அகரமுதல்வன்'s Blog, page 22
March 15, 2024
நெருப்புண்டவனின் ராகம் – அணிந்துரை
“தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்”
புனித பைபிள், மேத்யூ 27:46.
நான் சிறுவனாக குடியிருந்த தொடர் வீட்டில் ஒரு கிணறு இருந்தது. அண்ணியக்கா அண்ணன் என ஒரு பக்கத்து வீட்டுக்காரர் இருந்தார். அவர் சதை கிழிக்கவரும் கூர் நகம் போல கொக்கிகள் உடைய பாதாள கரண்டி ஒன்று வைத்திருந்தார். அதை சில மாதங்களுக்கு ஒருமுறை கிணற்றின் வயிற்றினுள் செலுத்தி அளைவார். பன்னிரண்டு கொக்கிகளில் ஏதேனும் ஒன்றில் பழைய சிறு வாளியோ, பாலூட்டும் வெள்ளிச் சங்கோ, பாத்திரங்களோ கிடைக்கும். பாதாளக் கரண்டி நீரில் பாயும் வன்மையும் ஆழ் நிலத்தை கீறும் அசைவும் அச்சுறுத்தும். ஆனாலும் துழாவலில் ஒரு எதிர்பார்ப்பு மிகும். சில சமயம் அது வலித்து வரும் நசுங்கித் துரு ஏறிய சேறு மூடிய கத்தி நம்மை உற்றுப் பார்க்கும். தேடியபின் கிடைத்த பொருளுக்குக் தக அண்ணியக்கா அண்ணனின் முகம் மகிழும் அல்லது வாடும். ஒவ்வொரு பொருளும் அது முன்பு குடியிருந்த ஒரு குடும்பத்தின் நினைவு.
அகரமுதல்வனின் “போதமும் காணாத போதம்” ஈழத்தின் ஆழத்துக்குள் சென்று கீறித் துழாவும் பல முள் தரித்த பாதாளக் கரண்டி. ஒவ்வொரு தேடலிலும் அது வலித்து வருவது கந்தல் துணியா, கால் கொலுசா எனும் எதிர்பார்ப்பும் அச்சமும் எனக்கு தீரும் வரை இருந்தது. இது அபோதத்தில் மனதினுள் துழாவுவது தான். கொடுங்கனவுகள் உத்தரவாதம். ஒவ்வொரு கதையும் சிதைந்த ஒரு குடும்பத்தின் குறு வரலாறு.
இந்தியா போன்றதொரு தேசத்தில் தமிழகம் போல பெரும் போரும் பேரழிவும் கடைக் கண் பார்வையை மட்டும் காட்டிய இடத்தில் பிறந்து வாழும் ஒருவன் பெற்றது பல செல்வங்கள் என இருந்தாலும் பெறாத செல்வம் என்பது வரலாற்றுத் தீ மிதி அனுபவம். அதற்கு நாம் ஈழத்தில் பிறந்திருக்கவேண்டும் அல்லது ஈழ இலக்கியங்களைப் படிக்க வேண்டும்.
மொஸ்கோ என்றொரு போராளி ஒருமுறை கூட துவக்கால் வெடிக்கவில்லை. ஒருமுறை கூட குதிரையை அழுத்தவில்லை. ஒரே ஒரு முறை களத்தில் விசையை இயக்கினான், தன் கழுத்தில் சுட்டு தற்கொலை செய்து கொள்கிறான். அவனும் தீரன் என ஏற்கப்படுகிறான். Rutger Bregman எழுதிய Humankind: A Hopeful History என்றொரு புத்தகம். பல போர்க் களங்களை ஆய்வு செய்த நூலது. பெரும்பாலும் உலகிலுள்ள படை வீரர்கள் கணிசமான அளவில் துப்பாக்கியை போர் முனையில் இயக்குவது இல்லை, அவர்களால் ஒருவரை கொல்ல இயலாது என்கிற அறிக்கை பற்றி பேசுகிறது.
வீரையா என்றொரு செய்வித்தைக்காரன். அவன் மந்திரித்து குங்குமம் இட்டு ஒரு குப்பி கொடுத்தால் இயக்கத்தின் கட்டாய ஆட்சேர்ப்பிலிருந்து தப்பித்துவிட முடியுமென்ற நம்பிக்கை. தாய்மார்களிடம் பெருஞ்சில்லறை சேர்க்கிறார். ஆனால் அவர் இயக்கத்திடம் பிடிபடுகிறார் எனும் அபத்தம்.
சங்கன் எனும் நாள்பட்ட திருடன், முன்னாள் போராளி. அவன் தெய்வத்தின் பொன் வேலினைத் திருடிப் பின் உருக்கி விற்க கொல்லனைத் தேடுகிறான். இறுதி வரை அகப்படவில்லை. அவன் தெய்வத்தின் முன் பேசும் வசனம் இது “இத்தனை துன்பங்களைத் தந்த அரசாங்கத்தையே தண்டிக்காத நீ, உன்னட்ட களவெடுத்த என்னையும் தண்டிக்க மாட்டாய் என்றொரு நம்பிக்கை”.
Elie Wiesel எழுதிய The Trial of God என்ற நாடகம் உலகளவில் பலமுறை மறு ஆக்கம் செய்யப்பட்டது. கைவிட்டமைக்காக மக்கள் தம் கடவுள் மீது வழக்கு தொடுத்து விசாரித்து அவரை குற்றவாளி என தீர்ப்பளிக்கிறார்கள். பின்னர் மீண்டும் அவரையே வழிபடுகிறார்கள். அகரமுதல்வனின் இந்தக் கதைகளும் கடவுள் தன் பக்தனை கைவிட்ட கதைகளே. ஆனாலும் பக்தன் கடவுளை விடாது இறுகப் பற்றிக் கொண்டு இருக்கும் கதையும் கூட.
இக்கதைகளில் சிதைக்கப்பட்ட சிவ உருக்கள் எழுந்து கொண்டே இருக்கின்றன. பீடம் பெயர்த்து எடுக்கப்படுகிறது. திரிசூலத்தில் இரண்டு இலைகள் மட்டும் எஞ்சுகின்றன. கால பைரவரின் நாய் ஒரு காலை இழந்து நொண்டி நடக்கிறது. ஆனாலும் உள்ளதை வைத்து ஒரு தெய்வத்தை எழுப்புகிறார்கள். மிச்சத்தை வைத்து வழிபடுகின்றனர். இழந்ததை நினைத்தல்ல கிட்டியதை நினைத்து புது வாழ்வு புகுகிறார்கள். இது ஒரு கட்டாயத் தேர்வு போலத் தோன்றும் ஆனாலும் வாழ்வு என்பதே கட்டாயங்களின் தொடர் பின்னல் தான்.
கதைகள் அனைத்திலும் கடலில் இருந்து அகரமுதல்வன் அறியாது வலைப்பிடித்து வந்த சில நட்சத்திர மீன்கள் உள்ளன. அது கவிதையாய்ச் சொல்லுதல் எனும் எழுத்து பாணி. இதுதான் என்னை முழு வீச்சில் வாசிக்க வைத்தது. என் சக வாசகருக்கும் பரிந்துரைக்கச் செய்தது.
“மேகத்தின் அலைவு சனங்களைப் போல ரூபமளித்தது. பெண்ணொருத்தி தன்னுடைய தலைமுடியில் அலைமேவும் கடலை கட்டியிழுத்துச் செல்வதைப் போல பிறிதொரு மேகத் தரிசனம் தோன்றியது” என ஒரு காட்சிபடுத்துதல்.
“கடலைப் பார்த்தேன். வடிவு வனைந்த திரவக்கோலமென அமைதியாய் அசைந்தது” என ஒரு உணர்வுவெளிப்பாடு.
இறுதி பகுதியை முடித்தபின் ஒரு சயனைட் குப்பி அணிந்த சிவன் தோன்றினார். நீல கண்டத்தில் இருந்து உதட்டினூடு வழிந்த ஒரு துளி அக்குப்பியில். “எம் இனத்தின் புராதனக் கண்ணீரும் குருதியும் அறத்தை விடவும் மேன்மையான ஆற்றலோடு தீவிரமாகும்” என்பது போன்ற வரிகள் இந்தப் புத்தகத்தில் நிறையவே உள்ளன.
இந்த ஓலங்கள் எல்லாம் ஒருதரப்பின் பக்கப்பாட்டாக இருந்தால் நம் இனம் தேவனால் கைவிடப்படுக! நீதி நம் பக்கம் இருந்தால் நாம் உயிர்த்து எழட்டும்!
ஈரோடு கிருஷ்ணன்The post நெருப்புண்டவனின் ராகம் – அணிந்துரை first appeared on அகரமுதல்வன்.
ஊர்சூழ் வரி – முன்னுரை
சத்தியம் பூமியிலிருந்து முளைக்கும் ,
நீதி வானத்திலிருந்து தாழப்பார்க்கும் .
வேதாகமம்
இந்தப் படைப்பினை எழுதவேண்டுமென்ற எண்ணம் உதித்து பல வருடங்கள் ஆயிற்று. உளத்தினுள் கொதிக்கும் உலைத்தீயின் செஞ்சுவாலைகள் வாய் பிளந்து எழுது… எழுது என்று உத்தரவு இட்டன. கொந்தளிப்பான வாழ்வையெழுத மொழியைத் தீண்டுவதில் எனக்கெப்போதும் பெருவிருப்பு. மொழியின் நினைவுக்குள் பெருந்துயர ஊழியால் கடகடக்கும் ஈழத்தாழியிலிருந்தே என் சொற்கள் எழுகின்றன.
என் படைப்புக்களில் “போதமும் காணாத போதம்” வெம்மை கலந்து வெளிப்படும் மூச்சுப் போன்றது. மண்ணுடன் கொண்ட மாறாக் காதலோடு புதையுண்ட ஆழத்திலிருந்து எழுமொரு சூரியனைப் போல இந்தப் படைப்பு ஆகியிருக்கிறது. திசையற்ற திசையில் அவலப்பட்டு நிற்கும் ஒரு தொல்லினத்தின் முன்பு ஆர்ப்பரிக்கும் கடல் என்ன சொல்லுகிறது? எங்கள் வானத்தில் ஒளிரும் நட்சத்திரங்கள் ஏன் நடு நடுங்குகின்றன? அரிசியும் உப்பும் விளைந்த மண்ணில் சவக்குழிகள் ஏன் நிறைந்தன? நாடும் வீடும் ஊரும் காலமும் புதைக்கப்பட்ட இருளில் மின்மினிகளேனும் பறப்பதில்லையே ஏன்? இன்னும் சில பகற்பொழுதுகள் நமக்கு ஏன் அருளப்படவில்லை? இவை கழிவிரக்கம் கோரும் வெறும் கேள்விகளுமல்ல, நினைவுப்படலங்களும் இல்லை. ஊழியாற்றில் மிஞ்சியவர்களின் நீதிமிகுந்த தினவின் பாடல்கள். “இருண்ட காலங்களில் பாடல்கள் இருக்குமா? ஆம், பாடல்கள் இருக்கும், அவை இருண்ட காலங்களைப் பற்றியதாக இருக்கும்” என்ற பெர்டோல்ட் ப்ரெக்ட்டின் புகழ்பெற்ற வரிகளைப் போலவே இருண்டு போனதொரு யுகத்தின் பாடல்களை பாடியிருக்கிறேன்.
“போதமும் காணாத போதம்” என்னுடைய தளத்தில் வாரமொருமுறை வெளியானது. இருபத்தைந்து அத்தியாயங்கள் கொண்டவை. வெளியாகுவதற்கு முன்பாக படித்து கருத்துக்களைச் சொல்லி செம்மைப்படுத்தும் ஆற்றலாளர்களாய் எழுத்தாளர்களான வாசு முருகவேல், பிகு, இளம்பரிதி ஆகியோரும் பதிப்பாளர் நூல்வனம் மணிகண்டனும் இருந்தனர். குறிப்பாக வழி இணையத்தள ஆசிரியரும் எழுத்தாளருமான சகோதரர் இளம்பரிதி என்னோடு நீண்ட உரையாடல்களை நிகழ்த்தி வந்தார். ஒவ்வொரு எழுத்தாளருக்கும் இளம்பரிதி போன்றதொரு “உளச்சுகந்தன்” அவசியம். இவர்களுக்கு நன்றியென்று எழுதவோ சொல்லவோ வேண்டியதில்லை. ஏனெனில் இவர்களே நான்.
ஒவ்வொரு வாரத்திலும் வெளியானவுடன் வாசித்து தமது அபிப்பிராயங்களைப் பகிர்பவர்கள் ஏராளம். பெங்களூரில் இருக்கும் என்னுடைய நண்பர் பாலாஜி அவர்கள் நீண்ட கடிதத்தை எழுதுவார். உரையாடுவார். அவருடைய வாசிப்பின் கண்டடைதல்கள் வியப்புக்குரியன. முனைவர் லோகமாதேவி வாய்ப்புக்கிட்டும் போதெல்லாம் எழுத்து வன்மை குறித்து சிலாகிப்பார். எனதருமை சகோதரர் கவிஞர் வேல் கண்ணன் வாய்க்கும் போதெல்லாம் வாசித்து தனது பாராட்டுதல்களை அனுப்பி வைப்பார்.
என்பால் அன்பு கொண்டவர்கள் அளித்த வாசக ஆதரவைக் கடந்து புதிய வாசர்கள் பலரும் உரையாட முன்வந்தார்கள். விமர்சகர் ஜா.ராஜகோபாலன் வெகுவாக பாராட்டினார். இந்த உறுதுணை எழுத்தூழியக்காரனுக்கு அவசியமாக தேவைப்படுகிறது. தளத்தில் தொடரினை எழுதத் தொடங்குங்கள் என்று ஊக்கமளித்த விஸ்ணுபுரம் பதிப்பகம் செந்தில்குமார் அவர்களை மறவேன். அது அவருக்கு தெரியாமலே நிகழ்ந்தவொரு அருங்கண உரையாடல்.
தொடருக்கான பெயரை அளித்தவர் என் மூத்தோன் எழுத்தாளர் நாஞ்சில் நாடன். சேக்கிழாருக்கு “உலகெல்லாம் உணர்ந்து” என்று அடியெடுத்துக் கொடுத்த இறையை நம்பும் மரபு என்னுடையது. அவர் தாள் பணிகிறேன். ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் சிறந்த ஓவியங்களை வரைந்தளித்த ஓவியர் கருப்பனுக்கு அன்பு. இந்த தொடரின் வழியாக என்னுடைய படைப்பு மனத்தையும், அதன் உள்ளார்ந்த வெடிப்பையும், எழுமனலையும் உணர்ந்தவர் மரியாதைக்குரிய ஈரோடு கிருஷ்ணன் அவர்கள் தான். மெய்சிலிர்க்க வைக்கும் அவதானங்களை முன்வைத்து என்னோடு பேசினார். இந்த நூலுக்கு அவரை விடவும் அணிந்துரை வழங்க ஆளில்லை என்பது என் துணிபு.
என்னுடைய படைப்புக்களை பெருமளவில் பதிப்பித்து வருகிற நூல்வனம் பதிப்பகத்துக்கும் அதன் முதன்மை பொறுப்பாளர் திருமதி அனிதா மணிகண்டன் அவர்களுக்கும் நன்றி. மெய்ப்பு பார்த்த அருமைச் சகோதரர் பாரதி கனகராஜ் அவர்களுக்கும் நன்றி. இந்தப் படைப்பை எந்த வகைமையில் சேர்க்கலாமென யோசித்த போது இது சிறுகதையோ, நாவலோ அல்ல என்பதில் உறுதியாகவிருந்தேன். பிறகு துங்கதை என்றொரு சொல்லாடலை அணிவித்தேன். கந்தபுராணத்தில் உள்ள சொல் துங்கதை. அது துன்பத்தை குறிக்கவில்லை. உயர்வை, மானத்தை, கெளரவத்தை பறைசாற்றும் சொல். கிரேக்க சொல்லாடலில் “ Ode” என்றுள்ள இலக்கியப் பதத்தை கண்டடைந்தோம். ஆகவே தமிழின் முதல் “துங்கதை” இலக்கிய தொகுப்பாக இதனைக் குறிக்கலாம்.
என்னுடைய எழுத்தையும், இலக்கியச் செயற்பாட்டையும் ஊக்குவிக்கும், அதற்கு துணை புரியும் விதமாக புரிந்தும் என்னைக் கரம்பிடித்த பேரன்பு பிரபாவுக்கும், என் குருதியாய் பூத்து அப்பா என்றழைக்கும் மகன் ஆதீரனுக்கும், என் அம்மாவுக்குமாய் தொடர்ந்து எழுதுவதே அவர்களுக்கு வழங்கும் நன்றியாகும் என்பேன்.
சிறுவயதிலிருந்தே எழுத்தையும் இலக்கியத்தையும் உறவாக்கியவன் நான். சைவப் பதிகங்கள், சமய சொற்பொழிவுகள், நிகழ்த்துகலைகளென பண்பாட்டுப் பின்னணியோடு வளர்ந்தவன். அல்லற்படுதல் ஒரு தினக்கருமமென அழிவின் குகைக்குள்ளால் இடம்பெயர்ந்த என் சிறு பாதங்களை ஏந்திக் கொஞ்சிய அம்மா “ ஒருநாளைக்கு இந்த நடையெல்லாம் நிண்டு, நிம்மதி வந்திடும் ராசா” என்றாள். முள்ளிவாய்க்கால் வரை அப்படியான நிம்மதிக்காகவே காத்திருந்தோம். வீரயுகத்தின் தணல் மேட்டில் குடியிருந்தோம். ஆனால் நிகழ்ந்தவை எல்லாமும் பயங்கரங்கள். இந்து சமுத்திரத்தின் மீது அந்தகாரம் கவிந்தது. வன்னியில் தனித்துப்போய் வெள்ளைக்கொடியோடு வெட்டைக்கு வந்தது மனுஷத்துவம். கைகள் பின்னால் கட்டப்பட்டு, ஆடைகள் அவிழ்க்கப்பட்டு, இயந்திரத் துப்பாக்கிகள் கொன்று குவித்த பெரும் பிணக்குவியலுக்குள் அது தூக்கிவீசப்பட்டது. உலகம் போற்றும் மனுஷத்துவம் முகங்குப்புற நந்திக்கடலில் மிதந்தது. அதன் பிடரியை எத்தனையோ தேசங்களின் தோட்டாக்கள் துளைத்திருந்தன கண்டேன். அப்போது மனுஷத்துவத்தின் யுகமும் ஈழத்தமிழரின் வீரயுகமும் முடிந்திருந்தது. பின்னொருக்கால் அம்மா என்னுடைய பாதங்களை ஏந்தி “இந்தப் பாதங்கள் அலைகடலின் துரும்பு. பெருங்கனவின் ரத்தக் கொப்புளங்கள் இதில் உள்ளன” என்றாள். அம்மாவின் நிழலே நிலம்.
“திசையழிந்த வெளியெங்கும் நிரம்பிய ஒளியே மண்ணில் தீ என உறைகிறது என்று உணர்ந்தனர்” என்ற வரிகள் எழுத்தாளர் ஜெயமோகனின் கொற்றவை நாவலில் உள்ளது. அது உண்மைதான். ஈழ மண்ணில் தீ என உறையும் திசைகளின் ஒளிக்கதிர்களைத் தான் இப்படைப்பில் நான் படரவிட்டிருக்கிறேன். சனங்களின் ஜீவிதத்தில் ஒளி பெருகுக! அவ்வாறே ஆகுக!
அகரமுதல்வன்
புத்தகம் வாங்க – https://www.panuval.com/bothamum-kanadha-botham-10025742
The post ஊர்சூழ் வரி – முன்னுரை first appeared on அகரமுதல்வன்.
March 12, 2024
போதமும் காணாத போதம் – உரைகள்
March 10, 2024
போதமும் காணாத போதம் – 24
அனலி வீரச்சாவு அடைந்தாள். வித்துடல் திறக்கமுடியாதபடி பேழையில் அடைக்கப்பட்டு வந்தது. கொடுநாற்றத்துடன் பேழைக்குள்ளிருந்து நிணம் கசிந்து வெளியேறியது. அமைக்கப்பட்ட பந்தலுக்குள் வெயில் வராமல் கம்பளங்கள் தொங்கவிடப்பட்டன. வாசனைத் திரவியங்கள், சந்தன நறுமண ஊதுபத்திகளென மூச்சுவிட உபாயங்கள் அளித்தும் வெயில் ஏற ஏற சுற்றியிருந்தவர்களின் குடல் புரண்டது. சிலர் மூக்கைப் பொத்தியபடியே இருந்தனர். வயிற்றைக் குமட்டி வெற்றிலையைப் போட்டு அதக்கினேன். நான்கு நாட்களுக்குப் பிறகு களத்தில் மீட்கப்பட்ட வித்துடல் இப்படித்தான் இருக்குமென இயல்பாகச் சொல்லினர். கப்டன் அனலி என்று அச்சிடப்பட்டு வழங்கப்பட்ட பெரிய புகைப்படத்தில் மலர்ந்திருந்தாள். வித்துடல் மாவீரர் துயிலுமில்லம் நோக்கி புறப்பட்டது. வீதியில் சனங்கள் கூடி மலரஞ்சலி செய்தனர். சிவந்தொழுகும் அந்தியின் வண்ணத்தில் மழை தூறிற்று.
அனலியின் தாயார் மயக்கமடைந்து ஓய்ந்திருந்தாள். அனலியின் சகோதரனான அமலன் என்னுடைய கைகளைப் பற்றி துடிதுடித்தான். “தங்கா, என்னை மன்னிக்கவே மாட்டாள். அவளை நாந்தான் கொலை செய்திட்டன்” என்றான். அவனைத் தழுவி ஆறுதல் சொன்னேன். அனலியின் வித்துடலை விதைத்து திரும்பினோம். இருண்ட சொற்களால் எழுதப்பட்ட நீண்ட வரியைப்போல வெறித்திருந்தது வீட்டிற்கு செல்லும் வீதி. கனவிற்காக உயிர்துறப்பதா? உயிர் துறப்பதுவே கனவா? வன்னிநிலம் முழுதும் அதே இருண்ட சொற்களாலான வீதியில் சனங்கள் வீடுகளுக்குத் திரும்பினர்.
அனலியின் கைகளைப் பற்றிக்கொண்டு சென்ற கோவிலும் குளமும் களையிழந்தன. “நீ வளர்ந்து வந்து என்னைத் தான் கலியாணம் செய்து கொள்ளவேண்டும் வடுவா” என்பாள். என்னுடைய தலையில் பேன் பொறுக்கி விரல் நகத்தில் மெழுகுப் பசையாய் ஆகும் வரை குத்திக்கொண்டே இருப்பவளை இழந்தேன். அவளின் வாசனை எனக்குப் பிடித்திருந்தது. கூந்தலும், நெற்றியில் பொட்டென அமைந்திருக்கும் சிறிய மச்சமும் அவள் வடிவின் அடவு. இப்படி ஏன் உயிர்களை இழக்கிறோம்? எத்தனை எத்தனையாய் அவலப்படும் பிறவியிது? அனலியையும் மண் பிளந்து வாங்கிற்று. அவளது மேனியில் ஒரு பிடி மண்ணை அள்ளிப்போட்டேன். வரலாற்றின் முகப்பில் விதைகுழிகள் வரவேற்கும்.
வன்னியிலுள்ள சனங்களுக்கு இயக்கம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. “வீட்டுக்கு ஒருவரை நாட்டுக்கு தருவீர்” என்று பதாகைகள் எழுந்து நின்றன. பரப்புரைகள் முடுக்கிவிடப்பட்டன. வீடு தோறும் அரசியல்துறைப் போராளிகள் படையெடுத்தனர். வீடுகளில் பிரச்சனை தோன்றியது. எந்தப் பிள்ளையை போருக்கு அனுப்புவதென்று பெற்றோர்கள் குழம்பினர். எப்போதும் வீடுகளில் விளக்குகள் சுடர்ந்தன. சனங்களிடமிருந்து உறக்கம் எரிந்து போயிற்று. அண்ணனை வீட்டிலிருக்கச் சொல்லிவிட்டு பாசறை நோக்கிப் புறப்பட்ட தம்பிகளும், தங்கைகளும் நாளேட்டில் வெளியாயினர். பிள்ளைகளை போராட்டத்தில் இணைத்த பெற்றோர்களின் பேட்டிகள் இயக்கத்தின் அனைத்து ஊடகங்களிலும் வெளியானது.
தேய்பிறை நிலவின் ஒளிமங்கும் நள்ளிராப் பொழுதில் உறக்கத்திலிருந்து விழித்து நீரருந்திய அனலியிடம் “அமலன் என்னோட இருக்கட்டும், நீ போ மோளே” என்ற தாயாரின் சொல்லை ஆமோதித்தாள். தேயும் நிலவுடன் அவளது உறக்கம் மெலிந்தது. கண்களை மூடமுடியாமல் மூச்சின் வேகம் அதிகரித்தது. நெஞ்சைப் பிடித்தபடி எழுந்தாள். அவள் எழுப்பிய சத்தம் கேட்டு அமலன் திடுக்கிட்டான்.
“தங்கா, என்னடி செய்யுது?”
ஒன்றுமில்லையென தலையை ஆட்டினாள். தாயார் அவளுக்கு சுடுதண்ணி கொடுத்தாள். “என்னில எதுவும் கோபிக்காத மோளே, கொண்ணா வருத்தக்காரன். அவனை அனுப்பிப் போட்டு என்னால உயிர் வாழ ஏலாது” அனலியின் கால்களை தொழுதெழுந்தாள்.
அடுத்தநாள் காலையிலேயே கிளிநொச்சியிலுள்ள அரசியல் துறையினரின் முகாமுக்குச் சென்று இயக்கத்தில் இணைந்து கொண்டாள். ஒவ்வொரு வீட்டிலிருந்தும் புறப்பட்டுப் போகும் பிள்ளையை எல்லோருமாக நின்று வழியனுப்ப பழகினர். அனலிக்கும் அது வாய்த்தது. அமலன் கொஞ்சநாட்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்து விம்மினான். ஊரோடு ஒத்த துயர். போருக்கு மகவுகளை அனுப்பி வைத்துவிட்டு, எரிமலை கொதிக்கும் கருவறையோடு விரதமிருந்தனர். பிள்ளைகளின் உயிருக்கு எதுவும் நேரக்கூடாதென கோவில்களுக்கு நேர்த்தி வைத்தனர். அனலி இயக்கத்திற்குச் சென்று ஆறுமாதத்திலேயே வித்துடலாக திரும்பிவந்தாள். அன்றிரவு அவள் ஆசை ஆசையாக வளர்த்த பசு, வெள்ளை நிறத்தில் கன்றை ஈன்றது.
“என்ர தங்காவை நாந்தான் கொலை செய்திட்டன். அவள் என்னை மன்னிக்கவே மாட்டாள்” அமலன் எட்டாம் நாள் செலவு வீட்டிலும் சொல்லியழுதான். அவனைத் தேற்றுவதே எங்களுக்கு வேலையானது. “அமலன் இனிமேலும் நீ இப்பிடிச் சொன்னதைக் கேட்டால், இயக்கம் உன்னை கொலைக்கேஸ்ல பிடிச்சுக் கொண்டு போய்டவும் வாய்ப்பிருக்கு. அவங்களுக்கு இப்ப ஆள் பற்றாக்குறை எண்டு உனக்குத் தெரியும் தானே” என்றார் காசிப்பிள்ளை மாமா. கூடியிருந்தவர்களும் நடந்தாலும் ஆச்சரியமில்லை என்பதைப் போலவே ஆமோதித்தனர்.
இயக்கத்துக்கு இப்ப எல்லாமும் பற்றாக்குறைதான். ஒரேயொரு வரவு இதுதான். வித்துடல்களை அடுக்கியடுக்கி நிலத்தையும் கைவிடீனம். மிஞ்சப்போறது என்னவெண்டுதான் தெரியேல்ல” என்ற காசிப்பிள்ளை மாமா பீடியைப் புகைத்து மூக்கினால் புகை எறிந்தார். உலாவ வழியற்ற பெருமரத்தின் நிழலென சனங்கள் உறைந்திருந்தனர். யுத்த அக்கினி வன்னிக் காட்டின் மேய்ச்சல்களையும் பட்சித்தது. அதன் சுவாலை வெளியின் விருட்சங்களையெல்லாம் எரித்துப்போட்டது. சொந்த மாமிசத்தின் துண்டங்களை சனங்கள் கூட்டிப் பெருக்கினர்.
மாதங்கள் உருண்டோடின. நடுச்சாமத்தில் கிளிநொச்சியிலிருந்து வீட்டிற்கு வந்துகொண்டிருந்தேன். அனலியின் வீட்டினைக் கடந்து வருகிற அடுத்த ஒழுங்கையில் எனது வீடு. என்னுடைய ஈருருளியின் முன்சக்கரம் ஆட்டம் கண்டிருந்தது. தெருவில் நாய்கள் குரைத்து விரட்டின. சீமைக்கருவேல மரங்கள் காற்றில் அசையும் சத்தம் ஆசுவாசத்தை தந்தது. அனலியின் வீட்டின் முன்பாக கச்சான் விதைத்திருந்தனர். அந்த தோட்டத்தின் நடுவே யாரோ நின்று கொண்டிருப்பதை பார்த்தேன். அந்த உருவம் திடீரென மறைந்தது. திகைப்புற்று அங்கேயே நின்றேன். கையில் கிடந்த டோர்ச் லைட்டால் அடித்துப் பார்த்தேன். யாருமில்லை. ஈருருளியை மிதிக்கலானேன். பாரம் அழுத்தியது போலிருந்தது. நான் பின்னால் திரும்பிப் பார்த்தேன். எவருமில்லை. திடீரென பாதையின் ஓரத்தில் தன்னுடைய கூந்தலை இரட்டைச் சடையாக இறுக்கிப் பின்னிக் கொண்டிருந்தாள் அனலி. அவளுடைய முகம் பொலிவுற்ற பூசணிப்பூவாய் மஞ்சள் நிறத்துடனிருந்தது. அவளது பெயர் சொல்லி அழைத்தேன். எதையும் பொருட்படுத்தாமல் சடை பின்னிக் கொண்டிருந்தாள். நான் விடியும் வரை அங்கேயே மயக்கமுற்று கிடந்திருக்கிறேன்.
வீட்டிற்கு தூக்கிச் சென்றவர்கள் நடந்தவற்றைக் கேட்டார்கள். அனலி மஞ்சள் முன்னா மரத்தடியில் நின்றாள். ஆனால் எதுவும் கதைக்கவில்லை. அதன் பிறகு என்னால் அசையமுடியாது போயிற்று. பிறகு என்ன நடந்ததென தெரியவில்லையென்றேன். அனலி உன்னை ஒற்றைப்படையாக விரும்பினாள். அதனாலேதான் உனக்கு காட்சித் தந்திருக்கிறாள் என்றார் காசிப்பிள்ளை மாமா. அவள் என்னுடைய ஸ்நேகிதிதான். ஆனால் நீங்கள் சொல்வதைப் போலில்லை என்றேன். அனலியின் தாயாரும், அமலனும் வீட்டிற்கு வந்திருந்தார்கள். அனலியை இயக்கத்தில் இணையச் சொன்ன நாள்முதலாய் புழுங்கித்தவிக்கும் தாய்மை. அவள் பேயாக அலைவது உண்மையில்லையென சிலர் சொன்னார்கள். “அவள் பேயாக வந்தாலும் வரட்டுமே. இயக்கத்துக்கு போய் செத்தபிள்ளையள் இப்பிடி உலாவினம். அதில பயப்பிடுறதுக்கு என்ன இருக்கு” என்றாள் அம்மா.
“எடியே நீ இயக்கத்துக்கு குடுக்கிற அதேமரியாதையை இயக்கப் பேய்களுக்கு குடுப்பாய் போல” என்றார் காசிப்பிள்ளை.
“இயக்கப் பிள்ளையள். எப்பவும் எனக்கு பிள்ளையள்தான்”
ஊருக்குள் கொஞ்சம் பயம் வந்தது. கம்மாலையடுத்து இருக்கிற மரத்தடியைத் தாண்டுபோது எல்லோருக்கும் குழை சோறு மணந்தது. யாரோ கழிப்பு கழிச்சிருக்கிறார்கள் என்று நினைத்தார்கள். ஆனால் மாதக்கணக்கில் மணந்தது. இரவுகளில் அந்த வாசனை பலருக்கு மயக்கத்தை உண்டாக்கியது. வீட்டின் பின்பிருந்த மாட்டுத்தொழுவத்தில் அனலியின் குரல் கேட்டு எழும்பிப் போயிருக்கிறாள் தாய். கன்று துள்ளித் துள்ளி விளையாடியது. அது தனது உச்சியை யாருக்கோ தடவக்கொடுத்து சுகம் காண்பதைப் போல கிறங்கி நின்றது.
அன்றைக்கு என்னுடைய நன்பனின் சகோதரர் வீரச்சாவு அடைந்திருந்தார். விசுவமடுவுக்கு சென்று திரும்ப வேண்டியிருந்தது. பேருந்தில் இறங்கி, வீட்டிற்கு செல்ல வேண்டும். லேசாக மழையும் தூறிக்கொண்டிருந்தது. ஆட்கள் நடமாட்டம் இல்லாதிருந்தது வீதி. கொஞ்சம் பயமாகவிருந்தது. நான் மதகைத் தாண்டி நடந்தேன். நாய்களின் கண்கள் வழமைக்கு மாறாய் நெருப்புக் கனிகள் போல சிவந்திருந்தன. காற்றில் ஒருவித வெக்கை. சோளம் வாட்டும் வாசனை உள் நாசியில் புகுந்தது. கம்மாலையைத் தாண்டினேன். குழைசோறு மணந்தது. கண்களை மூடிக் கொண்டு விறுவிறுவென நடந்தேன். மஞ்சள் முன்னா மரத்தடியை கடக்கும் போது அனலி என்னை அழைத்தாள். திரும்பக்கூடாதென மனம் சொல்லியும் திரும்பினேன். யாருமில்லை. மஞ்சள் முன்னா மரத்தின் மீதிருந்து குரல் கேட்டது. மேல் நோக்கிப் பார்த்தேன். நீலநிறத்தில் பாவாடை அணிந்து, கண்களுக்கு மை தீட்டி, கனகாம்பரப் பூக்களைத் தலைக்குச் சூடி அனலி அமர்ந்திருந்தாள். கீழே வா என்றழைத்தேன். “இல்லை உனக்கருகில் நான் வந்தால், நீ மூக்கை மூடுவாய். என் நாற்றம் தாங்காது வெற்றிலையைப் போட்டு அதக்க வேண்டிவரும். இந்நேரத்தில் உனக்கு ஏன் சங்கடத்தை தருவான்” என்றாள்.
“நீயேன் இப்படி தேவையற்ற விஷயங்களைக் கதைக்கிறாய். இரு நானே மேலே வருகிறேன்”
“வேண்டாம், நீ கீழே நில். என்னுடைய உடல் வாசனையில்லாதது. உன்னுடைய குடலைப் புரட்டிவிடும்” என்றாள்.
“அனலி… அப்படிச் செய்தமைக்காக நீ என்னைத் தண்டித்துக் கொள். ஆனால் மீண்டும் மீண்டும் அதையே சொல்லாதே. இரு வருகிறேன்” என்று மரத்தில் தாவினேன்.
மரத்திலிருந்து கீழே விழுந்த என்னை அதிகாலையிலேயே ஊரவர்கள் மீட்டனர். அந்த மரத்தில்தான் அவள் குடியிருக்கிறாள் என்று சிலர் கருதினார்கள். மரத்தை தீ வைத்துக் கொழுத்திவிட்டால் அவளது ஆன்மா சந்தியடையும் என்றார்கள். எதுவும் செய்யவேண்டாம். அவளால் எங்களுக்கு ஒரு தீங்கும் நடவாது என்றாள். ஊரவர்கள் சிலர் தமது பிள்ளைகளை வெளியே அனுப்ப பயந்தனர். அமலன் பொழுது சாய்ந்தால் வீட்டுக்குள்ளேயே ஒடுங்கினான்.
என்னைச் சாக்கொல்லாதே சாக்கொல்லாதே என்று உறக்கத்திலிருந்து கதறி எழும்பி ஊரைக் கூட்டினான். அவனை அழைத்துச் சென்று ஒரு சாமியாடியிடம் நீறு போட்டு கறுப்பு நிறத்தில் கயிறும் கட்டிவிட்டேன். அவனுக்கு அந்தத் துணையும் காப்பும் ஆறுதலாயிருந்தது. அனலி ஆரையும் எதுவும் செய்யமாட்டாள் என்று அவனுக்குச் சொன்னேன்.
அன்றிரவு மாட்டுத்தொழுவத்தில் விளையாடிக்கொண்டிருந்த கன்று பெரிதாகச் சத்தமிட்டு அழுதது. விளக்குடன் ஓடிச்சென்ற தாயார் மல்லாந்து கிடந்த பசுவின் காம்பில் நீலம்பாரித்து கிடப்பதைக் கண்டாள். உயிருக்குப் போராடிய பசுவை காப்பாற்ற முடியாமல் விளக்கு வெளிச்சத்தில் பார்த்துக் கொண்டிருந்தார்கள். சில நொடிகளில் மஞ்சள் முன்னா மரம் தீப்பற்றி எரிந்தது. ஊரிலுள்ள விஷமிகள் யாரோ இதனைச் செய்திருப்பார்கள் எனவெண்ணி அம்மா கூச்சலிட்டாள். எவரொருவரும் செய்தேனென்று சொல்லவில்லை. ஊரே கொஞ்சம் கதி கலங்கியது. தம் நிழலைக் கண்டு அஞ்சினர். மஞ்சள் முன்னா மரத்தின் கீழே ஆழமாய் மண்ணில் இறங்கியிருந்தன அழிவற்ற கால் தடங்கள்.
“அவள் போய்ட்டாள். இனி வரமாட்டாள். எல்லாமும் அடங்கிற்றுது” என்றாள் அம்மா. அனலி ஏன் இப்படி நடந்து கொள்கிறாள் என்கிற குழப்பமும் அச்சமும் எனக்குத் தோன்றியது. அவளும் நானும் சென்றுவரும் கோவிலில் வழிபட்டேன். நடுமதியத்தில் குளத்திற்குச் சென்று குளித்தேன். அவள் நின்று குளிக்கும் இடத்தில் குமிழ்கள் பொங்கின. சலவைக் கல்லில் பிழிந்து வைத்திருந்த ஆடைகள் அவளுடையது போலவே தோன்றின. ஓடிச்சென்று பார்த்தேன். அப்போதுதான் குளித்து பிழிந்த ஈரத்துடன் இருந்தவை அனலியின் ஆடைகள்தான். அவற்றை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு திரும்பினேன். அம்மா கேட்டாள்,
“ஆற்ற உடுப்படா இது?”
“அனலியின்ர”
“அவளின்ர உடுப்ப எங்கையிருந்து எடுத்துக் கொண்டு வந்தனி”
“குளத்தடியில”
அம்மா என்னிடமிருந்து ஆடைகளை வாங்கி வீட்டினுள்ளிருந்த கொடியில் காயப்போட்டாள். “அவள் இஞ்சதான் திரிகிறாள். பாவம் பிள்ளை” என்றாள் அம்மா.
சில நாட்கள் கழித்து ஒரு மதிய நாளில் வீட்டில் தனியாகவிருந்தேன். வீட்டின் கதவை யாரோ தட்டினார்கள்.
“ஆர்?”
“கதவைத் திறவுங்கோ”
“ஆரெண்டு கேக்கிறன். பெயரில்லையோ”
“இருக்கு. ஆனால் சொல்லமாட்டேன். கதவைத் திறவுங்கோ”
எழுந்து கதவைத் திறக்கும் முன்பாக பல்லி சொன்னது. நல்ல சகுனம். கதவைத் திறந்தேன். பூசணிப் பூவின் முகப்பொலிவும், குழை சோற்றின் வாசனையோடும் அனலி நின்று கொண்டிருந்தாள்.
“என்னடா இப்பிடி பார்க்கிறாய். என்ர உடுப்பைத் தா” என்றபடி வீட்டிற்குள் வந்தாள். மடித்து வைக்கப்பட்டிருந்த உடுப்பை எடுத்து அவளிடம் கொடுத்தேன். அனலி “நீ வளர்ந்து வந்து என்னைத் தான் கலியாணம் செய்து கொள்ளவேண்டும் வடுவா” என்றாள்.
வெளியே வெயில் எறிந்தது. ஆனாலும் பூமி குளிர்ந்தது.
The post போதமும் காணாத போதம் – 24 first appeared on அகரமுதல்வன்.
March 8, 2024
திரு அங்கமாலை
திருநாவுக்கரசர் அருளிய
திரு அங்கமாலை
திருச்சிற்றம்பலம்.
தலையே நீவணங்காய் – தலைமாலை தலைக்கணிந்து
தலையாலேபலி தேருந்தலைவனைத்-தலையேநீ வணங்காய்.
கண்காள் காண்மின்களோ-கடல்நஞ்சுண்ட கண்டன் தன்னை
எண்தோள் வீசிநின்றாடும் பிரான் தன்னைக்-கண்காள் காண்மின்களோ.
செவிகாள் கேண்மின்களோ-சிவன் எம்இறை செம்பவள
எரிபோல் மேனிப் பிரான்திறம் எப்போதும் -செவிகாள் கேண்மின்களோ.
மூக்கே நீ முரலாய்-முதுகாடுறை முக்கணனை
வாக்கே நோக்கிய மங்கை மணாளனை-மூக்கேநீ முரலாய்.
வாயே வாழ்த்துகண்டாய்-மதயானை உரிபோர்த்துப்
பேய்வாழ் காட்டகத் தாடும் பிரான்தன்னை-வாயே வாழ்த்துகண்டாய்.
நெஞ்சே நீநினையாய்-நிமிர் புன்சடை நின்மலனை
மஞ்சாடும் மலை மங்கை மணாளனை-நெஞ்சே நீ நினையாய்.
கைகாள் கூப்பித் தொழீர்-கடி மாமலர் தூவிநின்று
பைவாய்ப் பாம்பரை யார்த்த பரமனைக்-கைகாள் கூப்பித்தொழீர்.
ஆக்கை யாற்பயனென்-அரன் கோயில் வலம்வந்து
பூக்கை யால் அட்டிப் போற்றிஎன் னாதஇவ்-ஆக்கை யாற்பயனென்.
கால்க ளாற்பயனென்-கறைக் கண்டன் உறைகோயில்
கோலக் கோபுரக் கோகரணம் சூழாக்-கால்க ளாற்பயனென்.
உற்றார் ஆர்உளரோ-உயிர் கொண்டு போம் பொழுது
குற்றா லத்துறை கூத்தன் அல்லால் நமக் குற்றார் ஆர்உளரோ.
இறுமாந் திருப்பன் கொலோ-ஈசன் பல்கணத் தெண்ணப் பட்டுச்
சிறுமான் ஏந்திதன் சேவடிக் கீழ்ச்சென்றங்(கு)-இறுமாந் திருப்பன்கொலோ.
தேடிக் கண்டுகொண்டேன்-திருமாலொடு நான்முகனும்
தேடித் தேடொணாத் தேவனை என்னுளே-தேடிக் கண்டுகொண்டேன்.
திருச்சிற்றம்பலம்.
The post திரு அங்கமாலை first appeared on அகரமுதல்வன்.
March 7, 2024
அசையும் காலம்
01
வற்றிய ஏரியின்
சதுப்புச் செடிகளில்
குழுமியிருக்கின்றன
பறவைகள்
எவ்வளவு
ஈரம்
தளும்பியிருக்கிறது
இந்த அந்தி.
02
ஒன்றையும்
பற்றாமல்
வானுயரத் துடிக்கிறது
கொடி.
எதையும் பற்றாமல்
கீழிறங்கிப் போகிறது
நிழல்.
03
பூமியை
கிளைகளாக்கி
அமர்ந்திருக்கும்
பறவைகள்
நாம்.
எக்கணம்
பறந்தாலும்
அசையும்
காலம்.
The post அசையும் காலம் first appeared on அகரமுதல்வன்.
March 5, 2024
நூல் வெளியீடு – வாசகர்களுக்கு அறிவிப்பு
திருவண்ணாமலையில் நடைபெறவிருக்கும் “போதமும் காணாத போதம்” நூல் வெளியீட்டு விழாவிற்கு வெளியூரிலிருந்து வருகை தரும் வாசகர்களுக்கு தங்குமிட வசதியும் உணவு ஏற்பாடும் செய்யப்பட்டிருக்கிறது. சனிக்கிழமை மாலை திருவண்ணாமலைக்கு வந்து சேர்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலையில் நிகழ்ச்சியில் பங்கெடுக்க விரும்புவர்களுக்காகவே இப்படியொரு முன்னெடுப்பினை செய்திருக்கிறோம். இந்த வகையில் பயணத் திட்டத்தை வகுப்பவர்கள், மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொண்டு, தமது வருகையை பதிவு செய்தால் ஏற்பாடுகளை சீராகச் செய்ய வசதியாக இருக்கும்.
மின்னஞ்சல் – akaramuthalvan01@gmail.com
The post நூல் வெளியீடு – வாசகர்களுக்கு அறிவிப்பு first appeared on அகரமுதல்வன்.
March 3, 2024
போதமும் காணாத போதம் – 23
அம்மாவை விசாரணைக்கு வருமாறு வற்புறுத்தினார்கள். சனங்கள் திரண்டனர். வீட்டில் வைத்தே விசாரிக்குமாறு வன்கவர் வெறிப்படையினரிடம் கூறினார்கள். ஆனால் அவர்களோ தரையோடு தரையாக பலாத்காரமாக அம்மாவை இழுத்துச் செல்லவும் தயாராக இருந்தார்கள். வீட்டிலிருந்த மிகச் சொற்பமான சாமான்களையும் கிண்டிக்கிளறி எறிந்தனர். முள்ளிவாய்க்காலில் உயிரைத் தவிர எல்லாவற்றையும் இழந்த பின்பும், எம்மிடமிருந்து எதனைப் பறிக்க நினைத்தார்கள்? மீளக்குடியமர்த்தப்பட்ட ஒவ்வொரு கிராமங்களிலும் இப்படியான வன்முறைகள் அப்பாவிச் சனங்கள் மீது தொடர்ந்தன. வீட்டின் பின்புறமிருந்த சிறிய கோவிலுக்குள் சென்றனர். அதற்குள் எதுவுமில்லை. மூலஸ்தானத்திலிருந்த சிறிய கலசத்தை தன்னுடைய காலணியால் ஓங்கி உதைந்த, வன்கவர் வெறிப்படை வீட்டிலிருந்து அம்மாவை கூட்டிச்சென்றது. விசாரணை முடிந்ததும் அனுப்பி வைப்போமென என்னிடம் சொன்னார்கள். அம்மாவின் முகத்தில் வாட்டமில்லை. கண்களில் தீயின் நிழல். என்னை அழைத்து முத்தமிட்டு “அம்மா திரும்ப வந்திடுவன். நீ பசி கிடக்காமல் சாப்பிடு. தவறாமல் கோவிலுக்கு ஒரு பிடி அரிசி படை” என்றாள். அம்மா என்னிலிருந்து வெகுதூரத்தில் மறையும் வரை, வீதியிலேயே நின்றேன். சனங்கள் பதற்றத்தில் ஏதேதோ சொல்லினர்.
அன்றிரவு கோவிலுக்குள் நுழைந்து சாதுவாய் நெளிந்திருந்த கலசத்தை சரியாக்கினேன். ஒரு பிடி அரிசியை எடுத்து படைத்தேன். அம்மாவை நினைத்துச் சொல்லியழ எவருமில்லாது தனித்திருந்து தீபத்தை ஏற்றினேன். சொந்தக்காரர்கள் வந்து ஆறுதல் சொல்லிப்போயினர். அம்மாவின் நிலையறிய அரச உத்தியோகத்தர்களின் உதவியைத் தேடி சிலர் சென்றனர். எதுவும் துணைக்கு வராது விலகின. கோவில் வாசலிலேயே படுத்திருந்தேன். வணங்கிச் செல்பவர்களுக்கு ஒரு பிடி அரிசியை வழங்கிவிட்டு அங்குதான் அம்மாவுக்காக காத்திருந்தேன். மூன்றாவது நாள் மாலைப்பொழுதில் அம்மா வீட்டிற்கு வந்தாள். சனம் கூடித் திரண்டது. எதற்காக விசாரணை? என்ன கேட்டார்கள்? என்றெல்லாம் அறிய முண்டியடித்தனர். “இயக்கத்தின் ஆதரவாளராக நீங்கள் இருந்தீர்களா?” என்று கேட்டார்கள். “இயக்கம் இல்லாத இன்றைக்கும் ஆதரிக்கிறேன். என்றைக்கும் ஆதரிப்பேன்” என்றேன். “உங்களுக்குத் தெரிந்து ஆயுதங்கள் எங்கேயோ புதைக்கப்பட்டிருப்பதாக தகவல், எங்கேயென்று சொல்லுங்கள்” என்றனர். “அப்படி எதுவும் எனக்குத் தெரியாது” என்றேன். பொய் சொல்லாதீர்களென அடித்தார்கள். வதைத்தார்கள். ஒரு தகரத்தில் உப்பைக்கொட்டி அதன் மீது கட்டிப்போட்டார்கள். நீங்கள் கேட்பது எதுவும் எனக்குத் தெரியாதென சொல்லிக்கொண்டிருந்தேன். அதனை அவர்கள் நம்பிக்கொள்ள மூன்று நாட்கள் ஆகிவிட்டன. அவ்வளவுதான் என்றாள்.
அம்மா கலசத்திற்கு நீரள்ளி ஊற்றினாள். மண்ணால் கழுவி மண்ணெடுத்துச் சாற்றினாள். பூசை செய்வித்து எல்லோருக்கும் நெற்றியில் மண்ணைப் பூசினாள். எல்லோரும் சென்றதற்கு பிறகு நானும் அம்மாவும் அமர்ந்திருந்து கதைத்தோம். அவள் தன்னுடைய முதுகைக் காண்பித்தாள். தோலுரிந்த சிகப்புக் காயங்கள். முள்ளுக்கம்பியால் அடித்து இழுத்தார்கள் என்றாள். மஞ்சளை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்துக் குழைத்து காயத்தில் இட்டேன். “அம்மா உங்களை நன்றாக கொடுமைப்படுத்தி விட்டார்கள்” என்றேன். அவள் எதுவும் கதையாமல் உறைந்திருந்தாள். அன்றிரவு முழுவதும் அம்மாவை இறுகக் கட்டியணைத்து உறக்கமில்லாது விழித்திருந்தேன். அம்மா புரண்டு படுக்க முடியாமல் தவித்தாள். நோவும், கொதிப்பும் உடலை ஆக்கிரமித்திருந்தது. “ஆர்மிக்காரங்களுக்கு ஏதோவொன்று அரசல்புரசலாய் போயிருக்கு, அதுதான் தேடி வந்திருக்கிறாங்கள்” என்றாள். “அப்பிடி என்னத்தையம்மா நாங்கள் மறைச்சு வைச்சிருக்கிறம்” கேட்டேன். “விஷயம் அதுவில்லை. அவங்களுக்கு எப்பிடி சந்தேகம் வந்தது. எப்பிடி என்னை நெருங்கினவங்கள் எண்டுதான் யோசனை. அப்பா ஆரோ ஒருத்தன் அவங்கட பிடிக்குள்ள இருக்கிறான்” என்றாள். அம்மா சுயநினைவற்று ஏதேதோ கதைத்தாள். அவளை இறுக்கி கட்டியணைத்து அம்மா…அம்மா எனக்குப் பயமாயிருக்கு என்று சொல்லியும் கதைப்பதை நிறுத்தவில்லை. ஆங்காரமாய் படுக்கையிலிருந்து எழுந்தவள், எனது கையைப் பிடித்திழுத்தபடி கலச கோவிலுக்கு ஓடினாள்.
தீப விளக்குகள் காற்றில் அசையாமல் நின்றிருந்தன. அம்மா உள்ளே நுழையாமல்
“ஆரது, எனக்குச் சொல்லு” என்றாள். உள்ளிருந்த ஓருருவம் தனது கைகளை வெளியே நீட்டியது. இடது கையின் நடுவிரல்கள் மூன்றுமற்றிருந்தது. அறம்பாவை அத்தையின் கைகள். அம்மா, மீண்டும் “ஆரது சொல்லு” என்றாள். அறம்பாவை அத்தை எதுவும் சொல்லவில்லை. அம்மா ஒரு பிடி அரிசியை எடுத்துவந்து கலசத்தின் முன்னே படைத்தாள். அறம்பாவை அத்தையின் கை அரிசி வரை நீண்டு வந்தது.
முள்ளிவாய்க்காலிலும் அம்மாவுக்கு நெருக்கமானவர்கள் பலர் வீரச்சாவு எய்தினர். கொழிஞ்சி, திகழினி, நிலான், வெள்ளையன், முல்லை, தென்னவன் என இழப்புக்களின் பெருக்கு. பொலித்தீன் பைகளுக்குள் அடைக்கப்பட்ட வித்துடல்களுக்கு சனங்கள் மரியாதை செலுத்தினர். மிஞ்சியிருக்கும் நிலத்தின் ஒரு கைப்பிடிப் பரப்பிலும் விதைப்பதற்கு வித்துடல்கள் வந்து கொண்டேயிருந்தன. நானும் அம்மாவுமாக வித்துடல்கள் வைக்கப்பட்டிருக்கும் இடத்திற்குச் சென்றோம். இலைகள் உதிரும் பெருமரத்தின் கிளைத்தழும்பை போல ஒருவரையொருவர் வெறித்தனர். சொற்களற்ற திகைப்பும் ஆற்றாமையும் ஒவ்வொருவரின் மூச்சையும் நடுக்குவித்தது. அழுகிக் கிடந்த நிலானின் வித்துடல் மீது விழுந்து புரண்டு ஓலம் ஏற்றினாள் அம்மா. அது பிடுங்கப்பட்ட திசையறையைச் சென்றது. ஒவ்வொரு தாய்மாரின் வயிற்றிலும் பற்றியெரியும் நெருப்பை எங்கே கொட்டினால் ஊழி கருகும்? தம் பிள்ளைகளின் குருதியில் ஏளனமாய் புழுதி வீசும் கடல் காற்றைச் சாம்பலாக்குவது எப்படி? வானுயரும் ஊளையின் அடர்த்தி யுத்தத்தை விடவும் குழந்தைகளின் இதயத்தை பெரியதாய் துளைத்தது.
ஆனந்தபுரத்தில் நடைபெற்ற மோதலில் இயக்கம் கடுமையான இழப்புக்களை சந்தித்தது. வன்கவர் வெறிப்படையின் முற்றுகைக்குள் வீரயுகத்தின் தேவாதி தேவர்கள் அனைவரும் அகப்பட்டுப் போயினர் என்பது பேரிடியாக இறங்கிற்று. முற்றுகையைத் தகர்க்க உக்கிரமான தாக்குதலை போராளிகள் முன்னெடுத்தனர். ஆயினும் அற்புதங்கள் நிகழ மறுத்தன. பிசாசின் தந்திரங்களை எதிர்த்து உயிர் ஈகம் செய்யத் திராணியுள்ளவர்களாயிருந்தவர்களை சுள்ளிகளைப் போல முறித்துப்போட்டது படுகளம். தலைவரும் அகப்பட்டுக் கொண்டார். மீள்வது கடினமென பேச்சுக்கள் பரவின. பல தளபதிகளும், நூற்றுக்கணக்கான போராளிகளும் வீரச்சாவைத் தழுவிய களமாக ஆனந்தபுரம் உத்தரித்தது. தகிக்கும் மூச்சுக்கள் ஓய்ந்தன. ததும்பிய குருதியாற்றில் ஆயுதங்கள் சூடடங்கிக் குளிர்ந்தன. மாபெரும் வனாந்தரத்தின் மீட்பர்கள் உயிர்த்தெழ வழியற்று வீழ்த்தப்பட்டனர். முற்றுகைக்குள்ளால் அதிஷ்டவசமாக உயிர் தப்பியவர்களுள் அறம்பாவை அத்தையும் அடக்கம்.
நாங்களிருந்த பதுங்குகுழிக்கு மேலிருந்து அம்மாவின் பெயரைச் சொல்லி, அழைக்கும் சத்தம் கேட்டது. பதுங்குகுழியின் மேற்கூரையை திறந்து பார்த்தோம். அறம்பாவை அத்தை நின்றாள். நட்சத்திரங்கள் அற்ற வானத்தின் இருளில் ஒளி பிறந்திற்று. பதுங்குகுழிக்குள் குதித்து இறங்கினாள். அறம்பாவை அத்தைக்கு முதுகிலிருந்து அடிவயிறு வரை ஒரு காயமிருந்தது. ஏதோவொரு சீலையால் அதனைக் கட்டியிருந்தாள். எல்லாமும் சாம்பலாய் போச்சு. எண்ணுக்கணக்கில்லாமல் பூமிக்கு தின்னக் குடுத்தாச்சு” என்று கொந்தளிப்பாக இருந்தாள். “குடிக்கக் கொஞ்சம் தண்ணி தா” என்று அறம்பாவை அத்தை கேட்டார். அம்மாவுக்கு இல்லையென்று சொல்ல மனம் வரவில்லை. இரண்டு நாட்களாக தண்ணியும் சாப்பாடும் இல்லாமல் பதுங்குகுழிக்குள்ளேயே இருந்தோம். எறிகணையும், சிறிய ரக ஏவுகணை தாக்குதல்களும் தொடர்ந்த வண்ணமிருந்தன. போர்விமானங்கள் தமது ராட்சத நிழல் தரையில் விழுமளவுக்கு தாழப்பறந்து தாக்குதல் செய்தன.
என்னிடம் சிறிய வாளியைத் தந்து “குடிக்கும் நீரை எடுத்துக் கொண்டு வா” என்றாள் அம்மா.
“தண்ணி வேண்டாம், நீ பெடியனை வெளியால விடாத” அறம்பாவை அத்தை சொன்னாள்.
அது ஒண்டுமில்லை. அவன் போய்ட்டு வந்திடுவான். கடுஞ்சுழியன். ஷெல்ல அவங்கள் குத்துற சத்தம் கேட்டாலே, இவன் இஞ்ச விழுந்து படுத்திடுவான்” என்றாள் அம்மா.
“இப்ப ஷெல்லுக்கு மட்டுமே பயம். உவனை மாதிரி சின்னஞ்சிறுசுகளை பயிற்சிக்கெல்லே கொண்டு போறாங்கள்”
“இவனிட்ட மாவீரர் குடும்ப அட்டையிருக்கு. அதைக் காட்டினால் விட்டிடுவாங்கள். நீ ஒண்டுக்கும் பயப்பிடாத”
“இப்ப அதெல்லாம் செல்லாது. ஒரு கதைக்கு மாவீரரே எழும்பி வந்தாலும், இவங்கள் பிடிச்சுக்கொண்டு போய் பயிற்சி குடுப்பாங்கள்” அறம்பாவை அத்தை சொன்னாள்.
மூவரும் அமரமுடியாதளவு சிறிய பதுங்குகுழி. அதிகாலை வரையும் எங்களோடு இருந்தாள். இருபது வருஷங்களுக்கு மேலான இயக்க வாழ்வில் துயர் புலம்பும் ஓரிரவாக ஆக்கிக்கொண்டாள் போலும். முற்றுகையை விட்டு வெளியேறும் போது, கையில் கிடந்த ஆயுதத்தை தூக்கி எறிந்தாளாம். அந்தச் சனியனை இனிமேலும் கையால் தொடமாட்டேன் என்றாள். ஒரு கைப்பிடி அரிசியை எடுத்து அறம்பாவை அத்தைக்கும் எனக்கும் தந்த அம்மா, தண்ணியில்லை நல்லாய் அரைச்சு சாப்பிடுங்கோ. விக்கலெடுத்துச் செத்துப்போனால் ஒருத்தனும் உங்களைத் தூக்கிப் போடவும் வரமாட்டங்கள் என்றாள்.
“அக்கா, நீயும் சாப்பிடு” என்றாள்.
“இல்லை, எனக்கு வேண்டாம். ஒரேயடியாய் காலமைக்கு கஞ்சி வைச்சு குடிக்கலாம்” என்றாள் அம்மா.
“தப்ப கிடைச்சால் உள்ள போங்கோ. இனி இங்க எதுவும் இல்லை. மண்ணை விசுவாசித்தவன் மரித்தாலும் பிழைப்பான் என்ற வீரயுகமோ, அவயவங்களாயும் மாம்சங்களாயும் எலும்புகளாயும் யுத்தத்திற்கு உரிமையுடைதாயிற்று. எப்போதும் யுத்தத்தைப் பற்றி மரணத்தை மகிமைப்படுத்தினோம். வாக்குத்தத்தம் அளிக்கப்பட்ட தியாகத்தின் சாட்சியமானோம். மரித்தவர்களை குழியிலிருந்து உயிர்ப்பித்து கட்டவிழ்த்துவிடுகிற தெய்வங்களை எப்போதோ பிரேதச்சீலைகளால் சுற்றி அடக்கம் செய்திருந்தோம். இரத்தத்தினாலே சமீபமானது யுத்தம். வெறும் யுத்தத்தினால் அநாதரவானது தியாகம் என்று சொல்லியபடி பதுங்குகுழியின் மேற்கூரையைத் திறந்து அதிகாலையில் விடைபெற்றாள்.
மேகத்தின் அலைவு சனங்களைப் போல ரூபமளித்தது. பெண்ணொருத்தி தன்னுடைய தலைமுடியில் அலைமேவும் கடலை கட்டியிழுத்துச் செல்வதைப் போல பிறிதொரு மேகத் தரிசனம் தோன்றியது. அறம்பாவை அத்தை இருந்த இடத்தில் ரத்தம் வடிந்திருந்தது. மண்ணோடு அதையள்ளி ஒரு பிடியாகக் குழைத்து, நகைகள் வைத்திருக்கும் பையில் போட்டாள் அம்மா.
அறம்பாவை அத்தை மீண்டுமொருதடவை வந்திருந்தார். பைநிறைய விசுக்கோத்துக்களைக் கொண்டு வந்து தந்தார். அம்மாவை தனியாக அழைத்துச் சென்று சிறிது நேரம் ஏதேதோ கதைத்தார். என்னை பதுங்குகுழிக்குள்ளேயே இருக்குமாறும், தான் ஒரு வேலையாக சென்று திரும்பி வருவதாகவும் சொல்லிப் புறப்பட்டாள் அம்மா. மூன்று மணித்தியாலங்கள் போயிருந்தன. எறிகணைகள் வீழ்ந்து வெடித்தன. அம்மாவுக்கு எதுவும் நேர்ந்து விடக்கூடாதென வேண்டி கந்தசஷ்டி கவசத்தைப் பாடினேன். அறம்பாவை அத்தையும், அம்மாவுமாக மீண்டும் வந்திருந்தனர்.
அத்தை என்னைத் தூக்கி முத்தமிட்டார். சிலநிமிடங்கள் நமக்கிடையே நிலவிய அமைதி ஒரு எரிபந்தின் அந்திமப் புகையென கண்ணீரை வரவழைத்தது. சூன்யத்தின் கையசைப்பு. விடைகொடுப்பு. அறம்பாவை போனாள். பிறகு எல்லாமும் போயிற்று. தீராத ரணம். சகிக்க இயலாத குரூரமான ஓவியத்தில் அனாதைகளாக நிறுத்தப்பட்டிருக்கும் தாயும் மகனுமாய் பதுங்குகுழிக்குள் உறைந்திருந்தோம். உலர்ந்த உதடுகளை எச்சிலால் நனைத்தோம். அது தாகத்திற்கு தீர்வாகாத தகுதியற்ற சடங்கு. அம்மாவின் மடியில் தலைவைத்தேன். சிறிதாய் ஒரு சுகம். பெருந்துணைக் கவசமென தலையைத் தடவிக் கொடுத்தாள். எங்களுடைய கைகளைத் தூக்கி மண்டியிட்டு பகைவர் அறையும் சிலுவைக்காக பதுங்குகுழிக்குள் பத்திரமாயிருந்தோம். ஒரு பகலுக்கும் இரவுக்குமிடையேயான நாளின் தலையில் இறங்கி மூண்டது எரியுகம். எல்லாத் தருணங்களும் அவமானத்தினால் போர்த்தப்பட்டன. எல்லோரும் ஒரு குரலுக்காக காத்திருந்தார்கள். கொடிய தோல்வியின் நகரத்தில் எல்லாவற்றாலும் கைவிடப்பட்டவர்கள் கடலுக்குள் இறங்கினர். சீழும் ரத்தமும் நிரம்பிய பிணங்கள் புராதனமானவொரு வரலாற்றின் அந்திம அத்தியாயத்தின் மீது குவிந்திருந்தன.
பிணங்கள் பாதையானதொரு மத்தியானத்தில் ஒன்றின் மீது ஏறி இறங்கினேன். கால்களில் தளும்பிய உடலத்தைப் பார்த்தேன். அறம்பாவை அத்தை. பின்னே வந்துகொண்டிருந்த அம்மாவிடம் “அத்தை…அறம்பாவை அத்தை” என்றேன். அவள் அத்தையின் வாயில் ஒரு பிடி அரிசியை இட்டாள். லேசாக முகத்தை மூடிக்கிடந்த கூந்தலை விலக்கினாள். அத்தையின் நடுவிரல்கள் மூன்றுமற்ற கையை எடுத்து முத்தமிட்டேன்.
தீயுழின் நொடிகள் பெருகின. அம்மாவின் நகைப்பையை வாங்கிய வன்கவர் வெறிப்படையாளன் ஒருவன் எல்லாவற்றையும் அபகரித்தான். அந்தப் பையிலிருந்த குருதி நாற்றத்தை அவனால் தாங்கமுடியாதிருந்திருக்க வேண்டும். தூக்கி வீசினான். “அது எங்கட முதுசம். அதை எடுத்துக் கொண்டு வா” என்றாள். அறம்பாவை அத்தையின் குருதியும் முள்ளிவாய்க்கால் கடல் மண்ணுமாய் ஒரு வீரயுகத்தை வழியனுப்பி வைத்தோம்.
நாங்கள் மீளக்குடியமர்த்தப்பட்டதும் யாழ்ப்பாணத்திலிருந்து சிறிய கலசத்தை வாங்கிவந்து, அதற்குள் அறம்பாவை அத்தையின் குருதியால் குழையுண்ட மண்ணைப் போட்டு பீடத்தில் வைத்தாள். சிறிய கோவிலாக கட்டி பூசைகள் செய்தாள். வருவோர்க்கு ஒரு கைப்பிடி அரிசியை மட்டும் பிரசாதமாக வழங்குவது வழக்கமாயிருந்தது. தண்ணி குடிக்காமல் அதனைச் சாப்பிடவேண்டுமென நிபந்தனையும் இருந்தது. ஏனென்று எல்லோரும் கேட்டார்கள். அம்மா அப்படித்தான், அதற்கு பதிலில்லை என்றாள். சில நாட்களில் நான் உறங்கப்போனதற்கு பிறகு அம்மா, கோவிலுக்குச் சென்று புசுபுசுப்பது கேட்டிருக்கிறது. ஆனால் அறம்பாவை அத்தை அங்கே வருகிறாள் என்று அம்மா எனக்குச் சொன்னது கிடையாது.
ஒருநாளிரவு வீட்டைச் சுற்றிவளைத்து ராட்சத இயந்திரங்களால் பூமியைத் தோண்டினார்கள். சனங்கள் மிரண்டு கூடியிருந்தனர். அம்மாவிடம் மீண்டும் விசாரணைகள் தொடர்ந்தன. நீங்கள் கேட்பது எதுவும் எனக்குத் தெரியாது என சொன்னாள். தோண்டப்பட்ட பூமியிலிருந்து அரிசியும், குருதியால் குழைந்த மண்ணுமே வந்தது. கலசக் கோவிலினுள்ளே சுடரொழுகும் விளக்கொளியில் அமர்ந்திருந்து அரிசியுண்ணும் அறம்பாவை அத்தையிடம் ஓடிச்சென்றேன்.
“அன்றைக்கு அம்மாவை அழைத்துக் கொண்டு போனது நீங்கள் தானே, அப்பிடி என்னத்தை அத்தை தாட்டணியள்?”
“எங்கட முதுசமாய் இருக்கிற ஒரு வித்துடலை. அது எண்டைக்கோ ஒருநாள் உயிர்த்தெழுமடா தம்பியா”
“இவங்களால கண்டு பிடிக்க முடியாதோ?”
“அம்மாவைத் தவிர ஆருக்கும் தெரியாத இடம். அம்மாவுக்கு மட்டுமே தெரிந்த இறுதி ரகசியம்”
“ஆரின்ர வித்துடல்?” என்று அறம்பாவை அத்தையிடம் கேட்டதும், என் பின்னே வந்துநின்ற அம்மா “எங்கட மண்ணோட வித்துடல்” என்றாள்.
The post போதமும் காணாத போதம் – 23 first appeared on அகரமுதல்வன்.
திருவண்ணாமலையில் நூல் வெளியீடு
எனது “போதமும் காணாத போதம்” நூல் வெளியீட்டு விழா 10.03.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு திருவண்ணாமலை எஸ்.கே.பி பொறியியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது. எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் தலைமை வகிக்கிறார். எழுத்தாளர்களான மரபின் மைந்தன் முத்தையா, கரு. ஆறுமுகத்தமிழன், செல்வேந்திரன் ஆகியோர் நூல் குறித்து சிறப்புரை வழங்குகின்றனர். சான்றோர்கள் பலர் கூடும் ஒரு நிகழ்வாக அமைந்திருக்கிறது. அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்.
போதமும் காணாத போதம் – நூல் வெளியீட்டு விழா
இடம் – எஸ். கே. பி. பொறியியல் கல்லூரி. அண்ணா கேட்போர் கூடம். திருவண்ணாமலை
நாள் – 10 .03 .2024 ஞாயிற்றுக்கிழமை
நேரம் – காலை 10.30
தலைமை
எழுத்தாளர் ஜெயமோகன்
ஆசியுரை
முனைவர் இரா. சக்தி கிருஷ்ணன்.
மதிவாணன்
வெளியிடுபவர்
தியாக. குறிஞ்சி செல்வன்
பெற்றுக் கொள்பவர்கள்
நா. செந்தில்குமார்
சாய்
சிறப்புரை
எழுத்தாளர் மரபின்மைந்தன் முத்தையா
எழுத்தாளர் கரு.ஆறுமுகத்தமிழன்
எழுத்தாளர் செல்வேந்திரன்
நிகழ்ச்சித் தொகுப்பு
இரா. கார்த்திக் ராஜா
The post திருவண்ணாமலையில் நூல் வெளியீடு first appeared on அகரமுதல்வன்.
March 2, 2024
போதம் தருவது இலக்கியம்
தமிழ் இலக்கியமெனும் வெளியில் ஈழ இலக்கியத்தின் பேராற்றல் போதம் மிக்கது. பேரழிவும் மானுடப்படுகொலையும் நிகழ்ந்த மண்ணின் கதைகளை எதிர்கொள்ள இயலாது மனம் துடிக்கிறது. எத்தனையாண்டுகள் ஆனாலும் ஆறாத மனுஷரணம் முள்ளிவாய்க்கால். எழுத்தாளர் அகரமுதல்வனின் “போதமும் காணாத போதம்” எனும் இந்தப் படைப்பு ஈழ மக்களின் பண்பாட்டு பின்னணியிலிருந்து போருக்குப் பின்பான திகைப்பான சம்பவங்களை முன்னிறுத்துகின்றன. விடுதலையின் பெயரால் விதைக்கப்பட்ட தியாகங்களை வீரநிலை மரபின் வழிபாடாக உணர்த்துகின்றன. போரின் மிலேச்சத்தனங்களையும், சனங்களின் பாடுகளையும், சந்தோசங்களையும் தெய்வங்களையும் இந்த நிலம் தன்னுடைய போதமாக்கி இருக்கின்றது. இந்தப் படைப்பின் ஒவ்வொரு அத்தியாயமும் தனித்தனி உணர்வாலும், மனிதர்களாலும் சிக்கலாலும் அமைந்துள்ளது. போர் என்று நாமறியும் சித்திரம் ஊடகங்கள் அளித்தவை மட்டுமே. ஆனால் இந்தக் கதைகளின் வழியாக எழும் போர், வாசகரை நிலைகுலைய வைக்கிறது. அசலானதொரு குலப்பாடகனின் குரலில் இருந்து எழுந்தவை இந்தக் கதைகள்.
நூல்வனம் பதிப்பகத்தின் வெளியீடான எனது “போதமும் காணாத போதம்” நூலின் அட்டைப்படம் இன்று வெளியானது. புதிய தலைமுறையின் திரைநாயகர்களில் ஒருவரான இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அவர்கள் தனது X தளத்தில் அதனை வெளியிட்டு வைத்தார். இந்த நூல் வெளியீட்டு விழாவிற்கு அவரை அழைத்திருந்தேன். பங்கேற்க முடியாத திரைப்பணி சார்ந்த நெருக்கடி. இலக்கியத்தையும் இலக்கியவாதிகளையும் போற்றக்கூடிய அரிதான திரையுலகத்தினரில் கார்த்திக் சுப்புராஜ் அவர்களும் ஒருவர். மானுட விடுதலையை நேசிப்பவர். ஈழத்தமிழர்களின் வாழ்வியல் பின்புலத்துடனான “நள்ளிரா” எனும் திரைப்படத்தை தயாரித்திருக்கிறார். கார்த்திக் சுப்புராஜ் அவர்கள் வெளியிட்டு வைத்தமையால் ஒரு பெருந்திரளிடம் சென்று சேர்ந்திருக்க கூடிய நூலின் அட்டைப்படமாக இது அமைந்திருக்கிறது. இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அவர்களுக்கு என் நன்றி.
நூல்வனம் மணிகண்டன் அட்டைகளை வடிவமைப்பதில் ஒரு பொற்கொல்லனின் நுணுக்கத்தையும், பொறுமையையும் பேணக்கூடியவர். அவரிடமிருந்து உருவாக்கி வரக்கூடிய வடிவமைப்பு என்றைக்கும் சோரம் போனதில்லை. இந்த அட்டையும் அதில் சேர்மதி.
எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்கள் ஒவ்வொரு அத்தியாயமும் வெளியானதும் வாசித்துவிட்டு கும்பமுனியாய் கொந்தளித்து அனுப்பியவற்றின் சிறிய பகுதியை அட்டையில் சேர்த்திருக்கிறேன். அவருடைய தம்பீ என்ற விளிப்பு என் வாழ்நாளுக்கெல்லாம் மகத்துவம். இன்னொரு பக்கத்தில் கவிஞர் மகாகவி உருத்திரமூர்த்தி அவர்களின் கவிதை வரிகளை சேர்த்திருக்கிறேன். நான் மூன்றாம் வகுப்பில் பாடித்திரியும் கவிதை. மகாகவி உருத்திரமூர்த்தி, கவிஞர் சேரனின் தந்தை.
அட்டை ஓவியம் கருப்பனுடையது. அவருடைய நிறத்தேர்வுதான் தனிரகம்.
மார்ச் மாதம் பத்தாம் திகதி ஞாயிற்றுக்கிழமை நூல் வெளியீட்டு விழா. ஏனைய விபரங்கள் நாளை வெளியாகும்.
எல்லோர்க்கும் நன்றி.
The post போதம் தருவது இலக்கியம் first appeared on அகரமுதல்வன்.
அகரமுதல்வன்'s Blog
- அகரமுதல்வன்'s profile
- 17 followers

