Jeyamohan's Blog, page 902
October 11, 2021
அஞ்சலி : நெடுமுடி வேணு
October 10, 2021
வாசகனின் அலைக்கழிப்புகள்
வணக்கம்
இப்பொழுது தமிழுக்கு தமிழர்களுக்கு யார் எதிரி என ஒரு பெரிய வலைப்போர் தொடங்கிவிட்டது. இருவரும் ஒருவரை யொருவர் மிக மூர்க்கமாக தாக்கிகொள்கிறார்கள். காரணம் இருதரப்பிலும் கொஞ்சமேனும் கற்றவர்கள் அல்லது தமிழகத்தை கடந்து பயணம் செய்தவர்கள் இல்லவே இல்லை. ஆதலால் இதை கருத்து மோதல் என்பதா? இல்லை சண்டை என்பதா என பார்வையாளர்களுக்கு மிக குழப்பமாக இருக்க்கிறது.
எனக்கும் முகநூலில் கணக்கு இல்லை முகநூலில் என்ன பேசிகொள்கிறார்கள் என்பதை உங்கள் தளத்திலிருந்து அவ்வப்போது தெரிந்து கொள்வேன் இவர்களின் இந்த கூச்சளே பெரிய த்த்துவமாகவும் கருத்தாகவும் தமிழனின் முழுமுதல் பிரச்சினை அறிவு ஆழம் என இவர்கள் கட்டமைத்துவிட்டார்கள் பல பேர்கள் (முகங்கள்) எல்லோருக்கும் பின்னாடியும் புத்தக அலமாரிகள் அலமாரிகளில் புத்தகங்கள் பல மாதிரியான பெயர்கள் அரசியல் அறிஞர் தமிழறிஞர் தமிழ்ஆய்வாளர்
இன்னொரு பக்கம் பெரியாரின் வழித்தோன்றல்கள் இவர்களில் ஆண்களும் பெண்களும் கூச்சலிடுவதை கேட்கும் போது இவரகளுக்கு உண்மையிலேயே பொறுப்பான ஆழமான மனிதம் கண்டுஉணரக்கூடிய எந்த மேன்மையான விஷயங்களையும் கற்கும் நேரமோ காலமோ இவர்கள் வாழ்வில் நேரவே வாய்ப்பிருக்காது
சரி உங்களை வாசிப்பதற்குதான் இவர்களுக்கு பல பக்கங்களிலிருந்து பல தடைகள் தமிழின் முன்னோடிகளை கூட வா இவர்களுக்கு வாசிக்க தடை இந்த வலையுலக காலத்தில் அசோகமித்திரன் இவைகளை யெல்லாம் கேட்பவராக இருந்தால் அவரது கதி என்னவாயிருக்கும் தமிழ்வலைகளில் (ஸ்ருதிடீவி) இலக்கியம் என்ன பக்கம் சென்றால் 99% சதவிகம் இந்த திராவிட பெரியாரிய தமிழ்தேசிய ம் தான் 1% சதவிகத்த்திற்கும் குறைவாக இலக்கியம் உள்ளது
நான் ஒனபாதம் வகுப்பு படிக்கும் போது பள்ளிக்கு எதிரில் இருந்த மாவட்ட நூலகத்திற்கு மதிய உணவு வேளையில் செல்ல ஆரம்பித்தேன் எனக்கு நேரடியாகவே இலக்கியம் அறிமுகமாயிற்று முதலில் நான் வாசித்ததே பஷிரின் படைப்புகள் தான் (அதை மொழிபெயர்தரதவர் பெயர் சுரா என்றிருக்கும் ஆனால் அது வேற சுரா) பிறகு தமிழ், கேரளா, வங்காளம், இந்தி உலகம் என என் எல்லைகள் விரிந்து விரிந்து சென்றன
நான் அப்போது ஒரு எழுத்தாளரை வாசித்தால் அவரின் அனைத்து புத்தகங்களையும் வாசித்துவிட்டே அடுத்த எழுத்தாளருக்கு தாவுவேன் அப்படி ந பிச்சமூர்த்தியையும் ஜெயகாந்தனையும் எம் வி வி யை வாசித்த கால்கங்கள் என் வாழ்வின் பொருட்படுத்தக்க பகுதிகள் அந்த பாதையில் எனக்கு கிடைத்த/ நான் கண்ட வெளிச்சமாக உங்களை நான் நிறுத்திகொள்கிறேன் கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக உங்களில் மூழ்கி திளைப்பது என் அன்றாட செயல்
அ.முத்துலிங்கம் அவர்களின் மகாராஜாவின் ரயில் வண்டியை நான் பத்தாம் வகுப்பு தேர்வு முடிந்த உடனே வாசிப்பதற்காக நூலகத்திலிருந்து எடுத்து வைத்திருந்தேன் பதினாறு வயதில் எனக்கு அது போதையாகப்பட்டது. எப்படி என்றால் நான் நிகழ்காலத்தில் இருப்பதில்லை. ஏன் நான் தமிழ்நாட்டிலே இருப்பதில்லை என்னுடன் இருக்கும் எவரும் என் உலகத்தில் இல்லை அது ஒரு பேரின்ப நிலை நான் காண்பது ஒவ்வொன்றும் எனக்கு என் பின்னாலிருந்து அந்த எழுத்தாளர்கள் காண்பதாக தோன்றும்
நான் இன்னும் நிறையய எழுதகூடும். எதற்காகவென்றால் இயல்பாகவே உங்களை வாசிக்க எனக்கு எனக்கு அமைந்த பாதையில் எந்த தடையும் ஏற்பட்டதில்லை. அப்படியிருக்க என்னைக் காண வருபவர்கள் அல்லது நான் கையிலோ பையிலோ வைத்திருக்கும் உங்களின் புத்தகத்தை பார்த்தவுடன் வேறு ஒரு ஆளாக மாறிவிடுகிறார்கள். எனக்கு என்னைப்போல ஒரு வாசகனின் நட்பு அமையாதது ஊழ் போல. ஏனென்றால் தமிழனாகப்பட்டவன் இந்த வலைகூச்சலில் ஒருவனாக இருப்பது விதி போலும் .
இந்த கூச்சல்களில் மாட்டிக்கொண்ட அல்லது இந்த கூச்சல் சிந்தனையாளர்களை கற்க தொடங்கும் ஒரு புதிய வாசகன் அவர்களிலிருந்து மீள வாய்ப்புகளே இருக்காது போல நான் பார்த்து பேசிய ஒரு எழுத்தாளர் ராஜேந்திர சோழன் தான் அதுவும் அவர் அறையில் என் நண்பன் சில நாட்கள் தங்கியிருந்தனால் வாய்த்தது அவர் என்பின்புலங்களையெல்லாம் கேட்டுவிட்டு என்னை நீ எழுத வேண்டும் என ஊக்குவித்தார் நான் அதற்கு என் வறுமையை தடையாக முன்வைத்தபோது அவர் நாஞ்சில் நாடனை முன்வைத்து பேசினார்.
பிறகு பல சந்தர்ப்பங்களில் அவருடன் இலக்கிய உரையாடல் நிகழ்ந்திருக்கிறது நான் அப்போது உங்களின் ஒரே ஒரு சிறுகதையை மட்டும் வாசித்திருந்தேன் அவருக்கு கொஞ்சம் ஆச்சரியமாகவே பட்டது நான் உங்களை குறைவாக வாசித்திருப்பது பின்தொடரும் நிழலின் குரலை வாசிக்க கட்டாயப்படுத்தினார். நான் வாசித்த ஒரு சிறுகதைபற்றி கூற அந்த புத்தகத்தை கேட்டு வாங்கி கொண்டார்.
உங்களிடம் சதா உரையாடுவது என் தினவழக்கங்களில் ஒன்று தினமும் இரண்டுமணி நேரம் பணிக்கு காரில் பயணக்கிறேன் காரில் ஏறி சீட் பெல்ட் போட்டவுனேயே நான் கார் ஓட்டுகிறேன் என்பதையே மறந்து விடுவேன் பிறகு உங்களுடன் பேசுவது தான் (கார் சீட்டில் உட்காருவது தாயின் கர்ப்பப்பையில் அமருவது போன்றது்தானே ( அனல் காற்று ) ) உங்களை காண மனைவி குழந்தைகளுடன் உங்கள் வாசலில் நின்றிருக்கும் தினமும் வரும் அந்த இனிப்பான நினைப்பு
அன்புடன்
ரகுபதி
கத்தார்
***
அன்புள்ள ரகுபதி,
எனக்கு வரும் வாசகர் கடிதங்களில் பொதுவாகவே பேசப்படும் இரண்டு விஷயங்கள்தான் நீங்கள் குறிப்பிட்டவை.
தமிழில் என்றல்ல எந்த சூழலிலும் பொதுவான அறிவுக்களம் என்பது அரசியதிகாரத்தைப் பிடிக்க நினைக்கும் தரப்புகள் நடுவே நிகழும் ‘பல்நக’ச் சண்டையாகவே இருக்கும். அது மிகையுணர்ச்சிகள், ஒற்றைப்படைக் கருத்துக்கள், சலிக்காத பிரச்சாரக் கூச்சல்கள் ஆகியவற்றால் ஆனதாகவே இருக்கும். அதன் கீழ்நிலை என்பது வசைகள், அவதூறுகள் ஆகியவற்றாலானது.
ஆனால் வளரும் பண்பாடுகளில் அறிவுச்சூழலின் வளர்ச்சிமுனை இதிலிருந்து விலகி மேலெழுந்ததாக இருக்கும். புதியவினாக்களை நாடிச் செல்லும். தத்துவம், இலக்கியம், ஆய்வுகள் ஆகியவற்றில் அங்கே புதியன நிகழும். அவ்வாறு புதியன நிகழவேண்டுமென்றால் அங்கே அறிவுலக நெறிகள் கடைப்பிடிக்கப்படவேண்டும். ஆக்கபூர்வமான உரையாடல் நிகழவேண்டும்
அந்த வளர்ச்சிமுனை ஒரு மரத்தின் வளரும்தளிர் போன்றது. அது தொடர்ந்து வளரும் துடிப்புடன் இருக்கும். அந்த தளம் மையப் பெரும்போக்காக ஆகவே முடியாது. ஏனென்றால் அது அனைவருக்கும் உரிய களம் அல்ல. அது தன்னை தகுதிப்படுத்திக் கொள்பவர்களுக்கு மட்டுமே உரியது. அவர்களின் இலக்கு அதிகாரத்தை வெல்வது அல்ல. உண்மையை அறிவதன் களிப்பே அவர்களை இயக்குகிறது. அவர்கள் நாடும் வெற்றி அது மட்டுமே.
அறிவுத்தளச் செயல்பாடு கொண்டவர்களில் பலர் இந்த உலகில் எதையுமே அடைவதில்லை என்பதைக் காணலாம். பணம் ,புகழ், அதிகாரம் எதுவும் அவர்களுக்குப் பொருட்டல்ல. பலர் வாழ்நாளில் வெளியே தெரியாமலேயே மறைகிறார்கள். அறிவியல் போன்ற துறைகளில் மாபெரும் உழைப்பு செலுத்தப்பட்டு செய்யப்படும் ஆய்வுகளில் ஆயிரத்தில் ஒன்றே எதையாவது கண்டடைகிறது. மற்ற ஆய்வாளர்களுக்கு ஆய்வுசெய்வதிலுள்ள இன்பமே ஒரே லாபம்.
அதிகாரத்துக்காகக் களமாடுபவர்களால் அறிவியக்கவாதிகளைப் புரிந்துகொள்ள முடியாது. அறிவியக்கவாதிகள் எதற்கென்று தெரியாமல் செயல்படும் மூடர்களாகவே தோன்றுவார்கள். அரசியலாளர்கள் அறிவியக்கத்தை தங்கள் அரசியலதிகார நோக்கத்துக்காகப் பயன்படுத்திக் கொள்ளவே பார்ப்பார்கள். தங்கள் தரப்பில் சேர்க்க முயல்வார்கள். அல்லது எதிர்த்தரப்பில் சேர்த்து அழிக்க முயல்வார்கள். பொதுவாக அறிவியக்கவாதிகளை அரசியலாளர்கள் பயனற்ற குறுங்குழுவாதிகள் என்பார்கள். தன்னலமிகள் என்றோ கிறுக்கர்கள் என்றோ ஒழுக்கமற்றவர்கள் என்றோ வசைபாடிக்கொண்டே இருப்பார்கள்.
பாமரர்களுக்கும் அறிவியக்கவாதிகளின் பங்களிப்பென்ன என்று புரியாது. அவர்களில் எளிமையானவர்கள் சிலர் அறிவியக்கச் செயல்பாடுகளின் முக்கியத்துவத்தை மரபிலிருந்து சற்று அறிந்திருப்பார்கள். ஒரு பொதுவான மதிப்பை கொண்டிருப்பார்கள். ஆனால் கொஞ்சம் கல்விகற்று அதன் விளைவாக தன்னை அறிவாளி என நினைக்கும் நடுத்தரவர்க்கத்துப் பாமரன் அறிவியக்கவாதியைக் கண்டு மிரள்வான். அவனுடைய இருப்பே இவனுடைய அற்பவாழ்க்கையை சுட்டிக்காட்டுவதாக உணர்வான். ஆகவே எரிச்சல் கொள்வான். தனக்கு புரியாத எல்லாமே பசப்பு என்று நினைப்பவன் அவன். உலகியலுக்கு உதவாத எல்லாமே வீண் என கருதுபவன். அவனிடமிருந்தும் அறிவியக்கவாதி அவமதிப்பையே எதிர்கொள்ள நேரிடும்.
அறிவியக்கவாதி என்றால் எழுதுபவனோ சிந்திப்பவனோ மட்டுமல்ல. வாசிப்பவனும் கற்பவனும்தான்.நம் சூழலில் அறிவியக்கம் என்பது மிகமிகமிகச் சிறிய ஒருவட்டம். அதிகம் போனால் சில ஆயிரம்பேர். வெளியே கோடிக்கணக்கானவர்கள் எளிய பாமரர்கள். சிலர் பிழைப்புக்கல்வி கற்ற பாமரர்கள். பெரிய எண்ணிக்கையில் பேசிக்கொண்டிருப்பவர்கள் அதிகார அரசியலில் ஈடுபட்டிருக்கும் தரப்புகள். அவர்கள் அந்தந்த காலகட்டத்திற்கு உரிய கருத்துநிலைகளை ஒட்டிப் பேசுவார்கள். திராவிட அரசியல், இடதுசாரி அரசியல், இந்துத்துவ அரசியல் ஆகியவை இங்கே ஓங்கி ஒலிப்பவை. அறிவியக்கம் இவற்றுக்கு மிக அப்பால், வேறொரு தளத்தில் செயல்படுகிறது.
நடைமுறையில் இங்கே வாசிக்கவும், சிந்திக்கவும் தொடங்கும் எவரும் அரசியலியக்கம் சார்ந்த அதிகாரவேட்டையாளர்களின் உச்சகட்டப் பிரச்சாரக் கூச்சல்களையே முதலில் செவிகொள்கிறார்கள். அங்கே சென்று தாங்களும் இணைந்துகொள்கிறார்கள். தாங்களும் கொஞ்சம் கூச்சல்போடுகிறார்கள். கொஞ்சம் பாவனைகள் செய்கிறார்கள்.
ஆனால் நுண்ணுணர்வும், சிந்தனையும் கொண்ட ஒருவன் விரைவிலேயே அவற்றின் உள்ளீடற்ற தன்மையை உணர்ந்துகொள்வான். அவனுடைய அடிப்படையான வினாக்களுக்கு அங்கே இடமில்லை என்று அறிவான், வாழ்க்கை சார்ந்து அவனுடைய நுண்ணுணர்வு கண்டடையும் மெய்மைகளை அந்த அரசியல்களத்தின் மூர்க்கமான ஒற்றைப்படைச் சொற்களால் அடையவே முடியாது என அறிவான். அவனே இலக்கியத்துக்குள் வருகிறான். அவனை மட்டுமே நாம் கருத்தில்கொள்ளவேண்டும். அறிவுத்தகுதியும் நுண்ணுணர்வும் கொண்ட ஒருவர் அங்கே நீடிக்க முடியாது என்றே நான் இதுவரை உணர்ந்திருக்கிறேன்.
