Jeyamohan's Blog, page 898
October 18, 2021
க்ருபா கரோ மகராஜு மொய்னுதீன்!
மொய்னுதீன் சிஷ்டி அவர்களின் பாடல்களும், அவரைப்பற்றிய பாடல்களும் சூஃபி இசையில் ஒரு பெரிய பங்கை வகிக்கின்றன. பித்தெடுக்க வைக்கும் ஆக்ரோஷமும், கண்ணீர் துளிக்கச்செய்யும் நெகிழ்வும், அமைந்து அமைந்து இன்மை வரைச் செல்லும் துல்லியமும் கொண்ட பாடல்கள் இணையத்திலேயே குவிந்து கிடக்கின்றன. கிருபா கரோ மகராஜு மொயினுதீன் என்னை இருபதாண்டுகளாக தொடரும் பாடல்.
குவாஜா மொய்னுதீன் சிஷ்டி பாடல்கள் -2
சொற்கள் எனை விலகும்போது
நான் என்ன சொல்ல?
அறிவின் நியதிகளை இதயம் மறக்கிறது
கடலில் இருந்து விலகும்
நீரோடை சலசலக்கிறது
கடல் கலப்பதோ மௌனமாகிறது
நேற்றிரவு ஞானத்தின் சொற்களை
அவனது உதடுகள் உதிர்த்தன
நாவுரைத்து செவியுணரா சொற்கள்..
மறைத்திடும் திரையை
முகத்திலிருந்து விலக்கினான்
அணுக்கமற்றவர்களுக்கு
அம்முகம் மூடப்பட்டேயிருக்கும்
இறைவனின் பாதையில் இருந்து
பக்தன் திரும்பி வந்தான்
நடந்து சென்றவன்
பிறரது தோளில் ஏறி வந்தான்
உனைப்பிரிந்த இரவில்
என் ஆன்மா உடலை விட்டுச் சென்றது:
ஒன்றிணையும் நாளில் அது
விரைவாக என் மடிக்குத் திரும்புகிறது.
மதுவின் கசப்போடு
உதடுகளைத் தீண்டும் சொற்கள்
எதிரிகளுக்கு விஷம் என்றாகலாம்
எனக்கு அவை தேனமுது.
இம்முலையைத் துறந்து
தெறித்த முத்துக்கள் எவை?
கடவுளின் ரகசியங்களின் பெருங்கடல்
புயலாக மாறுகிறது!
மதுகொணர்பவனே
நிதானமாக இருப்பவர்களுக்கு
மதுவை ஊற்றுக!
மொய்ன், நித்தியத்திலிருந்து அருந்தி
போதையில் இருக்கிறார்!
என்னிடம் வருக நண்பனே
எப்போதும் உண்மையாயிருப்பேன்
நீ என்ன கொண்டு வந்தாலும்
அதை வாங்கிக்கொள்வேன்… நான்.
நீ உளம் மகிழ்ந்து
அற்புதத்தைப் பார்க்க விரும்பினால் அருகில் வருக:
தோட்டமாய், மலர்விரிப்பாய், மலராய்
இருக்கிறேன் நான்.
உன் பாவங்களை நினைத்து
இதயம் வருந்தினால் என்னிடம் வருக
நோய்கொண்ட இதயங்களின்
மருத்துவன் நான்.
பலிபீடத்தில் இரகசிய இடங்களில்
வணங்கப்படுபவன் மட்டுமல்ல:
குடிகாரர்களின் இசைக்கலைஞன் நான்,
மதுவறைகளில் மதுஊற்றுபவன் நான்.
மடாலயங்களின் ஏகாந்தத்தில்
எனைத் தேடுபவனே வெளியே வருக
சந்தை வெளியில் உனை அடைந்திட
அலைந்து திரிகிறேன் நான்.
ஓட்டுபோடப்பட்ட சூஃபி மேலாடைக்கும்
பொன்மகுடத்துக்குமான ஆசையை விட்டுவிடு
என் தொப்பியையும் மேலங்கியையும்
உனக்கு வழங்குகிறேன் நான்.
உன் இயலாமையைக் கண்டு
மனம் தளரவோ கலங்கவோ வேண்டாம்…
ஒவ்வொரு இடத்திலும் துணையாகவும்,
இதயத்தில் அன்பாகவும், இருக்கிறேன் நான்.
துன்பத்துடன் உன் இதய ரகசியங்களை சொல்ல வேண்டாம்
உன் ஆத்மாவின் தனித்த அறையில்
அதற்குத் துணைநின்ற சதிகாரனாக
இருக்கிறேன் நான்.
உனைச் சுற்றி வட்டங்களை
எவ்வளவு காலம் வரைவாய்?
மையப் புள்ளியாக அமைக
உனைச் சுற்றி வருவது நான்..
நீ ஒரு முத்தென மயங்கும் களிமண்: பயனற்றது!
தெய்வீகப் பெருங்கடலின்
விலைமதிப்பற்ற முத்தை
கண்டுதருகிறேன் நான்!
காதலின் நெருப்பால் எரிக்கப்பட்ட
மொய்னின் உலர்ந்த விறகான உடல்
ஒரு தீப்பொறியாக மாறியது
அவர் தன்னிடம் சொன்னார் நெருப்பாகிறேன் நான்!
சுயமும் குணங்களும்
பிரிந்து இருப்பதால்
கடவுளைத் தவிர வேறு எங்கு பார்த்தாலும்…
ஏதும் பார்க்கவில்லை நான்!
அழியும் கண்ணால்
அழிவற்றவனைக் காண முடியாது என சொல்லாதே:
அவனைப் பார்த்த அளவுக்குத் என் தாழ்ந்த சுயத்தை
பார்க்கவில்லை நான்!
வருத்தப்பட வேண்டாம்!
கறை படிந்த ஆடி…பார்வையற்ற விழி..
நீங்கள் ஒருவொருக்கொருவர் கூச்சலிடுகிறீர்கள்..
பார்க்கவில்லை நான் என்று..
நிலவை நான் பார்த்ததெங்கே
என்று கேட்கவேண்டாம் நான் சென்றபிறகு
என்னுடன் நான் மட்டும் தனித்திருக்க
எவ்விடத்தில் பார்க்கவில்லை நான்?
என்னை சோதிக்க விரும்பும் எந்தப் பேரிடரிலும்
என்னை ஆழ்த்து! சோதனை செய்!
உன்னைப் பார்த்தபின் பேரழிவு தரும் ஒரு பேரிடரை…
பார்க்கவில்லை நான்!
நான் என்ன செய்ய வேண்டுமென விரும்புகிறாயோ
அதைச் செய்ய சித்தமாக இருக்கிறேன்:
உன்னிடமிருந்து வருவது ஏதாகிலும் அது பரிசு,
வேறு எதுவும் பார்க்கவில்லை நான்!
எத்திசையில் எனைக் கொண்டு சென்றாலும்
உன்னை வாழ்த்துவேன்
உன்னிலிருந்து பிரிந்து ஒரு கணமும், எப்போதும்…
பார்க்கவில்லை நான்!
மொய்னின் ஆன்மா
கடவுளுக்கு அருகில் உயர்த்தப்பட்டது…
தேர்ந்தெடுக்கப்பட்ட நபியை பின்தொடர்வதைத் தவிர
ஏதும் பார்க்கவில்லை நான்!
என் கீழ்மையிலிருந்து
வெகு தொலைவில் இருக்கும்போது
பார்ப்பவனும் பார்க்கப்பட்டவனும்
ஆகிறேன் நான்!
மதுவும் கிண்ணமும்,
மதுஅளிப்பவனும் அருகிருக்க
நாள் முழுவதும் போதையில்
மயங்குகிறேன் நான்!
கடவுளின் சங்கமத்தின் கோப்பையிலிருந்து
எனக்கு ஒரு பானம் கொடுங்கள்
கடந்து செல்லும் உலகில்
இன்னொரு மன்சூர் நான்!
‘நானே கடவுள்’ என்னும் ரகசியத்தை
சொல்லச்செய்யும் கோப்பையில் இருந்து
எனக்கு மது அளியுங்கள்
என்றைக்குமாக மன்னிக்கப்படுவேன் நான்!
மெய்மையின் சூரிய ஒளியிலிருந்து
அணுவின் மகிமை வெளிப்படுகிறது
வௌவாலின் விழிகள் அவ்வொளியைத் தாங்காது
மறைந்திருப்பது நல்லது நான்!
மொய்ன் அன்பின் நகரத்திலிருந்து வருகிறான்…
இது புகழ்பெறுமென்றால்
ஒரு அதிசயமா நான்?
நான் கொண்டிருக்கும் இந்த வலி
ஒருவருக்கும் சொல்ல முடியாதது..
காதலனின் இதயத்தின் நெருப்பு
உலர்புல்லிடம் காட்ட முடியாதது..
என் இதயத்திடம் உன்மீதான காதலை
அவ்வப்போது சொல்வதுண்டு
ஆனால் இதயம் அஞ்சிவிட்டது
இக்கதை சொல்ல முடியாதது..
இதயத்தை உடலில் இருந்து பிடுங்கி விடு
ஆன்மாவை வேட்டையாடுகிறேன்
அரசனின் தெய்வீகப் பருந்தை
கழுகென்று சொல்ல முடியாது!
உனது மாணிக்கக் கல்லுக்கு ஏங்குபவன்
கண்ணீர் குருதியின் படுக்கையில் கிடக்கிறான்
ஏழை காதலர்களின் தலையணை
பட்டு நூலால் இருக்கமுடியாது
உங்கள் சேவையில்
பல தோல்விகள் என் தவறுகள்…
என் முகத்தில் நீங்கள் சொல்லலாம்,
முதுகுக்குப் பின்னால் இருக்கமுடியாது.
உங்கள் அன்பின் வேதனையின் இரகசியங்களை
மொய்ன் சொல்வதில்லை:
அரசர்களின் தாபங்கள்
அனைவரும் அறிவதாக இருக்க முடியாது!
தமிழாக்கம் சுபஸ்ரீ
குவாஜா மொய்னுதீன் சிஷ்டி பாடல்கள்-1ஒரு மலையாள வாசகர்
நண்பர் ஒருவர் கவனத்திற்குக் கொண்டுவந்த இணைப்பு. ஒரு சிறு செய்தித்துணுக்கு. ஜ்யோதிஷ் என்னும் வாசகர்.
அடிப்படைக் கல்வி மட்டும் கற்றவர். ஆட்டோ ஓட்டுகிறார். தாய் இறந்தபின் தனிமை தாளாமல் வாசிக்க ஆரம்பித்து மிகச்சிறந்த இலக்கியவாசகராக ஆகிவிட்டிருக்கிறார். கோழிக்கோடு பல்கலைக்கழக நூலகர் அவர் வாசிப்பதைக் கண்டு பட்டதாரிகளுக்கு மட்டுமே நுழைவனுமதி உள்ள கோழிக்கோடு பல்கலைகழக சிறப்பு நூலகத்திற்குள் அழைத்துச்சென்று அனுமதி வாங்கி அளித்திருக்கிறார்.
அவர் வாசித்தவர்களில் பிடித்த எழுத்தாளர் எவர் என்னும் வினாவுக்கு என் பெயரைச் சொல்கிறார். “தமிழ் எழுத்தாளர் ஜெயமோகன். குறைவாக மலையாளத்தில் எழுதியிருக்கிறார்” என்கிறார். வைக்கம் முகம்மது பஷீரை திரும்பத்திரும்ப வாசிப்பதாகச் சொல்கிறார்.
சமீபத்தில் பள்ளிக்கே செல்லாமல் வாசிக்க ஆரம்பித்து என் எழுத்துக்கள் வரை வந்தவரான செந்திலின் பேட்டி இத்தகைய ஆச்சரியத்தை உருவாக்கியது. ஆனால் அத்தகைய பல வாசகர்களை நான் அறிவேன். முறையான கல்வி கற்காதவரும் இரும்புத்தொழிலாளருமான ராதாகிருஷ்ணன் அவ்வாறு பத்தாண்டுகளுக்கு முன் அறிமுகமானார். இன்று அவர் அறியப்படும் ஓர் எழுத்தாளராக ஆகியிருக்கிறார்.
ஆச்சரியமாக இருந்தது. தமிழில் நான் எழுதியவற்றின் நூற்றிலொரு பங்குகூட மலையாளத்தில் எழுதவில்லை. மலையாளத்தில் எழுதுவதில் ஒரு தயக்கமும் உண்டு. காரணம் கையால் எழுதவேண்டும் என்பது. ஜ்யோதிஷுக்காக மலையாளத்தில் நிறைய எழுதவேண்டும் என எண்ணிக்கொண்டேன்.
வாசகன் என்னும் நிலை வாசகர் செந்தில், கடிதங்கள் ஒரு தொடக்கம் ஒரு கதை விவாதம் வலு- சிறுகதை சுழல்– சிறுகதைகடிதங்கள்
தந்தையார் கொரோனா தொற்றால் உயிரழந்து விட்டார். ஆசானாக, நண்பனாக, மிக கடுமையாக உழைத்து என் நல்வாழ்வு ஒன்றையே லட்சியமாக கொண்டிருந்த என் இறைவன் சென்று விட்டார்.
எல்லா கொறோனா மரணம் போலவே, அருகில் செல்ல முடியாத, யாரும் வீட்டுக்கு வரமுடியாத, என் அன்னையை தேற்ற முடியாத பெரும் சோகம்.
எங்களுக்கு இரண்டாவது பிள்ளை பிறக்க ஒரு வாரமே இருந்த நிலையில் தந்தையார் மறைந்தார். மனைவியையும் அருகில் இருந்தது கவனிக்க முடியாமல், ஆனாலும் இறையருளால் என் தந்தை விருப்பம் போலவே பெண் பிள்ளை நேற்று பிறந்தது.
முதல் குழந்தை வயிற்றில் இருந்த தருணம் வெண்முரசு ஆரம்பித்தது. துபாயில் இருந்தோம்.
பதினைந்து வருட வாசகன் ஆகிறேன் தங்களுக்கு இந்த ஜனவரியுடன். நீண்ட பயணம், கிட்டத்தட்ட எல்லா நாட்களும் தங்கள் எழுத்துக்களுடன். துபாயில், தன்சானியாவில், இப்பொழுது கோவையில். வாழ்வின் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் தங்களுடன் பகிர்ந்து இருக்கிறேன்.
தாங்கமுடியாத இந்த வலியிலும் மனம் நிலைதவரவில்லை. பெரும் துயரம் அழுத்த, ஆனாலும் விலகி நின்று மனதின் ஒரு பகுதி இந்த சூழ்நிலையை கவனிப்பதை அணு அணுவாக உணர்கிறேன். இலக்கிய வாசகனாக, தங்கள் மாணவனாக அடைந்தது என்ன என்று அறிய முடிகிறது. என்றென்றும் நன்றிகள் தங்கள் திருப்பாதத்தில்..
மனைவி கர்ப்பமாக இருக்கும் பொழுது தந்தைக்கு இறுதி காரியம் செய்ய கூடாது என்று குடும்பத்தினர் கூறியதால் அவை செய்ய முடியாமல் போனது மட்டும் மிக பெரிய வலி. அவ்வாறு இல்லை என்று தெரிந்தும் எதுவும் சொல்ல இயலவில்லை. இனி அவருக்கான என் கடமைகளை செய்து முடிக்க வேண்டும்.
தாழ்மையுடன்,
எஸ்
***
அன்புள்ள எஸ்
இந்த நோய்த்தொற்றுக் காலகட்டத்தில் இதைப்போன்ற பல கடிதங்கள் வந்துகொண்டிருக்கின்றன. அனைவருக்குமே ஓரிரு வரிகள் எழுதிக்கொண்டும் இருக்கிறேன். தந்தையின் இழப்பு என்பது ஒரு காலகட்டத்தின் முடிவு. அதன்பின் நாம் இன்னொருவர் ஆக மாறுகிறோம். அந்த நிலைகுலைவு கொஞ்சநாள் இருக்கும். இந்த நாட்களை கடப்பதே முக்கியம். காலம் அதை பின்னுக்கு கொண்டுசென்றுவிடும்.
தந்தையாருக்குச் செய்யவேண்டியவற்றை பற்றிய கவலை வேண்டியதில்லை. அதற்கு நம்மிடையே மாற்றுச்சடங்குகள் உள்ளன. எப்போதேனும் காசி சென்றால் முழுமையாகவே நீத்தார் கடன்களை நிறைவு செய்துவிடலாம்.
ஜெ
***
வணக்கம் சேர்,
நான் இலங்கையிலிருந்து ஹனீஸ்.
அதிகம் எழுதி, எங்களுக்காக எழுதப்போகும் உங்களின் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை,
உங்களின் குரலை கேட்க வேண்டும் என்று என்மனம் என்னிடம் யாசித்துக்கொண்டே இருக்கின்றது.
இந்த செய்தி உங்கள் பார்வைக்கு வந்தடையுமா என்று கூட தெரியவில்லை, ஒரு அசட்டு நம்பிக்கையில் வானிலை அறிக்கை செய்தியைப் போல் என் ஆசை உள்ளது.
உங்கள் குரலை வந்தடைய நான் உங்கள் தொடர்பு இலக்கத்தை தயவுகூர்ந்து கேட்கின்றேன்
ஹனீஸ் மருதூர்
***
அன்புள்ள ஹனீஸ்
என் எண்ணை அனுப்பியிருக்கிறேன். நான் பல தளங்களில் ஒரே சமயம் செயல்படுபவன். ஆகவே பொழுது அரிதானது. ஆயினும் இந்த நோய்த்தொற்றுச் சூழலில் தேவையானவர்களிடம் உரையாடுவது முக்கியமென்பதெனால் நூற்றியிருபதுக்கும் மேல் வாசக நண்பர்களுடன் உரையாட நேரம் வகுத்துக்கொண்டேன். நாம் உரையாடலாம். சில தருணங்களில் நாம் கைகோத்துக்கொண்டு கடக்கவேண்டிய பெருவெள்ளங்கள் வந்துவிடுகின்றன.
ஜெ
October 17, 2021
புவியரசு 90, நிகழ்வு அழைப்பிதழ்
அன்பு நண்பர்களுக்கு,
கவிஞர் புவியரசு அவர்கள் 90-வயது நிறைவடைந்ததைக் கொண்டாடும் விதமாக விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் வாசகர்கள், நண்பர்கள் நடத்தும் “புவி – 90” என்ற நிகழ்வு கோவையில் 24.10.2021 அன்று இரவு உணவுடன் நடைபெறவுள்ளது.
பெருந்தொற்று காரணமாக கலாச்சார, பண்பாட்டு நிகழ்வுகளுக்கு விதிக்கப்பட்ட தடைகள் கோவையில் தளர்த்தப்படவில்லை. எனவே இந்நிகழ்வு, 75 நபர்கள் மட்டும் பங்கெடுக்கும் உள்ளரங்க நிகழ்வாக நடத்தப்பட உள்ளது.
மாலை 5.30க்கு தொடங்கி 8.30க்கு முடிவதாக நிகழ உள்ள இவ்விழாவுக்கு வரும் நண்பர்களை இத்துடன் இணைத்துள்ள கூகிள் விண்ணப்பத்தில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அனுமதி உறுதி செய்யப்பட்ட நண்பர்களுக்கு அவர்களது பதிவு எண் மெயிலில் அனுப்பப்படும். பதிவு எண் பெற்றவர்கள் மட்டுமே இவ்விழாவில் கலந்துகொள்ள இயலும். பிறர் எக்காரணம் கொண்டும் அரங்கில் அனுமதிக்கப்பட மாட்டார்கள். நண்பர்கள் ஒத்துழைக்க வேண்டுகிறோம்.
இவ்விழாவில் கவிஞர் புவியரசு, எழுத்தாளர் ஜெயமோகன், எழுத்தாளர் பவா செல்லதுரை அகியோர் பங்கேற்க இசைந்துள்ளனர். மற்ற விருந்தினர்களை உறுதி செய்தபின்னர் தெரிவிக்கிறோம்.
* பெருந்தொற்று விதிகள் காரணமாக வெளியூரிலிருந்து வரும் நண்பர்களுக்கு தங்குமிடம் ஏற்பாடு செய்து கொடுக்க இயலாது.
நண்பர்கள் அனைவருடனும் சேர்ந்து கொண்டாடப்படும் விழாக்கள் கூடிய விரைவில் நிகழ்வதாக.
நன்றி.
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfUDhWijk-hCNYmPxrk-snVA-cwRZyMdMp8F62t3AaOxONh_g/viewform
விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் கோவை
அஜ்மீர் பயணம்-1
அஜ்மீருக்கு நான் 1981ல் சென்றேன். ஊரைவிட்டு ஓடிப்போய் அலைந்த காலகட்டத்தில். அந்த அஜ்மீரே என் நினைவில் நின்றிருந்தது. 2019-ல் வெண்முரசு திரண்டு வந்து போரில் உச்சம்கொண்டிருந்த நாட்களில் அஜ்மீர் செல்வதுபோல ஒரு கனவு வந்தது. நித்ய சைதன்ய யதியும், சுவாமி தன்மயாவும் உடனிருக்கிறார்கள். நான் கையில் ஏதோ பை வைத்திருக்கிறேன்.
காலை எழுந்து அதைப்பற்றியே எண்ணிக்கொண்டிருந்தேன். ஏன் அக்கனவு வந்தது என. எனக்கு கனவுகளில் ஆழ்ந்த நம்பிக்கை உண்டு. அவை என் ஆழம் எனக்குக் காட்டும் மெய்மைகள், எனக்கிடும் ஆணைகள். என் குருநாதர்களும் தெய்வங்களும் வாழ்வது அங்குதான். ஆனால் அஜ்மீர் ஏன்?
நான் முன்னர் சென்ற அஜ்மீர் என் நினைவில் காசி போன்ற ஓர் ஊராக நினைவில் நின்றது. அங்கே எங்கும் எப்போதும் ஒலித்துக்கொண்டிருந்த கவாலி- கஸல்- சூஃபி இசை. இடுங்கலான தெருக்களின் வலைப்பின்னல். அவற்றில் சிதல்கள் என நிறைந்திருந்த பல்லாயிரம் மக்கள். சிவந்த கல்லால் ஆன பழமையான கட்டிடங்கள். அவற்றுக்குள் சுரங்கப்பாதை போன்ற வழிகளுக்குள் ஏராளமான வாசல்கள். நகர்மையமாக மிகப்பெரிய நுழைவாயில்கள் கொண்ட தர்கா. அதன் வெண்ணிற குவைமாடம்.
உண்மையில் நான் ஓச்சிற தர்காவுக்கு ஒருமுறை செல்லவேண்டுமென நினைத்துக் கொண்டிருந்தேன். கிராதம் நாவலை ஓச்சிற உப்பூப்பா பீரான் அவுலியா [ரலி] அவர்களுக்கு சமர்ப்பணம் செய்திருந்தேன். நித்ய சைதன்ய யதிக்கு மிக அணுக்கமான ஆன்மிக ஞானி அவர். அவர்கள் சேர்ந்து தொழுகை செய்யும் புகைப்படமும், அதன் ஓவியவடிவமும் புகழ்பெற்றவை.
நித்யா, நடராஜ குரு இருவருமே அஜ்மீர் சென்றிருக்கிறார்கள். நித்யாவின் உரைகளில் சைதன்ய மகாப்பிரபு, மீரா, புனித ஜான் ஆகியோருடன் அஜ்மீரில் அமைந்திருக்கும் புனிதர் குவாஜா மொய்னுதீன் சிஷ்டி அவர்களும் குறிப்பிடப்படுவதுண்டு.
நான் நண்பர் ஷாகுல் ஹமீதிடம் அஜ்மீர் செல்வதைப் பற்றிச் சொன்னேன். அது 2019 டிசம்பரில். உடனே செல்லலாம் என முடிவுசெய்தோம். ஆனால் ஷாகுல் உடனே கப்பலுக்குச் செல்லவேண்டியிருந்தது. திரும்ப வந்தபோது கோவிட் தொற்று. அவர் மீண்டும் கப்பலுக்குச் சென்றார். இம்முறை ஓராண்டுக்காலம் கடலில் இருந்தார்.
அவர் திரும்ப வந்தபோது மேலும் தாமதிக்க வேண்டாம், சென்றுவிடலாம் என முடிவுசெய்தோம். உடனே ரயிலில் இருக்கைகள் முன்பதிவு செய்தோம். அக்டோபர் 11 மாலை திருவனந்தபுரத்தில் இருந்து அஜ்மீர். ஏன் ரயில்? விமானப்பயணம்தான் வசதியானது. திருவனந்தபுரத்தில் இருந்து ஜெய்ப்பூருக்கு விமானம் உண்டு. அங்கிருந்து இரண்டு மணிநேரத்தில் அஜ்மீர் செல்லலாம். ஆனால் நான் ரயிலை விரும்பினேன்.
[image error]
விமானம் நம்மை தொடர்ச்சியான பதற்றங்களில் வைக்கிறது. பல்வேறு வரிசைகளில் நிற்கவேண்டும். சோதனைகளில் தேறவேண்டும். தொடர்ச்சியான அமைதியான மனநிலை அமைவதில்லை. இத்தகைய பயணங்களுக்கு ரயில் உகந்தது. ஏறி அமர்ந்தால் அதன்பின் மெல்ல ஒழுகிச்செல்கிறது. நாம் மக்கள் மத்தியில் இருக்கலாம், தனிமையையும் உணரலாம்.
அஜ்மீர் பயணம் மொத்தம் 56 மணிநேரம். அவ்வளவே மணிநேரம் திரும்பி வரவும் ஆகும். திருவனந்தபுரம் வரை ஒரு ரயில். அங்கிருந்து அகமதாபாத் வரை ஒரு ரயில். அங்கே மூன்று மணிநேரம் காத்திருப்புப்பு பின் அஜ்மீர் ரயில். அதாவது ஐம்பத்தாறு மணிநேரம் நீளும் புனிதபயணம். நம்மில் நாம் அமைய அவ்வளவு நேரம் கிடைக்கிறது
நீண்ட ரயில்பயணம் அலுப்பூட்டுவது என உடனே சிலர் சொன்னார்கள். ஆனால் நான் என் இளமைமுதலே boredom என்பதை உணர்ந்ததே இல்லை என்றால் நான் சொல்வதை உணர்பவர்கள் நம்புவார்கள். அலுப்பும் சலிப்பும் தாங்கள் இருக்குமிடத்தில் இருந்து மானசீகமாக எங்கோ சென்றபடியே இருப்பவர்களுக்குரியது. கற்பனையற்றவர்களுக்கு நிகழ்வது. Bore என்னும் சொல்லைச் சொல்பவர் ஆன்மிகநிலையில் மிகக்கீழே நிற்பவர். என்னால் எங்கும் சலிப்பே இல்லாமல் வேடிக்கை பார்த்தபடி, எதையாவது கற்பனைசெய்தபடி அமர்ந்திருக்க முடியும். ரயிலோ இந்தியாவிற்கு நெடுக்காக ஓடுகிறது. அது கனவில் மிதந்து ஒழுகிச்செல்லுதல்தான்.
இப்பயணத்தில் நான் தனியாகவே செல்ல விரும்பினேன். என் தனிமையை எவ்வகையிலும் கலைக்காதவர் என்பதனால் ஷாகுல் ஹமீது. அவர் ஆன்மிகமான அமைதி கொண்டவர். ரயிலின் நெரிசல் நடுவிலும் கால்நீட்ட இடம் தேடி ஐந்துமுறை தொழுகையை முடித்துவிடுவார். நல்ல இந்தி பேசுபவர். அனைத்துக்கும் மேலாக நான் அறியாமலேயே என் தேவைகளை உணர்ந்து செய்துகொண்டே இருப்பார். நான் எதைப்பற்றியும் எண்ண வேண்டியதில்லை. மானசீகமாக ஒரு சேவையாளர். எவருக்கும் உடனடியாகச் சேவை செய்ய ஆரம்பித்துவிடுபவர். பல நலப்பணிகளுடன் தொடர்புடையவர்.
வெண்முரசு இசைவெளியீட்டு விழாவின் இறுதியில் பேசும்போது அஜ்மீர் தர்காவுக்கு வழிபாட்டுக்குச் செல்லவிருப்பதைச் சொன்னேன். பல நண்பர்களுக்கு ஏமாற்றம். நான் சொல்லியிருந்தால் உடன் வந்திருப்போமே என மின்னஞ்சல்கள், மனக்குமுறல்கள். எனக்கே அஜ்மீர் இப்போது எப்படி இருக்கும் என தெரியவில்லை. ஏற்கனவே நெரிசலான நகரம். அந்நகரை விரும்புபவர்களை அன்றி உடன் சேர்க்க முடியாது.
இன்னொரு தரப்பினர் சிறு அதிர்ச்சிகளை அடைந்து கடிதங்கள் எழுதினர். அவர்கள் எவரும் என் தொடர் வாசகர்கள் அல்ல. சமீபத்தில் என் எழுத்து அறிமுகமாகி வாசிக்க ஆரம்பித்தவர்கள். பலர் ‘பிறர்’ சொல்லி எழுந்த ஐயங்களை குழப்பங்களை எழுதியிருந்தனர். தனித்தனியாக விளக்கமளிக்க விரும்பவில்லை. ஆகவே இப்போது.
”இப்போதெல்லாம் நீங்கள் நிறைய மாறிவிட்டீர்கள் என்கிறார்களே” என்பதே அதிகமாக வந்த கேள்வி. இது பலமுறை எழுந்து வந்த கேள்விதான். நான் சொல்வதெல்லாம் நான் எழுதும் எந்தக் கட்டுரையிலும் உள்ள மையமான சொற்களை சேர்த்துப் போட்டு என் தளத்தில் தேடுங்கள் என்பதுதான். இந்த தளம் தொடங்கிய நாள் முதலே பெரும்பாலும் மாற்றமே இல்லாமல் அரசியல், இலக்கியம், பண்பாடு, மதம் சார்ந்த கருத்துக்களைச் சீராகச் சொல்லிவந்திருப்பதை எவரும் காணமுடியும். பலசமயம் சொற்றொடர்களேகூட அப்படியே முன்பும் பலமுறை சொல்லப்பட்டிருக்கும். என் தர்க்கங்கள் மேலும் வளர்ந்திருக்கும் அவ்வளவுதான். மற்றபடி முரண்பாடுகளோ மாற்றங்களோ இருக்காது.
ஏனென்றால் என் அடிப்படைப்புரிதல்கள் 1997 வரையிலான காலத்தில் நித்யாவுடன் இருந்தபோதே திடப்பட்டுவிட்டவை. என் சொற்கள் இந்த கால விரிவில் மேலும் கூர்மையும் ஒழுங்கும் கொண்டிருக்கின்றன. மிக அரிதான சில விஷயங்களில் இன்று மேலதிகமான உறுதி கொண்டிருக்கிறேன், அவை ஆன்மிக அனுபவம் சார்ந்தவை. என் தன்னனுபவத்தில் இருந்து சிலவற்றைச் சொல்லத் தொடங்கியிருக்கிறேன். அதன் வழியாக நித்யாவை மேலும் நெருங்கியிருக்கிறேன்.
இன்னொரு வினா, இவ்வாறு தர்காவுக்குச் செல்வதை இந்து மதநூல்கள் அனுமதிக்கின்றனவா என்பது. அப்படி இந்துக்கள் அனைவரையும் கட்டுப்படுத்தும் நூல் என ஏதுமில்லை. அமைப்பும் இல்லை. இருக்க வாய்ப்பும் இல்லை. இந்து மதம் என்பது ஒருங்குதிரட்டப்பட்ட அமைப்பு அல்ல. ஓடைகள், சிற்றாறுகள் இணைந்து பேராறாக ஆவதுபோல மெய்ஞானத்தின் பல வழிகள் இணைந்து ஒன்றெனச் செல்லும் ஒரு பெருக்கு. இதன் வழிகளுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை.
இன்னும் சிலர் இவ்வண்ணம் இந்துக்கள் தர்க்காக்களில் வழிபடலாமா என்று கேட்டிருந்தனர். எவர் வழிபடலாம், எவர் வழிபடலாகாது என்று விளக்கம் கோரியிருந்தனர். இந்து மதத்தின் சைவம், வைணவம், சாக்தம் ஆகிய மூன்று பெரும்பிரிவுகளிலும் உபாசனை என ஒன்று உண்டு. ஒரு தெய்வத்தை, அத்தெய்வத்தின் துணைத்தெய்வங்களுடன் முழுமையாக தன்னை அளித்து வழிபடுவது உபாசனை. அதற்கு உரிய ஆசிரியர்களிடமிருந்து மந்திர உபதேசம் பெறவேண்டும். அதற்குரிய சடங்குகளும் நெறிகளும் உண்டு. உபாசனை செய்பவர்கள் பிறதெய்வங்களை வழிபடலாகாது. பிறவழிபாட்டு முறைகளுக்குள் செல்லலாகாது. உதாரணமாக சைவ தீட்சை எடுத்தவர்கள் பெருமாளையோ பிற தெய்வங்களையோகூட வழிபடக்கூடாது. அது பிழை.
இவர்களன்றி தாங்களே இஷ்டதெய்வ வழிபாடு செய்பவர்கள் சிலர் உண்டு. ஒரு குறிப்பிட்ட தெய்வம், குறிப்பிட்ட வழிபாட்டுமுறைக்குள் நின்றுகொண்டு நெறிகளையும் முறைமைகளையும் பேணுபவர்கள். அவர்களும் பிறவழிபாடுகளுக்குள் செல்லாமலிருப்பது நன்று. ஆனால் பிழை அல்ல.
ஆனால் இவர்கள் மிகச்சிலரே. எஞ்சிய இந்துக்கள் பலதெய்வ வழிபாட்டுமுறை கொண்டவர்கள். அவர்களின் அன்றாட வழிபாடுகளே பல அடுக்குகளால் ஆனவை. குலதெய்வம், குடித்தெய்வம், ஊர்த்தெய்வம் என நாட்டார் தெய்வங்களின் அடுக்கு ஒன்று. பெருந்தெய்வங்களின் அடுக்கு ஒன்று. இவ்விரண்டுக்கும் மேலே ஊழ்கம், யோகம் என அருவமான தத்துவத்தெய்வத்தை அணுகும் இன்னொரு அடுக்கு. ஓர் இந்துவுக்கு இவற்றுக்கு நடுவே முரண்பாடு இல்லை. இவை ஒன்றையொன்று நிரப்புவன.
ஏனென்றால் இறை என்பது அருவுருவான ஒன்று என்றும், அத்தனை தெய்வங்களும் அதன் வெளிப்பாடுகளே என்றும் அவன் அறிவான். இறைமையின் வெளிப்பாடுகள் அனைத்தையும் வழிபடுவதையே அவனுடைய மதம் அவனுக்கு கற்பிக்கிறது. அதில் பேதம் ஏதும் இல்லை. இந்து மதத்தின் சாராம்சமாக அமைவது வேதாந்தமே. அது அனைத்து மெய்ஞானங்களாகவும் அறியப்படுவது பிரம்மமே என்று உரைக்கிறது. ஆகவேதான் ராமகிருஷ்ண மடத்திலோ நாராயணகுருகுலத்திலோ கீதையுடன் பைபிளும் குரானும் ஓதப்படுகின்றன. ஊட்டியில் கபாலா ஓதப்படுவதையும் நான் கண்டிருக்கிறேன்.
தர்கா இஸ்லாமிய மதத்திற்குள் உள்ள ஓர் தனி வழிபாட்டு முறை. இறையறிந்த மெய்ஞானியரின் திகழ்விடத்தை வழிபடுவது அது. சிலர் சொல்வதுபோல இறந்தவர்களை வழிபடுவதல்ல அது. கல்லறை வழிபாடும் அல்ல. அவர்கள் அடைந்த மெய்ஞானத்தை வழிபடுவதுதான். அதன் தொடர்ச்சியை உள்வாங்கிக் கொள்வதுதான். ஒரு மெய்ஞானி திகழ்ந்த இடம் அவரே என்பதனால் அங்கு சென்று வழிபடுவது அவரை அணுகி அறிவதற்கு நிகர். அவ்விடத்தில் தலைதாழ்த்தி வணங்குவது நாம் நம் சிதறல்களை, சிறுமைகளை உணர்ந்துகொள்ளவும் அதனூடாக நம்மை தூய்மைசெய்து கொள்ளவும் வழியமைக்கிறது.
இறைவன் முன் மானுடர் அனைவரும் நிகரே. ஆனால் அனைவரும் இறையறிதலை முழுமையாகச் சென்றடைவதில்லை. அதற்காக முழு வாழ்க்கையையும் அளிப்பதில்லை. அதன்பொருட்டு பிற அனைத்தையும் துறப்பதில்லை. சில அம்புகளுக்கு விசை மிகுதி. சில பறவைகளுக்குச் சிறகுகள் பெரியவை. முழுமையறிவு அரிதாகச் சில மானுடரிலேயே நிகழ்கிறது. அவர்களையே ’இறைநேசர்கள்’ என்று இஸ்லாம் குறிப்பிடுகிறது. ஓர் இந்துவுக்கு அவர்கள் இறையை அறிந்து அருகமைந்தவர்கள். ஆகவே இறையருளை அளிக்கும் மையங்கள். அவர்கள் வாழ்ந்த இடம், அமைந்த இடம் அவ்வகையில் முக்கியமானது. வழிபடற்குரியது.
அஜ்மீர் தர்கா இஸ்லாமியர்களுக்கு இணையாகவே இந்துக்களாலும் ஐநூறாண்டுகளாக வழிபடப்படுகிறது. அதை கட்டியவர்களில் இந்து மன்னர்களும் பலர் உண்டு. இந்தியாவிலுள்ள முக்கியமான தர்காக்களில் வழிபடுபவர்களில் பெரும்பாலானவர்கள் இந்துக்களே. அது ஐந்துநூற்றாண்டுகளாக இங்குள்ள மரபு. மெய்ஞானியர் எவராலும் அது விலக்கப்படவில்லை. மாறாக ஏற்கப்பட்டு பரிந்துரைக்கவும் பட்டுள்ளது.
இதற்கும் அப்பால் ஒன்றுண்டு, அது வேதாந்த மரபினர்களுக்குரிய முதன்மையான அறைகூவல். வேதாந்தம் முன்வைக்கும் இறையுருவகம் என்பது அருவமானது, அனைத்து அறிதல்களையும் கடந்த ஒன்று. ஆனால் அதை இங்கே முன்வைத்துப் பேச உருவமும் உருவகமும் தேவை. அழகும் ஆழ்பொருளும் வேதாந்தத்தின் நோக்கில் பிரம்மத்தின் முகங்கள். கலையும் இலக்கியமும் அதன் வெளிப்பாடுகள். ஆகவே உருவவழிபாடு வேதாந்திகளுக்கு ஏற்புடையதே. சங்கரர் முதல் நாராயணகுரு வரை சிவனையும் விஷ்ணுவையும் காளியையும் எல்லாம் பாடியிருக்கிறார்கள்.
ஆனால் அதற்கு வேதாந்த மரபில் இரண்டு நிபந்தனைகள் உண்டு. ஒன்று, வடிவத்தெய்வத்தை வழிபடும் பாடலிலேயேகூட அதை அருவப்பேரிருப்பு என சிறப்பிக்கும் வரியும் இடம்பெற்றாகவேண்டும். இரண்டு, உருவ வழிபாட்டில் உணர்வுகள் எல்லை கடக்குமென்றால் அருவவழிபாட்டுக்கு உடனே திரும்பிச் சென்றாகவேண்டும்.
வெண்முரசின் உச்சங்கள் வழியாக நான் உணர்வுசார்ந்த எல்லைகள் சிலவற்றை கடந்தேன் என நினைக்கிறேன். குறிப்பாக கண்ணன் பற்றிய வரிகளில். ஆகவே இந்தப்பக்கம் செல்ல வேண்டியிருந்தது. இது நானே விளக்கமளிப்பது. இது ஒரு தர்க்கபூர்வ புரிதலாக இருக்கலாம். ஆழத்து தேவை என்னவென்று என்னால் சொல்ல முடியாமலிருக்கலாம்.
[image error]
போர்க்களத்தை எழுதி முடித்ததுமே ஒரு கனவு வந்து தன்னந்தனியாக கேரளத்தில் உள்ள பாச்சல்லூர் குளத்திங்கரை பகவதி கோயில் சென்று வணங்கி வந்தேன். அங்கே மிகமிகத் தீவிரமான ஓர் அனுபவத்தை அடைந்தேன். அங்குள்ள மூத்தோள் சன்னிதியில் நான் அறிந்தது எவரையும் உருவடிவ தெய்வ வழிபாட்டில் ஆழ அமிழ்த்திவிடும் மெய்நிகர் அனுபவம். சாவுக்கு அப்பால் என எப்போதுமிருக்கும் வினாவும் திகைப்பும் அன்று இல்லாமலாகியது. இதற்கப்பால் சொல்ல விரும்பவில்லை. இது அதைப்போன்ற ஒரு பயணம். ஒரு மறுதிசை.
அனைத்துக்கும் அப்பால் கலைஞனாக என் தேவை ஒன்று உண்டு. அஜ்மீரின் குவாஜா மொய்னுதீன் சிஷ்டி அவர்கள் இந்திய மெய்ஞானமரபிற்கு மட்டுமல்ல இந்திய இசைமரபுக்கும் கலைமரபுக்கும் மிகமிக முக்கியமான ஒரு தொடக்கப்புள்ளி. பெருங்கவிஞர். மாபெரும் இசைக்கலைஞர்களின் அறுபடாத ஒரு பெருமரபு அவரிலிருந்து இன்றுவரை நீண்டு நம் முன் பெருகி நின்றிருக்கிறது. இந்தியாவின் கிருஷ்ணபக்தி மரபு இந்திய இசைக்கு என்ன அளித்ததோ அதற்குச் சற்றும் குறைவில்லாதது அது. இந்தியநிலத்தின் கலைப்பேராறுகளில் ஒன்றின் ஊற்றுமுகம் அஜ்மீர்.
நான் இந்நாட்களில் என் தலைமுழுக்க பித்தின் இனிய மதுவை நிறைத்துக் கொண்டிருக்கிறேன். என் உடலே மெல்லிய மின்னதிர்ச்சிகள் நிகழ்வதுபோல நடுக்கம் கொண்டிருக்கிறது. இரும்பை நாநுனியால் தொட்டால் உணர்வது போன்ற ஒரு கூச்சமா இனிமையா என்றறியாத சிலிர்ப்பு அது. எவையெவையோ எண்ணங்களாகி என் மேல் நீர்நிலைமேல் தென்றலென கடந்துசென்றபடியே இருக்கின்றன. நான் சிஷ்டி அவர்களின் பாடல்களை வாசிக்கையில் உருகி அவர் அடிகளில் படிந்துவிடுகிறேன். என் விம்மும் தலையை அவர் காலடியில் ஒருகணம் வைத்து எடுத்தாகவேண்டும் என விழைந்தேன்.
[மேலும்]
குவாஜா மொய்னுதீன் சிஷ்டி பாடல்கள்
குவாஜா மொய்னுதீன் சிஷ்டி அவர்களின் இசைப்பாடல்கள் இவை. காதல்பாடல்களின் வடிவில் அமைந்தவை. இறையனுபவத்தை இவ்வண்ணம் கூறும் பாடல்கள் சூஃபி மரபில் ஏராளமாக உள்ளன. இவற்றுக்கு எல்லா மதங்களிலும் உதாரணங்கள் உண்டு.
1மனமே, காதலின் அவையில் நிலைமறந்த காதலரின் வட்டத்துக்குள் வந்துவிடு.
நித்தியத்தின் மதுவை அவர்கள் உனக்கு தருவார்கள்.
வா, ஈருலகை ஆறு வாயில்களுக்கு* உள்ளே வைத்து விடு.
இந்த சூதாட்டத்தில் ஒட்டுமொத்த மெய்மையை பணயம் வைத்துவிடு.
என்றுமுள்ள இருப்பை நீ தேடினால்
இல்லாமல் ஆவதன் வழியைத் தேடு.
பொய்த்தோற்றங்களை கைவிடாமல் இறைவனை அணுகமுடியாது.
மன்னனின் கையில் இருந்து பறந்தெழுந்த மன்னனின் பருந்து நீ.
அவனது ஒப்புதல் இன்றி பறந்தலையாதே.
அவனிடம் திரும்பிவிடு.
மானுடத்தின் இருள்வழியை கடக்கும் போது
ஆழத்தில் இருந்து தெய்வீகத்தின் உச்சம் வரை நீ காண்பாய்.
காதலின் புராக்^ நூறடிகள் எடுத்து உன்னைத் தேடி வருகிறது.
தயக்கத்தைக் உதறி விடு.
துணிந்து காலடிஎடுத்து வை.
உனது காதலனைத் தேடி ஒவ்வொரு வாயிலாக எவ்வளவு காலம் அலைவாய்?
உள்ளே பார், நீ ஒரு ஆடி, அழகைப் பிரதிபலிப்பாய்!
காதலின் மேகம் நேசத்தைப் பொழியும்போது
பூமியில் மலர்கள் தானாக மலருமா என வியப்படையாதே.
உனது உருவம் எனும் திரையை உன்னுள் இருந்து அகற்றி விடு.
யாருடைய அழகு மிஞ்சி இருக்கிறதென நீ காண்பாய்.
கண்ணீரால் உடலின் துருவை அகற்றி மெருகூட்டு.
உனது ஆன்மாவின் ஆடியில் அவனது பேரழகைப் பார்.
உனது கண்களின் தூசியை அகற்ற முயற்சி செய்.
தெய்வீகஒளி தழல் கொண்டு எரிவதை காண முடியும்.
தெய்வீகஒளியின் மிளிர்வை நீ விவரிப்பதாக இருந்தால்
மொய்ன், உனது அழகிய உருவில் இருந்து
அழியக்கூடிய திரையை அகற்றிவிடு.
* ஆறு வாயில்கள் – மாயையின் ஆறு அடுக்குகள், ஏழாவது வாயில் கடவுள்
^ புராக் – வெள்ளை நிறமான விலங்கு, கோவேறு கழுதை போன்றது, இறகுகள் கொண்டது, நபிகள் நாயகத்தை சொர்கத்துக்கு ஏற்றிச் சென்றது
என்னுடைய பாதையில் யாரொருவர் தினமும் ஒரே ஒரு அடி முன்னேறினாலும்
உல்லாச அரண்மனையின் விருந்துக்கு வந்து சேரலாம்.
எனக்கும் என் காதலனுக்கும் இடையே பல்லாயிரம் திரைகள் இருந்தன.
என் தேம்பலின் பெருமூச்சின் ஒற்றைச் சுடர் அவற்றை முழுமையாய் எரித்தது.
காதலின் பாதையில் வலி மிகுந்த இதயத்தின் துணை போதும்.
இதயத்தின் தனிமையில் விடியலின் புலம்பல் தோழியாகும்.
வாழ்வைத் துறந்தபோது நான் கடவுளின் உறைவிடம் ஆனேன்.
என்னை நான் எரித்தபோது என்னவானேன் என சொல்லக்கூடுமோ?
உலகில் அனைவரும் தொடர்ந்து வாழ விரும்புகிறார்கள்.
ஆனால் என் நண்பனே, நான் மரணத்தில் எரிக்கப்பட விழைகிறேன்.
ஓ மொய்ன், காதலனோடு இணைவதற்கு உயிரை அளிக்க வேண்டும்
வாழ்வை இழப்பது காதலில் அடைவதென்றாகும் அக்கணமே
நபியின் இரக்கத்தின் ஒரு துளி ஈரம் கனிந்து இவ்வுலகாயிற்று
ஆதாம் அவரது காலடி மண்ணின் ஒரு கைப்பிடித் துகள்
ஆதாம் அவனது இனிய உறக்கத்திலும் அகல விழித்திருந்தான்
கடந்த காலத்தின் இருப்பு மகத்தானது
அவன் அனுப்பப்பட்ட சக்தி
இயேசு சூரியனைப் போல வானில் தனது கூடாரத்தை இட்டார்
அவரது பதாகையின் நிழல் வெல்ல ஆசைகொண்டார்
அவர் வெளிப்படும் சக்தி
சமுத்திரத்தின் வயிற்றில் ஒளிந்திருக்கிறது முத்து
அவரது இதயமோ சமுத்திரம் நூறு சமுத்திரங்களை உள்ளடக்கியது
அவர் பின்தொடரும் சக்தி
நரகத்தில் இருந்து விடுதலை பத்திரம் வைத்திருக்கும் ஒவ்வொருவரும்
அந்த ஒருவரின் அடிமை என்னும் சாசனத்தையும் வைத்திருக்கிறார்கள்
அவர் உண்மையான சக்தி
அவரை பின்பற்றுபவர்களுக்காக இவ்வுலகின் மகிழ்ச்சியைத் துறந்தார்
அந்த மகிழ்ச்சிகளை அவர் அறிவார், எனில் துன்பத்தையே தேர்ந்தெடுத்தார்
அவர் மோன சக்தி
உங்கள் நற்குணங்கள் சிறியவை, தீமைகள் பெரியவை என்று அவர் கண்டபோது
அவருடைய துக்கம் அதிகம் மகிழ்ச்சி குறைவு என நான் அறிவேன்
அவர் இல்லாத சக்தி
ஒவ்வொரு மூச்சிலும் அவரோடு கலக்கவென்று கனலும் இவ்வாழ்வு
அவரது மூச்சோடு என்னுடையது கலப்பதற்காகவே காத்திருக்கிறது
சக்தி!
உனது அகந்தையின் முகத்திரையை எறிந்துவிடு
உண்மையின் அழகிய ஆடைகளை அணிந்துவிடு
கௌரவத்தின் கண்ணாடியை அவமதிப்பின் கல்லால் நொறுக்கிவிடு
காதலின் பாதையில் போலி பக்தியின் துகிலை உரித்துவிடு
சொர்க்கத்தின் நந்தவனம் என் குடிலில் நீளும் சிறு கிளைதான்
உலகு விதைத்த பார்லி மணிகளை நான் வாங்க வேண்டியதில்லை
இரு உலகிலும் விழி திறப்பேன் என அவன்மீது உறுதி அளிக்கிறேன்
அவன் அழகை என் விழிகள் அறியும் வரை
என் இருப்பெனும் மரத்தின் ஒவ்வொரு இலையிலும்
மோசஸிடம் அது சொன்ன காதலின் ரகசியங்களை கேட்கிறேன்
உனது அன்பென்னும் நெருப்பில் நான் எரிந்து போவது அதிசயமா?
நான் தாங்குவதுபோல தூர் மலை உனது கதிரொளியை தாங்கமுடியாது
மொய்ன், காதலனின் அழகு அறிவின் கண்களால் பார்க்கப்படுவதல்ல
லைலாவின் அழகு மஜ்னுவின் கண்களுகே தெரியும்.
எனது இதயமும் ஆன்மாவும்
கொள்ளையடிக்கப்பட்டுவிட்டது அழகிய
அவனது பெயரால்..
எனது உலர்ந்த உதடுகள் நனைக்கப்பட்டன
தூய்மையின் துளியென்ற
அவனது பெயரால்..
இறைவனின் பெயரை உச்சரித்துக் கொண்டே இரு
அவனோடு கலக்க வேண்டுமென்றால்.
கலப்பதென்பது அவன் பெயரோடு இணைந்திருத்தலே
என்றறிவாய்.
பெயருக்கும் பெயரிடப்பட்டதற்கும்
இடைவெளி மறையும்போது
அதன் மகத்துவத்தை உணர்வாய்
அவனது பெயரால்..
அவனோடுதான் அமர்ந்திருக்கிறாய்
இரவும் பகலும் என்றுணர்ந்துகொள்
உனது உற்றதுணை நினைவில் இருக்கும்
அவனது பெயரானால்..
விண்ணக உலகின் வெளியில்
நீ சிறகு விரித்து பறக்கலாம்
இறைவனின் பெயர் என்னும்
தெய்வீகச் சிறகுகளை துணைக்கொண்டால்
அதன் வியப்பிலும் மகிழ்விலும் அழகிலும்
நான் எனை மறக்கிறேன்
நூறு வாழ்வை தரச் சித்தமாவேன்
அவன் பெயரின் மகிமையை கேட்பதற்கு
இறைவனின் பெயரை உச்சரிப்பதில்
மொய்ன் எப்போது பொறாமை கொண்டிருக்கிறான்?
இறைவனின் பெயர் மீதும் பொறாமை கொள்ளக் கூடுமோ?
ஒருவரின் இதயம் ரகசியங்களை அறிந்துவிட்டால்
இறைவனை அறிதலே அறிவென்று தெரியும்
கடவுளின் தரிசனத்தைத் தேடுபவனின் ஆன்மா
ஆவதன் நிலையே ஆன்மா என்று தெரியும்
மறைவாய் புதைத்த செல்வம்
சந்தைக்கு வரும்போது
வாங்குவதற்கு வந்து சேரும் பக்தன்
ஆசீர்வதிக்கப்பட்டவன்
தெய்வீக காதலன் ஆடியாகிய என்னில்
தன்னை நோக்குகிறான்
அதனால் தேடுபவனும் தேடப்படுவதும் ஒன்றாகிறது
நகைக்கு அதன் மதிப்பு தெரியாது
அதை செதுக்கி விலைமதிப்பற்றதாக்கும்
பொற்கொல்லன் அறிவான்
தூசியும் துளியும் படிந்த திரையை
இதயத்தில் இருந்தும் ஆன்மாவில் இருந்தும் அகற்று
உனது இருப்பில் இருந்த இருள் ஒளியால் நிறைவதை பார்ப்பாய்
இருப்பெனும் அவையில்
நித்தியத்தின் கோப்பையில் இருந்து பருகுபவர்
கடவுளுடன் கலப்பதற்கான
கயிறைப் பற்றியிருக்கிறார்
சாரம் மேலேறிச் செல்கிறது
மதுவை ஊற்றுபவனின் முகபிம்பம்
மதுக்கோப்பையில் தெரியும்போது
பக்தன் மதுக்கடை நோக்கி திரும்புகிறான்
போதையில் தனைமறைக்கிறான்
உனது நீண்ட கூந்தல் இழையில் சிக்குபவன்
தியான மணிகளை உடைக்கிறான்
கயிறு இறுகுகிறது
திரை மறைவில் இருந்து வெளிப்படும்
ரகசியம் என்னவென்று கவனி
அறியாதிருந்த இதயங்கள் இப்போது அறிந்ததென்ன?
என் மேல் பொழியும்
இறைவனின் கருணையும் அருளும் உடனிருக்க
பாவியும் நினது அடிமையாகலாம்!
நீ ஒரு காலையில்
உனது நோயாளியின் நலனறிய வருவாய் என்றால்
உனக்காக உருகும் நலமுடையோர் கூட
நோய் கொள்வார்கள்
உறக்கத்தில் காதலனின் மடியில் தலை வைத்து உறங்கியதை
விழிப்பில் கண்டுகொள்ளும் தருணம்
அந்த நாள் இனிமையாகிறது
சுயத்திற்கு வெளியே ஒரு புள்ளியை வைப்பவர்
திசைமானி போல சுழன்று வட்டமிட்டு
அதை சுற்றி வருகிறார்
மொய்ன், நீ கொடுத்த மதுவின் மயக்கில்
இந்த இதயம் போதையில் மயங்கிக் கிடக்கிறது
இனி ஒருபோதும் தெளிவதில்லை
தமிழாக்கம் சுபஸ்ரீ
Source: MU’IN UD-DIN CHISTHI: SELECTED POEMS (English Translation & Introduction by Paul Smith)
அஞ்சலி:காயல்பட்டிணம் கேஎஸ் முகம்மது சுஐபு
புத்தக வாசிப்பாளர்கள் மற்றும் எழுத்தாளர்களின் இழப்பு என்பது வாழும் சமூகத்தில் ஈடுசெய்ய இயலாதது. அதுவும் சிறுவயது முதல் பெற்றோர்கள் திண்பண்டங்களுக்காக கொடுத்த பணத்தை கூட புத்தகங்களாக வாங்கி குவித்தவர் காயல்பட்டிணம் கேஎஸ் முகம்மது சுஐபு. அவர் 12.10.2021 அன்று இயற்கை எய்தினார். சமையல்கட்டு, பரண், பாத்திரங்களுக்கு நடுவே இன்றளவுக்கு அவர் வீடு முழுதும் ஆயிரத்தி ஐநூறு புத்தகங்கள் நிறைந்துகிடக்கிறது. மரணித்தவரை கட்டிலில் இருந்து தூக்கும் போது கூட அவரது பக்கவாட்டில் பனிரெண்டு புத்தகங்களை அப்புறப்படுத்திவிட்டு தூக்கினர். அவர் உடலை அடக்கம் செய்துவிட்டு உறவினர்கள் வீட்டுக்குள் நுழைந்த போது அவர் முன்பு ஆர்டர் செய்திருந்த ஐந்து புத்தகங்கள் வீடுதேடி வந்தது.
முகம்மது ரியாஸ்
பிரதமன், கடிதங்கள்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்
நவம்பர் மாத விடுமுறை முடிந்து டிசம்பர் 3 ஆம் தேதி அடுத்த பருவத்திற்காக கல்லூரி மீண்டும் திறந்தது. நான் பணி புரியும் கல்லூரி, பொள்ளாச்சி திரு மகாலிங்கம் அவர்களின் சக்தி குழுமத்தின் ஒரு அங்கமென்பதால் படிக்கும் 6000 மாணவர்களுக்கும் மாதா மாதம் ஓம் சக்தி இதழ் கொடுக்கப்படும். கல்லூரி திறந்த அன்று நான் வகுப்பிலிருக்கும்போது அனைவருக்கும் தீபாவளி மலர் கொடுக்கப்பட்டது அதில் உங்களின் பிரதமன் இருந்ததால் அனைவரையும் அதை வாசிக்கச்சொன்னேன். பொதுவாகவே துவக்கத்தில் சில வகுப்புக்கள் பாடமெடுப்பதில்லை. எனவே பிரதமனை வாசித்து அவரவருக்கு தோன்றுவதை சொல்லவும் சொன்னேன்.
கேரளா ’கொழிஞ்சாம்பாறா’வைச் சேர்ந்த ஹாஜிரா வாசிக்கவே மதுரமாயிருக்கிறதென்றாள்.
ஒருத்திக்கு தேங்காய் துருவும் ஒலி புறாக்கள் குறுகுவது போலிருப்பது மிகவும் பிடித்திருந்தது. பொள்ளாச்சி தென்னை நகரம் என்பதால் நிறைய தேங்காயைக்குறித்து வரும் பகுதிகளைப்பற்றி எல்லாருமாய் பேசிக்கொண்டோம்.
இரண்டாவது பென்ச் வெற்றிவேல் எழுந்து ’’அந்த ஆசான் எல்லாத்தையும் கணக்கு பண்ணினாரு அந்த பொண்ண மட்டும் ஏன் கணக்கு பண்ணாம விட்டுட்டாரு? ’’ என்றதும் பெண்கள் பக்கம் ஒரே சிரிப்பலைகள். எனக்கும் வகுப்பிலிருந்த 52 மாணவர்களுக்கும் அந்த ஒரு மணி நேரம் வாழ்வில் மறக்கமுடியாததாகிவிட்டது. எப்போதுமே நான் மாணவர்களுக்கு மிக அணுக்கமான ஆசிரியை . இம்முறை பிரதமன் என்னை அவர்களுடன் இன்னும் நெருக்கமாக்கிவிட்டது. நன்றி
அன்புடன்
லோகமாதேவி
***
அன்புள்ள ஜெ
சிறுகதைகளை தொடர்ந்து வாசித்துக்கொண்டிருக்கிறேன். நீங்கள் வெண்முரசு எழுதியதைத்தான் சாதனை என்கிறார்கள்.எனக்கு இந்தச் சிறுகதைகளும் மாபெரும் சாதனை என்றுதான் தோன்றுகிறது. எத்தனை களங்களில் என்னென்ன வகையான கதைகள். கதைகளை வாசிக்க வாசிக்க உலகம் விரிந்துகொண்டே செல்வதாக தோன்றுகிறது.
சிறுகதை என்பது ஒரு தருணம் திறந்துகொள்வது என்பார்கள். அப்படிப்பர்த்தால் உங்களுடைய கதைகளில்தான் அப்படி அற்புதமான திறப்புக்கணங்கள் உள்ளன. பிரதமன் அதில் முக்கியமானது. அந்த இனிப்பு எழும் தருணம் எத்தனை வாசித்தாலும் தீராத ஒரு பெரிய மர்மம். மனசுக்குள் இனிப்பு எழும் தருணம் அது.
ராஜேஸ்வரி சிவக்குமார்
***
இருத்தலியல் நாவல்கள், கடிதங்கள்
இருத்தலியல் ஒரு கேள்வி
அன்புள்ள ஜெ
இருத்தலியல் நாவல்களை வரையறை செய்வதைப் பற்றிய அறிமுகக்கட்டுரை கூர்மையான ஒரு வரையறையை முன்வைக்கிறது. இருத்தலியலில் இருப்பு பற்றிய ஆங்ஸ்ட் இருக்கிறதே ஒழிய இருத்தலுக்கான விடையோ கண்டடைதலோ இருக்கக்கூடாது என்னும் முக்கியமான ஒரு புரிதலை அடைந்தேன். என் மனதில் நான் வாசித்த நூல்களை ஓட்டிப்பார்த்தேன். ஆழமான ஒரு தெளிவு ஏற்பட்டது. அப்படிப்பார்த்தால் தமிழில் துல்லியமான இருத்தலியல்நாவல் என எதையுமே சொல்லமுடியாது என்ற எண்ணமும் ஏற்பட்டது.
ஆர்.நாகராஜ்
***
அன்புள்ள ஜெ
இருத்தலியல்நாவல்கள் பற்றிய குறிப்பை வாசித்தேன். ஆன்மிகமான உள்ளடக்கமோ தரிசனமோ கொண்ட நாவல்கள் இருத்தலியல் நாவல்களாக இருக்கமுடியாது. ஆன்மிகத்திலும் விடையற்ற வினாக்கள் இருக்கலாம். விஷ்ணுபுரத்தில் பெரும்பாலான கேள்விகள் விடையற்றவைதான்.
வெண்முரசில் பீஷ்மர் கதாபாத்திரம்தான் இருத்தலியல்நாயகனாக தெரிகிறார். மூலத்தில் அவர் அறத்தில் நிலைகொண்ட ஒரு பிதாமகர். இதில் ஆழ்ந்த இருத்தலியல் சிக்கல்கொண்டவர். ஆனால் அதை வெல்ல சில ஆசாரங்களை இறுக்கமாகப்பிடித்துக்கொள்கிறார். அதை நம்பி வாழமுயல்கிறார்.
கர்ணன் இருத்தலியல்நாயகனாக இனி நான் உறங்கலாமா, பர்வம் போன்ற நாவல்களில் வருகிறான். ஆனால் அவனுடைய கேள்விகள் இருத்தல் சார்ந்தவை அல்ல. குலம். குடி, அடையாளம் சார்ந்தவை. வெண்முரசின் பீஷ்மருக்குத்தான் அவருடைய வாழ்க்கையே நோக்கமில்லாததாக, எந்த வகையிலும் வரையறை செய்ய முடியாததாக இருக்கிறது. தமிழில் எழுதப்பட்ட மிகப்பெரிய இருத்தலியல் நாயகன் வெண்முரசின் பீஷ்மர்தான்
எஸ்.ஆனந்த்
***
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers



