அகரமுதல்வன்'s Blog, page 24
February 16, 2024
ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது
எழுத்தாளர் ஜெயந்தன் நினைவினைப் போற்றும் விதமாக சிறந்த இலக்கியங்களுக்கு வழங்கப்படும் ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுக்காக புத்தகங்களை அனுப்பி வைக்குமாறு அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. என்னளவில் பெருமகிழ்ச்சியான செய்தி. இந்த விருது முன்னெடுப்பினை தீவிரமாக ஏற்றிருக்கும் எழுத்தாளர்- ஓவியர் சீராளன் அவர்களுக்கு நன்றி. ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதினைப் பெற்ற பல படைப்பாளிகளுள் நானுமொருவன். என்னுடைய புலம்பெயர் வாழ்வின் முதல் விருது. எழுத்தாளர் ஜெயந்தன் சிறுகதைகளை தேர்ந்தெடுத்து தொகுத்திருக்கிறேன். டிஸ்கவரி பதிப்பகத்தினர் அந்நூலை வெளியிட்டு உள்ளனர். புதிய படைப்பாளிகளுக்கு ஊக்கம் தரவல்ல மாண்பு கொண்ட விருது. வாய்ப்புள்ளோர் நூல்களை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.
The post ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது first appeared on அகரமுதல்வன்.
February 13, 2024
புத்தக விற்பனை குறைந்துவிட்டதா?
இன்றைக்கு நண்பரொருவர் அழைத்தார். எப்போதும் ப்ரியத்திற்குரியவர், என்னுடைய உயர்வில் மகிழ்ச்சி அடைபவர். இலக்கியத்தையும் இலக்கியக்காரர்களையும் மதிப்பவர். அழைத்து குசலம் விசாரித்ததும் விஷயத்துக்கு வந்தார். சென்னைப் புத்தக கண்காட்சி பெருமளவு சோர்வை உண்டாக்கியிருப்பதாக பதிப்பாளர்கள் சிலர் கூறியிருப்பதைச் சொன்னார். இப்படியான போக்கு நீடித்தால் புத்தக கண்காட்சிக்கு அவசியமில்லாமல் போய்விடாதா என்று கவலையும் பதற்றமும் கொண்டு பேசினார். அவர் புத்தக கண்காட்சியின் தொடக்க நாள்களில் வந்திருக்கிறார். அன்றைக்கும் கூட்டம் இல்லை என்பது அவரது கருத்து. உண்மையில் இதுபோன்ற இலக்கிய அனுதாபிகளின் அக்கறையை நினைத்தால் ஆறுதல் உண்டாகும். இந்த நண்பருக்கிருக்கும் வினோதமான பழக்கம் என்னவென்றால், வாங்கிய புத்தகங்களை வாசித்து முடித்ததும் அவற்றை நண்பர்களுக்கு பரிசளித்துவிடுவார். நானறிய ஒவ்வொரு புத்தக கண்காட்சியிலும் பத்தாயிரம் ரூபாவுக்கு இலக்கிய நூல்களை வாங்குபவர். “உங்களுடைய பார்வையில் இந்தப் புத்தக கண்காட்சியில் நேர்ந்திருக்கும் விற்பனை மந்தத்திற்கு என்ன காரணம்? அதனை உணர்ந்து கொண்டு சரி செய்ய முடியாதா?” என்று என்னிடம் கேட்டார். இந்தக் கேள்வியைக் கொஞ்சம் மாற்றிக்கொண்டேன். உண்மையில் கண்காட்சியில் விற்பனை மந்தம் உண்டா? பொதுவாக “இன்றைக்கு யாருங்க புத்தகம் படிக்கிறாங்க, எல்லாரும் மொபைல நோண்டுறாங்க” எனும் கூற்றில் உண்மையுண்டா? இது வெறுமென புத்தகம் வாங்குபவர்களின் எண்ணிக்கை குறைபாடா? அல்லது பதிப்பகங்களின் குறைபாடா? என்று பல அடுக்குகளில் கேள்வியை உடைத்து அடுக்கினேன். நண்பர் உடனடியாக “இன்னைக்கு புத்தகம் படிக்கிறவங்க குறைச்சலுன்னு சொல்லுறதெல்லாம் ஏத்துக்க முடியாத பொய். அதை புத்தகமே வாசிக்காதவங்க தான் சொல்லிட்டு இருக்காங்க” என்றார். நான் அவருடைய இந்தக் கருத்துடன் ஒன்றுபட்டேன்.
கண்காட்சியில் விற்பனை மந்தம் உண்டா?அப்படிச் சொல்ல முடியுமா தெரியவில்லை. வாசகர்களின் ஆவல் நாளுக்கு நாள் அதிகமானதாகவே இருந்தது. இந்த ஆண்டில் மழையின் காரணமாக ஒருநாள் இடைநிறுத்தப்பட்டது. சில பதிப்பகத்தினர் மழையினால் பாதிக்கப்பட்டனர். அவர்களுடைய கொஞ்சப் புத்தகங்கள் மழையில் நனைந்து வீணாகின. ஆனால் மந்தம் என்று குறைபட்டுக்கொள்ளுமளவு இல்லை. வாசகர்கள் புத்தகங்களை வாங்குவதற்காக சாரை சாரையாக வந்த நாட்களும் உண்டு. என்னுடைய நண்பர்கள் பலர் இந்தப் புத்தக கண்காட்சியில் பல ஆயிரம் ரூபாய்களுக்கு புத்தகங்களை வாங்கினார்கள். இது ஒரு சோற்றுப்பதமென மேம்போக்காக உதாரணப்படுத்த விரும்பவில்லை . ஆனால் மந்தமென்று ஒரு எழுத்தாளனாக, பதிப்பக நண்பர்கள் பலரைப் பெற்றிருப்பவனாக என்னால் சொல்ல இயலாது. அப்படி மந்தம் என்றால் அதனைச் சீர் செய்ய பெரும் ஆற்றல் கொண்டு இயங்கவேண்டிய பொறுப்பு நம் எல்லோரிடமும் உள்ளது. அது காலத்திடமும், விலைவாசியிடமும் உள்ளது.
2. “இன்றைக்கு யாருங்க புத்தகம் படிக்கிறாங்க, எல்லாரும் மொபைல நோண்டுறாங்க” எனும் கூற்றில் உண்மையுண்டா?
இதைச் சொல்பவர்கள் பலர் தங்களுடைய காலங்களில் தேங்கிப்போனவர்கள். இன்றுள்ள வாசக தலைமுறையின் வாசிப்பு நேசத்தையும் தீவிரத்தையும் அறியாதவர்கள். அவர்கள் வாசித்த இலக்கியங்களை விடவும், இன்றைய யுகத்தில் உலகம் தழுவிய வாசிப்பை நிகழ்த்துகிறார்கள். தர மதிப்பீடுகளுக்கு அப்பால் இலக்கியத்தை வாசித்துப் பகிர பல்வேறு இலக்கிய அபிமான குழுக்கள் சமூக வலைத்தளங்களில் உள்ளன. புத்தகங்களை வாசித்து சுயாதீனமாக தங்களுடைய தளங்களில் தொடர்ந்து எழுதும் வீச்சு இன்றைக்கு அதிகரித்திருக்கிறது. தொடக்க நிலையில் இலக்கியத்தை அணுகும் ஆர்வமும், உற்சாகமும் அதில் செறிவாக இருந்தாலும், பொருட்படுத்ததக்கவையே. புத்தக கண்காட்சிக்கு வந்து புத்தகங்களை தேர்ந்தெடுத்து வாங்கிச் செல்லும் வாசகர்களை வெறும் சும்மாவென்று எடைபோட்டுவிட அனுமதிக்க மாட்டேன். இன்றைக்கு மொபைலை நோண்டுபவர்களை விடவும் பக்கங்களை புரட்டுபவர்களையே நான் அதிகம் காண்கிறேன். இன்றைய தலைமுறையினரில் பலர் நவீன இலக்கிய வாசிப்போடு தங்களை தொடர்பு படுத்தவே விரும்புகிறார்கள். அவர்களுக்கு அதுவொரு பெருங்கனவாக உற்சாகம் அளிக்கிறது. தரிசனத்தை வழங்குகிறது. இன்றைக்கு யாருங்க புத்தகம் படிக்கிறாங்க, எல்லாரும் மொபைல நோண்டுறாங்க என்ற கூற்று பொத்தாம் பொதுவான அபத்தக் கூற்று. நான் இந்தத் தலைமுறையைச் சேர்ந்தவன். நான் வாசகன். எழுத்தாளன். வாசகர்களை மதிக்கும் எழுத்தாளன்.
3 . இது வெறுமென புத்தகம் வாங்குபவர்களின் எண்ணிக்கை குறைபாடா? அல்லது பதிப்பகங்களின் குறைபாடா?
நான் மேற்கூறிய பதிலின் தொடர்ச்சியாகவே கூறுகிறேன். புத்தகம் வாங்குபவர்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறார்கள். நாளாந்தம் இணைய வசதிகள் மூலம் புத்தகங்களை விற்பனை செய்யும் தொழில் நிறுவனங்கள் இன்று அதிகமாக உள்ளன. முகநூலின் மூலமாக புத்தகங்களை விற்பனை செய்யும், புத்தக விற்பனையாளர்களை அறிவேன். அவர்களின் மூலமும் புத்தக வியாபாரம் நன்றாகவே நடக்கிறது. இங்கே புத்தகம் வாங்குபவர்கள் குறைந்து விடவில்லை. ஆனால் பதிப்பகங்கள் போடும் எல்லாப் புத்தகங்களையும் வாங்கும் ஆட்கள் குறைந்து விட்டனர். உதாரணாமாக சில பதிப்பகங்களின் புத்தக உருவாக்கம் பற்றிய கவனமின்மை, அசட்டைத்தனம் குறித்து ஒரு புத்தக வாசகர் கவலைப்படுகிறார். பி.ஓ.டி மூலமாக உருவாக்கப்படும் சில பதிப்பக புத்தகங்களை வாங்கிவந்தால் வாசிக்கவே கண் நோகிறது. அட்டை மேலெழும்பி நிற்கிறது. வாசகர்கள் பெருமளவில் புத்தகம் வாங்கவில்லை என்று குறைப்படும் சில பதிப்பகத்தார் தங்களுடைய புத்தக உருவாக்கம் பற்றியும் கவனம் கொள்ள வேண்டும். வாசகனுக்கு வழங்கும் புத்தகம் எந்நிலையில் இருந்தாலும் பரவாயில்லை என்ற நினைப்பில் சில புத்தகங்கள் விற்பனைக்கு வருவதை எவர் தான் மறுப்பார். பி.ஓ.டி தொழில்நுட்பத்தில் மிக அருமையாக சில பதிப்பகங்கள் நூலை உருவாக்குகின்றன. அவற்றில் ஒரு கலைநேர்த்தி இருப்பதையும் நான் மறுக்கவில்லை. ஆனால் இன்றைக்கு சில பதிப்பகங்கள் வாசகனின் பணத்திற்கு மதிப்பளிக்கவில்லை. அவர்களை வாசகனின் ஆர்வத்தை ஏமாற்றுகிறார்கள். நல்ல தயாரிப்பில் புத்தகத்தை வழங்க இயலாதவர்கள், வாசகர்கள் புத்தகங்களை வாங்கவில்லை என்று குறைபட்டுக்கொள்ள அருகதையற்றவர்கள்.
ஒவ்வொரு வருடமும் பல பதிப்பகங்கள் நாட்டுடமை ஆக்கப்பட்ட புத்தகங்களை அச்சிடுகின்றன. பெருமகனார் உ.வே.சாவின் “என் சரித்திரம்” நூலை பல பதிப்பகங்களில் காணக்கூடியதாக இருக்கிறது. ஒவ்வொரு பதிப்பகத்திலும் வாங்கித்தான் ஆகவேண்டுமென எதிர்பார்த்தால் எப்படி? பதிப்பகங்கள் நாட்டுடமை ஆக்கப்பட்ட எழுத்தாளர்களை நோக்கி போவதற்கு எளிய காரணம் உண்டு. அது உருவாக்க செலவைத்தாண்டி வியாபாரத்தில் வருகிற பணம் முழுதுமே அவர்களுக்குத் தான். ஆய்வாளர் தொ.பரமசிவன் அவர்களின் படைப்புக்கள் இன்றைக்கு பல இடங்களில், பலவிதமான விலைகளில் கிடைக்கின்றன. ஒரு வாசர் தனக்குத் தோதுப்படும் விலையில், தான் விரும்பும் உருவாக்கத்தில் உள்ளதைத் தான் வாங்க இயலும் அல்லவா! புத்தகச் சந்தையில் உள்ள ஒவ்வொரு பதிப்பகத்தின் கடையிலும் தேடித் தேடி புத்தகம் வாங்குகிற வாசகர்களுக்கு இது பெரிய ஏமாற்றத்தையே தருகிறது. வாசகர்கள் புதிய வழிகளையும், புதிய திறமைகளையும் கண்டடையவே புத்தக கண்காட்சிக்கு வருகிறார்கள். அவர்களுக்கு புதிய படைப்புக்களை வழங்க தமிழில் சில பதிப்பகங்களே தீவிரமாக இயங்கி வருகின்றன. ப.சிங்காரத்தின் இரண்டு நாவல்களையும் பதிப்பிக்காத பதிப்பகங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். நான் நற்றிணை பதிப்பித்த மிக அருமையான தயாரிப்புடன் கூடிய புத்தகத்தையே வைத்திருக்கிறேன். பிறகு என்னுடைய நண்பரொருவர் பதிப்பிக்கிறார் என்பதற்காக அதனை வாங்க வேண்டுமா என்ன! வாசகர்களிடம் புதிய எழுத்தாளர்களை கூட்டி வந்து நிறுத்தமுடியாமல் பதிப்பகங்கள் பலதும் திணறுகின்றன என்பதே உண்மை. நானொரு வாசகனாக சொல்கிறேன், வாசகர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று கேள்வி எழுப்ப தகுதி படைத்தவை, சிறந்த தயாரிப்பில் சிறந்த புத்தகங்களை வெளியிடும் பதிப்பகங்களே. நாம் பதிப்புக்கும்புத்தகங்கள் விற்பனை ஆகவில்லை என்பதற்காக இன்று வாசகர்களே இல்லையென பொத்தாம் பொதுவாக கூறுவது ஒருவகையான அசட்டையின் மடக்கூற்று. சில பதிப்பகங்கள் இலக்கியத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கையையும், ஆற்றலையும், பக்தியையும் விட வாசகர்கள் அதிகமாகவே கொண்டுள்ளனர் என்பதற்கு நானொரு சாட்சி.
இந்தக் கருத்துக்களுடன் உடன்படுபவர்களும் சாட்சிதான்.
The post புத்தக விற்பனை குறைந்துவிட்டதா? first appeared on அகரமுதல்வன்.
February 11, 2024
போதமும் காணாத போதம் – 20
அவளும் நானும் முதன்முறையாக போகித்த போழ்து மழைபெருத்து இறங்கியது. அரவமற்ற இரவைத் துளிகள் பிளந்தொலித்தன. ஆவேசத்தின் வாசலில் வீசியடித்த காற்றிலும் சரீரங்களின் சுகச்சுருதி குலையாமல் வீற்றிருந்தது. அடங்காத குளிர் திசையெங்கிலும் திளைத்து தரித்தது. உயிர்த்து வீறிடும் உச்சத் தந்தியில் நறுமுகையின் கனம் தாங்கிக் கிடந்தேன். மழையின் நடுவே விழுந்து வளர்ந்தது மின்னல் எச்சம். அசதியிலும் நெரிந்து கிடந்தோம். அவிந்த புழுங்கல் அரிசியின் வாசனையைத் துளிர்த்தது ஊர்ந்திறங்கிய அவளது வேர்வை. நறுமுகை எழுந்து கூந்தல் முடிந்தாள். உடுப்புக்களைத் தேடியணிந்தாள். ஒளி குறைந்து மூலையில் தனித்திருந்த லாம்பையெடுத்து திரிதீண்டினாள். பேரொளியில் மூச்சின் நிறைவு சூழ்ந்தது. ஓயாமலும் தீராமலும் கிளர்ந்து பெருக்கும் மழையின் கனல் என்னிலேயே மூள்கிறது. நறுமுகையின் சரீரம் ஈகும் சுகந்தம் குருதிப் பூவென விரிகிறது. ததும்பிப் பெருகும் வெள்ளத்தின் ஓசையோடு நிலம் பிணைய, மீண்டும் நெளிந்து கிடந்து விழித்தோம் நம்பசி. கசியும் உடற்கிளையின் ஈரத்துடன் நறுமுகை கமழ்ந்திருந்தாள். கூடல் மகத்துவத்தின் தித்திப்பு. பசியமிழ்ந்த சர்ப்பம் போல் அசைந்தேன். நறுமுகையின் அதரங்கள் கனிந்து சிவந்தன. நீந்தி நீந்தி வளரும் மீன்தானோ காமம். எத்தனை சுழிப்புக்கள். எத்தனை உந்தல்கள். முயக்கத்தின் நரம்புகள் அலைகளாய் எழுந்து அதிர்ந்தன.
“நீங்கள் எனக்கொரு புல்லாங்குழல் வாங்கித் தருவியளோ?” நறுமுகை கேட்டாள்.
“கொஞ்ச நேரத்துக்கு முன்பு, என்னை நீ புல்லாங்குழல் என்றாயே. அது பொய்யோ” கேட்டேன்.
“அதுவும் உண்மைதான்”
“அடுத்த தடவை வருகிற போது, உறுதியாக புல்லாங்குழல் கொண்டு வருவேன்.”
“அந்த அடுத்த தடவை, எப்ப வரும்?”
“விரைவில் வரும்” என்று சொல்லி அவளிடமிருந்து விடைபெற்றேன்.
பிறகான நாட்கள் கடுமையான வேலைத்திட்டங்கள் இருந்தன. வீட்டிற்கு செல்லமுடியாமல் ஊர் ஊராகத் தங்கவேண்டியிருந்தது. மாதக்கணக்காக யாரையும் சந்திக்க முடியாமல் போயிற்று. மெல்ல மெல்ல வன்னிப்பெருநிலம் வதங்கிச் சுருண்டது. ஆக்கிரமிப்பாளர்களின் கொடும்பாதங்கள் முன்னேறி வென்றன. சமாதனத்திற்கான யுத்தம் என்றொரு நரகத்தின் இருள் எம்மில் இறங்கியது. ஊரை இராணுவம் ஆக்கிரமித்து நாட்கள் ஆகியிருந்தன. வீசப்பட்ட விதைகளைப் போல இடம்பெயர்ந்து சிதறியவர்களைத் தேடினேன். அம்மாவும் தம்பியும் சுகமாய் இருப்பதாக வழியில் கண்ட சொந்தக்காரர் சேதி சொன்னார். அவர்களிருக்கும் இடத்திற்குச் செல்ல வேண்டுமென விரும்பினேன். ஆனால் தர்மபுரத்திலிருக்கும் என்னுடைய சிநேகிதனை ஏதோவொரு திருட்டுக் குற்றச்சாட்டில் காவல்துறை கைது செய்திருப்பதாக அறிந்து, அங்கு சென்றேன். அவன் மீது சந்தேகம் மட்டுமே இருப்பதாகவும் விசாரணை முடிந்து அனுப்பி வைப்பதாகவும் சொல்லிய காவல் அதிகாரியிடம் அவன் யாரெனச் சொன்னேன். சிநேகிதன் அடுத்தநாள் காலையில் விடப்பட்டான். அவனுடைய வீட்டிற்கு வந்த காவல் அதிகாரி, ஒத்துழைப்புக்கு நன்றியும் மன்னிப்பும் என்று வருத்தம் தெரிவித்தார். நான் தர்மபுரத்திலிருந்த மாவீரர் நினைவு மண்டபத்தில் நின்று வீதியில் போவோர் வருவோரை வேடிக்கை பார்த்தேன். அதுவொரு ஆசுவாசமான செயல். நகம் கடிப்பது போல, சிறு இளைப்பாறல். இடம்பெயரும் சனங்களின் நெருக்கமான வரிசை, வீழ்ச்சியின் நிமித்தமென்று உணர்ந்தேன்.
போர் விமானங்களின் அதிர்வொலிகள் வானிலிருந்து இறங்கின. அண்ணார்ந்து பார்த்தவர்கள் பலர். வீதியின் மருங்கிலிருந்த பதுங்குகுழிக்குள் பாய்ந்தவர் சிலர். பதிந்து இறங்கிய கிபிரின் கொஞ்சம் தூரத்தில் குண்டுகள் வீழ்ந்து வெடித்தன. மூன்று போர் விமானங்கள் வீசிய ஆறுக்கு மேற்பட்ட குண்டுகளின் அதிர்வில் கிளைதரித்து நின்ற குருவிக்கூடொன்று கீழே விழுந்தது. வான் நோக்கி அலகுகளைத் திறந்து வைத்திருக்கும் குஞ்சுகளின் அப்பாவித்தனம் நினைத்து வருந்தினேன். எங்கள் குழந்தைகள் இந்தக் குருவிக்குஞ்சுகளா!
போர் விமானங்களின் மிலேச்சத்தனமான தாக்குதலில் காயப்பட்ட பொதுசனங்கள் தர்மபுரம் மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுகின்றனர் என்ற செய்தியறிந்து ஓடினேன். ஒரு சிறுமியின் குடல் சூனியத்தின் பெருவெளியில் தொங்கியது. அவளுடைய மூச்சிலும் கசிந்து வழிந்தது குருதி. நான் அவளைத் தூக்கிச் செல்லும் போது உயிர் நீத்தாள். காயப்பட்டவர்களுக்கு நிவாரணமளிக்க மருந்துகள் இல்லை. ஆனாலும் அறுவைச் சிகிச்சைகள் நடந்தன. மருத்துவமனையின் வாசலில் குவிக்கப்பட்டிருக்கும் உடலங்களைத் தாண்டி அதிவேகமாய் வந்தவொரு சிறிய வாகனத்திலிருந்து பெண்ணொருத்தி தூக்கி வரப்பட்டாள். அவளுடைய இரண்டு கால்களும் கந்தல் துணியைப் போல பிய்ந்திருந்தன. ரத்த வெடில் வயிற்றைக் குமட்டியது. அவளது கைகள் சோர்ந்து நிலத்தை தொட்டன. மருத்துவமனையின் தரையில் கிடத்தப்பட்டு அவளுக்கு சிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட்டன. கரும்புகையும் குருதிச்சேறும் அப்பியிருந்த அவளது முகத்தை துடைத்த பொழுதே நறுமுகை இவளென இனங்கண்டேன். நெஞ்சடைத்து மூச்சுக்குத் திணறினேன். அவள் பக்கமாய் ஓடிச்சென்று “என்ர நறுமுகை” என்று கதறினேன். துயரின் பாத்திரத்தில் நிறைக்கப்பட்ட பிச்சையா நம் நித்தியம்! நறுமுகை மயங்கிக்கிடந்தாள். ரத்தப்போக்கினை மருத்துவர்கள் கட்டுப்படுத்தினர் என்று நம்புவதற்கு இல்லை. அது முழுதும் தீர்ந்து போயிருந்தது.
இரண்டு நாட்கள் கழித்து சுயநினைவுக்குத் திரும்பிய நறுமுகை என்னை அணைத்து முத்தமிட்டு என்னுடைய புல்லாங்குழல் எங்கேயென்று கேட்டாள். “நான் வாங்கி வைத்துவிட்டேன், இப்போது இல்லை” என்றேன். எப்போது உன் விரைவு வருமென்று கேட்டுப் புன்னகைத்தாள். தன்னுடைய இரண்டு கால்களும் அகற்றப்பட்டது தொடர்பாக நறுமுகையிடம் எந்தவித அரற்றலும் இல்லாமலிருந்தது. அவ்வப்போது காயத்தின் வலியால் கண்ணீர் சிந்தினாள். பகலும் இரவும் அவளுடனே அமர்ந்திருந்தேன். பசுமரமொன்று விறகென ஆவதைப் போல நறுமுகையை ஆக்கியது போரா? விதியா?. யாருக்காக யார் அழுவர்.
“உனக்கு ஒன்று சொல்லமறந்து விட்டேன். என் கால்களின் எலும்புகளில் புல்லாங்குழல் செய்து வாசிப்பதைப் போல, சில நாட்களுக்கு முன்னதாக ஒரு கனவு கண்டு மகிழ்ந்தேன். உடல் பிளந்து எலும்புகளை நொறுக்கிய குண்டுச் சிதறல்களின் குரூரக் குதூகலம் என் நினைவுகளில் வெடிக்கின்றது” என்றாள்.
அவளை இறுக அணைத்துக் கொண்டேன். கண்ணீருக்கு வந்தனை செய்யும் காலத்தின் வலியுறும் சடங்கில் கரைந்தோம்.
“உன் புல்லாங்குழலுக்காகவே உயிர் பிழைத்திருக்கிறேன். எப்போது தருவாய்?”
“இடத்திற்குச் சென்று எடுத்து வரவேண்டும். நாளைக்கு செல்கிறேன்” என்றேன்.
“எனக்கு இரண்டு கால்களும் போய்விட்டதென்று மயக்கமடைவதற்கு முன்பாகவே தெரிந்துவிட்டது. நெருப்புத் திறந்து என்னை நோக்கி வருகையில் ஓடமுடியாமல் நிலத்தில் தளும்பிய குருதியின் மீது தத்தளித்தேன். அப்போது உன்னையே நினைத்தேன். நீயென்னை குருதிப் பூவென்று கூடலில் வியந்தாய் அல்லவா” என்று கேட்டு சிரித்தாள்.
நறுமுகை உருவம் அழிந்திருக்கிறாள். கதைகள் தீர்ந்து போகுமொரு யுகத்தின் பாதச்சுவட்டின் மீது அங்கவீனமாய் கிடத்தப்பட்டிருக்கிறாள். இருளின் வீறல்கள் பெருகி, வெறிக்கச் செய்யும் திகைப்புகள் விழிக்கூட்டில் திடுக்கிட்டு பதுங்கின. பிணத்தின் பிம்பமென நிலம் தவித்தது. நறுமுகைக்கு மருந்துகள் ஏற்றப்பட்டன. வெளிறிய அவளுடலில் தடமின்றி உள்ளிறங்கிய யுத்த நடுக்கங்களை வெட்டியெடுக்க முடியாது. நறுமுகைக்கு இளநீரும், தண்ணீரும் கொடுத்தேன். இடியப்பம் வாங்கிவந்து தாயார் தீத்திவிட்டாள். புல்லாங்குழலை எங்கே வாங்கமுடியும்? திசையறுந்து ரத்த நாளங்கள் அதிரும் ஊழ்வெளியில் புல்லாங்குழலைத் தேடி அலையும் பித்தன் நான். அதிகாலையிலேயே மருத்துவமனையிலிருந்து புறப்பட்டேன். ஈருருளியைப் பழுது பார்க்கவேண்டும். முன்னஞ்சில்லு அங்குமிங்கும் ஆடியது. தர்மபுரத்திலிருந்து விசுவமடு செல்லும் வழியிலிருந்த தேத்தண்ணிக் கடையில் சாயம் கூடவாப் போட்டு ஒரு தேத்தண்ணி என்றேன். வாங்கில் அமர்ந்திருந்து ஈழநாடு நாளேட்டினை அவதானமாக வாசித்துக்கொண்டிருந்தவர் “ பெடியள் என்ன செய்யப்போறாங்கள் எண்டு விளங்கேல்ல. இப்பிடி ஒவ்வொரு இடமாய் விட்டுவிட்டு பின்னால வந்தாங்கள் எண்டால், இவங்களை நம்பியிருக்கிற சனங்களுக்கு என்ன கதியோ” என்றார். ஆவி பறந்தது. தேத்தண்ணிக்கு கொஞ்சம் சீனி தேவைப்பட்டது. ஆனாலும் கசந்து குடித்தேன். புராதனச் சூரியன் கிழக்கில் எழுந்தான். பறவைகள் பகல் வானின் சிறகசைக்கும் நட்சத்திரங்கள். உதித்த பகலின் திருமுகப்பில் வன்னியின் வடிவுத் திமிர் உறக்கத் தியானம் முடித்தது. நறுமுகைக்கு ஒரு புல்லாங்குழலை எப்படியேனும் வாங்கிக் கொடுக்க வேண்டும்.
உடையார்கட்டு புலவர் மாமா வீட்டிற்கு அருகிலிருந்த இசை வித்துவானைச் சந்தித்து புல்லாங்குழல் வேண்டுமென்றேன். நான்கு புல்லாங்குழலை எடுத்து வந்து காட்டினார். பார்ப்பதற்கு வடிவான ஒன்றைத் தெரிவு செய்தேன். ஐயாயிரம் ரூபாய் என்றார். பேரம் பேசினேன். படிவதாயில்லை. அவ்வளவு காசு என்னிடமில்லை என்று கூறினேன். எப்போது ஐயாயிரம் ரூபாய் இருக்கிறதோ, அன்று வாருங்கள் தருகிறேன் என்றார். நறுமுகைக்கு நேர்ந்தவற்றைக் கூறி, அவளுக்காகத் தான் இதனை வாங்குவதாகவும் சொன்னேன். அதனாலென்ன காயப்பட்டிருப்பதாக சொல்லுகிறீர்கள் ஒரு ஐநூறு ரூபாய் குறைக்கிறேன் என்றார். என்னிடம் ஆயிரத்து இருநூறு ரூபாய் மட்டுமே இருக்கிறது என்றேன். வாய்ப்பில்லை என்று வழியனுப்பினார்.
அன்றிரவே தாவீது அண்ணாவின் வீட்டிற்குச் சென்றேன். எனக்கொரு புல்லாங்குழல் வேண்டும். அந்த வாத்தியக்காரன் இவ்வளவு விலை சொல்கிறான் என்று கடிந்தேன். தாவீது அண்ணா கடுமையான நிர்வாகப் பணி அழுத்தங்களில் இருந்தார். கிளிநொச்சி விடுபட்டால் எல்லாமும் போய்விடுமென இயக்கத்திலிருந்தவர்கள் பலர் அஞ்சியிருந்தனர். தாவீது அண்ணா எனக்கு உதவுவதாகக் கூறினார். ஆனால் நாளைக்கு காலையிலேயே தனக்கு பணியிருப்பதாகவும், முடித்துவிட்டு வருவதாகவும் கூறினார். நான் அங்கேயே தங்கியிருந்தேன். தாவீது அண்ணாவின் திருமணப் புகைப்படமொன்று பெரிய அளவில் ப்ரேம் செய்யப்பட்டிருந்தது. அண்ணியின் முகத்தில் செறிந்து இறங்கிய வடிவும் சந்தோசமும். அவள் வித்துடலாக இருந்தபோதும் இப்படித்தான் இருந்தாள். தலைவர் இரட்டை நாடி தெரிய புன்னகைத்தபடி மணமக்களோடு நின்றார்.
தாவீது அண்ணா இரவாகியும் வரவில்லை. அவர்களுக்கு இயக்க வேலைதான் முக்கியம். பிறகுதான் எல்லாமும். தாவீது அண்ணா அதிலும் மோசம். வீடு மறந்து இயக்கமே தவமென இருப்பவர். பத்து மணியிருக்கும் வாகனமொன்று வீட்டு வாசலில் நின்றது. அதிலிருந்து இறங்கிய போராளிகள் இருவர் வீட்டினுள் நுழைந்து ஆவணங்கள் சிலவற்றை எடுத்தனர். அவர்களிடம் சென்று “தாவீது அண்ணா இண்டைக்கு வரமாட்டாரா” என்று கேட்டேன். “இனிமேலும் வரவேமாட்டார்” என்றார். அய்யோ எனக்கு புல்லாங்குழல் வேண்டும். நறுமுகைக்கு என்ன பதில் சொல்வேன் என்ற பதற்றம் மட்டுமே சுழன்றடித்தது. “பெரிய பொறுப்பாளர் வீரச்சாவு என்கிறேன், நீ புல்லாங்குழல் வேண்டுமென அழுகிறாயே, உனக்கு தாவீது அண்ணாவின் மீது பாசமில்லையா” என்று போராளி கேட்டார்.
“பாசமிருக்கு. நீங்கள் சொன்ன செய்தி துயரத்தை தருகிறது. ஆனால் அவர் சாவதற்கு தயாரானவர். நறுமுகை அப்பிடியில்லை. அவளுக்கு கால்களிரண்டும் போய்விட்டது. அவளது புல்லாங்குழல் எரிந்துவிட்டது. தாவீது அண்ணாவிற்கு வீரவணக்கம். எனக்கு புல்லாங்குழல் வேண்டும். அவர் வாங்கித் தருவதாகச் சொல்லிவிட்டு போனவர். நீங்கள் அவரின் கனவுகளை, சத்தியங்களை பின் தொடர்பவர்கள் தானே. எனக்கு அந்த வாத்தியக்காரரிடமிருந்து புல்லாங்குழலை வாங்கித் தாருங்கள்” என்றேன்.
போராளியொருவர் கைதட்டிச் சிரித்தார்.
தாவீது அண்ணா வாகனத்தை விட்டு இறங்கி வந்தார்.
“ஏனடா நான் செத்துப்போனாலும் பரவாயில்லை. உன்ர ஆளுக்கு புல்லாங்குழல் வேணும். அப்பிடித்தானே”
“உறுதியாய் அப்பிடித்தான் அண்ணா” என்றேன்.
என்னை இறுக கட்டியணைத்து உன்னோடு கதைத்து வெல்லமுடியாது என்றார். பையிலிருந்து புல்லாங்குழலை எடுத்துத் தருவித்து “உன்ர நறுமுகையிட்ட கொண்டு போய்க் குடு” என்றார்.
நள்ளிரவில் புறப்பட்டேன். வீதியில் சனங்களின் நடமாட்டம் பெரிதாகவில்லை. போராளிகளின் வாகனங்கள் நிமிடத்திற்கு நிமிடம் கடந்து போயின. போர்விமானங்களின் இரைச்சல் வானத்திலிருந்து இறங்கியது. ஈருருளியை நிறுத்தி மேல் நோக்கிப் பார்த்தேன். எதுவும் தெரியவில்லை. உக்கிரமான அதிர்வோடு இரவின் கனவு குலைந்தது. மீண்டும் மீண்டும் தாக்குதல்கள் தொடர்ந்தன. ஊகத்தில் திசையுணர்ந்தேன். விசுவமடு, வட்டக்கச்சி, நெத்தலியாறு, பிரமந்தனாறு இங்கே தான் எங்கேயோ என நினைத்தேன். வழியோரத்து மரங்களின் கீழே போராளிகள் சிலர் நின்று கொண்டிருந்தனர். போர் விமானங்களின் தாக்குதலை முறியடிக்கும் படைப்பிரிவைச் சேர்ந்தவர்கள். அவர்களது பாரத்தையும் சேர்ந்து சுமந்தது இரவு.
பத்து நிமிடங்கள் கழித்து காயக்காரர்களை ஏற்றிக்கொண்டு வாகனங்கள் விரைந்து போயின. அழுகுரல்களால் நிறைந்த வழியில் தனியனாக நின்று கொண்டிருந்தேன். தெய்வமே! குழந்தைகளுக்கு எதுவும் நேர்ந்து விடக்கூடாது என்று வேண்டினேன். நான் நெத்தலியாற்றுப் பாலத்தை தாண்டும்போது வீதியில் நின்ற ஒருதொகைச் சனங்கள் “தர்மபுரம் ஆசுபத்திரியல தான் கிபிர் அடிச்சிருக்கு” என்றார்கள்.
அய்யோ! என் நறுமுகையென ஈருருளியை வேகங்கொண்டு உழக்கினேன். மருத்துவமனை எரிந்துகொண்டிருந்தது. போராளிகள் சனங்களுக்கு உதவிக்கொண்டிருந்தனர். “நறுமுகை… நறுமுகை…” என்று கதறியழுதபடி அனல் ஊற்றுக்குள் புகுந்தேன். அவள் கிடத்தப்பட்ட இடத்திலேயே இருந்தாள். தீயின் வெக்கையில் சிவந்திருந்தாள். அவளுடைய கைகளில் புல்லாங்குழலை வைத்தேன். நறுமுகை! உனக்காக வாங்கி வந்த புல்லாங்குழல். நீ இசையடி. என்னுயிரை நீ இசையடி நறுமுகை என்று சொன்னேன். அவளுடைய உதடுகள் திறவாமல் கிடந்தன. கண்கள் புல்லாங்குழலின் துளைகளைப் போல விழித்திருந்தன. யுத்தத்தின் எலும்புகள் நாம். எம்மைத் துளையிட்டு விரல் வைத்து அது ஊதுகிறது. எல்லாமும் சூனிய இரைச்சல். எல்லாமும் சூனியச் சுரம்.
குருதிப் பூவென விரிந்து தகிக்கும் இந்தத் தீ வெளியில் நறுமுகையை அணைத்துகொண்டு உதடுகளை முத்தமிட்டேன். புல்லாங்குழலிலிருந்து எழுந்தது அவளது நாதம். யுத்தம் தப்பி ஓடும் சாத்வீகத்தின் இழையை இசையால் நெய்தாள்.
“மனிதக் காயங்களில் எரியும் யுத்தம் நாதத்தினால் அழியும்”
“யுத்தம் அழியட்டும் சகியே!”
“என் குருதிக்காயத்தின் புல்லாங்குழல் துளைகளை மூடவும் திறக்கவும், யுத்தம் அழியும்”
“யுத்தம் அழியட்டும் என் குருதிப் பூவே” என்றது நானா? நிலமா? யாரறிவார்!
The post போதமும் காணாத போதம் – 20 first appeared on அகரமுதல்வன்.
February 10, 2024
தமிழுக்கு ஒளவையென்றும் பெயர்
The post தமிழுக்கு ஒளவையென்றும் பெயர் first appeared on அகரமுதல்வன்.
February 9, 2024
தமிழுக்கு ஒளவையென்றும் பெயர் – உரை – மடல்கள்
வணக்கம் அகரமுதல்வன்! மிகச் சிறப்பான உரை.நவீன எழுத்தாளர்கள் பலர் நம் தமிழின் நீண்ட நெடுங்கணக்கிலிருந்து வெகு தூரம் விலகி மேற்குலக இலக்கிய வகைமையின் வழிபாட்டாளர்களாக மாறிய நிலையில் அவ்வையின் வழி ஒரு மரபின் நினைவூட்டலாக உங்கள் உரை அமைந்துள்ளது. நான் மிகவும் ரசித்தேன். கலைஞர்களை, படைப்பாளிகளைக் கொண்டாடுவது என்பது இப்போது புதிதாக இல்லை ,சங்க காலத்திலிருந்து வருகிற சால்பு அதுவெனச் சொல்லியிருப்பீர்கள் என நினைக்கிறேன். அதுதான் உண்மை. தொடருங்கள். உங்கள் எதிர்காலம் இன்னமும் வெளிச்சம் நிறைந்தது. ஒரு மூத்த சகோதரனாக உங்களை வாழ்த்தி மகிழ்கிறேன்.
முருகேசன்உங்களுடைய உரையைக் கேட்டேன். மரபிலக்கியங்களோடு பிணைப்புக்கொண்ட நவீன இலக்கியப் படைப்பாளியாக உங்களை எண்ணியிருந்தேன். இந்த உரை அதற்கு சாட்சி.
அபிஇந்த உரையில் இயங்கும் மனம் மரபானது மட்டுமல்ல. நவீன பார்வையும் உள்ளது. “ஆறில்லா ஊருக்கு அழகு பாழ்” எனுமிடத்தில் தாமிரபரணியின் இருவகையான புலங்களின் இலக்கியத்தைச் சுட்டிக்காட்டியதுதான் நவீன பிரக்ஞை. உங்களுடைய உரையின் தொடக்கமும் முடிவும் மிகச் சிறப்பானது. அதியன் அவ்வைக்கு கொடுத்த நெல்லிக்கனியை “சாவா மருந்து” என்றீர்கள். இந்தச் சொல்லை உங்கள் உரைமூலமே தெரிந்து கொள்கிறேன்.
இந்துThe post தமிழுக்கு ஒளவையென்றும் பெயர் – உரை – மடல்கள் first appeared on அகரமுதல்வன்.
February 7, 2024
திருநெல்வேலி புத்தக காட்சி உரை
திருநெல்வேலி புத்தக காட்சியில் “தமிழுக்கு ஒளவையென்றும் பெயர்” என்ற தலைப்பில் ஆற்றிய உரை. நவீன எழுத்தாளர்கள் பெருமளவில் பங்கு கொண்டு உரையாற்றும் ஒரு முன்மாதிரிச் செயலாக இந்தப் புத்தக காட்சி அமைந்திருக்கிறது. இத்தனை ஒழுங்கு செய்த, வடிவமைத்த மாவட்ட நிர்வாகத்தினருக்கும், சான்றோருக்கும் வாழ்த்துக்கள். சுருதி தொலைக்காட்சிக்கு நன்றி. அவர்களின் ஆர்வத்தாலும் சேவையுணர்வாலும் வந்து சேர்ந்திருக்கும் காணொளி. ஆனாலும் இந்த உரை முழுமையாக பதிவாகவில்லை. உரையின் இறுதி நிமிடங்கள் காணாமல் போயிருக்கின்றன.
The post திருநெல்வேலி புத்தக காட்சி உரை first appeared on அகரமுதல்வன்.
பான் கீ மூனின் றுவாண்டா – வாசிப்பு
இவர் கதையை படிப்பவர்கள் போர் நிலத்தில் வீரனாக, குவிந்த பிணங்களின் நடுவே பிணமாக, உடல் சிதைந்து உயிருக்கு போராடுபவராகவும் மாறிப் போவார்கள். இவன் என்கிறகதை இயக்கத்தின் சட்டங்களையும், குற்றங்களுககான தண்டனையையும் பற்றி சொல்கிறது. இறக்கும் நிலையிலும் தன் நிலத்தை வீட்டு நீங்காத பாட்டியும் கதையில் வந்து போகிறார்கள். போரில் குண்டு மழை கதையெங்கும் உவமை மழை. எல்லோருக்கும் ஆச்சியின் கதைகள் உண்டு. இங்கிருக்கும் பாட்டிகள் விவசாய வேலையிலோ, டிவியிலோ, ஊர்க்கதைகளை பேசிக்கொண்டு இருப்பார். இவர்கள் ஆச்சியை விட்டு, தங்கள் தெய்வங்களை விட்டு, தங்கள் மூதாதையர்களின் தொல் பொருளையெல்லாம் விட்டு புலம்பெயர்ந்து பெயரற்ற அகதிகளாய் வாழ்ந்து மடிகின்றனர். பான் கீ முனின் றுவாண்டா என்றதலைப்பு உலக போர் குற்றங்களுக்கெதிரான கண்டனம். இவ்வளவு துயரை ஏன் எழுத வேண்டும். முடிந்து போன போரை பற்றி ஏன் எழுதுகிறார் என்று தோன்றினாலும், இன்றைக்கும் நடந்து கொண்டிருக்கும், இனி நடக்க போகும் போர்களில் அல்லல்படும் மக்களுக்காகவும் இந்த கதைகள்போல.
The post பான் கீ மூனின் றுவாண்டா – வாசிப்பு first appeared on அகரமுதல்வன்.
February 4, 2024
போதமும் காணாத போதம் – 19
ஆதா ஆடையுற்பத்தி நிறுவனத்தில் வேலை முடித்து வெளியேற இரவு ஏழு மணியாகியிருந்தது. பேருந்து தரிப்பிடத்தில் காத்திருந்தாள். உந்துருளியில் வந்து சேர்ந்தான் சமிந்த. ஏறியிருந்து அவனைக் கட்டியணைத்துக் கொண்டாள். சமிந்தவின் சீருடையில் கமழ்ந்த வாசனை நாசியை அரித்தது. லேசாக மழை துமித்தது. சமிந்தவின் தோளில் நாடி நிறுத்தி நெருக்கியிருந்தாள். அறிவியல் நகரிலிருந்து மாங்குளம் நோக்கி உந்துருளி மெல்ல விரைந்தது. ஆதாவுக்கு அப்போழ்து சுகமாயிருந்தது. இராணுவத்தினனோடு நெருக்கமாக அமர்ந்து ஆதா செல்வதை எதிர்த்திசையில் வந்த வைத்தியலிங்கம் கண்டார்.
அன்றிரவே “இவளொரு பட்டை வேஷை. ஆர்மிக்காரங்களோட படுத்து சீவியத்தைப் போக்கிறாள்” ஆதாவின் வீட்டின் முன்பாக நின்று வைத்தியலிங்கம் வெறிபிடித்துக் கத்தினார். அவரோடு கூடியிருந்தவர்களும் பக்கப்பாட்டு பாடினார்கள். அவளுடைய வீட்டின் கூரையில் கற்கள் வீசினர். நாய்கள் குரைத்தன. பதிலுக்கு எதுவும் செய்யாமல் நகத்திற்கு வண்ணப் பூச்சிட்டுக் கொண்டிருந்தாள் ஆதா. சமிந்த அவளைத் தொடர்பு கொண்டான். அடுத்தமாதம் விடுமுறையில் வீட்டிற்குச் செல்லும் போது, அவளையும் வருமாறு அழைத்தான். வெளியே நாய்களின் குரைப்பொலி இன்னும் அடங்கவில்லை. ஆதாவுக்கு என்ன சொல்வதெனத் தெரியவில்லை. பார்க்கலாமெனச் சொல்லி அலைபேசியைத் துண்டித்தாள்.
அதிகாலையில் எழுந்து மதியத்திற்கும் சேர்த்து சமைத்து, வேலைக்கு புறப்படுகையில் காலை எட்டு மணியாகியிருந்தது. பேருந்து தரிப்பிடத்திற்கு ஓட்டமும் நடையுமானாள். வைத்தியலிங்கம் தனது வீட்டுக்கு முன்பாக அமர்ந்திருந்து ஆதாவை அவர் பெயர் சொல்லியழைத்தார். அவள் பொருட்படுத்தாமல் நகர்ந்தாள். வைத்தியலிங்கம் கொதித்து வெருண்டார். “எடியே வேஷை நில்லடி. உன்ர சாமானில அவ்வளவு கொழுப்போடி” என்றார். ஆதாவுக்குள் குருதியின் ஓட்டம் கலவரப்பட்டது. இறந்தகாலத்தின் நிழல் விழுத்திய சூரியோதயமென அவ்வளவு கம்பீரமான ஒளிக்கதிர்கள் திடுமென நிலமெங்கும் விரவியது. அழியாத காயத்தின் கண்களில் நீசப்படை எதிர்த்த வனத்திமிர். எதுவும் மிச்சமற்றவளின் சலிப்புடன் வைத்தியலிங்கத்தை நோக்கி வந்தாள். நெடும்பொழுதின் புயலென ஓருதையில் கீழே வீழ்த்தினாள். மல்லாந்து விழுந்த அவனின் நெஞ்சில் கால்கள் விரித்து அமர்ந்தாள். குரல்வளையில் உயிரின் மின்சொடுக்கு ஏறியிறங்கித் தவித்தது. கூந்தல் விரிந்த ஆதாவின் கைகள் நெரித்த குரல்வளையில் ஒருநொடி அசைவின்மை. “பிழைத்துப் போ மானங்கெட்டவனே” என்ற கட்டளையில் இருமிக்கொண்டெழுந்தது வைத்தியலிங்கத்தின் உடல்.
“எப்ப பார்த்தாலும் ஒருத்தியை வேஷை, தாஷையெண்டால் தாங்குவாளோ. உவன் வைத்திக்கு இன்னும் எப்பன் கூடவா அடி கிடைச்சிருக்க வேணும்” மாடன் சொன்னதும் சூழவிருந்தவர்கள் கைதட்டம் கொட்டிச் சிரித்தனர்.
“அவளென்ன, வைத்தியலிங்கத்தின்ர நோஞ்சான் மனிசியே. இயக்கத்தில கொமாண்டோ ரெய்னிங் எடுத்தவள். பெரிய சண்டைக் காயெல்லே” மாடன் மீண்டுமுரைத்தான்.
அவள் எழுந்து மிகவேகமாக நடந்தாள். வேலைக்குப் போகப்பிடிக்காமல் பிரதான வீதியிலிருக்கும் வாதா மரத்தின் கீழே அமர்ந்திருந்து சமிந்தவைத் தொடர்பு கொண்டாள். நிர்வாக வேலையொன்றுக்காக முல்லைத்தீவுச் செல்ல ஆயத்தமாவதாகச் சொன்னான். கூடவருவதாக அவள் சொன்னாள். சமிந்த சிலநொடிகள் தயங்கி யோசித்தான் போலும்! ஆதாவுக்கு விளங்கியது. “சரி நீ போய்விட்டு வேகமாகத் திரும்பி வா. நான் காத்திருக்கிறேன்” என்றாள்.
இலைகள் உதிர்ந்தன. வீதியில் வாகனங்களின் மூர்க்க இரைச்சல். நிலத்தின் அடியில் வேட்கைச் சுவடுகளின் நடப்பொலிகள் அலைந்து ஓயமறுக்கும் சப்தத்தை கேட்டுத்துடித்தாள். நான் பிறந்தநாள் சபிக்கப்படுவதாக, என் தாயார் என்னைப் பெற்றநாள் ஆசிர்வதிக்கப்படாதிருப்பதாக! உமக்கு ஒரு பெண்பிள்ளை பிறந்ததென்று என் தாய்க்கும், தகப்பனுக்கும் நற்செய்தி அறிவித்து அவர்களை மிகவும் சந்தோசப்படுத்தினவர்கள் சபிக்கப்படக்கடவர். என் தாயார் எனக்குப் பிரேதக் குழியும், நான் என்றைக்கும் பிரசவியாத சூழலுமாய் இருக்கும்படியாய் கர்ப்பத்திலே நான் கொலை செய்யப்படாமற் போனதென்ன? என்று கலங்கினாள். ஒளியுள்ள ஒரு மேகம் அவள் மேல் நிழலிட்டது. யுத்தம் சூதாடிக் கழிந்த சபையில் மிச்சம் வைக்கப்பட்ட கிருஷ்ணை. விடுதலை யாகத்தின் தீயில் தோன்றியவளின் முன்பாக எல்லாச் சிறுமைகளும் சாம்பலாகும். கருக்கலின் பாதையில் சமிந்த வருவது தெரிந்தது. விம்மிக் கசியும் தனது விழிகளைத் துடைத்து பெருமூச்செறிந்தாள். ஆவேசமாகச் சுழன்று வீசிய காற்றில் புழுதி கிளம்பியது. தூசெழுந்த வெளியில் வாதையின் சிலுவை சுமந்து நின்றாள் ஆதா!
சமிந்த யுத்தக் களத்தில் பெரிய அனுபவம் கொண்டவனல்ல. ஆனாலும் இறுதியாக நடந்த யுத்தத்தில் பங்கெடுத்திருக்கிறான். புதுக்குடியிருப்பு பகுதியில் போராளிகளோடு நடந்த மோதலில் காயப்பட்டுமிருக்கிறான். ஆதாவுக்கும் அவனுக்குமிடையே காதல் பிறந்த தொடக்க நாட்களில் இருவரும் தங்களுடைய போர்முனை அனுபவங்களை கதைப்பது வழக்கமாயிருந்தது.
***
ஒருநாள் இருவருமாகச் சேர்ந்து புளியம்பொக்கணை நாகதம்பிரான் கோவிலுக்குச் சென்று திரும்பிய மாலைப் பொழுதில் மழை பெய்யத் தொடங்கிற்று. இருவரும் தொப்பலாக நனைந்து வீடு திரும்பினர். அவளை வீட்டில் இறக்கிவிட்டு இராணுவ முகாமிற்கு செல்ல ஆயத்தமானான் சமிந்த. ஆனால் அவனை வீட்டிற்குள் வருமாறு அழைத்தாள். சமிந்த வேண்டாமென மறுத்தான். தன்னால் ஆதாவுக்கு எந்தக் கெட்ட பெயரும் வந்துவிடக்கூடாதென எண்ணினான். பொழியும் தூரவானின் பொருள் விளங்கிய காதலின் பாலிப்பு. சமிந்தவின் தலையைத் துவட்டிவிட்டு ஆடைகளை மாற்றுமாறு பணித்தாள். ஏற்கனவே அவனுக்கு வாங்கி வைத்திருந்த புத்தாடைகளைக் கொடுத்தாள். சுகநாதம் சூடிக்கொண்ட கூந்தலாய் அப்பொழுது குளிர்ந்தும் உலரத்தொடங்கியது. சமிந்த ஆடையை மாற்றும் போதுதான் முதுகிலிருந்த காயத்தழும்பைக் கண்டாள்.
“சமிந்த, இதுதான் புதுக்குடியிருப்பு காயமா?” என்று தழும்பைத் தொட்டுக் கேட்டாள். அவன் ஓமெனத் தலையசைத்து, உங்களுடைய “பசீலன் ஷெல்தான்” சொல்லிச் சிரித்தான்.
“நீங்கள், எங்களைக் கொல்ல இஸ்ரேல், இந்தியாண்டு ஓடியோடி ஆயுதம் சேர்க்க, நாங்கள் மட்டும் பனை மட்டையை வைச்சு உங்களைச் சுட ஏலுமோ. அதுக்குத் தான் இதுமாதிரியான ஏற்பாடுகள் எல்லாம். எங்கட ஒரு பசீலன் ஷெல்லுக்கு முன்னால உங்கட ஆயுதங்கள் எல்லாம் கொஞ்சம் சிறிசு தான்” ஆதா சொன்னாள்.
“பட்ட எனக்கு நோவு தெரியும். நீ சொல்வதை ஒத்துக்கொள்கிறேன்” என்றான் சமிந்த.
இருவரும் ஒன்றாக அமர்ந்திருந்து தேத்தண்ணி அருந்தினர். அரியதரமிரண்டையும் எடுத்து வந்து கொடுத்தாள். “கொஞ்சம் இனிப்புக் குறைந்து போய்விட்டது, அடுத்த தடவை சரியாய் செய்வேன்” என்றாள். மழை குறையவேயில்லை. வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சமிந்தவின் உந்துருளியைப் பார்த்துச் சென்ற சிலர், அந்த மழையிலும் விடுப்புக் கதைத்துக் கொண்டு போயினர்.
வெளியிலொரு வெளியிருப்பதை வீட்டினுள் இருந்த இருவரும் மறந்தனர். ஆதா தன்னுடைய போர்முனை அனுபவங்களின் சுவாரஸ்யமான கதைகளைச் சொல்லிக் கொண்டிருந்தாள். ஐந்து தடவைகளுக்கு மேலாக களத்தில் விழுப்புண் அடைந்ததை அறையதிரும் வண்ணமுரைத்தாள். இனியும் என் நிலத்திற்காக அழுது துக்கங்கொண்டாடுவேன்; வனாந்தரத் தாபரங்களுக்காகப் புலம்புவேன். புகையிட்டு வேட்டையாடும் தேனடை போல பொஸ்பரஸ்களால் இரையாக்கப்பட்ட உடல்களின் மீந்த துண்டு நான். ஆகாசத்துப் பறவைகளும் மிருகஜீவன்களும் ஓடிச் சிதறிப்போன என் தேசம் யாராலும் கடந்து போகாதவண்ணமாக பாழாக்கப்பட்டுக் கிடக்கின்றது. என் காயங்களின் மீது நட்சத்திரங்கள் நிரம்பியிருக்கின்றன. அவையொருநாள் அதிகாலை வானில் விடியலோடு ஒளிரும் என்றாள். சமிந்த அவளைத் தன்னோடு அணைத்துக்கொண்டான். பேரூழின் அவயங்கள் நதிமறந்து நீந்தத்தொடங்கின. ஆதாவின் மேனி திறந்தது. தீயின் சண்டமாருதம் இறங்கி அமர திடுமென மழை விட்டது. ஆதாவின் வீட்டுப்படலையை தட்டும் சத்தம் கேட்டு விழிப்புச் சீவியது. ஆதா ஆடைகளை சரிசெய்தபடி கதவைத் திறந்து வெளியேறினாள். வாடியுதிர்ந்த முகத்தோடு பிச்சை கேட்டு நின்றாள் சிறுமியொருத்தி. அவளுடைய தந்தை இரண்டு காலுமற்று முச்சக்கர சைக்கிளிலிருந்தார். தன்னிடமிருந்த காசையும், சமிந்தவிடமிருந்த காசையும் வாங்கி வீட்டிலிருந்த உணவுப் பொருட்களையும் கட்டிக்கொடுத்தாள்.
“மலர்களை ஏந்திநின்று புன்னகைக்க வேண்டிய இந்தச் சிறுமியின் கையில் திருவோட்டைக் கொடுத்து, பிச்சை கேட்க வைத்தது யுத்தம்தான். நீ அதனை உணர்கிறாயா சமிந்த?” ஒத்துக்கொள்வதைப் போல தலையாட்டினான் அவன்.
***
இன்றைக்கு காலையில் வைத்தியலிங்கத்தை அடித்ததை சமிந்தவிடம் சொன்னாள். முல்லைத்தீவுக்குச் சென்று திரும்பிய களைப்பிலிருந்தவனுக்கு அவள் சொன்னதைக் கேட்டதும் கலக்கமாயிருந்தது. அவன் உயிருக்கு ஏதும் தொந்தரவில்லையே என்று கேட்டான். செல்லமாக அவனுடைய காதைப்பிடித்து திருகி “என்னைப் பார்த்தால் கொலைகாரி மாதிரியா இருக்கு?” என்று கேட்டாள்.
“இல்லையா பின்ன. ஒருநாள், நீ எத்தனை ஆர்மிய சுட்டுக்கொன்றிருப்பாய் என்று கேட்ட போது, நானூறுக்கும் மேலே இருக்கும் என்றாயே”
“ஓம். ஆனாலும் இந்த எண்ணிக்கையில் இப்போது ஒன்று அதிகமாக வாய்ப்பிருக்கு” என்றாள்.
“இனியுமா!”
“ஓம், இப்ப நினைச்சாலும் – இந்தக் கணமே நானூற்று ஒன்றாய் ஆக்குவேன்” என்று விளையாட்டாக அவனது குரல் வளையைப் பிடிக்கப்போனாள்.
சமிந்த அவளை இறுக அணைத்துக் கொண்டான். இருவர் உயிருனுள்ளும் ஊர்ந்து தொங்கும் மதுரக் குலையிலிருந்து ஏந்தவியலாதபடிக்கு துளிகளின் சொட்டுதல். விரல்கள் நெய்யும் துணியென உடல்கள் விரிந்தமை பெரிய ஆறுதலாயிருந்தது. காலாதீதத்தின் நறுமணம் உதடுகுவித்து இருவரையும் முத்தமிட்டது. கனவில் தளிர்த்துப் பெருகும் சுடர் செடியைப் போல சமிந்தவின் சரீரத்தில் நீண்டிருந்தாள் ஆதா. அவர்கள் எப்போதும் சந்தித்துக் கொள்ளுமிடமிது. எவரின் வருகையும் நிகழாத துரவடி. தண்ணீரும் மரங்களும் சாட்சியாய் நாணமுற்று பார்க்க கூடினர். ஆதாவின் சரீரத்துக் காயத்தழும்புகள் போரின் கொம்புகள். மொழியின் தொன்ம எழுத்துக்கள். வயிற்றைக் குறுக்கறுத்து கொழுத்த நீளமெழுகுப் புழுவெனத் திரண்டிருக்கும் தழும்பின் மீது சமிந்த கைகளைப் பதிந்தான். கற்பாறையின் தகிப்பு. விசுக்கென கைகளை மீட்டான்.
“என்ன! தாங்கமுடியாதபடி சுடுகுதோ” ஆதா கேட்டாள்.
“ஓம் ஏன் இப்பிடிச் சுடுகுது” என்றான்.
“இது என்ர கடைசிக் காயம். இரணைப்பாலையில நடந்த சண்டையில வந்தது. மிச்ச எல்லாக் காயத்துக்கும் ஒரு நம்பிக்கை இருந்தது. ஆனால் இதுக்கு எதுவும் இல்லை. எல்லாமும் தலைகீழானதற்கு பிறகு, கனவும் பசியுமாக தியாகத்தின் முன்னே பலிகொடுத்த குருதியூற்று இங்கிருந்துதான் பீறிட்டது.” என்றாள்.
சமிந்த அந்தக் காயத்தின் மீது முத்தம் ஈன்றான். இருவரில் பெருகும் கண்ணீரால் சரீரங்கள் சிலும்பின. உலை மூண்டு கொதித்தது. பட்டயங்களும், துப்பாக்கிகளும், ஆட்லறிகளும், வன்புணர்வுகளும், பெருங்கொடுமைகளும், போரும், போராட்டமும், மிலேச்சத்தனங்களும் இருளில் நின்று மிரண்டு பார்த்தன. கூடலின் முயக்கவொலியில் அலையோசை கனன்று பெருங்கடல் தாகித்தது.
“நீயும் நானும் காதலிப்பதை உன்னுடைய ஊரவர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். வைத்தியலிங்கம் மாதிரியானவர்கள் கடுமையான வசவுகளால் உன்னைத் திட்டுகிறார்கள். எனக்காக நீ எவ்வளவு துன்பப்படுகிறாய் என்று நினைத்தால் பெருந்துயரமாய் இருக்கிறது” சமிந்த சொன்னான்.
“துயரப்படு. சனங்கள் கோபப்படுவதில் நியாயம் இருக்கிறது. தலைமுறை தலைமுறையாக எங்களை வன்புணர்ந்து கொன்று புதைத்த வன்கவர் வெறிப்படையைச் சேர்ந்தவன் நீ. அவர்கள் சந்தேகப்படுவார்கள். எதிர்ப்பார்கள். உன் பொருட்டு என்னையும் விலக்குவார்கள். அது சரியானதுதான்”
“இவ்வளவு நெருக்கடிக்கு மத்தியில் நாம் ஏன் காதலித்தோம் ஆதா!”
“படபடக்காதே. காதலிப்பதற்கு நெருக்கடிகள் அவசியமானவைதான். நீயும் நானும் வாழ்ந்து முடியும் வரை நெருக்கடிகள் நீளும் பெலன்கொண்டவை. அதற்காக…அழிந்து போன போரின் தனிமையை நீ விட்டுச் செல்வாயா, சொல்!”
“போரின் தனிமையா?”
நீ புணர்ந்து பருகிய தழும்பின் நறுமணம் சுரந்த உன்னுடைய ஆதா போரின் தனிமையல்லாமல், வைத்தியலிங்கம் சொன்னதைப் போல வேஷையில்லை என்பது உனக்குத் தெரியாதா!
“ஆதா!”
என் தனிமையின் வெறுமை எரியட்டும். அதன் சடசடப்பொலியில் எறிகணைகள் வீழ்ந்து தோன்றிய பள்ளங்கள் தூர்ந்து போகட்டும். என் கடைசிக்காயத்தின் தழும்பில் முத்தம் ஈன்று மூர்ச்சையாகும் வரை இயங்கி முயங்குவோம் என்றாள்.
ஆதா!….எறிகணைகள் வீழ்ந்து வெடிக்கும் சத்தம் கேட்கிறது.
“எனக்கும் கேட்கிறது. ஆனால் நாம் எதிரும் புதிருமாய் போரில் மிஞ்சியவர்கள். இனிமேலும் காயப்படமாட்டோம் பயப்பிடாதே” என்ற ஆதாவின் வார்த்தைகள் நிலத்திற்கு ஆசுவசமாய் இருந்தது.
The post போதமும் காணாத போதம் – 19 first appeared on அகரமுதல்வன்.
சைவத் திருமுறைகள்
சைவத்தை அறியாதோர் தமிழறியாதோர் என்றே சொல்லிவிடலாம். தமிழில் சிந்திக்கும் ஒவ்வொருவருக்கும் உரிய வகுப்புகள் இவை. சைவம் போன்ற ஒரு மெய்யியல் வெளியை இப்படி ஒரு முறையான ஆசிரியரும் பயிற்சிவகுப்பும் இன்றி எவரும் உள்நுழைந்து கற்கவும் இயலாது. அந்நுழைவு வாழ்நாள் முழுக்க நீடிக்கும் ஒரு பயணத்தின் தொடக்கமும் ஆகும்.
ஆர்வமுள்ளவர்கள் தொடர்புகொள்க
programsvishnupuram@gmail.comThe post சைவத் திருமுறைகள் first appeared on அகரமுதல்வன்.
February 2, 2024
சம்பவங்கள், சொலவடைகள், தரிசனங்கள் – எஸ்.ஜே.சிவசங்கர்
தனிநபர் அனுபவம், வாழ்க்கை தரிசனம், அறநெறிகள், பொது நீதிகள், சமூக விதிகள். இவையல்லாமல் தனிமனித உளவியல், சமூக உளவியல், ராசி, நட்சத்திரம், சாதி தொடர்பான சொலவடைகளும் ஏராளம். வசைகள் சொலவடைகளில் இயல்பாக புழங்குகின்றன. சொலவடைகளின் புனைவு அம்சம் கச்சிதமாகவும் உலகப்பொதுவாகவும் இருப்பது பிரமிப்பைத் தருகிறது எனினும் இனவாதம், பெண் வெறுப்பு, அடித்தள மக்கள், பெண்கள், சில குறிப்பிட்ட சாதியினர் பெரும்பாலான சொலவடைகளில் கீழ்த்தரமாக சித்தரிக்கப்படுதல் ஆகியன பொதுப்பண்புகளாய்ப் பயின்று வருகின்றன. நிலவுடமைக்கால மதிப்பீடுகளே சொலவடைகளில் ஓங்கி நிற்கின்றன என்பதை கிராமப் பண்பாட்டின் ஓர் அங்கமாகவே புரிந்துகொள்ள முடிகிறது. சொலவடைகள் தோன்றிய காலத்தின் கருத்துருக்கள் அவற்றில் மேலோங்கி நிற்பது இயல்பே.
https://www.kurugu.in/2023/07/sambavangal-sj-sivashankar.html
The post சம்பவங்கள், சொலவடைகள், தரிசனங்கள் – எஸ்.ஜே.சிவசங்கர் first appeared on அகரமுதல்வன்.
அகரமுதல்வன்'s Blog
- அகரமுதல்வன்'s profile
- 17 followers

