உருமாற்றம்
முன்னொரு மாலையில் ப்ரியத்துக்குரிய ஸ்நேகிதியோடு தெருவோரக் கடையில் உணவுண்டேன். அது அதிசுத்தம் என்கிற என்னுடைய விரதத்தைக் கலைக்கும் பொருட்டு ஸ்நேகிதி நடத்திய சீண்டல் தாக்குதல். பொறுத்துக்கொண்டு உண்டேன். கடைக்கருகிலேயே அள்ளி குவிக்கப்பட்டிருந்த சாக்கடை காய்ந்திருந்தது. அதனைப் பார்த்ததும் உள்ளிருந்து குடல் புரண்டு ஓங்காளிப்பு வந்தது. ஸ்நேகிதிக்கு இதெல்லாம் ஒரு பொருட்டில்லை. அந்தக் குவியலுக்கு மேலே ஒரு பழைய பேப்பரைப் போட்டு அமர்ந்திருந்தும் சாப்பிடக்கூடிய துணிச்சல் கொண்டவள். அவளிடம் என்னுடைய பரிதவிப்பை சொல்லிப் பயனில்லை. அன்றிரவு முழுதும் குமட்டல். வாந்திக்கு முன்பான குணங்குறிகள். உறங்கியதே இறையருள். அதிகாலையிலேயே வயிற்றோட்டம் கண் விழிக்கச் செய்தது. இதெல்லாம் ப்ரம்ம முகூர்த்த்தில் தான் தொடங்கவேண்டுமாவென எனக்குள்ளே அரற்றினேன்.
ஸ்நேகிதியை அழைத்து உடலுக்கு நேர்ந்த நிலையைச் சொன்னேன். சிரித்தபடி “இது உன்னுடைய நினைப்பு. நானுந்தானே உன்னோடு சாப்பிட்டேன். எனக்கு எதுவும் ஆகவில்லையே” பெருமை பொங்கச் சொன்னாள். அன்று முழுவதும் கழிப்பறைக்குள்ளேயே குடியிருக்கவேண்டியதாயிற்று. உடலில் நீர்ச்சத்தை சேர்க்கும் வண்ணம் இளநீரும், உப்புக் கரைசலும் அருந்தினேன். மாலையில் மருத்துவரிடம் காண்பித்தேன். வயிற்றுப்போக்கு நிற்க இரண்டு நாட்கள் ஆகியிருந்தன. மூன்று கிலோ எடையிழந்திருந்தேன். பின்பு ஸ்நேகிதியை சந்தித்தேன். எந்தவிதமான அதிர்ச்சியையோ, அனுதாபத்தையோ வழங்கி ஒரு வயலினை இசைக்குமளவு ஸ்நேகிதி இளகிய மனம் படைத்தவர் அல்ல. “உனக்கு இந்தக் கடையே ஒத்துவரமாட்டேங்குதே” என்று சலிப்புற்றது மட்டுமே நிகழ்ந்தது.
நகரத்திலுள்ள சில தெருவோர உணவகங்கள் மீது எனக்கிருக்கும் ஒவ்வாமை அந்தச் சூழலின் சுகாதாரமின்மையை அடிப்படையாக கொண்டது. சாப்பிட்ட பிளாஸ்டிக் தட்டுக்கள் தொடக்கத்தில் அடுக்கப்பட்டு பின்னே குவிக்கப்பட்டிருக்கும். அங்கிருக்கும் தெருவோர நாய்கள் வாடிக்கையாகவே அதனருகிலேயே படுத்திருக்கும். நாம் கண் இமைக்கும் நொடியில் தன்னுடைய நாக்கை வீசி தட்டை நக்கிவிடுவதை பல இடங்களில் கண்டிருக்கிறேன். இன்னொன்று கைகழுவ வைத்திருக்கும் தண்ணீரை அருந்தும் நாய்கள். அவற்றை என்ன செய்ய முடியும். எதுவும் செய்ய இயலாது. துரத்திவிட்டு தண்ணீரை அள்ளி அழுக்குகள் விலக கைகளை அலம்ப வேண்டியதுதான்.
சமீபத்தில் ஒரு கடையில் தோசை உண்டேன். ஊற்றப்பட்ட சாம்பாரில் காப்காவின் கரப்பான்பூச்சி. சரியான உருமாற்றம் என்றால் இதுதான். கொஞ்சம் ருசித்து உண்டிருந்தால் நன்றாக தாளித்த கத்தரிக்காய் தானல்லவா! நெற்றி நிறைய திருநீறு அள்ளிப் பூசியபடி வியாபாரத்தில் இருந்தவரிடம் உருமாற்றத்தை தூக்கி காண்பித்தேன். சனியனைச் சிவனாலும் அழிக்கமுடியாதுப்பா. நான் என்ன பண்ணமுடியும் சொல்லு. இந்த வண்டிக்கடைய வைச்சு பொழைப்பு நடத்தவா. இல்ல கரப்பான்பூச்சிய ஒழிக்கவா என்றார். அவர் சொல்லுவதில் உள்ள நடைமுறைச்சிக்கலை நானும் விளங்கிக்கொள்கிறேன். எனக்கென்று வந்து வாய்க்கும் கரப்பான்பூச்சிகள்.
பிரபல உணவகத்திலும் இதுபோன்றதொரு அனுபவம் எனக்கிருக்கிறது. ஓடோடி வந்த அந்தக் கடையின் முகாமையாளர் “நீங்க பில் பே பண்ணவேண்டாம் சார்” என்றார். “இதென்னங்க அநியாயம் கரப்பான்பூச்சிக்கு நூறு சதவீதம் தள்ளுபடியா” என்றேன். இந்தச் சுத்தமின்மை பற்றிய கவலையுள்ளவர் எவருந்தான் வீட்டைத்தவிர எங்கும் சாப்பிட இயலாது. ஆனால் என் விதியோ சினிமா. அன்றாடம் ஒரு ஹோட்டல் உணவு. செரிக்கும் வரை அல்லற்படுதல் நித்தியப்பாடு. ஆனாலும் ருசியான உணவுகளுக்காய் நெடுந்தொலைவு செல்லவும் தயாராகவே இருப்பேன்.
என்னுடைய இந்த ஒவ்வாமையால் சில நண்பர்களும் இதுபோன்ற கடைகளை தவிர்க்கலானார்கள். நண்பர் குறிஞ்சி பிரபா தெருவோரக் கடைகளின் ருசியினால் பீடிக்கப்பட்டவர். சந்துகளின் இடுக்குகளுக்குள்ளும் உணவகங்களை தெரிந்து வைத்திருப்பார். சிலநாட்களுக்கு முன்பாக இரவுணவு உண்ண நேரம் பிசகியிருந்தது. வீதியிலிருந்து கையேந்தி பவனில் உண்ணலாமே என்றேன். உங்கூட சேர்ந்து எனக்கும் உன் அதிசுத்தம் தொற்றிக்கொண்டு விட்டது என்றார். நோய் போல சுத்தமும் தொற்றுகிறது போலும்! நண்பர் உள்ளூர என்னை திட்டுவதை அறிந்தும் புன்னகைத்தேன்.
பல வருடங்களுக்குப் பிறகு தெருவோரத்திலுள்ள கடையொன்றில் சிக்கன் பக்கோடா வாங்கிச் சாப்பிட்டேன். அந்த தாச்சியில் இருந்த எண்ணெய்யை மாற்றும் காலம் வந்து, பல மாதங்கள் ஆகியிருந்தன. ஆனாலும் கடைக்காரருக்கு ஒரு பிடிவாதம். அதெப்படி என்னை நம்பி வந்ததை தூர ஊற்ற முடியுமென எண்ணியிருப்பார் போலும்… இனிமேலும் கறுக்க இயலாது என்று கொதிக்கும் எண்ணெயில் வீழ்த்தப்பட்ட சிக்கன் பக்கோடாக்கள் நிறமூட்டிகளால் சிவந்தன. சிறிய பிளாஸ்டிக் தட்டில் ஆங்கிலப் பத்திரிக்கையை கிழித்து அதன் மீது பரப்பினார்கள். மிளகு தூவி, அரிந்த வெங்காயம் தருவித்தனர். கால்களுக்கருகில் எலும்புகளை உண்ணும் நாய்களின் ரோந்து. எவர் வீசுவாரெனக் காத்திருக்கும் அவைகளின் கண்கள்.
சாப்பிட்டவர்கள் கை கழுவ வைத்திருக்கும் தண்ணீரை வழமைக்கு மாறாக ஒரு பூனை அருந்தத் துடித்துக் கொண்டிருந்தது. வலது கண்ணுக்கு கீழே இரத்தக் கண்டல் ஆகியிருந்த அந்தப் பூனையைப் பார்க்கவே பயமாகத்தானிருந்தது. சிக்கன் பக்கோடாவின் முதல் துண்டை உண்டேன். அற்புதச் சுவை! மின்ட் சிக்கன் பக்கோடா என்று பலகையில் எழுதப்பட்டதைப் பிறகுதான் பார்த்தேன். நூறு கிராமும் தீர்ந்தது. நாயொன்று துண்டுக்காய் காத்திருந்தது. அதனிடம் உனக்கு ஈவதற்கு எதுவுமில்லையே என்று கவலையோடு சொன்னேன்.
இன்றைக்கு ப்ரம்ம முகூர்த்தத்திலேயே விழிப்புத்தட்டிற்று. கண்களைத் திறவாமல் வயிற்றைத் தடவிக் கொடுத்தேன். என்னை நீ சோதிக்க கூடாது என்று வேறு எப்படி பிரார்த்திப்பது? கண்களைத் திறந்தால் விபரீதம் எதுவும் நிகழத்தொடங்குமென எண்ணினேன். ஏதோ சிறுகுமட்டல் உணர்வு. மெல்ல எழுந்து கழிப்பறைக்குள் சென்றேன்.
ஸ்நேகிதி அன்று சொன்ன வசனம் அழியாததன்மை கொண்டது போலும்!
“உனக்கு இந்தக் கடையே ஒத்துவரமாட்டேங்குதே”!
இளநீர், உப்புக் கரைசைல் என்று நீர்ச்சத்து வழங்கியபடி இனிமேலும் சாப்பிடக்கூடாது என்று வயிற்றைப் பிடித்து சத்தியம் செய்வது தவிர வேறு வழி.
The post உருமாற்றம் first appeared on அகரமுதல்வன்.
அகரமுதல்வன்'s Blog
- அகரமுதல்வன்'s profile
- 17 followers

