Jeyamohan's Blog, page 889

November 2, 2021

வாசகர் கடிதங்கள்

அன்பின் ஜெ,

நலம் விரும்புகிறேன்.

இந்த வீடடங்கு காலத்தில், மிகப் பெரும்பாலான நேரத்தில் எனக்குத் துணையாயிருப்பது உங்கள் தளமும் வெண்முரசும்தான்.

வேலையை உதறி, தனியாவர்த்தனம் (freelancer) நடத்தும் என்னைப் போன்றோர் கடந்த 3 மாதங்களாக தினசரி வாழ்க்கையையே, மென்று விழுங்கிக் கொண்டுதான் தள்ளுகின்றனர்.

முன் காலைப் போதில் உறக்கம் தவிர்த்த கண்கள் உணர்த்துவது ஒன்றையே. வருமானமில்லாமல் இரு மாதங்களைக் கூட தள்ள முடியாத சூழலில்தான் இருக்கிறேன் என.

கடந்த வருட சூழலில் தங்களின் நூறு கதைகள், அந்தக் கடின காலத்தைக் கடக்க உதவின.

இந்த கடின காலத்தைக் கடக்க உங்கள் எழுத்து மட்டுமே உதவும் என்ற எண்ணத்தில், இந்த வேண்டுகோள்.

நூறு கதைகள் போன்று இந்த வீடடங்கு காலத்தை கடக்க உதவுங்கள்.

ஆர்.செந்தில்குமார்

***

அன்புள்ள செந்தில்,

கடினமான காலங்களைக் கடந்துவிட்டீர்கள் என்றும் மீண்டும் அனைத்தும் தொடங்கிவிட்டன என்றும் நினைக்கிறேன். நூறுகதைகள், மீண்டும் ஒரு இருபத்தாறு கதைகள், நகைச்சுவைக் குறிப்புகள், மூன்று நாவல்கள் என நானும் அந்தக் காலகட்டத்தை புனைவின் வழியாகவே கடந்துவந்தேன்.

ஜெ

***

அன்புள்ள ஜெ,

நேற்றிரவு ஒரு கனவு. இனியது நீங்கள் வந்த கனவு என்பதால். உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்று….

நீங்களும் நானும் ஒரு மலை ஏறிக்கொண்டிருக்கிறோம். என் ஊரின் அருகே உள்ள பறம்பு மலை (இன்றைய பிரான்மலை) என்பதாக நினைவு. இருவரும் formal shoes அணிந்திருக்கிறோம் (ஏனென்று தெரியவில்லை). ஏறும் வழியில், ஒரு ஓடையைக் கடக்கிறோம். குறைவாக நீர் சலசலத்து ஓடிக் கொண்டிருக்கிறது. ஏதோ பேசிக் கொண்டே செல்கிறோம், என்ன என்பது நினைவில் இல்லை. நமது இடது புறம், ஒரு பழைய கல் மண்டபம் இருக்கிறது. அங்கே சிறு சிறு கடைகள். விழித்துக் கொண்டபோது நினைவில் மீண்டது இவ்வளவே. அடிவயிறு உந்த, விரைவாகக் கவிந்த விழிப்பை மெனக்கெட்டு தவிர்த்து, நினைவில் எஞ்சிய கனவு இது.

உங்களைக் கனவில் காண்பது அவ்வப்போது நிகழும் ஒன்று. சமீபத்திய கனவுகளில், ஓரளவேனும் சொல்லும்படி நினைவில் நின்றது இக்கனவே. முந்தய கனவுகளில் நீங்கள் என்பதை உறுதியாக உணர்வேனே தவிர, வேறுஎதும் நினைவில் இல்லை.

முன்பு உங்களோடு பகிர்ந்து கொண்டவை:

https://www.jeyamohan.in/32982#.XWda4egzaUk (நாள் என)

https://www.jeyamohan.in/26896#.XWdbY-gzaUk (கனவும் வாசிப்பும்)

அன்புடன்,

வள்ளியப்பன்

***

அன்புள்ள வள்ளியப்பன்

வியப்பாகவே இருக்கிறது. நம்மிடையே கனவுகள் வழியாக ஓர் உரையாடல் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. நான் என்ன சொல்கிறேன் என உணர நானே கனவுகாணவேண்டும் போல.

ஜெ

***

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 02, 2021 11:31

எங்குளாய் இலாதவனாய்?- இரம்யா

அன்பு ஜெ,

வெண்முரசின் நிறைவிலிருந்து உங்களின் அலைக்கழிதலை ஒரு வாசகராக நின்று பார்த்துக் கொண்டிருக்கிறேன். தொடர்ந்து உங்களுடன் ஏழு வருடமாக பயணித்த பலரும் ஒவ்வொரு விதமான அலைக்கழிதல்களைக் கொண்டிருப்பதை என்னால் பார்க்க முடிகிறது. ஏதோவொரு வகையில் அதிலிருந்து மீண்டு கொள்ள என்னென்னவோ செய்கிறார்கள். அதனோடு மிகவும் தொடர்புடைய மற்றும் அதன் இணையாசிரியர்களான ஸ்ரீநி மாமா மற்றும் சுதா மாமி இருவரையும் சந்தித்து வந்தேன். நிறைவிற்குப் பின்னாக அவர்கள் வாழத் தேர்ந்தெடுத்த இடம் ரம்மியமானது. மாமா நித்தமும் மாமியோடு அதே இயற்கையை வேறு வேறு விதமாக ரசிக்கிறார். அப்படியே கம்ப ராமாயணம் வாசிப்பை மிகத்தீவிரமாக நகர்த்திச் செல்கிறார். மாமி எழுத்தாளராக.. மாமா மொழிபெயர்பாளராக என செயல் தீவிரம் வேறு. அந்த இனிமையான ஊரில் இதெல்லாம் மிகச்சுலபம் என்பது போல அவர்களுக்கு வசப்படுகிறது. சுபா நீலத்தின் நிறைவுப்பகுதியின் பிச்சி ராதையைப் போல இருக்கிறார். நீலத்தை ஒலிவடிவமாகப் போடுவதும் மொழிபெயர்ப்பதும் பயணமும் என தீவிரமாக இருக்கிறார். பல நல்ல அறிதலுக்கான கட்டுரையாக வெண்முரசு டிஷகஷன்ஸ் குழுவில் நான் சிலாகிக்கும் அருணாச்சலம் மற்றும் ராஜகோபாலன் அவர்களும் என்ன செய்து தங்களை ஆற்றுப்படுத்திக் கொள்கிறார்கள் என்பதே தெரியவில்லை. இன்னும் இப்படி ஏராளம்.

இந்த வரிசையில் எழுத்துக் கலையின் படைப்புக்காக இசைக்கலையின் மூலம் தனது காணிக்கையை ராஜன் சோமசுந்தரம் அவர்கள் செலுத்தியிருப்பதாகப் பார்க்கிறேன். இந்த இசைக்கோவை வெண்முரசு வாசகர்கள் அனைவருக்கும் நெகிழ்ச்சியை அளிக்கக் கூடியது.

இசை வெளியிட்ட பின்னான ஒரு வார காலமாக பித்து பிடித்தாற்போல “கண்ணானாய் பாடலை” கேட்டுக் கொண்டிருந்தேன் ஜெ. இந்த இசை வெளியீட்டு விழாவில் நண்பராகவும் கலைஞராகவும் கலந்து கொண்டு இசைக்கோவையை மணிரத்னம் அவர்கள் வெளியிட்டு பேசியது மிகவும் பெருமையாக இருந்தது. வெளியீட்டு விழாவின் போது சைந்தவி அவர்கள் பாடிய

“சிறுதண்டை சுழன்ற மென்கால்மலரே,

விரிமலர் முதலிதழோ

எனத் தோன்றும் பெருவிரலே,

இளம்பாளை தளிரென்ற பாதப்பரப்பே, அதிலெழுந்த ஆழிச்சங்குச் சுழியே, அமுதுண்ணும் களிப்பில் நெளியும் சிறுகுமிழ் விரல்களே,

அமைக என் தலைமேல்!

அமைக இப்புவிமேல்!

அமைக திருமகள் மடிமேல்!

அமைக!”

என்ற வரிகள் தான் முதலில் இசையாக என்னுள் நுழைந்த வரிகள். அந்தப் பாடலின் சிறு துளியே அமுதத்திற்கு இணையாக இருந்தது எனலாம். தாய்மையின் உணர்வில் பொங்கிக் கொண்டே இருக்கும் வரிகள் “அமைக! ” என்ற வார்த்தையால் முதலில் திகைத்தது. இறுதி “அமைக திருமகள் மடிமேல்” என்ற உச்ச சுருதியில் அடிநெஞ்சிலிருந்து உணர்வு மேலெழுந்து கண்ணீர் துளித்து நின்றது.

பின்னர் சிறு பெர்ஃபார்மன்ஸ் செய்த ரிஷப் ஷர்மா அவர்களின் சிதார் இசை இதையத்தையே அதிரச் செய்து அதில் மீட்டிக் கொண்டிருந்தது. அவர் இசையை நிறுத்திய பின்னும் அந்த அதிர்வு கேட்டுக் கொண்டே இருந்தது.

விழா முடிந்த பின் முழுப்பாடலையும் கேட்டேன். பாடலின் தேர்ந்தெடுத்த வார்த்தைகள், வரிகள் எனக்கு மிகவும் பிடித்தவை. அதிலுள்ள ஆழம் மிகவும் வலியது.

“எங்குளாய்.. இலாதவனாய்… காலமானாய்… ” என்ற வார்த்தைகளெல்லாம் உச்சாடன சொற்கள். “கருநீலத்தழல்மணியே” என்ற ஒரு வார்த்தையே கவிதயாய் மனதில் பதியக்கூடியது. ஆணும் பெண்ணுமாக தாயாக மாறி பிரம்மத்தை குழந்தையாக அணைத்துக் கொள்வதாக அமைந்த பாட்டில் கமல்ஹாசன் அவர்கள் உச்சரித்த

 

“ஞானப்பெருவிசையே

ஞானப்பெருவெளியே

யோகப் பெருநிலையே

இங்கெழுந்தருள்வாயே”

என்ற வரிகள் மட்டும் பிரம்மமே தனக்குத்தானே சொல்லி தன்னை எழுந்தருளச் செய்து கொண்டது போல இருந்தது.

இந்த பாடலின் முதலில் வரும் புல்லாங்குழல் இசை வெண்முரசுக்கெனவே இசைப்பிரபஞ்சத்தினின்று கொடுக்கப்பட்டது என்பேன். வெண்முரசு படிக்க ஆரம்பித்த நாட்களில் புனைவில் பிரபஞ்சத் தோற்றுவாயிலிருந்து அஸ்தினாபுரி வரையிலான புனைவை கட்டியெழுப்பிக் கொண்டிருந்தேன். வாசிப்பில் புனைவுலகம் பெருகிக் கொண்டே சென்றது. வெண்முரசு தீம் மியுசிக்கை கேட்டபோது நான் கட்டியெழுப்பிய புனைவுலகத்தில்  ராஜனுடையை இசையை இட்டு நிரப்பி மகிழ்ந்து கொண்டிருந்தேன்.

நீலம் நாவல் வாசிக்கும்போதே மனம் இசையை நாடிக் கொண்டே இருந்தது. ஏன் என்று புரியவில்லை. கண்ணனின் புல்லாங்குழல் இசை என்று தேடித் தேடி இசையை தவழவிட்டுக் கொண்டே தான் படிப்பேன். கண்ணனின் கலிங்க நர்த்தனம் வரும்போது அருணா சாய்ராமின் தில்லானா வை கேட்டுக் கொண்டிருந்தேன். மேலும் “மாடு மேய்க்கும் கண்ணே” பாடல், சஞ்சை சுப்ரமணியத்தின் “சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா” பாடல், இளையராஜாவின் “நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா”, எம். எஸ். வி -ன் ” தீர்த்தக்கரையினிலே.. ” என்று நீலத்தில் மூழ்கியிருந்த நாட்களிலெல்லாம் மனம் இசையையே நாடிச் சென்றது.

இசையை ஈர்க்கக்கூடிய ஒரு நாவலுக்கு ஒரு இசையமைப்பாளர் வாசகராய் அமைந்தது நல்லூழ் என்பதைத்தவிர என்ன சொல்ல? நீலத்திற்காக நான் ஏங்கிய அந்தப் புல்லாங்குழலை ராஜன் இசைப் பிரபஞ்சத்தில் எங்கிருந்து தேடிப் பிடித்தார் என்று வியந்தேன். அதைத் துழாவி எடுத்த அந்த கைவிரல்களுக்கு என் அன்பு முத்தங்கள்.

பாடலின் அலைகழிதலால் உந்தப்பட்டு கன்னியாகுமரி பயணம் செல்லலாம் என்று முடிவுடுத்தேன். எந்தவொரு முன்திட்டமும் இல்லை. கன்னியாகுமரியின் ஒட்டுமொத்த நிலத்தை நெடுக அளந்துவிட வேண்டும் என்று நினைத்தேன். நீங்கள் என் மனதிற்கு மிக மிக அணுக்கமாகியது இந்த ஊரடங்கில் நீங்கள் எழுதிய புனைவுக்களியாட்டு சிறுகதைகள் வழியாகத் தான். அதன் மாயப் புனைவிடங்களைத் தவிர்த்து எத்தனை மனிதர்கள், நிலங்கள், உணர்வுகள் என கடத்தியிருக்கிறீர்கள். அவற்றையும் காண வேண்டுமென நினைத்தேன். நூறு சிறுகதைகளின் வாசகராக என் பயணம் அலப்பரியது. என்னை ஆழமாக மேலும் மேலுமென திறந்து கொண்டு செல்லும் பயணத்தில் இணையாக உங்கள் உள்ளத்தின் ஆழத்திலும் பயணிப்பது மகிழ்ச்சியை அளித்தது. உங்கள் அன்றாடங்கள் அனுபவங்களை நீங்கள் எழுதியதன் வழி மேலும் மேலுமென அணுக்கமானீர்கள். தளத்தில் துழாவி சிறுகதைகள், கட்டுரைகள், கடிதங்கள், உரைகள் என படித்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் இருக்கிறேன்.

இன்னும் உங்களுடன் உரையாடிக் கொண்டே இருக்கிறேன். தீராத பயணம் இது. நேரில் உங்களைக் காணும் போது மனமும் முகமும் விரிந்து கொண்டே இருப்பதை உணர முடிகிறது. சில சமயங்களில் வலிந்து நான் புன்னகைப்பதை நிறுத்தி சீரியஸாக வைத்துக் கொள்வதுண்டு. ஆனால் ஒவ்வொரு முறையும் ஒரு சின்ன நெருடல் ஒன்று உள்ளத்தில் வந்து மறையும். நான் புனைவில் கண்டு உணர்வுகளைக் கொட்டும் ஜெ நீங்கள் அல்ல என்று. முதல் சந்திப்பில் அப்படித் தோன்றவில்லை. புதிய வாசகர் சந்திப்பின் போதும் உணரவில்லை. மூன்றாவது முறையாக மதுரை குக்கூ நிகழ்வின் போது தான் அதைக் கண்டேன். புனைவுக்களியாட்டு சிறுகதைகளுக்குப் பிறகு நீங்கள் எழுதிய கதைகளுக்கு என்னால் கடிதம் எழுத முடியவில்லை. அதீத உணர்வுகளை எழுத்திற்கு அளிக்கலாமா? அளித்தால் அழிந்துவிடுமா? அல்லது அதை என்னால் கடத்திவிட முடியுமா என்ற தயக்கமே அதற்கு காரணம். “அந்த முகில் இந்த முகில்” உச்சமான பிரேமையில் இட்டு என்னை திழைக்கச் செய்தது. பிரேமையோடு வெறும் அந்த ஒற்றைப்பாடலை “ஆ மப்பு இ மப்பு” என எத்தனை முறை இசைத்ததேனென்றே தெரியாமல் இரண்டு மணி நேரப் பயணமாக மதுரை வந்து சேர்ந்தேன். ஆனால் அங்கு நீங்கள் ஒரு ஆசிரியராக நின்று கொண்டிருந்தீர்கள். என்னால் உங்கள் முன் நிற்கக்கூட முடியவில்லை. மதுரையிலிருந்து சிலுத்தூர் செல்லும் பயணத்தில் அழுது கொண்டே சென்றேன். அருகில் இருப்பவர்கள் என்னை பித்தி என்று நினைத்திருக்கக்கூடும். நினைக்கட்டுமே என்றும் தோன்றியது.

மதுரை குக்கூ நிகழ்வை எழுதுவதை தவிர்த்துவிட்டேன். காதலில் கனிந்துருகி நின்று பக்தி இலக்கியம் பாடும் போது ஏன் தன்னை காதலியாக கவிஞர்கள் கற்பனை செய்து கொண்டார்கள் என்பதும் விளங்குகிறது. பித்தியாக நின்று கரையும் நேரத்தில் ஆசிரியனாக நிற்பது ஏமாற்றத்தை அளிக்கிறது அது தெய்வமாக இருந்தாலும் கூட. ஆனால் அது எழுத்தாளனின் தவறல்ல. அவன் எழுதும்போது மட்டுமே அதுவாக இருக்கிறான் என்றும் தொடர்ந்து நீங்கள் சொன்ன “நான் வெளிவந்துவிடுவேன்” என்ற வரியின் மூலமும் அதை உணர்ந்து கொண்டேன். ஆமாம். அதன்பின் அவன் வேறு தானே. அவன் ஒரு கலம். புனைவில் நாம் காதலிப்பதோ வெறுப்பதோ சொல்லொண்ணா உணர்வுகளை அடைவதோ அதில் அவன் கடத்தும் உணர்வுகள் வழி தானே. என்னை நானே மீட்டுக் கொள்ள வேண்டியிருந்தது. அதன்பின் புனைவுக் களியாட்டு சிறுகதைகளை தொகுத்துக் கொள்ள முற்பட்டேன். மீள் வாசிப்பு செய்தேன். புனைவையும் உங்கள் அருகமைவையும் பிரித்துக் கொண்டேன். நேரில் அப்படி உணர்ச்சி பொங்க அழுபவர்களை பித்தாக இருப்பவர்களை நீங்கள் காணும் போது ஒரு விலக்கத்தை அடைவதைப் பார்த்திருக்கிறேன். நெருங்கிய வட்டத்தில் உங்களுக்கு அருகிலிருப்பவர்கள் மிகச் சரளமாக இருப்பதை முதலில் ஏற்றுக் கொள்ள முடிந்ததில்லை. ஆனால் உங்களுக்கு விலக்கம் கொடுகக்கூடியது பித்தாக இருப்பவர்கள் தான் என்று தோன்றியது. இன்று இயல்பாக உங்கள் முன் இருக்க முடிகிறது. உங்களுடனான சந்திப்பை, அருகமைவை, பிரிவை உணர்ச்சிவசப்படாமல் இன்று என்னால் சந்திக்க முடிகிறது.

ஆனாலும் உங்கள் புனைவுகளின் வழி நான் உருவாக்கிக் கொண்ட ஜெ வை சந்திக்க வேண்டுமென்று தோன்றியது. குட்டி அனந்தனை,  சின்ன தேகமும் பெரிய மண்டையுமுடைய விடலைப் பருவனை, இளைஞனை, காதலனை, தந்தையை, குருவை எல்லாமுமானவனைக் காண வேண்டும் என்று தோன்றியது.

கவிதை முகாமிற்குப் பிறகு நடந்த வெண்முரசு இசை வெளியீட்டு விழாவிற்குப் பிறகு ஆஜ்மீர் செல்வதாகச் சொல்லியிருந்தீர்கள். நீங்கள் இல்லாத இடத்தில் தான் அந்த புனைவின் ஜெ வை மிக நிதானமாக சந்திக்க முடியும் என்று தோன்றியது. விஷ்ணுபுரம் பதிப்பகத்தின் முதல் புத்தகமான “குமரித்துறைவி” கையில் கிடைத்ததிலிருந்தே இருந்த உணர்வுப்பெருக்கு வெண்முரசு இசை வெளியீட்டு விழாவில் மேலும் அதிகமாகியது. வெண்முரசு நிறைவிற்குப் பிறகு நீங்கள் எழுதிய கதைகளை அலைகழிதல்கள், உணர்வெழுச்சிகள், விலகுதல் என்று சொன்னால்  குமரித்துறைவியை மட்டும் :நிறைவின் மங்களம்’ எனலாம். அதை கன்னியாகுமரி பகவதியின் காலடியில் வைக்க வேண்டும் என்று தோன்றியது. எல்லாவற்றுக்குமாக சேர்த்து நாஞ்சில் நிலம் நோக்கி பயணமானேன்.

திருநெல்வேலிக்குப் பிறகான நிலத்தை முதல் முறை காண்கிறேன் எனலாம். இதற்கு முன்பு பள்ளி சுற்றுலாவின் போது ஒரு முறை வந்திருக்கிறேன். மிகவும் மங்கலான நினைவுகளே என்னில் எஞ்சியுள்ளன. பகவதி கோவில் கருவறை, விவேகானந்தா பாறையின் தியான அறை, திருவள்ளுவர் சிலையை மிக அருகே கண்டபோது அவரின் கால் கட்டைவிரலை என் கையின் சுண்டுவிரலோடு ஒப்பு நோக்கி அதன் பிரம்மாண்டத்தை வியந்தது என சில நினைவுகள்.

இம்முறை திருநெல்வேலியைத் தாண்டிய நிலப்பரப்பை புனைவின் கண்கொண்டு ரசித்திருந்தேன். நாங்குனேரி வள்ளியூரைத் தாண்டி மேற்குத் தொடர்ச்சி மலைகள் மிக அருகே என தெரிந்து கொண்டே வந்தன. வள்ளியூரைத் தொடும்போது ஸ்ரீநி மாமாவையும் சுதா மாமியையும் நினைத்துக் கொண்டேன். மாலை நடையில் நான் கண்டு கொண்டிருக்கும் மாலையை மலையை மேகத்தை ஓவியமாக ரசித்துக் கொண்டிருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டேன். முப்பந்தல் பணகுடிக்குப் பிறகு “குளம்” என்ற பின்னொட்டு கொண்ட பல ஊர்கள் தென்பட்டன. கன்னியாகுமரியை அடையும் போது நல்ல மழை பிடித்துவிட்டது. நேராக பகவதி கோவிலுக்கு முதலில் சென்றோம். அந்த சாலையை அடைவதற்கு முன் சிறு மண்டபம் இருந்தது. அது தான் கோவில் நுழைவாயில் என்று நினைத்து உள்ளே சென்று விட்டேன். அங்கே மிகப் பெரிய சரஸ்வதி படம் வைத்து சரஸ்வதி பூஜை கொண்டாடிக் கொண்டிருந்தனர். கருங்கற்களுக்குள் அந்த இருட்டில் அவள் முன் மட்டும் விளக்கு மண்டியிருந்தது. அங்கிருந்த அனைவரும் ஆட்டோ காரர்கள். அனைவருடைய வண்டிச்சாவிகளும் அவள் முன் இருந்தன. அதற்கு நடுவில் குமரித்துறைவியை வைத்தேன். எல்லோரும் “அது என்ன புத்தகம்” என்று எட்டி எட்டி பார்த்தனர். சாமி கும்பிட்டு முடித்ததும் புத்தகத்தை எடுத்துக் கொண்டேன். “பகவதி கோவிலுக்கு இப்படி ஏதும் வழி இருக்கா” என்று கேட்டேன். “இல்லமா. ஆனா முன்னம் இது பெரிய மண்டபம். இது வழியாவும் போலாம். இப்ப கடைகள் அடைச்சி கிடக்கு. வெளிய போய் இடப்பக்கமா திரும்பி நடங்க. வந்திடும்” என்று பூசாரி சொன்னார். சில ஆட்டோகாரர்கள் எங்களை கூட்டிக் கொண்டுபோய் வழி காணித்தனர்.

பகவதி கோவிலை அடைந்து பூ வாங்கிக் கொண்டு உள் நுழைந்தோம். தாமரை இலையில் சுற்றிக் கொடுத்தனர். இங்கு அதிகம் விளையும் என்று நினைத்துக் கொண்டேன். மக்கிய தாமரை இலையில் ஒரு புராதனமான எண்ணம் நிறைந்திருப்பதாய் நினைத்தேன். கேரளா பாணி கொண்டை நிறை யட்சிகள் மற்றும் யட்சன்கள் நிறைந்த கோவிலாகத் தென்பட்டது. சுற்றி வந்து மங்கள பகவதியைக் கண்ணுற்ற போது கருவறையிலிருந்து எழுந்த ஒளியுடன் அழகு ததும்பி நின்றாள். கூட்டமில்லாததால் சிறிது நேரம் நின்று அவளைப் பார்த்தேன். பூசாரிக்கு தக்க காணிக்கை அளிக்க வேண்டும் என்ற எண்ணமே நீங்கள் சொன்ன பிறகு தான் கடைபிடிக்க ஆரம்பித்தேன். காணிக்கை அளித்தபின் புத்தகத்தை அவர்களிடம் கொடுத்து பாதத்தில் வைத்துத் தரும்படி கேட்டேன். அவர் அந்த புத்தகத்தை திருப்பி திருப்பி பார்த்தார். ஏதோ படித்தார். பின்னர் கருவறையினுள் சென்று பகவதியின் காலில் வைத்தார். கண்கள் கலங்கி விட்டது. சட்டென மூத்தோள் கதையின் ஜேஸ்டாதேவியின் பேருருவம் என் தலைக்குமேல் இருப்பதாய் நினைத்து சிலிர்த்துக் கொண்டேன். யாவும் தணிந்து புத்தகம் கைக்கு வந்தபின் கடற்கரை நோக்கி நடக்கலானோம்.

இரவின் கடல் இரவின் கடல் என துள்ளிக் கொண்டே சென்றேன். வெவ்வேறு கோணத்திலிருந்து அலையையும் அதன் ஓசையையும் கரையிலிருந்து விவேகானந்தா பாறையையும், வள்ளுவர் சிலையையும் ரசித்தோம். கறுமையான பிரபஞ்சத்தில் இரு துளி ஒளியை மனிதன் படைத்து விட்டான். இரவில் அந்த அந்தப் பாறையில் அமர்ந்து தியானித்திருப்பது அந்த எண்ணத்தை தான் கொடுக்கும் என்று நினைக்கிறேன். சங்கிலித்துறைக்குச் சென்றேன். அங்கிருந்த மண்டம் சிறு வெளிச்சத்தில் புராதன எண்ணத்தைக் கொடுத்தது. அங்கு உட்கார்ந்திருந்தேன். பௌர்ணமியை நெருங்கும் மதியன் மற்றும் சில வெள்ளிகள், இரவின் கடல் அலையை சங்கிலித்துறையிலிருந்து ரசித்திருந்தேன். ஆள்நடமாட்டமில்லாத சங்கிலித்துறையை காலத்தில் பின்சென்று கண்டு சிலிர்த்தேன். எத்தனையோ காலமாக மனிதர்கள் இங்கு நின்று இந்த கடல் அலையை மதியனை ரசித்திருக்கக்கூடும். கடலும் நிலவும் அப்படியே தான் இருந்திருக்கும். காலத்தின் முன் சென்று நான் இறந்துவிட்ட உலகை நினைத்துப்பார்த்தேன். அப்போதும் மதியன் ஒளி கொண்டிருப்பான், அலைகள் தவழ்ந்து வந்து சிரித்துக் கொண்டிருக்கும். இது போன்ற இரவுகளை ரசிப்பதற்கென்றேயல்லவா மனிதர்கள் பிறந்து இறக்கிறார்கள்.

“இயற்கைக்கு ஓய்வு ஓயாத

மகத் சலித்த அதன்

பேரிரவு.”

என்ற பிரமிளின் வரிகள் நினைவிற்கு வந்தது. இரவின் தீவிரத்தை மிகுந்து ரசித்து எழுந்த ஒரு பகலில் தான் அவன் இந்த வரிகளை எழுதியிருக்கக்கூடும்.

“இரவில் குளித்து

உலகம் வீசும்

வெளிச்சச் சாயை பரிதி.

ஆமாம்.

இரவின் நிழலே பகல்;

இருளின் சாயை ஒளி.”

நீண்ட நேரமாக அந்த அலைகளை மண்டப இருளில் நின்று பார்த்துக் கொண்டிருந்தேன். “எங்குளாய் இலாதவனாய்… ” என்று கேட்டுப் பார்த்தேன். சிறிது நேரம் கழித்து “அமைக! அமைக இப்புவிமேல்!…” என்றேன். அப்போதும் அதே பேரிரைச்சலுடன் கூடிய அலை. அதன் மொழி புரியவில்லை. ஆனாலும் இனிமையான ஏதோ ஒன்றைத்தான் சொல்லியது எங்கள் வீட்டில் கூடு கட்டியிருக்கும் குருவிகளைப் போல.

காலையில் சூரியன் எழுவதைப் பார்க்கச் சென்றோம். அடர் மேகங்கள் சூரியனை மறைத்திருந்தது. நீண்ட கருங்கற்கள் குவிக்கப்பட்ட பாலம். நடந்து செல்லும்போதே மழை வந்து விட்டது. தொடக்கூடாதது தொட்டுவிட்டது போல மனிதர்கள் பலரும் அந்த இடத்திலிருந்து சென்று விட்டனர். மழையின் இனிமையை ரசிக்கும் மிகச்சிலருடன் அந்தப் பாறையில் உட்கார்ந்திருந்தோம். நிலத்திலிருந்து நீண்ட தொலைவில்  மூன்று பக்கமும் கடல் சூழ கருங்கற் பாறையின் நுனியில் நின்று கடலையும் பரிதியையும் பார்த்துக் கொண்டிருந்தேன். இரவிலும் பகலிலும் கடல் பிரம்மாண்டத்தையன்றி எதையும் தருவதில்லை.

அங்கிருந்து வட்டக்கோட்டை சென்றோம். கொள்ளையர்களை எல்லை தாண்டி வருவோரை கண்காணிக்க கட்டப்பட்டது. அங்கு ஆயுதத்தோடு நிற்கும் போர்வீரனைப்போல கற்பனை செய்து கொண்டேன். “வருமானத்துக்குச் சிக்கலற்ற வேலை என்பது ஒரு பெரிய கோட்டைபோல. கோட்டைக்குள் இருந்து எவ்வளவு வேண்டுமென்றாலும் கனவு காணலாம். இசைகேட்க சிறந்த இடம் கோட்டைக்குள்தான் என்று ஒரு சொல்லாட்சி உண்டு. அந்த பாதுகாப்பு மிகமுக்கியமானது.” என்று நீங்கள் சொன்ன வரிகள் நினைவிற்கு வந்தது. இந்த அற்புதமான இடத்தில் வேலை என்கிற பேரில் நின்று கொண்டே இலக்கிய வாசகனாக இருக்கலாம், கவிதை திறந்து கொண்டால் எழுதலாம், இல்லையென்றாலும் இயற்கையை ரசிக்கலாம். மூன்று கடல்களும் கலப்பதைக் காணிக்கும் வித்தியாசமான நிறங்களை பார்த்துக் கொண்டிருக்கும்போதே என் மாமன் இடப்பக்கமாக கை காணித்து “இங்க பாருத்தா.. அந்த ஒரு இடத்துல மட்டும் கடல் சுழிச்சு போகுது. அலை இப்படி நடுக்கடல்ல அடிக்குமா. ஏதோ பாறை இருக்காப்ல தெரியிதே” என்றான். நான் அதை உற்றுப் பார்க்கும்போதே மணிப்பல்லவம் சிறுகதை நினைவிற்கு வந்தது. அதை கலந்துகட்டி ஒரு புனைவுக் கதையை சொன்னேன். “அப்டியா” என்று ஆச்சரியமாகக் கேட்டான். பாவம். நம்பி விட்டான். “ஆமா மாமா. உண்மை.” என்று முகத்தை கராராக வைத்துக் கொண்டேன்.

அங்கிருந்து நாகர்கோவில் சென்றோம். தாமரைக்குளங்கள், செழிப்பான வயல்வெளிகள், மலைகள் என பசுமையின் உச்சமாக இருந்தன. பார்வதிபுரம் ஜங்ஷனில் சிறிது நேரம் நின்றோம். அருணாம்மாவை நினைத்துக் கொண்டேன். இன்னேரம் தீவிரமாக எழுதிக் கொண்டிருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டேன். நாகர்கோவில் கன்னியாகுமரியைவிட நவீனமாகத் தென்பட்டது. மிகப்பெரிய ப்ராண்ட் ஷோரூம்கள் எல்லாமே அங்கு இருந்தன. வலப்பக்கம் மலைகள் நிறைந்திருந்தது. நாகர்கோவிலில் ஒரு கடையில் மீன் சாப்பாடு சாப்பிட்டோம். அருமையாக இருந்தது. தக்கலை, வேர்க்கிளம்பி செல்லும் பாதையில் இரண்டு சாலை பிரிந்தது. ஒன்று ஆற்றூர் இன்னொன்று திருவட்டாறு. உங்களுக்கு மிகவும் பிடித்த மலையாளக் கவிஞர் ஆற்றூர் ரவிவர்மாவும் நீங்களும் இணையும் புள்ளி என்று கற்பனை செய்து கொண்டேன்.

 

திருவட்டாறில் பரளியாறு செல்லும் ஓர் படித்துறையில் உட்கார்ந்திருந்தேன். இரண்டு பெண்கள் குளித்துக் கொண்டிருந்தார்கள். காலம் இங்கு மட்டும் மெதுவாக சுழித்துச் செல்வதாக உணர்ந்தேன். வெண்முரசு பாடலை அங்கு உட்கார்ந்து கேட்டேன். அருகில் ஒரு நாய் வந்து உட்கார்ந்தது. நான் மாமனை நோக்கி “இது பேரு கருப்பன்” என்று சொன்னேன். “பைத்தியமே. சீக்கிரம் வா. திற்பரப்பு போகனும். லேட் ஆச்சு” என்றான். அதற்கு முன்பு திருவட்டாறு கோவில் போகனுமே என்று மனதில் நினைத்துக் கொண்டேன்.

அங்கிருந்து சென்று கொண்டிருந்த ஒரு சாலையில் இடப்பக்கமாக பிரியும் ஒரு துண்டு சாலையில் போகும்படி கூகுல்மேப் சொன்னாள். கற்பனையில் மட்டுமே கண்ட திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலை அருகே அடையப் போகும் படபடப்பு வந்து சேர்ந்தது. அங்கு அந்த அரசமரத்தடியில் காரை நிறுத்தும்போது திருமுகப்பில் காளிசரணாக உணர்ந்தேன். இறங்கியதும் எதிர்கொள்ளப்போகும் நூலக புத்தகங்களை கையில் அடுக்கிக்கொண்டு நடந்துவரும் அந்த ஒல்லித் தேகமும் பெரிய மண்டையுமுடைய அந்த ஜெ வை நினைத்தேன். மேலும் பதட்டமாகியது. ஆளரவமில்லாத அந்தக் கோவில் சாலையில் நடக்கும்போதே கண்கள் குளமாகியது.

“எழுதப்பட்ட நிலமே வரலாற்றில் நிலைகொள்கிறது, எழுதப்படாத நிலம் வெறும் பருப்பொருள் மட்டுமே எனப்படுகிறது. நிலம் என நாமுணரும் பண்பாட்டு வெளி எழுதி எழுதி உருவாக்கப்பட்டது மட்டுமே.” என்ற உங்களின் வரிகள் நினைவிற்கு வந்தது. நான் நிகழில் காணும் இந்த கோவில் கூட வாழப்போவதில்லை. வாழப்போவது திருமுகப்பில் சிறுகதையில் நீங்கள் எழுதிய கோவில் மட்டுமே. நான் இப்போது கண்டுகொண்டிருப்பது கூட அந்த கோவில் தான். ஒரு பூசாரி நின்று இன்னொருவருடன் தீவிரமாக பேசிக் கொண்டிருந்தார். சங்கு வாக இருப்பார் இல்லைனா சங்குவின் சொந்தக்காரர் என்று நினைத்தேன். படிகளில் ஏறும்போது அந்த ஒல்லிப்பையன் ஏறி ஏறி தேய்ந்த படிகள் என்று நினைத்தேன். ஏறிப்போய் அந்த கதவுகளைத் தொட்டேன். கதவு அதிர்வது போலிருந்தது. ஆனால் இல்லை. அதிர்ந்தது என் உடல். அங்கு நின்றும் உங்களை தான் நினைத்துக் கொண்டேன். மேலே நின்று கீழுள்ள தாழ்வாரத்தைப் பார்த்தேன். இருள் கவ்விய அந்த மண்டபத்தில் நீங்கள் படுத்திருப்பது போல. பரளியாற்றை சோனாவாக கற்பனை செய்து விஷ்ணுபுரம் கருவுருவாகிய இடமாகக் கண்டேன். “எங்குளாய் இலாதவனாய்… ” என்ற வரி நினைவிற்கு வந்தது.

அங்கிருந்து திருவரம்பு வழியாக திற்பரப்பு நோக்கிச் சென்றோம். ஏதோ ஊட்டியில் உள்ள மலைகிராமத்திற்குச் செல்லும் வழி போல இருந்தது. ரப்பர் முழுவதுமாக ஆக்கிரமித்திருந்தது. உங்கள் முதல் எழுத்துக் குழந்தை ரப்பராக அல்லாமல் வேறென்னவாக இருக்க முடியும் என்று நினைத்துக் கொண்டேன். ரப்பரைப் பற்றி நீங்கள் சொன்ன தகவல்களையெல்லாம் அதன் மீது ஏற்றி அதை முறைத்துக் கொண்டே வந்தேன். திடீரென லோகமாதேவி டீச்சர் என்னை திட்டுவது போல இருந்தது. எல்லாத்துக்கும் காரணம் மனிதர்கள் தான் ரப்பர்கள் என்ன செய்யும் பாவம். கீரப்பட்டு கீரப்பட்டு பால் சொறிந்த இடத்தில் கருப்பு வலையமாக ஆகிப்போன மரத்தைப் பார்த்து பரிதாபத்தோடு புன்னகைத்தேன். திருவரம்பின் சாலைகள் தோறும் குட்டி அனந்தனை, கரடி நாயரை, டீக்கனாரை, எலிசிக்கிழவியை, கோலப்பனை, தங்கையா நாடாரை,  அணைஞ்சீயை, தவளைக் கண்ணனைத் தேடினேன்.

திற்பரப்பு மிகவும் சாந்தமாக ஒழுகிக் கொண்டிருந்தது. அதைப் பார்த்துக் கொண்டிருப்பதே தவம் போல இருந்தது. மழைக்கு முன்னர் வரும் ஈரப்பதம் காற்றில் கலந்து வியர்த்துக் கொண்டிருந்தது. அங்கிருந்து மாத்தூர் பாலம் செல்லும்போது மழை தூர ஆரம்பித்தது. ஆற்றுபாபாலத்திற்குள் நுழையும்போது தூத்தலாக இருந்தது கொட்டும் மழையாக மாறியது. பாலத்திலிருந்து ஒன்றிரண்டு பேர்களைத்தவிர யாவரும் ஓடிவிட்டனர். கைகளை விரித்து முழுவதுமாக மழையை உடலில் வாங்கிக் கொண்டேன். மிக உயரமான பாலம். சுற்றிப்பார்த்தால் காடும் ஆறும் மட்டுமே தெரிகிறது. மனிதர்கள் சிறு எறும்புகளாத் தெரிந்தார்கள். பொருளற்ற வேலைகளைச் செய்வது போலத் தோன்றியது. மழைக்குள் ஒரு முடிவடையா பாலத்தில் சென்று கொண்டே இருந்தோம். “வேற உலகத்துக்குள்ள இருக்க மாதிரி இருக்குத்தா” என்றான் அவன். அப்படிதான் இருந்தது.

திரும்பிச் செல்லும்போது நாகர்கோவில் சாலையல்லாமல் வேறு ஒரு சாலையை கூகுள் மேப்காரி காணித்தாள். புது சாலையாக இருக்கு இதிலேயே போலாம் என்று முடிவெடுத்தோம். திருவரம்பில் வீடுகள் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் தனித்து இருப்பது போல தோன்றியது. எங்கள் ஊரில் வீடுகள் வரிசையாக மிகச்சிறிய இடைவெளியோடு இருக்கும். ஒரு வீட்டில் பேசுவது நான்கு வீடு தள்ளி கூட கேட்கும். ரகசியம் என ஏதுமில்லாதது. ஆனால் திருவரம்பு வீடுகள் தன்னளவில் ரகசியத்தை ஒளித்துக் கொண்டு தியானத்தில் அமர்ந்திருப்பவை போல அமைந்திருந்தன. அந்த சாலை அடர்ந்த காட்டுக்குள் நீண்ட நேரமாக சென்று கொண்டிருந்தபோது தான் அது நெடுமங்காடு சாலை என்பதை உணர்ந்தேன். முழுவதும் முடிக்காத “காடு” நாவலும், காட்டின் விதையான மிளாவும் நினைவிற்கு வந்தது. அளப்பங்காடு சாஸ்தா கோவில் ஞாபகம் வந்தது. ராதாகிருஷ்ணனும் நினைவிற்கு வந்தான். அவனுக்கு வயதாகவில்லை. அவன் அப்படியே இளமையாக சைக்கிளில் விரைந்து சென்று கொண்டிருந்தான்.

‘நீ நேரமே பள்ளிக்கு போனா என்னடே?’ என்று நீங்கள் கேட்டதும், அவன் ‘டேய் இந்த எருமை என்னை அவளுக்க கெட்டினவன்னு நினைக்குது கேட்டியா? இவள சிங்காரிச்சு வச்சுகிட்டு போறதுக்குள்ள அங்க ஒண்ணாம் பீரியடு முடிஞ்சிரும்’ என்று சொன்னது நினைவிற்கு வந்தது. சிரித்துக் கொண்டே இருந்தேன். மலைக்குமேலே எத்தனை கோயில்கள், பூதத்தான் கோயில், சாஸ்தா கோயில் என ஒவ்வொன்றும் சிறுகதைகளையே நினைவுபடுத்தியது. ராதாகிருஷ்ணன் இடையில் புகுந்து “டேய் மக்கா ஆணுக்கு என்னடே கதை? கதை கிடக்குதது பெண்ணுக்காக்கும். அதை எந்த மயிராண்டியும் எழுத முடியாது பாத்துக்க. அவளுக எழுதவும் மாட்டாளுக” என்றான் என்னிடம். ‘கொஞ்சம் கூடித்தான் போவுது கேட்டியா?’ என்று அவனைக் கடிந்து கொண்டேன். போய்க் கொண்டிருக்கும்போதே அந்த சாலையில் செண்டை மேளம் கேட்டது. அனைத்து எண்ணங்களையும் விரட்டி வெறுமையாக்கவே அடிக்கப்படும் ஒலி போலவே அது இருந்தது. வெறுமையும் அமைதியும் நிறைந்த பயணத்தில் மீண்டும் அந்த வரி வந்து முன் நின்றது. “எங்குலாய்…. இலாதவனாய்… ”

ஆண்டோர், சுருளக்கோடு, செல்லன்துரிதி, பேழையாறு ஆற்றுப்பாலம்,  சூலூர், தடிக்காரன்கோணம், அழகியபாண்டியபுரம், செம்பொன்விளை, திட்டுவிளை, செண்பகராமன்புதூர் தாண்டி ஒருவழியாக முப்பந்தலை அடைந்தோம். எந்த ஊரின் பெயரும் இதுவரை கேள்விப்பட்டதில்லை. நடுஇரவில் வீடு வந்து சேர்ந்தோம். கனவில் நீங்கள் வந்து ‘பைத்தியமே அதான் ஏற்கனவே சொல்லிட்டேனே. அப்பறம் என்ன எங்குலாய் இலாதவனாய்னு.. ‘ என்று இந்த வரிகளைக் காணித்தீர்கள்.

