அகரமுதல்வன்'s Blog, page 26

January 21, 2024

போதமும் காணாத போதம் – 17

பூதவராயர் கோயிலுக்குப் பின்பாகவுள்ள குளத்தில் மஞ்ஞை தனியாக குளித்துக் கொண்டிருந்தாள். மத்தியானத்தின் பலகோடி மலர்கள் நீரில் மலர்வதைப் போலொரு தரிசனம். என்னைக் கண்டுவிட்டாள். வடலிக் கூடலில் அமர்ந்திருந்து அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன். இருவரின் பார்வையும் சந்திக்கையில் இமைகொட்டாது யுகம் குளிர்ந்தது. சூரியனுக்கு அருகிலிருப்பது போல சரீரம் தகித்தது. என்னில் ஊற்றுக்கொண்டு நிரம்பித் ததும்பினாள் மஞ்ஞை. குளித்து முடித்து கரையேறி மறைப்பில் புகுந்தாள். இன்று சந்திப்பதாக திட்டமிருக்கவில்லை. விழிப்புலனற்ற கலைஞன் மடியில் கிடக்கும் புல்லாங்குழல் துளைகளில் காற்று நுழைந்து கீதம் நிறைப்பதைப் போல இந்தச் சந்திப்பு நிகழ்கிறது. காற்றில் படபடக்கும் அரச மரத்து இலையின் நிழலென மஞ்ஞை நடந்து வந்தாள். வரலாற்றின் புதிய சொல்லென ஈரத்தோடு விரிந்திருந்த கூந்தல். பறக்க எத்தனிக்கும் ஜோடிப்புறாவின் அசைவுடனும் வடிவுடனும் கொங்கைகள். பிரபஞ்சமே அருந்தவம் செய்து ஏந்திய காற்றுச்சுடரின் அபிநயம் இவள்தான்.

எண்ணெய்க் கிண்ணக் கண்களில் திரியேற்றி என்னருகில் வந்தாள். எளிதில் மூண்டுவிடும் தீ என்னிடமிருப்பது மஞ்ஞைக்கு நன்றாகவே தெரியும். வடலிக்கூடலுக்குள் அலை பெருத்து மூர்க்கம் கொண்டோம். தஞ்சம் கோரும் தாகத்திற்கு அருந்துவதற்கு சுனைகள் பிறப்பித்தோம். மணல் ஒட்டிய சரீரங்கள் களைப்பில் மூச்செறிந்தன. வானத்தில் கனத்த மழைக்கான நிமித்தங்கள் தெரிந்தன. ஒரு துளி மஞ்ஞையின் தொப்புளில் விழுந்தது. அடுத்த துளியும் அங்குதான் நிறைந்தது. “எனக்கெண்டு மட்டும் தான் மழை பெய்யுது” என்றாள் மஞ்ஞை. எதுவும் சொல்லாமல் வானத்தையே உற்றுக் கவனித்திருந்தேன். நினைத்தது சரியாகவிருந்தது. வேவு விமானமிரண்டு வன்னி வான்பரப்புக்குள் பறந்தபடியிருந்தது.  “என்ன வண்டு சுத்துதோ” என்று மஞ்ஞை கேட்டாள். ஓமென்று தலையை ஆட்டினேன். “நானிப்ப சுட்ட பழமாய் இருக்கிறேன். கொஞ்சம் ஊதி விடுங்கோ. சட்டையைப் போட்டுக்கொண்டு வெளிக்கிடுகிறேன். வேவு விமானம் வேற சுத்துது” என்றாள். கலவிக்குப் பின் கனியும் பெண்ணின் சரீரத்தில் ததும்பும் வாசனைக்கு இரையாகுபவன் பாக்கியவான்.  மலரினும் மெலிது காமம் சிலரதன், செவ்வி தலைப்படுவார் என்றால் நானும் மஞ்ஞையும் சிலரே. விடைபெற்றாள். வடலியிலே கள் வடியுமா! வடியட்டுமே!

மஞ்ஞைக்கு செவித்திறனில் சிரமமிருந்தது. பக்கத்தில் நின்று அழைத்தாலும் சிலவேளைகளில் கேட்காது. வன்னிக்குள்ளிருந்த சர்வதேச தொண்டுநிறுவனமொன்று பரிசோதித்து வழங்கிய செவிப்புலனூட்டும் கருவியை பயன்படுத்துவதில்லை. ஏனென்று கேட்டால், பிடிக்கவில்லை என்பாள். எனக்கும் மஞ்ஞைக்கும் நடுவில் உறவு தோன்றிய தொடக்க நாட்களில் சந்திப்பு இடமாகவிருந்தது குன்று மரத்தடிதான். ஆளரவமற்ற பகுதியது. ஊரிலிருந்து கொஞ்சத்தூரத்தில் பிரிந்து செல்லும் ஒற்றையடிப்பாதையும் திடுமென அழிந்து போகும், அதன் பிறகு மூடிய காடு. அந்தக் காட்டிற்குள்தான் குன்று மரமிருந்தது. பெரியப்பாவுடன் பன்றி வேட்டைக்கு போகையில் அங்கு இளைப்பாறுவோம். மஞ்ஞை சைவ அனுட்டானங்களில் தீவிரம் கொண்டவள். மாமிசம் உண்பதில்லை. என்னை எதன்பொருட்டு சகித்துக்கொண்டாள் என்று  அறியேன். மீன், கணவாய், முட்டை சாப்பிட்டால் அவளைப் பார்க்கப் போவதில்லை. முத்தமிடாமல் அருக்களிப்பாள். ஐயோ, வெடுக்கடிகுதென முகம் சுழிப்பாள். பன்றிகளை வேட்டையாடுவது அவளுக்குப் பிடிப்பதில்லை. தெய்வத்தின்ர அவதாரமென பிரசங்கிப்பாள். இனிமேல் வேட்டைக்குப் போகப்போவதில்லையென உறுதியளிப்பேன். “உங்கட கதையை நம்பமாட்டன். உருசையான இறைச்சியைப் பார்த்தால் மஞ்ஞை நீ ஆரெண்டு கேப்பியள்” என்பாள்.

ஒருநாள் மஞ்ஞையின் வீட்டிற்குச் சென்றிருந்தேன். அவளுடைய தாயார் பசுப்பால் கொடுத்தாள். பெரியளவில் குங்குமம் தரித்திருந்த அவளது முகத்தில் எண்ணற்ற எண்ணங்கள் ஓடின. “நீங்கள் எந்தவூரில இருந்து இடம்பெயர்ந்து வந்திருக்கிறியள் தம்பி” என்று கேட்டாள். “முகமாலை தெரியுமோ” கேட்டேன். “யாழ்ப்பாணம் போகேக்க பார்த்திருக்கிறேன்” என்றாள்.  கடைக்குச் சென்று திரும்பியிருந்த மஞ்ஞை, என்னைக் கண்டதும் திடுக்குற்றாள். ஆனாலும் உள்ளூர அதனைப் புதைத்துக்கொண்டு “என்ன, இஞ்சால் பக்கம் வந்திருக்கிறியள்” என்று கேட்டாள். “சும்மாதான்” என்றேன். அம்மா தருவித்த பசுப்பாலை முழுவதும் குடித்துமுடித்தேன். மஞ்ஞையின் தாயார் வந்த விஷயம் என்னவென்று சொல்லு என்று எனக்கு முன்னாலேயே நின்று கொண்டிருந்தார் என்பது விளங்கியது. “எங்கட வீட்டில வடகம் போட்டு விக்கிறம். அதுதான் ஒவ்வொரு வீடாப்போய் ஓர்டர் எடுக்கிறேன். உங்களுக்கு எதுவும் தேவைப்படுமோ” என்றேன். தாய் என்ன சொல்லப்போகிறாள் என்பதை மஞ்ஞை திகிலுடன் பார்த்தாள். நான் கதிரையிலிருந்து எழுந்து நின்றேன். “நீங்கள் இடம்பெயர்ந்து வரேக்கை, உங்கட ஊரிலயிருந்து வேப்பம் பூ கொண்டு வந்தனியளோ” என்று தாயார் கேட்டாள். நான் இல்லையென்றோ ஓமென்றோ சொல்லாமல் படலையைத் திறந்து வெளியேறினேன். மஞ்ஞை எனக்குப் பின்னால் ஓடிவந்து மன்னித்துக்கொள் என்றாள். “இதுக்கெல்லாம் மன்னிப்புக் கிடைக்குமாவென்று அவளிடமே கேட்டேன். நான் நெடுந்தூரம் நடந்து வந்ததன் பின்னரும் வயலுக்குள் தனித்திருந்த வீட்டின் வாசலிலேயே மஞ்ஞை நின்று கொண்டிருந்தாள்.

ஏழடி உயரமிருக்கும் குன்றின் மேலே வளர்ந்து நிற்கும் காட்டுப்பூரவசு மரத்தில் மஞ்ஞை ஏறியிருந்தாள். குன்றின் கீழே பதுங்கி அமர்ந்தேன். என்னுடைய எந்த அரவமும் அவளுக்கு கேட்கவில்லை. காத்திருந்து சலித்திருக்கலாம். அந்தியின் புற்றிலிருந்து கருக்கல் தலைநீட்டியது. மரத்திலிருந்து கீழே இறங்கி குன்றிலிருந்து மெல்லக் கால்வைத்து கீழே இறங்கினாள்.  எதிர்பாராத ஷணத்தில் அவளை ஏந்தினேன். உதிரும் மலரொன்றை கிளை ஏந்துமா? ஏந்தும்! மஞ்ஞை உதிரும் மலரல்ல. என்னை இறுக அணைத்து முத்தமிட்டு நனைத்தாள். எடை கூடிய பொழுதை எந்தப் பாடுமற்றும் என்னால் சுமக்கமுடியுமென ஆசிர்வதிக்கும் அருகதை அவளிடமிருந்தது. குன்று மரத்தடியில் பரவசத்தின் சங்கீத ஸ்வரங்கள் கிளைபிரிந்து அசைந்தன. ஓசைகள் அற்ற காட்டின் நடுவே, ஆதியின் முயக்கவொலி மூப்படைந்து நிறைகிறது. குன்றெழுந்து நிற்கும் காட்டுப்பூவரசில் வீசத்தொடங்குவது காற்று அல்ல. மஞ்ஞையின் மூச்சு. அவள் கண்களில் வழிவது கண்ணீரா! எனக்குள் அதிரும் தந்திகளை இவளே இயக்குகிறாள். ஒரு எழுத்துப்பிழையின் பிடிபடாத அர்த்தமென காமம் பொங்குகிறது. அழித்து அழித்துச் சரியாக எழுதும் அன்பின் ஈரச்சுவடுகள் குன்று மரத்தடியில் ஆழமாய்ப் பதிந்தன. கூவிக் கூவி அழைக்கும் தன் தொல்மரபின் பழக்கத்தை விட்டு குயில்கள் ரெண்டு எம்மையே பார்த்தபடியிருந்தன.

“எப்போது தனியாகப் பார்த்தாலும் சேர்ந்து பிணைகிறோம். ஏதோவொரு பதற்றந்தான் நம்மை வழிநடத்துகிறதா” மஞ்ஞை கேட்டாள். நதியின் ஆழத்தில் அசையும் கூழாங்கல்லென குளிர்ந்ததொரு உச்ச நொடி. அப்படியே என் நெஞ்சில் சரிந்தாள். கொங்கைகள் அழுந்த கண்களை மூடியபடி கழுத்தின் வியர்வை குடித்தாள். தொலைவில் யாரோ நடந்து வரும் சத்தம் கேட்டது. கண்கள் வளர்ந்திருந்த மஞ்ஞையை தட்டியெழுப்பினேன். அவள் விழிப்புற்று என்னவென்று கேட்டாள். “ஆரோ வருகினம். கதைச்சுத் சத்தம் கேட்கிறது” சொன்னேன். காதைத் தீட்டி காட்டின் தாளில் வைத்தாள்.

நான் சில மாதங்களுக்கு முல்லைத்தீவில் வதியவேண்டியிருந்தது. எதற்கென்று யாரிடமும் சொல்லக்கூடாது. மஞ்ஞையை விட்டுச்செல்லும் துயரைச் சந்திக்கவியலாது முகத்தை திருப்பினேன். தொடர்ச்சியாக இரண்டு வாரங்கள் அவளைச் சந்தித்தேன். பூதரவராயர் குளத்தடி, வடலிக்கூடல், குன்றுமரத்தடி, ஊஞ்சலாடி கட்டிடமென கூடிப்புணர்ந்தோம். “ஒரு வேலையாய் முல்லைத்தீவுக்கு போகவேண்டியிருக்கு, திரும்பிவர ரெண்டு மாசம் ஆகும்” என்றேன். மஞ்ஞை முகத்தில் தீப்பெருக்கு. “ரெண்டு மாசம் அங்க நிண்டு என்ன செய்யப்போகிறியள்” கேட்டாள். “சொந்தக்காரர் ஒருவர் படுத்த படுக்கையாகிவிட்டார் அவரை பராமரிக்கும் வேலைக்காகச் செல்லவிருக்கிறேன்” சொன்னதும், சின்ன வெறுப்புடன்  “ ரெண்டு மாசத்தில அவர் செத்துப்போய்டுவாரா” என்று கேட்டாள். மேற்கொண்டு எதனைக் கதைத்தாலும் நான் உண்மையைச் சொல்ல வேண்டி வருமென்பதால் அமைதியாக இருந்தேன். “நான் இங்கேயிருந்து உங்களைப் பார்ப்பதற்காக முல்லைத்தீவு வருவேன். விலாசத்தை தந்துவிட்டுச் செல்லுங்கள்” என்றாள். தருவதாகச் சொன்னேன். ஊஞ்சலாடி கட்டிடத்திற்குள் நாமிருவரும் நிறைந்திருந்தோம். கூரைகளற்ற கட்டிடத்தின் மேலே வானம் கறுத்திருந்தது. அன்றைக்கும் முதல் துளி அவளது தொப்புளில் விழுந்தது. ஒரே மாதிரித்தான் ஒவ்வொரு துளியுமா என்றாள். ஒவ்வொரு துளியும் வேறு வேறானவை. ஒவ்வொரு துளிக்குள்ளும் எவ்வளவோ துளியல்லவா! என்றேன்.

“சரி. நாங்கள் இன்னொரு தடவை இந்த மழையை பெய்ய வைக்கலாம். ஆனால் நான் மேலிருப்பேன்”

“இரு. உன்னுடைய மழை. உன்னுடைய துளி” என்றேன்.

“எங்கட நாட்டில இந்த தரித்திரம் பிடிச்ச சண்டையெல்லாம் முடிஞ்சு, ஒரு நல்ல காலம் வந்தால் எவ்வளவு சந்தோசமாய் இருக்கலாமெண்டு நினைக்கவே ஆசையாய் இருக்கு” என்றாள்.

“நல்ல காலம் வரும் மஞ்ஞை”

கோலமயில் என்மீது அகவியது. மழை பொழியும் கார்த்திகையின் கானக வாசனை ஊஞ்சலாடி கட்டிடமெங்கும் ஊர்ந்து வந்தது.

நான் முல்லைத்தீவுக்கு வந்து சேர்ந்தேன். வன்னியன் தொலைத்தொடர்பு நிலையத்திலிருந்து மஞ்ஞையிடம் தகவல் சொல்லிவிடுமாறு கூறினேன். நான் கொடுத்துவந்த விலாசத்திற்கு கடிதம் வந்தால், அதனை வாங்கி வைக்குமாறு சொல்லியிருந்தேன். பிறகான நாட்களில் எந்த தொடர்பும் இருக்கவில்லை. மூன்று மாதங்கள் கழித்து அவளிடமிருந்து வந்த கடிதங்களைப் பெற்றுக்கொள்ள விலாசம் கொடுக்கப்பட்ட வீட்டிற்குச் சென்றேன். அங்கு எந்தக்கடிதங்களும் வரவில்லையென சொன்னார்கள். கேட்கவே திகைப்பாகவிருந்தது. தொலைத்தொடர்பு நிலையம் சென்று மஞ்ஞையிடம் பேசவேண்டும் அவருடைய வீட்டிற்கு தகவல் சொல்லி வரச்சொல்லுங்கள் என்றேன். சரி என்றார்கள். நீண்ட நேரமாகியும் பதில் அழைப்பு இல்லை. மீண்டும் அழைத்தேன். அவள் வீட்டில் இல்லை என்றார்கள். நான் அவசர அவசரமாக அங்கிருந்து புறப்பட்டு கிளிநொச்சிக்கு வந்தடைந்தேன். நாம் சந்திக்கும் ஒவ்வொரு இடங்களுக்கும் ஓடிச்சென்றேன். எங்குமில்லை. அன்றிரவு பூதவராயர் குளத்தில் குளித்துவிட்டு நடந்து வந்தேன். மஞ்ஞை என்னை வழிமறித்து தன்னுடன் வருமாறு அழைத்துச் சென்றாள். ஈரம் துடைக்கவேண்டும் என்றேன். “இல்லை வா, நானே துடைக்கிறேன்” என்றாள். அவள் என்னை ஊஞ்சலாடி கட்டிடத்திற்குள் அழைத்துச் சென்றாள்.

“மஞ்ஞை இரவில இஞ்ச வந்து இருக்கிறது ஆபத்து. பாம்பு பூச்சிகள் கடிச்சுப் போடும்” என்றேன்.

அதொண்டும் கடிக்காது. வா… என்றாள்.

இரவின் சீவாளியை காற்றுச் சரிபார்த்தது. ஒவ்வொரு துளைகளையும் மூடித்திறந்த விரல்கள் மல்லாரி இசைத்தன. காற்றை ஊதும் தொண்டைப்பை விரிந்து சுருங்குகிறது. மூச்சு இழைந்து ராகமென தவிக்கிறது. ஸ்வரநீர் அணைசின் வழியாக இறங்கி நனைக்கிறது. அகவுகிறாள். தோகையென உடல் விரித்து அகவுகிறாள் மஞ்ஞை.

“நீ ஏன் என்னை விட்டுச் சென்றாய்” கேட்டாள்.

“நான் எங்கே விட்டுச்சென்றேன். அதுதான் வந்து விட்டேனே”

“இல்லை, நீ என்னை விட்டுச் சென்றிருக்கக் கூடாது”

“மஞ்ஞை நான் என்ன செத்தாபோனேன். திருப்ப திருப்ப இதையே சொல்லிக்கொண்டே இருக்கிறாய்”

வானத்தைப் பார்த்தபடி ஊடல் ஆடினோம். அவள் தொப்புளில் முதல் மழைத்துளி விழுந்ததும் “அய்யோ குண்டு விழுகுது” என்றாள். “உங்களுக்கு என்ன விசரே அது மழைத்துளி தான்” என்றேன்.

“இல்லை குண்டு விழுந்து கொண்டேயிருக்கு” என்றாள்

அதிகாலையில் ஊஞ்சலாட்டு கட்டிடத்தில் கண்விழித்தேன். ஆடைகளை அணிந்து கொண்டு புறப்பட்டேன். மஞ்ஞை எனக்கு முன்பாகவே எழுந்து சென்று விட்டாளே, அவளுடைய வீட்டிற்கு சென்றுவிட்டு போகலாமெனத் தோன்றியது. படலையத் திறந்து கொண்டு உள்ளே போனேன். வீடு பூட்டிக்கிடந்தது. கதவைத் தட்டினேன். தாயார் வந்து கதவைத் திறந்தார். மஞ்ஞை இன்னும் வரவில்லையோ என்று கேட்டேன். அவள் இனிவரமாட்டாள் தம்பி என்றார்.

“நேற்று இரவு என்னுடன் தானிருந்தாள். சாமத்தில் தான் எழுந்து வந்திருக்கிறாள்” என்றேன்.

தாயார் வீட்டின் கதவை அகலத் திறந்தபடி கதறியழுதார். மஞ்ஞையின் சிறிய புகைப்படமொன்றுக்கு முன் அசைந்தாடிக் கொண்டிருந்தது  சுடர்.

பிரபஞ்சமே அருந்தவம் செய்து ஏந்திய காற்றுச்சுடரின் அபிநயம் அணையுமோ!

 

The post போதமும் காணாத போதம் – 17 first appeared on அகரமுதல்வன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 21, 2024 10:32

January 20, 2024

January 19, 2024

January 18, 2024

கவிஞர் மண்குதிரை கவிதைகள்

இரவின் குறி 

பகலின் பூச்சுக்கள்

உதிர்ந்துகொண்டிருக்கின்றன

என்மீது எஞ்சியவற்றை

வெந்நீரில் கழுவுகிறேன்

என் மதுக்கோப்பையில்

நிரம்புகிறது இருள்

பருகுகிறேன்

 

பால்வெளியில் தோய்ந்த

வெண்ணிலவை எடுத்துப்

பசியாறுகிறேன்

 

என் தனிமையறையில்

துடித்துக்கொண்டிருக்கும் பகலின் எச்சத்தை

ஜன்னல் காற்று களைகிறது

பரிசுத்தமான இரவின் குறியிலே

ஆழ்ந்து உறங்குகிறேன்.

***

நான் 

கூச்சலிட்டுக் கொண்டாடுகிறேன்

என்னுடையதல்ல

இந்த வெற்றி

 

தேம்பியழுகிறேன்

எனக்குச் சம்பந்தமில்லாதது

இந்தத் தோல்வி

 

ஆடிக்களைத்த மைதானத்தை

நடந்தளந்ததைத் தவிர

சொல்வதற்கு எதுவுமில்லை.

***

முறையற்ற பொழுதொன்றில்

துகிலெழுகிறேன்

 

அடர்ந்திருந்த

மேகங்களைக் கலைத்துப்போடுகிறேன்

வெவ்வேறு வடிவங்களாக மிரட்சி கொள்கின்றன

 

என் நாட்களுக்குள் கட்டிக்கிடந்த சூரியன்

என் ரதத்தைக் கைப்பற்றுகிறான்

என்னை நுகத்தடியில் பூட்டி

சாட்டையால் அடிக்கிறான்

 

அங்கும்

இங்குமாக

அலைந்து கொண்டிருக்கிறேன்

 

அங்கிருப்பது நான்

பயமில்லை

இங்கிருப்பதோ

நீ.

 

 

 

The post கவிஞர் மண்குதிரை கவிதைகள் first appeared on அகரமுதல்வன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 18, 2024 10:19

January 17, 2024

திருவேட்கை – நூல் வெளியீடு

ஆகுதி ஒருங்கிணைக்கும் எழுத்தாளர் தெய்வீகனின் “திருவேட்கை” சிறுகதை நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெறுகிறது. பல்வேறு இலக்கிய ஆளுமைகள், வாசகர்கள்  கலந்துகொள்கிறார்கள்.

வெளியிடுபவர் : எழுத்தாளர் எம். கோபாலகிருஷ்ணன்

 

பெற்றுக்கொள்பவர் : இயக்குனர் “பூ” சசி

 

சிறப்புரை 

எழுத்தாளர் காளி ப்ரஸாத்

எழுத்தாளர் இளம்பரிதி

எழுத்தாளர் பார்கவி

 

ஏற்புரை : தெய்வீகன்

 

நாள் : 2024. 01.20 சனிக்கிழமை

இடம் : கவிக்கோ அரங்கம்

 

 

The post திருவேட்கை – நூல் வெளியீடு first appeared on அகரமுதல்வன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 17, 2024 09:55

January 16, 2024

அதே ஒருவர்

01

மண்புழுக்கள் இல்லை

தூண்டில் முள்ளில் ஏற்றினேன்

என் தசையை

எத்தனை மீன்கள் இழுக்கும்

இரை

நான்.

02

எனது படகு

அலையைக் கிழிக்கும்

கடலை மிதிக்கும்

புயலில் மோதி

கரையைக் கடக்கும்.

03

அறிமுகமற்ற ஒருவர்

புன்னகைக்கிறார்.

இப்படி பதற்றம் தருவது

அறிமுகமற்றதா?

புன்னகையா?

அதே ஒருவரைப் பார்த்து

புன்னகைக்கிறேன்.

அப்போதும்

அறிமுகமற்றவர் போலவே

அவரிருக்கிறார்.

 

 

 

 

 

 

 

 

 

The post அதே ஒருவர் first appeared on அகரமுதல்வன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 16, 2024 09:25

January 14, 2024

போதமும் காணாத போதம் – 16

பிந்திப்புலர்ந்த விடியலுக்கு முன்பாகவே மழை துமித்தது. உறக்கம் கலைந்து லாம்பைத் தீண்டினேன். ஆறு மணியாகியிருந்தது. அதிவேகமாய் வீட்டின் கதவைத் திறந்து பட்டியடிக்கு ஓடினேன். ஆரம்ப சுகாதார நிலையத்தை தாண்டி வலதுபுறம் திரும்பினால் வருகிற குச்சொழுங்கையில் அரைக்கட்டை நடந்தால் பட்டியடி சிவன் கோவில் வரும். அதற்குப் பின்னாலிருக்கும் பாழடைந்த வீட்டில்தான் சந்திப்பதாகவிருந்தது. நான் சென்றடைவதற்கு முன்பாகவே யசோ வந்திருந்தாள். பீத்தல் விழுந்த குடையொன்றை ஏந்தி நின்றாள். பீத்தல் புகுந்து அவளை நனைக்கும் மழைத்துளிகள் பேறுடையன. ஆயிரம் கண்களுடைய மயில் தோகையை நினைவுபடுத்தும் வடிவமைப்பிலான ஆடை அணிந்திருந்தாள். ஈரம் விழுந்து துளிர்த்த தளிரென குளிர்பதுக்கி நின்ற யசோவை கட்டியணைத்து முத்தமிட்டேன். விசுக்கென தள்ளி விலக்கினாள். என் யாக்கையின் மாண்பு  திகைத்து திணறியது. மீண்டும் முன்நகர்ந்து அவளை இறுக அணைத்து முத்தமிட விழைந்தேன். அவள் விளையமறுத்த நிலமென முகத்தை பலகோடுகளாய் கோணலாக்கி இறுக்கியிருந்தாள்.

“யசோ! என்ன நடந்தது? ஏதேனும் பிரச்சனையோ!” கேட்டேன்.

சடை பின்னப்பட்டிருந்த கூந்தலை அவிழ்த்து விரித்தாள். காமக் களிறை உருவேற்றும் பெண் கூந்தலில் காட்டுப் பூ வாசனை. அவளுடைய கண்களில் பெருகும் கள்ளம் என்னை ஆணாக அறிவித்தது. அவளருகே என்னை அழைத்தாள். வசியமிடப்பட்ட அடிமை நான்.  எத்தனை சவுக்குகளையும் என்னில் வீசும் உரிமை படைத்தவள். ஆயிரம் கண்கள் கொண்ட மயில் தோகையை கழற்றி வீசினாள். பீத்தல் கூடையை சுருக்கி வைத்தாள். எப்போதும் சுருக்கவியலாத மேகமெனும் பிரமாண்டமான குடையில் எத்தனை பீத்தல்கள். யசோ! பருவத்தின் காற்றில் அசைந்து வளரும் பூக்களும், காய்களும், கனிகளும் கொண்டவள். என்னை முத்தமிட்டு முத்தமிட்டு களிகூர்ந்தாள். என் ஆடைகளை உருவி எறிந்தாள். மழையில் நிர்வாணம் பூத்து நின்றோம்.

“மழையில் கூடல், உடலுக்கு சுதி, உனக்கு எப்பிடி” என்று கேட்டேன்.

அவளுக்கு களைப்பாய் இருந்தது. அடிவயிற்றில் குளிரளித்து நின்றது சுக்கிலத்து ஈரம். யசோ எழுந்து ஆடைகளை அணிந்தபடி “நான் இண்டைக்கு வரமாட்டேன் என்று நினைத்தாய் அல்லவா” என்று கேட்டாள்.

“பின்ன, மழை பெய்கிறது. இவ்வளவு கஷ்டப்பட்டு சந்திக்கத்தான் வேண்டுமா. ஆனாலும் நீ வந்திருப்பாய் என்று மனம் சொன்னது” என்றேன்.

“சரி நேரம் போய்ட்டுது. ஆடுகளை பட்டியிலிருந்து சாய்த்துவிடவேண்டும். வெளிக்கிடுகிறேன்”

“இன்றைக்குப் பின்னேரம் சந்திக்கிறோமா”

“வாய்ப்பில்லை. எங்கட சொந்தக்காரர் வீட்டு விஷேசம். அங்க போகவேண்டும்”

“எந்த இடத்தில”

“அதுவோ… உருத்திரபுரம். ஏன் வரப்போறியளோ”

“இல்லையில்லை. நீ போய்ட்டு வா. நாளைக்குப் பார்க்கலாம்.”

“ஏன் நாளைக்கும் மழை பெய்யுமோ” என்று கேட்டபடி அங்கிருந்து ஓடிச்சென்றாள்.

பட்டியில் ஆடுகள் நனைந்து நின்றன. அவள் திறந்ததும் பழக்கப்பட்ட திசைவழியில் ஓடின. வழிமாறிய ஆடுகளை மேய்த்தபடி பாழடைந்த வீட்டைப் பார்த்தாள். கூரைவரை உயர்ந்தேறிய கொடியில் மஞ்சள் பூக்கள் அசைய வானம் குனிந்து பார்த்தது. அங்கிருந்து வீட்டிற்குப் போகும் வழியிலேயே இருந்த வாய்க்காலில் குளித்தேன். ஆயிரம் புரவிகளில் ஏறித்திரிந்த கம்பீரத்தின் தினவு உடல் புகுந்திருந்தது. தண்ணீரில் நின்று கண்களை மூடினால், யாவும் அளிக்கும் ஒரு அமிழ்தக் கொடியாக நிலத்தில் படர்ந்திருக்கிறாள் யசோ. அடிவயிற்றில் மீன்களின் தீண்டல். பாதங்களை உய்விக்கும் பாசிகளின் அசைவு. தண்ணீரில் கொதிக்கும் என்னுடல். யசோ! உன்னுடைய கானகத்தின் பாதையில் திக்கற்று நிற்கும் என்னை எங்ஙனம் தாங்குவாய் சொல்!

யசோவுக்கும் எனக்குமிடையே காதல் மலர்ந்து இரண்டு வருடங்கள் ஆகியிருந்தன. அவளுடைய தாயார் இறந்துபோன அன்றைக்குத்தான் முதன்முறையாக என்னுடைய கைகளைப் பிடித்து, வீட்டினுள்ளே அழைத்துச் சென்றாள். “உன்னை விட்டால் எனக்கினி யார்” என்பதைப் போல என்னுடைய விரல்களைப் பற்றினாள். போராளியாக களமுனையிலிருந்த யசோவின் சகோதரி அடுத்தநாள் காலையிலேயே வரமுடியும் என்பதால் அன்றிரவு முழுதும் தாயின் பூதவுடல் வீட்டில் கிடத்தப்பட்டிருந்து. மூன்று பெற்றோல் மாக்ஸ் வெளிச்சத்தில் பந்தல் ஒளிர்ந்தது. கடதாசிக் கூட்டம் விளையாடுபவர்கள், பீடி புகைப்பவர்கள், வெற்றிலை போடுபவர்கள், அரசியல் கதைப்பவர்கள் என எல்லோருக்கும் மத்தியிலும் பூதவுடல் தனிமையிலிருந்தது.

யசோ, தாயின் தலைமாட்டிலிருந்து வேப்பிலையால் பூச்சிகளை விரட்டினாள். சோர்வும் தனிமையும் அவளை மிரட்ட ஆரம்பித்திருந்தன. அழுது அடைத்திருந்த குரலோடு, முகம் காய்ந்திருந்தது. அவளருகே சென்று “எப்பனாய்  சாப்பிடுங்கோ யசோ” என்றேன். அவள் வேண்டாமென்று தலையசைத்துவிட்டு தாயின் பூதவுடலில் விழுந்து ஊர்ந்த சக்கரபாணி வண்டைத் தூக்கி எறிந்தாள். நள்ளிரவு இரண்டு மணிவரை அப்படியே அமர்ந்திருந்தாள். ரத்தச் சொந்தங்களில் சிலர் இழவு காத்தனர். தயாரின் மூத்த சகோதரி நேரம் பிசகாமல் ஒப்பாரி பாட விழித்திருந்தாள். “என்னையழைத்த யசோ “எனக்குத் துணையாக வரமுடியுமா” என்று கேட்டாள். “எங்கே போகவேண்டும்” கேட்டேன்.

“எனக்கு சுகமில்ல, துணிமாத்த வேணும். வீட்டுக்குப் பின்னாலவுள்ள மறைப்புக்குத்தான்”

“ஆரும் பார்த்தால் பிழையாய் நினைப்பினம்” என்று தயங்கினேன்.

“இனைச்சால் இனைக்கட்டும். என்னோட வாங்கோ”

கையிலிருந்த டோர்ச் லையிற் வெளிச்சத்தோடு யசோவை கூட்டிச்சென்றேன். வீட்டுக்குப் பின்பக்கத்தில் அவள் சொன்னது மாதிரி மறைப்பு ஏதும் இல்லை. அவளின் பின்னால் நடந்து சென்றேன். கொஞ்சம் தள்ளி வாய்க்கால் ஓடிக்கொண்டிருந்தது. என்னிடமிருந்த டோர்ச் லையிற்றை வாங்கியவள் ஒருமரத்தின் கீழே எதையோ சுற்றுமுற்றும் தேடினாள். பிறகு அங்கேயே அமர்ந்து என்னையும் அப்படியே பணித்தாள்.

“யசோ…துணி மாத்தேல்லையோ, நீங்கள் மாத்துங்கோ நான் நிக்கிறன்” என்றேன்.

என்னை இறுக கட்டியணைத்து மூச்சொலி தெறிக்க முத்தமிட்டு ஆடைகளைக் களைந்தாள். வெறுமையிருள் பிளந்து இனிமை சுரக்கும் சுடர் ஏந்தி என்னை ஆட்கொண்டாள். வாய்க்காலின் நீர்ப்பெருக்கு புதிய இச்சைகளோடு சப்தமிட்டது. யசோ வானத்துக்கும் பூமிக்கும் பறந்து விழுகிற உக்கிரத்தோடு இயங்கினாள். அழிவற்ற கண்ணீருக்கு அங்குண்டு பீடம். உடல் எழுந்து பறையென அதிர்கிறது. மலையிருந்து நிலமோடி வருகிற நீர்த்தடத்தின் வெளிச்சமென யசோவும் நானும் அங்கே துய்த்து நிறைந்தோம்.

“உன்னுடைய அம்மா, அங்கே தனித்திருக்கிறாள். எழுந்து செல்வோம் யசோ”

“அப்பாவை ஆர்மியிடம் பறிகொடுத்த நாளிலிருந்து இற்றைக்கு இருபதாண்டுகளாக அம்மா இப்படித்தான் இரவுகளைப் போக்கினாள். அவளுக்கு நிம்மதிமிக்க இரவு இன்றுதான் வாய்த்திருக்கிறது. அதையெண்ணி நீ கவலைப்படாதே”

“ஆனாலும், போகலாம். ஆராவது உன்னைத் தேடி வந்தால் பிழையாகிவிடும். நீயேன் பொய் சொல்லி என்னை அழைத்து வந்தாய்”

“அது பொய்யில்லை. உண்மைதான். ஆனால் இப்ப ஒண்டையும் காணேல்ல” யசோ சிரித்தாள்.

இருவரும் வாய்க்காலில் இறங்கி உடலைக் கழுவினோம். யசோ அடிவயிற்றில் மீன்களைப் போல தீண்டி இரையாடினாள். காணும் போகலாம் என்றேன்.

“அமைதியாக இரு. கொம்புத்தேன். வெறுமையையும் துக்கத்தையும் எரிக்கிறது. தண்ணீரில் நீ விறைத்து நிற்கிறாய். உன்னுடைய உடலில் சுடரும் நிலவின் வெளிச்சம் என்னை மோகிக்கிறது. துண்டு துண்டாகி சிதறிக்கிடக்கும் உளத்தை சிறுசிறு அகல் விளக்காக மாற்றும் இந்தச் சுகத்தை நீ எனக்குத் தராமல் போகாதே. கொம்புத்தேன் உருகட்டும்” என்றாள்.

நாங்களிருவரும் பந்தலுக்குள் நுழையும் போது இன்னும் சிலர் உறங்கியிருந்தனர். கடதாசிக் கூட்டம் விளையாடிக்கொண்டிருப்பவர்கள் அளவில் குறைந்திருந்தனர். தாயின் தலைமாட்டில் போய் அமர்ந்தாள். அடிக்கடி என்னைப் பார்த்து கண்களை மருளச் செய்தாள். யசோவிடம் ஏதோவொரு மூர்க்கம் பெருகி நிற்கிறது. அவளினுள்ளே தணல் மூண்டிருக்கும் தீயின் சடசடப்பை அறியக் காத்திருந்தேன். அதிகாலையிலிருந்து ஆட்கள் வரத்தொடங்கியிருந்தனர். களமுனையிலிருந்து யசோவின் சகோதரி வந்திருந்தார். தாயின் பூதவுடலைக் கட்டியணைத்து அழுதார். அம்மா.. அம்மாவென்ற அரற்றல் சுருக்கமாகவே தீர்ந்தது.

அதன்பிறகு யசோவும் நானும் பலதடவைகள் சந்தித்துக் கொண்டோம். எங்களிடம் தீர்ந்து போகாத தாழிகளில் காமம் நொதித்து கள்ளென வழிந்தது. கலவியிலிருந்த கணமொன்றில் கண்கள் பனித்து “ இப்பிடி இருக்கேக்க மட்டும்தான் எங்கட நாட்டில யுத்தம் நடக்கிறதே மறந்து போகுது. ஒரு அஞ்சு நிமிஷம் அப்பிடிச் சுகமாய் இருக்கு” என்றாள் யசோ.

“நல்லாயிருக்கு உங்கட கதை. நாங்கள் ரெண்டு பேரும் சந்தோசமாய் இருக்கேக்க, எத்தின பேர் நாட்டுக்காக உயிரை விடுகினமோ!” என்றேன்.

“இதுவும் ஒரு போராட்டம் தானே. யுத்தத்தை மறக்க ஒரு உபாயம். அப்பாவை ஆர்மிக்காரன் பிடிச்சிட்டு போன நாளிலயிருந்து அம்மா பட்ட கஷ்டங்களில இதுதான் பெரிசு. உன்ர கொப்பர் கனவில வந்து கொஞ்சச் சொல்லி அடிக்கடி கேக்கிறாரடி என்பாள் அம்மா. அப்பிடியொரு கனவு  வருகிற கணங்கள் மட்டும்தான் அம்மாவோட உளம் இந்த யுத்த அவலங்களை மறந்திருக்கும். இல்லையோ!”

“துயரம் தான் யசோ”

“கவலைப்பட எதுவுமில்லை. ஆனால் இவ்வளவு யுத்தத்துக்கு மத்தியிலும் எங்கட ஆஸ்பத்திரிகளில குழந்தைகள் பிறக்கினம் தானே. யுத்தம் ஒட்டுமொத்த மனுஷனிட்ட தோக்கிற இடமிதுதான்”

“அடிசக்கை… இதை நீங்கள் எங்கட தவபாலன் அண்ணைக்கு சொன்னியள் எண்டால், ரெண்டுநாள் பெரிய ஆய்வுக்கட்டுரை வாசிப்பார்”

“இப்பிடியொரு உண்மையை இயக்கத்தின்ர ரேடியோவில சொல்லுறதால அதைப் பொய்யெண்டு நம்பவும் வாய்ப்பிருக்கு. அதை நானே வைச்சுக் கொள்கிறேன்” என்றாள்.

ஆடுகளை மேய்த்துவந்து பட்டியில் அடைத்து அந்தியின் சிவந்த ஒளியில் வியர்வை சிந்த எங்கள் வீட்டிற்கு வந்திருந்தாள். காலையில் பெய்த மழையில் நம்வெள்ளம் நீந்தியதை அவளுக்கு நினைவுபடுத்தினேன்.  உணவை சட்டியில் போட்டுக் கொடுத்து “அம்மா வீட்டில் இல்லை, இரணைமடு வரைக்கும் போயிருக்கிறா” என்றேன். அதே ஆயிரம் மயில் கண்கள் திறந்த சட்டை. ஆட்டு மந்தையின் மொச்சை மணம் ஏறிய கிளர்ச்சி. வெயிலில் காய்ந்த யசோ தகித்திருந்தாள். எங்கிருந்தோ எம்மைத் தேர்ந்தடுக்கும் இந்த உணர்வை இறையிருக்கையில் அமர்த்தி பூசிக்கவேண்டும். யுத்தம் பொல்லாத செருக்கின் அநீதி. ஆனாலும் நானும் யசோவும் உடல்களை இழைத்து யுத்தத்தை மூடினோம். அது தருவித்த தழும்புகளில் ஒரு வழித்தோன்றலை உருவாக்க எண்ணினோம்.

யசோவை வீட்டினுள்ளே அழைத்தேன். அவள் வேண்டாமென மறுத்தாள். என்னுடைய கைகளைப் பற்றி முத்தமிட்டு, வேறொரு நாளில் வைத்துக் கொள்வோம் என்றாள். இப்போதே, இக்கணமே நாம் யுத்தத்தை மறக்கவேண்டுமென தோன்றுகிறது என்றேன். நாம் யுத்தத்தை சில கணங்கள் மறப்போமாக! அது நம்மீது சுமத்திய காயங்களை எடையற்ற இறகுகளாக ஊதிப் பறக்க விடுவோமாக! என்று சொல்லியபடி நிலத்தின் மீது கொடியெனப் படர்ந்து பூவின் அதழ்களைத் திறந்தாள். இயங்கி முயங்கும் அந்திப்பொழுதில் முன்நிலவு மேலெழுந்து வானறைந்தது.

“ஆராவது வந்துவிடப் போகிறார்கள், நிறுத்திக்கொள்ளலாம்” யசோ சொன்னாள்.

“அம்மா வருவதற்கு நேரம் செல்லும். நீ ஏன் புதிதாகப் பயப்படுகிறாய்” என்று கேட்டேன்.

“யுத்தத்தை மறக்கலாம். ஆனால் இது சனங்களுக்குத் தெரிஞ்சால் மானக்கெடுத்து போடுங்கள்”

“இதைத்தானே நான் அண்டைக்கு இரவும், வாய்க்காலடியில வைச்சு சொன்னான்”

“எண்டைக்கு இரவு”

“உங்கட அம்மா செத்த அண்டைக்கு, வாய்க்காலுக்கு கூட்டிக்கொண்டு போனியளே”

“அங்கே, ஏன் நான் கூட்டிக்கொண்டு போனான். உங்களுக்கு என்ன விசரே”

“நல்ல கதையாய் இருக்கே. கூட்டிக்கொண்டு போய் செய்யாத வேலையெல்லாம் செய்துபோட்டு, இப்ப அப்பாவி மாதிரி, வேஷம் போடுறியள்”

“சத்தியமாய் நான் அப்பிடி ஒண்டும் செய்யேல்ல. விடியும் வரை அம்மாவின்ர தலைமாட்டில இருந்து வேப்பிலையால விசுக்கி கொண்டெல்லே இருந்தனான்”

“அய்யோ, இதென்ன பொய். உங்களுக்கு சுகமில்லை. துணி மாத்தவேணும். வா எண்டு என்னைக் கூட்டிக்கொண்டு போனியளல்லே”

“சத்தியமா இல்ல”

“அப்ப, நான் சொல்லுறது பொய். அப்பிடித்தானே”

“நான் சொன்னானோ எனக்குத் தீட்டு எண்டு?” யசோவின் இந்தக் கேள்வியிலிருந்த தீவிரம் சூழலுக்கு மிக அந்நியமாய் இருந்தது. ஆனாலும் நான் ஓமென்று தலையசைத்தேன்.

“அம்மா செத்த அண்டைக்கு அவாவுக்கு தான் மூன்றாம் நாள் தீட்டு லேசாய் இருந்தது” என்ற யசோ என்னை இறுக அணைத்தாள்.

“யசோ, நீ என்ன சொல்லுகிறாய்?”

“இருபது வருஷத்துக்கு பிறகு அம்மா அண்டைக்கு நிம்மதியாய் உறங்கியிருக்கிறாள். அவளும் சில கணங்கள் யுத்தத்தை மறந்து இருந்திருக்கிறாள்” என்று சொல்லியபடி யுத்தம் ஒழிக! யுத்தம் ஒழிக! என்று முயங்கினாள்.

 

 

 

 

 

 

The post போதமும் காணாத போதம் – 16 first appeared on அகரமுதல்வன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 14, 2024 10:30

காலச்சுவடு அய்யாச்சாமி

சிறந்த எழுத்தாளர்கள் பரிந்துரைக்கும் நூல்களை வாங்குவதற்கு வாசர்கள் விரும்புகின்றனர். பரிந்துரைகளின் வழியாக மட்டுமே இலக்கியத்தை அடைய எண்ணுவது அசலான வாசக மனமோ, நியாயமான போதமாகவோ அமையமுடியாது என்பதே என்னுடைய தரப்பு. புதிதாக தீவிர இலக்கிய வாசகச் சூழலுக்குள் வந்திருப்பவர்களுக்கு தொடக்க காலங்களில் சிறந்த வழிகாட்டிகள் அவசியம் தேவைப்படுகிறார்கள். எனக்கு கவிஞர் வேல்கண்ணன் அமைந்தார். பின்னர் என்னுடைய தேடலை ஒரு லட்சியமாக ஆக்கிக்கொண்டேன். அறிதலை வேட்கையாக  வரித்தேன்.

பரிந்துரைகள் தேவைப்படும் போது, சிறந்த எழுத்தாளர்களின் உதவியைக் கோரினேன். அறிவியக்கத்தின் அஞ்சலோட்டம் என்பது சிறந்தவற்றை பரிந்துரை செய்வதுதான். ஆனால் பரிந்துரைகளை மட்டுமே பின் தொடர்வது போதாமையே. மூத்த, சிறந்த எழுத்தாளர்கள் பரிந்துரைக்கு இயல்பிலேயே ஒரு பெருமதிப்பு உள்ளது. ஆனால் ஒரு பதிப்பகத்தின் விற்பனை பணியாளராக இருப்பவரின் புத்தக பரிந்துரைகளுக்கும், ஆலோசனைகளுக்கும் நான் மதிப்பளிக்கிறேன். இலக்கியத்தில் அவருடைய மெய்யான ஈடுபாடும், அறிமுகப்படுத்தும் முறையும் அறவே வியாபார நோக்கங்கொண்டது அல்ல. தேடலில் உள்ளவனுக்கு வழிகாட்டும் திசைமரமாக இருக்கிறார். அவருடைய பெயர் “காலச்சுவடு” அய்யாச்சாமி.

காலச்சுவடு பதிப்பகம் தமிழ் அறிவியக்கத்தின் உன்னதமான ஸ்தலங்களில் ஒன்று. அங்கு பணிபுரியும் அய்யாச்சாமியை வாசகர்கள் பலர் கண்டிருப்பார்கள். துடிப்பான மனுஷன். இவரின் அணுகுமுறையும் உபசரிப்பும் இலக்கியப் புலத்தில் அரிது. காலச்சுவடு அரங்கில் புத்தகங்களை வாங்கவரும் ஒரு புதிய வாசகன் எதனைப் படிக்கவேண்டுமென கேட்டால், இதுவரை நீங்கள் எவற்றையெல்லாம் வாசித்திருக்கிறீர்கள் என்று கேட்பதிலிருந்து அய்யாச்சாமியின் பணி தொடர்கிறது. அதன் நீட்சியாக வாசகனை அழைத்துச் சென்று புத்தகங்களை இனங்காட்டுகிறார். ஒரு இலக்கிய வாசகனாக காலச்சுவடு பதிப்பகத்தின் மீது எனக்குள்ள மரியாதை அளவற்றது. ஒரு நவீன வாசகனாக அங்கு வெளிவரும் பெரும்பாலான புத்தகங்களை வாங்கி வாசித்து வருகிறேன்.

புதிதாக இலக்கியத்துக்குள் புகுபவர்கள் எவற்றை வாசிக்கலாமென்ற குழப்பத்துடனே பெரும்பாலான புத்தகங்களைத் தேர்வு செய்கிறார்கள். ஓரான் பாமுக் படித்தால் அறிவுஜீவி என்கிற அபத்தமான கற்பனைகளை எங்கிருந்தோ அவர்கள் பெற்றுவிடுகிறார்கள். அய்யாச்சாமி போன்ற சிறந்த பரிந்துரையாளர் ஓரான் பாமுக்கை வாசிப்பின் எந்த இடத்தில் தொடவேண்டுமென கூறுபவர். மாவட்டங்கள் தோறும் நடைபெறும் புத்தகத் திருவிழாக்களில் காலச்சுவடு அரங்கில் அய்யாச்சாமி பங்குகொள்கிறார் என நினைக்கிறேன். நான் போகும் புத்தகத் திருவிழாக்களில் அவருடன் சென்று கதைத்துவிட்டுத்தான் திரும்புவேன். வாசிப்பில் தேடல் கொண்டவர்கள் அடையும் ஒரு அரிய பரிந்துரையாளர் அய்யாச்சாமி என்றால் மிகையில்லை.

அகரமுதல்வன்

The post காலச்சுவடு அய்யாச்சாமி first appeared on அகரமுதல்வன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 14, 2024 01:09

January 12, 2024

இன்று – கையெழுத்து

நடைபெறும் சென்னைப் புத்தகத் திருவிழாவில் இன்று லியோ புக்ஸ் – அரங்கு எண் – F – 62 ல் மாலை வாசகர்களைச் சந்திக்கிறேன். லியோ புக்ஸ் விற்பனை நிறுவனத்தில் பணிபுரிகிற மணிகண்டனின் அன்பு வேண்டுகோளுக்கிணங்க இது நிகழ்கிறது. என்னுடைய அனைத்து நூல்களையும் அந்த அரங்கிலும் பெற்றுக்கொள்ளலாம். சக வாசகர்களை அன்புடன் அழைக்கிறேன்.

 

The post இன்று – கையெழுத்து first appeared on அகரமுதல்வன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 12, 2024 20:08

திரிசுடர்

01

துயிலெழுந்தது பூமி

ஆழி நிறைந்து சூழ்ந்தது

சூரியன்

பட்டுப்போனதொரு

அத்திமரத்தின் கிளையிருந்து

சிறகு விரிக்கும்

பறவை

பகலை எச்சமிடுகிறது.

02

இங்குதான்

தனிமையைச் சந்தித்தேன்

 

நீண்டிருக்கும் அலகில்

தானியத்தை

ஏந்திச் செல்லும்

ஒரு பறவையின்

தனிமை.

 

03

இரவின் மீது வழியும்

காமத்தின் மெழுகில்

என்னுடல்

திரி

உன்னுடல்

சுடர்.

 

The post திரிசுடர் first appeared on அகரமுதல்வன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 12, 2024 10:21

அகரமுதல்வன்'s Blog

அகரமுதல்வன்
அகரமுதல்வன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow அகரமுதல்வன்'s blog with rss.