Jeyamohan's Blog, page 885

November 9, 2021

கல்குருத்து [சிறுகதை]

“எங்க நாகருகோயிலிலே எல்லாம் இப்டி இல்ல” என்று அழகம்மை சொன்னாள். “வண்டியக் கட்டிக்கிட்டு மைலாடி போனா அம்மியும் குழவியுமா வாங்கிப் போட்டு அந்தாலே கொண்டு வரலாம்.”

“அது இப்பமும் அப்டியாக்கும் அம்மிணியே… வண்டியக் கட்டிட்டு மைலாடிக்கு வாங்க, நாங்களே எடுத்து தாறோம்” என்று கல்லாசாரிச்சி காளியம்மை சொன்னாள். வரிசையான பற்களுடன் அவளுடைய சிரிப்பு அழகாக இருந்தது. “கொண்டு வந்து சேக்க ரெட்டமாடு ஒரு முழுநாளும் இளுக்கணும்லா?”

கல்லாசாரி தாணுலிங்கம் “அம்மிணியே, அது சந்தைக்குப் போயி பசுவையும் குட்டியையும் வாங்கிட்டு வாறது மாதிரியாக்கும். இது நம்ம வீட்டிலே பிறந்த கன்னுக்குட்டி கொம்பும் குலையுமா பசுவா மாறி வயறு தெறண்டு ஈனுகது மாதிரியில்லா?”

அழகம்மை அந்த பாறையைக் கூர்ந்து பார்த்தாள். “இதையா அம்மியாக்கப் போறிய?”

“ஆமா அம்மிணி. நல்ல கருங்கல்லாக்கும். நூறுவருசம் கிடக்கும்.”

அவள் அந்தக் கல்லை அம்மியாகப் பார்க்க முயன்றாள். அது அவள் அங்கே வந்தநாள் முதல் தோட்டத்தில் மாமரத்தடியில் கிடந்தது. உருளை வடிவமான பாறை. அவர்களின் தோட்டமே எங்கிருந்தோ சரிந்து எங்கோ செல்வது போலிருந்தது. கண்ணப்பன் அங்கே எல்லா தோட்டங்களும் ஆற்றை நோக்கி சரிவனதான் என்று சொல்வான்.

“சரிவிலே அந்தாலே ஏறிப் போனாக்க?” என்று அவள் கேட்டாள்.

“மலை வந்துபோடும். தலையிலே மொட்டைப்பாறையை சுமந்துட்டு. பச்சைச்சேலை கெட்டி தலையிலே தயிருபானை வைச்ச இடைச்சியம்மையாக்கும் மலை”

கண்ணப்பன் இரவில் அவளுடன் தனியாகப் பேசும்போது வேறு ஆள். கொஞ்சல் குலாவல் சிரிப்பு எல்லாம் வரும். அவள் கைகளைப் பற்றி விரல்களை சொடக்கு எடுத்தபடியே பேசுவது அவன் வழக்கம். ஆனால் கதவைத்திறந்து வெளிச்சம் பார்த்துவிட்டானென்றால் சீற்றம்கொண்ட நாய் போலத்தான் இருப்பான். “வெந்நி எங்கடி? மாட்டுக்கு வெள்ளம் வச்சியா? மாடசாமி வந்தானா?” என்று அதட்ட ஆரம்பித்தால் அந்திவரை அதுவேதான்

“அம்மிணிக்கு அம்மியப் பாக்க முடியல்ல” என்று காளியம்மை சிரித்தபடி சொன்னாள்.

”இந்த பாறைக்குள்ள அம்மி இருக்கு அம்மிணி” என்றார் தாணுலிங்கம். “கொஞ்சம் கண்ணுநிறுத்திப் பாத்தா தெரியும்.”

“அம்மிணிக்க உடம்புக்குள்ள பூமிக்கு வரப்போற மூணு பிள்ளைகள் இருக்குல்லா, அது மாதிரி” என்றாள் காளியம்மை.

அழகம்மைக்குச் சிலிர்த்தது. அவள் உடல் ஒடுங்குவதுபோல் ஓரு மெல்லிய அசைவு கொண்டது. பொய்ச்சீற்றத்துடன் “உனக்கென்ன சோசியமா தெரியும்?” என்றாள்.

“எல்லா கலைக்கும் உண்டு அதுக்கான சோசியம்” என்றாள் காளியம்மை. “எங்க சோசியம் கல்லுலே…”

அவர்கள் அந்த கல்லை வெவ்வேறு இடங்களில் இரும்புக்கூடத்தால் மெல்ல தட்டித்தட்டி பார்த்தார்கள். அது டங், டக், டண் என வெவ்வேறு ஒலிகளை எழுப்பியது. கல் அவர்களுடன் உரையாடுவது போலிருந்தது.

தாணுலிங்கம் ”அம்மிணி ஒரு மூணு வெத்திலை, ஒருபாக்கு, ஒரணா துட்டு, ஒரு துண்டு கருப்பட்டி கொண்டுவாங்க” என்றார்.

“எதுக்கு?”

“பூசை வைக்கணும்லா?”

அவள் அவற்றைக் கொண்டுபோய்க் கொடுத்தாள். சமையலறையில் ஏகப்பட்ட வேலை மிச்சமிருந்ததை உள்ளே சென்றபோதுதான் உணர்ந்தாள். ஆனால் ஆர்வம் கல்மேல்தான் இருந்தது.

ஒரு வாழையிலையை வெட்டி விரித்து அதன்மேல் வெற்றிலை பாக்கு நாணயம் கருப்பட்டி ஆகியவற்றை வைத்து தாணுலிங்கம் கும்பிட்டார். அழகம்மையும் காளியம்மையும் வணங்கினர்.

காளியம்மை “கல்லுக்குள்ள இருக்குற அம்மி சேதமில்லாம வெளியே வரணும்லா?” என்றாள். “பொம்புளை உடம்பு புள்ளையப் பெத்து குடுக்குத மாதிரியாக்கும்.”

“ஓ” என்று அழகம்மை சொன்னாள்.

“அம்மிணி, இந்தக்கல்லு இப்டி இந்த ரூபத்திலே இங்கிண இருக்கத்தொடங்கி ஆயிரம் லெச்சம் வருசமாகியிருக்கும். அதிலே காலமறியாம குடியிருக்குத தெய்வங்கள் உண்டு. இப்ப அதை நாம ரூபம் மாத்துறோம். அதுக்குமேலே காலதேவனுக்க கண்ணு விளப்போகுது… அதுக்கு நாம கல்லுக்க தெய்வங்கள் கிட்ட மன்னிப்பு கேக்கணும்லா?”

“ஆமா” என்று அழகம்மை சொன்னாள். அவளுக்கு அவர்கள் சொன்னது புரியவில்லை. ஆனால் மீண்டும் சிலிர்த்தது.

கண்ணப்பன் வீட்டு முகப்பில் வந்து நின்று “அங்க என்ன எடுக்குதே? ஏட்டி, உள்ள பாட்டா கிடந்து விளிச்சுகூவுதாரு…” என்றான்.

”இதோ…” என்று அவள் ஓடினாள்.

“சுக்குவெள்ளம் வேணுமாம்… வயசான சீவன்களுக்கு ஒருவாய் சுக்குவெள்ளம் குடுக்க இந்த வீட்டிலே ஆளில்லியா?” என்று அவன் கூச்சலிட்டான்.

“இந்தா குடுக்குதேன்.”

“என்ன குடுத்தே? சத்தம்போட்டு அளுத பிறவுதான் குடுப்பியா?”

“சுக்கு பொடிக்கணும்லா? அம்மி கெடக்குத கெடை அப்டி… அதிலே வச்சு நசுக்குறதுக்குள்ள எனக்க சீவன் போவுது…” என்று அவள் தரையைப் பார்த்துச் சொன்னாள். ஆனால் குரலில் எதிர்ப்பு இருந்தது.

“அதுக்காக்கும் கல்லாசாரியை கூட்டிட்டு வந்தது…”

“செரி அவங்க கொத்திக் குடுக்கட்டு… அதுக்குமேலே சுக்கு நசுக்குதேன்”

“சீ நாயே, எதிர்ப்பேச்சா பேசுதே?”

அவன் கையை ஓங்கிவிட்டான். அவள் நிமிர்ந்து பார்த்ததும் கண்களை சந்தித்து தணிந்தான். “ம்ம்ம்” என்று உறுமியபின் திரும்பி சென்றான்.

அவளுக்கு அழுகை வந்தது. கண்ணீரை முந்தானையால் துடைத்தபடி உள்ளே சென்றாள். அவள் கண்ணீர் விடாத ஒருநாள் கூட இல்லை. என்னதான் தவறு நடக்கிறது?

அம்மா கூட கேட்டாள், போனமுறை வந்தபோது. “ஏண்டி? ஏன் இப்டி இருக்கே? சண்டையா?”

“சண்டை ஒண்ணுமில்லை”

“பின்ன?”

“ஒண்ணுமில்லை”

அதை எப்படி இன்னொருவரிடம் சொல்லமுடியும்? காரணம் இல்லாமல் நாளெல்லாம் சண்டை என்று சொன்னால் என்ன என்று புரிந்துகொள்வார்கள்.

கொல்லைப்பக்கம் ஏசுவடியாள் பாத்திரங்களை விளக்கிக்கொண்டிருந்தாள்.

“சுக்குவெள்ளம் கேட்டாங்களாடி?” என்றாள் அழகம்மை.

“என்னமோ கேட்டாங்க… நான் இங்க கைவேலையா இருந்தேன்”

“சாவாம கிடந்து நம்ம சீவனை வாங்குறாங்க” என்றபடி அவள் குலுக்கையில் இருந்து சுக்கு எடுத்துக்கொண்டு வந்தாள்.

அம்மி மிகப்பழையது. இருநூறு வருடம் பழையது என்று ஏசுவடியாள் சொன்னாள். அவள் சின்னக்குழந்தையாக அங்கே வரும்போதே அது அப்படித்தான் இருந்ததாம். அரைத்து அரைத்துத் தேய்ந்து படகுபோன்ற வடிவில் இருந்தது. அதன் பரப்பு கன்னங்கரேலென்று உருகி வழிந்ததுபோல தெரிந்தது. குழவியின் உருளைவடிவம் மெழுகுபோல கரைந்து குழிவாகியிருந்தது.

தொட்டுப்பார்த்தாலும் மெழுகுதான். கல் என்றே சொல்லமுடியாது. இரவில் கொல்லைப் பக்கம் வந்து பார்த்தால் அங்கே அண்டாவில் தண்ணீர் இருப்பதுபோல அதன் பளபளப்பு தெரியும்.

“இதிலே அரைக்கிறதுக்கு எனக்க மண்டையிலே அரைக்கலாம்…” என்றபடி அழகம்மை சுக்கை அதன்மேல் வைத்தாள். குழவியால் அடித்து அதை உடைத்தாள். குழவி அம்மிப் பரப்பின் மேல் வழுக்கி வழுக்கி உருண்டது. “வெண்ணைச்சேத்திலே சறுக்குத மாதிரி சறுக்குது. அம்மியா இது?”

“உருட்டாதீங்க அம்மிணி… தூக்கி தூக்கி இடியுங்க”

“தூக்கி இடிச்சா எனக்க கையை ராத்திரி அசைக்க முடியாது. நேத்தும் காயத்திருமேனி எண்ணை இட்டு சூடுதண்ணி பொத்திக்கிட்டாக்கும் படுத்தேன்”

ஏசுவடியாள் ஒன்றும் சொல்லாமல் கழுவிய கலங்களுடன் உள்ளே சென்றாள்.

“ராப்பகலா சுக்குத்தண்ணி… இந்த சுக்கெல்லாம் எங்க போவுதோ? நேத்து ஒரு மணங்கு சுக்கு அரைச்சு வைச்சேன். அதை ராத்திரியே கலக்கிக் கலக்கிக் குடிச்சாச்சு” என்று அழகம்மை தனக்குத்தானே சொன்னாள்.

“ரெண்டு பேருக்கும் வயித்திலே அக்கினி இல்ல… வயசாச்சுல்லா?” என்று வெளியே வந்த ஏசுவடியாள் சொன்னாள். “சுக்கு அக்கினியாக்குமே” என்றபடி மீண்டும் கழுவ அமர்ந்தாள்.

“சுக்க கரைச்சு தலையிலே ஊத்தணும்… எரியட்டும்” என்று அழகம்மை சுக்கை அரைத்தாள்.

“அதுக எப்டியும் இந்த வருசமோ அடுத்த வருசமோ தெக்குக் காட்டிலே எரியும்…”

“ஆமா எரியுதுக… என்னைய எரிச்சபிறவுதான் அதுக போவும்.”

சுக்குநீரைக் கொண்டு சென்றபோது கிழவனும் கிழவியும் அதை மறந்துவிட்டிருந்தனர். சுவரைப் பிடித்துக்கொண்டு மெல்ல நடந்து கிழக்குப்பக்கம் ஒட்டுத்திண்ணையை அடைந்து அதில் அமர்ந்திருந்தனர். இருவர் மேலும் வெயில் பொழிந்து கொண்டிருந்தது.

அவர்கள் அருகருகே அமர்வதில்லை. கிழவர் அமருமிடத்திற்கு சற்றுத் தள்ளி, அவரைப் பார்க்காதவள் போல இன்னொரு கோணத்தில் திரும்பித்தான் கிழவி அமர்வாள். இருவரும் பேசிக்கொண்டிருப்பார்கள். தொலைவில் இருந்து பார்த்தால் இருவரும் இருபக்கமும் வந்து நின்றிருக்கும் கண்ணுக்குத் தெரியாத எவருடனோ தனித்தனியாகப் பேசிக்கொண்டிருப்பது போலத் தெரியும்.

“பாட்டா சுக்குவெந்நி”

“ஏ?”

“சுக்கு வெந்நி”

“எதுக்கு?”

“கேட்டியள்லா?”

“ஆ…” என்றார் கிழவர். “ஏட்டி நீ கேட்டியாடீ சுக்குவெள்ளம்?”

கிழவி “மாசிமாசத்திலே மானத்திலே மேகம்… பூத்த மரமெல்லாம் என்னெண்ணு விளங்கும்?” என்றாள்

“நீ சுக்கு வெள்ளம் கேட்டியோ?”

“மாசியிலே மளையடிச்சா மாமரத்துக்கு கேடுன்னு சொல்லு உண்டும்”

“ஏட்டி நீ சுக்குவெள்ளம் கேட்டியா?”

“மாசிமளையும் மாட்டுமூத்திரமும் சமம்னு சொல்லுண்டுல்லா?” என்றாள் கிழவி.

அவள் மெல்ல பின்னால் நகர்ந்து உள்ளே சென்றுவிட்டாள். அவர்கள் அப்படித்தான். இருவரும் பேசிக்கொண்டே இருப்பார்கள். ஆனால் ஒருவர் பேசுவதற்கும் இன்னொருவர் பேசுவதற்கும் சம்பந்தமே இருக்காது. அவ்வப்போது சின்னச்சின்ன சண்டைகள். அதுவும் சம்பந்தமே இல்லாமல் தனித்தனியாக ஒலிக்கும். ஆனால் விழித்திருக்கும் நேரமெல்லாம் அருகருகேதான்.

கண்ணப்பனின் அம்மாவழிப் பாட்டாவும் பாட்டியும். அவன் அப்பாவும் அம்மாவும் அவனுக்கு ஏழு வயதிருக்கும்போதே காய்ச்சலில் அடுத்தடுத்துப் போய்விட்டார்கள்.

திருமணத்தின் போதுதான் அவர்களை அழகம்மை நேரில் கண்டாள். “வாங்க, அம்மைக்கும் அப்பனுக்கும் நமஸ்காரம் பண்ணுங்க” என்று சடங்குசெய்த மூத்தார் அழைத்தார்.

அவர்கள் இருவரையும் தாங்கிக்கொண்டு வந்தனர். கிழவரின் ஊன்றுகோல் கீழே விழுந்தது. “எனக்க தடி, எனக்க தடி” என்று அவர் கைநீட்டி குழறினார்.

அதை எடுக்க எவரோ குனிந்தனர் “அத விடுங்க… இப்ப அது எதுக்கு?” என்றார் தங்கையா நாடார்.

அவர்கள் இருவரையும் அருகருகே நிறுத்தினர். கிழவர் கிழவியை அவள் யார் என்பதுபோல பார்த்தார். அவருடைய தாடை தொங்கி வாய் திறந்திருந்தது.

அவளும் கண்ணப்பனும் குனிந்து கால்தொட்டு வணங்கினர். கிழவரும் கிழவியும் அதைக் கவனிக்காமல் வேறெங்கோ பார்த்தனர்.

“ஆசீர்வாதம் செய்யுங்க… அப்பச்சி”

”ஏ?”

“ஆசீர்வாதம்! ஆசீர்வாதம்!”

ஆனால் அவருக்கு ஒன்றும் கேட்கவில்லை. அந்தச் சந்தடியில் தடுமாறிக் கொண்டிருந்தார். கிழவி திரும்பி வேறொரு பெண்ணை பார்த்து “ஏட்டி நீ கனகால்லா?” என்றாள். “உனக்க அம்மை என்ன செய்யுதா?”

“பாட்டா, ஆசீர்வாதம் செய்யுங்க. உங்க கொள்ளுப்பேரனுக்கு கல்யாணமாக்கும்.”

”ஏ?”

“ஆசீர்வாதம்! ஆசீர்வாதம் செய்யுங்க!”

கரடிநாயர் எரிச்சலுடன் “அந்த கைய எடுத்து குட்டிக தலையிலே வையுங்கடே…அது போரும்” என்றார்

தங்கையா நாடார் “ஆமா, அது போரும்லா?” என்று சொல்லி இருவர் கையையும் தூக்கி அவர்களின் தலைமேல் வைத்தார்.

கிழவரின் கால்களும் கிழவியின் கால்களும் அங்கே நின்ற கால்களில் இருந்து வேறுபட்டிருந்தன. பழைய ஏதோ மரத்தின் வேர்கள் போல தெரிந்தன.

அவள் அப்பால் வந்ததும் எசக்கியம்மைச் சித்தி “அவருக்கு அம்மையும் அப்பனும் இல்லை. வளத்தது இவங்களாக்கும்…” என்றாள்.

அதை ஏற்கனவே சொல்லியிருந்தார்கள். அவளுக்கு ஞாபகம் வந்தது. ஆனால் அதை அப்பா அவளிடம் முன்பு சொன்னபோது அவள் அதை அவ்வளவு பொருட்படுத்தவில்லை. அவளுக்கு கண்ணப்பனை பிடித்திருந்தது. கருப்பாக, விடலிப்பனை போல உறுதியாக இருந்தான்.

“கண்ணப்பனுக்க அம்மைக்க தாத்தாவும் பாட்டியுமாக்கும் ரெண்டுபேரும்… நல்ல தீர்க்காயுசு உள்ள சோடியாக்கும். அவங்களுக்க ஆசீர்வாதம்னா தெய்வ அருளில்லா?” என்றாள் முப்பிடாதி சித்தி.

“இனி ரெண்டுபேத்தையும் இவளாக்குமே பாத்துக்கிடணும்?” என்றாள் அழகம்மை அக்கா.

“ஆமா, அது புண்ணியமாக்குமே?” என்று முப்பிடாதிச் சித்தி சொன்னாள்.

“நல்ல யோகம்” என்று அழகம்மை அக்கா இடக்காகச் சிரித்தாள்.

வீட்டுக்கு வந்தபிறகுதான் அவள் அது எத்தனை பெரிய சுமை என்று தெரிந்தது. வீட்டில் இரண்டு கைக்குழந்தைகள் இருப்பது போலத்தான். எந்நேரமும் ஓலம் கிளம்பும். எதற்கென்று அவர்களுக்கே தெரியாது. எதாவது வேண்டுமென்று கூப்பாடு போடுவார்கள். போய் கேட்பதற்குள் மறந்துவிடுவார்கள். எதையாவது நினைத்துக்கொண்டு எவரையாவது அழைப்பார்கள்.

அவர்களால் அழகம்மையை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. கண்ணப்பனின் அம்மா செம்பகத்தாள் என்று நினைத்தார்கள். அவள் அம்மா பொன்னம்மை என்று சிலசமயம் நினைத்தார்கள். அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்றே அவர்களுக்குத் தெரியவில்லை. கண்ணப்பனின் பாட்டி பொன்னம்மையின் இடைக்கோடு வீட்டில் இருப்பதாக பலசமயம் நினைத்துக் கொண்டிருந்தார்கள்.

அவளால் எதையுமே கண்ணப்பனிடம் சொல்லி புரியவைக்க முடியவில்லை. அவன் இரவு பகலாக அலைந்து கொண்டிருந்தான். முச்சந்தியில் ஒரு மளிகைக்கடை, நான்கு வயல்களில் வாழை நட்டிருந்தான், நெல் விவசாயம் தனியாக. நேரமே இல்லை. என்ன சொன்னாலும் எரிந்துவிழுந்தான். அடிக்கப் பாய்ந்தான்.

“நான் இங்க கிடந்து சாவுதேன்… இதுகளை வச்சுகிட்டு என்னாலே ஒண்ணும் செய்ய முடியல்ல” என்று அவள் சொன்னாள்.

“முடியல்லன்னா போயிச் சாவுடி… எனக்கு ரெண்டு கிளடுக கெடக்கு, அதுகள பாத்துக்கிடணும்னு சொல்லியாக்கும் நான் பொண்ணு தேடினது. உனக்க அப்பன் உனக்குப் போட்ட அஞ்சுபவுன் நகைக்காக இல்ல பாத்துக்க” என்று அவன் பற்களைக் கடித்துக்கொண்டு சொன்னான்.

அவள் கூசிவிட்டாள். அவள் வீட்டில் அவளுக்கு அன்றாடக் கூலிக்காரர்களைத்தான் மாப்பிள்ளையாகப் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்பா ஒரு மாட்டுவண்டி வைத்து பிழைப்பை நடத்துபவர். எட்டுஜோடி உழவுமாடும், பத்து எக்கர் வயலும் கொண்ட வீட்டுக்கு ஒற்றை மருமகளாக அவள் வந்தது கண்ணப்பன் பெண் மட்டும் போதும் என்றதனால்தான்.

அவள் கிழடுகளைப் பற்றி கண்ணப்பனிடம் பேசக்கூடாது என்றுதான் நினைப்பாள். ஆனால் எப்போதாவது பேச்சு வந்துவிடும். அவன் கத்த ஆரம்பித்துவிடுவான். “எனக்கு என் பாட்டனும் பாட்டியும்தான் முக்கியம். உனக்கு பிடிக்கல்லேன்னா நீ கொண்டுவந்த அஞ்சு பவனை எடுத்துக்கிட்டு கெளம்பிரு… உன்னைய கெட்டின தோசத்துக்கு உனக்குண்டான செலவுக்கு நான் பணம் தாறேன், போருமா?”

அவளுக்கு கிழடுகள்மேல் எந்த வெறுப்பும் உண்மையில் இல்லை. அவர்கள் இரண்டுபேரும் மலைமாடனும் மாடத்தியும் போல அமர்ந்திருப்பது பார்க்க நன்றாகத்தான் இருந்தது. ஆனால் அதை அவனிடம் புரியவைக்க முடியவில்லை.

அவள் அடுக்களைக்குப் போய் மதியத்துக்கு உலை வைத்தபின்னர் வெளியே வந்தாள். முந்தானையால் வியர்வையைத் துடைத்தபடி தெற்குபக்கம் தோட்டத்திற்குள் சென்றாள். அங்கே அந்த பாறையை இரண்டு பக்கமும் உடைத்துவிட்டிருந்தனர்.

“அதுக்குள்ள உடைச்சாச்சா?” என்றாள்.

”உடைக்கிறதுக்கு அஞ்சு நிமிசம்தான் ஆகும். கணக்குப் பாத்து உடைக்கணும்லா, அதாக்கும் இவ்வளவு நேரம்.”

“இப்டி உடைஞ்சு போச்சே”

“கல்லுக்கு ஒரு அடுக்கு உண்டு. அதைப்பாத்து வாக்கா தட்டினா கண்ணாடி மாதிரி பிளந்துவரும்”

தாணுலிங்கம் மெல்ல தட்டுவது போலத்தான் தெரிந்தது. மூன்றாவது பக்கமும் டிப் என்ற ஒலியுடன் பொளிந்து விழுந்தது. கல் சதுரமாக ஆனது. அவள் கண்களுக்கு அம்மி தட்டுபட்டுவிட்டது.

”ஆ, அம்மி!”

“இது அம்மி ஆகிறதுக்கு இன்னும் நெறைய வேலை இருக்கு அம்மிணி”

“குழவி?”

“கொளவியும் இதே கல்லுலேதான்… அம்மை எந்த கல்லோ அதானே பிள்ளைக்கும்?”

அவர்கள் இருவரும் இரு பக்கமாக அமர்ந்து அம்மியை கொத்த ஆரம்பித்தனர். இரு கிளிகள் சிலைப்பொலி எழுப்புவது போலிருந்தது. டிச்! டிச்! டிச்!

கருங்கல் கற்கண்டு சீவல்கள் போல உடைந்து உடைந்து விழுந்தது. அதன் தூள் விபூதி போலிருந்தது.

“எங்க முப்பாட்டனுங்க சிற்பம் செதுக்கினவங்க… இப்ப சிற்பத்துக்கு எங்க ஆளு? இப்டி அம்மிகொத்த எறங்கிட்டமேன்னு ஒரு துக்கம் இருந்தது. எங்க அப்பா சொன்னாரு, ஏலே, அம்மியும் சிற்பம்தானேன்னு. ஒரு கல்லு கோயிலிலே நிக்குது. ஒரு கல்லு தான் தேய்ஞ்சு சமையலுக்கு கூடுது. ரெண்டும் கல்லுக்க கனிவுல்லாடேன்னாரு. அதோட அந்தக் குறை போச்சு.”

ஏசுவடியா வந்து “கறிக்கு வெட்டணும்லா அம்மிணி?” என்றாள்.

அவள் உள்ளே போய் காய்கறிகள் எடுத்துக் கொடுத்தாள். கிழவனும் கிழவியும் வீட்டுக்கு உள்ளே வந்துவிட்டனர். அவர்களின் அறையில் அமர்ந்துகொண்டனர். அங்கிருந்தே “ஏட்டீ இம்புடு குடிவெள்ளம்…” என்றார் கிழவர்.

அவள் கஞ்சிவடித்த தண்ணீரில் கொஞ்சம் நீர் சேர்த்து உப்பிட்டு ஆற்றிக் கொண்டுசென்று கொடுத்தாள். இரண்டு பேருக்குமே அன்னநீர் பிடிக்கும்.

கிழவனும் கிழவியும் பேசிக்கொண்டிருந்தனர். கிழவி பாறைக்காவு பகவதியைப் பற்றி. கிழவர் பாம்பாடிக்கு வேட்டைக்குப் போனதைப் பற்றி. ஆனால் இருவருமே அவ்வப்போது மகிழ்ந்து சிரித்துக் கொண்டார்கள்.

அவள் அவியலும், வெள்ளரிக்காய் புளிக்கறியும் வைத்தாள். கவுச்சி இல்லாமல் கண்ணப்பனுக்கு சோறு இறங்காது. ஆகவே கொஞ்சம் கருவாடு இருந்ததைப் பொரித்தாள்.

கண்ணப்பனுக்கு சாப்பாட்டை கடைக்கு கொடுத்தனுப்ப வேண்டும். அதை பித்தளைப் போணிகளில் வைத்துக் கொண்டிருக்கையிலேயே கடைப்பையன் வந்துவிட்டான். கொடுத்தனுப்பிவிட்டு தாணுலிங்கத்திற்கும் மனைவிக்கும் இலைபோட்டுச் சாப்பாடு போட்டாள்.

“கவுச்சி சாப்பிடுவீகளா?”

“இல்லை அம்மிணி, கையிலே கலையுள்ள கூட்டமாக்கும் நாங்க. உசிருகொன்னு புசிக்கிறதில்லை.”

அவர்கள் சாப்பிட்டுச் சென்றபின் அவளும் ஏசுவடியாளும் அமர்ந்து சாப்பிட்டனர்.

சாப்பிட்டதும் படுக்கும் வழக்கமே அவளுக்கு இல்லை. ஆனால் சென்ற சிலநாட்களாகவே சோறு உள்ளே சென்றதும் உடல் ஓய்ந்து தூக்கம் கேட்டது. கூடத்திலேயே சிமிண்ட் தரைமேல் படுத்தாள்.

தூங்கி எழுந்தபோது வெயில் சாய்ந்துவிட்டிருந்தது. சன்னல்வழியாக வந்த ஒளி நான்கு சதுரங்களாக தரையில் விழுந்துகிடந்தது. தோப்பிலிருந்து எழுந்த காக்கைகளின் ஓசையின் தொனி மாறியிருந்தது.

ஏசுவடியாள் தோசைக்கு அரைத்துக் கொண்டிருந்தாள்.

“பாட்டா விளிச்சாகளாடீ?” என்று அவள் கேட்டாள்.

“ஆமா, தண்ணி கேட்டாக. குடுத்தேன். உறங்கிட்டிருக்குதுக” என்று ஏசுவடியாள் சொன்னாள்.

அவள் முகம் கழுவி வந்தபோது தெற்கே தாணுலிங்கமும் காளியம்மையும் முழு அம்மியை கொத்திக் கொண்டிருப்பதைக் கண்டாள்.

“அம்மி சோலி முடிஞ்சுபோட்டே” என்று அழகம்மை வியந்தாள்.

“அம்மிக்க ரூபம் வந்தாச்சு… இனி பரப்பு நேரா ஆகணும். சோலி கிடக்கு” என்றார் தாணுலிங்கம்.

மாடசாமி வந்து நின்றிருந்தான். அவளைக் கண்டதும் தலைமுண்டாசை அவிழ்த்தான்.

அவள் போணிகளைக் கொண்டு சென்று கொடுத்தாள். அவன் தொழுவில் கயிறை இழுத்து கொம்பால் அழிகளை முட்டிக்கொண்டிருந்த பசுவின் கொம்புக்குழியில் கையால் வருடினான். அது நீள்மூச்சு சீறி வால்தூக்கி சிறுநீர் கழித்தது. கன்றை அவிழ்த்துவிட்டான். அது பாய்ந்து அன்னையின் அகிடில் முகம் சேர்த்து முட்டி முட்டிக் குடிக்கத் தொடங்கியது. அதன் கடைவாயில் பாலின் நுரை எழுந்தது. பசு கண்சொக்கி குட்டியை நக்கிக்கொண்டிருந்தது. நக்கப்பட்ட இடத்தில் முடியில் நாவின் தடம் புற்பரப்பில் நீர் ஓடியதுபோல தெரிந்தது.

அழகம்மை அதைப் பார்த்துக் கொண்டு நின்றாள். அவள் உள்ளம் மலர்ந்துவிட்டது. கண்களை எடுக்க முடியவில்லை.

மாடசாமி பசுவின் அருகே குந்தி அமர்ந்து பால் கறக்க ஆரம்பித்தான். செம்பில் பால் விழும் ஒலி எழுந்தது.

புதுப்பாலை செம்பில் வாங்கிக் கொண்டுசென்று காபி போட்டாள். அதை அவளே கொண்டுசென்று தாணுலிங்கத்துக்கு கொடுத்தாள்.

“புதுப்பால் காப்பியாக்குமே” என்று சொல்லி மலர்ந்து சிரித்தபடி தாணுலிங்கம் கோப்பையை வாங்கிக்கொண்டார். “இவ காப்பி குடிக்கமாட்டா.”

“அப்டியா?” என்றாள் அழகம்மை.

”ஆமா, காப்பின்னா கள்ளுமாதிரின்னு நினைப்பு களுதைக்கு”

காளியம்மை ஒரு உருளைத்தடியில் துணியைச் சுற்றி அதன்மேல் நீலநிறமான மையை ஊற்றிக்கொண்டிருந்தாள். வெட்கத்துடன் சிரித்து “எனக்கு அதுக்க மணம் பிடிக்கல்ல. என்னமோ ஒரு கறைமணம் மாதிரி” என்றாள்.

”அதுக்காக கொண்டுவந்த காப்பிய திருப்பி கொண்டு போகவேண்டாம்… குடுங்க” என்று தாணுலிங்கம் வாங்கிக்கொண்டார். “எப்பவும் இவளுக்க காப்பிய நானாக்கும் குடிக்கிறது.”

“இது எதுக்கு?” என்று அழகம்மை உருளைத்தடியைச் சுட்டிக்காட்டி கேட்டாள்.

”உருட்டுநிரப்பு பாக்கணும்லா?”

“அது என்ன?”

“பாருங்க”

அம்மியின் பரப்பின்மேல் நீலச்சாயம் நனைக்கப்பட்ட துணி சுற்றப்பட்ட உருளைத்தடியை மெல்ல ஒரு முறை உருட்டி எடுத்தார். அதன்மேல் மேடாக இருந்த ஓரிரு இடங்களில் மட்டும் சாயம் பட்டிருந்தது.

“இனி இதை மட்டும் மெதுவா செதுக்கி எடுக்கணும்” என்றார் தாணுலிங்கம்.

அவருடைய உளி மென்மையாக கல்லைத் தொட்டுத் தொட்டு எழுந்தது. அந்த மேடுகள் வெண்ணிறமான தூளாக மாறின.

துணியால் அம்மியை நன்றாகத் துடைத்துவிட்டுக் கைகாட்டினார். காளியம்மை மீண்டும் அந்த நீலத்துணிசுற்றிய உருளையை அந்தப்பரப்பில் உருட்டினாள். இப்போது நீலப்பரப்புகள் கொஞ்சம் கூடுதலாக இருந்தன.

அவர் ஒரு சிறு உளியை எடுத்து மிக மெல்ல தட்டி அந்த நீலப்பரப்புகளை மட்டும் செதுக்க ஆரம்பித்தார்.

“இப்டி செதுக்கினா சமமா ஆயிடுமா?”

”நாலஞ்சுதடவை உருட்டணும் அம்மிணி”

மீண்டும் நீலத்துணி உருளையை உருட்டியபோது நீலப்பரப்புகள் படலம் போல பரவியிருந்தன.

“அம்மி அப்டியே நீலமா ஆகணும்… அப்பதான் சமமா ஆகியிருக்குன்னு அர்த்தம்” என்றார் தாணுலிங்கம். “மேடுகள் ஒண்ணொண்ணா இல்லாமலாகணும்…”

அவள் ”அந்தப் பழைய அம்மியிலே வைச்சு உருட்டினா நீலமா ஆகுமா?” என்றாள்.

”அது ஓடித்தேஞ்சு பளிங்காட்டுல்ல இருக்கு. நெறம் நிக்காது” என்றாள் காளியம்மை.

“ஆமா, மூத்ததும் குருத்து ஆகும்னு ஒரு சொல்லு உண்டு” என்றார் தாணுலிங்கம். “கல்லு அப்டியே எளங்குருத்து மாதிரி ஆயிடும். செம்பனூர் ஜமீன் பங்களாவிலே படிக்கட்டுக்குக் கைப்பிடியா போட்டிருக்கிறது பனந்தடியாக்கும். நல்ல மூத்த பனை. தொட்டா பச்சைப்பிள்ளைய தொட்டதுமாதிரி இருக்கும்.”

ஏசுவடியாள் வந்து நின்று “கருப்பட்டி வேணும்னு கேக்குதாரு பாட்டா” என்றாள்.

“எதுக்கு இப்ப கருப்பட்டி?” என்று அவள் கேட்டபடி எழுந்தாள்

“ஆருக்கு தெரியும்? நினைப்பு வந்திருக்கும், கேக்குதாரு.”

நீலநிற உருளையை மீண்டும் உருட்டினாள் காளியம்மை. அம்மியின் பரப்பு முழுக்க நீலம் பரவி பளபளத்தது.

“குழவிக்கும் இந்த மாதிரி செதுக்கணும்” என்று தாணுலிங்கம் சொன்னார். “ஆனா அதுக்கு பிறவும் அரைச்சா கல்லுகடிக்கும். ஒரு நாலைஞ்சுநாளு உமி வைச்சு அரைக்கணும்… நல்லா பதம் வந்து பாலீஷாகி கிட்டின பிறவுதான் கறிக்கு அரைக்கணும் பாத்துக்கிடுங்க.”

அவள் அம்மியையே பார்த்துக் கொண்டிருந்தாள். என்னவென்றறியாமல் அவளுடைய கண்கள் கலங்கிவிட்டன.

“கருப்பட்டி குடுக்கட்டா?” என்றாள் ஏசுவடியாள்.

“நான் குடுக்குதேன்.”

அவள் கருப்பட்டி எடுத்துக்கொண்டு சென்றாள். கட்டிலில் கிழவர் அமர்ந்திருக்க கிழவி கீழே கால்நீட்டி அமர்ந்திருந்தது.

”கருப்பட்டி கேட்டிகளா பாட்டா?” என்றாள் அழகம்மை.

“ஆ?”

”கருப்பட்டி?”

“ஆமா கேட்டேன்… எனக்கு இல்ல. இவளுக்கு… குடு”

கிழவி ஆவலாகக் கருப்பட்டியை கைநீட்டி வாங்கிக்கொண்டது.

“நாலஞ்சு தடவை கருப்பட்டி கருப்பட்டின்னு பேச்சு வாக்கிலே சொன்னா.., செரி, சவத்துக்கு இனிப்பு ஞாபகம் வந்துபோட்டுது போலன்னு நினைச்சு கொண்டுவரச் சொன்னேன்” என்றார் கிழவர்.

கிழவி “ஆவணி மாசமாக்கும் நாகராஜா கோயிலிலே திருளா… நல்ல கூட்டம்லா?” என்று ஏதோ சம்பந்தமில்லாமல் சொன்னாள்.

அழகம்மை புன்னகைத்தாள். திரும்பி சமையலறைக்குச் செல்லும் போதும் புன்னகைத்துக் கொண்டே இருந்தாள்.

***

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 09, 2021 10:35

நூலகப்புரவலர் அனுபவம் – கிருஷ்ணன் சங்கரன்

அன்புள்ள ஜெ.,

நான் அலுவலகவேலையாக அயர்லாந்து சென்றபோது ‘டப்ளி’னில் இருந்து வடக்குஅயர்லாந்தில் இருக்கும் ‘பெல்பாஸ்ட்’ நகருக்கு வாரவிடுமுறையில் ஒருநாள் சுற்றுலா சென்றபோது, பத்து இடங்கள் கொண்ட ஒரு அட்டவணையை வழிகாட்டி எல்லோரிடமும் கொடுத்து உங்களுக்குப் பிடித்த இடங்களுக்குச் சென்றுவிட்டு இன்னும் மூன்று மணிநேரத்தில் திரும்பி வாருங்கள் என்று கூறியபோது நான் தெரிவு செய்து முழுநேரமும் இருந்த இடம் இருநூறு வருடப் பழமையான ‘லினன் ஹால்’ நூலகம். நான் ஒரு குறிப்பிட்ட இடத்தில், அங்கு இருப்பதனாலேயே மட்டற்ற மகிழ்ச்சியோடு இருந்தேன் இருக்கிறேன் என்றால், என் நினைவுக்கு வருவது நூலகங்களே. சிறுவயதில் வீட்டில் முதன்முதலில் கேட்ட ஆங்கில வார்த்தை ‘லைப்ரரி’. அங்கு என்னைச் செலுத்திய நூல்கள் எனக்கு அறிமுகமானது அம்மாவின்மூலம் வீட்டில்தான். ‘மங்கை’ புத்தகத்தில் வந்த சிவசங்கரியின் ‘மெள்ள மெள்ள’ தொடரை அப்பாவுக்கு வாசித்துக் காண்பிக்கும் அம்மாவின் முகம் இன்றும் நினைவில்உள்ளது. அம்மாவின் முக்கியமான பொழுபோக்கு பாட்டு மற்றும் படிப்பு. கர்னாடக சங்கீதம் முறையாகப் பயின்றவர். உறவினர் வட்டத்திலும், அலுவலகத்திலும் சிறந்த பாடகி மற்றும் இசை ரசிகை. லட்சுமி, சிவசங்கரி, அனுராதாரமணன், நா.பா, கல்கி என்று படித்தார். பின்னாளில் நான் அறிமுகப்படுத்திய தி.ஜானகிராமனின் ‘மரப்பசு’ வைப் படித்துவிட்டு ‘ராஸ்கல், எப்படி இப்பிடி எழுதலாம்’ என்று மனம் குமுறினார். அவருக்குப் பிடித்த எழுத்தாளரும் அவர்தான்.

நாடார் கடையிலிருந்து சணல் சுற்றி வருகிற செய்தித்தாள்களையும் விடாமல் படித்த காலம். நாங்கள் குழந்தைகள் இருக்கும்போது என்னுடைய அப்பாவும் அம்மாவும் ஆங்கிலத்தில் பேசிக்கொள்வார்கள். எங்களுக்குப் புரியக்கூடாதாம். ஆனால் எனக்கோ வீட்டிலிருந்த லிப்கோ தமிழ் – ஆங்கில சொல்லகராதியை நாவலைப்போல படித்து முடித்துவிட்டிருந்தததனால் ‘கட்டுடைக்க’ சுலபமாக இருந்தது. ‘உங்கள் நண்பன்’ என்ற நடமாடும் நூலகம் மூலம் படித்த ரத்னபாலா, பாலமித்ரா, அம்புலிமாமா, முத்து, பொன்னி காமிக்ஸ்கள். வீட்டில் வாங்கிய ‘கோகுலம்’,’சோவியத் நாடு’ என்று வாசிப்பு தொடர்ந்தது. முதலில் அறிமுகமான புனைவெழுத்து லட்சுமி, சிவசங்கரி போன்ற பெண்எழுத்தாளர்களே. அப்புறம் நா.பா.வின் எழுத்துக்கள். வரலாற்று நாவல்கள் ஏனோ என்னைக் கவரவில்லை. மன்னர்கள் பற்றிய திரைப்படமும் பிடிக்காது. ‘பொன்னியின் செல்வன்’ படித்ததே கல்லூரிக்கு வந்த பிறகுதான். நிலக்கோட்டை அரசு நூலகத்தில்தான் எப்போதும் பழி கிடப்பது. அப்பா, அம்மா அரசு ஊழியர்கள் என்பதால் அங்கு குறிப்புதவி நூல்களெல்லாம் கூட படிக்கக் கிடைத்தது. துப்பறியும் சாம்பு, வாஷிங்டனில் திருமணம், தில்லானா மோகனாம்பாள் என்று கொஞ்சம் கொஞ்சமாக வாசிப்பு வட்டம் விரிந்தது. நிலக்கோட்டை அரசு மேநிலைப்பள்ளியில் பதினோராம் வகுப்பு படிக்கும்போது ஆங்கில ஆசிரியர் சுந்தர்ராஜன் சார் ‘வாழ்க்கையைப் படிக்கணும்னா ஜெயகாந்தனைப் படிங்கடா தம்பிகளா’ என்று கூறியது வாசிப்புத்தளத்தையே மாற்றியமைத்தது. ஆனால் அந்த வயதில் ‘ரிஷிமூலம்’ போன்ற கருத்துச் செறிவான  நாவல்களைப் படித்துவிட்டு மனதளவில் செரிக்கமுடியாமல் திணறியதும் நினைவில் உள்ளது. அந்த வயதில்தான் கி.ரா வும் அறிமுகம். அதன்பிறகும் சுஜாதா அலையில் ஒரு பத்துவருடம் திளைத்துக்கொண்டுதான் இருந்தேன்.

கல்லூரியில் ஆர்.கே.நாராயணில் தொடங்கி சிட்னி ஷெல்டன், ஜெஃப்ரி ஆர்ச்சர், ஜான் க்ரிஷாம், ஹெரால்ட் ராபின்ஸ் என்று தொடர்ந்து விக்ரம் சேத், அமிதவ் கோஷ் வரை ஒரு பத்துவருடம் நீச்சலடித்து முடித்திருந்தேன். சென்னையில் நான் வேலையில்லாமல் திண்டாடிய காலங்களில் என்னுடைய பகல்நேர உறைவிடம் ‘கன்னிமாரா’ நூலகம்தான். அதற்குள் உங்கள் சங்கச்சித்திரங்களும், கண்ணீரைப் பின்தொடர்தலும் வாசிப்புத் தளத்தையே மாற்றிவிட்டிருந்தது. ஆங்கில மோகம் அறவே ஒழிந்து விட்டிருந்தது. ‘ஸம்ஸ்காரா’,’மதிலுகள்’,’எரியும் பனிக்காடு’ என்று வாசகப் பரப்பு மேலும் விரிந்தது.  உங்கள் தளத்தில் நூல்அறிமுகம் படித்த பிறகு,  சென்னை  கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் சு.வெங்கடேசனின் ‘காவல்கோட்டம்’ படிப்பதற்காகவே பத்துமுறை சென்றேன். ஒவ்வொருமுறையும் நூறுபக்கம். முழுநாளும் அந்த நூலகத்திலேயே இருந்து ஜி.நாகராஜனின் மொத்தப்படைப்புகளையும் படித்து முடித்தேன். அதுபோக நங்கநல்லூர் ‘ரங்கா லெண்டிங்’ நூலகத்திலும் உறுப்பினர். ரசிகமணி டி.கே.சி கல்கியில் எழுபது ஆண்டுகளுக்கு முன் எழுதிய கம்பராமாயணத்தொடர், க.நா.சு வின் கட்டுரைத் தொகுதிகள் முதல் கிலியன் பிளின்னின் ‘கான் கேர்ள்’ வரை அங்குதான் படித்து முடித்தேன். 2010 ல் உங்கள் தளம் அறிமுகமானது முதல் ‘சீனிக்குள்ள எறும்பு மாட்டிக்கிட்ட கணக்கு’தான்.

இவ்வளவுக்குப் பிறகும் என்னை இன்றும் ஆச்சரியப்படுத்துபவை அரசு நூலகங்களே. இப்பொழுதும் வாரத்துக்கு இருமுறையாவது தவறாது பழவந்தாங்கல் அரசு நூலகத்திற்குச் செல்கிறேன்.  நூலகம் மூன்று தளங்களிலாக உள்ளது. கீழே செய்தித்தாள் பிரிவு, முதல் தளத்தில் கட்டுரை, கவிதை, நாவல்கள். இரண்டாம் தளத்தில் குறிப்புதவி நூல்கள். அது நூலகரைப் பொறுத்தவரை இருநூற்று ஐம்பது ரூபாய்க்கு மேற்பட்ட நூல்களின் உறைவிடம். அந்த நூல்களை வெளியில் யாருக்கும் படிக்கத் தருவதும் இல்லை. யாரும் படிக்காமல் புழுதி சேர்த்துக்கொண்டு அங்கேயே மட்கி அழிவதற்கென்றே விதிக்கப்பட்டவை. உங்கள் விஷ்ணுபுரம், கொற்றவை எல்லாவற்றிற்கும் அதுவே கதி. நூலகர் ‘மேட’த்திடம் நான் எடுத்துச் செல்லும் புத்தகத்திற்கான மதிப்பைப் போல இரண்டு மடங்கு பணம் முதலிலேயே தந்து விடுகிறேன் என்று கெஞ்சிப் பார்த்தேன். சம்மதிக்கவில்லை. ஆனால் பல வருடங்கள் தொடர்ந்து சென்றதில் அவருக்கு ஒரு பரிதாபம் ஏற்பட்டு நான் மூன்று ‘டோக்கன்’களையும் கொடுத்து விட்டு ஒரே ஒரு குறிப்புதவி நூல் எடுத்துக்கொள்ளலாம் என்று அனுமதித்தார். முதல் தளத்திற்குச் செல்பவர்களே ஒரு நாளைக்கு நாலைந்து பேர்தான். இரண்டாம் தளத்துக்கு போவது நான் மட்டுமே. ஆம், அது என்னுடைய நூலகம் என்றே கூட நினைத்துக்கொள்வேன். பண்டிதமணி நடேச சாஸ்திரி, மாதவையாவின் நூல்கள், சுந்தர ஷண்முகனாரின் ‘கெடிலக்கரை நாகரிகம்’, பி.என்.சுந்தரத்தின் ‘மங்கல இசை மன்னர்கள்’, கிழக்கு பதிப்பகத்தின் அசோகமித்திரனின் கட்டுரைத் தொகுதிகள் செம்பதிப்பு, நீங்கள் சூத்திரதாரியோடு சேர்ந்து செய்த இலக்கிய உரையாடல்கள் போன்ற நூல்கள் கையில் கிடைக்கும்போதெல்லாம் ஏடு கிடைத்த உ.வே.சா வைப்போல மகிழ்ந்திருக்கிறேன்.
ஒரு வாசகனாக நான் நூலகத்துக்கு என்ன செய்திருக்கிறேன்?  நூலகத்தின் ஆயிரக்கணக்கான நூல்களையும் ஒரு முறையாவது பிரட்டிப்பார்த்து தூசிதட்டி, எழுத்தாளர் வாரியாக, தொகுதி வாரியாக அடுக்கியிருக்கிறேன். எல்லாப்புத்தகங்களையும் எடுத்துப்பரத்தி வைத்துக்கொண்டு, தரையில் உட்கார்ந்துகொண்டு ஒரு முழுநேர ஊழியனைப்போல வேலைபார்த்திருக்கிறேன்.       அதாவது காலையில் மூன்று மணிநேரம். சாயந்திரம் மூன்று மணிநேரம். சனி, ஞாயிறு மூன்று வாரங்கள் தொடர்ந்து சென்று இந்த வேலையைச் செய்தேன்.  தூய்மைப்படுத்தும் போதே, நான் படிக்கவேண்டிய நூல்களை இனம்கண்டு கொள்வதும் தலையாய நோக்கம். அதுபோக, பல வருடங்களாக நான் புத்தகக் கண்காட்சிகளில் வாங்கும் பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நூல்களை இந்த நூலகத்திற்கு வழங்கியிருக்கிறேன். அதை வருடக் கணக்காக யாரும் தொட்டுப்பார்க்காததை நினைத்து மனம் புழுங்கியிருக்கிறேன். ஒரு கட்டத்தில் அப்படிக் கொடுப்பதை நிறுத்திக்கொண்டு, ‘ரெங்கா லெண்டிங்’ கில் பாதி விலைக்கு விற்க ஆரம்பித்தேன். பணம் இரண்டாம் பட்சம், அந்த நூல் தனக்கான வாசகனைக் கண்டுகொள்ள வேண்டும் என்பதே முக்கியக் காரணம். புதிதாக வாங்குகிற நூல்களுக்கும் இடம் தேவையாய் இருப்பது மட்டுமே  காரணமல்ல. ஒரு நூலை இரண்டாம்முறை படித்தபின் மூன்றாம் முறை படிப்பது என்பது அநேகமாக இல்லை. அப்படி படிக்கவேண்டுமென்று தோன்றினால் நூலகத்திலிருந்து படித்துக் கொண்டால் போகிறது என்பதே என் நிலைப்பாடு. அப்போதுதான் ‘புரவலர் பெருந்தகைப் பட்டியல்’ என்று ஒரு பலகையில் புரவலர்களின் பெயர்களை எழுதி வைத்திருந்ததைப் பார்த்தேன். ஆயிரம் ரூபாய் கொடுத்த வாசகர்களின் பட்டியல். புரவலர் பட்டயம் உண்டு. இப்படி நிதிவழங்கியோரின் பெயர்களை விளம்பரப்படுத்திக்கொள்ளவும் அனுமதி.

நான் ஏழுபேரை புரவலர்களாக்க முடிவு செய்தேன். எனக்கு வாசிப்புப்பழக்கம் வரக்காரணமான என் அம்மா மங்களம் அவர்கள். ஜெயகாந்தனை அறிமுகப் படுத்திய என் ஆசிரியர் சுந்தர்ராஜன், மற்ற ஐவரும் எழுத்தாளர்கள். அவர்களுக்கு மேலான நூலகப் புரவலர்கள் யாராவது இருக்கிறார்களா என்ன? த.ஜெயகாந்தன், தி.ஜானகிராமன், ஜெயமோகன், கி.ராஜநாராயணன், அசோகமித்திரன். ஆனால் இத்தனை பெயர்களை எழுத இடம் இருக்குமா? என்ற சந்தேகத்தில் முதல் ஐந்துபெயர்களை மட்டும் எழுத, அதாவது நானே எழுத முடிவுசெய்தேன். கடைசி இரண்டு பேருக்கும் ஞானபீடத்தின் ராசிதான் இதிலும். ‘பெயிண்டரு எடுக்கமாட்டைய்ங்காரு’ என்றார் நூலகர் மேடம்.  ‘இல்ல மேடம், நானே எழுதிர்ரேன்’ என்றேன். ‘எழுதுவீங்களா?’ என்றார். சற்றே ஆணவம் அடிபட, ‘ஒங்களைவிட நல்லா எழுதுவேன்’ என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டு, ‘ஏதோ ஒங்க ரேஞ்சுக்கு எழுதுவேன், மேடம்’ என்றேன். அதாவது மேலே எழுதப்பட்ட பெயர்களில் இரண்டை அவர் எழுதியதாகக் கூறியிருந்தார்.

செப் 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பெயிண்ட், பிரெஷ்ஷை வாங்கிக்கொண்டு ‘ஏடிஎம்’ மில் பணம் எடுத்துக்கொண்டு நூலகம் சென்றேன். முதலில் இருகோடுகளை வரைந்து பெயரை சிலேட்டுக் குச்சியால் எழுதிக்கொண்டேன். இப்போது அதன் மீது பெயிண்டை நனைத்துப் பூச வேண்டியதுதான். ஆனால் பிரெஷ்ஷை பெயிண்ட்டில் தொட்டு எழுதுவது நினைத்த அளவுக்கு எளிதாக இல்லை. பிரெஷ்ஷின் முனையில் மிகக் குறைந்த அளவே பெயிண்டைத் தேக்கிக்கொள்ளவேண்டும் என்ற பாடத்தை நான் ஒருமாதிரியாகக் கற்றுக்கொண்டபோது என் அம்மாவின் பெயரை ‘ஒரு வழியாக’ எழுதிமுடித்திருந்தேன். ஆனால் எது குறைந்த அளவு என்பதுதான் கடைசிவரை தெரியவேயில்லை. முதலாவதாக தரையில் உட்கார்ந்தால், எழுதுகிற இடம் மிக உயரமாகவும், நின்றால் மிகவும் கீழேயும் இருந்தது. முட்டிபோட்டு எழுதுவதே சாலச்சிறந்தது. ஆனால் இரண்டுநிமிடத்திற்கு மேல் அப்படி நிற்கவும் முடியவில்லை. உஸ்ஸ்…எப்படியோ நின்றும், கிடந்தும், படுத்தும் இரண்டு பெயர்களை எழுதி விட்டேன். இனி எழுத்தாளர்கள்தான். உங்களை யாரும் ‘இனிஷியலோ’டு குறிப்பிட்டதில்லை. ஆனால் மற்ற இருவருக்கும் அப்படியில்லை. எழுத்தாளர் என்று எழுதாமல் பெயரைமட்டும் எழுதலாமா என்று யோசித்தேன். இன்னும் தமிழ்ச்சமூகம் அந்த அளவுக்கு முதிரவில்லை என்ற எண்ணம் வந்தது.

எழுத்தாளரில் முதல் ‘ழு’ வை எழுதி முடிப்பதற்குள் விரலெல்லாம் பெயிண்டால் நனைந்துவிட்டது. அதை அவ்வப்போது துடைத்துக்கொண்டு  எழுதவேண்டும் என்பது மெதுவாகத்தான் மண்டையில் உரைத்தது. அதற்குள் பிரெஷ் விரலோடு ஒட்டிக்கொண்டு வளைந்துகொடுக்க மறுத்தது. இன்னும் இரண்டுமுறை இந்த ‘ழு’வை எழுதவேண்டும் என்று நினைத்தபோதே பகீரென்றது. பெயிண்ட் காய்ந்து விடும் என்பதற்காக ‘பேன்’ னும் போட்டுக்கொள்ளவில்லையா, கொஞ்சம் கிறுகிறுவென்று வருவதுபோல இருந்தது. கடைசியில் ஒருவழியாக உங்கள் பெயரை எழுதிமுடிக்கப்போகும்போது ஒரு ஈ ஒன்று முகத்தில் வந்து அமர்தலும் அலைதலுமாக இருந்தது. பெயின்டையும் பிரெஷையும் முதலில் கீழே வைத்துவிட்டு அதை அறைந்து கொல்லுவதைப் பற்றி தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்தபோதே நூலகர் வந்து நேரமாவதை நினைவுபடுத்தினார். ஒருவழியாக எழுதி முடித்தேன்.  ‘சுண்டைக்கா காப்பணம் சொமைகூலி முக்காப்பணம்’ என்பது போல பெயிண்டை விட விலைகூடிய ‘பெயிண்டை கையிலிருந்து சுத்தம் செய்யும்’ திரவத்தை வாங்கி சுத்தம் செய்துகொண்டு, ஒப்பனை கலைந்த ஆட்டக்காரனாக ஒரு வழியாக வீடுபோய்ச்சேர்ந்தேன். எல்லோருடைய பெயரையும் முகவரியையும் ஒரு தாளில் எழுதச்சொல்லியிருந்தார் நூலகர். எல்லா எழுத்தாளர்களுக்கும் என் முகவரியைக் கொடுத்தது நிறைவாக இருந்தது. மறுநாள் நூலகத்தில் நுழையும்போது யாரும் பார்க்கிறார்களா என்று ஒருமுறை பார்த்துக்கொண்டு, ஏதோ நவீன ஓவியனைப்போல என்னுடைய எழுத்தை பக்கத்திலும் தூரத்திலுமாக நின்று ரசித்துக்கொண்டிருந்தபோதுதான் கவனித்தேன். அங்கு இன்னும் இரண்டுபெயர் எழுத இடம் இருக்கிறது.

 

அன்புடன்,

கிருஷ்ணன் சங்கரன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 09, 2021 10:34

மழையும் ரயிலும் – கடிதங்கள்

ரயில்மழை

அன்புள்ள ஜெ

வாட்ஸப் வழியாக இந்தக் கட்டுரைக்கான சுட்டி வந்துசேர்ந்தது. மழைரயில் என்னும் கட்டுரை. மழையில் ரயிலில் செல்லும் அனுபவம்.அற்புதமான ஒரு சொற்சித்திரமாக அமைத்திருக்கிறீர்கள். மழைக்கு ரயிலில்தான் செல்லவேண்டும். பஸ் மழைக்கு உகந்தது அல்ல. மழையில் பஸ் ஒருமாதிரி சீறி உறுமிக்கொண்டு செல்கிறது. நகரத்துச் சாலைகளில் ஓடுகிறது. ரயில்தான் பரந்த வயல்வெளிகள், பொட்டல்கள் வழியாக ஓடுகிறது. மழையில் மண் குளிர்வதை ரயிலில் போனால்தான் காணமுடியும். ரயிலில்தான் மழையை முழுமையாக உணரமுடியும்.ரயில் அப்படியே மழையில் குளிர்ந்துவிடுகிறது. ரயிலுக்குள் இருக்கும்போது நாம் நனையாமல் மழைக்குள் இருக்கும் உணர்வு உருவாகிறது

ராஜி

***

அன்புள்ள ஜெ

திடீரென்று இந்த கட்டுரை வலைச்சூழலில் பிரபலமாகியிருக்கிறது. நான் இப்போதுதான் வாசிக்கிறேன். மூன்றாண்டுக்குப்பிறகு எழுதிய கட்டுரை. அரசியல் கட்டுரைகள் இலக்கியக்கட்டுரைகள் எல்லாம் பழையதாகிவிடுகின்றன. இந்தக்கட்டுரை இப்போது எழுதிய கட்டுரைபோல தூய்மையாக மாறாமல் உள்ளது. அந்த மழை அப்படியே மூன்றாண்டுகளாக அப்படியே பெய்துகொண்டிருப்பதுபோல ஒரு வகை உணர்வு ஏற்படுகிறது

ஜெயக்குமார்

கருவிமாமழை

முதல் மழை

மழையைத்துரத்துதல்

ஆனியாடி

இடவப்பாதி

மழையில் நிற்பது….

வரம்பெற்றாள்

பருவமழைப் பயணம்-2010 – படங்களுடன்

பருவமழைப் பயணம்

பருவமழைப்பயணம் 2012

மழைப்பயணம் 2017

மழை- கடிதங்கள்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 09, 2021 10:31

குதிரை மரம்- தேவதாஸ்

தமிழில் மிக அதிகமான கதைகள் எழுதப்பட்ட காலம் கொரோனா தீ நுண்ணுயிரி தாக்கத்தால் பொது முடக்கமும், வீடடங்கும் அமலிலிருந்த காலம். இக் காலத்தில் எழுதப்பட்ட கதை வெள்ளத்தில் சில நல்ல கதைகளும் கவனிப்பாரின்றி அடித்துச் செல்லப்பட்டன. அவற்றில் ஒன்று சொல்வனம் இதழ் 242ல் மார்ச் 14, 2021 அன்று வெளியான கே.ஜே. அசோக்குமாரின்  குதிரை மரம் குறுநாவல், அது குறித்தான ஒரு பார்வை இக்கட்டுரை.

ஒரு நல்ல நாவலானது ஒரு வாசகனுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட அனுபவங்களையும், புரிதல்களையும் வழங்கும். முதல் பார்வையில் ஒரு நவீனத்துவ யதார்த்த நாவலாக இதை வாசிக்கலாம். 1990களில் நரசிம்மராவ் ஆட்சிக் காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட பொருளாதார தாரளமயமாக்கல் காரணமாக பல்வேறு தொழிற்துறைகளில் ஏற்பட்ட வளர்ச்சி பல கைவினைக் கலைஞர்களின் வாழ்க்கையில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பேரளவு இயந்திர மயமாக்கப்பட்ட உற்பத்தியில் குறைந்த செலவில் மிகை உற்பத்திக்கு வழி வகுக்கப்பட, மரபான கைவினைக் கலைஞர்கள் தொழில்மயமாக்கலுடன் போட்டியிட இயலாமல் வேறு தொழில்களை நாட வேண்டி வந்தது. அப்படிப்பட்ட ஒரு நபரின் வாழ்வைச் சொல்லும் யதார்த்தவாத படைப்பாக இந்நாவலை வாசிக்கலாம்.

இரண்டாவதாக சராசரிக்கும் மேற்பட்ட ஒரு கலைஞன் தன் துறையில் ஒரு உன்னதத்தை அடைய முனையும் போது, பொருளாதார, குடும்பச் சிக்கல்களும், ஊழும் அவனை திசை திருப்ப, அதனால் உண்டாகும் அக நெருக்கடிகளையும், அவனது உண்மையான அக விருப்பத்திற்கும், நடைமுறை வாழ்க்கையின் முரண்களுக்கும் இடையே அவன் படும் அல்லல்களையும், அலைக்கழிப்புகளையும் மெய்யியல் பார்வையிலும் உள்ளுறையாக இந்நாவல் அலசுகிறது. இதனால் யதார்த்தவாதத்தைத் தாண்டி இந்நாவல் அடுத்த தளத்திற்குச் செல்கிறது.

மூன்றாவதாக ஒரு சில படிமங்களை உருவாக்கி அதன் வழியாக கதையின் சில நிகழ்வுகளை குறிப்பாக உணர்த்த முயல்கிறார் நாவலாசிரியர். இக்காரணத்தினால் இது சமீப காலங்களில் வந்த சிறந்த நாவல்களில் ஒன்றாகிறது என்பது என் எண்ணம், கைத்தறிப் பட்டு நெசவில் பயன்படுத்தப்படும் குதிரை மரம் என்ற தர அளவீட்டுக் கருவி ஒரு படிமமாகக் கையாளப்படுகிறது. மேலும் ராமர் வேடமிட்டு பாடி இரந்துண்ணும் ஒரு கதாபாத்திரமும் குறியீடாக சிறப்பாக கதையின் ஓட்டத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

கதை நிகழும் களம் தஞ்சையின் புறநகர்ப்பகுதி என நினைக்கிறேன். இக்கதையை நெசவை முதன்மையாகக் கொண்ட பெரும்பாலான தமிழக ஊர்களில் எங்கு வேண்டுமானாலும் நிகழ்வதாகக் கொள்ளலாம். உதாரணமாக பவானி, பள்ளிபாளையம், கொடுமுடி, திரிபுவனம் என. கதையின் காலம் இன்றைக்கு சுமார் 10-15 ஆண்டுகளுக்கு முன்பான கட்டுமானத் துறை உச்ச வளர்ச்சியிலிருந்த காலகட்டம். நாவலின் துவக்க அத்தியாயமே மிகச் சிறப்பாக வாசகனை உள்ளிழுக்கிறது. குறிப்பாக முதல் வரி. ஏப்ரல் மாதத்தின் இளங்காலையின் ஒளிக்கதிர்கள் பிரபுராமின் வீட்டினுள் சாய்வாக விழுவதை தறியில் சுற்றிய நூலைப் போலக் கண்டு அவன் ஒளிக்கதிர்களை துணியாக நெய்ய முனைகிறான். ஆரம்ப வரிகளிலேயே நாவலின் பேசு பொருட்களும், மாயத் தோற்றமும் கதையில் வெளிப்படுகிறது. காவிரைக்கரை எழுத்தாளர்களுக்கே உரிய பாணியில் உரையாடல்கள் வழியே வீட்டின் சூழலும், வறுமையும் ஒளி மேலேறுவதைப் போல துலங்கி வருகின்றது. அவனுடைய மனைவி வச்சலா, குழந்தைகள் வாணி, நரேன் ஆகியோரின் அறிமுக வர்ணனைகள் ஒரு கலைத் திரைப்படத்தின் காட்சிகளென விரிகின்றன

கதையின் ஒரு சிறு சாராம்சத்தை மட்டும் பார்க்கலாம். பல தலைமுறைகளாக பட்டு நெசவில் ஈடுபடும் குடும்பத்தில் மூன்றாவது பிள்ளையாகப் பிறக்கும் பிரபுராம் தனது இரு அண்ணன்களும் பரம்பரைத் தொழிலை விட்டு விலகிச் செல்ல, தன் தந்தையிடம் தனது பராம்பரியத் தொழிலை சிறு வயதிலியே கற்றுத் தேர்கிறான். அவன் தந்தைக்கு தான் செய்வது தொழிலல்ல ஒரு படைப்புச் செயல் என்ற கர்வம் உண்டு. அதை அவர் தன் மகனுக்கும் கடத்தி விட்டுச் செல்கிறார்.

தன் தொழிலின் மீது பக்தியும், பற்றும் கொண்ட பிரபுராமை காலமும், சூழலும் மனைவியின் வற்புறுத்தலும் தொழிலைத் துறந்து மனைவியின் உறவினரான எலக்ட்ரீஷியன் கேசவனிடம் உதவியாளானாக சேர நிர்பந்திக்க அவன் வேண்டா விருப்பாக அத்தொழிலில் ஈடுபடுகிறான். அவனுடைய மனநிலையை பின்வரும் சில வரிகளில் சொல்கிறார் கதாசிரியர்.

ஒலிகளற்ற பெருங்காட்டில் தனித்து விடப்பட்டதை போல உணர்ந்தான். ஆரவாரமான மனதர்களுக்கிடையே மாட்டிய சிறு விலங்கின் பயத்தை ஒத்திருந்தது அவனுடைய நிலை.

மனைவின் அலட்சியம், கேசவனின் உடல்மொழிகளும், தோரணைகளும் மாறுவது போன்ற குண மாறுதல்களை நுண்ணுர்வு கொண்ட பிரபு எளிதாக உணர்கிறான். அது அவனிடம் உண்டாக்கும் வேலை நிலையின்மை குறித்த அச்சம், கேசவனின் உதவியாள் ராஜாவின் மீது உண்டாகும் அசூயை, படிப்படியாக தன் சுயத்தை இழக்கும் சூழல், தன்மானம், தொழில் பக்தியை இழந்து தானும் சாதாரண கீழ்மைகள் நிறைந்த மனிதன் ஆகிறோமோ என்ற பதட்டம் (Angst), ராமர் வேடமிட்டு பிச்சை எடுக்கும் மனிதனிடம் உள்ள கலைத்திறனும், புகார்களற்ற வாழ்வுடன் ஒப்பிட தன் வாழ்வின் பொருளின்மையை உணர்ந்த சலிப்பு (ennui)  பிரபுராமை துணிகளுக்கு சாயமேற்றும் வச்சிரத்தை உண்டு தற்கொலை செய்ய முனையச் செய்தது.

தற்கொலைக்கு முயன்ற பிரபு கேசவனாலும் அவன் மனைவியாலும் காப்பற்றப் படுகிறான். மருத்துவ மனையில் வீடு திரும்பிய அவன் தனது வீட்டின் சூழலில் ஏற்படும் மாற்றங்களை அவதானித்து நம்பிக்கை கொள்கிறான். மீண்டும் அவன் எலக்ட்ரிஷியன் உதவியாள் வேலையைத் தொடரத் தீர்மானிக்க, மனைவி தலையிட்டு அவனுக்குப் பிடித்தமான நெசவையே செய்யச் சொல்கிறாள். நம்பிக்கையும், புதிய உத்வேகமும் கொண்டு வேலை தொடங்கும் அவன் உடல்நலக் குறைவு காரணமாகவோ, நீண்ட இடைவெளி காரணமாகவோ தன்னால் முந்தைய செய்நேர்த்தியுடன் தனது படைப்பைச் செய்ய முடியாத காரணத்தால் தான் நெய்த புடவையை தானே வெட்டிச் சீரழித்து மயங்கி விழுவதுடன் அவலமாக நாவல் நிறைவு பெறுகிறது. படைப்புத் திறனை இழக்கும் கலைஞனுக்கு அது அவன் உயிரிழப்புக்கு நிகரனாது என்ற அவன் தந்தையின் வார்த்தை நினைவுக்கு வருகிறது. நாவல் அவலமாக முடிவுற்றாலும், நாவலின் இடையில் இயற்கை சூழலுக்கு ஏற்ப அடையும் மாற்றம் இயல்பாக சுட்டப்படுகிறது. அது தொழில் பக்தியும், அர்ப்பணிப்பு உணர்வும் கொண்ட கலைஞன் மீண்டெழுவான் என்பது இயற்கையின் விதியோ என்ற எண்ணத்தை எழுப்புகிறது.

தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சி தன்

மெய்வருத்த கூலி தரும்.

பிரபுராமி பார்வையிலேயே நாவல் முழுவதும் எழுதப்பட்டிருகின்றது. ஓரிரண்டு இடங்களில் அவன் மனைவியின் பார்வை காணப்படுகிறது. நாவலில் நெசவு குறித்த நீண்ட விவரணைகளும், கலைச் சொற்களும் அதன் பொருளும் வழங்கப்பட்டுள்ளன. பிரபுராமின் நினைவு கூறல் வழியாக அவனுடைய தந்தையின் வாழ்வு குறித்த சித்திரம் ஒரு அத்தியாயத்தில் இடம் பெற்றுள்ளது. தன் வாழ்விற்கான விழுமியங்களை அவன் பெற்றுக் கொண்ட விதம் இவ்வத்தியாயத்தில் கூறப்படுகிறது. நெசவு குறித்த அனுபவம் உடையவர்களுக்கு இந்நாவல் நிச்சயம் மேலான வாசிப்பனுபவத்தை நல்கும் என்பதில் ஐயமில்லை.

நுண்ணர்வு கொண்ட பிரபுராமின் அவதானிப்பில் மனிதர்களின் குணமாறுதல்கள் அழகாக நாவலெங்கும் சொல்லப் படுகிறது. மனைவியின் நடவடிக்கைகள், கேசவனின் உடல்மொழி மாற்றம், தந்தை எனும் பிம்பம் அடிபடுவதின் வலி, ராம வேடதாரிக்கு உதவ முடியாததன் கையறு நிலை, அவரைக் கண்டு ஒளியும் குற்றவுணர்வு, அவரை அவன் மனைவி கையாளும் விதம் முதலியன வெகு யதார்த்தமாகவும், சிறப்பாகவும் சொல்லப் பட்டுள்ளது.

மனித வாழ்வின் இருப்பு (existence) குறித்த அடிப்படை வினாக்கள் எழுப்பும் இக்கதை அதில் ஊழ், காலம், சூழல் முதலியவற்றின் பங்கு குறித்தும் ஆதாரமான கேள்விகளை எழுப்பும் நல்ல இலக்கியப் படைப்பு என்பது என் கருத்து.

 

தேவதாஸ்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 09, 2021 10:31

நீலம் கடிதங்கள்

அன்புநிறை ஜெ

நீலம் வாசித்து அவ்வப்போது அரைகுறையாக எதையோ எழுதிக் கொண்டும் பேசிக் கொண்டும் இருக்கிறேன். ஆனால் உண்மையில் ஆழத்தில் இருக்கிறதெனக் காட்டிக் கண்ணுக்குப் புலனாகாமல் நழுவிக் கொண்டே இருக்கும்  உணர்வொன்றுதான் இத்தனை பிதற்றலுக்கும் காரணம். கூண்டைத் திறக்கும் வழி புலப்படாது கிளியின் சிறகுகள் படபடத்துக் கொண்டே இருக்கின்றன.

பிரக்ஞையால் அறியும் நீலத்தின் வாசிப்பை, ராதையின் பிரேமையின் நிலைகள், கம்சனின் உபாசனை வழி, காளிந்தியெனும் பெருக்கு, ஐம்புலன்களும் ஐம்பூதங்களும் நீலத்தில் வரும் விதம், கதைசொல்லிகள், நீலத்தின் பறவைக்குலங்களும் மலர்களும் என்பது போல பலவிதமாக அறிவால் வகுத்தும் தொகுத்தும் அறிவது ஒரு விதம். இன்னும் யோக, தாந்த்ரீகப் பயிற்சி உடையவர்கள் அறிவார்ந்த தளத்தில் அதைத் திறக்கும் போது வேறு சில வாயில்கள் இருக்கலாம்.

பெரும்பாலும் எப்போதும் வாசிப்பது நீலத்தை ஒரு கவிதையாக, உணர்வுப் பெருக்காக நீலத்தின் பித்துக்கு ஒப்புக் கொடுத்து வாசிக்கும் ஒரு உணர்வுநிலை சார்ந்த வாசிப்பு. இதிலேயே நீலத்தின் படிமங்களும், குறியீடுகளும் ஏற்படுத்தும் தீவிர உளநிலை மற்றும் கனவுகள் சார்ந்த அனுபவங்கள் நிகழ்கின்றன. வெளியேற முடியாத நீலப்பெரும்பித்தாக வாசிப்பு ஆகிவிடுகிறது.

ஆனால் இதற்கப்பால் வேறெங்கோ இருந்துகொண்டு இருளில் விழிமின்னுகிறது நீலம்.

இது வெறும் விழிப்பு நிலையிலிருந்து எழுதப்பட்ட படைப்பல்ல என்று நீலம் மலர்ந்த நாட்களின் அனுபவத்தை வாசித்தாலே உணரலாம். யோகத்தின் வாயிலாக ஆழ்மனதின் ஆழங்களுக்கு செல்லும் பயிற்சி உள்ளவரால் விழிப்புமனமும், ஆழ்மனமும் முயங்கிக் கலந்த வெளியில் எழுதப்பட்டது எனப் புரிந்து கொள்கிறேன். இரண்டடுக்குகளில்

ஸ்வப்னம் மட்டுமல்லாது பிரபஞ்சத்தின் துளியாக தனை உணரும் சுஷுப்தியின் தளத்திலிருந்து எழுந்து வந்த படைப்பு என நீலத்தை உணர்கிறேன். இது எதையுமே சரியாகப் புரிந்து கொள்ளாமல் வார்த்தைகளை இறைத்து விடக் கூடாது எனும்  உணர்வும் இருக்கிறது. என்றாலும் அறிந்து கொள்ளுதலின் பொருட்டுக் கேட்கிறேன். நீலத்தை எழுதுவதன் வாயிலாகத் தாங்கள் அடைந்தவற்றில் சிலவற்றையேனும் ஆழமாக அறியுமாறு மேலும் திறந்து கொள்வதே பெரிய அனுபவமாக இருக்கும் எனத் தோன்றுகிறது. அதை எப்படி அறிவது?

மிக்க அன்புடன்,

சுபா

அன்புள்ள ஜெ

நீலம் வாசித்துக்கொண்டே இருக்கிறேன். எத்தனை காலமாக இந்த சிறிய சூலை வாசிக்கிறேன் என்றே தெரியாது. இதன் அர்த்தங்களெல்லாம் எனக்கு தெரியாது. இதன் பாவத்துக்காகவே இதை வாசிக்கிறேன். இதை வாசிக்கையில் எனக்கு வரும் கண்ணீர்தான் என்னுடைய அனுபவம். ஏன் என்றே தெரியாமல் ஒரு பெரிய தவிப்பும் நிறைவும் வரும். இந்நாவலை ஆரம்பத்தில் என்னால் வாசிக்க முடியவில்லை என்பதும் உண்மை. உள்ளே போகவே முடியாமலிருந்தது. மெல்லமெல்ல உள்ளே போய் இப்போது வெளியேற முடியாத நிலை

பிற்பாடு பெரியவர்களிடம் பேசும்போது இந்நாவலைப்பற்றி சொன்னேன். அவர்களில் சிலர் படித்திருக்கிறார்கள் என்பது ஆச்சரியமானது. ராதாபாவம் என்பதுதான் வைஷ்ணவ மனநிலை என்று சொன்னார்கள். ராதாவாக இருந்து கண்ணனை அறிந்த முயர்ச்சி என்று நீலத்தைப் பற்றிச் சொன்னார்கள். அந்த பாவனையே அந்த நெகிழ்ச்சியை உருவாக்கியிருக்கிறது என்று தெரிந்தது

லக்ஷ்மி ராஜகோபால்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 09, 2021 10:30

November 8, 2021

காந்தியும் கறுப்பினத்தவரும்

தென்னாப்ரிக்காவில் காந்தி வாங்க

’காந்தி தென்னாப்ரிக்காவில் இருக்கையில் அங்குள்ள கறுப்பர்களை காஃபிர்கள் என்று குறிப்பிட்டார், அவர் அவர்களுடைய சுதந்திரப்போராட்டத்தை ஆதரிக்கவில்லை, இந்தியர்கள் கறுப்பினத்தாரைவிட மேலானவர்கள் என்று திரும்பத்திரும்ப கடிதங்கள் மற்றும் மனுக்களில் எழுதினார், ஆகவே அவர் ஒரு இனவெறியர்’ – இக்கருத்தை தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த ஒரு கிறிஸ்தவர் நூலாக எழுதி அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் காந்திக்கு எதிரான காழ்ப்பை பரப்ப நாற்பதாண்டுகளுக்கும் மேலாக மிகக்கடுமையாக பணியாற்றினார். அவருக்கு கிறித்தவ அமைப்புக்கள் சிலவற்றின் பின்னணி இருந்தது.

அவருடைய குரல் பின்னர் கல்வித்துறையில் ஊடுருவியது. Ashwin Desai மற்றும் Goolam Vahed  எழுதிய The South African Gandhi: Stretcher-Bearer of Empire அந்தத் தரப்பை ஓர் ‘ஆய்வுக்கருத்தாக’ முன்வைத்தனர். இவ்விரு நூல்களுமே ஆங்கிலத்தில் slander என்று சொல்லப்படும் சொல்லுக்கான மிகச்சிறந்த உதாரணங்கள். உதிரி வரிகளை வெட்டிவெட்டிச் சேர்த்து ஆதாரங்களாகக் காட்டி இங்கே தமிழகத்தில் நாம் எழுதிக்கொண்டிருக்கும் காழ்ப்பு வரலாற்றின் மிகச்சிறந்த வடிவங்கள் இவை. இவற்றுக்கிணையானதுதான் இந்துத்துவ – பிராமணச் சாதிவெறியரான ராதா ராஜன் எழுதிய  Eclipse Of The Hindu Nation: Gandhi And His Freedom Struggle என்னும் அவதூறுவரலாறு.

இன்றைய கருத்துருவாக்கங்களிலுள்ள ஆதிக்க அரசியலின், பெருநிறுவனப் பின்னணியின், நிதிவலையின் வரலாற்றை அறிந்தவர்கள் இந்நூல்கள் ஏன் எழுதப்படுகின்றன என்று புரிந்துகொள்ள முடியும். ஆனால் இவை பொதுச்சமூகத்தில் ஆழ்ந்த செல்வாக்கைச் செலுத்துகின்றன. ஏனென்றால் இவை நிறுவனங்களால் மிகப்பெரிய அளவில் பிரச்சாரம் செய்யப்படுகின்றன. சில ஆண்டுகளுக்கு முன் ஓர் அமெரிக்க நகரில் காந்தி சிலை நிறுவ அரசு முடிவெடுத்தபோது அங்குள்ள கறுப்பினத்தார்  ‘தீவிர இனவாதியான’ காந்தியின் சிலையை அங்கே நிறுவக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

இந்த நூல்களிலும் இதையொட்டிய விவாதங்களிலும் உள்ள அப்பட்டமான சார்பும் அதன் விளைவான இரட்டைநிலைபாடும் திகைப்பூட்டுபவை. வெள்ளைய இனவெறியர்களால் தென்னாப்ரிக்கா கைப்பற்றப்பட்டு, அங்குள்ள மக்கள் அடிமையாக்கப்பட்டு, நிறவெறி மிக்க ஓர் அரசு அங்கே உருவானது பதினேழாம் நூற்றாண்டில். அந்த நுகத்தில் இருந்து வீரம்செறிந்த ஒரு போராட்டம் வழியாக தென்னாப்ரிக்கா விடுதலை அடைந்தது 1992ல். இத்தனை காலம் அங்கே இருந்த வெள்ளைய இனவெறிக்கு கருத்தியல் அடித்தளம் அமைத்தளித்தவை அங்கிருந்த கிறித்தவ மதநிறுவனங்கள். புகழ்பெற்ற இனவெறியர்கள் அனைவருமே ஆழ்ந்த கிறித்தவ பக்திமான்களும்கூட.ஆனால் கிறிஸ்தவத்தை அந்தப்பழியில் இருந்து மிக எளிதாக வெளியே கொண்டுவருகின்றன மேலைநாட்டு ஊடகங்களும் ஆய்வுநிறுவனங்களும். அதற்கு கிறிஸ்தவ நிறுவனங்களில் இருந்து எழுந்து நிறவெறிக்கு எதிராகப்போராடிய ஓரிரு தனிமனிதர்களை உதாரணமாகக் காட்டுகின்றன. அவர்களே உண்மைக்கிறித்தவர்கள், கிறித்தவ மனநிலை அதுவே என இன்று வரலாறு சமைக்கின்றன. மறுபக்கம் இனவெறிக்கு எதிராக கறுப்பினத்தாருடன் இணைந்து போராடிய இந்திய வம்சாவளியினரை இனவெறியர்களாகச் சித்தரிக்கின்றன.

காந்தியை அந்நிறுவனங்கள் இலக்காக்குவது இந்த நீண்டகாலச் ’சரித்திரச்சமைய’லின் பொருட்டே. அதற்குரிய சரித்திரப்புரட்டர்கள் ஆய்வுலகில் மிகுதி. அவர்கள் கருத்தியல் அடியாட்கள் மட்டுமே. இப்படித்தான் ஐரோப்பா உலகவரலாற்றை எழுதியிருக்கிறது. கல்வித்துறைகளில் நிதியூடுருவல்களை நிகழ்த்தி அதை உலகமெங்கும் நிலைநிறுத்துகிறது. இன்னும் ஒருநூறாண்டுகளாகும் இந்த வரலாற்றெழுத்தின் ஆதிக்கத்திலிருந்து ஆசியாவும் ஆப்ரிக்காவும் வெளியேற.

தென்னாப்ரிக்காவில் காந்தியின் வாழ்க்கை நாம் குறைவாகவே அறிந்த ஒன்று. காந்தியே அவருடைய தன்வரலாற்றில் பதிவுசெய்த நிகழ்ச்சிகள் வழியாகவே நாம் அக்காலகட்டத்தை அறிந்திருக்கிறோம். இந்த விவாதங்களுக்குப் பின்னரே காந்தியின் தென்னாப்ரிக்க வாழ்க்கையை விரிவாக பதிவுசெய்யவேண்டுமென்னும் ஆர்வம் காந்திய ஆய்வாளர்களிடையே உருவாகியது. அந்நூல்களில் ராமச்சந்திர குகாவின் தென்னாப்ரிக்காவில் காந்தி [தமிழாக்கம் சிவசக்தி சரவணன்] ஒரு முக்கியமான நூல். Gandhi Before India என்னும் நூலின் தமிழாக்கம் இந்நூல்.

இதில் குகா வெறுமே தகவல்களை மட்டுமே அடுக்கிச் செல்கிறார். மூல ஆவணங்கள் மற்றும் நினைவுக்குறிப்புகளின் அடிப்படையில் விரிவான ஆதாரங்களுடன் சீராக ஒழுங்கமைக்கப்பட்ட தகவல்களின் பெருந்தொகுதிதான் இந்நூல். குகாவின் தரப்பு என்ன என்பது கூட இந்நூலில் இல்லை. மிகநுணுக்கமான, மிகச்சிறிய தகவல்கள்கூட தரவுகளின் பின்பலத்துடன் இதில் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால் வெறும் ஆவணப்பதிவாக இல்லாமல் ஒரு சீரான சித்தரிப்பாக எழுதப்பட்டிருப்பதனால் வரலாற்றினூடாக நிகழ்ந்துசெல்லும் அனுபவத்தை அளிக்கிறது இந்நூல். இந்நூல் முன்வைக்கும் கருத்துக்கள் என்பவை இத்தரவுகள் வழியாக நாம் உருவாக்கிக் கொள்ளக்கூடியவைதான்.

1893 ஏப்ரல் 24 அன்று தாதா அப்துல்லா என்னும் வணிகரின் அழைப்பின்பேரில் காந்தி தென்னாப்ரிக்காவுக்குப் பயணமானார். அப்போது அவருக்கு இருபத்துநான்கு வயது. அவதூறுசெய்யும் வரலாற்றுப்புரட்டர்கள் செய்வது என்னவென்றால் 1948ல் தன் 78 ஆவது வயதில் மறைந்த ‘மகாத்மா’ காந்தியாக அந்த இருபத்துநான்கு வயதான பையனை உருவகித்துக்கொண்டு, அந்த பையனுடைய நம்பிக்கைகள் மற்றும் செயல்பாடுகள் அனைத்தும் எழுபத்தெட்டு வயதான அகிம்சைப்போராளியின் ஆளுமை என வாதிடுவதுதான். இந்த அபத்தத்தை ஐரோப்பியரால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பல்கலையில் இருந்து முனைவர் பட்டம்பெற்ற சிலர் செய்து ஆங்கிலத்தில் அந்நூல் வெளிவருமென்றால் அதற்கு உடனடியாக உலகளாவிய கவனம் உருவாகிவிடுகிறது. அதை பேசிப்பேசி நிலைநாட்ட காந்தியக்காழ்ப்பு கொண்டவர்கள் உலகமெங்கும் இருக்கிறார்கள். காந்தி அவர்களைப் பொறுத்தவரை தகர்த்தே ஆகவேண்டிய ஓர் அடையாளம். எந்த காழ்ப்புகள் அமைதிக்கான நோபல் பரிசை காந்திக்கு அளிக்கவிடாமல் தடுத்தனவோ அவை இன்றும் அவ்வண்ணமே நீடிக்கின்றன.