இலக்கியம் ஓர் அறிவுத்துறை, ஒரு கலை. இதில் அனைத்துக்கும் இடமுண்டு. ஆனால் இதன் நோக்கம் தன்னை மேலும் மேலும் கூர்மைப்படுத்திக் கொண்டு வாழ்க்கையை, உள்ளத்தை, வரலாற்றை, சமூக இயக்கத்தை, ஒட்டுமொத்தப் பிரபஞ்சத்தை புரிந்துகொள்ளுவதற்கான முயற்சி மட்டுமே. இது எந்த நடைமுறை அதிகாரத்தையும் கைப்பற்றும் எண்ணம் கொண்டது அல்ல. என்றும் அது அப்படித்தான். ஆகவேதான் அதிகாரக்களங்கள் மாறிமாறி அமைந்து, ஒட்டுமொத்தமாகவே உலகம் மாறிவிட்டபின்னரும் இலக்கியம் செல்வாக்குடன் நீடிக்கிறது.
அந்த களம் என்றுமிருக்கும். அதில் செயல்படுபவர்களுக்கு வெளியே உள்ள கூச்சல்கள் ஆய்வுப்பொருட்கள் என்ற அளவில் மட்டுமே கவனத்திற்குரியவை. அக்கூச்சல்கள் எழும் களத்துக்கும் இலக்கியத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
ஜெ
கண்ணும் காண்பதுமாகி… கடிதங்கள்
மீண்டும் ஒரு உணர்வெழுச்சியின் தருணமாக அமைந்தது வெண்முரசு இசைக் கொண்டாட்டம். வெண்முரசிற்கென்று ஒரு இசை என்பது உங்களின் வெண்முரசின் எல்லா வாசகர்களுக்கும் மனதுக்கு மிக நெருக்கமான அனுபவம். நம் எல்லோருடனும் வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து பயணிக்கும் பயணிக்கப் போகும் ஒரு பெரும் படைப்பு வெண்முரசு. அந்த காரணத்தால் அதனுடன் மறக்க முடியாத அனுபவங்களை இணைத்துக் கொண்டே இருப்பது படைப்பை இன்னும் நெருக்கமாக்குகிறது.
இந்த இசை அனுபவத்தையும் அதனுடன் இணைத்த நம் விஷ்ணுபுர வாசகர் வட்ட நண்பர்கள்(பெயர்கள் சொல்லப் போனால் யாரையாவது தவற விட்டுவிடுவோமோ என்ற பயம் இருக்கிறது. அதனால் ஆஸ்டின் சௌந்தர் முதல் ராஜகோபாலன் வரை, இசை மற்றும் தொழில்நுட்பத்தில் ராஜன் சோம சுந்தரம் முதல் ஆனந்த குமார் வரை என்று சுருக்கி சொல்கிறேன்) மற்றும் கலந்து கொண்டு சிறப்பித்த எழுத்து மற்றும் திரைப்பட இயக்கப் பேராளுமைகளுக்கு மனமார்ந்த நன்றி.
இசைத் தொகுப்பில் பாடிய கமல்ஹாசன், ஶ்ரீராம் பார்த்தசாரதி, சைந்தவி, ராஜன் சோமசுந்தரம் போன்றவர்களின் குரல்கள் சரியாகப் பொருந்தி நீலத்தின் வரிகளுடன் அதன் உணர்ச்சிப் பெருக்கையும் அதிகப் படுத்துவது போல இருந்தது. பின்னணி இசையும் அருமையாக இருந்தது. மொத்தமாக காட்சித் தொகுப்பில் நீங்கள் வெறும் இரண்டு இடங்களில் தான் வருவீர்கள். அதுவும் தூரக் காட்சிகளில். முதல் காட்சியில் நீங்கள் கடற்கரையில் நடந்து வரும் போது ஒரு மெய் சிலிர்பு ஏற்பட்டது.
இரண்டாவது காட்சியில் நீங்கள் மேலும் சிறு துளியாக மாறிக்கொண்டே இருப்பீர்கள். இசை அத்துடன் முடிந்து விடும். அதுவே குறியீட்டுத் தன்மை கொண்டதாக எனக்குத் தோன்றியது. உங்கள் உரையில் இப்பெரும் படைப்பின் படைப்பாளி என்ற உரிமையிலிருந்தும் அதனுடனான உறவிலிருந்தும் வெளி வருவதைப் பற்றி பேசியிருந்நீர்கள். வாழ்நாள் முழுக்க தவம் செய்து படைத்த படைப்பின் படைப்பாளியே இப்பிரபஞ்சத்தின் ஒரு சிறு துளியாக மாற முற்படும் போது நாமெல்லாம் எம்மாத்திரம் என்று யோசிக்க வைத்து கொஞ்சம் கூசவும் வைத்தது.
நீங்கள் குறிப்பிட்டது போல் அஜ்மீர் தர்காவில் சென்று தொழுகை முடித்து திரும்பி வரும்போது இந்த படைப்பின் சிறு துளியும் உங்களில் மிச்சமின்றி திரும்பி வரக் கூடும். அது தாய் பறவை பல நாள் காத்திருந்து முட்டையிட்டு அடைகாத்து வளர்த்த குஞ்சுகள் வளர்ந்து பறக்க ஆரம்பித்தவுடன் அதை விட்டு இயல்பாகவும் ஒரேயடியாகவும் விட்டு விலகுவது போல என்று நினைக்கிறேன். அது தான் உங்களுக்கு விடுதலையை அளிக்கும் என்றால் அப்படியே நடக்கப் பிரார்த்தனைகள். ஆனால் வெண்முரசின் வாசகர்களுக்கு அப்படியல்ல. அது அவர்களுடன் நெடுந்தூரம் சென்று கொண்டே இருக்க வல்லது என்பதையும் அது வாசகர்களின் ஆளுமையையும் சிந்தனையையும் ஒவ்வொரு நாளும் மேம்படுத்தி கூர்தீட்டி வாழ்க்கையின் அர்த்தத்தை மேம்படுத்திக் கொண்டே இருக்கும் என்பதையும் தினந்தோறும் உணர முடிகிறது. வெண்முரசு அதன் வாசகர்களில் என்றும் வளர்ந்து கொண்டே இருக்கும்.
மிக்க அன்புடன்,
ஜெயராம்
அன்பு ஆசானுக்கு
கொண்டாட்டத்தில் கலந்து கொண்டேன்.வார்த்தைகள் அற்ற தருணம்.இசை கேட்டேன்.கண்ணில் துளிர்த்த துளிகள் உங்கள் காணிக்கை.
என் சமர்ப்பணங்கள்.
உங்கள்
அரவிந்தன்
இராஜை
அன்புள்ள ஜெ
வெண்முரசு இசைக்கொண்டாட்டம் பார்த்தேன். கண்ணானாய் காண்பதுமானாய் என ஆரம்பிக்கும் வரிகள் என் நெஞ்சில் இத்தனை ஆண்டுகளாக எந்த மந்திரத்தையும் விட நிலைபெற்றவை. கண்ணும் கண்ணால் காணப்படுவதுமாக நின்றிருப்பவன். மூலக்கருத்தாகவும், அதன் விரிவான கடுவெளி [ஸ்பேஸ்] ஆகவும் அமைந்த நிலையிலேயே அதைக் கடந்தும் அமைந்தவன். இருந்தாலும் காலம் என ஆகி இங்கே சூழ்ந்தவன். அப்பேற்பட்டவன் சிறுதண்டையிட்ட கால்களுடன் வந்து மடியில் அமரும் அனுபவமும் ஆகிறான். எல்லாம் கடந்த எண்ணற்கரிய விரிவில் இருந்து கைவிரல் முனையில் நின்றிருக்கும் நீலத்துளி போல அகப்படுபவனாக ஆகும் அவன் லீலை.
நவீன காலகட்டத்தில் இப்படி ஒரு பக்திப்பித்து நவீனமொழியில் வெளிப்படமுடியுமென்பதே ஆச்சரியம். அதை மிகமிக அற்புதமாக இசையமைத்திருக்கிறார் ராஜன் சோமசுந்தரம். கமல்ஹாசனின் கம்பீரக்குரல், ஸ்ரீராம் பார்த்தசாரதியின் குழையும் குரல், சைந்தவியின் தேன்போன்ற குரல் வயலின் குழல் சித்தார் எல்லாம் இணைந்து ஒரு பெரிய மயக்கநிலையினை உருவாக்கின. என்ன சொல்ல. வணங்குகிறேன்
சுவாமி
அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி நிகழ்வு – குக்கூ காட்டுப்பள்ளி
“நியதி” நிகழ்வுக்கு சென்று திரும்பியதில் இருந்து “குக்கூ” உடனான எனது உறவு வளர்ந்து, நீங்க முடியாத பிணைப்பாக மாறிவிட்டது. அடுத்த சில தினங்களில் நான், ஓவியர் ஜெயராம், ஆனந்த், சுப்ரமணி ஆகியோர் குக்கூ சென்று வந்தோம். மீண்டும் செல்ல வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்த வேளையில், அக்டோபர் 2 – காந்தி ஜெயந்தி நிகழ்வு அறிவிக்கப்பட்டது. “துவம்” என்ற பெயரில் பெண்களுக்கான பருத்தி உள்ளாடைகள் தயாரித்து வரும் பொன்மணி அக்கா, கழிவுத்துணிகளில் இருந்து கைப்பைகள் தயாரிப்பை தொடங்கவிருக்கிறார். அதேபோல், வாணி அக்கா பனை ஓலைகளில் இருந்து குழந்தைகளுக்கான பொம்மைகள் தயாரிக்கும் பணியை மேற்கொள்ளவுள்ளார். இவ்விரு செயல்களையும் கல்வியாளர் முத்துராமன் அவர்கள் தொடங்கி வைக்கும் நிகழ்வுக்கான கூடுகையாக குக்கூ நிலத்தில் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது.
குக்கூ காட்டு பள்ளியியை சூழ்ந்திருந்த பசுமை மழை நீரால் கழுவப்பட்டு அதன்மேல் முகில் விலகி படர்ந்த மென் ஒளியின் தொடுகையால் மொத்த வெளியே ஸ்படிகம் போல காட்சியளித்து கொண்டிருந்தது. நிகழ்வுக்கு பல்வேறு இடங்களிலிருந்து நண்பர்கள் வந்திருந்தனர். நிகழ்வு நடக்கவிருந்த பிரார்த்தனை கூடம் வட்ட வடிவான வெளிச்சுற்று முற்றத்துடன் கூடிய முகலாய பானியிலான கும்மட்ட உள் அரங்கை உடையது. செங்கல்களால் ஆன மேற்கூரையின் மையத்தில் ஒளி ஊடுருவக்கூடிய அரைவட்ட கும்மட்ட வடிவான கண்ணாடி பதிக்கப்பட்டு அதன் வழியே வந்திறங்கிய சூரிய ஒளி தரையில் படும் இடத்தில், பனை ஓலையால் செய்யப்பட்ட ஓலைச்சிலுவை, குருவி போன்ற பொம்மைகள் மற்றும் வண்ண வண்ண துணிப்பைகள் படைக்கப்பட்டிருந்தன.

கூடத்தின் வாயிற்படியில் “சுதந்திரத்தின் நிறம்” புத்தகம் அமர்ந்திருந்தது. முகப்பில் மரத்தொட்டில் ஒன்று கட்டப்பட்டு அதனடியில் சுவரோரமாக, கங்கைக்காக நோன்பிருந்து உயிர் நீத்த ஸ்வாமி நிகமானந்தா அவர்களின் படமும், அதன் அருகே அனுப்பம் மிஸ்ராவின் படம் வரையப்பட்டிருந்த வெள்ளை பலகையும் வைக்கப்பட்டிருந்தன. அனைவரும் பிராத்தனை கூடத்திற்கு உள்ளே வந்தமர்ந்தோம். நிசப்தத்தின் இறுக்கம் குடியேற, தூபத்தின் புகை மணம் கமழ, இலை நழுவ விடும் நீர்த்துளிகளின் ஒலி கேட்கும் அமைதியை ஆழத்திலிருந்து எழுந்த சிவராஜ் அண்ணாவின் குரல் அனைத்தது.
ஃபேஷன் டிசைனிங் படித்த பொன்மணி அக்கா, தான் பார்த்து வந்த வேலையை உதறிவிட்டு, புளியனூரில் உள்ள விதவை பெண்களுக்கு தையல் கற்றுக்கொடுக்க தொடங்கியது முதல், தற்போது துணிப்பைகள் செய்யும் நிலையை வந்தடைந்தது வரையிலான அவரது பயணத்தை சிவராஜ் அண்ணா சுருக்கமாக கூறினார்.
பின்பு, “இந்தியாவில் பொம்மைகள் என்பவை நம்மை சுற்றியுள்ள இயற்கையில் இருந்து கிடைக்கும் பொருட்களை வைத்து படைப்பூக்கத்துடன் செய்து, குழந்தைகளுக்கு அளிக்கப்படுபவையாகவே இருந்து வந்துள்ளன. கிராமத்தில் காலையில் வெளிக்கி செல்லும் ஒருவர், கீழே கிடக்கும் பனை ஓலையில் இருந்து ஒரு பொம்மையை செய்து, தனது குழந்தைக்கு அளித்து விடுவார். ஆனால், இன்று பெரும் தொழிற்சாலைகளில் ரசாயன சேர்க்கை மூலம் செய்யப்படும் ப்ளாஸ்டிக் பொம்மைகள் பெற்றோர்களால், அவர்களது குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்கப்படுகின்றன. அந்த தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்கள் ரசாயனங்களை கையாளுவதால் ஏற்படும் நோய்கள், மறு சுழற்சியின்மையால் ஏற்படும் சூழலியல் பாதிப்புகள், தனிநபர் படைப்பூக்கமின்மை, இயற்கையில் இருந்து விலகுதல் போன்றவை குறித்தும் விளக்கினார். இறுதியாக, கண்ணுக்கு தெரியாமல் பாரத நிலத்தின் காற்றில் கலந்திருக்கும் காந்தியின் ஆன்ம சக்தியை பிராத்தித்து இவ்விரு செயல்களையும் துவங்குவோம் என்று கூறி, சிவராஜ் அண்ணா தனது உரையை முடித்தார்.
பின்னர் முத்துராமன் அவர்கள் தனது அனுபவங்களை பகிர ஆரம்பித்தார். காந்தியவாதியான அவரது தந்தை அவரில் ஏற்படுத்திய பாதிப்புகள் குறித்தும், மதிப்பெண்கள் ஒரு மாணவனை தீர்மானிக்காது, செய்யும் செயல் எதுவாக இருந்தாலும், அதை முழு ஈடுபாட்டுடன் செய்வதே ஒருவனின் வெற்றியை தீர்மானிக்கும் என்பதை அவரது தந்தை தனது மனதில் ஆழ வேறூன்ற வைத்தார் என்று கூறினார்.
மேலும், ஈழ மாணவர்கள் இந்தியாவில் கல்வி பயில்வதில் உள்ள சவால்கள், கல்வி நிலையங்களில் அவர்கள் சந்திக்கும் அவமானங்கள், அவற்றை கடந்து பயின்றாலும் உரிய வேலை கிடைப்பதில் உள்ள சிக்கல்கள், பொருளியலில் தங்கப்பதக்கம் வென்ற ஈழ மாணவர் ஒருவர் வெறும் 7,000 ரூபாய் சம்பளத்திற்கு பெரிய கல்வி நிறுவனமொன்றில் பணிக்கு அமர்த்தப்பட்ட அவலம் உள்ளிட்டவற்றை கூறினார். அதையெல்லாம் கேட்டபோது, நாமெல்லாம் எத்தனை சொகுசாக வாழ்ந்து கொண்டு இன்னும் ” அது இல்லை, இது இல்லை” என்று குறைப்பட்டுக்கொண்டிருப்பது பெரும் அபத்தமாக தோன்றியது.
ஈழ மாணவர்களுக்காக அவர் ஆற்றிக் கொண்டிருக்கும் களப்பணிகளையும், அதற்கு உதவியாயிருந்த அவரது நண்பர் ஒருவரின் மரணம் ஏற்படுத்திய பாதிப்புகளையும், பிரயாகை புத்தகத்துடன் அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டதையும் அவர் கூறியபோது, என்னில் ஒரு இறுக்கம் குடிகொண்டது. கல்வி பணிகளுக்காக தாங்களும், தங்களது வாசகர்களும் செய்த பங்களிப்பு குறித்தும் அவர் கூறினார்.
திருக்கடையூரை சேர்ந்த வினோதினி என்பவர் ஆசிட் வீச்சால் தாக்கப்பட்டு முகமும், உருவமும் சிதைந்து உயிருக்காக போராடிக்கொண்டிருக்கிறார் என்ற செய்தியை அறிந்து, அங்கு சென்ற முத்துராமன் அவர்கள், அப்பெண் உயிரிழக்கும் கடைசி நொடி வரை அவருக்கு ஆதரவாக அங்கேயே இருந்துள்ளார். அந்த அனுபவத்தையும், அந்த பெண் அவரை “அப்பா” என்று கூப்பிடலாமா என்று ஒருமுறை கேட்டபோது அவருக்கு ஏற்பட்ட உணர்வுகளையும் வார்த்தைகளால் விவரிக்க முற்பட்டு தோற்றுப்போனார்.
ஊர்க்கிணறு புனரமைப்பு பணியை செய்து வரும் மஞ்சரியை காணும்போது, தனக்கு அதேப்போன்ற உணர்வு ஏற்படுவதாக கூறிய அவர், மஞ்சரியிடம் “நான் உன்னை எனது மகளாக எண்ணுகிறேன். ஆகவே, உனது தந்தையின் ஸ்தானத்தில் என்னை ஏற்றுக் கொள்வாயா?” என்று கேட்ட தருணம் என்னை நெகிழச் செய்தது.
இறுதியாக, “காந்தியம் என்பது காணாமல் போய்விட்டதாக எண்ணிக் கொள்கிறார்கள். ஆனால், அது நம் ஒவ்வொருவரையும் தாங்கும் கைதடியை போல கண்ணுக்கு தெரிந்தோ, தெரியாமலோ அனைவரிடத்திலும் கைமாற்றப்பட்டுக்கொண்டிருக்கிறது. அந்த கைத்தடியை ஊன்றி நடந்து சென்று அடுத்த தலைமுறைக்கு அதனை கையளித்துவிட்டுச்செல்லும் நிலமாகவே, இந்த குக்கூ காட்டுப்பள்ளியை பார்க்கிறேன்” எனக்கூறி தனது உரையை நிறைவு செய்தார்.
அதன்பின், பரிசுகள், ஓடைக்குளியல், கூட்டுச்சமையல், கூட்டுச் சாப்பாடு, சிரிப்பு, பாட்டு என கொண்டாட்டமாக மாலை பொழுது நிறைவடைந்தது. இரவு அனைவரும் பிரார்த்தனை கூடத்தின் சுற்று முற்றத்திலும், உள்ளும் பாய் விரித்து படுத்திருந்த்தோம். அடர் இருள் சூழ்ந்திருக்க தவளைகளின் ‘குர்குர்’ சத்தங்கள் இருளை கீறிச்செல்ல, கூடத்தின் மேற்கூரை மையத்தில் இருந்த அரைவட்ட கும்மட்ட கண்ணாடியை, துளி செஞ்சுடர் ஏந்திய ஒரு மின்மினிப்பூச்சி உள்ளிருந்து முட்டி முட்டி திரும்பியது. அது அந்த கண்ணாடி அடைப்பை உடைத்து வெளியேறி, தனது துளி ஒளியுடன் இப்பிரபஞ்ச இருளுக்குள் நீந்தி ஆகாயம் செல்ல எத்தனித்ததோ!
என்னைச் சுற்றிலும் உறங்கிக்கொண்டிருந்தவர்களை பார்த்தேன். இருளை கிழித்த ஒளியுடன் அனைவரும் மின்னிக் கொண்டிருந்தனர். இவ்வொளித்துளிகளை எல்லாம் ஒன்றினைத்து ஆகாசம் ஏந்திச் செல்ல எத்தனிக்கும் அந்த மின்மினி பூச்சியென குக்கூ காட்டு பள்ளியை உணர்ந்தேன்.
அன்றிரவு கனவில் காந்தி கைத்தடியுடன் வர, அவர் பின்னால் நாங்கள் அனைவரும் ஓடிக்கொண்டிருந்தோம்!
பணிவன்புடன்,
வேலாயுதம் பெரியசாமி
இந்துமதத்தைக் காப்பது, கடிதங்கள்
இந்துமதத்தைக் காப்பது – கடிதங்கள்
அன்புள்ள ஜெ
இந்துமதத்தைக் காப்பது பற்றிய ஒரு கட்டுரையை வாசித்தேன். இந்துமதத்தை காப்பதற்குரிய முக்கியமான வழி இந்துமதத்தை அறிந்துகொள்வது, இந்துமதத்தை கடைப்பிடிப்பது, இந்து மதத்தை காலத்திற்கேற்ப புதுப்பித்துக்கொள்வது ஆகிய மூன்றுதான். அதைப்பற்றி எவரும் பேசுவதில்லை. அறிஞர்களும் ஞானிகளும் காட்டிய வழி அது. ஆனால் அதை ஒரு கட்சிகட்டலாக, அரசியல் செயல்பாடாகவே பார்க்கிறார்கள். அங்கேதான் உண்மையில் இந்துமதம் வெறுமொரு அரசியல்தரப்பாக சுருங்கிவிடுகிறது
எம்.குணாளன்
***
அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,
இந்துமதத்தைக் காப்பது – திரு. பழனிவேல் ராஜா அவர்களின் கேள்வியும், தங்கள் பதிலும் தன் சமயத்தின்பால் நல்லெண்ணமும் நேர்மையும் உண்மையும் கொண்ட, தன்னை அறிஞன் முற்போக்குவாதி என்றோ அல்லது மதத்தை தான் தலையில் தங்குபவனாக அதற்காகவே வாழும், தலை கொடுக்கும் தியாகியாக பாவனை செய்யவோ அல்லது தன்னை அவ்வாறானவனாக நம்பிக்கொண்டிருக்கவோ செய்யாத சாதாரண இந்துவுக்கு முக்கியமானது.
இந்துத்துவம், அதன் சொற்பொருளில் “இந்துதன்மை” – அந்த இந்துத்துவம் எப்போதும் இந்துக்களிடம் இருந்துகொண்டே தான் இருக்கிறது. தன்வழி மட்டுமே சரி மற்றவர் தவறான வழிச்செல்வோர் என்று கருதாததன்மை, பிற சமயத்தவரை அவர்களது சமயத்தை மதிப்புடன், நட்புடன் நோக்குதல் என்ற அந்த இந்துத்தன்மை பெரிதளவில் சமயக் கடைப்பிடிப்பில் இல்லாத சமய அறிவும் பெரிதும் இல்லாத சாமானிய இந்துவிடமும் இருக்கத்தான் சேர்கிறது. உண்மையில் இந்துத்துவத்தை அழிப்பவர்கள் இந்துத்வர்கள் என்று கூறிக்கொள்ளப்பவர்களே. இந்துத்துவம் இயல்பாகவே இந்துவிடம் இருக்கிறது அது அவனிடம் இருந்தால் போதுமானது அதையே பிறசமயத்தவரிடம் எதிர்பார்ப்பது இந்துத்துவத்தை அழிப்பதாகும். நான் உன் கடவுளை வாங்குகிறேன் அல்லவா நீ என் கடவுளை வணங்கு என்கிறபோது, திணிக்க முற்படும்போது, அவ்வாறு செய்யாத பிற சமயத்தவரை தவறானவர் என்று காணத்தொடங்கும்போது அவன்தன் இந்துதன்மையை இழக்கிறான்.
ஐரோப்பாவின் சமயம் சார்ந்த நோக்கு ஓரளவு அது மக்களைக் கட்டுப்படுத்தும் அரசு போன்ற ஓர் பக்கவாட்டு அமைப்பு என்பதே என்று புரிந்துகொள்கிறேன். ஆனால் இங்கு சமயம் அவ்வாறல்ல. எத்தனையோ கடும் நெருக்கடிகளை அரசின் ஆதரவின்மை, அமைப்புகளின் சிதைவை எல்லாம் கடந்து இந்துமதம் நிலைத்துள்ளது. மதம் மெய்மைத் தேடலுக்கானது என்ற எண்ணம் கொண்ட ஒரு சிலரேனும் இருக்கும்வரை இந்துமதம் அழியாது, அது மெய்மையாலேயே காக்கப்படுகிறது. மெய்மையின் வழிகளை அடைக்க எந்த அரசோ அரசியலோ, செல்வமோ, மனித முயற்சிகளோ அப்படியொன்றும் திராணி உடையவை என்று கருதமுடியவில்லை.
