எழுத்தாளர்களுக்கு மேடைப் பேச்சாற்றல் அவசியமா?

அன்பின் அகரமுதல்வனுக்கு! மருபூமி நூல் வெளியீட்டு விழாவில் உங்களுடைய உரையைக் கேட்டேன். மொழிச்சரளமும் தீவிரமும் கொண்ட உரை.  ஆனால்  உரையைக் கேட்டதும் எனக்குள் தோன்றிய கேள்வி  ‘ஒரு நவீன எழுத்தாளர் மேடைப் பேச்சாற்றலுடையவராக இருப்பது அவசியமா’ என்பதுதான். சமகாலத்து தலைமுறை எழுத்தாளர்களில் அதிக இலக்கிய கூட்டங்களில் சிறப்பாக பேசிவருபவர் நீங்கள்தான் என்பதாலேயே உங்களிடம் இதனைக் கேட்கத் தோன்றுகிறது.

குமரேசன்

தஞ்சாவூர்

 

வணக்கம் குமரேசன்! நவீன எழுத்தாளர்களாக இருப்பவர்கள் ‘மேடைப் பேச்சு’க்கு உகந்தவர்கள் இல்லையென்கிற கருத்து பரவலாக உள்ளது. பெருமளவில் அந்தக் கருத்து உள்ளது உண்மைதான். ஏனெனில் தொழில்முறை மேடைப் பேச்சாளர்களைப் போல எழுத்தாளர்களால் பேச இயலாது. வெகுசன ரசனைக்கு அப்பாலுள்ள ஓருலகில் மொழியோடு பிணைப்புக் கொண்டிருப்பவர்கள் தீவிர எழுத்தாளர்கள். அவர்களிடமிருந்து  ஒருவகையான இறுக்கமும் – கொந்தளிப்பும் – ஆற்றொழுக்கற்றதுமான தன்னியல்பு குலையாத உரைகளே வந்து சேரும். அது குறையல்ல. எழுத்தாளர்களின் உரை. அது அப்படியானதாகவே இருக்கும். நவீன இலக்கிய மேடைகளில் புத்தகம் குறித்து பேசும் சில எழுத்தாள நண்பர்கள் கட்டுரையாக எழுதி வந்து, அதனை வாசித்து – விளக்கவுரைகளை ஆற்றுவதும் நடக்கும். அதனை நாம் பண்டிகை நாட்களில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் பட்டிமன்ற பேச்சுக்களோடு முன்வைத்து ஒப்பிடக்கூடாது. ஏனெனில் எழுத்தாளர்கள் ஆற்ற விழைவது அறிவியக்கத்திற்கான ஒரு உரையைத்தான்.

என்னுடைய நண்பரொருவர் எழுத்தாளர்களுக்கு சுவாரஸ்யமாக பேசவே தெரியாது என்று அடிக்கடி சொல்வார். அவர் கோரும் சுவாரஸ்யத்தை அவரே சமைக்கவேண்டும். ஏனெனில் எழுத்தாளர்கள் ஒவ்வொருவரும் தனியுலகோடு சஞ்சாரம் கொண்டவர்கள். தனிப் பின்னணியோடு மொழிக்குள் ஏந்தப்பட்டவர்கள். தொழில்முறையான மேடைப்பேச்சுக்களில் இருக்கும் ஒரேமாதிரியான உணர்ச்சித் ததும்பல்கள் போல ஒற்றைத்தன்மையான ஏற்ற இறக்கங்கள் போல, ஒரே வார்ப்பில் அமையப்பெற்ற மரபுப்பாடல்கள் போல,  எதையும் நவீன எழுத்தாளர்களின் உரைகளில் நீங்கள் காணவியலாது.

நான் சிறுவயது முதலே சைவப் பிரசங்கங்கள் கேட்டு வளர்ந்தவன். பள்ளிக்கூடத்தில் தொடக்க வகுப்பிலிருந்து நடைபெறும் விழாக்களில், பேச்சுப் போட்டிகளில், கவிதை வாசிப்புக்களில் தன்னார்வத்தினால் பங்கெடுத்திருக்கிறேன். நூற்றுக்கணக்கான மக்களுக்கு முன்னின்று கவிதை பாடும் நல்லூழும் பலதருணங்களில் வாய்க்கப்பெற்றன. ஜீவிதம் பக்தியாகவும் – போராட்டக் கொந்தளிப்பாகவும் சடை பின்னப்பட்டிருந்ததனால் பல்வேறு தன்மைகளிலான மேடைகளை சிறுவயது முதல் கண்டிருக்கிறேன். என்னளவில் மேடையென்பது நடுக்கம் தரும் ஒரு மேடு அல்ல. தாயின் வாசனையால் நெய்யப்பட்ட ஒரு சேலையால் கட்டப்பட்டிருக்கும் ஏணை போல. அதுவே எனக்கு சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் அடையாளத்தையும் வழங்குமொரு இனிய பீடமாக அமைந்திருக்கிறது.

நினைவை இழுத்துவந்து சொல்கிறேன் , என்னுடைய ஆறாவது வயதில் ஊரிலேயுள்ள அம்மன் கோவில் திருவிழாவில் ஒலிவாங்கியைப் பிடித்து  அன்னதானத்திற்கான அறிவிப்பை செய்தேன். அன்றைக்கு என்னைச் சூழநின்று பாராட்டிய உற்றார்களுக்கு என்றும் நன்றியுடையவன். அங்கிருந்து பற்றிய ஒலிவாங்கியை இன்னும் இறுக்கமாக உறுதியாகப் பிடித்துக்கொண்டது பின்னைய காலங்களில் என்றால் மிகையில்லை. நான் மேடையைக் கையாள்வதிலிருக்கும் லாவகம் எழுத்தாளன் ஆனதற்குப் பிறகு உருவானதில்லை. அது என்னுடைய வாழ்வின் பின்னணியிலிருந்த ஒரு பண்பாடு. அதனை தீர்க்கமாக கைப்பற்றிக்கொண்டேன்.

நவீன எழுத்தாளர்கள் தமது சிந்தனைகளையும், மதிப்பீடுகளையும் தொகுத்து அளிக்கவே உரைகளை ஆற்றுகிறார்கள். ஒரேமாதிரியான, சலிப்பூட்டக்கூடிய தகவல்களையோ, சம்பவங்களையோ அவர்கள் முன்வைக்க முண்டியடிப்பதில்லை. ஆனால் தொழில்முறை பேச்சுக்களில் திரும்பத் திரும்ப சொல்வதெல்லாம் சர்வசாதாரணம். எழுத்தாளர்கள் அப்படியல்ல, அவர்களுடைய அசல் தன்மையோடு சொல்ல வந்ததைச் சொல்வார்கள். அதுதான் பெரும்பாலான நவீன எழுத்தாளர்களின் இயல்பான அமைவு.

ஆனால் இதில் விதிவிலக்கு கொண்டவர்களும் உண்டு. மேடையில் உரையாற்றுவதற்கு முன்பு ஒரு தயாரிப்புடன் வருகிறவர்கள். அது காகிதத்தில் குறித்து வரும் தயாரிப்பல்ல. மாறாக சிந்தனையில் கூர்மையான அளவில் அதனை சேகரித்து வருபவர்கள். நான் பெருமபாலான மேடைகளுக்கு அப்படித்தான் செல்வேன். என்னுடைய உரையைக் கேட்பவர்களுக்கு விளங்கும் வகையிலும், மொழியின் அழகுணர்ச்சி கொண்ட வார்த்தைகளின் மூலமும் ஒரு தொடர்ச்சியான – ஒழுக்கான இசைவோடும் அதனை அமைப்பேன். ஆனால் நவீன இலக்கிய மேடைகளில் சில எழுத்தாளர்களிடம் நான் கவனித்து நொம்பலம் கொள்ளும் விஷயமென்னவென்றால் அசட்டையும் அர்ப்பணிப்புமற்று  ஒரு தொகுப்புக்கு பேச வருவது. ஏதேதோ பேசி இறுதியாக ” இந்தத் தொகுப்பை வெளியிடும் இவருக்கு என் பாராட்டுக்கள் ” என்பார்கள். உண்மையில் அரங்கத்தில் கூடியிருப்பவர்களையும், நூல் ஆசிரியரையும் நிந்தனை செய்யும் செயலிது. ஆனால் இப்படி பேசுபவர்களுக்கு குற்றவுணர்ச்சி ஏதும் தோன்றுவதாய் தெரியவில்லை. தொடர்ந்து பல மேடைகளில் அதனையொரு பாணியாகவே முன்னெடுக்கிறார்கள். ஆகுதி ஒருங்கிணைக்கும் கூட்டங்களில் இந்தப் ‘பாணி’ யில் பேசுபவர்களை ஒருநாளும் அழைத்ததில்லை. இனிமேலும் அழைப்பதில்லையென்பதே இந்தக் கட்டுரையை எழுதும் எனக்குள்ள அருகதைகளில் முதன்மையானது.

மேடையில் உரையாற்றுவது ஒரு தனிக்கலை. அதற்குமொரு தீவிரத்தையும் உழைப்பையும் நாம் அளிக்கவேண்டும்.  ஒருவகையில் வாசிப்பின் மூலம், நம் மரபுகளின் மூலம் சேகரித்து வைத்துக்கொண்ட சிந்தனைகளையும் பெறுமதிகளையும் பிறருக்கு கையளிக்கும் ஒரு முக்கிய பணியை செய்யத்தலைப்படுகிறோம் என்ற பொறுப்புணர்வோடு மேடைக்குச் செல்லவேண்டும். ஒருபோதும்  எழுத்தாளர்கள் இப்படித்தான் பேசவேண்டும் என்று யாரும் நிர்ப்பந்திக்கமாட்டார்கள். ஆனால் எழுத்தாளர்கள் எதையும், எப்படியும் பேசுவார்கள் என்ற சகிப்புத்தன்மை வாசகர்களிடமும் இருக்கவேண்டியதில்லை. ஏனெனில் எழுத்தாளர்களை நோக்கி அவர்கள் அமர்ந்திருப்பதே பெற்றுக்கொள்வதற்குதான்.

இலக்கியக் கூட்டங்களில் ஆர்வமாகப் பங்குகொள்ளும் பலரை அறிவேன். இப்போதெல்லாம் அவர்களை எந்த இலக்கிய நிகழ்விலும் காணக்கிடைக்கா. ஆகுதி ஒருங்கிணைத்த எம். கோபாலகிருஷ்ணன் படைப்புலகுக்கு ஒருவர் வந்திருந்தார். அவரைப் பார்த்து நாட்கள் ஆயிற்று. அடையாளம் கண்டு பேசினேன். இப்போதெல்லாம் உங்களை நிகழ்ச்சிகளில் பார்க்க முடிவதில்லையே என்று கேட்டேன். அவர் சலிப்புற்று ” கூட்டங்களில் பேசுகிற பலர் பொறுப்பற்று உரை நிகழ்த்துகின்றனர். வந்திருக்கும் வாசகர்களை மதியாமல் ஏதோவெல்லாம் பேசுகிறார்கள். நாம் அடைவதற்கு எதுவுமற்ற இலக்கியச் சந்திப்புக்களில் இப்போதெல்லாம் கலந்து கொள்வதில்லை. மதியாதார் தலைவாசல் மிதியாதே என்பது இதற்கும் பொருந்தலாமே” என்றார்.  ஒரு வாசகனை இவ்வளவு சங்கடப்படுத்தியிருக்கிறார்களே என்று உளம் நொந்தேன்.  அவருடைய கைகளைப் பற்றிக் கொண்டேன். ” இது ஆகுதியின் கூட்டம். அதனாலேயே தலைவாசல் மதித்து மிதித்திருக்கிறேன்” என்று சொல்லி என்னை ஆசிர்வதித்தார். இப்படியான பாராட்டுக்கள் ஆகுதிக்கானவை மட்டுமல்ல . இதுவரைக்கும் ஆகுதியின் நிகழ்வுகளில் உரையாற்றிய ஒவ்வொரு எழுத்தாளர்களுக்கும் சேரும்.

ஒரு நவீன எழுத்தாளர் பேச்சாற்றல் கொண்டவராக இருந்தால் அது இன்னுமே மொழிக்கும், சிந்தனைக்கும் பலமானதுதான். ஏனெனில் ஒரு எழுத்தாளன் வழியாக பொதுசமூகத்தில் விதையும் சொல் என்றுமே பட்டுப்போவதில்லை. ஆகவே அவர்கள்  குரல் வழியாகவும் சிந்தனைகள் பரவலாக சென்றுசேர்வதும் அவசியமானதுதான்.

 

The post எழுத்தாளர்களுக்கு மேடைப் பேச்சாற்றல் அவசியமா? first appeared on அகரமுதல்வன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 09, 2024 23:39
No comments have been added yet.


அகரமுதல்வன்'s Blog

அகரமுதல்வன்
அகரமுதல்வன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow அகரமுதல்வன்'s blog with rss.