“அவர் சூனிய வடிவமாக இருந்தார்.

சூனியத்திலே காலம் பிறந்துவருது. காலத்துக்க பீஜம்.

கருத்துளி.

பாஷை இல்ல.

சித்தம் இல்ல.

சித்தத்துக்கு அப்பால் உள்ள துரியம் இல்ல. துரியாதீதமும் இல்ல.”

இன்னும் காண வேண்டிய இடங்களும், வாசிக்க வேண்டிய புத்தகங்களும், உங்களுள் செல்ல வேண்டிய பயணங்களும் எழுத வேண்டியவையும் மிச்சமிருக்கின்றன. இந்தப்பயணத்தில் நான் காண விரும்பியவனைக் கண்டு கொண்டேன்.

பிரேமையுடன்

இரம்யா. 

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 02, 2021 11:30

November 1, 2021

கவிதைக்கான ஒரு நாள்

இளங்கோ கிருஷ்ணனின் கவிதை நூலான வியனுலகு வதியும் பெருமலர் வெளியீட்டு விழா சென்னையில் 31-10-2021 அன்று நடைபெற்றது. காலைமுதலே மழைபொழிந்துகொண்டிருந்தது. விழாவுக்கு கூட்டம் வருமா என்ற பதற்றம் எந்த அமைப்பாளர்களுக்கும் எழும். குறிப்பாகச் சென்னையில் இலக்கியக்கூட்டங்களே குறைந்து வரும் சூழலில். சென்னையில் விஷ்ணுபுரம் அமைப்பு சார்ந்து நடைபெறும் விழா என்றால் குமரகுருபரன் விருது விழாதான். அது சென்ற இரண்டு ஆண்டுகளாக நடைபெறவில்லை.

ஆகவே காலையில் என் அறைக்கு வந்த யாவரும் பதிப்பகம் ஜீவகரிகாலன், இளங்கோ கிருஷ்ணன் ஆகியோர் பதற்றமாகவே இருந்தார்கள். நிகழ்ச்சிகள் எதை ஒருங்கிணைத்தாலும் கூட்டம் வராமல் போய்விடுமா என்னும் பதற்றம் தமிழிலக்கிய சூழலில் என்றும் நிலவுவது. அதிலும் நாம் வேறு ஒருவரை மரியாதை செய்யும்பொருட்டு ஒரு நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தோமென்றால் அப்பதற்றம் மேலும் கூடிவிடும். அவர் நம்மால் சிறுமைப்பட நேரிடுமோ என்னும் எண்ணம் எழும்.

நான் கிரீன் பார்க் அறையில் தங்கியிருந்தேன். எனக்குப் பிடித்தமான, என் அறை என நான் பதினாறு ஆண்டுகளாக உணரும் இடம். முந்தைய நாள் இரவு நல்ல மழை. மின்னல்கள் வெட்டிக்கொண்டே இருந்தன. திரையை விலக்கிவிட்டு மின்னல்களை பார்த்தபடியே இரவு தூங்கினேன். அதிகாலையில் நகரம் சன்னலுக்கு வெளியே வெளிச்சத்தில் விந்தையான ஓர் உலகமாக துலங்குவதைப் பார்த்தபடி நின்றிருந்தேன். சென்னை சன்னலுக்குவெளியே மட்டும் அழகாக தெரியும் நகரம்.

இந்த அறையின் இந்த மேஜையில் வைத்துத்தான் பிரயாகையின் தொடக்கத்தை எழுதினேன். இதே நாற்காலியில். இதேபோன்ற டீக்கோப்பை அப்போதும் இருந்தது. எதுவுமே இங்கே மாறவில்லை. முன்பொருமுறை மோகன்லால் சொன்னார், அவர் சென்னை தாஜில் தங்கவே விரும்புவார் என. அங்கே எண்பதுகள் உறைந்து நின்றிருக்கின்றன.

யாவரும் ஜீவகரிகாலன் இந்த கொரோனாக்கால முடக்கம் அவருடைய பதிப்புச் செயல்பாட்டில் அளித்த பின்னடைவைப்பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தார். இளங்கோ கிருஷ்ணனும் அவர் நண்பர் ஜெய்யும் வந்தனர்.கௌதம் மேனனை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கி முடிக்கும் நிலையில் இருக்கும் ஜெய் ஊட்டியில் வரும் டிசம்பர் 4 ஆம் தேதி குறும்பட விழா ஒன்றை ஒருங்கிணைக்கிறார். அதற்கு ஏற்கனவே என்னை அழைத்திருந்தார். வருவதாகச் சொல்லியிருந்தேன்.

ஊட்டியில் டிசம்பர் என்பது கிட்டத்தட்ட உறைபனிக்காலம்தான். இரவில் பூஜ்யம் வரை குளிர் வரக்கூடும். நான் சென்று நீண்டநாட்களாகிறது. டிசம்பர் குளிரில் ஊட்டியில் சிலநாட்கள் இருக்கலாமென நினைக்கிறேன். நண்பர்களும் வருவார்கள் என்று படுகிறது. வாதச் சிக்கல்கள் கொண்ட நண்பர்கள் கண்டிப்பாக வருவார்கள். ஏனென்றால் ஆயுர்வேதப்படி வாதம் மேலோங்கியவர்களுக்கு குளிர் ஆகாது. ஆகவே குளிர் பிடிக்கும். இலக்கியவாதிகள் வாதம் செய்பவர்கள்தானே?

நண்பர் சக்திவேல் என்னைச் சந்திக்கவேண்டுமெனச் சொல்லியிருந்தார். அவரை சித்தர்காடு சென்று கூட்டிவரவேண்டும். நண்பர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பினேன். சத்யானந்த யோக மையம் நண்பர் சௌந்தர் சென்று கூட்டிவந்தார். நான் அவரை முதன்முறையாகச் சந்திக்கிறேன். ஏற்கனவே என் நண்பர்கள் அனைவரும் அவரைச் சந்தித்துவிட்டிருந்தனர்.

சக்திவேல் இளம் அறிவுஜீவிக்குரிய வேகத்துடன் இருந்தார். தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். மொழியாக்கங்கள் செய்கிறார். நிறைய படிக்கிறார். எழுதவேண்டுமென்னும் துடிப்பு உள்ளது. ஆகவே அது சார்ந்த ஐயங்களாகக் கேட்டுக்கொண்டிருந்தார்.

காளிப்பிரசாத், சிறில் அலெக்ஸ், முத்துச்சிதறல் முத்து என நண்பர்கள் வந்துகொண்டே இருந்தார்கள்.மதியம் வரை பேசிக்கொண்டிருந்துவிட்டு நான் கொஞ்சம் தூங்கினேன். நான்கரை மணிக்கு எழுந்து குளித்து உடைமாற்றி கவிக்கோ மன்றத்தில் நிகழ்ந்த கவிதை வெளியீட்டு நிகழ்ச்சிக்குச் சென்றேன்

எண்ணியதற்கு மாறாக அரங்கு நிறைந்த கூட்டம். சென்னையில் அனைவருமே இலக்கிய நிகழ்ச்சிகளுக்காக ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள் என நினைக்கிறேன். அனேகமாக எல்லா இலக்கிய முகங்களும் தட்டுபட்டன. பலரிடம் ஓரிரு சொற்கள் பேசமுடிந்தது.

எம்.ஏ.முஸ்தபா

நிகழ்ச்சி கொஞ்சம் பிந்தியது. அதற்கு நான் காரணம். கவிக்கோ மன்றத்தின் உரிமையாளர் எம்.ஏ.முஸ்தபா அவர்கள் சிங்கப்பூரில் வணிகம் செய்பவர். இஸ்லாமியப் பேரறிஞர். சிராங்கூன் டைம்ஸ் என்னும் இதழையும் நடத்துபவர். அவர் மேலே நூல்விற்பனையகம் அருகே அவருடைய அலுவலகத்தில் இருந்தார். அங்கே சென்றபோது தற்செயலாக அவரைச் சந்தித்தேன். அவர் தன் அறைக்கு கூட்டிச்சென்றார். சற்று நேரம் பேசி ஒரு நல்ல சுக்குக்காப்பி அருந்தினேன்

திரு முஸ்தபா அவர்கள் ஹதீஸ்களை தமிழாக்கம் செய்துவருவதை என்னிடம் முன்பு சிலமுறை சொல்லியிருந்தார். அம்முயற்சி முழுமையடைந்துவிட்டது. வெளியான நூல்களின் அடுக்குகளைக் காட்டினார். நூல்கள் வெளிவந்து  ஓரிரு நாட்களே ஆகியிருந்தன. அவற்றை எனக்கு அனுப்புவதாகச் சொன்னார்.

முஸ்தபா அவர்களின் தமிழ் மிகக் கூர்மையானது, பிழையற்றது, எளியது. இத்தகைய நவீன மொழியில் ஹதீஸ்கள் மொழியாக்கம் செய்யப்படுவதென்பது மிகமிக முக்கியமான ஒன்று. பெருவணிகர் ஒருவர் இத்தகைய மொழித்திறன் அடைவது அரிதினும் அரிது. அது தொடர்ச்சியாக பல்லாண்டுகள் தமிழில் ஈடுபட்டிருந்தால் அமைவது. முஸ்தபா அவர்களின் முதன்மைக் கனவே ஒரு மார்க்க அறிஞர் ஆகவேண்டும் என்பதாகவே இருந்திருக்கிறது. அதன்பொருட்டே பல்லாண்டுகளாக வாசித்துக்கொண்டிருக்கிறார்.

இந்த மொழியாக்கம் சென்ற அரைநூற்றாண்டில் தமிழில் நிகழ்ந்த மாபெரும் அறிவியக்கப்பணிகளில் ஒன்று. இத்தகைய பெருங்கனவு கொண்ட முயற்சிகளுக்கான காலம் முடிந்துவிட்டது என்று தோன்றிக்கொண்டே இருக்கும், அந்த எண்ணம் அறிஞர்களால் முறியடிக்கப்பட்டுக்கொண்டும் இருக்கும். இஸ்லாமிய இலக்கியத்தைப் பொறுத்தவரை  எம்.ஆர்.எம்.அப்துற் றஹீம் அவர்களின் இஸ்லாமியக் கலைக்களஞ்சியத்திற்குப் பின் மாபெரும் முயற்சி இதுதான். இஸ்லாமியக் கலைக்களஞ்சியம் இணையதளம்

அப்துற் றஹீம் அவர்களின் கலைக்களஞ்சியத்தொகுதிகளை  இருபதாண்டுகளுக்கு முன்பு ஒரு பழைய நூலகம் விற்கப்பட்டபோது அதன் தொகுதிகளை நான் வாங்கினேன். நான் மிக அதிகமாகப்புரட்டிப் படிக்கும் நூல்களில் ஒன்று அது. ஒருவகையில் தமிழ் வரலாற்றின், பண்பாட்டியக்கத்தின் ஒரு பகுதியின் சித்திரம் அதில் தனிச்செய்திகளாக உள்ளது.

இந்த ஹதீதுகள் தொகுதியும் எதிர்காலத்தில் எங்கும் மேற்கோள் காட்டப்படும் ஒரு மூலநூல்களஞ்சியமாக ஆகலாம்.திரு எம்.ஏ.முஸ்தபா அவர்களிடம் ஒரு நீண்ட பேட்டியை எடுத்து பதிவுசெய்யவேண்டும் என நினைத்துக்கொண்டேன்.

ஆறுமணிக்கு நிகழ்ச்சி தொடங்கியது. கவிஞர் தேவசேனா முதலில் பேசினார். அடுத்து பேசிய பிரவீன் பஃறுளி பேராசிரியர் வீ.அரசு அவர்களின் மாணவர். நான் சென்னை பல்கலைக்குள் ஒரே ஒருமுறை சென்றிருக்கிறேன். ஒரு மலையாள நூல்வெளியீட்டு நிகழ்ச்சிக்காக. அப்போது மாணவராக அவர் என்னைச் சந்தித்திருக்கிறார். சென்னை பல்கலையின் கடலோர விருந்தினர் விடுதிகள் அழகானவை.

நண்பர் மனோ மோகன் பேசினார். மிக இக்கட்டான நிலையில் இருந்த நண்பர் ரமேஷ் பிரேதனை அடைக்கலம் கொடுத்து பல ஆண்டுகள் பேணியவர் அவர். மனோ மோகனின் மனைவியும் பாண்டிசேரியில் இருந்து வந்திருந்தார்.

நீண்ட நாட்களுக்குப் பின் மனுஷ்யபுத்திரனைப் பார்த்தேன். கன்யாகுமரியில் என் நண்பர் கிருஷ்ணா இயக்கும் ஒரு சினிமாவில் நடிக்கச் சென்றிருந்தார். அங்கிருந்து நேரடியாக வந்திருந்தார். கன்யாகுமரியில் இருப்பதுபோலவே இருக்கிறது என்றார். மழையில் நனைந்த கன்யாகுமரி அழகான இடம்தான். கன்யாகுமரி மாவட்டமே அழகாகத்தான் இருக்கும்.

மனுஷ்யபுத்திரன் மடிக்கக்கூடிய ஒரு செல்பேசி வைத்திருந்தார். சாம்சங். அழகாக இருந்தது. என்னுடைய ரெட்மி உயிரைவிட்டு நான் இன்னொன்று வாங்குவதாக இருந்தால் அதை வாங்கவேண்டும் என நினைத்துக்கொண்டேன். மனுஷ்யபுத்திரனின் பேச்சு தெளிவான உச்சரிப்பும், சரளமான மொழியும் கொண்டிருந்தது. முன்பு அவரிடமிருந்த பல தடுமாற்றங்கள் இல்லை. துவரங்குறிச்சி வட்டார வழக்கு அறவே இல்லை.

கவிஞர் வெயில் , மனுஷ்யபுத்திரன் பேசியபின் நான் பேசினேன். இளங்கோ கிருஷ்ணன் நிறைவாகப் பேசினார். அவருடைய வாழ்க்கையின் ஒரு நல்ல நாளாக அது இருக்குமென்று தோன்றியது. அவருடைய அப்பா அம்மா மனைவி எல்லாம் நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர். அவருடைய மகளாகிய பாடல்பெற்ற அழகி லயாவைச் சந்தித்தேன். உற்சாகமாக இருந்தாள். முழுநிகழ்ச்சியையும் பொறுமையாக தாங்கிக்கொண்டாள் என்பது பெண்மையின் பெருமைக்குச் சான்று.

ஒன்பது மணிக்கு நண்பர்களுடன் சேர்ந்து குமரகம் சென்று சாப்பிட்டோம். பிரியா தம்பி உடன் வந்திருந்தார். தமிழின் மிக வெற்றிகரமான நான்கு டிவி தொடர்களுக்கு அவர்தான் எழுதுகிறார் என்றார்கள். அவர் கன்யாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். “நாங்க அலையலையா கெளம்பி வந்திட்டே இருப்போம்ல?’ என்று நண்பர்களிடம் சொன்னேன்.

இனிய நிறைவான நாள். இன்று என் நீண்டநாள் நண்பர் அன்பு, ஆன்மிகப்பேச்சாளர் கிருஷ்ணா மற்றும் வேதமாணவரான அவர் மகன், பாஸ்கர் சக்தி, பாலசாகித்ய விருது பெற்ற பாலபாரதி உட்பட பலரை நெடுநாட்களுக்குப் பின் சந்தித்தேன். கிரீன்பார்க்கில் இருந்து மறுநாளே கிளம்பி நாகர்கோயில். மழைபெய்து நனைந்த குமரிமாவட்டம்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 01, 2021 11:35

வியனுலகு வதியும் பெருமலர்- உரைகள்

31-10-2021 அன்று மாலை சென்னை கவிக்கோ அரங்கில் இளங்கோ கிருஷ்ணன் எழுதிய ‘வியனுலகு வதியும் பெருமலர்’ நூல் வெளியிடப்பட்டது. அந்நிகழ்வில் பிரவீன் பஃறுளி, தேவசேனா, மனோ மோகன், வெயில், மனுஷ்யபுத்திரன், ஜெயமோகன், மற்றும் இளங்கோ கிருஷ்ணன் ஆற்றிய உரைகள்.

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 01, 2021 11:34

புதுவாசகர் சந்திப்பில் துவங்கிய பேலியோ- வெங்கி

கென்யா வாழ்க்கை- வெங்கடேஷ் சீனிவாசகம்

அன்பின் ஜெ,

நலம், நலமறிய ஆவல்.

நேற்று (17.10.2021) தகடூர் புத்தகப் பேரவையின் இணைய வழி தொடர்நிகழ்வான “சாப்பாட்டுப் புராண”த்தில் செல்வனின் “பேலியோ டயட்” நூல் அறிமுகமும் (சம்பத் ஐயா), மருத்துவர் ஃபரூக் அப்துல்லா அவர்களின் சிறப்புரையும் சிறப்பாக நிகழ்வுற்றது. கேள்வி பதில் பகுதியை தங்கமணி சார் ஒருங்கிணைத்தார். கடந்த ஐந்து வருடங்களாக பேலியோ உணவு முறையில் இருக்கும் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில் ஐயா நன்றியுரை வழங்கினார்.

நான் பேலியோ உணவுமுறைக்கு மாறி நான்கு வருடங்களுக்கும் மேலாகிறது. 2016-ல் பேலியோ உங்களால் அறிமுகமான கோவை புதுவாசகர் சந்திப்பு நிகழ்வு மனதில் நிழலாடியது.

2016 ஏப்ரலில், விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் ஏற்பாடு செய்திருந்த புது வாசகர் சந்திப்பில் (கோவை காந்திபுரத்தில்) கலந்துகொண்டேன்.அப்போதுதான் உங்களை முதன்முதலில் பார்ப்பது. பரவசமும், வியப்பும் கலந்த ஒரு கனவு நிலையில் இருந்தேன். இருநாள் நிகழ்வு. முதல்நாள் மதிய உணவு சாப்பிட்டு முடித்து கைகழுவிக் கொண்டிருந்தபோது, பின்னால் நீங்கள் நின்றிருந்தீர்கள். நான் நடக்க சிரமப்படுவதைப் பார்த்துவிட்டு (வலதுகால் இரண்டு வயதிலிருந்தே இளம்பிள்ளை வாதத்தால் சிறிய அளவில் பாதிக்கப்பட்டிருந்தது) “நீங்க வெயிட் கம்மி பண்ணணும் வெங்கி (அப்போது என் எடை 90 கிலோவிற்கும் அதிகம்), பேலியோ ட்ரை பண்ணுங்க” என்றீர்கள். ஏற்கனவே விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர்கள் விஜய் சூரியன், அரங்கா பேலியோவை வெற்றிகரமாகத் துவங்கி தொடர்ந்துகொண்டிருந்தனர். உணவில் அதிக கார்போஹைட்ரேட் ஏற்படுத்தும் சிக்கல்களை நண்பர்களும் சொன்னார்கள்.

அதன்பிறகுதான் பேலியோ பற்றி தெரிந்துகொள்ள ஆரம்பித்தேன். ஆனாலும் துவங்குதில் தயக்கமும், தாமதமும் ஆனது. ”பேலியோ என்றாலே அசைவம்தான்; சைவ பேலியோ கடைப்பிடிப்பது மிகவும் கடினம்” என்ற வதந்தி வேறு காதுகளில் விழுந்துகொண்டிருந்தது (அசைவம் சாப்பிடுவது நிறுத்தி 27 வருடங்கள் ஆகியிருந்தது அப்போது). ஒரு மாத விடுமுறையும் சீக்கிரம் முடிவுக்கு வந்ததால், அவசர அவசரமாக கென்யாவிற்கு திரும்பினேன். கிட்டத்தட்ட பேலியோவை மறந்தும் போனேன். அம்முதான் மறுபடி இந்தியாவிலிருந்து நினைவுபடுத்தினார். அம்மு பேலியோ பற்றிய செல்வனின் புத்தகத்தையும், மல்லிகை பிரசுரத்தின் பேலியோ அனுபவங்கள் கொண்ட சிறு புத்தகத்தையும் படித்து, யு ட்யூபில் வெவ்வேறு நகரங்களில் நடந்த பேலியோ நிகழ்ச்சிகளைப் பார்த்துவிட்டு ஃபோன்செய்து “நான் பேலியோ டயட்டிற்கு மாறப் போகிறேன்” என்றார். (அம்முவிற்கு பல வருடங்களாகவே அசிடிடி பிரச்சனை இருந்து வந்தது GERD). என்னையும் துவங்கச் சொன்னார். நான் இங்கு கென்யாவில் எனக்குத் தெரிந்த அளவு தனியே சமைத்து சாப்பிட்டு சமாளித்துக் கொண்டிருந்ததால், என்னால் பேலியோ டயட்டை துவங்கி சரியாகத் தொடர முடியுமா என்ற சந்தேகத்தில் தட்டிக் கழித்தேன். அம்முவின் இரத்தப்பரிசோதனை முடிவுகளை மட்டும் ஆரோக்யம் & நலவாழ்வு குழுமத்தில் பகிர்ந்தேன். விஜய் சூரியனிடம் தொலைபேசியில் அம்முவிற்கு இருக்கும் விட்டமின் டி குறைபாடு பற்றி சொன்னபோது, அவர்தான் சன் செஸ்ஸன் பற்றி விளக்கினார். நானும் பேலியோ துவங்கலாம் என்றும், இங்கு கென்யாவில் என்னென்ன உணவுப் பொருள்கள் கிடைக்கிறது என்று சொன்னால் வழிகாட்டுவதாகவும் சொன்னார். இதற்கிடையில் என் இரத்த க்ளுகோஸ் அளவுகள் ஏற ஆரம்பித்தன.

2017 மே மாதத்தில் மறுபடி விடுமுறையில் இந்தியா வந்தபோது, முதல் வேலையாய் இரத்தப் பரிசோதனை செய்து பார்த்தேன். HbA1c 11.4 காட்டியது. ட்ரைகிளிசரைட், LDL அளவுகளும் அதிகமிருந்தன. இனியும் தாமதிப்பது நல்லதல்ல என்று முடிவுசெய்து கோவையில் தியாகு நூலகம் நடத்தும் நண்பர் தியாகுவிற்கு ஃபோன் செய்து யாரைச் சந்திக்கலாம் என்று கேட்டபோது ஈச்சனாரியில் டாக்டரைப் பாருங்கள் என்று தொலைபேசி எண் தந்தார்.

தொலைபேசியில் டாக்டரிடம் அப்பாய்ண்ட்மென்ட் வாங்கிக்கொண்டு இயல் அம்முவோடு ஈச்சனாரியில் அவரது கிளினிக்கில் சந்தித்தேன். அதிக கார்ப் உடலில் என்ன செய்கிறது என்று படம்போட்டு விளக்கினார். என் இரத்தப் பரிசோதனை முடிவுகளுக்கான விளக்கத்தையும் டயட் சார்ட்டையும் மின்னஞ்சலில் அனுப்புவதாக சொன்னார். தொடர்ந்து மின்னஞ்சலில் தொடர்பில் இருக்கலாம் என்றார்.

டாக்டரைப் பார்த்துவிட்டு ஈச்சனாரியில் இருக்கும் விநாயகர் கோவிலுக்குச் சென்றோம். மாலை ஆறு மணி இருக்கும். அம்முவும், இயலும் கோயில் உள்ளே தரிசனத்திற்குச் சென்றார்கள். நான் கூட்டத்திற்குத் தயங்கி கோவிலின் வெளியே காரிலேயே உட்கார்ந்து கொண்டேன். மனம் பேலியோ குறித்தான யோசனையிலேயே இருந்தது. பேலியோவைக் கடைப்பிடிக்க முடியுமா, வேறு வழிகள் ஏதேனும் இருக்கிறதா, அம்மு உடன் இருந்தாலாவது தாக்குப் பிடிக்கலாம், தனியே கென்யாவில் எப்படி பேலியோவை சமாளிப்பது, என்னதான் டாக்டர் சைவ பேலியோவிற்கு பாராவை உதாரணம் காட்டி ஊக்கப்படுத்தினாலும், என்னால் முடியுமா?, சைவ பேலியோ முடியவில்லையென்றால், 25 வருடங்களாய் விலக்கியிருந்த அசைவ உணவுப் பழக்கத்திற்கு மறுபடியும் திரும்ப வேண்டியிருக்குமோ, அப்படித் திரும்ப எனக்கு மனம் ஒத்துக்கொள்ளுமா…என்று முன்னும் பின்னுமாய் பல்வேறு யோசனைகள்.

மேற்கில் சூரியன் இறங்கிக் கொண்டிருந்தான். வெளிச்சம் குறைந்து, கோவில் வெளியில் மின் விளக்குகள் எரிய ஆரம்பித்தன. உள்ளிருந்து அம்முவும், இயலும் வந்தார்கள். உள்ளங்கையில் கொண்டுவந்த விபூதியை அம்மு என் நெற்றியில் இட்டுவிட்டு, கண்களுக்கு மேல் கைவைத்து மறைத்துக்கொண்டு, நெற்றியை ஊதினார். கண்களை மூடியபோது, உள்ளிருக்கும் அவனிடம் கைகூப்பினேன் “உடன் இரு”.

2017 ஜூன் ஒன்றாம் தேதி கிளம்பி கென்யா வந்தேன். அம்மு, ஐந்து லிட்டர் செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெயும், நான்கு கிலோ பாதாமையும் கொடுத்தனுப்பியிருந்தார். வெஜ் பேலியோவில் துவங்கலாம் என்றும், முடியவில்லையென்றால் முட்டை அல்லது நான் வெஜ்ஜிற்கு மாறிக்கொள்ளலாம் என்றுதான் முடிவு செய்திருந்தேன்.

ஒரு சுபயோக சுபதினத்தில் (2017 ஜூன் மூன்றாம் தேதி) பேலியோ உணவுமுறையை ஆரம்பித்தேன். இதோ இன்று 2021 அக்டோபரோடு நான்கு வருடங்கள் நான்கு மாதங்கள் ஆகிறது. சிற்சில மாற்றங்களோடு இன்னும் பேலியோதான் தொடர்கிறது. பேலியோ பல அடிப்படைப் புரிதல்களைத் தந்தது. மனதின் பல தடைகளை அகற்றி விசாலம் தந்தது.

பேலியோ ஆரம்பித்த முதல் வாரத்திலேயே டயாபடிக் மாத்திரைகளை நிறுத்திவிட்டேன் (டாக்டரை ஆலோசித்துவிட்டு).பேலியோ ஆரம்பித்தபோது எடை 91.6 கிலோ. மூன்று மாதத்திலேயே எடை 76.6 கிலோவுக்கு வந்தது. LDL 197 mg/dl-லிலிருந்து 117-க்கும், ட்ரைகிளிசரைட் 253 mg/dl-லிலிருந்து 121-ற்கு கீழிறங்கின். தொடர்ந்து பேச்சினூடே என்னை உற்சாகப்படுத்தி, ஊக்கப்படுத்திய பாலாவை நன்றியுடன் நினைத்துக்கொள்கிறேன்.

2017 ஜூன் ஒன்று (பேலியோ ஆரம்பிப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்) அதிகாலை ஒரு மணிக்கு, கோயம்புத்தூர் ஏர்போர்ட்டில்அம்முவும், இய லும் வழியனுப்பியபோது, இயல் சொன்னார் “அப்பா, அடுத்தவருடம் விடுமுறைக்கு இந்தியா வரும்போது நல்லா ஃபிட்டா வரணும்” என்று. பயணங்களின் விடைபெறல் தருணத்தில் எப்போதும் இருக்கும் நெகிழ்விலிருந்தேன். இயல் சொன்னதைக் கேட்டதும், அம்முவிற்காகவும் இயலுக்காகவுமாவது இதை செய்தே தீருவது என்று முடிவெடுத்தேன்.

அம்முவிற்கும் இயலுக்கும் என் ஆரோக்கியத்தைத் தவிர வேறென்ன சிறப்பான பரிசாய் தந்துவிடமுடியும்?

மிக்க நன்றி ஜெ. மகிழ்வும் அன்பும்.

வெங்கி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 01, 2021 11:32

கேளாச்சங்கீதம்- கடிதம் 5

கேளாச்சங்கீதம்

அன்புள்ள ஜெ

கேளாச்சங்கீதத்தின் ஒரு நுண்ணிய வரியை நான் இரண்டாம் முறையாக அதை வாசிக்கும்போதுதான் கண்டறிந்தேன்.

எல்லா அமிர்தமும் திரியுற ஒண்ணுதான் இந்த உலகம். உடலுக்குள்ள போனா அமிர்தம் அப்பவே மலமா மாற ஆரம்பிச்சாச்சு. மலம் எதுவானாலும் உடலைவிட்டு போயாகணும்.

உண்மையில் இந்தக் கதை அந்த அதிதூய எக்ஸ்டஸி பற்றியா பேசுகிறது? இல்லை அது மனிதனின் objective existence என்பதில் வேறு வழியே இல்லாமல் திரிபடைந்து மலமாக ஆகி வெளியேறிவிடுவதைச் சொல்கிறதா?

மின்னலை தொடும் வாய்ப்பு சில மரங்களுக்கு கிடைக்கின்றது. ஆனால் அவை கருகிவிடுகின்றன. இது ஒரு கவிதை வரி. கருகுவதன் வழியாக அவை மின்னலை உள்வாங்குகின்றன. அதுதான் செய்ய முடியும்.

நாம் மனிதர்கள் என்ற நிலையில் நம்முடைய existence வழியாகவே பிரபஞ்ச அனுபவத்தை இழந்துவிடவேண்டியவர்களா என்ன?

பிரபாகர்

 

அன்புள்ள ஜெ

கேளாச்சங்கீதம் கதையின் முக்கியமான வரி இது. “சொப்பனம்னா வேரு, யதார்த்தம் மரம்” இதைத்தான் கதை சொல்கிறது என வாசித்தேன். இந்த பெரிய இனிமையும் கொந்தளிப்பும் நிகழ்வது கனவில். ஆனால் கனவு என்றால் பொய் அல்ல. அதுதான் வேர். அங்கிருந்துதான் எல்லாமே முளைக்கின்றன.

அருண்குமார்

அன்புள்ள ஜெ

கேளாச்சங்கீதம் கதையுடன் அளிக்கப்பட்டுள்ள பெயிண்டிங் அற்புதமானது. அதை வரைந்தவர்   Nadya korotaeva. ரஷ்ய ஓவியரான நடியா இப்போது இந்தோனேஷியாவில் வசிக்கிறார். ஏராளமான சர்வதேச அரங்குகளில் பெரும்பாராட்டைப் பெற்றவை அவருடைய ஓவியங்கள். பெரும்பாலும் அப்ஸ்டிராக்ட் வகை ஓவியங்கள்.

நடியாவின் ரத்த ஊற்று [Fountain Of Blood] என்னும் ஓவியத்தின் நகல் நீங்கள் அளித்திருப்பது. அவர் அதில் வரைந்திருப்பது மலர்போலவும் பெண்ணின் குறி போலவும் மயக்கம் தரும் ஒரு வடிவம். அதை சக்திமையம் என்று கொண்டால் நீங்கள் இந்தக்கதைக்கு மேலதிகமான ஒரு அர்த்தத்தை அந்த ஓவியம் வழியாக அளித்திருக்கிறீர்கள்

இந்த ஓவியங்களை எப்படி தேடிப்போய் கண்டுபிடிக்கிறீர்கள் என்று அறிய ஆசை

எஸ்.ரவீந்திரன்

நடியா இணையப்பக்கம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 01, 2021 11:31

ஆரோக்கிய நிகேதனம் – கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்,

ஒவ்வொரு புத்தகமும் தனக்கான வாசகரை தேர்தெடுத்துக்கொள்ளும் என்பது எவ்வளவு உண்மை என்பதை இந்த புத்தகம்(ஆரோக்கிய நிகேதனம்) என்னிடம் வந்து சேரும்போதுதான் உணர்ந்தேன். இதற்காக இரண்டு வருடங்களுக்குமேல் காத்திருந்தேன், மின்சுட்டி வழியே எந்த இணையக்கடைக்கு சென்றாலும், எப்பொழுதும் இப்புத்தகம் அச்சில் இல்லை என்பதே நான்கண்ட நிலை. ஒருவழியாக புக்-மை-புக் வழியாக என் தவத்திற்கு ஒரு முடிவு வந்தது. ஒரு பொக்கிஷத்தை திறப்பது போலவே திறந்தேன், உண்மையில் பொக்கிஷம்தான். எனக்கு  இந்த அற்புதமான அனுபவத்தை கொடுத்ததற்காக தங்களுக்கு என் பணிவான நன்றி. இதில் வரும் மனிதர்களின் பெயர் மற்றும் வழக்கத்தில் இல்லாத சொற்களால் முதல் வாசிப்பில் சில இடர்களை சந்தித்தது என்னமோ உண்மைதான். ஆனாலும் மீள்வாசிப்பில் இவ்விடர்கள் எளிதில் மறைந்தன (மனிதர்களின் பெயர்களை முன் அட்டையில் எழுதினேன், வழக்கத்தில் இல்லாத சொற்களுக்கு இணை சொல் இட்டேன்). மீள் வாசிக்க வேண்டும் என்றெண்ணி அதை உடனே செய்த புத்தகமும் இதுவே!

ஆரோக்கிய நிகேதனம் வெறும் ஆரோக்கியகூரை மட்டும் சொல்லி செல்லும் நாவல் இல்லை, அதற்குமேல் இது தரும் வாழ்வனுபவம், அவ்வனுபவத்தினுடே சொல்லிச்செல்லும் வாழ்வின் ஆகச்சிறந்த சிந்தனை நோக்கு இதன் சிறப்பம்சமாகும். குறிப்பாக, இன்றய மருத்துவ உலகம் தவறவிடும் முக்கியமான ஒன்றை இன்நாவலில் காட்சியாக தொடர்ந்து வரும். அது, இதில் வரும் அணைத்து நோயும், நோயுற்றவர்கள் அருந்தும் உணவோடும் அவர்களின் குணதின் போக்கோடும் சேர்த்தே பார்க்கப்படும் என்பதே, அதற்கு ஏற்றாற்போல் நோய்க்கான தீர்வும் சொல்லப்படுகிறது, தீர்வு என்பதைவிட எப்பொழுதும் ஒரு ஒழுங்கை கடைப்பிடிக்க கோரும் சொல்தான் அவை, இவை அனைத்தும் உற்றுநோக்கும் நாடியினாலே அமைகின்றது. மேலும், மரணத்தை பெரும் கருணையோடு இணைபதுமட்டுமின்றி அதை அவரவர்களின் ஊழ் அல்லது அவர்களின் தீயகுணத்தோடு சம்பந்தப்படுத்தி நிறுவுகிறது.

ஜீவன்தத் தன்னை சூழ்ந்த தேவபுர மற்றும் நவகிராம மக்களுக்கு காட்டும் பெரும்கருணையே இந்நாவலின் பிம்பம், கருணை இருப்பினும் அவரிடத்தில்  ஒரு பற்றற்ற நோக்கு இருந்துகொண்டே இருக்கிறது, அது செல்வம் ஈட்டும் வேட்கையாகட்டும் (அல்லது) வாழ்வை அறியும் தன்மையாகட்டும்.. அனைத்திலும் இந்த பற்றற்ற நோக்கை காணமுடிகின்றது. மேலும் அவரிடத்தில் மரணத்தை பற்றிய கேள்வியும் அதன் போக்கை பற்றிய தேடலும் எப்பொழுதும் இருந்துகொண்டே இருக்கிறது.

நாவலின் சித்திரம் இப்படி துவங்கும், ஜீவன்தத்தின் தந்தை அவர் நண்பரான தாகூரிடம் சொல்லுவார், “எவ்வளவு தானம் வழங்குகிறேனோ அவ்வளவு அது பெருகும்” இப்படியே அந்த உரையாடல் செல்லும், முடிவில் ஜகத் பந்த் “லாபங்களுள் சிறந்தது – நோயற்ற வாழ்வே” என்பார். இதை தொடர்ந்து ஆரோக்கிய நிகேதனம் உருவாகும் சித்திரம் ஒன்று உருவாகும், அவ்ளோதான் நாவல் முழுவதும் ஜீவன்தத்தின் மூன்று தலைமுறையின் நாடி ஞான ஓட்டம் நிகழ்ந்துகொண்டே இருக்கும்.

வெளிகதை சற்று சிறியதுதான், ஜீவன்தத் மருத்துவம் படிக்கச் செலுத்தல், அத்தருணத்தில் மஞ்சரியை கவர முயலுதல், காலசுழற்சியால் மருத்துவ படிப்பை தொடரமுடியாமல் வீடு திரும்பி தந்தையின் ஆரோக்கிய நிகேதினதிலே தன்வந்தரி(ஆயுர்வேத) தொழிலை கற்றல், நோயினால் ஏற்படும் உடல் உபாதை மற்றும் அதன் தீவிரம் அனைத்தையும் நாடியின் ஓட்டத்தை கொண்டே கணித்தல். மேலும் குல நாடி ஞானதின் அறிவை கொண்டே நோயாளியின் இறுதி நாட்களையும் சரியாகவே கணித்தல்.

இதற்கிடையே மஞ்சரி, மஞ்சரியின் தாய், பூபி இவர்களின் சூழ்ச்சியால் ஜீவனை தவிர்த்து மஞ்சரி பூபியை மணக்கிறாள். அறிந்தும் அறியாமலும் ஏற்பட்ட இந்த  சூழ்ச்சியின் ஒரு வேகத்தில் ஜீவனின் தந்தை ஆத்தர்பௌவை ஜீவனுக்கு திருமணம் செய்கிறார். அதன் பின் ஜீவன் தன் வளச்சியை மஞ்சரி-பூபி முன் காண்பிக்க நினைத்தாலும் அவர்களை தன் இறுதிக்காலம் வரையிலும் சந்திகேவே இல்லை. தந்தை இறப்பிற்குப்பின் தன் ஆற்றாமையினால் ரங்காலால் டாக்டரிடம் சேர்ந்து மீண்டும் மருத்துவம் கற்க நினைத்தல், ஆனால் அதுவும் ஒருகட்டத்தில் ஒவ்வாமை தரவே, மீண்டும் குல தொழிலுக்கே திரும்புகிறார்.

ஜீவன்தத் தந்தையின் நாடி வைத்தியமுறையை நன்கு கற்று தேறி ஊர் மக்களுக்கு பெரும்பாலும் இலவசமாகவே வைத்தியம் செய்கிறார். இதன் இடையே ஜீவனின் நாடிகணிப்பு முறையில் டாக்டரான பிரத்யோத் மற்றும் பிற மருத்துவர்களுக்கும் ஒருவகையான ஒவ்வாமை ஏற்படுகிறது. இருப்பினும் ஜீவன் எவ்வித வேற்றுமை இல்லாது அனைத்தையும் ஏற்கும் நிலையில் இருந்துகொண்டே தனது சிகிச்சையை எல்லோருக்கும் செய்கிறார். ஒருகட்டத்தில் ஜீவனின் முறையை ஏற்காத  பிரத்யோத் டாக்டரின் மனைவிக்கே ஜீவன் உதவும் சூழல் ஏற்படுகிறது, அதையும் எந்தவித பற்றும், வெறுப்பு, சஞ்சலமும் இல்லாமல் ஜீவன் குணமாகிறார். அப்போது பிரத்யோத் மனைவியின் தாய் மூலம் மஞ்சரியை ஜீவன் மீண்டும் வாழ்வின் இறுதி தருணங்களில் சந்திக்கிறார், இருவருக்குமே காலசுழற்சி அவர்களின் இளமை சந்திப்பை மங்கலாக காட்டுகிறது. இந்த சந்திப்புக்குபின் மஞ்சரி இறக்கிறாள், அதற்கும் ஜீவனே உதவுகிறார். சில தினங்களுக்குப்பின் பின் ஜீவனும், உடன் ஆத்தர்பௌவும் இறக்கிறார்கள்.

ஆத்தர்பௌ ஜீவனை முழுமையாக புரிந்துகொள்ளாத மனைவியாகவே இருக்கிறாள், ஒரு கட்டத்தில் தன் நண்பர் கிஷோரிடம் திருமண செய்த்துக்கொள்ளுதல் பற்றிய சிந்தனை இவ்வாறு வரும் “மணந்து கொண்டால் ஒரு பெண்ணை அடையாளம். ஆனால் எதற்காக மணந்து கொள்கிறானோ மனிதன் அந்த லட்சியத்தை அவன் அடைய முடிவதில்லை. பெண், பிரகிருதி (இயற்கை) இந்த இரு உண்மைகளும் ஒன்றே. இரண்டே நாள் இன்பம்; மார்பில் மிதித்து ஏறித் தம் வழியே சென்று விடுகிறார்கள். சில சமயம் தம் தகப்பன் வாயாலேயே கணவனை பற்றிய நிந்தையைக் கேட்டு உயிரை விடுகிறாள்.  எப்போதாவது கணவன்மீது மாறாக் காதல் கொண்டு, திருப்தியும் அமைதியும் நிரம்பி விளங்குகிறாள். இப்படி ஒரு பாக்கியம் செய்யக் கொடுத்து வைத்தவர்களுக்கு எதுவும் தேவையில்லை. புகழ், பெயர், பாராட்சி ஏன் மோட்சம்கூட இவர்களுக்கு தேவையில்லை. இதைவிட சிறந்த பாக்கியம் ஒன்று உண்டா? ஆனால் இது யாருக்குமே கிடைப்பதில்லை!”. அதை ஜீவனும் சிலாத்திக்கிறார். இப்படி பல தருணங்களில் போகிறபோக்கில் கொட்டும் ஞானங்கள், அவற்றுள் சில தான்சந்திக்கும் நோயாளிகளின் நோயை குணப்படுத்தும்போது இவ்வாறு சொல்லிச்செல்கிறது.

– கனவுகள் நம் மனக்கண்முன் தோன்றாமல் இரா

– இந்த நாட்டில் சன்யாசிகள் சம்பிரதாயத்தார் பயிலும் சிகிச்சை முறையொன்று வழக்கில் இருந்தது

– நெருப்பு நூறு வைத்தியனுக்கு சமம்

– இனி பிழைத்து என்ன ஆகவேண்டும்? எவ்வளவோ பார்த்தாச்சு, கேட்டாச்சு, அனுபவித்து ஆச்சு, நோயால் கஷ்டப்பட்டுமாச்சு; இருப்பவர்களை பற்றி கவலைப்படவேண்டியதில்லை

– அவள் உடம்பில் எத்தனையோ விதமான வியாதி குடிகொண்டுள்ளது. அந்த எலும்பில் பட்ட அடி அதை வெளியே கிளப்பிவிட்டது

– ஆனால் விதியினால் நோய்யுற்றால், அதற்கு மருந்தே இல்லை, சிகிச்சையும் இல்லை

– தான் செய்த பாவத்தினாலேயே தன் வாழ்நாளை ஒருவன் எதிர்பாராதவிதமாக குறுக்கிக் கொள்கிறான்

– பணம் படைத்தவனுக்கு பணநோய் இருப்பது நியாயம். பிறருக்கு உதவி செய்வோர் பிறர் கையாளும் விதிமுறைகளை கவிழ்த்துவிடவும் உரிமை இருக்கிறது

– பிணிகள்தாம் மரணத்துக்கு இட்டுச்செல்லும் பெரும்பாதை

வாழ்வின் இறுதி சொற்களை ஒருவர் தம் இளமையில் உரைப்பது பெரும் பேரு, அது அவ்வளவு எளிதில் கிடைக்க பெறாது. ஏனென்றால், பெரும்வாழ்வனுபவம் பெற்ற ஒருவராலேயே அப்படிபட்ட சொற்களை உறக்கமுடியும், அப்படிப்பட்ட அனுபவத்தை ஒரு நல்ல நூலோ (அல்லது) அப்படி வாழ்ந்த மனிதருடன் அருகமைந்தோ பெறக்கூடிய ஒன்று. இந்நூலின் வழியே வாழ்வின் முதிர்ச்சியை ஒருவர் அனுபவமாக பெறமுடியும். பல்வேறு முறை தாங்கள் இந்நூலைப்பற்றி சுடுவதன்முலமே இந்நூலை நான் கற்க நேர்ந்தது, நீங்கள் செய்வது என்றென்றுக்குமான தம்மம், மிக்க நன்றி.

கார்மேகம்
பெங்களூர்

ஆரோக்கிய நிகேதனம், வனவாசி -கடிதங்கள்

தாரா சங்கர் பானர்ஜியின் ‘ஆரோக்கிய நிகேதனம்’

ஆரோக்கிய நிகேதனம் – கடிதம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 01, 2021 11:31

October 31, 2021

சந்திக்காதவர்கள்,சந்தித்தவர்கள்…

அன்புள்ள ஜெ.,

சச்சின் டெண்டுல்கரை சந்திப்பது[இன்ஃபெர்னோ]சாதாரணமனிதனுக்கு ஒரு வாழ்நாள்த் தருணம். நீங்களோ அவரை ஒரே அறையில் இருந்தபோதும் சென்றுபேசாமல் வந்ததைப்பற்றி எழுதியிருந்தீர்கள். இதுபோல வாய்ப்பிருந்தும் நீங்கள் காணத்தவறவிட்ட(தற்காக இன்றும் வருத்தப்படும்) ஆளுமைகள் யாரும் உண்டா?

அன்புடன்,

கிருஷ்ணன் சங்கரன்

***

அன்புள்ள கிருஷ்னன் சங்கரன்,

நான் தொடர்பயணி. அத்துடன் கேரள இலக்கியவாதிகள் வழியாக, மலையாள வாசகர்கள் வழியாக, தமிழ் சினிமா வழியாக பல உயர்தளங்களிலும் ஓரளவு அறிமுகம் உடையவன். ஆகவே இங்கே பேசப்படும் பெரும்பாலான  பிரபலங்களை நான் சந்தித்திருக்கிறேன். தேசிய அளவிலேயே.

உண்மையிலேயே ஆளுமைத்திறனும், பிறரை ஈர்க்கும் தனித்தன்மையும், பெருந்திறன்களும் கொண்டவர்கள் அவர்களில் சிலர். உதாரணம் முன்னாள் மத்திய அமைச்சர்களான கே.நட்வர் சிங், ஸ்ரீகாந்த் வர்மா. இருவரிடமும் மிகச்சில நிமிடங்களிலேயே வெளிப்பட்ட அபாரமான வாசிப்பும் நகைச்சுவைத்திறனும் என்னை பெருமதிப்பு கொள்ளச் செய்தன.

ஆனால் அரசியல், கிரிக்கெட் சினிமாப் பிரபலங்கள் மேல் எனக்கு பெரிய ஈடுபாடில்லை. ஒருவகை வரலாற்று ஆர்வம் உண்டே ஒழிய தனிப்பட்ட முறையில் நான் அவர்களை உள்ளம் கொள்வதில்லை. ஒருவரை அவர் புகழ்பெற்றவர் என்பதனாலேயே நான் முக்கியமானவராக எண்ணுவதில்லை.ஆகவே சென்று அவர்களிடம் அறிமுகம் செய்துகொள்வதில்லை.

சச்சினுக்கு எவ்வளவு இலக்கியம் தெரியுமோ அவ்வளவுதான் எனக்கு கிரிக்கெட் தெரியும். நான் கிரிக்கெட் மாட்சே பார்த்ததில்லை. எனக்கு அவர் ஹார்லிக்ஸ் விளம்பரத்தில் வந்து கம்மிய குரலில் பேசும் ஒரு முகம், அவ்வளவுதான்.

நான் ஓடிச்சென்று அறிமுகம் செய்துகொண்டவர்கள் சிலர் உண்டு. மகாராஜபுரம் சந்தானம், லால்குடி ஜெயராமன், டி.என்.சேஷகோபாலன், பண்டிட் ஜஸ்ராஜ், பீம்சேன் ஜோஷி போல. சந்திப்பதற்கென்றே கிளம்பிச் சென்ற ஆளுமைகள் உண்டு. அதீன் பந்தியோபாத்யாய, சிவராம காரந்த், வைக்கம் முகமது பஷீர், கேளுசரண் மகாபாத்ரா போல.

சந்தித்திருக்கலாமோ என எண்ணிய ஆளுமைகள் பல உண்டு. ஒருமுறை குந்தர் கிராஸ் எனக்கு மிக அருகே ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தார். நான் சென்று அறிமுகம் செய்துகொள்ள முடியவில்லை. ஒருமுறை கிரிராஜ் கிஷோரை அருகே சந்தித்திருக்கிறேன். அவரிடம் ஒரு வார்த்தை கூட பேச வாய்க்கவில்லை. அப்படி பல பெயர்கள்.

ஆனால் விஐபி என மக்கள் எவரை நினைக்கிறார்கள் என்பது ஆச்சரியமானது. மும்பைக்கு திரைவேலையாகச் சென்றபோது விடுதியில் என்னுடன் ஒரு நடிகை லிஃப்டில் ஏறினார். அவரை அத்தனை பேரும் அரசி போல போற்றி வணக்கம் சொல்வதைக் கண்டேன். அவரும் ஆசியளிப்பதுபோல புன்னகையும் வணக்கமும் அளித்துக்கொண்டு சென்றார். பலருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அனைவர் முகத்திலும் பக்திப்பரவசம். அவர் சென்றபிறகே ஒருவர் சொன்னார், அது சன்னி லியோன்.

அதைச் சொன்னபோது ஒரு நண்பர் பரவசமடைந்துவிட்டார். ஒரு ஹலோ கூட நான் சொல்லவில்லை என்பதற்காக என்னைப் பற்றி எண்ணி எண்ணி வருந்தினார். “ச்சே எவ்ளவு பெரிய சான்ஸ்…அவங்க யாரு தெரியுமா? சரியானவர்களுக்குச் சரியான வாய்ப்பை தெய்வம் தருவதில்லை” என்றார்.

என்னை தமிழகத்தில் மிகப்பெரும்பாலும் எவரும் அடையாளம் கண்டுகொண்டதில்லை. அரசியல்வாதிகள், அதிகாரிகள் எவரும். தமிழகத்தின் புகழ்பெற்ற விஐபிக்களில் நான் அறிமுகப்படுத்தப்படும்போது என்னை அடையாளம் கண்டுகொண்டு பேசியவர்கள் நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் மட்டுமே. மாற்றுமொழி எழுத்தாளர்களுக்கு என்னை அறிமுகம் இருப்பதில்லை. தமிழ் எழுத்தாளர்களிலேயே சில மூத்த எழுத்தாளர்கள் என் பெயரைக் கேள்விப்பட்டதே இல்லை என்று கண்டிருக்கிறேன்.

நான் என்னை பொதுவாக எழுத்தாளன் என்று சொல்லிக்கொள்வதுமில்லை. என் அலுவலகத்தில் எவருக்குமே எழுத்தாளனாக என்னை தெரியாது. அப்படியே ஓய்வும் பெற்றுவிட்டேன். உள்ளூரில் அப்படி எவருடனும் அறிமுகம் இல்லை. என்னுடன் இருபதாண்டுகளாகப் பழகிவரும் ஒரு தமிழக அரசு உயரதிகாரி சென்ற வாரம்தான் நான் எழுத்தாளன் என அவர் மகன் சொல்லி அறிந்துகொண்டார். “ஏன் சொல்லலை?” என்று கேட்டார். “சொல்லிக்கிடறதில்லை” என்று நானும் பதில் சொன்னேன்.

எழுத்து என்பது இங்கே ஓர் அந்தரங்கமான செயல்பாடு. ஆகவே எழுத்தாளன் விஐபி அல்ல. ஆகவும்கூடாது. அக்காரணத்தால்தான் நான் சினிமா ’பிரமோ’க்களை தவிர்க்கிறேன். ரஜினிகாந்துடன் சேர்ந்து ஒரு டிவி நிகழ்ச்சியில் நான் கலந்துகொண்டால் போதும், இங்கே ஒரு குட்டி விஐபி ஆகிவிடுவேன். அது எனக்குச் சுமை. வாசகர்கள் அன்றி எவரும் எழுத்தாளனை அறிந்திருக்கவேண்டியதில்லை.

நாம் விஐபி இல்லை என்றால் மற்ற விஐபிகளை அறிந்து வைத்திருக்க வேண்டிய தேவை இல்லை. அது ஓரு விடுதலை. நாம் நமக்கு உவப்பானவர்களை மட்டும் அறிந்திருந்தால் போதுமானது. அவர்களைச் சந்திப்பதற்கான எந்த வாய்ப்பையும் நாம் தவறவிட்டுவிடக் கூடாது. அச்சந்திப்புகள் நமக்குப் பெரும் செல்வம். நான் சந்தித்த ஆளுமைகளின் முகங்கள் நினைவில் எழும்போதெல்லாம் பயனுற வாழ்ந்துள்ளேன் என்னும் நிறைவை அடைகிறேன்.

அப்படிச் சென்று சந்திக்க நம் ஆணவம் தடையாக இருக்கலாகாது. நாம் பெரும்பாலானவர்களைச் சந்திப்பதற்குத் தடையாக இருப்பது நம்முடைய ‘அடக்கம்’ என சொல்லிக்கொள்வோம். ‘நாம ஒண்ணுமே இல்ல சார். எப்டி சார் போய் சந்திக்கிறது?’ என்று பலர் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அது அடக்கமோ தாழ்வுணர்ச்சியோ அல்ல, முட்டாக்கு போட்டுக்கொண்ட ஆணவம்தான். நாம் ‘ஒரு ஆளாக’ இருந்தால்தான் அவர்களைச் சந்திக்கவேண்டுமா என்ன?

ஆளுமைச்சிறப்பு கொண்டவர்களை நாம் சந்திக்கும்போது அவர்கள் நம்மையும் சந்திக்கவேண்டும் என்று நினைக்கிறோம். அவர்கள் நம்மை நினைவுகூரவேண்டும், நம்மை மதிக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறோம். அப்படி முக்கியமான ஆளுமைகள் முன் நாமும் முக்கியமானவர்களாக நிற்கவேண்டும் என்ற எண்ணமும் அதன் விளைவான தயக்கமும்தான் நம்மை பேராளுமைகளைச் சந்திக்க விடாமல் தடுக்கின்றன. நாம் கடக்கவேண்டியது அந்த அற்பத்தனத்தைத்தான்.

ஒருவர் புகழ்பெற்றவர் என்பதற்காகவே அவரை நாம் சந்திக்கலாகாது. அவர் நமக்கு எவ்வகையிலோ முக்கியமானவராக இருக்கவேண்டும். அவர் நமக்கு முன்னுதாரணமாக, நம் சிந்தனைக்கும் உணர்வுநிலைக்கும் ஆன்மிகநிலைக்கும் கொடையளித்தவராக இருக்கவேண்டும். அவரிடம் நம்மை நேர்மையாக முன்வைத்தாலே போதும். எளிமையாகவோ பெருமையாகவோ காட்டிக்கொள்ளாமல் எப்படி இருக்கிறோமோ அப்படி இருந்தால் போதும்.

அவர்கள் நம்மை அறிந்திருக்கவேண்டியதில்லை, அவர்கள் நம்மை மதிக்கவேண்டியதுமில்லை. சந்திப்பின் அனுபவக் கொள்முதல் நமக்கே. நான் சந்தித்த தமிழக இசைக்கலைஞர்கள் எவருக்குமே நான் எழுத்தாளன் என்று தெரியாது. புல்லாங்குழல் ரமணி மட்டுமே விதிவிலக்கு. அவர் ஜெயகாந்தனின் வாடாபோடா நண்பர்.நான் சி.சு.செல்லப்பாவையும் க.நா.சுவையும் சந்திக்கையில் அவர்கள் என்னை கேள்விப்பட்டதே இல்லை. அது எனக்குப் பிரச்சினையாகவும் இருக்கவில்லை.

ஓர் எழுத்தாளனை பொதுச்சூழல் அறிந்திருப்பதில் ஒரு கலாச்சாரப் பின்புலம் உள்ளது. சென்ற முப்பதாண்டுகளில் கேரளத்தை ஆட்சி செய்த எந்த முதல்வரிடமும் நான் என்னை அறிமுகம் செய்துகொள்ளத் தேவை இருக்கவில்லை. ஏனென்றால் அங்கே இலக்கியம் சமூகப் பொதுப்பண்பாட்டின் ஒரு பகுதி. அதை அவ்வண்ணம் ஆக்கியவை நாராயணகுருவின் இயக்கமும் இடதுசாரி இயக்கமும். இலக்கியம், இலக்கியவாதிகள் மீது இயல்பான மதிப்பு அச்சூழலில் உள்ளது.

தமிழகத்தில் பொதுச்சூழலில் அந்த மதிப்பை நான் கண்டதில்லை. ஏனென்றால் இங்கே சினிமா,கிரிக்கெட்,அரசியல் ஆகியவை பொதுப்பண்பாட்டின் பகுதிகள். இலக்கியத்துக்கும் பொதுப்பண்பாட்டுக்கும் சம்பந்தமே இல்லை. அத்துடன்  இலக்கியம் பற்றிய கசப்புகளையும் இளக்காரத்தையுமே தமிழகப் பொதுச்சூழல் எப்போதும் வெளிப்படுத்துகிறது. இணையச்சூழலிலேயே அதைக் காணலாம். எந்த எழுத்தாளரையும் அது விட்டுவைப்பதில்லை. கருத்துசொல்லும் எழுத்தாளன் கருத்து சொல்லாத எழுத்தாளன் எவருக்குமே விதிவிலக்கு கிடையாது.

அந்தக் காழ்ப்புக்கு அரசியலோ வேறேதோ காரணமில்லை. அப்படி பல பாவனைகளை மேற்கொண்டு தன்னுள் என்றுமுள்ள கசப்பையும் இளக்காரத்தையும் நம் சூழல் முன்வைக்கிறது அவ்வளவுதான். அந்தக் காழ்ப்புக்கு கலாச்சாரக் காரணங்கள் உள்ளன. அவை ஒரு சில தலைமுறைகளில் மறைவன அல்ல. ஆகவே இங்கே எழுத்தாளன் முகம்தெரியாதவனாக இருப்பதே நல்லது.

இன்றும் நான் விரும்பும் ஆளுமைகளை அடையாளமில்லாதவனாக இயல்பாகச் சென்று சந்திக்கவே விரும்புகிறேன். அப்படிப் பலரைச் சந்தித்ததுண்டு. சந்திக்க எண்ணி விடுபட்டுப் போனவர்களின் பட்டியல் மிக நீளம். மிகச்சமீபத்தைய உதாரணம், சார்வாகன்.

ஜெ

எழுத்தாளரைச் சந்திப்பது… உரையாடுதல் எழுத்தாளரைச் சந்திக்கையில்…
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 31, 2021 11:34

பகலா அந்தியா அழகி?

ஆர்.கே.சேகர்

ஏ.ஆர்.ரஹ்மானின் அப்பா ஆர்.கே.சேகர் மலையாளத்தில் இன்றும் இனிய நினைவுகளாக நீடிப்பவர். அரிய பல மென்மெட்டுக்கள் எப்போதுமே இசையுரையாடல்களில் எழுந்து வந்துகொண்டிருக்கின்றன. பின்னாளில் அவர் இசையொழுங்கு செய்வதில் தீவிரமாக ஈடுபட்டார். அவரே இசையமைப்பது குறைந்தது. அவர் உடல்நலம் ஓயாத உழைப்பால் அழிந்தது என்பார்கள்.

சேகரின் இந்தப் பாடல் அனேகமாக எல்லா குடிக்களியாட்டுகளிலும் ஏதோ ஒரு மல்லுப்பையனால் பாடப்படுகிறது. முக்கியமாக இது தாளமோ, பின்னணி இசையோ இல்லாமல் பாட ஏற்றது. ஹம்மிங் செவிக்கினியது. அத்துடன் எவரோ ஒரு பெண்ணைப் பற்றி ஒருவர் பாட அவரவர் பெண்ணைப்பற்றி அவரவர் நினைக்க இரவு மிக அழகானதாக ஆகிவிடுகிறது.

உஷஸோ சந்த்யயோ சுந்தரி?

ஓமனே நீ உணரும்போழோ உறங்கும்போழோ சுந்தரி?

பனிநீர் பூவோ பவிழாதரமோ

பரிமளம் ஆத்யம் கவர்ந்நெடுத்து?

அம்பர முகிலோ அம்பிளி குடமோ

நின் கவிளோ ஆத்யம் துடுத்து?

சந்தன முளயோ சந்திரிக தெளியோ

தென்னலோ மெய்யினு குளிரேகி?

வெண்ணநெய் அமிர்தோ கண்ணன்றே விருதோ

நின் உடல் ஈ விதம் மிருதுவாக்கி?

1971ல் வெளிவந்த சுமங்கலி என்னும் படத்தில் இடம்பெற்ற பாடல். சரியாக அரைநூற்றாண்டுக்கு முன்பு

ஆர்.கே.சேகர்

ஸ்ரீகுமாரன் தம்பி, ஏசுதாஸ்

[தமிழில்]

காலையா அந்தியா அழகி?

இனியவளே நீ விழிக்கும்போதா உறங்கும்போதா அழகி?

ரோஜாமலரா பவள உதடுகளா

முதலில் நறுமணம் கொண்டன?

வான்முகிலா நிலவுக்குடமா

உன் கன்னமா முதலில் ஒளிகொண்டது?

சந்தனக்குருத்தா சந்திரனின் தெளிந்த ஒளியா

தென்றலா உன் மெய்யை குளிருள்ளதாக்கியது?

வெண்ணையின் அமுதா கண்ணனின் கையா

உன் உடலை இத்தனை மென்மையாக்கியது?

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 31, 2021 11:34

தலைகீழ் விகிதங்கள் வாசிப்பு- உஷாதீபன்

1977 ல் இந்நாவல் வெளிவந்திருக்கிறது. 44 வருடங்கள் ஓடிவிட்டன. அதாவது நாஞ்சில் நாடன் அவர்கள் அவரது.28-30 வயதிற்குட்பட்ட காலத்தில் இந்நாவலை எழுதியிருக்க வேண்டும் என்றாகிறது. அந்த வயதிலேயே எப்படியொரு எழுத்து அவருக்குக் கைவந்திருக்கிறது என்று பிரமிக்கிறது நம் மனம்.

எழுபது எண்பதுகளில் மிகத் தரமான சிறுகதைகள், நாவல்கள், கவிதைத் தொகுப்புகளைக் கொண்டு வந்த மதிப்புமிக்க பதிப்பகம் சிவகங்கை அன்னம் பதிப்பகம் தான். கவிஞர் மீரா அவர்கள் திறமையான எழுத்தாளர்களை அடையாளம் கண்டு இதைச் செய்தார். இந்நாவல் அன்னம் மீரா வெளியீடு.

மதுரை சென்ட்ரல் சினிமா பின்பக்க சந்து போன்ற குறுகிய கல் பதித்த தெருவில் ஒரு வீட்டு மாடியில்தான் அன்னம் புத்தக விற்பனை நிலையம் இருந்தது. (இந்த சந்தில்தான் விஜயகாந்த் வீடும்) பார்க்கப் பார்க்க அத்தனை புத்தகங்களையும் வாங்கிவிட மாட்டோமா என்று மனம் ஏங்கும்.

தனது முப்பது வயதுக்குட்பட்ட காலத்தில் நாஞ்சிலார் எத்தனை இறுக்கமான, கட்டுக் கோப்பான நாவலைக் கொடுத்திருக்கிறார்? உரையாடல்கள், பேச்சு மொழி, இயல்பாக நகரும் கதைச் சம்பவங்கள், அன்றைய காலகட்டத்திலான பொருத்தமான மனநிலை, ஊர் உலகங்களின் எதிர்பார்ப்பு, நடப்பு என நாவல் நிதானமாக, அதே சமயம் அழுத்தமாகப் பயணிக்கிறது.

பாதி படித்து மூடி வைக்கத் தோன்றாமல் தொடர்ந்து படிக்கச் செய்கிறது. சுய கௌரவம் மிகுந்த, பொறுப்பான சிந்தனையுள்ள, நல்ல கதாபாத்திரமாக வளைய வரும் சிவதாணு-சார்பாகத்தான் நம் இரக்கம் படிகிறது. நடப்பியல் அவனை எப்படியெல்லாம் அலைக்கழித்து விடுகிறது என்பதை அழுத்தமாகச் சொல்லியிருக்கும் நாஞ்சிலாரின்-முதிர்ந்த எழுத்து நம்மை வியக்க வைக்கிறது.

மதிப்புறச் செய்து, அடுத்தடுத்து அவரது புத்தகங்களைத் தேட வைக்கிறது. ஒரு ரௌன்ட் முடித்து விடு என்று விரட்டுகிறது..

கையில் காசில்லாமல் கஷ்டப்பட்டிருக்கிறீர்களா? சோற்றுக்கு வழியில்லாமல் அலைந்திருக்கிறீர்களா? கடன் வாங்க அஞ்சியிருக்கிறீர்களா? கடன் வாங்கப் போய் கேவலப்பட்டிருக்கிறீர்களா? திருப்பிக் கொடுக்க முடியாமல் தவித்திருக்கிறீர்களா? கடன் கொடுத்தவரை எதிர்கொண்டிருக்கிறீர்களா? அவரது ஏசலை வாங்கியிருக்கிறீர்களா?

வேலை கிடைக்கவில்லையே என்று வெட்டியாய் அலைந்திருக்கிறீர்களா? அதற்காக வேதனைப் பட்டிருக்கிறீர்களா? குடும்பத்துக்கு உபயோகமில்லாமல் தண்டச் சோறாக இருக்கிறோமே என்று புழுங்கியிருக்கிறீர்களா? அதை வெளியில் சொல்லவும் முடியாமல், வெளிப்படையாய் அழவும் முடியாமல் மனதுக்குள்ளேயே போட்டு அமுக்கி, குமைந்திருக்கிறீர்களா? அதனால் உண்டாகும் கோபத்தை அர்த்தம் பொருத்தமில்லாமல் வீட்டில் காண்பித்து, அமைதியைக் குலைத்து, சண்டையிட்டு, பாத்திரத்தை விட்டெறிந்து, விருட்டென்று வெளியேறி,சாப்பிடாமல் படுத்து, தாய் தந்தையரை வேதனைப் படுத்தி, தன் நிம்மதியையும் குலைத்துக் கொண்டு-இந்த மாதிரி அனுபவங்களெல்லாம் ஏற்பட்டிருக்கிறதா? தனிமையை நாடி, அமைதியை நாடி எங்கோ தனித்துப் போய் இருந்து, நேரத்துக்கு வீடு திரும்பாமல் எங்கே போனானோ என்று பதறியடித்து மனம் வேதனைப்படும் பெற்றோர்களை எதிர்நோக்கியிருக்கிறீர்களா?

இந்தத் துன்பங்களுக்கெல்லாம் என்றுதான் தீர்வு என்று தனக்கு ஒரு வேலை கிடைத்து, சம்பாதித்து, தங்கைகள் திருமணத்திற்கும், தன் குடும்பத்திற்கும் உபயோகமாய் என்று இருக்கப்போகிறோம் என்று நடைபிணமாய் நாட்களை நகர்த்திய அனுபவம் உங்களுக்கு ஏற்பட்டிருக்கிறதா?

சோற்றுக்கே வழியில்லை…இதிலென்ன கோயில் வேண்டிக்கிடக்கிறது, என்ன சினிமா வேண்டிக் கிடக்கிறது? தான் இருப்பதற்கு, தன் இருப்பிற்கு ஏதேனும் அர்த்தம் வேண்டாமா? – என்று பார்ப்பதிலெல்லாம் ஒரு வெறுப்பு தோன்ற, இந்த உலகமே நரகமாகி விட்டதாய், தனக்கு எதிராக எல்லாமே இயங்குவதாய்…மனம் நொந்து, தன் குடும்பத்திற்கு தான் இப்படி ஒரு பாரமாகி நிற்கிறோமே என்று உங்களுக்குள்ளேயே அழுதிருக்கிறீர்களா?

தெருவையும், ஊரையும், வெட்டியாய் சுற்றி வருகையில், ஊர்க்காரர்கள், கண்ணில் படுவதும், அவர்களின் கேலிப் பேச்சும், மறைமுகக் கிண்டலும், வெறும்பய…இவனோடு என்ன பேச்சு வேண்டிக் கிடக்கிறது என்று விலகிப் போகுதலும், இவற்றிலிருந்தெல்லாம் என்று விடுதலை என்று திக்கு தெரியாமல் கலங்கிய நிலை ஏற்பட்டிருக்கிறதா?

வெட்டிப் பயலுக்கு என்ன கல்யாணச் சாப்பாடு என்று உட்கார்ந்த இலையிலிருந்து எழுப்பி விடப் பட்டிருக்கிறீர்களா? பந்திக்குப் பொருத்தமில்லாத கசங்கிய உடையோடு, கலைந்த தலையோடு இருந்து…தம்பி…கொஞ்சம் எழுந்திரிப்பா…என்று எழ வைத்து விலக்கி விட்டு, அங்கே ஒரு முக்கியஸ்தரை அமர்த்தி, பிறகு அந்தக் கேவலம் நினைத்து, அப்படியேனும் வயிற்றை நிரப்பித்தான் ஆக வேண்டுமா என்று சாப்பிடாமல் வந்த அனுபவம் உண்டா?

இப்படி எண்ணற்ற வேதனைகளை அனுபவிக்கிறான் இந்தக் கதையின் நாயகன் சிவதாணு. அவன்பால் நம் மனம் ஒன்றிப் போய் இவனுக்கு எப்படியாவது ஒரு நல்லது செய்துவிட வேண்டும் என்றும், இவனை ஒரு நல்ல இடத்தில் உட்கார்த்தி அழகு பார்க்க வேண்டும் என்றும், இத்தனை பொறுப்புள்ள சிந்தனை உடைய ஒருவனுக்கு ஒரு நல்ல அடையாளத்தைக் காண்பித்தால் மேலேறி வந்து விடுவானே என்றும் நம் மனம் நாயகனின் தள்ளாடும் வாழ்க்கை மீது அனுதாபம் கொள்கிறது.

நாம் வைக்கும் குறி-ஒரு செல்வந்தரின் கண்ணுக்குப்பட, நம் வியாபாரத்திற்கு, அதனைப் பொறுப்பாய்ப் பார்த்துக் கொள்வதற்கு, அதனை முன்னேற்றுவதற்கு, அடங்கிய பிள்ளையாய் இவன் இருப்பான் என்று முடிவு செய்து  கண்ணி வைத்துப் பிடித்து விடுகிறார் நாயகியின் தந்தை.

சிவதாணு பார்வதியைக் கைப்பற்றுவதும், திருமண பந்தத்திற்கு ஆட்படுவதும், அதன் பிறகும் அவனது சுய கௌரவம் கூடவே அவனுடன் விடாது பயணித்து, கௌரவத்தை விட்டுக் கொடுக்காத நிலையில் அவன் செயல்பாடுகள் தொடர்வதும்…..அதனால் ஏற்படும் மனப்புழுக்கமும், மனைவியுடன் ஏற்படும் பிணக்கும், மாமனாருடன் ஏற்படும் சண்டையும் சச்சரவும்…என நாவல் முழுவதும் சிவதாணு வியாபித்து நம் நெஞ்சை நிறைத்துக் கொள்கிறான்.

திருமணமான ஒரு இருபத்து மூன்று வயது இளைஞனின் மன அவசங்களை இதில் பிரதானப்படுத்தியிருக்கிறேன். அவன் உணர்ச்சிகளை முழுமையாகக் கொண்டுவர முயன்றிருக்கிறேன். அதில் நான் வென்றாலும் தோற்றாலும், அது முடிந்து போன கதை  என்கிறார் நாஞ்சில் நாடன்.

அவர் தனது முதல் நாவலிலேயே வெற்றி பெற்று விட்டார் என்று அழுத்தமாய்ச் சொல்லத் தோன்றுகிறது நமக்கு.

உஷா தீபன்

தலைகீழ்விகிதங்கள் வாங்க

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 31, 2021 11:33

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.