Jeyamohan's Blog, page 886

November 8, 2021

ப.சரவணனுக்கு விருது

ஆய்வாளர் ப.சரவணன்

அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர்  வா.செ.குழந்தைசாமி நினைவாக வழங்கப்படும் தமிழ் மேம்பாட்டு அறக்கட்டளை விருது இவ்வாண்டு ஆய்வாளர் ப.சரவணனுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆய்வாளருக்குரிய அடிப்படையான தகுதியான சார்புநிலைகளற்ற பார்வை கொண்டவர்.புறவயமான ஆய்வுமுறைமையை சமரசமின்றி கைக்கொள்பவராகையால் முற்றிலும் நம்பகமானவை ப.சரவணனின் ஆய்வுகள்.தமிழ் ஆய்வுப்புலத்தில் மிக அரிய ஒரு பண்பு இது. அவரை மறுப்பவர்கள் கூட அவருடைய தரவுகளை நம்பி ஏற்கமுடியும் என்பதே ஓர் ஆய்வாளரின் தகுதிக்கான அளவுகோல். அத்தகைய தகுதிகொண்டவர் என இத்தலைமுறையினரில் மிகச்சிலரையே சொல்லமுடியும், சரவணன் அவரில் ஒருவர்.

வள்ளலாருக்கும் ஆறுமுக நாவலருக்கும் இடையே நடந்த அருட்பா மருட்பா விவாதத்தை விரிவான தரவுகள் வழியாக தொகுத்தளித்தவராக ஆய்வுலகில் நுழைந்தவர் சரவணன். சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவற்றுக்கான ஆய்வுப்பதிப்புகளை கொண்டுவந்தவர். உ.வே.சாமிநாதையர், சி.வை.தாமோதரம்பிள்ளை ஆகியோரின் எழுத்துக்களை ஆய்வுக்குறிப்புகளுடன் பதிப்பித்தவர்.

சரவணனுக்கு வாழ்த்துக்கள்

தலைமகனின் சொற்கள்

சிலப்பதிகாரம், ஒரு புதிய பதிப்பு

 

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 08, 2021 07:38

November 7, 2021

குடிப்பொறுக்கிகள்

யானைப்பாதையில் பாட்டில்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

நலமாக இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

கடந்த ஒரு வாரமாக வேறு எந்த வாசிப்பும் இல்லாமல் உங்கள் தளத்தில் கடந்த ஒரு மாதமாக வந்த பதிவுகளை தான் வாசித்து கொண்டிருந்தேன். வேலை காரணங்களால் வாசிப்பு குறைந்து விட்டிருந்தது. நண்பர் கதிரின் யானைப்பாதையில் பாட்டில்கள் பதிவை படித்ததும்  சமீபத்திய என் அனுபவத்தை பகிர தோன்றியது.

நீண்ட நாட்களுக்கு பின் கொல்லிமலை சென்று இருந்தேன் ஒரு நண்பருடன். அவ்வப்போது அங்கு சென்று 2, 3 நாட்கள் மலைகள் நடுவே, காட்டுக்கு அருகே இருப்பது எப்போதுமே ஒரு எழ்ச்சியான ஆன்மீக அனுபவம். சென்று கிட்ட தட்ட  ஒரு வருடம் ஆகிவிட்டதால் மிகுந்த எதிர்பார்ப்புடன் சென்றேன்.

ஆத்தூர் தாண்டி இராசிபுரம் சாலை வந்த உடனேயே பெரும் அதிர்ச்சி. சாலை இரண்டு பக்கமும் பெரும் மரங்கள் –  சாலை விரிவாக்கத்திற்காக அனைத்தும் வெட்டி போடப்பட்டிருந்தன. ஒவ்வொன்றும் 10, 15 அடியாவது சுற்று வட்டம் கொண்டது. வயிற்றெரிச்சல் ஆக இருந்தது. ஆம், சாலை அகலமாகவும், மேடு பள்ளம் இல்லாததாக இருந்தால் மகிழ்வதும், பாராட்டுவதும் நாம் தான். ஆனால் அதற்காக இத்தனை பெரும் மரஙகளை, 15, 20 வருடங்கள் வளர்ந்த்தவை வெட்டி எடுத்து தான் சாலை அமைக்க வேண்டும் என்றால் அதன் சமன் சரிதானா? என்ற கேள்வி எப்போதும் தொக்கி நிற்கிறது..  சாலை செல்ல செல்ல , இரு புறமும் இந்த பெரு மரங்கள்  வெட்டி சாய்க்கப்பட்டு கிடப்பதை பார்க்கும் போது நெஞ்சு பதைக்கிறது.. எத்தனை பறவைகளின், பூச்சிகளின் வசிப்பிடமாக இருந்திருக்கும் இவை? இனி இந்த  இடங்களில் பறவை சத்தங்கள் இல்லாமல் வரும் வெறுமையை உணர்வார்களா அங்குள்ள மக்கள்?

நான் வசிக்கும் அடுக்கு மாடி கட்டிடத்திலும் இதே நிலை. வெளிச்சுவரில் வண்ணம்  பூச வேண்டி 25 வருடங்கள் வளர்ந்த மரத்தை வெட்ட  வருத்தமே  இல்லாமல் matter of fact ஆக வேலை முடிந்தது.. பள்ளி நாட்களில் அடிக்கடி பெரும் எண்ணிக்கையில் பார்க்கும் சிட்டுக்குருவிகள் இப்போதுதான் மீண்டும் பார்க்க கேட்க ஆரம்பித்து இருந்தோம்.. இப்போது மீண்டும் மௌனம்..    civilization, வளர்ச்சி எனும் கருத்து bull dozer போல் அனைத்தையும் முழுங்கி விட்டு பெரு நடை போடுவதை எண்ணும் போது கீதையில் விஸ்வ ரூப தரிசனத்தில் வரும் கால தத்துவ விளக்கம் தான் மனதில் தோன்றுகிறது..

மலை மேல் சென்று மறுநாள் இரவு உணவிற்கு செம்மேடு எனும் ஊருக்கு இறங்கி வந்தோம். கடைகள் நிறைந்த மைய்ய இடம் இரவு 9.30 மணிக்கும் திருவிழா கோலம் போல் இருந்தது. 17, 18 வயதில் இருந்து 30 வயது வரை உள்ள அநேகமாக ஆண்கள் கூட்டம்.. குழு குழுவாக அங்கும் இங்கும் பேச்சும், கடைகளில் பொருள்கள் வாங்குவதும்… மொத்த சூழலே உடனே ஒரு ஒவ்வாமையை அளித்தது. காதில் விழுந்த பேச்சுக்கள் எல்லாம், எங்கு மது கிடைக்கும், எங்கு பார் உள்ளது, என்பதை சுற்றித்தான்.  சென்ற வருடம் வந்த பிரயாணங்களில் கூட இவ்வளவு மோசமாக இருந்த நினைவு இல்லை.

இதே கதியில் போனால் இப்போது சுற்றுலா மக்கள், “குடி” மக்கள் அதிகம் வராத, தொடாத இடமாக இருக்கும் இந்த அருமையான இடத்தின்   சீரழிவை தடுக்க முடியாது என்று நினைக்கிறேன்.

அன்புடன்

வெண்ணி

அன்புள்ள வெண்ணி,

இந்தச் சிக்கலை எப்படி எதிர்கொள்வது என்று தெரியவில்லை. எங்கள் ஓய்வுமாளிகை அமைந்திருப்பது ஈரட்டி அருவி என்னும் காட்டருவிக்கு நேர்மேலே. அது பாதுகாக்கப்பட்ட காடு. ஆகவே உள்ளே செல்ல அனுமதி இல்லை. வனத்துறை முள்வெட்டி வழிகளை எல்லாம் மூடியிருக்கிறது.

ஆனாலும் கூகிளில் அந்த இடத்தைப் பார்த்துவிட்டு எல்லா ஞாயிறன்றும் இருபது முப்பது பைக்குகள் கார்கள் வருகின்றன. அனைவரும் இளைஞர்கள். வண்டி முழுக்க குடியும் தீனியும். அங்கே பாறைகளில் அமர்ந்து குடித்து சத்தம்போட்டு சலம்பி மாலையில் சென்று சேர்கிறார்கள்.எதை கொண்டாடுகிறார்கள் என்று தெரியவில்லை. குறைந்தபட்ச நடத்தை நாகரீகமோ, அடிப்படைப் பண்புகளோ எவரிடமும் வெளிப்படுவதில்லை. உண்மையில் அவர்களுக்கு மகிழ்ச்சியாக இருப்பது என்றால் என்னவென்றே தெரியாது. அவர்கள் அறிந்த மகிழ்ச்சி இதுதான்.

எங்கள் மாளிகைக்கு முன்னாலுள்ள கல்லிருக்கைகளில் வந்தமர்ந்து குடிப்பார்கள். அது தனியார் இடம் என்று சொன்னால் முறைத்தபடி கிளம்புவார்கள். அங்கே ஆளில்லாவிட்டால் அங்கே முழுக்க உடைந்த குப்பிகள்தான் பரவிக்கிடக்கும். காகிதக்குப்பைகள், உணவுக்குப்பைகள். நான் ஒவ்வொரு முறை செல்லும்போதும் ஒரு மணிநேரம் சில்லுகளை பொறுக்கிச் சேர்க்கவேண்டியிருக்கிறது. அழகுமிக்க தாமரைக்கரை மலைப்பகுதி முழுக்க அங்கே வரும் இந்தப்பதர்களால் சீரழிக்கப்படுகிறது. அங்குள்ள மக்களில் ஒரு சதவீதம்பேர் கூட குடிப்பவர்கள் அல்ல.

நாகர்கோயிலில் என் வீட்டைச் சுற்றியிருக்கும் மலையடிவாரங்கள் ஏரிக்கரைகள் எங்குமே இன்று ஒரு நடை செல்லமுடியாது. இங்கிருந்து சென்றுவிடவேண்டும் என்று நான் முடிவெடுக்க அது முக்கியமான காரணம். அற்புதமான ஏரிக்கரைகள், வயல்வெளிகள் எங்கு பாத்தாலும்  கூடி அமர்ந்து குடிக்கும் கும்பல்கள். தரையெங்கும் உடைந்த கண்ணாடிப்புட்டிகள், காகிதக்கோப்பைக் குப்பைகள். தமிழகத்தில் குடிகாரர்கள் போதையில் உரையாடிக்கொள்வதோ, விளையாடி மகிழ்வதோ அரிதினும் அரிது. பெரும்பாலும் வாய்ச்சவடால்கள், சட்டென்று சண்டை சச்சரவு.

இன்று இந்த போக்கு எல்லையை கடந்துவிட்டிருக்கிறது. இதனால் முதன்மையாகப் பாதிக்கப்படுபவர்கள் பெண்கள். அவர்கள் வீட்டைவிட்டு வெளியே எங்கும் செல்லமுடியாத நிலை. பொதுவான சாலைகளில் நடமாடலாம். அதுவும் சிறிய ஊர்களில் அந்திக்குள் வீடுதிரும்பிவிடவேண்டும். தனியாக ஒரு நடை செல்வதெல்லாம் நினைத்தே பார்க்கமுடியாது.

இது ‘புதிய நாகரீகம்’ என்றும் ‘சுதந்திரம்’ என்றும் இதை கண்டிப்பது ‘ஒழுக்கவாதம்’ என்றும் அறிவுஜீவி என்னும் பெயரில் திரியும் கேனைகள் சொல்லும் சூழல் இங்குள்ளது. நான் உலகின் பல நாடுகளுக்குச் சென்றிருக்கிறேன். அங்கெல்லாம் குடி அவர்களின் பண்பாட்டில் ஒரு பகுதி. எங்கும் அதற்கென சில வரைமுறைகள் உண்டு. எங்கு குடிப்பது, எப்படிக் குடிப்பது என. பொது இடங்களை குடிக்குமிடமாக மாற்றிக்கொள்வதும், குப்பிகளை உடைத்து வீசுவதும், வழிப்போக்கர் அஞ்ச பூசலிடுவதும், பொதுமக்கள் நடமாட அஞ்சும் சூழலை உருவாக்குவதும் நாகரீக நாடுகளில் எதிலும் நினைத்துக்கூட பார்க்கமுடியாதவை. இங்கே சலம்பும் இதே கும்பல் சிங்கப்பூரிலோ மலேசியாவிலோ எத்தனை ஒழுங்குடன் இருக்கிறது என்பதையும் கண்டிருக்கிறேன்.

உண்மையில் இதைப் போன்ற சூழல் இருக்கும் நாடுகள் இன்று ஆப்ரிக்காவிலேயே உள்ளன. பல ஆப்ரிக்க ஊர்களில் மாலை ஆறுமணிக்கு மேல் வெளியே செல்லமுடியாது. பொதுவான சில இடங்கள் தவிர வேறெங்கும் ஆயுதங்கள் இல்லாமல், துணை இல்லாமல் செல்லமுடியாது. தமிழகமும் கேரளமும் ஏற்கனவே அந்நிலை நோக்கிச் செல்ல தொடங்கிவிட்டிருக்கின்றன. சமீபமாக கேரளம் மிக கடுமையான போலீஸ் நடவடிக்கைகளை தொடங்கியது. பொது இடங்களில் குடிப்பது, அனைத்து விடுதிகளிலும் பார் அமைப்பது எல்லாம் தடைசெய்யப்பட்டன. கத்தோலிக்க திருச்சபையின் கண்டிப்பான கோரிக்கையே காரணம். அது பயனளிக்கிறது.

நம் பண்பாட்டில், கல்வியில் இந்த ஒழுங்கை கற்பிக்கும் அமைப்புகள் எல்லாம் வலுவற்றிருக்கின்றன. இனி தற்கட்டுப்பாட்டைப் பற்றி பேசி பயனில்லை. தமிழக அரசு மிகக்கடுமையான போலீஸ் நடவடிக்கைகள் வழியாக கட்டுப்படுத்தாவிட்டால் தமிழகத்தில் பொதுவெளியில் குடிகாரப்பொறுக்கிகள் அன்றி எவரும் நடமாடமுடியாத நிலை உருவாகும்.  இன்று தமிழகப்போலீஸ் குடிப்பொறுக்கிகளை பொதுவாக தண்டிப்பதில்லை. அவர்கள் அனைவருக்கும் ஏதோ ஒரு பின்னணி ஆதரவு இருக்கும். கட்சிகள், சாதியமைப்புகள், உள்ளூர் ரவுடிகள். போலீஸ் கட்டுப்படுத்தப் பட்டிருக்கிறது. அவர்களுக்கு முழு அதிகாரம் அளிக்கப்படவேண்டும். பொது இடங்களுக்கு போலீஸ் பொறுப்பேற்கவேண்டும்.

அ. எந்நிலையிலும் எந்த பொது இடத்திலும் எவரும் அமர்ந்து குடிப்பதோ, குடிப்பொருட்களுடன் தென்படுவதோ கடுமையாகத் தண்டிக்கப்படவேண்டும். அபராதம் அல்ல, சிறைத்தண்டனையே தேவை

ஆ. குடித்தபின் வண்டிகளை ஓட்டுபவர்களை இப்போது எளிய அபராதத்துடன் விட்டுவிடுகிறார்கள். சிறைத்தண்டனை அல்லது பல ஆயிரம்ரூபாய் அபராதம் விதிக்கப்படவேண்டும்.

இவை இரண்டும் கண்டிப்பாக நடைமுறை செய்யப்படாவிட்டால் இங்கே குடிக்காதவர்கள் எல்லைவகுக்கப்பட்ட சில இடங்களுக்குள் சிறைவாழ்க்கை வாழ மற்றவர்கள் சுற்றித்திரியும் அபத்தமான சூழலே உருவாகும். குற்றம் பெருகும்போது அது அரசுமீதான கசப்பாகவே திரும்பும்

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 07, 2021 10:35

பிரதமன், கடிதம்

2018 தினமணி தீபாவளி மலரில் வந்தபோதே இக்கதையைப் படித்தவுடன் எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். பின்னர் ஜெயமோகனின் சமீபத்திய கதைகள் தொகுக்கப்பட்டு நற்றிணை வெளியீடாக “பிரதமன்” என்ற தலைப்பில் புதிதாக வெளி வந்திருக்கும் சிறுகதைத் தொகுதியில் (ஜனவரி 2019) இக்கதையினை மீண்டும் படித்துவிட்டு ஆர்வ மிகுதியில் இனியும் தாமதிக்கக் கூடாது என்று எழுதி விட்டேன்.
முழுமையான வடிவத்தில் ஒரு சிறுகதையைப் படித்த திருப்தி வேண்டுமானால் இக்கதையைக் கண்டிப்பாகப் படித்தே ஆக வேண்டும்.

சொல்லப்பட வேண்டிய கதை தன்னைத்தானே உரிய இடத்தில் துவக்கிக் கொண்டு, படிப்படியாக வளர்ந்து, உரிய காட்சி விவரணைகளோடு, அழுத்தமான சம்பவக் கோர்வைகளோடு, அர்த்தம் பொருத்தமான சம்பாஷணைகளோடு தன்னைத் தானே ஸ்திரமாய் நிறுத்திக் கொண்டு பயணித்து முற்றிலுமாகக் கனிந்து வரும்போது, தக்க இடத்தில் தன் முடிவைத் தானே தேடிக் கொண்டு நின்று விடுவது என்பதான அசலான சிறுகதைக்குரிய இலக்கணம், அந்த நிறைவு இக்கதையைப் படித்து முடித்தபோது எனக்கு ஏற்பட்டது.

இளம் பிராயத்திலிருந்து நம்மின் மொத்த வாழ்க்கையினைப் படிப்படியாக நினைவுக்குக் கொண்டு வந்து இன்றைய நாள் வரை கொண்டு நிறுத்தி, அதில் வேண்டாதவைகளையெல்லாம் கழித்து, வெட்டி, நறுக்கி, காரண காரியத் தொடர்பற்றவைகளையெல்லாம் ஒதுக்கி, அர்த்தமுள்ள சாராம்சத்தை மட்டும் கவனமாகத் தொகுத்தோமானால் அது நம் வாரிசுகளுக்கு அல்லது நம்மோடு வாழ்ந்தவர்களுக்கு, உடன் வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு சுகமான நினைவுகளாகவோ, நம்மை நினைத்துப் பெருமைப்படும்படியாகவோ அல்லது பெரும் வழிகாட்டியாகவோ அமையுமானால் அது எத்தனை அர்த்தபூர்வமானதாக இருக்கும்? அப்படி ஒரு அடையாள வாழ்க்கையை எத்தனை பேர் வாழ்ந்திருக்கிறார்கள் இங்கே?
அப்படி நம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் விதத்தில் ஒரு சிலரையேனும் அல்லது ஒருவரையேனும் ஈர்த்திருந்தோமானால் அதுவே நாம் வாழ்ந்த வாழ்க்கையின் அர்த்தபூர்வ வரலாறு எனக் கொள்ளலாம்.

கதையில் ஆனந்தியின் அப்பா ஸ்ரீராம் அப்படியான ஒரு அடையாளமாய் அமைந்து அவளுக்குள் நிலை பெற்று விடுகிறார். பெண் குழந்தைகளுக்கு அப்பாவின்பால் பெரிய ஈர்ப்பு இருக்கும். இளம் பிராயத்திலிருந்து மனதில் சித்திரமாய்ப் படிந்து போன அப்பா, ஆனந்தியின் வயதான காலத்தில் அல்ஷைமர் நோய் தாக்கியிருந்த நிலையிலும், அவளை விட்டு இம்மியும் அகலாது எண்ண ஓட்டங்களில் வண்ணக் கோலமிடுகிறார். அவளது நினைவுகள் என்பதே அப்பாவோடு பயணிக்கும் அன்றாட நிகழ்வுகளாகத்தான் இருக்கிறது.

ஃபிலிம் எடிட்டர் கோதண்டம் ஆனந்தியின் மகன் மாதவ்வின் அழைப்பின்பேரில் அவரைச் சந்திக்கச் செல்கிறான். பேச்சுத் துவங்கும்போதுதான் தெரிகிறது அது சினிமா வேலை சம்பந்தமாக இல்லை….வேறொரு பணி நிமித்தம் என்று.
இதுவும் சினிமா சம்பந்தப்பட்ட வேலைதான். ஆனா கொஞ்சம் வித்தியாசம். ஏற்கனவே எடுக்கப்பட்ட சினிமாக்களிலிருந்து ஒரு சினிமாவை நீங்க தயார் பண்ணனும்….என்று சொல்கிறார் அவர். புதிய ஆனால் வித்தியாசமான பணியாய் உணர்கிறான் கோதண்டம்.

தாத்தா நடிச்ச அத்தனை படங்களிலே இருந்தும் அவர் நடிச்ச காட்சிகளை மட்டும் வெட்டி ஒட்டி ஒண்ணா ஒரு சினிமா மாதிரி ஆக்கிக் கொடுக்கணும்….. – இதுதான் மாதவ் கோதண்டத்திடம் சொல்வது.

ஸ்ரீராம் மாதவ்வின் தாத்தா என்பதும், அவர் மிகப் பெரிய ஸ்டாராகப் புகழோடு இருந்த காலங்களையும், மொத்தம் 69 படங்களில் உறீரோவாக நடித்திருப்பதையும், பின்னால் மகள் ஆனந்தியின் பெயரில் சினிமாக் கம்பெனி ஆரம்பித்ததும், அதில் பதிமூன்று படங்கள் எடுத்திருப்பதும் பிறகு படிப்படியாக எல்லாவற்றையும் குறைத்துக் கொண்டதும், அம்மா தாத்தாவோட பெட் என்பது வரையும் சொல்லப் புரிந்து கொள்கிறான் கோதண்டம்.

“அம்மாவுக்கு அல்ஷைமர்ஸ்ல மூளை நியூரான்ஸ் அழிஞ்சிட்டிருக்கு…தாத்தாவோட முகம் மட்டும்தான் மூளையத் தூண்டுது. அவங்க மகிழ்ச்சியா இருக்கிறது அப்ப மட்டும்தான். மத்தபடி எப்பவுமே பதற்றம்தான். கடைசிவரைக்கும் அவங்க அந்த மகிழ்ச்சியிலேயே இருக்கட்டும்னு நினைச்சேன். ஒரு கனவை உருவாக்கி அவங்கள அதுக்குள்ள உக்கார வச்சிரணும்….”

ஆனந்தியின் இளம்பிராயத்திலிருந்தான அனைத்துப் புகைப்படங்கள் வழியாக அவர் வாழ்க்கையைத் தொகுத்துக் கொள்கிறான் கோதண்டம். மாதவ் அமெரிக்கா சென்று விட அவன் தங்கை அருணாவைச் சந்தித்து அவள் மூலம் கிடைக்கும் எல்லாப் புகைப்படங்களையும், காணொளிகளையும் காண்கிறான். அருணா நிறைய விபரங்களைக் கூறுகிறாள். குறிப்பாக…

தாத்தா செத்துப் போன பிறகுதான் அம்மா அவரோட சினிமாக்களைப் பார்க்க ஆரம்பிச்சாங்க…தினம் ஒரு படம்…எவ்வளவு வேலை இருந்தாலும் பார்த்திடுவாங்க…ரெண்டு மாசத்துலே எல்லாம் முடிஞ்சி போனவுடனே திரும்பவும் ஒரு சுத்து…. வருஷத்துல எல்லாப் படத்தையும் ஆறு வாட்டி பார்த்திருவாங்க…அப்டியே முப்பது வருஷம்…எல்லாப் படமும் அம்மாவுக்கு ஒண்ணுதான். கண்ணு மட்டும் மின்னிட்டே இருக்கும்….ஆச்சர்யம் என்னன்னா படத்தைப் பத்தியோ, தாத்தா பத்தியோ அம்மா ஒரு வார்த்தை கூடச் சொல்றதில்லே….என்னதான் நினைக்கிறாங்கன்னே தெரியாது….கோயில், குளம் எதிலுமே ஆர்வமில்லே. சினிமா பாக்கறது…இல்லன்னா பால்கனியிலே உட்கார்ந்திருக்கிறது….பதினேழு வருஷம் கிட்டத்தட்ட…அப்பவே அல்ஷைமர் ஆரம்பிச்சிருக்குன்னு மாதவ் சொல்றான்….

அந்த சினிமாவை எப்படி வடிவமைப்பது என்று திட்டமிடத் தொடங்குகிறான் கோதண்டம். ஒவ்வொரு படத்தின் காட்சிகளை வெட்டி எடுத்து, அடிக்குறிப்பிட்டுக் கொடுக்கலாமா என்று யோசனை போகிறது. ஆனால் ஆனந்திக்குத் தேவையானது அதுவல்லவே என்று தோன்றுகிறது. அவர்களை மீண்டும் ஒரு முறை சந்தித்த வேளையில் ஸ்ரீராமின் குரலை பெரும்பாலும் அணைத்து விட்டே அவர்கள் படம் பார்ப்பதைப் பார்த்து வியக்கிறான். அவன் யோசனை பலமடைகிறது. எப்படித் தொகுத்தால் சிறப்படையும்? காட்சிகளாலேயே ஒழுக்கும், பொருளும் பெற வேண்டும். பலவாறு யோசித்து காட்சிச் சட்டகங்களால் ஆன இரண்டாயிரம் நிமிடப் படம் ஒன்றைத் தயாரித்து உதவியாளன் மகேஷிடம் காண்பிக்க, அவன் அறவே மறுத்துவிடுகிறான் அதை. கண்டமேனிக்கு வெட்டி ஒட்டி இருக்குதே சார்…அர்த்தமேயில்லை…என்று விடுகிறான்.

மீண்டும் மீண்டும் காட்சிகளை வெட்டி, மாற்றி மாற்றி அடுக்கி ஒவ்வொரு நாளும் ஒரு புதிய படமாக அது உருப்பெற்றுக் கொண்டிருக்கிறது. ஒன்றை மட்டும் அப்போது துல்லியமாய் உணர்கிறான். எத்தனை காட்சிகளை மாற்றினாலும் ஸ்ரீராம் மட்டும் மாறுவதேயில்லை.

சார்…இது பேயோட வேலை…ஆவி…அவருதான் உங்க கையிலே புகுந்துகிட்டு இந்த வேலையைச் செஞ்சிருக்கார்….இத உதவியாளனின் பதிலாய் இருக்கிறது.
கோதண்டத்திற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. சில நாட்கள் அதைத் தொடாமல் இருக்கிறான். ஆனால் நினைவுகள் மட்டும் அதைப்பற்றியே ஓடிக்கொண்டிருந்தன.

அழித்துவிடு என்கிறான் உதவியாளனிடம். அவங்களுக்கு இந்தப் படம் பிடிக்காது என்று வேறு மகேஷ் கூறி, அழிச்சா பணம் வராது என்று பயமுறுத்துகிறான்.
இச்சமயத்தில் மாதவ் பேசுகிறான். அவனிடம் இரண்டு லட்சம் அட்வான்ஸ் வாங்கியிருப்பதை நினைத்துக் கொண்டே படம் முடிஞ்சாச்சா? என்று கேட்கும் மாதவ்விடம் முடிந்து விட்டது என்று சொல்லி விடுகிறான். வீட்டுல Nஉறாம் தியேட்டர் ரெடி பண்ணியிருப்பதைச் சொல்கிறான். இதையே போட்டுக் காட்டிவிடுவது என்று முடிவு செய்து விடுகிறான் கோதண்டம்.

டி.வி. ரிப்பேர் செய்யும் மெக்கானிக் என்ற வகையிலேயே கோதண்டத்தை அறிந்திருக்கும் ஆனந்தி, டி.விய ரிப்பேர் செய்தாச்சா? என்று கேட்க, ஆச்சு என்றும் பாருங்க என்றும் படத்தைப் போட்டுக் காண்பிக்கிறான் கோதண்டம்.
ஆனந்தியின் உடல் அதிர்கிறது. கைகளைக் கும்பிடுவதுபோல் நெஞ்சோடு சேர்த்து அணைத்துப் பார்த்துக் கொண்டேயிருக்கிறாள். கண்கள் மின்னிக்கொண்டேயிருக்கின்றன. திரையில் ஸ்ரீராம் நிகழ்ந்து கொண்டிருக்கிறார். ஆனால் ஒரு அதிசயம்…திரையில் வேறு எவருமே இல்லை.

இது நான் பார்த்த படமில்லையே…!அதிர்கிறான் கோதண்டம். அவனும் முழுமையாக ஈடுபடுகிறான். அறைக்குள் ஓசையே இல்லாமல் ஒளி மட்டும். அலை ததும்பிக் கொண்டிருந்தது. ஐந்தாறு மணி நேரங்கள் கடக்கின்றன. ஆனந்தி சக்கர நாற்காலியிலிருந்து எழுந்தபோது வியப்பில்லா விழிகளுடன் நோக்குகிறான். கைகளை விரித்தபடி திரையை நோக்கி ஓடுகிறாள் ஆனந்தி. ஸ்ரீராம் துயர் கனிந்த சிரிப்புடன் அவளை நோக்கிக் கைகளை விரித்து அழைக்கிறார். அவள் ஒரு நடை பழகும் குழந்தை போலவும், அவர் ஒரு பயிற்றுவிக்கும் தந்தை போலவும், ஆனந்தியைப் பற்றி இடுப்பில் ஏற்றிக் கொள்கிறார். குட்டை ஃபிராக்குகளுடன் அவள் கால்களை உதைத்துச் சிரிக்கிறாள். அவள் ஆடை பறக்க வட்டமாகச் சுழற்றித் தூக்கி தோளில் வைத்துக் கொண்டு நடக்கிறார். கடல் அலையடித்துக் கொண்டிருந்தது. அவர்களின் காலடிகளை அலைகள் அழிக்கின்றன. சக்கர நாற்காலி வெறுமையாக ஒளியிலாடி அமர்ந்திருக்கிறது.

ஞாபகங்கள் மங்க மங்க….தந்தையைப் பற்றியதான அவள் மனச் சித்திரம் இளம் பிராயத்தின் அச்சு அசலாகத் தெளிவடைந்திருப்பதை உணர முடிகிறது. படிக்கும் வாசக மனம் ஆதிர்ச்சியும் ஆனந்தமும் கொண்டு நிறைந்து பொங்கி வழிகிறது. எண்ண அடுக்குகளின் ஒருங்கிணைப்பில் அந்தப் பால்ய காலப் பெரு வெளியில், பாசமும் நேசமும் மிக்க தந்தையின் அன்புச் சிறைக்குள் சிக்கிக் கிடந்த வசந்த காலங்கள் மட்டுமே அவள் நினைகளுக்குள் மிஞ்சியிருக்கின்றன. அர்த்தமுள்ள சாராம்சமாக ஆனந்திக்குள் படிந்திருக்கும் அந்த இனிய நினைவுகள் நம்மை மெய் சிலிர்க்க வைக்கின்றன.

இத்தனை அர்ப்பணிப்பு உணர்வோடு எழுதப்பட்ட இப்படைப்பு முழுமையான மன நிறைவைத் தரும் அதே நேரத்தில் ஜெயமோகன் அவர்களை நம் சிந்தையில் மதிப்பு மிக்க ஒரு ஸ்தானத்தை ஏற்படுத்திப் பெருமை கொள்ள வைக்கிறது.

உஷாதீபன்

***

குமரித்துறைவி வான் நெசவு இரு கலைஞர்கள் பொலிவதும் கலைவதும் தங்கப்புத்தகம் “ஆனையில்லா” முதுநாவல் ஐந்து நெருப்பு மலைபூத்தபோது தேவி எழுகதிர் அந்த முகில் இந்த முகில் உடையாள் கதாநாயகி ஆயிரம் ஊற்றுகள் பத்துலட்சம் காலடிகள் ஞானி குகை சாதி – ஓர் உரையாடல் வணிக இலக்கியம் வாசிப்பின் வழிகள் இலக்கியத்தின் நுழைவாயிலில் ஒருபாலுறவு இன்றைய காந்தி சங்கச்சித்திரங்கள் ஈராறுகால் கொண்டெழும் புரவி நத்தையின் பாதை

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 07, 2021 10:32

மஞ்சள் கதைகள் – கடிதம்

அழகிகள், மர்மங்கள், கற்பனைகள்

அன்புள்ள ஜெ

விஜய‌ஸ்ரீ பற்றிய உங்கள் கட்டுரையை வாசித்துக்கொண்டிருந்தபோது, இந்த இதழ் வந்தது. இப்படி ஓர் இதழ் வந்திருப்பது இப்போதுதான் தெரிந்தது.

கனகலதா

சிங்கப்பூர்

அன்புள்ள லதா,

தமிழ் இதழியல் வரலாற்றிலும், சினிமா வரலாற்றிலும் மறக்கமுடியாத ஒரு பெயர் இந்துநேசன். இது ஒரு மஞ்சள்பத்திர்கை. இந்த இதழின் ஆசிரியராக இருந்த லட்சுமிகாந்தன் என்பவரை என்.எஸ்.கிருஷ்ணன், எம்.கே.தியாகராஜ பாகவதர் ஆகிய இருவரும் சேர்ந்து ஆள்வைத்து கொலைசெய்துவிட்டதாக வழக்கு. அவர்கள் சிறைசென்றனர். லண்டன் பிரிவி கௌன்ஸில் நீதிமன்றத்தால் விடுதலைசெய்யப்பட்டனர்.

லட்சுமிகாந்தன் கொலைவழக்கு என அது புகழ்பெற்றது. பலர் எழுதியிருக்கிறார்கள். ஆங்கிலத்தில் ராண்டார்கை எழுதிய கட்டுரைகளும் தமிழில் டி.என்.வி.பாலகிருஷ்ணன் எழுதிய எம்.கே.டி.பாகவதர் இசையும் வாழ்க்கையும் என்னும் நூலும் முக்கியமானவை

இந்துநேசன் என்பது லட்சுமிகாந்தனால் வாங்கப்பட்ட ஒரு பத்திரிகை. அதன் காப்புரிமை போன பிறகு பலர் அதைப் பயன்படுத்திக்கொண்டார்கள். அறுபதுகளில் அப்பெயரில் வெளியான இன்னொரு இதழ் நீங்கள் கொடுத்திருப்பது. எண்பதுகளில் இன்னொரு இந்துநேசன் வெளிவந்ததை நான் கண்டிருக்கிறேன்

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 07, 2021 10:32

அசோகமித்திரன் ஆவணப்படம்

அசோகமித்திரன் பற்றிய ஆவணப்படம். சாகித்ய அக்காதமி வெளியீடு. அம்ஷன்குமார் இயக்கியது. அசோகமித்திரனின் உடல்மொழியும் குரலும் இந்த ஆவணப்படத்தை மிக அணுக்கமாக ஆக்குகின்றன.

விஷ்ணுபுரம் ஆவணப்படங்கள்

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 07, 2021 10:31

இந்துஞான மரபில் ஆறுதரிசனங்கள்- குருசாமி கிஷோர்

இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் கிண்டில் வாங்க இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் வாங்க இந்து ஞான மரபு என்பது வெறும் இறை வழிபாட்டையும் சடங்குகளையும் மட்டும் கொண்டதல்ல அவை பல தத்துவங்களையும் தரிசங்களையும் உள்ளடக்கியவை. நமது இந்து மரபில் வேதா காலம் முதல் தற்போது வரை அதன் தேடல் எவ்வாறு இப்பிரபஞ்சமும் அதன் உயிர்களும் தோன்றின என்பதே. இப்பிரபஞ்ச தோற்றத்தை வகுத்துக்கொள்ள பல தத்துவங்கள் உருவாகின, அந்த தத்துவங்கள் விரிவடைந்து தரிசனங்களா மாறின, தரிசனங்கள் ஒரு எல்லையில் இறைவழிபாடாக மாறி மதங்களானது. இப்படி இந்திய ஞான மரபில் உருவான மதங்கள்தான் ஷண்மதம், சமணம் மற்றும் பௌத்தமாகும்.முதலில் தத்துவம் என்பது ஒரு குறிப்பிட்ட துறையில் உருவாகுகின்ற தர்க்களின் தொகுப்பாகும். தர்க்கரீதியாலான சிந்தனைகளின் தொகுப்பே தத்துவமாகும்.ஒரு தத்துவ சிந்தனையில் உருவான கருத்து சித்தாந்தமாக விரிவடைந்து, பிற அறிவு துறைகளில் உள்ளவற்றையும் விளக்க முற்படுவதே தரிசனமாகும். இந்த தரிசனங்கள் இந்து மெய் ஞானங்களின் வரிசையேயாகும்.இந்து ஞான மரபு என்பது தரிசனங்கள் தனது கற்பனை மற்றும் உள்ளுணர்வால் விரிவடைந்து இறை வழிபாடாக மாறும்போது மதங்களா உருவாகுகின்றன. அப்படி இந்து ஞான மரபில் உதித்தவை சைவம், வைணவம், சாக்தேயம், கௌமாரம், காணபத்யம், சௌரம் ஆகியவையாகும்.உதாரணத்துக்கு வைசேஷிக தரிசனம் அணுக்களின் சேர்க்கை அல்லது இணைவுகளின் மூலமே இப்பிரபஞ்சம் தோன்றியது என்கிறது. இப்போது அணு சேர்க்கை நடைபெற காரணம் என்ன? அணுக்கள் இணைந்து பிரபஞ்சம் உருவாக காரணமான உந்து சக்தி எது? என்று கேள்விகள் எழும்போது. அதை வைசேஷிகம் கண்ணனுக்கு தெரியாத உந்து சக்தி என்கிறது. அந்த பிரபஞ்ச உந்து சக்தியை பெண் தெய்வமாக பாவித்து வழிபடுவது சாக்தேயம் ஆகும். அதேபோல் அந்த சக்தியை பிள்ளையார் வடிவமாக பார்ப்பது காணபத்யம் ஆகும். இவ்வாறே தரிசனங்கள் கற்பனைகளால் விரிவடைந்து வழிபாட்டு மாதங்களாக உருவாகுகின்றன.அப்படி மதங்களாக வளராத தரிசனங்களை தரிசனம் என கூறுகிறோம். நமது இந்து ஞான மரபில் அவ்வாறு வளராத ஆறு தரிசனங்கள் காலத்தால் மிக பழையதும் அடிப்படையானதும் ஆகும். அவைசாங்கியம்யோகம்வைசேஷிகம்நியாயம்பூர்வமீமாம்சம்வேதாந்தம்என்பவையாகும்.சாங்கியம் | ஆதி இயற்கை வாதம்இந்து ஞான தரிசனங்கள் ஆன்மிக தத்துவங்களையும் சரிபாதி பௌதிக தத்துவங்களையும் கொண்டவையாகும். இந்து ஞான தரிசனங்களில் முதன்மையானதாகவும் காலத்தால் முற்பட்டதாகவும் கருதப்படுவது சாங்கியமாகும். இது முழுக்க முழுக்க பௌதிக(Materialism) அடிப்படையிலான தரிசனமாகும். இந்த தரிசனமானது கபிலரால் தொகுக்கப்பட்டது மற்றும் இதன் காலகட்டம் உபநிஷ காலகட்டத்தை சார்ந்தது. இது ஆதி இயற்கை வாதம் அல்லது சடவாத தரிசனம் என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவில் சாங்கிய மரபுக்கு பின் தோன்றிய ஞான மரபுகளும், பௌத்தம் மற்றும் சமணம் போன்ற மதங்களும் மற்றும் வேதாந்தங்களும் சாங்கிய தரிசனத்தோடு விவாதித்தே தம்மை புதுப்பித்து கொண்டன.ஒவ்வரு தத்துவமும் ஒரு குறிப்பிட்ட விஷயத்தை(அல்லது காரிய காரணத்தை) தர்க்கரீதியாக பல தளங்களில் விவாதித்து தரிசனமாக மாறுகிறது. வேதங்கள் இப்பிரபஞ்ச தோற்றத்திற்கும் இருப்பிற்கும் பிரம்மமே காரணம் என்று கூறுகிறது. ஆனால் சாங்கியம் வேதங்களின் பிரம்ம இருப்பை மறுத்து இப்பிரபஞ்சம் பருப்பொருள்களில் இருந்து தோன்றின என்று தர்க்கரீதியாக விவாதிக்கின்றன.மனிதன் அகத்துயரம், புறத்துயரம் மற்றும் இயற்கை நியதி என்னும் துயரம் என்னும் மூவகை துயரங்களால் ஆட்கொள்கிறான் மற்றும் இத்துயரங்களை மனிதன் எதிர்கொண்டே ஆக வேண்டும் என்ற நிலை உள்ளது. எனவே இவ்வகை துயரங்களின் காரிய காரணத்தை ஒருவன் சாங்கிய அடிப்படையில் புரிந்துகொண்டால் அவன் அச்சம் அடையாமல் அத்துயரங்களில் இருந்து விடுவித்து கொள்ளலாம் என்பதே இதன் அடிப்படையாகும்.சாங்கியதின் அடிப்படை மூன்று கோட்பாடுகள்,பிரபஞ்சம் பருப்பொருளால் ஆனது.பிரபஞ்சத்தின் மூல காரணமும் பருப்பொருளேயாகும்.முக்குணங்கள் சமநிலையை இழக்கும் போது ஆதி இயற்கை உருவாகுகிறது.பருப்பொருள்களில் இருந்து தோன்றியதே இப்பிரபஞ்சம் என்பது சாங்கியதின் முதல் கோட்பாடாகும். இப்போது உள்ள அறிவியலும், மார்க்சிசமும் உலகம் பருப்பொருளால் ஆனது என்றே கூறுகிறது. நாம் இன்று காணும் இயற்கை(உலகம்) மற்றும் சுற்றுசூழல்கள் எல்லாம் பருப்பொருள்களாலானது என்கிறது.அதேபோன்று நிகழும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் காரிய காரணம் உண்டு என்கிறது சாங்கியம். காரிய காரண அடிப்படையில் நாம் இப்போது காணும் உலகம் அல்லது இயற்கை காரியம் என்றால். இதன் மூல காரணம் எது என்று விவாதிக்கும் போது. சாங்கியம் ஆதி இயற்கை என்னும் பருப்பொருளே என்கிறது. அதேசமயம் கடவுள், பிரம்மம், பரம்பொருள், ஆத்மா போன்றவற்றை சாங்கியம் ஏற்பதில்லை. சாங்கியம் உருவற்ற பிரம்மம் என்றதிலிருந்து எவ்வாறு பருப்பொருளாலான இயற்கை(அல்லது பிரபஞ்சம்) தோன்ற முடியும் என்று வேதத்துடனான தனது கேள்வியை முன்வைக்கிறது.அதேபோன்று ஆதி இயற்கையானது முக்குணங்கள் சமநிலையை இழந்து எதிர் எதிர் வினை புரியும்போது நாம் காணும் பிரபஞ்சம் தோன்றுகிறது என்கிறது சாங்கியம். அம்மூன்று முக்குணங்களின் தொடர் எதிர்வினையே இப்பிரபஞ்சத்தை இயக்குகிறது. மேற்கத்திய மார்க்சிச சிந்தனையில் materialistic dialectics என்பார்கள், அதாவுது இரண்டு பொருட்களின் முரணியக்கத்தால் புதிய பொருட்கள் உருவாகுகின்றன அது சமூகத்தை இயக்க நிலையில் வைக்கிறது. அதைத்தான் சாங்கியமும் முக்குணங்களின் முரணியக்கம் என்கிறது மற்றும் இந்த முரணியக்கமே பிரபஞ்சத்தை இயக்குகிறது. அந்த முக்குணங்களின் குணங்களை சத்துவகுணம்(Positive Movement), தமோகுணம்(Negative Movement), ரஜோகுணம்(Neutral Movement) என்கிறது சாங்கியம்.சாங்கியத்தின்படி ஆதி இயற்கையானது படிப்படியாக பரிணாம் அடைந்து நாம் காணும் இயற்கையாக(உலகம்) மாறியுள்ளது. இயற்கையை பிரகிருதி என்று வரையறுக்கிறது சாங்கியம். ஆதி இயற்கையில் இருந்து எப்படி உயிரினங்கள் படிப்படியாக தோன்றின என்பதை பிரகிருதி, மகத், அகங்காரம், மனம், பஞ்ச ஞானேந்திரியங்கள்(காது, தோல், கண், மூக்கு, நாக்கு), பஞ்ச கர்மேந்திரியங்கள்(வாக்கு, கை, கால், மலத்துவாரம், சிறுநீர் குழாய்), ஐந்து தன்மாத்திரைகள்(ஒலி, தொடுகை, நிறம், சுவை, மணம்), ஐந்தாற்றல்கள்(நிலம், நீர், வானம், நெருப்பு, காற்று) என்ற 24 தத்துவங்களின் மூலம் சாங்கியம் விளக்குகிறது.சாங்கிய தத்துவத்தில் இரு முக்கிய கேள்விகள் எழுந்தன ஒன்று இப்பிரபஞ்சம் தோன்றியதற்கான காரணம் என்ன ? காரியம் என்ன ? காரணம் இல்லை என்றால் தத்துவம் எதற்க்கு ? இரண்டு, பருப்பொருளால் ஆனா மனித உடலில் எவ்வாறு அறிவு, மணம், உயிர் போன்ற குணங்கள் குடியேறின? இந்த கேள்விக்கு பதிலாக புருஷன்(பரிபூர்ண சாட்சி) என்னும் தத்துவத்தை சாங்கியர்கள் உருவாக்கினார். இங்கு புருஷன் என்பது பிறப்பும் இறப்பும் இல்லாதவன், உருவம் இல்லாதவன், எல்லா இடத்திலும் இருப்பவன் ஆதி இயற்கை போலவே புருசனும் முழுமுதற் பொருள். அதுஒரு பரிபூரண மௌனசாட்சி மட்டுமே. இது கிட்டத்தட்ட ஆன்மா போன்றுதான். ஜடத்தை அறிவதே புருஷனின் வேலை அவன் இருத்தலுக்கும் அதுவே காரணம். பிரபஞ்ச தோற்றம், ஜட உடலில் எவ்வாறு மனம், அறிவு, உயிர் உருவாகின என்பதற்கான பதிலாகவும், காரணமாகவும், காரியமாகவும் புருஷனை முன்வைத்தார்கள் சாங்கியர்கள்.பிற்கால வேதாந்தங்கள், குறிப்பாக ஆதி சங்கரரின் அத்வைதம் தர்க்க பூர்வமாக விவாதித்து சாங்கியத்தை மறுக்கிறது. சங்கரர் பின்வரும் கேள்விகளை சாங்கியத்தை நோக்கி முன்வைக்கிறார்.ஒவ்வொன்றுக்கும் காரிய காரணம் உண்டெனில் இப்பிரபஞ்சம் தோன்றியதற்கான காரணம் என்ன ? காரியம் என்ன ?உயிரற்ற ஜட பொருளிலில் இருந்து எவ்வாறு உயிருள்ள ஜட பொருள் உருவாக முடியும்? பருப்பொருளால் ஆனா மனித உடலில் எவ்வாறு அறிவு, மணம், உயிர் போன்ற குணங்கள் குடியேறின?இந்த உயிர் எங்கிருந்து வந்தது எங்கு போகிறது?முக்குணங்கள் சமநிலையை இழக்க காரணம் எது ? அது எப்போது சமநிலையை அடையும்?இவற்றுக்கு பதிலாக உயிர், பிரபஞ்ச தோற்றத்துக்கு காரணமாக பிரமத்தை தனது அத்வைத கோட்ப்பாட்டில் முன் வைக்கிறார் சங்கரர். ஜீவாதாமாவும் பரமாத்மாவும் ஒன்று என்றும் மற்றவை எல்லாம் மாயை என்று தனது அத்வைத தத்துவத்தில் கூறுகிறார்.இப்போது உள்ள நூல்களில் சாங்கியத்தை முழுவதுமாக உள்வாங்கிய நூல் பகவத் கீதையே ஆகும். அது சாங்கியதின் சாரங்களை எடுத்து கொண்டு ஆன்மிக தத்துவங்களுக்கு ஏற்றபடி மாற்றிக்கொண்டது. கீதை சாங்கியதின் ஆதி இயற்கை அல்லது பிரபஞ்ச தோற்றத்திற்கு மூல காரணமாக பரம்பொருளை முன்வைக்கிறது. அதே சமயம் புருசனுக்கு பதில் அது ஆத்மாவை முன்வைக்கிறது. அதேசமயம் கீதை இறைக்கு பதில் கடமையே(அல்லது செயலே) முக்கியம் என்ற கர்ம ஞானத்தை முன்வைக்கிறது.யோகம்இப்போது எல்லாரும் அறிந்த யோகா பயிற்சிகள் கூட இந்த யோகா தரிசனத்தில் இருந்து வந்ததுதான். இதுவும் பௌதிக தரிசனமாகும். இந்த யோகா தரிசனமானது சாங்கியதின் கிளையாக பரிணமித்து தனி தரிசனமாக மாறியது. யோகம் சாங்கியதின் மூன்று அடிப்படை கொள்கைகளையும் ஏற்றுக்கொண்டது(பிரபஞ்சம் பருப்பொருளால் ஆனது, பிரபஞ்சத்தின் மூல காரணமும் பருப்பொருளேயாகும், முக்குணங்கள் சமநிலையை இழக்கும் போது ஆதி இயற்கை உருவாகுகிறது). இதனால் இதை சாங்கியதின் உப தரிசனம் என்றும் அழைப்பார்கள்.முக்குணங்களில் பிளவு உண்டானதால்(சம நிலை இழந்ததால்) ஆதி இயற்கை(பிரபஞ்சம்) தோன்றியது. பிளவுபடாத(சமநிலையில் உள்ள) ஆதி இயற்கையை எப்படி நம்மால் அறிய முடியும் ? என்ற கேள்விக்கு சாங்கியம் பதில் அளிக்க முயன்ற போதுதான் யோகம் என்னும் தரிசனம் உருவாகியது. நமது மனமானது காமம், குரோதம் மற்றும் மோகம் என்னும் தீய குணங்களால் மூடப்பட்டுள்ளது. இந்த தீய குணங்களை விடுத்து யோகா முறைகளால் மனதை தூய நிலைக்கு எடுத்து சென்றால் நாம் ஆதி இயற்கையை தரிசிக்க முடியும். யோகம் என்றாலே தூய அறிதல் என்று பொருள்.ஐம்புலன்களும் மனமும் செயலற்றிருக்க அறிவு நிலைத்து நிற்கும் நிலையே யோகம் ஆகும். இந்த யோகா தரிசனத்தை தர்க்கரீதியாக விவாதித்து தொகுத்தவர் பதஞ்சலி ரிஷியாகும் மற்றும் இவர் கிமு இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்தவராக இருக்கலாம்.சாங்கியம் கூறும் 24 தத்துவங்களையும் யோகம் ஏற்கிறது. அதுமட்டும் அல்லாமல் யோகம் சாங்கியத்தின் புருஷ தத்துவத்தையும் ஏற்கிறது. மனிதன் காமம் குரோதம் மோகம் போன்ற தீய குணங்களால் இயற்கைக்கும் புருஷனுக்கும்(மனிதர்கள்) தொடர்பு இருப்பதாக ஒரு மாயை(அறியாமை) ஏற்படுகிறது. இந்த அறியாமை ஒருவனுக்கு அகன்றால் புருஷனுக்கும் இயற்கைக்கும் உறவு இல்லாமல் தன் தூய நிலையை அறிவான். இந்த நிலையே முக்தி என்று பௌதிக அடிப்படையிலான யோகா தரிசனம் சொல்கிறது.ஐம்புலன்களையும் மனதையும் அடக்கி ஒருவன் தன் தூய நிலைக்கு போக பின்வரும் யோகத்தின் எட்டு படிநிலைகளை கடைபிடிக்க சொல்கிறது.யமம் (அடக்கம்)நியமம் (கட்டுப்பாடு)ஆசனம் (யோக முறையில் உட்காருதல்)பிராணாயாமம் (மூச்சைக் கட்டுப்படுத்தல்)பிரத்தியாகாரம் (புலனறிவை மறக்கடித்தல்)தாரணை (கவன ஈர்ப்பு)தியானம் (தியானம்)சமாதி (சமாதி)இதில் யமம் என்பது அகிம்சை, சத்தியம், அஸ்தேயம், பிரம்மசரியம், அபரிகிரகம் என்னும் ஐயம் பெரும் விரதங்களாகும்.நியமம் என்பது சௌசம்(உடலையும் மனதையும் சுத்தப்படுத்துதல்),தபஸ்(பிடிவாதமாக நெறிகளை பின்பற்றுதல்), ஸந்தோஷம்(சகஜமான இனிய மனநிலை), ஸ்வாத்யாயம்(கல்வி) போன்றவையாகும்.தூய உடல் மற்றும் தூய மனம் ஆகியவை யோகத்திற்கு அவசியம். இதுவே சீரான இயக்கம் உடைய உடல் பயிற்சின் முதல் தேவையாகும். இதையே யமம் மற்றும் நியமம் வலியுறுத்துகிறது.மூன்றாவது படிநிலையான ஆசனம் என்பது சௌகரியமான ஆசன இருப்பையே கூறுகிறது.நான்காவது படிநிலையான பிராணாயாமம் சுவாசத்தை சீராக விடுவதாகும். யோகாசனம் மூலம் வெளியுறுப்புகளையும் பிராணாயாமம் மூலம் உள்ளுறுப்புகளை துல்லியமாக வைத்திருப்பதை யோகம் வலியுறுத்துகிறது.அடுத்த படிநிலையான பிரத்தியாகாரம் என்பது புலன்களை(கண், காது, மூக்கு, சருமம், நாக்கு) மூடிவிட்டு மனதை நோக்கி நமது கவனத்தை குவிப்பதாகும். புலன்களின் செயல்களில் இருந்து விடுபட்டு ஆழ்ந்த நிலைக்கு செல்வது இதன் அடுத்தகட்டமாகும்.அடுத்த ஆறாவது படிநிலையில் தாரணை என்பது மன செயல்பாட்டினை ஒரு புள்ளியை நோக்கி குவிப்பதாகும். பொதுவாக மனதை மந்திரத்தில் குவிப்பதே வழக்கம். ஓம், க்ரீம், ஹம் போன்ற மந்திரங்கள் யோக பயிற்சியின் போது உச்சரிப்பதை காணலாம். இது மனதை ஒரு புள்ளியில் குவிக்க உதவும்.ஏழாவது தியானம் என்பது முழு பிரக்ஞையையும் மெதுவாக குவிய வைப்பதே ஆகும்.கடைசி படிநிலை சமாதி என்பது சித்தம் அடங்கி தியானிக்கும் நிலை ஆகும். இந்த நிலையில்தான் ஒருவன் தன் தூய நிலைக்கு போய் பிரகிருதியை அறிகிறான்(ஆதி இயற்கையை தரிசிக்கிறான்). இதுவே யோக மெய்ஞான நிலையாகும்.இந்த யோக பௌதிக தரிசனத்தை பிற தத்துவங்கள் உள்வாங்கிக்கொண்டு அதை ஆன்மிக அடிப்படையிலான யோக முறையாக வளர்த்தெடுத்தன. உதாரணத்துக்கு அத்வைதம் யோகத்தின் மூலம் அறியாமையை களைந்து தூய நிலைக்கு செல்லும்போது ஒருவனுக்கு பிரம்மம் மட்டும் எஞ்சும் என்கிறது.வைசேஷிகம்அணுக்களின் சேர்க்கை அல்லது கூட்டு மூலமே இப்பிரபஞ்சமும் அதில் உள்ள எல்லா பொருட்களும் உருவாகின என்பதே வைசேஷிக தத்துவமாகும். இன்றைய நிகழ் உலகில் அணுக்கொள்கையானது அறிவியல் மூலம் நிருபிக்கப்பட்டுள்ளது. அறிவியலும் அணுக்கள் இணைவு(Nuclear Fusion) மற்றும் அணுக்கள் பிணைவு(Nuclear Fission) மூலமே பொருட்கள் உருவாகுகின்றன என்கிறது. அணுக்களின் கூட்டாக பொருட்களை பார்க்கும் பார்வை பழைய காலம் முதலே இருந்து வந்துள்ளது.கிரேக்க சிந்தனையாளர்கள் எபிகுரஸ்(கிமு 341-271), டெமாகிரிட்டஸ்(கிமு 460-380) போன்றார் அணுக்கொள்கையை பற்றி தங்களது தத்துவங்களை உருவாக்கியுள்ளனர். அதேபோன்று இந்தியா ஞான மரபிலும் வெகு காலம் முன்பே அணுக்கொள்கை பற்றிய கருத்து இருந்திருக்க வேண்டும். அதிலிருந்த இந்த தர்க்கபூர்வமான வைசேஷிக தரிசனம் உருவாகியிருக்க வேண்டும். வைசேஷிகத்தின் மூல குரு கணாதர் என்னும் ரிஷியாகும் மற்றும் இவர் கிமு ஆறாம் நூற்றாண்டிலோ அல்லது கிமு பத்தாம் நூற்றாண்டிலோ வாழ்ந்திருக்கலாம். இதுவும் சாங்கியம் போன்று பௌதிக தரிசனமாகும்.வைசேஷிகம் ஒவ்வொரு பொருட்களை பகுத்து பகுத்து பகுப்பாய்வு செய்தால் நுண் அணுக்களே இறுதியில் மிஞ்சும் என்கிறது. அதேபோன்று வைசேஷிகம் தனது தத்துவத்தை தர்மம் எது என்று விளக்கும் போது. எதிலிருந்து எல்லா விஷயங்களும் உருவாகினவோ அதுவே தர்மம் என்கிறது. அந்த தர்மத்தை அறிதல், பொருள்களை பகுப்பாய்வு செய்தல் மற்றும் பிரபஞ்ச இயக்கம் பற்றியும் தனது திரவியம்(பொருள்), குணம்(இயல்பு), கர்மம்(செயல்), சாமான்யம்(பொதுத்தன்மை), விஷேசம்(சிறப்புத்தன்மை), சமவாயம்(இணைவுத்தன்மை) என்ற ஆறு தத்துவங்கள் மூலம் வைசேஷிகம் விளக்குகிறது.பிரபஞ்சத்தை அறிந்து கொள்வதற்கு இரு வழி முறைகள் உள்ளன. அவை தொகுத்தல் மற்றும் பகுத்தல் ஆகும். தொகுத்தல் என்பது கிடைத்த ஒவ்வொன்றையும் கூட்டி இது என்ன என்று யோசித்தால். பகுத்தல் என்பது கைக்கு கிடைத்த பொருளை பகுப்பாய்வு செய்தலாகும்.வைசேஷிகமும் சாங்கியம் போன்றே பிரபஞ்சம் பொருட்களால் ஆனது என்கிறது. ஆனால் இரண்டிருக்கும் உள்ள வித்தியாசம் என்பது பிரபஞ்சத்தை பகுப்பாய்வு செய்வதில் வேறுபடுகிறது. சாங்கியமானது எல்லா பொருட்களையும் தொகுத்து நமது பிரபஞ்சம் ஆதி இயற்கையில் இருந்து தோன்றியது என்கிறது. ஆனால் வைசேஷிகம் இதற்க்கு நேர் எதிராக பொருள்களை பகுத்து பார்ப்பது போல பிரபஞ்சத்தை பகுத்தால் அணுவே மிஞ்சும் என்கிறது.இந்த நுண் அணுக்களின் சேர்க்கையில் இருந்தே நீர், நிலம் மற்றும் புற வயத்தில் நாம் பார்க்கும் பொருட்கள் எல்லாம் உருவாகி இருக்கின்றன என்கிறது வைசேஷிகம். அதேபோல் அணுக்களுக்கு நிறம், குணம், வடிவம், கனம் உண்டு என்கிறது மற்றும் அணுக்கள் இணைந்து உருவாகும் பொருட்களுக்கும் அணுக்கள் போன்றே பண்புகள் இருக்கும் என்கிறது. ஆனால் அணுக்களில் இருந்த அதே பண்புகள் பொருட்களாக பரிணமிக்கும்போது இருக்க அவசியம்மில்லை என்கிறது வைசேஷிகம்.அணுக்கள் சேர்ந்து பொருட்கள் உருவாகுவதை காரணம் காரியம் என்கிறது. வைசேஷிகம் சாங்கியத்தை போன்றே காரண காரியத்தை ஏற்கிறது. ஆனால் சாங்கியதின் காரியத்திற்குள் காரணம் ஒழிந்து இருக்கிறது என்ற கோட்பாட்டை வைசேஷிகம் மறுக்கிறது. காரியத்திற்குள் காரணம் ஒழிந்திருக்க முடியாது, காரணம் வேறு காரியம் வேறு என்கிறது வைசேஷிகம். அணுக்களின் சேர்க்கையினால் ஒரு புதிய பொருள் உருவாகுகிறது. இரு அணுக்களின் சேர்க்கை என்னும் காரணத்திலிருந்து பிறந்த புதிய பொருள்தான் காரியம் என்கிறது வைசேஷிகம்.அணுக்கள் ஏன் ஒன்றாக இணைய வேண்டும்? அணு சேர்க்கை நடைபெற காரணம் என்ன? அணுக்கள் இணைந்து பிரபஞ்சம் உருவாக காரணமான உந்து சக்தி எது? என்று கேள்விகள் எழும்போது. அதை வைசேஷிகம் கண்ணனுக்கு தெரியாத உந்து சக்தி என்கிறது.அதேபோன்று வைசேஷிகம் இப்பிரபஞ்சம் பிரம்மத்தில் இருந்து தோன்றியது எனில் நாம் காணும் பொருட்களின் தன்மையான பருத்தன்மை மற்றும் மாறும் தன்மை போன்றவை பிரமத்திற்கும் இருக்கவேண்டும். ஆனால் அருவ சக்தியான பிரம்மத்திற்கு அணுக்கள் தன்மை இருக்க வாய்ப்பில்லை. எனவே பிரம்மத்தையோ அல்லது கடவுள் இருப்பையோ வைசேஷிகம் ஏற்பதில்லை.ஆதி சங்கரர் இந்த பௌதிக வைசேஷிக தரிசனத்தை தர்க்கரீதியாக விவாதித்து உடைக்கிறார். முதல் கேள்வி, அணுக்கள் இணைந்து பிரபஞ்சம் உருவாக காரணமான உந்து சக்தி எது? இதற்க்கு சங்கரர் பதில் அளிக்கும்போது அந்த உந்து சக்தியை பிரம்மம் என்கிறார் மற்றும் அந்த பிரம்மமே எல்லாம் என்கிறார்.இரண்டாவுது கேள்வி, அணுக்களுக்கு உள்ள குணங்கள் பொருட்களாக மாறும்போது அணுக்களின் குணங்கள் மறைகிறது என்கிறது வைசேஷிகம். அப்படியென்றால் பிரம்மத்தின் குணங்கள் பிரபஞ்சமாக மாறும்போது மறைகிறது என்று வாதிட்டு பிரம்ம இருப்பை உறுதி செய்கிறார் சங்கரர். நாம் காணும் பிரபஞ்ச பொருட்கள் எல்லாமே மாயை என்றும் பிரம்மமே மெய் என்கிறார்.நியாயம்எந்த ஒரு தத்துவம் அல்லது சிந்தனைக்கும் தனக்கேயுரிய தர்க்க முறை இருக்கும் அதன் சிந்தனைகளை வகுத்து கொள்ள. அப்படி இந்திய ஞான மரபு வளர்த்து எடுத்த தர்க்கமுறைதான் நியாயம் ஆகும். நாம் தினமும் பயன்படுத்தும் நியாயம் என்ற வார்த்தை கூட இந்த நியாய தரிசனத்தில் இருந்து தோன்றியது தான். நியாயம் வைசேஷிகத்தின் உப தரிசனமாகும் மற்றும் இதுவும் பௌதீகவாத தரிசனமாகும்.பின்னர் வந்த தரிசனங்களும் நியாய தரிசனத்தை உள்வாங்கி கொண்டு தர்கரீதியில் விவாதித்து தங்களது சிந்தனைகளை வளர்த்தெடுத்தன.இந்த நியாய மரபுக்கு எதிராக வந்த வேதாந்தமும் சரி, பௌத்த மற்றும் சமண மரபுகளும் சரி நியாய தருகத்தையே கையாளுகின்றன. இதை பின்னர் பெரிய அளவில் வளர்த்தெடுத்தவர்கள் பௌத்தர்களே. நியாயத்தை இந்தியத் தர்க்கவியல்(Indian Logic) என்றும் அழைக்கலாம். இந்த நியாய தரிசனத்தை தொகுத்தவர் கௌதமர் ஆகும் மற்றும் இவர் கிமு இரண்டாம் நூற்றாண்டை சார்ந்தவராக இருக்கலாம்.பிரபஞ்சம் அணுக்களால் ஆனது என்னும் வைசேஷிக கோட்பாட்டை நியாயம் ஏற்கிறது. பிரபஞ்சத்தை பற்றிய அறிவு இல்லாமையால்தான் நாம் சமநிலை இழந்து வியப்பு, பயம், மகிழ்ச்சி மற்றும் துக்கம் போன்றவை உருவாகுகின்றன. இந்த அறியாமையை அகற்றி இப்பிரபஞ்சத்தை புரிந்து கொண்டால் சமநிலை அடையாளம். அவ்வாறு அடையும் சமநிலையை நி:ஸ்ரேயஸம் என்று கூறுகிறது.நியாயத்தை பொறுத்தவரை பிரபஞ்சம் எப்படி உருவானது என்பதை விட அதை அறியும் வழியை எப்படி வகுத்து கொள்வது என்பதுதான் அதன் நோக்கமாகும்.நியாயம் ஒரு விஷயத்தை அறிந்துகொள்ள விஷயம்(அறிபடு பொருள்) மற்றும் விஷயி(அறிபவன்) என்ற இரு முனைகளை கணக்கில் கொள்கிறது. இவ்விரு முனைகளுக்கு இடையே உள்ள உறவே அறிவு எனப்படுகிறது. விஷயம்(பிரபஞ்சம்) மற்றும் விஷயி(மனிதன்) என்ற இரு புள்ளிகளுக்கு இடையே உள்ள எல்லா வகை தொடர்புகளையும்(உறவுகளையும்) கணக்கில் கொள்கிறது நியாயம்.பிரபஞ்சத்தை பற்றி அறிந்து கொள்ள அல்லது அது பற்றிய அறிவை வகுத்து கொள்ள பிரமாணம், பிரமேயம், சம்சயம், பிரயோஜனம், த்ருஷ்டாந்தம், சித்தாந்தம், அவயவங்கள், தர்க்கம், நிர்ணயம், வாதம், ஜல்பம், விதண்டாவாதம், ஹேத்வ ஆபாசம்,சலம், வாத நிரசனம், நிக்ரஹ ஆஸ்தானம் என்ற பதினாறு தத்துவங்கள் மூலம் நியாயம் விளக்குகிறது. இதில் பிரமேயம் மட்டும் அறிபடுபொருள் மற்ற பதினைந்து முறைகளும் அதை அறிவதற்கான வழிமுறைகள்.இதில்வரும் முதலாவுது அறிவதற்கான முறை பிரமணமாகும். ஒரு அறிபடு பொருளை என்னென்ன வழிமுறைகள் கொண்டு அறிகிறோம் என்பதே பிரமணமாகும். பிரமாணம் ஒரு விஷயத்தை பற்றி அறிய நான்கு பிரமாணங்களை வகுக்கிறது. அவை,பிரத்தியட்சம் – நேரடிக்காட்சிஅனுமானம் – உய்த்துணர்வுஉபமானம் – ஒப்பீடுசப்தம் – உரைச்சான்று என்பனவாகும்பிரத்தியட்ச பிரமாணம் என்பது நமது புலன்கள் வழியாக புற வயத்தில்(உலகத்தில்) நடப்பவற்றை நேரடியாக பார்த்து அறிந்து கொள்ளுதல்.இரண்டாம் பிரமாணம் அனுமானம் என்பது ஊகித்து அறிவதாகும். புலன்களில் மூலம் அறிதலில் சில தவறுகள் ஏற்படலாம். உதாரணத்துக்கு சூரியன் பூமியை சுற்றுகிறது என்பது போன்று நமது புலன்களுக்கு தென்படுகிறது. ஆனால் பூமிதான் சூரியனை சுற்றுகிறது என்பதை நாம் ஊகித்தே அறிகிறோம். இவ்வாறு ஊகித்து அறிந்து கொள்ளும் முறையே அனுமானம் எனப்படுகிறது. அனுமானத்தை நியாயம் மூன்று வகையாக வகைப்படுத்துகிறது அவை பிரத்தியட்சம் நிகழும் முன் ஊகிப்பது,பிரத்தியட்சம் நிகழ்ந்த பின் ஊகிப்பது, பிரத்தியட்சம் நிகழும் போதே ஊகிப்பது என்பவையாகும்.மூன்றாம் பிரமாணம் உபமானம் என்பது ஒன்றை இன்னொன்றுடன் ஒப்பிட்டு அறிவதாகும்.நான்காவது பிரமாணம் சப்தம் என்பது முன்னறிவு அல்லது மரபான அறிவு என்று வரையறுக்கலாம். ஒரு விஷயத்தை நாம் அறிந்து கொள்ளும் முன் அதுவரைக்கும் அதை பற்றிய விவரங்களை தலைமுறைகளுக்கு கடத்தப்பட்டிருப்பது முன்னறிவாகும். அதிலிருந்து அறிபடு பொருளை பற்றி நாம் அறியலாம்.இதுவரை இந்தியா ஞான மரபில் தோன்றிய பௌத்தம், சமணம் மற்றும் வேதாந்தங்களும் உண்மையை அறிவதற்கு நியாய தரிசனத்தையே கையாளுகின்றன.பூர்வமீமாம்சம்இந்து மதங்களிலோ அல்லது இந்தியாவில் தோன்றிய மதங்களுக்கோ மூல நூல் என்று எதுவும் இல்லை. அவை பல நூல்களை கொண்டவை மற்றும் இதுதான் மூல நூல் என்று எதுவும் கிடையாது. ஆனால் ஆபிரகாமிய மதங்களான கிறிஸ்துவமும் இஸ்லாமும் அதன் மையநூலக பைபிள் மற்றும் குரானை வைத்து வளர்ந்தவை. இப்படி மையநூலை வைத்து இயங்குவது செமிட்டிக் மதங்களின் இயல்பாகும். அப்படி வேதங்களை மூலநூல்களாக கொண்டு வளர்ந்தவை பூர்வமாம்சமாகும். இந்தியா தத்துவ மரபில் மையநூல்வாதம் கொண்டு இயங்கும் ஒரே தத்துவ தரிசனமும் பூர்வமீமாம்சம் மட்டுமே.பூர்வமீமாம்சம் என்பது வேதங்களை அடிப்படையாக கொண்டு வேள்விகளை சடங்குகளையும் நடத்துவதாகும். வேள்வி மற்றும் சடங்குகளை செய்வதே இதன் முதன்மையான கர்மமாகும். இந்த தரிசனம் சடங்கு செயல்பாடுகளையும் அவற்றின் விளைவுகள் பற்றியே விவரிக்கிறது(செயல் – விளைவு). இது புரோகித மரபு என்றும் அழைக்கப்படுகிறது. பூர்வமீமாம்சத்தை தொகுத்தவர் ஜைமினி என்று குரு ஆவர் மற்றும் இவர் கிமு இரண்டாம் நூற்றாண்டுக்கும் மூன்றாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்டகாலமாக இருக்கலாம்.பூர்வமீமாம்சம் தர்மம், அர்த்தம், காமம் மற்றும் மோட்சம் என்ற நான்கு அடிப்படைகளை கொண்டது. இதில் தர்மம் என்பது அறம் அல்லது நீதி நெறிகள் அல்ல. மாறாக எந்தந்த அடிப்படைகளின்படி நமது செயல்களை ஆற்றுகிறோமோ அதுவே தர்மம் எனப்படுகிறது. இத்தத்துவதில் கர்மம் என்பது சடங்குகள் செய்வதே ஆகும். அந்த கர்மத்தின் விளைவே காமமும் மோச்சமுமாகும்.பூர்வமீமாசத்தில் கடவுளுக்கு முக்கிய இடமில்லை மற்றும் சடங்குகளே முக்கியமானவை. பிரபஞ்சத்தின் மூல காரணம் யார் என்று கேள்வி எழும்போது இறைவன் என்ற கருத்து தேவைப்படுகிறது மற்றும் இவை படிப்படியாக பிற்காலத்தில் உருவாகி வந்தவையாகும்.வேதகாலத்தில் இருவகையான கடவுள் வடிவங்கள் இருந்து வந்தன. ஒன்று செயல் வடிவ கடவுள்கள். அவை ஒவ்வொரு செயலுக்கு உரிய தனி தெய்வங்கள்(ராத்ரிதேவி, உஷை, சாவித்ரி) ஆகும். இரண்டாம் வகை தெய்வங்கள் இந்திரன், வருணன் மற்றும் அக்னீ போன்ற இயற்கையை உவமையாக கொண்ட தெய்வங்கள் ஆகும். ஆனால் இவை முழுமுதல் தெய்வங்களல்ல. முழுமுதற் கடவுள் என்று வரும்போது இப்பிரபஞ்ச விதிகளுக்கு மூலக்காரணமாக உள்ள பிரம்மமே என உருவகிக்கப்படுகிறது.பூர்வமீமாசத்தின்படி இப்பிரபஞ்சம் இறைவனால் உருவாக்கப்பட்டது அல்ல. அது அதற்குரிய செயல்விதிகளின்படி தானாக உருவாகியது. பௌதிக பொருட்களால் நிறைந்த பிரபஞ்சத்தில் அவற்றுடன் கடவுளும் குடிகொண்டுள்ளது. இப்பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொன்றும் செயல் – விளைவு என்ற விதிகளுக்கு உட்பட்டவை மற்றும் அவை கடவுளுக்கும் பொருந்தும்.வேள்வி சடங்குகளே இதன் முதன்மையான கர்ம நோக்கமாகும் மற்றும் இந்த சடங்குகள் கடவுளின் கருணையையோ அல்லது அருளையோ பெற அல்ல. கடவுள்களே வேத மந்திரங்களுக்கு கட்டுப்பட்டவையாகும். இந்த கர்ம சித்தாந்தம் இந்தந்த சடங்குகளுக்கு இந்தந்த விளைவுகள் என்று விளக்குகின்றன. இந்த கர்ம விளைவுகளின்படியே விதி, மறுபிறப்பு போன்றவை நிர்ணயிக்கப்படுகிறது. இதற்கும் கடவுளுக்கும் சம்பந்தம் இல்லை.ஆன்மிகம், யோகம் மற்றும் தியானம் போன்றவற்றிக்கு எதிரானது இத்தத்துவம். ஆனால் பிற்காலத்தில் இவை அனைத்தையும் தனது வைதிக மரபுடன் உள்ளிழுத்து கொண்டது பூர்வமீமாம்சம்.இன்று இந்தியா முழுவதும் காணப்படும் கணபதி ஹோமம் போன்ற சடங்குகள் இந்த பூர்வமீமாம்சத்தின் வைதிக மரபேயாகும். இந்த வேள்வி மரபானது பிற்காலத்தில் மெல்லமெல்ல ஆலய மரபுடன் தன்னை இணைத்து கொண்டது. இன்று இந்து மதத்தில் காணப்படும் அனைத்து வழிபாட்டு கூறுகளையும் தன்னகத்தே உள்ளிழுத்து கொண்டு வளர்ந்து நிற்கிறது பூர்வமீமாம்சம்.வேதாந்தம் | உத்தரமீமாம்சம்வேதத்தின் அந்தம்தாம் தான் வேதாந்தமாகும். அதாவுது வேதத்தின் இறுதியில் வருவது என்று பொருள். இந்து மத அனைத்து சமய வழிபாடுகளிலும் வேதாந்தத்தின் தத்துவார்த்தம் காணப்படும். வேதாந்தத்தின் முக்கிய தேடல் இப்பிரபஞ்ச தோற்றம் மற்றும் இயக்கத்திற்கு முக்கிய மூல காரணமாக இருக்கும் பிரம்மத்தை பற்றியதேயாகும். வேதாந்தங்கள் உபநிஷங்கள் மற்றும் பிற பௌதிக தத்துவ தரிசங்களுடன் விவாதித்து தம்மை வளர்த்து கொண்டவை.இத்தரிசனம் வேதங்களை ஏற்று கொண்டாலும் அதில் உள்ள சடங்குகளை ஏற்பதில்லை. பிரம்மத்தை பற்றி அறிய ஞான தேடலையே வேதாந்தங்கள் முன்வைக்கின்றன. அதனால் இதை பிரம்ம மீமாம்சை அல்லது ஞான மீமாம்சை என்று குறிப்பிடுவார்கள். வேதாந்த மரபினை தொகுத்தவர் குரு பாதராயணர் ஆவர் மற்றும் இவர் கிமு நான்காம் நூற்றாண்டுக்கும் கிமு இரண்டாம் நூற்றாண்டுக்கும் நடுவில் வாழ்ந்தவர் என்று நம்பப்படுகிறது. இவருடைய பிரம்மசூத்திரங்கள் என்ற நூலே வேதாந்தத்தின் முக்கிய நூலாகும். வேத வியாசர்தான் வேதாந்தத்தின் முதல் குரு என்ற நம்பிக்கையும் உண்டு.இந்து மரபில் வேதா காலம் முதல் தற்போது வரை அதன் தேடல் எவ்வாறு இப்பிரபஞ்சமும் அதன் உயிர்களும் தோன்றின என்பதே. அதை சாங்கியம் போன்ற பௌதிக தரிசனங்கள் பருப்பொருளில் இருந்து தோன்றின என்று முன்வைக்கின்றன மற்றும் இன்றைய big bang theory போன்ற அறிவியில் தத்துவங்கள் சிறு வெடிப்பில் இருந்து universe தோன்றின என்று கூறினாலும். பௌதிக தத்துவங்களாலும் அறிவியலாலும் விளக்கமுடியாத சில பகுதிகள் உள்ளன அவற்றை தர்க்கரீதியாக விவாதித்து ஆன்மிக தத்துவங்கள்(வேதாந்தங்கள்) அந்த இடத்தை நிரப்பிவிடுகின்றன.உதாரணத்துக்கு பருப்பொருளில் இருந்து எவ்வாறு உயிர்கள் உருவாக முடியும்? பருப்பொருள் வெடித்து இப்பிரபஞ்சம் உருவாக உந்து விசையாக இருந்தது எது? அதன் ஆதிமூலம் என்ன? திட பொருளான உடலுக்கும் மனதுக்கும் உள்ள தொடர்பு என்ன? இந்த இடத்தில் வேதாந்த தத்துவங்கள் விளக்க முடியாத அந்த இடைவெளியை ஆத்மா, பிரம்மம், பரமாத்மா மற்றும் பரம்பொருள் என்று பெயர் கொடுத்து நிரப்பிவிடுகின்றன. அதேசமயம் அவை பௌதிக வாதங்களையும் முழுமையாக மறுப்பதும்மில்லை. வேதாந்தங்கள் சாங்கியம், யோகம், வைசேஷிகம் மற்றும் நியாயம் போன்ற பௌதிக வாதங்களுடனும் விவாதித்தும் பிரம்மத்தை உபநிஷங்களிடம் விவாதித்தும் புதுப்பித்துக்கொண்டவை.

பௌத்த சமண மதங்களுடன் ஆழமான விவாதத்தில் ஈடுபட்டதான் விளைவாக பிற்கால வேதாந்தங்கள் உருவாகின. முதலில் உருவானது ஆதி சங்கரரின் அத்வைதமாகும். இதிலிருந்து பிரிந்து உருவானவை விசிஷ்டாத்வைதம் மற்றும் துவைதம் ஆகும்.

இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள் -சுயாந்தன்

அஞ்ஞானமும் ஒளிச்சுடரும் (இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள் – ஜெயமோகனுடைய கட்டுரைநூல் அறிமுகம் )

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 07, 2021 10:30

November 6, 2021

பாரம்பரிய ஞானத்தை பாதுகாப்பது பற்றி…

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

பொதுவான சினிமா மற்றும் ஊடக பேச்சுகளில் அடிப்படும் வாக்கியம் அடித்தட்டு மக்களுக்கான விடுதலை கல்வியில் தான் இருக்கிறது,கல்வியே மனிதனை சிந்திக்க வைக்கும், அதுவே தனிமனித உணர்வை உருவாக்கும் ,அதன் மூலமே அனைத்து கட்டுகளில் இருந்தும் விடுதலை அடையமுடியும் என்பது. அதே நேரத்தில் மரபான பாரம்பரியம், கலை மற்றும் அறிவு ஆகியவைகளை பேணுதலும் வலியுறுத்தப்படுகிறது. அதுவே நமது அடையாளம் எனவும் சொல்லப்படுகிறது.

இது மிகப் பெரிய முரணாக இருக்கிறது. கல்வி அனைத்தையும் ஒற்றைபடையாக ஆக்கும். அதுவும் நம் ஆங்கில வழிக் கல்வியின் ஒரே குறிக்கோள் அனைவரையும் மையச் சமூகமாக மாற்றுவது. அது மரபான  அறிவை முற்றாக அழிக்கும். கல்வி மட்டுமே ஒரே தீர்வு என வலியுறுத்திய அம்பேத்கர் இந்த மரபான அறிவை குறித்து என்ன சொல்லியிருக்கிறார் என தெரியவில்லை (அவரைப் பற்றி ஒரு பொட்டுக்கூட படிக்கவில்லை), ஆனால் இன்று நாம் வெகுவாக மரபு குறித்த சிந்தனை தாக்கம் பெற்றுள்ளோம். மரபை முழுதாக துண்டிப்பது சிந்தனை செயல்பாட்டிற்கே எதிரான போக்கு என்று வாதாடும் அளவுக்கு வந்துள்ளோம்.

அனேகமாக நிலம் சார்ந்து எழுதப்பட்ட அனைத்து தமிழ் இலக்கிய ஆக்கங்களும் மரபான அறிவை முன்வைத்தே பேசுகின்றன. அதன் அழிவை பெரும் மானுட இழப்பாக முன்வைக்கின்றன. விவசாயம் சார்ந்த, கடல் மீன்பாடுகள் சார்ந்த, காடு சார்ந்த, தேர் செய்வது, பானை குயவுவது என எந்த மரபான கலை மற்றும் அறிவுச் செயல்பாட்டையும் நமது ஆங்கில கல்வி முழுமுற்றாக அழிக்கவே செய்யும். செய்தும் இருக்கிறது. ஜோ டி குருஸ் அவர்களின் ஒவ்வொரு சொல்லும் இதையே பெரும் திரளாக முன்வைக்கிறது. பரதவர்களின் கடல் ஞானம் இயந்திரங்களால் புறக்கனிக்கப்பட்டதை, வியாபாரம், ஆங்கில கல்வி என சிதைந்ததை கூறுகிறார். ஜெயமோகனின்(உங்களின்) பல கதைகளில் அறிவியல் எப்படி மரபான அறிவை வென்றது என்று எழுதியிருக்கிறீர்கள். ஒரு தலைமுறையில் மருத்துவ அறிவு மறக்கடிக்கப்பட்ட நாவித சமூகம் தனது மருத்துவ அறிவை இழந்து வெரும் நாவிதர்களாகவே வரலாற்றில் மிஞ்சியதை சுளுந்தி பேசுகிறது. பல தலைமுறை ஞானத் திரட்டை அழிக்க ஒரு தலைமுறை போதும் போல.

கல்வியின் முக்கியத்துவத்தைப் பற்றியோ அவசியம் பற்றியோ நான் இங்கு ஏதும் பேசப்போவதில்லை, அது பல நூறு பக்கங்கள் எழுதப்பட்டுவிட்டது. என்னுடய சந்தேகம் இதைச் சமன் செய்ய முடியுமா என்பதே. அனைவருக்கும் ஆங்கில வழிக் கல்வியும் அதே வேளையில் மரபான அறிவும் சாத்தியமா? கல்வி மட்டுமே ஒரே தீர்வு எனத் திரும்பத் திரும்ப முன்வைப்பது பிரச்சனையை எளிமையாக்கி எஸ்கேப்பிஸமாக தெரிகிறதே. உண்மையில் மனிதனாகப் பிறந்த அனைவரும் அறிவை கல்வியில் மட்டுமே அடையவேண்டுமா? நன்கு படித்து முடித்து வாழ்க்கையில் செட்டிலாகியப் பிறகு காட்டைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை, கடலைப் பற்றி ஒன்று தெரியவில்லை அனைத்தையும் இழந்தாயிற்று என புலம்புவதற்கு படிக்காமல் அந்த தொழிலையே செய்துக்கொண்டிருக்கலாமே?

இதற்கு வைக்கும் எதிர் வாதம் குப்பை அள்பவன் குப்பை மட்டுமே அள்ளிக் கொண்டிருக்கவேண்டுமா, நரிக்குறவர்கள் பாசி, காடை, கெளதாரி விற்றுக்கொண்டிருக்க வேண்டுமா, பறை அடிப்பவன் பறை மட்டுமே அடித்துக் கொண்டிருக்க வேண்டுமா, பாடை கட்டுபவன் பாடை மட்டுமே கட்டிக்கொண்டிருக்க வேண்டுமா, இருளர் பாம்பை மட்டுமே பிடித்துக் கொண்டிருக்க வேண்டுமா என்பதாகவே இருக்கிறது. எனது சந்தேகம் பாம்புக் கடிக்கு இருளர்களிடம் வழி வழியாக வரும் மருத்தவ அறிவை என்ன செய்வது, நரிக் குறவர்களின் நாடோடி வாழ்வை ஏன் மாற்றிக்கொள்ள வேண்டும்? அவர்களும் ஜீன்ஸ் டி-ஷர்ட்டு சிவகார்த்திகேயன் சினிமா என வாழ்க்கையை வாழ வேண்டுமா.

அதேவேளையில் ஜெயமோகனைப் போல எழுத்தாளன் ஆவதற்கோ எலான் மஸ்க்கைப் போல அறிவியலில் வாழ்வதற்கோ கல்வி அவசியமே, ஆனால் அவர்களின் அந்த நிலையை எட்ட மரபான அறிவின் பங்களிப்பு இருந்திருக்குமேயானால்(இல்லாதிருந்தாலும்) அதை எப்படி பேணுவது?

இப்படிக்கு

ஆனந்த்ராஜ்

அன்புள்ள ஆனந்த் ராஜ்,

இந்தக் கேள்வி இன்று மட்டும் நான்குபேரால் எழுப்பப்பட்டுள்ளது. இப்படி கேள்வி எழுப்புபவர்களில் பெரும்பாலும் எவருமே அவர்களின் பாரம்பரியப்படி வாழ்பவர்கள் அல்ல. தங்கள் மரபை, குலத்தொழிலை விட்டுவிட்டு நவீனக் கல்வி கற்று நல்ல வேலைவாய்ப்புடன் உயர்நிலை வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர்கள்தான் அவர்கள். இந்தக்கேள்வியை கேட்க தகுதி கொண்டவர்கள் தங்கள் வாழ்க்கையை மரபின் ஞானத்தை பேணும்படி அமைத்துக்கொண்டவர்கள், அதில் வெற்றிகரமாக வாழ்பவர்கள் மட்டும்தான் இல்லையா?

யோசித்துப்பாருங்கள், இங்கே நம் மரபார்ந்த ஞானத்துக்கு இன்று என்ன உலகியல் மதிப்பு இருக்கிறது? அதை நம்பி வாழ்பவர்கள் எந்த வகையான பொருளியல் வாழ்க்கையை வாழமுடியும்? பாம்புபிடிப்பதை விடுங்கள். பொற்கொல்லர்கள் எப்படி வாழ்கிறார்கள்? பாரம்பரிய மீனவர்களின் வாழ்நிலை என்ன? நீங்கள் நாவிதர் எவரிடமாவது மருத்துவம் செய்துகொண்டது உண்டா? சரி, பாரம்பரியத் தொழில்புரியும் அர்ச்சகர்களின் நிலைமை என்ன? அவர்கள் நம் சூழலின் சமூக அதிகாரத்தின் உச்சத்தில் நிற்கவேண்டியவர்கள், அவர்கள் எப்படி வாழ்கிறார்கள்?

இந்நிலையில் பாரம்பரிய அறிவு அழிகிறது என்றெல்லாம் பேசுவது ஒரு வன்முறை. பாரம்பரிய ஞானம் பேணப்படவேண்டும், ஆகவே நீங்கள் சென்று வறுமையிலும் இழிவிலும் தேங்கி வாழுங்கள் என்று இன்னொருவரிடம் கூறும் கீழ்மை. அதுதான் சமூகநீதி பேசுபவர்களால் சுட்டப்படுகிறது. இதைப்புரிந்துகொள்ள மிக எளிமையான ஒரு நேர்மை இருந்தால் போதுமானது.

ஒன்று நினைவில்கொள்ளுங்கள். பாரம்பரிய ஞானம் என்பது சென்றகால பழங்குடிவாழ்க்கை, நிலவுடைமைக்கால வாழக்கையுடன் இணைந்தது. அந்தக் காலகட்டம் இன்று இல்லை. இது முதலாளித்துவ யுகம். தொழில்மயம்,பெருநுகர்வு, உயர்தொழில்நுட்பம், பெருவணிகம் திகழும் காலகட்டம். இன்று பழங்குடியாகவும் நிலஅடிமையாகவும் வாழ்பவர்கள் தேங்கி நின்றுவிட்டவர்கள், சமகாலத்தால் கைவிடப்பட்டவர்கள். அவர்களுக்கு இந்நூற்றாண்டு அளிக்கும் எந்த வசதிகளும் கிடைக்காது. உணவு, மருத்துவம் எல்லாமே மறுக்கப்படும். அவர்கள் அழிவார்கள். இன்றைய காலகட்டத்திற்குரிய கல்வி, தொழில், தொழில்நுட்பம், வணிகம், அரசியல் ஆகியவற்றுக்குள் வருபவர்களே வெற்றிபெறுவார்கள். வாழ்க்கையை அடைவார்கள்.

மரபார்ந்த ஞானம் அழியலாகாது என்றால் என்ன செய்யவேண்டும்? அவற்றை இன்றைய காலகட்டத்திற்கு கொண்டு வரவேண்டும். இந்தக் காலகட்டத்திற்கு வந்த ஒன்று மட்டுமே இன்று பயனுள்ளதாக இருக்க முடியும். அதுதான் உலகம் முழுக்க நடந்துகொண்டிருக்கிறது. சென்றகாலகட்டத்தில் மரபார்ந்த ஞானம் குலப்பாரம்பரியமாக கைமாற்றம் செய்யப்பட்டது. இனக்குழுக்களுக்குள் பரிமாற்றம் செய்யப்பட்டது. பழங்குடி வாழ்க்கையிலும் நிலவுடைமைக்கால வாழ்க்கையிலும் பிறப்பு அடிப்படையிலான குடிவழி மரபும் குலவழி மரபுமே இயல்பானவையாக இருந்தன. இன்றைய யுகத்துக்கு அந்த முறை எவ்வகையிலும் பொருந்துவது அல்ல. ஆகவே இன்று எந்த ஞானமும் ஒரு சாராரிடம் பிறப்பு அடிப்படையில் திகழவோ, கைமாற்றம் செய்யப்படவோ இயலாது.

இன்று அந்த ஞானம் புறவயமாக்கப்படவேண்டும். ஆவணப்படுத்தப்படவேண்டும். அவற்றை அறிவியலாக ஆக்கி அனைவருக்கும் கற்பிக்கும் அமைப்புக்கள் உருவாக்கப்படவேண்டும். ஆர்வமுள்ளவர்கள் கற்று அதில் நிபுணர்களாக உருவாகவேண்டும். அவ்வாறுதான் இதில் முன்னோடியான சீனா செய்கிறது. ஆகவே சீனப்பாரம்பரிய மருத்துவத்துக்கு நோபல்பரிசு கிடைத்துள்ளது. நம் அருகிலேயே கேரளத்தில் அது நிகழ்கிறது. பளியர்கள் முதலிய பழங்குடிகளின் காடுசார்ந்த ஞானம் நிபுணர்களால் இன்று பதிவுசெய்யப் படுகிறது. அவர்களின் தாவரவியல் அறிதல்கள் ஆவணப்படுத்தப்பட்டு சர்வதேசக் காப்புரிமைகளே பெறப்பட்டுள்ளன. அதுவே இச்சூழலில் மரபார்ந்த ஞானத்தை அழியாமல் காக்கும் வழி.

இதை பாம்புபிடிப்பவர்களுக்கு மட்டுமல்ல அர்ச்சகர்களுக்கும் சொல்கிறேன். மரபுசார் அர்ச்சகர்கள் அப்படியே நீடிக்கவேண்டும் என்றால் அவர்கள் வறுமையில் பழைமையான வாழ்க்கையில் நீடிக்கவேண்டும் என்றே பொருள். அவர்களிடமுள்ள பண்பாட்டுக்கூறுகள் காலத்தில் நீடிக்கவேண்டுமென்றால் அவை புறவயமாக்கப்பட வேண்டும். கேரளத்தின் பூசனைமுறை தாந்த்ரீகம் சார்ந்தது. மிகுந்த ரகசியச் சடங்குகள் கொண்டது. அவற்றையே முறையான தாந்த்ரீகப் பள்ளிகள் வழியாக அனைவருக்கும் கற்பித்து, அனைவரிலும் இருந்து பூசகர்களை உருவாக்கிப் பணிக்கு அமர்த்தியிருக்கிறார்கள். வேறுவழியே இல்லை. இந்தக் காலகட்டத்தின் வழிமுறை இது ஒன்றே. எல்லா ஞானமும் பொதுவானதாக, புறவயமானதாக வந்தாக வேண்டும். எதுவும் பிறப்புசார்ந்து வரையறை செய்யப்பட இயலாது. அந்த ஞானத்துக்கு சந்தை மதிப்பும் அறிவுலக மதிப்பும் அவ்வண்ணமே உருவாகும். அந்நிலையிலேயே அதைச்செய்பவர்களுக்கு பொருளியல் நலனும் சமூக இடமும் உருவாகும்.

நீங்கள் கல்வி பற்றி கேட்டதை இதனுடன் சேர்த்துக் கொள்கிறேன். இங்கே கல்வி என்று சொல்லப்படுவது எது? நவீன முதலாளித்துவச் சமூகச்சூழலுக்குரிய அறிவுத்துறைகள் அனைத்துக்குள்ளும் நுழைவதற்கான பொதுவான பயிற்சியையே இங்கே கல்வி என்கிறோம். பொதுவாக வரையறை செய்யப்பட்டு, புறவயமான முறையில் நிறுவனங்கள் வழியாக அனைவருக்கும் அளிக்கப்படும் பயிற்சி அது. நவீன உலகத்தை உருவாக்குபவை அத்தகைய கல்விநிறுவனங்கள்தான். நிர்வாகம், வணிகம், தொழில்நுட்பம், அறிவியல், கலை அனைத்துக்குமான பாதை அது. அதன் வழியாக மட்டுமே நவீன உலகின் அரசியலுக்குள், பொருளியலுக்குள், தத்துவம் உட்பட்ட அனைத்து ஞானங்களுக்குள் செல்லமுடியும். அதைத் தவிர்ப்பவர்கள் சென்றகாலத்தில் தேங்கி நின்றிருக்க வேண்டியிருக்கும்.

அது பொதுமைப்படுத்துகிறதா? ஆம், அந்தப் பொதுமைப்படுத்தல் வழியாகவே இங்கே நவீனச் சமூகம் உருவாக்கப்பட்டது. பண்டைக்காலத்தில் மக்கள் சிறுசிறு வட்டங்களுக்குள் வாழ்ந்தனர். தொழிற்குழுக்கள், சாதிகள், பழங்குடிக்குலங்கள், சிற்றூர்கள் என அவ்வட்டங்கள் அமைந்திருந்தன. இன்று அவ்வட்டங்கள் இல்லை. இன்று உலகம் ஒன்றென ஆகியிருக்கிறது. அதற்கு நவீனத்தொழில்நுட்பம் வழியமைத்திருக்கிறது. அந்த உலகில் வாழ்வதற்கான பயிற்சியை நவீனக் கல்வி அளிக்கிறது. ஆகவே அது பொதுமைப்படுத்துகிறது. இன்று எவரும் இல்லாத சிறு வட்டங்களை உருவாக்கிக்கொண்டு வாழமுடியாது.ஆனால் நவீனக்கல்வியின் பொதுமைப்படுத்தல் அடிப்படைநிலைகளில் மட்டுமே. ஆரம்பக்கல்வியில் மட்டுமே. அதற்குமேல் கல்வி மேலே செல்லச்செல்ல நுண்ணிய பிரிவுகளாக விரிந்துகொண்டேதான் செல்கிறது. அங்கே பொதுமையாக்கம் இல்லை, மிகமிகக் கூர்மையான நுண்மையாக்கவே உள்ளது.அங்கேதான் நிபுணர்கள் இருக்கிறார்கள்.இன்றைய கல்விமுறை நிபுணர்களை உருவாக்கும் நோக்கம் கொண்டது.

ஒன்று தெரிந்துகொள்ளுங்கள், எந்த இருளரைவிடவும் ரோமுலஸ் விட்டேகர் தமிழகப் பாம்புகளைப் பற்றி அறிந்தவர். எந்த பளியரை விடவும் உல்லாஸ் காரந்த் தென்னகப் புலிகளைப் பற்றி அறிந்தவர். ஏனென்றால் அவர்களின் ஞானம் என்பது புறவயமாக தொகுக்கப்பட்டது. ஜிம் கார்ப்பெட் முதல் தொடர்ந்து வரும் நூற்றுக்கணக்கான ஆய்வாளர்களின் ஞானத்தை முழுக்க அவர் கற்றுக்கொள்ள முடியும். உலகம் முழுக்க இருந்து அறிவை எடுத்துக்கொள்ள முடியும். அவர்கள் அறியாத ஒன்று இருளரிடமோ பளியரிடமோ இருக்கும் என்றால், அவற்றை பொதுமைப்படுத்தி புறவயமாக்கி கற்பிக்கமுடியுமென்றால் அவர்களால் மிகமிக எளிதாக அவற்றைக் கற்றுக்கொள்ளமுடியும். ’மறைந்திருப்பதே உயரிய ஞானம்’ என்பது ஒரு பழமையான மனநிலை. அதை கற்பனாவாத கோணத்தில் பார்க்கவேண்டியதில்லை.

பாரம்பரிய ஞானம் அழியலாகாது என்பதன் பொருள் அந்த ஞானத்தை கொண்டுள்ள மக்களை அப்படியே வைத்திருக்கவேண்டும் என்பது அல்ல.  நவீனக் கல்விமுறைக்குள், ஆய்வுமுறைக்குள் பாரம்பரிய ஞானமும் கொண்டுவரப்பட வேண்டும் என்பது மட்டுமே .இன்று மிகப்பெரிய அளவில் நிகழும் ஆய்வுகள் அந்நோக்கம் கொண்டவை. மானுடவியல்,சமூகவியல்,நாட்டாரியல் என்னும் களங்களில் அவை நடந்துகொண்டிருக்கின்றன. வெறும் இருபதாண்டுகளில் உலகளாவிய பாரம்பரிய ஞானம் மிகப்பெரும்பாலும் திரட்டப்பட்டு முறையாக பகுக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. நம்மைச்சுற்றி பெரிய அளவில் இப்பணி நிகழ்ந்துகொண்டிருக்கிறது, கொஞ்சம் கண்ணைத் திறந்து பார்த்தால் தெரியும். இணையத்திலேயே நூல்கள் பல்லாயிரக்கணக்கில் குவிந்துள்ளன. நவீனத் தொழில்நுட்பம் அந்த ஞானத்தை உலகளாவ ஒன்றாக்கிக்கொண்டிருக்கிறது. தனித்தனி குல,குடி, இடம் சார்ந்த வட்டங்களுக்குள் சிக்கி மறைந்திருந்த பாரம்பரிய ஞானங்கள் ஒட்டுமொத்தமாக சர்வதேச அளவில் தொகுக்கப்படுகின்றன.

ஆம், மேலைநாட்டு முதலாளித்துவ நிறுவனங்களே அவற்றைச் செய்கின்றன. நம் கல்வியமைப்பு அவற்றின் துணையமைப்பாகவே செயல்படுகிறது. நாம் மேலும் நிதியையும் அறிவியக்க ஒருங்கிணைப்பையும் அளித்து நம் பாரம்பரிய ஞானத்தை திரட்டி தொகுத்து புறவயமாகக் கற்பிக்கும் முயற்சிகளில் ஈடுபடலாம். அவ்வண்ணம் அவற்றை நிலைநிறுத்தவும் வளர்க்கவும் செய்யலாம். அவற்றில் நவீன நிபுணர்களை உருவாக்கலாம். சீனா அதையே செய்கிறது. அதுவே நவீன யுகத்தின் வழி.

கல்வி மட்டும் போதுமா என்றீர்கள். போதாது. ஆனால் நவீன உலகில்  தேவையான பிற அனைத்துக்கும் கல்வியே அடிப்படை. அதுவே தொடக்கம். நான் சொன்னதுபோல அனைத்துக்குமான பயிற்சிகளின் தொகையையே கல்வி என்கிறோம். கல்வியே தொழில்நுட்பத்திற்குள் நுழைவதற்குரிய வழி. நவீன வணிகத்திற்குள் நுழைவதற்குரிய தகுதி. இன்றைய நிர்வாகத்திற்குள் இடம்பெறுவதற்கான முறை. இன்றைய அரசியலதிகாரத்தை புரிந்துகொண்டு அடைவதற்கும் அதுவே அடிப்படை. கல்வியற்ற சமூகங்களுக்கு தொழில், வணிகம், அதிகாரம் ஏதும் இல்லை. அவை அடிமைப்பட்டு சுரண்டப்பட்டு தேங்கி நின்றிருக்கவே நேரும்.

நான் நவீனக்கல்விக்கு எதிராக எப்போதும் எழுதியவன் அல்ல. மாறாக ஏராளமான கதைகளில் நவீனக்கல்வி அளித்த விழிப்புணர்வு, விடுதலை பற்றியே எழுதியிருக்கிறேன். படித்துப்பாருங்கள். மரபான அறிவு அழியலாகாது என்னும் எண்ணம் உண்டு. ஆனால் அந்த மரபான அறிவை காப்பதற்கு அந்த மக்களை அப்படியே தேக்கநிலையில், சென்ற நூற்றாண்டுகளில் வாழச்செய்வதே வழி என எண்ணுபவன் அல்ல. அவ்வாறு சொல்வது ஒரு சமூக வன்முறை என நினைக்கிறேன்.

நீங்கள் உங்கள் கடிதத்தில் நவீனக்கல்வியால் நரிக்குறவர்கள் ஏன் நாடோடி வாழ்க்கையை மாற்றிக்கொள்ளவேண்டும் என்று கேட்கிறீர்கள். சிலநூறாண்டுகளுக்கு முன் உங்கள் குடியும் குலமும் வாழ்ந்த வாழ்க்கையை மாற்றிக்கொண்டுதான் இப்படி கடிதம் எழுதுகிறீர்கள் என்பதை மறக்கவேண்டாம். தமிழகத்தில் இன்று வாழும் சாதிகளில் பாதிக்குமேல் மேய்ச்சல் நாடோடி வாழ்க்கைமுறையில் இருந்தவர்கள்தான். நவீன யுகம் உருவாக்கிய பாசன வசதிகள் அவர்களை வேளாண்குடிகளாக ஆக்கின. அதனூடாக உருவான உபரி மூலதனம் தொழில்குடிகளாக ஆக்கியது.

சென்ற ய்கத்தில் உலகம் முழுக்க பல்லாயிரம் நாடோடிக்குடிகள் இருந்தன. அவை முழுமையாகவே மறைந்துவருகிறார்கள். பெரும்பாலான பழங்குடிகள் அவர்களின் பழைய வாழ்க்கையில் இருந்து மாறிவிட்டார்கள். ஏனென்றால் அது இன்றைய சூழலுக்குரிய வாழ்க்கை அல்ல. நாடோடிவாழ்க்கை என்பது சென்ற நூற்றாண்டுகளின் வரலாற்றுச்சூழலில் உருவாகி வந்த ஒரு கட்டாயமே ஒழிய ஒரு தனிச்சிறப்பான வாழ்க்கை முறை அல்ல. பாதுகாப்பின்மை, கல்வியின்மை, மருத்துவ உதவியின்மை, பட்டினி ஆகியவற்றாலானது அது. அதில் தாங்கள் நீடிப்பதா வேண்டாமா என அம்மக்கள்தான் முடிவெடுக்கவேண்டும், மற்றவர்கள் சொல்வது ஒடுக்குமுறை அன்றி வேறல்ல.

பழங்குடிகள் கல்விகற்றால் ’ஜீன்ஸ் டி-ஷர்ட்டு சிவகார்த்திகேயன் சினிமா என வாழ்க்கையை’ வாழ்வார்கள் என்னும் முன்முடிவுதான் பழமைவாதம், மேட்டிமைவாதம். அதைக் கொஞ்சம் சுயபரிசீலனை செய்து பாருங்கள். கல்வி அனைவருக்கும் உரியது. அதில் முதன்மை பெறுவது, அடிப்படைத்தகுதி பெறுவது, தேறாமல்போவது என பல படிநிலைகள் உள்ளன. அதுவும் அனைவருக்கும் பொதுவான நிலைமைதான். எல்லா இனக்குழுவினரிலும் தேறாமல் போகிறவர்களே மிகுதி. புதியதாக நவீனக்கல்விக்குள் வரும் மக்களிடையே தேறாமல்போகிறவர்கள் சற்றுக் கூடுதலாக இருக்கலாம் அவ்வளவுதான்.

அறுதியாகவே சொல்கிறேன். இந்த நவீன யுகத்தின் அறிவு, அதிகாரம் இரண்டுக்குள்ளும் நுழையவும் உரிமை, உயர்வு இரண்டையும் அடையவும் நவீனக்கல்வி ஒன்றே தொடக்கம். தொழில் வணிகம் எல்லாமே அதன்வழியாக அடையப்படுவன மட்டுமே. நவீனக்கல்வி என்பது நவீன காலகட்டத்தின் குடிமக்களாக வாழ்வதற்கான அடிப்படைப்பயிற்சி.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 06, 2021 11:35

ஜே.ஜே.சிலகுறிப்புகள்- ஒரு விமர்சனம்

சுந்தர ராமசாமியின் ஜே.ஜே.சிலகுறிப்புகள் நாவலைப்பற்றி ராயகிரி சங்கர் எழுதிய குறிப்பு. ஜே.ஜே.சில குறிப்புகளின் கதைநாயகனாகிய ஜேஜேதான் உண்மையில் ஒரு கலகக்காரன் என்னும் வரையறைக்குள் வருபவன். சிந்தனையாளனின், கலைஞனின் கலகம் என்பது முதன்மையாக சிந்தனையிலும் கலையிலும் நிகழ்வதே. சிந்தனையில் வழக்கமான தேய்ந்தபாதையில் சென்றுகொண்டு, கலையில் ஒன்றும் நிகழ்த்தாமல், அன்றாடத்தில் சீரழிவது கலகம் அல்ல. அது சீரழிவு மட்டும்தான். அங்கே இயலாமைக்கு துணையாக சிந்தனையாளன் கலைஞன் என்னும் பாவனைகள் கையாளப்படுகின்றன என்றே எண்ணவேண்டும். ஜே.ஜே. தன் காலகட்டத்தின் எதையும் நம்பமுடியாமல் தொந்தரவுகொண்ட ஆன்மா.

ஒரு கலகக்காரனின் கதை – ஜே. ஜே. சில குறிப்புகள் நாவல் ராயகிரி சங்கர்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 06, 2021 11:34

இந்திரா பார்த்தசாரதி- காளிப்பிரசாத் உரை

வாசிப்போம் தமிழ் இலக்கியம் வளர்ப்போம் குழுமம் நிகழ்த்திய  வழங்கும் “இந்திரா பார்த்தசாரதி” சிறப்புரை. உரையாற்றுபவர் எழுத்தாளர் காளிப்ரஸாத். ஆள்தலும் அளத்தலும் சிறுகதைத் தொகுதி வழியாக அறியப்பட்டவர்.

ஆள்தலும் அளத்தலும்- காளிப்பிரசாத்

ஆள்தலும் அளத்தலும்: செல்லும் தூரத்தை சுட்டும் சாதனை– அருணாச்சலம் மகாராஜன்

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 06, 2021 11:31

கேளாச்சங்கீதம் கடிதங்கள் -10

கேளாச்சங்கீதம்

அன்புள்ள ஜெ

உங்கள் தளத்தில் கடிதம் வந்தபிறகுதான் நான்  Nadya korotaeva வரைந்த அந்த அற்புதமான ஓவியத்தைக் கவனித்தேன். எப்படி அதைக் கவனிக்காமல் விட்டேன் என்று ஆச்சரியப்பட்டேன். அந்தப்படத்தின் பல தளங்கள் கவனத்துக்கு வந்தன. அது முதல்பார்வைக்கு ஒரு விசித்திரமான மலர் என்னும் எண்ணம் ஏற்படும். அதற்கு ஆசிரியை ரத்தத்தின் ஊற்றுமுகம் என்று தலைப்பிட்டிருப்பார். அதையொட்டி அதை ஒரு புண், ஓர் உறுப்பு என்று பார்க்கலாம். ஆனால் அது ஒரு பார்வைதான். ரசிகனாக அதை பலவாறாக பார்க்கலாம். நீங்கள் இந்தக்கதையுடன் அதைப்பொருத்தும்போது அது முழுக்கமுழுக்க வேறொன்றாக ஆகிவிடுகிறது.

இந்த ஓவியத்தை கேளாச்சங்கீதம் கதையுடன் இணைப்பது என்ன? ஒன்று ரத்தம். இன்னொன்று மலர், மூன்று யோனி. கதையில் இம்மூன்று அம்சங்களுமே இருக்கின்றன. ரத்தத்தில் ஊறிவரும் வசியம்தான் கதை.கனவில் சிவந்த மலர்கள் வருகின்றன என்று கதையில் சொல்லப்படுகிறது. அது காமத்தின் மலர். யோனியும் மலர்தான். அதுதான் ரத்தமலர். இந்தக்கதையின் களத்திலே வைத்துப்பார்த்தால் அந்த மலர் சக்திபீடம். பிரபஞ்சம் உருவான கருப்புள்ளி. தேவியின் யோனிமுகம்.

அதன்பின் இந்தப்படத்தைப் பார்த்தால் பெருந்திகைப்பு.    Nadya korotaeva அதைத்தான் உண்மையிலேயே வரைந்திருக்கிறார். அந்தப்படத்தை கூர்ந்து பார்த்தேன். கீழே கடல். அதில் திமிங்கலங்கள்போன்ற மீன்கள் மிதக்கின்றன. அதற்குமேல் விலங்குகளின் உலகம். பல்வேறு விலங்குகளின் நிழல்தோற்றங்கள் இணைந்து ஒரு படலமாக உள்ளன. அதற்குமேல் மேகங்களின் விண்ணுலகம். மூன்று உலகங்களும் யோனியில் இருந்து தோன்றுவதைத்தான் இந்த ஓவியம் சித்தரிக்கிறது.அவையெல்லாம் யோனியில் இருந்து கசிந்த ரத்தம். மேலே அது பெரிய துளை போல வாசல் போல திறந்திருக்கிறது

மிக அற்புதமான ஓவியம். இதை நகலெடுத்து என் அறைக்குள் மாட்டிவைக்கவேண்டுமென விரும்புகிறேன். கதைக்கு இதைவிடச்சிறந்த ஒர் ஓவியம் இருக்கமுடியாது. எல்லாம் சக்திலீலை என இந்த ஓவியம் கேளாச்சங்கீதத்தை விரிவாக்குகிறது

 

எஸ்.ஆர்.தனஞ்சயன்

அன்புள்ள ஜெ

நலம்தானே?

நானும் நலம்

கேளாச்சங்கீதம் கதையில் ஒரு கேள்வி. கனவில் கண்கள் வருகின்றனவா? ஓமியோபதி மருத்துவத்தில் மனச்சிக்கல் இருந்தால்தான் அண்மைக்காட்சியாக கண்கள் கனவில் வரும். பெரும்பாலானவர்களுக்கு கண்கள் கனவில் வருவதில்லை என்பதை அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். கனவுகளில் அவர்களிடம் பேசுபவர்கள் அவர்களை நோக்கிப்பேச மாட்டார்கள். வேறெங்காவது பார்த்துத்தான் பேசுவார்கள். வேறு எங்கிருந்தோதான் குரல்கேட்கும். கண்கள் குளொஸப்பில் வந்தால் மனச்சிக்கலுக்கு மருந்துதேவை.

நவீன உளச்சிகிச்சையிலும் அப்படித்தான். கண்கள் நிறைய வந்தாலே நெர்வஸ்நெஸ் இருக்கிறது என்று அர்த்தம். இந்தக்கதையில் மலர்களும் அழகான கண்களும்தான் கனவு முழுக்க நிறைந்திருக்கின்றன. இத்தனை நுட்பமாக இப்பிரச்சினையை எழுதிய முதல் தமிழ்ச்சிறுகதை இது என நினைக்கிறேன்

 

ஆர்.ராதாகிருஷ்ணன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 06, 2021 11:31

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.