Jeyamohan's Blog, page 892
October 27, 2021
அஜ்மீர் கடிதங்கள்-4
வணக்கம் ஆசிரியரே,
தங்களின் அஜ்மீர் பயணம் குறித்த கட்டுரைகளை தளத்தில் கண்டேன். பரீட்சைகள் அதிகம் இருந்ததால் இன்னும் அவற்றை வாசிக்கவில்லை. உங்கள் தளத்தில் இருந்த சில கவ்வாலிகளையும், நேற்று ஹஸ்ரத் அமீர் குஸ்ரோ இயற்றிய பஹாஹுதின் கான் அவர்கள் குரலில் கவ்வாலி ஒன்றையும் கேட்டேன்.
பழைய பாடல்களை பொதுவாக தவிர்த்து விடும் எனக்கு, கவ்வாலிகளில் உள்ள எளிமை, நிலத்தை மறந்து வானை நோக்கி செல்பவர் பாடுவது போல் தோன்றும் பிம்பம் என என்னை மிகவும் சாந்தப்படுத்துகின்றன. பாடலின் மொழிபெயர்ப்பும் கூடுதல் அருள்..
கண்ணீர் பெருக்கி கப்பலிட்டு அதில் ஏறி வருவேன் க்வாஜா..!!
இந்த ஒரு தமிழ் சூஃபி பாடல் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று.
க்வாஜா என்றாலே இந்த பாடல்தான் எனக்குள் ஒடத்துவங்கும். நீங்கள் அஜ்மீரில் இருப்பதால் இவற்றை உங்களுக்கு பகிர தோன்றியது.
நானே இப்போதுதான் சூஃபி மரபு பக்கம் திரும்பிகொண்டிருக்கிறேன். அஜ்மீர் தர்காவிலிருந்து என் பாப்பத்தா(தாத்தா)விற்கு வரும் கடிதங்களை எல்லாம் கேலிசெய்திருக்கிறேன்.அவர் மவுத் ஆன பின்பு என் வீட்டில் யாரும் தர்காவை ஆன்மிக நோக்கில் சென்று பார்ப்பதே இல்லை. ஆனால் சில வருடங்களுக்கு ஒரு முறையேனும் நாகூர் செல்லும் வழக்கம் உண்டு, அதுவும் கடைகளை சுற்றிப்பார்ப்பதோடுதான். சில குடும்பங்களில் அந்த பக்கம் கூட செல்வது இல்லை. வேறென்ன காரணம் இருக்கும்…
இப்போது எனக்கு இருக்கும் ஆன்மிக சாய்வு மற்றும் மரபு மீதான அணுக்கம், அங்கே புனித பயணமாக ஒருநாள் தனித்து செல்ல வேண்டும் என எண்ண வைக்கிறது. இந்த பயணம் தங்களுக்கு மேலும் ஒளியூட்ட என் மனமார்ந்த பிரார்த்தனைகள்…
அன்புடன் ஸலாம்களுடன்,
சஃபீர் ஜாஸிம்
***
அன்புள்ள ஜெ
குவாஜா மொய்னுதீஷ் சிஷ்டி பாடல்களையும் கூடவே சூஃபி இசையையும் கேட்பது பித்துப்பிடிக்கச் செய்யும் அனுபவமாக அமைந்தது. எங்கெங்கோ கொண்டுசென்றது. பித்து இல்லாமல் நம்மால் இறையனுபவத்தை அடையமுடியாது. பித்து என்பது நாம் இருக்கும் அன்றாட உலகில் இருந்து வெளியே செல்வது. இங்கே அன்றாடத்தில் நின்றபடி நம்மால் இறையனுபவத்தை உணர முடியாது. இங்கே நாம் நம் கவலைகள் குழப்பங்கள் பயங்களுடன் இருக்கிறோம். இறைவனிடம் பேரம் பேசுகிறோம். அல்லது கணக்கு சொல்லுகிறோம். அல்லது பிச்சையெடுக்கிறோம்.
இறைவனிடம் கையெந்துங்கள் அவன் இல்லை என்று சொல்லுவதில்லை என்பது அபாரமான பாடல். ஆனால் அது உலகியல்பக்தி. இறைவனிடம் கையேந்தாமல் நிறைந்த நிலையில் யா அல்லாஹ் என அழைப்பவனிடமே அல்லாவின் பேரரருளும் பெருங்காட்சியும் வந்து சேர்கின்றன. அவன் தன்னைத்தானே தூய்மைப்படுத்திக்கொண்டு ஒரு பளிங்கு உருண்டை போல ஆகிவிடுவான் என்றால் நிலவின் ஒளிபோல அவனை அல்லாஹின் அருள் தீண்டும்.அவன் சுடர்விடுவான்
சிஷ்டி அவர்களின் கவிதைகளில் இரண்டு படிமங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. ஆடி, நிலவு. நிலவு தூய்மையான ஆடியில் பிரதிபலிப்பதே இறையனுபவம்
சிராஜ்
குவாஜா மொய்னுதீன் சிஷ்டி பாடல்கள்-6 குவாஜா மொய்னுதீன் சிஷ்டி பாடல்கள்-5 குவாஜா மொய்னுதீன் சிஷ்டி பாடல்கள்-4 குவாஜா மொய்னுதீன் சிஷ்டி பாடல்கள்-3 குவாஜா மொய்னுதீன் சிஷ்டி பாடல்கள் -2 குவாஜா மொய்னுதீன் சிஷ்டி பாடல்கள்தீபாவளிக்கு நூற்பின் ஆடைகள்
மதிப்பிற்குரிய ஆசான் ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்.
நூற்பின் ஆறாம் ஆண்டில் தீபாவளிக்கான ஆடைகளை நண்பர்களுக்கு கைத்தறியில் நெய்து கொடுப்பதிலும் இந்த செய்தியை உங்களுக்கு தெரிவிப்பதிலும் மகிழ்வாக உணருகிறேன். தொடர்ச்சியாக ஒரே பாதையில் தீர்க்கமாக பயணிப்பதன் விளைவை உள்வாங்கிக்கொண்டு மீண்டும் நம்பிக்கையோடு பயணப்பட்டுக் கொண்டிருக்கிறேன். நிறைய மனிதர்கள், நிறைய இடங்கள், நிறைய அனுபவங்கள், உங்களது எழுத்துக்கள் என அனைத்தும் ஒன்று சேர்ந்து என்னை புடம்போட்டுக் கொண்டிருக்கிறது.
அன்றாடங்களையும் அதனை கடந்த உள்ளார்ந்த தீவிரத்தையும் தன்னறத்தோடு செய்கின்ற செயல் ஒன்றே நகர்த்துகிறது. செயல்படுதல் மட்டுமே ஒவ்வொரு கட்டத்தையும் மீட்டெடுக்கிறது. இந்த ஐந்தாண்டு செயல்படுதலில் கண்டடைந்தது, திருச்சிக்கு அருகே உள்ள முசிறி மற்றும் அதன் சுற்று வட்ட பகுதியில் இருக்கும் கைத்தறி நெசவாளர்களின் வாழ்வை. இன்றும் நிறைய ஆசார விதிகளை கடைபிடிக்கின்றனர். அவ்வளவு உண்மையாக இருக்கின்றனர். ஏழ்மை அகத்தில் அண்டாது காத்து வருகின்றனர். இவர்களுக்கு நன்கு தெரிந்த ஒரே தொழில் கைத்தறி நெசவும் விவசாயமும் மற்றும் அது சார்ந்த உப தொழில்களும்.
கடந்த இரண்டு ஆண்டுகள் இவர்களது வாழ்வு நிறைய மாற்றங்களை உள்வாங்கிக்கொண்டு வருகிறது. நிறைய மக்கள் கைத்தறி நெசவை விட்டு வெளியேறி கொண்டிருக்கின்றனர். மிகவும் சொற்ப அளவிலே ஒரு சிலர் கைத்தறியினை கையில் வைத்திருக்கின்றனர். அதில் ஆறு குடும்பங்களை ஒருங்கிணைத்து , அவர்கள் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேல் நூற்ப்பிற்கு நெய்கின்றனர். அதில் ஒருவர் பாலசுப்பிரமணி. டிப்ளமோ ஆட்டோமொபைல் முடித்தவர். அந்த துறை நிறைவளிக்காத சூழலில் நெசவையே தொடருகிறார்.
பாலுவின் உறவு முறைகளில் ஒருவரும் அவருடன் சேர்ந்து ஐந்து குடும்பங்களும் கடந்த ஒன்னறை ஆண்டுகளில் நெய்த வேட்டிகள் அதிக அளவில் தேக்கமாக உள்ளது. கொரோனா நோய் தொற்று என்பதால் வியாபாரம் சரியாக நடக்காத சூழலில் அவர்களுக்கு வேலை கொடுத்தவர்கள் யாரும் மீண்டும் நெய்த வேட்டிகளை எடுக்க வரவில்லை. அதற்கான கூலியையும் கொடுக்கவில்லை.
என்னால் முடிந்த அளவிற்கான வேட்டிகளை பெற்றுக்கொள்கிறேன் என்று சொல்லியிருக்கிறேன். இந்த காலகட்டத்தை அவர்கள் கடந்துவிட்டால் அடுத்து ஒன்று முதல் இரண்டு ஆண்டுகள் அவர்கள் குடும்பத்தையும் பார்த்துக்கொண்டு கைத்தறியிலும் தொடர்வதற்கு வாய்ப்பு கிடைக்கும். இந்த தருணத்தில் அவர்களுக்கு பெரும் மன சக்தியும் பொருளுதவியும் தேவையாக இருக்கிறது.
இந்த தீபாவளி பண்டிகைக்கு நண்பர்களில் ஒருவர் ஒரு வேட்டியை பெற்றுக்கொண்டாலே அடுத்த ஓராண்டிற்கான வாழ்வை நகர்த்துவதற்கும் மீண்டும் கைத்தறியில் தொடர்ந்து வேலை செய்வதற்கும் பெரும் உதவியாக இருக்கும்.
வாழ்வின் என்றென்றைக்குமான நன்றியும்… பிரார்த்தனைகளும்…
சிவகுருநாதன்.சி,
9578620207
www.nurpu.inஇல்லம்தேடி கல்வி- கடிதங்கள்
இல்லம்தேடி கல்வி- ஒரு மாபெரும் வாய்ப்புஅன்புள்ள ஜெ
இல்லம் தோறும் கல்வி திட்டம் பற்றி உங்கள் இணையதளத்தில் முதலில் வாசித்ததும் மிக அருமையான திட்டம், அரசு கண்ணில் படவேண்டும் என நினைத்தேன். தகுதியானவர்களின் கவனத்துக்குச் சென்று அது நடைமுறையாகியதும்கூட இது குழந்தைகளுக்கு மிக உதவியான திட்டம் என்னும் நிறைவு உருவானது. ஆனால் அதில் கற்பிப்பவர்களுக்கு இப்படி ஒரு மாபெரும் கல்வி வாய்ப்பு இருப்பதை கவனிக்கவில்லை. அதை நீங்கள் எழுதியதும்தான் கவனித்தேன்
இன்றைய கல்வியில் நடைமுறைப்பயிற்சி மிக முக்கியமானது. கிராமியத்தொடர்பு நிகழ்ச்சி என்றபெரில் பெரும் பொருட்செலவில் இதைச் செய்துகொண்டிருக்கிறோம். இந்தத்திட்டம் அரசு செலவிலேயே மாணவர்கள் மிகச்சிறந்த கிராமியத் தொடர்புத்திட்டத்தை பயில வாய்ப்பு. மிகமுக்கியமான சுட்டிக்காட்டல். நன்றி
தெய்வநாயகம்
***
அன்புள்ள எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம்
இல்லம் தேடி கல்வி திட்டம் ‘ஐந்து மாணவர் ஓர் ஆசிரியர்’ என்கிற உங்களுடைய மிகச்சிறந்த ஒரு கல்விமுறை வழிகாட்டுதல்களை வழங்கியிருந்தீர்கள். இம்முறையை சாத்தியப்படுத்தினால் நிச்சயம் நாம், பின்தங்கிய ஆரம்ப கல்வி மாணவர்களின் திறனை மேம்படுத்திவிடலாம் என உறுதிபட நம்புகிறேன். இவ்விடத்தில் ஜெயமோகன் அவர்களுக்கு என் அன்பு வாழ்த்துகளை நம்பிக்கையோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
“ஐந்து மாணவர் ஓர் ஆசிரியர் ” – என்கிற எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் வரிகள் தமிழக அரசு கவணிக்கும் என நாங்கள் நம்புகிறோம் .
அன்புடன்
ப.கலைச்செல்வன்
***
அன்பின் ஜெ,
வீட்டிற்கு வடக்கே, நூற்றி ஐம்பது மீட்டர் தொலைவில் இருக்கும் பால்வாடி எனப்படும் அங்கன்வாடியிலும், வீட்டிற்கு தெற்கே முன்னூறு மீட்டரில் இருக்கும், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும் படித்து வளர்ந்தவன்.
பேக் பைப்பர் விளம்பரத்தில் , குழலூதுபவரின் ஆணைக்கு மயங்கி பின் செல்லும் குழந்தைகளை போல, அங்கன்வாடியில் அடியெடுத்து வைத்ததும், ஆயாம்மா கொடுக்கப் போகும் அரை ரவா உருண்டைக்காக, அவரின் பின்னே, தலைச்சங்காடு கிராமத்தின்எல்லா தெருக்களிலும் பூந்து புறப்பட்டு, வீட்டின் இண்டு இடுக்குகளில் எல்லாம் ஒளிந்திருக்கும் பசங்களை இழுத்து சேர்த்துக் கொண்டு வருவோம்.
”எதையாவது எடுத்து வச்சி படிடா...” என்ற வார்த்தைகள் அனேகமாக கிராமத்தின் எல்லா வீடுகளிலும் கேட்டுக்கொண்டே இருக்கும்.,
இதில் நண்பர்கள், அவர்களின் மகன்களும் மகள்களும் தன்னார்வலர்களாகச் சற்றேனும் பங்குபெறவேண்டுமென விரும்புகிறேன்
படிக்கையில், உங்களின் ஆணையெனவே மனதில் தோன்றியது. தன்னார்வலராக பதிவு செய்துவிட்டேன்.
நட்புடன்,
யோகேஸ்வரன் ராமநாதன்.
***
பழந்தமிழகத்தில் இந்து தெய்வங்கள்
பா.இந்துவன் எழுதிய இந்தப்பதிவை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவருகிறேன். உங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன்
ஆனந்த்
தமிழகத்தில் இந்து தெய்வங்கள்.
பா இந்துவன்
சமணமும் பௌத்தமும் அதனதன் நிலப்பரப்பில் உருபெறுவதற்கு முன்பே தமிழக நிலப்பரப்பில் திருமால் வழிபாடு, முருகன் வழிபாடு, இந்திர வழிபாடு, வருண வழிபாடு, கொற்றவை வழிபாடு முதலான வழிபாடுகள் இருந்ததற்கு சான்றாக இன்றிலிருந்து 2700 ஆண்டுகளுக்கு முன்னதாக எழுதப்பட்டதாக பெரும்பான்மையான அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்படும் தொல்காப்பியத்தில்,
“மாயோன் மேய காடுறை யுலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச் சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே”
– தொல்காப்பியம்.
என்ற வரிகளை மேற்கோளிடலாம். அன்றைய தமிழகத்தின் தென்பகுதியில் பொ.மு மூன்றாம் நூற்றாண்டுவாக்கில் குடிமல்லம் சிவன்கோவில், சாளுவன்குப்பம் முருகன்கோவில் முதலான தொல்லியல் துறையினரால் நிரூபணம் செய்யப்பட்ட கோவில்கள் இருந்ததோடு இதே காலகட்டத்தில் சிவன், முருகன், திருமால், பலராமன் போன்ற நாற்பெரும் தெய்வங்களின் வழிபாடு பரவலாக இருந்தது என்பதற்கு சான்றாக புறநானூற்றில் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் எழுதிய பாடலை மேற்கோளிடலாம்…!
“ஏற்றுவலன் உயரிய எரிமருள் அவிர்சடை மாற்றருங் கணிச்சி மணிமிடற் றோனும், கடல்வளர் புரிவளை புரையும் மேனி அடல்வெந் நாஞ்சில் பனைக்கொடி யோனும்,
மண்ணுறு திருமணி புரையும் மேனி
விண்ணுயர் புள்கொடி விறல்வெய் யோனும் மணிமயில் உயரிய மாறா வென்றிப் பிணிமுக ஊர்தி ஒண்செய் யோனும்என ஞாலம் காக்கும் கால முன்பின் தோலா நல்இசை நால்வர் உள்ளும் கூற்றுஒத் தீயே மாற்றருஞ் சீற்றம்; வலிஒத் தீயே வாலி யோனைப்; புகழ்ஒத் தீயே இகழுநர் அடுநனை; முருகுஒத் தீயே முன்னியது முடித்தலின்”
– புறநானூறு.
பொருள் : காளைக்கொடியை வெற்றியின் அடையாளமாக உயர்த்திப் பிடித்து, நெருப்புப் போல் ஒளிவிடும் சடையோடும், ஒப்பற்ற கணிச்சி என்னும் ஆயுதத்தோடும், நீலநிறக் கழுத்தோடும் காட்சி அளிப்பவன் சிவபெருமான். கடலில் வளரும் முறுக்கிய சங்கு போன்ற வெண்ணிற மேனியும், கொல்லுதலை விரும்பும் கலப்பையும், பனைக்கொடியும் உடையவன் பலராமன். கழுவப்பட்ட அழகிய நீலமணி போன்ற உடலும், வானளாவ உயர்ந்த கருடக் கொடியும் கொண்டு வெற்றியை விரும்புபவன் திருமால். நீலமணி போன்ற நிறத்தையுடைய மயிற்கொடியும், உறுதியான வெற்றியும், மயிலை ஊர்தியாகவும் (வாகனமாகவும்) கொண்ட ஓளிபொருந்தியவன் முருகன்.
இந்நான்கு கடவுளரும் உலகம் காக்கும் வலிமையும் அழியாத புகழும் உடையவர்கள். இந்த நால்வருள்ளும், உன்னுடைய நீங்காத சினத்தால் நீ அழிக்கும் கடவுளாகிய சிவனுக்கு ஒப்பானவன்; வலிமையில் பலராமனுக்கு ஒப்பானவன்; புகழில் பகைவரைக் கொல்லும் திருமாலுக்கு ஒப்பானவன்; நினைப்பதை முடிப்பதில் முருகனுக்கு ஒப்பானவன்.
இவ்வாறு ஆங்காங்கு அந்த அந்தக் கடவுளை ஒத்தவனாக இருப்பதால், உன்னால் செய்ய முடியாத செயலும் உண்டோ? என்று பாண்டியனைப் பார்த்து மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் கேட்பதாக அமைகிறது இந்த பாடல். இது பொ.மு மூன்றாம் நூற்றாண்டுப் பாடல்…!
வரலாறு இவ்வாறு இருக்க இவர்கள் எதன் அடிப்படையில் சைவமும் வைணவமும் நிலைபெறுவதற்கு முன்பே இங்கு சமணமும் பௌத்தமும் செழித்திருந்தது என்கிறார்கள்?
***
அன்புள்ள ஆனந்த்,
தமிழிலக்கியத்திலோ வரலாற்றிலோ அடிப்படையான வாசிப்பும் நேர்மையும் கொண்டவர்கள் எவரும் பௌத்தத்திற்கு முன்பு தமிழகத்தில் திருமால், இந்திரன், முருகன் வழிபாடுகள் இருந்ததில்லை என்னும் அபத்தத்தைச் சொல்ல மாட்டார்கள். தமிழில் இலக்கியம் எப்போது கிடைக்கிறதோ அப்போதே மகாபாரதம், ராமாயணம் பற்றிய குறிப்புகள் பாடல்களில் கிடைக்கின்றன. தமிழகத்தின் ஐந்திணையின் தெய்வங்கள் எல்லாமே இந்து தெய்வங்கள்தான்.
அறிவுடையோர் அந்த ஏராளமான தரவுகளை மறுக்கப்போவதில்லை. மேடையில் வாய்நுரை தள்ளும் அறிவிலிகள் கூச்சலிடலாம். பாமரர் கைதட்டலாம். நேர்மையை அரசியலுக்கு அடகுவைத்துவிட்டால் மாயோன் என்றால் மாமரத்தில் காய்த்தவன் என்றும் முருகு என்றால் முருக்கு மரத்து பூ என்றும் திரிபிலக்கிய ஆய்வுகள் செய்யலாம். அதுவும் இங்கே நிகழ்கிறது.
இத்தனை மூர்க்கமாக, இத்தனை ஆதாரமில்லாமல் இந்த தொடர்பிரச்சாரம் ஏன் நிகழ்கிறது? இது வெறும் அரசியலுக்காக என நம்பவேண்டுமென்றால் மழலையின் மனம் வேண்டும். இது அப்பட்டமாகவே மதமாற்ற நோக்கம் கொண்ட செயல்பாடு. பெரும்பணம் செலவிடப்படும் ஒரு கருத்துத்தள ஊழல். இவர்கள் எளிய கூலிப்படைகள்.
ஜெ
October 26, 2021
புதுவை வெண்முரசு கூடுகை
புதுவை வெண்முரசுக் கூடுகை 43 அக்டோபர் 30 அன்று புதுவையில் நிகழ்கிறது. இம்முறை பிரயாகை பேசப்படுகிறது. விஷ்ணுகுமார் பிரயாகை பற்றி பேசுகிறார்.
சென்னையில் பேசுகிறேன்
கவிஞர் இளங்கோ கிருஷ்ணனின் வியனுலகு வதியும் பெருமலர் நூலின் வெளியீட்டு விழா வரும் அக்டோபர் 31 அன்று சென்னையில் நிகழ்கிறது. நான் கலந்துகொண்டு உரையாற்றுகிறேன்
உயிர்மை ஒரு வினா
அன்புள்ள ஜெயமோகன்,
வணக்கம்.
நீங்கள்
உயிர்மையின் 200வது இதழில் எழுதியிருப்பதாக அறிந்தேன். என்னைப்போன்ற உங்களை முழுமையாக நேசிக்கும் வாசகர்களுக்கு சங்கடமளிக்கும் செய்தி என்று நினைக்கிறேன் . அவர் உங்கள்மேல் வைத்தது இலக்கிய விமர்சனத்தைத் தாண்டி முழுமையாகவே அவதூறுதான் நீங்கள் ஓர் இஸ்லாமிய வெறுப்பாளி. முஸ்லிம்கள் கொல்லப்பட்டால் மகிழ்வீர்கள் என்ற பொருளில் கூட எழுதினார் . (அவருடன் சேர்ந்து கொண்டு பலரும்). அதே சமயம் அவர் மேல் வைக்கப்பட்ட சாதாரண விமர்சனத்தைக் கூட தன் மீதான தாக்குதல் என்றுதான் எதிர் கொண்டார் . இதனாலேயே நான் உயிர்மையை வாங்குவதை நிறுத்தியவன். இனிமேலும் வாங்க வாய்ப்பில்லை. நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லும் உரிமை எனக்கில்லை . ஆனாலும் நீங்கள் அளிக்கும் அங்கீகாரம் எனக்கு வருத்தமளிக்கிறது .
அன்புடன்,
ஆ .கந்தசாமி
புனே
அன்புள்ள கந்தசாமி,
முன்னர் சாரு நிவேதிதாவுடன் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோதும் இதேபோன்ற கேள்விகள் வந்தன. நான் பதில் எழுதினேன். நீங்கள் சொல்வதுபோன்ற பதிவுகள் நிறையவே வருகின்றன, பலரிடமிருந்து. நான் என்ன எதிர்வினை ஆற்றினேன்? நீங்கள் பார்க்கவேண்டியது அதைத்தான் அல்லவா?
நான் இலக்கியவிமர்சனக் கருத்துக்களைச் சொல்வதுண்டு. சிலசமயம் மிகக்கடுமையாககூட. ஆனால் தாக்குதல்களுக்கு பதில் சொல்வதில்லை.
இலக்கியவாதிகள், கலைஞர்களின் உணர்வுநிலையின் அலைபாய்தல்கள் எனக்கு நன்றாகவே தெரியும். அவற்றை பொருட்படுத்துவதில்லை. அவர்களுடனான நட்பை எந்த வகையிலும் அது பாதிக்கவிடுவதில்லை. எந்நிலையிலும் அவர்களை இலக்கியவாதிகள், கலைஞர்கள் என்றே அணுகுகிறேன். கடந்தகாலத்திலும் தொடர்ந்து நான் அவ்வாறே நடந்துகொண்டிருப்பதை நீங்கள் காணலாம்.
மனுஷ்யபுத்திரன் என் பிரியத்துக்குரிய கவிஞர். என் கவிஞர் என்று சொல்லத்தக்க கவிதைகளை எழுதியவர். தமிழ் நவீனக்கவிஞர்களில் முக்கியமானவர். எப்போதும் இதைச் சொல்லாமல் இருந்ததில்லை. இந்த தளத்தில் மனுஷ்யபுத்திரன் என அடித்து தேடுங்கள் எல்லா குறிப்புகளும் அப்படித்தான் இருக்கும்.
உயிர்மை இதழ் தொடர்ந்து வரவேண்டும். அச்சிதழ்கள் எவையும் நின்றுபோய்விடலாகாது. அது என் ஆசை. அதில் எழுதிய நாட்கள் எல்லாம் என் சிறந்த நினைவுகள்.
கலைஞர்கள் எழுத்தாளர்கள் அல்லாதவர்களின் வசைகள், திரிபுகளை பொருட்படுத்துவதே இல்லை. அவர்கள் என் உலகில் இல்லை. அவர்கள் பேசுவதில் பொருட்படுத்தத் தக்க ஏதேனும் சமூகம் சார்ந்த, அரசியல்சார்ந்த, இலக்கியம் சார்ந்த திரிபுகள் இருந்தாலன்றி அவர்களுக்கு பதில் சொல்வதுமில்லை.
நான் இருமைகளை உருவாக்கிக்கொள்வதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறேன். வேண்டியவர் வேண்டாதவர் என்னும் இருநிலைகள் என்னை மிகக்குறுகச் செய்வன என நினைக்கிறேன். அற்பத்தனம் அல்லது எதிர்மறைப்பண்பு கொண்டவர்களை ஒதுக்கிக் கடந்துசெல்வதே உகந்த வழி. அவர்களுக்கு நம் உளச்சக்தியை அளிக்கலாகாது.
நான் தொடர்ந்து படைப்பியக்கத்துடன் இருக்கிறேன். அது எப்படி என்னும் கேள்வி வந்துகொண்டே இருக்கிறது. அதற்கான பதில் இதுதான். உளச்சக்தியை வீணடிப்பதில்லை. அதை முடிந்தவரை படைப்பு சார்ந்தே குவித்துக்கொள்கிறேன்.
நீங்கள் ஓர் இதழை வாங்குவதும் வாங்காததும் உங்கள் சொந்த தெரிவின்பாற்பட்டதாகவே இருக்கவேண்டும். அதற்கான தனிப்பட்ட காரணங்கள் உங்களுக்கு இருக்கவேண்டும். ஆனால் கசப்பு அல்லது வெறுப்பு காரணமாக அவ்வாறு செய்யக்கூடாது என்றும் அவ்வுணர்வுகளை கொண்டுசெல்லக் கூடாது என்றும்தான் சொல்ல விரும்புவேன். உங்களுக்கு பயனில்லை, உங்களுக்கு ஒவ்வாது என்றால் ஓர் இதழை விலக்கலாம். விலக்கிய கணமே மறந்துவிடவும் வேண்டும்
ஜெ
சொல் தெளியா இசை
போங்கோலி அல்லது நம் மொழியில் வங்காள மொழிப் பாடல்களை நான் முதல்முறையாகக் கேட்பது 1991ல் அலைந்து திரியும் காலத்தில் வங்காளத்திற்குச் சென்றபோது. அப்போது ஒன்றை அறிந்தேன், ஏற்கனவே கேட்டிருக்கிறேன். அன்றெல்லாம் ரேடியோ என்பது உலகையே நாம் துழாவிப்பார்க்கும் சிறு துளை.
அன்றெல்லாம் வேறெந்த உலகத்தொடர்பும் இல்லை. நாளிதழ்கள் உண்டு, ஆனால் அவற்றில் எதிர்பாராத ஆச்சரியங்கள் அமைவது அரிது. ஒரு டிரான்ஸிஸ்டர் ரேடியோ கிடைத்தால் அதை மெல்லமெல்ல சுழற்றி அதன் மெல்லிய நூலால் உலகத்தையே மெல்ல வருடி பார்ப்பது அக்காலத்தைய எல்லா பயல்களும் செய்வது. அதன் எல்லை முடிந்தபின்னரும் திருகி டயல் உடைந்து அடிவாங்கிய அனுபவம் அனேகமாக எல்லாருக்கும் இருக்கும்.
சம்பந்தமில்லா மொழிகளில் சம்பந்தமில்லா குரல்கள் எழுந்து நம்மை அதட்டும். நம்மிடம் ஆவேசமாக அறைகூவும். உருக்கமாகப் பேசும். எவரோ எவரிடமோ அழுவார்கள், கொஞ்சுவார்கள். நாம் அறியவே முடியாத செய்திகள் ஆணித்தரமாக ஒலிக்கும். ரேடியோ மிக மர்மமான ஒரு பொருள். மிகமிக ஆழம் கொண்டது. அதைவைத்து நாம் வானில் எழுந்து பறக்கமுடியும். அங்கிருந்துகொண்டு கீழே பூமியைப் பார்க்கமுடியும்.
நான் அவ்வாறு பல மொழிகளுக்குள் சென்று விழுந்திருக்கிறேன். பல நகர்களில் பல நிலங்களில். குறிப்பாக பின்னிரவுகளில் ரேடியோவை துழாவுவது ஒரு பித்தெழும் அனுபவம். தமிழில் அதை கவிஞர்கள் எவரும் எழுதியதில்லை. நான் எழுதியிருக்கிறேன், பின் தொடரும் நிழலின் குரல் நாவலில்.
அவ்வாறு கேட்டதுதான் வங்கமொழி. எந்தமொழியானாலும் பாடல்கள் நமக்கு தெரிந்தவையாக ஆகிவிடுகின்றன.அவற்றின் சொற்கள் புரியாதபோதும் உணர்வுகள் வந்தடைந்துவிடுகின்றன. நான் வங்கப்பாடல்களை ஓரிருமுறை கேட்டு கனவில் ஆழ்ந்திருக்கிறேன். ஆனால் அவை வங்கமொழிப்பாடல்கள் என்றே தெரிந்திருக்கவில்லை.
எண்பதுகளில் எல்லா டீக்கடைகளிலும் ரேடியோ ஓடிக்கொண்டிருக்கும். வெளியே நின்று பாட்டு கேட்கலாம். கங்கைவழியாக படகில் செல்லும்போது ரேடியோ ஒலித்துக்கொண்டே இருக்கும். அக்காலத்தில் பிலிப்பைன்ஸின் ஏதோ ரேடியோ வங்காளத்தில் கேட்கும். அவர்கள் நள்ளிரவிலும் பாடல்களை ஒலிபரப்புவார்கள். நிலவில், கங்கைமேல், படகில் குளிருக்கும் கொசுவுக்கும் அஞ்சி முட்டப்புதைத்து போர்த்திக்கொண்டு வங்கமொழிப்பாடல்களை கேட்டபடி மிதந்து செல்வது கனவுபோல நினைவில் எழுகிறது
ஹேமந்த் குமார் முகர்ஜிஅக்கனவை நீண்ட இடைவெளிக்குப்பின் இப்பாடலைக் கேட்டபோதும் அடைந்தேன். 1957ல் வெளிவந்த சேஷ் பரிச்சய் என்னும் வங்கமொழிப்பாடல். இசைமையமைத்து பாடியவர் ஹேமந்த்குமார் முக்கர்ஜி. வங்கமொழியின் இசைமேதைகளில் ஒருவராகக் கருதப்படுபவர். எழுதியவர் பிமல் குமார்
பிமல் சந்திர கோஷ்கொஞ்சம்கூட சொற்பொருள் தெரியாத ஒரு பாடல் விசித்திரமான உணர்வுப்பொருள் கொண்டிருக்கிறது.எண்பதுகளின் வங்கக் கிராமப்புறங்கள் சாணிவாடையும் சேறு உலரும் மணமும் கலந்தவை. நீரின் பளபளப்பு கண்களை மங்கச்செய்யும். வங்கமே ஒரு பெரிய கப்பல் போல நீரில் மிதந்துகிடப்பதாக, ஒழுகிச்செல்வதாகத் தோன்றும். மீண்டும் அந்நிலத்தில் இருந்தேன்.
குதுப் (முழுதமைந்த குரு) பால் ஸ்மித்
முகம்மது முய்’ன் உத்-தீன் சிஷ்டி பல தலைசிறந்த கவிஞர்கள் மற்றும் சூஃபிசத்தின் ஞானிகளால் ‘கடவுளை உணர்ந்த ஆன்மா’, ‘முழுதமைந்த குரு (குதுப்)’ என்று கருதப்படுகிறார். அவருடைய கஸல் பாடல்களில் இதைக் காணலாம். அவற்றில் சில இறையுணர்தல் நிகழும் முன்னர் எழுதப்பட்டவை, பெரும்பாலானவை அதன் பின்னர் இயற்றப்பட்டவை. நான் இப்போது இறையுணர்தல் என்பதை எனக்குத் தெரிந்த தெளிவான சிறந்த வரையறையான மெஹர் பாபாவால் (in Discourses Sufism Reoriented, San Francisco 6th Edition 1967) வரையறுக்கப் பட்டதை சொல்ல முயற்சிக்கிறேன்.
“உண்மையான சுய அறிவை அடைவது என்பது இறையை உணர்தல் ஆகும். இறையுணர்தல் என்பது ஒரு தனித்துவமான உணர்வு நிலை. அது ஏனைய உணர்வு நிலைகளில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. மற்ற நிலைகள் தனிப்பட்ட மனதின் வாயிலாக உணரப்படுகின்றன. இறையுணர்தல் எனும் அறிதல் நிலை எந்த வகையிலும் தனிப்பட்ட மனம் அல்லது வேறு எந்த ஊடகத்தையும் சார்ந்தது அல்ல. ஒருவரின் சுயத்தைத் தாண்டிய மற்றொன்றை அறிய ஒரு ஊடகம் அவசியம். ஒருவரின் சுயத்தை அறிந்து கொள்வதற்கு எந்த ஊடகமும் தேவையில்லை. உண்மையில், மனதோடு இதைத் தொடர்புறுத்திக்கொள்வது இறையுணர்தலுக்கு உதவியாக இருப்பதை விட தடையாகவே அமையும். தனிமனித மனம் என்பது தன்முனைப்பின் இருக்கை அல்லது தனித்திருக்கிறேன் என்று பிரித்தறியும் உணர்வு. இது எல்லைகளுக்குட்பட்ட தனித்துவத்தை உருவாக்குகிறது. இருமை, காலம், மாற்றம் என்னும் மாயைகள் இதை உண்டும் உணவிட்டும் வளர்கிறது. எனவே சுயத்தை தெரிந்துகொள்ள நனவை(consciousness) தனிப்பட்ட மனதின் எல்லைகளில் இருந்து முற்றிலும் விடுவிக்க வேண்டும்.
வேறு வார்த்தைகளில் சொல்வதானால், மனம் மறைந்து போக வேண்டும், நனவை தக்கவைத்துக் கொள்ள வேண்டும்… தனிப்பட்ட மனதுடன் இணைந்திருந்த நனவு இப்போது விடுவிக்கப்பட்டு, தடைகள் இன்றி இறுதி மெய்மையுடன்(Ultimate Reality) நேரடியாக ஒன்று சேர்கிறது. இப்போது நனவுக்கும் இறுதிமெய்மைக்கும் இடையே திரைகள் ஏதும் இல்லாதிருப்பதால் நனவு பூரணத்துடன்(Absolute) இணைந்திருக்கிறது. அதில் நித்தியமாக நிலைத்திருக்கிறது. எல்லையற்ற அறிவு மற்றும் கட்டற்ற ஆனந்தத்தின் நிலையை ஊக்குவிக்கும் வண்ணம் பூரணத்துடன் பிரிக்க முடியாத அம்சமாக அமைகிறது…
“இறையறிதல் என்பது நனவின் தனிப்பட்ட நிலை; ஆன்மாவுக்குரியது; மனதின் எல்லைகளுக்கு அப்பாற்பட்டது. மற்ற ஆன்மாக்களும் தங்கள் நனவில் இருந்து தன்முனைப்பின்(Ego) எடையை துறந்து, தனிப்பட்ட மனதின் எல்லைகளை அகற்றி விடும் போது இறையறிதல் அமையும். அதுநாள்வரை அவை தளைக்கப்பட்டிருக்கும். எனவே இறையறிதல் என்பது காலம் எனும் செயல்பாட்டில் இருந்து வெளிப்பட்ட ஆன்மாவுக்கு மட்டுமே நேரடி முக்கியத்துவம் பெறுகிறது. ஒரு ஆன்ம சாதகன் பிறரது உதவியின்றி, தன் சுய முயற்சிகள் வழியாக, இருத்தலின் தளத்தை அடையலாம். ஆனால் மனதைத் துறப்பதற்கு தன் தனிப்பட்ட இருப்பை சரணடையச் செய்யவேண்டும். இறையுணர்ந்த ஒரு குருவின் உதவியின்றி இந்த இறுதியான, மிக முக்கியமான அடியை எடுத்துவைக்க முடியாது.”
அப்துல் கரீம் இப்னு இப்ராஹிம் அல்-ஜிலி (‘Abdu ‘l-Karim ibn Ibrahim al-Jili – 1365ல் பிறந்தவர்) என்னும் சூஃபி ஞானி குறித்த புத்தகத்தில் (‘The Perfect Man’ (Insanu ‘l-kamil) of his Studies in Islamic Mysticism Cambridge University Press 1921), R. A. நிக்கல்சன் இரண்டாவது அத்தியாயத்தில் ஒரு கட்டுரையை இவ்விதம் தொடங்குகிறார்:
சூஃபிக்கள் ‘முழுதமைந்த மனிதரைப்’(al-insanu ‘l-kamil), பற்றி பேசும்போது என்ன பொருள் கொள்கிறார்கள்? இது புகழ்பெற்ற இப்னு எல்-அரபி (Ibnu ‘l-‘ Arabi) முதன்முதலில் பயன்படுத்தியதாகத் தோன்றும் ஒரு சொற்றொடர். ஆனால் இதன் அடிப்படைக் கருதுகோள் சூஃபியிசத்தைப் போலவே பழமையானது. இக்கேள்வி பல விதங்களில் விளக்கப்படலாம். ஒரு பொது விளக்கம் சொல்வதென்றால், முழுதமைந்த மனிதன் என்பவன் தான் எந்த தெய்வீக பேரிருப்பின் சாயலில் படைக்கப்பட்டிருக்கிறானோ, அந்த பேரிருப்புடன் தனது அடிப்படை ஒருமையை முழுமையாக உணர்ந்து கொண்டவன். இந்தப் பேரனுபவம், தீர்க்கதரிசிகள் மற்றும் ஞானியரால் உணரப்பட்டு மற்றவர்களுக்கு அதன் நிழல் மட்டும், குறியீடுகளாக உணர்த்தப்படுவதே சூஃபி இறையியலின் அடித்தளமாகும்.
ஆகவே முழுதமைந்த மனிதர்கள் எனும் வகைமையில் ஆதாம் முதல் முஹம்மது வரையான தீர்க்கதரிசிகள் மட்டுமல்லாது, சூஃபிக்களிடையே உன்னதத் தேர்வு((khususu ‘l-khusus) பெற்ற ‘அவுலியா’ என்றழைக்கப்படுபவர்களும் அடங்குவார்கள். அவுலியா என்னும் சொல், அருகாமை என்னும் பொருள்கொண்ட ‘வாலி’ (wali) என்ற சொல்லின் பன்மை. இது நண்பன், பக்தன், ஆதரவில் இருப்போன் போன்ற பொருளிலும் பயன்படுத்தப்படுகிறது. ‘வாலி’ அல்லது துறவி என்பவர் முழுதமைந்த மனிதனின் புகழ்பெற்ற ஒரு வகைமை என்பதால், முகமதியரின் துறவின் சாராம்சம் முக்கியமான பகுதி.
“புலன்களின் திரை அகற்றப்பட்டு, சுயமானது “ஒரு உண்மையான ஒளி” யின் மகிமையில் மறைந்து போகும் போது உணரப்படும் தெய்வீக ஒளி, கண் உணராதவற்றையும் அறியப்படாதவற்றையும், முன் உணரும் தரிசனம்” என்பது தீர்க்கதரிசனம் சொல்லும் அனுபவம். இதைவிட முகமதியரின் துறவின் சாராம்சம் எவ்விதத்திலும் குறைவானதல்ல என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டும்.
இறையோடு இணைந்திருக்கும் பரவச நிலை ‘வாலி’. இது பாதையின்(tariqa) முடிவு. அப்பாதையின் ஒழுக்கம் என்பது சீடனை பக்குவப்படுத்தி, அளவிட முடியாத பரிசாகிய தெய்வீக அருளுக்கு அவனை முன்கூட்டியே ஆயத்தமாக்குவது. ஒரு மனிதன் அவனது எந்த செய்கையாலும் தெய்வீக அருளை இழக்கவோ அடையவோ முடியாது; அது அவனுக்கு அருளப்பட்ட ஆன்மீகத் திறன் மற்றும் கொள்ளளவின் விகிதத்தில் அவனுக்கு வந்து சேர்கிறது.
வாலியின் இரண்டு சிறப்புச் செயல்பாடுகள், துறவிகளின் வழிபாட்டு முறையை மறைஞான தத்துவத்துடன் இணைத்து மேலும் விளக்குகிறது – (1) ஒரு இணைப்பாளராக அவரது செயல்பாடு (2) ஒரு பிரபஞ்ச ஆற்றலாக அவரது செயல்பாடு. நமது விவாதத்தில் விளக்கப்படவிருக்கும் ‘முழுதமைந்த மனிதன்’ – ஒருமையுடன் பன்மையை இணைப்பது. எனவே பிரபஞ்சம் அதன் தொடர்ச்சியான இருப்புக்கு அவரைச் சார்ந்துள்ளது. முகம்மதிய மத வாழ்க்கையில் வாலியின் இடம் அதே போல மையத்தில் இருப்பவர்தான். மனிதனுக்கும் முற்றிலும்கடந்தமைந்த கடவுளுக்கும் இடையே குரான் மற்றும் அறிவார்ந்த தத்துவங்கள் உருவாக்கி இருக்கும் இடைவெளியை கடந்து சென்று அவர் இணைக்கிறார். துயரத்திற்கு ஆறுதல், நோய்வாய்ப்பட்டவர்களுக்கு உடல்நலம் , பிள்ளையற்றோருக்கு குழந்தைகள், பசித்தவர்களுக்கு உணவு, அவர்களது ஆத்மாவை சமர்பித்தோருக்கு ஆன்மீக வழிகாட்டுதல், அவருடைய கல்லறையைப் பார்வையிடும் மற்றும் அவரது பெயரில் அல்லாஹ்வை அழைக்கும் அனைவருக்கும் ஆசீர்வாதம் – போன்றவற்றை தருபவர் அவர்.
சுவர்கள், மிக உயர்ந்தது முதல் தாழ்ந்தவை வரை, படிநிலைகளாக அமைந்திருக்கின்றன. குதுப் அதன் தலைமையில் இருக்க, “ஞானியரின் நிர்வாகக் குழு உலகின் கண்ணுக்கு தெரியாத அரசாங்கத்தை நடத்துகிறது”. குதுப் என்னும் நிலைக்கு கீழே இருக்கும் அவ்தத் (Awtad) என்னும் நான்கு துறவிகளின் வரிசை குறித்து சொல்லும் போது ஹுஜ்விரி (Kashaf al-Mahjub of Al-Hujwiri, R.A. Nicholson translation Luzac & Co, London 1911) சொல்கிறார்:
“ஒவ்வொரு இரவும் உலகம் முழுவதும் சுற்றி வருவது அவர்களின் அலுவல். அவர்களின் பார்வை படாத இடத்தில் ஏதேனும் இடம் இருந்தால், மறுநாள் அந்த இடத்தில் சில குறைபாடுகள் தோன்றும்; பின்னர் அவர் குதுபிற்கு இதை அறிவிக்க வேண்டும். இதன் வழியாக குதுப் தனது கவனத்தை பலவீனமான இடத்திற்கு திருப்பவும், அவருடைய ஆசீர்வாதத்தால் அக்குறையை சரிசெய்யவும் முடியும்.”
“கடவுள் மற்றும் மனிதனின் இயல்பு பற்றிய ஊகங்களின் விளைவு அல்லது காரணியே இத்தகைய அனுபவங்கள் மற்றும் நம்பிக்கைகள் எனலாம். இந்த ஊகங்கள் குரானின் ஓரிறைக் கொள்கையிலிருந்து விலகி அத்வைதம், இயற்கை வழிபாடு வரை விலகிச் செல்கிறது. குர்ஆனை பரவசமான தியானத்தில் ஓதும் சூஃபி, அவர் குரல் எழுப்பிய வார்த்தைகளில் கேட்பது தனது குரலை அல்ல; கடவுளின் குரலைக் கேட்கிறார். அவரால் அல்லாஹ் மற்ற உயிரினங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டவர் என்ற மரபுவழி கருத்தை கேள்விகளின்றி ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தக் கோட்பாடு ஒரு தெய்வீக மெய்ம்மை (அல்-ஹக்) மீதான நம்பிக்கையால் நிறுவப்பட்டது; அனைத்திற்கும் ஆதாரமான படைப்புக் கொள்கை மற்றும் இறுதி நிலமாக இருக்கும் கடவுள் என்னும் மெய்மை.
பொதுவாக முஸ்லீம்களைப் போலவே சூஃபிகள் கடவுளின் எல்லைகடந்த ஆழ்நிலையை உறுதிப்படுத்துகிறார்கள். அவதாரம் (ஹுலுல்) என்ற கருத்தை நிராகரிக்கிறார்கள். ஆன்மீக ஒன்றிணைவின் பொருளை துல்லியமாகக் குறிப்பிடுவதற்கு இஸ்லாத்தில் முதல் முயற்சிகளில் ஒன்று கடவுளின் இரண்டு இயல்புகளை சொல்லும் கிறிஸ்தவ கோட்பாடு என்பது ஒரு சுவாரஸ்யமான உண்மை. ‘அனல் ஹக்’, ‘நான் ஹக்’ என்று சொல்லத் துணிந்த ஹல்லாஜ், அதன் மூலம் ஒரு புனிதர் “கடவுளின் உயிருள்ள மற்றும் தனிப்பட்ட சாட்சியாகிறார்” என்று அறிவித்தார்.”
கடவுள் தனது சொந்த உருவத்தில் ஆதமைப் படைத்தார் என்ற யூத தொன்மம் ஒரு ஹதீஸாக(நபியின் கூற்று) மீண்டு வந்தது. முகமதிய தத்துவவாதிகளால் விசித்திரமான பயன்பாடுகளுக்கு அது பயன்படுத்தப்பட்டது. மரபுவாதியான கஜாலி கூட எந்நிலையிலும் அவரை வெளிப்படுத்த தூண்டாத ஒரு பெரிய மர்மத்தின் திறவுகோல் இங்கே உள்ளது என்று அதைச் சொல்கிறார்.
ஹல்லாஜின் கூற்றுப்படி, கடவுளின் சாராம்சத்தின் சாரம் அன்பு. படைப்புக்கு முன் கடவுள் தன்னை பரிபூரண ஒருமையுடன் நேசித்தார். அன்பின் மூலம் தன்னைத் தனக்கு மட்டுமே வெளிப்படுத்தினார். பின்னர், அந்தத் ‘தனிமை மீதான அன்பை’, பிறிதொன்றிலாத, ‘இருமைகள் அற்ற காதலை’ தக்க வைத்துக் கொள்ள விரும்பி, அதை தன்னில் இருந்து வெளியே ஒரு புறப்பொருளாகக் காண விரும்பி, அவர் தனது அனைத்து பண்புகளையும் பெயர்களையும் கொண்ட ஒரு உருவத்தை இன்மையில் இருந்து உருவாக்கினார். இந்த தெய்வீக உருவம் ஆதாம். அவர் வாயிலாக கடவுள் வெளிப்படுத்தப்படுகிறார், தெய்வீகம் மனிதகுலத்தில் புறவயப்படுத்தப் படுத்தப்படுகிறது. இருப்பினும், ஹல்லாஜ் மனித இயல்பை (nasut) தெய்வீகத்திலிருந்து (lahut) வேறுபடுத்துகிறார். ஒன்றுபட்டிருந்தாலும், அடிப்படையில் அவை ஒன்றல்ல, ஒன்றுக்கொன்று மாற்று அல்ல. ஒன்றிணைந்த பின்னும் ஆளுமை எஞ்சுகிறது: மது நீருடன் கலந்தாலும் தண்ணீர் மது ஆகாது. அடிக்கடி மேற்கோள் காட்டப்படும் வசனங்களில் ஒன்றான, ஒரு பொருத்தமான உருவகத்தைப் பயன்படுத்தி, ஹல்லாஜ் கூறுகிறார்:
நான் நேசிப்பது என்னை – என்னை நேசிப்பவன் நான்
நாங்கள் இரு ஆன்மாக்கள் வாழ்கிறோம்… ஓருடலில்
என்னை நீ கண்டால்.. அவனைக் காண்கிறாய்,
அவனை நீ கண்டால்..இருவரையும் காண்கிறாய்.
“… ஜிலி சூஃபியிச பள்ளியைச் சேர்ந்தவர். இருப்பது ஒன்றுதான், அனைத்து வெளிப்படையான வேறுபாடுகளும் மெய்மையின் வெளிப்பாடுகள், அம்சங்கள், வழிகள் மட்டுமே; அற்புதமானவை எல்லாம் உண்மையின் தோற்ற வெளிப்பாடுகள் என்று சொல்வது சூஃபியிசம். பெயர்கள் மற்றும் பண்புகளால் குறிப்பிடப்படும் சாரத்தை வரையறுப்பதில் இருந்து அவர் தொடங்குகிறார்; அது இருக்கக்கூடியதாகவோ இல்லாததாகவோ இருக்கலாம். அதாவது, ‘அன்கா’ என்ற அற்புதமான பறவையைப் போல கற்பனையில் மட்டுமே இருக்கலாம். உண்மையில் சாரம் இரண்டு வகைகளில் உள்ளது: (1) தூய இருப்பு அல்லது கடவுள், (2) இருப்பற்றவற்றுடன் இணைந்திருத்தல், அல்லது ‘உருவாக்கப்பட்ட பொருட்களின் உலகம்’. கடவுளின் சாராம்சத்தை நாம் அறிய இயலாது; அதன் பெயர்கள் மற்றும் பண்புகளின் வழியாக நாம் அது குறித்த அறிவைப் பெற வேண்டும்.
இது இரண்டு விபத்துகளால் ஆன பொருள் – நித்தியம் மற்றும் அழிவற்றது; இரண்டு குணங்கள் கொண்டது – படைப்பாற்றல் மற்றும் படைப்புயிர்த்தன்மை; இரண்டு விளக்கங்கள் கொண்டது – உருவாக்கப்படாதது மற்றும் காலத்தில் தோன்றியது; இரண்டு பெயர்கள் கொண்டது – ஆண்டவன், அடிமை (கடவுள், மனிதன்); இரண்டு அம்சங்கள் கொண்டது – புறவயமானது அல்லது காணக்கூடியது – இது நிகழ் உலகம், மற்றும் அகவயமானது அல்லது கண்ணுக்கு தெரியாதது – இது வரவிருக்கும் உலகம்; அதன் தேவை மற்றும் தற்செயல் ஆகிய இரண்டுமே கணிக்கப்பட்டுள்ளது. மேலும் அது தன்னளவில் இல்லாதது, ஆனால் மற்றவருக்கு இருப்பது; அல்லது மற்றவருக்கு இல்லாதது, ஆனால் தன்னளவில் இருப்பது என கருதப்படலாம்.
தூய இருப்புக்கு, பெயரோ பண்போ இல்லை; அது அதன் முழுமையிலிருந்து படிப்படியாக இறங்கி வெளிப்பாட்டின் உலகுக்குள் நுழையும் போதுதான், பெயர்கள் மற்றும் பண்புக்கூறுகள் அதில் படிகின்றன. இந்த பண்புகளின் ஒட்டுமொத்தம் பிரபஞ்சம். இதன் அற்புதத்தன்மை என்பது – புறவயம் என்னும் வடிவில் இது மெய்மையைக் காட்டுகிறது. இந்த நிலைப்பாட்டில் இருந்து பார்க்கும்போது, சாரம் மற்றும் பண்புக்கு இடையிலான வேறுபாடு ஒத்துக்கொள்ளப் படவேண்டியது என்றாலும், இரண்டும் உண்மையில் ஒன்றே – நீர் மற்றும் பனி போன்ற ஒன்று.
இந்த அற்புதமான உலகம் – பண்புகளின் உலகம்-ஒரு மாயை அல்ல: இது பூரணத்தின் மறு உருவாக அல்லது சுய வெளிப்பாடாக உண்மையில் இருப்பது. சாராம்சத்திற்கும் பண்புக்கும் இடையில் ஏதும் உண்மையான வேறுபாடு இல்லை என்று மறுப்பதன் வழியாக, ஜிலி இருப்பை எண்ணத்துடன் நிகர் வைக்கிறார். கடவுள் பற்றிய கடவுளின் கருத்தை உலகம் வெளிப்படுத்துகிறது. அல்லது இப்னு ‘எல்-அரபி சொல்வது போல்,‘ நாமே கடவுளை விளக்கும் பண்புகள்; நமது இருப்பு அவரது இருப்புக்கான ஒரு புறவயப்படுத்தல் மட்டுமே. நமது இருத்தலுக்கு கடவுள் நமக்குத் தேவைப்படுகிறார்; அதே சமயம் அவர் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள நாம் அவருக்கு தேவையாக இருக்கிறோம்.’
குணங்கள் மற்றும் அதற்கிடையேயான உறவுகளைத் தவிர, இந்த எளிய சாரத்தை ஜிலி, ‘இருண்ட மூடுபனி’ (அல்-அமா) என்று அழைக்கிறார். இது வெளிப்பாட்டின் மூன்று நிலைகள் வழியாகக் கடந்து, அதன் எளிமையை மாற்றியமைப்பதன் மூலம் நனவை வளர்க்கிறது. முதல் நிலை ஒன்றாதல் (Ahadiyya-அஹதியா), இரண்டாவது நிலை அவன்-ஆதல் (Huwiyya – ஹுவிய்யா), மூன்றாவது நிலை நான்-ஆதல்(Aniyya – அனியா). இந்த இறங்கி வருதலின் மூலம் பூரணத்தின் பேரிருப்பு, சிந்தனையின் அறிபவனாகவும் அறிபடுபொருளாகவும் மாறி, இருப்பின் முழு வரிசையையும் உள்ளடக்கி, தனித்துவமான பண்புகளுடன் தன்னை தெய்வீகமாக வெளிப்படுத்தியுள்ளது.
படைக்கப்பட்ட உலகம் வெளிப்புற அம்சம். கடவுள் அதன் உள்ளார்ந்த அம்சம். எனவே பூரணத்தில் பன்முகத்தன்மையின் கொள்கையைக் காண்கிறோம். பண்பு மற்றும் அதற்கிடையிலான உறவுகளுக்கு அப்பாற்பட்ட ஒரு தளத்தில் இருந்து இறங்கிவந்து, அதன் வெளிப்படையான ஒருமையைக் கடந்து, பூரணம் பன்முகத்தை அடைகிறது. கணக்கற்ற பெயர்கள் மற்றும் பண்புகளுடன் தன்னை அணிசெய்து, இயற்கையின் எல்லையற்ற வகைமைகளில், நம் கண் காணும் வடிவங்களை அது எடுக்கிறது. ஆனால் ‘ஒருமை நிலைக்கிறது, பன்மை மாற்றம் கொண்டு மறைகிறது’. பூரணம் பன்முகத்தன்மையில் நிலைத்திருக்க முடியாது. இருமைகள் சமரசம் கொண்டு ஒன்றிணைய வேண்டும், பன்மை ஒருமை ஆக வேண்டும். ஜிலின் உருவகத்திற்கு மீண்டும் சென்று நீர் பனிக்கட்டியாகவும், பின்னர் மீண்டும் தண்ணீராகவும் மாறுவது போல, பண்புகளின் உலகில் படிகமாக்கப்பட்ட சாரம் எளிமையான சுயத்திற்கு திரும்ப முயல்கிறது என்று கூறலாம். அவ்வாறு மீள, அது மேலேறிச் செல்ல வேண்டும். பூரணத்தில் இருந்து கீழிறங்கிய திசையை மாற்றி மேல்நோக்கி அது செல்ல வேண்டும்.
மெய்மை, மெய்மையாக இருந்துகொண்டே தோற்றத்தின் வடிவத்தில் தன்னை எப்படி முன்வைக்கிறது என்பதை நாம் பார்த்திருக்கிறோம்: அப்படி என்றால், தோற்றம் தோற்றமாக இருப்பதை நிறுத்தி, எவ்வாறு மெய்மையின் ஆழ்ந்த இருளில் மறைந்து போகிறது?
“மனிதன், அவனது சாராம்சத்தின் அடிப்படையில் பார்த்தால், பிரபஞ்ச சிந்தனை ஓர் உருவெடுத்து வந்தவன்; முழுமையின் பேரிருப்பை இயற்கையான உலகத்துடன் இணைப்பவன். ஒவ்வொரு தோற்றமும் மெய்மையின் சில பண்புகளைக் காட்டும். மனிதன் என்பவன் அனைத்துப் பண்புகளும் ஒன்றிணைந்த நுண்ணுலகு. அவனிடத்தில் மட்டுமே பூரணம் அதன் பல்வேறு தன்மைகள் குறித்த விழிப்புணர்வை அடைகிறதா? இன்னொரு விதத்தில் சொல்வதென்றால், பூரணமானது, மனித இயல்பில் தன்னை முழுமையாக உணர்ந்துகொண்டு, மனித இயல்பு ஊடாகத் தன்னுள் மீள்கிறது; அல்லது இன்னும் நெருக்கமாக சொல்வதென்றால், கடவுளும் மனிதனும் முழுதமைந்த மனிதரில் ஒன்றாகிறார்கள். மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையில் ஒரு இணைக்கும் பாலமாக மெய்மறந்த தீர்க்கதரிசி அல்லது துறவியின் மதம்சார்ந்த செயல்பாடு இருக்கிறது. அதேபோல மெய்மை மற்றும் தோற்றத்தின் எதிரெதிரான விதிமுறைகளை ஒன்றிணைக்கும் கொள்கையாக அவரது ஆன்மீக செயல்பாடு இருக்கிறது.
எனவே வெளிப்பாட்டின் வெளியில் இருந்து வெளிப்படுத்தப்படாத சாரத்திற்கு செல்லும் முழுமையின் மேல்நோக்கிய நகர்வு ஆன்மாவின் ஒருங்கிணைந்த அனுபவத்தின் வழியாக நடைபெறுகிறது. இவ்விதம் மறைஞானத்துடன் தத்துவத்தை பரிமாறிக் கொள்கிறோம்.
ஜிலி மூன்று கட்டங்களாக ஆன்மீக வெளிச்சம் அல்லது வெளிப்பாடு (tajalli – தஜல்லி) ஆகியவற்றை வேறுபடுத்துகிறார். இவை பூரணம் நனவின் வெளிக்கு இறங்கி வருவதன் மூன்று கட்டங்கள் ஆகிய ஒன்றாதல், அவன்-ஆதல், நான்-ஆதல் என்னும் மூன்று நிலைகளுக்கு இணையாகச் செல்பவை.
‘பெயர்களின் வெளிச்சம்’ என்று அழைக்கப்படும் முதல் கட்டத்தில், கடவுளின் ஒவ்வொரு பெயரிலும் உணர்த்தப்படும் ரகசியத்தை முழுதமைந்த மனிதர் பெறுகிறார், அப்பெயராகிறார். அவர் அப்பெயரால் கடவுளை அழைக்கும் எந்தவொரு நபரின் பிரார்த்தனைக்கும் பதிலளிக்கும் வகையில் அமைகிறார்.
இரண்டாவது கட்டத்தில் அவர் ‘பண்புகளின் வெளிச்சத்தைப்’ பெற்று அவற்றுடன் ஒன்றி விடுகிறார். தெய்வீக சாராம்சம் அதன் பல்வேறு பண்புகளால் அறியப்படுவது: வாழ்க்கை, அறிவு, சக்தி, விருப்பம், மற்றும் பல. உதாரணமாக, கடவுள் தன்னை வாழ்க்கையின் பண்பு மூலம் சில ஆன்மீகவாதிகளுக்கு வெளிப்படுத்துகிறார். அத்தகைய ஒரு மனிதன், முழு பிரபஞ்சத்தின் வாழ்க்கை என்று ஜிலி கூறுகிறார்; அந்த வாழ்க்கை அனைத்து மகத்தான மற்றும் லட்சிய விஷயங்களையும் ஊடுருவி இருப்பதை உணர்கிறார். எல்லா வார்த்தைகள், செயல்கள், உடல்கள் மற்றும் ஆன்மாக்கள் அவரிடமிருந்து தங்கள் இருப்பைப் பெறுகின்றன. அவர் அறிவார்ந்த பண்பு கொண்டவராக இருந்தால், கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்கால இருப்பு ஆகியவற்றின் முழு உள்ளடக்கத்தையும் அவர் அறிந்திருப்பார். ‘அனைத்தும் எப்படி வந்தது அல்லது வருகிறது அல்லது வரப்போகிறது’, ‘ஏன் இல்லாதது என ஒன்று இல்லை’ – போன்றவை அனைத்தும் அவருக்கு ஒருங்கிணைப்பின் வழியாகவும் பகுப்பாய்வின் வழியாகவும் தெரியும். தெய்வீகப் பண்புகளை ஆசிரியர் நான்கு தலைப்புகளின் கீழ் வகைப்படுத்துகிறார்: (1) சாராம்சத்தின் பண்புகள், (2) அழகின் பண்புகள், (3) கம்பீரத்தின் பண்புகள், (4) பரிபூரணத்தின் பண்புகள். இங்கு படைக்கப்பட்டவை அனைத்தும் ஆடிகள், அவற்றில் முழுமையான அழகு பிரதிபலிக்கிறது என்கிறார். எது அழகின்றி இருக்கிறதோ, அது அழகாக இருப்பதற்கு நிகராகவே தெய்வீக முழுமைக்கு உரியது. தீமை என்பது சார்புநிலை மட்டுமே. மேலே குறிப்பிட்டுள்ளபடி, ‘முழுதமைந்த மனிதன்’ ஒருமை மற்றும் நித்தியம் போன்ற அனைத்து தெய்வீக பண்புகளையும் பிரதிபலிக்கிறான். இந்த உலகில் அல்லது அடுத்த உலகில் வேறு எவரும் அது போல இல்லை.
மூன்றாவது மற்றும் கடைசி கட்டம், ‘சாராம்சத்தின் வெளிச்சம்’. இந்நிலையில் முழுதமைந்த மனிதன் முற்றிலும் பரிபூரணமாகிறான். அவனது ஒவ்வொரு பண்புகளும் மறைந்துவிட்டன. பூரணம் தன்னுள் மீண்டுவிட்டது.
இதுவரை கோடிட்டுக் காட்டப்பட்ட கோட்பாட்டில், கடவுளின் முதல் படைப்பான ஆதி மனிதன் என்னும் புராணத்தின் ஒரு வடிவத்தை நாம் காண முடியும். பருப்பொருளில் இறங்கி வந்த பின், படைப்பு விசை அவனுள் வேலை செய்கிறது, விடுதலைக்கு ஏங்குகிறது, இறுதியாக வழியைக் கண்டுபிடித்து மீண்டும் மூலத்திற்கு மீள்கிறது. ஜிலி முழுதமைந்த மனிதரை ‘பிரபஞ்சத்தைக் காப்பவர்’ என்று அழைக்கிறார். அவரே குதுப். குதுப் என்ற அந்த துருவமுனையின் மீது அனைத்து இருப்பின் உலகங்களும் சுழல்கின்றன. அவர்தான் படைப்பின் இறுதிக் காரணி. ஏனெனில் தெய்வீகப் பெயர்களையும் பண்புகளையும் முழுதமைந்த மனிதரில் அன்றி வேறெங்கும் முழுமையாய் பார்க்க முடியாது என்பதனால், கடவுள் தன்னைப் பார்க்கும் வழிமுறை அவர். அவர் கடவுளின் உருவத்தில் செய்யப்பட்ட பிரதி; ஆகையால், அவரிடம் சாராம்சம், அதன் தொடர்புடைய இரண்டு அம்சங்களான அவன்-ஆதல் மற்றும் நான்-ஆதல் வெளிப்படுகிறது. அதாவது, அகவயம் மற்றும் புறவயம், அல்லது தெய்வீகம் மற்றும் மனிதம் என்னும் அம்சங்கள்.
அவரது உண்மையான இயல்பு மும்மடங்காகும் என்று ஜிலி பின்வரும் வசனங்களில் வெளிப்படையாக அறிவிக்கிறார். இதை ஒரு முஸ்லீம் எப்படி எழுதியிருப்பார் என்று யோசிக்காமல் யாரும் இதை வாசிக்க முடியாது:
அது (சாரம்) ஒன்று என்று நீங்கள் சொன்னால், நீங்கள் சொல்வது சரிதான்;
அது இரண்டு என்று நீங்கள் சொன்னால், அது உண்மையில் இரண்டு.
அல்லது ‘இல்லை, அது மூன்று’ என்று நீங்கள் சொன்னால், நீங்கள் சொல்வது சரிதான்,
ஏனென்றால் அதுதான் மனிதனின் உண்மையான இயல்பு.”
The Perfect Master (Qutub)
Source: MU’IN UD-DIN CHISTHI: SELECTED POEMS (English Translation & Introduction by Paul Smith) நூலில் இருந்து
தமிழாக்கம் சுபஸ்ரீ
பொலிவன, கடிதங்கள்
தொடர்புக்கு :info@vishnupurampublications.com
அன்புள்ள ஜெயமோகன்,
பொலிவதும் கலைவதும் சிறுகதையை படித்து முடித்தபின் வாசகர் கடிதங்களை வாசிக்க ஆரம்பித்தேன். ஒரு வாசகர் கடிதத்தில் திபெத் புத்தத் துறவிகள் ஓவியம் வரைந்து பின் அவர்களே கலைக்கும் யூ டூப் வீடீயோவை பார்த்தேன். அந்த வீடீயோவை பார்க்கும்பொழுது பொலிவதும் கலைவதும் என்ற பிரபஞ்ச ஆடலை உணர்ந்தேன். பிரபஞ்ச ஆடலை நமக்கு அவர்கள் நடித்துக்காட்டுகிறார்கள். கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது அதனால் கடற்கரை ஓரமாக ஊர்களில் மழைக்கு வாய்ப்புண்டு என்கிற வானிலை செய்தி நினைவுக்கு வந்தது. இலக்கியம் அறியும்போது அறிவியல் இன்னும் நுணுக்கமாய் புரியும்போல. அந்த பிரபஞ்ச ஆடலே வாழ்வின் விதியாய் உள்ளது. இந்திரா பொலியும் போது சுந்தர் கலைகிறான். இதை அவன் என்று உணர்வான்?
களமெழுத்து பாட்டின் முடிவில் அவனுக்குள் இருக்கும் பிரபஞ்ச துளி அவனுக்குமுன் உணர்ந்துகொள்கிறது. பின் அவன் மெதுவாய் அறிகிறான். மீண்டும் காலை களம் முழுக்க கலந்த ஓவியத்தை பார்க்கும்போது தெளிவாய் அறிந்துகொள்கிறான். கலைந்த ஓவியம் மீண்டும் சேராது. ஆனால் வாழ்வு பொலிய முடியும். சாப்பிட்டபின் கிளம்ப தீர்மானித்துவிட்டான். இனி அவன் அங்கு போகப்போவதில்லை. மீண்டும் கலையப்போவதில்லை.
அன்புடன்,
மோகன் நடராஜ்
***
அன்புள்ள ஜெ
நூறு கதைகள் தனித்தனி தொகுதிகளாக வெளிவருவது மகிழ்ச்சி அளிக்கிறது என்னுடைய வாழ்க்கையின் மறக்கமுடியாத நான்கைந்து மாதங்களை அளித்தவை அவை. இலக்கியம் இந்த அளவுக்கு வாழ்க்கைமேல் நம்பிக்கையை அளிக்க முடியுமா, வாழ்க்கையை ஒளியாக ஆக்கமுடியுமா என அதற்கு முன்னால் அறிந்திருக்கவில்லை. நினைக்க நினைக்க தித்திக்கும் நாட்கள் அவை. அத்தனை கதைகளுமே ஆனந்தமானவை. கற்பனையில் விரிந்துகொண்டே இருப்பவை.
அந்த அனுபவத்தை மீண்டும் அடையவேண்டும் என்றால் மின்னூலில் படிக்கக்கூடாது. அச்சுநூலில்தான் படிக்கவேண்டும். புதிய புத்தகம் போல படிக்கவேண்டும். அதைத்தான் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்
ஆனந்த் குமார்
ஜெயமோகன் மின்நூல்கள் வாங்க குமரித்துறைவி அச்சுநூல் வாங்க வான் நெசவு அச்சுநூல் வாங்க விஷ்ணுபுரம் பதிப்பக நூல்கள்Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

