Jeyamohan's Blog, page 905
October 5, 2021
இன்றைய கலைவெற்றிகள், எதிர்வினை
விஷ்ணு, இந்தோனேசியா
இன்றைய சிற்பவெற்றிகள் எவை?
அன்புள்ள ஜெ
வணக்கம்,
இக்கடிதத்தை வெகுகாலம் முன்னர் எழுத வேண்டும் என நினைத்திருந்தேன். நாம் நம் முன்னோர்கள் போன்ற சிற்பவெற்றிகளை நிகழ்த்த முடியவில்லை என்பதை என்னால் முற்றிலும் ஏற்க இயலவில்லை. சமகால பெருந்தடைகளையும் மீறி நாம் வியக்கத்தக்க படைப்புகளை சென்ற/இந்த நூற்றாண்டில் நிகழ்த்தியுள்ளதாகவே நம்புகிறேன்.
நாம் முன்னோர்களைப் போன்ற அல்லது அவர்களையொத்த சிற்பவெற்றிகளை அடையவில்லையெனினும் சிற்ப வெற்றிகளின் சாத்தியங்களை, சிற்பத்தின் பரிமாணங்களை மாற்றி அமைத்து உள்ளோம். உதாரணமாக, கேரளத்தின் ஆழிமலை சிவன் சிலையை கூறலாம். அது மிகச்சிறந்த, சமகால கலைப்படைப்பாகவே நான் பார்க்கிறேன். அழகிய கலை நுணுக்கங்களை (விரிசடை, விரிசடைக்குள் நடனமிடும் கங்கை, ஈசனின் பழங்குடி போன்ற உடற்கட்டு, அவன் அமர்ந்திருக்கும் கரடு முரடான பாறை முகடு) கொண்டது. மேலும் சில சமகால கலை முயற்சிகளை இணைத்துள்ளேன். அவை அனைத்தும் வெவ்வேறு விதத்தில் கலையின் உச்சமாக கொண்டாடப்பட வேண்டியவையே.
ஆழிமலை சிவன், கேரளம்ஜடாயு புவியியல் மையம், கேரளம்முருகன் சிலை, மலேசியாஇராமனுஜர் சிலை, ஐதராபாத்கருடனும் விஷ்ணுவும், கலாச்சார பூங்கா, இந்தோனேசியா
ஜடாயு சிலை, சடையமங்கலம், கொல்லம்மன்னராட்சி போல் அல்லாது இன்றைய சமகால அரசியல் சூழல் இந்தவகையான சிற்பவெற்றிகளுக்கு பிரதான தடை. அரசியல் செயல்பாட்டாளர்களின் முக்கியத்துவம், பயணம் என எல்லாமே கலைக்கு, கலைச்செயல்பாட்டிற்கு முற்றிலும் வேறான திசையில் உள்ளது. மன்னர்களின் அரண்மனை, அந்தப்புரங்களை விட அவர்கள் காலத்தில் நிகழ்ந்த கலைச்செயல்பாடுகள், சிற்ப வெற்றிகள் இன்றும் உயிர்ப்புடன் இருப்பதை இன்றைய அரசியல்வாதிகள் உணர்ந்ததாக தெரியவில்லை.
இன்றைய போலி சுற்றுசூழல்/முற்போக்கு அரசியல்
உலக வெப்பமயமாதல் உண்மையாகவே ஒரு அபாயம்தான். ஆனால், உண்மையில் அதற்கான செயல் வடிவ எதிர்ப்புகளை முன்வைக்கும் உயர்திரு.பாப்பம்மாளை (பத்மஸ்ரீ விருது வென்றவர்) விட நாம் வெற்று கூச்சலிடும் Greta வை trend செய்து மகிழ்கிறோம். அதற்கான நியாயத்தினை அவரின் செயல் மூலம் அல்லாமல் அவரின் நோய் மூலம் செய்கிறோம். இன்று தஞ்சை/ திருவரங்கம் கோயில்களுக்கு நிகராக ஒரு பிரம்மாண்டத்தை நம்மால் நிறுவ இயலும். அதற்கான சாத்தியங்கள் ஏராளம்.
ஆனால், போலி அரசியல் மற்றும் சுற்றுச்சூழல் போராளிகள் அந்த திட்ட வரைவுக்கு (draft level) மட்டுமே, அதனளவிலேயே, என்ன எதிர்ப்பினை கட்டமைப்பார்கள் என்று உங்களுக்கே தெரியும். புள்ளிவிவர புலிகள் பட்டினி தொடங்கி பாறை உடைப்பு வரை மிகப்பெரிய வெறுப்பு பிரச்சாரம் செய்வர். இது நம் முன்னால் இருக்கும் ஒரு பெரும் சமகாலத்தடை.(பாராளுமன்ற கட்டிட விவகாரம்). முற்போக்கு கேரளாவில் “யட்சி” சிலை வைக்க நேர்ந்த எதிர்ப்பு இவ்வகை கலை செயல்பாட்டுக்கான மற்றொரு தடை. ஆனால், அதுவே நம் நமது சிற்ப வெற்றிக்கான பரிமாணங்களை மாற்றி அமைக்க திறந்திருக்கும் பெரும் வழி.
கங்காதீஸ்வரர், ஆழிமலை, திருவனந்தபுரம்தொல்-தொழில்நுட்ப பயிற்சி அறுபட்டமை:
மூன்று நாட்களில் 300 மீட்டர் நகரும் கோதண்டராமர் சிலை வடித்து அதில் பெருமை அடைகிறோம். சிலை நிறுவுதலில், திட்ட அளவிலேயே நிகழ்ந்த மாபெரும் பிழை இது. இதிலிருந்து நாம் கண்டிப்பாக மேலெழ தொல்-தொழில்நுட்ப கல்வி உதவலாம். இதனைச் சொல்ல காரணம், பண்டைய சிற்ப வெற்றிகள் அனைத்தும் கல் சார்ந்தவை அவற்றை, அவற்றின் கட்டுமானத்தை தெளிவுற கற்பதன் மூலம், அதை வரைவு (Syllabus) செய்து பட்டக்கல்வியில் (should be included in civil engineering course, at least for 2 semesters) சேர்த்து அதற்கான அங்கீகாரத்தை அளிப்பதன் மூலம் சமகால சிற்ப வெற்றிகளை அதிக அளவில் மீண்டும், மீண்டும் நம்மால் நிகழ்த்த இயலும்.
இன்றைய சிற்ப வெற்றிக்கான தளங்கள் முற்றிலும் வேறானவை என்பதே என் எண்ணம். நாம் எப்போதும் சிற்ப வெற்றிகளுக்கு சாத்தியங்களை எதிர்நோக்கியே உள்ளோம். ஆனால், இச்செயல்பாட்டில் தமிழகம் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது என்பது கசப்பான உண்மை.
லெக்ஷ்மிநாராயணன்
திருநெல்வேலி
தேவதத்தன்அன்புள்ள லக்ஷ்மிநாராயணன்,
நான் அக்கட்டுரையில் தமிழகத்தின் இன்றைய நவீனக் கட்டுமானக்கலை வெற்றிகள் என்றே பேசுகிறேன். கட்டிடங்கள், பெரிய சிலைகள் ஆகியவை அந்த வட்டத்திற்குள் வரும்.
என் அளவுகோல் இது
அ. அது நவீனமானதாக இருக்கவேண்டும். பழைய கட்டிடங்களின் இயல்பான நகலாக இருக்கலாகாது.
ஆ. அது அழகியதாக இருக்கவேண்டும். அதன் அளவுகளின் சரிவிகிதம், அதன் காட்சிக்கோணம், அதன் நெளிவுகள் வளைவுகள் ஆகியவை உருவாக்கும் காட்சியின்பம் முக்கியமானது.
இ. அது குறிப்புணர்த்தல் வழியாக தத்துவ ஆன்மிக அறிதல்களை அளிப்பதாக இருக்கவேண்டும். அவ்வகையிலேயே இரு உதாரணங்களைச் சொன்னேன்.
நீங்கள் உலகளாவச் சென்று சில உதாரணங்களை முன்வைக்கிறீர்கள். அவ்வாறு பார்த்தால் மேலும் பல பெருஞ்சிற்பங்கள், கட்டுமானங்களைச் சொல்லமுடியும்.
சிற்பங்களை, கட்டுமானங்களை நேரில் பார்ப்பது முக்கியமானது. அவற்றின் புகைப்படங்கள் பலசமயம் ஒரு குறிப்பிட்ட கோணத்தில் அழகிய தோற்றத்தை அளிக்கக்கூடும். அவற்றின் வண்ணம் மிகையாக்கப்பட்டிருக்கலாம். சிற்ப அனுபவம் என்பது நேரில் அடையப்பெறுவதே.
நீங்கள் சுட்டுவனவற்றில் நான் இந்தோனேசியாவின் கருடனில் ஊரும் விஷ்ணு சிலையை பார்த்ததில்லை. அது அழகான சிலை என கேள்விப்பட்டிருக்கிறேன். புகைப்படங்களும் அவ்வாறே சொல்கின்றன.
ராஜீவ் அஞ்சல்கொல்லம் அருகே சடையமங்கலத்தில் உள்ள ஜடாயு சிலை அற்புதமானது. அதை வடித்த ராஜீவ் அஞ்சல் என் நண்பர். அவர் கலை இயக்குநராக திரைத்துறையில் பணியாற்றியவர். திரை இயக்குநர். அவர் இயக்கிய படம் குரு மெய்த்தேடலின் உருவகமாக அமைந்த ஒன்று. என் நண்பர் இயக்குநர்- நடிகர் மதுபால் ராஜீவ் அஞ்சலின் உதவியாளராக இருந்தவர். ராஜீவ் அஞ்சலை ஒரு திரைப்படத்துக்காக சந்தித்துப் பேசியிருக்கிறேன். அந்தச் சிற்பம் மறைந்த ஆன்மிக ஞானி போத்தன்கோடு கருணாகர சுவாமிகளின் தரிசனமும் ராஜீவின் கலையும் இணைந்து உருவான ஒன்று.
ஆழிமலை கங்காதீஸ்வரர் சிற்பம் உருவாகிக்கொண்டிருக்கையில் இரண்டு முறை மதுபாலுடன் அங்கே சென்றிருக்கிறேன். முடிந்தபின் ஒருமுறை சென்றேன். அதை உருவாக்கிய இளம்சிற்பி தேவதத்தன் அப்போது திருவனந்தபுரம் கலைக்கல்லூரியில் பயின்றுகொண்டிருந்தார். ஆழிமலை சிவன் கோயில் கேரள வரலாற்றில் முக்கியமான ஒன்று. நாராயணகுருவின் வாழ்வுடன் இணைந்தது. அச்சிற்பம் ஒரு கலைச்சாதனை, ஐயமே இல்லை. இன்னும் நெடுநாட்கள் அது கேரளக் கலைவெற்றியாகவே கருதப்படும்
ராமானுஜர் சிலை, ஹைதராபாத்நீங்கள் சுட்டுவனவற்றில் பல சிலைகளை நேரில் பார்த்திருக்க மாட்டீர்கள். ஹைதராபாத் ராமானுஜர் சிலை அதன் அளவுகளால் அழகானது, ஆனால் மிகமிக மரபானது. ஒரு சிலை, ஓர் அடையாளம் அவ்வளவுதான். அதற்குமேல் ராமானுஜரின் தரிசனத்தை வெளிப்படுத்தும் எந்த அம்சமும் அதில் இல்லை. எந்த புதிய கலைக்கூறும், மெய்வெளிப்பாடும் அதில் இல்லை.
அதேசமயம் அதன் பொன்னிறப்பூச்சு கண்கூசவைப்பது. உலகமெங்கும் பிரம்மாண்டமான சிலைகள் பளிச்சிடும் வண்ணங்களில் அமைக்கப்படுவதில்லை. ஏனென்றால் அவை கண்களைக் கூசவைக்கும். அதன் நுட்பங்கள் மொத்தையாகவே தெரியும். பொன்வண்ணம் மீது இந்தியர்களுக்கு இருக்கும் பாமரத்தனமான ஆர்வமே அதை அவ்வண்ணம் பூச வைத்திருக்கிறது.
மலேசியாவின் முருகன் சிலை அழகானதுகூட அல்ல. அதன் தோற்ற ஒருமையேகூட பிழையானது. அத்துடன் பார்ப்பவரின் கண்களின் கோணத்தை கணக்கில்கொண்டே சிலையின் விகிதாச்சாரமும், அது அமையும் இடமும் தெரிவுசெய்யப்படவேண்டும். அச்சிலை தவறான இடத்தில் தவறான கோணத்தில் தெரியும்படி அமைக்கப்பட்டது.
நான் உலகிலேயே வெறுக்கும் சிலைகளில் ஒன்று அது. தமிழ்ச் சிற்பக்கலையின் இலக்கணங்களின்படி அது அமையவில்லை. கோபுரங்களிலுள்ள சுதைப் பொம்மைகளின் இலக்கணமே அதிலுள்ளது. அதை அப்படி பூதாகாரமாக அமைக்கும்போது eye sore என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. ஒவ்வொரு முறை அங்கே சென்று அதைப் பார்க்கையிலும் கூசுகிறேன்.
அதை பார்க்கும் அன்னியர்களிடம் “மன்னிக்கவேண்டும். இது ஏதோ மடையனால் உருவாக்கப்பட்டது. எங்கள் சிற்ப- கட்டிடக்கலை இதுபோன்றது அல்ல. உலகின் மகத்தான சிற்பங்கள் பல எங்கள் பண்பாட்டில் உள்ளன. தயவுசெய்து அவற்றை வந்து பாருங்கள். அவற்றைக்கொண்டு எங்களை மதிப்பிடுங்கள்” என்று கெஞ்சவேண்டும் என்று மனம் துடிக்கும். தமிழ்ப்பண்பாட்டுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் அவமதிப்பு ஆபாசமான வண்ணம் பூசப்பட்ட அந்த பூதாகரமான பொம்மை.
ஜெ
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் (அமெரிக்கா) – செயல்பாடுகள்
26 ஆம் தேதியின் நிகழ்வுகள்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் (அமெரிக்கா) – செயல்பாடுகள் / பணிகள்
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் (அமெரிக்கா) தற்சமயம் முக்கியமாக இரண்டு பணிகளில் ஈடுபட்டுள்ளன.
1) ஆவணப்படங்கள், இசை, ஒலி, ஒளி என காட்சி ஊடகங்களை வெளியிட்டு தமிழின் ஆகச்சிறந்த எழுத்தாளர்களையும் அவர்களது படைப்புகளையும் சிறப்பிப்பது, உலகறியச் செய்வது.
2) தமிழில் வெளிவந்த, தேர்ந்த விமர்சகர்களால், சிறந்த கதைகள் அல்லது நாவல்கள் என்று அடையாளப்படுத்தப்பட்ட படைப்புகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிடுவது.
முதலாவது பணியைப் பற்றி இலக்கிய ஆர்வலர்களுக்கு ஒரு கடிதம் மூலம் தெரியப்படுத்தியிருந்தோம், மேற்கொண்டு செய்துவரும் மொழிபெயர்ப்பு பணியைப் பற்றியும் சில தகவல்களைப் பகிர்ந்து கொள்வதில் பெருமை கொள்கிறோம்.
ஜூலை மாதம் இறுதியில், மொழிபெயர்ப்புக்கென்று ஒரு குழு அமைத்தோம். சுசித்ரா ராமச்சந்திரன், ரெமிதா சதீஸ் மற்றும் R.S.சகா மெய்ப்பு பார்க்கும் பணியை ஏற்றுக் கொண்டார்கள். எழுத்தாளர் சுசித்ரா-வின் ஆங்கில மொழிபெயர்ப்புகள் – பெரியம்மாவின் சொற்கள், படுகை, போன்றவை வாசகர்களிடையே பெயர்பெற்றவை. அவரைப் பற்றிய அறிமுகம் அதிகம் தேவையில்லை. ரெமிதா, நீலம் பற்றி ஆங்கிலத்தில் விமர்சனம், வெண்முரசு ஆவணப்படத்திற்கு ஆங்கில வசனங்கள், நீலம் பாடலை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு என்று தனது முத்திரைகளை பதித்துள்ளார்.
சகா, பிறந்தது இந்தியாவில், வளர்ந்ததும் கற்றதும் அமெரிக்காவில். அவர் ஆறு வருடங்களாக ஆங்கிலத்தில் எழுதிய சிறுகதைகளையும், கட்டுரைகளையும் தொகுத்து Hireath எனும் நூலாக ஜனவரியில் வெளியிட்டுள்ளார். தமிழை தங்குதடையின்றி பேசுபவர். அவரது வாழ்க்கையின் நேரடி அனுபவமும், பெற்றோர்களிடமும், உறவினர்களிடமும், நண்பர்களிடமும் பேசும் தமிழும் இந்த மொழிபெயர்ப்பு பணிக்கு மிகவும் உதவியாக இருக்கின்றன. இரண்டு கட்ட மொழிபெயர்ப்பு என்று வரும்பொழுது, இவரது அமெரிக்க வளர்ப்பு, ஆங்கிலம் மட்டும் தெரிந்தவர்களின் புரிதலை குழுவிற்கு எடுத்துச் சொல்ல வழிவகுக்கிறது.
மெய்ப்பு பார்க்கும் குழுவுடன், விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்திடம் சமர்ப்பிக்கும் படைப்புகளை வாசித்து தரம் பார்க்க குழுவிற்குள் குழு ஒன்றும் உள்ளது. வேணு தயாநிதி, ஹூஸ்டன் சிவா, பாஸ்டன் பாலா, ஜெகதீஸ் குமார், மதன் மற்றும் விஷ்வநாதன் மகாலிங்கம் வாசித்து, விவாதித்து உதவுகின்றனர். ஹூஸ்டன் சிவா, மதன் மற்றும் ஜெகதீஸ் தமிழ் படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதிலும் ஆர்வத்துடன் செயல்பட்டு வருகின்றனர்.
மொழிபெயர்ப்பு பணி என்று வரும்பொழுது, வெவ்வேறு வகைகளில் பங்காற்றுகிறோம்.
அ) ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகளை தரம் பார்த்து, மெய்ப்பு பார்த்து அமெரிக்க வட்டத்திற்கு என்று உள்ள தளத்தில் பிரசுரம் செய்கிறோம். எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களின் வெள்ளிக்கிழமை இரவுகள் (Friday Nights), ஹூஸ்டன் சிவாவால் மொழிபெயர்க்கப்பட்டு, ரெமிதாவின் மேற்பார்வையில் வெளியிடப்பட்டது.
ஆ) மொழிபெயர்ப்பிற்கு ஒரு படைப்பை எடுப்பதற்கு முன்னர், ஏற்கனவே அது மொழிபெயர்க்கப்பட்டுள்ளதா, மொழி பெயர்க்கப்பட்டிருந்தாலும், அதை மேலும் ஒரு முறை முயற்சித்தால், மூலத்தின் சாரத்தை எட்டமுடியுமா என்ற பரிசோதனையையும் செய்கிறோம். உதாரணத்திற்கு கோபல்ல கிராமம், ஏற்கனவே M.விஜயலக்ஷ்மி என்பவரால் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
அதை ஆங்கிலம் மட்டும் அறிந்தவர் படிக்கும்பொழுது இருக்கும் சிக்கல்களை களையவும், விடுபட்டுப்போன சில விஷயங்களை சேர்ப்பதன் மூலம் படிக்கும் வாசகனுக்கு நல்ல புரிதலைக் கொடுக்கும் என்ற எதிர்ப்பார்ப்பிலும், கோபல்ல கிராமத்தை, சகாவும், ராதாவும், இரண்டாம் முறையாக, ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க எடுத்து, பணியை செவ்வனே செய்து வருகின்றனர். சுசித்ரா மெய்ப்பு பார்த்து உதவுகிறார். இதுவரை தளத்தில் ஆறு அத்தியாயங்கள் வந்துள்ளன.
தளத்தில் பிரசுரிக்கும் படைப்புகளை, தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் ஒலி வடிவிலும் இருக்கும்படி பார்த்துக்கொள்ளும் திட்டம் உள்ளது. கோபல்ல கிராமத்தின் முதல் மூன்று அத்தியாயங்கள், சகா, ஆங்கிலத்தில் பேசி பதிவு செய்த ஒலிவடிவங்களை தளத்தில் கேட்கலாம். ராதா, தமிழ் ஒலி வடிவங்களை பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். விரைவில் தளத்தில், கோபல்ல கிராமம், தமிழ் ஒலிவடிவிலும் இருக்கும்.
இ) ஆங்கில இதழ்களுக்கு சமர்க்கிப்பட விருக்கும் படைப்புகளை கூடி வாசித்து எண்ணங்களை பகிர்கிறோம். செய்யவேண்டிய திருத்தங்களையும் சொல்கிறோம். ஜெகதீஸ் குமார் மொழிபெயர்த்த, ஆங்கில இலக்கிய இதழ்களில் பிரசுரமான குமிழிகள் (bubbles), மலைகளின் உரையாடல் (mountains’dialogue) கதைகளில் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் நண்பர்களின் வாசிப்பு பங்களிப்பை பற்றி அவர் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
ஈ) தமிழ் படைப்புகள், ஏற்கனவே என்ன என்ன ஆங்கிலத்தில் வந்துள்ளன என்பது போன்ற விபரங்களை அறிந்துகொள்வதில் சிரமம் உள்ளது. ஒரு எழுத்தாளரின் பெயரை சொல்லி, அவரது கதையை ஆங்கிலத்தில் எங்கே படிக்கலாம் என்று ஒருவர் கேட்டால், இதோ இங்கே என்று எதையும் எளிதாக சுட்டிக்காட்ட முடியவில்லை. உதாரணத்திற்கு, ஜெயமோகனின் நாவல்கள், சிறுகதைகள் இதுவரையில் என்ன என்ன ஆங்கிலத்தில் வந்துள்ளன என்று தேடினால், விக்கிப்பீடியாவில், ‘பெரியம்மாவின் சொற்கள்’ asymptote-ல் வந்தது மட்டும் குறிப்பிடப்பட்டிருக்கும். இணையத்தில் தேடினால், யானை டாக்டர் கதைக்கு மட்டும் நான்கு விதமான மொழிபெயர்ப்புகள் உள்ளன. அவற்றில் சில நிரல்களை கிளிக் செய்தால் வேலை செய்யாது.
எழுத்தாளர் பவா செல்லதுரையுடனான தனிப்பட்ட உரையாடலில், அவரது கதைகள், கிட்டத்தட்ட அனைத்தும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன என்று அறிய வருகிறோம். இந்த விபரம் அவரது தளத்திலோ, அவருக்கென உள்ள விக்கிபீடியாவிலோ இல்லை. எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் படைப்புகளின் மொழிபெயர்ப்புகள் விபரங்களை தேடினால், விக்கிபீடியா, இவரது படைப்புகள் ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் மொழி பெயர்க்கப்பட்டிருக்கின்றன என்று ஒற்றை வரியில், சொல்கின்றன. அவரிடம் கேட்டால், எட்டுத்திக்கும் மதயானை (Against All Odds), சூடிய பூ சூடற்க (A New Beginning), மிதவை, போன்றவை மொழிபெயர்க்கப் பட்டுள்ளன எனவும், மேலும் சில கதைகள் மொழிபெயர்க்கப்பட்டு வருவதாகவும் சொன்னார். இதற்கு அனைத்திற்கும் விடையாக, தமிழ்படைப்புகளை ஆங்கிலத்தில் வாசிப்பதற்கு சுட்டிக்காட்டும் தளமாக உருவெடுப்பது.
காட்சி ஊடகப் பணிகள், மொழிபெயர்ப்பு பணிகள் இரண்டும் தொடந்து தங்குதடையின்றி நடைபெறவும், தன்னார்வலர்கள் அல்லாதவரின் சேவையும் தேவை இருப்பதால், நிதியின் தேவை அத்தியாவசியமாகிறது. தேவையறிந்து இலக்கிய ஆர்வலர்களும், வாசக நண்பர்களும் நிதி உதவி வழங்குகின்றனர். விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் (அமெரிக்கா) இலாப நோக்கமற்ற சேவை நிறுவனமாக 501(C)(3) பதிவு செய்யப்பட்டுள்ளதால், கொடுக்கப்படும் நிதிக்கு வரிவிலக்கு உண்டு.
ஆஸ்டின் சௌந்தர்
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் (அமெரிக்கா)
யானைப்பாதையில் பாட்டில்கள்
அன்புள்ள ஜெ வணக்கம்…
கையறு நிலையில் இதை எழுதுகிறேன். நெடுநாட்களாக பெரும் மன உளைச்சலை ஏற்படுத்திவந்தது. இந்த விழிப்புணர்வை தமிழகம் தழுவி ஏற்படுத்தியவர் நீங்கள்தான் உங்களிடமே இதைக் கொண்டு வந்து விடுவோம் என்ற எண்ணத்தில் இதை எழுதுகிறேன்.
20 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வனப்பயணங்கள் மேற்கொண்டு வருகிறேன். அதுவும் கடந்த 10 ஆண்டுகளில் மாதத்தில் குறைந்தது ஒரிரு நாளாவது சென்று கொண்டிருக்கிறேன்.
பத்தாண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இப்பொழுது நிலைமை பல மடங்கு மோசமாக விட்டதை கண்கூடாக பார்க்கிறேன்.
நேற்று ஆனைகட்டி அருகே ஒரு சிறு மலையேற்றம் சென்றேன். கோவையில் இருந்து செல்லும் வழியில் மாங்கரையை அடுத்த அடர்வனம் துவங்கும் இடத்தில் சேம்புக்கரை தூமனூர் என்ற ஆதிவாசி கிராமங்களுக்கு செல்லும் பிரிவு ஒன்று உண்டு. இது ஒரு முக்கியமான சந்திப்பு. கர்நாடக நீலகிரி மலைப்பகுதிகளில் இருந்து யானைகள் உள்ளிட்ட விலங்குகள் வெள்ளியங்கிரி சிறுவாணி வனப்பகுதிகளுக்கு செல்லும் முக்கியமான வலசை பாதைகளில் ஒன்று இது.
பத்துமுறை இவ்விடத்தை கடந்தால் இரண்டு முறையாவது யானைகளயோ காட்டெருமைகளயோ இங்கே பார்க்க முடியும்.
எப்பொழுதும் அங்கே சிறிது நேரம் நின்று நகரத்திலிருந்து வனத்திற்குள் நுழைந்த பின் நிகழும் ஒலி மாறுபாடுகளை சூழ்ந்தழுத்தும் அமைதியை பறவைகளின் ஓசையை ரசித்துச் செல்வது எனது வழக்கம். நேற்று அங்கே காரை நிறுத்தியவடன் சில நாட்களுக்கு முன்பு போடப்பட்டிருந்த யானை லத்தியை கண்டேன். அதன் மேலேயும் சுற்றியும் ஏராளமான உடைந்த மது குப்பிகள் இருந்தன. கட்டிட கழிவுகளும் அருகே இருந்தன.
என்னால் முடிந்த உடைந்த பாட்டில்களை சேகரித்தேன். அரை கிலோ மீட்டர் சுற்றளவிலேயே சில சாக்குகள் நிரம்பும் அளவு குடித்துவிட்டு எறிந்த உடைந்த பாட்டில்கள். மேலும் நடக்க நடக்க அதிர்ச்சியில் உறைந்தேன். ஒரு லாரியே கொள்ளுமளவிற்கு அத்தனை பாட்டில்கள் சாலையோரம் கிடந்தன.
இந்த ஒரு ஆண்டில் மட்டுமே மர்மமான முறையில் பல யானைகள் கோவை மாவட்டத்தை ஒட்டிய வனப்பகுதிகளில் இறந்துள்ளன. தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவு குடிப்பவர்களின் எண்ணிக்கை குடிக்கும் அளவு அதீதமாக உயர்ந்து இருக்கிறது.
இங்கு மட்டுமல்ல சென்ற வாரம் கொடைக்கானல் பெருமாள் மலை அருகே ஒரு மலையேற்றம் சென்றேன் அங்கும் இதே நிலைதான் வரைமுறையின்றி குடித்து நொறுக்கப்பட்டு வனமெங்கும் கண்ணிவெடிகளை போல் யானைகளின் கால் நோக்கி காத்திருக்கின்றன.
நான் பார்த்தவரையில் கர்நாடக தெலுங்கானா கேரள வனங்களில் நிலைமை இவ்வளவு மோசமாக இல்லை.
மு.கதிர் முருகன்
கோவை
October 4, 2021
அகம் புறம் சமன்செய்தல்
ஜெ,
யுவனின் பிறந்த நாள் பதிவு மற்றும் சில நாட்கள் முன்பு, மணிகண்டனின் பழைய பதிவிற்கு அளித்த பதிலும் [அள்ளிப் பதுக்கும் பண்பாடு] பற்றி யோசித்து கொள்கிறேன்.
வயிற்றுப்பாட்டு சூடு தீர்ந்தாலும் அதனின் ஓட்டம் சென்றபடி தான் உள்ளது. வேலை இருக்கும் வரை, பணம் சேரும் வாய்ப்பு இருக்கும் வரை, தொழில் ஓடும் வரை, உடல் ஓடும் வரை என ஓடி கொண்டு இருப்பது பஞ்சத்தின் பாதிப்பு மட்டுமல்ல என தோன்றுகிறது. அடிப்படை பற்றிய பய இறுக்கம் மாறி ஒன்றிரண்டு தலைமுறை ஆகி விட்டன. ஆனால் வீட்டு லோன், பின் அடுத்த முதலீடு, அடுத்ததின் விரிவாக்கம், என சென்றபடி இருக்கும். முதலில் ஒரு பைக், பின் ஒரு கார், நல்ல கார், அடுத்த வீடு, இடம், பிள்ளைகளுக்கு என செல்லுவது தான் இன்றைய பொருளாதார வேர் என படுகிறது. சுற்றி பார்த்தால் எத்தனை இருக்கிறது – வாங்கு வாங்கு என கடை விரித்து இருக்கும் உலகில். வாங்குவதால் உற்பத்தி ஆகி வளம் பெருகும் முன்னேற்ற மாடலில் உலகின் எல்லா நாடுகளும் எனும் போது, வாங்க முடியவில்லை எனில் கிடைக்கிறது கடன் எனும் போது, எவ்விதம் ஈட்டலின் ஒட்டமும் அளவும் குறையும்? நம்ம வாழ்க்கை இப்படியே போய்டுமா என்பது பெரிய கொக்கி இழுப்பு.
கடன் அடைத்தல் இல்லை எனும் போது, நாளை என்பதற்கு போதும் எனும் போது, என்னின் சார்பு சார்ந்த விஷயங்களில் கவனம் பெருகும். நம்மை கேட்டு பார்த்தல் தெரியும். உபரி என்பது மனநிலை சார்ந்தது அல்லவா. இது வரை சேர்ந்தவை போதும் என்று சொல்ல முடியுமா? இந்த பொருள் ஈட்டும் ஓட்டத்தில், வேறு என்ன சேர்த்து கொள்கிறோம் என்பதே. என்னின் பயணம் போன்ற தனிப்பட்ட தேடல் முதல் [தெரிந்து இருந்தால்] மற்றும் அடுத்த தலைமுறைக்கு கலை சார்ந்த சுயம் சார்ந்த தேடல் சார்ந்த துறை கண்டு அடைவதற்கு இந்த பின் புலம் உபயோகமாகுதா என்பதே.
மிக முக்கியாமாக, நாம் பேசுவது இருபதுகளில் இருந்து நான் ஒரு 50 வயது வரை சுமார் 30 வருடங்கள் செய்யும் செயல் பற்றியவை தான். அதாவது ஒரு நாளின் பெரும்பகுதி எதற்றில் செல்கிறது என்பது பற்றிய கேள்வி. எனக்கு முன் பெற்றோர் என பலர் ஒடியதால் தான், இந்த பெரும்பான்மை கூட்டம் ஒடியபடி இருப்பதால் தான், பல பேர்களின் ஈட்டலின் முதுகு பாலங்கள் மேல் ஏறி தான் இந்த இலக்கியம் படிக்கும், இயற்கை – கவிதை என ரசிக்கும் நுண்ணுணர்வும், கலை சார்வும் இருக்கும் இடம் ஒவ்வொருவரும் வந்து சேர்ந்து இருக்கிறோம். யாதெனின் யாதெனின் என்ற குறல் வழி இருத்தலும், மணம் ஆகும் போது ஆரம்பிக்கும் இந்த ஒட்டத்தின் முதல் கண்ணியை வெட்டி விட எல்லோராலும் முடியுமா?
மணிகண்டன் சொன்னதே தான். அது ஒரு ஆசிர்வாதம். கை தொட்டு என்னக்கூடிய சில கலை துறைகள் தான் கண் முன். அதில் ஒன்றை தான் பிடித்து கொள்ளுதல் அல்லது அது தன்னை எடுத்து கொள்ளுதல் என்பது ஒரு ஆசிர்வாதமே. அதனால் மேகங்களில் இருந்தபடி, பொருள் ஈட்டுதலை ஒரு பரிதாப பாவனையில் அணுகுவதை தவிர்க்கலாம்.
இன்னமும் இந்தியாவின் பாதிக்கு மேல் கூட்டம் வறுமை கோட்டுக்கும் கீழ் தான் ஒட்டியபடி அல்லது ஓடியபடி தான். அதற்கு மேல் இருப்பதில் பெரும்பான்மை சற்று தேவலாம் என்பது தான் வித்யாசம். பதுக்கியவை போதும் என தோன்றுகையில் வாழ்வின் கொண்டாட்டங்கள் பார்போம். ஆனால் அடுத்த ஒரு பெருங்கூட்டம் அந்த 30,40 வருட வாழ்வின் பாதையில் இருந்தபடி தான் இருக்க போகிறது.
கூற்றுக்கு இரை என மாயும் பல கோடிகள் போல செத்து தான் தொலைப்போமே.
லிங்கராஜ்
***
அன்புள்ள லிங்கராஜ்,
சென்ற சில நாட்களாகவே நான் யோசித்துக் கொண்டிருப்பவை இரண்டு விஷயங்கள்.
என்னை சந்திக்கும் இளைஞர் பலர், நான் இணையவழி சந்தித்த ஏராளமான இளைஞர்கள், உச்சகட்ட இலக்குகள் கொண்டிருக்கிறார்கள். அதன்பொருட்டே வாழவேண்டும் என வெறி கொண்டிருக்கிறார்கள். ‘சாதிக்கணும்சார்’ என்று ஆவேசமாகச் சொல்கிறார்கள்.
இளமையில் அந்த வெறியும் தீவிரமான உழைப்பும் தேவை. அதுவே ஆளுமையை உருவாக்குகிறது. இலக்கில்லாதவர்கள் நுகர்வில் களியாட்டத்தில், சில்லறைப்பூசல்களில், உறவுச்சிக்கல்களில், உலகியல் அலைக்கழிதல்களில் வாழ்க்கையை வீணடிப்பார்கள்.
இன்று ஒவ்வொரு குழந்தைக்கும் இளைமையிலேயே ‘ஆம்பிஷன்’கள் தேவை என கற்பிக்கப்படுகிறது. உச்சகட்ட இலட்சியங்களை கொண்டிருக்கவேண்டும் என கூறப்படுகிறது. ஒவ்வொருவரும் சாதனையாளராக ஆகிவிடவேண்டும் என்ற கட்டாயம் வீட்டுச்சூழலில், கல்விச்சூழலில், சமூகச் சூழலில் உள்ளது.
அனைவரும் முதன்மையான சாதனையாளர்கள் ஆகமுடியாது என்பது ஓர் உண்மை. சாதனை என்பது முதன்மையாக திகழ்வது மட்டுமல்ல. அந்த படிநிலையில் எங்கிருந்தாலும் அது வெற்றியே. ஒருவர் அவருக்கான பங்களிப்பை சமூகத்திற்கு, மானுடத்திற்கு, உற்றாருக்கு வழங்கினாலே அது அவருடைய சாதனைதான். தன்னை முழுமையாக வெளிப்படுத்தல், வாழ்க்கையை முழுமையாக வாழ்தல் ஆகிய இரண்டும்தான் சாதனையே ஒழிய புகழ் அல்லது வெற்றி அல்ல.
புகழ் அல்லது வெற்றி வரலாம், வராமலும் போகலாம். மாபெருஞ்செயலை இயற்றி அதன் புகழும் செல்வமும் வருவதற்குள் மறைந்தவர்கள் உண்டு. மோனியர் வில்லியம்ஸ் போல. அவர்கள் தோல்வியுற்றவர்களா என்ன? அவர்கள் தங்கள் ஆளுமையின் முழுத்திறனையும் வெளிப்படுத்தினர், ஆகவே நிறைவுற வாழ்ந்தனர், ஆகவே அவர்கள் புகழோ சமூக வெற்றியோ அடையாவிட்டாலும் சாதனையாளர்கள்தான்.
இலக்கும் அதற்கான உழைப்பும் மட்டுமே வாழ்க்கை அல்ல. இலக்குநோக்கிச் செல்லும்போது அந்த பயணமும் படைப்பூக்கம் கொண்டதாக, அதனாலேயே இன்பமானதாக இருக்கவேண்டும். உகந்ததைச் செய்வதன் கொண்டாட்டம் இருக்கவேண்டும். இல்லையேல் அச்செயல் சிறக்காது. மகிழ்ச்சி இல்லாமல் எதையுமே வெற்றிகரமாகச் செய்ய முடியாது.
இளமையிலேயே ஓர் இலக்கை குறித்துவிட்டு, விரைவிலேயே நம்பிக்கையிழந்து சோர்ந்துவிடுபவர்களாகவே இளைஞர் பலர் இருக்கிறார்கள். இளமையில் நம்மைப்பற்றி நமக்கு தெரியாது. நாம் நம்மைப்பற்றிக் கொண்டிருக்கும் பிம்பம் மிகையானதாகவே இருக்கும். சமூகம், உலகச்சூழல் பற்றிக் கொண்டிருக்கும் புரிதலும் மேலோட்டமானதாக இருக்கும். அப்போது எடுக்கும் வஞ்சினங்களும் இலக்குகளும் அப்படியே அடையத் தக்கவையாக இருக்க வாய்ப்பில்லை.
அந்த தெளிவு இல்லாததனால் ஒரு கட்டத்தில் சட்டென்று தன்னால் ‘உச்சத்தை’ அடையமுடியாது என எண்ணி, உளம்சலித்து செயலின்மைக்குச் சென்றுவிடுகிறார்கள். சோர்வில் மூழ்கிக்கிடக்கிறார்கள். ‘நான் என்னைப்பத்தி நெறைய நினைச்சிருந்தேன் சார். என் அம்மா அப்பால்லால் ஏகப்பட்ட கனவு வைச்சிருந்தாங்க. என்னாலே எதையுமே அடைய முடியாதுன்னு தோணுது’ என புலம்புகிறார்கள்.
இதை மீண்டும் மீண்டும் பார்க்கிறேன். இளமையின் துடிப்பில் எடுத்துக்கொள்ளும் மிகையான இலக்கு- அதைநோக்கிய திட்டமிட்ட தீவிரமான பயணம் இல்லாத சிதறல்- அதன்விளைவாக சோர்வு- ஆகவே செயலின்மை இதுவே இளைஞர் பலருடைய வாழ்க்கையாக உள்ளது.
இலக்கு வேண்டும். ஆனால் அதை பல உடனடி இலக்குகளாகப் பிரிக்க வேண்டும். எளிய இலக்குகளாக வென்றுகொண்டே முன்செல்லவேண்டும். மலையுச்சிக்குச் செல்பவன் பாதையை ஆயிரம் படிகளாக அமைத்துக் கொள்வதுபோல. சிறு சிறு வெற்றிகளே நமக்கு நம்பிக்கையையும் ஊக்கத்தையும் அளிப்பவை. செயலுக்கு தூண்டுபவை.
நம் இலக்கு என்பது அன்றாடச்செயலில் வெளிப்படவேண்டும். ஒவ்வொருநாளும் அதற்கான பயணம் செய்யப்படவேண்டும். வாய்ப்பு வரும், அப்போது ஒரே கொத்தாகக் கொத்திவிடுவேன் என்பவர்கள் வெறும் பகற்கனவில் இருக்கிறார்கள்.
இலக்குகளை அடைந்தவர்கள் எவராயினும் அவர்கள் சீரான நெடுநாள் செயல் கொண்டவர்கள். நெடுநாட்கள் ஒரு செயலைச் செய்ய சில அடிப்படைகள் தேவை. அதை ஓர்அன்றாடப்பழக்கமாக கொள்ளவேண்டும். அதில் இருந்து விலகாத கவனம் வேண்டும். அவையிரண்டும் தேவை என்றால் அதை உவந்து செய்யவேண்டும். அதிலிருந்து நிறைவும் மகிழ்ச்சியும் கிடைக்கவேண்டும். அதாவது படிகளில் ஏறுவதையே முழுமூச்சாக ரசித்துச் செய்பவர்களே உச்சியை அடைகிறார்கள். வெறுமே உச்சியைக் கனவு காண்பவர்கள் அல்ல.
அவ்வண்ணம் செய்பவர்கள் உச்சியை அடைந்தால்தான் வெற்றி எனக் கொள்ள மாட்டார்கள். ஒவ்வொருநாளுமே தங்களுக்கு அளிக்கப்பட்ட வெற்றி என்றே எண்ணுவார்கள். உச்சியில் இருக்கையிலும் அதை தங்கள் வழக்கமான நாட்களில் ஒன்றென்றே எண்னுவார்கள்.
மறுபக்கம் நீங்கள் சொன்னதுபோல பொருளீட்டும் வேட்கை. இங்கே பொருளீட்டுவது மட்டுமே வாழ்க்கையின் இலக்கு என இளைஞர்களுக்குச் சொல்லப்படுகிறது. “பையன் நல்ல வேலையிலே இருக்கான் சார், மாசம் ஒண்ணரை லட்சம் சம்பளம்” என்று சொல்லும் தந்தை அந்தப் பையனுக்கு அளித்த இலக்கு அதுவாகவே இருக்கும். அவர் தன் வெற்றியாக அதையே நினைக்கிறார். நம் சூழலில் எப்போதும் ஒலிக்கும் குரல்கள் அவையே.
அவற்றால் உருவாக்கப் பட்ட இளைஞர்கள் அவர்களின் ஆற்றலுக்கு மிஞ்சிய விசையில் ஓடும்படி கட்டாயப்படுத்தப் படுகிறார்கள். கடன்கள், மாதத்தவணைகள் என சிக்கிக் கொள்கிறார்கள். இளமையில் இருபதாண்டுகளை ஒரு பெரிய வீட்டை ஈட்டிக்கொள்வதற்காக ஒருவர் செலவழிக்கிறார். நவீன வீடுகள் முப்பதாண்டுகளில் பழையவையாக, மதிப்பற்றவையாக ஆகிவிடுகின்றன. அவர்களின் வாழ்க்கை முழுமையாக வீணடிக்கப்பட்டது என்றே பொருள்.
அந்த விசையில் சென்றுகொண்டே இருப்பவர்கள், பிறிதொரு அறிவார்ந்த தேடலோ நுண்ணுணர்வோ இல்லாதவர்கள், அவ்வாறே செல்லட்டும். அவர்களின் கடும் உழைப்பால் தேசப்பொருளியலுக்கு நன்மைதான். அவர்களிடம் இன்னொன்றை நான் சொல்லவே மாட்டேன். என்னிடம் அவ்வாறு ஒருவர் தன் ‘வெற்றி’களைச் சொல்ல வந்தால் பாராட்டி மகிழ்ச்சியை தெரிவிப்பேன்.
ஆனால் அதில் சிக்கிக்கொண்டு நடுவே அறிவுத்தேடலும் நுண்ணுணர்வும் நசுங்கிவிட நேரும் இளைஞர்களே என்னிடம் பேச வருகிறார்கள். அவர்கள் ஒரு கட்டத்தில் வெறுமையையும் சோர்வையும் உணர்கிறார்கள். வாழ்க்கையை இழந்துவிட்டதாக எண்ணுகிறார்கள்.
அவர்களில் ஒருசாரார் சோர்வில் விழுந்து அந்த பொருளியல் ஓட்டத்தையும் கையிலிருந்து நழுவவிட்டு விடுகிறார்கள். தங்கள் சொந்த அகவுலக வாழ்க்கையையும் வாழ்வதில்லை. வெறும் சலிப்பும் சோர்வுமாகவே ஆண்டுகளை கடத்திவிடுகிறார்கள்.
இன்னொரு சாரார் சட்டென்று ஒரு கற்பனாவாத முடிவை எடுக்கிறார்கள். உதறிவிட்டு மாற்றுவாழ்க்கை, தன் நெஞ்சைப் பின்தொடர்கிறேன் என்று கிளம்பிவிடுகிறார்கள். மிகச்சீக்கிரத்திலேயே அந்த மாற்றுவாழ்க்கையின் யதார்த்தத்தை புரிந்துகொள்ள முடியாமல் சோர்வடைந்து பின்னகர்கிறார்கள். அதன் பின் ஏற்கனவே இருந்த கனவுகள்கூட இல்லாமல் வெறுமே சலிப்பு நிறைந்த உலகியல்வாதிகளாக ஆகிவிடுகிறார்கள்.
பொருளியல் தேடும் ஓட்டத்தை ஒருவர் தவிர்க்கக்கூடாது என்பதே என் ஆலோசனை. ஏனென்றால் அதுவே இங்கே சமூக அடையாளம், வாழ்தலின் வசதி. அதைத் துறந்தால் ஏற்படும் உறவுச்சிக்கல்களும் இழப்புகளும் பெரிது. அவற்றை எதிர்கொள்ள நம் அறிவையும் நுண்ணுணர்வையும் செலவழித்தால் நாம் அறிவையும் நுண்ணுணர்வையும் வீணடிக்கிறோம். அறிவின்பொருட்டு, நுண்ணுணர்வின் பொருட்டு பொருளியலை துறந்தவர்கள் பின்னர் பொருளியலின்பொருட்டு அறிவையும் நுண்ணுணர்வையும் துறக்க நேரிடும். அது ஒருவகை ஆன்மிகச்சாவு.
ஆனால் அங்கே இழுக்கமுடிவதற்குமேல் எடையை இழுக்க முயலக்கூடாது. தன் ஆற்றலுக்குள் நிற்கும்படியே சவால்களை ஏற்றுக்கொள்ளவேண்டும். எளிதில் எய்தத் தக்க இலக்குகளையே கொள்ளவேண்டும். நம் வாழ்க்கை முழுக்கமுழுக்க இந்த உலகியல்தளத்தில் நிகழ்வது அல்ல என்னும் தெளிவிருந்தால் அந்த தற்கட்டுப்பாடு இயல்வதுதான்.
நானும் கடன்வாங்கி வீடுகட்டினேன். உலகியல் கடமைகளை எல்லாம் செய்கிறேன். ஆனால் என்னால் இயலும் எல்லைக்குள், எளிதாக என்னால் செய்யக்கூடும் செயல்களை மட்டுமே செய்கிறேன். பெருஞ்சுமைகளை ஏற்றிக்கொள்வதில்லை
பெருஞ்சுமைகளை ஏற்றிக்கொள்வது பெரும்பாலும் நம் அகந்தையால், ஆடம்பரத்தால், நம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கு மிகையாகச் செவிகொடுத்து அவர்கள் நம்மை வழிநடத்த அனுமதிப்பதனால். அந்த உணர்வுகளைக் கடந்தாலே போதுமானது.நாம் நம் எல்லைக்குள் அமையமுடியும்.
பொருளியலை நம் எல்லைக்குள், நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டால் எந்நிலையிலும் நம்மால் நமக்கான அகவுலகை உருவாக்கிக் கொள்ளமுடியும். நம் அறிவுத்தேடலை, நம் நுண்ணுணர்வின் பரிணாமத்தை நிகழ்த்திக் கொள்ளமுடியும். சிறுவிரிசலிலேயே மரங்கள் முளைத்துவிடுகின்றன.
நம் அகத்தை புறவுலகச் செயல்பாடுகள், அகவுலகச் செயல்பாடுகள் என பிரித்துக்கொள்வதும் ஒன்று இன்னொன்றை பாதிக்காமல் செயல்படுவதும் எளிய கவனத்தாலேயே செய்துகொள்ளக்கூடியவைதான். நம் ஆளுகைக்குள் உள்ள பொருளியல் நம் அகவுலகச் செயல்பாடுகளுக்கான பீடமாகவும் ஊர்தியாகவும் அமையும். நம் அகச்செயல்பாடுகளால் கிடைக்கும் விலக்கமும் நிதானமும் நம் புறச்செயல்பாடுகளை வெற்றிகரமாக இயற்றச் செய்யும். அவை ஒன்றையொன்று ஊக்கப்படுத்தும்.
நான் ஆலோசனை சொல்வது அந்த வகையான சமநிலையான வாழ்க்கையையே. அப்பயணத்தில் ஒருவர் ஒரு அகவாழ்க்கையை மெல்ல மெல்ல வளர்த்தெடுத்து அதை மட்டுமே வாழமுடியும் என்னும் நிலையை அடைந்தால் அவர் தன் புறவாழ்க்கையை துறந்து அகவாழ்க்கைக்குள் செல்லலாம். இலக்கியம், கலை, இயற்கைவாழ்க்கை என அவருக்கு உகந்ததை தெரிவுசெய்யலாம். ஆனால் அதற்கு முன் அந்த அகவாழ்க்கையை முழுக்க தன்னுடையதாக ஆக்கிக்கொண்டிருக்கவேண்டும். அதில் பழகியிருக்கவேண்டும். அதன் எல்லைகள், அதன் சவால்கள் அனைத்தையும் ஓரளவேனும் அறிந்திருக்கவேண்டும்
உள்ளமிருந்தால் சீசருக்கு உரியதை சீசருக்கும் தேவனுக்குரியதை தேவனுக்கும் அளிக்க முடியும். அவை முரண்படும் உலகங்கள் அல்ல.
ஜெ
உருமாற்றங்கள்
தேவதேவனுடனான உரையாடல்கள் ஒருவகையான பரிபாஷைகள். அவர் என்ன சொல்கிறார் என்று உண்மையிலேயே அவருக்குத் தெரியாது, அவர் கவிதைகளை அறிந்தவர்களுக்குப் புரியும்.
ஒருமுறை அவர் சொன்னார். “அசைவில்லாம இருக்கிறத அப்டியே பாத்துட்டே இருக்கலாம் ஜெயமோகன். ஒண்ணுமே ஆகாது. அப்டியே இருந்திடலாம்.சட்டுன்னு ஒரு சின்ன அசைவு. அப்டியே ஒரு அதிர்ச்சி வரும்ல, அதான் கவிதை”
”கவிதை ஒரு பெரிய பல்லின்னு சொல்றீங்க. அசைஞ்சாத்தான் எதையும் அதனாலே பாக்கமுடியும், இல்ல?”என்றேன் கேலியாக.
”அப்டியா சொன்னேன்?”என்று மேலும் குழப்பமாக கேட்டார். எதையாவது சொல்ல வரும்போது அவரிடமிருக்கும் அந்த திணறல் அச்சு அசலாக அப்படியே இளையராஜாவிடமும் இருப்பதைக் கண்டிருக்கிறேன்.
‘அசைவு’தான் கவிதையாகிறது என்று நான் நினைக்கிறேன். உள்ளே நிகழும் ஓர் அசைவு வெளியே இருக்கும் அனைத்துமடங்கிய பெரும்பரப்பை திரைச்சீலையென அலைப்பரப்பென நெளியச் செய்துவிடுகிறது. முற்றிலும் இன்னொன்றாக ஆக்கிவிடுகிறது. நாமறிந்த அனைத்தையும் நாமறியாதபடி மாற்றிக்காட்டுவதே கவிதை என்பது.
ஆனந்த்குமாரின் இக்கவிதைகளில் நாம் நன்கறிந்த ஒன்று என்னவாக உருமாறுகிறது என்று பார்க்கிறேன். சுழன்று வேகமிழந்து சரிந்து மையம்நோக்கிச் செல்வதே முதுமை. சட்டென்று கிளையிலிருந்து பறந்து எழுந்துவிடுதலா சாவு? விலகிச்செல்வதன் வழியாக மேலும் தெளிவடைவதா? அல்லது ஒரு பெயரென இங்கே எஞ்சி மிச்சமெல்லாம் அக்கரையில் திரண்டிருப்பதா?
அம்மா இப்போதெல்லாம்
அவளின் அம்மாவைப்போல்
ஆகிவிட்டாள்
தன் மகளின் உயரத்தினும்
சுருங்கிவிட்டாள்.
எதையும் கையில் எடுப்பதில்லை
தொட்டுத்தான் பார்க்கிறாள்.
நடப்பாள் ஆனால்
ஒரு பக்கம்
சரிந்த நடை
கோவிலைச் சுற்றும்போது
கோவிலைச் சுற்றவென்றே
சரித்த நடைபோல.
சுற்றி முடியப் போகும்
ஒரு நாணயத்தைப்போல
அவள் சுற்றுகிறாள்.
விட்டத்தை
குறைத்துக் குறைத்து
அவள்
நடுவிற்கு வருகிறாள்
Heidi Malott
கிளையினின்று மறைந்தவர்
அந்த ஊருக்கு
இந்த ஒருவழிதான் என்றார்
அழைத்துச் சென்றவர்.
அந்த வழி ஒரு
அடிமரம்போல் இருந்தது.
திரும்பி வரும்முன் அந்த வழியை
யாராவது அழித்துவிட்டால்
என்ன செய்வது
என பயந்தபடிதான் சென்றேன்.
ஊருக்குள் நுழைந்ததும்
அது கிளைகளாகப் பிரிந்தது.
சரியாக வழிபிடித்து
தெருமூலையில் இருந்த
வீட்டிற்கு சென்றோம்.
எங்களை வரச்சொன்னவரோ
அங்கு இல்லை.
அந்த ஒற்றை வழியிலும்
அவர் வந்திருக்கவில்லை.
அது ஒரு ஆச்சரியம்தான்.
இந்த நுனியில் இருந்து
அவர் பறந்திருக்க மட்டும்தான்
முடியும் இல்லையா.
Willem Kooning
அவளின் சாயல்
உனக்கு
அப்படியே அவளின் சாயல்
அப்படியே அல்ல
ஒரு பக்கம்.
ஒரு பக்கமல்ல
ஒரு பக்கத்தின் ஓரம்.
அதுவும் கொஞ்சம்
திரும்பி நின்றால்
கண்களைத்
தழைத்துக்கொண்டால்
புறக்கணித்தால்.
மாலை ஒளியில்
அல்ல
நிழல் விழும்பக்கம்
முகம்
முகத்தின் கோடுகள்கூட அல்ல
விழிகள் மீது
இமைகளில் வளைந்து
மேலேறிச் சுழலும் மயிர்களோ
அல்ல அதுவல்ல
நடையல்ல குரலல்ல
உனக்கு
அப்படியே அவளின் சாயல்
கொஞ்சம் விலகிச்சென்றால்
Hettie Pittman
நீ இருந்த இடத்தில்
இப்போது உன்
முகவரி மட்டும் இருக்கிறது.
உன் பெயர்தான்
இந்த முகவரியை இன்னும்
இளமையாய் வைத்திருக்கிறது.
நம்மை ஏற்றிச்சென்ற
படகென
இந்த இரவின் ஒளியில்
அது மிதக்கிறது.
மிதந்து மிதந்து
தனியே வழிகண்டு
இப்போது
காத்திருக்கிறது அக்கரையில்.
ஆனந்குமார் கவிதைகள், இணையதளம் மொக்கவிழ்தலின் தொடுகை தனிமை -ஆனந்த்குமாரின் மூன்று கவிதைகள்தலித் இதழியல்: வரலாறு முதல் சமகாலம் வரை
ஜெ.பாலசுப்ரமணியன்அன்புள்ள ஜெயமோகன்,
ஜவஹர்லால் நேருவின் வாழ்க்கை வரலாறு எழுதுவது ஏன் மிகச் சிக்கலானது என்று விளக்கிய பி.கே. பாலகிருஷ்ணனின் கட்டுரை அபாரமானது. அது பற்றி தனியாகவே எழுத வேண்டும். சமீப காலமாக காந்தி-அம்பேத்கர் என்ற இருமை, அதுவும் இரு ஆளுமைகளின் மோதலாக அதீத திரிபுகளுடன் பேசும் போக்கே அதிகரித்ததிருக்கிறது. இதில் இன்று தொலைந்துப் போன பேராளுமை நேரு. காங்கிரஸ்காரர்களே இன்று நேருவைப் பற்றி பேசத் தெரியாதவர்களாகத்தான் இருக்கிறார்கள். தமிழக காங்கிரஸ்காரர்களுக்கு காமராஜரை பேசுவதே கடினமாயிருக்கிறது இதில் எங்கேயிருந்து நேரு பற்றி பேசுவது. வரலாற்றில் இது வரை நாயகர்களாக பார்க்கப்பட்டவர்களின் குறைகளையும் அவர்களைத் தாண்டிய ஆளூமைகள் கவனம் பெறுவது நியாயமானதே. தமிழகத்தை பொறுத்தவரை பெரியார் ஒரு கடவுளாகவே மாறிவிட்டார். திராவிட இயக்கம் பற்றிய பிம்ப கட்டமைப்பு உலக வரலாற்றில் நிகரற்றது.
கடந்த மூன்று மாதங்களாக, ஜூலை முதலே, தலித் வரலாறு சம்பந்தப்பட்ட வாசிப்புகளும் அது தொடர்பான இரண்டு நிகழ்வுகளுமாக ஈடுபட்டிருந்தேன். ஜூலை மாதம் ஸ்டாலின் ராஜாங்கத்தின் நிகழ்ச்சியைத் தொடர்ந்து தலித் இதழியல் வரலாறு குறித்து ஆய்வாளர் ஜெ.பாலசுப்பிரமணியமின் புத்தகங்களை முன் வைத்து நிகழ்ச்சி நடத்தலாமென்று தோன்றியது. அதனூடாக சம கால செய்திகளிலும், ஊடகங்களிலும் தலித்துகளின் பங்களிப்பும் அவர்கள் பற்றிய சித்தரிப்புகளையும் ஆராய்ந்து எழுதிய ரத்னமாலா அவர்களின் ஆய்வையும் சேர்த்து பேசுவதென்று முடிவு செய்து செப்டம்பர் 18-ஆம் தேதி “தலித் இதழியல்: வரலாறு முதல் சமகாலம் வரை” என்ற தலைப்பில் இணைய நிகழ்ச்சி ஒன்றினை நடத்தி முடித்தோம். உங்கள் தளத்தின் வாயிலாக இன்னும் பரவலான வாசகர்களை சென்றடையவே இக்கடிதம்.
காந்திய இயக்கத்துக்கு முன்பே மது விலக்குக்காக சங்கம் நடத்தியிருக்கிறார்கள், அதற்கென ஒரு பத்திரிக்கையும் (மது விலக்கு தூதன்) நடத்தியிருக்கிறார்கள். பிராமணரல்லாதோர் இயக்கத்துக்கும் முன்பே ‘திராவிடன்’ சொல்லை பயன்படுத்தியிருக்கிறார்கள், பகுத்தறிவு பேசியிருக்கிறார்கள், ஜாதி மறுப்பு பேசியிருக்கிறார்கள், இன்னும் அநேகம்.
தலித் சமூகம் பற்றி இருக்கும் பொதுப் புரிதலை கேள்விக்குள்ளாக்கும் வரலாறு தலித் இதழியல் வரலாறு. அதனாலேயே அதிகம் பேசப்பட வேண்டியது.
நிகழ்ச்சியை ஒட்டி பாலுவின் நூல்களை அறிமுகப்பட்டுத்தி எழுதிய குறிப்புகளின் முழுப் பதிவுகள்
http://contrarianworld.blogspot.com/2021/09/blog-post_29.html.குறிப்புகளில் இருந்து சில பகுதிகள் கீழே
“ சூரியோதயம் முதல் உதயசூரியன் வரை : தலித் இதழ்கள் , 1869-1943”
தலித்துகளின் அறிவுப் பங்களிப்பைச் சுட்டிக் காட்டி அறிவுச் செயல்பாட்டில் தலித் தரப்பின் முக்கியப் பங்களிப்பை நமக்கு காட்டும் வரலாறு தலித் இதழியல் வரலாறு.
இப்புத்தகத்தின் வெற்றி தலித் சமூகம் பற்றி இருக்கும் பொரு வாசகனின் புரிதலை மொத்தமாக கலைத்துப் போட்டு நிலைப்பெற்று விட்ட பல கதையாடல்களை கேள்விக்குள்ளாக்குவதுதான்.“அறிவுத் தளத்தில் செயல்பட்ட தலித்துகள் முதரபாஷிதம், புலவர், பண்டிதர், நாவலர் போன்ற பட்டங்களை” கொண்டிருந்தார்கள் என்பது வெறும் செய்தியல்ல.
சாதிவாரி கணக்கெடுப்பால் நிகழ்ந்த சாதிய எழுச்சி, ஐ.சி.எஸ் பரீட்சையை இந்தியாவில் நடத்துவதற்கு எதிராக ரெட்டமலை சீனிவாசனின் ‘பறையன்’ இதழ் நடத்திய அறிக்கைப் போர், தலித்துகளுக்கான தனிப் பள்ளி கோரிக்கைகள் ( அதே காலத்தில் நடந்த அமெரிக்க தனிப்பள்ளிகள் போல்), தலித் அடையாள உருவாக்கம், சீர்திருத்தம், மத நம்பிக்கைகளைக் கேள்விக் கேட்பது என்று அடிப்படை வாழ்வாதாரம் தாண்டி அநேக பேசுப் பொருள்களை தலித் இதழ்கள் பேசியிருப்பதாலேயே இதனை நாம் ‘அறிவுச் செயல்பாடு’ எனலாம்.
1909-இல் “மது விலக்கு தூதன்” என்று தமிழிலும், ஆங்கிலத்தில் “Temperance Herald” என்றும் இரு மொழிகளில் டி.மனுவேல் நடத்தியிருக்கிறார். இன்று மது விலக்கு என்றாலே காந்தியைத் தான் நினைக்கிறோம் ஆனால் இப்படி ஒரு பத்திரிக்கை தலித் ஆசிரியரால் நடத்தப்பட்டிருக்கிறது. இவர்கள் மது விலக்குக்கு ஆதரவாக சங்கமும் நடத்தியிருக்கிறார்கள். அச்சங்கத்தின் வருடாந்திர கூட்டத்தில் அயோத்திதாசரும் தமிழில் உரையாற்ற, எஸ்.அஜீம் உதீன் சாயபு ஆங்கிலத்தில் உரையாற்றினாராம். “தருமதொனி (1932)” என்ற பத்திரிக்கையும் இரு மொழிகளில் வெளிவந்துள்ளது. இரு மொழிகளில் பத்திரிக்கை நடத்துவது பரவலாகவே இருந்திருக்கிறது.
எம்.சி.ராஜாவும் மற்றவர்களும் சிறார்களுக்காக பத்திரிக்கைகள் நடத்தியிருக்கிறார்கள். “ஜாதி பேதமற்றோன் (1922)” என்ற பத்திரிக்கை கத்தோலிக்க சங்கம் ஒன்றின் சார்பில் டி.ஆதிநயினார் வெளியிட்டார், அவர் ஜைன சமயத்தை சார்ந்தவர். “சந்திரிகை (1932)” என்.கிருஷ்ணமூர்த்தி என்கிற பிராமணரை ஆசிரியராக கொண்டு மாசிலாமணி தேசிகர் என்கிற ஆதி திராவிடர் வெளியிட்டார்.
‘திராவிடன்’ என்கிற சொல்லையே பிரதானமாக பயன்படுத்திய தலித் தலைவர்களும் பத்திரிக்கை வெளியீட்டாளர்களும் 1916-ல் பிராமணரல்லாதோர் இயக்கம் தங்களை திராவிடர்கள் என்று குறிப்பிடத் தொடங்கிய பின் “அதி திராவிடர்” என்று மாற்றிக் கொள்கிறார்கள். 1907-இல் “திராவிட கோகிலம்” வெளிவருகிறது. அதன் பின் 1919-இல் வெளிவந்த தலைப்புகள் ஆதி திராவிடன் (கொழும்புவில் இருந்து வெளிவந்தது), மெட்ராஸ் ஆதி திராவிடன், ஆதி திராவிட பாதுகாவலன் (1927-31).
“ பூலோகவியாஸனும் , வழிகாட்டுவோனும் : ஒரு குறிப்பு ”
தலித் இதழியலின் வரலாறு ஏன் முக்கியமானதென்றால் இதன் மூலமே நாம் தலித்துகள், காந்திய அல்லது திராவிட இயக்கங்களின் தோற்றத்துக்கு முன்பே, முன்னெடுத்த சமூக-அரசியல் முன்னெடுப்புகளை அறிந்துக் கொள்ள முடிகிறது. அப்படி கிடைக்கும் புரிதல் தலித் சமூகம் பற்றிய பொதுப் புரிதலை தகர்ப்பதோடு இன்று தாங்களே மீட்பர்கள் என்று கட்டமைக்கும் வரலாறுகளையும் தகர்க்கும்.
பூஞ்சோலை முத்துவீர நாவலரால் 1903-917 வரை நடத்தப்பட்ட பூலோகவியாஸன் இதழின் 1909-வருடத்துக்கான சில இதழ்கள் கிடைக்கப்பெற்று அதனடிப்படையில் ஜெ.பாலசுப்பிரமணியம் எழுதியது “பூலோகவியாஸன்: தலித் இதழ் தொகுப்பு” (காலச்சுவடு வெளியீடு)
“பொருளும் பொருளாளிகளும்” என்ற ஏப்ரல் 1909 கட்டுரை செல்வத்தின் நிலையாமைக் குறித்த ஜைன முனிவர் பாடலொன்றை மேற்கோள் காட்டி செல்வம் சேர்ப்போரை நல் வழியில் சம்பாத்திப்பவர்கள், தீய வழிகளில் சம்பாதிப்பவர்கள் என்று வகைப் படுத்தி அவர்களுள்ளும் சேர்த்த செல்வத்தை எப்படி செலவிடுகிறார்கள் என்பதை வகைப்படுத்தும் அருமையான கட்டுரை இப்பத்திரிக்கைகள் வெறும் அன்றாட பிழைப்புச் சார்ந்த கோரிக்கைகளைத் தாண்டி தத்துவார்த்த விசாரணையிலும் ஈடுபட்டன என்று சொல்கிறது. அதே வரிசையில் வைக்க வேண்டிய இன்னொரு கட்டுரை “அத்வைத நிரூபணம்”. கட்டுரையின் உபதலைப்பு, “விஷ்டாத்வைத வெற்றியின் மறுப்பு”. “உங்கள் மதம் ஆராய்ச்சி மதமா, நம்பிக்கை மதமா?’ எனக் கேள்விக்கேட்டு மிக சுவாரசியமாக எழுதப்பட்ட தத்துவார்த்தமான கட்டுரை.
தலித் இதழ்கள் நிச்சயமாக ஆங்கிலேய அரசை வெகுவாகப் புகழ்ந்தே எழுதிகின்றன. சுதேசிக் கப்பல் சம்பந்தப்பட்ட விளம்பரத்தை வெளியிட்டு வாழ்த்தும் போதும் அம்முயற்சி அரசுக்கு எதிராக மாறக் கூடாதென்றே வாழ்த்துகின்றது பத்திரிக்கை (டிசம்பர் 1909)
பூலோகவியாஸன் வாரன் ஹேஸ்டிங்க்ஸ் பிரபுவை சிலாகித்து பாராட்டுகிறது. அதே வரன் ஹேஸ்டிங்க்ஸ் இந்தியாவை சூறையாடிவிட்டார் என்று இங்கிலாந்து பாராளுமன்றத்தில் வழக்குத் தொட்டுத்தார் எட்மண்ட் பர்க் (Edmund Burke). பர்க்கின் ஆங்கில உரைகள் இலக்கிய உலகில் பிரசித்தம். பாராளுமன்றத்தில் அவ்வழக்கு தோல்வியுற்றது. ஹேஸ்டிங்க்ஸின் ஆட்சிக் காலத்தில் தான் முதன் முதலாக கீதை மொழிப் பெயர்க்கப்பட்டது அதற்கு நல்ல முன்னுரையும் ஹேஸ்டிங்க்ஸ் எழுதினார். எட்மண்ட் பர்க் பிரெஞ்சு புரட்சியை எதிர்த்திருக்கிறார். ஆக ஒவ்வொருவரும் ஒவ்வொரு சமயத்தில் பல முரண்களை கொண்டிருந்திருக்கிறார்கள்.
விருதுபட்டியில் (விருநகர்) மே மாதம் 21-ஆம் தேதி 1915-ல் ஆரம்பிக்கப்பட்ட “தென் இந்தியா ஒடுக்கப்பட்டவர்களின் ஐக்கிய சங்கம்” என்று தமிழிலும், ஆங்கிலத்தில் “South India Oppressed Classes Union” என்ற பெயரிலும் சங்கம் தொடங்கி நாளடைவில் 49-கிளைகள் தொடங்கி அதன் பின் தங்கள் குரலாக ஒரு பத்திரிக்கை வேண்டுமென்று 1918-இல் “வழிகாட்டுவோன்” தொடங்கினார்கள்.
பிப்ரவரி 1918 சில மாதங்கள் முன் மாண்டேகு பிரபுவுக்கு அனுப்பிய மகஜரை பத்திரிக்கையில் வெளியிட்டார்கள். 6 பக்க மகஜர் அபாரமான கோரிக்கைகள் அடங்கியது. 1909-லேயே “மது விலக்கு தூதன்” என்றொரு பத்திரிக்கை வெளிவந்ததையும் மது விலக்கு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டதையும் நேற்று எழுதினேன். இந்த 1917-இல் சமர்பிக்கப்பட்ட மகஜரிலும் “மதுபானம் (liquor traffic)” என்ற பகுதியில், கள்ளு மற்றும் மதுபான கடைகள் மூடச் சொல்லி கோரிக்கை வைக்கிறார்கள். காந்தியோ, ராஜாஜியோ இக்கோரிக்கைகளை வைக்கும் முன்பே நடந்தது இது.
“ஜீவனார்த்தம் (Economic Condition)” என்ற பகுதியில் தலித் தொழிலாளிகளுக்கு கொடுக்கப்படும் கூலி வாழ்க்கை நடத்த போதுமானதாக இல்லை என்றும் அக்கூலி “முன்னூறு வருஷங்களுக்கு முன் ஏற்பட்டதென்பதை கவர்மெண்டார் கவனித்திருக்கலாம்”. வில்வைவாசி உயர்வை கூலி பிரதிபலிக்கவில்லை என்று 1918-இல் சொன்னதை தான் 81 வருடம் கழித்து மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களும் சொன்னார்கள்.
“கல்வி (Education)” பகுதியில் கட்டாயக் கல்வி என்று சட்டம் கொண்டு வந்தால் தான் கல்வியின் தேவையறியாதவர்கள் கூட கல்விக் கற்க பிள்ளைகளை அனுப்புவார்கள் என்று மிக முக்கிய கோரிக்கை வைக்கிறார்கள். உண்மையில் இவர்களுக்கு வேறு யார் வந்து என்ன சொல்லிக் கொடுக்கத் தேவையிருந்தது என்று புரியவில்லை?
“Media and Minorities: Media Representation of Dalits in Tamil Nadu”
ரத்னமாலாவின் “Media and Minorities: Media Representation of Dalits in Tamil Nadu” சமகால ஊடகங்களில் தலித்துகள் எப்படி சித்தரிக்கப்படுகிறார்கள், ஊடக நிறுவனங்களில் தலித்துகள் ஒதுக்கப்படுவது ஆகியனப் பற்றிய ஓர் ஆய்வு.
மாஞ்சோலை படுகொலையும் அதையொட்டி தினத்தந்தி, தினமலர், தினமணி பத்திரிகைகளில் அச்செய்தி எப்படி வாசகர்களை சென்றடைந்தது என்பதை ஆய்வுக்குட்படுத்தியிருக்கிறார் ரத்னமாலா. கலவரம், சம்பவம் போன்ற வார்த்தைகளால் போலீஸ் அராஜகம் பூசி மெழுகப்பட்டது, செய்திகளை அரசு தரப்பு குறிப்புகளை அப்படியே சுவீகரித்து எழுதுவது, அரசு தரப்புச் செய்திகளோடு முதல்வர் மற்ற அதிகாரிகளின் புகைப்படத்தோடு வெளியிடும் வேளையில் புதிய தமிழகம் தலைவரின் புகைப்படம் அதே அளவு வெளியிடாமை முதலிய பாரபட்சங்கள் கடைப்பிடிக்கப்பட்டன.
வன்கொடுமை நிகழ்வுகளை வெறும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக போலீஸின் முதல் தகவல் அறிக்கையை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு செய்திகளைத் தருவது தங்களுக்கு பாதுகாப்பு என்று வெளிப்படையாகவே பத்திரிக்கை நிருபர்கள் சொல்கிறார்கள்.
அரவிந்தன் கண்ணையன்தலித் இருட்டடிப்புக்கு நீண்ட வரலாறு உண்டு. காங்கிரஸ் கூட்டங்களை தவறாமல் தங்கள் செய்திகளில் பிரசுரித்த சுதேசமித்திரன் அம்பேத்கர் சென்னைக்கு வந்து உரையாற்றியதை கண்டு கொள்ளாததை “சமத்துவம்” என்ற தலித் இதழ் கண்டித்திருக்கிறது. (ரத்னமாலாவின் புத்தகத்தில் இதைப் படித்த போது தலித்துகள் பற்றி எழுதிய பாரதியும் தலித் சங்கங்களின் செயல்பாடுகள் பற்றி எழுதியதாக நினைவில்லை).
நன்றி,
அரவிந்தன் கண்ணையன்
கதைகள், கடிதங்கள்
அமேசான் ஜெயமோகன் நூல்கள் வாங்க
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
கடந்த ஞாயிறு அன்று வீட்டில் இலவம் பஞ்சு மெத்தை தைத்துக்கொடுக்க பொள்ளாச்சியிலிருந்து மெத்தை கடைக்காரர் வந்திருந்தார். நல்ல சுத்தமான பஞ்சும், நியாயமான விலையும், வீட்டில் நம் கண்முன்னே பஞ்சை அடைத்து தைத்துத்தரும் தொழில் சுத்தமுமாக அவர் பிரபலம் தான் இந்த பகுதிகளில். பெயர் அபு, இஸ்லாமியர் கோவை, திருப்பூர் எல்லாம் கூட வீட்டுக்கே நேரில் சென்று தைத்து கொடுத்துவிட்டு வருவார்.
அன்று இங்கு வீட்டில் வேலை முடிய மதியமாகிவிட்டது எனவே மதியம் சாப்பிட்டு விட்டு போகச் சொன்னேன் மறுத்தவர் 32 வருடங்களாக தனது நண்பரொருவர் தான் தனக்கும் சேர்த்து மதிய உணவு கொண்டு வருவதாகவும் அவர் காத்துக் கொண்டிருப்பார் என்றும் சொன்னார். ஆச்சரியமாக இருந்தது ஏழாம் கடலின் வியாகப்பனை, அவர் மீதிருக்கும் கோபத்தில் மகனிடம் சீறும் அந்த பெண்ணை என்று மனம் நூறு கதைகளுக்கு சென்றது. அவரிடம் இன்னொரு நாள் இந்த நட்பை குறித்து விரிவாக கேட்க வேண்டும் என இருக்கிறேன்.
ஏழாம் கடல் போல உண்மையாகவே வருடங்கள் தாண்டிய நட்பு இருப்பது பிரமிப்பளிக்கிறது. அத்தனை வருடங்களாக சமைத்து தரும் அந்த வீட்டுப் பெண்ணையும் நினைத்துக்கொண்டேன். குடும்ப உறவுகளே இப்போது பட்டும் படாமல்தான் இருக்கின்றது. சொந்த சகோதரர்களுக்குள்ளேயே சின்ன சின்ன மனஸ்தாபங்கள், வெட்டு குத்துபழிகள் என்று உறவு சீரழிகின்றது திருச்செந்தாழையின் ஆபரணம், அதுகுறித்து எழுதிய ஒரு வாசகியின் குடும்பக்கதை இவற்றை இந்த நட்புடன் பொருத்திப் பார்த்துக்கொண்டேன்.
உங்களின் நூறு கதைகளில் ஒன்று நேரில் எழுந்து வந்தது போல் இருந்தது.
அன்புடன்
லோகமாதேவி
அன்புள்ள ஜெ,
நூறு சிறுகதைகளில் வருவதுபோல ஒரு நிகழ்வு சமீபத்தில் நிகழ்ந்தது. மதுரம் கதையிலே வருவதுபோல. ஒரு கோசாலைக்குச் சென்றிருந்தேன். அங்கே ஒரு கன்றுக்குட்டியை பசுவின் வலப்பக்கம்தான் கட்டவேண்டும் என்றார்கள். ஏன் என்று கேட்டேன். அந்த பசுவுக்கு இடப்பக்கப் பார்வை கிடையாது. “வலதுபக்கம் அது இன்னொரு பசு. இடதுபக்கம் வேறே பசு” என்று அங்கிருந்தவர் சொன்னார். ஆச்சரியமாக இருந்தது. நான் சொன்னேன் நீங்கள் கன்றை கொஞ்சநாள் கண் தெரியாத பக்கம் கட்டி அதை நக்கவையுங்கள் இடப்பக்கமும் அது சாந்தமான பசுவாக ஆகிவிடும் என்று.
ஆச்சரியமாக இருக்கிறது. தமிழ்க்கதையில் எவ்வளவோ எழுதப்பட்டுவிட்டது. இன்னும்கூட எவ்வளவோ மிச்சமிருக்கிறது.
ரவிக்குமார்
மதுரம் [சிறுகதை]***

குமரித்துறைவி
வான் நெசவு
இரு கலைஞர்கள்
பொலிவதும் கலைவதும்
தங்கப்புத்தகம்
“ஆனையில்லா”
முதுநாவல்
ஐந்து நெருப்பு
மலைபூத்தபோது
தேவி
எழுகதிர்
அந்த முகில் இந்த முகில்
உடையாள்
கதாநாயகி
ஆயிரம் ஊற்றுகள்
பத்துலட்சம் காலடிகள்
ஞானி
குகை
சாதி – ஓர் உரையாடல்
வணிக இலக்கியம்
வாசிப்பின் வழிகள்
இலக்கியத்தின் நுழைவாயிலில்
ஒருபாலுறவு
இன்றைய காந்தி
சங்கச்சித்திரங்கள்
ஈராறுகால் கொண்டெழும் புரவி
நத்தையின் பாதை
தமிழ் எழுத்துக்கள், கடிதம்
அன்புள்ள ஜெ,
நலந்தானே? ஆங்கில லிபியில் தமிழை எழுதுதல் தொடர்பான என் எண்ணங்கள்.
கையெழுத்து போட மட்டுமே பேனா எடுக்கும், 25 வயதுக்கு குறைந்த, ஆங்கில வழியில் கல்வி கற்ற, என் நண்பர்களுடன் நான் எழுத்து மூலமாக உரையாடும் பொழுது பெரும்பாலும் அவர்கள் தமிழை ஆங்கில லிபியில்தான் எழுதுகிறார்கள். நான் தமிழ் எழுத்தில் எழுதினாலும் சிலர் ஆங்கில லிபிக்கு மாறச்சொல்லிக் கேட்பதுமுண்டு. பொதுச்சமூகத்தின் மிகவும் இயல்பான மொழி வெளிப்பாடென்பது இதுபோல் தனிப்பட்ட முறையில் எழுதப்படும் உரையாடல்களில் இருப்பவையே. நாள், வார இதழ்கள் கட்டமைத்த தமிழின் பொதுநடையை இன்று தீர்மானிப்பவை, முகநூல் பதிவுகளும் தனிப்பட்ட உரையாடல்களும்தான்.
இதை எழுதிக்கொண்டு இருக்கும்போதே (19.09.2021 மதியம் இரண்டு மணி அளவில்) சந்தேகம் வந்து டிவிட்டரில் நாம் அதிகம் பயன்படுத்தும் வார்த்தைகள் ஐந்தை தமிழ் லிபியிலும் ஆங்கில லிபியிலும் தேடிப்பார்த்தேன். (தமிழர் அதிகம் எழுதும் தளங்களுள் டிவிட்டரும் ஒன்று என்பதால். முகநூல் முழுமையான தேடல் முடிவுகளை அளிப்பதில்லை. நம் நட்பு வட்டத்தைப் பொருத்து வடிகட்டிய முடிவுகளையே அளிக்கிறது என்பதாலும்.) கடந்த பதினைந்து நிமிடங்களுக்குள் எழுதப்பட்ட சில தமிழ்ச் சொற்களின் எண்ணிக்கை: ஒரு – 72, oru – 38, என்ன – 64, enna – 37, அவன் – 13, avan – 9, அம்மா – 7 , amma – 3, நான் – 38 , nan- 7, naan – 11. (பயனர்களின் பெயரில் இருந்த சொற்களைச் சேர்க்கவில்லை. ஆங்கில லிபியில் தேடும்போது பிறமொழிகளில் எழுதப்பட்டவற்றைக் கவனமாகத் தவிர்த்துவிட்டேன். ஒரே தொடரில் பல முறை ஒரு சொல் பாவிக்கப்பட்டால், ஒவ்வொரு முறையும் அச்சொல் எண்ணப்பட்டது.) பிறர் இதே தேடலை செய்தாலும் இதற்கு சமமான முடிவுகளே வரும் என்று நம்புகிறேன்.
அறுதியான, முழுமையான கணக்காக இல்லாவிடினும், தமிழில் அன்றாடம் எழுதப்படும் பேச்சுகள் பாதிக்குப் பாதி ஆங்கில லிபியில் எழுதப்படுகிறது என்றே படுகிறது. ஆனால், இது ஏன் நம் கவனத்திற்கே வரவில்லை? நான் நினைக்கும் காரணங்கள்: 1. நம்மில் பலர் பெரும்பாலும் தம் சம வயதினரிடமே அதிகம் புழங்குவதால், தமிழ் லிபியில் எழுதும் கூட்டத்தினரிடம் பழகும் வாய்ப்பே அதிகம் அமைகிறது. 2. அரசியல், கருத்தியல் சார்பு கொண்ட -மொழியைப் பழகிய- இளைஞர்களிடம் அதிகம் புழங்குவதால் எல்லா இளைஞர்களும் தமிழ் லிபியையே பயன்படுத்துகிறார்கள் என்று தவறாக நினைத்தல். (அல்லது அரசியல், கருத்தியல் சார்ந்து எழுதப்படும் பதிவுகளையே அதிகம் வாசிக்க நேர்வதால்). 3. அலுவல் ரீதியில் பழகும் தமிழர்களிடம் ஆங்கிலத்தையே அதிகம் பயன்படுத்துதல்.
எது எப்படி இருந்தாலும் ஆங்கில லிபியில் தமிழை எழுதும் மக்களின் எண்ணிக்கை குறைவதற்கான அறிகுறிகள் எவையும் தென்படவில்லை. என் நண்பர்களுள் பலர் கொஞ்சம் சிரமப்பட்டாவது தமிழ் லிபியை வாசிக்கக்கூடியவர்களே. ஆனால் அவர்கள் கடைசியாகத் தமிழ் லிபியில் வாசித்தவை பெரும்பாலும் திரைப்பட பாடல் வரிகளோ மீம்களில் எழுதப்பட்ட வாசகங்களோ தான். கணிசமான மீம்களிலும் தமிழ் ஆங்கில லிபியிலேயே எழுதப்படுகிறது வேறு. அலுவல், கருத்தியல், அரசியல் தாண்டி தமிழ் இன்னும் கொஞ்சம் வாசிக்கப்பட வேண்டும் என்றால், ஆங்கில லிபியில் தமிழை எழுதுவதில் தவறில்லை என்னும் கருத்துடன் உடன்படுகிறேன்.
ஆனால் இன்றைய பயன்பாட்டில் இருக்கும் ஆங்கில லிபி வடிவம் தரமான எழுத்திற்கு ஏற்ற வகையில் இல்ல. அன்றாடம் புழங்கும் 200, 300 சொற்களை மனம்போன படி ஆங்கில லிபியில் எழுதும் வழக்கமே இப்போதுள்ளது (நீ என்னும் ஓரெழுத்து ஒரு மொழியே ni, ne, nee என்றெல்லாம் எழுதப்படுகிறது). அம்மாவை ‘amma’ என்று எழுதும் நடையில் ‘ அம்ம’ என்னும் சங்கச் சொல்லை எழுத முடியுமா? பலர் ஒட்டு மொத்தமாக விகுதியையே தவிர்த்துவிடுகிறார்கள் வேறு. பண்ணுற, பண்ணுறேன், பண்ணுறான், பண்ணுறாள் ஆகிய நான்கு சொற்களையும் ‘panra’ என்றே எழுதுபவர்கள் உள்ளனர். (மேலே உள்ள கணக்கெடுப்பின்போது நான் என்பதை இருவர் ‘na’ என்று எழுதி இருந்ததைப் பார்த்துக் கடுப்பாகி, அவற்றைக் கணக்கில் கொள்ளாத கொடுமையும் நடந்தது). எனவே, எழுத்துக்கு எழுத்து சமானமாக எழுதும் ஒரு லிபி முறை அவசியமாகிறது.
தமிழின் குறில் நெடில் எழுத்துக்களும் இரட்டித்து வரும் எழுத்துக்களும் ஆங்கில லிபியில் அப்படியே எழுதுகையில் சிக்கலை ஏற்படுத்துகின்றன. பல வகைகளில் இந்த சிக்கல் எதிர்கொள்ளப்பட்டாலும் சில வழிமுறைகளில் வாசிப்பது சிரமமாகவே உள்ளது. நெடில் எழுத்துகளைக் குறிக்க ஆங்கில லிபியின் பெரிய எழுத்துக்களை (capital letters) போடுவது நல்ல யோசனையாகப் பட்டாலும், சிறிய எழுத்துக்களும் பெரிய எழுத்துக்களும் கலந்துள்ள சொற்றொடரைப் படிப்பது சோர்வூட்டுவது. லகரமும் னகரமும் தலா மூன்றாக இருப்பதும் இன்னொரு சிக்கல். சர்வதேச தரக் கூட்டமைப்பின் ISO 15919 (https://en.m.wikipedia.org/wiki/ISO_15919) எழுத்துமுறை சில குறைகளைத் தவிர்த்து தரமானது. அக்சரமுகம் இணைய தளத்தில் ( http://aksharamukha.appspot.com/converter) எளிதாக தமிழ் லிபியில் இருந்து பிற லிபிகளுக்கு மாற்றிக்கொள்ளலாம்.
அமைப்புகளின் துணையில்லாமல் தனிமனிதனாக இருந்து ஆங்கில லிபியில் எழுதப்படும் தமிழுக்கு தர நிர்ணயத்தைக் கொண்டுவருவது கொஞ்சம் கடினம்தான். தமிழ் லிபியை பயன்படுத்த சிரமப்படும் மக்கள் கணிசமானவர்கள் என்பதை உணராமல் யாரும் ஆங்கில லிபிக்கு ஆதரவு செலுத்தப்போவதும் இல்லை. ஏதேனும் தகுதியுள்ள அமைப்பு ஒன்று இவ்விவாதத்தைப் பொதுச்சூழலில் முன்னெடுத்தால் நல்லது. ஆங்கில லிபி முறைகளுள் ஏதேனும் ஒன்று பரவலாகப் பயன்பாட்டில் வந்தால், அதன் குறைகளைக் களைந்து மேம்படுத்தலாம். தற்சமயத்திற்கு ISO 15919 முறையையே பயன்படுத்தலாம் என்று நினைக்கிறேன்.
இப்போதைக்கு நாட்டுடமை ஆக்கப்பட்ட மின்நூல்களில் சிலவற்றையாவது ஆங்கில லிபியில் மாற்றி மின்நூல்களாகப் பதிப்பித்தால் இலக்கியம் இன்னும் சிலரை அடையும். இன்றைய நிலையே தொடர்ந்தால், எழுதுபவர்கள் மட்டுமே வாசகர்கள் என்னும் நிலை தமிழிலக்கியத்திற்கு நேர்ந்தாலும் வியக்க ஒன்றும் இல்லை.
அன்புடன்
யஸோ
October 3, 2021
இலக்கிய விவாதத்தில் எல்லை வகுத்தல்
இலக்கியத்தில் சண்டைகள்
இலக்கிய விவாதங்களும் எல்லைமீறல்களும்
அன்புள்ள ஜெ,
நீண்ட நாட்களாகக் கேட்ட வேண்டும் இருந்த கேள்வி.
இலக்கிய விவாதங்கள் மற்றும் ஒரு பிரதி குறித்து விமர்சனம் வைக்கும் போது ஒருவர் பொதுவாக ஒரு கருத்தை முன் வைத்தால் அதற்குச் சம்மந்தப்பட்டவர்கள் எதிர்க் கருத்தைக் குறிப்பிட்ட நபர் வைத்த கருத்திலிருந்து தொடங்காமல் தனிமனித தாக்குதல்களில் இறங்குகின்றனர். மேலும், தான் சொன்ன கருத்தே சரி என்ற நிலையில் உள்ளனர்.
தமிழ் இலக்கிய சூழல்களில் பிரமிள், வெங்கட் சாமிநாதன், ஜெயகாந்தன் காலத்திலும் இப்படிதான் இருந்ததா? இங்கே தனிமனித தாக்குதல் என்பது ஒருவரின் குடும்பம் தொழில் வாழ்வு வரை நீண்டு செல்கிறது. இப்படியாக இருக்கும்பட்சத்தில் இலக்கியத்தில் விவாதங்கள், ஆக்கபூர்வமான உரையாடல் நடைபெறும் என்ற கனவு கூட காணாத நிலையில் உள்ளோம்.
ஒருவர் முன் வைக்கப்பட்ட கருத்தை தம் எதிர்க்கருத்தை எப்படி வைக்கபடுமாயின் விவாதங்கள் மற்றும் உரையாடல்கள் உருவாகும். இன்றைய காலங்களில் சமூகவலை தளங்களில் இலக்கிய விவாதங்களே தனிமனித தாக்குதலாகவே மாறும் நிலை உள்ளது.
ஒரு ஆக்கபூர்வமான உரையாடல் நடைபெற வழி என்ன? இதனை எப்படி அணுகலாம்?
உங்கள் மீதும் இது போன்ற தாக்குதல்கள் நிகழும் போது அணுகும் நிலை குறித்து கூற இயலுமா?
ஆர். நவின் குமார்
***
அன்புள்ள நவீன்குமார்
இந்தக் கேள்வியை என்னிடம் உளம்வருந்திக் கேட்ட பலர் உண்டு. குறிப்பாக நான் ஒரு ரவுடியால் தாக்கப்பட்டபோது என்னிடம் மாற்றுக்கருத்து கொண்டவர்கள் அதை வெளிப்படையாக மகிழ்ந்து கொண்டாடியதைக் கண்டு இலக்கியமென்னும் இயக்கம் மீது நம்பிக்கை கொண்டிருந்தவர்கள் கடும் ஏமாற்றம் அடைந்தனர். அவர்களில் மிகவும் கசப்படைந்தவர்கள் இடதுசாரி, திராவிட இயக்கச் சார்புள்ள என் வாசகர்கள். அவர்கள் மதிப்பு வைத்திருந்த இடதுசாரி, திராவிட இயக்க எழுத்தாளர்களும் முகநூலர்களும் அவ்வாறு கொண்டாடியதை அவர்களால் ஏற்கவே முடியவில்லை.
சிலநாட்களுக்கு முன்புகூட ஒருவர் அன்று அடைந்த ஏமாற்றத்தைப் பதிவுசெய்தார். அவர்களுக்கு இணையாகவே அரவிந்தன் நீலகண்டன், ஒத்திசைவு ராமசாமி வகையறாக்களும் மகிழ்ந்து கொண்டாடினார்களே என்று நான் பதில் சொன்னேன். “அவர்கள் என்றைக்குமே தனிநபர் காழ்ப்புக்கு அப்பால் சென்றவர்கள் அல்ல. இவர்களைப் பற்றி அப்படி நான் நினைக்கவே இல்லை” என்று அவர் பதில் சொன்னார். உறுதியான ஆதரவுடன் உடன்நின்றவர்கள் என்றால் எவ்வகையிலும் நான் நேரடியாகச் சார்ந்திராத தலித் இயக்க நண்பர்கள் மட்டுமே.
புலமைக்காய்ச்சலும் அதன் விளைவான போராட்டமும் என்றும் உள்ளது. அதை நான் இத்தளத்தில் தொடர்ச்சியாக எழுதிவந்திருக்கிறேன். சங்ககாலத்திலேயே புலவர்களிடையே மோதல் பற்றியசெய்திகள் உள்ளன. கம்பன் ஒட்டக்கூத்தன் பூசல் கம்பனின் சாவில் முடிந்தமையும் நாமறிந்ததே. பின்னாளில் பாரதி, புதுமைப்பித்தன் காலகட்டத்திலும்கூட இலக்கியப்பூசல்கள் நிகழ்ந்துகொண்டே தான் இருந்தன.
இலக்கியத்தில் பலவகையில் பூசல்கள் ஏற்படுகின்றன. இலக்கியச்சூழலில் சிலருக்கே உண்மையில் வாசகர்களும் மதிப்பும் உருவாகிறது. எஞ்சியோர் இறுதிவரை தனிமையில்தான் எழுதிக்கொண்டிருப்பார்கள். அவர்கள் மதிப்புபெறும் படைப்பாளிகள் மேல் காழ்ப்பு கொள்வது இயற்கை. வெறுமே தகவலறிவும் தர்க்கத்திறனும் கொண்டு படைப்புத்திறனோ கற்பனையோ இல்லாதவர்கள் உண்டு. அவர்கள் தங்களை அறிஞர் என எண்ணி ஆணவம் கொண்டிருப்பார்கள், ஆனால் தங்களால் எதுவுமே படைக்கப்படவில்லை, படைப்பை அறியும் நுண்ணுணர்வும் தங்களுக்கு இல்லை என உணர்ந்திருப்பார்கள். அவர்கள் படைப்பாளிகள்மேல் காழ்ப்பு கொண்டிருப்பார்கள்.
படைப்பாளிகள் தங்கள் படைப்புத்திறன் குறித்த நம்பிக்கையும் அதற்குரிய நிமிர்வும் கொண்டிருப்பார்கள். அவர்கள் படைப்பவற்றின் இடமென்ன என்று அறியாத பாமரர்கள் அதை வெற்றாணவம் என நினைப்பார்கள். ஒரு செல்வந்தனின், அதிகாரம் கொண்டவனின் நிமிர்வை அவர்கள் ஏற்பார்கள். அதன்முன் வணங்கவும் தயங்க மாட்டார்கள். படைப்பாளியின் நிமிர்வை அவர்களால் உள்வாங்கவே முடியாது. அவர்களும் படைப்பாளிகளின் மேல் காழ்ப்பு கொண்டிருப்பார்கள். பொதுவாகவே அறிவியக்கம் மீது பாமரர்களுக்கு அச்சம் இருக்கும். அதை ஏளனம் காழ்ப்பு என வெளிப்படுத்துவார்கள்.
இதற்கு அப்பால் இரண்டு தளங்கள் உண்டு. உலகமெங்கும் மதக்காழ்ப்பு மதங்கள் தோன்றிய நாள் முதல் இருந்து வருகிறது. மதங்கள் உறுதியான நம்பிக்கையை, அடையாளத்தை அளிக்கின்றன. அதைநாடி அங்கே செல்பவர்கள் மாற்றுத்தரப்பினரை காழ்ப்புடன் மட்டுமே அணுகுவார்கள். சென்ற இருநூற்றாண்டாக அரசியல் நவீன மதம்போலச் செயல்படுகிறது. கருத்தியல்சார்ந்து மக்களை ஒன்றுதிரட்டி அவர்களுக்கு உறுதியான நம்பிக்கை, அடையாளம் ஆகியவற்றை அளிப்பது அரசியல். அதை நம்பியவர்களும் காழ்ப்பையே ஆயுதமாகக் கொண்டிருப்பார்கள்.
இன்றைய இலக்கியம் இலக்கியம் மட்டுமல்ல. ஜனநாயக அரசியல்சூழலில் இலக்கியம் கருத்துச் செயல்பாடாகவும் திகழ்கிறது. ஆகவே மதவாதிகளும் அரசியல்வாதிகளும் அவர்களின் காழ்ப்பு ஆயுதங்களுடன் அதை எதிர்கொள்கிறார்கள். அவர்களுக்கு எதிராகச் செயல்படுவதாக அவர்களுக்கு தோன்றினால், அவர்களின் தரப்பில் நின்று கொடிபிடிக்காவிட்டால், அவர்கள் சொல்வதை அப்படியே ஏற்று கூவாவிட்டால் வசைபாடி இழிவு செய்கிறார்கள்:
நாம் சூழலில் பார்க்கும் காழ்ப்புகள் பெரும்பாலும் இந்த தளங்களைச் சார்ந்தவைதான். அதிலும் எந்த பாமரரும் எதையும் எழுதலாமென்னும் இடம் அளிக்கப்பட்டிருக்கும் சமூகவலைச் சூழலில் காழ்ப்பே மேலோங்கி ஒலிக்கும். வேறுவழியே இல்லை, இந்நூற்றாண்டின் தனித்தன்மை கொண்ட ஒரு பிரச்சினை இது.
எழுத்தாளர்களுக்குள் உள்ள கருத்துப்பூசல்கள் எளிமையானவை. ஏனென்றால் எழுத்தாளர்கள் தனிமனிதர்களாகவே செயல்படுகிறார்கள். அவர்களுக்கு தங்கள் படைப்புக்களைப் பற்றிய பெருமிதம் இருக்கிறது. ஆகவே அவற்றின்மேல் விமர்சனம் வரும்போது அவர்கள் நிலையழியலாம். ஒவ்வொரு எழுத்தாளர்களுக்கும் தங்களுக்கான அழகியல் நம்பிக்கைகள் உள்ளன. ஆகவே அவர்களிடையே பூசல்கள் நிகழலாம். அவர்கள் கொஞ்சம் உணர்ச்சிகரமானவர்கள் என்பதனால் அந்த விவாதம் சற்று எல்லைமீறலும் ஆகும். ஆனால் அதெல்லாமே வாசகனால் எளிதில் கடந்து செல்லத்தக்கவைதான்.
சுந்தர ராமசாமியை பிரமிள் எல்லைமீறி தனிப்பட்ட முறையில் தாக்கிக் கொண்டிருந்தார். பிரமிளின் உளச்சிக்கல்களை நான் நன்கறிந்திருந்தேன். ஆகவே சுந்தர ராமசாமிக்கும் பிரமிளுக்கும் ஒரேசமயம் நெருக்கமானவனாகவும் இருந்தேன். வெங்கட் சாமிநாதனுக்கும் சுந்தர ராமசாமிக்கும் ஒவ்வாமை இருந்தது. அசோகமித்திரனுக்கு இவர்கள் அனைவரிடமும் விலக்கம் இருந்தது. இவர்கள் அனைவர் மேலும் திகசிக்கு விமர்சனம் இருந்தது. இவர்கள் அனைவரிடமும் நான் நெருக்கம் கொண்டிருந்தேன். ஏனென்றால் இந்த பூசல்கள் ஒன்றும் பெரிய விஷயங்களல்ல என அறிந்திருந்தேன்.
அரசியலாளர்களை, மதவெறியர்களை, பாமரர்களை அதேபோல கருத முடியாது. அவர்களை இன்றைய சூழலில் முழுமையாக விலக்கிய பின்னரே இலக்கியவிவாதம் நிகழ்த்த முடியும். அவர்களை வாசகர்கள் என்றோ பொதுமக்கள் என்றோ கருதமுடியாது. அவர்கள் ஒட்டுமொத்தமாகவே இலக்கியத்தின் எதிர்த்தரப்புகள். எந்த களமென்றாலும் ஒருவரை இலக்கிய விவாதத்திற்குள் பொருட்படுத்தவேண்டும் என்றால் அவர் இலக்கியம் மீது அடிப்படை மதிப்பும் ஈடுபாடும் கொண்டிருப்பவரா என்பது முக்கியம். அந்த அளவுகோலில் தேறாத ஒருவரை முழுமையாகவே விலக்கிவிடுவது, அவருடைய ஒரு சொல்லைக்கூட பொருட்படுத்தாமலிருப்பதே எதையேனும் உண்மையாக பேச, கற்றுக்கொள்ள வழியமைப்பது.
ஜெ
இலக்கிய விவாதங்களும் எல்லைமீறல்களும்
அன்றைய எழுத்தாளர்களும் இன்றைய விவாதங்களும்
இலக்கியமதிப்பீடுகளின் எல்லைகள்
கனவிலே எழுந்தது…
1970 ல் எனக்கு எட்டு வயதாக இருந்தபோது அருமனை கிருஷ்ணப்பிரியா என்னும் ஓலைக்கொட்டகையில் அம்மாவுடன் சென்று சிவந்த மண் படம் பார்த்தேன். கதையெல்லாம் புரியவில்லை. பாடல்களில் வாய்பிளந்து அமர்ந்திருந்தேன். பிறகு தூங்கிவிட்டேன். கிளைமாக்ஸில் சிவாஜி ஒரு பலூனில் ஏறிப்பறக்கும் காட்சியும் சண்டையும் வந்தபோது அம்மா எழுப்பிவிட்டாள்.
பார்த்தவை சினிமாவாக அல்ல, பெருங்கனவாக நினைவில் நின்றுவிட்டன. ஐரோப்பாவின் தொல்லியல் சின்னங்கள், மாபெரும் மாளிகைகள், பனிவெளிகள், ஆறுகள், மலர்த்தோட்டங்கள். நான் அவற்றைப் பார்க்கவில்லை, அந்த கனவுக்குள் சென்றுகொண்டிருந்தேன். மிகப்பிரம்மாண்டமான மற்றொரு உலகம்.
அதன்பின் சென்ற ஐம்பதாண்டுகளில் எத்தனையோ முறை சிவந்த மண் படத்தை பார்த்துவிட்டேன். யூடியூப் வந்தபின்னர் எப்படியும் மாதமொருமுறை பார்த்துவிடுவேன். சிவாஜியும் காஞ்சனாவும் அழகாக இருக்கிறார்கள். அவர்கள் இன்றில்லை. அந்தநிலமும் அவ்வண்ணம் இன்றில்லை. ஆனால் அக்கனவு அப்படியே இருந்துகொண்டிருக்கிறது.
இன்றுபார்க்கையில் இயக்குநர் ஸ்ரீதரின் ஆற்றல் என்ன என்று தெரிகிறது. மிகக்குறைவான படப்பிடிப்புக் குழுவினருடன் சென்றிருக்கிறார்கள். அன்று அன்னியச்செலவாணியை அரசு அளந்துதான் அளிக்கும். ஆகவே ஆடம்பரமாக எடுக்க நினைத்தாலும் முடியாது. ஸூம் லென்ஸ் மட்டுமே கொண்டுசென்றிருக்கிறார்கள். டிராலி, கிரேன் கூட இல்லை. காமிரா பெரும்பாலும் நிலைக்கால்களில் நின்று திரும்பியிருக்கிறது.
ஆனால் அந்த எல்லைக்குள் அற்புதமான காட்சிக்கோவைகளை உருவாக்கியிருக்கிறார். எதைக்காட்டவேண்டும், ஏன் காட்டவேண்டும் என்னும் காட்சியூடகப்புரிதல் கொண்ட இயக்குநர் என அவரை அடையாளம் காட்டுவன அவை. மேலும் பல ஆண்டுகளுக்குப்பின் உல்லாசப்பறவைகள் என்னும் படத்தில் ஐரோப்பா காட்டப்பட்டது. எவ்வளவு அசட்டுத்தனமான காட்சிக்கோவைகள் என்று அதைப்பார்த்தால் தெரியும்.
ஸ்ரீதர் காட்சியின் பிரம்மாண்டம், கதைமாந்தரின் துளித்தன்மை என்னும் இரட்டைத்தன்மையை நோக்கியே காட்சிக்கோவைகளை அமைத்திருக்கிறார். சிவாஜி- காஞ்சனாவில் இருந்து விரிந்து விரிந்து கொலோசியத்தின் மாபெரும் கட்டமைப்பைக் காட்டுகிறது காட்சி. அல்லது மாபெரும் கட்டிடத்தில் இருந்து அண்மைக்குச் சென்று அவர்கள் இருவரையும் காட்டுகிறது.
அருமனை என்னும் சிறு ஊர். அன்று சினிமாகூட அரிது. உலகமே வேறெங்கோ இருந்தது. தொட்டிமீன் என வாழ்க்கை. என்றோ ஒருநாள் இந்த நிலங்களுக்குச் செல்லக்கூடுமென்று எண்ணியதே இல்லை. உச்சகட்ட பகற்கனவிலே கூட. ஆனால் செல்ல நேர்ந்தது. இருமுறை. மூன்றாவது ஐரோப்பியப் பயணம் திட்டமிட்டிருந்தபோதுதான் கொரோனா வந்தது.
2018 செப்டெம்பரில் பாரீசில் நுழைந்ததுமே என் மனதுக்குள் லால லலல லாலா கேட்க ஆரம்பித்துவிட்டது. அதன்பின்வரும் இசைவிரிவாகத்தான் மொத்த ஐரோப்பியக் காட்சியும். பயணம் முழுக்க சிவந்தமண் இசை. அதைப்பற்றி பேசப்போய் அருண்மொழி கடுப்பானாள். ஆகவே நான் எனக்குள்ளேயே ஓடவிட்டுக்கொண்டிருந்தேன்.
கொலோசியம், ஈஃபில் கோபுரம் எல்லாம் அதேபோல. அதே போல தொங்கும்காரில் பயணம். சுவிட்சர்லாந்தில் அதேபோல பனிமலைகளின் கீழே சென்றேன். கனவுக்குள் நிகழ்ந்துகொண்டிருந்தது இன்னொரு மாபெரும் நிலம்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

