Jeyamohan's Blog, page 891
October 29, 2021
அருண்மொழியின் சொற்கள்
தினம் தினம் புதிய உற்சாகத்தோடு எழுந்தேன். எழுதுவதைப் பற்றிய சிந்தனைகள், பரவசங்கள் என்னை எப்போதுமே படைப்பூக்கத்தின் மனநிலையிலேயே வைத்திருந்தன. அது ஒரு இனிய போதை என்பதை அறிந்தேன். எழுதும்போது என்னில் நிகழ்வது என்ன என்று என்னை நானே அவதானிக்க முயன்றேன். நான் உத்தேசிக்காத ஒன்று அடுத்த வரியாக வந்து விழுவது, அந்த மாயம் நோக்கி என்னை சுண்டி இழுத்தது.
கலைமனதில் உயிர்த்தெழும் வாழ்க்கை அனுபவம்
பி.கே.பாலகிருஷ்ணனின் ‘நாவல்: ஸித்தியும் சாதனையும்’ நூலில் தஸ்தாயெவ்ஸ்கியின் புனைவுலகம் தொடர்பான ‘கலைமனதில் உயிர்த்தெழும் வாழ்க்கை அனுபவம்’ என்ற கட்டுரையை மொழிபெயர்த்திருக்கிறேன். Ms- word வடிவிலும் இணைத்திருக்கிறேன். இந்த கட்டுரையில் தஸ்தாயெவ்ஸ்கியின் புனைவுலகில் ஏன் அசாதாரணமான கதாப்பாத்திரங்கள் மட்டுமே இருக்கிறார்கள் என்ற நவீனத்துவ நோக்கிலான கேள்விக்கு பி.கே.பாலகிருஷ்ணன் தன் நோக்கில் விரிவாக பதிலளித்திருக்கிறார்.
சில வருடங்களுக்கு முன் விஷால்ராஜா (தஸ்தாயெவ்ஸ்கியை நிராகரித்தல்- நபக்கோவ்) நபக்கோவ் தஸ்தாயெவ்ஸ்கியை நவீனத்துவ ரீதியாக விமர்சித்திருக்கும் விஷயங்களை விஷால்ராஜா தன் வாசிப்பின் நோக்கில் மறுத்து கடிதம் எழுதியிருந்தார். நீங்கள் நபக்கோவின் எல்லைகள், நவீனத்துவ அழகியலின் எல்லைகள், நவீனத்துவ இலக்கணம் செவ்வியல் நாவல்களை அணுக தடையாக இருப்பது பற்றியும் எழுதியிருந்தீர்கள்.
அன்புடன்
மணவாளன்.
பி.கே.பாலகிருஷ்ணன்
தஸ்தாயெவ்ஸ்கிக்கு உலக இலக்கியத்தில் முக்கியமான இடத்தைப் பெற்றுத்தந்த நான்கு நாவல்களும் க்ரைம் நாவல்கள் தான். ‘குற்றமும் தண்டனையும்’, ’கரமசோவ் சகோதரர்கள்’ இந்த இரண்டு நாவல்களிலும் வெவ்வேறான இயல்புகள் கொண்ட மனிதர்கள் ஒரு கொலையை எதிர்கொள்வதை மையமாகக்கொண்டு இயங்குகிறது. மற்ற இரண்டு முக்கிய நாவல்களான ’அசடன்’, ‘டெவில்ஸ்(Devils)’ இந்த இரண்டு நாவல்களிலும் நிகழ்வுகள் பரிணமித்து இறுதியாக ஒரு கொலை நடப்பதுடன் நாவல் முடியும். தஸ்தாயெவ்ஸ்கியின் நாவல்களை வடிவம் சார்ந்த நோக்கில் ஆராய்ந்தால் அவரை ’க்ரைம் நாவலாசிரியர்’ என்றுதான் சொல்ல முடியும். உலகின் மகத்தான நாவலாசிரியர்களில் ஒருவரான தஸ்தாயெவ்ஸ்கியை ’க்ரைம் நாவலாசிரியர்’ என்று சொல்வது ஆச்சர்யமாகத்தான் இருக்கும். இலக்கிய வகைமைகளில் தாழ்த்தப்பட்ட இனம் என்றுதான் ’க்ரைம் நாவல்களை’ சொல்லவேண்டும். க்ரைம் நாவல்கள் மிகக் கீழான ரசனை கொண்டவர்களுக்காக, மனிதனின் பண்படாத உணர்வுகளை தூண்டிவிடும் தரம்தாழ்ந்த இலக்கிய வகைமை.
பைபிள் உலக இலக்கியத்தின் அரிய மூலதனங்களில் ஒன்று. தஸ்தாயெவ்ஸ்கியின் முக்கியமான நான்கு நாவல்களும் (குற்றமும் தண்டனையும், அசடன், கரமசோவ் சகோதரர்கள், டெவில்ஸ்) பைபிளின் இயல்பை கொண்டவை. இந்த நான்கு நாவல்களின் சிறப்பம்சங்களாக அவற்றின் பைபிள் போன்ற தொனியையும், இயல்பையும் சொல்லலாம். ’க்ரைம் நாவல்’ என்ற உடலில் பைபிளின் ஆன்மாவை இணைப்பது என்பது தஸ்தாயெவ்ஸ்கி மட்டுமே அறிந்த வித்தைகளில் ஒன்று. எப்படி தஸ்தாயெவ்ஸ்கியால் பைபிளின் இயல்புகள் கொண்ட க்ரைம் நாவலை எழுத முடிந்தது? எப்படி தஸ்தாயெவ்ஸ்கியால் மட்டுமே இதை செய்ய முடிந்தது? இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்க முடிந்தால் அந்த பதில்களை அடிப்படையாகக்கொண்டு நாவலாசிரியர் என்பவருக்கு இயல்பாகவே உள்ள கலைத்தன்மை , நாவலாசிரியரின் சொந்த வாழ்க்கை அனுபவங்களுக்கும் அவரது நாவல்களுக்குமான உறவு, அந்த உறவை உருவாக்குவதில் நாவலாசிரியரின் மன அமைப்பிற்கும் கதைத்தொழில்நுட்பத்திற்கும் உள்ள பங்கு – இவற்றைப்பற்றி சில பொதுவான கருதுகோள்களை உறுதியுடன் வெளிப்படுத்த முடியும்.
தஸ்தாயெவ்ஸ்கி எழுத ஆரம்பத்ததிலிருந்தே ரஷ்ய இலக்கியத்தில் பொருட்படுத்ததக்க இடத்தை பெற்றுவிட்டார். எனினும் அவர் தன் வாழ்வின் கடைசிகாலகட்டத்தில் எழுதிய நான்கு நாவல்களால்தான் உலக இலக்கியத்தின் முக்கியமான எழுத்தாளர் என்ற நிலையை அடைகிறார். இது தஸ்தாயெவ்ஸ்கியின் வாழ்க்கைவரலாறு சார்ந்த மறுக்கமுடியாத தரவு. குற்றமும் தண்டனையும் நாவல் எழுதும்வரை தஸ்தாயெவ்ஸ்கி தரம்குறைந்த படைப்புகளை எழுதிக்கொண்டிருந்தார் என்றோ, அந்த படைப்புகளில் மகத்தான ஒரு நாவலாசிரியனின் மேதைமை இல்லவே இல்லை என்ற அர்த்தத்தில் நான் சொல்லவில்லை. தஸ்தாயெவ்ஸ்கி எழுதிய எல்லா இலக்கியப்படைப்புகளிலும் அவரது கலைமனதின் சுவடுகளை காணமுடியும். அவற்றில் பெரும்பாலானவை நல்ல இலக்கிய ஆக்கங்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
ஆனால், குற்றமும் தண்டனையும் நாவல் வெளிவருவது தஸ்தாயெவ்ஸ்கியின் இலக்கியப்பயணத்தில் மிகப்பெரிய சம்பவம். அத்துடன் தஸ்தாயெவ்ஸ்கியின் புனைவுலகம் வேறொன்றாக ஆவதை நம்மால் காணமுடியும். ’குற்றமும் தண்டனையும்’ நாவலில் தொடங்கி கடைசியாக ’கரமசோவ் சகோதரர்கள்’ வரையுள்ள இந்த புதிய இலக்கியப்பயணத்தில் தஸ்தாயெவ்ஸ்கி உலக இலக்கியத்தின் முதன்மையான கலைஞர்களில் ஒருவராக ஆகிவிடுகிறார். அன்று முதல் அவரின் இலக்கியப்படைப்புகள் ஒரு ஒளிவட்டம் சூடியிருப்பதை காணமுடியும். பழைய கீர்த்தனைதான். ஆனால் இன்னும் ஆழமாக, இன்னும் விசித்திரமான மறைபிரதிகளுடன் அது முழங்க ஆரம்பிக்கிறது. இந்த புதிய முழக்கம் கலைமனதில் ஒரு அபூர்வமான தருணத்தில் நிகழ்ந்த தற்செயல் என்று சொல்லமுடியுமா என்ன? அப்படி சொல்லமுடியாது. ஏனெனில், மீண்டும் மீண்டும் வரும் ஒவ்வொரு ஆலாபனையிலும் இந்த மறைபிரதியின் விசித்திரமும் கம்பீரமும் புத்தம்புதியது என நிகழ்ந்தபடியே இருக்கிறது. வீணையின் ஸ்வரஸ்தானங்களில் இதுவரை எந்த கலைஞனின் விரலும் தொட்டிறாத ஒரு புதிய சுருதியை தஸ்தாயெவ்ஸ்கியின் விரல் மீட்டிவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். குற்றமும் தண்டனையும் நாவலிலிருந்து இந்த அபூர்வமான சுருதியின் சாத்தியங்களை ஆராய்ந்து ஒரு நாதலயத்தை வெளிப்படுத்த ஆரம்பிக்கிறார் தஸ்தாயெவ்ஸ்கி.
தஸ்தாயெவ்ஸ்கியின் இந்த புதிய வெளிப்பாடு அவரது கலைமனம் அடைந்த உந்துதல் மட்டுமல்ல. அந்த வெளிப்பாட்டை ஒரு அடிப்படையான நிலையாக மாற்றக்கூடிய அளவுக்கு கதைத்தொழில்நுட்ப தேர்ச்சியையும் தஸ்தாயெவ்ஸ்கியின் படைப்புகளில் நம்மால் தெள்ளத்தெளிவாக காணமுடியும். தஸ்தாயெவ்ஸ்கியின் கலைத்தன்மையில் உண்டான இந்த மாற்றம் என்பது என்ன? எந்த புதிய சுருதியை தஸ்தாயெவ்ஸ்கியின் விரல்நுனி மீட்டியது?
இது ஆராய்ந்து பதில் தேடவேண்டிய அளவுக்கு ஒரு அரிய ரகசியம் ஒன்றுமில்லை. இந்த கேள்விக்கான பதிலை தஸ்தாயெவ்ஸ்கி பற்றி எழுதிய பொருட்படுத்தத்தக்க ஆய்வாளர்கள் அனைவரும் கிட்டத்தட்ட ஒரே தொனியில் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.
தஸ்தாயெவ்ஸ்கி தன் படைப்புகளின் பேசுபொருளாக ’குற்றம்’ என்ற விஷயத்தை கண்டுபிடித்ததுதான் அவர் படைப்புலகில் ஏற்பட்ட அடிப்படையான மாற்றம். மழைக்காக தவமிருந்த வரண்ட பூமியில் புதுமழைத்துளிகள் விழுந்தது போல தஸ்தாயெவ்ஸ்கி ‘குற்றம்’ என்ற பேசுபொருளை தேர்ந்தெடுத்தார். அதுவரை கம்பீரமான சிங்கம் போன்ற அவரது கலைமனம் ‘குற்றம்’ என்ற இறைச்சித்துண்டுகள் கிடைக்காமல் கிடைத்ததை உண்டபடி சோர்வுடன் இருந்தது. எல்லா மேன்மைகளுடனும் எழுந்து நின்று வானத்தையும் பூமியையும் நடுங்கவைக்கும்படி கர்ஜிக்க வேண்டும் என அந்த சிங்கத்தின் சுருங்கிய தசைகளும் இதயமும் பரபரத்தபடியே இருந்தது. குறுதித்துளிகள் சொட்டும்படி கடித்துக் கிழிக்க ’குற்றம்’ என்ற இரை கிடைத்தவுடன் அந்த சிங்கம் பிடறி சிலுப்பி எழுந்து நின்றுவிட்டது. தன் அசலான குரலில் கர்ஜிக்கத்தொடங்கியது.
ஒரு கலைஞன் தன் கலையை தானே கண்டடையும் தருணம் என்பது அவனது வாழ்க்கையில் விலைமதிக்கமுடியாத அரிய தருணம். பெரும்பாலும் அந்த தருணம் ஆச்சர்யமூட்டும் அளவுக்கு அவ்வளவு தற்செயலானது. அசாதாரணமான கலைஞன் அந்த தற்செயலான முகூர்த்தத்திற்காக என்றும் தவித்தபடியே இருக்கிறான். என்றைக்காவது ஒருநாள் அந்த அரிய தருணம் வருகிறது. அந்த தருணத்திலிருந்துதான் கலைஞனின் அகம் முழுமையாக வெளிப்பட ஆரம்பிக்கிறது. ஒரு யுகம் முழுவதையும் படைப்பதுதான் தன் பணி என்று தெரிந்தவுடன் பால்சாக்(Balzac) ” La Comédie humaine “ என்ற 91 தொகுதிகொண்ட நாவலை எழுதத் தொடங்குகிறார். La Comédie humaine வழியாக பால்சாக்கின் கலைமனம் தன்னைத்தானே கண்டுகொள்ளும் அபூர்வமான தருணத்தில் காலடி எடுத்துவைக்கிறது. ஒரு அரிய தருணத்தில் எல்லையில்லாதபடி மிகமிக விரிவான ஒரு போர்க்களத்தில்தான் தன் கலைமனம் முழுமையான வெளிப்பட முடியும் என்று கண்டுடைந்த டால்ஸ்டாய் ‘போரும் அமைதியும்’ நாவலை எழுத ஆரம்பிக்கிறார்.
தஸ்தாயெவ்ஸ்கிக்கு அந்த அரிய தருணத்தை கண்டடைய தன் வாழ்வின் கடைசிகட்டம்வரை காத்திருக்க வேண்டியிருந்தது. அந்த தருணத்திற்கு பின் தஸ்தாயெவ்ஸ்கியின் கலைமனம் குற்றம், குற்றம் செய்வதற்கான விழைவு போன்ற விஷயங்கள் வழியாக காட்டுக்குதிரை போல கடிவாளம் இல்லாமல் கட்டற்று பயணிக்க ஆரம்பித்தது. அந்த குதிரையின் இலக்கு பிரபஞ்ச ரகசியங்கள் நட்சத்திரங்கள் போல ஒளிரும் சூனியமான வான்வெளி. அங்கு சென்றவுடன் வானம் என்ற பாழ்வெளியின் பிரம்மாண்டத்தை தாளமுடியாமல் அது எழுப்பிய வேதனை நிறைந்த அலறல்கள் பூமியில் எதிரொலித்தன. அப்படி அலறுவதற்காகவே, அது பூமியில் எதிரொலிப்பதற்காகவே பிறந்தவர்தான் தஸ்தாயெவ்ஸ்கி. குற்றம் என்ற காட்டுக்குதிரையை கண்டுகொண்ட அந்த நிமிடம்தான் தஸ்தாயெவ்ஸ்கியின் அபூர்வத் தருணம்.
’குற்றம்’ என்பது தஸ்தாயெவ்ஸ்கியின் முக்கியமான நாவல்களின் பேசுபொருள் மட்டுமல்ல. ’தஸ்தாயெவ்ஸ்கித்தன்மை’ (Dostoyevskian) என்பதன் மையம் ’குற்றம்’தான். ’தஸ்தாயெவ்ஸ்கித்தன்மை கொண்ட கதாப்பாத்திரங்கள்’ (Dostoyevskian characters) எல்லோரும் குற்றவாளிகளோ, குற்றம் செய்யும் விழைவு கொண்டவர்களோ தான். அவரது தனித்தன்மையான படைப்புலகம் மனிதர்களை குற்றவாளிகள், குற்றமற்றவர்கள் என பிரித்துப் பார்ப்பதில்லை. தஸ்தாயெவ்ஸ்கியின் புனைவுலகம் குற்றம் செய்யும் விழைவை அடிப்படையாகக் கொண்ட ‘அதிமானுடரும்’ ‘சிறுமையானவர்களும்’ மட்டுமே நிறைந்த உலகம். இந்த விசித்திரமான மனிதர்கள் நிறைந்த கதைக்களத்தில் ’குற்றம்’ என்பது எண்ண ஓட்டங்களில், சம்பவங்களில் வெறுமனே அதிர்ச்சிமதிப்பை ஏற்படுத்துவதோ, நாவலின் இறுதித் திருப்பத்திற்காக மட்டும் பயன்படுத்தப்பட்டதோ அல்ல. தஸ்தாயெவ்ஸ்கியின் புனைவுலகில் ’குற்றம்’ என்பது எல்லாவற்றின் தோற்றுவாயாக, ஆன்மிகமான முழுமைக்காக தயார்படுத்தும் ஒரு உயிர்த்துடிப்பாக இருக்கிறது. அங்கு எளிய மனிதர்கள் கொலை என்ற சுழியில் ஆட்பட்டு வெளியேற துடிதுடிக்கிறார்கள். அவர்களின் மனதில் ஏற்பட்ட ஆழமான காயங்கள் வழியாக அவர்களின் ஆன்மாவை முழுமையாகவே நமக்கு காண்பிக்கிறார்கள். நான் சொல்லவரும் விஷயத்தை தெளிவாக்க கரமசோவ் சகோதரர்கள் நாவலின் முக்கிய கதாப்பாத்திரங்களை உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம்.
கரமசோவ் சகோதரர்கள் நாவலின் கதாநாயகர்களில் ஒருவனான மித்யா(Mitya) தன் தந்தை ஃபியோதர் கரமசோவை (Fyodor Karamazov) கொல்லப்போவதாக வஞ்சினம் உரைத்தவன். வேறு ஒருவரால் தந்தை கொலைசெய்யப்பட்டு இறந்தபிறகுகூட, தானே தந்தையை கொன்றிருக்கவேண்டும் என்று சொன்னவன். ஆனால் மித்யா கருணை, சுயமரியாதை போன்ற மேன்மையான குணங்களின் வடிவமும்கூட. ஃபியோதர் கரமசோவின் இரண்டாவது மகன் இவான்(Ivan) அறிவுஜீவி, பண்பட்டவன். அவனும் தந்தையை கொலைசெய்ய விழைந்தவன், மறைமுகமாக அந்த கொலைக்கு தூண்டுதல் அளித்த ஆளும்கூட. நேர்மறையான, கள்ளமற்ற குணநலன்களை மட்டுமே கொண்ட மூன்றாவது மகன் அல்யோஷா(Alyosha) கூட தந்தை இறந்தபின்பு குற்றவுணர்வின் வெம்மையை அனுபவிக்கிறான்.
ஃபியோதர் கரமசோவை உண்மையாகவே கொலை செய்தது ஸ்மர்டியாக்கோவ் (Smerdyakov) என்ற குற்றம் செய்யும் விழைவுகொண்ட தீமைநிறைந்த கதாப்பாத்திரம். ஃபியோதர் கரமசோவின் மகன் இவான் முன்வைத்த வாழ்க்கை சார்ந்த தத்துவம் ஸ்மர்டியாக்கோவிற்கு கொலை செய்யும் தைரியத்தை அளித்திருந்தது. இந்த நாவலில் இறைநம்பிக்கையால் ஒளிரும் நன்மை மட்டுமே கொண்ட ஃபாதர் ஸோசிமாவின் வாழ்க்கையின் அடித்தளம் கடுமையான குற்றத்தை தொடர்ந்து ஏற்பட்ட பச்சாதாபத்தாலும் கருணாயாலும் எழுப்பப்பட்டது. இந்த முக்கிய கதாப்பாத்திரங்கள் போக மற்ற கதாப்பாத்திரங்களும் நாவலின் முக்கிய சம்பவமான ’தந்தைக்கொலை’ என்ற சுழலில் ஆட்கொள்ளப்பட்டவர்கள். அந்த கதாப்பாத்திரங்கள் ’தந்தைக்கொலை’க்கு எதிர்வினை ஆற்றுவது வழியாக, தங்களின் குற்றம் செய்வதற்கான விழைவு வழியாக அவர்களின் ஆழ்மனம் முழுவதையுமே நமக்கு காட்டுகிறார்கள். எளிமையாகச் சொன்னால் இந்த நாவலில் உள்ள அத்தனை கதாப்பாத்திரங்களும் குற்றவாளிகள்தான். ஆனால் தஸ்தாயெவ்ஸ்கியின் புனைவுலகில் இருந்தபடி அந்த கதாப்பாத்திரங்களை குற்றவாளிகள் என்று சொல்ல வாசகர்கள் யாருக்கும் தைரியம் வருவதில்லை.
தஸ்தாயெவ்ஸ்கியின் விசித்திரமான புனைவுலகில் ’குற்றம்’ என்ற நுழைவுச்சீட்டை காண்பித்து மட்டும்தான் மனிதர்கள் உள்ளே நுழைய முடியும். அந்த மனிதர்கள் சாத்வீகமானவர்களாக, வீரர்களாக, பெருந்தன்மையானவர்களாக, அற்பமானவர்களாக, கோழைகளாக என எப்படிப்பட்டவர்களாக வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும், ’குற்றம்’ என்ற நுழைவுச்சீட்டு அவசியம். தஸ்தாயெவ்ஸ்கியின் புனைவுலகில் சாத்தான் போல தீமையே உருவானவர்களை, அன்பே வடிவானவர்களை காணலாம். ஆனால் அவரது புனைவுலகில் சாமானியர்களை காணவே முடியாது. முன்பே குறிப்பிட்டது போல அவரது புனைவுலகில் தீமை மட்டுமே கொண்டவர்கள்; அன்பு மட்டுமே நிறைந்த பரிசுத்த ஆன்மாக்கள், புழுக்களைப்போல சந்தேகங்களின் பிடியில் சிக்கி அருவருப்பூட்டும்படி துடிக்கும் அதிமானுடர்- இவர்கள் அனைவருமே ஒரேபோல குற்றத்தின் பிடியில் சிக்கிய குற்றவாளிகள் தான். நம் மனதில் இயல்பாகவே ஒரு கேள்வி எழுந்துவரும்: ஏன் தஸ்தாயெவ்ஸ்கியின் புனைவுலகில் இம்மாதிரியான அசாதாரணமான கதாப்பாத்திரங்கள் மட்டுமே இருக்கிறார்கள்?
தஸ்தாயெவ்ஸ்கியின் வாழ்க்கை அனுபவங்களில் மிக முக்கியமான ஒரு அம்சம் இங்கு அறிமுகமாகிறது. பூக்கள் விரிவதுபோல எதிர்பார்ப்புகள் நிறைந்த வாழ்க்கையின் ஆரம்ப காலகட்டத்தில் ‘poor folks’ என்ற நாவல் எழுதி ரஷ்ய இலக்கியத்தில் கவனம் பெருகிறார். சில வருடங்களிலேயே தஸ்தாயெவ்ஸ்கி சைபீரிய சிறையில் அடைக்கப்படுகிறார். ரஷ்ய சாம்ராஜ்ஜியத்தின் பரந்து விரிந்த நிலப்பரப்பின் நாலா பக்கத்திலிருக்கும் மிகக் கொடிய குற்றவாளிகளும் அதே சிறையில்தான் இருக்கிறார்கள்! ’சாமானியம்’ என்பதை தவிர்த்து மற்ற எல்லா உணர்வுநிலைகளும் கொண்ட குற்றவாளிகளுடன் நான்கு வருடம் தஸ்தாயெவ்ஸ்கி சிறைவாசம் அனுபவிக்கிறார். தஸ்தாயெவ்ஸ்கியின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர்களில் பொருட்படுத்தக்க ஒருவரான இ.ஹெச்.காரின் [E.H. Carr] தஸ்தாயெவ்ஸ்கி பற்றிய அவதானிப்பை கீழே கொடுத்திருக்கிறேன்.
” ……அவருக்கு சில ஆழ்மன ரீதியான பாதிப்புகள் கணி்சமான அளவில் உருவாகியிருந்தன. நீட்சே தஸ்தாயெவ்ஸ்கியை ’ இருள் உலகின் தெய்வங்களுடன் நிரந்தரமாக போரிட்டபடியே வாழ்ந்தவர்’ என்று சொல்கிறார்: ‘ மிக கவனமாகத்தான் இருக்க வேண்டும். ஏனெனில் அசுரத்தன்மை கொண்ட இந்த போராட்டத்தில் தஸ்தாயெவ்ஸ்கி தானே ஒரு இருள்தெய்வமாக ஆகிவிடுவதற்கான சாத்தியம் எப்போதுமே இருந்தது. அடியற்ற ஆழம் கொண்ட பிலம் ஒன்றை உற்று நோக்கினால் அந்த பிலம் உங்கள் ஆன்மாவை இந்த பக்கத்திலிருந்து திரும்பிப்பார்க்கத் தொடங்கும்.‘ சைபீரியாவில் உள்ள ஓம்ஸ்க் என்ற பகுதியில் சமுதாயத்திலிருந்து வெளியே தள்ளப்பட்ட மனிதர்களுடன் நான்கு ஆண்டுகள் தஸ்தாயெவ்ஸ்கி சிறைவாசம் அனுபவித்தார். இவர்கள் மனித சமுதாயத்தின் நீதித்தொகுதிகளிலிருந்து, நன்னெறிகளிலிருந்து வெளியேற்றப்பட்ட ‘அற்ப மானுடர்’ – பெரும்பாலும் விலங்கு போன்ற ஒரு வாழ்க்கை நிலைக்கு திரும்பிப்போக முடிந்த ‘அரை-மனிதர்கள்’(Sub-human). இயற்கையின் ஆதார இயல்புகள் தூய வடிவில் நுரைத்து கொப்பளித்துக்கொண்டிருக்கும் அந்த பிலத்தை தஸ்தாயெவ்ஸ்கி காண்கிறார். பதிலுக்கு அந்த பிலம் தஸ்தாயெவ்ஸ்கியின் ஆன்மாவிற்குள் நுழைகிறது. சிறையில் நுழைவதற்கு முன்னரே தஸ்தாயெவ்ஸ்கி இயல்பாகவே ஒரு அசாதாரணமான ஆளுமையாக இருந்திருக்கலாம். அவர் இயல்பாகவே அசாதாரணமானவராக இருந்தாரோ, இல்லையோ சிறையில் அசாதாரணமான உலகத்துடன் பொருந்திக்கொள்ள தஸ்தாயெவ்ஸ்கி கற்றுக்கொண்டார். சிறைவாசத்துடன் தஸ்தாயெவ்ஸ்கியின் வாழ்க்கைப்பார்வையே ஒட்டுமொத்தமாக மாறியது. சிறையில் அனுபவித்த அந்த ’அசாதாரணமானதன்மை’யை மட்டுமே ‘ஃபோக்கஸ்’ செய்தது என்பதால் எந்த ஒரு விஷயத்தையும் சாதாரணமாகப் பார்க்க அவரால் முடியவேயில்லை. அந்த சிறையில் சாமானியமான மனிதர்கள் எவ்வளவு குறைவோ அந்த அளவுக்கு தஸ்தாயெவ்ஸ்கியின் நாவல்களில் சாமானிய கதாப்பாத்திரங்கள் மிகக்குறைவாக இருப்பதைக் காணலாம். தஸ்தாயெவ்ஸ்கி சிறைவாசத்திற்கு பிறகு எழுதிய படைப்புகளில் மனிதர்களின் சாமானியமான உணர்வுநிலைகள் எதுவுமே இல்லாததாக ஆனது. அது குற்றவாளிகளின், கள்ளமற்றவர்களின் உலகமாக ஆகிவிட்டது- நன்மை அல்லது திண்மை மட்டுமே கொண்டவர்கள் நிறைந்த அருவருப்பூட்டும் உலகம்”
இ.எச்.காரின் [E.H. Carr] இந்த அவதானிப்பை விரிவாக விளக்கவேண்டிய அவசியமில்லை. தஸ்தாயெவ்ஸ்கியின் புனைவுலகில் ஏன் அசாதாரணமான மனிதர்கள் மட்டுமே இருக்கிறார்கள் என்ற கேள்வியை கேட்பவர்களிடம் இ.எச்.காரின் அவதானிப்பை முன்வைத்தால் இனி அந்த கேள்வியை கேட்கமாட்டார்கள். சைபீரிய சிறைவாசம் முடிந்து இலக்கியச்செயல்பாட்டை தொடர்ந்த தஸ்தாயெவ்ஸ்கியால் சாமானிய மனிதர்களை புரிந்துகொள்ளவே முடியவில்லை. அவருக்கு ’சாமானியம்’ என்பதே மிகமிக அசாதாரணமான விஷயமாக மாறிவிட்டது. தஸ்தாயெவ்ஸ்கியின் நாவல்களில் ‘insulted and humiliated’ நாவலில் தொடங்கி கடைசி நாவலான ‘கரமசோவ் சகோதரர்கள்’ வரை இ.எச்.காரின் இந்த அவதானிப்பு பொருந்தும்.
சைபீரிய சிறைவாசத்தில் குற்றாவளிகள் மட்டுமே கொண்ட உலகம் அறிமுகமான நேர்ந்ததால் தஸ்தாயெவ்ஸ்கியின் படைப்புகள் குற்றத்தையும், குற்றவாளிகளையும் கையாளும் ஒரு புனைவுலகமாக ஆகிவிட்டிருக்கிறது என்று யாராவது நினைத்தால் அந்த புரிதல் பிழையானது. தன் சிறைவாசத்தில் நிகழ்ந்த அனுபவங்களை அப்படியே பதிவுசெய்யவோ அல்லது நேரடியாக அதை மட்டுமே சார்ந்த படைப்புகளையோ தஸ்தாயெவ்ஸ்கி எழுதவில்லை. தன் சொந்த வாழ்க்கையின் மிக கடுமையான அனுபவமான வறுமையை ஒருபோதும் முக்கியமான பேசுபொருளாக ஆகவில்லை. மாறாக, தஸ்தாயெவ்ஸ்கியின் கலைமனம் அந்த சிறைவாச அனுபவத்தை ஆவேசத்துடன் உள்வாங்கிக்கொண்டது. அவ்வாறு உள்வாங்கிக்கொண்டதால் அவரின் கதாப்பாத்திரங்கள் சார்ந்த பார்வையும், நாவலின் கதைக்களமும் பிரத்யேகமான முறையில் மாற்றமடைந்தது.
தஸ்தாயெவ்ஸ்கியின் படைப்புகளில் வாசகர்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் குற்றவாளிகளின் உலகிற்கும் தஸ்தாயெவ்ஸ்கிக்குமான உறவு என்ன என்பதுதான். தஸ்தாயெவ்ஸ்கி சிறையில் உள்ள குற்றவாளிகளை வெறும் ஒரு பார்வையாளனாக நின்ற பார்த்தவர் அல்ல. குற்றவாளிகளுடன் தானும் ஒரு குற்றவாளியாகவே நான்கு வருடம் வாழ்ந்தவர். அவர்கள் சிறையில் அனுபவித்த கொடிய சித்திரவதைகளை ஏறக்குறைய அதே அளவுக்கு தஸ்தாயெவ்ஸ்கியும் அனுபவித்தார். எந்த மனிதனிலும் இம்மாதிரியான அனுபவம் கசப்பைதான் ஏற்படுத்தும். சிறையில் சித்திரவதைகளை அனுபவிக்கும் குற்றவாளிகள் முதலில் இழப்பது ‘மனிதத்தன்மை’யைத்தான். பிழையாகக் கையாளப்படுவதால் கைதிகளின் ’மனிதத்தன்மை’ என்றென்றைக்குமாக சீரழிந்துவிடுகிறது. இதை காண நேரும் எந்த ஒரு கலைஞனுக்கும் தார்மீகமான கோபம் ஏற்படும். அது மட்டுமல்ல, இம்மாதிரியான அனுபவங்களை எதிர்கொள்ளும் எந்த ஒரு கலைஞனுக்கும் இந்த தண்டனைகளுக்கு காரணமான சமூக அமைப்பின் மீது வெறுப்பும் எதிர்ப்பும் தீபோல கனன்றபடியே இருக்கும். அதுவும் தஸ்தாயெவ்ஸ்கி புகழின் உச்சிவரை சென்றுகொண்டிருந்த கட்டத்தில், அநியாயமாக சிறையில் அடைக்கப்பட்டவர்.
ஆனால் தஸ்தாயெவ்ஸ்கியை பொறுத்தவரை மேலே குறிப்பிட்டது போல எதுவுமே நிகழவில்லை. தஸ்தாயெவ்ஸ்கி சிறையில் தான் அநியாயமாக சித்திரவதை செய்யப்பட்டதை பின்பு ஒரு தருணத்திலும் கோபத்துடன், வெறுப்புடன் வெளிப்படுத்தியதில்லை. தஸ்தாயெவ்ஸ்கியின் நாவல்களில் சைபீரிய சிறை அனுபவங்களை நேரடியாகவே கையாண்ட ஒரே ஒரு நாவல்- ‘house of the dead’ . அந்த நாவலில் விவரிக்கப்படும் சிறை சார்ந்த விஷயங்களில் தஸ்தாயெவ்ஸ்கியின் சொந்த வாழ்க்கையின் சிறைவாச அனுபவங்களின் எந்த சுவடையும் நம்மால் காண முடியாது. தஸ்தாயெவ்ஸ்கியின் இந்த ‘ஒட்டுதலின்மை’ ஆச்சர்யமானது. வாசகர்கள் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயத்தையும் சொல்ல வேண்டும். தஸ்தாயெவ்ஸ்கியின் கடுமையான சிறைவாச அனுபவங்களை நேரடியாகவே சார்ந்த இந்த நாவல் தஸ்தாயெவ்ஸ்கியின் மற்ற நாவல்களுடன் ஒப்பிட்டால் தர அடிப்படையில் கீழே உள்ள நாவல் என்றுதான் சொல்லமுடியும். ‘House of the dead’ ஒரு தோல்வியடைந்த நாவலாக ஆனதற்கு பிரத்யேகமான ஒரு அர்த்தமும் இருக்கிறது. கலைஞனுக்கும் அவனது வாழ்க்கை அனுபவங்களுக்குமான உறவைப்பற்றி ஆராயும்போது அதிலுள்ள முக்கியமான அம்சங்களை ‘house of the dead’ நாவல் எடுத்துக்காட்டுகிறது.
தஸ்தாயெவ்ஸ்கியின் நாவல்களில் தரம்தாழ்ந்த ஒரு நாவல் என்பது மட்டுமல்ல, தஸ்தாயெவ்ஸ்கித்தன்மையே இல்லாத ‘Undostoveskyan’ நாவல்தான் ‘The House of the dead’. தஸ்தாயெவ்ஸ்கியின் முக்கியமான நாவல்களை ஒருமுறைகூட பாராட்டாத இயலாத தல்ஸ்தோய் (தல்ஸ்தோய்க்கு என்றுமே தஸ்தாயெவ்ஸ்கி படைப்புகள் மேல் வெறுப்பும், மதிப்பின்மையும் இருந்தது) ‘House of the dead’ நாவலை மட்டும் ஒரு மகத்தான கலைப்படைப்பு என்று ஆவேசமாக புகழ்ந்த்திருக்கிறார். தல்ஸ்தோய் இந்த வஞ்சப்புகழ்ச்சி ஒன்றை மட்டுமே எடுத்துக்கொண்டு ‘House of the dead’ ஒரு தோல்வியடைந்த நாவல் என்பதற்கான ஆதாரமாக எடுத்துக்கொள்ளலாம். தஸ்தாயெவ்ஸ்கியின் வாழ்க்கைப் பார்வையையே மாற்றியமைத்த சிறை அனுபவங்களை அடிப்படையாக வைத்து எழுதிய ‘House of the dead’ நாவல், ஏன் அவரின் தரம்குறைந்த படைப்புகளில் ஒன்றாக ஆனது? ஏன் இந்த ஒரு நாவலில் மட்டும் தஸ்தாயெவ்ஸ்கியின் கலைத்தன்மையின் சுவடுகள் சுத்தமாகவே இல்லை?
இதற்கான பதில் மிக எளிமையானது. கலைமனதால் உள்வாங்கப்படாத வாழ்க்கை அனுபவம் என்பது ஒரு அறிக்கைதான். அதற்கு அப்பால் அந்த அனுபவத்திற்கு வேறெந்த மதிப்பும் கிடையாது. அந்த அறிக்கை தயாரிப்பவரின் திறனையும், தேர்ச்சியையும் பொறுத்து வாசிப்பவர்களுக்கு ஈர்ப்புள்ளதாகக்கூட இருக்கலாம். கதைத்தொழில்நுட்பத்தில் நல்ல திறன் கொண்டவர்களால் அந்த அறிக்கையை கச்சிதமான வடிவத்திற்கு கொண்டுவந்துவிட முடியும். ஆனால் நல்ல கலைஞனின் உந்துதலால் இயற்றப்பட்ட கலைப்படைப்பிற்கு நிகராக அந்த அறிக்கையை வைக்க முடியாது. கலை சார்ந்த இந்த அடிப்படையான உண்மையை தஸ்தாயெவ்ஸ்கியின் ‘house of the dead’ என்ற தோல்வியடைந்த நாவல் எந்த பொருள்மயக்கமும் இல்லாமல் தெள்ளத்தெளிவாக சொல்கிறது.
குற்றவாளிகளின் உலகத்தில் குற்றவாளியாகவே வாழ்ந்த அனுபவங்கள் அளித்த பாதிப்புகளை தன் கலைமனதில் உள்வாங்கிக்கொண்ட தஸ்தாயெவ்ஸ்கி பின்னர் ரொம்ப காலம் அதை வெளிப்படுத்துவதற்கான தவத்தில் இருந்தார். தஸ்தாயெவ்ஸ்கியின் பாத்திரப்படைப்பு சார்ந்த புரிதல்கள் ஒட்டுமொத்தமாகவே மாறின. சிறைவாழ்க்கைக்கு பின்பு தஸ்தாயெவ்ஸ்கி எழுதிய எல்லா படைப்புகளிலும் அவரது வாழ்க்கைப்பார்வையில் வந்த மாற்றம் பின்னணியாக இடம்பெற்றது. இ.எச்.கார் [E.H.Carr] அவதானித்துபோல “ சைபீரிய சிறையில் சாதாரண மனிதர்கள் எவ்வளவு அரிதானவர்களோ , அதேபோல தஸ்தாயெவ்ஸ்கியின் படைப்புலகில் சாதாரணமான மனிதர்கள் மிகக்குறைவாகவே இருக்கிறார்கள்.”
ஆனால் தஸ்தாயெவ்ஸ்கிக்கு இயல்பாகவே இருந்த மேதைமையும், கற்பனைத்திறனும் முழுமையான வெளிப்பாட்டிற்கான வெளியைத் தேடி இருட்டில் தடுமாறியபடியே இருந்தது. Insulted and humiliated நாவலிலிருந்து ஆரம்பிக்கும் இந்த தேடல் ’குற்றமும் தண்டனையும்’ நாவலில் பூர்த்தியடைகிறது. அதிலிருந்து தனக்கு பொருத்தமான ஒரே ஒரு பேசுபொருள் ‘குற்றம்’ மட்டும்தான் என்று தஸ்தாயெவ்ஸ்கியின் கலைமனம் கண்டுகொள்கிறது. அந்த கண்டடைதலுக்கு பிறகு தஸ்தாயெவ்ஸ்கியின் படைப்புகள் உலக இலக்கியத்தின் அருமணிகள் நிறைந்த களஞ்சியத்திற்கு இடம் மாறிவிடுகின்றன.
ஒருவிதத்தில் பார்த்தால் இந்த விளக்கம் அபத்தமாக இருப்பதாகக்கூட தோன்றும். சிறைவாழ்க்கை முடிந்தபின் தஸ்தாயெவ்ஸ்கி Insulted and Humiliated(1861), The House of the Dead(1861), நிலவறைக்குறிப்புகள்(1864) என்ற மூன்று நாவல்களுக்கு பிறகு எழுதிய நான்காவது நாவல்தான் ‘குற்றமும் தண்டனையும்(1866)’. சிறைவாழ்க்கை முடிந்தபின் தன் கதாப்பாத்திரங்கள் முழுக்கவே குற்றவாளிகளைக் கொண்டு உருவாக்க ஆரம்பித்த தஸ்தாயெவ்ஸ்கி ’குற்றமும் தண்டனையும்’ நாவல் முதல்தான் தனக்கு உவப்பான பேசுபொருள் ’குற்றம்’ தான் என்பதை கண்டுபிடித்தார் என்று சொல்வது அவரது எல்லா நாவல்களையும் வாசிக்காதவர்களுக்கு முரண்பாடாக தோன்றும். ஆனால், நுட்பமான வாசகர்களுக்கு தஸ்தாயெவ்ஸ்கியின் புனைவுலகில் வந்த இந்த மாற்றம் எவ்வளவு அடிப்படையானது என்று புரிந்துகொள்ள எந்த சிரமமும் இருக்காது.
குற்றமும் தண்டனையும் நாவல் முதல் தஸ்தாயெவ்ஸ்கியின் புனைவுலகம் குற்றம் என்ற பேசுபொருளை மட்டுமே கொண்டு தன்னளவிலேயே முழுமையான ஒன்றாக ஆகியது. அந்த புனைவுலகில் குற்றவாளிகள், குற்றமற்றவர்கள் என்ற பிரிவினை இல்லாமலாகிறது. அதாவது ‘குற்றமும் தண்டனையும்’ நாவல் முதல் தஸ்தாயெவ்ஸ்கியின் கலைமனம் ’மனிதன்’ என்ற சொல்லிற்கு பதிலாக ’குற்றவாளி’ என்ற சொல்லை பயன்படுத்த ஆரம்பித்தது என்று சொல்லலாம். ’குற்றம்’ என்ற இந்த புதிய பரிபூரணமான பிரபஞ்சத்தில் ஒரு பூமி இருக்கிறது. ஒரு சொர்க்கம் இருக்கிறது. ஒரு நரகம் இருக்கிறது. எல்லாவிதமான மனிதர்களும் இருக்கிறார்கள். அந்த உலகில் கொலையில் பங்கேற்றதற்கு பின்புதான் பரிசுத்தமானவர்கள், சாத்வீகமானவர்கள், தீமை நிறைந்தவர்கள் என மனிதர்கள் பலவாராகப் பிரிகின்றனர். அவர்கள் கொலைக்குப் பின்பு உள்ள சஞ்சலமான மனநிலையிலூடாக தங்கள் ஆன்மாவை முழுமையாகவே நமக்கு காண்பிக்கிறார்கள். அங்கு எல்லாவற்றிற்குமான மையம் குற்றம்தான். எல்லாமே குற்றத்திலிருந்து தொடங்கும் விசித்திரமான பிரபஞ்சம்.
’கொலை’யை தன் முக்கியமான பேசுபொருளாக கொண்ட தஸ்தாயெவ்ஸ்கியின் நான்கு நாவல்களும் மகத்தான இலக்கியப்படைப்புகளாக ஆனதற்கான காரணம் இந்த நாவல்கள் வழியாக தஸ்தாயெவ்ஸ்கி ’குற்றம்’ என்பதை எல்லா காலத்திற்கும் பொருந்துவதாக, என்றென்றைக்குமான ஒன்றாக உயர்த்தியிருக்கிறார். மேலும் இந்த நாவல்களில் குற்றத்தில் பங்கேற்பதன் வழியாக தூய்மையானவர்களும் சாத்தான்களுக்கும் தங்களைத் தாங்களே கண்டுகொள்ளும் நாடகமேடையாக மாற ‘க்ரைம் நாவலின்’ இந்த புகழ்பெற்ற சட்டகம் முக்கிய பங்கு வகித்திருக்கிறது. இவ்வாறு ‘குற்றம்’ ஒட்டுமொத்ததன்மையை அடைந்தது தஸ்தாயெவ்ஸ்கியின் கலைமனதை இயங்கவைப்பதற்கு பொருத்தமானதாக ஆனது. தஸ்தாயெவ்ஸ்கியின் கலைமனம் தன் சிறை சார்ந்த அனுபவங்களை உள்வாங்கிக்கொண்டவுடன் ’குற்றம்’ என்பது என்றென்றைக்குமான ஒன்றின் குறியீடாக விரிவடைந்தது என்றும் சொல்லலாம். அதுமட்டுமில்லை, தஸ்தாயெவ்ஸ்கியின் வேறொரு அடிப்படை கேள்வியை பாதிக்க இந்த புதிய பேசுபொருளான குற்றத்தால் முடிந்திருக்கிறது.
இறைவனின் இருப்பு பற்றிய ஆழமான சிந்தனைகளில் ஆட்பட்டிருந்த அல்லது அப்படி ஒரு சிக்கலான கேள்வியில் முழுமையாகவே மூழ்கிவிட அன்றுவரை தவம் செய்துகொண்டிருந்த தஸ்தாயெவ்ஸ்கி ’குற்றத்தை’ மனிதனின் ஆதிபாவமாக குறியீட்டு ரீதியாக விரிவாக்கியவுடன் அவரது கலைமனம் தன்னை முழுமையாகவே வெளிப்படுத்திவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அதிலிருந்து க்ரைம் நாவலாசிரியரான தஸ்தாயெவ்ஸ்கி பைபிளின் இயல்பை வெளிப்படுத்தும் நாவலாசிரியராக வளர ஆரம்பிக்கிறார். ’மதிப்பிற்குரியவர்களே, சொந்த தந்தையின் மரணத்தை விழையாத யாராவது ஒருவர் இருக்கிறீர்களா?’ என்று இவான் கேட்கும்போது, ‘ மரியாதைக்குரியவர்களே, நான் என் தந்தையை கொலை செய்யவில்லை. ஆனால் செய்யாத கொலைக்கு கிடைக்கும் தண்டனையை நான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறேன். எனக்கு இறைவன் காட்டும் மீட்பிற்கான வழி என்று அதை எடுத்துக்கொள்கிறேன்’ என்று மித்யா சொல்வது ’ நானும் ஒரு கரமசோவ். அதனால் நானும் பாவிதான்’ என்று அல்யோஷா குற்றவுணர்வின் வெம்மையை அனுபவிக்கும்போது, மித்யாவின் செயல்பாடு தந்தைக்கொலைக்குதான் இட்டுச்செல்லும் என கண்டுகொள்ளும் ஃபாதர் ஸோசிமாவ் நிகழப்போகும் அந்த குற்றத்தின் முன் பயபக்தியுடன் தலை வணங்கும்போது தஸ்தாயெவ்ஸ்கியின் புனைவுலகில் ’குற்றம்’ என்பதன் குறியீட்டு ரீதியான முக்கியத்துவம் என்ன என்பதை நம்மால் தெளிவாக காணமுடியும். சாதாரணமாகப் பார்த்தால், தஸ்தாயெவ்ஸ்கியின் கதாப்பாத்திரங்கள் செய்யும் கொலைகளை கசாப்புக்கடையில் குருதித்துளிகள் சொட்டும்படி இறைச்சி வெட்டப்படுவது போல இங்கு மனித இறைச்சி வெட்டப்படுகிறது என்று தோன்றும். ஆனால், அப்படி அல்ல. ஒவ்வொரு நாவலிலும் ’குற்றம்’ நிகழ்ந்து அதன் பாதிப்புகள் காட்டப்பட்டு நாடகீய உச்சத்தை அடையும்போது கதாப்பாத்திரங்கள் எதிர்கொள்ளும் சித்திரவதையான அனுபவங்கள் மனித இனத்தின் ஒட்டுமொத்தமான குற்றவுணர்வாக, பச்சாதாபமாக மாறுகின்றன. அந்த பச்சாதாபத்தையும் குற்றவுணர்வையும் வெளிப்படுத்துபவர்கள் இந்த உலகத்தை சேர்ந்தவர்கள் அல்ல. என்றென்றைக்குமானவை மட்டுமே கொண்ட வேறு ஒரு உலகிலிருந்து வலியை சகித்துக்கொண்டு ஆனந்தமடையும் ஆன்மாக்கள். அவர்கள் எழுப்பும் அசிரீரிகளைதான் நாம் தஸ்தாயெவ்ஸ்கியின் கதாப்பாத்திரங்கள் வழியாக கேட்கிறோம். அதனால் தஸ்தாயெவ்ஸ்கியின் க்ரைம் நாவல்களை பைபிளை போல மறைபிரதிகளை ஏற்படுத்தும் ‘நாவல்-பைபிள்’ என்றுதான் சொல்லமுடியும்.
தமிழில் அழகியமணவாளன்
நான்கு நூல்களும் எழுத்து இதழ்த் தொகுப்பும்
அன்பின் ஆசிரியருக்கு,
வணக்கம். நெடுநாட்களுக்குப் பிறகு உங்களுக்கு எழுதுகிறேன். நலம் விழைகிறேன். நீங்கள் வெளியிட்ட மதாரின் ‘வெயில் பறந்தது’ கவிதைத் தொகுதிக்குப் பின் நான்கு நூல்கள் இப்போது வெளிவருகின்றன. நூல்களைப்பற்றி சில வார்த்தைகள்.
நாரத ராமாயணம் – புதுமைப்பித்தன்
இந்நூலுக்கு இதுவரை நம்பகமான ஆய்வுப் பதிப்பு வெளியாகவில்லை. இருவேறு மறுபதிப்புகள் இருந்தும் அவை பிழைகள் உள்ளவையே. அவற்றில் உள்ள குறைகள் களையப்பட்ட மறுபதிப்பு இது. முன்னோடிப் பதிப்பாசிரியர்கள் இந்நூலை இதுவரை பதிப்பிக்கவில்லை என்பதை அறிய ஆச்சரியம் மேலிட்டது. அதுவே இப்பதிப்பைக் கொண்டுவருவது குறித்த ஊக்கத்தையும் கூடவே கொஞ்சம் தயக்கத்தையும் கொடுத்தது. ஆ. இரா. வெங்கடாசலபதி அவர்களிடம் இந்நூலை வெளியிடும் விருப்பத்தைப் பகிர்ந்துகொண்டபோது அவர் அளித்த ஆலோசனைகள் என் தயக்கத்தைப் போக்கின. விரைவில் இந்நூலுக்கு அவரது செம்பதிப்பும் வரவுள்ளது. நாரத ராமாயணத்தின் இந்தப் பதிப்பை சுகுமாரன் தி. ஜானகிராமன் சிறுகதைகளுக்குச் செய்தது போன்ற ‘ஆர்வப் பதிப்பு’ என்று சொல்லலாம். நண்பர் சிவராமன் அவர்களுடனான உரையாடல்களும் இந்நூலை பதிப்பிக்கும் விருப்பத்திற்கு உறுதி சேர்த்தன. ஓராண்டுக்கு முன் மின்னூலாக வெளியானதுபோது அதிகமாக வாசிக்கப்பட்டாலும் அதன் வழியே இந்நூலைப் பற்றிய குறிப்பிடத்தக்க வாசிப்புகள் வரவில்லை. (எஸ்.ரா.வின் கட்டுரையும் ஜமாலனின் கட்டுரையும் இணையத்தில் கிடைக்கின்றன.) இப்போது இந்நூலுக்கு உரிய கவனம் கிடைக்கும் என நம்புகிறேன்.
வாசிகள் – நாரணோ ஜெயராமன்
எழுபதுகளில் கசடதபற, ஞானரதம், பிரக்ஞை, அஃக் ஆகிய இதழ்களில் வெளியான நாரணோ ஜெயராமனின் ஒன்பது கதைகள் அடங்கிய தொகுப்பு. அவர் எழுதிய எல்லா கதைகளும் இதற்குள் வந்துவிட்டன. பொன். தனசேகரன், என். சிவராமன், க்ருஷாங்கினி, அழகியசிங்கர், விமலாதித்த மாமல்லன், ஜி. குப்புசாமி ஆகியோரின் முயற்சியால் தொகுக்கப்பட்டது. ஜனமித்திரன் இக்கதைகள் பற்றி முன்னுரை வழங்கியிருக்கிறார்.
நான் கண்ட மகாத்மா – தி. சு. அவினாசிலிங்கம்
பாவண்ணன் அவர்கள் ஓர் உரையாடலில் இந்நூலைப் பற்றிக் குறிப்பிட்டுப் பேசினார். இந்நூலின் முதல் பதிப்பைக் கொடுத்துப் பதிப்பிக்க உதவியதும் அவரே. இந்நூலைப் பற்றிய அவரது விரிவான கட்டுரை ‘சத்தியத்தின் ஆட்சி’ நூலில் இடம்பெற்றிருக்கிறது. அந்த நூலைத் தொடர்ந்து ‘எல்லாம் செயல்கூடும்’, ‘மண்ணில் பொழிந்த மாமழை’ என மேலும் இரண்டு கட்டுரைத் தொகுதிகளும் வெளிவந்துவிட்டன. அதற்காக அவர் மேற்கொண்ட தேடலும் உழைப்பும் மிகப்பெரியது. மூன்று நூல்களிலும் அவர் அறிமுகப்படுத்தியிருக்கும் காந்திய ஆளுமைகள் பற்றிய பல நூல்கள் நெடுங்காலமாக மறுபதிப்பு காணாதவை. அவை ஒவ்வொன்றையும் மீள்பதிப்பு செய்யவேண்டிய பொறுப்பு பதிப்பாளர்களுடையது. அதில் முதல் சிறு பங்களிப்பு இந்நூல்.
திருச்சி ஜெயில் – எல். எஸ். கரையாளர்
இந்நூலைப் பற்றி உங்கள் ‘முன்சுவடுகள்’ நூலில் அறிமுகம் கிடைத்தது. தமிழினி பதிப்பகம் சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன் மறுபதிப்பு செய்தது. ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்திலிருந்து நவயுகப் பிரசுராலயம் வெளியிட்ட முதல் பதிப்பும் கிடைத்தது. முதல் பதிப்பைக் கொண்டே இந்தப் பதிப்பு வெளியாகிறது. முதல் பதிப்பின் முன்னுரைகள், சிறையில் இருந்த சத்தியாக்கிரகிகளின் பெயரும் கைதி எண்ணும் கொண்ட அட்டவணை ஆகியவை இப்பதிப்பிலும் உள்ளன. இந்நூலைப் பதிப்பிக்கும் அனுமதியைப் பெற நூலாசிரியரின் மகன் டாக்டர் ஜவகர் ராமநாதன் அவர்களைச் சந்தித்து அனுமதி பெற்றோம். அவர் கனிவோடு இந்நூலைக் மீள்பதிப்பு செய்யும் வாய்ப்பைத் தந்திருக்கிறார்.
வரும் ஞாயிற்றுக்கிழமை இந்நூல்களுக்கான சிறு அறிமுகக் கூட்டம் நெல்லையில் நடக்கவுள்ளது. ஒருநாள் இந்நூல்களை உங்களிடம் அளிக்க வேண்டும்.
*
கிண்டில் மின்னூல் வெளியிடும் வேலை நின்றுபோய் இரண்டு மாதம் ஆகிவிட்டது. நாட்டுடைமையான க. நா. சு. நூல்களுக்கு ஒருவர் உரிமை கோரியதால் 2017 முதல் வெளியிட்டிருந்த நூற்றுக்கணக்கான நூல்களும் மொத்தமாக நீக்கப்பட்டுவிட்டன. என் கணக்கும் முடக்கப்பட்டுவிட்டது. மீட்கும் முயற்சி பயனளிக்கவில்லை. பலர் உதவியும் ஊக்கமளித்தும் வந்ததால் செய்யமுடிந்த பணி. இதைத் தொடரமுடியாத நிலையை எண்ணும்போது சோர்வாக இருக்கிறது. இருப்பினும் அச்சில் வெளியிடத் திட்டமிட்டிருந்த நூல்கள் வெளியாகும் தருவாயில்தான் இது நிகழ்ந்திருக்கிறது. கூடியவரை அச்சில் நூல்களைத் தொடர்ந்து வெளியிட முயல்வேன்.நான்கு நூல்கள் அச்சில்
*
‘எழுத்து’ இதழ்களை மின்னூல்களாக்கி வெளியிடும் வேலையும் நடந்துகொண்டிருக்கிறது. இதுவரை 10 இதழ்கள் முடிந்துள்ளன. மொத்தம் 2500 பக்கங்களுக்கு மேல் கொண்ட 112 இதழ்கள். முழுக்க முழுக்க ‘எழுத்து’க்கு மட்டுமே இடமளித்திருப்பதால் ஒவ்வொரு இதழுமே மின்னூலாக நூறு பக்கங்களை எட்டுகிறது. இப்பணி செப்டம்பர் 29ஆம் தேதி செல்லப்பாவின் பிறந்தநாளில் தொடங்கியது. சரியாக ஓராண்டிற்குள் முடிக்கவேண்டும் என்று நினைக்கிறேன். அடுத்து ‘சொல் புதிது’ இதழையும் இப்படிச் செய்யவேண்டும் என்று ஆவல். ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும்.
எழுத்து இதழ்த் தொகுப்பு
https://cutt.ly/6EYJg1G
அன்புடன்
ஸ்ரீநிவாச கோபாலன்
அன்புள்ள ஸ்ரீநிவாச கோபாலன்
முதல்விஷயம், க.நா.சு நூல்கள் தவிர எஞ்சிய நூல்களுக்கு காப்புரிமை இல்லை என்றால் வலையேற்றம் செய்யலாம். உங்களிடம் பழைய பிரதிகள் இருக்கும் அல்லவா?
நாட்டுடைமை ஆக்கப்பட்ட க.நா.சுவின் நூல்களுக்கு பொய்யாக உரிமைகோரிய திரு.அருண்குமார் மீது சட்டநடவடிக்கை எடுக்கமுடியும். அதற்கான சட்ட உதவிகளை செய்கிறோம். அவர் இந்தியாவில் இருந்தாரென்றால் அவர்மேல் குற்றவியல் மோசடிச் சட்டம் கீழ் வழக்கு தொடுக்கலாம். அதை நீங்கள்கூட செய்யவேண்டியதில்லை. ஒரு வாசகர் குழுமம் அமைத்தே செய்யமுடியும். அவர்மேல் மோசடி வழக்கு தொடுத்துள்ள செய்தியை அமேஸானுக்கு தெரிவிக்கலாம்.
[ஆனால் அந்த அருண்குமார் என்னும் ஐடி போலிப்பெயரில் இணையத்தில் உலவும் விஷமிகளில் ஒருவராகவே இருப்பார். இங்கே சட்டபூர்வமாக நூல்களை வெளியிடுபவர்களை மோசடிப்பேர்வழிகள் தடைசெய்ய முடிகிறது. சட்டவிரோதமாக திருட்டு நூல்களை இணையத்தில் வெளியிடுபவர்களை எதுவுமே செய்யமுடிவதில்லை]
இந்நூல்கள் பல அச்சில் இல்லாதவை, அவை இணையத்தில் கிடைப்பது மிகச்சிறந்த விஷயம். ஈழநூல்களுக்கு இப்படி ஓர் அரிய சேகரிப்பு உள்ளது. அது ஓர் அமைப்பால் செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் தனியொருவராக செய்கிறீர்கள்
வாழ்த்துக்கள்
ஜெ
கேளாச்சங்கீதம் – கடிதங்கள்-2
‘அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
வணக்கம்
மீண்டும் ஒரு சிறுகதை. பரவசமும் பழைய நினைவுகளும் மகிழ்ச்சியுமாக வாசித்தேன். நீலி அவுரிச்செடியும் வருவதால் கூடுதல் மகிழ்ச்சி. நீலியின் பல்வேறு மருத்துவப்பயன்களில் முதன்மையானது விஷம் முறிக்கும் அதன் தன்மைதான்.
நானே கதைசொல்லியாக, அணைஞ்சபெருமாளின் கூட வந்தவராக, கொச்சன் வைத்தியரிடம் கேள்விகள் கேட்டுக்கொண்டு இருந்தெனென்றும், இல்லையில்லை நான்தான் கணேசனென்றும் ஒரே சமயத்தில் தோன்றியது
கணேசனைப்போல,அன்பெனும், நேசமென்னும், காதலென்னும், பிரியமெனும் பிடியில் அகப்பட்டுக்கொண்டிருக்காதவர்கள், அந்த நஞ்சை அருந்தாதவர்கள் இருக்கமுடியாதல்லவா? எவ்வளவு விஷம் உள்ளே போனதென்பதில்தான் வேறுபாடு இருக்க முடியும்
“ தேனுதான் தேனீயை ஒண்ணாச் சேந்து ஒற்றைக்கூடா வச்சிருக்குது. தேனீ தேனிலே பிறந்து வளருது. தேன் தேடி அலையுது. தேனிலே சாவுது … அந்த தேனுதான் இது. இது அமிர்த மதுரம். நோயா வரும். சாவா வரும். அப்பமும் இது மதுரம்தான் ”
நெஞ்சில் விஷம் நிறைந்து பூத்திருக்கிற, பெரும்பாறைகளை உச்சிமலையில் கட்டிவைத்திருக்கும் கொலைப்பகவதியின் பூட்டில் சிக்கிக்கொண்டிருக்கும் கணேசனை பிரியமாக பார்த்துக்கொண்டிருந்தேன். அப்படி இனிய துயரில் இருப்பதும் ஒரு கொடுப்பினைதான்.லக்ஷ்மி மணிவண்ன்ன் சொல்லி இருப்பார் ஒரு கவிதையில் தூய அன்பென்னும் துயர் என்று.
இப்படி ஒரு சம்பவம் என் வீட்டிலும் நடந்தது. ஒரு பெண்ணின் பிரியத்தில் விழுந்த ஒருவரை வீட்டு பெரியவர்கள் யாரோ கைவிஷம் வைத்து விட்டதாக நம்பினார்கள். மருந்து வைப்பது என்று இங்கு சொல்வார்கள்
என் அப்பாவின் ஆசிரியரான ஒரு பெரியவரின் குடும்பத்துக்கு சொந்தமான பகவதி கோவிலில் இதை கண்டுபிடிக்க முடியும் என்று சம்பந்தப்பட்டவரை தவிர மற்ற எல்லோருமாக போனோம். கேரளாவில் ஒரு சின்ன கிராமத்தில் கோவில். பெரியவருக்கு தள்ளாத வயது, ஆனாலும் கோவிலில்தான் இருந்தார். அவர் மகன் அங்கு பூசை செய்து கொண்டிருந்தார். தீர்த்தம் வழங்குகையில் எனக்கு மட்டும் செம்பிலிருந்த சிறு நந்தியாவட்டை மலர் கையில் விழுந்த்து. ’’என்ன நட்சத்திரம் நீ’’ என்று அவர் என்னை அப்போது கேட்டது நினைவிருக்கிறது
கோவில் பிரகாரத்தில் இருந்த சின்ன சிலைக்கு பாலாபிஷேகம் செய்கையில் பாலின் நிறம் நீலமாக மாறினால் கைவிஷம் வைத்தது உறுதியாகும். வீட்டிலிருந்து பால் கொண்டு போயிருந்தோம் அது முருகன் சிலை என்றுதான் நினைவு பலவருடங்கள் ஆகிவிட்டன. எங்களுக்கு முன்பாக அதன் மீது வேறு சிலரும் வீட்டிலிருந்து கொண்டு வந்த பாலை ஊற்றினார்கள் வழிந்து அப்படியே நிறம் மாறாமல் கீழே வந்தது. எங்களுக்கும் அப்படியேதான் வரும் என்று நினைத்திருந்தேன் கொஞ்சம் அசுவாரசியமாக கூட இருந்தேன் என்றும் சொல்லலாம். ஆனால் அந்த நின்ற கோலத்திலிருந்த சிறு கரிய சிலை மீதிருந்து எங்கள் வீட்டு பாலை ஊற்றுகையில நீலமாக கீழே வழிந்தது.
நம்பவே முடியாமல் திகைத்துபோய் பார்த்துக்கொண்டிருந்தேன் ’’அவரை அவர் வழியிலேயே விட்டுவிடுவதை தவிர வேறு வழியில்லை ’’என்று பெரியவர் சொன்னார் வாடகைக்காரில் போயிருந்தோம் வீடு திரும்பும் வரை சம்பந்தபட்டவரின் அம்மா ஒருவார்த்தை கூட பேசாமல் கண்ணீருடன் அமர்ந்திருந்தார்.
கேளாச்ச்சங்கீதம் கேட்டவரை அப்படியேதான் விட்டுவிட்டோம்
அன்புடன்
லோகமாதேவி
அன்புள்ள ஜெ
கேளாச்சங்கீதம் படித்து திகைத்துப் போய்விட்டேன். இது என்னுடைய தம்பியின் வாழ்க்கை. இது ஏன் நிகழ்கிறது என்று சொல்லிவிடமுடியாது. இன்றைய நவீன யுகத்தில் மூடநம்பிக்கைக்கு எல்லாம் இடமில்லை. இது ஏதோ உளவியல்நிகழ்வு. அல்லது மூளையின் செரட்டோனின் விளைவு. ஆனால் இது இருக்கிறது. கண்முன் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.
தம்பி ஒரு பெண்மேல் பித்தாக ஆனான். இவ்வளவுக்கு படிப்போ பழக்கமோ இல்லாதவன் கிடையாது. நல்ல படிப்பு. ஏராளமான பெண்கள் தோழிகளாகவும் இருந்தனர். உற்சாகமான வாழ்க்கை. ஆனால் ஏதோ நடந்தது. ஒருபெண்மேல் பைத்தியமாக ஆனான். அவள் இவனுக்கு தெரிந்தவள். ஆனால் திருமணம் ஆனவள். அவள் மெல்லிசையில் பாடுவாள். அதுதான் காரணமாக இருக்கலாம்.
யார் சொன்னாலும் கேட்கமாட்டான். அப்பா அடித்ததில் கையெலும்பே ஒடிந்துவிட்டது. இரவும் பகலும் அவள் நினைப்பு. அவள் போகும் பாதையிலோ அவள் வீட்டு முன்னாடியோ நிற்பான். அவள் பெயரை ஒரு நாநூறு பக்கம் நோட்டு முழுக்க எழுதி வைத்திருந்தான். அவளுடைய ஆடைகளை திருடிக்கொண்டு வந்துவிடுவான். கடைசியில் போலீஸ் கேஸ் ஆகியது. அடி கிடைத்தது. ஆனாலும் அவனால் மீள முடியவில்லை
அவனுக்கு அவ்வப்போது மீளவேண்டும் என்று தோன்றும். ஆனால் மீளவே முடியாது. மறுபடி அங்கே போய்விடுவான். அவனை வெளியூரில் கொண்டுவிட்டால் திரும்பி வந்துவிடுவான். இப்படியே மூன்றாண்டுகள். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து சரியாகிவிட்டான். ஆனால் படிப்பு போய்விட்டது. ஒரு சின்ன கம்பெனியில் வேலை செய்கிறான். இப்போது அவனுக்கு அதெல்லாம் பெரிதாகப் படவில்லை. இப்போது கொஞ்சம் குடிப்பழக்கம் உண்டு. ஆளே மாறிவிட்டான். கொஞ்சம் பொறுக்கி மாதிரி அடிக்கடி பேசுவான். அந்தப்பெண் மேல்கூட எந்த பிரியமும் இப்போது இல்லை.
கேளாச்சங்கீதம் அந்த மனநிலையை பூடகமாகவும் உருவகமாகவும் சொல்கிறது. அதைப்படிக்கையில் இதெல்லாம்தான் வாழ்க்கை என்ற நினைப்பு வந்தது
ஆர்
October 28, 2021
வாசகன் அடிமையா?
அன்புள்ள ஜெ,
நலம்தானே? இந்நாட்களில் தொடர்ச்சியாக சில விவாதங்கள் நண்பர்கள் நடுவே ஓடிக்கொண்டிருக்கின்றன. அதில் அடிக்கடி அடிபடும் ஒரு வாதம் என்னை தொந்தரவு செய்கிறது. உங்களுக்குத் தெரியும், நான் உங்களுடைய தீவிரமான வாசகன். சென்ற சில ஆண்டுகளாக உங்களை அதிதீவிரமாக வாசிக்கிறேன். என் நண்பர்கள் சொல்லும் முக்கியமான குற்றச்சாட்டு ‘ஒருவரை மட்டுமே முக்கியமாக வாசிக்காதே. அவர் உன்னை பாதித்துவிடுவார். உடனே அவரைவிட்டு விலகு.வேறு எதையாவது படி” இது திரும்பத்திரும்ப சொல்லப்படும் உபதேசம்.
“ஜெயமோகன் குருபீடமாக இருக்கிறார். மடம் கட்டியிருக்கிறார். அவருடைய வாசகர்கள் எல்லாம் கொத்தடிமைகள்” இது வழக்கமாக வைக்கப்படும் ஒரு குற்றச்சாட்டு. “அவர் எவரையும் வளர விடமாட்டார். அவரை அணுகினால் வளர முடியாது” இப்படிச் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். “சுயசிந்தனை வேண்டும் என்றால் சுதந்திரமாக இருக்கவேண்டும். எவரையும் அணுகக்கூடாது. எவரும் நம்மை பாதிக்க விடக்கூடாது. நம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்” என்கிறார்கள்.
நான் இதெல்லாமே அபத்தமான சிந்தனைகள் என்று நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறேன். ஆனால் இதை நீங்களே கோர்வையாக விளக்கவேண்டும் என நினைக்கிறேன். அந்தக் கட்டுரையை இதற்கெல்லாம் பதிலாக அனுப்பிக்கொண்டே இருக்கலாம்.
ராஜசேகர் பி.
அன்புள்ள ராஜசேகர்,
இதற்கும், இதேவகையான பல கேள்விகளுக்கும் முன்பும் விரிவாக பதிலளித்திருக்கிறேன். தொடர்ச்சியாக இந்த கேள்வி எழுந்துகொண்டே இருக்கிறது. ஏனென்றால் இலக்கியச் சூழலில் இன்று எவ்வகையிலாவது இலக்கியத்தை அறிந்து உள்ளே வருபவர்களை விட இலக்கியத்துக்குச் சம்பந்தமே இல்லாமல் சமூகவலைத்தளங்கள் வழியாக வந்துசேர்பவர்கள் மிகுதி. அவர்கள் அடிப்படையில் சுரணையற்றவர்கள். அறிவியக்கம், இலக்கியம் பற்றி ஏதும் தெரியாதவர்கள். அதைவிட அவற்றின் முக்கியத்துவம் பற்றிய பிரக்ஞையோ மதிப்போ இல்லாதவர்கள்.பெரும்பாலும் எளிமையான அரசியல்சார்புகள் கொண்டவர்கள். அதற்கு அடிப்படையாக இருப்பவை சாதி, மதம்.
இந்தப் பதில்கள் எல்லாமே அவர்களுக்குத்தான். இலக்கியவாசிப்பு கொண்டவர்களுக்கு இதை பெரிதாக விளக்க வேண்டியதில்லை. இந்த பெருங்கும்பம் நம்மைச் சூழ்ந்து ஞொய் என ஒரு சத்தத்தை எழுப்பிக்கொண்டே இருக்கிறது. அவர்களில் சற்றேனும் நுண்ணுணர்வுள்ளவர்களிடம் இதையெல்லாம் பேசலாம். மற்றவர்களிடம் நேரவிரயம் செய்யக்கூடாது.
இனி உங்கள் கேள்விகள். முதல் விஷயம், நம்மை பாதிக்கும் எழுத்தாளர்களிடமிருந்து விலகவேண்டுமா? சரி, விலகி? நம்மை கொஞ்சம்கூட பாதிக்காத எழுத்தாளர்களை வாசித்து என்ன அடையப்போகிறோம்? இலக்கியம் எழுதப்படுவதே பாதிக்கவேண்டும், ஆட்கொள்ளவேண்டும் என்னும் நோக்குடன்தான். ஓர் இலக்கிய ஆக்கம் நம்மைப் பாதிக்கிறதென்றால் அது நம் தர்க்கபுத்தியை வெல்கிறது, நம் கற்பனையை தூண்டுகிறது, நாம் எண்ணாதவற்றை எண்ணவும் காணாதவற்றை காணவும் செய்கிறது என்றே பொருள். அதுதான் இலக்கியத்தின் செயல்முறை. ஆகவே நல்ல ஆக்கம் வாசகனை மூழ்கடிக்கும், தன்னுள் இழுத்துக்கொள்ளும், அவனை மாற்றியமைக்கும். அப்படிச் செய்பவைதான் உலகத்து உயர்படைப்புக்கள். அவற்றை எல்லாம் தவிர்த்துவிட்டு ‘பொத்தினாற்போல’ வாழவேண்டும் என்கிறார்களா?
உண்மையில் அதைத்தான் இந்த மொண்ணைகள் நம்மிடம் சொல்கிறார்கள். அது நடுத்தரவர்க்க மனநிலை. எந்தச் சிக்கலிலும் மாட்டிக்கொள்ளாமல், எந்த பிரச்சினையையும் எதிர்கொள்ளாமல் ‘நாம உண்டு நம்ம சோலி உண்டு’ என இருந்துவிடுதல்தான் நடுத்தரவர்க்கத்தின் உச்சகட்ட வாழ்க்கைத் தரிசனம். தீனி, செக்ஸ், சாதிமத அடையாளங்கள், சில்லறை அரசியல், சினிமா, மேலும் கொஞ்சம் வம்பு இவ்வளவுதான் அவர்கள் கண்ட வாழ்க்கை. அவ்வாறு இருந்து சாகவிரும்பும் ஆத்மாக்களுக்கு ஏது இலக்கியம்? என்ன அறிவியக்கம்? அது வேறொரு உலகம். புழுக்களின் உலகம். அவ்வுலகுடன் அறிவியக்கவாதிக்கு உரையாடலே இல்லை.
நம்மைப் பாதித்து ஆட்கொள்ளும் படைப்புக்கள் நம்மை அழிப்பதில்லை, நம்மை அடிமைப்படுத்துவதில்லை. ஏனென்றால் ஒரு படைப்பு உங்களை ஆட்கொள்கிறதென்றால் அது உங்களை விடமேலான ஆன்மிகத்துடன், கவித்துவத்துடன், அறிவுத்தரத்துடன் இருக்கிறது. உங்களுக்கு அது ஓர் அறைகூவலையே விடுக்கிறது. அதை எதிர்கொள்ள உங்கள் ஆன்மிகமும் கற்பனையும் அறிவும் கூர்கொள்கின்றன. நீங்கள் உங்கள் உச்சகட்ட ஆற்றலை வெளிப்படுத்துகிறீர்கள். ஆகவே ஆட்கொள்ளும் படைப்பு உங்களை மழுங்கடிப்பதில்லை. உங்களை கூராக்குகிறது.
இதை நல்ல படைப்பை வாசிக்கும் எவரும் அறியமுடியும். அந்தப்படைப்பு வழியாக நாம் முன்னேறுகிறோம், அடுத்த படிக்குச் செல்கிறோம். ஒரு படைப்பை எப்படி கடந்து செல்கிறோம்? அந்தப்படைப்பை முழுமையாக உள்வாங்குவதன் வழியாகத்தான். அவ்வாறுதான் நாம் இலக்கிய ரசனையிலும் அறிவுத்திறத்திலும் வளர்ந்து வந்திருக்கிறோம். ஒரு பெரும்படைப்பு நமக்கு விடுவது ஓர் அறைகூவலை . அதை எதிர்கொண்டே நாம் நம்மை மேலெடுக்கமுடியும்.
அதிலுள்ள இன்பமும் வெற்றியின் நிறைவும் சாமானியர்களுக்குப் புரியாது. ‘கஷ்டப்பட்டு புக்கு படிக்கிறான்’ என இலக்கியவாசகனைப் பற்றி நினைப்பவர்கள் அவர்கள். ஆகவே மேலும் மேலும் ஆட்கொள்ளும் படைப்புகளை நாடிச்செல்லுங்கள். அதன்பெயர்தான் அறிவுப்பயணம், இலக்கியப்பயணம். அத்தனை இலக்கியவாசகர்களும் செய்யும் பயணம் உண்மையில் அதுதான்.
சில மொண்ணைகள் ஓர் இலக்கிய ஆக்கத்தை ’விமர்சனமின்றி’ ஏற்கவேண்டுமா என்பார்கள். முதலில் அது நம்மை ஆட்கொள்ள அனுமதிக்கவேண்டும். விமர்சனத்தால் அதை முதலிலேயே தடுத்துவிட்டால் அதன்பின் அந்த படைப்புக்கும் நமக்கும் தொடர்பே இல்லை. அதை படிப்பதற்கு முன்னரே நாமிருக்கும் நிலையில் நின்றபடியே நாம் அதன்மீதான விமர்சனங்களை உருவாக்கிக் கொள்வதைப்போல ஒரு படைப்பை வெளியே நிறுத்தும் செயல் இன்னொன்றில்லை. எதை வாசித்தாலும் நான் மாறவே மாட்டேன், லாந்தர் கம்பமாக நின்ற இடத்திலேயே நிற்பேன் என்பது ஒருவரின் நிலைபாடு என்றால் அவர் வாசிக்கவேண்டிய தேவையே இல்லை.
ஒரு நூலை வாசித்ததும் அதற்கு ‘எதிரான’ நூலை வாசித்து அதன்மீதான விமர்சனத்தை உருவாக்கிக் கொள்ளவேண்டும் என்பவர்கள் எதையுமே வாசித்ததில்லை என்று பொருள். ஒரு நூலை வாசிக்கையில் நாம் அந்நூலுடன் சேர்ந்து வளர்கிறோம். அந்நூலை நாம் கடந்ததும்தான் அதன்மீதான விமர்சனங்கள் உருவாகின்றன. அவ்விமர்சனங்கள் வெளியே இன்னொருவரால் அளிக்கப்படுவன அல்ல. நாமே நம்முள் இருந்து உருவாக்கிக் கொள்பவை. நம் வாழ்க்கைநோக்கும் நம் ஆன்மிகப்பயணமும் நம் அறிவுத்தர்க்கமும் நமக்கு அளிப்பவை.
அவ்வாறு நம் கருத்தை உருவாக்கிக்கொள்வதற்காகவே நாம் வாசிக்கிறோம். அன்றி, அவர் அபபடிச் சொல்கிறார், இவர் இப்படிச் சொல்கிறார் என்று பேசிக்கொண்டிருப்பதற்காக அல்ல. நல்ல இலக்கியவாசகன் படைப்புகளைப் பற்றிய ‘தன்’ கருத்தையே சொல்வான். அது அவன் அப்படைப்பை உள்வாங்கி, உணர்ந்தமையால் விளையும் கருத்து.
ஓர் எழுத்தாளன் நம்மை கவர்கிறான், நம்மை ஆட்கொள்கிறான் என்றால் அதற்கு என்ன பொருள்? நாம் மண்ணாந்தைகள், அந்த எழுத்தாளன் மாயாவி என்றா? அப்படித்தான் உங்களிடம் பேசும் பாமரர்கள் நினைக்கிறார்கள். இலக்கியவாசகன் அறிவிலியோ அப்பாவியோ அல்ல. அவன் இங்குள்ள லட்சம்பேரில் ஒருவன். மிக அரிதானவன். அவனுக்குத்தெரியும் எது உண்மை எது பொய் என. எது பாவனை எது ஆழம் என. அவன் தன் அனுபவத்தையும் ரசனையையும் அறிவையும் முன்வைத்தே வாசிக்கிறான்.
வாசகனும் எழுத்தாளன் அளவுக்கே நுண்ணுணர்வும் அறிவும் கொண்டவன்தான். ஒரு நல்ல படைப்பு அந்தப்படைப்பின் அறிவுத்தரத்தை நோக்கி ,நுண்ணுணர்வுத்தளம் நோக்கி ,ஆன்மிகநிலை நோக்கி அதன் வாசகனை இழுக்கிறது. அவனை ஆசிரியனுக்கு நிகராக அமரச்செய்கிறது. பலசமயம் ஆசிரியனை விட மேலே கொண்டுசெல்கிறது. அந்நிலையை அடைந்தால் நாம் அந்த ஆசிரியனை இயல்பாகக் கடந்துசெல்கிறோம்.
கடந்துசெல்கிறோம் என்றால் அவனை நிராகரிக்கிறோம் என்றல்ல பொருள். அவனிடமிருந்து நமக்கான ஒன்றை உருவாக்கிக் கொள்கிறோம், நமது வழியொன்றை அவனிடமிருந்து திறந்துகொள்கிறோம் என்றுதான் பொருள். அவனை எதிர்த்துச் செல்கையிலேயேகூட அந்த வழி அவனிடமிருந்து உருவானது என அறிந்திருக்கிறோம்.
ஓர் எழுத்தாளன் என்னை ஆட்கொள்கிறான் என்றால் அதன் பொருள் நானும் அவனும் சந்திக்கும் புள்ளிகள் மிக ஆழமானவை என்று மட்டும்தான்.காஃப்காவை அப்படி தன் மெய்யாசிரியனாகக் கொண்டவர்களை நான் அறிவேன். எனக்கும் காஃப்காவுக்கும் சந்திப்புப்புள்ளிகள் இல்லை. எனக்கு தல்ஸ்தோயும் ஹெர்மன் ஹெஸ்ஸும் தான்.
இவ்வாறு ஆட்கொள்ளும் படைப்பாளிகளையே நாம் வெறிகொண்டு வாசிக்கிறோம். அவர்களையே நாம் முழுமையாக அறிகிறோம். அவர்களாகவே நாம் மாறுகிறோம். அப்போது அவர்களாக மாறாமல் நம்முள் எஞ்சும் ஒரு ‘மிச்சத்தையும்’ உணர்கிறோம். அங்கிருந்து நாம் நம் பாதையை கண்டடைகிறோம். ஓர் இலக்கியவாசகன் படைப்பாளியிடம் சொல்வது “என்னை பாதிக்காதே, அப்பாலே போ சாத்தானே!” என்று அல்ல. “வா, என்னை விழுங்கு. என்னை ஆட்கொள். என்னை நிறை. என்னில் எஞ்சுவதென்ன என்று பார்க்கிறேன். உன்னிலிருந்து மேலெழுகிறேன்” என்றுதான்.
“எல்லாரையும்தான் படித்திருக்கவேண்டும்” என்பார்கள். நீங்கள் இலக்கியத்தில் முனைவர் பட்டம்பெறவேண்டுமென்றால் அப்படிப் படிக்கலாம். இலக்கிய விமர்சகர் என்றால் அதைச் செய்யலாம். வாசகர் என்றால் உங்களை பாதிக்காத எதையும் படித்து நேரவிரயம் செய்யவேண்டாம்.
*
என் வாசகர்கள், விஷ்ணுபுர வாசகர்வட்ட நண்பர்கள் அளவுக்கு வெளியே எவரும் இலக்கியம் வாசிப்பதில்லை. சொல்லப்போனால் வெளியே உள்ள படைப்பாளிகளே தங்கள் நல்ல வாசகர்களை இங்கேதான் கண்டடைகிறார்கள். அதை பலர் சொல்லியுமிருக்கிறார்கள். வெளியே எவர் இன்னொரு ஆசிரியரைப்பற்றி ஏதாவது பேசுகிறார்கள் என்று சும்மா ஒருமுறை பாருங்கள், தெரியும்.
தமிழின் எந்த நல்ல படைப்பையும் எடுத்து பெயரை அடித்து கூகிளில் தேடுங்கள். என் தளமோ அல்லது இன்னொரு தளமோ திறக்கும். நீங்கள் காணும் கட்டுரைகள் பெரும்பாலும் எங்கள் நண்பர்வட்டத்திற்குள் உள்ள ஒருவர் எழுதியவையாகவே இருக்கும். தமிழில் எந்த எழுத்தாளரைப் பற்றி ஒரு மலரோ இதழோ போட்டால் பாதிக் கட்டுரைகள் எங்கள் நண்பர்கள் எழுதியவையாகவே இருக்கும். பல நூல்களைப்பற்றி வேறு எவருமே எழுதியிருக்கமாட்டார்கள்.
அவர்கள் ‘ஓர்’ எழுத்தாளரின் வாசகர்கள் அல்ல. அவர்கள் மிக விரிவான வாசிப்பு கொண்டவர்கள். விரிவான தேடல்கொண்டவர்கள். தங்கள் அளவிலேயே எழுத்தாளர்கள். இங்கே அவர்கள் உரையாடலுக்கு உகந்த பிற நண்பர்களைக் கண்டடைகிறார்கள். இது இலக்கியம் மட்டுமே முதன்மைப்படுத்தப்படும் களம். அத்தகைய இன்னொன்று இன்று தமிழகத்தில் இல்லை. ஓர் எழுத்தாளராக என் மேல் மதிப்பு கொண்டவர்கள், என்னுடன் உரையாடுபவர்கள் என்பதே அவர்களை ஒருங்கிணைக்கிறது
*
தமிழில் சீடர்களைச் சேர்க்கிறார் மடம் அமைக்கிறார் என்ற குற்றச்சாட்டு முதலில் யார்மேல் வந்தது? பாரதியார் மேல். அவருடைய இளம் நண்பர்களை கேலிசெய்தும் மட்டம்தட்டியும் அக்கால மிதவாதிகள் எழுதியிருக்கிறார்கள். பரலி சு நெல்லையப்பர் தொடங்கி அவருடைய அணுக்கநண்பர்களின் அணி மிகப்பெரியது. அவர்கள்தான் அவருடைய நூல்களை பதிப்பித்தனர். அவர் மறைந்தபின் பேருருக்கொண்டு எழுவது வரையிலான இருபதாண்டுக்காலம் அவருடைய பெயரை நிலைநிறுத்தினர்
அதன்பிறகு புதுமைப்பித்தன் அப்படி குற்றம் சாட்டப்பட்டார். அச்சிலேயே நிறைய எழுதப்பட்டுள்ளது. தொ.மு.சி.ரகுநாதன், மீ.ப.சோமு என நீளும் ஒரு நண்பர் வட்டம் அவருக்கு இருந்தது. அவர்கள் அவரை ‘கெடுக்கிறார்கள்’ என எழுதப்பட்டுள்ளது. அவரை அவர்கள் ’வீரவழிபாடு’ செய்கிறார்கள் என்று குற்றம்சாட்டப்பட்டது. புதுமைப்பித்தனை அவர்கள் சாகக்கொடுத்தார்கள் என்றுகூட எழுதியிருக்கிறார்கள். அப்படிச்சொன்னவர்களின் பெயர்கள் எல்லாம் இன்று எங்குமில்லை. ‘வீரவழிபாடு வேண்டாம்’ என்னும் தி.க.சியின் கட்டுரை மட்டும் வாசிக்கக் கிடைக்கலாம்.
அடுத்து க.நா.சு அப்படி குற்றம் சாட்டப்பட்டார். சுந்தர ராமசாமி உள்ளிட்ட அவருடைய மாணவர்கள் ‘பரமார்த்தகுருவும் சீடர்களும்’ என பழிக்கப்பட்டனர். பின்னர் சுந்தர ராமசாமியும் அதே வசையைப் பெற்றார். குருபீடம், மடம், சீடர்கள் போன்ற சொற்களெல்லாம் சுந்தர ராமசாமிமீது தொடர்ச்சியாகப் பெய்யப்பட்டன. சுந்தர ராமசாமியை வீரவழிபாடு செய்கிறார்கள் என்று எழுதினார்கள். சுஜாதாவேகூட எழுதியிருக்கிறார். என்ன சோகம் என்றால் அசோகமித்திரனே அப்படி எழுதியிருக்கிறார்.
நான் எழுதவந்தபோது எனக்கு ஏராளமான உபதேசங்கள் எனக்கு வந்தன. சுராவுடன் இருந்தால் நான் வளரமுடியாது என்று என்னிடம் ஒருவர் சொன்னார். ”அவரு பெரிய வெயிட்டு. உங்கமேலே பாறாங்கல்லை தூக்கி வைக்கிற மாதிரி” என்றார். நான் சொன்னேன் “எனக்குள் இருப்பது விதை. பாறாங்கல் விதையை ஒன்றும் செய்யாது. மீறி எழுந்து முளைக்கும். வளரும்போது பெயர்த்து அப்பால் இடும் ”.சுந்தர ராமசாமியின் வழிவந்தவர்களை ‘ஏழைகளின் சுரா’ என பழிக்கும் வழக்கமும் அன்று இருந்தது. என்னையே ‘சுந்தர ராமசாமியின் கொத்தடிமை’ என எழுதியிருக்கிறார்கள்.
சுரா எவரையும் பேசவிடமாட்டார், அவரெ பேசி இளைஞர்களை மூளைச்சலவை செய்கிறார், சுராவின் அணுக்கர்கள் வாசகர்களே அல்ல ரசிகர்கள், விசிலடிச்சான் குஞ்சுகள் என்றெல்லாம் எழுதப்பட்டுள்ளது. எழுதியவர்கள் பலர் இன்றும் உள்ளனர். ஆனால் சுந்தர ராமசாமியின் நட்புக்குழுமத்தில் இருந்தே இன்றைய தமிழிலக்கியத்தின் முக்கியமான படைப்பாளிகள் பலர் உருவாகி வந்தனர் என்பது வரலாறு.
இது உலகமெங்கும் சிந்தனையிலும் இலக்கியத்திலும் உள்ள வழக்கம். ஓர் ஆசிரியரை மையமாக்கி அடுத்த தலைமுறையில் இளம் படைப்பாளிகளும் சிந்தனையாளர்களும் கூடுகிறார்கள். அவருடன் உரையாடுகிறார்கள். தங்களுக்குள் உரையாடிக்கொள்கிறார்கள். அவரிடமிருந்து முன்செல்கிறார்கள். தமிழில் நான் வரும்போது சுந்தர ராமசாமியும் தேவதச்சனும் ஞானக்கூத்தனும் அப்படிப்பட்ட மையங்கள்.
இது என்றுமிருக்கும். ஆனால் இதன் தேவை பாமரர்களுக்குப் புரியாது. அவர்கள் பாரதியைப்பற்றியும் புதுமைப்பித்தன் பற்றியும் சொன்னதை அப்படியே இன்றும் சொல்லிக்கொண்டிருப்பார்கள். அவர்கள் இந்த விவாதக்களத்திலேயே இல்லை.
நான் பலமுறை சொன்னதுபோல இந்தக் குழுமங்களின் தேவைகள் பல. இலக்கியத்தை ஒரு கூட்டுக் கொண்டாட்டமாக இவை ஆக்குகின்றன. உலகியல் கட்டாயங்களில் இருந்து விலக்கி இலக்கியத்துள் ஒருவனை ஆழ்த்தி வைக்கின்றன, விவாதத்தரப்புகளை அறிமுகம் செய்கின்றன. நம்மை நாமே கண்டடையவைக்கின்றன.
நான் மற்றவர்களுக்கு எப்படி என எனக்கு தெரியாது, நான் சுந்தர ராமசாமியிடம் அடைந்தது சிந்திப்பதற்கான பயிற்சியை. சிந்தனைகளை நூல்கள் தரக்கூடும், சிந்திக்கும் பயிற்சியை ஆளுமைகளே அளிக்க இயலும். சுந்தர ராமசாமி படிமங்கள் வழியாகச் சிந்திப்பதை, அவருடைய நுண்ணிய சீண்டல்களை நான் அறியாமலேயே கற்றுக்கொண்டேன். நான் அவரை மறுப்பதேகூட அவருடைய பாணியில்தான். சமீபத்தில் யுவன் பேசிக்கொண்டிருக்கையில் தேவதச்சன் பேசிக்கொண்டிருப்பதாகவே பிரமை எழுந்தது. இலக்கியம் அப்படித்தான் கைமாற்றப்பட்டுச் செல்கிறது.தலைமுறை தலைமுறையாக.
அத்தகைய ஆளுமைகளை இரண்டு காரணங்களுக்காக ஒருவர் தவிர்க்கலாம். ஒன்று, ஆழமான தாழ்வுணர்ச்சியால். ஓர் ஆளுமை அவருடைய தீவிரத்தால் தன்னைச் சிறியவனாக ஆக்கிவிடுவார் என அஞ்சுபவன் அவரை தவிர்ப்பான். அப்படி சுந்தர ராமசாமியை தவிர்த்த பலரை நான் அறிவேன். தன்னை பொத்திப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பது ஓர் அச்சத்தின் விளைவு. உண்மையான அறிவியக்கவாதிக்கு, கலைஞனுக்கு அந்த அச்சம் இருக்காது. அவனுடைய நிமிர்வு அவன் தன்னுள் இருக்கும் படைப்புசக்தியின் ஆற்றலை உணர்ந்தமையால் வருவது. எனக்கு அந்த தயக்கமே இருந்ததில்லை. நான் எவரையும் சந்திக்க உரையாட அருகமர தயங்கியதே இல்லை.
இரண்டு, சூழலில் இருந்து வரும் அபத்தமான கருத்துக்கள். ‘நீ நீயாகவே இரு’ என்பது போன்ற மடத்தனங்கள். ஒருவன் எந்த மாறுதலும் இல்லாமல் இருப்பதற்கு பெயர் மந்தபுத்தித்தனம். ‘எதையும் ஆராய்ந்து பார்” என்பது இன்னொரு அபத்தம். எதையும் முழுதாக அறிந்துகொள்ளாமல் ஆராயமுடியாது. தன்னை அளிக்காமல் எதையுமே அறிந்துகொள்ள முடியாது. பணியாமல் அறியமுடியாது. அறிந்தபின்னர் வரும் நிமிர்வே உண்மையானது. அறியாமையின் தருக்கு என்பது ஆபாசமான ஒரு நிலை.
எங்கும் பணியமாட்டேன் என்றிருப்பவன் அறிவுஜீவி அல்ல. எளிய இடங்களில் பணியாமலிருப்பவன் அவன். ஆனால் பணியவேண்டிய இடங்களை தேடித்தேடிச் செல்பவன். கடைசிவரை அவன் பணியும் இடங்களை கண்டடைந்துகொண்டே இருப்பவன். அறுபது வயதில் சுந்தர ராமசாமி க.நா.சு முன் எப்படி பணிவார் என நான் கண்டிருக்கிறேன். என்னிடம் சொன்னார், ‘கநாசுவோட படத்தை ஒருவன் மிதிச்சால் அவனை அறையாம என்னாலே முன்னாலே போக முடியாது” அந்தப் பற்றுதான் அடிப்படை. அது க.நா.சு கொண்ட பற்று அல்ல. க.நா,சு வரை வந்து நிற்கும் ஒரு மரபின் மீதான பற்று
நமது நிமிர்வும் சுதந்திரமும் .வன் அறிந்துகொண்டே இருப்பதனால் வருவதே ஒழிய அறியாமையை இறுக்கமாகப் பேணிக்கொள்வதனால் வருவன அல்ல. இது இலக்கியம் அறிவியக்கம் போன்ற துறைகளுக்கு மட்டும் அல்ல, சாதாரண தொழில்நுட்பப்பயிற்சி வணிகப்பயிற்சி போன்றவற்றிலேயே இப்படித்தான் உள்ளது. அறிந்தோரை நாடுங்கள், உங்களை அளியுங்கள், கடைசித்துளிவரை கற்றுக்கொள்ளுங்கள், உங்கள் இயல்பான படைப்பூக்கத்தின் துளியை வளர்த்துக்கொண்டு கடந்துசென்று வளருங்கள்.
உங்கள் நண்பர்கள் அறிவியக்கத்தைப் பற்றி மட்டும் அல்ல, எதையாவது கற்றுக்கொள்ளும் எந்த துறை பற்றியும் எதுவும் அறியாத ‘வெறுஞ்சோற்றுப்’ பாமரர்கள்.
சில ஆண்டுகளுக்கு முன் விஷ்ணுபுர நண்பர் ஒருவரிடம் ஒர் ஆசாமி உங்கள் நண்பர்கள் சொன்னவற்றையே சொன்னார். அந்நண்பர் முக்கியமான வாசகர், விமர்சகர். துடுக்குத்தனத்தனத்துக்கும் பெயர் போனவர். நண்பர் கேட்டார் “நீங்க இப்ப சொன்னதையெல்லாம் நீங்களே கடைப்பிடிக்கிறீங்களா?”
“ஆமா” என்றார் அவர்
“அப்டி கடைப்பிடிச்சு என்ன சாதிச்சீங்க? நீங்க சுயமா சிந்திச்ச ஒரு நாலு வரிய காட்டுங்க. ஒரு நல்ல படைப்ப காட்டுங்க”
அவர் திக்கிட்டுப்போனார்.
“வெத்துப்பிண்டமா இப்டி அலையறத விட யாருக்காவது அடிபணிஞ்சு எதையாவது கத்துக்கிடறது மேல். போங்க” என்றார் நண்பர்
நான் அவருடைய துடுக்குத்தனத்தை கண்டித்தேன். ஒரு அப்பாவிப் பாமரரை அவர் சாவின் எல்லைக்கு தள்ளிவிட்டார்.ஆனால் அவர் சொன்னது உண்மை. நீங்கள் உங்களிடம் பேசுபவர்களிடம் “சரி, நீங்க அப்டி என்னதான் அடைஞ்சீங்க? என்ன சாதிச்சீங்க? நீங்க வச்சிருக்கிற அந்த தனித்தன்மைதான் என்ன?’’ என்று கேளுங்கள். உங்கள் வாசிப்போ நுண்ணுணர்வோ இல்லாத அந்தப் பாமரர்கள் திகைத்துவிடுவார்கள். சமூகவலைத்தளங்களில் இதைச் சொல்லிக்கொண்டிருப்பவர்கள் எல்லாமே எந்த அறிவும் எந்தப் பங்களிப்பும் இல்லாத சருகுகள்தான்.
ஜெ ஒரே ஆசிரியரை வாசித்தல் பீடமா? துதிபாடி வட்டம் தேவையா? இலக்கியவாதிகளும் அமைப்புகளும் அன்றைய எழுத்தாளர்களும் இன்றைய விவாதங்களும் புதியவாசகர் சந்திப்பு, இலக்கியக் குழுக்கள்… நடைமீறுதல்இரவின் நாணம்
ஒரு பண்பாட்டுச் சூழலின் சினிமா என்பது அதிலுள்ள எல்லா மக்களின் வாழ்க்கையையும் பிரதிநிதித்துவம் செய்யவேண்டும். கடல் படம் வந்தபோது தெரிந்தது ஒன்று உண்டு, நம் மீனவ மக்களின் வாழ்க்கையைப் பற்றி பொதுச் சமூகத்திற்கு ஒன்றுமே தெரியாது. தெரிந்துகொள்ள ஆர்வமில்லை. ஏற்கனவே தெரியாத ஒன்று உடனே நம் பார்வையாளர்களை அன்னியப்படுத்துகிறது.
ஆகவே இங்கே இஸ்லாமிய வாழ்க்கைச் சூழல் சினிமாவில் வந்ததே இல்லை. வருவதற்கான வாய்ப்புகளும் இல்லை. பல காரணங்கள். ஒன்று பொதுச்சமூகம் அதை விரும்புமா என்ற ஐயம். இன்னொன்று, இஸ்லாமியரைப் பற்றி இஸ்லாமியர் விரும்பும் ஒரு சித்திரத்தையே அளிக்க முடியும். மிகமெல்லிய சமூக விமர்சனம் இருந்தால், ஒருசில கதாபாத்திரங்கள் எதிர்மறையானதாக இருந்தால், புண்படுவார்கள். சினிமாவுக்குச் சிக்கல் வரும்.
ஆனால் மலையாளத்தில் ஒரு சினிமா முழுக்க முழுக்க ஒரு குறிப்பிட்ட பண்பாட்டுச் சூழலில் நிகழ்வது பெரும்பாலும் விரும்பப்படுகிறது. அந்தக் களத்திற்கு வெளியே செல்லாமலேயே சினிமாவை எடுத்தால் அது வெற்றிப்படைப்பாகும். பல படங்களின் பெயரே அது எந்த களம் என்று சொல்லிவிடும். ஈற்றா [வேய் மூங்கில்] காட்டில் மூங்கில் வெட்டுபவர்களைப் பற்றியபடம். கரிம்பன பனையேறிகளை பற்றிய படம். ஆறாட்டு திருவிழாவில் வாணவேடிக்கை செய்பவர்களைப் பற்றிய படம். அங்காடி முழுக்கமுழுக்க ஒரு சந்தைக்குள் நிகழும் படம்.
ஆகவே இஸ்லாமியக் கதைக்களம் கொண்ட படங்கள் ஏராளமாக உள்ளன. அதிலும் இஸ்லாமியர்களின் வெவ்வேறு துணைப்பண்பாடுகளைப் பற்றிய படங்கள் வந்துள்ளன. ஜேஸி இயக்கிய துறமுகம் கொச்சி துறைமுகத்தை ஒட்டிய மக்களின் வாழ்க்கையைச் சொல்லும் படம். இன்றுபார்த்தால் சுமாரான சினிமாதான். ஆனால் அந்த வாழ்க்கை அதில் இருந்தது. அதில் உள்ள ஓர் இஸ்லாமியக் கதையிலுள்ள பாடல் இது.
பாடலில் உள்ள அரபு சொற்கள்தான் கவனிக்கப்படவேண்டியவை. அம்மக்களின் வாழ்க்கையுடன் இணைந்தவை அவை. பைத் என்றால் உறவு, சொந்தம். கல்ப் என்றால் இதயம், நெஞ்சம். கெஸ்ஸு என்றால் சிறிய இசைப்பாடல். தெம்மாங்கு போல. முஸ்லீம்கள் பாடுவது. அசர்முல்லை என்றால் சிவப்புச்செவ்வந்தி. அசர் என்றா ஈர்ப்பு, நறுமணம் இரண்டு பொருள்.
உறுமால் என்றால் முஸ்லீம் ஆண்கள் தலையிலணியும் தலைப்பாகைத்துணி. தட்டம் என்றால் பெண்கள் தலையில் அணியும் முக்காட்டுத்துணி. அரமணி என்றால் இஸ்லாமியப் பெண்கள் ஆடைக்குமேல் இடையில் அணியும் பொன்னாலான ஆபரணம். மணிகள் கொண்டது. மொஞ்சு என்றால் எழில். மஹர் என்றால் ஆண் பெண்ணுக்கு அளிக்கும் மணக்கொடைச் செல்வம்.
ராவினு இந்நொரு பெண்ணின்றே நாணம்
தேன் கடலின்னு பைத்தின்றே ஈணம்
கல்பில் இந்நு ஒரு பூந்தட்டம்
பூதொடுக்குந்ந சேலாணு
ரம்சான் கல போலாணு
திரமால கெட்டிய கெஸ்ஸுகள் கேட்டு
அசர்முல்ல சுண்டிலும் அரிமுல்ல பூத்து
வளயிட்ட கைகொண்டு முகம் மறச்சு
வலயிட்டது எந்தினு மிழியாலே நீ
துறமுகக் காட்டிலும் அத்தர் தூவி
சினேஹத்தின் நூலுகொண்டு உறுமாலு துன்னி
கிலுகிலே அரமணி கிங்ஙிணியிட்டு
மணவாட்டியாவணது எந்நாணு நீ?
எம்.கே.அர்ஜுன்
பூவச்சல் காதர்
இரவுக்கு இன்று ஒரு பெண்ணின் நாணம்
தேன் கடலுக்கு உறவின் ராகம்
நெஞ்சில் ஒரு மெல்லிய தலைமுக்காடு
தொட்டு பூந்தொடுத்த அழகு
ரம்ஸான் பிறையின் எழில்போல
அலைகள் போட்ட மெட்டுகள் கேட்டு
சிவப்புச்செவ்வந்தி இதழ்களில் வெண்முல்லைகள் பூத்தன
வளையிட்ட கண்களால் முகத்தை மூடிக்கொண்டு
கண்களால் ஏன் வலைவிரித்தாய்?
துறைமுகத்தின் காட்டிலும் அத்தர் தெளித்து
அன்பின் நூலால் மேலாடை நெய்து அணிந்து
கிலுகிலுக்கும் இடைமணி நகையணிந்து
மணமகளாக ஆவது எப்போது நீ?
இந்தப்பாட்டில் அடித்தள இஸ்லாமிய வாழ்க்கைச்சூழல் உள்ளது. இஸ்லாமியப் பெண்களின் அக்கால ஆடையணிகள் முகலாயப் பண்பாட்டில் இருந்து வந்தவை. பளபளக்கும் சரிகை ஆடைகள். புர்கா இல்லை. தலையில் தட்டம் என்னும் முக்காடு அணிந்திருக்கிறார்கள். திருமணம் இரவில் நடைபெறுகிறது. மணமகன் மாலை போட்டுக்கொண்டு தெருவில் நடந்து வருகிறான்.
இன்னொரு பாடல் கொச்சு கொச்சொரு கொச்சி. முந்தைய பாட்டில் வரும் ‘கெஸ்ஸு பாட்டு’ இதுதான். பலர் சேர்ந்து கைகளை தட்டிக்கொண்டு பாடுவது. காஸர்கோட்டில் இருக்கையில் நண்பர் அப்துல் ரசாக்கின் இல்லத்திற்குச் சென்று இரவெல்லாம் கெஸ்ஸு பாட்டு பாடியிருக்கிறோம் [ரஸாக் குற்றிக்ககம் என்ற பெயரில் எழுதிய நண்பர் இப்போது உயிருடனில்லை. அவருடைய இரண்டு கதைகளை நான் தமிழாக்கம் செய்திருக்கிறேன். 1985ல் நம்வாழ்வு என்னும் நாகர்கோயில் இதழில் வெளிவந்ததாக நினைவு]
இதில் அழகியான கொச்சியை சுல்தான் வந்து மஹர் கொடுத்து திருமணம் செய்துகொள்கிறார்.
கொச்சு கொச்சு ஒரு கொச்சி
ஓளு நீலக்கடலின்றே மோளு
பண்டு பண்டொரு நாளு
ஓளு பிராயமறியுநோரு காலம்
பச்சக்கொடியும் பறத்தி வந்நெத்தி
வெள்ளித்துருத்து போல் ஒரு கப்பல்
கப்பலில் உள்ள ஒரு ராஜகுமாரன்
பெண்ணினே கண்டு கொதித்து
பெண்ணினு நாணமுதிச்சு
கரையில் ஒரு அஞ்ஞூறு திரவந்நு கூடி
மைலாஞ்சிப்பூ விரிச்சு
துடு துடே மானம் சுவந்நு
பெண்ணினே வேணம் ! ஐசலா பெண்ணு தரில்லா ஏலய்யா!
பொன்னு தராமோ? ஏலஸா மின்னு தராமோ ஏலய்யா!
மஞ்சலில் ஏறி ஐலஸா! இக்கரே வந்நு ஏலய்யா!
ஆரு பறஞ்ஞு ? ஐலசா ஞம்மளு கண்டு! ஏலய்யா!
ஏழு கரயிலும் மொஞ்சத்தியாகும் கொச்சியே நிக்காஹ் செய்யான்
ஆ ராஜகுமாரன் உறச்சு
மஹர் ஆயி ஆயிரம் தளிக பணிஞ்ஞு
மணவாட்டிக்கு அந்நு கொடுத்து
ஆ காசு கொண்டல்லே மச்சுவா பணிஞ்ஞது!
கொச்சு கொச்சொரு கொச்சி!
[தமிழில் ]
சின்னஞ்சிறிய கொச்சி
அவள் நீலக்கடலின் மகள்
முன்பு முன்பொரு நாள்
அவள் வயதுக்கு வந்த காலம்
பச்சைக்கொடி பறக்க வந்து சேர்ந்தது
வெள்ளித்தீவு போல் ஒரு கப்பல்
கப்பலில் வந்த ராஜகுமாரன்
பெண்ணைப் பார்த்து ஆசைப்பட்டான்
கரையில் ஒரு ஐநூறு அலைவந்து அறைந்தது
மருதோன்றி மலர்களை விரித்தது
செக்கச்சிவப்பாக வானம் சிவந்தது
பெண்ணை வேண்டும் ஐலசா பெண்ணை தரமாட்டோம் ஏலய்யா
பொன் தருவீர்களா ஐலசா தாலி தருவீர்களா ஏலய்யா
துணிப்பல்லக்கில் ஏறி ஐலசா இக்கரை வந்தார் ஏலய்யா
யார் சொன்னது? ஐலசா நானே கண்டேன் ஏலய்யா
ஏழு கரைகளிலும் பெரிய அழகியான
கொச்சியை நிக்காஹ் செய்ய
அந்த ராஜகுமாரன் உறுதிபூண்டான்
மஹர் ஆக ஆயிரம் தங்கத்தாலங்கள் செய்து
மணவாட்டிக்கு அன்று அளித்தான்
அதைக்கொண்டுதானே அவள் மாளிகை கட்டிக்கொண்டாள்
***
கேளாச்சங்கீதம்- கடிதங்கள்
அன்புள்ள ஜெ
உயிர்மையில் கேளாச்சங்கீதம் கதையை வாசித்தேன். நெஞ்சில் தீ எரிந்தது. என்னால் கைநடுங்காமல் வாசிக்கவே முடியவில்லை. வாசித்து முடித்தபோது கண்ணீர் கொட்டிக்கொண்டிருந்ததை உணர்ந்தேன். நான் தொடர்ந்து கதைகளை வாசிப்பவன். ஆனால் இந்தக்கதை போல ஒரு கதை என்னை இப்படி பாதித்ததில்லை.
ஏனென்றால் இது என்னுடைய கதை. இதேபோல இனித்து இனித்துச் சாகும் ஒரு நிலையில் நானும் இருந்தேன். மூன்று ஆண்டுகள் அந்த நிலை இருந்தது. அப்போது எப்படி இருந்தேன் என்று எனக்குச் சரியாக நினைவில் இல்லை. என்னைப்பற்றி மற்றவர்கள் என்ன நினைத்தார்கள் என்று அவர்கள் சொல்லித்தான் தெரிகிறது. பித்துப்பிடித்து அலைந்துகொண்டிருந்தேன். அப்படி ஓர் உறவு. ஒருதலை உறவுதான். அதற்கு ஒரு காரணமும் கிடையாது. அழகு, நெருக்கம் ஒன்றுமே காரணம் கிடையாது. ஏன் உருவானது என்றே தெரியாது. அப்படியே விழுங்கிவிட்டது.
நான் மூன்று ஆண்டுகள் வேறு நினைப்பே இல்லாமல் இருந்திருக்கிறேன்.அவள் வரும் வழியிலேயே நாளெல்லாம் நிற்பேன். அவள் வேலைபார்க்கும் பள்ளி வாசலில் நிற்பேன். அவள் பின்னாலேயெ போவேன். நடு ராத்திரியில் அவள் வீட்டுவாசலில் நிற்பேன். அவள் கணவனும் பிறரும் பலமுறை என்னை அடித்திருக்கிறார்கள். மனநலச் சிகிச்சை எடுத்திருக்கிறேன்.
அந்த மனநிலையை கன்னி நாவலில் பிரான்ஸிஸ் கிருபா கொஞ்சம் எழுதியிருக்கிறார். மஞ்சள்வெயில் நாவலில் யூமா வாசுகியும் எழுதியிருக்கிறார். ஆனால் அவையெல்லாம் கொஞ்சம் மிகையுணர்ச்சி கொண்டவையாக இருந்தன. அந்த மனநிலையை நேரடியாகச் சொல்லச் சொல்ல அது கீழே இறங்கிக்கொண்டே போகும். அதற்கு ஒரு உளறல்மாதிரியான தன்மைதான் வரும். இந்தக்கதையில் அதைச் சொல்லவே இல்லை. வேறு ஒன்று சொல்லப்படுகிறது. ஆனால் அதுதான் உணர்த்தப்படுகிறது.
எல்லாருக்கும் இந்தக்கதை கொஞ்சம் புரியும் என நினைக்கிறேன். ஏனென்றால் இந்த பைத்தியம் கொஞ்சநாளாவது எல்லாருக்கும் இருந்திருக்கும். என்னைப்போன்ற சிலருக்கு ஆண்டுக்கணக்கில் நீடித்திருக்கும். இந்த பித்து ஒரு பெரிய சித்திரவதை. அதேசமயம் பெரிய இன்பமும்கூட. கதையில் அந்த சித்திரவதை அற்புதமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. கொஞ்சம் பிரக்ஞை மிச்சம் இருக்கும்போது எப்படியாவது வெளியே வரவேண்டும் என்று தோன்றும். ஆனால் மீண்டும் உள்ளே போய்விடுவோம். இந்த அலைக்கழிப்புதான் மிகப்பெரிய சித்திரவதை
ஆனால் அந்த மாயம் எப்படி விலகுகிறது என்பதும் ஆச்சரியம்தான். ஒரு திடீரென்ற கணத்தில் அது மாறிவிடும். எல்லாமே சரியாகிவிடும். நான் படிப்புக்காக அமெரிக்கா வந்தேன். அப்படியே மாறிவிட்டது. இங்கே நிலைகொள்வதற்காக கடுமையாக போராடினேன். ஏகப்பட்ட சிக்கல்கள். இங்கே வருவதற்கு பல சட்டச்சிக்கல்கள். அதில் மாட்டியதனால்தான் நான் வெளியே வந்தேன். இந்தச் சிக்கல்கள் அந்த பிரச்சினையில் இருந்து என்னை வெளியே கொண்டுவந்தன. இதெல்லாம் அபத்தம்தான். ஆனால் இப்படித்தான் இருக்கிறது.
ஆனால் இங்கே இப்படி மாறியபிறகு என் வாழ்க்கையிலே மிகப்பெரிய ஒன்றை இழந்துவிட்டேன் என்று நினைக்கிறேன். அந்தக்காலத்தில் இசை என்னை பெரிய போதைக்கு கொண்டுசென்றது. காட்டுக்கிளி பாட்டு சொல்ல வீட்டுக்கிளி கேட்டுக்கொள்ள என்று ஒரு பாட்டு. அதை நான் ஒருமுறை ரோட்டில் கேட்டு மயக்கம்போட்டு விழுந்துவிட்டேன். சில பாட்ட்டுகளை தொடர்ச்சியாக பலமணிநேரம் கேட்டுக்கொண்டிருந்தேன். இப்போது பாட்டுகேட்பதே இல்லை. கேட்டாலும் மனம் நிலைகொள்வது இல்லை. இப்போது கலையோ சுவையோ இல்லை.
இந்தக்கதையில் ‘மீளமுடியாமலேயே அழிந்தால்கூட நல்லதுதானே’ என்ற வரிதான் உச்சம். அதுதான் இந்தக்கதையின் திருப்பம். அந்த வரி என்னை தீயால் சுட்டதுபோல இருந்தது.’நார்மல்ஸி’ என்பது வசதியானது. ஆனால் அதில் உண்மையான மகிழ்ச்சி என்று ஒன்றுமே இல்லை என்று தோன்றியது. இந்தக்கதையின் ஒவ்வொரு வரியும் கதைக்கு வெளியே விரிந்துகொண்டே இருக்கிறது.
எம் [தமிழாக்கம்]
அன்புள்ள ஜெ
கேளாச்சங்கீதம் கதையின் மூலக்கதாபாத்திரம் ஒரு பூசாரிப்பிராமணர். அவரைப்பற்றி நீங்கள் வாழ்விலே ஒருமுறை கட்டுரைகளில் எழுதியிருக்கிறீர்கள் என நினைக்கிறேன். இதேபோல ஒரு விபச்சாரி மேல் பித்து கொண்டு அதிலிருந்து மீளாமலேயே இறந்துபோன ஒருவர்.
ஒவ்வொரு வாழ்க்கையிலும் உள்ள என்றைக்குமுள்ள பிரச்சினைதான். மீளவேண்டுமா என்பது பெரிய கேள்விதான். பெரும்பாலானவர்கள் கண்ணைமூடிக்கொண்டு வெளியே குதித்து மீண்டுவிடுவார்கள். மீளாமலேயே போகிறவர்கள் பிரான்ஸிஸ் கிருபா போன்ற சிலர்தான்.
எம்.பாஸ்கர்
புறப்பாடு, கடிதம்
அன்புள்ள எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு,
நான் விஷ்ணுபுரம் வாசித்துவிட்டு தங்களுக்கு அனுப்பிய கடிதத்தை இன்று உங்கள் தளத்தில் பிரசுரித்து உள்ளீர்கள். அதைக் கண்டவுடன் கட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால் அதையும் தாண்டிய ஒரு பொறுப்புணர்ச்சி தானாக உள்ளிருந்து எழுந்துள்ளது. வாசிப்பை மேலும் செம்மைப் படுத்தவும் அவ்வகையில் சிந்தனையை கூர்மைப் படுத்தவும் ஓயாது உழைக்க வேண்டும் என்பதைப்பற்றிய பொறுப்பு.
உங்கள் எழுத்தை வாசித்தல் என்னும் இன்பச் செயலின் ஊடாகவே அக்காரியம் தடையின்றி நிகழ்ந்துகொண்டிருக்கிறது. தன்மீட்சியும் புறப்பாடும் படித்த பின்பு உங்களை மேலும் அறிந்து கொள்ளும் பேரு எனக்கு கிடைத்தது. காவி உடை அணிந்து கொண்டு நீங்கள் ஆற்றிய அந்த மூன்றாவது புறப்பாடை கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் இக்கடிதத்தை முடித்துக்கொள்கிறேன்.
ஊக்கத்திற்கும் வழிகாட்டுதலுக்கும் நன்றிகள்
அன்புடன்,
விஜய் கிருஷ்ணா
***
அன்புள்ள விஜய்கிருஷ்ணா
நான் காவி உடை அணியவில்லை. காவி அணிவதற்கு சில முறைமைகள் உண்டு. அவை எனக்கு நிகழவில்லை. நான் அணிந்திருந்தது அழுக்கு உடைதான். ஆனால் சாமியார் என அறியப்பட்டேன்.
அந்த அனுபவங்களை எழுதலாமா என்ற ஐயம் எனக்கு உண்டு. எழுதவேண்டுமென்றால் அவற்றை நான் முதலில் நன்றாக அறிந்திருக்கவேண்டும். ஐயமறச் சொல்லவேண்டும். அதனால் பிறருக்கும் பயன் இருக்கவேண்டும்
ஜெ
***
சிஷ்டி கவிதைகள்- கடிதங்கள்
அன்புநிறை ஜெ,
அஜ்மீர் பயண அனுபவமும், சூஃபி இசையும், குவாஜா பாடல்களுமாக மனது சுழன்று சுழன்று இறகென ஆகிக் கரைகிறது.
கட்டுரையை வாசிக்கும் போது இது போன்ற ஆன்மீக பயணங்களில் தனித்திருப்பதும் அந்த ஆதாரமான ஆழ்ந்த மனநிலையிலேயே இயன்றவரை நீடித்திருப்பதும் எவ்வளவு முக்கியம் என்றெண்ணிக் கொண்டிருந்தேன். பயணம் முழுவதும் அகத்தில் தனித்திருப்பதும், மனம் கனிந்து நிறைந்திருப்பதும், அதற்கு முன்னரும் பின்னரும் அந்த இசையிலும் கவிதையிலும் தோய்ந்திருப்பதும், அங்கு அந்த ஞானியின் பாதத்தில் தலை வைத்து நிற்பதும் என அனைத்தும் சேர்ந்ததுதான் புனிதப்பயணம். இந்த இறையனுபவம் என்றைக்குமாய் நீடித்தவர்கள் மறுபுறம் கடந்து விடுகிறார்கள்.
நாம் வாழும் உலகுக்கும் அந்த ஞானியர் உலவும் வெளிக்கும் இடையே சூஃபி இசை எனும் ஆறு கொந்தளித்து பெருகி ஓடுகிறது. இடையே ஓடும் இந்நதி அகழியா அவனை அணுகத் திறந்திருக்கும் ஒரே வழியா என்பது நம்மை அந்த அனுபவத்தின் முன் திறந்து வைப்பதிலேயே இருக்கிறது. கடந்தவர்கள் கரையேறி விடுகிறார்கள். இருகரைகளில் ஒரே நதி. இக்கரைக்கும் அக்கரைக்குமாய் அலைகிறது சிறுதோணி.
மழையில் தொடங்கி, மழைக்கால கேரள நிலத்தின் பசுமை வழியாக பயணித்து, நிறைந்தொழுகும் ஆறுகள், காயல்கள், அருவிகள், காடுகள் என பேரழகுப் பயணம் பாலை நிலம் நோக்கி. சாம்பல்பசுமை எனும் சொல் புதிதாக, அந்த அந்தியைக் கண்முன் கொண்டுவந்துவிட்டது. புகைப்படங்கள் மிக அருமை.
அந்தக் கவாலி இசைப் பாடல்கள்! காலையில் கேட்டால் நாள் முழுவதும் உளம் பொங்கி நிறைகிறது. இரவில் கேட்டாலோ இரவை அது இல்லாமல் ஆக்கி விடுகிறது. பாலை நிலத்தில் பிறந்த அந்த இசையில்தான் எத்தனை வெள்ளம், சுழல்கள், சீறிப்பாயும் கொந்தளிப்புகள்! நீருக்காக தவம் செய்யும் நிலத்தில் இசையும் நீர்மை கொள்கிறதோ என்று தோன்றியது.
ரோஜாக்கள் குறித்த இவ்வரி கவிதையாக இருந்தது.
“ரோஜாவின் வாசனை மல்லிகைப்பூ போல உரத்தது அல்ல. அது ஒரு ரகசியம். பாலைவனத்தின் மலர் அது. நெடுநேரம் செவியோடு சொல்லப்படவேண்டிய மொழி கொண்டது.” இனி என்றும் ரோஜாவோடு நினைவில் வரும் வரி.
சூஃபி நடன அசைவில் சுழன்று சுழன்று உறைந்து நின்ற ஒரு காலத்துளியின் மலர் ரோஜா என்றும் தோன்றியது.
நவம்பர் இரண்டாவது வாரம் அஜ்மீர் பயணம் செல்லலாம் என எண்ணியிருக்கிறேன். இந்த எழுத்துக்கள், இந்த இசை என் உடனிருக்கும்.
மிக்க அன்புடன்,
சுபஸ்ரீ
***
அன்புள்ள ஜெ
கவாலி இசை, சூஃபி தரிசனம், பயண அனுபவங்கள் என கனவுபோல ஒருவாரம் கடந்து சென்றது. நான் மேலோட்டமாக சூஃபிகளைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறேனே ஒழிய அந்தக் கொள்கையை ஆழ்ந்து அறிந்தது இல்லை. அறிவார்ந்து புரிந்துகொள்வது வேறு, உணர்வுபூர்வமாக உள்வாங்குவது வேறு. இந்தப்பயணக்கட்டுரையும் உடன் அமைந்த கவிதைகளும் பாடல்களும் அந்த அற்புதமான மனநிலையை உருவாக்கின.
சூபி கவிதைகள் மிகமிக அருமையானவை. சுபஸ்ரீ மிகச்சிறப்பாக மொழியாக்கம் செய்திருந்தார். பல வரிகள் திகைப்பூட்டும் அளவுக்கு ஆழமானவை. அரசன் கையில் இருந்து பறந்து எழும் பருந்துக்கு வானமே உள்ளது. ஆனால் அரசனின் ஆணையை அது மறக்கமுடியாது. மதுகொண்டு வருபவனே அப்பால் செல், மொய்ன் மேலும் பெரிய மதுவை அருந்தி மயக்கத்தில் இருக்கிறார். மது நமக்கு மது நமக்கு என்று களியாடும் பாரதியின் வரி ஞாபகம் வந்தது. மதுவுண்ணல் சிவக்களி எய்தல் என்று நம் மரபும் சொல்கிறது.
குவாஜா மொய்னுதீஷ் ஷிஷ்டி இனி எப்போதும் என் ஆன்மாவில் ஒலிக்கும் கவிஞராக இருப்பார்
ஆர்.ஸ்ரீரங்கநாதன்
குவாஜா மொய்னுதீன் சிஷ்டி பாடல்கள்-6 குவாஜா மொய்னுதீன் சிஷ்டி பாடல்கள்-5 குவாஜா மொய்னுதீன் சிஷ்டி பாடல்கள்-4 குவாஜா மொய்னுதீன் சிஷ்டி பாடல்கள்-3 குவாஜா மொய்னுதீன் சிஷ்டி பாடல்கள் -2 குவாஜா மொய்னுதீன் சிஷ்டி பாடல்கள்October 27, 2021
கேளாச்சங்கீதம் [சிறுகதை]
Nadya Korotaeva“கைவெஷமாக்குமே” என்றார் கொச்சன் வைத்தியர். நான் திகைத்து நின்றேன். எனக்குப் பின்னால் நின்றிருந்த அணைஞ்சபெருமாளும் திகைப்படைந்து மெல்ல முனகினார்.
அணைஞ்சபெருமாளின் மகன் கணேசன் அப்போதுதான் காரிலிருந்து இறங்கி நின்றிருந்தான். டிரைவர் முத்துநாயகம் வண்டியை பின்னால் நகர்த்தும் பொருட்டு ஜன்னல் வழியாகத் தலையை நீட்டிப் பார்த்துக்கொண்டு ஸ்டீரிங்கைச் சுழற்றிக் கொண்டிருந்தான்.
நான் பெருமூச்சு விட்டேன். அணைஞ்ச பெருமாள் “அப்டி பலபேரு சொன்னாங்க. எங்களுக்கு முதலிலே நம்பிக்கை இல்லை. ஆனால் வேற வளியில்லாததனாலே கூட்டிட்டு வந்தோம்” என்றார்.
“கைவெஷம்னா லெச்சணங்கள் உண்டுமோ?” என்றேன்.
“அம்பதடிக்கு அப்பாலே பாத்தா தெரியும்” என்றார் வைத்தியர். “அவன பாருங்க. என்ன செய்யுதான் பாருங்க.”
கணேசன் முற்றத்தில் எதையோ பார்த்தபடி நின்றிருந்தான்.
“என்ன?” என்றேன்.
“நம்ம முற்றத்திலே ஒற்றை ஒரு செம்பரத்திச் செடியாக்கும் நிக்குதது. அதிலே பூத்திருக்குதது ஒற்றை ஒரு பூவு. அதையாக்கும் மயங்கிப்போய் பாத்துட்டு நிக்கிறாரு.”
நான் திரும்பிப் பார்த்தேன். கணேசன் பூவைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான். முகம் மலர்ந்து கண்கள் அகன்றிருந்தன.
“ஒரு பூ போரும் அவருக்க மனசிலே ஒரு பூக்காடு விரிய” என்றார் வைத்தியர். “இனிப்பும், நறுமணமும், சங்கீதமும் எல்லாம் எள்ளு போல இருந்தாப்போரும் ஏளுமலைபோல வளர்ந்துபோடும்… அதாக்கும் கைவெஷத்துக்க லெச்சணம்.”
“எடுத்திடலாமா வைத்தியரே?” என்று அணைஞ்ச பெருமாள் உடைந்த குரலில் கேட்டார். “துள்ளித்திரிஞ்ச பயலாக்கும். இப்ப இப்டி இருக்குதான். அவனுக்க அம்மை இப்ப கிடந்த கிடையாக்கும்.”
“பாப்பம், எவ்ளவு உள்ள போயிருக்கு, என்னதுன்னு” என்றார் வைத்தியர். “வந்ததும் பாருங்க இந்த பழுக்கடைக்கா பாக்கை எடுத்து பாப்பாரு. இது பொன்னுமஞ்சள் நெறமுல்லா? அதையே உருட்டி உருட்டி பாப்பாரு. பொன்னைப் பாத்து தீராது.”
முத்துநாயகம் கணேசனின் தோளைத் தொட்டு அழைத்துக்கொண்டு உள்ளே வந்தான். வந்து அமர்ந்ததுமே வைத்தியர் சொன்னதுபோல கணேசன் அந்த பொன்னிறமான பழுக்கடைக்காவை கையில் எடுத்தான். அவன் முகத்தில் புன்னகை மலர்ந்தது. கண்கள் அந்த பொன்னிறத்தையே வெறித்தன.
நான் வைத்தியரைப் பார்த்து தலையசைத்தேன்.
வைத்தியர் கணேசன்னிடம் “கணேசனாக்கும் பேரு, இல்லியா?” என்றார்.
அவன் திடுக்கிட்டு “ஆமா” என்றான்.
“இங்க எதுக்கு வந்திருக்கீகன்னு தெரியுமா?”
அவன் கண்களைத் தழைத்தான். அவனுடைய இமைப்பீலிகள் பெண்களுடையவை போல தடிமனானவை. நீண்ட கண்கள் வேறு. சிவந்த உதடுகள். புகைபடிந்தது போன்ற மீசை இல்லையென்றால் பெண் என்றே சொல்லிவிடமுடியும்.
“சொல்லுங்க.”
“ம்” என்றான்.
“தெரியுமா?”
“ஆமா”
“அப்பா சொல்லித்தான் கூட்டிட்டு வந்திருக்காரு, இல்ல?”
“ஆமா”
“நான் தெளிவாட்டு சொல்லிடுதேன். இதுக்கு சிகிச்சைன்னு ஒரு இல்லை. இது மருந்தா மந்திரவாதமான்னு சொல்லிட முடியாது. நீங்க நோயாளியான்னு எங்கிட்ட கேட்டா நான் அதை நீங்கதான் சொல்லணும்னு சொல்லிப்போடுவேன். வைரப்புதையல் எடுத்து ஒளிச்சு வைச்சவனை மத்தவனுக கண்டா கிறுக்கன்னுதான் சொல்லுவானுக. நோய்னு நீங்க நினைக்கணும். சிகிச்சை வேணும்னு நீங்களே விரும்பணும். அப்ப நாம சிலது செய்ய முடியும்.”
அவன் கண்கள் கலங்கின. உதடுகள் நடுங்க ஆரம்பித்தன. நான் என் பார்வையை திருப்பிக்கொண்டேன். அவன் இருக்கும் அந்நிலையை நான் பலமுறை பார்த்துவிட்டேன். என்னால் அவனை அப்படிப் பார்க்கமுடியாது. அவனை எச்சில் வழியும் வாயுடன் சிரிக்கும் செல்லக்குட்டியாகத் தூக்கித் தோளில் வைத்து ஆடினவன் நான்.
“சொல்லுங்க”
“என்னைய மீட்டிருங்க… என்னாலே முடியல்ல. எனக்காக அப்பாவும் அம்மையும் படுத பாடக் கண்டா செத்துப்போவலாம் போல இருக்கு…” என்று அவன் உடைந்த குரலில் சொன்னான்.
“மக்கா லே, என்னலே பேசுதே. நீ செத்தா பின்ன நாங்க என்னத்துக்குடே இருக்குதோம்?” என்றார் அணைஞ்சபெருமாள்.
“நீங்க பேசாதீங்க… நான் அவரு கிட்டே பேசிட்டிருக்கேன்லா?” என்றார் வைத்தியர். “அப்ப இது நோய்னு நீங்க உறுதியா இருக்கீங்க. நீங்க இதை நோய்னு நிலைநிறுத்தினாத்தான் நான் வைத்தியத்தை தொடங்கமுடியும்.”
“என்னாலே முடியல்ல… நான் விட்டுவெலக நினைக்கேன். என்னாலே முடியல்ல… என் மானம் மரியாத எல்லாமே போச்சு. எல்லாரும் பாத்து சிரிக்குத மாதிரி ஆயாச்சு… நான் செத்திருவேன்… சத்தியமா செத்திருவேன்.”
“என்னத்துக்கு சாக? இஞ்ச பாருங்க பிள்ளே. இது ஒரு மதுரமாக்கும். இதிலே ஒரு சொட்டு குடிக்காத மனுசன் இல்லை. சிலருக்கு அந்த தேவமதுரம் கொடம் கொடமா கிட்டிருது. அமிருதம் மிஞ்சினா வெசம். அவ்ளவுதான்… மத்தவன் உங்களை நினைச்சு பொறாமைப்படத்தான் செய்வான்…” என்றார் வைத்தியர். “அதை விடுங்க.. வேண்டுமளவுக்கு ஆயாச்சுன்னா வெளியே வந்திடலாம்.”
“நான் வந்திடுதேன்” என்று அவன் சொன்னான். “என்னாலே முடியல்ல. நான் வந்திடுதேன்.”
“செரி, அப்ப வாங்க முதல்ல தடம் பாப்போம்” என்றார் வைத்தியர். “நான் கேக்கப்பட்டதுக்கு பதில் சொல்லுங்க. வயித்திலே வலி உண்டா? ஊமைவலி?”
“ஆமா, தினம் காலம்பற வலிக்கும். தொட்டா வலிக்காது. ஆனா உள்ள ஒரு வலி இருக்குத மாதிரி இருக்கும். உள்ள என்னமோ உருண்டு அசையுத மாதிரி.”
“ம்” என்றார். “மனசு எப்டி இருக்கு?”
“மனசுன்னா… எப்பமுமே மனசு பதறிட்டே இருக்கு. ஒரு பெரிய விசயத்துக்காக எதிர்பார்த்துட்டிருக்கிற மாதிரி. என்னமோ பெரிய ரகசியத்த உலகத்துக்கிட்டே இருந்து ஒளிச்சு வைச்சுக்கிட்டது மாதிரி… தாங்கமுடியாத சந்தோசம் வந்து அதுவே அழுகையா மாறும்லா, அதுமாதிரி. கொஞ்சமா வந்தா அது பெரிய கொண்டாட்டமாக்கும். ஒரு அஞ்சுநிமிசம் பத்துநிமிசம் அப்டி இருந்தா அதை ஜென்மகாலத்திலே மறக்க மாட்டோம். ஆனா இது அப்டியே நாள்முழுக்க இருக்கும். நாட்கணக்கிலே வாரக்கணக்கிலே இருக்கும்… அப்ப அது பெருந்துன்பம்… அது சீழ்கட்டின ரெத்தக்கட்டியோட தெறிப்பு மாதிரி ஆயிடுது. மண்டைய கொண்டுபோயி எங்கியாம் சுவரிலே முட்டிக்கிடணும்னு தோணிடுது. முட்டை உடையுத மாதிரி மண்டை உடைஞ்சு தெறிச்சிரணும்… உள்ளே இருந்து மூளை சீழும்சலமுமா வெளிய சிந்தினா எல்லாம் தெளிஞ்சிரும்னு தோணிடும்.”
“ம்ம்” என்றார் வைத்தியர். “கொஞ்சம் விடுதலை எப்ப வரும்?”
“காலம்பற எந்திரிக்கிறப்ப… அப்பதான் வயிறு வலிக்கும். ஆனா மனசு தெளிஞ்சிருக்கும். எல்லாத்தையும் நல்லா பாக்க முடியும். இனி இல்லே, இவ்ளவுதான்னு தோணும். இதோட விட்டாச்சுன்னு சபதம் எடுப்பேன். ஆனா அது முட்டி தலையுடைக்குத ஆடு மெல்ல பின்னாலே காலெடுத்து வைக்கிறது மாதிரித்தான்… அது மறுபடி வலுவா முட்டிக்கிறதுக்குக் குறி பாக்குது, அவ்ளவுதான்.”
“சொப்பனங்கள்?”
“சொப்பனங்கள்னா… என்னன்னு சொல்ல? நெறைய…”
“நான் கேக்குதேன். சொப்பனத்திலே சங்கீதம் உண்டா?”
“ஆமா, ஆமா… புல்லாங்குழல், மணி, வீணை எல்லாம் உண்டு…”
“கெந்தர்வம்” என்றார் வைத்தியர். “சொப்பனத்திலே நல்ல மணம் வருமா?”
“எல்லா மணமும் உண்டு. கஸ்தூரி கோரோசனை சாம்பிராணி… எல்லா பூவுக்க மணமும் உண்டு.”
“சொப்பனத்திலே பூக்கள் வாறதுண்டா?”
“பூவாத்தான் நிறைஞ்சிருக்கும்”
“கண்ணுகள் வாறதுண்டா? அழகான கண்ணுகள்?”
“ஆமா…” அவன் உடல் ஒருமுறை உலுக்கிக் கொண்டது.
“அதான்… சம்சயமில்லை” என்றார்.
“எடுத்துப்போட முடியுமா வைத்தியரே, எனக்கு ஒத்த ஒரு பயலாக்கும். என் செல்லமாக்கும்”
“பாப்பம்”
“அந்தத் தேவ்டியா…”
“வேண்டாம்” என்றார் வைத்தியர்.
நான் “இனிமே என்ன செய்ய?” என்றேன்.
“சில வழிமுறைகள் இருக்கு… அதுக்கு முன்னாலே பையன் கொஞ்சம் ரெஸ்டு எடுக்கட்டும்.”
“அவனுக்கு உறக்கமே இல்ல வைத்தியரே…. ஒரு அரமணிநேரம் உறங்குவான்… உடனே எந்திரிச்சிருவான். உடம்பு நடுங்கிட்டிருக்கும். கெளம்பிப் போயிடுவான். ராத்திரியிலே போயி அங்க நின்னுட்டிருப்பான். நிலாநாளுன்னா குன்றுமேலே கேறி மொட்டைப்பாறையிலே நிக்கிறது… ரூமை வெளியே பூட்டினா கதவிலே மண்டைய போட்டு முட்டுறது…”
அவன் தலைகுனிந்து அமர்ந்திருந்தான். அவன் விரல்களை பார்த்தால் எப்போதும் ஏதோ வீணைக்கம்பிகளை மீட்டியபடி இருப்பதைப்போல அசைவது தெரியும்.
“கொஞ்சம் அரிஷ்டம் குடிக்கலாமா?” என்று வைத்தியர் கேட்டார்.
“வேண்டாம்” என்று அவன் சொன்னான்.
வைத்தியர் கண்காட்ட அவருடைய உதவியாளன் ஒரு பெரிய புட்டியை எடுத்துவந்தான். “தசமூலமாக்கும்” என்றார்.
அவர் அதன் மூடியை திறந்தார். மயக்கும் மதுவின் மணம் எழுந்தது. அவன் தீயால் சுட்டதுபோல துடிப்படைந்தான். சட்டென்று அதை எடுத்து அப்படியே குடிக்க ஆரம்பித்தான்.
அவன் குடிக்கும் ஓசை மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. வைத்தியர் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.
அவன் ஒழிந்த குப்பியை கீழே வைத்தான். உதடுகளில் மது வழிந்தது. உடலை நனைந்த ஆடுபோல சிலிர்த்து உலுக்கிக்கொண்டான்.
“இப்டித்தான் குடி… குடம்நிறையுத மாதிரி சத்தம் வாற குடி. நான் என்ன செய்வேன்!” என்றார் அணைஞ்சபெருமாள்.
வைத்தியர் “அது அப்டித்தான்… யட்சகந்தர்வாதிகளோட சீலம் அதாக்கும்” என்றார்.
அவன் ஏப்பம் விட்டான். மெல்ல அசைந்தான். அவன் உடல் வியர்வை பூத்து சிலிர்ப்படைவதைக் கண்டேன். மீண்டும் ஏப்பம் விட்டான். குமட்டல் போல உடலை உலுக்கிக் கொண்டான்.
அவன் ஒருபக்கம் சாய்வதற்குள் வைத்தியர் பிடித்துக் கொண்டார். அவருடைய உதவியாளன் அவனை தூக்கிக் கொண்டுசென்று படுக்கவைத்தான்.
அவனுடைய குறட்டை ஒலி கேட்க ஆரம்பித்தது.
“செல்லம்போல இருந்த பயலாக்கும். சின்னப்பையன் மாதிரி இருப்பான். எப்பமும் சிரிப்பும் பாட்டும் டான்ஸுமா இருப்பான். சங்கீதம்னா உசிரு. நல்லா படமும் வரைவான். அம்மைக்க செல்லமகனாக்கும்… இப்டி ஆக்கிப்போட்டா அந்த பாவி…”
“பாப்பம்”
“அவள நீங்க பாக்கணும்… அப்டி ஒண்ணும் கண்ணுக்கு நல்லா இருக்க மாட்டா… இவனக்காட்டிலும் எட்டுவயசு மூப்பு. என்னத்த கண்டானோ….”
“கைவிஷமுல்லா வேலை செய்யுது?” என்றார் வைத்தியர்.
“நான் அவகிட்டே போயி நியாயம் கேட்டேன். அவன் அம்மை போயி அவளுக்க காலைப்பிடிச்சு அளுதா. அவ நம்மளைவிட ஓங்கி அளுவுதா. எனக்கு ஒண்ணும் தெரியாது. நான் ஒரு வார்த்தை சொன்னதில்லை. நான் என்ன வேணுமானாலும் செய்யுதேன், நீங்க உங்க பிள்ளைய கூட்டிட்டுப் போங்கன்னு சொல்லுதா…”
“ஓ”
“அவளுக்கு கல்யாணமாகி ஒரு பிள்ளையும் இருக்கு. அவ புருசன் சொல்லுதான், உங்க பயலுக்கு மண்டைக்கு கிறுக்கு. அவனாலே எங்க வாழ்க்கை நாசமாகுது. கொண்டுபோயி ஆஸ்பத்திரியிலே சேருங்கன்னுட்டு… நான் என்ன செய்வேன்?”
“பாப்பம், வழி இருக்கு” என்றார் வைத்தியர்.
“இதுக்கு என்னவாக்கும் வைத்தியம்?” என்றேன்.
“முதல்ல விஷமிருக்கும் இடமென்னன்னு பாக்கணும். நீல அவுரிக்க இலை வேணும். அதை பாலிலே அரைச்சு அந்த விழுதை வயித்திலே தடவிப்பாக்கணும். பச்சிலைப்பசை தொப்புளுக்குமேலே காயாம இருந்தா வெஷமிருக்கிறது வயித்திலே. தொப்புளுக்குக் கீழே உலராம இருந்தா அது மலக்குடலுக்கு வந்தாச்சு. மலக்குடலுக்கு வந்தாச்சுன்னா அமிர்தம் திரிஞ்சு மலமா ஆயாச்சுன்னு அர்த்தம். எல்லா அமிர்தமும் திரியுற ஒண்ணுதான் இந்த உலகம். உடலுக்குள்ள போனா அமிர்தம் அப்பவே மலமா மாற ஆரம்பிச்சாச்சு. மலம் எதுவானாலும் உடலைவிட்டு போயாகணும். அது அதமஸ்திதி. எல்லாம் சுளுவா முடிஞ்சிரும்.”
வைத்தியர் சொன்னார் “கைவெஷம் இரைப்பயிலே இருந்தா அதை கர்ப்பஸ்திதின்னு சொல்லுவோம். அது மத்திமம். அங்க அது மண்ணுக்குள்ளே விதைபோல இருக்கு. அங்கே இருந்து அதை குடலுக்கு கொஞ்சம் கொஞ்சமா நகத்தணும்.. அதுக்கும் மருந்து இருக்கு. கொஞ்சம் நாளாவும். செஞ்சுபோடலாம்.”
அவர் உதவியாளனிடம் “அமரி இருக்காலே? நீல அமரி?” என்றார்.
“அமரின்னா?” என்றேன்.
“இங்க மலையாள வைத்தியமாக்கும். இதிலே அமரின்னு பேரு.”
உதவியாளன் “களியான்தோட்டத்திலே நிக்குது… கொண்டுட்டு வாறேன்” என்றான்.
“எப்டியாவது காப்பாத்திக் குடுங்க வைத்தியரே” என்றார் அணைஞ்ச பெருமாள்.
“இது எப்டி உள்ள போச்சு?” என்றேன்.
“பலவழிகள் இருக்கு. ஏதாவது ஒருவழியிலே வயித்துக்குள்ளே போக வைக்கணும். தாம்பூலத்திலே ஒரு நாலு குருமிளகோட வைச்சு குடுக்கிறது வழக்கம். அதிலே ஏற்கனவே சுண்ணாம்பு பாக்கு காரம்னு இருக்கிறதினாலே ருசிபேதம் அவ்ளவா தெரியாது.”
“மந்திரம் உண்டோ?” என்று நான் கேட்டேன்.
“உண்டு. பிடிக்கவேண்டிய ஆளுக்க தலைமுடியோ நகமோ உடம்பிலே ஒரு துண்டு வேணும். அதை சொந்த ரத்தம் ஒரு துளியிலே நனைச்சுக்கிடணும். சில மந்திரஙகள் இருக்கு. ஆயிரத்தெட்டு லெச்சத்தி எட்டுன்னு சில கணக்குகள் உண்டு. அதன்படி சொல்லணும். உருப்போடுறதுன்னு சொல்லுவாங்க…”
“அத மந்திரவாதிதான் செய்யணுமோ?”
“மந்திரவாதி செய்தா மறுமந்திரமும் சுளுவிலே நடந்துபோடும்” என்றார் வைத்தியர். “சம்பந்தப்பட்ட ஆளு செய்தா அதிலே இருக்குதது அசல் ரெத்தமாக்கும். அதுக்க பவர் வேறே”
அவர் வெற்றிலை போட்டுக்கொள்ள ஆரம்பித்தார். நாங்கள் திண்ணையில் அமர்ந்து அவரைப் பார்த்துக்கொண்டிருந்தோம். அவருடைய தாடை செவிப்பொருத்தருகே இறுகி அசைந்து கொண்டிருந்தது. உள்ளே கணேசனின் குறட்டை கேட்டது.
“அந்த மந்திரம் என்னவாக்கும்?” என்றேன்.
“பிரீம்னு ஒரு மந்திரம். அது தேவியோட மந்திரங்களிலே ஒண்ணு. ஓம் ஹ்ரீம் ஸ்ரீம்னு பதினெட்டு இருக்குல்லா அதிலே ஏழாவது. பிரீம்னா தேவியை சர்வாலங்காரியா, காமரூபிணியா உருவகிக்கிறது. பிடிக்கவேண்டிய ஆளை மனசிலே மதுரமதுரமா நினைச்சுக்கிடணும். உடலிலேயும் மனசிலேயும் தீபோல காமம் வேணும். வேற ஒரு சிந்தையும் இருக்கப்பிடாது. அந்தப் பேருதான் மந்திரம். அந்த நினைப்புதான் தந்திரம்… நடுவிலே ஒரு கணநேரம் நினைப்பு தவறிப்போச்சுதுன்னா மறுபடி தொடக்கத்திலே இருந்து வரணும்… அப்டி லெச்சத்தி எட்டுன்னா அதுக்கு ஆனைச்சங்கிலிக்க சக்தியாக்கும். பிரம்மா நினைச்சாக்கூட உடைக்கிறது கஷ்டம்.”
“பிறவு?” என்றேன்.
“முறையா ஜெபிச்சா அந்த ரெத்தம் அப்டியே காயாம இருக்கும்… கருப்பு மையாட்டு ஆயிடும். அதை சின்ன தர்ப்பைமுனையாலே தொட்டு ஒரு வெத்திலையிலே யந்திரம் எழுதணும்… யந்திரம்னா இந்தா இதுமாதிரி இருக்கும். சொன்னேன்லா, கைவெஷத்துக்க மந்திரம் பிரீம். அதை மலையாள எளுத்துலே இப்டி எளுதினா எந்திரம்… அதை எளுதி அந்த வெத்திலையைச் சுருட்டி பிடிக்கவேண்டியவருக்கு குடுத்துட்டா அது உள்ள போயி தங்கிரும். அதாக்கும் கைவெஷம்.”
“கைவெஷம் குடுத்துப்போட்டாளே, சண்டாளப்பாவி” என்றார் அணைஞ்சபெருமாள்.
“அவ குடுத்திருப்பாளா?” என்று நான் வைத்தியரிடம் கேட்டேன்.
“அவ குடுத்திருக்கணும்னு இல்லை. யாரோ யாருக்காகவோ வச்ச கைவெஷம் தவறுதலா இவருக்க வயித்திலே போயிருக்க வாய்ப்பிருக்கு… அவளே அறியாம சொப்பனத்திலே கைவெஷம் குடுத்திருக்கவும் வாய்ப்பிருக்கு. அவ குடுத்ததும் இவரு தின்னதும் சொப்பனத்திலே நடந்திருக்கலாம்.”
“சொப்பனத்திலேன்னா…”
“பிள்ளே, சொப்பனம்னா வேரு, யதார்த்தம் மரம் பாத்துக்கிடுங்க. வேரு முளைச்சா அது மரம். வேரறியாக் கனியில்லேன்னு பாட்டு உண்டு…” என்றார் வைத்தியர். “எல்லாம் தெய்வங்களுக்க விளையாட்டுல்லா? ஆரை நாம குற்றம்சொல்ல?”
அவுரிச் செடியுடன் அவருடைய உதவியாளன் வந்தான். சீமைக்கொன்றை இலை போல கொத்துக்களாக இருந்தது. அதை உருவி இலைகளை ஒரு கல்லுரலில் இட்டு வெண்கலப் பூணிட்ட உலக்கையால் இடித்து அரைத்தான். வைத்தியர் இடையில் கைவைத்து அதை பார்த்துக்கொண்டு நின்றார். அவருடைய தோளிலிருந்து துவர்த்து நீண்டு கிடந்தது. சட்டையில்லா மார்பு. கையில் ஒரு செம்பு மோதிரம். நரைத்த நீண்ட தாடி. கொம்புச்சட்டமிட்ட கண்ணாடி.
அரைத்த விழுதை வழித்து ஒரு செம்புக்கலுவத்தில் இட்டு பால்விட்டு நன்றாகக் குழப்பினார். வைத்தியர் அதை வாங்கி அவரே இன்னும் நன்றாகக் கலக்கி அரைத்தார்.
“பிள்ளைக்க சட்டைய களட்டுங்க” என்றார்.
நான் எழுந்து சென்று கணேசனின் சட்டையின் பித்தான்களைக் கழற்றி விலக்கினேன். உடல் மெலிந்து, வெண்ணிற தோலுக்குள் வரிவரியாக எலும்புகள் தெரிந்தன. வயிறு ஒட்டி பள்ளமாக வளைந்திருந்தது.
மெல்ல ஏதோ மந்திரத்தை முனகியபடி வைத்தியர் அமர்ந்தார். கண்களை மூடிக்கொண்டு பாம்புவிரலால் மும்முறை அந்த நீலப்பச்சை விழுதை தொட்டார். அதன்பின் மெல்ல எடுத்து தொப்புளருகே வைத்து மெல்லச் சுழற்றினார். சுழற்றிச் சுழற்றி வயிறெங்கும் அதை பூசினார்.
கலுவத்தை உதவியாளனிடம் அளித்துவிட்டு “பார்ப்போம்” என்றார்.
நான் அந்த பூச்சை பார்த்துக் கொண்டிருந்தேன். அவனுடைய உடல் எப்போதுமே காய்ச்சல் வந்ததுபோல கொதித்துக் கொண்டிருக்கும். மெல்லிய நடுக்கம் ஓடிக்கொண்டிருக்கும். ஆனால் அந்த பூச்சு காய்வதாகத் தெரியவில்லை. அல்லது என் கண்களுக்கு அப்படித் தோன்றுகிறதா…
“காயல்லியே வைத்தியரே” என்றார் அணைஞ்சபெருமாள்.
“மேலேயும் கீழேயும் காயல்லேன்னா…” என்று வைத்தியர் இழுத்தார். “அப்ப கொஞ்சம் கஷ்டமாக்கும்… கைவெஷம் நெஞ்சுக்கு போயிருக்கு. அதாக்கும் உத்தமம். ஹ்ருதயஸ்திதின்னு சொல்லுறதுண்டு. கைவெஷம் அங்கே பூத்து நிறைஞ்சிருக்கு…”
“கடும் மந்திரவாதிய வச்சு செஞ்சதோ?” என்றேன்.
“இல்ல, இத எந்த மந்திரவாதியும் செய்ய முடியாது. இதை சம்பந்தப்பட்டா ஆளே செஞ்சிருக்கணும். தனக்க சொந்த ரெத்தம் எடுத்து புடம்போட்டிருக்கணும். லெச்சத்தி எட்டு முறை ஒரு கணம் சொல்லும் மனசும் பதறாம மந்திர உச்சாடனம் நடந்திருக்கணும்… இது ஆனைச்சங்கிலி கூட இல்லை. இது பெரும்பாறைகளை உச்சிமலையிலே கட்டிவைச்சிருக்கிற கொலைப் பகவதிக்க பூட்டாக்கும்.”
“எனக்க மண்டைக்காட்டமோ, நான் சாவுதேன்! நான் சாவுதேன்!” என்று அணைஞ்ச பெருமாள் நெஞ்சில் அறைந்து அழுதார்.
“நில்லும் ஓய்” என்று நான் அவர் கையை பிடித்து ஓர் அதட்டு போட்டேன். “உக்காரும்… உக்காரும் ஓய்” என இழுத்து அமரச்செய்தேன். அவர் விசும்பி அழ ஆரம்பித்தார்.
வைத்தியர் மீண்டும் போய் பெஞ்சில் அமர்ந்து வெற்றிலைச் செல்லத்தை எடுத்தார். அணைஞ்சபெருமாள் ஓசையின்றிக் குலுங்கி அழுதபடி பெஞ்சில் படுத்துக்கொண்டார்.
“இது என்னவாக்கும்?” என்றேன்.
“பிள்ளே, இங்க மனுசங்கள பாத்தா ஒவ்வொருத்தரும் தனித்தனியா அலையுத மாதிரி தோணும். ஆனா அத்தனைபேரையும் ஒண்ணாச் சேத்துக் கெட்டிப்பின்னி வச்சிருக்கு. சொந்தம், பந்தம், பாசம், அன்பு, காதல், காமம்னு என்னென்னமோ இருக்கு. அது ஒரு மாதிரி ஒரு பசைன்னு வையுங்க. இல்ல ஒரு வலைன்னு சொல்லுங்க. அதனாலேதான் மனுச வாழ்க்கை இங்க நடக்குது. மனுசங்கள்லாம் சேந்து ஒற்றைக்கெட்டா இங்கிண வாழுறாங்க… “
நான் கைகளை கட்டிக்கொண்டு அவர் சொல்வதை கேட்டிருந்தேன். என்னால் அவர் சொல்லும் அத்தனை சொற்களையும் செவிகளால் வாங்க முடியவில்லை.
“தேனுதான் தேனீயை ஒண்ணாச் சேந்து ஒற்றைக்கூடா வச்சிருக்குது. தேனீ தேனிலே பிறந்து வளருது. தேன் தேடி அலையுது. தேனிலே சாவுது… அந்த தேனுதான் இது. இது அமிர்த மதுரம். நோயா வரும். சாவா வரும். அப்பமும் இது மதுரம்தான்” என்றார் வைத்தியர்.
“இதுக்கு மறுவளி உண்டா?”
“சில வளிகள் உண்டு” என்றார். “இந்த கட்டை இதை போட்டவதான் அவுக்க முடியும். இதிலே அவ போட்ட எந்திரம் நாம அறிஞ்ச பிரீம் மந்திரம் இல்ல. இது அவளுக்க கைரேகை. தனக்க சுட்டுவிரல் கைரேகையையே அவ யந்திரமா வைச்சிருக்கா.”
“ஏன்?”
“கைரேகையை யந்திரமா வைச்சா வைச்சவங்களும் யந்திரத்திலே மாட்டிக்கிடுவாங்க. அவங்களும் வெளியே போகமுடியாது… வலையிலே வேடனும் இரையும் மாட்டிக்கிடுதது மாதிரி.”
என்னால் அதை உள்வாங்கவே முடியவில்லை.
“அவளே அந்த கைவெஷத்தை திரும்ப எடுத்தாகணும். வேற வளியே இல்ல.”
நான் தலையசைத்தேன்.
“அதுக்கு மந்திரத்தை போட்டது மாதிரியே சொந்த ரெத்தம் எடுத்து மை செய்யணும். அப்டியே மனசு நிலைச்சு வெத்திலையிலே கைரேகையை வைக்கணும். அதை இவன் திங்கணும்… அப்ப முடிச்சுகள் அவுந்து விடுதலை ஆயிடுவான்.”
“அதை அவ செய்யணுமே”
“செய்ய வைக்கணும்…” என்றார் வைத்தியர். “அவளுக்கு நாம திருப்பி மந்திரம் வைக்கணும். ஒரு மந்திரத்தை வைக்கிறப்ப நாம ஒண்ணைமட்டும் நிறுத்தி மத்த எல்லாத்தையும் விலக்குதோம். கூர்மையாகிறது, குவிஞ்சுகிடுறதுக்குத்தான் மந்திரம்னு பேரு. ஆனா விலக்கின எதுவும் இல்லாம போறதில்லை. அதெல்லாம் அங்கதான் இருக்கும். அதெல்லாம் கோவத்திலே வெறிகொண்டிருக்கும். அதையெல்லாம் திருப்பி மந்திரம் போட்டவங்க மேலெயே ஏவ முடியும்.”
அவர் அதை ஒரு ரகசியம்போல மெல்லச் சொல்லிக்கொண்டிருந்தார்.
“என்னென்ன இருக்கு. மந்திரம் போடுறவன் அந்நேரத்திலே தேவன். அவனை அங்க அப்டி இருக்க மனுசனை ஆட்சிசெய்ற தெய்வங்கள் விட்டிருமா? சீக்கு, துக்கம், சாவு… எல்லாம் வந்து சுத்தி பிடிச்சுகிடும்ல? உடம்பு உக்கி பூட்டுபூட்டா வலிக்கும். எலும்பும் சதையும் மட்கி மண்ணு மண்ணா உதிரும். வாதை தாங்கமுடியாம அவளே அலறுவா, நான் விட்டுடுதேன் நான் மாறிப்போறேன்னு கதறி விளிப்பா. அப்ப போயி மறுமந்திரம் செய்ய வைக்கணும்.”
“ஓ” என்றேன். என்ன சொல்வதென்று தெரியாமல். பிறகு “முன்ன இப்டி நடந்திருக்கா.” என்றேன்.
“ஆமா, நான் செஞ்சிருக்கேன். ஒருத்தி இப்டி உத்தம மந்திரம் செஞ்சு கைவெஷம் குடுத்துப்போட்டா. கெந்தர்வன் மாதிரி பையன். அடிமையா ஆயிட்டான். கிறுக்கனா ஆயிட்டான். பூவும் நெலாவும் தேடி அத்து அலைஞ்சான். காணாப்பொன் கண்டவன் மாதிரி, கேளாச்சங்கீதம் கேட்டவன் மாதிரி வெறிச்சுப்பாத்துட்டு உக்காந்திருந்தான்…”
அவர் தலைகுனிந்து மெல்ல எவரிடமோ குற்றமேற்பு செய்வதுபோல சொல்லிக் கொண்டிருந்தார். “நான் கடுத்த மந்திரம் செஞ்சு தெய்வங்களை ஏவிவிட்டேன். கைவெஷம் குடுத்தவ அப்டியே உளுத்து உதிரமா கொட்டி நாளுக்குநாள் செத்தா. ஆனாலும் அவ அவனை விடச் சம்மதிக்கல்லை. எட்டு வருசம். எட்டுவருசம்னா எத்தனை நாளு! ஒவ்வொரு நாளும் நரகம். ஆனா அவ அவனை விடலை. அவனும் அவளும் சேந்து செத்தாங்க.. அவன் இனிச்சு இனிச்சு செத்தான். அவ…”
“அவளும் இனிச்சு இனிச்சுத்தான் செத்திருப்பா” என்றேன்.
அவர் என்னை ஏறிட்டுப் பார்த்தார். கண்களுக்கு கீழே புதிதாக உருவான சுருக்கங்களுடன் சட்டென்று பல ஆண்டுகள் வயதானவராகத் தெரிந்தார்.
“அவ செத்தா அவனும் செத்திருவான்… அந்த பிடிப்பு அப்டி. ஆனா அதுக்கு முன்னாடி கொஞ்சநேரம் அவனுக்கு ஒரு விடுதலை கிடைச்சிருக்கும். ஒரு சின்ன ஆசுவாசம் மாதிரி… என் செல்லப்பயலுக்கு அதுவும் கிடைக்கலை. அவன் அவளுக்கு முன்னாடியே போனான்… ஒருநாள் முன்னாடி…” அவர் தலை தாழ்ந்து தொங்கியது. “தெய்வங்களுக்கு இரக்கமில்லை. மனுசனை வைச்சு விளையாடுறதிலே அவங்களுக்கு ஒரு கணக்குமில்லை.”
நான் அவரையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தேன்.
அவர் நீண்ட பெருமூச்சுடன் நிமிர்ந்து கணேசனைப் பார்த்தார். “பூட்டை எடுத்திடலாம்… விதி இருக்கணும், அவ்வளவுதான்.”
நான் அவரிடம் “ஒருகணக்கிலே பாத்தா கடைசியிலே அந்த விடுதலை கிடைக்காமலேயே போறது நல்லதில்லியா?” என்றேன்.
அவர் என்னை நிமிர்ந்து பார்த்தார். தலை ஆடிக்கொண்டே இருந்தது.
அணைஞ்ச பெருமாள் எழுந்து “வைத்தியரே என் பயல காப்பாத்துங்க… அவன் இல்லேன்னா நான் செத்திருவேன்” என்றார்.
“சாமிகளை கும்பிட்டுக்கிடுங்க… விதியிருந்தா நடக்கும்” என்றார் வைத்தியர். “முள்ளுநுனியிலே பனித்துளின்னாக்கும் மனுசனை பத்திச் சொல்லியிருக்கு.”
***
உயிர்மை இருநூறாம் இதழ் அக்டோபர் 2021
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers


