Jeyamohan's Blog, page 887
November 6, 2021
தீயின் எடை- கடிதங்கள்
அன்புள்ள ஜெ,
தீயின் எடை செம்பதிப்பு உங்கள் கையெழுத்துடன் கிடைக்கப் பெற்றேன். நன்றி!
அட்டையில் வண்ண ஓவியத்தில் அக்னித் தாண்டவம். 576 பக்கங்கள் கொண்ட, மற்ற வெண்முரசு நாவல்களைவிட அளவில் சற்றே சிறிய நாவல். இறுதிப் போரையும் துரியோதனின் இறப்பையும் அஸ்வத்தாமனின் வஞ்சத்தால் பாண்டவ மைந்தர்கள் மடிவதையும் சொல்லும் எடைமிக்க நாவல்.
போருக்குப்பின் வெற்றி எவ்வாறு பொருள்படும் என்பது முதல் அத்தியாயத்திலேயே கவிஞர்களும் காவல் வீரர்களும் நடத்தும் ஊன்விருந்து நாடகத்தில் வெளிப்படுகிறது.
நெறி மீறி பீமனைக் கொல்ல வாய்ப்புக் கிடைத்தாலும் துரியோதனன் அதைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. இதற்கு அவன் கூறும் சுருக்கமான விளக்கம் “நான் அரசன்”. இறுதிப்போருக்கு ஐவரில் யாரைவேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பிருந்தும் பீமனையே தேர்ந்தெடுக்கிறான். அவன் அவ்வாறுதான் செய்வான் என்பது அனைவருக்கும் தெரிந்தே இருந்தது. சகதேவனை நடுவராகத் தேர்ந்தெடுத்தபின், ஏன் யுதிஷ்டிரரைத் தேர்ந்தெடுக்கவில்லை என்று அவன் கொடுக்கும் விளக்கம் அவன் அரசன்தான் என்று நிரூபிக்கின்றது.
நடுவராக இருக்கும் சகாதேவன் யுத்தத்தில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய 108 நெறிகள், ஏற்கப்பட்ட 34 வகையான தாக்குதல்கள், மறுக்கப்பட்ட நான்கு செயல்கள் இவற்றை விவரிக்கிறான். ஆனால், ஏழு முறை விலக்கப்பட்ட உரோஹாதம் என்னும் தொடையில் தாக்கும் பிழையின் மூலம் பீமன் துரியோதனனைக் கொல்கிறான்.
தொடர்ந்து போர், வஞ்சம், அழிவு என்றே செல்லும் நாவலில் ஒரு இனிய ஒளியாக 19ஆம் அத்தியாயம். யுதிஷ்டிரருக்கு தயை என்னும் வில் கிடைத்த கதை. எழவிருக்கும் கருவுக்கும் அருளிய அனுவின் கதை.
வெண்முரசு அருளிய உங்களுக்கு வணக்கமும் நன்றியும்.
அன்புடன்,
S பாலகிருஷ்ணன், சென்னை
அன்புள்ள ஜெ
தீயின் எடை நாவல் இன்றுதான் வாசித்து முடித்தேன். இணையத்தில் படித்து முடித்திருந்தாலும் நூல்வடிவில் ஒட்டுமொத்தமாக வாசிப்பதென்பது அபப்டியே மூழ்கடித்து வைத்திருக்கும் பேரனுபவம். எங்கிருக்கிறோம், என்ன செய்கிறோம் என்றே தெரியாத ஒரு நிலை. போரின் கொந்தளிப்பு நாவலில் மெல்ல அடங்கிவிட்டது. ஆனால் எனக்கு ஒட்டுமொத்த போரும் ஒரு பெரிய காட்சிவெளியாக மனதில் நின்றுவிட்டது. மைக்ரோஸ்கோப் வழியாக நுண்ணியிரிகளைப் பார்க்கும்போது ஒரு பெரிய குருக்க்ஷேத்திரத்தைப் பார்ப்பதுபோன்ற உணர்வு உருவாகிறது. தீயின் எடை என்னும் தலைப்பே திடுக்கிடச் செய்வது.
ஆர். கிருஷ்ணகுமார்
November 5, 2021
சிவபூசையின் பொறுப்பும் வழியும்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
வணக்கம். நீண்ட தயக்கத்திற்கு பின் இந்த கடிதம். கொரோனாவில் இருந்து மீண்டு நலமாக உள்ளீர்கள் என அறிந்தேன். ஹோமோயோபதி போன்ற மருத்துவ முறைகளில் கொரோனா தடுப்பு மருந்து கொடுக்கப்படுகிறது. அதை எடுத்துக்கொள்வதை பற்றி தங்கள் கருத்தை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்.
எங்கள் குடும்பத்தில் சென்ற 2, 3 தலைமுறைகளாக சிவராத்திரி பூஜை செய்வது வழக்கம். என் கொள்ளுத் தாத்தா காலம் வரை மந்திரம், மருத்துவம் போன்றவற்றைத் தொழிலாக கொண்டு இருந்தனர். அதன் ஒரு அம்சமாக சிவராத்திரி பூஜை செய்யப்பட்டது. என் கொள்ளுத் தாத்தா காலத்தில் அவருக்கு ஏற்பட்ட சில கெட்ட அனுபவங்களால் அவர் என் தாத்தா மற்றும் அவர் தம்பிகளிடம் மந்திரம், மருத்துவம் போன்றவற்றை தொழிலாகச் செய்யக்கூடாது என்று சத்தியம் வாங்கிக்கொண்டார். எனவே என் தாத்தா காலம் முதல் மந்திரம் செய்வது தொழிலாக இல்லை. நெசவு வேலையைத் தொழிலாக செய்து வருகிறோம். என் தாத்தா காலம் வரை சில மந்திர சடங்குகள் அதில் செய்யப்பட்டன.
அதற்குப்பிறகு என் தந்தை காலத்தில் என் முன்னோர்கள் உபயோகித்த நூல்கள் மற்றும் சில மாந்திரீகம் சம்மந்தப்பட்ட பொருட்கள் ஆற்றில் விடப்பட்டன. மற்றும் பூஜையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. மாந்திரிக உச்சாடனங்கள் மற்றும் அது சம்பத்தப்பட்ட சடங்குகள் நிறுத்தப்பட்டன. மற்றும் பூஜையை நடத்தும் செலவிற்கு ஒரு நிதி நிறுவனம் சிறிய அளவில் நடத்தப்படுகிறது. இந்தப் பூஜையை ஒரு கருவியாகக் கொண்டு எங்கள் பங்காளிகளுக்குள் யார் பெரியவர் என்ற சண்டை மற்றும் அரசியல் நடக்கிறது. பெரும்பணியிருக்கும் நிதி சம்மந்தப்பட்ட விஷயங்களில் இருக்கும் ஆர்வம் பூஜையில் இல்லை. இந்த பூஜையின் பெயரில் நடக்கும் பக்தியற்ற வெறும் சடங்குகளும், அரசியலும் என்னை இந்த பூஜையை வெறுக்க வைத்தது/வைக்கிறது. கடந்த 7,8 ஆண்டுகளாக நான் இதில் கலந்து கொள்வது இல்லை.
கடந்த சில ஆண்டுகளாக உங்கள் கட்டுரைகளை படித்து நம் மரபை தொடரவேண்டும் என்ற எண்ணம் எனக்கு தோன்றியுள்ளது. ஆனால் இந்த பூஜையில் எவ்வாறு பங்குகொள்வது என்று குழப்பமாக உள்ளது. உங்கள் நூல்களைப் படித்து எனக்கு ஏற்பட்ட புரிதலில் எந்த ஒரு பூஜையும் காலத்திற்கு ஏற்ப மாறுதல் அடைய வேண்டும். இப்போது எங்கள் குடும்பத்தில் என் தலைமுறையில் அனைவரும் படித்து வேறு வேறு ஊர்களில் வேலை செய்து வருகிறோம். யாரும் மந்திரம் மற்றும் வைத்தியம் செய்வது இல்லை எனவே இந்தப் பூஜை பற்றிய வரலாறு மற்றும் சடங்கு பற்றி யாருக்கும் தெளிவான புரிதல் இல்லை. நான் கவனித்த வரை நடக்கும் பூஜை முறையை சுருக்கமாக கீழே குறிப்பிட்டுள்ளேன்.
பூஜை முறை:
பூஜைக்கு முதல் நாள் மற்றும் பூஜை அன்று பிரசாத நெய்வேத்தியங்களை தயார் செய்வர். எங்கள் பங்காளிகளுள் ஒருவர் வரிசை முறையில் பூஜை செய்ய பணிக்கப்படுவார். பூஜை அன்று மாலையில் சிவனை ஒரு கும்பத்தில் எந்த மந்திர உச்சாடனமும் இன்றி ஆவாஹனம் செய்து இரவு ஒரு மணி அளவில் சூடம் காட்டிவிட்டு அந்த பூஜை பொருட்களை ஒரு கிணற்றில் கரைத்து விடுகின்றனர். பூஜை அன்று நிதி வசூல் செய்து பஜனை மற்றும் அன்னதானம் நடக்கிறது.
எனக்கு கீழ்கண்ட கேள்விகள் உள்ளன.
நான் எவ்வாறு இந்த பூஜையில் தொடர்வது? ஏதேனும் நூல்களை படித்தோ அல்லது இதைப்பற்றிய அறிஞர்களிடம் ஆலோசனை பெற்றோ பூஜை முறையை மாற்ற முயல்வதா? அல்லது அப்படியே தொடர்வதா? அல்லது இந்த பூஜையில் கலந்து கொள்ளாமல் சிவராத்திரி அன்று ஏதும் சிவன் கோவிலில் கலந்து கொள்வதா?
உங்கள் கருத்து மற்றும் ஆலோசனைகளை தெரிவித்தால் எனக்கு மற்றும் என்னைப்போன்ற தலைமுறையினருக்கு உதவியாக இருக்கும்.
அன்புடன்,
அருண் தேவ்பால்யா
***
அன்புள்ள அருண்
முதலில் தெளிவுசெய்து கொண்டாகவேண்டிய விஷயம் ஒன்றுண்டு, இந்து மெய்மரபில் ஆன்மிகப்பயணம் என்பது தனிநபர் சார்ந்தது. எந்தவகையிலும் அது மரபுப்பொறுப்பு கொண்டது அல்ல. உங்கள் முன்னோர் ஒரு பூசையைச் செய்தனர் என்பதனால் நீங்கள் அதைச் செய்தாகவேண்டும் என்ற கட்டாயமேதும் இல்லை. அதைச் செய்யாமலிருந்தால் உங்களுக்கு தீங்கு விளையும் என்பதும் இல்லை.
இந்து ஞானவெளி என்னும் இந்த பெரும்பரப்பில் ஒவ்வொருவரும் முற்றிலும் சுதந்திரமானவர்கள். தன் பாதையைத் தேர்ந்தெடுக்கும் முழு உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு. ஒருவரின் பாதை இன்னொருவருக்கு உரியது அல்ல. ஒவ்வொன்றும் தனித்தன்மை கொண்டது.
சொல்லப்போனால் இந்து மெய்மரபின் மையச்சிக்கலே இதுதான். உறுதியான நிறுவன அமைப்பு இல்லை. மாறாத வழிமுறைகள் இல்லை. ஒவ்வொருவரும் தங்கள் வழியைத் தாங்களே தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம் என்பதன் பொருள் தாங்களேதான் தங்கள் வழியை தேர்வுசெய்து கொள்ள வேண்டும் என்பதும்கூடத்தான். சுதந்திரம் என்பது பெரும் பொறுப்பும்கூட.
ஆகவேதான் எளிய உள்ளங்கள் ஏதாவது உறுதியான அமைப்பை நாடுகிறார்கள். பலர் மதம் மாறுவதும் இதனால்தான். அங்கே தெரிவே இல்லை. திட்டவட்டமான ஆணைகளே உள்ளன, அவற்றை ஏற்று ஒழுகுவது மட்டும்போதும். அது எளிது.
ஆகவே உங்கள் முன்னோர் உங்களுக்கு எந்தப் பொறுப்பையும் அளித்துச் செல்லவில்லை. முன்னோரிடமிருந்து நாம் பெற்றுக்கொள்ளும் தவிர்க்கமுடியாத பொறுப்பு என்பது ஒன்று மட்டுமே. அவர்கள் செய்துவந்த அறங்களை நாம் தொடரவேண்டும். மற்றபடி வழிபாட்டைத் தொடர்வது பொறுப்பு அல்ல. ஆகவே அந்த வழிபாட்டுப் பொருட்களை கோயிலுக்கு அளித்துவிட்டது பிழையல்ல. அதற்காக வருந்தவோ அஞ்சவோ வேண்டியதில்லை.
உங்கள் முன்னோர் செய்துவந்த மாந்த்ரீகம் மருத்துவம் போன்றவற்றை இனி நீங்கள் செய்யமுடியாது. இளமையிலேயே தொடராவிட்டால் அந்தக் கண்ணி அறுந்துவிடும். அவர் செய்துவந்த பூசைமுறைகள் அவற்றைச் சார்ந்தவை. அவற்றை நீங்கள் செய்யமுடியாது, தேவையும் இல்லை.
உங்கள் முன்னோர் முறைப்படி சிவதீக்கை எடுத்திருக்கலாம். மந்திர உபதேசம் பெற்றிருக்கலாம். வழிபாடுகளையும் நோன்புகளையும் கடைப்பிடித்திருக்கலாம். அவர்கள் அடைந்த அந்த தீக்கையையும் மந்திரத்தையும் அடையாமல் நீங்கள் அந்த வழிபாடுகளைச் செய்யமுடியாது. அது அவர்களின் ஞானவழி. உங்களுடையது அல்ல. வெறுமே அதை நீங்கள் ‘மிமிக்’ செய்ய முடியாது.
ஆனால், சில பூஜைகள் தலைமுறைகளுக்குப் பயனளிக்கக்கூடியவை. மரபுரிமையாக அவற்றின் தொடர்ச்சியின் பயனை பெறமுடியும். அவ்வாறென்றால் மூதாதையர் எங்கே அந்த தீக்கையையும் மந்திரத்தையும் பெற்றார்களோ அங்கேயே அதை நீங்களும் பெறவேண்டும். அந்த நெறிகளின்படியே முறையாகத், தொடர்ச்சியாக அவற்றைச் செய்யவேண்டும். நீங்களே செய்யக்கூடாது, வேறெந்த இடத்திலும் தீக்கையோ மந்திரமோ பெறக்கூடாது. அந்த முறைமையை மாற்றக்கூடாது.
அவ்வாறன்றி உங்களுக்கே சைவ தீக்கை பெற்று வழிபாடு செய்ய விழைவு இருந்தால், முந்தையவரின் தொடர்ச்சியைப் பேணும்நிலையில் இல்லை என்றால், அதற்குரிய மரபான அமைப்புகளை நாடி தீக்கை பெற்றுக்கொண்டு அதைத் தொடரலாம். அது முந்தைய வழிபாட்டின் தொடர்ச்சி அல்ல, உங்களுக்கு நீங்களே எடுத்துக்கொண்ட உறுதி. உங்கள் பாதை.
தீக்கையும் மந்திரமும் உபாசனைக்குரியவை. எளிய பக்திக்கு அவை தேவை இல்லை. அதற்கு ஆலயவழிபாடும், இல்லத்தில் எளிமையான தொடர்வணக்கமுமே போதுமானவை. படங்களுக்குப் பூஜைசெய்வது, திருமுறை நூல்களை ஓதுவது, பாடல் என அதற்குரிய வழிமுறைகள் எங்கும் உள்ளவை. உங்களுக்கு உகந்தவற்றைத் தேர்வுசெய்யலாம்.
உங்கள் குலதெய்வ வழிபாட்டின் நடைமுறைகளில் உங்களுக்கு ஒவ்வாமைகள் இருந்தால், ஒத்துப்போக முடியாவிட்டால் உங்களுக்குரிய நிதிப்பங்கை மட்டும் அளிக்கலாம். பிறிதொருநாளில் சென்று நீங்கள் வழிபட்டு வரலாம். நீங்கள் குறிப்பிட்ட பூசை தாந்த்ரீக அடிப்படை கொண்டது என தெரிகிறது. அதை நீங்கள் செய்ய முடியாது. அதை அதற்குரிய தன்னுறுதி எடுத்துக்கொண்டு நெறிநிற்பவர்களே செய்யமுடியும்.
நீங்கள் செய்யக்கூடுவது ஒன்றே. அதைச் செய்பவர்களை ஆதரிப்பது. அதற்கான நிதியை அளிப்பது. அது நின்றுவிடாமல் பார்த்துக்கொள்வது. முடிந்தபோது அங்கு சென்று வழிபட்டு வருவது.
இறைவழிபாடு செய்யாவிட்டால் அது நம் குறையே ஒழிய பிழை அல்ல. இறைச்சக்திகள் பழிவாங்குவதில்லை, தீங்கிழைப்பதில்லை. இறைச்சக்தியை அகத்தே அல்லது புறத்தே உள்ளதாக எப்படி எடுத்துக்கொண்டாலும்.
குலதெய்வம் மற்றும் ஊர்த்தெய்வங்கள் வழிபடாவிட்டால் தீங்கிழைக்கும் என தொல்நம்பிக்கை உண்டு. சோதிடர்கள் சொல்வதுண்டு. அதுவும் உண்மை அல்ல. ஆனால் முற்றிலும் அத்தெய்வங்களைக் கைவிட்டுவிடுவது இழப்பு. ஆகவே வாழ்க்கையின் குறை. வேரற்றவராக, மூதாதையற்றவராக ஆதல் அது. ஆகவே அதை தவிர்க்கலாகாது. அதை ஊன்றிச் சொல்லும்பொருட்டே அவற்றால் தீங்கு நிகழுமென அச்சுறுத்துகிறார்கள்.
தெய்வம் என்பது அச்சத்தால் வழிபடவேண்டியதல்ல. அது பிரபஞ்சதரிசனம் ஒன்றை நாம் நமக்குரிய வழியில் உணர்வதேயாகும். உணரவில்லை என்றால் அது நமக்கு குறை, அவ்வளவுதான்.
ஜெ
***
ஏதோ ஒரு நதி
சிவாஜி எம்ஜியார் மற்றும் வெவ்வேறு சின்னச்சின்ன வம்புகளுக்கும் செய்திகளுக்கும் அப்பால் பழைய சினிமாவின் உலகம் என்பது ஆர்வமூட்டுவது. ஆழமான சமூகவியல் ஆய்வுகளுக்கு அதில் இடமிருக்கிறது. ஆனால் நான் சொல்வது நாம் நம் கடந்தகாலத்தில் உலவ அது அளிக்கும் வாய்ப்பு.
ஏனென்றால் இங்கே நம் வாழ்க்கை தொடர்ச்சியாக பதிவாகியிருப்பது சினிமாவில்தான். வணிக இதழ்களில் ஓரளவு உண்டு. அது ஒரு சிறுவட்டத்தில்தான். உதாரணமாக குமுதம், விகடன் இரண்டுமே என் இளமைநினைவுகளில் கலந்தவை. ஆனால் அக்காலக் குமுதம் முழுக்கமுழுக்க சென்னையையே முன்வைக்கும் இதழ். விகடன் பிராமணர்களின் உலகை மட்டுமே முன்வைப்பது.
சினிமா அப்படி அல்ல. அதன் காட்சிகள் மட்டுமல்ல இசையும் முக்கியமானது. அவை ஏதேதோ நினைவுகளுடன் கலந்துள்ளன. நினைவுகளில் எவற்றை தொட்டு அவை மேலெழுப்பிக் கொண்டுவரும் என்று சொல்லிவிடமுடியாது. மேலும் பழைய வார இதழ்களை இன்று காண்பதே அரிது. நான் விசாரித்தவரை அந்த இதழ்களின் அலுவலகங்களிலேயேகூட அவற்றின் பிரதிகள் பேணப்படவில்லை. ஆனால் சினிமா பெரும்பாலும் கிடைக்கிறது. சினிமா பாடல்களில் சிலவே மறைந்துவிட்டிருக்கின்றன.
யூடியூப் நினைவுகளி களஞ்சியம் போலிருக்கிறது. இந்தப்பாடலை கேட்கும்போது நான் யூடியூபில் நள்ளிரவுக்குமேல் இறங்கும் அனுபவத்திற்கும் இதைச் சொல்லலாம் என்று தோன்றியது. அன்று சிலோன் வானொலியில் அடிக்கடி ஒலிக்கும்பாடல் இது. திருவரம்பின் மதியங்கள் அமைதியானவை. காற்றும் நீரும் ஓடும் ஒலிகளும் அவ்வப்போது மாடுகளின் ஒலியும் மட்டுமே சூழ்ந்திருக்கும். எங்கோ ஒரு வீட்டில் வானொலி ஒலித்தால் காற்று அதை ஊரெங்கும் பரப்பும். அந்த மயக்கத்தில் பாடல்கள் தர்க்கமனத்தை கடந்து கனவுக்குள் நேரடியாகவே நுழைந்துவிடும்.
கேளாச்சங்கீதம்- கடிதங்கள் -9
அன்புள்ள ஜெ
கேளாச்சங்கீதம் வாசித்தேன்.சங்க இலக்கியத்தில் வரும் அதிமதுரம் தின்ற யானைபோல என்ற உவமை உடனே நினைவுக்கு வந்தது. அந்தக் கவிதையை வாசிக்கும்போது அதிமதுரத்தை நான் வாயில் வைதிருக்கவில்லை. ஆனால் பிறகு அதை வாயில் வைத்தபோதுதான் அந்தக்கவிதை சொல்வதென்ன என்று புரிந்தது. உண்மையில் மிகப்பெரிய அவஸ்தை.
ஒரு கஷாயம் தயாரிக்க வாங்கி வந்திருந்தார்கள். வேர் போல இருந்தது. வாயில்போட்டு மென்றுபார் என் சித்தப்பா சொன்னார். சரசரவென மென்றுவிட்டேன். கசப்பாக இருந்தது. துப்பினேன். ஆனால் உடனே இனிக்க ஆரம்பித்தது. இனிப்பா கசப்பா என்று சொல்லவே முடியாது. ஒருநாள் முழுக்க துப்பிக்கொண்டே இருந்தேன். வாயில் தண்ணீர்விட்டு கொப்பளித்தேன். சோடா போட்டு கொப்பளித்தேன். காரம் சாப்பிட்டேன். என்ன செய்தாலும் இனிப்பு அப்படியேதான் இருந்தது. இனிப்பு என்று நாம் நினைத்தால்தான் அது இனிப்பு.ஒரு நாள் முழுக்க மரண அவஸ்தை. என்ன செய்வதென்றே தெரியவில்லை. இரண்டுமுறை வாந்தி எடுத்துவிட்டேன்.
இப்போது கேளாச்சங்கீதம் வாசித்து அந்த வரியை நினைத்தபோது இந்த கதையிலுள்ள இதே மனநிலையைத்தான் அந்தக்கவிதையும் சொல்லியிருக்கிறது என்னும் எண்ணம் ஏற்பட்டது.
எஸ்.விஜயகுமார்
அன்புள்ள ஜெ
கேளாச்சங்கீதம் வாசித்தேன். மிகமிக பெர்ஃபெக்டாகச் சொல்லப்பட்ட கதை. மிகத்தீவிரமான ஒரு விஷயத்தைச் சொல்லும்போது சம்பந்தமே இல்லாமல் ஒரு விலகிய பாவனை கதையில் இருக்கிறது. சாவுக்கும் வாழ்வுக்குமான ஊடாட்டம் இந்தக்கதையில் இருக்கிறது. ஆனால் கதை ஏதோ மாந்திரீக மருத்துவம் பற்றிப் பேசுவதுபோல இருக்கிறது. டிவிஸ்ட் என்று ஏதுமில்லை. கதையின் உச்சம் சாதாரணமாக வந்துவிடுகிறது. ஆனால் அதன்பிறகும் கதை நீண்டும் அந்த உச்சவரியையும் வாசகன் ஊகிக்கும்படி விட்டுவிடுகிறது. பெர்ஃபெக்ஷன் என்பது சொல்வதில் அல்ல. சூட்சுமமாகச் சொல்வதிலும் அதையே சரளமாகச் சொல்வதிலும்தான் உள்ளது. அந்த நுட்பம் கூடிவந்த கதை இது.
ஒரு மதுரமாக்கும். இதிலே ஒரு சொட்டு குடிக்காத மனுசன் இல்லை
சொப்பனம்னா வேரு, யதார்த்தம் மரம்
மந்திரம் போடுறவன் அந்நேரத்திலே தேவன்
கடைசியிலே அந்த விடுதலை கிடைக்காமலேயே போறது நல்லதில்லியா?
என்னும் வரிகள் வழியாக ஒரு சூட்சுமமான கதை சொல்லப்படுகிறது. அதுதான் இந்த மருத்துவ மாந்திரீகக் கதைக்குள் இருக்கும் மானுட உறவின் கதை.
எஸ்.பாலகிருஷ்ணன்
கோவை கவிதைநிகழ்வு- கடிதம்
கோவையும் கவிதையும் ஒரு கோழியும்
அரங்கில் விவாதிக்கப்பட்ட படைப்புகள்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம்
சீன கலாச்சாரத்தில் பைன், வில்லோ மரங்களும் ’மெய்’ (Mei) மலர்களும் மிக முக்கிய இடம் பெற்றவை. சீன மெய்யியல் தத்துவங்களில் நீண்ட ஆயுளுக்கும், கண்ணியத்திற்கும், சாதகமற்ற சூழலிலும் கம்பீரமாக எழுந்து நிற்பதற்கும் பைன் மரங்கள் உருவகமாக சொல்லப்படும். அதைப்போலவே தாழ்ந்த கிளைகளுடன், துயரே உருவாக தோன்றும் வில்லோ மரங்களும் இறப்பு, துயர் இவற்றோடு பாலுணர்வு இச்சையையும் குறிக்கிறது. கோவையில் இரண்டு நாட்கள் நடைபெற்ற கவிதை பயிலரங்கில் போகன் அவர்களின் அமர்வில் வாசிக்கப்பட்ட சீன மொழிபெயர்ப்பு கவிதைகளிலும் பைன் மற்றும் வில்லோ மரங்கள் இருந்தன.
முன்பே பங்கேற்பாளர்களுக்கு வாசிக்க கொடுக்கப்பட்டிருந்தவற்றில் சீன கவிதைகள் இல்லையாதலால் மிக புதிதாக போகன் சொல்வதை கேட்டுக் கொண்டோம் மிக அழகிய மொழிபெயர்ப்பும் விவாதமுமாக அந்த அமர்வு இருந்தது.அக்கவிதைகளின் ‘’வீழும் வில்லோ மரங்கள்’’ என்னும் ஒரு வரி மீள் மீள அமர்வு முடிந்த பின்னரும் மனதில் தோன்றிக் கொண்டிருந்தது.
கவிதைப் பயிலரங்கு நடைபெற்ற இரண்டு நாட்களும் என்றென்றைக்குமான ஒரு மலர்வை உண்டாக்கி விட்டிருக்கிறது. பள்ளி, கல்லூரி நாட்களில் தான் கல்யாண்ஜி, ஸ்ரீபதி பத்மநாபா வழியாக கவிதைகள் எனக்கு பரிச்சயமாயின. ஏராளமாக வாசிப்பவள் என்றாலும் பிற எழுத்துக்களை காட்டிலும் கவிதைகள் மீது எனக்கு தனித்த பிரியம் உண்டு. இந்த பயிலரங்கில் கவிதைகளை மேலும் அணுக்கமாக அறிந்து கொண்டேன்.
பயிலரங்கை லக்ஷ்மி மணிவண்ணன் அவர்கள் கவிதைக்கும், செய்யுளுக்கும் பாடலுக்குமான வேறுபாடுகளை சொல்லி துவக்கி, விக்ரமாதித்தன் கவிதைகளை சொல்லி முடித்தும் வைத்தார். லக்ஷ்மி மணிவண்னன் அவர்களின் பல கவிதைகள் எனக்கு பிரியமானவை ஒரு கவிதையில் ’’தூய அன்பென்னும் துயர்’’ என்றிருப்பார் அவ்வரி எப்போதும் என் மனத்தினடியில் தளும்பிக் கொண்டிருக்கும். நழுவவிட்ட கணங்களை கைப்பற்றும் முயற்சி கவிதை, கவிஞனுக்கு ஒரு பள்ளம் அல்லது ஒரு பிசகு இருக்கும் என்று அவர் தொடங்கிய[போதே பயிலரங்கு எப்படி இருக்கும், எத்தனை சிறப்பாக இருக்கும் என புரிந்தது.
நிகழ்வு நடந்த இடமும் கவிதைகளை வாசிக்க, விவாதிக்க ஏற்ற இயற்கையுடன் இணைந்த அழகான பண்ணை வீடு என்பதால் கூடுதலாக கவிதைகளை அனுபவித்து அறிந்து கொள்ள முடிந்தது.நாளெல்லாம் பெய்த மழை, நிகழ்வை இன்னும் அழகாக்கியது. குளிரூட்டப்பட்ட ஓரு அரங்கில் ஒருவர் உரையாற்ற நாற்காலியில் அமர்ந்து கேட்கும் பங்கேற்பாளர்களுடனான அமர்வுகளை விட, கவிஞர்களும் வாசகர்களுமாக சேர்ந்து உரக்க வாசித்து பல கோணங்களில் விவாதித்து விளக்குகையில் அனைவரது கருத்துக்களும் கலந்து, திரண்டு ஒரு புதிய அறிதலை, புதிய பொருளை கவிதைக்கு உருவாக்கி விடுகிறது.
ஜப்பானின் ஹனமி செர்ரி மலர் கொண்டாட்டங்களின் போது, போது மலர் மரங்களுக்கடியில் கவிஞர்கள் குழுவாக அமர்ந்து கவிதைகள் எழுதியும் விவாதித்தும் மகிழ்வார்கள் அப்படியேன் நமக்கெல்லாம் வாய்க்கவில்லை என்று ஏங்கி இருக்கிறேன். அம்மனக்குறை தீர்ந்தது இப்போது
இதுபோன்ற இயல்பான சுவாதினமான அவரவர் சொந்த வீட்டை போன்ற உணர்வுடன் ஒரு குடும்பத்தினர் போல அனைவரும் அமர்ந்து கவிதைகளை வாசித்து விவாதித்து அறிந்து கொள்ளும் வாய்ய்பு எத்தனை பேருக்கு கிடைக்கும்?
யுவன் , போகன், எம் கோபாலகிருஷ்ணன், மோகனரங்கன் சாம்ராஜ், மதார், இசை என்று பல முக்கிய, பிரபல கவிஞர்கள் கலந்து கொண்டு பலவகையான கவிதைகளை வாசித்தும், விளக்கியும், விவாதித்தும் அறிந்துகொண்ட அமர்வுகள் எல்லாம் மிக மிக முக்கியமான பல திறப்புகளை அளித்தன
நிகழ்வுக்கு வருமுன்னரே எம் கோபாலகிருஷ்ணன் அவர்களின் இந்தி மொழி பெயர்ப்பு கவிதைகளை வாசித்திருந்தேன், எனினும் வசனகவிதைகளை போலிருந்த அவற்றில் என்னால் உள்ளம் குவிக்க முடியவில்லை. என்ன இருக்கிறது, சின்ன சின்ன வாழ்வுத் தருணங்களை சொல்லி இருப்பதை தவிர? என்று நினைத்தேன். ஆனால் அந்த அமர்வில் அக்கவிதைகள் விவாதிக்கப்பட்ட பின்னரே அவற்றின் மறைபிரதிகள் காட்டும், அழைத்துச்செல்லும் உச்சங்களை அறிந்துகொள்ள முடிந்தது.
ஒருவனுக்கும் ஒருத்திக்குமாக ஒரு உரையாடலை, ஒரு ஊடலை, தேநீர் தயாரிப்பதை சொல்லும் ஒரு கவிதையில் //என்ன இப்போதே கல்யாணம் ஆகிவிட்டது போல அதிகாரம் பண்ணுகிறாய்// என்று முடியும் ஒரு கவிதையை
அழகாக விளக்கினீர்கள். அவன் அவளுக்கு அந்த மிக குறைந்த நேரத்திலேயே எல்லாமாக, அவள் ஆன்மாவாகவும் ஆகிவிட்டிருகிறான் பின்னர் அந்த கடைசி வரியின் செல்ல கோபம், ஒரு உரிமைக்கொஞ்சல் அதுவே கவிதையின் உச்சமென சொன்னபோது பிரமிப்பாக இருந்தது. கவிதைகளின் subtext குறித்து அதற்கு முன்பு வரை எனக்கு தெரிந்திருக்கவில்லை.
யுவனும் போகனும் நீங்களுமாக கவிதை அமர்வுகளை இயல்பாக தாங்கிப்பிடித்து கொண்டிருந்தீர்கள். யுவனின் புன்னகை அனைத்து அமர்வுகளிலும் நிறைந்திருந்தது.
இசை’யின் அமர்வில் வாசிக்கப்பட்ட கவிதைகள், அவரது சொந்த வாழ்வனுபவங்கள் குறித்த பகிர்வுகளால் மேலும் நெருக்கமான உணர்வை அளித்தன. கவிஞர்களுக்கும் வறுமைக்குமான உறவு குறித்த இசையின் கேள்விக்கு ’’அடிக்கடி முறிந்த காதல்களை தவிர வேறெந்த துயரும் இல்லாத செல்வந்தரான தாகூரை’’ உதாரணமாக சொல்லி நீங்கள் பதிலளித்தீர்கள். இசையின் அமர்வில் //சூடு ஆறாமலிருக்கட்டும், சுவை குறையாமலிருக்கட்டும்// என்னும் தேநீர் குறித்த அந்த கவிதையில் கவிஞனின் அகத்தில் பொங்கும் கருணையை தரிசிக்க முடிந்தது
ஆனந்த குமார் கலந்து கொள்ளவில்லை ஆனால் அவரது ’’என் குழந்தை’’ கவிதையை எல்லாருமாக எடுத்து கொஞ்சிக் கொண்டிருந்தோம்.
சாம்ராஜின் உடல்மொழி கவிதைகளின் அமர்விலும் மதாரின் அமர்விலும் முன்வைக்கப்பட்ட மிக கூரான விமர்சனங்களும், தொடர்புடைய விளக்கங்கங்களுமாக புதிய புதிய கதவுகளாக திறந்து கொண்டே இருந்தன.
ஒரு கவிதையில் மனிதர்களாக உருவகிக்கப்படும் கோடுகள் சட்டென்று திசை மாறி தனித்த கோடுகளாக மனிதர்களின் காலடியில் கிடப்பதை யுவன் மிக அழகாக எடுத்து, எங்கு அக்கவிதை தடம்புரண்டது என்பதை விளக்கினார்.நல்லவேளை நான் கவிதைகள் எழுதியதில்லை என்று அப்போது சந்தோஷப் பட்டுக் கொண்டேன்.
’’எத்திசை செல்லினும் அத்திசைசோறே’’ சஙசக்கவிதைகளும் விவாதிக்கபட்டு புத்தம் புதிதாக எஙகள் முன்னே நிகழ்ந்து கொண்டிருந்தது. ’’வாயிலோயே’ என்னும் பாடலை அத்தனை அழகான விளக்கத்தில் நான் முன்பு கேட்டதே இல்லை அந்தியூர் மணியின் அமர்வில் நீங்கள் ’’மம்மர் அறுக்கும் மருந்து’’ வரிகளை குறித்த பல அரிய விளக்கங்களை சொன்னீர்கள்.
அமர்வுகளுக்கு இடையில் உணவருந்துகையிலும், தேநீர் இடைவேளைகளிலும் அனைவருமாக மகிழ மரத்தடியிலும் பலாமரத்தடியிலுமாக பலவற்றை மகிழ்ந்து பேசிக்கொண்டிருந்தோம். அமர்வுகளுக்கிணையாக அவையும் சிறப்பாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்தன. தாம்பத்யத்தை மீறின உறவுகளால் உண்டாகும் தலைவலிக்கென்று பிரத்யேகமான மருந்துகள் உண்டென்று ஹோமியோபதி மருந்து குறித்து போகன் சொன்னது மிக புதிதாக இருந்தது.
சிரிக்க சிரிக்க நீங்கள் சொன்ன மலையாள சினிமாக்களின் ’வெள்ளடி’ மற்றும் ’பாதிரியார்’ நகைச்சுவைகளும், உங்களது தனிப்பட்ட சினிமா அனுபவங்களின் ரசிக்கத்தக்க நிகழ்வுகளின் பகிர்தலுமாக பங்கேற்றவர்களில் நான் உள்ளிட்ட பலருக்கு அவற்றையெல்லாம் இந்த நிகழ்வல்லாது வேறெங்கும் வாசித்தோ, கேட்டோ, தெரிந்துகொண்டிருக்கவே முடியாது.
நீங்கள் அடைந்திருக்கும், இருக்கும் உயரங்களில் உங்களுக்கு கிடைப்பவற்றை அப்படி அப்படியே பிறருக்கு அளித்து விடுகிறீர்கள். அனைத்தும் மிக அரியவை, மிக புதியவை. அந்த தாராள மனதை குறித்துதான் சிந்தித்துக் கொண்டே இருக்கிறேன்.
இங்கு வீட்டில் ஒரு நட்சத்திர பழ மரமொன்று புதிதாக பூத்து காய்க்க தொடங்கி இருக்கிறது. முன்பு யுபோர்பியேசி குடும்பத்திலும், பின்னர் பில்லாந்தேசி குடும்பத்திலும் இப்போது ஆக்ஸாலிடேசி குடும்பத்திலுமாக இம்மரத்தை தாவரவியலாளர்கள். மாற்றிகொண்டே இருக்கிறார்கள் முக்கியத்துவமும், பிரபல்யமும், பயன்களும் அதிகரிக்கும் தாவரங்களின் பெயர்களும், குடும்பமும் மாறுவது இப்படி அரிதாக நிகழும் ஆனால் தன் குடும்பம் மாறிக்கொண்டு இருப்பதையும் இப்போது எந்த குடும்பத்தில் என்ன பெயரில் எத்தனை பிரபலமாக இருக்கும் என்பதையெல்லாம் அம்மரம் அறிந்திருக்கவில்லை அதன் இயல்புப்படி இலைகளை விட அதிகமாக மலர்களையும் கனிகளையும் அள்ளி அள்ளி கொடுத்துக்கொண்டே இருக்கிறது. நேற்று இளஞ்சிவப்பில் மலர்களும், வெளிறிய பச்சைக்கனிகளுமாக செறிந்து, கனிகளின் எடை தாளாமல் தாழ்ந்திருந்த கிளைகளுடன் இருந்த அம்மரத்தை பார்க்கையில் ’உங்களைப்போல’ என்று நினைத்துக்கொண்டேன்.
உங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும், அருளப்பட்டிருக்கும் அனைத்தையும் அள்ளி அள்ளி பிறருக்கு கொடுத்துக்கொண்டே இருப்பது உங்களுக்கு இயல்பாக இயற்கையாக அமைந்திருக்கிறது
கவிதை அரங்கிலிருந்து வந்து இரண்டு வாரமாகியும் அந்த இரண்டு நாட்களின் செல்வாக்கு என்னில் இன்னும் இருக்கிறது. எதையும் கவிதையாகவே பார்க்கிறேன். திராட்சைக்கொடி சாகுபடியை குறித்த காணொளி ஒன்றில் ஜெர்மானியரொருவர் கொடியின் முதல் இலையரும்பு வெடிப்பதை சுட்டி காட்டி ’’இந்த வெடிப்பே சொல்லிவிடுகிறது இனி அதிலிருந்து பெறப்போகும் வைனின் சுவையை’’ என்ரார். அட! கவிதையாக பேசுகிறாரே! என்று நினைத்தேன். அவரே தொடர்ந்து ’’வைன் என்பதே பாட்டிலில் அடைக்கப்பட்ட கவிதைதானே’’ என்றார்.
டேராடூனிலிருந்து தருண் உடைந்த நிலவின் புகைப்படத்தையும் உடன் தினமும் நிலவை அவதானிப்பதாகவும் ‘’ தேய்ந்தும் வளர்ந்தும் உடைந்தும் நிறைந்தும் கொண்டிருக்கும் இந்த நிலவு எனக்கு குறைகளையும் உடைசல்களையும் முழுமையை போலவே நேசிக்க கற்றுக்கொடுக்கிறது’’ என்று ஒரு குறிப்பையும் அனுப்பியிருந்தான்.இவ்வரிகளில் தருணுக்குள் இருக்கும் கவிஞனை காணமுடிந்தது.
காதலில் இருப்பவர்களுக்கு யாரை பார்த்தாலும், எதைக்கேட்டாலும் காதலன் அல்லது காதலியை போலவே இருக்குமல்லவா அப்படி இப்போது கவிதை காதலிலிருக்கிறேன் போலிருக்கிறது. என்னைச் சுற்றிலும் கவிதையாகவே தெரிகிறது.
நல்ல கவிதை மோசமான கவிதை என்று எதுவுமில்லை அக்கவிதை வாசிக்கையில் அந்தரங்கமாக கவிஞனும், வாசிப்பவனும் சந்திக்கும் ஒரு புள்ளி, அதை கண்டடைவதே அக்கவிதையின் உச்சத்தை கண்டறிவது என்று கவிதை பயிலரங்கில் முத்தாய்ப்பாக சொல்லப்பட்டதை நினைவில் வைத்திருக்கிறேன்.
ஸ்ரீபதி பத்மநாபா’வின் காதல் கவிதைகளில் ஒன்றில் ’வழக்கத்துக்கு மாறாக தன் தோளில் காதலி தலை சாய்த்துக் கொண்டதும் இனிமேல் காதலை பற்றி கவிதைகள் எழுத வேண்டியதில்லை’’ என்று காதலன் நினைத்துக்கொள்வதாக கடைசி வரி இருக்கும். இப்பயிலரங்கு அளித்திருக்கும் நிறைவில் எனக்கு ஒரே சமயத்தில் ஏராளமாக இனி கவிதைகளை வாசிக்க வேண்டும் என்றும், இனி கவிதைகளே வாசிக்கவேண்டாம் இந்த அஞுபவத்தை பொக்கிஷமாக பாதுகாத்தால் போதுமென்றும் தோன்றுகிறது
வழக்கமான விஷ்ணுபுர விழாக்களின் நிகழ்வுகள் அனைத்திலும் எனக்கு உண்டாகும் அதே பிரமிப்பு இதிலும் நிகழ்ச்சிகளின் நேர ஒழுங்கிலும், ஒரு சிறு பிழைகூட இல்லாமல் எல்லாம் சரியாக நடப்பதிலும் உண்டானது
வேளாவேளைக்கு உணவாகட்டும், சிற்றுண்டிகளாகட்டும், தேநீரும் காபியுமாகட்டும், கால் விரலில் அடிபட்டவருக்கு முதலுதவியாகட்டும், தங்குமிடத்தின் செளகரியங்களாகட்டும், அரங்கில் தாகம் எடுக்கையில் கையெட்டும் இடத்தில் இருக்கும் தண்ணீர் வரை எல்லாம் கச்சிதம், எல்லாம் ஒழுங்கு , எல்லாம் நேர்த்தி எல்லாமே நிறைவு
கதிரும் பாலுவும் இன்னும் பலரும் இதன் பின்னால் அளித்திருக்கும் உழைப்பை நன்றியுடன் நினைத்துக்கொள்கிறேன். கல்லூரியில் வழக்கமாக எல்லா நிகழ்வுகளிலும் சம்பிரதாயமாக, துறைத்தலைவர் அல்லது முதல்வரே அனைத்து நிகழ்வுகளுக்கும் முதுகெலும்பாக இருந்தார்கள் என்னும் பொய்யை மறக்காமல் சொல்லுவோம்.அப்படி சம்பிரதாயமாக இல்லாமல் முழுமனதாக வழக்கறிஞர் ஈரோடு கிருஷ்ணன் அவர்களின் பிரதான பங்களிப்பை இந்த பயிலரங்கிலும் கண்டேன் அவருக்கும், பாலுவுக்கும், கதிருக்கும் அனைவரின் சார்பில் நன்றியும் அன்பும்
தேவைப்படும்போது தேநீர் தயாரிதுக்கொள்வதிலிருந்து, பூஜையறையில் மாலை விளக்கேற்றுவது வரை சொந்த வீட்டை போல உணர்வளிக்கும் அந்த பண்ணை வீடும், பொழிந்து கொண்டே இருந்த மழையும், பொய் கடி கடித்து, கட்டிப்புரண்டு விளையாடிக்கொண்டிருந்த நாய்களும், புகைப்படம் எடுக்கையில் இணைந்துகொண்ட கோழியும், இளஞ்சிவப்பில் நிறைந்த மலர்களுடன் கவிதையரங்கு நிகழ்ந்த அறையின் முன்னே நின்றிருந்த மந்தாரை மரமுமாக அந்த இரு நாட்களும் மறந்து போகாத அழகிய கனவு போல நினைவில் இருக்கிறது.
பாலுவின் பண்ணையிலிருந்து கனிந்த முள்சீதா பழமொன்றை கொண்டு வந்தேன். அதன் விதைகளை வீட்டுத்தோட்டத்தில் கவிதை பயிலரங்கின் நினைவுகளுடன் சேர்த்து விதைத்திருக்கிறேன். முளைத்து மரமாகட்டும் இரண்டும்.
அனைத்திற்குமான நன்றியுடன்
லோகமாதேவி
இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்: வெங்கி பிள்ளை
இந்து மதத்தின் வேர்களையும் அதன் வைப்பு முறைகளான வேதங்கள், ஆறு தரிசனங்கள், ஆறு மதங்கள் மற்றும் மூன்று தத்துவங்களை பற்றிய அடிப்படை புரிதல்களை ஏற்படுத்துகிறது.
ஆறு தரிசனங்கள் எப்படி ஒன்றுடன் ஒன்று மோதி..விவாதித்து…ஒன்றில் ஒன்றை நிரப்பி …ஒன்றை ஒன்று உண்டு வளர்ந்து இந்து மதத்தை …மெய்ஞான மரபை வளர்த்தெடுத்தது என்பதை விரித்து எழுதியருக்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன்.
ஆறுதரிசனங்கள்:
1) ஆதி இயற்க்கைவாதம் – சாங்கியம்
2) தூய்மையான அறிதல்முறை – யோகம்
3) அணுக்கொள்கை – வைசேஷிகம்
4) தருக்கமே தரிசனம் – நியாயம்
5) மையநூல்வாதம் – பூர்வமீமாம்சம்
6) முதல் முழுமைவாதம் – வேதாந்தம்.
இவற்றில் நான்காவது தரிசனமான ….தருக்கமே தரிசனம் என்னும் நியாய தரிசனம் ….கடவுள் இருப்பை மறுக்கிறது. பகுத்தறிந்து விவாதித்து நிறுவக்கூடியவற்றை மட்டுமே ஏற்கிறது. அறிவே பிரம்மம் என்கிறது. இந்த வகையில் திராவிடத்தின் பகுத்தறிவுவாதம் இந்து மெய்ஞான மரபின் ஒரு பகுதிதான் என்று சொல்லலாம்.
ஆனால் குப்த பேரரசு காலகட்டத்தில் ..பூர்வமீமாம்சத்தின் வேள்வி/புரோகித மரபும்….பிறகு சங்கரர் வளர்த்தெடுத்த வேதாந்தமும் பிற தரிசனங்களை உள்ளிழுத்து தத்துவங்களை ஆணித்தரமாக முன்வைத்து இந்து மதத்தின் முகமாக தன்னை நிறுவிக்கொண்டது என முடிக்கிறார்.
ஆனால் …ஓரே வாசிப்பில் ….. அனைத்து தகவல்களை வாசித்தெடுத்து செரித்துக்கொள்ள முடியாது. கடினமான சொல்நடையில் இருப்பதால் …மறு வாசிப்புகள் அவசியம்.
வெங்கி பிள்ளை
இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள் -சுயாந்தன்
அஞ்ஞானமும் ஒளிச்சுடரும் (இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள் – ஜெயமோகனுடைய கட்டுரைநூல் அறிமுகம் )
தேவிபாரதிக்கு தன்னறம் விருது
“வன்முறை என்பது எனது வாழ்வின் ஒரு பகுதியாக என்னைத் தொடர்ந்துகொண்டேயிருந்தது. நானும் எனது குடும்பமும் பல வன்முறைச் சம்பவங்களை எதிர்கொண்டிருக்கிறோம். அவற்றையெல்லாம் நான் எனது படைப்பில் முன்வைக்க விரும்பவில்லை. ஆனால், இந்த வாழ்வின் மீது படர்ந்திருக்கும் வன்முறையைப் புறக்கணித்துவிட்டு நாம் வாழ முடியாது. எனது வேலை என்பது இந்த வன்முறையைப் புரிந்துகொள்வது, வன்முறையைப் பரிசீலிப்பது. இதிலிருந்து விடுபட இயலுமா என்ற முனைப்புக்கொள்வது. இவைதான் எனது படைப்புகளிலும் வெளிப்படுகின்றன.
இந்த வாழ்வை மேலும் மேலும் தீவிரமாகவும், மேலும் மேலும் நுட்பமாகவும் அணுகுவது, மேலும் மேலும் உண்மையாக்குவது என்பதுதான் எனது படைப்புப்பார்வை. அதற்கான படைப்பு மொழியை நான் புதிதாகத் தேட வேண்டியதிருந்தது. அந்தத் தேடல்தான் எனது மொழியை வடிவமைக்கிறது. புரிந்துகொள்ள முடியாத சிக்கலான விஷயங்களைப் புரிந்துகொள்ள முயலும்போது ஒரு பதற்றம் உருவாகிறது. அந்தப் பதற்றமும் குழப்பமும் எனது கதைகளில் இடம்பெறும்போது எனது மொழியும் அவற்றுக்கானதாக இருக்கிறது.”
எழுத்தாளர் தேவிபாரதி தன்னுடைய படைப்பின் பாதைகள் குறித்துச் சொல்கிற மேற்கண்ட வார்த்தைகளை இக்கணம் மனதில் நிரப்பிக்கொள்கிறோம். நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நாடகங்கள், செயற்களம் என தேவிபாரதி அவர்களின் இயங்குத்தளம் பன்மையுற்று விரிந்துநிற்கிறது. ஆங்கிலம், மலையாளம், இந்தி உட்பட இன்னும் சில இந்திய மொழிகளில் இவருடைய ஆக்கங்கள் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன. அவருடைய படைப்புகளின் தனித்தன்மை தமிழின் சிறந்த புனைவுப் படைப்பாளுமை வரிசையில் ஒருவராக அவரை நிலைநிறுத்துகிறது.
அறத்தின் மீதான மானுடச்சார்பு பற்றிய கண்ணோட்டத்தைக் கவனப்படுத்துவதே இவருடைய பெரும்பான்மையான படைப்புகளின் அடிப்படை சாராம்சமாக உள்ளது. தர்க்கத்தின் பலபக்க கோணங்களைத் தனது படைப்புகளின் வழியாக அப்பட்டமாகக் காட்டும் இவருடைய எழுத்துக்கள் ஓர் அதிர்ச்சிக்குப் பிறகே அதன் ஆழத்திற்கு நம்மை இட்டுச்செல்கிறது. நல்லது –கெட்டது என்ற இருமைகளுக்கு நடுவில் ஓர் மானுடமனம் அடைகிற பதற்றமும் பற்றுதலும் ஓர் இணைகோடாக இவரது படைப்புகளில் துலக்கமடைகிறது. ஒரு கருத்தை வகுத்துக்கொள்வது, அதனை தத்துவமாக நிறுவிக்கொள்வது உள்ளிட்ட திடப்பாடுகளுக்கு முந்தைய பாமரத்தனத்தை, அதன் துடிதுடிக்கும் யதார்த்த உண்மையோடு கதையாக்குவதில் இவருடைய படைப்புத்திறம் அடைகிற கூர்மை நிகரற்ற ஒன்று.
இவருடைய ‘பிறகொரு இரவு’ சிறுகதைத் தொகுப்புக்கான முன்னுரையில் எழுத்தாளர் சுகுமாரன் அவர்கள் குறிப்பிடும், “இலக்கியத்தில் வேறு என்ன செய்ய முடியும், பாழாய்ப் போகிற மனித வாழ்க்கையை விசாரிக்காமல்?” என்ற வார்த்தைகள்… தேவிபாரதி அவர்களின் படைப்புலகை அடையும் ஒவ்வொரு மனதுக்குமான ஏற்புச்சொல். சமூகத்தின் கடைநிலை மனிதர்களின் வாழ்வுக்களத்தை புனைவின் வழித்தடத்தில் படைப்பாக்கும் இவருடைய மொழிநடை ஒவ்வொரு படைப்பிலும் நுண்மைகொள்கிறது.
அறம், கருணை, தனிமை, பதற்றம், சீற்றம், வஞ்சினம், வேட்கை, பின்வாங்கல், மன்னிப்பு, தோல்வி, அவமானம், அரவணைப்பு என இருளுக்கும் ஒளிக்கும் இடையே நிழல் போல இவர் படைப்புகள் அனைத்தையும் தனக்குள்கொண்டு உயர்ந்தும் தாழ்ந்தும் அலைவுறுகிறது. புறத்தில் நிலவும் உண்மைக்கும், அகத்தில் உலவும் உளவியலுக்கும் இடைப்பட்டு நிகழ்வதாகத் தோன்றினாலும், இவருடைய புனைவுகள் நம்முடைய விமர்சன எல்லைகளைக் கடப்பவையாகவே தன்னைக் கட்டமைத்துக்கொள்கின்றன. அவ்வகையில் தர்க்கம், குறியீடுகள், படிமங்கள், கட்டுடைப்புகள் என நாம் அர்த்தங்களை இப்படைப்புகளிலிருந்து விரித்துக்கொள்ள முடியும்.
ஏன் எழுதுகிறீர்கள்? என்ற கேள்விக்கு, “கலை, நான் வாழ்வை எதிர்கொள்ளும் முறை. எழுத்து, மொழியின் வழியே நிகழ்த்தப்படும் சமூகச்செயல்பாடு. இலக்கியம் ஒருவரைப் பண்படுத்தும் என்றுதான் நினைக்கிறேன். அதன் எல்லாக் குறைகளோடும் ஏற்றுக்கொள்ளவும், சில தருணங்களில் வெறுக்கவும், நேசிக்கவும் கற்றுக்கொடுப்பவை இலக்கியம்தான்” என்னும் தேவிபாரதியின் வார்த்தைகள் அவர் படைப்புநோக்கத்தை நமக்குத் தெளிவாக்குகின்றன.
குக்கூவுக்கும் தேவிபாரதிக்கும் இடையேயான உறவென்பது இருபதுவருட காலத்திற்கு முன்பிருந்தே துவங்கி இன்றளவும் நீடிப்பது. வெறும் எழுத்தாளராக மட்டும் தேவிபாரதியை நாம் மதிப்பிட்டுச் சுருக்க முடியாது. கூத்துக்கலைகளுக்காக இவர் நிறுவிய ‘பாதம்’ அமைப்பு இந்திய அளவிலான மிக முதன்மையான முன்னெடுப்பு. காலச்சூழ்நிலையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், இன்றிலிருந்து இருபத்தைந்து ஆண்டுகள் முன்பாக நிகழ்த்தப்பட்ட அந்த முயற்சி மிகவும் அசாத்தியமான ஒன்று. எவ்வித நிறுவனப்பின்புலமும் இல்லாமல் முழுக்க முழுக்க எளிய மக்களின் கூட்டுப்பங்களிப்பால் அவ்வமைப்பு தன்னை வேர்நிறுத்திக்கொண்டது அக்காலத்தில். 1980களில் அவர் கலைசார்ந்த இயக்கங்களையும் அமைப்புகளையும் உருவாக்கி முன்பாதைகளை வகுத்திருக்கிறார். அசோகமித்திரன், பிரபஞ்சன் போன்ற முன்னோடி எழுத்தாளுமைகள் அதில் பங்கேற்றுள்ளனர்.
நாங்களறிந்தவரை கூத்துக்கலைஞர் திருமலைராஜன், உடுக்கைப்பாடல்கள் கலைஞர் மாணிக்கம் போன்ற எண்ணற்றப் பெருங்கலைஞர்களை முதன்முதலில் ஆவணப்படுத்தி வெளிக்கொணர்ந்தது தேவிபாரதி அவர்கள்தான். 1994ம் ஆண்டிலேயே இவர் ‘இளம் நாடக ஆசிரியருக்கான’ மத்திய சங்கீத நாடக அகாடமியின் பரிசு பெற்றவர். இதுமட்டுமின்றி மாற்றுத்திரை, இலக்கியக் கலந்துரையாடல்கள் என இவருடைய பங்களிப்பு என்பது தொடர்நீட்சியுடைய ஒன்று. காலச்சுவடு இதழின் பொறுப்பாசிரியராக ஆறுவருட காலங்கள் தேவிபாரதி பணியாற்றியிருக்கிறார். தஸ்தாயேவ்ஸ்கியை தன்னுடைய இலக்கிய ஆதர்சங்களில் ஒருவராக நினைத்துப்போற்றும் தேவிபாரதிக்கு எழுத்தாளர் சுந்தர ராமசாமி அவர்களும் படைப்புரீதியான அகத்தூண்டலை உருவாக்கியிருக்கிறார்.
தமிழ்ச்சூழலின் அறிவியக்கப்பரவலுக்குத் தங்கள் படைப்புகளால் துணைநின்ற படைப்பாளிகளுக்கு சமகால வாசகமனம் ஆற்றுகிற நன்றி என்றே விருதுகளையும் கெளரவிப்புகளையும் நாங்கள் கருதுகிறோம். விருதுபெறும் படைப்பாளியைப் பற்றிய முழுச்சித்திரத்தை அளிக்காவிடினும்கூட, அவரையும், அவர் படைப்பையும் இன்னுமாழ்ந்து அணுகுவதற்குரிய ஒரு எளியவாசல் இதன்வழி வெளிச்சப்படும். இலக்கியம் என்பது இவ்வாழ்வின் மீது நம்பிக்கைகொள்வதற்கான ஒரு மொழிவெளி என்பதை நாம் மீளமீள நமக்கே சுயஞாபகப்படுத்த வேண்டியுள்ளது.
‘தன்னறம் நூல்வெளி’ ஒரு பதிப்பகமாகத் தமிழின் படைப்புச்சூழலுக்குள் அறிமுகமாகி, மூன்று ஆண்டுகளை நிறைவுகொள்ளும் இவ்வேளையில், எங்களை நோக்கிவருகிற சமகால இளையமனங்களுக்கு, நாம் தவறவிட்டுவிடக்கூடாத படைப்பாளிகளை அறியப்படுத்தும் சிறுமுயற்சியாகவே ‘தன்னறம் இலக்கிய விருது’ என்கிற முன்னெடுப்பை கடந்த ஆண்டு துவக்கினோம். இதன்படி, இலக்கியச்சூழலில் தொடர்ச்சியாகத் தனது பங்களிப்பைச் செலுத்தி இம்மொழியின் கருத்துச்செழுமைக்குத் துணைநிற்கும் படைப்பாளியைத் தேர்ந்தெடுத்து அவருக்கு இவ்விருது வருடந்தோறும் அளிக்கப்படுகிறது. தங்கள் படைப்புமொழியால் நம் காலத்தை கருத்தியல் ரீதியாகவும், அழகியல் ரீதியாகவும் செழுமையாக்கித் தந்த படைப்பாளிகளின் ஓயாத அகவிழைவை தலைவணங்கித் தரப்படுகிறது தன்னறம் இலக்கிய விருது.
தன்னறம் இலக்கிய விருது முன்னெடுப்பின் 2021ம் ஆண்டிற்கான விருதினை எழுத்தாளர் தேவிபாரதி அவர்களுக்கு வழங்குவதில் நிறைகூர்ந்த மகிழ்வுகொள்கிறோம். கடந்த முப்பது ஆண்டுகளாக, தமிழ்ச்சூழலில் விளிம்புநிலை மனிதர்களின் கதைகளை உலராத உயிரீரத்தோடு பதிவுசெய்துவரும் படைப்புத்தொடர்ச்சிக்காக இவ்விருதை நாங்கள் அவருக்கு பணிந்து அளிக்கிறோம். தேவிபாரதியின் படைப்புகளைத் தாங்கிய ஒரு புத்தகமும், அவரைப்பற்றிய ஒரு ஆவணப்படமும் விருதளிப்பு நிகழ்வில் வெளியிடப்படவுள்ளது. விருதுத்தொகையாக ஒரு லட்ச ரூபாயைத் திட்டமிட்டிருக்கிறோம். மூத்த எழுத்தாளர்களின் உடனிருப்பில், வருகிற ஜனவரி மாத முதல்வாரத்தில் இதற்கான விருதளிப்பு நிகழ்வு சென்னையில் நிகழவுள்ளது.
நொய்யல் ஆற்றின் நீர்ப்பெருக்கு போல, எளிய மனிதர்களின் வாழ்வுக்கதையை இரத்தமும் சதையுமாகத் தன்னுடைய படைப்பின்வழியாக பாவனையின்றி வெளிப்படுத்தும் தேவிபாரதி அவர்களின் அகம் கொண்டிருக்கும் தாகம் எக்காலத்தும் வற்றாதது. காலங்கள் கடந்தும் இவருடைய படைப்புகள் நிச்சயம் அதிர்வுகளை உருவாக்கும். தனக்கேயுரிய யதார்த்தவெளியால் தனிநிகர் படைப்பாளுமையாக தகுதியுற்று நிற்கும் எழுத்தாளுமை தேவிபாரதி அவர்களுக்கு தன்னறம் இலக்கிய விருதைப் பணிந்தளித்து வணங்குகிறோம்.
நன்றிகளுடன்,
தன்னறம் நூல்வெளி
குக்கூ காட்டுப்பள்ளி
www.thannaram.in, 9843870059
தேவிபாரதி தொடர்புக்கு – devibharathi.n@gmail.com . 9677538861
சிகரெட் புகையும் ,தபால் கார்டும் -கிருஷ்ணன் தேவிபாரதி கடிதம் விஷ்ணுபுரம் விழா விருந்தினர்-2 தேவிபாரதி நீர்வழிப்படூம்,நாகம்மாள் – கடிதம் மல்லைப் பேரியாற்றில் அலைவுறும் புணை- அந்தியூர் மணி நீர்வழிப்படுவன நிழலின் தனிமை பற்றி… சுரேஷ் பிரதீப்
November 4, 2021
அழகிகள், மர்மங்கள், கற்பனைகள்
தமிழில் பொதுவாக நடிகைகளை ரசிப்பார்கள், ஆராதிப்பதில்லை. ஆகவே சீக்கிரமே நடிகைகள் திரையிலிருந்து விலகிவிட நேர்கிறது. புதியவர்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள். கேரளத்தில் அப்படி அல்ல, நடிகைகளை பெண்கள் ஆராதிக்கிறார்கள். ஆகவே நடிகைகளில் சூப்பர்ஸ்டார்கள் உருவாகிக் கிட்டத்தட்ட ஒரு தலைமுறைக்காலம் நீடிக்கிறார்கள். கடைசி சூப்பர் ஸ்டார் என்றால் மஞ்சு வாரியர்தான்.
முன்பு ஷீலா, சாரதா, ஜெயபாரதி போன்ற பல சூப்பர் ஸ்டார்கள் மலையாளத்திரையை ஆண்டிருக்கிறார்கள். நடுவே ஓர் அலையென வந்து சென்றவர் விஜயஸ்ரீ. நான் மாணவனாக இருந்த நாட்களில் அவர்தான் கேரளத்தின் பிரியத்திற்குரிய அழகி. கேரளத்தில் சிவப்பாக குண்டாக இருக்கும் நடிகைகளுக்குத்தான் பெரும்பாலும் செல்வாக்கு, சாரதா விதிவிலக்கு.
1953ல் திருவனந்தபுரத்தில் மணக்காடு என்னுமிடத்தில் விளக்காட்டு வாசுபிள்ளைக்கும் விஜயம்மைக்கும் மகளாக பிறந்தார். அவருக்கு இரண்டு சகோதரர்கள் உண்டு. 1966ல் தன் பதிமூன்றாம் வயதில் சித்தி என்ற தமிழ் சினிமாவில் தோன்றினார். 1969 ல் பதினாறாவது வயதில் பூஜாபுஷ்பம் என்னும் மலையாளப் படத்தில் நாயகியானார்.
விஜயஸ்ரீ ஐந்தாண்டுகளில் 41 மலையாளப் படங்களில் நடித்தார். ஆண்டுக்கு பத்துபடங்கள் வரை. அவற்றில் பல படங்கள் அன்றைய முதன்மை நடிகர்களான சத்யன், பிரேம்நஸீர், மது போன்றவர்கள் நடித்தவை. உதயா, நவோதயா போன்ற பெரிய ஸ்டுடியோக்கள் தயாரித்த சரித்திரப்படங்களும் அவற்றிலுண்டு. மிகவெற்றிகரமான நடிகையாகத் திகழ்ந்தார். பல படங்களின் போஸ்டர்களில் நடிகர்களைவிட அவருடைய முகம் பெரிதாக தெரிகிறது.
1974ல் தன் 21 ஆவது வயதில் விஜயஸ்ரீ தற்கொலை செய்துகொண்டார். பெங்களூரில் ஒரு படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தபோது அவர் டீ குடித்தார், அங்கேயே மயங்கி விழுந்தார். ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிர்துறந்தார். ஆனால் உடல் பிரேதப்பரிசோதனை செய்யப்படவில்லை. அவர் இயற்கையாக இறந்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அன்றைய சினிமா இதழ்கள் அவர் தற்கொலை செய்துகொண்டதாக எழுதின. காலப்போக்கில் பல நடிகர்கள், நடிகைகள் அவர் தற்கொலை செய்துகொண்டார் என்பதை உறுதிப்படுத்தினர்.
விஜயஸ்ரீயின் கடைசிப்படமான யௌவனம் புகழ்பெற்ற கலைப்பட இயக்குநரான பாபு நந்தங்கோடு இயக்கியது. [தமிழின் முக்கியமான கலைப்படமான தாகம் அவரால் இயக்கப்பட்டது]. யௌவனம் படத்தின் கதைநாயகனாகிய நடிகர் ராகவன் பின்னாளில் ஒரு பேட்டியில் விஜயஸ்ரீ பெரிய திரைநிறுவனங்களுக்கு இடையே நடந்துவந்த சண்டைக்கு பலியானவர் என்று சொன்னார். மாத்ருபூமி நாளிதழில் ரவிமேனன் எடுத்த பேட்டி.
விஜயஸ்ரீயின் தோழியும் நகைச்சுவை நடிகையும் பின்னாளில் கர்நாடக சங்கீத பாடகியுமான ஸ்ரீலதா நம்பூதிரி விஜயஸ்ரீக்கு ஒரு காதலன் இருந்தான், அவனால் கைவிடப்பட்டதனால் அவர் தற்கொலை செய்துகொண்டார் என்றார். வெப்துனியா பேட்டி.
எண்பதுகள் வரை மலையாள சினிமா பெரிய ஸ்டுடியோக்களின் ஆட்சியில் இருந்தது. உதயா, நவோதயா, மஞ்ஞிலாஸ், மெரிலாண்ட் போன்ற ஸ்டுடியோக்கள் மிகப்பெரிய செல்வாக்குடன் இருந்தன. அன்று அவர்களுக்கு எதிராக நடிகர்கள் வாய் திறக்கவில்லை.
ஆனால் சில சினிமா ஊடகங்கள் விஜயஸ்ரீயின் சாவு பற்றி எழுதிக்கொண்டே இருந்தன. குறிப்பாக மலையாள திரையிதழான நானா. அதில் விஜயஸ்ரீ அளித்த ஒரு பேட்டியில் சிலர் தன்னை பிளாக்மெயில் செய்வதாகச் சொல்லியிருந்தார். விஜயஸ்ரீயின் சாவுக்குக் காரணம் உதயா ஸ்டுடியோவின் நிறுவனரும் தலைவருமான இயக்குநர் குஞ்சாக்கோ தான் என அவ்விதழ் குற்றம் சாட்டியது.
நானா சொன்ன கதை இதுதான். பொன்னாபுரம்கோட்டை என்னும் சினிமாவின் படப்பிடிப்பின்போது காட்டுக்குள் ஓர் அருவியில் விஜயஸ்ரீ நீராடும் காட்சி எடுக்கப்பட்டது. தூரத்தில் காமிரா இருந்தது. காமிராமேன் என்.ஏ.தாரா என்பவர் [ஆண்]. அந்தப்பாட்டு ‘வள்ளியூர் காவிலே கன்னிக்கு வயநாடன் புழயில் இந்நு ஆறாட்டு’
அருவியில் விஜயஸ்ரீயின் ஆடை அவிழ்ந்து போயிற்று. அவர் தவிக்க உடனே இயக்குநரும் காமிராமேனும் ஸூம் போட்டு அவருடைய நிர்வாணக் காட்சியை படம்பிடித்தனர். அக்காட்சியை வெளியிட்டு விடுவதாகச் சொல்லி விஜயஸ்ரீயை மிரட்டினர். பல தவறான செயல்களுக்கு இழுத்தனர்.
விஜயஸ்ரீ ஓர் இஸ்லாமியரை திருமணம் செய்வதாக இருந்தார். அதன்பொருட்டு மதம் மாறி இஸ்லாமியப் பெயரையும் சூட்டிக் கொண்டிருந்தார். ஆனால் அந்தப்படம் வெளிவந்தபோது விஜயஸ்ரீயின் அரைநிர்வாணக் காட்சிகள் அதில் இடம்பெற்றன. அதைக்கண்டு அவருடைய காதலர் அவரை கைவிட்டார். மன உளைச்சல் தாளாமல் அவர் தற்கொலை செய்துகொண்டார்.
இந்தக் கதை பலவகையாக இலக்கியத்திலும் இடம்பெற்றுள்ளது. சிறுகதைகள் எழுதப்பட்டுள்ளன. தீதி தாமோதரன் எழுத ஜெயராஜ் இயக்கத்தில் நாயிகா என்னும் ஒரு சினிமா இந்தக் கருவை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. அது நடிகை சாரதாவுக்கும் மறைந்த விஜயஸ்ரீக்கும் இருந்த நெருக்கத்தைப் பற்றியது. சாரதாவே சாரதாவாக நடித்தார். சாரதாவின் இளம்பருவத்தை பத்மபிரியா நடிக்க பிரேம்நஸீராக ஜெயராம் நடித்தார்.
நிர்வாணக் காட்சியை காட்டி பயமுறுத்தப்பட்ட இளம்நடிகை எல்லா உண்மையையும் ஊடகங்களில் சொல்வேன் என திருப்பி பயமுறுத்தியதனால் அவர் லிப்ஸ்டிக்கில் விஷம் சேர்க்கப்பட்டு கொல்லப்பட்டார் என்று நாயிகா சினிமா காட்டியது. மனம் வெறுத்துப்போன சாரதா மலையாள சினிமாவையே உதறி ஹைதராபாத் செல்கிறார் என்றும் மீண்டும் நீண்டநாட்கள் கழித்து திரும்ப மலையாளத்தில் நடிக்க வருகிறார் என்றும் கதை காட்டியது.ஆனால் திரைக்கதை ஒழுக்குடன் இல்லாததனால் படம் வெற்றிபெறவில்லை.
அசல் நசீர்
நகல் நசீர்- நாயிகா
உண்மையில் என்ன நடந்தது? அதை இனிமேல் தெரிந்து கொள்ளவே முடியாது. ஆனால் உதயா ஸ்டுடியோவுக்கு பெண்சாபம் விழுந்தது என மக்கள் நம்புகின்றனர். படங்கள் ஓடாமலாகி பெரிய நஷ்டம் வந்து குஞ்சாக்கோவின் ஸ்டுடியோ நொடித்தது அதனால்தான். அவர் குடும்பத்திலும் பல இழப்புகள். குஞ்சாக்கோவின் பேரன்தான் புகழ்பெற்ற நடிகர் குஞ்சாக்கோ போபன். அவர் காலத்தில்தான் அக்குடும்பம் மீண்டு எழுந்தது என்கிறார்கள்.
மர்லின் மன்றோவின் சாவு பற்றி எத்தனை கதைகள் உள்ளனவோ அதேயளவு கதைகள் விஜயஸ்ரீ சாவுபற்றி உள்ளன. இப்போது மூன்றாம் தலைமுறையாக அவற்றைப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் ஒரு மலையாள எழுத்தாளரைப் பார்த்தேன். விஜயஸ்ரீ சாவு பற்றி ஒரு நாவல் எழுதப் போவதாகச் சொன்னார்.
சினிமா உலகம் என்பது மூன்று விசைகளால் உருவாக்கப்படும் ஒரு பெரும்புனைவு. சினிமா என்னும் புனைவு, சினிமாக்காரர்களின் வாழ்க்கை என்னும் புனைவு, பார்வையாளர்களின் கற்பனை என்னும் புனைவு. அது வானம்போல முடிவில்லாதது. அதில் விண்மீன்கள் தோன்றி மறைகின்றன. எரிநட்சத்திரங்கள் சுடர்ந்து மறைகின்றன. உண்மை என ஒன்றை அங்கே தேடிக் கண்டடையவே முடியாது.
சென்னை கவிதைவிழா- கடிதங்கள்
வியனுலகு வதியும் பெருமலர்- உரைகள்
அன்புள்ள ஜெ
இளங்கோ கிருஷ்ணனின் கவிதைநூல் விழாவுக்கு வந்திருந்தேன். சில நிகழ்வுகள் நிகழ்வு நடக்கும்போது துள்ளலாக இருக்கும். பின்னர் ஒன்றும் மிஞ்சாது. சில நிகழ்வுகளில் ஒரு நீண்ட சலிப்பு இருக்கும். ஆனால் வந்தபின் நிறைய யோசிக்கும்படி மிஞ்சியிருக்கும். இந்த விழா இரண்டாம் வகை. பிரவீன் பஃறுளி, தேவசீமா,மனோ மோகன் ஆகியோருடைய உரைகளை தொடர்ச்சியாகக் கேட்டபோது திகட்டல் தோன்றியது. கடைசியாக நீங்களும் மனுஷ்யபுத்திரனும் இரு கோணங்களில் ஆழமாகப் பேசினீர்கள். நிகழ்ச்சிக்கு அழகான முத்தாய்ப்பு அமைந்தது. பின்னர் யோசிக்கும்போது சமகாலக் கவிதையின் இயல்பு பற்றிய பலவகையான சிந்தனைகளை ஒவ்வொரு பேச்சும் உருவாக்கியிருப்பதை உணர முடிந்தது.
இலக்கியக்கூட்டம் என்பது எத்தகைய நிறைவை அளிக்கும் என்று இப்போதுதான் தெரிகிறது. இரண்டு ஆண்டுகளாக ஜூம் மீட்டிங்குகள். அவற்றில் என்னதான் இருந்தாலும் நாம் தனியாக இருக்கிறோம் என்னும் உணர்வு உண்டு. நேரடியான கூட்டங்களில் நாம் ஒரு திரளாக நம்மை உணர்கிறோம். நாம் தமிழ்நாட்டிலிருக்கும் சிறுபான்மையினர். ஆனால் கவிதைரசனைகொண்ட ஒரு சின்ன இயக்கம். அது கண்கூடாக அங்கே தெரிகிறது. அது ஒரு அற்புதமான அனுபவம். அந்தச் சந்திப்பின் சிறந்த அம்சமே உங்களிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டதும் கூட்டத்துடன் அமர்ந்திருந்ததும்தான்
ஆர்.மகேஷ்
அன்புள்ள ஜெ
இளங்கோ கிருஷ்ணனின் கவிதைநூல் வெளியீட்டுக் கூட்டம் முடிந்து கிளம்பும்போது ஒரு பேச்சு வந்தது. உங்களை இளங்கோ கிருஷ்ணன், மனுஷ்யபுத்திரன், மனோ மோகன் ஆகியோர் மிகவும் பாராட்டிப்பேசினர். விழா உங்களுக்கானது அல்ல என்றபோதும் இந்தப்பாராட்டு நிகழ்ந்தது. இப்படி பாராட்டும் வழக்கம் பொதுவாகச் சிற்றிதழ்ச்சூழலில் இல்லை.
இப்போது உங்கள்மீதான ஒரு வகை அவதூறுத்தாக்குதல் முத்திரை குத்துதல் கொஞ்சம் கூடுதலாக நடைபெறுவதனால் இந்த பாராட்டும் கொஞ்சம் அதிகமாக இருக்கிறது என்று நண்பர் சொன்னார். இலக்கியவாதிகள் உங்களை சற்று அழுத்தமாகவே முன்வைக்க விரும்புகிறார்கள். வசைபாடும் கும்பலிடம் ‘நீங்களெல்லாம் சொல்லி நாங்கள் எதையும் மாற்றிக்கொள்ள மாட்டோம். எங்களுக்கு எவர் முக்கியம் எது முக்கியம் என்றெல்லாம் தெரியும்’ என்று சொல்ல விரும்புகிறார்கள் இலக்கியவாதிகள்.
நான் சொன்னேன். இலக்கியவாசிப்பே இல்லாத, இலக்கியநுண்ணுணர்வே இல்லாத ஒரு சின்ன அரசியல்கும்பல் கூச்சலிட்டு தொடர்ந்து கூச்சலிட்டு இலக்கியவாசகனின் கருத்தை முழுக்க மாற்றிவிடமுடியும் என்று நினைக்கிறது. அவர்கள் அதைச் செய்வதில் ஆச்சரியமொன்றும் இல்லை. ஆனால் அப்படி இலக்கிய வாசகனை மாற்றிவிடமுடியும் என்று அவர்கள் உண்மையாகவே நம்புகிறர்கள். அதுதான் பரிதாபமானது.
இந்த அறிவிலித்தனம் சென்ற தலைமுறையில் இருந்த அரசியல்காரர்களுக்கு இருந்தது இல்லை. அவர்கள் ஒரு நிலைபாடு எடுத்து பேசிக்கொண்டிருந்தனர். ஆனால் இலக்கியவாசகனுக்கு அவனுக்குரிய வேறு அளவுகோல்கள் இருக்கும் என்றும் தெரிந்து வைத்திருந்தனர். இன்றைய அரசியல்காரர்களிடமிருக்கும் இந்த அப்பாவித்தனம் ஒரு பின்நவீனத்துவ அம்சம் என்று சொன்னேன்.
மேலும் நிறைய பேசிச் சிரித்துக்கொண்டே இருந்தோம். [மழையானதனால் பீர் இல்லை. பதிலுக்கு வேறு. இதைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை. மன்னிக்கவும்]
ஒரு இனிமையான நாளாக அமைந்தது. மீண்டும் சிறந்த இலக்கியக்கூட்ட்டம் நிகழவேண்டும்.
கே.எம்.சுந்த்ர்ராஜன்
அன்புள்ள ஜெ
சென்னை கவிதைவிழாவில் இளங்கோ கிருஷ்ணன் கவிதைகளைக் கொஞ்சம் மிகையாகவே பாராட்டுகிறீர்களோ என்று தோன்றாமல் இல்லை. ஆனால் நூலை வாங்கி வாசித்தபோது ஒரு பிரமிப்பை அடைந்தேன். கண்டிப்பாக தமிழில் வந்த மிகச்சிறந்த தொகுதிகளில் ஒன்று. எளிதில் வாசித்து முடிக்க முடியாதது. வெவ்வேறு மனநிலைகளில் வெவ்வேறு மொழிநடைகளில் கவிதைகள் உள்ளன. ஒரு நகரத்தின் வேறுவேறு பகுதிகள் போல உள்ளன அவை
மனதின் எந்த உலை
ததும்பிப் பொங்குகிறது?
என்ற வரியிலிருந்து நீண்டநாட்கள் வெளியே வரமுடியாது என்று தோன்றுகிறது. உலை என்பது உருக்கு உலையாகவும் சோற்று உலையாகவும் மாறி மாறித் தோன்றுகிறது. அற்புதமான தொகுப்பு. அறிமுகம் செய்தமைக்கு நன்றி
செல்வன் குமார்
அன்புள்ள ஜெ
மனுஷ்யபுத்திரன் தன் உரையில் சொன்ன மையக்கருத்தை யோசித்துக் கொண்டிருக்கிறேன். சமகாலப் பேச்சுமொழியிலேயே கவிதை அமையவேண்டும் என்பது எஸ்ரா பவுண்ட் சொன்னது. க.நா.சு அதை தொடர்ந்து சொல்லிக்கொண்டிருந்தார். தமிழில் பிரமிள் தவிர அனைத்து புதிய கவிஞர்களின் கவிதைகளும் அப்படித்தான் இருந்தன. நகுலன், பசுவய்யா கவிதைகள் எல்லாமே அப்படித்தான் இருந்தன.
அவர்களுக்கும் வானம்பாடிகளுக்கும் உள்ள வேறுபாடேகூட இதுதான். வானம்பாடிகள்தான் பேச்சுமொழிக்கு வெளியே இருந்தனர். அவர்கள்தான் மேடைத்தமிழில் கவிதை எழுதினர். தமிழில் இன்றைக்கு வந்திருப்பதாக மனுஷ்யபுத்திரன் சொல்லும் அந்த பேச்சுத்தமிழ் புதியதாக என்ன? எனக்கு விடைகிடைக்கவில்லை. இசை போன்ற சில கவிஞர்களை தவிர்த்தால் இன்றைக்கு எழுதும் கவிஞர்களெல்லாம் இறுக்கமாக திரிபடைந்த சொற்களாகத்தானே எழுதிக்கொண்டிருக்கிறார்கள்?
ஸ்ரீனிவாஸ்
கவிதைக்கு ஓர் இணையதளம்
அன்புள்ள ஜெ,
நடந்து முடிந்த கவிதை முகாமை ஒருங்கிணைக்கும் முன்பு ஈரோடு கிருஷ்ணனுக்கு தமிழ் கவிதை மீதான சில வருத்தம் இருந்தது. மலையாளம், ஹிந்தி போன்று தமிழில் சமகால கவிதைகளை அல்லது கவிஞர்களை தொகுக்கும் வழக்கம் இல்லை என சொல்லிக் கொண்டேயிருந்தார். கவிதை முகாமிற்கு பின் அது மேலும் தீவிரம் அடைந்தது.
ஒரு முறை என் வீட்டிற்கு வந்த போது சரி நாம் ஒரு இணையதளம் தொடங்கலாம் என்றார். அதில் சமகால கவிதைகளில் தெரிவு செய்த கவிதைகளைப் பற்றி ஒரு சிறு வாசிப்பு அனுபவத்துடன் மாத மாதம் ஒரு இதழ் போல் செய்யலாம் என்ற திட்டத்தையும் உடன் மொழிந்தார்.
அதிலிருந்தே கவிதைகளுக்கான https://kavithaigal-tamil.blogspot.com/ இதழுக்கான திட்டம் உருவாகியது. இந்த எண்ணத்தை கவிஞர் ஆனந்த், கவிஞர் மதாரிடம் சொன்னவுடன் சரி என ஒப்புக் கொண்டனர். மூவரும் சேர்ந்து இம்மாத இதழை உருவாக்கினோம். கிருஷ்ணனும், மணவாளனும் உடன் உதவினர்.
இனி இவ்விதழை ஒவ்வொரு மாதமும் பத்து கவிதைகளுடன் வெளியிடும் திட்டம் உள்ளது. இனி வரும் இதழ்கள் அதிகபட்சம் 5 கவிஞர்களை முன்வைத்து அமையும்.
இதழ் ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதி வெளிவரும். இதில் வெளியாகும் கவிதைகள் 1.1.2020 தேதிக்கு பின் பிரசுரம் கண்டவையாக அமையலாம் என முடிவு செய்துள்ளோம். சிற்சில விதிவிலக்குகள் இருக்கலாம்.
மேலும் இது ஒரு கூட்டு இணையதளமாக இருப்பதே எங்கள் விருப்பம். எனவே நண்பர்கள் அனைவரும் இதில் பங்கு பெற வேண்டுமென விரும்புகிறோம். இதழுக்கு அனுப்பப்படும் கவிதைகள் பற்றி அதன் ஆசிரியர் அல்லாத ஒருவரின் சிபாரிசு சில வரிகளில் வேண்டும். அவை அடுத்த இதழில் பிரசுரிக்க கருத்தில் கொள்ளப்படும்.
இப்போதைக்கு பின்னூட்டம் தவிர்க்கப் படுகிறது, வாசகர்கள் விமர்சனத்தை அல்லது வாசிப்பை மின்னஞ்சல் செய்யலாம். மின்னஞ்சல் முகவரி: kavithaigaltamil2021@gmail.com.
கலைமகளின் திருநாளன்று இதழ் தொடங்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்நாளில் தங்கள் ஆசியையும், நண்பர்களின் ஆதரவையும் கோருகிறோம்.
நன்றி,
நவின்.ஜி.எஸ்.எஸ்.வி.
இணைய தளம் முகவரி: https://kavithaigal-tamil.blogspot.com/
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

