Jeyamohan's Blog, page 893
October 26, 2021
வெள்ளை யானை, கடிதங்கள்
வெள்ளையானை வாங்க
வணக்கம் ஜெ சார்,
உங்கள் தளத்தின் முகப்பில் வெள்ளை யானை விவாதம் கவனித்திருந்தாலும், (உள் செல்லாமல்) எதைப் பற்றியதாக இருக்கும்? என்ற ஐடியா இல்லாததால் வாசிப்பதை ஒத்திப் போட்டிருந்தேன்.
சமீபத்தில் காடு நாவலை கிண்டிலில் வாசித்துக் கொண்டிருந்த அதே நேரத்தில், என் கணவர் வெள்ளை யானை வாசித்துக் கொண்டிருந்தார். குறிப்பாக அதில் இடம் பெற்றிருந்த பஞ்சத்தைப் பற்றி கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு பேசிக் கொண்டிருந்து விட்டு, “நீ கண்டிப்பாக இதை வாசிக்க வேண்டும்” என்றார். எனக்கு உண்மையாகவே வாசிக்க கொஞ்சம் தயக்கமாக இருந்தாலும், வாசிக்க ஆரம்பித்து, முடித்தும் விட்டேன்.
சிறுவயதில் ஊரில் இந்தப் பஞ்சத்தைப் பற்றிப் பலர் சிலாகித்துக் கூறியதும், குறிப்புகளாக பஞ்ச காலத்தில் பட்டினியால் லட்சக்கணக்கானோர் இறந்தனர் என்று, சில கட்டுரைகளில் வாசித்ததும் நினைவில் உள்ளது.
நாவலில் ஐஸ் ஹவுஸ் தொடக்கத்திலிலேயே வெள்ளை யானை புரிய ஆரம்பித்து விட்டது. சுமார் 15 வருடம் முன்பு சென்னையில் வேலை விசயமாகச் சென்று திரும்பும் பொழுது, ஐஸ் ஹவுஸ் ஸ்டாப்பில் பேருந்திற்காக காத்திருந்தேன். அருகிலிருந்த பைத்தியக்கார கிழவன் அழுக்கு பேண்ட் சட்டையுடன் ஆங்கிலத்தில் என்னிடம் உளரிக் கொண்டிருந்தார். (ஐஸ் பேக்டரியில் நடந்த அந்தக் கடைசி நிகழ்வு பற்றி.) பின்னர் அவர் அழ ஆரம்பித்தார், தலையில் அடித்துக் கொண்டார், என்னைத் திட்டினார். அருகிலிருந்த செருப்பு தைப்பவர், என்னை சமாதானம் செய்து அவர் சிலரிடம் இவ்வாறு நடந்து கொள்வார் என்றார்.
அன்றிரவு என்னால் உறங்க முடியவில்லை, ஐஸ் ஹவுஸ் என்றால் அந்த பைத்தியக்கார கிழவர் தான் ஞாபகம் வருவார். இந்ந நிகழ்வு நடந்த கால கட்டத்தில் 75 (2005ல்) மதிக்கத்தக்க அந்த கிழவர் நேரடியாக சம்பத்தப்பட்ட பட்டிருக்க வாய்ப்பில்லைதான்.
நாவல் படித்து முடிக்கும் வரை எய்டன், காத்தவராயன், பாதர் கதாபாத்திரங்கள் தாழ்த்தப்பட்ட தொழிலாளர்களின் மேம்பாட்டிற்காகவும், பஞ்சத்தின் கோர நிகழ்வுகளைப் பதிவிடும் மேலான நோக்கில் தங்களுக்கு ஏற்படும் தீவிரமான உணர்வுகளையும் கடந்து செல்லும் அவர்களின் மனநிலையிலேயே நானும் வாசித்து முடிக்க வேண்டியதாக இருந்தது.
ராஜி
***
அன்புள்ள ஜெ
வெள்ளையானை நாவலை இப்போதுதான் வாசித்து முடித்தேன். பஞ்சம் இந்நாவலின் ஒரு பின்புலம்தான். இத்தகைய ஒரு சூழலில் ஒவ்வொருவரும் எப்படி எதிர்வினையாற்றுகிறார்கள் என்பதுதான் முக்கியம். இன்றைய கொரோனாவும் பஞ்சம்போலத்தான். சிலருக்கு அது லாபம் கொய்யும் ஒரு சூழல். சிலருக்கு மனிதாபிமான உதவிகள் செய்யவேண்டிய களம். சிலருக்கு அதிகார அரசியல். ஏய்டன் போன்ற சிலருக்கு அது மானுட உண்மையை கண்டடையும் ஒரு பரிசோதனைக்களம்
ஆர். குமரேசன்
வெள்ளை யானை – சில வருடங்களுக்கு பின்- சுனில் கிருஷ்ணன் கிறிஸ்து ஒரு போதும் தனியாக இருப்பதில்லை-வெள்ளை யானை பற்றி… வெள்ளை யானையை ஏன் எழுதவேண்டும்? கைவிடப்பட்டவர்களின் கதை – வெள்ளை யானை வெள்ளை யானை -மனசாட்சியைக் காத்துகொள்ளும் பயணம் அதிகாரமெனும் நுண் தளை – வெள்ளை யானை வெள்ளையானை – பலராம கிருஷ்ணன் வெள்ளையானை – கடிதம் வெள்ளையானை கடிதங்கள் வெள்ளையானை -சிவமணியன் வெள்ளையானை -கடிதங்கள் வெள்ளையானையும் உலோகமும் வெள்ளையானையும் கொற்றவையும் வெள்ளையானை- சுரேஷ் பிரதீப் வெள்ளையானையும் மீட்கப்பட்ட கப்பலும் வெள்ளையானை -கடிதங்கள் வெள்ளையானை – ஒரு விமர்சனம் வெள்ளையானை – அதிகாரமும் அடிமைகளும் வெள்ளையானை -அடக்குமுறையும் சாதியும் வெள்ளையானை – நமது நீதியுணர்ச்சியின் மீது…: ராஜகோபாலன் வெள்ளையானை – இந்திரா பார்த்தசாரதிசொல்முகம் ,வெண்முரசு கூடுகை
நண்பர்களுக்கு வணக்கம்.
சொல்முகம் வாசகர் குழுமத்தின் பத்தாவது வெண்முரசு கூடுகை, வரும் ஞாயிறு அன்று கோவையில் நிகழவுள்ளது.
இவ்வமர்வில் வெண்முரசு நூல் தொகையின் ஐந்தாவது நாவலான “பிரயாகை” – யின் முதல் நான்கு பகுதிகளை முன்வைத்து கலந்துரையாட உள்ளோம்.
பகுதிகள்:
பெருநிலைசொற்கனல்இருகூர்வாள்அனல்விதைவெண்முரசு வாசகர்கள் மற்றும் வெண்முரசை அறியும் ஆர்வமுள்ள வாசகர்கள் அனைவரையும் இவ்வமர்வில் பங்கேற்க அன்புடன் அழைக்கிறோம்.
நாள் : 31-10-21, ஞாயிற்றுக்கிழமை
நேரம் : காலை 10:00
இடம் : தொண்டாமுத்தூர், கோவை.
தொடர்பிற்கு :
பூபதி துரைசாமி – 98652 57233
நரேன் – 73390 55954
October 25, 2021
எம்.கோபாலகிருஷ்ணனுக்கு ஸ்பாரோ விருது
எழுத்தாளர் அம்பை நடத்தும் ஸ்பாரோ அமைப்பு வழங்கும் ஸ்பாரோ இலக்கிய விருது இவ்வாண்டு எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணனுக்கு வழங்கப்படுகிறது. எம் கோபாலகிருஷ்ணனும் நானும் இணைந்து சொல்புதிது சிற்றிதழை நடத்தினோம். அம்மன்நெசவு, மனைமாட்சி போன்ற நாவல்களின் ஆசிரியர்.
எம் கோபாலகிருஷ்ணனுக்கு வாழ்த்துக்கள்
புவியரசு 90, நிகழ்வு
கவிஞர் புவியரசுக்கு ஒரு விழா ஏற்பாடு செய்யவேண்டும் என்று அரங்கசாமிதான் சொன்னார். அரங்கசாமி உள்ளிட்ட கோவை நண்பர்களுக்கு புவியரசிடம் பிடித்தது அவருடைய குன்றாத உற்சாகம், எப்போதுமிருக்கும் நன்னம்பிக்கை. அது அவரை இளைஞர்களுக்கு நடுவே இயல்பாக அமரச்செய்கிறது.
தொண்ணூறாண்டுகள் என்பது இயல்பான ஒன்று அல்ல. ஏறத்தாழ எழுபதாண்டுகள் தமிழ் அறிவியக்கத்துடன் இருந்திருக்கிறார். விவாதித்திருக்கிறார், சீண்டியிருக்கிறார், தொடர் மாறுதல்களுக்கு ஆளாகியிருக்கிறார். அவரை கௌரவிப்பதென்பது நம் அறிவியக்கத்தை ஒட்டுமொத்தமாக நாமே தொகுத்துக்கொள்வதுதான். நம் தொடர்ச்சியை நிறுவிக்கொள்வதுதான்.
விழாவை சீக்கிரமாகவே ஒருங்கிணைத்தோம். கொரோனா கட்டுப்பாடுகள் பெரிய சிக்கல். கூடங்கள் முழுமையான முன்பணம் கோருகின்றன, ரத்துசெய்தால் பணம் திரும்ப வராது. ஆகவே மிகப்பெரிய கூடங்களை ஏற்பாடு செய்ய முடியாது. நூறுபேருக்குமேல் கலந்துகொள்ளக்கூடாது. ஆனால் இருநூறுபேர் அமரும் கூடம் தேவை. ஆகவே இணையத்தில் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி என அறிவித்தோம்.
நான் இருபத்து நான்காம்தேதி காலைதான் கோவைக்கு சென்னையில் இருந்து வந்தேன். ரயில்நிலையத்துக்கே அரங்கசாமி, யோகேஸ்வரன், ஆனந்த் ஆகியோர் வந்திருந்தனர். அனைவரும் தங்க ஒரு வாடகை இல்லம் ஏற்பாடு செய்திருந்தோம். அங்கே அமர்ந்து பேசிக்கொண்டிருக்கையில் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர்.
கோவையில் முன்பெல்லாம் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வந்துகொண்டே இருப்பேன். கொரோனா காலத்திலேயே கூட வேதசகாயகுமார் அஞ்சலி, புதுவாசகர் சந்திப்பு, புத்தாண்டு, குருபூர்ணிமா, கவிதை உரையாடல் என நிகழ்வுகளுக்கு வந்துகொண்டேதான் இருந்தேன். இதைத்தவிர சொல்முகம் சந்திப்புகள் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருந்தன.
இலக்கியத்தை மெய்யாகவே விரும்பும் எவருக்கும் இத்தகைய தனிப்பட்ட சந்திப்புகள், உரையாடல்கள் முக்கியமானவை. இதை தொடர்ந்து எழுதிவருகிறேன். இங்கல்ல உலகம் முழுக்கவே இத்தகைய ‘இலக்கிய அரட்டைகள்’ மிகப்பெரிய இலக்கியப் பங்களிப்பாற்றுகின்றன. இலக்கியமென்னும் இயக்கத்துக்குள் இல்லாதவர்கள், அரசியலோ வம்போ மட்டுமாக இலக்கியத்தை அணுகுபவர்களுக்கு இந்த முக்கியத்துவம் புரியாது.
இவை ‘சூடான’ சர்ச்சைகள் அல்ல இவை. சூடான சர்ச்சைகள் பெரும்பாலும் ஆணவச்சீண்டலாகி, பூசலாகி ஒவ்வாமையை உருவாக்குகின்றன. அந்த ஒவ்வாமையாலேயே மேற்கொண்டு சந்திப்புகள் நிகழ்வது குறையும். எந்த மெய்யான கருத்தும் முன்வைக்கப்படாமலாகும். வேடிக்கை, சிரிப்பு ஆகியவை கொண்ட அரட்டை இயல்பாக ஏதாவது ஒரு கருத்தை தொட்டு அப்படியே தீவிர விவாதமாக ஆகி பல கேள்விகளைத் தொட்டுச்சென்று மீண்டும் அரட்டையாகவேண்டும்.
தனிப்பட்ட முறையில் எவரும் சீண்டப்படலாகாது. சந்திப்பின் முடிவில் அனைவரும் இனிய பொழுதென உணரவேண்டும். அங்கே ஒரு கல்வி நிகழ்ந்திருக்கும், ஆனால் அது நிகழ்ந்ததே தெரியாது. பின்னால் சிந்தனை செய்தால்தான் எத்தனைபேர் எவ்வளவு விஷயங்களைப் பேசியிருக்கிறார்கள் என்று புரியும். அத்தகைய சந்திப்புகளே நீடிக்கும்.
அச்சந்திப்புகளின் அடிப்படைகளில் ஒன்று என்பது நிகர்த்தன்மை. அங்கே மேல்கீழ் என்னும் நிலை இருக்கலாகாது. அங்கே வாசகனும் எழுத்தாளனும் ஒரே இடத்தில் இருக்கிறார்கள். மாறி மாறி கேலிசெய்து கொள்ளும் தன்மையில் உரையாடுகிறார்கள். எங்கள் சந்திப்புகளின் இவ்வியல்புகளால்தான் முப்பதாண்டுகளாக இச்சந்திப்புகள் நட்புடன் நீடிக்கின்றன.
நான் 1991 வாக்கில் தர்மபுரியில் இருக்கையில் என் இல்லத்தில் கூடிய சந்திப்புகளைப் பற்றி எம்.கோபாலகிருஷ்ணனுடன் உற்சாகமாகப் பேசிக்கொண்டோம். அவர்களில் ஒருவராக அன்று இருந்த ஈரோடு ரிஷ்யசிருங்கர் மறைந்த விஷயத்தை எம்.கோபாலகிருஷ்ணன் சொன்னார். அன்று வந்தவர்களில் செங்கதிர் இன்று காவல் உயரதிகாரி. பலர் இன்று அறியப்படும் எழுத்தாளர்கள்.
நாங்கள் பின்னர் சேர்ந்து சொல்புதிது சிற்றிதழை ஆரம்பித்தோம். தமிழ் இலக்கிய வரலாற்றிலேயே சேர்ந்து சிற்றிதழை ஆரம்பித்தவர்கள் சண்டைபோடாமல் நட்புடன் நீடிப்பது நாங்கள்தான் என எம்.கோபாலகிருஷ்ணனும் நானும் சொல்லிக்கொள்வதுண்டு. அடுத்து ஊட்டியில் குருநித்யா சந்திப்புகளாக இன்னொரு பத்தாண்டுகள். பின்னர் விஷ்ணுபுரம் அமைப்பு என சென்ற பதிநான்காண்டுகள்.
ஒவ்வொரு காலகட்டத்தில் இந்த நட்புக்கூட்டத்தில் இருந்துதான் தமிழின் சிறந்த எழுத்தாளர்கள் வந்திருக்கிறார்கள். இன்னும் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். இன்று எந்த இதழை எடுத்தாலும் நம் நண்பர்களே பாதிக்குமேல் புனைவும் விமர்சனமும் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அதற்குக் காரணம் நீடித்த உரையாடல். அதை நிகழ்த்துவது நட்பு அளிக்கும் இனிமை.
மாலை ஆறுமணிக்கு நிகழ்ச்சி. ஐந்தரை மணிக்கே நண்பர்களுடன் அரங்குக்குச் சென்றுவிட்டேன். ஒவ்வொருவராக வரத்தொடங்கினார்கள். குளிரூட்டப்பட்ட அழகான அரங்கு அது. புவியரசை நண்பர் கதிர்முருகன் அழைத்துவந்தார். வெள்ளை ஆடையில் அழகாக இருந்தார். நாஞ்சில் நாடன் வந்தார். எம்.கோபாலகிருஷ்ணன் வந்தார். ஒவ்வொரு நண்பராக வர வர இத்தகைய சந்திப்புகளுக்கே உரிய குதூகலம் நிறையத் தொடங்கியது
உரையாடல் மீண்டும் மீண்டும் முன்பு நடத்திய சந்திப்புகளைச் சுற்றியே சென்றுகொண்டிருந்தது. இனிய பழைய நினைவுகள். நாஞ்சில்நாடன் சொன்ன பல நிகழ்வுகள் முப்பதாண்டுகளுக்கு முந்தையவை.
விழாவுக்கு முன் விஷ்ணுபுரம் அமைப்பு சார்பில் புவியரசு பற்றி ஆனந்த்குமார் எடுத்த ஆவணப்படத்தின் முன்னோட்டமாக இருபது நிமிடக் காணொளி ஒளிபரப்பப் பட்டது. குறைந்த நாட்களுக்குள் எடுக்கப்பட்ட ஓரு நீண்ட உரையாடல் அது. முழுமையான வடிவம் யுடியூபில் பின்னர் வெளியாகும்.
புவியரசைப் பற்றி ஏற்கனவே கோவையைச் சேர்ந்த மயன் ஓர் ஆவணப்படம் எடுத்திருந்தார். கோவையின் அனைத்து எழுத்தாளர்களையும் அவர் ஆவணப்படங்கள் எடுத்துக்கொண்டிருக்கிறார். பத்துக்கும் மேற்பட்ட எழுத்தாளர்களை ஆவணப்படம் எடுத்திருக்கிறார். பிற ஆவணப்படங்களுடன் ஓர் யூடியூப் சானலே நடத்துகிறார்.
தமிழகத்தில் ஒரு நகரில் இப்படி அத்தனை எழுத்தாளர்களுக்கும் ஓர் ஆவணப்படம் எடுப்பது கோவையில் மட்டுமே நிகழ்ந்துள்ளது. எந்த லாபநோக்கமும் இல்லாமல் இலக்கிய ஆர்வத்தாலேயே மயன் இதைச் செய்கிறார். இலக்கியவாசகர், ஆன்மிகத்தேடல் கொண்டவர், பண்பாட்டு ஆய்வாளர் என பலமுகம் கொண்ட ஆளுமை அவர். [மயன் யூடியூப் சானல்]
கோவையின் மூத்தபெருமக்களும் புவியரசின் குடும்பமும் நண்பர்களும் இருந்த அவை. புவியரசை வாழ்த்தி மலர்மாலை அணிவித்து பரிசளித்தோம். அரங்கசாமி ஒரு மலர்முடி சூட்டலாம் என்றார். அது வழக்கமில்லை என மற்ற நண்பர்கள் சொன்னபோது “இல்லை, அது ஓர் அடையாளம். எங்களுக்கு இலக்கியவாதிகள்தான் அரசர்கள், தேவர்கள் என்று காட்டும் ஒருவகையான அறிவிப்பு அது” என்று சொல்லி அடம்பிடித்து நிறைவேற்றிவிட்டார். புவியரசு மலர்முடி சூட்டப்பட்டதும் வெடித்துச் சிரித்துவிட்டார்.
விழாவுக்கு பவா செல்லத்துரை வர இயலவில்லை, படப்பிடிப்பில் இருந்தமையால் வர இயலவில்லை என்று செய்தி அனுப்பியிருந்தார். மரபின் மைந்தன் முத்தையா, இயகாகோ சுப்ரமணியம், எம்.கோபாலகிருஷ்ணன் ஆகியோருடன் நானும் உரையாற்றினேன்.
நிகழ்வுக்கு பின்னர் உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வந்திருந்த நண்பர்கள் உணவுண்டு பிரிய பத்தரை மணி ஆகிவிட்டது. அதுவரை சிரிப்பும் கொண்டாட்டமுமாகப் பேசிக்கொண்டிருந்தோம். புவியரசு மகிழ்ச்சியாக சிரித்தபடியே இருந்தார். விடுதிக்குக் கிளம்பும்போது இனிய நாள் ஒன்றின் நிறைவை உணர்ந்தேன்.
புவியரசு 90- உரைகள்
விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் சார்பில் கோவையில் 24-10-2021 அன்று ஒருங்கிணைக்கப்பட்ட கவிஞர் புவியரசு பாராட்டுக்கூட்டத்தின் உரைகள். சுருதி டிவி கபிலன் அவர்களுக்கு நன்றி
மரபின்மைந்தன் முத்தையா உரை
எம்.கோபாலகிருஷ்ணன்
இயகோகா சுப்பிரமணியம் உரை
ஜெயமோகன் உரை
புவியரசு ஏற்புரை
அஜ்மீர்- கடிதங்கள்-2
பொதுவாகவே பயணக்கட்டுரைகளை வாசிக்கும் போது மனதில் ஒருவித ஏக்கம் வந்து நிறையும். இந்த கட்டுரைகள் அதை இன்னும் ஒருபடி மேலே கொண்டு செல்கின்றன.
மேலும், ஆறுகள், ஏரிகள், காயல்களின் புகைப்படங்கள் உங்கள் சொற்களுக்கு மேலும் மெருகூட்டின. உடனடி பயணம் செய்ய வேண்டும் என தூண்டுகின்றன. பார்க்கலாம்.
– ராஜசேகரன்.
***
அன்புள்ள ஜெயமோகனுக்கு,
அஜ்மீர் பயணம் கட்டுரை தொடர்ச்சியாக வாசித்துக்கொண்டிருக்கிறேன். அகநோன்பு பகுதியில் குறிப்பிட்ட ஆன்மீகப்பயணம், இஸ்லாமிய கூட்டார்ந்த வழிபாடுகளுக்கு மாற்றமானது இல்லை. மாறாக இந்த கலையை நபிகள் நாயகத்தின் வாழ்விலிருந்தே சூஃபியாக்களின் சிந்தனைகூடங்கள் பெற்றுக்கொள்கின்றன. இதனை சிந்தனைக்கூடத்தின் கலைசொற்களில் ‘கல்வத்’(இறைத்தனிமை) என்பார்கள். கல்வத்தின் மூலவேர் எங்கிருந்து தொடங்குகிறது என்றால், முகம்மது நபி தன்னுடைய நாற்பதாவது நபித்துவம் முதிர்ச்சியடைக்கூடிய ஹிரா மலைகுகை தனிமைகாலங்களிலிருந்து பெறுகின்றது. இந்தியாவில் பெரும்பான்மை வகிக்கும் சூபிஃத்துவ ஆன்மீகம் பயிலகங்களான ஷிஸ்தியா, காதிரியா ,நக்ஸபந்தியா சுகரவர்த்தியா, சர்த்தாரியா, ரிபாயியா இவற்றுள் ஷிஸ்தியாவும் காதிரியாவும் பிரபலமானவை. காதிரியாவின் முக்கிய ஆளுமையாக தென்னிந்தியாவில் நாகூர் சாகுல் ஹமீதுவும், ஷிஸ்தியாவின் ஸ்தாபகராக அஜ்மீர் க்வாஜா மொய்னுத்தீன் ஷிஸ்தியும் இடம்பெறுகிறார்கள்.
இச்சிந்தனைக்கூடங்கள் கல்வத் எனும் தனித்திருத்தலை இறைவனை அடையும் வழியாக மீளுருவாக்கம் செய்கின்றன.தனிமையில் இறையை குறித்து சிந்திந்து கழிக்கும் காலத்தை சுலுக் எனும் ஆன்மீகபயணத்தில் பிராயணிக்கும் ஒவ்வொரு சாலிக் எனும் மெய்யடியார்கள் தமக்கு தாமே கடமையாக்குகிறார்கள். நித்தியமான அருவத்தை இறைத்துதி மூலம் தன்னைத்தானே அறிந்துக்கொள்ள பயிற்றுவிக்கும் கலையை கற்றுக்கொள்கிறார். மன் அரஃப நப்ஸஹூ ஃபகத் அரஃப ரப்பஹூ ‘தன்னை அறிவதன் மூலம் தன் இறைவனை அறியமுடியும்’ எனும் நபிகள் நாயகத்தின் ஹதீது, ஆன்மீகத்தின் தோற்றுவாயாக சூஃபிகளுக்கு அககாட்சியாகவம் தரிசனமாகவும் திறந்துக்காட்டுகிறது.
சூஃபியாக்கள் மற்றும் அதன் தஸவ்வுஃப் எனும் கலை குறித்த சிறிய எளிமையான விளக்கம், இலங்கை கலாநிதி எம் ஏ எம் சுக்ரி எழுதிய ‘ஆத்மஞானிகளும் அறப்போராட்டங்களும்’ என்ற நூலை பரிந்துரைப்பேன். அச்சிறிய நூல் முகம்மது நபி, நபித்தோழர்கள் காலத்தின் ஆன்மீகத்தை எப்படி சூஃபித்துவம் தத்தமது காலங்களிலும் நிலத்திலும் பிராந்தியத்திலும் பக்தாதில் காதிரியாவாக, இந்தியாவில் ஷிஸ்தியவாக, ஆப்ரிக்காவில் சன்னூசியாவாக மீளுருவாக்கம் பெற்றது என அறிமுகத்தை திறந்துவைக்கிறது.
முகம்மது ரியாஸ்
அன்புள்ள ஜெ
நலம்தானே?
அஜ்மீர் பயணக்கட்டுரைகள் இந்த தளத்தில் வெளிவந்த பயணக்கட்டுரைகளிலேயே ஒரு தனிப்பெரும் சாதனை என நான் நினைக்கிறேன். ஒர் இலக்கியவாதி செய்யக்கூடிய பயணங்கள் சில உண்டு. அந்த இலக்கணத்தை இப்பயணக்கட்டுரை உடைத்துள்ளது. இதிலுள்ள ஆன்மிக அனுபவம், வரலாறு, அன்றாட அனுபவம் ஆகிய மூன்றும் கலந்து விவரிக்க முடியாத ஒரு நிறைவை அளித்தது.
தமிழில் இஸ்லாமியச் சூழலில் அஜ்மீர் பற்றியும் சூஃபி மரபு பற்றியும் நிறைய எழுதப்பட்டிருக்கலாம். ஆனால் இலக்கியச்சூழலில் இவ்வளவு விரிவாகவும் ஆழமாகவும் இப்போதுதான் எழுதப்பட்டிருக்கிறது. என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
அப்துல் வஹாப்.
அஜ்மீர் பயணம்- 5 அஜ்மீர் பயணம்- 4 அஜ்மீர் பயணம்-3 அஜ்மீர் பயணம்-2 அஜ்மீர் பயணம்-1மலையாள வாசகர், கடிதம்
அன்புள்ள ஜெ,
தங்கள் அபிமான கேரள வாசகர் ஜ்யோதிஷ் குறித்தான பதிவு மற்றும் வீடியோ கண்டேன். மிகவும் மகிழ்ந்தேன். ஆனால், சில வருடங்களுக்கு முன்னால், நான் கேலிகட் பல்கலைக்கழகத்தில் கருத்தரங்கின் பொருட்டு சென்று இருந்தேன். காலையும், மாலையும் அவர் ஆட்டோவில் தான் பயணம் புரிந்தேன். நான் அவரின் பெயராக புரிந்து கொண்டது “ஜோதி” என்று. மிகவும் ரசனையுடனும் வாஞ்சையாக உரையாடினார்.
அவர் ஆட்டோவில் புத்தகங்கள் இருந்ததை கண்டு, வாசிப்பீர்களா ஜோதி? என வினவிய போது தான், அவர் உங்கள் மீது கொண்டிருந்த அபரிதமான நேசத்தை உணர்ந்து கொள்ள முடிந்தது. தங்கள் அலைபேசி எண் என்னிடம் இருந்தது. எழுத்தாளர் ஜெயமோகனிடம் பேச வேண்டுமா எனக் கேட்ட போது, அவர் முகத்தில் அப்படிவொரு மலர்ச்சி. தான் சில கடிதங்கள் தங்களுக்கு அனுப்பி இருந்ததாக குறிப்பிட்டார். நான் அலைபேசியில் அழைத்த சில நொடிகளில், உங்களிடம் அவரை பற்றி சில வார்த்தைகள் மட்டும் கூறிவிட்டு, அவரிடம் அலைபேசியினை கொடுத்தேன். நீங்கள் அவரிடம் சில மணித்துளிகள் பேசினீர்கள். அவருக்கோ சந்தோஷமான சந்தோசம்.
இந் நிகழ்வு குறித்து, நான் அன்று, என்னுடைய முகனூலிலும் பதிவிட்டு இருந்தேன். உங்களின் எத்தனையோ, அன்புமிகுந்த வாசகர்களில் அவரும் ஒருவர். அவர் குறித்தான பதிவினை வாசித்த பொழுது, நீங்கள் அவரிடம் பேசி இருக்கிறீர்கள் ஜெ… என என் மனம் கூவியதை நீங்கள் அறிய வேண்டும் என்பதற்கே இந்த மின்னஞ்சல்.
மிக்க அன்பு
கி.ச.கல்யாணி
https://m.facebook.com/story.php?story_fbid=3558736747515675&id=100001381558181
***
அன்புள்ள கல்யாணி
நினைவிருக்கிறது. ஜோதிதான் ஜ்யோதிஷ் என அறிந்தது ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அளிக்கிறது. கோழிக்கோட்டில் இருந்து நீங்கள் அழைத்து அவரிடம் பேசிய நினைவு இனியது.
ஜெ
வெண்முரசு இசைக்கொண்டாட்டம், செய்திகள்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நலம். அக்டோபர் 9, 2021 அன்று இயக்குநர் மணிரத்னம் முன்னிலையில் நடந்த வெண்முரசு இசைக்கொண்டாட்டம் நிகழ்வு பற்றி, வெவ்வேறு அமெரிக்கப் பத்திரிகைகளில், அக்டோபர் 19,2021, பிற்பகல் 1:30-க்கு செய்தி குறிப்பு வெளியாகியது.
நான் கவனித்தவரையில், அந்த செய்தி குறிப்பு சிகாகோ Daily Herald, பிட்ஸ்பர்க் post-gazette, நியூயார்க் Buffalow News என வெவ்வேறு நகரங்களில் முக்கிய பத்திரிகைகளில் வெளிவந்தன. இந்த விஷயம் எந்த அளவுக்கு முக்கியமானது, அதன் பின்னணி என்ன, விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அமெரிக்காவில் உள்ளதா என்றெல்லாம் சரிபார்த்தபிறகு வருவதால், பத்து நாட்கள் எடுத்துக்கொண்டார்கள் என்பது என்னுடைய புரிதல். இந்த செய்தி குறிப்பில், விழாவில் பங்கு கொண்டு சிறப்புரையாற்றிய ஒவ்வொருவர் கூறியதிலும் சிறந்ததை எடுத்து, சரிபார்த்த பிறகு வெளியிட்டுள்ளார்கள். என்னுடைய அலுவலக நண்பர் ஒருவர், MarketWatch-ல் ஒரு நாவலை சிறப்பித்து கொண்டாடியது வந்தது ஆச்சரியமாக உள்ளது என்றார். “மணி ரத்னம், TIME பத்திரிகையால் அகில உலக அளவில் தரம் வாய்ந்த நூறு படங்களைக் கொடுத்த இயக்குநர்களில் ஒருவர் என்று பாராட்டுப் பெற்றவர். அவர் ஒரு விஷயத்தை ஆரம்பித்து வைக்கிறார் என்றால், அதில் ஏதோ முக்கியத்துவம் இருக்கிறது என்று MarketWatch கண்டுபிடித்திருக்கும்” என்றேன்.
இசைக் கொண்டாட்டமும், அதைத் தொடர்ந்து வரும் கடிதங்களும், செய்தி குறிப்புகளும் மேலும் பல புதிய வெண்முரசு வாசகர்களைக் கொண்டுவரும். மகிழ்வாகவும் நிறைவாகவும் உணர்கிறேன்.
அன்புடன்,
ஆஸ்டின் சௌந்தர்
***
Daily Herald:Director Mani Ratnam Releases Musical Tribute to Jeyamohan’s Epic Venmurasu | Daily Herald
Pittsburgh Post-Gazette:markets.post-gazette.com/postgazette/news/read/41911989
The Buffalo News:Director Mani Ratnam Releases Musical Tribute to Jeyamohan’s Epic Venmurasu (buffalonews.com)
October 24, 2021
இலக்கியம் என்னும் குமிழி
சில தினங்களுக்கு முன் நண்பர்களுடன் ஒரு இலக்கிய உலக சர்ச்சையைப் பற்றி பேசிக்கொண்டிருந்தபோது ஒரு விஷயம் நினைத்தோம். இந்த இலக்கிய விஷயத்தைப் பேசிக்கொண்டிருக்கும் இதே சமயத்தில் தான் சினிமாவும் அரசியல் சர்ச்சைகளும் மாபெரும் ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கின்றன.
இணையத்தில் ஒரு சின்ன குமிழியில் ‘சிலர்’ இந்த இலக்கியம் முக்கியமானதாகப் பேசிக்கொண்டிருக்கும்போது அதே இணையத்தில் மாபெரும் அலைகளாக சினிமாவும் அரசியலும் ட்ரென்ட் ஆகிக்கொண்டிருக்கிறது என்று நண்பர்களிடம் சொல்லிக்கொண்டிருந்தேன்.
இப்போது டி 23 ஆட்கொல்லி புலி பற்றிய செய்தி வந்திருக்கின்றது. கடந்த ஏழு ஆண்டுகளில் இந்த நீலகிரிப் பகுதியில் மட்டும் மூன்று புலிகள் இதே மனிதர்களைத் தாக்கிய காரணத்துக்குக்கான சட்டப்படி சுட்டுக்கொல்லப்பட்டிருக்கின்றன. அந்தப் புலி கொல்லப்படாமல் உயிரோடு பிடிக்கப்பட்டது பற்றி இன்று பொதுவெளியில் மகிழ்ச்சி தெரிகிறது.
அதே சமயம் புலி, சிங்கம் யானைகளை கொன்றால் வீரம் என்ற நிலையில் இருந்து சமூகம் இப்படி மாறுவது உண்மையிலேயே மகிழ்ச்சி. புலிகளைக் கொல்லும் புலிமுருகன் மாஸ் வெற்றிகரமான என்ற சினிமா கூட சமீபத்தில் தான் வந்திருந்தது. அந்த நிலையில் இருந்து பொதுச்சமூகம் மாறுவது ஆச்சர்யமளிப்பது.
சில வருடங்களுக்கு முன் நம் விஷ்ணுபுர விழாவில் வெளியிட்ட, ஜேனிஸ் பரியட் அவர்களிடன் சிறுகதைத் தொகுப்பான “நிலத்தில் படகுகள்” புத்தகத்தில் ஒரு கதை “ஆகாய சமாதிகள்”, இதைப் போன்ற ஆட்கொல்லி புலியைப் பற்றியது. அந்தக் கதையை நான் தமிழில் மொழிபெயர்க்க வாய்ப்பு கிடைத்திருந்தது. காட்டோடு இயைந்த வாழ்வில் இருக்கும் ஒரு கிராமத்தில் ஒரு ஆட்கொல்லி புலி கொல்லப்படுவதின் துயரம் அந்தக் கதையில் சொல்லப்பட்டிருக்கும்.
வெண்முரசில் கர்ணன் அறிமுகப்படுத்தப்படும்போது வரும் ஒரு காட்சியும் இன்றும் என் நினைவில் இருக்கின்றது. கர்ணன் பல சிங்களோடு சண்டையிட்டு அவரது வீரம் நிறுவப்படும் காட்சியில் ஒரு சிங்கம் கூட கொல்லப்படுவதில்லை. சிங்கத்தோடு சண்டையிடுகிறான், வெல்கிறான் ஆனால் அதை அவன் கொல்லமாட்டான் என்பதில் வீரமும் அதே சமயம் பொறுப்புணர்வும் தெரிகின்றது.
சின்ன வட்டத்தில் பேசப்படுகிறது என்று சொல்லப்படும் இந்த இலக்கியம் தான் தான் பொதுவெளியில் இந்த விழுமியங்களை கொண்டு சேர்க்கிறது என்று நினைக்கிறேன். இலக்கியம் சின்ன குமிழி அல்ல அது சிறிய சுழல். இந்தச் சுழலே இருந்தாலும் அதுவே சமூக ஏற்பு என்ற பெரும் அலைகளை உருவாக்குகின்றது என்று தோன்றுகிறது.
அன்புடன்
சுரேஷ் பாபு
ஜெனிஸ் பரியத்
இறுதிச்சடங்குகளின்போது பொதுவாகக் கதைகள் சொல்லப்படும். ‘இயங்க் இயாப் பிரு’ எனப்படும் மூன்று இரவுகள் நடக்கும் அச்சடங்கில் இறந்தவர் வீட்டின் கதவு, ஜன்னல்கள் திறந்து வைத்திருக்கப்பட்டிருக்கும். இந்த இரவுகளில் சில சமயம் இருக்கை ஒன்று சாய்ந்து விழும், மரக்கதவுகள் படபடவென அடித்துக்கொள்ளும் அல்லது ஒரு கோப்பை தரையில் விழும். இதெல்லாம் இறந்தவரின் ஆவி அங்கு வருவதின் அடையாளங்கள், இவற்றை இறந்தவர் தான் விட்டுச்செல்லும் இந்த உலகுடன் சமாதானமடைவதின் அறிகுறிகள் என சிலர் நம்புவதுண்டு. இந்த இரவுகளில் சீட்டு அல்லது கேரம் விளையாடி பலர் நேரத்தை கடத்துவர்; பெண்கள் அடுப்படியில் பாக்கு மற்றும் புகையிலையை மறுநாள் வருபவர்களுக்காக தயார் செய்துகொண்டே, உற்றவரையிழந்து தேற்றமுடியாமல் வாடுபவர்களைப் பற்றி மெதுவாகப் பேசிக்கொண்டிருப்பர். இன்னொரு அறையில் ஒரு இருண்ட மூலையில், ஆண்கள் கும்பலாக ஒரு சூலாவைச்(ஒரு வகை கரியடுப்பு) சுற்றி ஒருவருகொருவர் இறுக்கமாக ஒட்டியபடி ஒரு பழக்கமான பெண்ணின் அணைப்பில் கிடைப்பது போன்ற இதமான வெதுவெதுப்பு கிடைக்க அமர்ந்திருப்பர். அப்போது குடிபோதையில் காலியான தேவாலயங்களுக்குள் உணர்ச்சிகளை வெளிக்காட்டாத கல்லாலான புனிதர்களிடம் பேசிக்கொண்டிருந்த குடிகாரர்கள் குறித்த வேடிக்கை கதைகள், விலங்குக ளை வேட்டையாடச் சென்று வெற்றிகரமாக முடிந்த, சில சமயம் பெரும் தோல்வியில் முடிந்த நிகழ்வுகள், முன்பின் தெரியாத ஆனால் கதைகளில் மீண்டும் மீண்டும் சொல்லி கிட்டத்தட்ட உண்மையாகி நெருக்கமாகிவிட்ட பாத்திரங்கள் என பல விஷயங்கள் பேசப்படும். திருவிழாக்களிலும், மகிழ்ச்சியான நிகழ்ச்சிகளிலும்கூட கதைகள் சொல்லபடுவதுண்டுதான், ஆனால் மரணச்சடங்குகளில் சொல்லப்படும் கதைகள் தனித்துவமானவை. ஏனென்றால் இவை கேட்பவர் மற்றும் சொல்பவரின் இருப்பை அர்த்தமாக்குகின்றன. சமயங்களில் இந்நினைவுகள் இறந்தகாலத்தை நிகழ்காலத்துக்குக் கொண்டுவந்து இறந்தவர்களை மீண்டும் வாழச்செய்துவிடுகின்றன.
பாஹ் ஹெம் சாதாரணமாகக் கதைகள் சொல்வதில்லை. அவர் மற்றவர்கள் சொல்வதைக் கேட்டுக்கொண்டு தனியாக அமர்ந்திருப்பார், அவரது கண்கள் ஒளிரும் கரியின் மீது நிலைகொண்டிருக்கும். இருப்பினும் அமைதியான மெல்லிய குளிர் பரவும் இரவுகளில் அவரை கதை சொல்லவைத்துவிட முடியும். அரிசியில் தயாரித்த பீர் அல்லது கியாட் பானத்தை அவர் அருந்தியிருக்கும்போது அவரிடம் அன்பைப் பற்றிக் கதை கேட்டால், அவர் பறவைகள் சென்று இறக்கும் இடத்தில் இருந்து வந்தவனைப் பற்றிச் சொல்ல ஆரம்பிப்பார். அப்போது, பொதுவாகக் கதைகள் ஆரம்பிக்கும்போது நிகழ்வதுபோல, அந்த அறை வார்தைகளால் புதிதாக உருமாற ஆரம்பிக்கும்.”ஒரு செப்டம்பர் மாதத்தின் கடைசியில் அவன் வந்தான்” எனத் தொடக்குவார். ”பருவமழையின் நினைவுகள் இலையுதிர்காலத்தின் மெல்லிய ஒளிக்கீற்றுகளால் மறைய ஆரம்பித்த நேரத்தில் எனது பட்டறைக்குள் மெதுவாக அவன் வந்தான், ஒரு அமைதியான வேட்டைக்காரனைப் போல.”
அப் புதியவனுக்கு அங்கு பல ஆச்சர்யங்கள் காத்திருந்தன. இது வெளியுலகவாசனை இல்லாத மிகவும் தனிமையான பகுதி. கறாரான உள்ளூர் சட்டங்களும், பக்திசிரத்தையாக தேவாலயங்களுக்குப் போவாரும் இருக்கும் இந்த இடம் கண்டிப்பாக அன்னியர்களுக்கானதல்ல.
“நான் ஜாடிங்காவிலிருந்து வருகிறேன்” அன்னியமான மெல்லிய அவனது குரல் இந்த மலைகளைச் சேர்ந்தவர்களுடையதல்ல. “ஓஹோ.. நீ அவ்வளவு தூரம் பயணம் செய்து இங்கு வந்தாயா?” அந்தப் பட்டறையின் உதவியாளரான பாஹ் க்ராவ், அவர் கையிலிருந்த உப்புக்காகிதம் போன்ற கடுகடுத்த குரலில் கேட்டார். அவர் கிட்டத்தட்ட இந்த பட்டறையின் துவக்கத்திலிருந்து பதிமூன்று வருடங்களாக இங்கிருப்பதால், இங்கு யாருக்கு மரியாதை கொடுப்பது என்பது தனது முடிவுதான் என்ற எண்ணம் அவருக்குண்டு. புதிதாக வந்த உயரமான சமவெளி மக்களின் சற்று கரிய தோற்றமுடைய அந்த இளையவன் அமைதியாக இருந்தான். அவனுக்கு இருபது வயதுக்கு மேல் இருக்காது, ஆனால் கூர்மையான அவனது கண்கள் அவனை முதிர்ந்தவனாகக் காட்டின. அவன் கையில் நல்ல திடமான 10 கேஜ் இரட்டைக் குழல் துப்பாக்கி இருந்தது, வெகுவாக பயன்பட்டிருந்த அது மெருகேற்றப்பட வேண்டிய நிலையில் இருந்தது.
“அது ஏனென்றால் பாஹ் ஹெம் தான் இங்கு சிறந்தவர், துப்பாக்கியை கையாள்வதில் முதன்மையானவர்” மூலையில் இருந்த ஒரு கனவானிடமிருந்து குரல் வந்தது; காக்கைக் கூட்டம் போல கும்பலாக, ஒரு ராயல் டஸ்க் விஸ்கியைச் சுற்றி, புகையிலையை விரல்களில் கசக்கியபடி அவர்கள் அமர்ந்திருந்தனர்.
“குறிபார்த்துச் சுடுவதிலும் வல்லவர்” இன்னொருவன் சொன்னான், “ஒரே துளையில் நான்கு…”, அவன் சமீபத்தில் நடந்த துப்பாக்கி சுடும் போட்டியைக் குறிப்பிட்டான். அதில் பாஹ் ஹாம் ஒரே துளையில் நான்கு தோட்டாக்களை சுட்டு வென்றிருந்தார். அந்த கேடயம் பணிமனையின் அலமாரியில், பழைய தூசி படிந்த மற்ற கேடயங்களின் நீண்ட வரிசையில் சேர்ந்திருந்தது. அவற்றில் மிகப் பழையவை அதிக தூசிபடிந்து கருமையடைந்திருந்தன.
“ஒரே துளையில் நான்கு” பாட்டிலை தூக்கிக்காட்டி கும்பலாக உற்சாகக் குரலெழுப்பினர்.
பாஹ் ஹெம் வந்தவனை கவனிக்காமல் ஒரு மேசையில் அமர்ந்து, எழுதிக்கொண்டிருந்தார். அவரது விரல்களுக்கிடையில் ஒரு சிகரெட் இருந்தது. கடைசியாக அந்த புதியவனைக் கவனித்தார்.
“இது உனக்கு எங்கே கிடைத்தது.”
”என் அப்பா ஹாஃப்லாங்கில் இருந்து வாங்கிவந்தார்.”
பாஹ் ஹாம் அமைதியாக அந்த ஆயுதத்தை வாங்கி ஆராய்ந்தார். துப்பாக்கியின் குழலில் தன் விரல்களை ஓட்டிப்பார்த்தார், சட்டென சில அசைவுகளால் தோட்டாக்களை அதிலிருந்து வெளியே எடுத்துவிட்டு, அங்கிருந்த ஒரே ஜன்னல் வழியாக வெளியே குறிபார்த்தார். ”வியூ ஃபைண்டரில் பிரச்சனை.”
“அதைத்தான் என் அப்பாவும் சொன்னார்” அந்த இளைஞன் குறுக்கிட்டு சொன்னான்.
“ஓஹோ, யாரவர், ஜாடிங்காவின் பெரிய துப்பாக்கி நிபுணரோ..” பாஹ் க்ராவ் உலோகத்தை அழுத்திப்பிடிக்கும் எந்திரத்தில் உலோகத் தகடை வைத்துக் குனிந்து அமுக்கியபடி கேட்டார். பக்கத்திலிருந்தவர்களெல்லாம் நகைத்தனர்.
அதைக்கேட்டு அந்தப் புதிய இளைஞன் முகம் சிவந்தாலும் பதிலேதும் சொல்லாமலிருந்தான். அவனது கண்களில் கோபம் குளிர்கால கரியெடுப்புபோல கனன்றது.
“அவனை கண்டுகொள்ளாதே, இந்த க்ராவின் நடத்தை பன்றியைப் போல” என்றபடி பாஹ் ஹெம் தனது சிகரெட்டை மேசை மீது நசுக்கினார்.
அவரது உதவியாள் கோபமாய் பார்த்தான்.
“சில சமயம் அவனது முகமும் அப்படித்தான்”
சுற்றியிருந்தவர் வெடித்துச் சிரித்தனர். அவர்களை இந்த பட்டறையில் சுதந்தரமாக சுற்றித்திரிவதற்கு அவர் அனுமதிப்பதற்கு நன்றியாக அவர் என்ன சொன்னாலும் அதை நகைச்சுவையாகக் கண்டார்கள். பாஹ் ஹெம் துப்பாக்கியுடன் வெளியே வந்தார். புதியவனும் பின் தொடர்ந்தான்.பக்கத்திலிருந்த பல் டாக்டரின் மருத்துவமனையிலிருந்து வந்த துளையிடும் கருவியின் சத்தம் அக் காலையின் அமைதியைக் குலைத்துக்கொண்டிருந்தது. அந்த பிரதான சாலை வெளிறி காலியாக அவர்களுக்கு முன் இருந்தது.
“உனக்கு இந்தத் துப்பாக்கி எங்கிருந்து கிடைத்தது?”
அந்தப் பையன் கீழ்நோக்கியபடி வெகுநேரம் அமைதியாக இருந்தான். “என் தாத்தா கேசர் மாவட்டதில் ஒரு டக் பங்களாவில் (ஆங்கிலேய அதிகாரிகள் தங்கும் விடுதி) காவலாளியாக இருந்தார். ஒருதடவை கொள்ளை நோயினால் பாதிக்கப்பட்டிருந்த ஒரு பிலாடி அதிகாரி (ஆங்கிலேய அதிகாரி) அங்கு தங்க வந்தார். ஆனால் அங்கு அவர் ஒரு வாரம் கூட உயிர்தாங்கவில்லை. என் தாத்தா வேறெதையும் எடுத்துக்கொள்ளவில்லை, இதை மட்டும் தான்” என்று அவனது கையை அந்த துப்பாக்கியில் வைத்தான்.
துளையிடும் கருவி, சின்ன சத்தத்துடன் நின்றது. பாஹ் ஹெம் சிகரெட்டை பற்ற வைத்தார்.
”எப்படி கண்டுபிடித்தீர்கள்” அந்த இளைஞன் கேட்டான்.
”ஹாஃப்லாங்கில் பெரிய ஆயுதச் சந்தையெல்லாம் எப்போதுமிருந்ததில்லை, எல்லாம் வங்கதேசத்தில் இருந்துதான் வருகிறது” பாஹ் ஹெம் அந்த துப்பாகியின் கைப்பிடியில் பொறிக்கப்படிருந்த பெயரைப் (G.D. ப்ராட்பரி) பற்றி சொல்லவில்லை, அப்பையனும் அவனது குடும்பத்தினரும் அதைப் படித்திருக்க வாய்ப்பில்லை.
“என் தாத்தா எப்போதும் வேறெதையும் எடுத்ததில்லை”
“நிறைய எடுத்த பலரை எனக்குத் தெரியும், இருந்தாலும் அவர்களையெல்லாம் திருடர்களெனச் சொல்ல முடியாது”
துப்பாக்கி இன்னும் நாலைந்து நாட்களில் கிடைக்கும் என பாஹ் ஹெம் சொன்னார்.
பையன் கிளம்பினான். அவன் உடனே கிளம்ப வேண்டிருந்தது, இல்லையெனில் வழியெங்கும் இருக்கும் ராணுவ சோதனைகளைக் கடந்து அவன் நள்ளிரவுக்கு முன் வீடு செல்ல முடியாது.
ஒரு வாரம் கழித்து அவன் திரும்பவந்தான். இந்தமுறை பாஹ் க்ராவ் மற்றும் அங்கிருந்த கும்பல் அவனைக் கண்டுகொள்ளவில்லை. இப்போது மூன்றுபேர் மட்டும் ஓரத்தில் சீட்டாடிக்கொண்டிருந்தனர்.
வழக்கமாக தேனீர் கொண்டுவரும் பெண் வந்ததும், பாஹ் ஹாம் அவனை “ஏதாவது சாப்பிடு” என உபசரித்தார். ஒரு கூடையில் மென்மையான ஜிங் பாம் (jing bam), ஒட்டிக்கொள்ளும் ’புதாரோ (putharo), தங்கநிற புக்லியன் மற்றும் தேன்சேர்த்த கெட்டியான புசியெப் என அவள் கொண்டுவந்தவற்றை ஒரு கவனமான விலங்குபோல ஆர்வமாக அவன் சாப்பிட்டான்.
“உனது துப்பாக்கி தயார்” தனது மேசைக்கு பின்னால் வரிசையாக மின்னிக்கொண்டிருந்த ஆயுதங்களைக் காட்டி பாஹ் ஹெம் சொன்னார்.
“எவ்வளவு ஆனது?”
பாஹ் ஹெம் சொன்னதும், அந்தப் பையன் தனது இடுப்பில் கட்டியிருந்த துணிப்பையை எடுத்து ஒரு ஆதிமதச்சடங்கு போல மிகக் கவனமாக பணத்தை எண்ணினான்.
“நாம் நாள்முழுவதும் இங்கே இருக்கவேண்டியதுதான்” என்று பாஹ் க்ராவ் ஒரு உலோகச் சுருளை எடுத்துக்கொண்டே முணுமுணுத்தார்.
அவன் பணத்தைக்கொடுத்துவிட்டு வெளியேறினான்.
“இதுதான் இவனைக் கடைசியாக பார்ப்பது என நம்புகிறேன்” என்றார் பாஹ் கிராவ்.
அப்போது ஓரத்திலிருந்து ஒரு கூச்சல் கவனத்தை ஈர்த்தது.
“லா.. போஹ்…”
நூற்றைம்பது ரூபாய்க்கான அந்த சீட்டாட்டதில் யாரோ வென்றிருந்தார்கள், அந்தப்பையன் அதோடு மறக்கப்பட்டான்.
ஆனால் அன்று இரவு அமைதியான வீட்டில் படுக்கையில் படுத்திருக்கும்போது, பாஹ் ஹெம் நாதேனியேலைப் பற்றி நினைத்தார். அவரது மூத்தமகன். இரண்டு கோடைகளுக்கு முன் மரணமடைந்திருந்தான். அப்போது அவனுக்கு பத்தொன்பது வயது, அவர்களுக்குத் தெரியாத அந்த இனம்புரியாத நோயினால் அவன் இறந்திருந்தான். குமட்டலும் அசதியுமாகத்தான் அது ஆரம்பித்தது, குறைவாக இருந்தாலும் இடைவிடாத காய்ச்சலால் அவனது புருவங்கள் எரிச்சலைத் தந்தது, தொண்டைப்புண் மிகவும் வலியெடுத்தது. வழக்கமான பருவநிலை மாற்றத்தால் வருவது என அவர்கள் நினைத்துக் கொண்டிருந்த அந்தக் காய்ச்சல் சில மாதங்களாகியும் சரியாகவில்லை. கவலைக்கிடமான அளவில் மிக அதிகமாக எடையிழந்தான். அவரும் அவர் மனைவியும் நாதேனியலை தென்னிந்தியாவில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மிக அன்பாக நடந்துகொண்ட, அவர்களுக்குப் புரியாத வகையில் பேசும் அந்த மருத்துவரிடம் அவர்கள் நம்பிக்கை கொண்டு வந்திருந்தனர். அவர் அந்த நோயின் பெயரைச் சென்னார். அது மிக நீளமாக, பயமுறுத்தும்படி, சொல்லும்போதே தொண்டையில் பாம்பு ஊர்வதுபோல இருந்தது.
வெள்ளை அணுக்கள் வழக்கத்துக்கு மாறாக மிக அதிகமாகப் பல்கிப்பெருகுகின்றன என மருத்துவர் விளக்க முயற்சித்தார். அவனது உடலால் தேவையான அளவு ஆரோக்யமான அணுக்களை உற்பத்தி செய்ய முடியவில்லை. அவனது நிலை மிகவும் கவலைக்கிடம், எனவே உடனடியாக சிகிச்சையை ஆரம்பிக்க வேண்டும் என அவர் சொன்னதை புரிந்து கொண்டார்கள். இன்று வந்த இளைஞன் கதிர்வீச்சு சிகிச்சைக்கு முன் இருந்த நாதேனியேலை பாஹ் ஹெம்முக்கு நினைவுப்படுத்தினான். அந்த இயந்திரங்கள், அந்த கொடும் உலோகங்கள் அவனது மகனிடமிருந்த எல்லா உயிர்த்தன்மையையும் கொஞ்சம் கொஞ்சமாக தகர்த்துவிட்டன. ”ஏன் இவனைப் பார்த்தால் அவனைப் போல தோன்றுகிறது? இவனது கண்களா? தாடையின் வடிவமா? அதேபோன்ற முகரேகையிருப்பதா? அல்லது அவனது கவனமான அமைதியா?” பாஹ் ஹெமுக்கு உறுதியாகத் தெரியவில்லை. அவனை திரும்பவும் சந்திக்க ஏதாவது வழி கண்டுபிடிக்கவேண்டுமென நினைத்துக்கொண்டார்.
அப்போது வெகுநேரமாகிவிட்டிருந்தது, பல்டாக்டரின் மருத்துவமனை மூடியிருந்தது, மூலைமுடுக்கெலாம் குளிர்நிறைந்து அக்கம்பக்கமெல்லாம் காலியாக இருந்தது. அந்த அமைதியான மாலையில், பாஹ் ஹெம் தனது பட்டறையில், ஒரு கைத்துப்பாக்கியை சுத்தம் செய்துகொண்டு தனியாக அமர்ந்திருந்தார். இதுபோன்ற வேலைகளை அவரே செய்ய விரும்பினார். இவை அழகான ஆயுதங்கள். சிக்கலான உலோக வேலைப்பாடுகளில் பட்டுத்தெறிக்கும் ஒளியும், துப்பாக்கிக்குழலை தனது உள்ளங்கையில் வைதுக் கொள்ளும் அந்த உணர்வையும் அவர் விரும்பினார். அவரைச்சுற்றி எண்ணைப்பிசுக்கடைந்த அந்தப் பட்டறை ஒழுங்கற்றிருந்தது. நகர சிறைச்சாலை மாற்றப்பட்ட நேரத்தில் அங்கிருந்து அவர் மீட்டுக்கொண்டுவந்த பெரிய மேசை அவரிருந்த மேசைக்குமுன் இருந்தது. பலவருடங்கள் மதிக்கத்தக்க உபகரணங்களும் உதிரிப்பாகங்களும் சேர்ந்து உலோகம், புகை மற்றும் தூசியாலான தனிப்பரப்பை உருவாக்கியிருந்தன. எந்திர எண்ணையின் மணம் காற்றில் கலந்திருந்தது. அவர் அந்த கைத்துப்பாக்கியை கடைசியாக ஒருமுறை கவனமாக மெருகேற்றும்போது, கதவை யாரோ அவசரமாகத் தட்டுவது கேட்டது. வெளியிலிருந்து கேட்ட காலடித் தடங்களைக் கொண்டு அந்த அன்னிய இளைஞன் குளிரில் நடுங்கிக் கொண்டிருப்பதை அறிந்தார்.
“தயவுசெய்து எங்களுக்கு நீங்கள் உதவவேண்டும்”
பாஹ் ஹெம் வெளியே வந்து அவனை உள்ளே அனுமதித்தார்.
“அதிகம் அவகாசமில்லை…”
“நீ குளிர்ந்திருக்கிறாய்” பாஹ் ஹெம் அமைதியாகச் சொன்னார், “உள்ளே வா, உன் உடல்நலத்தை கெடுத்துக்கொண்டு நிலமையை மேலும் மோசமாக்குவதில் எந்த பலனுமில்லை”
அவனது தோள்கள் தளர்ந்தன, அவன் ஆமோதித்தான். பாஹ் ஹெம் மேசைக்கு அடியில் தேடி அரை பாட்டில் அளவில் இருந்த ஓல்ட் மாங்க் ஒன்றை எடுத்தார். ஒரு பெரிய அளவு ஊற்றி அவனுக்குக் கொடுத்தார். ’சூலாவில்’ அதிக கரியைப்போட்டு அதை அருகில் இழுத்துக்கொண்டார்.
”என்ன நடந்தது”
“நீங்கள் எங்களுக்காக வந்து சுட வேண்டும்… ஒரு மிருகத்தை”
“என்ன மிருகம்”
அந்தப் பையன் கீழே பார்த்தான். “ஒரு புலி”
“அது ஆள்கொல்லியா?”
கொஞ்சம் தயங்கினான். “அது ஆபத்தானது என நினைக்கிறோம், அதை உணவு வைத்து வரவைத்து வேட்டையாட முயற்சி செய்து தோல்வியடைந்தோம். எல்லோரும் நீங்கள்…”
பாஹ் ஹெம் ஒரு சிகரெட்டை பற்றவைத்துக்கொண்டார், மங்கிய விளொக்கொளியில் அது மின்னியது.
“உன் பெயரென்ன?”
”காசா”
“காசா, நீ உண்மைச் சொன்னால் மட்டும்தான் நான் உனக்கு உதவுவேன்”
பையன் ரம்மை ஒரே மடக்கில் குடித்து முகம் சுளித்தான். முகம் கொஞ்சம் தெளிவடைத்திருந்தாலும் பிரச்சனை முகத்தில் தெரிந்தது.
“அந்தப் பகுதியிலிருக்கும் ராணுவத்தினர் அதை காயப்படுத்திவிட்டனர், அது கொஞ்சநாட்களில் மனிதர்களைத் தாக்க ஆரம்பித்துவிடும். என் அப்பா..” கொஞ்சம் இடைவெளிவிட்டு. “அவர் உடல்நலமில்லாமல் இருக்கிறார் இல்லையென்றால் இதை அவரே பார்த்துக்கொள்வார். அவர்… மிகச் சிறப்பாக குறிபார்த்து சுடுபவர். நீங்களும் அப்படித்தான் என எல்லொரும் சொல்கிறார்கள்…”
பாஹ் ஹெம் சிகரெட்டை முடித்தபின் பேசினார். “சரி, நான் உன்னோடு வருகிறேன்..”
தன் கையைத்தூக்கி காசா மேலும் பேசுவதை தடுத்து “ஆனால் நாளை காலை கிளம்புவோம். இன்றிரவு நீ ஷில்லாங்கில் தங்கிக்கொள்” என்றார்.
காசாவுக்கு அந்த ஊரில் இந்த உதவியைக் கேட்குமளவுக்கு யாரையும் தெரியாது அதுமட்டுமல்லாமல் ஒரு தகார் (வெளியாள்) தனியாக அங்கு ஹோட்டலில் தங்குவதும் பாதுகாப்பானதல்ல. எனவே, பாஹ் ஹெம் தனது வீட்டுக்கு அவனை அழைத்தார். அவரும் அவரது குடும்பமும் உம்சொஹ்சுன் என்ற இடத்தில் வசித்தனர். அது பெரிய நீரோட்டத்துக்குமேல் அமைந்த பாலத்துக்கு அருகிலிருந்தது. மலைச்சரிவிலிருந்த அந்த சுண்ணாம்பு பூசிய வீட்டுக்கு, செதுக்கப்பட்ட கற்களை வரிசையாக அடுக்கி வழியமைக்கப்பட்டிருந்தது. அதில் அந்த நிலவொளியில் அவர்கள் ஏறும்போது, தானும் நாதேனியலும் இப்படி வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தால் எப்படியிருக்கும் என அவர் நினைத்துக்கொண்டார். பாஹ் ஹெமின் மனைவி எஸ்தர், ஆச்சர்யமாக எந்தவொரு கேள்விகளுமின்றி விருந்தினனுக்கு தரைத்தளத்தில் ஒரு கட்டிலில் படுக்கையை தயார் செய்தாள். பொதுவாக மற்ற ஷில்லாங் மக்களைப் போலவே அவளும், விசித்திரமான மொழியும் பழக்கவழக்கங்களும் கொண்டவர்கள் என்று தாங்கள் நினைக்கும் வெளியாட்கள் மீது மிகுந்த எச்சரிக்கையுடன்தான் இருப்பாள். அவரின் மற்ற குழந்தைகள், ஒரு மகனும், இரு மகள்களும் காசாவை, தங்கள் அப்பா உள்ளூர் சந்தையில் இருந்து கொண்டுவந்து மிகப் பிரியமாக கவனித்துக்கொள்ளும் ஒன்றைப்போல ஆர்வத்துடன் கவனித்தனர்.
”குட்டை காற்சட்டை” (Patlun lyngkot), காசாவின் காற்சட்டையைப் பார்த்து ஒரு குழந்தை பரிகாசம் செய்தது.
எஸ்தர் அவர்களை ஒழுங்காக நடந்துகொள்ளும்படி கண்டித்தாள், குறிப்பாக சாப்பாட்டு மேசையில். விருந்தினனின் தட்டில் அதிக கறியை அள்ளி வைத்தாள்.
அந்த அமைதியான வீட்டில் இரவு வெகுநேரத்துக்குப்பின் எஸ்தர் தன் கணவனிடம் சொன்னாள் ”அவனுக்கு நதானியேலின் கண்கள்”.
பாஹ் ஹெம் தானும் அப்படி நினைத்ததாகச் சொன்னார்.
நதானியேல் விழித்திருக்கக்கூட முடியாத அளவு பலவீனமடைந்து படுக்கையியே பெரும்பாலான நாட்கள் இருந்தான், நீரிழப்பும், முடியுதிர்வும் அவனை வாட்டின. அந்த நேரத்தில் அவன் சாப்பிட்ட அனைத்தையுமே வாந்தியெடுத்தான். எல்லாமே அவனை குமட்டச்செய்தன. காய்ச்சல் போய் தலைவலி வந்திருந்தது. எங்கென்று குறிப்பிட்டு சொல்ல முடியாமல் ஒரு நிரந்தரமான வலி தலைமுழுவதும் துடிதுடித்துக் கொண்டிருந்தது. “குணமடைவது போல தெரியவில்லையே” எஸ்தர் தன் கணவனின் கையைப் பற்றிக்கொண்டு கிசுகிசுப்பாள். மருத்துவரிடம் கேட்டபோது, இதற்குமேல் எதுவும் செய்வதற்கில்லை என அவர் சொல்லிவிட்டார். அவர்கள் பொறுமையாக இருக்கவேண்டிருந்தது. சில நாட்கள் எஸ்தர் ஹோட்டல் அறையில் ஓய்வெடுக்கும்போது, பாஹ் ஹெம் நதானியேலின் அறையில் அமர்ந்து கதை சொல்வார். சின்ன வயதில் சொன்ன குழந்தைக்கதைகள் அல்ல அவை, அவன் வளர்ந்ததும் என்னவெல்லாம் செய்வேண்டும் என்ற எதிர்காலத்தைப் பற்றிய கதைகள். அதில் அவர் அவனை பொரோலிக்கு பறக்கும் மீன் பிடிக்க அழைத்துச் செல்வார், காரோ மலைகளில் வேட்டைக்கு கூட்டிச் செல்வார், நதானியேல் எப்போதும் விரும்பும் டிரம்ஸ் கிட் கூட வாங்குவார்கள். அவர் மனைவியோடுகூட கடந்தகாலத்தைப்பற்றி அல்லது எதிர்காலத்தைபற்றி மட்டுமே பேசினார். அதற்கிடையில் எதுவுமில்லை. நிகழ்காலம் என்று ஒன்றிருக்கவில்லை. அது அவர்கள் நின்றிருந்த கருந்துளை. அவர் எப்போதும் மருத்துவமனைகளை வெறுப்பார், இந்த மலட்டு வெள்ளைத்தன்மை நதானியேலின் முகத்திலிருந்த நிறமனைத்தையும் எடுத்துவிட்டது. இதை எப்படி நீக்குவது? ஏன் இது தனது மகனுக்கு நடக்கிறது? என்ற கேள்விகளுக்கு, நதானியேலின் வெறுமையான, இப்போது ஒட்டிப்போயிருந்த கன்னத்தில் விழுந்த சூரிய கீற்று, வதங்கிப்போயிருந்த செடியிருந்த ஜாடி, அவனின் இதயத்தை எந்திரத்தனமாக கவனிக்கும் எந்திரங்கள் இவற்றைத் தவிர பதிலேதும் அங்கில்லை.
அடுத்தநாள் அதிகாலையிலேயே, ஷில்லாங்கின் பனிபடர்ந்த மலைகளை சூரியக்கதிர்கள் தீண்டும் முன்னரே, முதல் பேருந்தில் கிளம்பிவிட்டனர்.
பாஹ் ஹெம் ஜீப் ஓட்டிப் போகலாம் என விரும்பினார். ஆனால் அவன் கூட்டத்துடன் செல்வதே பாதுகாப்பு என சொன்னான்.
“அனைத்துப் பயணிகளையும் ராணுவம் சோதிக்க நேரமாகும், இருந்தாலும் தனியாகச் சென்று தீவிரவாதிகளிடம் மாட்டிக் கொள்வதைவிட இது மோசமில்லை”
மதியநேரத்தில் அவர்கள் தூசிநிரம்பிய சாலையில் சென்று கொண்டிருந்தனர், மண் நிறத்திலிருந்த நெல்வயல்கள் கண்ணுக்கெட்டிய தூரம்வரை தெரிந்தன. சீக்கிரமாகவே செழிப்பான வட கேச்சார் மலைகள் வந்துவிடும். இங்கிருக்கும் பிரிவினைவாத இயக்கங்களைக் கட்டுப்படுத்த இரண்டு வருடங்களுக்குமுன் மத்திய அரசால் இராணுவம் அனுப்பட்டது என அவன் சொன்னான். இந்தப் பகுதியில் இராணுவ எண்ணிக்கை குறைவுதான். அசாமிலேயே அதிக பாதிப்புடைய லாகிம்பூர் மற்றும் சிப்சாகர் பகுதிகளில் இராணுவ எண்ணிக்கை இன்னும் அதிகம். அவைதான் சுதந்திரத்துக்காகவும் இறையாண்மைக்காகவும் போராடுவதாக சொல்லிக்கொள்ளும் உல்பா-வின் (United Liberation Front of Assam) வலுவான கோட்டை எனச் சொல்லப்படும் பகுதிகள்.
“இதில் எது மோசமென எனக்குத் தெரியவில்லை” என்றான் காசா.
“உல்பாவா அல்லது எங்களை தொந்தரவு செய்து தீவிரவாதநாய்கள் எனச் சொல்லும் ராணுவமா?”
போகும்வழியில் ஏழு சோதனைச்சாவடி நிறுத்தங்களிருந்தன. ஒவ்வொருமுறையும் அவர்களனைவரும் கீழே இறங்கச் செய்யப்பட்டனர். பேருந்தின் உட்புறமும், சுமையேறும் பகுதியும் சோதனை செய்யப்பட்டன. இரவுப்பயணங்களில் எப்படி மக்கள் கொள்ளைடிக்கப்படுவர் என பாஹ் ஹெம் கேள்விப்பட்டிருந்தார். அவரது பக்கத்துவீட்டுக்கார மிசோரத்துக்காரரின் மருமகன் பணத்தை பேருந்தின் ஜன்னல் திரைப்பிடியில், அது தான் அவர்கள் தேடாத பகுதியென மறைத்துவைத்து எடுத்து வந்திருந்தான். இவர்களது துப்பாக்கிகள் காசாவின் சீட்டுக்கடியில் வைத்திருந்த அவர்களது கேன்வாஸ் பையின் அடிப்பகுதியில் மறைத்து கட்டிவைக்கப்படிருந்தன, அவை அந்தச் சோதனைகளில் கவனிக்கப்படவில்லை.
அவர்கள் அந்தப் பையனின் கிராமத்தின் வெளிப்பகுதியில் இறக்கிவிடப்பட்டனர், அங்கிருந்து கொஞ்சம் நடக்கவேண்டியிருந்தது. வழியோரமெங்கும் குல்மொஹர் செடிகள் இருந்த அந்த சாலையில் மாட்டுமந்தையை ஓட்டிச்செல்லும் ஒரு சிறுவனைத்தவிர யாருமில்லாமல் காலியாக இருந்தது. அங்கு ஒரு விசித்திரமான அமைதி நிலவியது. சீக்கிரமே, மலையுச்சியின் ஓரத்தில், சுற்றியிருந்த சரிவான மலைகளுக்கிடையில், ஒன்றையொன்று வெட்டிச் செல்லும் மஞ்சள்நிற மண் நடைபாதைகளோடு, குடியிருப்பு தென்பட ஆரம்பித்தது. அது பின்மதியம், மேற்கிலிருந்து வெளிச்சத்தை சூரியன் எடுத்துச்சென்றுகொண்டிருந்தது, தரைக்குமேல் தடிமனான பனியாலான மூட்டம் ஒரு போர்வைபோல மூடியிருந்தது. அவர்கள் அந்தவரிசையில் இருப்பவற்றிலேயே பெரிதாக இருந்த ஒரு கூரைவேய்ந்த வீட்டின்முன் நின்றனர். ஜன்னல்வழியாகவும் கதவுவழியாகவும், பல முகங்கள் தெரிந்து மறைந்தாலும், யாரும் அவர்களிடம் வரவில்லை. பத்துவயது மிகாத ஒரு பையன் வெட்கத்துடன் அங்கு நின்று அவனது பெரிய கரும் கண்களால் அவர்களை கவனித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். இரவின் நிறத்தில் ஒருபூனை அவனது கணுக்காலைச் சுற்றியபடியிருந்தது.
“நோரு, மைனாவை டீ தயாரிக்கச் சொல்”
பையனும் அந்த விலங்கும் மறைந்தனர்.
தோட்டத்துக் குழாயில் கைகால் கழுவியபின், காசா பாஹ் ஹெம்மை அடுப்படிக்கு கூட்டிச்சென்றான். அங்கு பதினேழு வயது மதிக்கத்தக்க ஒரு பெண் கொதிகலனை விறகடுப்பில் வைத்துக்கொண்டிருந்தாள்.
“எனது தங்கை” என காசா சொன்னான்.
மைனா அவர்களது விருந்தினரைப் பார்த்து தலையசைத்தாள், அவளது நீண்ட கூந்தல் அவளது தோள்களில் விழுந்திருந்தது. அவள் கடுகு நிறத்தில் பருத்தியிலான மெக்லா அணிந்திருந்தாள். அது அவளை இன்னும் மூத்தவளாகக் காட்டியது, அவள் இன்னொருவரின் உடையை அணிந்திருப்பவளைப் போல, இன்னொருவரின் பாத்திரத்தை ஏற்றிருப்பவளைப் போலத் தோன்றினாள். அவர்களது அம்மாவிற்கு என்ன ஆயிற்று, அவர் ஏன் இங்கில்லை என பாஹ் ஹெம் நினைத்தார். மைனா தேனீர் கோப்பைகளையும் சாமன்களையும் கையாளும்போது, ஒரு கூட்டிலடைபட்ட பறவைபோல அமைதியற்று படபடப்புடன் இருப்பதை கவனித்தார். நோரு, ஒரு ஓரமாக பூனையுடன் விளையாடிக் கொண்டிருந்தாலும், அனைவரையும் கவனமாகப் பார்த்துக்கொண்டேயிருந்தான்.
காசாவும், பாஹ் ஹெமும் உயரம் குறைவான ஒரு மேசையில் அமர்ந்தனர், ஒரு வயதானவர் ஆவியைப் போல கதவின் வழியாக மெதுவாக வந்தார். அவரது வயதை யூகிப்பது இயலாததாக இருந்தது, அறுபதிலிருந்து நூறு வரை இருக்கலாம். மிகமெல்லிய ஒரு வெளிறிய முக்காடு அவரை மூடியிருந்தது. ஆனால் மிகக் கூர்மையான, ஒளிபொருந்திய, ஒரு யுவனுடையதைப் போன்ற அவரது கண்களில் ஞானமும் எச்சரிக்கையுணர்வும் பளிச்சிட்டன.
அவர் தன்னை காசாவின் தாத்தா என அறிமுகப்படுத்திக் கொண்டார். “நன்றி” தனது உலர்ந்த தடித்த இலைபோன்ற குரலில் சொன்னார். “உங்கள் உதவிக்கு மிக்க நன்றியுடன்இருப்போம்”
“நான் புலியை கொல்வதுவரை நீங்கள் நன்றி சொல்ல காத்திருக்கலாம்” என பாஹ் ஹெம் சொன்னார், அதற்குப் பதிலாகக் கிடைத்த ஆழமான அமைதி அவரை ஆச்சயப்படுத்தியது.
தாத்தாவும் அவர்களோடு மேசையில் அமர்ந்தார். மைனா அவர்களுக்கு தேனீரும், ஒரு தட்டில், தேங்காயில் செய்த இனிப்பும் கொடுத்தாள்.
“உன் அப்பா எப்படியிருக்கிறார்?”
காசாவும் மைனாவும் பார்வைகளை பறிமாறிக் கொண்டனர்.
தாத்தா பதிலளித்தார் “மிக மோசமாகத்தான் இருக்கிறார். நல்லது நடக்குமென நம்புகிறோம்.
அருகிலிருக்கும் மருத்துவமனை இங்கிருந்து ஒருமணிநேர பயணத்தில் ஹாஃப்லாங்கில் இருக்கிறது எனச் சொன்னார். அங்கிருந்துதான் மருந்து கொண்டுவர வேண்டியிருக்கிறது, இருந்தாலும் அது பலனுள்ளது போலில்லை.
“எப்போது வேட்டையை ஆரம்பிக்கலாம் என்றிருக்கிறீர்கள்?” என காசா கேட்டான்.
நான்கு ஜோடிக்கண்கள் தன்னை துளையிடுவதைப் போல பாஹ் ஹெம் உணார்ந்தார், அந்தப்பூனை கூட அவரது பதிலுக்காகக் காத்திருப்பதுபோல இருந்தது.
“உன் விருப்பப்படி எப்போது வேண்டுமானாலும்”
“விருந்தாளி இன்று இரவு கண் விழிக்கத் தேவையில்லை” தாத்தா இடைமறித்துச் சொன்னார். “நீண்ட பயணம் செய்திருக்கிறார், அவர் ஓய்வெடுக்கட்டும்”
அந்த இரவு பாஹ் ஹெம் கவனிப்புடன் இருந்தார். சீரற்ற காட்டுத்தரைகள், தரமில்லாத விடுதிகளின் படுக்கைகள், குறுகலான புகைவண்டிப் படுக்கைகள் என எந்த நிலைமையிலும் ஆழ்ந்து உறங்கும் பழக்கமுள்ள அவர் இங்கு ஏதோ வழக்கத்துக்கு மாறாக இருக்கும் உணர்வால் தூக்கமில்லாமலிருந்தார். அவரது அறை வெறுமையாக இருந்தாலும், வசதியாகவே இருந்தது. அங்கு அவர் இருளை வெறித்தபடி, கனத்த நெஞ்சோடு படுத்திருந்தார். நள்ளிரவு நேரத்தில் வித்தியாசமான ஓசைகள் வீட்டின் இன்னொரு பகுதியிருந்து வந்தன. வலியினாலான முனகல்கள் மற்றும் பெரும் துயரத்தின் அழுகை என மாறிமாறி சத்தங்கள் வந்துகொண்டிருந்தன. அது காசாவின் அப்பாவாக இருக்கவேண்டும் என நினைத்தார். சில சமயங்களைத் தவிர அது மனிதகுரல்போலவே இல்லை. கடைசியாக பொறுமையிழந்து முழுவதும் விழித்த பாஹ் ஹெம், அது என்னவென்று பார்ப்பதற்காக தனது அறையை விட்டு வெளிவந்தார
வேதாந்தம் பயில…
வணக்கத்திற்கும் பேரன்பிற்கும் உரிய ஜெயமோகன் அவர்களுக்கு,
நலமாக இருப்பீர்கள் என நம்புகின்றேன். ஒரு நல்ல தகவலை நமது இலக்கிய வாசக அன்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். இங்கே திருவண்ணாமலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய நண்பர் ஸ்வாமி பரமஹம்ஸானந்த சரஸ்வதி அவர்கள் பல துறவிகளுக்கும், பிரம்மச்சாரிகளுக்கும் மற்றும் தீவிர ஆர்வமுள்ள அன்பர்களுக்கும் முறையாக வேதாந்த வகுப்புகளை தமிழில் எடுத்து வருகிறார். அவருடைய வகுப்புகள் அனைத்தும் நூல்களாக அவராலும் மற்றும் அவருடைய மாணவர்களாலும் ஒருங்கிணைந்து தொகுக்கப்பட்டு கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. பதினோரு முக்கிய உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம் மற்றும் பகவத் கீதை என அனைத்திற்கும் சங்கர பாஷ்யத்தின் அடிப்படையில் இனிய தமிழ் நடையில் நூல்கள் வந்துள்ளன. கேன மற்றும் ஈசாவாஸ்யம் என இரண்டு புத்தகங்களையும் நான் முழுமையாக வாசித்துப் பார்த்து அதன் எளிமை மற்றும் ஆழம் கண்டு உள்ளத்தில் உவந்தேன். வேதாந்த வாசிப்பில் ஆர்வமுள்ள அன்பர்கள் ஸ்வாமி பரமஹம்ஸானந்த சரஸ்வதி சுவாமிஜி அவர்களை தொடர்பு கொண்டு வேண்டிய நூல்களை தபால்வழி பெற்றுக்கொள்ளலாம்.
பலர் அவருடைய நூல்களை படித்து பேரார்வம் கொண்டதன் காரணமாக இந்த விஜயதசமி முதல் அவர் இணையவழி வகுப்புகளை அடிப்படை வேதாந்தத்தில் இருந்து துவங்கி இலவசமாக வழங்க இருக்கிறார். தினம் ஒரு மணி நேரம் வகுப்பு இருக்கும். தீவிர ஆர்வம் உள்ள அன்பர்கள் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தங்களை வகுப்பில் இணைத்துக்கொள்ளலாம். தேவையற்ற நபர்களின் இடையூறுகளைத் தவிர்க்க சுவாமிஜி அவர்கள் அடிப்படை உரையாடலுக்குப் பிறகே அழைத்தவரின் ஆர்வம் மற்றும் தகைமையை பொறுத்து அவர்களை வகுப்பில் இணைத்துக் கொள்வதற்கான இசைவை அளிப்பார். எனது பல ஆண்டு கால துறவு வாழ்வில் நான் கண்ட எளிய இனிய உன்னதமான வேதாந்த ஆசிரியர்களில் அவரும் ஒருவர். வேதாந்தம் பயில தீவிர விருப்பமுள்ள நமது நண்பர்கள் சுவாமிஜி அவர்களை தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். ஆர்வமும் தேவையும் அதற்கான தகுதியும் நேரமும் உள்ள எவருக்கேனும் இந்த தகவல் பயன்படும் என்ற அன்பின் காரணமாகவே இதை பகிர்கிறேன்.
தொடர்புக்கு:
ஸ்வாமி பரமஹம்ஸானந்த சரஸ்வதி
82/11 மணக்குள விநாயகர் தெரு,
விசிறி ஸ்வாமி ஆசிரமம் சாலை
ஸ்ரீ ரமணாஸ்ரமம் PO
திருவண்ணாமலை 606603
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers



