லாஜிக்

தீவிரமாகத் திரைப்படங்கள் பார்த்து இரண்டு மாதங்களுக்கு மேலாயிற்று. ஒரு கட்டத்தில் ஓ.டி.டி தளங்களில் சரணாகதி அடைந்திருந்தேன். மெல்ல மெல்ல அங்கிருந்தும் விலகிவிட்டேன்.  அதுவொரு மாயச்சுழி போல மீளமுடியாது கால்களைப் பின்னி இழுத்துக் கொள்கிறது. சிறந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாகும் இணையத் தொடர்கள் சிலவற்றை ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் பார்த்திருக்கிறேன். எல்லாமும் பாடம். முன் தயாரிப்புக்களிலிருக்கும் இணையத் தொடர்கள் சிலவற்றில் திரைக்கதை சார்ந்த பணிகளில் ஈடுபட்டு வருகிறேன். நம்முடைய சினிமா சிந்தனையில் இணையத் தொடர்களின் பண்பாட்டைப் புரிந்து கொள்ள நாட்களாகுமென்றே தோன்றுகிறது.

சமீபத்தில் தமிழ் திரைப்பட இயக்குனர் ஒருவரோடு பணிசார்ந்து உரையாட வேண்டியிருந்தது. அவர் இணையத் தொடர்களுக்கான தன்னுடைய ஐடியாக்களைச் சொன்னார். ஒன்று கூடத் தேறாது. பாகவதர் காலத்தை விடவும் பழைய கதை. அவரிடம் இப்படியேதான் என்னுடைய கருத்தை வெளிப்படுத்தினேன். கடுமையாக கோபித்துக் கொண்டார். உங்களுக்கு சினிமாவைப் பற்றி என்ன தெரியும்? எழுத்தாளர்களுக்கு சினிமா தூரம் என்றார். நானும் விடுவதாயில்லை, “ஒரு இயக்குனருக்கே இவ்வளவு தூரமாய் இருக்கிற சினிமா, எழுத்தாளனை மட்டும் நெருங்கியா இருக்கும்” என்றேன்.  எதுவும் சொல்லவில்லை. சிப்பந்தியை அழைத்துச் சுடுதண்ணி வேண்டுமென்றார். எனக்குத் திகிலாகிவிட்டது. சுடுதண்ணியை என் மேல் ஊற்றவும் வாய்ப்புள்ளது என்றது என்புத்தி. என்னுடைய குரலில் ஒருவகையான குழைவை நெய்து” நான் சொன்னது உங்களைச் சீண்டியிருந்தால், மன்னிக்கவும்” என்றேன். இதுவும் அவரைச் சீண்டியிருக்கும் போலே, முகம் இன்னும் இறுக்கமாகியது.

நான் திரைப்பட கதை விவாதங்களில் எப்போதும் கடைப்பிடிக்க விரும்புகிற பழக்கமெனில் அது அசடுகளை ஏற்காதிருப்பது. எந்தச் சம்பந்தமுமில்லாமல் வம்புகளையும், வீண் கதைகளையும் சொல்லிக்கொண்டேயிருப்பதை மறுப்பேன். இருபதாண்டுகளுக்கு மேலாக திரைக்கதை விவாதத்திற்கு மட்டுமே சென்றுவரும் பழம் தின்று கொட்டை போட்ட வகையினர் பலரை அறிந்திருக்கிறேன். இப்பூமியில் அவர்கள் அறியாதது எதுவுமில்லை. எல்லாவற்றைக் குறித்தும் ஒரு துணுக்கேனும் தெரிந்து வைத்திருப்பார்கள் என்று நம்புமளவுக்கு கதைகளை அளந்து விடுவார்கள். அவர்கள் காலங்காலமாக ஒரு மரபின் தொடர்ச்சியாக கனவு உலகில் கரைந்த நிழல்களாக பிறக்கிறார்கள்.

சமீபத்தில் ஒரு இணையத் தொடர் கதை விவாதத்தில் கலந்து கொண்டேன். முன்னைப் போலில்லை இன்றைக்கு எழுத்தாளனுக்கு திரையுலகில் மவுசு அதிகம்தான். எழுத்தாளன் என்றதும் “அப்படியா! நான் கூட புத்தகங்கள் வாசிப்பேன். கொஞ்ச நாட்களுக்கு முன்பாக கூட ஒரு புத்தகம் வாசித்தேன். ஆனால் தலைப்புத்தான் மறந்துவிட்டது. நல்ல புத்தகம் சார்! ” என்று சொல்வதற்கு ஒருவரேனும் இருப்பார். அவர் படிக்காவிட்டாலும் அந்தப்பொய் ஒரு சிநேகிதத்தை உருவாக்கிறது. ஒரு தேநீர் கூட்டாளியை அளிக்கிறது என்று அமைதி அடைய வேண்டியதுதான்.  கதைவிவாதம் தொடங்கி ஐந்து நாட்களும் உருப்படியாக நான்கு காட்சிகள் கூட தேற்றமுடியவில்லை. இயக்குனரிடம் சொல்லி எச்சரித்தேன். இப்படியாக இவர்களை அனுமதித்தால், உங்கள் வாழ்க்கை கெட்டுப்போய்விடுமென விழிப்புறச் செய்தேன். அந்த இயக்குனர் மறந்தும் இலக்கியம் வாசிக்காதவர். எப்போதாவது தமிழுக்குத் தியாகம் செய்ய விரும்பினால் எழுத்தாளர் சுஜாதாவின் ஒரு குறுநாவல் தொகுப்பை வாசிப்பார். அதே தொகுப்பை மட்டும்தான் அவர் வாசிக்கிறார். பல தடவைகளை அதைப்படித்து முடிக்க எண்ணினாராம். ஆனால் இன்னும் முடியாமல் இருக்கிறதாம். அவ்வளவு அழுத்தமான கதையாம். கதையாம்!

இந்த இயக்குனர் உலகத் திரைப்படங்களின் உள்ளூர் அம்பாசிடர். பல்கேரியா முதல் சுமேரியா வரை எடுக்கப்படும் படங்களை ஒன்றுந்தவறாமல் பார்த்திருக்கிறார். ஒரு பேச்சுக்கு இந்தக் காட்சியில் வருகிற உரையாடல், ஒட்டுமொத்த தொடரின் கதையிலிருந்து விளகியிருக்கிறதெனக் கூறினால், “விலகியிருக்கட்டுமே. அப்படி இருந்தால் என்ன தப்பு. நான் எடுக்கிறது உலக சினிமா. அதைப் புரிகிறவன் புரிந்து கொள்ளுவான்” என்பார். அன்றைக்கு கதை விவாதத்தில் தேவையற்றதொரு காட்சியை நீக்குமாறு கூறினேன். அவருக்கு அது முக்கியமெனக் கூறினார். அது ஏன் தேவையற்றது என விளக்கிச் சொன்னேன். அவர் மேற்கொண்டு என்னிடம் உரையாட விரும்பவில்லை. ஏனையோரின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். மாலையில் தேனீர்  இடைவேளையின் போது என்னிடம் ஏதோ பேசமுயன்றார். ஆனாலும் நான் இடங்கொடுக்கவில்லை. தொடர்ந்த கதை விவாதத்தில் மூன்று நாட்களுக்குப் பிறகு இந்த எபிசொட்ல, சார் சொன்னாரில்லையா, அந்தக் காட்சியை தூக்கிறதுதான் சரின்னு தோணிச்சு எடுத்திட்டேன்” என்றார். நான் எதிர்வினை எதுவும் செய்யவில்லை. முகத்தைக் கொஞ்சம் இறுக்கமாக வைத்திருந்தேன்.

“சார்.. வெப் சீரிஸ் வேற மாதிரி எடுத்திட்டு இருக்காங்க. நாம லாஜிக் தேடிக்கிட்டு இருக்கோம்” என்றார்.

“வேற மாதிரின்னா?” கேட்டேன்.

“இல்ல சார். அவ்வளவு லாஜிக் பார்க்க வேண்டாம்னு தோணுது”

சரி. பாக்காதீங்க. ஆனா…ஆடியன்ஸ் லாஜிக் பாப்பான். அதுக்கு ஒரு வழியிருக்கு. நீங்க இப்ப எங்கிட்ட சொன்னீங்களே. “இல்ல சார். அவ்வளவு லாஜிக் பார்க்க வேண்டாம்னு தோணுது” அந்த வசனத்தைப் போட்டிட்டு ஒவ்வொரு எபிசோட்டையும் ஆரம்பியுங்க” என்றேன்.

அவருடைய முகம் லாஜிக்கே இல்லாமல் சுருங்கிப்போனது. என்ன இயக்குனரே சத்தத்தைக் காணோம் என்றேன். “நான் சொன்னதுக்கு ஏதாவது லாஜிக்க மனசுக்குள்ள  தேடிக்கிட்டு இருக்கீங்களா” கேட்டேன்.

நாளையிலிருந்து இந்தக் கதை விவாதத்தில் நான் தொடரப்போவதில்லையென எனக்குத் தெரியும். ஏனெனில் உலக சினிமாவின் அம்பாசிடரிடம் சென்று லாஜிக்க பாருண்ணு சொன்னது மகா குற்றம். ஆனாலும் ஒன்றை சொல்லி அன்றைக்கு அலுவலகத்தில் விடைபெற்றேன்.

“இயக்குனரே! நீங்க எடுக்கப் போறது படமில்ல. வெப் சீரிஸ். அதுக்குண்ணு ஒரு திரைக்கதைப் பண்பு இருக்கு. அதை முழுசா தெரிஞ்சுக்காட்டியும் பரவாயில்லை. நல்ல வெப் சீரிஸா கொஞ்சத்தைப் பார்த்தாலே புரிஞ்சிடும்” என்றேன்.

“ஏங்க, நீங்க வேற. உலக சினிமாவில இல்லாதத என்னத்த இங்க சொல்லப்போறாங்க. சொல்லுங்க. இதெல்லாம் ஒண்ணுமேயில்ல. சூப்பரா பண்ணி முடிச்சிடலாம்” இயக்குனர் சொன்னார்.

இன்றைக்கு அவர் எழுதிய இணையத் தொடரின் திரைக்கதையை வாசித்துச் சொல்லுமாறு என்னை அழைத்திருந்தார்.

“உலக சினிமாவில இல்லாதத என்னத்த இங்க சொல்லப்போறாங்க, சொல்லுங்க. இதெல்லாம் ஒண்ணுமேயில்ல. சூப்பரா பண்ணி முடிச்சிடலாம்” என்றேன்.

அழைப்பைத் துண்டித்துவிட்டு ஒரு தகவல் அனுப்பியிருந்தார்.

“சார்! ப்ளீஸ் கொஞ்சம் படிச்சு சொல்லுங்க. உங்க பீட்பேக் ரொம்ப முக்கியம் எனக்கு”

பதிலுக்கு நானும் அனுப்பினேன் ” இல்ல சார். அவ்வளவு லாஜிக் பார்க்க வேண்டாம்னு தோணுது. நன்றி”

 

The post லாஜிக் first appeared on அகரமுதல்வன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 01, 2024 10:28
No comments have been added yet.


அகரமுதல்வன்'s Blog

அகரமுதல்வன்
அகரமுதல்வன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow அகரமுதல்வன்'s blog with rss.