சுபம்

சென்னையில் நடைபெறும் இலக்கிய நிகழ்ச்சிகள் சிலவற்றில் அவரைக் கண்டிருக்கிறேன். இளம் வயதுதான். லேசாக முடி நரைத்திருக்கும். நவீன இலக்கிய வாசிப்பு மட்டுமல்ல, வாழ்வில் ஒரு நாளிதழைக் கூட புரட்டிப்பார்க்காதவர். ஒருநாள் பெருமிதத்தோடு அவரே சொல்லிக்கொண்டார். ஆனால் இலக்கியம் அவருக்கும் பிடிக்கும். இலக்கியவாதிகளின் கருத்துக்கள் முக்கியமானது என்றார். திரைத்துறையில் பணிபுரிவதாகவும் இன்னும் சில மாதங்களில் படப்பிடிப்புச் செல்லவிருப்பதாகவும் கூறியதும் நினைவுண்டு. இலக்கிய நிகழ்ச்சிகளில் முதல் ஆளாக வந்து கடைசி வரிசையின் வலது மூலையில் அமர்ந்துவிடுவார். அவர் இல்லாததை வலது மூலையிலுள்ள வெறும் நாற்காலியே உணர்த்திவிடும். கொஞ்ச வருடங்களாக அவரைக் காணக் கிடைக்கவில்லை. ஏதேனும் திரைப்பட முயற்சிகளில் ஈடுபட்டிருக்கலாம் என்று தோன்றியது. நேற்றைக்கு முன்தினம் வந்திருந்த மின்னஞ்சல்களை வாசித்துக் கொண்டிருந்தேன். “போதமும் காணாத போதம்” வெளியீட்டு விழாவின் உரைகள் பற்றி பலர் எழுதியிருந்தனர்.  ஒவ்வொரு கடிதத்தையும் வாசித்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் இவர் அனுப்பியிருக்கும் மின்னஞ்சலும் வந்திருந்தது.

தன்னுடைய திரைக்கதை – வடிவத்தை அனுப்பிவைக்க விரும்புவதாகவும், மூன்று நாட்களுக்குள் படித்துவிட்டு சொல்லவேண்டுமெனவும் கட்டளைத் தொனியில் எழுதப்பட்டிருந்தது. ஏற்கனவே அவர் இயக்கிய திரைப்படம் பல்வேறு காரணங்களால் வெளியாகவில்லையென தடித்த எழுத்துக்களால் அடையாளப்படுத்தப்பட்டிருந்தன. இயக்குனர் என தன்னை பாவிக்குமாறு உணர்த்துகிறார் போலும்! நான் அவரை மறந்திருக்ககூடுமென எண்ணி தனது புகைப்படத்தையும் சேர்த்தே அனுப்பியிருந்தார். மூன்று நாட்களுக்குள் உங்கள் திரைக்கதையை வாசித்துச்சொல்லும் நல்வாய்ப்பினை வாழ்கை எனக்களிக்கவில்லை என்று பதில் எழுதினேன். அடுத்தநாளே அவரால் எழுதப்பட்டிருந்த இன்னொரு மின்னஞ்சல் வந்தது. முதல்வனுக்கு! உங்களையொரு எழுத்தாளராக மதித்துக் கேட்டது என்னுடைய தப்பு. திரைத்துறையிலிருந்து தங்களுக்கொரு வாய்ப்பு கிடைக்காதா என ஏங்கும் எத்தனையோ எழுத்தாளர்களை எனக்குத் தெரியும். அவர்களையெல்லாம் விட்டுவிட்டு உங்களுக்கு இந்த வாய்ப்பைத் தர எண்ணியது என்னுடைய குற்றமேயென வருந்தி எழுதியிருந்தார். நான் சுபம் என்று எழுதி முடித்துக்கொண்டேன்.

இவரைப் போன்ற பலரை எனக்குச் சினிமாவில் தெரியும். எழுத்தாளர்கள் என்றால் இவர்களின் வாசலில் நின்று இரந்துநிற்பவர்கள் என்று கற்பனை செய்கிறார்கள். பாவம் எழுத்தாளர் என்று சில்லறைகளை வீசி எறிவதாக கனவு காண்கிறார்கள். நிமிர்வு கொண்ட ஒரு எழுத்தாளனையாவது சந்திக்காதது இவர்களின் வாழ்நாள் துயர். எழுத்தாளர்கள் என்று தம்மை நம்பும் சிலர், திரைத்துறையினரிடம் காட்டும் பணிவு கண்டு நான் அதிர்ச்சியுற்றிருக்கிறேன். ஆனால் திரைத்துறையில் சாதனை படைத்த, அழியா நிலைபெற்ற  கலைப்படைப்புக்களைத் தந்தவர்கள் பலர் எழுத்தாளர்களுக்கு அளிக்கும் மரியாதை கண்டிப்பாக பதிவு பண்ணப்படவேண்டியது. இயக்குனர் மணிரத்னம் அவர்களோடு பணியாற்றுகையில், எழுத்தாளரான எனக்கு அவர் அளித்த மரியாதை எப்போதும் பெருமை தரக்கூடியது. இப்படி நிறைய அனுபவங்கள் எனக்குண்டு. இயக்குனர் ராம் என்னுடைய நேசன். ஒருவகையில் என் மேய்ப்பர்களில் ஒருவர். ஆனால் எல்லா உரையாடல்களிலும் எழுத்தாளர் என்ற அடையாளத்தின் மூலமாகவே பிறருக்கு அறிமுகம் செய்வார்.

பேரன்புக்குரிய இயக்குனர் மிஷ்கின் எல்லையற்ற வாசக நேசத்தை எழுத்தாளர்கள் மீது காட்டக்கூடியவர். சமீபத்தில் அவருடைய படப்பிடிப்புத்தளத்திற்கு சென்றிருந்த போது அவர் தருவித்த வரவேற்பும், விருந்தும் எழுத்தாளர் என்கிற அந்தஸ்த்துக்கு உரியன. இயக்குனர் தயாரிப்பாளர் சிவா அனந்த் என் மானசீகமான வழிகாட்டி. எழுத்தாளர்களோடு அவர் உரையாடும் விதம் கண்டு மகிழ்ந்திருக்கிறேன். இயக்குனர் வசந்தபாலன் எழுத்தாளர்களைக் கொண்டாடுவதில் உவகை அடைபவர். நான் மேற்கூறிய நிரையில் இன்னும் பலர் உண்டு. ஆனாலும் இந்தப் பாண்பாட்டில் தம்மை இணைத்துக்கொண்டவர்கள்  தமிழ்த்திரைத்துறையில் மிகச் சொற்பம். இங்கேதான்  எழுத்தாளரைக் கொண்டாடுவது தம்முடைய தாராளத்தைச் சேர்ந்தது என்று கருதுகிறவர்கள் பலர். நான்தான் அந்த எழுத்தாளர் பாவமென்று ஒரு வாய்ப்பும் வழங்கினேன் என்று சொல்லவே பலர் துடியாய்த் துடிக்கின்றனர். இவர்களிடம் பரிசிலுக்கு வரிசைக்கு நிற்கும் வாழ்க்கை இன்று எழுத்தாளருக்கு இல்லை.

ஒருமுறை பலகோடி நிதி ஆதாரத்தில் உருவாக்கப்பட்ட திரைப்படக் குழுவிடமிருந்து எனக்கொரு அழைப்பு. அந்தத் திரைப்படத்தின் தொழில்நுட்பக் கலைஞர் ஒருவர் என்னிடம் பேசினார். இவர் நாடறிந்த ஒளிப்பதிவாளர். காலையில் ஒன்பது மணிக்கு அழைத்துப் பேசினார். அன்றுதான் முதன்முறையாக என்னிடம் உரையாடுகிறார். “உங்களைச் சந்திக்க வேண்டும் கிளம்பி தேனாம்பேட்டையில் உள்ள எங்களுடைய அலுவலகம் வாருங்கள்” என்றார். “நான் ஓய்வாக இருக்கும்போது சொல்கிறேன். அன்று சந்தித்துக்கொள்ளலாம்” என்றேன். “என்ன நீங்க இப்பிடி சொல்றீங்க. உங்களுக்கொரு வாய்ப்பு வாங்கித்தரலாம்னு பார்த்தா…” என்றார். எனக்கு வாய்ப்புக் கேட்டு உங்களை எப்போதாவது அழைத்தேனா. என்னைச் சந்திக்கும் வாய்ப்புக்கேட்டு நீங்கள் தானே அழைத்தீர்கள். ஆகவே நான்தான் உங்களுக்கு வாய்ப்புத் தருகிற இடத்தில் இருக்கிறேன். நாளை என்னை அழையுங்கள். எப்போது சந்திக்கலாமென்று சொல்கிறேன்” என்றுவிட்டு தொடர்பை துண்டித்தேன்.

திரைத்துறையில் இலக்கியம் – எழுத்தாளர்கள் குறித்து என்ன மதிப்பீடு உள்ளதென அறிந்திருக்கிறேன். ஒருதரப்பு தீவிர இலக்கிய வாசிப்பையும் எழுத்தாளர்களையும் திரைத்துறைக்குள் உள்வாங்க போராடிக்கொண்டிருக்கிறது. குறைந்த அளவேனும் இந்தத் தலைமுறை அதில் வெற்றி கண்டிருக்கிறது. இக்காலமே அதன் தொடக்கம். இன்னொரு தரப்பு வணிகப் பாணி. இரண்டுமே திரைத்துறைக்கு அவசியமானதுதான். ஆனால் இலக்கியத்தின் அருகதை அறியாதவொரு பெருந்திரள் திரைத்துறையில் இருக்கவே செய்கிறது. அவர்களை நொந்தும் பயனில்லை.

இன்றைக்கு காலையில் மீண்டுமொரு மின்னஞ்சல் அவரிடமிருந்து வந்திருந்தது. “அன்பின் அகரமுதல்வன்! உங்களைப்போன்று கர்வமும், மண்டைக் கனமும் கொண்ட படைப்பாளிகள் இங்கே வெல்ல முடியாது. உங்களுக்கு எழுதும் திறன் எப்படி உள்ளதோ, அப்படி என்னைப் போன்ற திரை இயக்குனரிடமும் பணியும் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள். சினிமாவுக்கு அதுதான் முக்கியம்” என்று ஆலோசனை வழங்கியிருந்தார். அவருக்கு இப்போது என்ன தேவையென விளங்கிக் கொண்டேன். ஒரு எழுத்தாளரை அவர்முன் பணிய வைக்கவேண்டுமென எண்ணுகிறார். என்ன விந்தையான மனமோ அறிகிலேன்.

அவருக்கு பதில் எழுதினேன்.

ஒரு மலையுச்சியை வளைத்து இருக்கையாக்க எண்ணுகிறீர்கள். அது எப்போதும் சாத்தியமில்லாதது. நன்றி.

The post சுபம் first appeared on அகரமுதல்வன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 20, 2024 00:32
No comments have been added yet.


அகரமுதல்வன்'s Blog

அகரமுதல்வன்
அகரமுதல்வன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow அகரமுதல்வன்'s blog with rss.