ஈழத்து “தோழமை”

தமிழ்நாட்டின் அறிவியக்கச் சூழலில் ஈழம் பற்றிய உரையாடல் ஆதரவு – எதிர்ப்பு என்று உருவானமைக்கு நேரடியான அரசியல் காரணங்கள் பலதுள்ளன. தமிழினம் என்கிற ஒருமித்த உணர்வுவெழுச்சி ஆதரவு நிலைக்கு முழுமுதற் காரணம். ஈழத்தை ஆதரித்தாலோ, அது குறித்து நேர்மறையாக உரையாடினாலோ நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டிய காலமும் இருந்தது.

இன்று ஒட்டுமொத்த மானுட குலத்தின் அறச்சொல்லாக ஈழம் பொருண்மை பெற்றிருக்கிறது. மாபெரும் இனப்படுகொலையை எதிர்கொண்ட உலகின் தொன்மையான தமிழினம் நீதிக்காக போராடுகிறது. தன்னுடைய பேரழிவின் கதைகளைச் சொல்கிறது. எழுதித் தீராத வெந்துயர் படலங்களை பாடுகின்றது. இதுவரை போதிக்கப்பட்ட உலகின் அறங்களை கேள்வி கேட்கிறது. ஈழம் என்பது அறத்தை விளைவிக்கும் ஒரு லட்சிய சொல்லாக உருமாறியிருக்கிறது.

ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டம் சம்பந்தமான புத்தகங்களை தமிழ்நாட்டில் பதிப்பித்தது தோழமை பதிப்பகம் தான். நேரடியான அரசியல் நெருக்கடிகளை, எதிர்வினைகளை எதிர்கொண்டும் அதனை தொடர்ச்சியாக முன்னெடுத்தது. ஏனெனில் தோழமை பூபதியின் உறுதியும் ஈழ ஆதரவு நிலைப்பாடும் செம்மார்ந்த பண்புகளைக் கொண்டது. ஒருகாலத்தில் ஈழத்தமிழ் படைப்பாளிகளின் ஆக்கங்களையும், அரசியல் கட்டுரைகளையும் வெளியிடுவதில் அவருக்கிருந்த ஆர்வமும் துணிச்சலும் பிறிதொருவருக்கு இருந்ததில்லையென்றே கருதுகிறேன். ஈழம் பற்றிய பலவிதமான அனுபவ – அவதானிப்புக்கள் கொண்ட கட்டுரை நூல்கள் தோழமையின் வழியாகவே பதிப்புக்கள் கண்டன.

என்னுடைய முதல் சிறுகதை தொகுப்பான “இரண்டாம் லெப்ரினன்ட்” தோழமை பதிப்பகத்தின் மூலமே வெளியானது. தோழமை பூபதி தமிழ் பதிப்புத் துறையில் லட்சியத்தன்மை கொண்ட பதிப்பாளர்களில் ஒருவர். குறிப்பாக ஈழம் பற்றிய உரையாடல் தமிழ்நாட்டின் அறிவியக்கப்பரப்பில் தீவிரமாக உருவாகியமைக்கு தோழமை பதிப்பித்த நூல்கள் ஒரு திறவுகோல் என்றால் மிகையில்லை.  ஈழப்போராட்டம் குறித்து  மிகையாக எழுந்து வந்த பொய்ப் பிரச்சாரங்களோடு ஒரு பதிப்பகம் போரிட்டது என்றால் அதன் பெயர் தோழமை.

ஒரு ஈழத்தமிழராக, ஈழப்படைப்பாளியாக “தோழமை” பதிப்பகத்திற்கு அன்பையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

 

 

 

The post ஈழத்து “தோழமை” first appeared on அகரமுதல்வன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 24, 2023 06:33
No comments have been added yet.


அகரமுதல்வன்'s Blog

அகரமுதல்வன்
அகரமுதல்வன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow அகரமுதல்வன்'s blog with rss.