ஊர்சூழ் வரி – முன்னுரை
சத்தியம் பூமியிலிருந்து முளைக்கும் ,
நீதி வானத்திலிருந்து தாழப்பார்க்கும் .
வேதாகமம்
இந்தப் படைப்பினை எழுதவேண்டுமென்ற எண்ணம் உதித்து பல வருடங்கள் ஆயிற்று. உளத்தினுள் கொதிக்கும் உலைத்தீயின் செஞ்சுவாலைகள் வாய் பிளந்து எழுது… எழுது என்று உத்தரவு இட்டன. கொந்தளிப்பான வாழ்வையெழுத மொழியைத் தீண்டுவதில் எனக்கெப்போதும் பெருவிருப்பு. மொழியின் நினைவுக்குள் பெருந்துயர ஊழியால் கடகடக்கும் ஈழத்தாழியிலிருந்தே என் சொற்கள் எழுகின்றன.
என் படைப்புக்களில் “போதமும் காணாத போதம்” வெம்மை கலந்து வெளிப்படும் மூச்சுப் போன்றது. மண்ணுடன் கொண்ட மாறாக் காதலோடு புதையுண்ட ஆழத்திலிருந்து எழுமொரு சூரியனைப் போல இந்தப் படைப்பு ஆகியிருக்கிறது. திசையற்ற திசையில் அவலப்பட்டு நிற்கும் ஒரு தொல்லினத்தின் முன்பு ஆர்ப்பரிக்கும் கடல் என்ன சொல்லுகிறது? எங்கள் வானத்தில் ஒளிரும் நட்சத்திரங்கள் ஏன் நடு நடுங்குகின்றன? அரிசியும் உப்பும் விளைந்த மண்ணில் சவக்குழிகள் ஏன் நிறைந்தன? நாடும் வீடும் ஊரும் காலமும் புதைக்கப்பட்ட இருளில் மின்மினிகளேனும் பறப்பதில்லையே ஏன்? இன்னும் சில பகற்பொழுதுகள் நமக்கு ஏன் அருளப்படவில்லை? இவை கழிவிரக்கம் கோரும் வெறும் கேள்விகளுமல்ல, நினைவுப்படலங்களும் இல்லை. ஊழியாற்றில் மிஞ்சியவர்களின் நீதிமிகுந்த தினவின் பாடல்கள். “இருண்ட காலங்களில் பாடல்கள் இருக்குமா? ஆம், பாடல்கள் இருக்கும், அவை இருண்ட காலங்களைப் பற்றியதாக இருக்கும்” என்ற பெர்டோல்ட் ப்ரெக்ட்டின் புகழ்பெற்ற வரிகளைப் போலவே இருண்டு போனதொரு யுகத்தின் பாடல்களை பாடியிருக்கிறேன்.
“போதமும் காணாத போதம்” என்னுடைய தளத்தில் வாரமொருமுறை வெளியானது. இருபத்தைந்து அத்தியாயங்கள் கொண்டவை. வெளியாகுவதற்கு முன்பாக படித்து கருத்துக்களைச் சொல்லி செம்மைப்படுத்தும் ஆற்றலாளர்களாய் எழுத்தாளர்களான வாசு முருகவேல், பிகு, இளம்பரிதி ஆகியோரும் பதிப்பாளர் நூல்வனம் மணிகண்டனும் இருந்தனர். குறிப்பாக வழி இணையத்தள ஆசிரியரும் எழுத்தாளருமான சகோதரர் இளம்பரிதி என்னோடு நீண்ட உரையாடல்களை நிகழ்த்தி வந்தார். ஒவ்வொரு எழுத்தாளருக்கும் இளம்பரிதி போன்றதொரு “உளச்சுகந்தன்” அவசியம். இவர்களுக்கு நன்றியென்று எழுதவோ சொல்லவோ வேண்டியதில்லை. ஏனெனில் இவர்களே நான்.
ஒவ்வொரு வாரத்திலும் வெளியானவுடன் வாசித்து தமது அபிப்பிராயங்களைப் பகிர்பவர்கள் ஏராளம். பெங்களூரில் இருக்கும் என்னுடைய நண்பர் பாலாஜி அவர்கள் நீண்ட கடிதத்தை எழுதுவார். உரையாடுவார். அவருடைய வாசிப்பின் கண்டடைதல்கள் வியப்புக்குரியன. முனைவர் லோகமாதேவி வாய்ப்புக்கிட்டும் போதெல்லாம் எழுத்து வன்மை குறித்து சிலாகிப்பார். எனதருமை சகோதரர் கவிஞர் வேல் கண்ணன் வாய்க்கும் போதெல்லாம் வாசித்து தனது பாராட்டுதல்களை அனுப்பி வைப்பார்.
என்பால் அன்பு கொண்டவர்கள் அளித்த வாசக ஆதரவைக் கடந்து புதிய வாசர்கள் பலரும் உரையாட முன்வந்தார்கள். விமர்சகர் ஜா.ராஜகோபாலன் வெகுவாக பாராட்டினார். இந்த உறுதுணை எழுத்தூழியக்காரனுக்கு அவசியமாக தேவைப்படுகிறது. தளத்தில் தொடரினை எழுதத் தொடங்குங்கள் என்று ஊக்கமளித்த விஸ்ணுபுரம் பதிப்பகம் செந்தில்குமார் அவர்களை மறவேன். அது அவருக்கு தெரியாமலே நிகழ்ந்தவொரு அருங்கண உரையாடல்.
தொடருக்கான பெயரை அளித்தவர் என் மூத்தோன் எழுத்தாளர் நாஞ்சில் நாடன். சேக்கிழாருக்கு “உலகெல்லாம் உணர்ந்து” என்று அடியெடுத்துக் கொடுத்த இறையை நம்பும் மரபு என்னுடையது. அவர் தாள் பணிகிறேன். ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் சிறந்த ஓவியங்களை வரைந்தளித்த ஓவியர் கருப்பனுக்கு அன்பு. இந்த தொடரின் வழியாக என்னுடைய படைப்பு மனத்தையும், அதன் உள்ளார்ந்த வெடிப்பையும், எழுமனலையும் உணர்ந்தவர் மரியாதைக்குரிய ஈரோடு கிருஷ்ணன் அவர்கள் தான். மெய்சிலிர்க்க வைக்கும் அவதானங்களை முன்வைத்து என்னோடு பேசினார். இந்த நூலுக்கு அவரை விடவும் அணிந்துரை வழங்க ஆளில்லை என்பது என் துணிபு.
என்னுடைய படைப்புக்களை பெருமளவில் பதிப்பித்து வருகிற நூல்வனம் பதிப்பகத்துக்கும் அதன் முதன்மை பொறுப்பாளர் திருமதி அனிதா மணிகண்டன் அவர்களுக்கும் நன்றி. மெய்ப்பு பார்த்த அருமைச் சகோதரர் பாரதி கனகராஜ் அவர்களுக்கும் நன்றி. இந்தப் படைப்பை எந்த வகைமையில் சேர்க்கலாமென யோசித்த போது இது சிறுகதையோ, நாவலோ அல்ல என்பதில் உறுதியாகவிருந்தேன். பிறகு துங்கதை என்றொரு சொல்லாடலை அணிவித்தேன். கந்தபுராணத்தில் உள்ள சொல் துங்கதை. அது துன்பத்தை குறிக்கவில்லை. உயர்வை, மானத்தை, கெளரவத்தை பறைசாற்றும் சொல். கிரேக்க சொல்லாடலில் “ Ode” என்றுள்ள இலக்கியப் பதத்தை கண்டடைந்தோம். ஆகவே தமிழின் முதல் “துங்கதை” இலக்கிய தொகுப்பாக இதனைக் குறிக்கலாம்.
என்னுடைய எழுத்தையும், இலக்கியச் செயற்பாட்டையும் ஊக்குவிக்கும், அதற்கு துணை புரியும் விதமாக புரிந்தும் என்னைக் கரம்பிடித்த பேரன்பு பிரபாவுக்கும், என் குருதியாய் பூத்து அப்பா என்றழைக்கும் மகன் ஆதீரனுக்கும், என் அம்மாவுக்குமாய் தொடர்ந்து எழுதுவதே அவர்களுக்கு வழங்கும் நன்றியாகும் என்பேன்.
சிறுவயதிலிருந்தே எழுத்தையும் இலக்கியத்தையும் உறவாக்கியவன் நான். சைவப் பதிகங்கள், சமய சொற்பொழிவுகள், நிகழ்த்துகலைகளென பண்பாட்டுப் பின்னணியோடு வளர்ந்தவன். அல்லற்படுதல் ஒரு தினக்கருமமென அழிவின் குகைக்குள்ளால் இடம்பெயர்ந்த என் சிறு பாதங்களை ஏந்திக் கொஞ்சிய அம்மா “ ஒருநாளைக்கு இந்த நடையெல்லாம் நிண்டு, நிம்மதி வந்திடும் ராசா” என்றாள். முள்ளிவாய்க்கால் வரை அப்படியான நிம்மதிக்காகவே காத்திருந்தோம். வீரயுகத்தின் தணல் மேட்டில் குடியிருந்தோம். ஆனால் நிகழ்ந்தவை எல்லாமும் பயங்கரங்கள். இந்து சமுத்திரத்தின் மீது அந்தகாரம் கவிந்தது. வன்னியில் தனித்துப்போய் வெள்ளைக்கொடியோடு வெட்டைக்கு வந்தது மனுஷத்துவம். கைகள் பின்னால் கட்டப்பட்டு, ஆடைகள் அவிழ்க்கப்பட்டு, இயந்திரத் துப்பாக்கிகள் கொன்று குவித்த பெரும் பிணக்குவியலுக்குள் அது தூக்கிவீசப்பட்டது. உலகம் போற்றும் மனுஷத்துவம் முகங்குப்புற நந்திக்கடலில் மிதந்தது. அதன் பிடரியை எத்தனையோ தேசங்களின் தோட்டாக்கள் துளைத்திருந்தன கண்டேன். அப்போது மனுஷத்துவத்தின் யுகமும் ஈழத்தமிழரின் வீரயுகமும் முடிந்திருந்தது. பின்னொருக்கால் அம்மா என்னுடைய பாதங்களை ஏந்தி “இந்தப் பாதங்கள் அலைகடலின் துரும்பு. பெருங்கனவின் ரத்தக் கொப்புளங்கள் இதில் உள்ளன” என்றாள். அம்மாவின் நிழலே நிலம்.
“திசையழிந்த வெளியெங்கும் நிரம்பிய ஒளியே மண்ணில் தீ என உறைகிறது என்று உணர்ந்தனர்” என்ற வரிகள் எழுத்தாளர் ஜெயமோகனின் கொற்றவை நாவலில் உள்ளது. அது உண்மைதான். ஈழ மண்ணில் தீ என உறையும் திசைகளின் ஒளிக்கதிர்களைத் தான் இப்படைப்பில் நான் படரவிட்டிருக்கிறேன். சனங்களின் ஜீவிதத்தில் ஒளி பெருகுக! அவ்வாறே ஆகுக!
அகரமுதல்வன்
புத்தகம் வாங்க – https://www.panuval.com/bothamum-kanadha-botham-10025742
The post ஊர்சூழ் வரி – முன்னுரை first appeared on அகரமுதல்வன்.
அகரமுதல்வன்'s Blog
- அகரமுதல்வன்'s profile
- 17 followers