அன்புடன்
விக்ரம்
கோவை
இந்து என உணர்தல் இந்துமதமும் ஆசாரவாதமும் ஜெயமோகன் நூல்கள் வாங்க
வடிவமைக்கு கீதா செந்தில்குமார்
பயணம் இரு கேள்விகள்
அன்புள்ள ஜெ
நீங்கள் மழைப்பயணத்தில் இருக்கும்போது இங்கே பலவகையான சர்ச்சைகள். எல்லாமே உங்களைத் தொட்டுச்சென்றன. நீங்கள் அவற்றை கவனித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அவற்றில் நீங்கள் ஈடுபடாமல் போனதற்கு மழைப்பயணம்தான் காரணமா என்று நினைத்துக்கொண்டேன்.
என்.ராஜ்குமார்
***
அன்புள்ள ராஜ்குமார்
நீங்கள் கவனித்திருக்க மாட்டீர்கள், சாதாரணமாக நான் விவாதங்களில் தலையிடுவதில்லை. குறிப்பாக தனிப்பட்ட சர்ச்சைகளில்.
அவ்வப்போது நான் எழுதுவதை ஒட்டி விவாதங்கள் எழுவதனால் நான் சர்ச்சைகளில் ஈடுபடுவதான ஒரு சித்திரம் உருவாகிறது. சில தருணங்களில் கறாராக சில மதிப்பீடுகளை வைக்கவேண்டிய தேவை எழும்போது மட்டுமே எழுதுகிறேன்.
இப்போதிருக்கும் மனநிலையே வேறு. நான் செல்லவேண்டிய இடங்களும் வேறு.
ஜெ
அன்புள்ள ஜெ
குதிரேமுக் பயணத்தில் நீங்கள் அடைந்தது என்ன? எல்லைகளை மீறிச்செல்வது பற்றிச் சொன்னீர்கள். எல்லைகளை எதுவரை மீறுவது? இமையமலைக்கே ஏறவேண்டியதுதானா? இத்தனை பயணங்களுக்குப்பிறகும் எது உங்களுக்குத் தேவையாகிறது?
ஆனந்த்
***
அன்புள்ள ஆனந்த்,
அறிதல்கள், பரவசங்கள் தேவைப்படுகின்றன. அன்றாடத்தில் இருந்து மேலே செல்லாமல் அவற்றை அடைய முடியாது.
அன்றாடம் என்பது நம் அறிதல்களை மறைக்கும் பெரிய திரை. நாம் தினந்தோறும் பார்க்கும் இயற்கை நமக்கு தகவல்களாக, புழங்கிடமாக மாறிவிடுகிறது. முற்றிலும் புதியநிலமே இயற்கையின் தோற்றமாக, நாம் ஏற்கனவே அளித்த அர்த்தங்கள் ஏதுமில்லாததாக, தெரிகிறது. அது பெரிய அறிதலை, இருத்தலின் பரவசத்தை அளிக்கிறது. இன்மையின் பரவசமும்தான்.
ஆனால் இது ஆன்மிகநிலையின் தொடக்கமே. ஒருவேளை கடந்தால் இருந்த இடத்தில் ஓர் இலைநுனியைக் கொண்டே இதை அடையக்கூடும்.
ஜெ
***
வடிவமைப்பு கீதா செந்தில்குமார்
October 9, 2021
கோவையும் கவிதையும் ஒரு கோழியும்
கிருஷ்ணன் சொல்லிக்கொண்டே இருந்தார், இவ்வாண்டு விஷ்ணுபுரம் கூட்டம் நடக்கமுடியுமோ முடியாதோ என்று. ”நாம் ஏதாவது செஞ்சுகிட்டே இருக்கணும் சார். கவிதையப்பத்தி பேசி நாளாச்சு… ஒரு கூட்டம் போடுவோம்.”
நான் வேறொரு மனநிலையில் இருந்தேன். ஒருமாதமாக நான் என்னென்ன வாசித்தேன் என்று ஒருவரிடம் சொன்னால் தலையில் கைவித்துவிடுவார். டின்டின், டெக்ஸ்வில்லர், டியூராங்கோ காமிக் நூல்கள். துப்பறியும் நூல்கள். ஹெச்.பி லோவ்கிராஃப்ட், நால்டர் டி லா மாரே வகையறாக்கள் எழுதிய பத்தொன்பதாம் நூற்றாண்டு பிரிட்டிஷ் பேய்க்கதைகள்… மொத்தத்தில் வாள் கேடயம் ஆகியவற்றுடன் மூளையையும் ஒரு ஓரமாக வைத்திருந்தேன். ஆகவே ”நீங்களே ஏற்பாடு செய்யுங்கள் கிருஷ்ணன், நான் சும்மா வந்து ஓரமாக அமர்ந்திருக்கிறேன்” என்றேன்
தமிழ் இலக்கியவரலாற்றிலேயே முதல்முறையாக ஒரு குற்றவியல் வழக்கறிஞரால் ஏற்பாடு செய்யப்பட்ட கவிதையுரையாடல் என்னும் தகுதியை அடைந்த கோவை கவிதை அரங்கு இவ்வாறுதான் நிகழ்ந்தது. கோவையில் அரங்கங்கள் எவையும் இன்னமும் முறையாக ஆரம்பிக்கப்படவில்லை. ஆகவே நண்பர் பாலுவின் பண்ணைவீட்டிலேயே நடத்தலாமென முடிவெடுக்கப்பட்டது. அக்டோபர் 2,3 தேதிகளில் நிகழ்ச்சிகள் நடந்தன.
கவிதை அரங்குகளை நடத்துபவர்கள், பங்கேற்பாளர்கள் அனைவரையும் கிருஷ்ணனே முடிவுசெய்தார். இதன்பொருட்டு வெவ்வேறு நண்பர்களின் சிபாரிசால் நூறு கவிதைத் தொகுதிகள் வரை வாசித்து தமிழ்க்கவிதைச் சூழலில் கவிதையை கண்டடைய சட்டபூர்வமான அமைப்புகள் ஏதாவது தேவை என்னும் தெளிவைச் சென்றடைந்தார். கவிதைத்தெரிவுகள், பேசுபொருள் தெரிவுகள் அனைத்திலும் அவருடைய ஈடுபாடு இருந்தது.
நான் அக்டோபர் ஒன்றாம்தேதியே கோவை சென்றுவிட்டேன். அங்கே சில அலுவல்கள். கிருஷ்ணனும் நண்பர்களும் மாலை ஈரோட்டிலிருந்து கோவை வந்தனர். கோவையில் அன்று நல்ல மழை. பொடிநடையாக டீ குடிக்கச் சென்ற கோஷ்டி விஷ்ணுபுரம் விருதுவிழா நிகழும் ராஜஸ்தானி பவன் அரங்கை பார்த்து “இந்த ஆண்டாவது விழா நடக்குமா சார்?” என்னும் கேள்வியுடன் உளம் வெதும்பியது. டீ குடித்துக் கொண்டிருக்கும்போது மழை பெருமழையாகியது.
கிருஷ்ணன் தலைமையில் ஒரு குழு ஒன்றாம்தேதி மாலையே பண்ணை வீட்டுக்குச் சென்று தங்கி பின்னிரவு வரை கவிதை விவாதங்களில் ஈடுபட்டதாக அறிந்தேன். நான் கோவை ஃபார்ச்சூன் சூட்ஸில் தங்கிவிட்டு காலையில்தான் பண்ணை வீட்டுக்குச் சென்றேன். அங்கே ஏறத்தாழ அனைவருமே வந்திருந்தனர்.
இந்த வகையான விழாக்களில் ஒவ்வொருவரையும் வரவேற்று கொண்டுசென்று இடம்சேர்ப்பது என்பது மிகப்பெரிய நிர்வாகப்பொறுப்புள்ள செயல். விருந்தினர் எவரேனும் வரவேற்க விட்டுப்போனால் அவருக்கும் அவரைவிட நமக்கு ஏற்படும் உளச்சோர்வு மிகப்பெரியது. கிருஷ்ணன் தானே பெரிதாக ஏதும் செய்பவரல்ல என்றாலும் பிறரை ஏவுவதில் திறமைகொண்டவர். ஆகவே அனைத்தும் சிறப்பாக நிகழ்ந்திருந்தது.
கவிதையரங்கில் அரங்குகளை நடத்துபவர்களில் ஆனந்த் குமார் வரமுடியவில்லை. கொரோனா வந்து சென்றபின்னரும் இருமல் முடியாமலிருந்தது. நரேன் வரமுடியவில்லை, சாதாரண ஃப்ளூ. மற்ற அனைவருமே வந்திருந்தனர். அனைவருக்குமே நீண்ட இடைவேளைக்குப்பின் ஒரு இளைப்பாறலும் சந்திப்பும் தேவைப்பட்டிருக்கலாம்.
வழக்கமாக விஷ்ணுபுரம் அமைப்பின் எல்லா அரங்குகளிலும் அறிவுத்தள முன்னேற்பாடுகள் முறைப்படி நடக்கும். பெரும்பாலும் அவற்றுக்கு நான் பொறுப்பேற்றுக் கொள்வேன். அரங்கில் வாசிக்கப்படும் கட்டுரைகள், கதைகள் மற்றும் படைப்புகள் முன்னராகவே சேமிக்கப்பட்டு அனுப்பப்படும். ஒருமுறை ஓர் இளந்துருக்கியர் அவர் பேசப்போகும் நூலை முழுமையாகவே பிடிஎஃப் ஆக அனுப்பியிருந்தார். தஸ்தயேவ்ஸ்கியின் கரமசோவ் சகோதரர்கள், முழுமையாக!அரங்கில் விவாதிக்கப்பட்ட படைப்புகள்
பின்னர் அதற்கு ஒரு வழியை நான் கண்டடைந்தேன். ஒரு இணையப்பக்கம் தொடங்கி அதில் பதிவிடுவது. அதை அனைவருமே வாசித்துவிட்டு வரலாம். மின்னஞ்சலை பார்க்கவில்லை என்றெல்லாம் சொல்லமுடியாது. இம்முறையும் அவ்வாறு கவிஞர்கள் தேர்வுசெய்து அனுப்பிய கவிதைகள் ஓர் இணையப்பக்கமாக உருவாக்கப்பட்டன.
ஒரு பேச்சாளர் ஏழு கவிதைகளை முன்வைக்க வேண்டும், அறிமுகம் செய்து பேசவேண்டும் என்பது நெறி. அவ்வாறே கவிதைகளும் அனுப்பப்பட்டன. ஆனால் கவிஞர்கள் பேசியபோது மேலும்மேலும் பல கவிதைகளை சுட்டிக்காட்டிப் பேசிக்கொண்டே சென்றனர்.
முகப்புரையாக லக்ஷ்மி மணிவண்ணன் கவிதை எழுத்துவது, வாசிப்பது ஆகியவை நிகழும் தளம் பற்றிப் பேசினார். குறிப்புகளுடன் வந்திருந்தாலும் அவருடைய வழக்கப்படி மேலும் சிந்தித்து தொட்டுத்தொட்டு பேசிக்கொண்டே சென்றார். இன்னொரு அரங்கில் எனில் பெரும்பாலும் அத்தகைய உரைகள் ஓரிரு வரிகளே சென்று சேர்ந்திருக்கும். எத்தனை பேர் கவனித்து உள்வாங்கிக் கொண்டனர் என்று பார்த்தேன். தாமரைக்கண்ணன் மொத்த உரையையுமே நினைவிலிருந்து ஏறத்தாழ முழுமையாகவே பதிவுசெய்திருப்பதைக் கண்டேன்.
ஊட்டி குருகுலத்தில் அத்தகைய திறமையையும் கவனத்தையும் ஒரு காலத்தில் கண்டு நான் திகைத்திருக்கிறேன். அதை நானும் பயின்றிருக்கிறேன். அதற்கான பயிற்சிகள் சிலவற்றை பற்றி பேசியிருக்கிறேன். அது நீடிப்பது நிறைவளித்தது.
மொத்தம் ஒன்பது அரங்குகள். ஓர் அரங்குக்கு தோராயமாக ஒன்றரை மணிநேரம். கவிதை வாசிப்பு முறைகள் (யுவன், மோகனரங்கன்), பழந்தமிழ் கவிதைகளில் அறிவும் கல்வியும் (அந்தியூர் மணி), நாட்படுதேறல்- சங்கம் முதல் சமகாலம் வரை (இசை), தற்கால கவிதைகள் (மதார்), ஹிந்தி கவிதைகள் (எம். கோபால கிருஷ்ணன்) கவிதைகளில் உடல்மொழி (சாம்ராஜ்), ஆன்மிக கவிதைகள் (சுனீல் கிருஷ்ணன்), விக்ரமாதித்தன் அமர்வு (லக்ஷ்மி மணிவண்ணன்), சீனக் கவிதைகள் (போகன் சங்கர்)
பெரும்பாலான அரங்குகளில் கவிஞர்கள் எதிர்வினையாற்றினர். வாசகர்கள் விவாதித்தனர். நான் பார்வையாளனாகவே இருந்தேன். ஒவ்வொரு அரங்கும் அந்தந்த கவிஞரால் முன்னெடுத்துச் செல்லப்பட்டது. யுவன், மோகனரங்கன், போகன், சாம்ராஜ் ஆகியோர் பெரும்பாலும் எல்லா விவாதங்களிலும் விரிவாகப் பேசினார்கள்.
இவர்களைக்கொண்டு ஓர் வலைச்சித்திரத்தை உருவாக்கிக் கொள்ளமுடியும் என நினைத்துக்கொண்டேன். யுவனும், மோகனரங்கனும் தமிழ்ச்சிற்றிதழ் சூழலில் ஐம்பதாண்டுகளாக இருந்துவரும் அழகியல்மைய மரபின் பிரதிநிதிகள். சுந்தர ராமசாமியும், தேவதச்சனும், ஞானக்கூத்தனும் பேசியவற்றின் வளர்ச்சிநிலைகளை முன்வைப்பவர்கள். சாம்ராஜ் இடதுசாரி மரபில் இருந்து உருவாகி அதன் அழகியல்தொனிகளை மட்டும் முன்னெடுப்பவர். அவர்கள் என்றுமிருந்தனர், உதாரணமாக ராஜேந்திரசோழன், ஞானி, புவியரசு என ஒரு பட்டியல் உண்டு.
தமிழ் நவீன இலக்கிய மரபுக்குள் முற்றிலும் புதியகுரல் என்று போகனைத் தான் சொல்லவேண்டும். ஆன்மிகப் பார்வைகள், யோகப்பரிசோதனைகள், மாற்று உளவியல், மந்திர தந்திரங்கள், பேய்கள், எழுதப்படாத மறுபக்க வரலாறுகள் என ஒட்டுமொத்தமாகவே நூறாண்டுக்காலம் தமிழ் நவீனத்துவம் ‘தர்க்கபூர்வமற்றவை’ என புறக்கணித்துச் சென்ற அனைத்தையும் பேசுபவராக அவர் அங்கே இருந்தார். அவற்றை திறமையாக கவிதையின் அழகியலுடன் இணைத்தார். அதன் வழியாக புதிய பார்வைகளையும் உருவாக்கினார்.
என்ன வியப்பு என்றால் சுந்தர ராமசாமி இருந்த அவையில் அவர் அவற்றைப் பேசியிருந்தால் சுராவின் பெரியமூக்கு கோவைப்பழமாகச் சிவந்து ஜிவுஜிவுவென ஆகியிருக்கும். அவற்றை அந்த அவையில் பேசுவதை அவரால் சகித்துக்கொள்ள முடியாது. ஆனால் அந்த அவையில் அந்தக்குரல் கவிதையின், இலக்கியத்தின், அறிவியக்கத்தின் இயல்பான ஒரு பக்கமாக எடுத்துக்கொள்ளப்பட்டது. மெய்யாகவே பின்நவீனத்துவம் தமிழகத்தில் மலர்ந்துவிட்டிருக்கிறது!
முப்பதாண்டுக்கால இலக்கிய விவாதங்களில் இருந்து நான் கற்றது என்பது இலக்கிய நிகழ்வுகள் தொடர்ந்து நிகழவேண்டுமென்றால் அவை உவகையூட்டக்கூடியவையாக, நட்பார்ந்தவையாக இருந்தாகவேண்டும் என்பதே. இலக்கியத்தில் என்றும் மாறுபட்ட தரப்புகள் நடுவே மோதலும் முரணியக்கமும் உண்டு. ஆனால் பரஸ்பர மதிப்பும் நட்பும் இல்லாதவர் நடுவே ஆக்கபூர்வமான விவாதம் நிகழமுடியாது. அதுவும் நேரடி விவாதமாக நிகழவே முடியாது.
விவாதங்களை அழிப்பவை மூன்று தரப்பினரின் பங்கேற்பு. ஒன்று, விவாதங்களிலோ இலக்கியத்திலோ ஆர்வமே இல்லாமல் குடி மற்றும் அரட்டைக்காக மட்டுமே வருபவர்கள். இரண்டு, சில்லறை அரசியல் நிலைபாடுகளை செல்லுமிடமெல்லாம் கூச்சலிடும் உள்ளீடற்ற ஆளுமைகள். மூன்று, தாழ்வுணர்ச்சியோ மேட்டிமையுணர்ச்சியோ கொண்டு விவாதங்களில் மிகைவெளிப்பாடு செய்பவர்கள். அவர்கள் அரங்குகளை வெற்று அரட்டை அல்லது பூசல்களாக ஆக்கியமையால்தான் சென்றகாலங்களில் கூடுகைகள் நசிவுற்றன.
அதை பதினைந்தாண்டுகளுக்கு முன்பு நான் சொன்னபோது மறுத்தவர்கள் உண்டு, இன்று அது ஐயமில்லாமல் நிறுவப்பட்டுள்ளது. போலி ‘ஜனநாயகம்’ பேசி எல்லாரையும் உள்ளே விட்ட எவராலும் எங்கும் எதையும் தொடர்ந்து நடத்தமுடியவில்லை. இலக்கியத்துடன் ஆழ்ந்த உறவுள்ளவர்களை மட்டுமே கொண்டு நடத்தப்படுவன என்பதனால்தான் எங்கள் நிகழ்வுகள் நீடிக்கின்றன. இன்று மேலும் மேலும் தலைமுறையினர் உள்ளே வந்துகொண்டிருக்கின்றனர்
இந்த அமர்வில் பங்கேற்பாளர்களில் கவிஞர்கள் மட்டுமே மூத்தவர்கள். கவிஞர்களிலும் மதார் மிக இளையவர். மற்ற அனைவருமே முந்தைய தலைமுறையினராக தெரிந்தனர். நானெல்லாம் அதற்கும் முந்தைய தலைமுறை போல தோற்றமளித்தேன். அத்தனை இளையவர்கள்.
உண்மையில் இந்நிகழ்வை இணையத்தில் அறிவிக்கவில்லை. தெரிந்தவர்களை அழைத்தே நடத்தினோம். முப்பதுபேருக்குமேல் கூடமுடியாத நிலை. இடவசதி இல்லை. அறிவித்து நடத்தினால் எங்களால் தெரிவுசெய்ய முடிந்திருக்காது.
மிக உற்சாகமான உரையாடல். அரங்குக்கு உள்ளேயும் வெளியிலும். சிரிப்பும் கொண்டாட்டமுமான இரண்டு நாட்கள். மாலை ஒரு சிறிய நடை சென்று வந்தோம். மழைக்கார் இருந்துகொண்டிருந்தமையால் நீண்டதூரம் செல்ல முடியவில்லை.
முதல்நாள் ஒன்பது மணிவரை அமர்வுகள். அதன்பின் விருந்தினர்களை வெளியே ஏற்பாடு செய்திருந்த இடங்களுக்கு அழைத்துச் சென்றனர். பண்ணை வீட்டிலேயே நான் பங்கேற்பாளர்களுடன் தங்கினேன். தொடர்ந்து இரண்டு இரவுகளாக நல்ல தூக்கமில்லை. ரயில்பயணம், நண்பர்களுடன் அளவளாவிய இரவு. ஆகவே முன்னரே தூங்கிவிட்டேன். கவிதைப்பேச்சுக்கள் கேட்டுக்கொண்டே இருந்தன. அவை சிறப்பாக தூக்கம் வரச்செய்பவை என கண்டுகொண்டேன்.
அரங்குகளை முழுக்க பதிவுசெய்யலாமே என்னும் கோரிக்கை பெரும்பாலும் வெளிநாட்டிலிருப்பவர்களால் முன்வைக்கப்படுவதுண்டு. உண்மையில் அவ்வாறு எங்குமே பதிவுசெய்யப்படுவதில்லை. இயல்பான, ஒழுக்கான விவாதத்திற்கு பதிவுசெய்யப்படுகிறோம் என்னும் உணர்வு மிக எதிரானது. அத்துடன் அந்தப் பதிவுகள் ஏற்கனவே இணையத்தில் கிடைக்கும் காணொலிகளுடன் சேருமே ஒழிய ஓர் அரங்கில் பங்குகொண்ட அனுபவத்தை அளிக்காது.
இந்த அரங்கு ஏறத்தாழ பதினைந்து மணிநேரம் நிகழ்ந்தது. பதினைந்து மணிநேரக் காணொலியை எவராலும் பார்க்கமுடியாது. அதில் ஒன்றவும் முடியாது. நேருக்குநேர் கவிஞர்களைச் சந்திப்பதனால்தான் பதினைந்து மணிநேரம் கவிதை பற்றிய விவாதத்தை ரசிக்க முடிகிறது. நூலாக அந்த விவாதங்களை அப்படியே எழுதினால் எழுநூறு பக்கம் தேவைப்படும். எழுநூறுபக்க கவிதை விவாத நூல் ஒன்றை ஒன்றரை நாளில் வாசிக்க எவராலும் இயலாது. விவாத அரங்குகளுக்கு மாற்றே இல்லை.
மறுநாள் மதியத்துடன் அரங்குகள் முடிந்தன. அனைவரையும் கூட்டுப்புகைப்படம் எடுத்துக்கொண்டோம். சட்டென்று ஒரு கோழி வந்து எங்களை நோக்கி தலைதூக்கி நின்றது. சென்றபிறவியில் கவிஞராக இருந்திருக்கலாம். அது சொன்னது கவிதையாக இருந்திருக்கலாம், புரியவில்லை. சென்றபிறவியிலும் எவருக்கும் புரியாமலேயே போயிருந்திருக்கலாம்.
வெண்முரசு இசை வெளியீடு நிகழ்வு
வெண்முரசு ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ள இசைத்தொகுதியை 09-10-2021 அன்று மணிரத்னம் வெளியிட்டார். அ.முத்துலிங்கம், நாஞ்சில்நாடன், ரவி சுப்ரமணியம், வேணு தயாநிதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஆவணப்படத்தில் பங்கெடுத்தவர்கள் தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்கள்.
கழுவாய்- சுதா ஸ்ரீநிவாசன்
சுதா ஸ்ரீநிவாசனும் அவர் கணவர் ஸ்ரீநிவாசனும் வெண்முரசின் பிழைநோக்குநர் மற்றும் பிரதிமேம்படுத்துநர்களாக ஏழு ஆண்டுகள் ஒவ்வொரு நாளும் முழுமையான ஈடுபாட்டுடன் பணியாற்றியிருக்கிறார்கள். வெண்முரசு முடிந்தது அவர்களுக்கு ஒருவகையான நிறைவையும் வெறுமையையும் அளித்திருக்கலாம். ஸ்ரீநிவாசனுடைய தாத்தாவின் ஊரான திருக்குறுங்குடிக்கு அவர்கள் இடம்பெயர்ந்தனர். அங்கே ஓராண்டாக வாழ்கிறார்கள்.
சுதா ஸ்ரீநிவாசன் தன் முதல் கதையை வனம் இதழில் எழுதியிருக்கிறார். நெடுங்காலமான தீவிரமான வாசிப்பு அளிக்கும் இயல்பான மொழியும் வடிவ ஒருமையும் அமைந்த படைப்பாக அது அமைந்திருக்கிறது. இக்கதையில் உருவாகிவருவது லா.ச.ரா உருவாக்கிய ஓர் உலகின் நீட்சி. பெண்களின் குடும்பச்சூழலுக்குள் ஊடாடும் மானுடக்குரூரங்கள், அற்பத்தனங்கள், துயரங்கள், அதை வென்றெழும் புரிந்துகொள்ளமுடியாத அகவிசைகள், அவை வெளிப்படுவதிலுள்ள மாயத்தன்மை.
கழுவாய்- சுதா ஸ்ரீநிவாசன்வெண்முரசு இசைக்கோலம்
வெண்முரசு ஆவணப்படத்தில் ஒரு மைய இசைக்கோலமும் நீலம் நாவலில் இருந்து வரிகளை இசையமைத்து கமல் ஹாசன், சைந்தவி, ஸ்ரீராம் பார்த்தசாரதி ஆகியோர் பாடியிருந்த பாடலும் உள்ளன. ராஜன் சோமசுந்தரம் இசை. அந்த இசைக்கோவை இன்று [09-10-2021] அன்று வெளியிடப்பட்டுள்ளது.
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers



