Jeyamohan's Blog, page 883

November 13, 2021

மக்பை

ஜெ

ஆஸ்திரேலியர்களின் மண்டைக்கு புதியவகை ஆபத்தொன்று உருவாகியிருக்கிறது. அதாவது, அடுத்த இரண்டு மூன்று மாதங்களுக்கு, வெளியில் நடந்து செல்லும்போது அல்லது சைக்கிளில் போகும்போது வான்வழி தாக்குதல்கள் நடைபெறுவதற்கான அதிக சாத்தியங்களிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலை நடத்தப்போவது தலிபான் தீவிரவாதிகளோ அல்கொய்டா பயங்கரவாதிகளோ அல்ல. ஆஸ்திரேலிய காகங்கள் எனப்படும் மக்பை (magpie) பறவைகள்.

மக்பைகள் எனப்படுபவை காகக்குடும்பத்தின் வித்தியாசமான பறவைக்கூட்டம். கரிய சிறகுகளில் கந்தர்வ மினுக்கமும் காந்தக்கண்களும்கொண்ட பறவைகள் இவை. ஒவ்வொரு வருடமும் இந்தக் காகங்களால் ஆஸ்திரேலியர்கள் அடிவாங்குவது வழக்கம். ஏனெனில், இந்த மக்பை பறவைக்கூட்டம் மரத்துக்கு மரம் கூடுவைத்திருப்பவை. கணக்கு வழக்கில்லாமல் பறந்து பறந்து ஆஸ்திரேலிய நிலமெங்கும் பரந்து வாழ்பவை. இவை இல்லாத முடக்கு மரமே இல்லை எனலாம்.

ஆனால், இந்த மக்பை காகங்கள், எல்லா நேரமும் மனிதர்களை தாக்குவதில்லை. வசந்த காலப்பகுதியில் – அதாவது ஜூலை முதல் ஒக்டோர் மாதம் வரையான மாதங்களில் – தங்களது பாரியார் பறவைகள், கூடுகளில் முட்டைகளுக்கு மேல் குந்தியிருக்கின்ற நேரத்தில் – மரத்துக்கு கீழ் யார் போனாலும், மக்பை மாப்பிள்ளைகள் டென்ஷனாகிவிடுகின்றன. “இதோ இந்த மரத்துக்கு கீழ் போகின்ற படுபாவி, எங்கள் குடும்பத்துக்கு ஏதோ செய்யப்பார்க்கிறான்” – என்று சீற்றமடைந்து, பறந்து போய் தாக்குதல் நடத்துகின்றன.

இந்த காகக்குடும்பத்தின் முக்கிய சிறப்பு, இவை தங்களோடு கூடுகின்ற மக்பைகளோடுதான் சாகும்வரைக்கும் வாழ்கின்றனவாம். இன்னொரு பெண்காகத்தின் இறக்கையைக்கூட தொடாதாம். மனுசியை தவிர வேறு பெண் மக்பை குறுக்க வந்தால் தலையை குனிந்துகொண்டு பறக்குமோ என்னவோ.

இப்படியான இன்னோரன்ன பண்புகளை கொண்டிருப்பதால், பறவையினங்களிலேயே மிகவும் புத்தியுள்ள சமூகமாக இந்த மக்பைகள் மதிக்கப்படுகின்றன. இவை மிகுந்த கற்பனைத்திறனும் நுட்பமான ரசனையும் உள்ளவை என்றும் கூறப்படுகிறது. அலகு மாத்திரமல்ல அறிவிலும் கூர்மையானவை என்கிறார்கள் பறவை ஆராய்ச்சியாளர்கள். அதுவும் ஆஸ்திரேலிய மக்பைகள் என்றால் சொல்லவா வேணும்.

மக்பைகள் சுமார் நூறுவரையான வித்தியாசமான மனித முகங்களை தங்கள் வாழ்நாள் முழுவதும் ஞாபகம் வைத்திருக்கக்கூடியவை. தாங்கள் பறந்து சென்று கொத்தும்போது, யாராவது தடியெடுத்து மிரட்டினாலோ அல்லது திருப்பித் தாக்குவதற்கு முயற்சி செய்தாலோ, அந்த முகங்களை அச்சொட்டாக ஞாபகத்தில் வைத்திருக்கும். விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த அந்த உருப்படாத சனியனை ஒருபோதும் நிம்மதியாக வாழவிடக்கூடாது என்று உள்ளுக்குள் சபதம் எடுத்துவிடும். அதற்குப்பிறகு, அந்த நபர் மக்பையிடம் எந்த ஜில்லாவில் அகப்பட்டாலும் விடாது. உருட்டி உருட்டி கொத்திவிடும். அடிக்கடி சாப்பாடு போடுகின்ற தெரிந்த முகங்களுக்கு மக்பைகள் தங்கள் தாக்குதலில் விலக்களிப்பதுண்டு.

மக்பை பறவைகள் கொத்துவதிலும் ஒரு ஸ்டைல் வைத்திருக்கின்றன. முதலில் கூறியதுபோல,அவை நுட்பமான ரசனை மிக்கவை. சில வாத்திமார்கள் கையை நீட்டச்சொல்லி கையில் அடிப்பார்கள், சிலபேர் மொளியில் அடிப்பார்கள், காதை முறுக்குவாரகள். இன்னும்சில கிரியேட்டிவான வாத்திமார் குண்டியில் அடிப்பார்கள். அடிவாங்கிய மாணவர்கள் துள்ளிக்கொண்டு ஓடுவதை பார்க்கும்போது, அவர்களுக்கு அப்படியொரு ஆசை. சைக்கோ சனியனுகள்.

அவர்களைப்போல, இந்த மக்பை பறவைகளும் ஈட்டிபோல பறந்து வந்து, இடது காதுகளைத்தான் கொத்துகின்றன. காதுதான் அவற்றுக்கு அதிஷ்டமான ஏரியா. ஆனால், விடாமல் நான்கைந்து தடவைகள் கொத்தும்போது, கொத்து வாங்குபவர் முரண்டுபிடிக்காவிட்டால், பறந்துபோய்விடுகின்றன.

ஒவ்வொரு வருடமும் ஆஸ்திரேலியர்களுக்கு ஏற்படுகின்ற இந்தப்பிரச்சினை, கடந்த இரண்டு வருடங்களாக அதிகரித்திருப்பதற்குக் காரணம், மாஸ்க் போட்ட மனிதர்களினால் மக்பை பறவைகள் வழமையைவிட அதிகம் குழம்பிப்போயிருக்கின்றன என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இதனால், கணக்கு வழக்கில்லாமல், பூங்காக்கள் – நடைபாதைகள் – சைக்கிள் பயணத்தடங்கள் என்று எல்லா இடங்களிலும் பரவலாக மக்பைகள் தாக்குதல் நடத்துவதாகக் கூறப்படுகிறது.

போனவருடம், குவீன்ஸ்லாந்தில் மக்பை தாக்கிய முதியவர் ஒருவர், சைக்கிளோடு கரணமடித்து விழுந்ததில், மண்டை அடிபட்டு, அந்த இடத்திலேயே இறந்துபோனார். இந்த வருடம், சில வாரங்களுக்கு முன்னர், தாக்குதல் நடத்த வந்த மக்பை பறவையிடமிருந்து தனது குழந்தையை காப்பாற்றுவதற்கு முயற்சித்தபோது, தாயொருவர் குழந்தையை தவறியதில், அது கீழே விழுந்து பரிதாபமாக பலியாகியுள்ளது.

காட்டுத்தீ, கொரோனா, தலிபான் என்று எத்தனையோ தொல்லைகளோடு தள்ளாடிக்கொண்டிருக்கும் ஆஸ்திரேலியர்கள், இவ்வளவு பிரச்சினைகளுக்குள்ளேயும் தங்கள் மண்டைகளை பறவைகளுக்கு பலிபீடமாகக் காட்டவேண்டியிருக்கிறது.

தாக்குதலுக்குள்ளாபவர்கள் சம்பவங்களை பதிவு செய்வதற்கென்று இணையத்தளமொன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு மாதங்களுக்கு இந்த மக்பை தாக்குதலில் இருந்து ஆஸ்திரேலியர்கள் தங்களை பாதுகாத்துக்கொள்வது குறித்த அறிவுறுத்தல்கள் பல்வேறு ஊடகங்களில் பகிரப்பட்டுவருகின்றன.

தமிழர்கள் பழக்க தோஷத்தில் பங்கர் வெட்டி அதற்குள் பாய்ந்து தப்பலாம் என்று எதிர்பார்க்கக்கூடாது. இன்னும் இரண்டு மாதங்களில் நிலமை சரிவரும்.

 

தெய்வீகன்

அன்புள்ள தெய்வீகன்,

மக்பை போலவே காகங்களுக்கும் இப்பண்பு [பண்பு?] உண்டு. நான் இரண்டு கதைகள் எழுதியிருக்கிறேன்.

ஒன்று சொல்வதுண்டு. பறவைகளிலும் விலங்குகளிலும் எவை புத்திசாலித்தனமானவையோ அவைதான் குரூரமானவையும்கூட. ஏனென்றால் குரூரம் என்பது ஒருவகை புத்திசாலித்தனம்.

ஆகவே தமிழர்களைப் பற்றி கவலைப்பட வேண்டாம். மக்பைக்களுக்கு அவர்கள் ‘டஃப் ஃபைட்’ கொடுப்பார்கள்.

ஜெ

நிழல்காகம் [சிறுகதை] காக்காய்ப்பொன் [சிறுகதை]
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 13, 2021 10:31

வண்ணக்கடல் -பிரவீன்குமார்

“வெறும் சுக்கு நீர்.. அதில் ஒருவனின் கைநுட்பம் இருக்குமென்றால் அவன் மனிதனல்ல தேவன்.”

– வண்ணக்கடல் -40

பழைய நாட்டார் கதையை மீளுருவாக்கிச் பிரம்மாண்டமாக சொல்லும் கதையான”The Green knight” திரைப்படம் மிகச் சிறப்பான காட்சியனுபவத்தைத் தருவது.ஒரு அரசனுக்கென்று நாம் எழுப்பி வைத்திருக்கும் அத்தனை ஆண்மையான பிம்பங்களையும் கலைத்துப் போட்டுவிட்டு ஒரு நிதர்சனமான மனிதனாக, வாளை உருவித் தூக்கமுடியாமல் மூச்சடைத்து இருமக்கூடிய எளிமையான மனிதனாக இருப்பான் இந்த அரசன்‌.

வண்ணக்கடல் துவக்கத்தில் வரும் சேந்தூர் நாட்டு குறுநில மன்னன் சேந்தூர் கிழான் தோயன் பழையனைத்தான் இந்தப் படங்கண்ட போது நினைத்துக் கொண்டேன். பாணர் யார், ஏடெடுத்து படித்திராத மூடர் யாரென்று அறியாத மன்னன் பாணரென்று அறிமுகப்படுத்திக் கொண்ட யாவருக்கும் பெருவிருந்திட்டு அவர்களது வெற்றுப் புகழ் மாலைக்கு மகிழ்ந்து போவான். அவனது வெண்கொற்றக்குடையை நாய்க்குடையோடு ஒப்பிட்டு பகடி செய்து பாடிவிட்டு அங்கிருந்து தப்பிக்கிறான் இளநாகன் என்னும் பாணன்.

வரலாறு என்றால் பெருமிதமும் மயிர்கூச்சமும் மட்டுந்தான் அடையவேண்டுமா என்று கேட்கிறார் ஜெயமோகன். போரன்றி, ரத்தக்களறியன்றி தமிழ்பற்று அன்றி குலப்பெருமையின்றி இயல்பான ஒரு மனிதனாக ஒரு அரசனை எண்ணவேமுடியாதா? இதைப்போன்ற இன்னொரு சம்பவத்தை எழுதியிருக்கிறார் மழைப்பாடலில். குந்தி கல்யாணத்திற்கு பிறகு கங்கைக் கரை கோவிலில் வழிபட்டு ஆற்று மணலில் குடம் செய்து நீர் நிரைத்து சாமிக்கு இறைக்க வேண்டும். ஆற்றில் களிமண் நிறைந்த இடமாக பார்த்து குந்தியை இறக்கி விடுகிறாள் சத்தியவதி. குந்தி களிமண்ணில் குடம் செய்து இறைத்து வழிபாட்டை நிறைவு செய்கிறாள். தன் கற்புத் திறத்தை நிரூபிக்கிறாள். சத்தியவதியும் இதைத்தான் செய்திருப்பாள் என்று தன் அணுக்கத் தோழியரிடம் கூறிச் சிரிக்கிறாள். இந்த சம்பவத்திற்கு பிறகு குந்தியின் மேல் அபிமானம்உண்டாகிறது நாட்டுமக்களுக்கு.

ஒரு அழகான கைக்கடிகாரத்தை கையில் எடுத்துப்பார்க்கிறோம். அதன் அடிப்பகுதியில் பொறிக்கப்பட்டிருக்கும், முக்கியமேயில்லாத வெறும் தகவல்கள் கூட ஒரு ஓவியமே போல அழகாயிருக்கக் காண்கிறோம், அந்த திருகாணியின் ஒயிலான அமைப்பைக் கூட கண்கொட்டாமல் மெச்சி அதை கண்ணில் ஒற்றி முத்திக் கொள்வோம். கைவினையும், கணிதமும் ஒன்றாகி முயங்கி அப்படியொரு நேர்த்தியாகும் அற்புதத்தைக் கண்டு லயிக்கிறோம். எனக்கு வெண்முரசு அப்படித்தான் இருக்கிறது. போகிறபோக்கில் தட்டுப்பட்டு விடும் ஒற்றை வார்த்தை, ஒற்றை வாக்கியம் கூட அந்த முழு நாளைப் புரட்டிப் போடுவதாக இருக்கின்றன.இவற்றை முழுமையாக மனப்பாடம் பண்ணி மனதிலும் தக்க வைக்க முடியாது, மறக்கப் போகிறோம் என்று வருந்தவும் முடியாது.ஆற்றில் அடித்துச் செல்லப்படுவது கடலில் மூழ்கவே என்று இருந்துக்க வேண்டியது தான்.

பாதாளம் என்பதை “தலைகீழ் விண்ணகம்” என்று எழுதுகிறார்.‌ மொத்தமே மூன்று நான்கு முறை தான் இந்த வார்த்தை வருகிறது.‌ இப்படியொரு அழகான வார்த்தைச் சாதனை ஒருவனுக்கு எப்படி கிடைக்கிறது. அதை அலட்டாமல் போகிற போக்கில் எழுதமுடியும் தன்மையை எப்படி வளர்க்கிறான். பேளூர் சென்னக்கேசவ பெருமாள் கோவிலில் பிரசித்தி பெற்ற சிற்பம் பத்துத்தலை ராவணன் சிற்பம் பார்க்கப் பார்க்கத் தீராதது.ஏழெட்டு அடிக்கு இருக்கும் அந்த சிற்பத்தில் ராவணன் கைலாயத்தைச் சுமந்திருப்பான். பாதாளத்தின் நாகங்களில் இருந்து மேலுலகத்தில் தென்னாடுடையாரின் குடும்பம் வரைக்கும் மொத்த உலகையும் சுமந்திருப்பார் ராவணன். அதில் ஒரு விரலின் இரண்டு கணு உயரத்திற்குக் கூட முழுமையான சிற்பங்கள் நிறைந்திருக்கும். மானை வேடர் அம்பெய்துவர், பறவை பறக்கும், மரத்தில் குரங்கமர்ந்திருக்கும், காடே விரிந்திருக்கும் அந்த சிற்பத்தில்.‌ அந்த சிற்பம் அமைந்திருக்கும் இடம் தான் இங்கே சொல்லப்பட வேண்டியது. பார்க்கும் நமக்கு திறந்த வாய் மூடாது. எக்கிக்கொண்டு எட்டிக்கொண்டு கழுத்தை சுழித்து நாம் எத்தனை முயன்று பார்த்தாலும் அந்த சிற்பத்தை முழுமையாக பார்க்க முடியாது. கோபுரத்தின் ஒரு முக்கில் மேல ஒரு ஓரத்தில் கைதவறி விட்டுச் சென்றதைப் கதவுக்கு போல நின்றிருக்கும்.‌ சிவனைப் பார்க்க முடியாது. நந்தி கூட தோராயமாகத் தான் தெரியும். கூகிள் பண்ணி நெருக்கி நெருக்கி பார்த்து ரசிக்கலாம். தலைகீழ் விண்ணகம் என்ற வார்த்தை எனக்கு இந்த ராவணன் சிற்பத்தைப் போன்றது தான்.

வண்ணக்கடல்

வெள்ளைநிறப் பாற்க்கடலில் இருந்து கல்பதருவையும், காமதேனுவையும் இந்த உலகம் பெற்றது என்று படித்திருக்கிறோம். இருண்ட பாதாளம் நமக்கு பனையையும், எருமைமாட்டையும் தந்திருக்கிறது என்ற கதையை இளநாகனுக்கும் ஒரு சீனருக்கும் சொல்கிறார் முதுசூதர். எந்தப் பஞ்சத்திலும் மனிதரை பசியறிய விடாத வற்றாத தெய்வங்கள் பனையும் எருமையும். மிக உயர்வாக இதைப்பற்றி எழுதியிருக்கிறார். ஆலமரத்தை தொட்டுக்கும்பிடுவது போல பனை மரத்தைக்கண்டாலும் தொட்டுக் கும்பிடவேண்டும். ஜெயமோகன் இதை எழுதும் போது கிடைத்த மன உந்துதலில் தான் புனைவுக்களியாட்டு கதைகளில் “ஆமை” கதையை எழுதினாரா?

பாரதக்கதையின் பெரிய ஓவியம் நிகழ்வதற்கான முன் தயாரிப்புகள் இந்த நாவலில் தான் நிகழ்கின்றன‌. பல நிறங்கள் இங்கே தான் கலக்கின்றன. அதனால் இது வண்ணக்கடல். வண்ணக்கடலை இளநாகனின் இந்திய travelogue என்றும் படிக்கலாம்.தென் தமிழகத்தின் ஏழ்பனைநாட்டு மருதூர்க்காரனான இளநாகன், சேந்தூர் நெல்லை மதுரை என்று தொடங்கி அஸ்தினபுரி சென்று மகாபாரதக்கதையை பாட விளைகிறான். இன்று கண்ட இடம் நாளை நம் வாழ்வில் இல்லை என்னும் பயணித்தபடியே இருக்கிறான் இளநாகன்‌.

மறுபக்கம் அங்கே பாண்டவர்களும் கெளரவர்களும் சிறுவர்களாக வளர்ந்து கொண்டிருக்கிறார்கள். பாண்டு மறைந்து சதசிருங்கத்திலிருந்து குந்தியும் மைந்தரும் அஸ்தினபுரி திரும்புகிறார்கள். பீமனும் துரியோதனனும் சிநேகம் கொள்கிறார்கள் பகை கொள்கிறார்கள். ஒரு புள்ளிப்புயலில் பாண்டவ கவுரவர்களுக்கிடையை மனவிலகல் உண்டாகிறது. அர்ச்சுனனுக்கு துரோணரை குருவாக்குகிறார் கிருபர். கர்ணன் வருகிறான். அவமானப்படுகிறான்‌ தோலுறிந்த நாகப்பாம்பைப் போல துடிதுடிக்கிறான். அங்க தேசத்து அரசனாகிறான். அர்ச்சுனனுக்கும் கர்ணனுக்கும் உரசலாகிறது. அஸ்வத்தாமனுடன் உரசுகிறான். துரோணர் தன் மாணவனால் வஞ்சிக்கப்பட்டு சிறுமையடைகிறார். நாம் அவருக்காக வருந்தி முடிந்ததும் அவர் ஏகலவ்யனின் கட்டை விரலை வெட்டச் செய்கிறார். இன்னும் பல கருக்கள்..

மகாபாரத யுத்தம் ஏன் நிகழ்ந்தது என்பதற்கான காரணிகள் இங்கே நிகழ்கின்றன. துரியோதனன் கண்ணனிடம் பாண்டவருக்கு ஒரு குண்டூசிமுனை நிலமும் கொடுக்க மாட்டேன் என்று கூறிய ஆங்காரம் எப்படி திரண்டு வந்தது என்பதற்கான சித்திரம் முழுமையாக தீட்டப்பட்டிருக்கிறது. துரியோதனன் மிக அழகன்.

துரோணரின் மனைவியும், கர்ணனுடையை அம்மாவும், ஏகலவ்யனின் அம்மாவும் மிக அழுத்தமான பாத்திரங்கள்.‌ பெண்மையின் முழுவீச்சு அவர்கள். படிப்பற்றவராக, பயந்தவராக, எளிய மனிதரான கர்ணனின் தந்தை சில இடங்களில் பேசும் வசனங்கள் எந்த ஆசிரியராலும் கற்றத் தரமுடியாதவை‌‌. இந்நாவலில் ஒரு சின்ன உறுத்தல். மழைப்பாடல் நாவலில் கர்ணன் குந்தியை விட்டு ராதையின் வீட்டில் வளரத்துவங்கும் நாளில் ஒரு தெய்வம் நாய் உருவங்கொண்டு கர்ணனுக்குத் துணையாக வளரத்துவங்கும். அந்த நாய் வண்ணக்கடலில் இல்லை. நாய் பணிரெண்டு வருடங்களுக்கு மேல் வாழ்ந்திருக்காது என்று ஞாயமான காரணம் தோன்றினாலும் அதைப் பற்றி ஞாபகப்படுத்தும் ஒரு வரியில்லாதது ஒரு சின்ன உறுத்தல். ஓணத்தின் போது பழபஜ்ஜி கேட்ட கதையாக. துரோணரும் அதிரதனும் கிருபரும் உழைப்பின் மேன்மையை மனமும் கர்மமும் ஒன்றாகி கலக்கவேண்டிய அவசியத்தை கூறியபடியே இருக்கிறார்கள்.

இளநாகன் ஆந்திரம் செல்கிறான். விஜயநகரத்தில் ஓரிடத்தில் தங்குகிறான். அங்கே வீதி கூட்டி வேலைசெய்யும் ஒரு முதியவள் வீட்டில் தங்கி பழையசோறும் மோரும் கறிக்குழம்பு உண்கிறான். உண்டுமுடித்து அவளை வாழ்த்திப் பாடி அவள் பெயர் கேட்கிறான். “சென்னம்மை” என்கிறாள். நானறிந்த சென்னம்மாளை மனதில் நினைத்துக் கொண்டேன். ஜெயமோகனும் கி.ராஜநாராயணனும் புன்னகைத்துக் கொள்கிறார்கள் என்று எண்ணினேன். கோபல்ல கிராமத்தில் சென்னம்மாள் தோன்றும் பக்கங்கள் எல்லாம் தங்க நிறத்தில் டாலடிப்பவை. (சென்னம்மாளை நடிகை ரோஜாவின் முகச்சாயலில் கற்பனை செய்து, இவள் இப்படித்தான் அழகாக இருந்திருக்க முடியும் என்று ஒருமுறையும், அனுஷ்காவின் முகச்சாயலில் கற்பனை செய்தும் படித்திருக்கிறேன்.)

வண்ணக்கடலில் கி.ராவும் ஜெயமோகனும் புன்னகைத்துக் கொண்டார்கள் என்றால், “குமரித்துறைவி”யில் கட்டி அணைத்துக்கொண்டார்கள் என்று சொல்ல வேண்டும்.‌ முகலாயர்களிடமிருந்து அன்னை மீனாட்சியைக் காப்பாற்றி பல்லக்கில் தூக்கி தென்திசை வருகிறார்கள். ஊனின்றி உறக்கம்விட்டு அன்னை அன்னையென்று மட்டும் சித்தமாக ஓடி வருகிறார்கள் புரோகிதர்கள். வழியில் கள்வர் கூட்டம் சூழ்ந்து கொண்டு ,கற் சிலையிருக்கும் பல்லக்கை ஒரு ராணியின்/பெரிய குடும்பத்து பெண்ணின் பல்லக்கு என்று நினைத்து கொள்ளையடிக்க நெருங்குகிறான் கள்வர் தலைவன். அடுத்த வரி பல்லக்குக்குள்ளே முகம் நிறைத்துக் கொண்டு கண்கள் கொண்ட சிறுமியொருத்தி தோளில் கிளியோடு தோன்றுகிறாள். ஒரு நொடி கண்ணீர் தொடுதிரையில் விழுந்து அலையடிக்க நின்றுவிட்டேன். எந்த மின்கம்பியில் கைவைத்திருக்கிறோம் அதை நம்மை எங்கே வீசியடிக்கப்போகிறதென்று அறிந்து நிலைதடுமாறிவிட்டேன்.. இந்த நாவல் ஜெயமோகனின் மிகப்பெரிய உச்சம். வீடு திரும்பினால் கதவிற்குள்ளிருந்து என் செல்ல மகள் மீனாட்சியாய் நடந்து வருகிறாள்.

இந்த வெண்முரசு நாவலில் நான் எந்த கதாப்பாத்திரத்தோடு ஒன்றப்போகிறேன் என்று யோசித்தபடியே இரண்டு புத்தகங்கள் படித்துமுடித்தேன். பீமன் தான் நம்மாள். இனி எத்தனை கதாப்பாத்திரங்கள் வந்தாலும் பீமன் போல ஒரு பாத்திரத்தை நான் சந்திக்கப்போவதில்லை‌.

அர்ச்சுனன் வயதுக்கு மீறிய வேகத்தோடு வில்வித்தை கற்கிறான். தணுர் வேதத்தையும் கற்றுத் தேர்கிறான். கிருபரிடம் விவாதிக்கிறான். அவனை தருமன் திட்டுகிறான். கிருபர் அவனுக்கு கற்றுத்தருமளவிற்கு நான் கற்றவனில்லை என்று மிகத் தன்மையாக தருமனிடம் கூறுகிறார் தன் மைத்துனன் துரோணனை அழைத்து அவனுக்கு குருவாக்குகிறார். அந்தக்காட்சியில் அர்ச்சுனன் மிகப் பிரகாசமான நட்சத்திரம் போல சுடர்கிறான். உச்சத்தில் முடியும் அந்த காட்சிக்கு அடுத்த காட்சி அஸ்தினபுரியின் அடுக்களையில் துவங்குகிறது. பெரிய கதவைத் தள்ளி உள்ள தயக்கத்தோடும் மிரட்சியோடும் எட்டிப்பார்க்கிறான் சிறுவன் அர்ச்சுனன். பீமனை தேடுகிறான். உள்ளே பீமன் சப்பாத்தி சுட்ட படியே அவனைக்கண்டு “இங்கே பாரு இது அம்பெடுத்து ஆளக்கொல்ற மாறி ஈசியான காரியம் இல்ல பாத்துக்கோ” என்று பேசத்துவங்குகிறான். சமையலின் நுட்பங்களை, மனமும் குவிந்து ஒருங்காவிட்டால் ஒரு அப்பம் கூட சுடமுடியாது என்று கூறுகிறான். அன்னம் பாலிக்கும் தெய்வத்தைக் அவனுக்கு காட்டுகிறான்.இறுதியாக அவனை தன் குருநாதர் மந்தரரிடம் கூட்டிச்செல்கிறான்.

குருவைக்கண்ட உடனே நான் “பிரதமன்” “பிரதமன்” என்று துள்ளிக்குதிக்கிறது என் மனது. ஒரு கயிற்றுக் கட்டிலில் அமர்ந்தபடியே மொத்த அடுக்களையும் கையில் வைத்திருக்கும் ஆசான் தான் இன்னொரு கணக்கில், பந்தியில் சாப்பிடும் கைகளை, வாய்களை கண்டு உளம் நிரம்பியபடி படுத்திருக்கும் மந்தரரும். மந்தரர் ஒரு சூதர் அவர் காலில் விழுவதா என்று அர்ச்சுனன் கேட்கிறான். மூடனே என்று வைது அவனுக்கு கர்மம் செய்பவன் கடவுள் என்று விளக்குகிறான். பிரம்மத்தை என் குருதேவரின் காலடியில் அமர்ந்தே அடைந்துவிடுவேன் என்கிறான் பீமன். பீமனும் மந்தரும் பேசிய பேச்சில், பீமனுக்கு அவர் தந்த பீடாவின் சுவையின் முன் முந்தைய காட்சியில் வந்த தணுர்வேதமும் வில்லும் சிறியதாய் தெரிகின்றன

.”உடலோ, நிறமோ அல்ல நீ! உன் செயலே உன் அடையாளம். உன் கர்மத்திற்கு உன்னை முழுதாக பலி கொடு. பிரம்மத்தில் ஒன்றாவாய். உன் திருப்தி தான் உன் மோட்சம்” என்று இந்த நூற்றாண்டில் நின்று இவ்வளவு சத்தமாக இவ்வளவு அழுத்தமாகச் சொல்லும் குரல் ஜெயமோகனது குரல். இந்த காலகட்டத்தின் மிக அத்தியாவசியமான குரல். வெறும் பணத்திற்காக கனவுகளை விட்டு ஒரு டிஜிட்டல் குமாஸ்தா ஆகிக்கொண்டிருக்கிறேனோ என்று நான் சோர்வுறுந்தோறும் என்னை மீட்டெடுக்கும் குரல் இந்தக் குரல் தான்.

மக்களுக்காகவே உழைத்து தெய்வம் போல் தோன்றிய டாக்டர் சாமர்வெல்(ஓலைச்சிலுவை), கெத்தல் சாகிப், தூய சாராயம் காய்ச்சும் பக்குவத்தில் தெய்வம் வெளிப்படும் என்று மனதாற நம்பிய லாசர்(மாயப்பொன்), பாயாசம் முறுகி வரும் பதத்தில் தெய்வம் தோன்றி ஆட்கொள்ளும் என்று காட்டிய ஆசான்(பிரதமன்), சுவற்றில் பகவதியை வரைந்து கண்முன் தெய்வப்பிரசன்னம் நிகழச் செய்த சித்திரக்காரன் மாணிக்கம் ஆசாரி( அந்தக் கதைக்கு இறைவன் என்றே பெயர்) கம்பமேறி மிக மிக நேர்த்தியாக சோல்டரிங் செய்து தான் பிரம்மனைவிட ஒரு நெல் குறைவானவனில்லை என்று கர்ஜிக்கும் மாடன்பிள்ளை.‌. எத்தனை பாத்திரங்கள் உன் ஆத்மார்த்தம் உன்னைச் சுடர்விடச்செய்யும் என்று நம்மை தேற்றிக் கொண்டேயிருக்கிறார்கள். நான் என்னை தினசரி மேம்படுத்திக் கொள்ள வேண்டும். தினசரி நமக்கு விசுவாசமானவனாக இருந்தாலே என் அயர்ச்சியில் இருந்து மீண்டு மேலேறி விடுவேன் என்று பெரிய நம்பிக்கையோடு என்னை மீட்டுக் கொள்கிறேன்.

இந்த மானுட நம்பிக்கையை, உத்வேகத்தை தொடர்ந்து என் தோளில் பலமாய் சாத்தி அளித்துக் கொண்டேயிருக்கும் ஜெயமோகன் எனக்கு எந்த இலக்கியவாதியை ஆன்மீகத்தையும் விட முக்கியமானவர்.

பிரவீன் குமார்

வெண்முரசு வாசிப்பு- பிரவீன்குமார்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 13, 2021 10:30

November 12, 2021

ஆத்மார்த்திக்கு பாலகுமாரன் விருது

2021 ஆம் ஆண்டுக்கான பாலகுமாரன் விருது பெறும் எழுத்தாளர் ஆத்மார்த்திக்கு வாழ்த்துக்கள். காட்சிக்கலை, பரப்பியல் குறித்து தொடர்ச்சியாக எழுதிவருபவர். கவிஞர்.

ஆத்மார்த்தி நூல்கள்

ஆத்மார்த்தி பேட்டி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 12, 2021 20:17

படைப்பாளியின் தெளிவு

அறிவுரைகளா?

அன்புள்ள ஜெ

உங்கள் பதிலில் இந்த வரிகளைப் பற்றி யோசிக்கிறேன்

ஓர் இலக்கியவாதி தன் படைப்பை கருத்துசொல்ல பயன்படுத்தினால் அப்படைப்பு அழகியல்ரீதியாக குறைபாடு கொண்டது. இலக்கிய ஆக்கம் கருத்துசொல்வதற்கான ஊடகம் அல்ல

இலக்கிய ஆக்கத்தில் கருத்துக்களே இருக்கக்கூடாது என்று சொல்பவர்கள் பற்றித்தான் நான் கேட்டிருந்தேன். இலக்கியவாதி குழப்புவானே ஒழிய தெளிவு அளிக்கமாட்டான் என்று சொல்லப்படுவதைப்பற்றிய உங்கள் கருத்தை கேட்க விரும்புகிறேன்

அகிலன் மா

அன்புள்ள அகிலன்,

இலக்கிய ஆக்கம் கருத்து சொல்வதற்குரியது அல்ல. ஆனால் இலக்கியப் படைப்புக்குள் கருத்துக்கள் இன்றியமையாதவை.

இலக்கிய ஆக்கத்திற்குள் வாழ்க்கை பற்றிய கருத்துக்கள் எப்படி வர இயலும் என இலக்கியவாசிப்பினூடாக தெளிவடைய முடியும். ஓர் இலக்கிய ஆக்கம் தன் மையமாக ஒரு கருத்தை முன்வைக்கிறது என்றால், அதன்பொருட்டு அந்தப்படைப்பின் அமைப்பையும் ஒழுக்கையும் கட்டமைக்கிறது என்றால் அது கலைக்குறைபாடு கொண்டது. அதையே பிரச்சார இலக்கியம் என்கிறோம். அதை கலைப்பார்வையில் நிராகரிக்கிறோம்.

அந்தக்கருத்து எத்தனை முக்கியமானது என்றாலும் அந்தப்படைப்பு கலைக்குறைபாடு கொண்டதே. அக்கருத்தை நாம் ஆழமாக விவாதிக்கையிலும்கூட அந்தப்படைப்பை கலைப்படைப்பாக எழவில்லை என்று சொல்லுவோம். இதுவே அழகியல் நோக்கு

ஏன்? இலக்கிய ஆக்கம் அதன் ஆழ்மன இயக்கம் சார்ந்தே மதிப்பிடப்படுகிறது. அதை கலையாக ஆக்கும் கூறுகள் எழுத்தாளனின் அறிவோ நிலைபாடோ அல்ல அவனுடைய ஆழுள்ளம் மொழிவழியாக தன்னிச்சையாக வெளிப்பட்டிருக்கும் விதமே அதை கலைப்படைப்பாக ஆக்குகிறது. எழுதும்போது தன்னிச்சையாக உருவாகி எழுந்து வந்து நிற்கும் ஒன்றே படைப்பாகும். சிந்தித்து தெளிந்து கட்டமைக்கப்படுவது அல்ல. அந்த சிந்தனை எத்தனை தெளிவானதாக இருந்தாலும் சரி.

எழுத்தாளனின் ஆழுள்ளம் படைப்பில் வெளிப்படுகிறது. படைப்பிலுள்ள கதைமாந்தர், கதைத்தருணங்கள், உணர்வுகள், படிமங்கள், குறியீடுகள், மொழியாட்சிகள், வடிவம் ஆகியவற்றினூடாக அவற்றை வாசகன் தன் ஆழுள்ளத்தால் அறிகிறான். அதுவே வாசிப்புச் செயல்பாடு. அந்த எழுத்தாளன் தான் சிந்தித்து அறிந்த ஒரு கருத்தை முன்வைக்கும்பொருட்டு தன் அப்படைப்பை எழுதினான் என்றால் அவனுடைய ஆழுளம் அதில் இல்லை என்று பொருள். அவ்வாறு இருந்தாலும் அதை அவன் கட்டுப்படுத்தியிருக்கிறான், திரித்திருக்கிறான் என்று பொருள். ஆகவே அது கலைக்குறைபாடு கொண்டது. இலக்கியத்தின் நோக்கம் எதுவோ அதை அப்படைப்பு அடையவில்லை என்று அழகியல்விமர்சனம் கருதும்.

[மிக அரிதாக எழுத்தாளன் தெளிவான நோக்கத்துடன், கருத்து சொல்வதற்காகவே எழுதும்போதுகூட அவனை மீறி அவனுடைய ஆழுள வெளிப்பாடாக படைப்பு மாறிவிடுவதுண்டு. அது மாபெரும் கலைப்படைப்பாகவும் கருதப்படும். தல்ஸ்தோயின் அன்னா கரீனினா அத்தகைய படைப்புக்கு சிறந்த உதாரணமாகச் சொல்லப்படுகிறது]

இதனால்தான் இலக்கியத்தில் கருத்துச் சொல்லுதலை விமர்சகர் நிராகரிக்கிறார்கள். ‘கருத்துசொல்லும் படைப்பு’ என்னும் சொல்லாட்சி எதிர்மறைக் குறிப்புடன் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இதை மூன்று வகையில் பிழையாக புரிந்துகொள்ளும் எளிய வாசகர்கள் உண்டு.

ஒன்று, இலக்கியப்படைப்பில் சிந்தனைசார்ந்து வருவன அனைத்தையும் கருத்துசொல்லும் கலைப்பிழை என எடுத்துக்கொள்வது.

இரண்டு, ஆசிரியர்கூற்றாக வரும் கருத்துக்களை கருத்துசொல்லுதல் என எடுத்துக்கொள்ளுதல்.

மூன்று, இலக்கியப்படைப்பில் உருத்திரண்டு வரும் ஒரு சிந்தனை எழுத்தாளரால் முன்வைக்கப்படுவது, அது கருத்துப்பிரச்சாரம் என எடுத்துக்கொள்வது..

மானுடத்தின் அகச்செயல்பாடுகளில் முக்கியமானது சிந்தனை. அது ஓர் இலக்கிய ஆக்கத்தில் வரக்கூடாது என்பதைப்போல அறிவின்மை வேறில்லை. உலக இலக்கியத்தின் பெரும்படைப்புகள் அனைத்துமே சிந்தனைகளை முன்வைப்பவைதான். என்ன வேறுபாடென்றால் அவை ஒரு ‘மையச் சிந்தனையை’ முன்வைப்பதில்லை. அவை ஒரு சிந்தனைப்புலத்தை முன்வைக்கின்றன. ஒரு சிந்தனைப்பரிமாற்றத்தை, உரையாடலை சித்தரிக்கின்றன. ஆகவே முரண்படும், பல்வேறுபட்ட சிந்தனைகளை அவை முன்வைக்கின்றன. விவாதங்களை உருவாக்குகின்றன. தஸ்தயேவ்ஸ்கி அல்லது தாமஸ் மன் அல்லது விக்டர் ஹ்யூகோவின் படைப்புகள் உதாரணம்.அவை தீவிரமான கருத்துக்கள் முரண்பட்டு செயல்படும் பெரும்களமாகவே அமைந்துள்ளன.

பேரிலக்கியங்கள் சிந்தனைகளை மூன்று வகைகளில் முன்வைக்கின்றன. வலுவான சிந்தனைப்போக்கு கொண்ட கதாபாத்திரங்களை உருவாக்கி அவற்றின் எண்ணங்களாகவும் உரையாடல்களாகவும் சிந்தனைகளை அவை முன்வைப்பதுண்டு. அச்சிந்தனைகளை அந்தக் கதாபாத்திரத்தின் வெளிப்பாடுகளாகவே கருதவேண்டும். அவற்றின் மறுபக்கம் பலசமயம் அந்நாவலிலேயே வெளிப்பட்டிருக்கும். இன்னொரு கதாபாத்திரத்தால், அல்லது அதே கதாபாத்திரத்தின் இன்னொரு உளநிலையால்.

சிலசமயம் ஒரு கதாபாத்திரத்தின் உணர்வுநிலையே ஒரு கருத்தாக வெளிப்பட்டிருக்கும்”நரகம் என்பது மற்றவர்கள்தான்” என்பது சார்த்ரின் ‘மீளமுடியுமா?”என்ற நாடகத்தின் கதைநாயகரின் வரி. அவனுடைய உணர்வு அது. அதை ஒரு தத்துவ வரையறையாக எடுத்துக்கொள்ளக் கூடாது. ஒரு குறிப்பிட்ட உளநிலையின் சரியான சொல்வடிவம் அது. அந்த உளநிலை சமூகத்தில் திகழ்வது, இருத்தலியல் சார்ந்த பறதியின் [anxt] விளைவு அது.அது ஒரு விவாதக்கருத்து அல்ல, ஒரு நிலைபாடு அல்ல.

இலக்கிய ஆக்கங்களில் ஆசிரியர்கூற்றாகச் சிந்தனைகள் வருவதுண்டு. அவையும்கூட அந்த புனைவுக்களத்திற்குள் உள்ள உணர்வுவெளிப்பாடுகளோ எண்ணங்களோதான். அவற்றை அந்த புனைவுக்களத்திற்கு வெளியே அதேபோன்ற வாழ்க்கைச்சூழல் ஒன்றை விளக்க பயன்படுத்தலாம். அவற்றையும் அறுதியான தத்துவ வரையறைகளாகக் கொள்ளலாகாது, தல்ஸ்தோய், தஸ்தயேவ்ஸ்கி நூல்களில் அத்தகைய வரிகள் ஏராளமாகவே காணக்கிடைக்கும்.

கடைசியாக படைப்புகள் ‘சென்றடையும்’ கருத்துநிலையை ஆசிரியரின் கருத்தாகக் கொள்வது எளிய வாசகர்களிடையே அடிக்கடி காணப்படும் உளப்பழக்கம். ஒரு புனைவு அதன் களத்தில் எல்லாக் குரல்களையும் முன்வைத்து ஒரு பெரிய விவாதத்தைக் கட்டமைக்கிறது. அந்த விவாதத்தின் மையப்புள்ளியாக திரண்டு வருவது அப்படைப்பின் மையமே ஒழிய ஆசிரியரின் தரப்பு அல்ல. அந்த மையமும்கூட நாம் நம்முள் உருவாக்கிக் கொள்வதே ஒழிய மெய்யாகவே அப்படைப்பில் நிலைகொள்வது அல்ல. அந்த விவாதங்களை அறிவுபூர்வமாக உணர்வுபூர்வமாக வாசகன் தன்னுள் உருவாக்கிக்கொள்கையில் அவன் சென்றடையும் இடம் அது.

அதாவது ஆசிரியன் அங்கிருந்து தொடங்கவில்லை, அப்படைப்பு அங்கே சென்றடைகிறது. இரண்டுக்கும் மிகப்பெரிய வேறுபாடுண்டு. இதையறியாமல் ‘எல்லா படைப்பும் பிரச்சாரமே’ என்று சொல்லும் எளியவாசகர் உலகம் முழுக்கவே உண்டு.

நுணுகிப் பார்த்தால் ஓர் இலக்கிய ஆக்கம் எதை சென்றடைகிறது என்று நமக்கு தோன்றுகிறதோ அதற்கு எதிராகவும் அது நிலைகொள்ளும். அப்படிப்பட்ட வாசிப்புக்கும் அது இடமளிக்கும். அது ஆழுள்ளத்தின் இயல்பு. ஆசிரியனின் ஆழுளம் வெளிப்பட்டால் படைப்பு அவ்வண்ணம் விரிந்து பரவி தன்னைத்தானே மறுத்து தனக்குத்தானே உரையாடிக்கொண்டு மேலே செல்லும். அதையே பன்முகத்தன்மை, உள்விரிவுத்தன்மை என்று அழகியல்விமர்சனம் குறிப்பிடுகிறது. அவ்வாறன்றி ஒரே திசைநோக்கிச் செல்லும் ஆக்கங்களையே ஒற்றைப்படையானவை என்கிறோம்.

எளிய வாசகர் இதையே ‘குழப்புவது’ என்கிறார். இது குழப்பம் அல்ல. ஒரு பாலைநில மண்ணில் நீரூற்றுவது. அங்கே இருக்கும் எல்லா விதைகளையும் முளைக்கச் செய்வது. வாசகனிடமிருக்கும் எல்லா கேள்விகளையும் ஐயங்களையும் உசுப்பி எழுப்புவது படைப்பின் இயல்பு. அவனை தீவிரமான தன்னுசாவலுக்குக் கொண்டுசெல்வது அதன் வழிமுறை. வாசகன் தெளிவை அடைவது அந்த தன்னுசாவலின் வழியாக அவன் மேற்கொள்ளும் பயணத்தின் முடிவில்தான். அப்படி ஒரு பயணத்தை ஆற்ற முடியாதவர்களுக்கு எஞ்சுவதுதான் குழப்பம்.

இது படைப்பின் இயல்பே ஒழிய படைப்பாளியின் இயல்பல்ல. அவன் குழம்பிப்போனவன் அல்ல. அவனும் தன் படைப்பினூடாகப் பயணம் செய்திருப்பான். அவனும் சில தெளிவுகளைக் கண்டடைந்திருப்பான். அவன் அவற்றை முன்வைத்து திட்டவட்டமாகப் பேசுவான்

ஜெ

இலக்கிய மேற்கோள்கள் படைப்பாளிகளின் மேற்கோள்கள்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 12, 2021 10:35

விஷ்ணுபுரம் விருந்தினர்-1, கோகுல் பிரசாத்

விஷ்ணுபுரம் விழா விருந்தினர்கள் அரங்கு இன்றைய இலக்கிய சூழலை பொதுவாக அறிந்துகொள்ளவும், இன்றைய படைப்பாளிகளுடன் உரையாடுவதற்கும் உதவியாக அமைக்கப்படுகின்றன. இவற்றில் பங்கேற்கும் படைப்பாளிகளை வாசகர்கள் வாசித்துவிட்டு வரவேண்டுமென்னும் நோக்குடன் அவர்கள் முன்னரே அறிமுகம் செய்யப்படுகிறார்கள்

இவ்வாண்டு விஷ்ணுபுரம் விருந்தினர் அரங்கில் பங்கெடுப்பவர்களில் ஒருவர் இதழாசிரியரும் திரைவிமர்சகருமான கோகுல் பிரசாத். தமிழினி என்னும் இணையதளம் குறுகிய காலத்திலேயே தமிழில் குறிப்பிடத்தக்க இலக்கிய வெளியீடுகளில் ஒன்றாக மாறியிருக்கிறது. அதில் ஆசிரியர் பக்கங்களாக அவர் தொகுத்தளிப்பவை வாசகர் கவனத்திற்குரியவை. இலக்கியம், திரைப்படம் குறித்த கட்டுரைகளையும் எழுதிவருகிறார்

தமிழினி இணைய தளம்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 12, 2021 10:34

சின்னச்சின்ன ஞானங்கள்- கடிதம்

சின்னச்சின்ன ஞானங்கள் வாங்க

சின்னச் சின்ன ஞானங்கள் தொகுதியில் குரு நித்யா புத்தகம் வாசிப்பது குறித்து சொல்லியிருப்பது மிக முக்கியமாக இருந்தது. ஒரு கேள்வியை எழுப்பிக் கொண்டு, வாசிக்கும் புத்தகத்தில் இருந்து நாம் அடையும் அறிதலை அதன் கீழ் தொகுத்துக் கொண்டே சொல்ல வேண்டும் என்பது. புத்தகம் வாசிப்பது குறித்து புதிதாகக் கற்றுக் கொண்டேன்.

[அஸ்ட்ரோ பிஸிக்ஸ் புத்தகம் கையில் வைத்திருக்கும் அப்பாவிடம் அந்தப் புத்தகத்தில் என்ன இருக்கு என கேள்வி எழுப்பும் சிறு மகவுதான். அவ்வளவு தொலைவும் விஷயங்களும் இருக்கிறது கற்றுக் கொள்வதற்கு. உண்ண உண்ணப் பசித்துக் கொண்டேதான் இருக்கிறது. நேரமும் காலமும் போதாது என்பது போல உணர்கிறேன்.]

அதனால் இன்று தளத்தில் கவிதை என்னும் வகைமையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் வந்த பதிவுகளையெல்லாம் வாசித்து தொகுத்துக் கொண்டிருந்தேன். எது கவிதையாகிறது? எது கவிதையை அல்லாமலாக்குகிறது? அதன் பேசுபொருள், சொல்லிணைவுகள், இசையொழுங்கு, பிறிதொன்று சொல்லி உணர்த்துவது, மலர்மொக்கவிழ்வது போன்ற நுண்தொடுகை, என பல கட்டுரைகளில் சொல்லியதை கைப்படக் குறிப்பெழுதிக் கொண்டேன்.

அதில் கவிதைக்கு நம் அகத்தின் மிக அந்தரங்கமானதொரு பகுதியைத் திறந்து வைக்கிறோம். எனவே அங்கு நுண்மையான ஒலிகளும் பேரோசைகளாகும், குண்டூசி விழும் ஓசை கூட இடியென ஒலிக்கும். எனவே அதில் நேரடியாய் சொல்வதற்கும், தேம்பி அழுவதற்கும், செயற்கையானவற்றுக்கும் இடமில்லை என்று வாசித்ததும் நான் வாசித்துக் கொண்டிருப்பது கவிதை குறித்து மட்டுமல்ல, ஆன்மீகமான ஒரு கட்டுரை என்று தோன்றியது. கவிதை குறித்து சொன்னதெல்லாம் ஆன்மீகப் பயணத்துக்கும் அப்படியேதான் பொருந்துகிறது எனக் கண்டேன். அந்தரங்கமானவற்றை சொல்ல முற்படும் போது நாம் வேறெங்கோ பார்க்கிறோம், அசட்டுத்தனமாக புன்னகைக்கிறோம், வேறெங்கோ தொடங்குகிறோம். திரைப்படத்தில் ஒளியை ஒரு சுவரில் பிரதிபலித்து அதை இன்னொரு திரையில் பிரதிபலித்து அந்த ஒளியை நடிகர்கள் முகத்தில் விழுமாறு அமைப்பார்கள் என்றும் அது போல எத்தனை பெரிய வலியாக இருந்தாலும் பிரபஞ்ச வெளியில் பட்டு எதிரொலித்து ஒரு சிறிய முணுமுணுப்பாகவே, தன்னுள் எழும் குரலெனவே கவிதை பேச வேண்டும் என்றும் எழுதியிருப்பீர்கள்.

இதையேதான் கற்றுத் தேர வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு எண்ணத்தையும், ஒவ்வொரு நிகழ்வையும் சொல்லாக்கி விட முனையும் இந்த அகத்தை வைத்துக் கொண்டு பாடாகத்தான் இருக்கிறது. உணர்வதெல்லாம் உள்ளமைந்து உதிர்ப்பதுவும் எக்காலம்!

இருளில் விரல் தடவி தொட்டுணர்ந்த ஒன்றை மொழி தொடாதிருக்கட்டும்!

அதோ எனச்சுட்டும் விரலில் பறந்துவிடக் கூடும் அனிச்சமலர்ப் பறவை! என்றே எண்ணிக் கொள்கிறேன்.

சுபா

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 12, 2021 10:31

கல்குருத்து கடிதங்கள்-3

கல்குருத்து- சிறுகதை

அன்புள்ள ஜெ

கல்குருத்து கதையை வாசிக்கையில் அதில் இருக்கும் இரண்டு வெவ்வேறு தலைமுறைகளின் இயல்புகளை அம்மி என்ற படிமம் ஒன்றாக ஆக்குகிறது என்று புரிந்துகொண்டேன். சரியா என்று தெரியவில்லை. அந்த முதிய தம்பதிகளின் வாழ்க்கை மென்மையாக ஆகிவிட்டிருக்கிறது. மென்மையாக ஆவது என்றால் பல்லாயிரக்கணக்கான உரசல்கள் வழியாக அது நிகழ்ந்திருக்கிறது என்றுதான் பொருள்.

அந்த வகையான உரசல்கள் தொடச்சியாக நிகழ்ந்துகொண்டிருக்கும் இடமாக இளம் தம்பதிகளின் உலகம் உள்ளது. அந்த உரசல்கள் எல்லாமே அந்த மென்மையை நோக்கிச் செல்வதற்குத்தான். அந்த வாசிப்பு கதையை துலங்கச் செய்தது. ஒரு தித்திப்பான அனுபவத்தை அளித்தது. கிழவர் கிழவின் பேச்சில் இருந்தே அவள் இனிப்பை விரும்புவதை ஊகித்து கருப்பட்டி கொடுக்கும்படிச் சொல்கிறார். அந்த தித்திப்பு கதை முழுக்க இருந்துகொண்டே இருக்கிறது.

அழகான கதை. இனிமையான கதையும்கூட. துன்பங்கள் கசப்புகளை மட்டுமே பரிமாறிக்கொண்டிருக்கும் நம் இலக்கியச் சூழலில் இந்த வகையான கதைகள் அளிக்கும் இனிமை மிகமிக முக்கியமானது. ஒரு அழகான இனிமையான குளிர்த்தென்றல் மாதிரி

எம்.பாஸ்கர்

 

கல்குருத்து அழகான சிறுகதை. கல்குருத்து அந்தப்பெண்தான் என்ற எண்ணம் வந்தது. அவளுடைய பார்வையில் அந்த அம்மி திரண்டு வருகிறது. ஒரு விதையை உடைத்துக்கொண்டு தளிர் எழுவதுபோல குருத்து வருவதுபோல அம்மி வருகிறது. பல்லாயிரம் காலம் அங்கே கிடந்த கல்விதை முளைத்துவிட்டது. அது இனி வளர்ந்து வளர்ந்து மரமாகும். கடைசியில் முதிர்ந்து மீண்டும் ஒரு தளிர்போல ஆகும். கி

ழவரும் கிழவியும் புதுமணத்தம்பதிகள் மாதிரி அவர்கள் மட்டுமே உள்ள ஓர் உலகில் வாழ்கிறார்கள். வேறு எவருமே இல்லாத ஒரு அந்தரங்கமான உலகத்தில் இருக்கிறார்கள். அந்த உலகுக்கு அவளும் அவள் கணவனும் போய் சேர்வார்கள்.

இந்தவகையான கதைகள் ஒரு மனம் மலரும் அனுபவத்தை அளிக்கின்றன. வாசித்து முடித்தபிறகும் நீண்டநேரம் நம் முகத்தில் ஒரு புன்னகை இருந்துகொண்டே இருக்கிறது

ஆனந்த் குமார்

கல்குருத்து- கடிதம் -1 கல்குருத்து கடிதம்-2
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 12, 2021 10:31

நீலம்- அணிபுனைதல்

அன்புநிறை ஜெ,

அணிபுனைதல் – ஒவ்வொரு அணுவும் கரைந்தழிந்த பேரனுபவம். நூறு முறை, ஆயிரம் முறை கோடி முறை பிறந்திணைந்திறந்திருக்கிறேன். இன்னும் எச்சமிருப்பதைத் தாளமுடியாது இருக்கிறேன். பெண்ணாக அல்ல, ஆணாக அல்ல, கரைந்துவிட கணம் கணம் எனக் காற்றிடம் மன்றாடும் சுடர் தொடாத கற்பூரமாக. தன்னிருப்பு மட்டுமாக.

தொடக்கம் முதல் அணி சூடிவிடும் பகுதி இது. பகல் என்பதே இரவு சூடும் அணிதானே. அதைக் களைந்து அணுகக் காத்திருக்கிறது ஒவ்வொரு பொருளின் காலடியிலும் கரவு கொண்ட இரவு.

ஒற்றை ஒரு பகுதியில் எத்தனை எத்தனை சித்திரங்கள்.

பாரிஜாதம், எங்கு புன்னகைப்பதென்று அறிந்தவள் அவள் – இவ்வரியின் ஊடாக மலரென வந்ததன் பேறடைந்து விட்டது இம்மலர். பகலில் தவமிருக்கும் பாரிஜாதத்தை சொல்லி அந்திவரை குலப்பெண் என ஆற்றி நிற்கும் ராதையின் சித்திரம் வருகிறது.

ஆனால் அதன் இறுதியில் உயிர் அள்ளி உண்ணும் ஒரு சித்தரிப்பு. கூடைக்குள் நாகம்போல் என்னுள் நானிருந்து விழிமின்ன நெளிகின்றேன். – கூடையின் கண்களின் ஊடாக உள்ளே நெளிந்து உடலெல்லாம் விழிமின்னும் நாகத்தை ஒரு நொடி கண்டுவிட்டேன். பாம்பின் கால் பாம்புணர்ந்த நொடி அது. கூடையும் நாகமுமாக புறத்தைக் கொண்டு அகத்தை அணைகட்டும் அற்பச்சிறு முயற்சி. எப்போதும் வெல்வது நாகம்தான்.

காளிந்தி நீர்ப்பரப்பாய் கரியோன் கரம் வந்து என் ஆடைபற்றி இழுக்க அள்ளிச்சுழன்று நாணுவேன் காளிந்தியைக் கண்ணன் என்று கண்டபின் கரையேறுவது எங்கனம். அல்லது கரையேற வேறு வழியுண்டா என்ன? நீந்தித் திளைக்கிறாள். தழுவித் திமிறுகிறாள், மூச்சடக்கி மூழ்குகிறாள்.

இல்லத்து மகளிர் வசை பொழிகிறார்கள். சிதலெனக் கூடி ஒன்றையே ஆற்றும் சிற்றுயிர்கள். இவளோ  சிதல்புற்றில் குடியேறும் கருநாகம் நான்.  – அடுத்த படிமம்.

அதன் பின் வரும் வரிகளை அது அமைந்திருக்கும் நிரை முறையே முற்றுரைக்கிறது. முகத்தை, முலையை எனத் தொடங்கி தொடையிணையில் நின்றுவிட்டு அதன் பிறகு ஒரு தனிப்பெரும் பத்தி.

வேள்விக்கட்டைகள் கடைந்து கடைந்தெடுக்கும் கனல் எனத்தொடங்கி இடைஒளித்த நாகப்பத்தியை சொல்லெண்ணி அர்ச்சிப்பது போல. பாதவெண்மைக்கு நகரும் அடுத்த பகுதி. சௌந்தர்யத்தின் லஹரி.

ஒவ்வொரு அணியாய் அணிந்தணிந்து உச்சம் தொட்டு, இவ்வளவு அணியும் சூடியது நானா என விதிர்த்து அனைத்தையும் களைந்தெறிந்து, அதன் உச்சத்தில்  ஆன்மா தரித்திருக்கும் உடல் எனும் எடைமிக்க அணியையும் களைந்து எறியும் தவிப்பு. இம்முலை களைந்து தோள்களைந்து இடைகளைந்து அல்குல் தழல் களைந்து எழுந்தோட விழைவேன்.– இதனினும் இந்த வேட்கையை வேறெப்படியும் சொல்ல முடியாது. நூறாயிரம் முறை இந்த உடலைத் தாள முடியாது இதற்குள் சிறைப்பட்டிருக்கும் பறவையை விடுவிக்க பதைபதைக்கும் அகம் மட்டுமாகி நின்றிருக்கிறேன். இவ்வரிகளில் இறந்து மீண்டு வந்தேன்.

ஆடை மறைத்த உடல். ..சொல் மறைத்த மனம்.  இந்த சொல் வெளி அனைத்துக்கும் அப்பால் நிற்கும் ஆழத்துக் கனல்.

அதோ ஆடியில் என் கண்கள். கொலை வஞ்சம் கொண்டோன் உடைமறைத்த குறுவாளின் நுனிமின்னல் – இந்தக் கண்களை மறைக்க கண்ணனைத்தான் அணிய வேண்டியிருக்கிறது. கொலைவாளின் முனையில் அமர்ந்து குழலூதத் தெரிந்தவன்.

அவளணிந்த அத்தனை அணிகளும் அவன் தொடுகைகள் ஆவது பேரழகு. நான் இவ்வாழ்வில் அணிந்திராத ஒவ்வொரு அணியையும் அணிந்து பெண்ணாகி, அவளுக்கு அணிவித்து ஆணாகி, மீண்டிருக்கிறேன். அந்தந்த அணி எவ்விடத்து அமையுமோ அங்கு அவன் அமரும் நுண்தருணம். அதன் உச்சம் நெற்றியில் துவள்வது அவனுக்கு நான் ஆட்பட்ட அத்தருணம் இது விரிக்கும் காட்சி!

அவனை அணியாக்கி அவள் அணிந்த பின்னர்தான் கானகத்து மலர்கள் கூட அணிகின்றன. முல்லை தொடங்கி நீலத்தாமரை வரை. அவனையே சூடிய பின் மலரணியக் கொடுத்த சுடர்க்கொடியாகிறாள் ராதை.

அடுத்து வருகிறது இரவு, நிலவு.

நிலவின் ஒளி போல இருளை அள்ளிப்பருகுவது வேறொன்றில்லை.லைப்பரப்புகளில் படர்கிறது நிலவின் காமம் அந்த ஒளி –  அனைத்து கரவுப் பகுதிகளையும் உட்புகுந்து அரை ஒளி பாய்ச்சும் நிலவின் ஒளி காமமேதான்.

அதன்பின் வருகிறது பித்தெழச் செய்பவன் மீதான காதல்வசைகள். தெய்வமறியாததொனறில்லை. எனில் களவில் ஈடுபட்ட நெஞ்சம், காதலை அரும்பொருளென ஒளித்து வைக்கும். பரம்பொருள் கள்ளன் என்றாகி அங்கு வந்து அரும்பொருள் கவரும் எனில் பாவம் மானுடம் என்ன செய்யும்!! //கைபிடித்துக்கொண்டுசெல்லும் கள்ளப்பெருந்தெய்வம்.// கள்ளப்பெருந்தெய்வம் எனும் ஒரு சொல்லில் அடப்பழிகாரா என வெகுநேரம் ஆழ்ந்திருந்தேன்.

கொன்று உடலாக்கி உண்டு பசியாறி சென்று திரும்பும் முன் திசைவெளியில் உயிர்ப்பித்து இன்று பிறந்தாய் இனிக்கொள்க எல்லாம் என்று சொல்லி புன்னகைக்கும் மாயக்கொலைகாரன்.// இது காமத்தில் பிதற்றும் மோகச்சொற்புயல் மட்டுமன்று, இப்பிறவிச்சுழலில் பிறப்பித்து இறப்பித்து பலமுறை பலபிறப்பெடுக்க வைக்கும் கொலைகாரன். இடையே //காமத்தில் நனைத்து காயவைத்து மீண்டும் எழுப்பும் கயவன். 

உடலெனும் கிளைஉதைத்து விண்நோக்கி விரிசிறகு விரித்து விட்ட வரிகள் இவை.

அடுத்து வருவது இருமை தொட்டு முன்பின்னாடும் ஊஞ்சலின் நிலை.

மழையில் நிறைந்து வேனிலில் வறளும் மலைச்சுனை போல ஒவ்வொரு கணமும் உருவழிந்து மீண்டேன். காலடி ஓசையில் பூத்தேன். அது காற்றோசை என கணுதோறும் உதிர்ந்தேன். கழலோசை எனத் தளிர்த்தேன். அது கலமுருள்தல் என்று கருகினேன். பறவைச்சொல் இனிதென்று பசுமைகொண்டேன். பல்லி அதைச் சொல்லவில்லை என்று பாலையானேன்.

இனி நீயே வந்தாலும் உனக்காகக் காத்திருப்பதன் இன்பத்துக்கு நிகராகாது என உணர்கிறாள். ஊசல் நின்றுவிட்ட ஊஞ்சல் பொருளிழந்து போவது போல காத்திருப்பு எனும் சொல்லில் இனி நான் கண்டடைய ஏதுமில்லை எனும் ராதைக்கு காத்திருப்பே நீலன். அதன் கரையணைந்தாலும் நீலன்தான், ஆற்றுப்பெருக்கும் நீலன்தான்.

அதன்பின் வரும் பகுதியை சொல்ல ஒவ்வொரு வரியையும் மீண்டும் எழுதுவதொன்றே வழி. என் வெறும்மேனிமீது புல்வெளிமீது தென்றல்போல் அவன் விழியோடியது. பின் பெருங்கடல்மீது புயல்போல அவன் மூச்சோடியது. “உன் உடல்கொள்ளும் மெய்ப்பே கண்ணனுக்கு பிடித்த அணி” என்றான். அவளணிந்த அணிகளிலேயே அழகான அணி!

இரவெல்லாம் தனித்திருப்பவள் நான். இரவை உண்டு இரவை உயிர்த்து இரவிலாடி இங்கிருப்பவள்.  அணுஅணுவாக இவ்விரவில் திளைத்து அவளாகி நிற்கிறேன். சியாமையாகி சியாமனை அறிகிறேன்.

என்றேனும் இந்த உடல் எனும் அணி களைந்து, அது சூடும் ஆயிரம் சொற்களையும், அது கற்பித்துக் கொண்ட பொருள் அனைத்தையும், நூறு நூறு பாவனைகள் அனைத்தையும் களைந்து நீலனுடன் கரையும் தருணத்துக்காக தவமிருக்கிறேன்.

தோடி முடித்து பூபாளத்தில் மலர்வது வேறொரு மலர். அங்கு இந்த தவிப்புகள் நிழலென்றாகி காலடியில் ஒளிந்திருக்கும்.

மிக்க அன்புடன்,

சுபா

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 12, 2021 10:30

விஷ்ணுபுரம் விருதுவிழா,2021

அன்புள்ள நண்பர்களுக்கு

2021 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது கவிஞர் விக்ரமாதித்யன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. சென்ற ஆண்டு விருதுவிழா கோவிட் கட்டுப்பாடுகள் காரணமாக மிகச்சிறிய சந்திப்பாக உள்ளறைக்குள் நிகழ்ந்தது. இவ்வாண்டு  வழக்கம்போல இரண்டுநாள் அமர்வாக நிகழ்த்த திட்டமிட்டிருக்கிறோம்.

வரும் டிசம்பர் 25 மற்றும் 26 தேதிகளில் [சனி ஞாயிறு] விருதுவிழா நிகழும். முதல்நாள் முதல் இலக்கியவாதிகளின் சந்திப்புகளும் உரையாடல்களும் நடைபெறும். விழா விருந்தினர்களை இன்னும் முடிவுசெய்யவில்லை. அதே ராஜஸ்தானி பவன் தான்

நினைவுகள் கொப்பளித்தெழுகின்றன. எத்தனை முகங்கள், எவ்வளவு உரையாடல். இவ்வாண்டும் சிறப்புற நிகழவேண்டும். அனைத்து நண்பர்களையும் சந்திக்க விரும்புகிறேன். இருநாட்களிலும் அனைவரும் கலந்துகொள்ள வேண்டுமென கோருகிறேன்

ஜெ.

 

விஷ்ணுபுரம் விருதுவிழா பங்களிப்பு

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 12, 2021 09:43

November 11, 2021

அறிவுரைகளா?

அன்புள்ள ஜெ

நீங்கள் சமீபமாக அளிக்கும் பதில்களில் ஆன்மிகம் மற்றும் தனிநபர் வாழ்க்கை பற்றிய சிந்தனைகள் மிகுதியாக உள்ளன. உங்களிடம் வரும் கேள்விகளும் பெரும்பாலும் அத்தகையவையாகவே உள்ளன. நீங்கள் அளிக்கும் பதில்கள் என்னைப்போன்றவர்களுக்கு மிகமிக உதவியானவை. என் குழப்பங்களுக்கு  விடையாக அமைந்த பல அற்புதமான பதில்களைச் சொல்லியிருக்கிறீர்கள்.

ஆனால் என் இலக்கிய நண்பர்களுடன் பேரும்போது சிலர் ‘இலக்கியவாதிகள் அறிவுரைகள் சொல்லக்கூடாது’ என்று சொல்கிறார்கள். அறிவுரை சொல்வது இலக்கியவாதிகளின் பணி அல்ல என்கிறார்கள். இலக்கியவாதி நம்மை குழப்பிவிடுவானே ஒழிய திட்டவட்டமாகத் தெளிவுகளை அளிக்க மாட்டான் என்றும் சொல்கிறார்கள். இந்தக் கேள்வியை நான் ஏன் கேட்கிறேன் என்றால் இந்தக் கோணம் எப்படி உருவாகிறது என்ற சந்தேகம் எனக்கு வருகிறது என்பதனால்தான்.

மா.அகிலன்

 

அன்புள்ள அகிலன்,

சுந்தர ராமசாமி கணையாழி இதழில் ஒரு கேள்விபதிலை தொடங்கினார். அதில் அவர் இத்தகைய ஓர் உரையாடலையே நிகழ்த்த முனைந்தார், அது நீடிக்கவில்லை. அதற்கு முன்பு அவர் புதுயுகம் பிறக்கிறது உள்ளிட்ட இதழ்களில் இவ்வகை உரையாடலுக்கு முயன்றார். அன்றிருந்த சூழல் அதற்குச் சாதகமானது அல்ல. ஜெயகாந்தன் குமுதம் உள்ளிட்ட இதழ்களில் இதைப்போல நிறையவே எழுதியிருக்கிறார்.

உலகம் முழுக்க எழுத்தாளர்கள் வாழ்க்கை பற்றிப் பேசிய பல்லாயிரம் பக்கங்கள் வாசிக்கக்கிடைக்கின்றன. இலக்கியமேதைகளால் எழுதப்பட்டவை அவை. உலகம் முழுக்க மக்களிடையே வாழ்க்கைப் பார்வைகளை உருவாக்குவதில் அவையே முதன்மைப் பங்கு வகிக்கின்றன. நீங்கள் ‘சொந்தமாக’  ‘இயல்பாகச்’ சிந்திப்பதாக நம்பிக்கொண்டிருக்கும் பல கருத்துக்கள் சூழலில் இலக்கியவாதிகளால் ஏற்கனவே நிலைநாட்டப்பட்டவை என்பதை கொஞ்சம் கவனித்தால் அறிந்துகொள்ள முடியும்.

அச்சிந்தனைகள் பள்ளிப்பாடங்களாக, அன்றாட மேற்கோள்களாக வந்து சேர்ந்தபடியே இருக்கின்றன. உருமாற்றமடைந்து வெவ்வேறு குரல்களால் முன்வைக்கப்படுகின்றன. அவை நம் மொழிச்சூழலை கட்டமைத்து, மொழியை கற்கையிலேயே நாம் அவற்றையும் பெற்றுக்கொள்ளும் நிலை உருவாகிறது. ஆகவே நாம் அவற்றை இயல்பாக அடைந்திருப்பதாக எண்ணிக்கொள்கிறோம்.

தத்துவவாதிகளின் சிந்தனைகள் அடிப்படைப்பார்வையை உருவாக்குவதில் முன்னின்றாலும்கூட இலக்கியவாதிகளின் சொற்களே புதியபார்வைகளை பரவலாகக் கொண்டு சேர்த்திருக்கின்றன. காரணம் இலக்கியவாதிகள் படைப்பினூடாக ஒரு நிகர்வாழ்க்கையை உருவாக்கி, அதன் பின்னணியில் நின்று பேசுகிறார்கள். உணர்ச்சிமிக்க மொழியில் , கச்சிதமான சொற்களில் உரையாடுகிறார்கள்.

இலக்கியவாதி வாழ்க்கை பற்றிப் பேசுவது என்பது ‘அறிவுரை’ சொல்வது அல்ல. அறிவுரை என்பது ஒருவர் ‘மேலே’ நின்றுகொண்டு கீழே நின்றிருப்பவருக்கு வழிகாட்டுவது. இலக்கியவாதி உருவாக்குவது ஒர் உரையாடலை மட்டுமே. அந்த உரையாடலில் கேட்பவர் மறுமுனையாக அமைகிறார். அவர் தன் எண்ணங்களை அந்த உரையாடலை ஒட்டியும் வெட்டியும் உருவாக்கிக் கொள்கிறார்.அறிவுரையுடன் எப்போதுமே அதிகாரம் இணைந்துள்ளது. உறவின், சமூகஅமைப்பின் அதிகாரம். அல்லது உணர்வுபூர்வமான அதிகாரம். உரையாடலில் அதிகார நோக்கு இல்லை. இலக்கியவாதிக்கு எந்த அதிகாரமும் இல்லை. நீங்கள் அவரை மறுப்பதை தடுக்க எந்த விசையும் இல்லை.

இலக்கியவாதியின் கருத்தை நீங்கள் எப்படி ஏற்றுக்கொள்கிறீர்கள் என்று பாருங்கள். அவை மிகச்சரியாக வகுத்துரைக்கப்பட்டிருக்கும். உடனே நீங்கள் ஆம் என்கிறீர்கள். நீங்களே உங்கள் நுண்ணுணர்வால் அறிந்து, ஆனால் சரியான சொற்களை கண்டடையாத கருத்துக்களாகவே அவை இருக்கும். இந்த அறிவெழுதலை  evocation என்று ஐ.ஏ.ரிச்சர்ட்ஸ் சொல்கிறார். ஒருவர் சொல்ல இன்னொருவர் ஏற்றுக்கொள்ளும் நிலை அல்ல இது. ஒருவர் சொல்ல இன்னொருவர் சொல்லப்படுவதை தன்னுள் தானே கண்டடையும் நிலை.

கருத்துரைப்பது, உரையாடுவது ஆகியவற்றை அறிவுரை என கொள்வோம் என்றால் இங்கே சிந்தனைத்தளத்தில் எந்தப் பேச்சுமே நிகழாது. வாழ்க்கை பற்றிய கருத்துக்களே பேசப்படாமலாகும். சரி, இலக்கியவாதி கருத்துரைக்கலாகாது என்றால் வாழ்க்கை பற்றி யார் கருத்துரைக்கலாம்? அரசியல்வாதிகளா? திரைப்படக்காரர்களா? சமூக ஆய்வாளர்களா? இலக்கியவாதியை விட வாழ்க்கையை அறிந்தவர்களா அவர்கள்?

உங்கள் நண்பர்களின் கருத்து எங்கிருந்து வருகிறதென்று பாருங்கள். அவர்களுக்கு இலக்கியவாசிப்போ இலக்கியத்தை உள்வாங்கிக் கொள்ளும் நுண்ணுணர்வோ இல்லை. அவர்களைப் பொறுத்தவரை இலக்கியவாதி என்பவன் அவ்வளவாக புகழ்பெறாமல், அவ்வப்போது  செவியில் விழும் ஒரு பெயர். ஏதோ கதை எழுதுபவன். இலக்கியத்தை உணராதவர்களுக்கு எழுத்தாளன் சாமானியனே. அந்த சாமானியன் கருத்துரைக்கக் கூடாது என்றே அவர்கள் சொல்கிறார்கள்.

நீங்கள் தமிழ்ச்சூழலில் ஒன்றைக் கவனிக்கலாம்.எழுத்தாளனை ‘மிகையறிவு’ப் பாவனையில் விமர்சிக்கும் கும்பல் அப்படியே அதிகார அரசியலின் வெற்று  ஆளுமைகளுக்கு துதிபாடிக்கொண்டு, புல்லரித்துக்கொண்டு குப்புற விழுந்து கிடப்பார்கள். ’இலக்கியவாதியை நம்பாதே, சொந்தாமாகச் சிந்தித்துப்பார்’ என இலக்கியவாசகனிடம் அறிவுரை சொல்லும் கூட்டத்தினர் தாங்கள் நம்பி ஏற்கும் அரசியல்வாதிகள் மேல் விமர்சனமே இல்லா அடிமைகளாக இருப்பார்கள். அவர்கள் உருவாக்கும் காழ்ப்புகளை அப்படியே நம்பி தாங்களும் கக்கிக்கொண்டிருப்பார்கள்.

இலக்கியவாசிப்பு கொண்ட மிகச்சிலரிடமும் இலக்கியவாதி கருத்து சொல்லலாமா என்னும் குழப்பம் உண்டு. அது விரிவான உலக இலக்கிய அறிமுகமின்மை, இலக்கியத்திற்கும் இலக்கியவாதியின் உரையாடல்களுக்கும் இடையேயான வேறுபாடு பற்றிய தெளிவின்மை ஆகியவற்றின் விளைவு. உலக இலக்கியவாதிகளில் வாழ்க்கை பற்றிய கருத்துக்களை முன்வைக்காதவர்கள் மிகமிகக்குறைவு என்பதை வாசிப்பு வழியாக அறிந்துகொள்ளலாம்.

ஓர் இலக்கியவாதி தன் படைப்பை கருத்துசொல்லப் பயன்படுத்தினால் அப்படைப்பு அழகியல்ரீதியாக குறைபாடு கொண்டது. இலக்கிய ஆக்கம் கருத்துசொல்வதற்கான ஊடகம் அல்ல. அது நிகர்வாழ்க்கையை உருவாக்கி, அதில் வாசகனை வாழச்செய்து வாசகனே தன் கருத்தை தானே கண்டடையச்செய்யும் ஊடகம்.

ஆனால் இலக்கியப் படைப்பை உருவாக்கும் எழுத்தாளன் அந்த படைப்பாக்க அனுபவம் வழியாக சில தெளிவுகளை அடைந்திருப்பான். தன் தனிவாழ்க்கை, தன் தேடல்கள், தன் கல்வி ஆகியவற்றினூடாக அவன் சில புரிதல்களை வந்தடைந்திருப்பான். அவற்றை அவன் தன் கருத்துக்களாக முன்வைப்பது மிகச்சரியானதும் தேவையானதுமான ஒரு செயல்பாடு. உலகமெங்கிலும் நிகழ்வது. அவை அறிவுரைகள் அல்ல, விவாதப்புள்ளிகள் மட்டுமே.

நான் முன்வைப்பவை நான் என் வாழ்க்கையில் கண்டடைந்த உண்மைகளை மட்டுமே. சராசரி மனிதர்களைவிட நான் சந்தித்துள்ள மனிதர்களின் எண்ணிக்கை பற்பல மடங்கு. இன்றும் சந்தித்துக்கொண்டே இருக்கிறேன். நான் சென்றுள்ள ஊர்களும் பலமடங்கு. ஒரு சராசரி மனிதனை விட நுண்ணுணர்வும் எழுத்தாளனாக எனக்கு உண்டு. எல்லா அறிவுத்துறைகள் சார்ந்தும் வாசித்துக்கொண்டே இருக்கிறேன். நான் கருத்து சொல்வது இத்தகுதிகளினாலேயே.

வாழ்க்கை பற்றி நான் சொல்பவை அகவயமான கருத்துக்களே ஒழிய ஆய்வு உண்மைகள் அல்ல. இதை எப்போதுமே சொல்லிக்கொண்டிருக்கிறேன். ஆய்வுக்கருத்துக்கள் சமூகத்தின் சிந்தனைக்கு அவசியமானவை. அவை புறவயமானவை. ஆனால் அவற்றில் அவற்றை முன்வைக்கும் ஆய்வாளரின் நோக்கமும் பார்வையும் ஊடாடி அவற்றை வடிவமைத்துமிருக்கும். நான் கூறுபவை அகவயக் கருத்துக்கள். ஆனால் இவை சமூகத்தையும் மானுட உள்ளத்தையும் கவனிப்பதன் விளைவுகள். ஆகவே புறவயமதிப்பு கொண்டவையும்கூட.

நான் எழுதிய படைப்புக்களை வாசிப்பவர்கள், என்னால் சில நுட்பங்களைச்ச் சென்றடைய முடியுமென்று உணர்ந்தவர்கள் மட்டுமே இக்கருத்துக்களைப் பொருட்படுத்துகிறார்கள். நான் பேசுவது அவர்களுக்காக மட்டுமே. மற்றவர்களுக்கு இவை ‘யாரோ ஒருவன்’ சொன்ன கருத்துக்கள். அவர்களை நானும் என்னை அவர்களும் பொருட்படுத்துவதில்லை.

இதற்கு அப்பால் ஒன்று உண்டு. உலகச் சிந்தனை வரலாறெங்கும் ஒன்றைக் காணலாம். இலக்கியவாதிகளால் தத்துவங்களை மிகச்சிறப்பாக எடுத்துரைக்க முடியும். தத்துவப்பார்வையை வாழ்க்கையனுபவங்களுடன் இணைக்கவும் சரியான சொல்லாட்சிகளை அளிக்கவும் அவர்களால் இயலும். முன்னோடியான தத்துவஞானி ஒருவரின்  வழியை தொடரும் இலக்கியவாதி அம்முன்னோடியை மிகச்சிறப்பாக முன்வைக்கக்கூடும்.

தாமஸ் அக்வினாஸின் தத்துவம் தாந்தேயால்தான் நிறுவப்பட்டது. வால்டேரும் ரூஸோவும் முன்வைத்த ஜனநாயகக் கருத்துக்கள் விக்டர் யூகோவால்தான் நிலைகொண்டன. ஷோப்பனோவரைவிட அவரை அறிய தஸ்தயேவ்ஸ்கியே உகந்தவர். இது உலக இலக்கியமரபிலுள்ள ஒரு அரிய நிகழ்வுப்போக்கு.

நான் ஒரு சிந்தனை மரபைச் சேர்ந்தவன். அதை தெளிவான மொழியில் வாழ்வனுபவம் சார்ந்து முன்வைப்பவன். அதுவும் என் தகுதி. இத்தகுதிகள் எனக்கிருப்பதாக நம்புபவர்கள் மட்டும் என் கருத்துக்களை எண்ணிப்பார்த்தால் போதும்

ஜெ

எழுத்தாளன் வாழ்க்கை பற்றி அறிவுரைக்கலாமா?

எழுத்தாளன் வாழ்க்கை பற்றிஅறிவுரைக்கலாமா? -2

அறிவுரைத்தல் பற்றி மீண்டும்

எழுத்தாளனின் பார்வை

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 11, 2021 10:35

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.