அகரமுதல்வன்'s Blog, page 23
March 1, 2024
லாஜிக்
தீவிரமாகத் திரைப்படங்கள் பார்த்து இரண்டு மாதங்களுக்கு மேலாயிற்று. ஒரு கட்டத்தில் ஓ.டி.டி தளங்களில் சரணாகதி அடைந்திருந்தேன். மெல்ல மெல்ல அங்கிருந்தும் விலகிவிட்டேன். அதுவொரு மாயச்சுழி போல மீளமுடியாது கால்களைப் பின்னி இழுத்துக் கொள்கிறது. சிறந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாகும் இணையத் தொடர்கள் சிலவற்றை ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் பார்த்திருக்கிறேன். எல்லாமும் பாடம். முன் தயாரிப்புக்களிலிருக்கும் இணையத் தொடர்கள் சிலவற்றில் திரைக்கதை சார்ந்த பணிகளில் ஈடுபட்டு வருகிறேன். நம்முடைய சினிமா சிந்தனையில் இணையத் தொடர்களின் பண்பாட்டைப் புரிந்து கொள்ள நாட்களாகுமென்றே தோன்றுகிறது.
சமீபத்தில் தமிழ் திரைப்பட இயக்குனர் ஒருவரோடு பணிசார்ந்து உரையாட வேண்டியிருந்தது. அவர் இணையத் தொடர்களுக்கான தன்னுடைய ஐடியாக்களைச் சொன்னார். ஒன்று கூடத் தேறாது. பாகவதர் காலத்தை விடவும் பழைய கதை. அவரிடம் இப்படியேதான் என்னுடைய கருத்தை வெளிப்படுத்தினேன். கடுமையாக கோபித்துக் கொண்டார். உங்களுக்கு சினிமாவைப் பற்றி என்ன தெரியும்? எழுத்தாளர்களுக்கு சினிமா தூரம் என்றார். நானும் விடுவதாயில்லை, “ஒரு இயக்குனருக்கே இவ்வளவு தூரமாய் இருக்கிற சினிமா, எழுத்தாளனை மட்டும் நெருங்கியா இருக்கும்” என்றேன். எதுவும் சொல்லவில்லை. சிப்பந்தியை அழைத்துச் சுடுதண்ணி வேண்டுமென்றார். எனக்குத் திகிலாகிவிட்டது. சுடுதண்ணியை என் மேல் ஊற்றவும் வாய்ப்புள்ளது என்றது என்புத்தி. என்னுடைய குரலில் ஒருவகையான குழைவை நெய்து” நான் சொன்னது உங்களைச் சீண்டியிருந்தால், மன்னிக்கவும்” என்றேன். இதுவும் அவரைச் சீண்டியிருக்கும் போலே, முகம் இன்னும் இறுக்கமாகியது.
நான் திரைப்பட கதை விவாதங்களில் எப்போதும் கடைப்பிடிக்க விரும்புகிற பழக்கமெனில் அது அசடுகளை ஏற்காதிருப்பது. எந்தச் சம்பந்தமுமில்லாமல் வம்புகளையும், வீண் கதைகளையும் சொல்லிக்கொண்டேயிருப்பதை மறுப்பேன். இருபதாண்டுகளுக்கு மேலாக திரைக்கதை விவாதத்திற்கு மட்டுமே சென்றுவரும் பழம் தின்று கொட்டை போட்ட வகையினர் பலரை அறிந்திருக்கிறேன். இப்பூமியில் அவர்கள் அறியாதது எதுவுமில்லை. எல்லாவற்றைக் குறித்தும் ஒரு துணுக்கேனும் தெரிந்து வைத்திருப்பார்கள் என்று நம்புமளவுக்கு கதைகளை அளந்து விடுவார்கள். அவர்கள் காலங்காலமாக ஒரு மரபின் தொடர்ச்சியாக கனவு உலகில் கரைந்த நிழல்களாக பிறக்கிறார்கள்.
சமீபத்தில் ஒரு இணையத் தொடர் கதை விவாதத்தில் கலந்து கொண்டேன். முன்னைப் போலில்லை இன்றைக்கு எழுத்தாளனுக்கு திரையுலகில் மவுசு அதிகம்தான். எழுத்தாளன் என்றதும் “அப்படியா! நான் கூட புத்தகங்கள் வாசிப்பேன். கொஞ்ச நாட்களுக்கு முன்பாக கூட ஒரு புத்தகம் வாசித்தேன். ஆனால் தலைப்புத்தான் மறந்துவிட்டது. நல்ல புத்தகம் சார்! ” என்று சொல்வதற்கு ஒருவரேனும் இருப்பார். அவர் படிக்காவிட்டாலும் அந்தப்பொய் ஒரு சிநேகிதத்தை உருவாக்கிறது. ஒரு தேநீர் கூட்டாளியை அளிக்கிறது என்று அமைதி அடைய வேண்டியதுதான். கதைவிவாதம் தொடங்கி ஐந்து நாட்களும் உருப்படியாக நான்கு காட்சிகள் கூட தேற்றமுடியவில்லை. இயக்குனரிடம் சொல்லி எச்சரித்தேன். இப்படியாக இவர்களை அனுமதித்தால், உங்கள் வாழ்க்கை கெட்டுப்போய்விடுமென விழிப்புறச் செய்தேன். அந்த இயக்குனர் மறந்தும் இலக்கியம் வாசிக்காதவர். எப்போதாவது தமிழுக்குத் தியாகம் செய்ய விரும்பினால் எழுத்தாளர் சுஜாதாவின் ஒரு குறுநாவல் தொகுப்பை வாசிப்பார். அதே தொகுப்பை மட்டும்தான் அவர் வாசிக்கிறார். பல தடவைகளை அதைப்படித்து முடிக்க எண்ணினாராம். ஆனால் இன்னும் முடியாமல் இருக்கிறதாம். அவ்வளவு அழுத்தமான கதையாம். கதையாம்!
இந்த இயக்குனர் உலகத் திரைப்படங்களின் உள்ளூர் அம்பாசிடர். பல்கேரியா முதல் சுமேரியா வரை எடுக்கப்படும் படங்களை ஒன்றுந்தவறாமல் பார்த்திருக்கிறார். ஒரு பேச்சுக்கு இந்தக் காட்சியில் வருகிற உரையாடல், ஒட்டுமொத்த தொடரின் கதையிலிருந்து விளகியிருக்கிறதெனக் கூறினால், “விலகியிருக்கட்டுமே. அப்படி இருந்தால் என்ன தப்பு. நான் எடுக்கிறது உலக சினிமா. அதைப் புரிகிறவன் புரிந்து கொள்ளுவான்” என்பார். அன்றைக்கு கதை விவாதத்தில் தேவையற்றதொரு காட்சியை நீக்குமாறு கூறினேன். அவருக்கு அது முக்கியமெனக் கூறினார். அது ஏன் தேவையற்றது என விளக்கிச் சொன்னேன். அவர் மேற்கொண்டு என்னிடம் உரையாட விரும்பவில்லை. ஏனையோரின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். மாலையில் தேனீர் இடைவேளையின் போது என்னிடம் ஏதோ பேசமுயன்றார். ஆனாலும் நான் இடங்கொடுக்கவில்லை. தொடர்ந்த கதை விவாதத்தில் மூன்று நாட்களுக்குப் பிறகு இந்த எபிசொட்ல, சார் சொன்னாரில்லையா, அந்தக் காட்சியை தூக்கிறதுதான் சரின்னு தோணிச்சு எடுத்திட்டேன்” என்றார். நான் எதிர்வினை எதுவும் செய்யவில்லை. முகத்தைக் கொஞ்சம் இறுக்கமாக வைத்திருந்தேன்.
“சார்.. வெப் சீரிஸ் வேற மாதிரி எடுத்திட்டு இருக்காங்க. நாம லாஜிக் தேடிக்கிட்டு இருக்கோம்” என்றார்.
“வேற மாதிரின்னா?” கேட்டேன்.
“இல்ல சார். அவ்வளவு லாஜிக் பார்க்க வேண்டாம்னு தோணுது”
சரி. பாக்காதீங்க. ஆனா…ஆடியன்ஸ் லாஜிக் பாப்பான். அதுக்கு ஒரு வழியிருக்கு. நீங்க இப்ப எங்கிட்ட சொன்னீங்களே. “இல்ல சார். அவ்வளவு லாஜிக் பார்க்க வேண்டாம்னு தோணுது” அந்த வசனத்தைப் போட்டிட்டு ஒவ்வொரு எபிசோட்டையும் ஆரம்பியுங்க” என்றேன்.
அவருடைய முகம் லாஜிக்கே இல்லாமல் சுருங்கிப்போனது. என்ன இயக்குனரே சத்தத்தைக் காணோம் என்றேன். “நான் சொன்னதுக்கு ஏதாவது லாஜிக்க மனசுக்குள்ள தேடிக்கிட்டு இருக்கீங்களா” கேட்டேன்.
நாளையிலிருந்து இந்தக் கதை விவாதத்தில் நான் தொடரப்போவதில்லையென எனக்குத் தெரியும். ஏனெனில் உலக சினிமாவின் அம்பாசிடரிடம் சென்று லாஜிக்க பாருண்ணு சொன்னது மகா குற்றம். ஆனாலும் ஒன்றை சொல்லி அன்றைக்கு அலுவலகத்தில் விடைபெற்றேன்.
“இயக்குனரே! நீங்க எடுக்கப் போறது படமில்ல. வெப் சீரிஸ். அதுக்குண்ணு ஒரு திரைக்கதைப் பண்பு இருக்கு. அதை முழுசா தெரிஞ்சுக்காட்டியும் பரவாயில்லை. நல்ல வெப் சீரிஸா கொஞ்சத்தைப் பார்த்தாலே புரிஞ்சிடும்” என்றேன்.
“ஏங்க, நீங்க வேற. உலக சினிமாவில இல்லாதத என்னத்த இங்க சொல்லப்போறாங்க. சொல்லுங்க. இதெல்லாம் ஒண்ணுமேயில்ல. சூப்பரா பண்ணி முடிச்சிடலாம்” இயக்குனர் சொன்னார்.
இன்றைக்கு அவர் எழுதிய இணையத் தொடரின் திரைக்கதையை வாசித்துச் சொல்லுமாறு என்னை அழைத்திருந்தார்.
“உலக சினிமாவில இல்லாதத என்னத்த இங்க சொல்லப்போறாங்க, சொல்லுங்க. இதெல்லாம் ஒண்ணுமேயில்ல. சூப்பரா பண்ணி முடிச்சிடலாம்” என்றேன்.
அழைப்பைத் துண்டித்துவிட்டு ஒரு தகவல் அனுப்பியிருந்தார்.
“சார்! ப்ளீஸ் கொஞ்சம் படிச்சு சொல்லுங்க. உங்க பீட்பேக் ரொம்ப முக்கியம் எனக்கு”
பதிலுக்கு நானும் அனுப்பினேன் ” இல்ல சார். அவ்வளவு லாஜிக் பார்க்க வேண்டாம்னு தோணுது. நன்றி”
The post லாஜிக் first appeared on அகரமுதல்வன்.
February 29, 2024
லிபி ஆரண்யா கவிதைகள்
அன்றாடங் காய்ச்சி
கவிதையில்
அன்றாடத்தை
எழுதலாமா
என்கிறாய்
எழுதலாம் தான்
அதுவே
அன்றாடமாகிவிடக்கூடாது
அன்பே.
துக்கடா
திரியை நிமிர்த்தித்
தீ வளர்ப்பாய்
பின்
னொரு
மலரை
யொற்றிச்
சுடரணைப்பாய்.
மஞ்சள் பூத்த சிறுகற்குறிப்புகள்
ஒரு கைக்குட்டையளவு மிகுனும்
துணி துவைக்கும் எந்திரத்திலிருந்து
அதன் கனைப்பொலி கேட்பதை
நானும் கவனித்திருக்கிறேன்
நமது நிலத்திலிருந்து
அந்தச் சின்னக் குதிரைகளை
விரட்டியது யார்
பெருக்கெடுத்த ஓடைகளை
நுரைத்த ஆறுகளை
தளும்பிய குளங்களை
உடைப்பெடுத்த கண்மாய்களைத்
தன் முதுகிலேற்றிக் கொண்டு
மீளாப் பாதையில் தடங்களற்றுப்
போயே போயின ஏன்
தம்மைப் போஷித்த கருணையை
சாதிச்சொல்லெறிந்து
அவமதித்தவர்களுக்கெதிரான
வசைக் குறிப்புகளை
வறண்ட நீர்நிலைகளின் சிறுகற்களில்
அவை விட்டுச் சென்றிருக்கக்கூடும்.
The post லிபி ஆரண்யா கவிதைகள் first appeared on அகரமுதல்வன்.
February 28, 2024
மகாயானத்தின் துவக்கம் – ஆனந்த குமாரசுவாமி
புத்தருடைய இந்தப் பிறவிக்கு முந்தைய மூன்று பிறவிகள் அவருக்கு முந்தைய நிஜ ஆசிரியர்களின் நினைவைக் குறிப்பவை. அம்மூன்று பிறவிகளும் இந்த யுகத்தைச் சேர்ந்ததாக சொல்லப்பட்டாலும், அவர்கள் வெகு காலத்திற்கு முன் பிறந்தவர்கள். பெரும்பாலும் அனைத்து முற்பிறவி புத்தர்களும் ஒரே கோட்பாட்டையே முன்வைக்கின்றனர் என்பது சுவாரஸ்யமானது. அந்தக் கோட்பாடு பிராமணிய பார்வையான வேதத்தின் அபௌருஷ்யம் என்ற கோட்பாட்டை ஒத்தது. அபௌருஷ்யம் என்றால் கேட்கப்பட்டது என்று பொருள், படைக்கப்படாதது, ரிஷிகளால் சிருஷ்டிக்கப்படாதது. ’உண்மையின் காலாதீதமான ஒருமை’ மீதான இந்த நம்பிக்கை இந்திய மரபுகள் பலவற்றில் பகிரப்பட்டிருப்பது மிகமுக்கியமான ஒன்று.
https://www.kurugu.in/2024/01/mahayana.html
The post மகாயானத்தின் துவக்கம் – ஆனந்த குமாரசுவாமி first appeared on அகரமுதல்வன்.
February 25, 2024
போதமும் காணாத போதம் – 22
கடலின் முன்னே விரிந்திருக்கும் அடர்ந்த காட்டினுள்ளே குருதி கசிந்துலரா சரீரத்தோடு மூச்சடங்கி கிடந்தாள். அவளது வலதுகரம் திடுமென உயர்ந்து என்னை அழைத்தது. குண்டியிலிருந்து வழியும் காற்சட்டையைப் பிடித்தபடி அவளிடம் ஓடினேன். எனது கையைப் பற்றித் சிரசில் வைத்தாள். அவளது உச்சியில் உலோகத்தின் கொதி. பிடரி பிளவுண்டு மண்ணால் அடைக்கப்பட்டிருந்தது. சரீரத்தை தூக்கியபடி கடலை அடைந்த கணத்தில் மூச்சற்றாள். கடலில் வீசினேன். அலையின் ஒவ்வொரு மடிப்பிலும் உடல் சுருண்டு கடலுக்குள் போவதும் கரையொதுங்குவதுமாயிருந்தது. கழுகுகள் வானத்திலிருந்து கடல் நோக்கிச் சரிந்தன. அவற்றின் கால்களிலிருந்து ராட்சதக் குண்டுகள் வீழ்ந்து வெடித்தன. ஒரு பேரோசை எழுந்தது. அவளின் குரல் எழுந்து மடிந்தது. காலுக்கடியில் கிடந்த சிப்பியையெடுத்து கடல் மீது வீசினேன். கடலில் மிதக்கும் சரீரத்தில் அந்திச் சூரியன் சாய்ந்தது. அவளது கைகள் வான்நோக்கி உயர்ந்து சூரியனை அறைந்தன. ஒளி மங்கியது. இருண்ட பூமியில் மிதந்துகொண்டே இருந்தாள் சித்தி. இக்கனவை அம்மாவிடம் சொன்னேன்.
“எப்ப பாத்தாலும் உன்ர கனவிலதான் அவள் வாறாள். என்ர கண்ணிலேயே அவளின்ர உருவத்தைக் காட்டமாட்டாள் போல” அம்மா சொன்னாள்.
“நாளைக்கு கனவில சித்தி வந்தால், அம்மா இப்பிடி சொல்லிக் கவலைப்படுகிறா, அவாவிட்டையும் போங்கோ என்று சொல்லுறன்” என்றேன்.
“உந்த வாயாடித்தனம் அவளிட்ட இருந்துதான் உனக்கு தொத்தினது. அவளும் இப்பிடிக் கிரந்தங்கள் கதைச்சு கடுமையா பேச்சு வாங்கியிருக்கிறாள்”
“ஆரிட்ட?”
ஆரிட்ட வாங்கேல்ல சொல்லு. ஒருக்கால் தம்பியின்ர சந்திப்பில தளபதிமாரவே கூடி நிக்கேக்க ஈகை சொல்லியிருக்கிறாள் “ அண்ணை, உந்தக் குடாரப்பு தரையிறக்கச் சண்டை வெற்றியில “லீமா”ன்ர புத்தி எவ்வளவு முக்கியமானதோ, அதுமாதிரி இராணுவத்தின்ர புத்தியின்மையும் முக்கியமானது. ஏனெண்டு சொன்னால் அவங்கள் சண்டை செய்யிறதப் பார்த்தால் எங்களுக்கு பாவமாய் இருந்தது. ஏதோ வேட்டைத் திருவிழாவுக்கு வேஷம் போட்டுக்கொண்டு திரியிறவே மாதிரியெல்லே வந்தவே” என்றிருக்கிறாள். அதில நிண்ட தளபதியொருத்தர் முகம் மாறி, கோபப்பட்டிருக்கிறார்.
“தலைவர் என்ன சொன்னவராம்?”
அண்டைக்குப் பிறகு கனநாளாய் சந்திப்புக்கு ஆளை எடுக்கிறதில்லை. அதுக்குப் பிறகு ஒருநாள் வேறொரு சந்திப்பில ஈகையைக் கூப்பிட்டு “உன்ர பகிடியை விளங்கிச் சிரிக்கிற நேரத்தில, நாங்கள் இன்னொரு சண்டைக்கு வரைபடம் அடிச்சிடுவம். கொஞ்சம் வாயைக் குறை” என்றிருக்கிறார். “அதுக்கு இவள் சொன்ன பிரபலமான பதில கேள்விப்பட்டிருக்க மாட்டாய்” என்ற அம்மா என்னைப் பார்த்தாள். நான் பதிலென்னவென்று கேட்பதற்குள் தொடர்ந்தாள்.
“அண்ணை, எங்கட தளபதிமாருக்கு பகிடி விடுகிறது, சிரிக்கிறது எல்லாம் தேசத்துரோகம் இல்லையெண்டு உறுதிப்படுத்திச் சொல்லுங்கோ. அதுவும் உங்களுக்கு முன்னால சிரிக்க சிலர் அம்மானிட்ட கடிதம் வாங்கோணுமெண்டு நினைக்கினம்” என்றிருக்கிறாள். சுற்றியிருந்த ஏனைய போராளிகளும் ஈகை சொன்னதைக் கேட்டுச் சிரித்தனராம்.
ஈகை சமர்க்களத்தில் பகைவர்க்கு கொடியவள். எளிய வியூகங்களால் எதிரியின் முன்னேற்றத்தை முறியடிப்பவள். வேவு அணியிலிருந்த அனுபவம் அவளது படையியல் வலிமை. ஒருமுறை பூநகரியில் நடந்த வன்கவர் படையினருடனான மோதலில் ஈகையின் சிறப்பான முடிவுகள் இயக்கத்துக்கு பாரிய வெற்றியைப் பெற்றுத்தந்தது. ஈகை புலியில்லை சூழலுக்கு ஏற்றவாறு வேட்டையாடும் சிறுத்தை.
ஒருநாளிரவு போராளிகளின் காவலரண்கள் மீது தாக்குதல் தொடங்கியது. நிலை கொண்டிருந்த தனது அணியினரிடம் பதிலுக்கு தாக்காமல் அமைதியாக இருக்குமாறு கட்டளை பிறப்பித்திருக்கிறாள் ஈகை. அந்தப் போர்முனையின் தளபதி ஈகையை அழைத்து இப்படி முட்டாள்தனமாக எதுவும் செய்யாதே என்று திட்டித் தீர்த்திருக்கிறார். தான் நினைத்தது போலவே எதிரியானவர்கள் தாக்குதலில் மும்முரமாக இருந்த வேளையில், தன்னுடைய சிறப்பு அணியினரை ஈகை முன்னேறச்செய்திருக்கிறாள். ஒரு கள்ளப்பாதை வழியாக உறுமறைக்கப்பட்ட இருபது போராளிகள் காட்டிலுள்ள மரங்களைப் போல நின்றிருந்தனர். பின்னர் ஒரே நேரத்தில் பின்னணிச் சூட்டு ஆதரவோடு பதுங்கியிருந்த அணியினர் தாக்குதலை தொடங்கினர். ஈகைக்கு இந்தச் சமரில் பெரிய பெயர் கிட்டிற்று. கிட்டத்தட்ட நாற்பது சடலங்களையும், ஒரு வன்கவர் வெறிப்படையினனை உயிரோடும் கைப்பற்றினார்கள். அவனை உரிய மரியாதையோடு பின்தளத்துக்கு அனுப்பி வைத்தாள். பிறகொரு நாளில் கைதிப்பரிமாற்றம் செய்யப்பட்ட அந்தப் படையினன் தன்னுடைய சொந்தவூருக்குச் சென்று, இயக்கத்திற்கு ஒரு கடிதம் எழுதினான். அதில் ஈகையாளின் போர் அறத்தைப் பற்றி அவன் நினைவு கூர்ந்தது மறக்க இயலாதது” என்றாள் அம்மா.
ஈகையாள் சித்தியை உங்களுக்குத் தெரிந்திருக்காது. வன்னியிலிருந்தவர்களே பெரியளவில் அறிந்திருக்கவில்லை. இயக்க உறுப்பினர்களுக்கும் அதே கதிதான். இறுதியாக ஈகையாள் சித்தியை முள்ளிவாய்க்காலில் வைத்துச் சந்தித்தோம்.
“இனி மிச்சமிருக்கப்போவது தாய் நிலமல்ல, ஓர் உன்னதச் சகாப்தத்தின் நிர்மலமான இறந்தகாலம் மட்டுமே. வெறுமென அதற்காகவே காத்திருக்கிறோம்” என்றாள்.
சிறகாறா பறவையின் சோர்வு சித்தியில் கிளையோடியிருந்தது. அவளுக்கு அனைத்தும் அர்த்தமற்றதாக தோன்றிவிட்டதா? தியாகமென்பது இனி சொல்லின் ஞாபகமா? விடுதலையென்பது இனி கொடுஞ்சூட்டின் சீழா? பலவீனமடைந்த வீரயுகத்தின் நிர்மலம் தேயாதிருக்கட்டும். நம் வாழ்வு புதைக்கப்படுவதற்கும், விதைக்கப்படுவதற்கும் படைக்கப்பட்டது. நிதமும் துக்கத்தில் தத்தளிக்கும் பூர்வீகரோ நாம் என்று யாரோடு நோவது? யார்க்கெடுத்து உரைப்பது!
போரின் குமுறல் ஓசை கூவி முழங்கியது. அம்மா கஞ்சி வைத்தாள். சேமிப்பிலிருந்த குத்தரிசியின் கடைசிச் சுண்டு உலையில் கொதித்தது. கொடூரமான ஏவுகணைகள், பீரங்கிகள் சிதறி வீழ்ந்தன. கஞ்சி கலயங்களோடு சித்தியும், நானும், அம்மாவும் பதுங்குகுழிக்குள் இருந்தோம்.
“இந்த நாட்கள் சாய்ந்துபோகிற நிழலைப்போலவும் உலர்ந்து போகும் புல்லைப் போலவும் இருக்கின்றன” என்றேன்.
“ஓமடா தம்பி! எங்கள் பிதாக்கள் யுத்தத்தின் விளைவுகளை அசட்டை செய்தனர். ரத்த தாகத்தோடு வல்லமையோடிருந்த யுத்தமோ தன் புழுதியால் நம்மை அழிவிக்கிறது. சிவந்த சமுத்திரத்தின் ஓரத்திலே பொஸ்பரஸ்களால் கொல்லப்பட்ட குழந்தைகள் மிதக்கின்றனர். இவ்வுலகில் எங்களுக்கு நன்மை செய்கிறவன் ஒருவனுமில்லை. அக்கிரமக்காரர் பால்சோற்றைப் பட்சிக்கிக்கிறதைப் போல் சனத்தைப் பட்சிக்கிறார்கள். யுத்தம் எங்களை வெறுத்து தோல்வியை தண்டனையாக அளித்தது. எங்கள் பிதாக்களை அது வெட்கப்படுத்தியது. கரைந்துபோகிற நத்தையைப்போல ஒழிந்துபோகாத பெருங்கனவின் பாதத்தில் சந்ததியைப் பணிய வைத்தார்கள். இன்னும் சில தினங்களில் பட்டயத்தின் கருக்கை மழுக்கிப்போட்டு திக்கற்ற யுத்த அநாதைகளாக ஆகுவோம்” என்ற சித்தியை அன்றிரவே கட்டியணைத்து வழியனுப்பினாள் அம்மா.
இரண்டு நாட்கள் எங்களோடு இருங்கள், அதன்பிறகு போகலாமென்று சொல்லியும் சித்தி கேட்கவில்லை. கூடாரங்களும் அழுகுரல்களுமாய் பரவியிருந்த நிணவெளியை ஊடறுத்து தனது கைத்துப்பாக்கியோடு நடந்து மறைந்தாள்.
மானுடத்திற்கு விரோதமான பெலனுடன் யுத்தம் தொடர்ந்தது. மண்ணின் விடுதலைக்காய் நீதிமானாய் களம் புகுந்தவர்கள் வெட்டுண்டு விழுந்தார்கள். சுழல்காற்றின் பழிவாங்கல் போலவே கந்தகத் தீயின் சுவாலைகள் ரத்தத்தில் மூண்டன. நாங்கள் யுத்தத்தின் மீது சிறுசொட்டும் நம்பிக்கையாயிராமல் எதன் மீது நம்பிக்கையாயிருக்க வேண்டுமென தீர்மானிக்கமுடியாத அபயமற்றவர்கள். மெய்யாய் பூமியிலே யுத்தம் அழியட்டுமென சபித்து அழும் மனுஷத் திரளின் பட்டயத்தை எதனாலும் தாக்க இயலாது. ஈகையாள் சித்தியை நினைத்து அழுதபடியிருந்தேன். என்னைத் தூக்கி வளர்த்த வரிப்புலித் தாயவள். ஆய்ந்த விரல்களில் வாசம் வீசும் காட்டுப் பூ அவளது நறுமணம். என் தலையில் பேன் பார்த்து, குளிப்பாட்டி என்னையே மகவென தரித்தவள். அவள் எப்போதும் இறந்து போகமாட்டாள் என்று எண்ணிய என் குழந்தைப் பருவத்தின் ஒரு பெளர்ணமி நாளில் சித்தி சொன்னாள்.
“மகன், நீ வளர்ந்து வந்ததுக்குப் பிறகு, உனக்கொரு சித்தப்பா வருவார். அவரிட்ட நீதான் என்ர பிள்ளையெண்டு நான் சொல்லுவன்.”
“நான், உங்கட பிள்ளைதானே சித்தி “ என்றேன்.
சமர்க்களத்தில் காயப்பட்டு கருப்பை முற்றாகச் சிதைந்து உயிர் மீண்ட ஈகை சித்தி என்னையே கருவாகச் சுமந்தாள்.
சித்தி புறப்பட்டு எட்டாவது நாளில் எல்லாமும் அழிந்திற்று. அழிவின் வெறுங்காலில் மிதிபட்டோம். கடலோரம் மண்டியிட்டவர்களை கண்முன்னே கொன்று போட்டனர். நாயகர்களின் பட்டயங்கள் மண்ணில் புரண்டு வீழ்ந்திருந்தன. பெருத்த காயங்களுக்கு உள்ளானவர்கள் தங்களுடைய ஆயுதங்களால் தம்மையே கொன்றனர். பிள்ளைகளை ஒருமிக்கச் சாகக்கொடுத்த தாய்நிலமும் தன்னையே வெடிவைத்து தகர்த்துக் கொண்டது. அம்மா, சித்தியை தேடிக் கொண்டிருந்தாள். அவளுக்கு நெருக்கமான மிகச்சிலரில் ஒருவரை மட்டுமே காணக்கூடியதாய் இருந்தது. ஈகை பற்றி எந்தத் தகவலும் தெரியாதென கை விரித்தார். பிறகு இன்னொருவரின் தகவலின் படி, முக்கியமான இடத்தில் நேற்றுவரை இருந்ததாக அறியமுடிந்தது.
அம்மாவும் நானும் கடைசித் தடவையாக ஒரு சுற்றுத் தேடிவிட்டு வன்கவர் வெறிப்படையின் வேலிக்குள் போகலாமென முடிவெடுத்தோம். நந்திக்கடல் கண்டல் காடு வரை நடந்து போகலாமென எண்ணினேன். அம்மா வேறொரு திசையில் நடக்கத் தொடங்கினாள். சனங்களின் அழுகுரல் வெடியோசைகள் எல்லாமும் வெறுமை கப்பிய பதற்றத்தை தந்தது. கும்பி கும்பியாக காயப்பட்ட போராளிகள், உப்புக் களிமண்ணையள்ளி காயத்தில் திணித்தனர். எவ்வளவு காயங்களால் அரண் அமைக்கப்பட்டிருந்த மண். ஒரு காயத்தின் குருதியைக் கட்டுப்படுத்த முடியாமல் வெட்கித்து அழுதது.
ஈகை உயிரோடு தானிருக்கிறாள். ஆனால் எங்கேயோ தப்பி போயிருக்கலாமெனத் தோன்றுகிறது என்று அம்மா சொல்லத்தொடங்கினாள். நடந்தவற்றை சொல்லுவதா வேண்டாமா என்ற குழப்பம். அம்மாவுக்கு ஈகை சித்தி உயிரோடு இருக்க வேண்டுமென ஆசை. எப்பிடியாவது ஒருநாள் ஈகை வந்துவிடுவாள் என்று அடிக்கடி சொல்லிக்கொள்ளவும் செய்கிறாள்.
ஆனால் இத்தனை வருடங்களாகியும் அம்மாவிடம் சொல்லாத சேதியொன்றை உங்களிடமும் சொல்லவேண்டும். அன்றைக்கு முள்ளிவாய்க்காலில் நானும் அம்மாவும் திசைக்கொன்றாக பிரிந்து தேடினோம் அல்லவா! நான் போன திசையிலிருந்த கண்டல் பற்றைக்குள் ஈகை சித்தியைக் கண்டேன். அவளது வயிற்றை ரத்தம் மூடியிருந்தது. சித்தியின் மூச்சு சீரற்றுத் திணறியது. அவள் என்னை இனங்கண்டு கொண்டாள். தன்னுடைய கழுத்தில் கிடக்கும் சயனைட் குப்பியை எடுத்து வாய்க்குள் திணிக்குமாறு இரந்து கேட்டாள். வீரயுகத்தின் கம்பீர மாண்பையும், எக்கணத்திலும் அஞ்சாத திண்மையையும் தந்தருளிய ஆலம். சித்தி என்னிடம் கெஞ்சுகிறாள். என்னால் முடியாது சித்தியென்று கதறியழுதேன். ஊழி பெருத்தோடும் கணம்.
“மகனே! என்னை அவமானப்படுத்தாதே! நாமிருக்கும் இந்த பாழ்வெளியில் மீட்சி இல்லை. முலையூட்டாத உன் தாயின் மகிமைக்கும் மேன்மைக்குமாய் குப்பியை எடுத்து வாயில் திணி! அதுவே என் மகவு எனக்கூட்டிய அமிழ்தம். இனியதும் பெருமைமிகுந்ததுமான விடைகொடுப்பு. எதிரியானவனின் கையில் அகப்படாமல் உன் தாயைக்காப்பாற்ற எண்ணினால், இந்த வாய்ப்பை தவறவிடாதே” என்றாள்.
மண்ணோடு அவளையும் சேர்த்து அள்ளிக்கொண்டேன். முத்தமிட்டேன். அவளது மார்பின் மீது கிடந்த குப்பியை வெளியே எடுத்துக் கொடுத்தேன். கண்களை மூடினேன். உயிர் நொருங்கியது. ஒளிபொருந்திய முகம் திரும்பிய ஈகையாள் சித்தி கண்களை விரித்து என்னையே பார்த்தாள். அசைவற்ற ஒரு இறுமாப்புடன் அவள் மானத்துடன் தப்பித்திருந்தாள். அவளுடைய வயிற்றின் மீதிருந்த குருதியை என் உடலெங்கும் பூசிக்கொண்டு நந்திக்கடலில் இறங்கினேன்.
காலத்தின் ஊழ், போரின் பலியாடுகளாய் தோற்ற சனங்களை மேய்த்தது.
The post போதமும் காணாத போதம் – 22 first appeared on அகரமுதல்வன்.
February 23, 2024
நிரந்தர சிறகு
01
ஒளி உண்டாகுக
என்றதும்
பூமியில் உதித்தது
மலர்.
02
குளம் நடுவிலிருக்கும்
அரசமரக் கிளைநுனியில்
சிறுகுதிர்க்கும்
பறவை
நீருக்கு சூரியன்.
03
நிரந்தரத்தின்
மெளனம்
ஒடிந்த
கிளையமர்ந்து
கூவுகிறது
குயில்.
The post நிரந்தர சிறகு first appeared on அகரமுதல்வன்.
February 22, 2024
போரும் வாழ்வும் – எழுத்தாளர் காளிப்பிரஸாத்
போரும் வாழ்வும் – அகரமுதல்வன் கதைகளை முன்வைத்து: ஆர். காளிப்பிரஸாத்
The post போரும் வாழ்வும் – எழுத்தாளர் காளிப்பிரஸாத் first appeared on அகரமுதல்வன்.
February 21, 2024
ஹன்னா அரென்ட் – சைதன்யா
February 20, 2024
வான்முகில் வழாது பெய்க
வணக்கம் அகரமுதல்வன்!
நெல்லையில் நீங்கள் ஆற்றிய “தமிழுக்கு ஒளவையென்றும் பெயர்” உரை மிகச்சிறப்பானது. நவீன இலக்கியத்தில் தீவிரம் கொண்ட பலரிடம் மரபிலக்கியம் சார்ந்த அடிப்படை அறிதல்கள் இல்லையெனவே உணர்கிறேன். இது நமக்கு நேர்ந்த ஊழ். ஒளவையைப் பலர் வெவ்வேறு விதங்களில் முன்வைத்திருக்கின்றனர். உங்களுடைய உரை மிகமிக உறுதியானது. உடல் மொழியில் மேடையை ஆளுகிறீர்கள். கேட்பவர்களுக்கு நீங்கள் கையளிக்கவிரும்பும் செய்திகளை சரியாக முதன்மைப்படுத்துகிறீர்கள். அச்சு அசலான மேடைப்பேச்சு. அதில் தீவிர இலக்கியவாதியாக உங்களுடைய கண்டடைதல்கள் ஆச்சரியமளிக்கின்றன. என்னுடைய கல்லூரிக்காலம் வரை மேடைகளில் பேசியுள்ளேன். அதன்பிறகு ஏதென்று அறியமுடியாத ஒருவகைத் தயக்கம். பட்டிமன்றங்கள், கவியரங்கங்களைத் தொலைக்காட்சியில் பார்ப்பேன். பிறகுதான் தீவிர இலக்கியம் நோக்கி வந்தேன். இன்று பட்டிமன்றங்களையோ, கவியரங்கங்களையோ பார்ப்பதிலும் தயக்கம் ஏற்பட்டு விட்டது. வாசிப்பின் வழியாக உண்மையான அறிவுத்தளத்தை அடைந்திருக்கிறேன். உங்களுடைய உரையைக் கேட்டதும், ஏதேனும் ஒரு தலைப்பில் உரையொன்றை தயார் செய்து, நானே எனக்கும் மட்டும் உரையாற்றிப் ஆற்றிப் பதிவு பண்ணவேண்டுமென ஆசை பிறந்திருக்கிறது. அதற்கொரு ஒரு தலைப்புத் தந்து வாழ்த்துங்கள்.
கிருபாவணக்கம்! நீங்கள் எழுதிய கடிதத்தை கொஞ்சம் சுருக்கி வெளியிடுகிறேன். ஏனெனில் மீண்டும் மீண்டும் பிரதானமாக மேடை உரையாற்ற என்ன செய்யவேண்டுமென கேட்டிருக்கிறீர்கள். ஆதலால் அதனை செம்மைப்படுத்தினேன்.
கிருபா! மேடையுரை என்பது விசேடமான கலை வெளிப்பாடு. அதற்காக நாளும் மொழியோடு நீங்கள் இணங்கியிருத்தல் வேண்டும். அறிவுச் சேகரத்திலிருந்தே ஒருவரது உரை திகழும். வெறுமென ஒரு தலைப்புக்காக உடனடித் தயாரிப்புக்களிலான நூடில்ஸ் போல செய்து கொண்டு மேடைக்கு வந்தவர்கள் பாதியிலேயே நாவறண்டு சொந்தக் கதை பேசி இறுதியாக தலைப்பையே இரண்டு தடவைகள் குரல் பெருக்கி சொல்லிவிட்டு அமரும் வேடிக்கைகள் நம் சூழலில் அதிகம். மீண்டும் மீண்டும் முன்னோடிகளும், ஆளுமைகளும் மரபிலக்கியங்களைப் பற்றி பேசுவதற்கு காரணம் இதுதான். நெல்லைப் புத்தக திருவிழாவில் உரையாற்ற செல்லும் முன்பு வரை நண்பர்களோடு அறையில் அமர்ந்திருந்து சங்ககால கதைகள் குறித்துப் பேசிக்கொண்டிருந்தேன். உண்மையில் இந்தச் சேகரமும், தேடலும் தான் ஒரு நல்லுரையை அளிக்கிறது. மரபு இலக்கியங்களை அறியாதவர்களால் இது போன்றதொரு உரையின் அடியாழத்தில் இயங்கும் நவீன பார்வையையும் அறிய முடியாது. ஒருவர் மேடையுரைக்கு வருகிறார் என்றால், அவர் எடுத்துக் கொண்ட விஷயம் தொடர்பாக ஒரு தெள்ளத்தெளிவான பார்வையும், அதனை வெளிப்படுத்தக் கூடிய உடல் மொழியும், மொழியாற்றலும் அவசியமானது.
என்னைப் பொறுத்தவரையில் நவீன இலக்கியச் சூழலில் மரபு இலக்கியங்களைப் பற்றி பேசுவது வயதான எழுத்தாளர்களின் பணியெனக் கருதுகிறார்கள். இப்படியான கருதுகோள்களை இன்றுள்ள தலைமுறையினரிடம் விதைத்த காரணிகள் பலவுள்ளன. ஒரு மூதாய் மரத்தின் ஆணி வேரையும், அடிவேரையும் கத்தரித்து விட்டு, வீழும் நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் மரத்திற்கு நீரூற்றி வளர்க்கும் மூடர்கள் நாம். வேரின் ஊட்டம் இல்லாது மரத்திற்கு ஏதுமில்லை. கல்வி நிலையங்களில், வீடுகளிலென இந்தத் தலைமுறைக்கு போதிக்கப்படும் எவற்றிலும் மரபு இலக்கியங்கள் இல்லை. வெறுமென புள்ளிக்கு பாடல்களை மனனம் செய்யும் இயந்திரச் சுழல்பட்டியாக மரபு இலக்கியங்களை எண்ணுகிறார்கள். நம் பெருமைக்குச் செழுமைக்கு காரணமாக அமையும் எதையும் பொருட்படுத்தாது வெறும் பெருமிதங்களால் மட்டும் எதனையும் அடையமுடியாது என்பதே என்னுடைய தரப்பு. அந்த வெற்றுப்பெருமிதம் தமிழ் மொழிக்கும், தமிழர் இனத்திற்கும் நாம் இறைக்கும் கேடு. ஆக நான் வலியுறுத்த விரும்புவது மரபிலக்கிய வாசிப்பை மட்டுமே. சங்கப்பாடல்கள் தொட்டு பக்தி இலக்கியங்கள் வரை ஏதேனும் ஒன்றையாவது பற்றிக்கொள்ளவேண்டும்.
தமிழுக்கு ஒளவையென்றும் பெயர் – என்ற தலைப்பை வழங்குவதற்கு காரணமே இதுபோன்றதொரு விழிப்புணர்வுக்காக அன்றி வேறெதெற்குமில்லை. தமிழன்னைக்கே இரண்டு தமிழன்னைகள். ஒருவர் காரைக்கால் அம்மையார், மற்றவர் ஒளவையார் என்று உரைநடுவில் சொல்லியிருப்பது வெறுமென கைதட்டல்களுக்கான தொழில்முறைப் பேச்சுக்களின் வாடிக்கையான வசனமல்ல. என்னுடைய வாசிப்பில் இதுவே நான் கண்டடைந்தது. “பிறந்து மொழிபயின்ற பின்னெல்லாங் காதல் சிறந்துநின் சேவடியே சேர்ந்தேன்” என்று தொடங்கும் காரைக்கால் அம்மையின் பாடல்களை வாசித்தவன் என்கிற வகையிலேயே இதனைக் கூறுகிறேன். சங்க ஒளவையாகவும், நீதி நூல் ஒளவையாகவும் நம்மில் வாழும் “ஒளவை” என்கிற மதிப்புமிகுந்த சொல்லின் அடையாளமாக விளங்கும் பாடல்கள் எத்தனையோ நம்மை வழிநடத்துபவை.
“சீரியர் கெட்டாலும் சீரியரே; சீரியர் மற்று
அல்லாதார் கெட்டால் அங்கு என்ஆகும்? – சீரிய
பொன்னின் குடம்உடைந்தால், பொன்ஆகும்; என்ஆகும்
மண்ணின் குடம்உடைந்தக் கால்?
என்கிற இந்த மூதுரைப்பாடலை வாழ்நாள் தோறும் வாசிக்கலாம். இந்தப் பாடல்களைச் சொல்லுபவள் எக்காலத்திற்கும் அன்னையாக வீற்றிருக்கும் சக்தி படைத்தவள்.
நீங்கள் மேடையுரை ஆற்றவேண்டுமென விரும்புகிறீர்கள். ஒருவகையில் என்னுடைய உரையைக் கேட்டதற்கு பிறகு ஊக்கம் அடைந்திருப்பதாக எழுதியுள்ளீர்கள். இதனைக் கேட்கும் எனக்கும் ஊக்கம் நிறைந்து பூக்கிறது. மேடையுரைக்கு பயிற்சி செய்வதற்கு நீங்கள் கூறியிருக்கும் வழி மிகச் சிறந்தது. முதலில் பேசுவதும், கேட்பதும் நானே என்கிற பயிற்சியும், அதன் பிறகு அதனை பதிவு பண்ணிப் பார்ப்பதும் நல்லதொரு வழிமுறையாகவே இருக்கிறது. இன்றே இக்கணமே தொடங்குங்கள். ஆனால் இன்னொன்றையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இது வெறுமென அச்சத்தையும், ஒருவித மேடைத்தயக்கத்தையும் விலக்கி தெளிவுறச் செய்யுமே தவிர, உரையாற்றுவதற்கான சேகரத்தை தராது. சொற்களைப் பெருக்காது. அதற்காக நாம் தீவிரமாக உழைக்க வேண்டும்.நீங்கள் செய்ய எண்ணும் வழிமுறைக்கு அடிப்படை அளவில் பெறுமதி உண்டு.
ஜே. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தனிமையில் இருந்தவாறு தானே தனக்கு கூறியவற்றை ஒலிப்பதிவு செய்த பதிவுகள், புத்தகமாக வந்திருக்கிறது. “கிருஷ்ணமூர்த்தி தனக்கு கூறியவை” என்பது புத்தகத்தின் பெயர். கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகம். ஆனால் இந்த நூல் மேடைப்பேச்சுக்கு வழி நடத்துவது அல்ல. உங்களின் வழிமுறைக்கு முன்னோடியாக இருக்கும் சிறந்த உதாரணமொன்றாக கூறுகிறேன். ஒவ்வொரு தலைப்பின் கீழும் சிறிய அளவில் ஒரு உரையைத் தயார் செய்து, நீங்கள் பதிவு பண்ணலாம். உங்கள் விருப்பின் பேரில், முதல் தலைப்பைத் தருகிறேன்.
“வான்முகில் வழாது பெய்க”
நாம் தீவிரம் செலுத்தும் ஒன்று எக்கணத்திலும் எம்மை வந்தடையும் அருளோடுதான் இருக்கிறது. தொடங்குங்கள் கிருபா. வாழ்த்துக்கள். அருள் கிட்டும்.
The post வான்முகில் வழாது பெய்க first appeared on அகரமுதல்வன்.
February 18, 2024
போதமும் காணாத போதம் – 21
அதிபத்தன் இயக்கத்திலிருந்தவர். அம்மாவுக்கு நெருக்கமான ஸ்நேகிதன். என்னுடைய சிறுவயதில் அதிபத்தனோடு சுற்றிய இடங்கள் இப்போதும் நினைவிலுள்ளன. நீந்துவதற்குப் பயந்த என்னைக் குளங்களிலும், வாய்க்கால்களிலும் கொண்டு சென்று பயிற்றுவித்தார். ஒருநாள் செம்பியன்பற்று கடலுக்கு அழைத்துச் சென்று நீந்து என்றார். அலைகள் பொங்கி ஆர்ப்பரிக்கும் வெயில் பொழுதில் நீந்தத் தெரியாது என்றேன். “அலைக்குள்ள இறங்கினால் தான் நீந்த வரும். உள்ள போ” என்று தூக்கி வீசினார். கால்களை அடித்து, கைகளை வீசி மூச்சுத்திணறி எழுந்து நின்றேன். கரையில் அமர்ந்திருந்த அதிபத்தன் நீந்து…நீந்து என்றார். அலைசுருட்டி என்னை இழுத்துச் சென்றுவிடுமோவென அஞ்சி அழுதேன். என்னைக் காப்பாற்றுங்கள் என்று கதறினேன். கடலின் பேரோசையில் ஒரு குழந்தைத் தும்மலென அடங்கியது என் குரல். “நீந்திக் கரைக்கு வா” என்றார். உடலை நீரில் கிடத்தி கால்களை அடித்து, கைகளை மாறி மாறி வீசினேன். அதிசயமாகவே இருந்தது. ஒரு கலமென என்னுடல் தண்ணீரில் நகர்ந்தது. “இவ்வளவு தான் நீச்சல், இன்னும் வேகத்தைக் கூட்டு” என்றார். கரைக்கு வந்ததும் கடலைப் பார்த்தேன். வடிவு வனைந்த திரவக்கோலமென அமைதியாய் அசைந்தது.
இரண்டாயிரத்து ஆறாம் ஆண்டில் யாழ்ப்பாணத்தை கைப்பற்றும் பாரிய போர் நடவடிக்கையொன்றை தமிழீழ விடுதலைப் புலிகள் செய்தனர். அதே நாளில் யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டிருந்த வன்கவர் வெறிப்படையினர் ஆனையிறவை கைப்பற்றும் முகமாக தாக்குதல்களைத் தொடர்ந்தனர். ஆனால் தரைவழியாகவும், கடல் வழியாகவும் இயக்கம் முன்னேறிச் சென்றது. யாழ்ப்பாணத்தின் கடலோரக் கிராமங்களில் வதியும் சனங்களை இடம்பெயர்ந்து பாதுகாப்பான இடத்திற்குச் செல்லுமாறு புலிகளின் குரல் பண்பலை அறிவிப்புச் செய்தது. யாழ் செல்லும் படையணியினரின் வியூகங்கள் வெற்றி அடைவதாக வன்னி முழுதும் பேச்சுக்கள் புரண்டன. பண்பலையில் யுத்தம் நேரடி வர்ணனை செய்யப்பட்டது. நாகர்கோவில், கண்டல், முகமாலையென போராளிகளின் தாக்குதலுக்கு ஈடு கொடுக்க இயலாமல் வன்கவர் வெறிச் சேனைகள் பின்வாங்கிய செய்தி வந்து சேர்ந்தது. கடல் வழியாக படையணிகளை தரையிறக்கும் முயற்சியில் இயக்கம் தீவிரம் காட்டியது. அலைகளில் யுத்தப் பேரிகைகள் எழுந்தன. கடும்புயல் திகைப்போடு கந்தகம் குடித்தது கடல். போரிடும் பொருட்டுப் போராளிகளைப் பெருக்கினார்கள். பளையிலுள்ள வடபோர்முனை கட்டளைப் பணியகத்தில் கூடினார்கள். அவர்கள் கூடிய பளை எனும் இடம் யாழ்ப்பாணத்திற்கும் ஆனையிறவுக்கும் இடையில் இருந்தது.
அந்த நாட்களில் ஓரிரவு அவருக்குப் பிடித்தமான நெஞ்சொட்டி பாரை மீனுடன் வீட்டிற்கு வந்திருந்தார் அதிபத்தன். சமையல் முடித்து உணவைப் பரிமாறிய அம்மா “வெள்ளனவா, யாழ்ப்பாணம் போயிடுவமோ” என்று கேட்டாள். உறக்கம் கண்களைச் சொருக அவருக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த என்னைப் பார்த்தார். அம்மா எதையோ புரிந்து கொண்டவளைப் போல சரி, “மீன் துண்டைப் போட்டுச் சாப்பிடுங்கோ” என்றாள். அதிபத்தன் விடைபெறும் போது “சோதி பார்க்கலாம். போயிட்டுத் திரும்ப வாறனோ தெரியாது” என்றார்.
“இதென்ன புதுப்பழக்கம். போனால் வரத்தானே வேணும். வாங்கோ” அம்மா சொன்னாள்.
“நாளைக்கு கடலூடாக ஒரு அணியைக் கூட்டிக்கொண்டு வெளிக்கிடுகிறன். உயிர் மிஞ்சினால் ஆச்சரியம் தான்” என்றார்.
நற்செய்திக்காய்ப் பொருதும் வாழ்வு. சனங்களுக்கு எதிரான அக்கிரமக்காரர்களை அஞ்சாமல் வதம் செய்யும் அதிபத்தன் போன்றவர்களின் நெஞ்சுரத்தில் நிலம் விளைகிறது. சாவினைப் பற்றிய கவலை நெரிக்க, எங்கள் பகைவர்கள் இழப்புக்குள்ளாவர். தாய்மண் விடுதலையால் இரட்சிக்கப்படுமென்ற ஆசையோடு வழியனுப்பினோம். அம்மா வீட்டிற்குள் நுழைந்து படத்தட்டிலிருந்த விளக்கை ஏற்றிவைத்தாள். சுடர் பெருத்த நள்ளிரவின் வெளிச்சம் காலாதீதமாய் சுடர்ந்து எரியட்டும் என்றாள். “அதிபத்தனுக்கு எதுவும் நடக்காது. அவன் திரும்பி வருவான். அவன் வரும்வரை அணையாமல் எரியட்டும் இச்சுடர்” என்ற அம்மாவிடமிருந்து உயிர் உருகி கண்ணீராய்ச் சிந்தியது. வன்னியெங்கும் இச்சுடரின் ஒளி பெருகியது. போர்ப் படகுகள் அலைகளைப் பிளந்தன. அதிபத்தன் விண்மீனை வணங்கினான்.
மூன்று நாட்களாக நடந்து வந்த மோதல்களில் போராளிகள் வாகை சூடினார்கள். நூற்றுக்கணக்கான பகைவர்கள் கொன்று குவிக்கப்பட்ட செய்தியறிந்து வன்னிச் சனங்கள் பெரிதும் மகிழ்ந்தனர். அதிபத்தன் கடலில் நின்றான். வன்கவர் வெறிப்படையின் போர்க்கப்பல்கள் கடற்புலிகளில் படகுகளை முற்றுகையிட்டன. எங்கும் தப்பவியலாதவாறு இருதரப்பினரும் அழியும் வரை போரிட்டனர். அதிபத்தனின் கட்டளையேற்று நடந்த முறியடிப்புச் சமரில் போராளிகள் வென்றனர். இரண்டு போர்க்கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டன. வானிலிருந்து அக்கினி வீழ்ந்த கடலின் மீது போர் விமானங்கள் பறந்து போயின. போராளிகளின் படகுகள் சுக்குநூறாய் சிதறின. தகன பலியிடும் பீடமென கடலில் ஆயுதமும் மாமிச துண்டங்களும் மிதந்தன. அதிபத்தனின் படகு சேதமடைந்திருந்தது. அவருடைய முழங்கையில் சிறிய காயம் ஏற்பட்டிருந்தது. தேசத்தின் சிறப்புக்குரிய ஊழியன் போரில் காயப்படுகிறான். நிலம் விசுவாசித்தவன் உயிர் துறக்கிறான். அடுத்தடுத்த நாட்களிலேயே களமுனையின் நிலவரம் பீதியாயிற்று. போராளிகளில் ஒரு தொகையினர் காயப்பட்டனர். யாரும் எதிர்பாராத முற்றுகை அகழிக்குள் அகப்பட்ட போராளிகளை பகைவர் கொன்று தீர்த்தனர். தரைவழியாகவும், கடல் வழியாகவும் பலவீனப்பட்டு இயக்கம் பின்வாங்கியது. தெய்வமே! உன்னுடைய சனங்களுக்கு நல்லவராயிருமென்று வன்னிச் சனங்கள் சோகம் தாளாது வேண்டினர். பார்க்கிறவர்களின் எலும்புகள் நடுங்குமளவுக்கு போராளிகளின் வித்துடல்கள் குவிக்கப்பட்டன. குணப்படுத்த முடியாதளவு நிலத்தின் சித்தம் பிறழ்ந்திருந்தது. மகா உன்னதமான தியாகம் தனது சிரசில் இத்தனை வித்துடல்களாலேயா மகுடம் அணிய வேண்டும்!
அணையாமல் எரிந்து கொண்டிருந்தது விளக்கு. இரும்புத் தடியால் மண்குடத்தை உடைப்பதைப்போல எங்கள் தேசத்தை அழிக்கமுடியும் என்ற பகையின் இறுமாப்பை சில்லுச்சில்லாக உடைத்தவருள் அதிபத்தன் தலையாயவர். வீரச்சாவு அடைந்தவர்களின் விபரங்களை வாசித்து அறிந்தோம். அதிபத்தனின் பெயரில்லை. “வந்திடுவான். இப்பிடித்தான் இந்தியாமி காலத்திலையும் அவனுக்காக காத்திருந்தனாங்கள்” என்றாள் அம்மா. நாங்களிருந்த கிராமத்தை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. எறிகணைகள் வீழ்ந்து வெடித்தன. வேறொரு திசையிலிருந்து பகைவர் முன்னேறத் திட்டமிட்டிருப்பதாக போராளிகள் கூறினர். அந்த விளக்கை ஏந்தியபடி அம்மா இடம்பெயர்ந்தாள். காற்றிலும் அணையாதவாறு தன்னுடைய வலது உள்ளங்கையைப் பக்கவாட்டில் குவித்து நடந்தாள். இடம்பெயர்ந்து வாழ்ந்து வந்த, கிளிநொச்சியில் “அதிபத்தனின் அணையா விளக்கு” வைப்பதற்கு அம்மாவொரு பீடத்தைக் கட்டினாள். வேப்பமரத்தின் கீழே எல்லாப்பொழுதும் சுடரும் விளக்கைப் பார்த்து இது எந்தத் தெய்வத்திற்கு என்று கேட்காதவர்கள் மிகக் குறைவு. இது எங்கட தெய்வம். என்ர ஸ்நேகித தெய்வம் அதிபத்தன்ர அணையா விளக்கு” என்றாள். சமுத்திரத்தின் நட்சத்திரமே அதிபத்தா! என்று அடிக்கடி உச்சரிக்கத் தொடங்கினாள். போர் சகிக்கவியலாத அகோர வேதனை.
அம்மாவிடம் வந்திருந்த முக்கிய போராளியொருவர் இயக்கத்தின் போக்குகள் பிடிக்கவில்லையென கூறினார். ஆயுத, ஆளணி பலமற்று சண்டையில் இறங்கினால் இப்படித்தான் விளைவுகள் தொடருமென்றார். அவரின் சொற்கள் உண்மையும் தூய்மையுமானவை. நெருப்பில் ஏழுமுறை உருக்கித் தூய்மையாக்கப்பட்ட வெள்ளியைப் போல தூய்மையானவை. அம்மா எதுவும் கதையாமல் உணவைப் பரிமாறினாள். நடந்து முடிந்த சண்டையில் அதிபத்தன் வீரச்சாவு என்ற செய்தியைச் சொன்ன போதுதான், அவரைக் கடிந்து கொண்ட அம்மா “அவன் வீரச்சாவில்லை. வருவான்” என்றாள். எனக்குமே அவர் சொன்னதில் உடன்பாடில்லை. வீரச்சாவு என்றால் இயக்கமே அறிவித்திருக்கும். மறைப்பதற்கு ஏதேனும் காரணங்கள் இருக்குமாவெனக் கேட்டேன். “ஆள் காயப்பட்டிருக்கு. அவரோட படகில இருந்த ஒரேயோருத்தர் மட்டும் வந்திருக்கிறார். அவன்ர தகவலின் படி ஆள் மிஸ்சிங்” என்றார்.
“மிஸ்சிங்கா?”
“கடுமையான சண்டை நடந்து, சிதறிப் போயிருக்கினம். அதிபத்தன் மட்டும் தனியொரு படகில நிண்டு சண்டை செய்திருக்கிறார். அதுமட்டுந்தான் இறுதித் தகவல்.” என்றார். அம்மா விளக்கிற்கு எண்ணெய் விட்டதும் திரிச்சுடர் பிரகாசம் கொண்டது. பகலின் மீது சிறிய விதையென அது வளர்ந்து அசைந்தது.
ஒரு வேலையாக மாங்குளம் சென்று வீட்டிற்குத் திரும்ப இரவாகியது. அம்மா வெளியே அமர்ந்திருந்தாள். “முகம், காலைக் கழுவிட்டு வா. சாப்பிடலாம்” என்ற அவளுடைய குரலில் வருத்தம் தோய்ந்திருந்தது. அன்றிரவு படுக்கையில் கேவி அழுத அம்மாவுக்கு ஆறுதல் சொன்னேன். அவருக்கு எந்தத் தீமையும் நேர்ந்திருக்காதென்று தெம்பூட்டினேன். அதிகாலையில் எழுந்து விளக்கு வைத்திருக்கும் பீடத்திற்குப் போனாள். அவளுடன் நான் செல்லாமல் படுக்கையில் விழித்திருந்தேன். அம்மா விளக்கில் திரிதீண்டி எண்ணெய் விட்டாள். அதிபத்தா! உனது கால்களால் அளந்த வன்னி நிலம் பதைபதைக்கிறது. நீ களமாடி வென்ற மண்ணின் பகுதிகள் பல பறிபோய்விட்டன. ஏன் இந்த நிலத்திற்கு நீயும், உனக்கு நிலமும் முக்கியமானது? ஏன் இந்தச் சனங்கள் முக்கியமானவர்கள்? உன்னை அவர்கள் பிரிந்து தவிக்கிறார்கள். சிலர் நினைவுகூருகிறார்கள். ஆனால் நீயோ நிலவாகவும் சூரியனாகவும் வானில் எழுந்து ஆச்சரியப்படுத்துகிறாய்! உன் வருகைக்காய் காத்திருக்கிறது இந்தச் சுடர் பீடம். நீ கெதியாக வா. உனக்குப் பிடித்த நெஞ்சொட்டி பாரை மீன்கள் என் கனவில் நீந்துகின்றன என்றாள்.
கிளிநொச்சியை விட்டு இடம்பெயருமாறு சனங்களுக்கு உத்தரவு வந்தது. அம்மா அதிபத்தனின் அணையா விளக்கை ஏந்திக் கொண்டு நகர்ந்தாள். கிளிநொச்சி பகைவரிடம் அணைந்தது. தரையிலிருந்த மக்கள் கடல் நோக்கி ஒதுக்கப்பட்டனர். இயக்கத்தினர் ஆயுதங்களையும், முகாம்களையும் மாற்றிக்கொண்டனர். சனங்கள் வீதிகளிலும், காடுகளிலும் கூடாரங்களை அமைத்தனர். போர் விமானங்கள் தினமும் நான்குமுறை மக்கள் குடியிருப்புக்களின் மீது குண்டுகள் வீசின. அவலப் பேராற்றின் தெருக்களில் அணையா விளக்கோடு நடந்து சென்ற அம்மாவை எல்லோரும் புதினமாகப் பார்த்தார்கள். என்ன வேண்டுதலோ என்று சிலர் குசுகுசுத்தார்கள். முள்ளிவாய்க்கால் கடற்கரையில் நான்கடி நீளமும் மூன்றடி ஆழமுமான பதுங்குகுழிக்குள் நானும் அம்மாவும் விளக்கை பாதுகாத்திருந்தோம். அம்மாவுக்கு விலக்கான நாட்களில் பதுங்குகுழிக்குள் சிறிய குழி தோண்டி விளக்கை வைத்தாள்.
“நிலத்துக்கு கீழ இருந்தால், அதை மனுஷத் தீட்டு தீண்டாது” என்றாள்.
முள்ளிவாய்க்காலில் விளக்கெரிக்கும் எண்ணெய் தீர்ந்து கொண்டிருந்தது. விளக்கை அணையவிடக் கூடாதென அம்மா உறுதி பூண்டிருந்தாள். ஒரு போராளியிடம் கோரிக்கையாக “விளக்கெரிக்க எண்ணெய் வேண்டும், உங்களிடம் இருந்தால் தாருங்களேன்” என்றாள். இருந்தால் கொண்டுவந்த தரச்சொல்லுகிறேன் என்றார். மூன்று நாட்கள் கழித்து அம்மாவுக்கு ஒரு யோசனை தோன்றிற்று. “நந்திக்கடல் போய் நீரெடுத்து வரலாம். அந்த உப்பு நீரில தானே, வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோவில் விளக்கெரிக்கிறவே” என்றாள்.
“அம்மா அது கோவிலுக்கு எரியும். இந்த விளக்குக்கு எரியுமே” கேட்டேன்.
“அந்தத் தெய்வத்துக்கே தெரியுமடா, சனங்களைக் காக்கிறது எந்த தெய்வமெண்டு. இந்த தண்ணியில விளக்கு எரியாட்டி கண்ணகியின்ர அற்புதமெல்லாம் பொய்யிலதான் சேர்மதி கேட்டியோ” என்றாள்.
நானும் அம்மாவும் விளக்கை எடுத்துக் கொண்டு நந்திக்கடலுக்கு போகும் பாதையில் நடக்கத் தொடங்கினோம். கடுமையான மோதல் நடந்து கொண்டிருந்தது. தலையைத் தூக்கி நடந்தால் மரணம். சிறிது தூரத்திலேயே நானும் அம்மாவும் நிலத்தோடு நிலமாக ஊர்ந்தோம். அம்மா தன்னுடைய கையில் விளக்கைச் சுமந்திருந்தாள். நாங்கள் நந்திக்கடலை அடையமுடியாதவாறு கடுமையான மோதல் தொடர்ந்திருந்தது. அப்படியே நானும் அவளும் நிலத்திலேயே படுத்துக் கொண்டோம். போராளிகள் சிலர் எங்களைப் பார்த்ததும் “ஓடுங்கோ அம்மா. இனிமேலும் இஞ்ச இருக்கமுடியாது. நாங்கள் குப்பி கடிக்கப்போகிறோம் “என்றனர். அம்மா ஒரு போராளி அக்காவை அழைத்து “எனக்கு கொஞ்சம் நந்திக்கடல் தண்ணி வேணும் மோளே, எடுத்து தருவியளோ” என்று கேட்டாள். “அந்தத் தண்ணி எதுக்கென இப்ப” கேட்டாள். அம்மா விளக்கை காட்டி, “இந்த விளக்கை அணையவிடக் கூடாது மோளே, இது அதிபத்தன்ர அணையா விளக்கு” என்றாள்.
அந்த அக்காவுக்கு அம்மா சொன்னது விளங்கவில்லை. ஆனாலும் அவள் நந்திக்கடல் தண்ணீரை ஒரு வெடிகுண்டின் வெற்றுக் கோதில் நிரப்பிக்கொண்டு வந்து கொடுத்தாள். கடுமையாய் சுடுகுது என்றாள் அம்மா. அணையைத் துடிக்கும் சுடரின் அடித்திரி வேரில் நீரூற்றினாள். சுடர் எழுந்தது. வெற்றுக்கோதில் இருந்த மிச்சத் தண்ணீரை தாங்கியபடி அப்படியே நிலத்தில் கிடந்தோம். நந்திக்கடல் நீரில் அதிபத்தனின் அணையா விளக்கு நின்றெரிந்தது. நிணத்தில் எரிந்த நிலம் கருகி வீழ்ந்தது.
அம்மாவின் ஆடைகளைக் கழற்றி நிர்வாணமாக்கிய சிப்பாய், அவளது அடிவயிற்றில் சிவந்து தகிக்கும் பகுதியை சந்தேகித்து துப்பாக்கியின் நஞ்சுக் கத்தியால் குத்திக் கிழித்தான்.
அவளினுள்ளே ரத்தத்தில் எரியும் சுடர் விளக்கு அசைந்தணைய அதிபத்தனின் நெஞ்சொட்டிப் பாரைகள் நந்திக்கடலில் செத்து மிதந்தன.
The post போதமும் காணாத போதம் – 21 first appeared on அகரமுதல்வன்.
February 17, 2024
கர்நாடகத்தின் யக்ஷகானம்- சிவராம் காரந்த்
யக்ஷகானா என்றால் என்னவென்று அறிவதற்கு ஒருவர் அதன் கலைப் பெறுமானத்தை உணர்ந்தாலே போதும். ஆனால் யக்ஷகானாவின் பல வகைத்தன்மையை எல்லா குழுக்களும் முழுமையாக வெளிப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. எல்லா நாடகங்களும் அத்தகைய கடுமையான தரநிர்ணயங்களைப் பேணவும் முடியாது. இன்று இந்த நாடக வடிவத்தின் மரபார்ந்த அழகியல் கூறுகள் யாவும் நிறப் பிரக்ஞையோ ஒத்திசைவு சார்ந்த புரிதலோ அற்ற “புதிய விநோதப் பிரியர்களால்” கைவிடப்பட்டுவிட்டன. இருப்பினும் சில அரிய குழுக்கள் இன்றளவும் மரபார்ந்த வடிவத்தின் சிறப்புகளைக் கைக்கொண்டுள்ளன.
https://www.kurugu.in/2024/01/yakshagana-shivaram-karanth.html
The post கர்நாடகத்தின் யக்ஷகானம்- சிவராம் காரந்த் first appeared on அகரமுதல்வன்.
அகரமுதல்வன்'s Blog
- அகரமுதல்வன்'s profile
- 17 followers

