Jeyamohan's Blog, page 894
October 24, 2021
கடிதங்கள்
அன்புள்ள ஜெ,
சென்ற வாரம் நீங்கள் ஒரு பெரிய A3 அளவு நோட்டுப்புத்தகத்தின் ஒரு பக்கம் நிறைய சிறு குருவிகளைப் படம் வரைந்து கையில் வைத்திருப்பது போலக் கனவு கண்டேன். எல்லாமே கருப்பு மையினால் வரையப்பட்டவை.
உங்களுக்கு ஓவியம் வரைவதில் ஆர்வமோ பயிற்சியோ உண்டா? ஏதேனும் வரைந்திருக்கிறீர்களா?
அன்புடன்,
S பாலகிருஷ்ணன், சென்னை
***
அன்புள்ள பாலகிருஷ்ணன்
எல்லா எழுத்தாளர்களுக்கும் எழுத்தை தவிர வேறு கலைகளில் ஈடுபட்டிருக்கலாமோ என்ற கனவும் சபலமும் இருக்கும். அசோகமித்திரன் தன்னை ஓர் இசைக்கலைஞனாக கற்பனைசெய்திருந்தார். பாடகனாக ஆக முயன்றதாகவும் குருவுக்காக தேடி அலைந்ததாகவும் நான் எடுத்த பேட்டியில் சொல்லியிருந்தார். தி.ஜானகிராமனுக்கும் பாடகனாகும் ஆசை இருந்தது. சுந்தர ராமசாமிக்கு ஒரு நல்ல ஓவியனாக ஆகியிருக்கவேண்டும், சமையல்கலையில் செயல்பட்டிருக்கவேண்டும் என்னும் கனவு இருந்தது.
என் பகல்கனவுகளில் இசைக்கலை, ஓவியக்கலை இரண்டிலும் தேர்ந்தவனாக திகழ்வது அடிக்கடி வரும். ஆனால் துரதிருஷ்டவசமாக எனக்கு இசையை சும்மா முணுமுணுக்கக்கூட முடியாது. பிழையில்லாமல் ஒரு வட்டமோ சதுரமோ போடக்கூடத் தெரியாது. ஆகவே இவ்விரு கலைகளிலும் பெரும்பாலும் ஒன்றும் சொல்லாமல் இருந்துவிடுவேன். என் நூல்களின் அட்டைப்படம் சார்ந்துகூட கருத்துச் சொல்வதில்லை
ஜெ
***
அன்பு ஜெயமோகன்
நலம் தானே? உங்களுக்கு கடிதம் எழுதி நீண்ட காலம் ஆகிவிட்டது.
காலம் மேட்டிலிருந்து கீழே ப்ரேக்கில்லாத சைக்கிளாக ஓடிக் கொண்டிருப்பதால் பதை பதைப்பு கூடிக் கொண்டு இருக்கிறது. எப்போது புறப்பாடு மூன்று எழுதப் போகிறீர்கள்? மிகவும் ஆர்வமாகவும் ஆவலாகவும் கேட்டுக் கொள்கிறேன். தந்தி போல் பாவித்து ஆவன செய்யவும்.
அன்புடன்
அஸ்வத்
***
அன்புள்ள அஸ்வத்,
புறப்பாடு மூன்றாம் பகுதி எழுதினால் அதில் பல இடங்கள் ‘நம்பமுடியாதவை’யாக இருக்குமென தோன்றியது. குறைவான காலகட்டம்தான். ஆனால் அனுபவங்கள் மிகமிகத் தீவிரமானவை. எழுதவேண்டும், பார்ப்போம்
ஜெ
***
அஜ்மீர் – கடிதங்கள்-1
அன்புள்ள ஜெ,
2018 டிசம்பரில் நீங்கள் அஜ்மீர் தர்கா செல்ல விரும்புவதைப் பற்றி ஒரு பதிவு போட்டிருந்தீர்கள். அந்த நாள் நாங்கள் அஜ்மீர் செல்லும் வழியில் இருந்தோம். அடுத்த நாள் தர்கா சென்றோம்.
நேற்று ‘முழுமதி அவளது முகமாகும்’ என்ற பாடலைப் பார்த்துக்கொண்டிருந்தோம். ’ஜோதா அக்பரை’ பற்றிச் சொன்ன நித்யா ’அக்பர் அஜ்மீர் தர்காவுக்கு சென்று ஜோதாவை மணம் முடிக்க அனுமதி பெறுவார்’ என்றாள். ’அக்பர் போன எடத்துக்கெல்லாம் போயிருக்கே! நீ யாரு!!’ என்று அவளை கிண்டல் செய்தேன்.
பின்பு ’ஜெயமோகன் தர்காவுக்கு வருவார்’ என்று சொன்னேன். நீங்கள் வெண்முரசு இசை வெளியீட்டில் தர்காவைப் பற்றி மீண்டும் சொல்லி இருந்தீர்கள். இரவில் உங்கள் பதிவு.
’முதுநாவல்’ சிறுகதையை மீண்டும் வாசித்தேன். அந்தக்கதை என்னுள் மேலும் மேலும் வளரும்.
வட இந்தியா சூஃபிகளின் நிலம். தேசிய அளவில் நன்கு அறியப்பட்ட சில சூஃபி வழிபாட்டு தளங்கள் தவிர அறியப்படாத பல தளங்கள் உள்ளன.
ஹரிதுவார் அருகே ’பிரன் கலியார்’ (Piran Kaliyar) என்ற அழகிய தர்கா உள்ளது. சுல்தான் இப்ரஹீம் லோதியால் கட்டப்பட்டது. கலியார் ஷரீஃப் 13ம் நூற்றாண்டில் வாழ்ந்த சூஃபி அலாவுதீன் அலி அஹ்மத் சபீர் அவரின் தர்கா.
முகலாய சக்ரவர்த்தி ஷா ஜஹானின் புதல்வர் தாரா சிக்கோவின் குரு ஷேக் சில்லி. அவருக்கு சிவந்த கற்களால் கட்டப்பட்ட சமாதி பானிபத்தில் உள்ளது. பானிபத்தில் உள்ள இன்னொரு தர்கா பூ அலி ஷா கலந்தர் அவர்களுடையது. இவரை மொய்னூதீன் சிஷ்டியுடன் சேர்த்து ஆறு சூஃபி ஞானிகளில் ஒருவர் என்கிறார்கள்.
பஞ்சாபின் ஃபரீத் கோட் மாவட்டம் பாபா ஷேக் ஃபரித் என்ற சூஃபி ஞானியின் பெயரில் அமைந்தது. குவாஜா மொய்னூதீன் சிஷ்டியின் சீடர் குத்புதீன் பக்தியார் காகி. பக்தியார் காகியின் சீடர்தான் பாபா ஃபரீத். 12 ம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞர் பாபா ஃபரீத் அவர்கள் தில்லி நிஜாமுதீன் ஆலியாவின் குரு. சிஷ்டி சில்சிலாவின் குரு சீட வரிசை.
பாபா ஃபரீத் இயற்றிய பாடல்கள் சீக்கிய குரு கிராந்த் சாஹிபில் இடம் பெற்றுள்ளன. ஃபரீத்கோட்டில் உள்ள ’டில்லா பாபா ஷேக் ஃபரீத்’ என்ற தளம் இஸ்லாமியர்கள், சீக்கியர்கள், இந்துக்கள் அனைவரும் சென்று வழிபடும் தளம். நானும் சென்று தலை தாழ்த்தி வணங்கியிருக்கிறேன். அஜ்மீர் தர்காவிலும்.
அன்புடன்,
ராஜா
***
அன்புள்ள ஜெ
அஜ்மீர் தர்கா சென்ற அனுபவங்களை எழுதியிருக்கிறீர்கள். அக்கட்டுரையில் உள்ள உங்கள் தெளிவும் உறுதியும் ஆச்சரியப்பட வைக்கிறது. இஸ்லாமிய ஆன்மிகத்தை முழுமையாக ஏற்று தலைவணங்கி வர முடிகிறது உங்களால். ஆனால் இஸ்லாமிய ஆட்சியாளர்களை அவர்களிடமிருந்து வேறுபடுத்திப் பார்க்கிறீர்கள். அவர்களை நியாயப்படுத்தவில்லை. ஆலய இடிப்புகளையும் சொல்லிச் செல்கிறீர்கள். இஸ்லாமை ஏற்கிறோம், மதச்சார்பின்மை பேசுகிறோம் என்றபேரில் இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கும் மன்னர்களின் அழித்தொழிப்புக்கும் வெள்ளைபூசும் அரசியல் இலக்கியவாதிகள் நிறைந்த சூழலில் இந்த நடுநிலை ஆச்சரியமானது
கூடவே பிருத்விராஜ் சௌகானைச் சொல்லும்போது எந்த வகையிலும் இந்துத்துவப்புல்லரிப்புக்குள்ளும் செல்லவில்லை. அவருடைய குரூரமும் ஆக்ரமிப்புத்தன்மையும் அவர் கோரியிடம் சமரசம் செய்துகொண்டதும் எல்லாம் பேசப்படுகிறது. இந்த தெளிவுதான் கட்சிகட்டுபவர்கள் உங்கள் மேல் காழ்ப்பு கொள்ள காரணமாக அமைகிறது என்று நினைக்கிறேன். உங்களை தங்கள் அரசியலுக்கு பயன்படுத்திக்கொள்ள எவராலும் இயலாது.
அன்புடன்
ஜெயராஜ செல்லையா
முதுநாவல்***
October 23, 2021
அஜ்மீர் பயணம்- 7
அஜ்மீரின் அடையாளம் என்றால் வணிக உலகில் அது சலவைக்கல்தான். ஆர்கே மார்பிள்ஸ் என்னும் மாபெரும் நிறுவனத்தின் தலைமையகம் அஜ்மீர். சலவைக்கல் வணிகம் பெரும்பாலும் சமணர்களிடமே உள்ளது. அஜ்மீரில் தொன்மையான சமணக்கோயில்கள் பல இருந்துள்ளன. அவை சுல்தான்களின் ஆட்சிக்காலத்தில் இடிக்கப்பட்டுள்ளன. அவற்றை மீட்டு கட்ட ஆரம்பித்து இன்றுவரை கட்டிக்கொண்டே இருக்கிறார்கள். எதிர்காலத்தில் அஜ்மீர் அந்த மாபெரும் சமணக்கோயில்களால்தான் சுற்றுலா வரைபடத்தில் இடம்பெறும் என்றுகூடத் தோன்றுகிறது.
அஜ்மீர் நகருக்குள் உள்ள மிகப்பெரிய சமணக்கோயில் சோனிஜி கி நாஸியான் என்னும் கோயில். இது இன்றைய வடிவில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. திகம்பர மரபைச் சேர்ந்தது. இந்த ஆலயத்தின் பெயர் சித்கூட் சைத்யாலயம். [சித்தர்மலை] சிவப்புக்கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. ஆனால் இதைக் கட்டியவரின் பெயரால் சோனிஜி கோயில் என வழங்குவதே நிலைபெற்றது.
சிவப்புக்கல்லால் கட்டப்பட்ட சிற்பவேலைப்பாடுகள் கொண்ட ஆலயம் இது. ஆதிநாதர் இதன் மையத்தெய்வம். வெண்சலவைக்கல்லால் ஆன ஆதிநாதர் சிலை உள்ளே இருக்கிறது. இந்த ஆலயம் 1870-ல் அஜ்மீரைச் சேர்ந்த வணிகரான சோனிஜி என அழைக்கப்படும் சேட் மூல்சந்த் சோனி அவர்களால் கட்டப்பட்டது. கட்டிமுடிக்க இருபத்தைந்தாண்டுகள் ஆயின. இன்றும் மூல்சந்த் சோனி குடும்பத்தினரின் உரிமையிலேயே உள்ளது.
சாலையோரமாகவே இந்த ஆலயம் உள்ளது. கொரோனாவுக்குப்பின் திறக்கப்படவில்லை. சாலையோரமாக இத்தகைய ஆலயங்கள் இருப்பதன் தீங்குகளில் ஒன்று தொடர்ந்து படியும் புழுதி. இன்னொன்று சாலையை தொடர்ந்து மேடாக்கிக் கொண்டே இருப்பதனால் இவை ஆழத்துக்குச் சென்று சேறு வந்து சேருமிடங்களாக ஆகிவிட்டிருக்கின்றன. நூறாண்டுகளே ஆகியிருக்கிறதென்றாலும் சோனிஜி ஆலயத்திற்கு ஆயிரமாண்டுப் பழமை தோன்றுகிறது.
இந்த ஆலயம் ஆச்சாரிய ஜினசேனர் என்னும் சமணமுனிவரின் பழைய சுவடியின் படி கட்டப்பட்டது என்கிறார்கள். அவர் இங்கே முன்பே இருந்த ஓர் சமண ஆலயத்தின் வடிவை தொன்மையான ஏடுகளில் இருந்து மீட்டு எழுதியளித்த வடிவமே கடைப்பிடிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இக்கட்டுமானத்தில் பங்கேற்றிருக்கிறார்கள். இதை கட்டிய மூல்சந்த் சோனி 1891ல் இக்கட்டுமானம் முடிவதற்குள்ளேயே மறைந்தார். அவர் மகன் நேமிசந்த் சோனி இதைக் கட்டி முடித்தார். இந்த ஆலயம் சமண முனிவர் சதாசுகதாஸ் அவர்களின் வழிகாட்டுதலால் அமைக்கப்பட்டது.
நாங்கள் சென்றபோது நாசியான் ஆலயம் பக்தர்களுக்காக திறக்கப்படவில்லை. ஆனால் அந்த ஆலயத்தின் பின்னாலுள்ள சுவர்ண நகரம் என்னும் அருங்காட்சியகம் திறந்திருந்தது. செந்நிறக் கற்களால் ஆன படிகள் வழியாக ஏறிச்சென்றால் நாம் எதிர்பாராத ஓர் ஆச்சரியம் அங்கே இருந்தது. பன்னிரண்டு மீட்டர் அகலமும் இருபத்தைந்து மீட்டர் நீளமும் கொண்ட மாபெரும் கூடம். அதை சுற்றி இரண்டு அடுக்குகளாக உப்பரிகைகள். உப்பரிகைகளிலுள்ள கண்ணாடிச் சாளரங்கள் வழியாக அந்த கூடத்தைப் பார்க்கமுடியும்.
உள்ளே சமணர்களின் புராணங்கள் சொல்லும் பிரபஞ்சம் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளது. சமணர்கள் இப்பிரபஞ்சம், இந்த பூமி, தேவர்கள், தெய்வங்கள், உயிர்க்குலங்கள், மனிதர்கள் ஆகியவற்றை பல்வேறு வளையங்களாக உருவகிக்கிறார்கள். அதன் மையம் மேரு என்னும் பொன்மலை. அங்கே ஆதிநாதர் அமர்ந்திருக்கிறார். பல சமண ஆலயங்களில் இந்த பிரபஞ்ச கற்பனை ஓவியமாக வரையப்பட்டிருக்கும். இங்கே அந்தக் கற்பனை பிரம்மாண்டமாக, பற்பல அடுக்குகளாக சிற்பங்களாக செய்யப்பட்டுள்ளது. இது ஒரு சிற்பக்காட்சியகம். சிற்பங்களாலான ஒரு வெளி
மரத்தால் செதுக்கப்பட்டு தங்கத்தால் பூச்சு அமைக்கப்பட்டவை இச்சிற்பங்கள். கண்களைக் கூசவைக்கும் பொன்னிற ஒளி. மரச்சிற்பங்களுக்குமேல் தங்கரேக்கு அமைக்க நூற்றைம்பது கிலோ தங்கம் செலவிடப்பட்டுள்ளது. சீராக ஒளியமைப்பு செய்யப்பட்டுள்ளது. சாளரங்கள் வழியாக வெவ்வேறு கோணங்களில் உள்ளிருக்கும் பொன்வெளியை பார்த்துக்கொண்டே சுற்றிவந்தோம்.
பறக்கும் தேவர்கள். சுழன்று சுழன்று ஏறும் மலைகளில் வெவ்வேறு நிலைகளில் ஊழ்கம் செய்யும் ஞானிகள். உச்சியில் அமர்ந்த தீர்த்தங்காரர்கள். காடுகள், நதிகள், நகரங்கள். அங்கெ செறிந்து வாழும் பல்லாயிரம் மக்கள். அனைத்துமே தங்கப்பூச்சுள்ள சிற்பங்களாக. ஒருகணத்தில் பிரபஞ்ச வாழ்க்கை ஒரு பொற்துளியாக உறைந்தது போலிருந்தது. பொற்கணம்!
நாசியானில் இருந்து நேராக எங்கள் அறைக்கு வந்தோம். சாப்பிட்டுவிட்டு சற்று ஓய்வெடுத்தோம். மாலை ஐந்து மணிக்கு வருவதாகச் சொன்ன காவலர்கள் சற்றுப் பிந்தி வந்தனர். ஐந்தரை மணிக்கு கிளம்பி அஜ்மீரில் இருந்து எட்டு கிமீ தள்ளி புறநகரில் ஆரவல்லி மலைத்தொடர்களின் அடிவாரத்தில் நரேலி என்னும் இடத்தில் இருந்த சமணக் கோயில்களைச் சென்று பார்த்தோம்.
ஆர்கே மார்பிள்ஸ் நிறுவனர் அசோக் பட்னி அவர்களால் கட்டப்பட்டது இந்த ஆலயம். ஏறத்தாழ ஐம்பதுகோடி ரூபாய் இதுவரை செலவாகியிருகிறது. இன்னமும் பணி முடியவில்லை. முடியும்போது இருநூறுகோடி ரூபாய் செலவாகியிருக்கக்கூடும். அசோக் பட்னி அவர்களுக்குப்பின் தீன்நாத்தும் அவருக்குப்பின் அவர் மகன் தீபக் ஜெயினும் கட்டுமானத்தை நடத்துகிறார்கள். இன்னும் இருபத்தைந்தாண்டுகள் ஆகலாம், கட்டி முடிக்க. கட்டுமானம் முடிந்தால் இந்தியாவின் மாபெரும் சமண ஆலயத்தொகைகளில் ஒன்றாக இது இருக்கும்
நாங்கள் செல்லும்போது இருட்டிவிட்டது. இருட்டில் ஆரவல்லி மலைத்தொடர்களின் அடிவாரத்தில் அந்த ஆலயம் மெல்லிய விளக்கொளியில் விரிந்து கிடந்தது. மலைக்குமேல் இருபத்து நான்கு தீர்த்தங்காரர்களுக்கும் இருபத்துநான்கு கோயில்கள் கட்டப்படுகின்றன. கீழே ஆதிநாதரின் ஆலயம் முக்கால்வாசி பணி முடிந்திருக்கிறது.
சிறப்பு அனுமதி பெற்று மலைக்கு மேலே சென்றோம். அங்கே சலவைக்கல் குவியல்கள். நடுவே ஆலயங்கள் எழுந்து, முடிவடையாமல் நின்றுகொண்டிருந்தன. மலையுச்சியில் ஒரு சிறிய பழமையான கோயில். அங்கே செல்ல சிறிய படிக்கட்டு ஒரு வெண்ணிற நாடா போல வளைந்து ஏறிச்சென்றது. வானில் விண்மீன்கள் நிறைந்திருக்க நிழலுருக்களாக நின்றிருந்த ஆலயத்தொகைக்கு கீழே நின்றிருந்தோம்.
இருட்டில் ஆலயக்கோபுரங்களைப் பார்ப்பது ஒரு திகிலூட்டும் அனுபவம், சட்டென்று அவை உயிர்கொண்டு தெய்வங்களாக ஆகிவிட்டது போல. பார்வை பெற்றுவிட்டதுபோல. ஏராளமான ஆலயங்கள் என்னும்போது பேருருவ வடிவங்களால் சூழப்பட்டது போன்ற உணர்வு உருவாகியது. அந்தக்குன்று முழுமையும் ஆலயங்கள்தான். கீழே இருக்கும் ஆதிநாதர் ஆலயத்திற்கு மலையால் ஒரு மகுடம் சூட்டியதுபோல.
ஆதிநாதரின் ஆலயம் முற்றொழிந்து கிடந்தது. விரிந்த பெரும் கூடத்தின் மையமென அமர்ந்த கோலத்தில் அருகமுதல்வர். அருகே இன்னொரு மாபெரும் சந்திப்புக் கூடம். விரிந்த முற்றம். யட்சர்களால் ஆன கொடிக்கம்பம். அதன்மேல் யட்சிசிலை.
அங்கே இருந்த நிர்வாகி ஒரு பண்டிட். ரமேஷ் என்று பெயர். அவரிடம் நான் மகாபாரதத்தை முழுமையாக நாவல்களாக எழுதிவிட்டேன் என்று ஷாகுல் சொல்லிவிட்டார். பரவசம் அடைந்து என் காலில் விழுந்து வணங்க விரும்பினார். நான் தடுத்து அவரை அணைத்துக் கொண்டேன். என் காலில் தொடுவதுபோல ஒரு படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று துடித்தார்.
ஆலயமுகப்பில் அமர்ந்து காவலர்களுடன் சில படங்கள் எடுத்துக்கொண்டோம். அதன்பின் அங்கிருந்து நேராக செங்கதிரின் வீட்டுக்குச் சென்று இரவுணவு அருந்தினோம். காவல் உயரதிகாரிகளுக்கு இடைவேளை, ஓய்வு என ஏதுமில்லை. ஆகவே விரிவாகப் பேசவில்லை. இன்னும் பத்தாண்டுகளில் அவர் ஓய்வுபெற்ற பின்னர்தான் இலக்கியம் பேசவேண்டும்.
அவருடைய வீடாக அமைந்த அந்த பங்களா முக்கியமானது. அங்குதான் ஈழப்போராளி ஈ.பி.ஆர்.எல்.எஃப் தலைவர் வரதராஜப்பெருமாள் பத்தாண்டுகளுக்கும் மேலாக தங்கியிருந்தார். அவர் புலிகளின் கொலைப்பட்டியலில் முதலிடத்தில் இருந்தார். அவருக்கு நான்கடுக்கு ராணுவப்பாதுகாப்பு அப்போது அளிக்கப்பட்டிருந்தது.
அஜ்மீர் கடைசிநாளில்மறுநாள் காலையில் ஷாகுல் எழுந்து தொழுகைக்குச் சென்றார். நான் உடன் சென்று இறுதியாக சிஷ்டி அவர்களின் தர்காவை ஒருமுறை பார்த்தேன். மரத்தடியில் சற்றுநேரம் அமர்ந்திருந்தேன். நினைவாக சில சிறுபொருட்கள் வாங்கிக்கொண்டேன். காலையிலேயே அதே திரள். பாயசத்துக்கான நீண்ட வரிசை.
ஷாகுல் வந்ததும் அவருடன் அஜ்மீரின் தெருக்களைச் சும்மா சுற்றி வந்தோம். அஜ்மீர் வெவ்வேறு குன்றுகளால் ஆனது. ஆகவே தெருக்கள் சரிந்து ஏறிச்சென்று சட்டென்று படிக்கட்டுகளாக ஆகி மேட்டை அடைந்து மீண்டும் சரிந்திறங்கும். எல்லா இடங்களில் இருந்தும் ஆனசாகரம் நோக்கியே மண் இறங்கிசென்றது. சாக்கடைகள் அங்கே செல்வதை தடுக்கவே முடியாது
இடுங்கலான சந்துகள் கொண்ட பழைய வீடுகள். சாக்கடை, பன்றிகள், நாய்கள் என திணறச்செய்யும் குடியிருப்புப் பகுதி. கழுதைகள் இங்கே முக்கியமான ஊர்திகள். நகர்முழுக்க இருக்கும் பலநூறு படிக்கட்டுகள் வேறெந்தவகையான ஊர்தியும் பயன்படுத்த முடியாமலாக்கி விட்டிருக்கின்றன. நிரை நிரையாக பொதிகளுடன் அவை சென்றுகொண்டே இருக்கின்றன.
நகர்வழியாகச் சுற்றிவந்தோம். காலையுணவு சாப்பிட்டோம். எட்டு மணிக்கு கிளம்பி ரயில்நிலையம். காவலர்கள் வந்து ஏற்றிவிட்டார்கள். மீண்டும் ஒரு ஐம்பத்தாறு மணிநேரப் பயணம். ஆனால் சலிப்பில்லை. எப்போது பயணம் முடியும் என்னும் எண்ணம்கூட இல்லை. இனிதாக இயல்பாக அமைந்திருந்தேன். நல்ல தூக்கம். விழித்திருக்கையில் எண்ணங்கள் அலையடிக்காத நிறைவு.
மீண்டும் மழைக்குள், பசுமைக்குள் நுழைந்தோம். காடுகளின்மீதாக மிதப்பது போல ஒழுகிச்சென்றோம். நிறைந்தொழுகிய ஆறுகளில் வெள்ளம் மேலும் பெருகியிருந்தது. மேற்குமலைகளில் கடுமையான மழை என செய்திகள் சொல்லின. வசிஷ்டி மேலும் பொன்னிறமாகி மேலும் விரிந்து அழகுகொண்டிருந்தது. சந்திரகிரி ஆறு கண்களை நிறைக்கும் பொன்னொளி கொண்டு விரிந்திருந்தது.
எர்ணாகுளத்துக்கு அதிகாலை ஆறு மணிக்கு வந்தோம். ரயில்நிலையத்தில் ஒருமணிநேரக் காத்திருப்பு. நனைந்த ரயில்நிலையத்தின் காலை இளங்குளிர் காற்றுடன் இனிதாக இருந்தது. பெங்களூரில் இருந்து வந்த ரயிலில் ஏறி மீண்டும் ஒரு மிதந்தொழுகுதல். கேரளத்தில் கடும் மழை. சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. கோட்டையம் பகுதியில் வீடுகள் பல நீரில் பாதி மூழ்கியிருந்தன.
காயல்களின் நீர் பெருவெள்ளம் வந்தால் மட்டுமே செவ்வண்ணம் கொள்ளும். அப்போது அணையாத அந்தி ஒன்று உருவாகிவிட்டதுபோல தோன்றும். வேம்பநாட்டுக்காயலில் செந்நிறம் சுடர்விட்டுக்கொண்டிருந்தது. திருவனந்தபுரம் வந்து குமரிக்குள் நுழைந்தபோதுகூட பயணம் முடிந்ததாகத் தோன்றவில்லை. பள்ளியாடி நிலையத்தில் ரயில்பாதை ஓரமாகவே ஒரு குளம் நீர் நிறைந்து நின்றது. அதுவும் பயணப்பாதையில் இருப்பதாக ஒரு உளமயக்கு.
குமரிமாவட்டம் மழையில் நீராடி நின்றிருந்தது. வாழை தென்னை இரண்டுமே மழையில் மெருகும் இளமையும் கொள்கின்றன. அவற்றின் உடலெங்கும் நீர் நிறைந்துவிடுகிறது. மழைக்குப்பின் குமரிமாவட்ட நிலம் முழுக்க சரல்கற்கள் முழுத்து மேலெழுந்து நின்றிருக்கும். நடுவே இருந்த மண் அரித்துச் சென்றிருப்பதனால். அது மண் மெய்சிலிர்த்து நின்றிருப்பதாக தோன்றச்செய்யும்.
எர்ணாகுளம் ரயில்நிலையம் அதிகாலையில்ரயில் நிலயத்தில் இருந்து ஷாகுலின் வீடு வழியாக என் வீடு. ஷாகுலுக்கு கோவாவில் ஒரு நண்பர் ரயில் நிலையத்துக்கு வந்து காத்திருந்து இனிப்புகள் பலகாரங்கள் கொடுத்துவிட்டுச் சென்றார். இன்னொருவர் மங்களூரில் கொட்டும் மழையில் காத்திருந்து கோழியிறைச்சி பத்திரி கொடுத்துச் சென்றார். கப்பல்காரர்கள். ஆகவே அவருடைய இரு மகன்களுக்கும் பெட்டி நிறைய பலகாரங்கள் இருந்தன. “சல்மானுக்கு ஸ்வீட் வாங்கணும்” என்று அவர் அஜ்மீரிலேயே சொல்லிக்கொண்டிருந்தார்.
மதியம் நான்குமணிக்கு வீட்டைச் சென்றடைந்தேன். அன்றுதான் மழை ஓய்ந்த இளவெயில். வாசல்முழுக்க மழை உதிர்த்த சருகுகள். நீராவியும் ஒளியும் நிறைந்த பின்மதியம். வீட்டை திறந்து அருண்மொழி வந்தபோதுகூட பயணம் முடியவில்லை என்னும் கனவுநிலை நீடித்தது.
[நிறைவு]
குவாஜா மொய்னுதீன் சிஷ்டி பாடல்கள்-7
பெருவளமோ பேரிடரோ அல்ல
நான் விழைவது…
எனக்கென காதலன் விரும்புவதே
நான் விழைவது.
தொடர் துன்பங்களில் எனை இருத்த
அவன் விரும்பினால்
தொடர்ந்து துன்பங்களில் இருப்பதே
நான் விழைவது.
செல்வமும் புகழும் வேண்டுவர் பலர்
மகிழ்வாக துன்பத்தைத் தாங்கும்
வலிமையான மனமே…
நான் விழைவது.
மண்ணில் அதிகாரம், சொர்க்கத்தில் இன்பங்கள்
ஊக்கமுடையோர் வேட்கிறார்கள்!
அவற்றை அல்ல – கடவுள் உடனிருப்பே
நான் விழைவது.
தங்கள் ஆசைகள் நனவாக…
உன்னை வேண்டுகிறார்கள்
நீ விரும்புவதையே, நான் விரும்புவதே,
நான் விழைவது.
நீண்ட ஆயுளை விரும்புகிறார்கள்,
நீண்ட காலம் வாழ …
மொய்ன், மெய்யான இறப்பின் தருணத்தில் மரணமே
நான் விழைவது.
நான் அந்த அழகான
ஒருவனைப் பார்த்தேன்
கவனம் சிதறுகிறது
காதலர்களே…
நான் அவனுக்கென
அன்பின் மதுவால்
நிறைந்திருக்கிறேன்.
காதலர்களே.
முதல்நாள் தெய்வீக உதடுகள்
காதில் சொன்ன ரகசியங்களால்
நான் தொன்மம் ஆனேன், என்றும் நினைவில் இருக்கிறேன்,
எல்லா நாவிலும் இருக்கிறேன்; காதலர்களே!
நான் கேட்டேன், “உனது முகத்தைக் காட்டு”
விடை, “நான் மறைவில் இல்லை..
உற்று நோக்கும் திறன் கண்களுக்கு வேண்டும்!”
காதலர்களே.
அழகியரின் முகங்களில் படைத்தவனின் அழகு
அவர்கள் இருப்பிடத்தின் வாசலில்
தலை வணங்குகிறேன்
காதலர்களே!
காதலனின் அழகு
விட்டிலென ஒளி நோக்கி எனை ஈர்க்கிறது
மறுக்கவியலா தெய்வீக அழைப்பு
காதலர்களே!
எனது ஓய்விடம் இறைவனின் மாளிகை
இப்பாலைநிலக் குடிசையை
எப்படி எனது ஓய்விடம் ஆக்குவது?
காதலர்களே!
எனது நொறுங்கிய இதயத்திடம் கேட்டேன்,
கடவுள் எப்படிப் பட்டவர்? நீ எப்படிப் பட்டவள்?
விடை “பொக்கிஷமும் பாலைப் பாழ்வெளியும் போல”
காதலர்களே!
முன்பு நினைத்திருந்தேன்
எனது உடல் பெருங்கடல், என் இதயம் சிப்பி, இறைவன் அதில் முத்து
இன்று நான் ஒரு முத்து, கடவுள் அப்பெருங்கடல்
காதலர்களே.
எனது உடல் இதயத்துடன் இணைந்தது
இதயம் ஆன்மாவுடன், ஆன்மா இறையுடன்..
உடலும், இதயமும், ஆன்மாவும் நான் அல்ல, நான் ஒன்றே!
காதலர்களே.
மதுகொணர்பவனுக்கும் எனக்குமிடையே
எண்ணற்ற திரைகள்
போதையின் அழுகையில் அத்தனையும் கிழித்தெறிந்தேன்
காதலர்களே.
தெய்வீகக் காதலனை
மொய்ன் விழைந்துவிட்டார்
வேறு யாரையும் அவர் அறிவதில்லை
காதலர்களே.
சூரியனின் அழகை
தூய நீரில் பார்ப்பது போல
ஆன்மாவின் ஆடியில்
அவனது அழகைப் காண்கிறேன்
காதலனின் அழகிய முகம்
அறிவை குருடாக்கியது
மனதின் நூறு திரை வழியாக
அவனைக் காண்கிறேன்
ஆன்மஆடியில் தெரியும் அழகு
தெய்வீக சாரத்தின் காட்சி
இத்தனை பேரழகு அவனுடையதே
என்று காண்கிறேன்
அவனை ஏற்றநாள் முதல்
காதலின் மதுவில் இருக்கிறேன்
அறிவும், ஞானமும் விழிகளை இழந்தது
இயலவில்லை காண..
என்னை இழந்த பின்னும்
ஏதோ எஞ்சியிருக்கிறது
இதோ அவனில் கலக்கிறேன்
கூடலைக் காண்கிறேன்
தெய்வீக சாரத்தை அணுகுவது
முதலில் சிரமமாக இருந்தது
இந்த இறுதி சிரமமோ
மேலும் சிரமமாய் காண்கிறேன்
இறையோடு கூடிடும் போது
அனைத்தும் சிறிதாகிறது
தேவதை சிறகுகள் – ஆந்தைகள் போல ஈக்கள் போல
எனக் காண்கிறேன்
மொய்ன் அறிதலின் பாதையில்
கதிர் ஒளியில் சிறுதுகள் போல
எரிந்து போனான் நித்தியமாக
காண்கிறாயா?
திரைவிலக்கு, முகத்தை காட்டு
என்னை இலாதக்கு எனதன்பே..
உன் அழகைக் காட்டு, காதலின் மதுவில்
போதையில் ஆழ்த்து..
அங்கு பறந்துவர என்னால் இயலவில்லை,
இந்த பூமியில் இருக்கும்போது
என் ஆத்மாவின் பறவையால் சிறகுகளை விரிக்க முடியாது
அவை உடலுடன் இணைந்துள்ளன!
நித்தியத்தில் உள்ள ஆன்மாவின் அரசப் பருந்து,
ஒரு நாள் பறந்துவிடும்,
வடிவத்தில் அதை என்றைக்குமாய்
அடைத்து வைக்க முடியாது
சொர்க்கத்தை என்னிடம் புகழ்வதை நிறுத்துங்கள்,
இந்நிலையில் இருந்து என்றோ நான் விட்டுவந்த
அந்நிலைக்கு போகச் சொல்கிறீர்கள்
எனத் தெரியவில்லையா?
அழகியரின் முகத்தின் அழகில்
அழகைப் படைத்தவனைப் பார்க்கிறேன்
இரண்டும் ஒன்றுதான்
அழகியரை நான் வணங்குகிறேன்
புதிதாக நான் காதலின் போதையில் வீழ்ந்து
குடிகாரன் ஆகவில்லை
முழுதாய் நிறைந்து
போதையில் ஆழ்ந்தேன் முதல் நாளிலே!
தெய்வீக அன்பின் கடலில்
வீழ்ந்து மூழ்கிக் கொண்டிருக்கிறேன்
கைஸர், எனது இந்தப் படகு
நொறுங்கி அழிந்து போனது.
இறை வெளிப்பாட்டின் ஒளியில்
எண்ணற்ற துகள்களாய் சிதறினேன,
இதோ ஒவ்வொரு துகளும்
முழுமை கொண்டன!
இதயக் கிண்ணத்தின் இருத்தல் களிம்பகற்றி
மேலும் துலக்கிவைக்க
தெள்ளத்தெளிவாக தெரிகிறது
அவன் உருவம்
வெற்றுக் கைகளுடன் உலகை விட்டு செல்லுமாறு
என் வாழ்வை ஆக்குங்கள் இறையே;
மனந்திரும்புதலின் கண்ணீரால்
என் கரங்கள் சுத்தமாகட்டும்!
உலகின் இன்பங்களை
இதயத்தில் இருந்து அகற்றிவிடு மொய்ன்…
இதயத்தின் ஆழத்தில் நானிருப்பேன்
காதலின் வலி மட்டுமாக!
தமிழாக்கம் சுபஸ்ரீ
குவாஜா மொய்னுதீன் சிஷ்டி பாடல்கள்-5 குவாஜா மொய்னுதீன் சிஷ்டி பாடல்கள்-4 குவாஜா மொய்னுதீன் சிஷ்டி பாடல்கள்-3 குவாஜா மொய்னுதீன் சிஷ்டி பாடல்கள் -2 குவாஜா மொய்னுதீன் சிஷ்டி பாடல்கள்மணிரத்னம், ஒரு பழைய பேட்டி
மணிரத்னத்தின் ஒரு பழைய பேட்டி. திரையுலகில் நான் மிக அதிகமாக நீண்ட உரையாடல்களில் ஈடுபட்ட ஆளுமை என்றால் அவர்தான். இலக்கியம், அரசியல் என சினிமா தவிர்த்த அனைத்தைப் பற்றியும் நான் பேசுவேன். அவர் சினிமா பற்றிப் பேசுவார்.கும்பகோணத்தில் தஞ்சையில் என வெவ்வேறு இடங்களில் அமர்ந்து பேசியிருந்தாலும் அவருடைய அறைக்குள் அவர் மிக இயல்பாக இருப்பதைக் காணலாம்.
நாம் விரும்பும் நண்பர்களின் இயல்புகளில் சில நம்மை பெரிதும் ஈர்த்துவிடுகின்றன. மணி ரத்னத்திடம் அது அவருடைய மழலை. ஆங்கிலவழிக் கல்வியில் வளர்ந்தவர் என்பதனால் தமிழ்பேசும்போது ஒரு திக்கல் வந்துகொண்டிருக்கும். அவரிடம் புதிய ஒரு கருத்து உருவாகுமென்றால் முன்னரே ஒரு சின்ன திணறல் மொழியில் அமையும்.
சாயல் ஏதும் இல்லாமலேயே ஏறத்தாழ அவரைப்போலவே தோன்றுபவன் யுவன் சந்திரசேகர். அவனுக்கு உச்சரிப்பு துல்லியமாக இருக்கும். புத்தம்புதிய கருத்துக்களைக்கூட ஏற்கனவே வரையறை செய்து பலமுறை சொல்லி புத்தகமாகவே வெளியிட்டு உலகமும் அதை முன்னரே ஏற்றுக்கொண்டு உண்மையென்றே ஆகிவிட்டது என்னும் பாவனையில் பேசுவான்.
இருவரும் இப்போது குறுந்தாடி. யுவன் முப்பதாண்டுகளுக்கு முன் குறுந்தாடி இல்லாமலிருந்தபோதிருந்த ஏதோ ஒரு சாயலை மணிரத்னத்தின் இந்தப்பேட்டியிலும் பார்க்கிறேன். முக ஒற்றுமை இல்லை. ஆனால் ஏதோ ஒன்று இருக்கிறது. அவருடைய இப்பேட்டியை அவருடைய மொழிக்காக பார்த்துக்கொண்டே இருந்தேன். அன்றுமுதல் இன்றுவரை கலை என்பதை முழுக்க விளக்கிவிடக்கூடாது என்னும் கவனத்துடனேயே இருக்கிறார்
ஈராறுகால் கொண்டெழும் புரவி
ஈராறுகால் கொண்டு எழும் புரவி என திருமூலர் காலத்தைச் சொல்கிறார். காலம் தாவுவதன் சித்திரம்தான் அந்தக் குறுநாவல். ஒரு இறுதித்தாவல் வழியாக அது தன் நீள்பயணத்தை பெருஞ்சுழிப்பாக ஆக்கிக்கொள்கிறது அந்நாவலில். ஈராறுகால்கொண்டு எழும் புரவி மற்றும் சிறுகதைகள் அடங்கிய இந்நூலை மீண்டும் வெளியிட்டிருக்கிறது விஷ்ணுபுரம் பதிப்பகம்
ஈராறு கால்கொண்டெழும் புரவி- கடிதங்கள் ஈராறுகால் கொண்டெழும் புரவி -ஜினுராஜ் கால்கொண்டெழுவது… கடிதம் ஈராறுகால் கொண்டெழும் புரவி – விமர்சனம்விஷ்ணுபுரம் பதிப்பக நூல்கள்
வடிவமைப்பு கீதா செந்தில்குமார்
அரசியல், ஆசிரியன் – கடிதங்கள்
அன்புள்ள ஜெ
ஆசிரியர் வேறு படைப்பு வேறா என்னும் கட்டுரை பல ஐயங்களைத் தீர்த்தது. நான் இதை நம் சூழலில் கண்டுகொண்டே இருக்கிறேன். ஒருவர் ஓர் இலக்கியக்கருத்தைச் சொல்லவேண்டுமென்றால் உடனே டிஸ்கிளெய்மர் செய்தாகவேண்டும். நான் இன்னாரின் படைப்புகளை வாசிக்கிறேன் என்று சொன்னாலே கூடவே அன்னாரின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் சொல்ல வேண்டும். பெரும்பாலானவர்கள் அதைச் சொல்வது நம் முகநூல் சூழலில் ஓயாமல் அரசியல் கூச்சலிடும் கும்பலின் தாக்குதலைப் பயந்துதான். வேறுவழியே இல்லை. நாம் அவர்களின் தாக்குதலை தாக்குப்பிடிப்பதே கஷ்டம். சொல்லி வைத்தால் இழப்பு ஒன்றும் இல்லை.
இவ்வாறு ‘அரசியல் ரீதியாக மாற்றுக்கருத்து இருந்தாலும்’ என்று சொல்பவர்களின் இரண்டு வகைகளையுமே சுட்டிக் காட்டியிருக்கிறீர்கள். சிறப்பான பதிவு. ஒருவகை சும்மா ஒரு அரசியலடையாளத்துக்காக அப்படிச் சொல்கிறார்கள். இன்னொரு வகையினர் உண்மையாகவே அரசியலில் செயல்படுபவர்கள். அரசியலுக்குமேல் இலக்கியத்தை அணுகத் தெரிந்தவர்கள்.
ஜெகதீஷ்
***
அன்புள்ள ஜெ,
ஆசிரியர் படைப்பு வேறுபாடு கட்டுரை ஒரு தெளிவை அளிப்பதாக இருந்தது. நீங்கள் சொல்வது உண்மை. இன்றைக்கு நடுத்தரவர்க்க வாழ்க்கையில் வாழ்க்கைச்சிக்கல்கள் கொஞ்சம் குறைந்திருப்பதனால் ஒரு சலிப்பும் வெறுமையும் உள்ளது. அதனால்தான் அரசியலில் இத்தனை வெறியுடன் இருக்கிறார்கள். அரசியலை கொள்கையாகவோ செயல்பாடாகவோ கொள்ளாமல் வெறுமே கூச்சலிட்டு கத்தி விளையாடும் சீட்டுவிளையாட்டு போல எண்ணிக்கொள்கிறார்கள். நான் அரசியல்ரீதியாகப் பேசுகிறேன் என்று சொல்லும் பெரும்பாலானவர்களுக்கு சில எளிமையான பற்றுகள் மட்டும்தான் உள்ளன. ஆழமான அரசியல்புரிதல்கள் ஏதும் இல்லை. அவர்களுக்கு எழுத்தாளர்களும் அரசியல் கருத்துக்களை சொல்பவர்களாகவே அறிமுகமாகியிருக்கிறார்கள்.
எம்.ராஜேந்திரன்
***
நற்றுணை கலந்துரையாடல்
அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம்
‘நற்றுணை’ கலந்துரையாடலின் அடுத்த அமர்வு வரும் ஞாயிறு, அக்டோபர் 24 ஞாயிறு மாலை 5 மணிக்கு நிகழும். ஆங்கில எழுத்தாளர் யுவால் நோவா ஹராரியின் ஹோமோ டியஸ் (வருங்காலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு)
புத்தகம் குறித்து நண்பர் சுரேஷ்பாபு உரையாடுவார்.
நற்றுணை இலக்கிய கலந்துரையாடல்: 9
புத்தகம்: ஹோமோ டியஸ்
கலந்துரையாடல் நாள்: 24-10-21
நேரம் : இந்திய நேரம் மாலை 05:00 முதல் 08:00 வரை
உரையாடுபவர்: சுரேஷ்பாபு
நண்பர் சுரேஷ்பாபு ஏற்கனவே சேப்பியன் புத்தகம் குறித்து, ஊட்டி முகாமில் பேசினார். மனித இனம் அதில் தொழில் நுட்பத்தின் இடம் குறித்து தொடர்ச்சியாக உரையாடியும் எழுதியும் வருபவர்.
அவரது இணையதளம்
http://www.velavanam.com/2020/08/alanturing.html?m=1
அவருடைய YouTube பக்கம்
https://youtube.com/channel/UCFiYtSqF4NvmnSjRCSf5XbQ
சந்திப்பிற்கு Zoom ல் இணைய :-
https://us02web.zoom.us/j/4625258729
(Password தேவையில்லை)
தொடர்புக்கு: 9965315137
(லா.ஓ.சி. சந்தோஷ் )
இது வழக்கம் போலவே ஒரு கலந்துரையாடல் நிகழ்வாக விளங்கும். இந்த கலந்துரையாடலுக்கு இலக்கிய வாசகர்களையும் ஹோமோ டியஸ் புத்தகம் குறித்து அறிய /உரையாட விரும்புபவர்களையும் அன்புடன் வரவேற்கிறோம்
அன்புடன்
சென்னை விஷ்ணுபுரம் நண்பர்கள்
October 22, 2021
அஜ்மீர் பயணம்-6
அஜ்மீரின் பழையபெயர் அஜயமேரு. வெல்லமுடியாதவனின் மாமலை. பதினொன்றாம் நூற்றாண்டில் சகமான [சௌகான்] ஆட்சியாளரான அஜயதேவரால் உருவாக்கப்பட்ட நகரம் இது. 1193ல் இது டெல்லியின் சுல்தான் ஆட்சிக்கு கீழே சென்றது. ஆனால் தொடர்ந்து சௌகான் வம்சத்தார் இந்த நகரின் ஆதிக்கத்துக்காகப் போராடிக்கொண்டேதான் இருந்திருக்கிறார்கள்.
இந்நகரின் மையம் இன்று மாறிவிட்டது. முன்பு இது இங்குள்ள ஆரவல்லி மலைத்தொடரின் நீட்சியாகிய உயர்ந்த மலைமேல் அமைந்திருந்தது. அது தாராகர் கோட்டை என அழைக்கப்படுகிறது. அஜயபால சௌகான் கட்டிய கோட்டை இது பின்னாளில் சௌகான் ஆட்சியாளர்களால் இது விரிவாக்கப்பட்டது. மிகச்செங்குத்தான மலை. அதன்மேல் வளைந்து வளைந்து ஏறும் புதிய சாலை அமைக்கப்பட்டுள்ளது. முன்பு கரடுமுரடான பாறைவழிகளில் குதிரைகளில்தான் மேலே சென்றிருக்கமுடியும். மலையுச்சியில் மணிமுடி சூட்டியதுபோல கோட்டை அமைந்துள்ளது. இன்று பெரும்பாலும் சிதைந்து ஆங்காங்கே சுவர்களாக கோட்டை எஞ்சியிருக்கிறது.
கோட்டைக்கு மூன்று வாசல்கள் இருந்தன. லட்சுமிபோல், புடா தர்வாசா, காகுடி கி பதக் ஆகியவை. அவற்றில் ஒன்று மட்டுமே இன்று கொஞ்சம் எஞ்சியிருக்கிறது. கோட்டைக்கு மேல் மழைநீரை சேர்த்துவைக்கும் குளங்கள் பாறைகளில் வெட்டப்பட்டிருந்தன. இன்று சுற்றுலாப்பயணிகள் வந்து பார்ப்பதற்கென எஞ்சியிருப்பவை சில சிறிய ஆலயங்கள் மட்டுமே.
கோட்டைக்குமேல் ஒரு தர்கா உள்ளது. இது சையத் ஹுசெய்ன் கிங் சர்வார் என்பவரின் சமாதி. இவர் மீரான் சாகிப் என அழைக்கப்படுகிறார். அஜ்மீரை கைப்பற்றிய முகம்மது கோரி அவரை கோட்டையின் கிலாதார் ஆக நியமித்தார். மீரான் சாகிப் மனிதநேயராகவும் நீதிமானாகவும் அனைத்து மக்களையும் சமானமாகக் கருதுபவராகவும் இருந்தமையால் அனைவராலும் விரும்பப்பட்டார்.
1202ல் கோட்டையை தாக்கிய ராஜபுதனவீரர்களால் அவர் கொல்லப்பட்டார். கோட்டையை சௌகான்கள் மீண்டும் உரிமைகொண்டனர். மீண்டும் தாரா ஷுகோதான் இக்கோட்டையை கைப்பற்றி முகலாய ஆட்சிக்குக் கீழே கொண்டுவந்தார். ஆனால் சௌகான் ஆட்சி நடந்தபோதுகூட கோட்டைவாசிகள் மீரான் சாகிப் அவர்களை தொடர்ந்து மதித்து வழிபட்டனர். கல்லால் ஆன சிறிய சமாதி ஒன்று அங்கே அமைக்கப்பட்டது. உள்ளூர் பழங்குடிகளும் இஸ்லாமிய பக்கிரிகளுமே வழிபட்டு வந்தனர். முந்நூறாண்டுகளுக்குப் பின்னரே அக்பர் காலத்தில் அது தர்காவாக ஆகியது.
வளைந்த பாதையில் மேலேறிச் சென்றபோது கண்கூசும் வெயில் நிறைந்திருந்தது. வெயில்பரவிய பாலைநிலம் சுற்றிலும். வெறும் வானம் மேலே வளைந்திருந்தது. மீரான் சாகிப்பின் தர்காவுக்கு நிறையபேர் வண்டிகளில் வந்திருந்தனர். இன்று இந்துக்கள், இஸ்லாமியர், சீக்கியர் ஆகிய மூன்று மதத்தினருமாகிய மக்கள் திரளாக வரும் இடமாக இந்த தர்கா உள்ளது. மீரான் சாகிப்பை வென்ற ராஜபுத்திரர்களும் வழிபடுகிறார்கள்.
சுன்னி இஸ்லாமியரின் தர்காவாக இருந்த இது பின்னாளி ஷியா முஸ்லீம்களால் எடுத்துக்கொள்ளப்பட்டது. ஏனென்றால் மீரான் அவர்கள் ஷியா பிரிவைச் சேர்ந்தவர். ஆனால் சுன்னிகள்தான் அவருடைய தர்காவை கட்டியவர்கள். இந்த பூசல் இன்னமும்கூட நீடிக்கிறது. ஷியாக்களுக்கு இசை பாவம். சுன்னிகளில் சுஃபி பிரிவினர் இசையை இறைவனிடம் கொண்டுசெல்லும் வழியாக எண்ணுபவர்கள். சுஃபி தர்காவான மீரான் சாகிப் திகழ்விடத்தில் இசை ஒலிக்கலாமா கூடாதா, கவாலி பாடகர்களுக்கு அனுமதி உண்டா இல்லையா என்பது இன்றும் விவாதமாக உள்ளது. சுன்னிகள் அஜ்மீரில் மொய்னுதீன் சிஷ்டி தர்காவுக்கு அருகே மீரான் சாகிபுக்கு ஒரு சிறு நினைவிடம் அமைத்து அங்கே இசைநிகழ்ச்சிகளை நடத்திக்கொள்கிறார்கள்.
ஷியா முஸ்லீம்களே இந்த மலைமேல் வாழ்கிறார்கள். அவர்களின் சிறிய தெருக்களும் கடைகளும் சூழவும் செறிந்துள்ளன. ஒட்டகங்களிலும் குதிரைகளிலும் மலையைச் சுற்றிக்காட்ட அழைத்துச் செல்கிறார்கள். சுற்றுலாவை நம்பியே வாழ்கிறார்கள். நாங்கள் சென்றபோது உச்சிவெயில். ஆகவே கோட்டையைச் சுற்றிப்பார்க்க முடியவில்லை. தர்காவுக்கு மட்டும் சென்றோம்.
தர்காவின் காதிம்கள் ஷியா முஸ்லீம்கள். அவர்களின் அலுவலகங்கள் தர்கா செல்லும் வழியில் வரிசையாக உள்ளன. அங்கே மெத்தைமேல் கம்பிளி விரிக்கப்பட்ட தரையில் அமர்ந்து அவர்கள் தந்த டீயை குடித்தோம். சிஷ்டி அவர்களின் தர்காவைப் போலவே சத்தர் எனப்படும் சால்வையும் ரோஜா மலரும்தான் வழிபாடு. காதிம் எங்களை உள்ளே அழைத்துச் சென்றார்.
அக்பரால் கட்டப்பட்ட மிகப்பெரிய சலவைக்கல் நுழைவாயில். உள்ளே வெண்சலவைக்கல்மேல் வெயில் நின்றிருந்தது. செருப்பில்லா கால்களுடன் செல்வது கடினமாக இருந்தது. மீரான் சாகிப் அவர்களின் திகழ்விடத்தில் மலர்வைத்து சால்வை அளித்து வழிபட்டோம். சால்வையால் எங்கள் தலையை மூடி காதுக்குள் குரான் மந்திரங்களைச் சொல்லி வாழ்த்தினார் காதிம்.
அருகே அக்பராலும் பின்னர் ஔரங்கசீபாலும் கட்டப்பட்ட நுழைவாயில்களும் மசூதியும் இருந்தன. நான் திரும்ப வந்து காதிமின் அலுவலகத்தில் காத்திருந்தேன். ஷாகுல் சென்று நமாஸ் முடித்துவிட்டு வந்தார். காதிம் அலுவலகத்தின் மெத்தைத்தரைமேல் ஒரு பயணியர் கூட்டம் அமர்ந்திருந்தது. அவர்களின் குழந்தைகள் மெத்தைமேல் கும்மாளியிட்டன
அவர்களில் ஒருவன் அலி. இரண்டு வயது இருக்கும். குண்டுப்பையன், செல்லப்பிள்ளை ஆகவே ‘சட்டம்பி’ என்று தெரிந்தது. அவனுடைய சகோதரிகளையும் சகோதரர்களையும் அடிப்பது உதைப்பது கூச்சலிடுவது குட்டிக்கரணம் அடிப்பது என்று ஆக்ரோஷமாக இருந்தான். ஒவ்வொரு முறை எவரையாவது உதைத்த பின்னரும் பால்பற்கள் தெரிய சிரிப்பு.
அவன் அக்கா அவனை ஒரு மெல்லிய தட்டு தட்டினாள். அவ்வளவுதான் அப்படியே விழுந்து புரண்டு கைகால்களை அடித்துக்கொண்டு உக்கிரமான அழுகை. ஆனால் அவன் அப்பா அவன் அழுகையை பொருட்டாகவே நினைக்காமல் இடதுகையைப் பிடித்து தூக்கி சூட்கேஸ் போல கொண்டுசென்றார். செல்லும்வழியில் ஒட்டகம். அழுகையை நிறுத்தி அதை வியந்து நோக்கி சுட்டுவிரலால் காட்டி ஏதோ சொன்னான். வியந்த முகம் அந்த வியப்புடன் அப்பால் மறைந்தது.
காரில் கீழே வந்தோம். மலையின் அடிவாரத்தில் பிருதிவிராஜ் சௌகானுக்கு ஒரு நினைவிடமும் அதைச்சுற்றி ஒரு பூங்காவும் அமைத்திருக்கிறார்கள். பூங்காவில் அனேகமாக எவருமில்லை. கிளிகள் செடிகள் நடுவே கூச்சலிட்டுக் கொண்டிருந்தன. சரிந்து செல்லும் நிலம் ஆகையால் எப்போதுமே நம் காலடிக்குக் கீழே ஒரு காடு தெரிந்தது. அங்கிருந்து பார்க்கையில் உச்சிக்கிளைகளில் குருவிகள் எழுந்தமர்ந்து விளையாடுவதைக் காணமுடிந்தது. நல்ல பசுமையான பூங்கா. புத்திசாலித்தனமாக நிறைய தண்ணீர் தேவைப்படும் செடிகளையோ மரங்களையோ நடவில்லை. பாலைவனத்தில் வளரும் செடிகளையும் மரங்களையும் கொண்டே அதை அமைத்திருந்தனர்
பிருத்விராஜ் சௌகான் ராணி சம்யுக்தாவின் கணவராக கதைகளில் நாம் அறிந்தவர். சௌகான் வம்சத்தின் மூன்றாம் பிருத்விராஜ்தான் நாமறிந்த பிருத்விராஜ். சௌகான் வம்சத்தின் மிகப்பெரிய ஆட்சியாளர் இவர்தான். ராஜஸ்தானிலும் குஜராத்திலும் பஞ்சாபிலும் பெரும்பகுதியை ஆட்சி செய்தார். வடக்கே இமையமலை விளிம்பு வரை இவர் அரசு அமைந்திருந்தது. இவருடைய தந்தைபெயர் சோமேஸ்வரர். பிருத்விராஜ விஜயம், பிருதிவிராஜ ரசோ போன்ற பிருதிவிராஜ பிரபந்தம் போன்ற நூல்கள்தான் இவரை இந்தியாவின் மாபெரும் கதாநாயகர்களில் ஒருவராக நிலைநிறுத்தின.
இவர் சௌகான் வம்சத்தில் சோமேஸ்வரரின் மைந்தராக பிறந்தார். இரண்டாம் பிருதிவிராஜின் மரணத்திற்குபின் இவருடைய தந்தை சோமேஸ்வரர் அரசர் ஆனார். அவருக்குப்பின் மணிமுடி இவரை தேடிவந்தது. அப்போது இவருக்கு வயது 11 தான் எனப்படுகிறது. இளமையிலேயே பெருவீரராகவும் சிறந்த ஆட்சியாளராகவும் பிருத்விராஜ் அறியப்பட்டார்.
இவருடைய அமைச்சர் கதம்பவாசர் என்பவர் [கைமாசர், கைலாசர் என்னும் பெயர்களிலும் அறியப்படுபவர்] ராஜஸ்தானின் புகழ்பெற்ற அறிஞர்களில் ஒருவர். தெனாலிராமன் போல விவேகியான அறிஞராக நாட்டார் கதைகளில் இடம்பெறுபவர். இவர் இஸ்லாமியர்களின் ஒற்றர் என்று பிரதாப சிம்மன் என்னும் தளபதி சூழ்ச்சியால் பிருத்விராஜை நம்பவைத்தார். பிருத்விராஜ் அந்த அந்தணரை கொலைசெய்ய ஆணையிட்டார். பிருதிவிராஜ ரசோ என்னும் நூல் கதம்பவாசர் பிருத்விராஜின் ஆசைநாயகியான கர்நாடி என்பவளின் படுக்கையறையில் பிடிபட்டதனால் தான் கொல்லப்பட்டார் என்கிறது. அந்தப்பழியால்தான் சௌகான் வம்சம் வீழ்ச்சி அடைந்தது என்னும் கதை ராஜஸ்தானில் உண்டு.
பிருத்விராஜ் இளமையில் தன் தாய்மாமனான புவனைகமல்லர் என்னும் தளபதியின் உதவியுடன் ஆட்சி செய்தார். 1180ல் அவர் ஆட்சிமேல் முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார். ஆரம்பத்தில் அவருக்குத் தன் குடும்பத்திற்குள் இருந்து எதிர்ப்பு வந்தது. அவருடைய தாய்மாமன் விக்ரஹராஜாவின் மகன் நாகார்ஜுனன் அவருக்கு எதிராகக் கலகம் செய்தார். குடபுரா என்னும் ஊரைக் கைப்பற்றிக் கொண்டார். குடும்பமே இரண்டாக பிளந்தது.
பிருத்விராஜ் நாகார்ஜுனனை தோற்கடித்தார். நாகார்ஜுனரின் அமைச்சர் தேவபட்டர் தொடர்ந்து போரிட்டார். அனைவரையும் வென்ற பிருத்விராஜ் அவர்களின் மனைவி குழந்தைகள் என அத்தனை பேரையும் கொன்றொழித்தார். அவர்களின் தலைகளைக் கோத்து மாலையாக ஆக்கி அஜ்மீரின் கோட்டை முகப்பில் அணிவித்தார் என பிருத்விராஜின் வெற்றியைப் பாடும் பிருத்விராஜ விஜயம் வர்ணிக்கிறது.
பிருத்விராஜ் சிலை அஜ்மீர்பிற ராஜபுத்திர மன்னர்களை வென்று ஏறத்தாழ முழு ராஜபுதனத்தையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார். பிருத்விராஜ் மிகக்கொடூரமான படையெடுப்பாளர் என அவரைப்புகழும் நூல்கள் சொல்கின்றன. எதிரிகளை வென்று அவர்களின் குடிகளைச் சூறையாடும் வழக்கம் இருந்தது. பிகாரின் சந்தால அரசர்கள், குஜராத்தின் வடக்குச் சாளுக்கியர்கள், மௌண்ட் அபுவை ஆண்ட பரமார வம்சத்தவர்கள் அவரால் வெல்லப்பட்டார்கள்.
வாரணாசியையும் கன்யாகுப்ஜத்தையும் [கன்னோஜ்] தலைநகராக கொண்டு ஆட்சி செய்துவந்த கஹடவால பேரரசின் அரசர் ஜெயச்சந்திரனிடம் போர்புரிந்த பிருத்விராஜ் அவரை வெல்லமுடியாத நிலையில் இருந்தார். ஜெயச்சந்திரன் ஒருங்கிணைத்த ராஜசூய வேள்வியை புறக்கணித்து அவரை பேரரசராக ஏற்க மறுத்தார். அவர் நிலத்தை கைப்பற்றும் பொருட்டு அவர் மகள் சம்யோகிதா அல்லது சம்யுக்தாவை கடத்தி மணம் புரிந்துகொண்டார். ஆகவே ஜெயச்சந்திரன் பிருத்விராஜ் மேல் கடும் சினம் கொண்டிருந்தார். ஜெயச்சந்திரன் தன் மகளுக்கு ஒருங்கிணைத்த சுயம்வரத்தில் புகுந்து சம்யுக்தாவை அவர் கடத்தியதாகக் கதை. இன்று திரைப்படங்கள் வழியாக புகழ்பெற்றிருக்கும் இக்கதை அபுல் ஃபாசலில் அயினி அக்பாரி உள்ளிட்ட பல நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அப்போது ஆப்கானிஸ்தானின் குரிட் [Ghurid] வம்சத்து ஆட்சியாளரான முகம்மது கோரி இந்தியா மேல் படையெடுத்துவந்தார். சிந்துவை கடந்து வந்த அவர் பஞ்சாபை கைப்பற்றினார். பிருத்விராஜிடம் தூதனுப்பி கப்பம் கேட்ட அவரை பிருத்விராஜ் எதிர்த்தார். பல சிறு போர்களுக்குப்பின் 1190ல் தராய்ன் என்னும் ஊரில் நிகழ்ந்த போரில் கோரியை பிருத்விராஜ் வென்றார். போரில் காயமடைந்த கோரி தப்பி ஓடினார். படை சிதைந்தது. அது ஒரு முழுமையான வெற்றி. இந்தியாவின் சக்கரவர்த்தியாக பிருத்விராஜ் ஆகும் வாய்ப்பை அவருக்கு அளித்தது அது.
தராய்ன் போர், பத்தொன்பதாம் நூற்றாண்டு ஓவியம்பிருதிவிராஜ் சௌகான் கோரியை துரத்திச்சென்று முழுமையாக வென்றிருக்க வேண்டும். ஆனால் அவர் அதற்கு முயலவில்லை. அவர் பிற ராஜபுதன அரசுகளிடம் சிறு போர்களில் ஈடுபடுவதையும் வெற்றிவிழாக்களை கொண்டாடுவதையுமே செய்துகொண்டிருந்தார். அவர்களை இணைத்துக்கொண்டு ஒரு படையை உருவாக்குவதற்குப் பதிலாக அவர்களை எதிரிகளாக ஆக்கிக்கொண்டிருந்தார். கோரியின் ஆற்றலை அறியும் நுண்ணறிவு பிருத்விராஜுக்கு இருக்கவில்லை. ஏனென்றால் அவருக்கு அந்தண அறிஞர்களின் பின்புலம் இருக்கவில்லை.
பிருத்விராஜ் கன்னோஜை வெல்ல திட்டமிட்டார். பிருத்விராஜை அஞ்சிய கன்னோஜின் அரசர் ஜெயச்சந்திரன் முகம்மது கோரிக்கு தூதனுப்பி அவருடன் ராணுவ உடன்படிக்கை செய்துகொண்டார். ஓராண்டுக்குப்பின் மீண்டும் தராய்ன் பகுதியில் நடந்த போரில் கோரி ஜெயச்சந்திரனின் உதவியுடனும் பிற ராஜபுத்திரர்களின் உதவியுடனும் பிருத்விராஜை தோற்கடித்தார். புகழ்க்கதைகள் பிருத்விராஜ் போர்க்களத்தில் வீரமரணம் அடைந்ததாக பாடுகின்றன. ஆனால் வரலாற்றுச் செய்திகளின்படி கோரி பிருத்விராஜை கைதியாக பிடித்தார். அவரிடம் ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டு அஜ்மீரை அவரிடமே அளித்து தனக்கு கப்பம் கட்டும்படி கோரினார். பிருத்விராஜ் அதை ஏற்று கோரிக்கு கீழே அஜ்மீரை ஆளும் அரசப்பிரதிநிதியாக ஆனார்.
கோரி பெயரும் பிருத்விராஜ் பெயரும் கொண்ட நாணயம்அவ்வாறு நடந்திருக்கவே வாய்ப்பு. ஏனென்றால் கோரியால் நேரடியாக ஓர் அன்னிய மண்ணை ஆள முடியாது. வென்றவர்கள் தோற்றவர்களிடம் நாட்டை ஒப்படைத்து அவர்களை கப்பம் கட்டிவிட்டு ஆளும்படி கோருவதே வழக்கம். பழைய ஆட்சியாளர்கள் ஏற்கனவே உறுதியான ஆட்சிமுறையை உருவாக்கியிருப்பார்கள். மேலும் அன்றைய அரசதிகாரம் என்பது குடிமக்களின் ஏற்பின் விளைவாக அமைவது. அந்த ஏற்பு முழுக்க முழுக்க தொன்மங்கள் மற்றும் குலநம்பிக்கைகள் சார்ந்தது. இன்னொருவர் அந்த அதிகாரத்தை எளிதில் அடையமுடியாது. அதற்கு மாபெரும் அடக்குமுறை தேவையாகும்
அஜ்மீரில் கிடைத்த பழைய நாணயங்களில் பிருத்விராஜின் பெயரும் அவருடைய குதிரைச்சின்னம் ஒருபக்கமும் மறுபக்கம் முகமது கோரியின் தளபதியான முகம்மது பின் சாம் பெயர் மறுபக்கமும் உள்ளது. ஆகவே குறைந்தது சில ஆண்டுகளாவது பிருத்விராஜ் கோரியின் பிரதிநிதியாக அஜ்மீரை ஆட்சி செய்திருக்கலாம். இஸ்லாமிய வரலாற்றாசிரியர் ஹஸன் நிஜாமியின் குறிப்புகளின்படி பிருத்விராஜ் கோரிக்கு எதிராக சதிசெய்தபோது பிடிபட்டு சுல்தானால் மரண தண்டனை அளிக்கப்பட்டார்.
பிருத்விராஜ பிரபந்தம் கூறுகிற கதை இது. பிருத்விராஜ் முகமது கோரி தங்கியிருந்த மாளிகைக்கு மிக அருகே சிறைவைக்கப்பட்டிருந்தார். அவர் தன் படைத்தலைவர் பிரதாபசிம்மனிடம் தனக்கு ஒரு அம்பும் வில்லும் கொண்டுவந்து தரும்படிச் சொன்னார். பிரதாபசிம்மர் அம்பும் வில்லும் கொண்டுசென்று கொடுத்தார். ஆனால் செய்தியை கோரியிடம் தெரிவித்துவிட்டார். தன் சிறையில் சாளரம் வழியாக கோரியை கொல்ல முயன்ற பிருத்விராஜ் பிடிபட்டு ஒரு குழியில் வீசப்பட்டு கற்களை வீசி கொல்லப்பட்டார்.
சமண அறிஞர் நாயசந்திர சூரியால் பதினைந்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஹாம்மிரா மகாகாவியா என்னும் குறுங்காவியம் பிருத்விராஜ் தோல்விக்குப்பின் உண்ணா நோன்பிருந்து உயிர்விட்டதாக சொல்கிறது. பல நாட்டார் பாடல்களில் அவர் போர்க்களத்திலேயே வீரமரணம் அடைந்ததாகச் சொல்லப்படுகிறது. பிருத்விராஜ் ரஸோ என்னும் நூல் அவர் கோரியால் கண்கள் தோண்டி குருடாக்கப்பட்டார் என்றும் சிறையில் கொல்லப்பட்டார் என்றும் சொல்கிறது. விருத்த விதி வித்வன்சா என்னும் நூல் அவரை கோரி கைகளாலேயே களத்தில் கொன்றார் என்கிறது.
இந்தக் கதைகள் அனைத்திலும் சில பொதுவான அம்சங்கள் உள்ளன. அது பிருத்விராஜின் அமைச்சர்கள் மற்றும் படைத்தலைவர்கள் நடுவே இருந்த போட்டியும் காழ்ப்பும். அவர்கள் ஒருவரை ஒருவர் வஞ்சகம் செய்து கோள்மூட்டி அழிக்கிறார்கள். எதிரிக்கு துப்பு கொடுத்து பிருத்விராஜ் தோற்க வழியமைக்கிறார்கள். பிருத்விராஜ் வஞ்சத்தால் வீழ்த்தப்பட்டார் என்னும் கதையைக் கட்டமைக்க இவை சொல்லப்பட்டாலும்கூட அவருடைய அரசகுடிக்குள் அவர் முடியேற்ற நாள்முதலே இருந்துவந்த எதிர்ப்பையும் சூழ்ச்சியையுமே இவை காட்டுகின்றன என்று படுகிறது.
சிவாஜி முதல் கட்டபொம்மன், வேலுத்தம்பி தளவாய் வரையிலான இந்தியாவின் தேசியக் கதைநாயகர்கள் அனைவரின் வரலாற்றிலும் உள்ள சிக்கல்தான் இது. அவர்களின் வரலாறுகள் முதலில் பழங்கால இஸ்லாமிய வரலாற்றாசிரியர்களாலும் பின்னர் காலனியாதிக்க வரலாற்றாசிரியர்களாலும் எழுதப்பட்டன. இஸ்லாமிய வரலாற்றாசிரியர்கள் அவர்களை எதிர்மறையாகவே எழுதினர். காலனியாதிக்க வரலாற்றாசிரியர்களும் அதையே பின்பற்றினர். ஆகவே தேசிய வரலாற்றெழுத்து தொடங்கியபோது அவர்கள் போற்றப்பட்டனர். அதற்கான தரவுகள் தேடி கண்டடையப்பட்டன.
தேசிய வரலாற்றெழுத்து என்பது இந்திய சுதந்திரப்போராட்டத்தின் ஒரு பகுதியாக நிகழ்ந்த அறிவுச்செயல்பாடு. இந்தியர்களுக்கு வீரமோ, பெரும் பண்பாடோ, பெருமைக்குரிய வரலாறோ இல்லை என்னும் காலனிய முன்முடிவுகளுக்கு எதிராக எழுதப்பட்டது. ஆகவே அது மிகைகளை நாடிச்சென்றது. வாய்மொழிக்கதைகள், புகழ்பாடும் நூல்கள் ஆகியவற்றைச் சான்றாகக் கொண்டது. உதாரணமாக வீரபாண்டிய கட்டபொம்மனின் கதைக்கு கெட்டிபொம்முதுரைப் பாடல் என்ற வாய்மொழிப்பாடலே முதன்மை ஆதாரமாக கொள்ளப்பட்டது. இந்திய மன்னர்கள், போராட்டத்தலைவர்கள் ஆகியோரின் வரலாற்றில் பாதிக்குமேல் புனைவை நம்பி உருவாக்கப்பட்டவை.
வரலாற்றின் இயக்கத்திற்கு ஒரு யதார்த்தம் உள்ளது. அதை வரலாற்றெழுத்தாளர் உணர்ந்திருக்க வேண்டும். அந்தந்த காலகட்டத்தின் அரசியல், சமூகவியல் தேவைகளும் மனநிலைகளும் நம்பிக்கைகளுமே வரலாற்றை தீர்மானிக்கின்றன நாம் இன்று கொண்டுள்ள நம்பிக்கைகளும் பார்வைகளும் நேற்றைய வரலாற்றில் பிரதிபலிக்க வாய்ப்பில்லை. ஆகவே வரலாற்றெழுத்தில் துரோகிகளும் கதைநாயகர்களும் இல்லை. அவ்வாறு எவரையும் முற்றாக வரையறுப்பது வரலாற்றாய்வும் அல்ல.
பிருத்விராஜ் சௌகான் அன்றைய ராஜபுதனத்து அரசர்களின் பார்வையில் ஓர் ஆக்ரமிப்பாளர். கொடிய அடக்குமுறையாளர். அவர் தன் ஆட்சிக்காலம் முழுக்க போரிட்டது பெரும்பாலும் பிற ராஜபுத்திர அரசர்களிடம்தான். அவர்களை அவர் வென்று அவமதித்தார். அவர்களின் நாட்டை சூறையாடினார். அவர் பேரரசுக்கனவு கொண்டிருந்தார். அக்காலத்தின் எந்த அரசரும் கொண்டிருக்கும் கனவு அது.
அப்போது கோரி படையெடுத்து வந்தார். அவர் அன்றைய ராஜபுதன மன்னர்களின் பார்வையில் இன்னொரு ஆக்ரமிப்பாளர், பேரரசுக்கனவு கொண்ட இன்னொரு மன்னர், அவ்வளவுதான். கோரி இந்தியாவில் பின்னர் ஐநூறாண்டுக்காலம் நீடித்த இஸ்லாமிய ஆட்சிகளின் தொடக்கப்புள்ளி. ஆனால் அது நாம் இன்று அறிவது, அன்று எவருக்கும் தெரிந்திருக்காது. ஜெயச்சந்திரன் எந்த ஆட்சியாளரும் செய்வதையே செய்தார், தன் நாட்டை காப்பாற்றிக்கொள்ள எதிரியின் எதிரியிடம் சேர்ந்துகொண்டார்.
கோரி இங்கே நாடாளவே வந்தார். இங்குள்ள ஆட்சியாளர்களை தனக்குச் சாதகமானவர்களாக ஆக்கிக்கொண்டு, அவர்கள்மேல் ஒரு ஆதிக்கத்தை உருவாக்கினால் மட்டுமே அவரால் ஆட்சி செய்ய முடியும். அதையே அவர் செய்தார். தன்னுடன் ஒத்துப்போகிறவர்களைச் சேர்த்துக்கொண்டார். தான் வென்றவர்களிடமே அரசை ஒப்படைத்து கப்பம் மட்டும் பெற்றுக்கொண்டார்.
ஆனாலும் ஒட்டுமொத்தமான பார்வையில் பிருத்விராஜ் சௌகான் ஒரு மாபெரும் வரலாற்று ஆளுமைதான். அவர் ஒரு பேரரசை உருவாக்க முயன்ற பெருவீரர் என்பதனால். வரலாற்றில் மனிதனின் உளவல்லமை சில மானுடர் வழியாக வெளிப்படுகிறது. வரலாறாக நிகழும் இயற்கையின், நியதியின் ஆதாரமான விசை சில மனிதர்களை கருவியாக்கிக் கொள்கிறது.
ஜெர்மானியக் கவிஞர் கதே அதை எலிமெண்டல் பவர் என்கிறார். நெப்போலியன் அத்தகைய ஒரு அடிப்படைவிசை என்கிறார். நெப்போலியனின் பிழைகள், அவர் உருவாக்கிய அழிவுகள் அனைத்தையும் கருத்தில் கொண்டே நெப்போலியனை ஒரு மாபெரும் நாயகன் என்கிறார் கதே. அதே அளவுகோலின்படி பிருத்விராஜும் வரலாற்றுநாயகனே.
தாராகர் கோட்டையில் குதிரைகள் வெயிலில் சோர்ந்து பயணிகளை எதிர்பார்த்து நின்றிருந்தன. பிருத்விராஜ் சௌகானின் படைகளில் இருந்த பல்லாயிரம் குதிரைகளின் வம்சம். ஒரு கொட்டகைக்கடையில் ஒரு ஸ்பெஷல் ராஜஸ்தானி- அல்லது ஷியா முஸ்லீம். டீ சாப்பிட்டோம். அது டீயும் பாலும் சிலவகை கொட்டைகளும் ரோஜா இதழ்களுமெல்லாம் போட்டு செய்யப்பட்ட ஒரு வகை பாயசம் போன்ற பானம். சுவையுடனும் மணத்துடனும் இருந்தது. மண்கோப்பைகளில் அதை தந்தனர். அதுவே ஒரு உள்ளூர் உணர்வை அளித்தது.
[மேலும்]
குவாஜா மொய்னுதீன் சிஷ்டி பாடல்கள்-6
கடவுளை விரும்பினேன்
சொர்க்கமும் இனிமைகளும்
நாடுவதில் இருந்து
நான் விடுபட்டேன்..
இரு உலகின் செல்வங்களும்
விழையவில்லை
காதலனுக்காக
நான் விடுபட்டேன்.
இறைவனின் மேசையில் இருந்து
தெய்வீக விருந்து உண்டேன்..
உலகில் இருத்தும் அன்னமும் நீரும் வேண்டேன்
நான் விடுபட்டேன்.
பிறப்பின் தினம், தெய்வீக அன்பின் செவிலித் தாய்
ஆன்மாவுக்கு அமுது கொடுத்தாள்
இங்கு தொட்டிலில் அன்னையின் பாலும் வேண்டேன்
நான் விடுபட்டேன்.
என்றுமுள்ள வாழ்வின் அமுதத்தை
அந்த உதடுகளிடம் இருந்து பெற்ற பிறகு
கைசரின் அழியா வாழ்வின் நீர் வேண்டேன்
நான் விடுபட்டேன்.
பிரிவு எனை அச்சுறுத்தியது
லாலா மலரில் புள்ளிகளைப் போல:
அவனுடன் கலந்தபின் வடுக்கள் அகன்றன
நான் விடுபட்டேன்!
போதகனே, காதலர்களுக்கு
சொர்க்கத்தின் அழகை சொல்ல வேண்டாம்
கடவுளின் அழகைக் கண்டுவிட்டேன் – அழகுகளில் இருந்து
நான் விடுபட்டேன்.
நான் படைப்பின் சிறையில் இருந்து தப்பிய
தெய்வீகக் காதலின் பறவை
உருவையும் ஆன்மாவையும் கிழித்து விட்டேன் – இருத்தலில் இருந்து
நான் விடுபட்டேன்.
படைப்பின் எல்லைகளைத் தாண்டி
பேரிருப்பின் உலகில் நுழைந்தேன்
மாய இருப்பின் குறுகிய வழிகளை நீங்கி
நான் விடுபட்டேன்!
கற்றவரும் அறிஞரும்
அறிவார்ந்த ஞானம் தேடுவர்
வறண்ட அறிவின் ஆழ்ந்த தேடலில் இருந்து
நான் விடுபட்டேன்.
எனது விழிகளால் அனைத்து மதங்களின்
ஆதார உண்மையைக் கண்டேன்:
அவர்களது வாதங்கள், ஐயங்கள், நிரூபங்களில் இருந்து
நான் விடுபட்டேன்.
தெய்வீக சாரத்தின் வெளியில்
இருமை இருப்பதில்லை
இம்மண்ணுலகில் என் பெயரில் இருந்தும்
நான் விடுபட்டேன்.
நான் காண்பதெல்லாம்
இறையின் வடிவமும் இருப்பும்..
காதல், ஞானம், நம்பிக்கை, துரோகம், கடவுளை அறிதல்..
நான் விடுபட்டேன்.
இறையருளால், உலகின் சந்தைக்கு
கடவுளின் நம்பிக்கையுடன் சென்றேன்
மனிதத்தின் கொடூரம், அறீவினம் தொடாமல்
நான் விடுபட்டேன்.
எல்லா பிரபஞ்சங்களின் இறை
எனது கட்டளைகளை ஏற்கிறான்
அவனது வாயிற்காவலர்களின் மருட்டலில் இருந்து
நான் விடுபட்டேன்!
காதலியும் காதலனும் இணைவதில் திரைகள் இனி இல்லை..
நான் அவனை சேர்ந்தேன்..
எனது நம்பிக்கைகளில் இருந்தும்
நான் விடுபட்டேன்.
மொய்ன், உனது பாதையில் செல்
பிறரைத் துறந்து விடு
உலகின் புகழும் இகழும் தொடுவதில் இருந்து
நான் விடுபட்டேன்!

அவன் ஒருவனே காதலன்
நேசிக்கத் தகுந்தவன்
அவன் ஒருவனே..
தனிமையில் துணைவன்
கூட்டத்தில் மதுகொணர்பவன்
அவன் ஒருவனே!
இதயத்தின் ஆடியில் ஒரு முகம் தெரிந்தது
எனது ஆன்மாவின் ஆழத்திலும் உடலிலும் நான் உணர்வது
அவன் ஒருவனே.
இருப்பென்னும் ஆடையை கிழித்துவிட்டால்
ஆடையின் உள்ளே யாரென்றறிவாய்
அவன் ஒருவனே!
இதயம் காதலின் ரகசியத்தை அஞ்சாமல் சொல்கிறது
அதற்குத் தெரியும் பார்க்கப்படுவதும் ஒளிந்துகொள்வதும்
அவன் ஒருவனே!
நான் என்பதும் நாம் என்பதும் பிழைத்தோற்றம்
கடந்து செல்.. நான் என்பதும் நாம் என்பதும்
அவன் ஒருவனே!
குழலின் வாயில் தன் உதடு பதிக்கும் குழலன் போல
நேசிப்பவர்கள் வாயில் தன் உதடு பதிப்பவன்
அவன் ஒருவனே!
கோப்பையில் மதுவுக்கு என்ன இடம் மதுகொணர்பவன் யார்?
பேசாதிரு மொய்ன் மூச்சையும் நிறுத்து – அனைத்தும்
அவன் ஒருவனே!

நீ ஒரு அரசன்
நீ பறந்தது அரசனின் கைகளில் இருந்து
அரசனை நாடி, அரசனைச் சேர
பறந்து கொண்டேயிருக்க வேண்டும்
உத்வேகத்தின் குதிரை
நூறடிகள் வைத்து உன்னிடம் வந்தது
உனது தயக்கங்களை துறந்துவிட்டு
ஓரடி வைத்துவிட வேண்டும்
எவ்வளவு காலம் அவனைத் தேடி
வாயில்களைத் தட்டுவாய்?
உள்ளே பார் உன் பார்வைக்காக
பலபெயர்களில் காத்திருக்கக்கூடும்
ஒளியின் தேசத்தில் இருந்து
பொருளின் உலகுக்கு ஆன்மா வந்தது
இறுதியில் இருப்பின் எல்லையில்
அதன் உலகுக்கு அது மீளட்டும்
எனது இதயக் கோட்டையின் அரசன்
நிலத்திலும் நீரிலும் அவன் அமைவதில்லை
எல்லையற்ற வெளியில்
அவன் கூடாரம் அமையட்டும்
இந்த இதயம் மற்ற காதலின்
துருவிலிருந்து தூய்மையான போது
கடவுளின் அழகின் ஒளி
இருப்பின் ஒவ்வொரு அணுவிலும் தெரியட்டும்
வாழ்வென நாம் சொல்லும் இந்த ஆடியில்
அந்த முகத்தைக் காண்கிறேன்
தூய்மையான நீர் கதிரவனை
தெளிவாகக் காட்டும்
வாழ்வின் சமுத்திரத்தில் ஒரு துளியை
மறைபொருள் எடுத்துக்கொண்டது..
துளி நதிக்குத் திரும்பியது
இயற்கையில் அது ஒன்றாகட்டும்
நானே கடவுள் – நான் சொல்லவில்லை
அவனே சொல்லச் சொல்கிறான்
பிரகடனப்படுத்த காதலன் ஆணையிடும்போது
அதுவே அவன் சொல்லாகட்டும்
உனது சாரத்தை நான்
ஆராய வேண்டுமென்றால்
அனைத்தின் நிரந்தரமும்
உன்னையே சார்ந்திருக்கட்டும்
உனது இருப்பெனும் சுள்ளிகள்
மோசஸ் கண்ட ஒளியாகும்
உனது தலையில் இருந்து
சுயநலத்தின் கரித்துகள்கள் அகலட்டும்
சொர்க்கத்தின் உச்சத்திற்கு விரைந்து
காதலன் எங்கே என்றேன்
கடவுள் சொன்னார் – இரவும் பகலும் உன்னோடு அவனிருக்க
கேள்விகள் எழாதிருக்கட்டும்
இறை என்கிறாய் மொய்ன்
ஈருலகங்களில் இறை இல்லாதது எது
நூறு விவாதங்கள் இதை நிரூபிக்கிறது – இருந்தும்
யாரும் அறிவதில்லை
இதயத்தில் இருந்தும் ஆன்மாவில் இருந்தும்
உனது காதல் என்னைத் திருடியது
என்னிடம் இருந்து…
உன்னுள்ளே இருக்கிறேன்
அவர்கள் உன்னை பிரித்தறிய முடியாது
என்னிடம் இருந்து!
அழகிய சுடர் விட்டிலை அழைக்கிறது
உன் அழகின் ஒளியின் ஒற்றைப் பார்வையில்
உனைத்தேடி பறந்து விலகி வருவேன்
என்னிடம் இருந்து.
மாலை முதல் காலைவரை உன்னுடன்
உன் ரகசிய அறையில்
காலை வந்ததும் முகத்தை ஏன் மறைக்கிறாய்
என்னிடம் இருந்து?
நான் எவ்வளவு விலகினாலும் தேடி வருவாய்
உனது உறுதியை அதிகரிக்கிறாய்
தாமதத்தை அறிந்ததும்
என்னிடம் இருந்து.
இங்கு அனைவருக்கும் மன்சூரைப் போல
மரணம் விதிக்கப்பட்டாலும்..
என்றுமுள்ள வாழ்வில் புகழின் வரிசை பெறுவார்கள்
என்னிடம் இருந்து..
கடவுளின் முகத்தின் தோற்றம் காண
என்னைப் பாருங்கள்
ஆடியில் என பிரதிபலிக்கிறது – பேதமில்லை என்பேன்
என்னிடம் இருந்து!
உங்களது உடல் ஏமன் போலாகட்டும்
ஆன்மா உவைஸ் கராணி போலாகட்டும்
அத்தகைய நம்பிக்கையில் கடவுளின் வாசம் மலர்கிறது
என்னிடம் இருந்து!
நீ சொன்னாய்!
திரையை விலக்கி என் அழகைக் காட்டினால்
மயக்கம் மதுவினாலா என்று அறிவாய்
என்னிடம் இருந்து!
நான் சொன்னேன்! மொய்னைப் போல
பல கோப்பைகள் அந்த மதுவை அருந்தியபின்
மலைகளைப் போல அமைதியாவேன் – மூச்சும் எஞ்சாது
என்னிடம் இருந்து!
தமிழாக்கம் சுபஸ்ரீ
குவாஜா மொய்னுதீன் சிஷ்டி பாடல்கள்-4 குவாஜா மொய்னுதீன் சிஷ்டி பாடல்கள்-3 குவாஜா மொய்னுதீன் சிஷ்டி பாடல்கள் -2 குவாஜா மொய்னுதீன் சிஷ்டி பாடல்கள்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

