளலாம்” என்றேன். “என்ன நீங்க இப்பிடி சொல்றீங்க. உங்களுக்கொரு வாய்ப்பு வாங்கித்தரலாம்னு பார்த்தா…” என்றார். எனக்கு வாய்ப்புக் கேட்டு உங்களை எப்போதாவது அழைத்தேனா. என்னைச் சந்திக்கும் வாய்ப்புக்கேட்டு நீங்கள் தானே அழைத்தீர்கள். ஆகவே நான்தான் உங்களுக்கு வாய்ப்புத் தருகிற இடத்தில் இருக்கிறேன். நாளை என்னை அழையுங்கள். எப்போது சந்திக்கலாமென்று சொல்கிறேன்” என்றுவிட்டு தொடர்பை துண்டித்தேன்.

திரைத்துறையில் இலக்கியம் – எழுத்தாளர்கள் குறித்து என்ன மதிப்பீடு உள்ளதென அறிந்திருக்கிறேன். ஒருதரப்பு தீவிர இலக்கிய வாசிப்பையும் எழுத்தாளர்களையும் திரைத்துறைக்குள் உள்வாங்க போராடிக்கொண்டிருக்கிறது. குறைந்த அளவேனும் இந்தத் தலைமுறை அதில் வெற்றி கண்டிருக்கிறது. இக்காலமே அதன் தொடக்கம். இன்னொரு தரப்பு வணிகப் பாணி. இரண்டுமே திரைத்துறைக்கு அவசியமானதுதான். ஆனால் இலக்கியத்தின் அருகதை அறியாதவொரு பெருந்திரள் திரைத்துறையில் இருக்கவே செய்கிறது. அவர்களை நொந்தும் பயனில்லை.

இன்றைக்கு காலையில் மீண்டுமொரு மின்னஞ்சல் அவரிடமிருந்து வந்திருந்தது. “அன்பின் அகரமுதல்வன்! உங்களைப்போன்று கர்வமும், மண்டைக் கனமும் கொண்ட படைப்பாளிகள் இங்கே வெல்ல முடியாது. உங்களுக்கு எழுதும் திறன் எப்படி உள்ளதோ, அப்படி என்னைப் போன்ற திரை இயக்குனரிடமும் பணியும் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள். சினிமாவுக்கு அதுதான் முக்கியம்” என்று ஆலோசனை வழங்கியிருந்தார். அவருக்கு இப்போது என்ன தேவையென விளங்கிக் கொண்டேன். ஒரு எழுத்தாளரை அவர்முன் பணிய வைக்கவேண்டுமென எண்ணுகிறார். என்ன விந்தையான மனமோ அறிகிலேன்.

அவருக்கு பதில் எழுதினேன்.

ஒரு மலையுச்சியை வளைத்து இருக்கையாக்க எண்ணுகிறீர்கள். அது எப்போதும் சாத்தியமில்லாதது. நன்றி.

The post சுபம் first appeared on அகரமுதல்வன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 20, 2024 00:32

March 19, 2024

எழுத்தாளர் தெய்வீகனின் இணையத்தளம்

எழுத்தாளர் தெய்வீகன் இணையத்தளமொன்றைத் தொடங்கியிருக்கிறார். இனிவரும் நாட்களில் அவரது படைப்புச் செயற்பாடுகள் இவற்றில் வெளியாகுமென நம்புகிறேன். சிறந்த வடிவமைப்பு செய்யப்பட்ட இணையத்தளம்.

https://www.theivigan.co/

The post எழுத்தாளர் தெய்வீகனின் இணையத்தளம் first appeared on அகரமுதல்வன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 19, 2024 10:36

March 18, 2024

நிறைவு

ருபத்தைந்து வாரங்கள் தளத்தில் வெளிவந்த போதமும் காணாத போதம் நிறைவடைந்தது. என் இலக்கிய ஊழியத்தில் மறக்கவியாலாதவொரு நிறைவை அளித்த படைப்பு. மூதாதையர்களால் ஏவிவிடப்பட்ட நல்லருள் என்னை வந்தடைந்த நாட்கள் இவைதான் போலும்! ஈழரின் பண்பாட்டு ஆழத்தில் அலைமடிந்திருக்கும் நம்பிக்கைகளும், தொன்மங்களும் போரியல் வாழ்வோடு பின்னப்பட்ட வீரயுக காலத்தின் மாந்தர்களையும் நாயகர்களையும் எழுதினேன். என் தெய்வங்களை நொந்தேன். பிரார்த்தித்தேன். கைவிடப்பட்டவர்களின் கூக்குரல் வெறும் அரசியல் தன்மை கொண்டது மட்டுமல்ல. அதன்பின்னே திரளத்தொடங்குவது ஆற்றமுடியாத இழப்பின் தொன்மம்.

ஒவ்வொரு வாரமும் வாசித்து கடிதங்களாகவும், நேர் பேச்சிலும் வந்தடைந்த பாராட்டுதல்களும் மதிப்பீடுகளும் பெறுமதியானவை. தொடர்ச்சியாக இலக்கிய வாசிப்பில் உள்ளவர்களின் ஒவ்வொரு அவதானமும் மதிப்புக்குரியன. ஆறு மாத காலமாக கூர்மையான தீவிரத்தோடு தளத்தில் சரியான நாளில் நேரத்தில் பதிவேற்றம் செய்தேன். ஏற்றுக்கொண்ட செயலுக்கு ஒப்புக்கொடுப்பதில் கர்வம் கிளைக்கிறது. மொழியையும், தன்னுடைய படைப்பின் தருணங்களையும் பிணைத்துக் கொடியேற்றும் படைப்பாளர் லட்சியத்தீவிரம் கொண்டிருக்க வேண்டுமென்னும் பள்ளியைச் சேர்ந்தவன் நான். என் எழுத்துச் செயலின் வடத்தை அப்படித்தான் பற்றியிருக்கிறேன்.

என்னுடைய வாசகர்கள் உலகின் பல்வேறு நாடுகளில் வாழ்கிறார்கள். இது மிகையான அறிவிப்பு அல்ல. படைப்புக்கள் வெளியானதும் அதனை பதிவு செய்து வாங்கி படிக்கிறார்கள். ஈழ இலக்கியமென்கிற வெளிக்கு போதமும் காணாத போதம் மேலான பேராற்றலையும் புதிய வழியையும் விசையையும் அளித்திருக்கிறது என்பேன்.

ஒவ்வொரு மூத்தோரையும் பணிந்து மொழியின் திருவடிகளை வணங்குகிறேன்.

அகரமுதல்வன்

 

The post நிறைவு first appeared on அகரமுதல்வன்.

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 18, 2024 00:26

March 17, 2024

போதமும் காணாத போதம் – 25

முன்னொரு காலத்தில் இந்திய அமைதிப்படையினருக்கு அதியமான் என்ற பெயரே கிலியூட்டியதாம். பதுங்கிப் பாயும் ருத்ர வேங்கையென்றால் இவர்தான். எதிரிகளானவர்கள் தப்பித்துப் போகாதபடி எல்லாத்திசையிலுமிருந்து போக்குக் காட்டி ஒருதிசையில் மட்டும் அணியைப் பலப்படுத்தி தாக்கும் வியூகங்கள் அமைத்தவராம். “ஒரு சிகரெட்டை ஊதி முடிப்பதற்குள் அந்தப் பெடியன்களை நசுக்குவேன்” என்ற பிற்பாடு, அதியமானின் படை நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் வியக்க வைத்ததாம். வெறுமென தாக்குதல் செய்து கொல்வது மட்டுமல்ல, ஆயுதங்களையும் மீட்கவேண்டுமென கட்டளை பிறப்பித்தாராம். எதிரியானவன் சொல்லுவதைப் போல நாங்கள் பொடியங்களாக இருந்தாலும், எவருந்தான் வெல்லமுடியாதென சொல்லும் பொறுப்பு எங்களுடையதென அதியமான் போர்வெறி கொண்டாராம். இழப்புக்களுக்கு அஞ்சேன். இழந்துவிட உயிர் மட்டுமே இருக்கிறதெனச் சொல்லி, எதிரிகளின் காலடியைத் தேடித் தேடிப் பாய்ந்தனாரம். அதியமான் என்றொரு சமர்க்கள மன்னன் என்று தலைவர் அவர்களே மணலாற்றில் பாராட்டியதாக கதையுமுண்டு.

ஒருமுறை அதியாமனும் அவனது அணியைச் சேர்ந்த நால்வரும் சுற்றிவளைக்கப்பட்டனர். இனி மீள்வது கடினமென அணியாட்கள் சொன்னதும், அதியமான் யார் மீள்வது என்று கேட்டிருக்கிறார். ஏனையவர்கள் எதுவும் விளங்காமல் முழிக்க, இன்னொரு அரை மணித்தியாலம் அவங்கள் அடிக்கிறத பாதுகாப்பாய் இருந்து வேடிக்கை பார்க்கலாம். அதுக்குப் பிறகு நானொரு திட்டம் சொல்லுகிறேன் என்றிருக்கிறார். இவர்களை சுற்றிவளைத்த எதிரியினர் கடுமையான தாக்குதலைச் செய்கின்றனர். அதியமான் தன்னுடைய அணியிலுள்ளவொருவரை உயரமாக நிற்கும் மரத்தில் ஏறுமாறு சொல்லுகிறார். எவ்வளவு பேர்கள், என்று ஆட்களை ஒரு எண்ணுகிறார்கள். திட்டம் தீட்டப்படுகிறது. காடு சொந்தப் புதல்வர்களுக்கு வழியமைக்கும். அவர்களை அது பாதுகாக்கும் என்கிறார். ஐந்து பேரும் சேர்ந்து தாக்குதல்களைச் செய்கின்றனர். எதிரியானவர்களைத் தாக்கி அவர்களிடமிருந்து பெறுகிற ஆயுதங்களின் வழியாக மிஞ்சியிருப்போரை தாக்கினார்கள்.  அந்தச் சுற்றிவளைப்பை முறியடித்து இரவோடு இரவாக அதியமான் அடைக்கலம் புகுந்த வீடுதான் எங்களுடையது என்றாள் அம்மா.

அன்றிரவு தொண்டையிலும், வயிற்றிலும் வழியும் ரத்தத்தை கையால் பொத்தியபடியிருந்த ஒருவரை நான்கு பேர் அழைத்து வந்தனர். கதவைத் திறந்து எல்லோரையும் உள்ளே வரச்சொன்னேன். லாம்பு வெளிச்சம் போதாமலிருந்தது. இரண்டு குப்பி விளக்குகளில் வெளிச்சம் ஏற்றினோம். விளக்கு வெளிச்சத்தில் குருதி நிறமாயிருந்தது. வந்திருந்தவர்கள் கேட்கும் பொருட்களை எடுத்துக் கொடுத்தேன். தங்களிடமிருந்த மருந்துகளால் காயத்தைச் சுத்தப்படுத்தினார்கள். ஒரு பொருள் மீதமில்லாமல் தடயங்கள் எதுவும் விடுபட்டிருக்கின்றனவா என்று சரிபார்த்தனர். போராளிகளுக்கு தேத்தண்ணியும் ரொட்டியும் சுட்டுக் கொடுத்தேன். காயப்பட்டிருப்பவர் பெயர் அதியமான் என்றார்கள். நான் அவரருகே ஓடிச்சென்றேன். தரையில் படுத்திருந்த அவரது கண்களை உற்றுப் பார்த்தேன். என்மனம் வீரனே! வீரனே! என்று பறைகொட்டியது. எனதுள்ளே மலர்ந்தது ஏதென்று அறியாத அதிசயத்தின் சிறுமலர். அவருடைய விரல்களை தொட்டுப் பார்த்தேன். அதியமான் என்றழைத்தேன். ஒரு வீரனின் அருகமைந்த மங்கை நானென நிமிர்ந்தேன்.

இவரை இப்போதுள்ள சூழலில் அழைத்துச் செல்ல முடியாததால், இங்கேயே இருக்கட்டும். சில நாட்கள் கழித்து நாங்கள் வருகிறோம் என்று சொல்லிவிட்டுப் போயினர். நான் அதியமானுக்கு அருகிலேயே அமர்ந்தேன். உடலினில் எரியும் காயத்தோடு அரற்றினார். தண்ணீர் கொடுத்தேன். சிறுநீர் கழிக்க வேண்டுமெனச் சொல்லி எழுந்தார். ஒரு சட்டியை எடுத்து வந்து கொடுத்தேன். “இல்லை, நான் வெளியே சென்று வருகிறேன்” என்றார். வேண்டாமென்று மறுத்தேன். நான் திரைமறைவில் நின்று கொண்டேன். சிறுநீர் கழித்து முடிந்ததும் அழைத்தார்.

“உங்களின் பெயர் என்ன?” விளக்கொளியில் அவரது முகம் காவியச் செழுமையோடிருந்தது. எனது பெயரைச் சொன்னேன். ஒரு மெல்லிய தலையசைப்பு. அவர் அப்படியே உறங்கிப்போனார். அதிகாலையிலேயே ஆஸ்பத்திரியில் தாதிக் கடமை முடித்து வந்திருந்த அம்மா வீட்டிற்குள் படுத்திருப்பவரைப் பார்த்து  அதிர்ச்சி அடைந்தாள்.

“அம்மம்மாவுக்கு என்ன அதிர்ச்சி?” என்று கேட்டேன்.

“பின்ன. ஒரு குமர்ப்பிள்ளை தனிய இருந்த வீட்டில ஆரெண்டு தெரியாத ஆம்பிளை படுத்திருந்தால்” என்று அம்மா சிரித்துக் கொண்டு சொன்னாள்.

“ஆரடி மோளே இது. இயக்கப்பெடியனே”

“ஓமனே, இவர்தான் அதியமானாம்”

“ஐயோ! இவனைத் தான் கடுமையாய் தேடித் திரியிறாங்கள். பிள்ளைக்கு சரியான காயம் போல கிடக்கு” என்றபடி காயத்தைப் பார்த்தாள்.  கொஞ்சம் பெரிய காயந்தான். சீவிக்கொண்டு போயிருக்கு” என்றாள்.

அதியமானின் காயமாற தேவைப்பட்ட மருந்துகளை அம்மா அடுத்தநாள் கடமை முடித்து வரும்போது களவாக எடுத்து வந்தாள். அவரது காயத்தைச் சுத்தப்படுத்தி மருந்தைக் கட்டிவிட்டோம். ஐந்து நாட்களாகியும் அதியமானைத் தேடி யாரும் வரவில்லை. வெவ்வேறு இடங்களில் தாக்குதல்கள் நடந்தன. போராளிகள் தீக்குழம்பின் வழியாக தப்பித்து வென்றனர். அதியமானுக்கு பிடித்த உணவுகளை செய்து கொடுத்தேன். வீட்டிற்கு சொந்தக்காரர்கள் யாரேனும் வந்தால், படலையில் வைத்தே கதைத்து அனுப்பினேன். யாரையும் நம்பமுடியாவொரு கொடுங்காலம்.

“உங்களைப் பற்றித்தான் நாடு முழுக்க ஒரே கதையாம். தங்கட தாக்குதலில நீங்கள் செத்துப்போய்ட்டிங்கள் எண்டு இந்திய ஆர்மி சொல்லியிருக்கு” என்றேன்.

“அவங்களுக்கும் என்னைக் கொல்லுறதுக்கு ஒரு ஆசையிருக்கு. ஆனால் நீங்கள் காப்பாற்றிப் போட்டியள்” என்றார்.

“எனக்குமொரு ஆசையிருக்கு” என்று சொல்ல எங்கிருந்து உந்தல் வந்ததென தெரியாமல் விக்கித்தேன். நாக்கைக் கடித்துக்  கொண்டேன்.

“என்ன சொன்னியள்” என்று அதியமான் மீண்டும் கேட்டார்.

நான் ஒன்றுமில்லையென தலையசைத்தேன் என்றாள் அம்மா.

“அம்மா, நீங்கள் அதியமானை விரும்பினியளோ”

“எந்தப் பிள்ளை அவரை விரும்பாமல் இருப்பாள்.”

சுடுகலன் தாங்கிய பகைவர்க்கு நடுக்கம் வர, இவரது பெயரே போதுமென்று சொல்வார்கள். அதியாமனின் கண்கள் எப்போதும் விழிப்புடன் இருப்பவை. நிலத்தின் மீது புரளும் சருகின் கீழே ஊர்ந்து செல்லும் மரவட்டையின் கால்களின் சத்தம் வரை அறிவர். அவரொரு நாயகன். வீரயுகத்தின் சமர்க்களிறு. எதிரிகளை வெல்லும் ஆற்றலும் வெறியும் கொண்டவர். எங்களுடைய வீட்டிலிருந்து நள்ளிரவு நேரத்தில் போராளிகளோடு விடைபெற்றார். என்னையழைத்து தன்னுடைய நினைவாக வைத்திருக்கும்படி ஒரு சின்னஞ்சிறிய புதுத்தோட்டாவை கொடுத்தார். உள்ளங்கைக்குள் பொத்தினேன். பிறகு அதியமான் என்பவரை பல தடவைகள் கொன்றனர். ஆனால் உயிர்த்தெழுந்தபடியே இருந்தார்.  மானுட வரலாற்றில் அதிகமாக உயிர்த்தெழுந்தவர்கள் மூவர் தான். ஒருவர் இயேசு. இரண்டாமவர் பிரபாகரன். மூன்றாமவர் அதியமான் என்ற பகிடியை முதன்முறையாக உன்னுடைய அம்மம்மா தான் வன்னிக்குச் சொன்னாள் என்றாள் அம்மா.

இரண்டாயிரத்து எட்டாம்  ஆண்டின் இறுதியில் அதியமான் தான் என்னை அடையாளம் கண்டார். எங்கே இடம்பெயர்ந்து இருக்கிறீர்கள் எனக் கேட்டார். அம்மாவை குசலம் விசாரித்து, தன்னுடைய முகாமிலிருந்து இரண்டு மீன் டின்களை எடுத்துத் தந்தார். இரண்டொரு நாளில் கிளிநொச்சியும் விடுபட்டுப் போய்விடுமென்றார். நாங்களிருக்கும் முகவரியை கேட்டு எழுதினார். “வள்ளிபுனத்தில் வந்து சந்திக்கிறேன். பத்திரமாகப் போ” என்றார்.

அதியமான் கொஞ்சம் சுடுதண்ணி. அம்மா விசர் நாய் என்றுதான் கூப்பிடுவாள். எவருடனும் எரிந்து விழுவார். தனக்கு கீழே வேலைபார்க்கும் போராளிகள் சிறிய தவறு செய்தாலும் நேரும் கதியோ சொல்ல இயலாதது. அதியமான் எங்களுடைய வீட்டிற்கு வந்து போகிறாரென்று தெரிந்து வேறு சில பிரிவுப் போராளிகள் வருவதை நிறுத்திக் கொண்டனர்.

வீட்டிற்குச் சென்றதும் நடந்தவற்றை அம்மாவிடம் சொன்னேன். “அவனுக்கு வீடு வாசல் போற பழக்கமில்லை. எப்பவும் இயக்கம், சண்டையென்று இருப்பான். நீ வில்லங்கப்படுத்தி கூட்டிவந்திருக்கலாம்” அம்மா சொன்னாள். பின்நேரம், குழல் புட்டும், உருளைக்கிழங்கு குழம்பும் வைத்து, கருவாட்டை வெங்காயத்தோடு பொரிச்சு ஒரு பொதியாக கட்டினாள். அதியமானைப் பார்த்த முகாமில கொண்டே குடுத்திட்டு வா என்றாள். விசுவமடுவுக்கு ஈருருளி பறந்தது. அந்த முகாமைச் சென்றடைந்தேன்.

வாசலில் நின்ற போராளியிடம், “அதியமான் நிக்கிறாரோ, அவரிட்ட இந்தச் சாப்பாட்டைக் கொடுக்க வேணும்” என்றேன். வெளிப்பக்கமாக கதவைத் திறந்தார். உள்ளே போனேன். உடமைகளைச் சரிபார்த்து, எங்கேயோ புறப்படத் தயாரானார். “அம்மா குழல் புட்டுத் தந்துவிட்டவா” என்று குரல் கொடுத்தேன். என்னைப் பார்த்தவர் “சிறுவா… அங்கேயிருந்து எதுக்கடா இந்த நேரம் வந்தனி. கொம்மாவுக்கு விசர்” என்றவர் சாப்பாட்டை வாங்கி, தன்னுடைய பையில் திணித்தார். ஒரு அரைமணித்தியாலம் பிந்தி வந்திருந்தால் என்னை நீ பார்த்திருக்கமாட்டாய். தீபன் அண்ணா களத்துக்கு வரச்சொல்லியிருக்கிறார்” என்றார். அவர் விடைபெறும் வரை, அங்கேயே இருந்தேன். எனக்கு ஒரு சிறிய பேரீச்சம்பழ பைக்கற்றும், இரண்டு மாமைட்டும் தந்து முத்தமிட்டார். நடக்கிறத பார்க்கலாம். திரும்ப வரும்போது வீட்டுக்கு வருகிறேனென்று அம்மாட்டச் சொல்லு” என்றார்.

சிலமாதங்கள் கழித்து முள்ளிவாய்க்காலில் வைத்து அதியமானை இயக்கம் சுட்டுக்கொன்றது. அவரின் மீது வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களில் இயக்கத்தின் படையியல் ரகசியங்களை எதிரிகளிடத்தில் தெரியப்படுத்தியமை முதலிடம் பிடித்தது.  அதியமானுக்கு மரணதண்டனை வழங்கப்பட்ட தகவலை அறிந்த போது அம்மா துடியாய் துடித்தாள். “இத்தனை வருஷமாய் சண்டையில நிண்டு, வாழ்க்கையை இழந்தவனுக்கு நீங்கள் குடுக்கும் மரியாதை இதுவோவென” முக்கியப் பொறுப்பாளர்களைத் தேடிச்சென்று திட்டித்தீர்த்தாள். அதியமான் இப்படியான துரோகத்தை செய்வாரென நாங்களும் முதலில் நம்பவில்லையென அவர்கள் பதில் சொல்லினர். ஒரு முக்கிய புலனாய்வுப் பிரிவின் பொறுப்பாளரொருவர் நாங்களிருந்த பகுதியால் நடந்து போனார். அவரை வழிமறித்த அம்மா அதியமானை விசாரணை செய்தவர்கள் ஏதோ பிழையாக தீர்ப்பு வழங்கியிருக்கிறார்களென கடிந்தாள். அவரொரு அசட்டுச் சிரிப்புடன் அங்கிருந்து விலகி நடந்தார்.

“சனங்களின் ஆற்றமையையும், கேள்விகளையும் பொருட்படுத்தாமல் விலகி நடக்கும் பாதங்கள் போராளிகளுடையதல்ல. அவர்கள் தங்களை ராஜாக்களென எண்ணுபவர்கள். தேசத்திலுள்ள ஒரு தாயின் கண்ணீரை மதியாதவன் எதன் நிமித்தமும் விடுதலைக்கு வழி சமைப்பவன் அல்ல. உங்களுடைய துவக்குகளுக்கு இலக்குகள்தான் தேவையென்றால் என்னைப் போன்றவர்களைச் சுடுங்கள். ஒருபோதும் அதியமான் போன்ற அதிதீரர்களை கொல்லாதீர்கள். அவர்களின் ஆன்மாவுக்குத் துரோகம் இழைக்காதீர்கள்” என்றாள்.

அம்மா அதியமானை நினைந்தழுதாள். பதுங்குகுழியில் கண்ணீரின் ஈரம் சிதம்பியது. அவனைத் துரோகியெனச் சொல்ல யாருக்குந்தான் அருகதையில்லையென கோபங்கொண்டு கத்தினாள். எந்தக் கதறலுக்கும் பெறுமதியில்லாத பாழ்நிலத்தின் மீது மிலேச்சத்தனங்கள் போட்டிக்கு நிகழ்ந்தன. இயக்கம் அழிந்து போகப்போகிறதென அம்மாவும் சொல்லிய ஒரு பகற்பொழுதில் இரக்கமற்ற வகையில் வரலாற்றின் பாறையில் சூரியவொளி மங்கிச் சரிந்தது.

அதியமான் தனக்களித்த பரிசான தோட்டாவை எறிந்துவரச் சம்மதியாத அம்மா, தன்னுடைய ஆதிக் குகைக்குள் அதைச் சொருகினாள். நிர்வாணமாக நானும் அவளுமாய் சோதனை செய்யப்பட்டு மீண்டோம். சனத்திரளின் ஓலம் இருளின் பாலையாக பொழுதை ஆக்கியிருந்தது.

“நான் உன்னுடைய தாய். என் குருதியில் உதித்தவன் நீ. இந்தத் தோட்டாவை எனக்குப் பரிசளித்தவன் அதியமான். அவன் உனக்குத் தியாகியோ, துரோகியா அல்ல. உனது தந்தை” என்று சொல்லியபடியே அந்தப் பரிசை வெளியே எடுத்தாள். அது பொலிவு குன்றாத மினுமினுப்போடு இருந்தது. கைகளுக்குள் பொற்றினாள். தன்னுடைய  குரல்வளையில் அதனை வைத்து ஒரேயடியாக உள்ளங்கையால் அழுத்தினாள்.

அம்மாவின் குருதியிலிருந்து அந்தத் தோட்டாவை எடுத்து கடலினில் வீசினேன். உயிர்ஈந்த  தேவபித்ருக்களோடு அதுவும் நீந்தியது.

 

The post போதமும் காணாத போதம் – 25 first appeared on அகரமுதல்வன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 17, 2024 11:32

அகரமுதல்வன்'s Blog

அகரமுதல்வன்
அகரமுதல்வன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow அகரமுதல்வன்'s blog with rss.