பெரும்பாலான மேலைநாட்டுப் பல்கலைக்கழக ஆய்வேடுகளும் அவற்றிலிருந்து வெளிவரும் நூல்களும் உள்நோக்கம் கொண்டவை, நுட்பமானவையும் ஆனால் விரிவானவையுமான வரலாற்றுப்புரட்டுகள் என்பதே முப்பதாண்டுக்கால வாசிப்பில் நான் கண்டடைந்த உண்மை. அதை திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கிறேன். அவற்றின் ஆய்வுமுறைமையும், தர்க்கஒழுங்கும் ஒருவகை உயர்நிலை பாவனைகள் மட்டுமே. நம் மூளையில் உள்ள வெள்ளையடிமைத்தனத்தை நாம் கடந்தாலொழிய இதை உணர முடியாது. மேலைநாட்டுப் பல்கலையில் இருந்து வெளிவரும் எந்த ஆய்வும் ஐயத்துடனேயே இந்தியர்களாகிய நம்மால் அணுகப்படவேண்டும், அவற்றின் நேர்மை ஐயத்திற்கிடமில்லாமல் நிரூபிக்கப்பட்டாலொழிய அவற்றை நாம் ஏற்கலாகாது. ஒருபோதும் தன்னியல்பான நம்பிக்கையை அவற்றுக்கு அளிக்கக்கூடாது. அவை இந்தியா பற்றி, இந்து மதம் பற்றி எந்நிலைபாடு கொண்டிருந்தாலும்.

குகாவின் இந்நூலின் முதல் மூன்று அத்தியாயங்கள் தென்னாப்ரிக்காவுக்குச் செல்லும் அந்தப் பையனின் அதுவரையிலான வாழ்க்கையை, பின்புலத்தை விவரிக்கின்றன. அவன் எவ்வாறு பரிணாமம் அடைந்தான் என வெறும் வாழ்க்கைநிகழ்வுகள் மற்றும் தகவல்களைக்கொண்டே காட்டுகின்றன. காந்தியின் அதுவரையிலான உருவாக்கத்தில் பங்களிப்பாற்றிய பண்பாட்டுவிசைகள் மூன்று. முதலாவது, அவருடைய குடும்பப்பின்புலம். அவர் பனியாச் சாதியைச் சேர்ந்தவர். கத்தியவார் சம்ஸ்தானத்தில் திவானாக இருந்த கரம்சந்த் காந்தியின் மகன். அன்றைய சூழலில் உயர்நடுத்தரக் குடும்பப் பின்னணி கொண்டவர். அவருடைய அன்னை மரபான வைணவமத நம்பிக்கை கொண்டவர். அன்றுமின்றும் குஜராத்தில் வைணவமும் சமணமும் ஒன்றுடனொன்று கலந்தவை. ஆகவே குடும்பத்தில் ஒரு சமண ஊடாட்டமும் இருந்தது.

அன்றைய ஆசாரமான இந்துக்குடும்பத்தின் நம்பிக்கைகள், விலக்குகள், முன்முடிவுகள், ஒழுக்கங்கள் எல்லாமே குடும்பத்திலிருந்து காந்திக்கு வந்தன. அவர் சாதியாசாரம் பேணுபவராக, மதநம்பிக்கையை இறுகப்பற்றிக் கொண்டவராக, குடும்ப ஆசாரங்களை மீறாதவராகவே இருக்கிறார். அன்றைய முறைப்படி பதிமூன்று வயதில் தன்னைவிட ஒருவயது மூத்தவரான கஸ்தூர்பாவை மணம்புரிந்துகொண்டு ஒரு குழந்தைக்கும் தந்தையாக ஆனார். இது அவருடைய பதினெட்டு வயது வரையிலான வாழ்க்கை.

1988ல் பதினெட்டு வயது நிறைந்த காந்தி லண்டனுக்குப் பயணமானார். அங்கே லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில் சட்டப்படிப்புக்காகச் சேர்ந்தார். காந்தியின் உருவாக்கத்தில் அன்றைய லண்டனுக்கு இருந்த பெரும்பங்கை இந்த நூலின் தரவுகள் காட்டுகின்றன. கடைசிவரை காந்திக்கு இருந்த ஜனநாயகம் மற்றும் சட்டபூர்வ ஆட்சி மீதான நம்பிக்கை உருவாகும் காலம் இது. அன்றைய லண்டன் இரண்டு முகம் கொண்டது. ஒன்று உலகை ஆட்சிசெய்த ஆதிக்கத்தின் லண்டன். இன்னொன்று அனைத்து ஜனநாயகச் சிந்தனைகளும், அனைத்து மாற்றுப்பண்பாட்டுக் கூறுகளும் முளைத்து வேர்விட்டுக்கொண்டிருந்த லண்டன். காந்தி அந்த இரண்டாவது லண்டனுடன் ஆழ்ந்த தொடர்பு கொண்டார்.

Henry Stephens Salt.jpgசால்ட்

காந்தி அளவுக்கு அந்த ஐரோப்பாவுடன் தொடர்பு கொண்ட, தொடர் உரையாடலில் இருந்த இன்னொரு இந்தியத்தலைவர் இல்லை. காந்தியில் செல்வாக்கு செலுத்திய அந்த ‘மறு லண்டனின்’ முகம் என ஹென்றி சால்ட் அவர்களைச் சொல்லலாம். [Henry Shakespear Stephens Salt] சைவ உணவு, விலங்குகளின் உரிமை, அடிப்படை மானுட உரிமைகள், தனிநபர் சார்ந்த ஜனநாயக விழுமியங்கள் ஆகியவற்றுக்கான போராளியாக இருந்த சால்ட் அவர்களை காந்தியின் ஆசிரியர்களில் ஒருவராகவே சொல்லலாம்.

காந்தி லண்டனில் மிகச்சிறந்த வெள்ளை இனத்து நண்பர்களை அடைந்தார். ஆகவே எப்போதுமே அவர் இனக்காழ்ப்புக்கு அப்பாற்பட்டவராக, வெள்ளையினத்தை எதிர்நிலையில் காணாதவராகவே இருந்தார்.  வெள்ளையினத்தவர் மீது இந்தியர் காட்டிய காழ்ப்பையும் வன்முறையையும் அவர் இறுதிவரை கடுமையாகவே எதிர்த்தார் -நேரடியாக ஆதிக்கத்தின் முகங்களாக இருந்தவர்கள் மீதான வன்முறையைக்கூட அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. லண்டனில் அவர் சைவ உணவு இயக்கத்தவர்களைக் கண்டடைந்தது அவர் ‘மாற்று ஐரோப்பா’வுடன் தொடர்புகொள்ளும் தொடக்கமாக அமைந்தது. குவாக்கர்கள் போன்ற பல்வேறு கிறிஸ்தவச் சீர்திருத்தக்குழுவினருடன் கடைசிவரை அவர் உறவுடனும் உரையாடலுடனும் இருந்தார்.

மூன்றாவதாக அவர்மேல் செல்வாக்கு செலுத்தியது சமணம். குறிப்பாக சமண ஆன்மிக ஞானியான ராய்சந்த். அனைத்து மதங்களையும் ஒற்றை உரையாடலின் வெவ்வேறு பகுதிகளாகக் காண்பது, உண்மை என்பது பலமுகம் கொண்டதாகவே இருக்கமுடியும் என்னும் தெளிவு, வழிபாடுகள் சடங்குகளுக்கு அப்பாலுள்ள அகப்பயிற்சி சார்ந்த ஆன்மிகம் மீதான ஈடுபாடு, பிரம்மசரியம் மற்றும் தன்னை ஒடுக்கும் துறவு ஆகியவற்றின் மீதான நம்பிக்கை ஆகியவை காந்தி ராய்சந்திடமிருந்து பெற்றுக்கொண்டவை.

இம்மூன்று விசைகளால் உருவாக்கப்பட்ட, இன்னும் ஆளுமை முழுமை பெறாத காந்திதான் தென்னாப்ரிக்காவுக்கு வந்திறங்கினார். அவருக்கு அரசியலில் எந்த அறிமுகமும் இல்லை. அன்று இந்தியாவில் அரசியலே உருவாகியிருக்கவுமில்லை. காந்தி தென்னாப்ரிக்காவிற்குச் செல்வதற்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்பு 1885 ல் தான் ஆலன் ஆக்டோவியன் ஹ்யூமால் இந்தியதேசியக் காங்கிரஸே தொடங்கப்பட்டிருந்தது. காந்தி பிரிட்டனில் அரசியல் ஈடுபாடு எதையும் கொண்டிருக்கவில்லை. அவர் தென்னாப்ரிக்காவுக்குச் செல்வதற்கு பத்தாண்டுகளுக்கு முன்புதான் கார்ல் மார்க்ஸ் லண்டனில் காலமானார். உலக அரசியலில் மார்க்ஸியம் பரவலாகப் பேசப்பட்டது மேலும் இருபத்தைந்து ஆண்டுகளுக்குப்பின் 1917ல் ரஷ்யப்புரட்சி நடைபெற்ற பிறகுதான்.

காந்தி நேரடியாக அரசியல் கோட்பாடுகளைக் கற்று, அரசியல் இலக்குடன் அரசியலுக்குள் நுழைந்தவர் அல்ல என்பது முக்கியமான ஒன்று. தென்னாப்ரிக்க அரசியலுக்குள் அவர் தற்செயலாகவே சென்று சேர்ந்தார். உண்மையில், அந்த அரசியலே அவர் தொடங்கியதுதான். தன்னுள் உள்ள அறவுணர்ச்சியாலும் அடங்கமறுக்கும் ஆன்மவல்லமையாலும் அவர் தென்னாப்ரிக்க இந்தியர்களுக்கான ஓர் அரசியலியக்கத்திற்கு வித்திட்டார், அவரே அதை வளர்த்து நிறுவினார். இந்நூலை வாசிக்கையில்தான் அந்தத் திகைப்பூட்டும் உண்மை கண்முன் எழுந்து நின்றது. இன்றும் உலகவரலாற்றில் ஒரு பெருநிகழ்வெனக் கருதப்படும் அந்த மாபெரும் அரசியல் இயக்கத்தை காந்தி ஆரம்பிக்கும்போது அவருக்கு வயது இருபத்தைந்து. அவர் தென்னாப்ரிக்காவில் டர்பன் நகருக்கு வந்து சில மாதங்களே ஆகியிருந்தன.

காந்தியின் போராட்டம் அவர் தென்னாப்ரிக்காவுக்கு வந்ததுமே ஆரம்பமாகிவிட்டது. இந்நூலைப் படிக்கையில் ஒன்று தெரிகிறது, ஒருவேளை அவர் லண்டன் சென்றிருக்காவிட்டால் அவ்வாறு உடனடியான ஓர் எதிர்ப்பரசியலுக்குள் சென்றிருக்க வாய்ப்பில்லை. அவர் லண்டனில் பெரும்பாலும் நிறவெறி இல்லாத ஒரு சூழலில் பாரிஸ்டர் படிப்பை முடித்தவர். பிரிட்டனிலேயே பாராளுமன்ற உறுப்பினராக தாதாபாய் நௌரோஜி இருப்பதைக் கண்டவர். ஆகவே தென்னாப்ரிக்காவில் தெருக்களில் இந்தியர் நடமாடுவதற்கு சட்டபூர்வ அனுமதிக்கடிதத்தை கையில் வைத்திருக்கவேண்டும், வழக்கறிஞராக பதிவுசெய்யவும் கட்டுப்பாடுகள் உண்டு, பொது ஊர்திகளில் வெள்ளையருடன் பயணம் செய்யக்கூடாது என்பவை போன்ற சட்டங்கள் அவரை துணுக்குறச் செய்கின்றன. அவர் உடனடியாக அவற்றுக்கான எதிர்ப்பை தெரிவிக்கவேண்டும் என வணிகர்களும் கூலித்தொழிலாளர்களுமான இந்தியர்களுக்கு ஆலோசனை வழங்கினார். அதற்கான அமைப்பை உருவாக்கினார். அவ்வாறாக அவர் அரசியலுக்குள் நுழைந்தார்.

காந்தியின் தென்னாப்ரிக்க அரசியல் அங்கிருந்த சூழலில் இருந்து உருவானது. அவர் வயதில் மிக இளையவர். அரசியல்கொள்கைகளைக் கற்றவர் அல்ல. அரசியல்கொள்கைகளை அவர் கற்பதே அரசியல்போராட்டங்களில் தீவிரமாக இயங்கி நெடுங்காலம் முன்சென்ற பிறகுதான். அவர் இஸ்லாமிய வணிகர்களின் வழக்கறிஞர். இந்துக்கள், முஸ்லீம்கள், பார்ஸிகள் அடங்கிய ஒரு வணிகர்குழுவின் பிரதிநிதியாகவே அவர் பேச ஆரம்பிக்கிறார். அவர்களின் எண்ணங்களையும் நோக்கங்களையுமே பிரதிபலிக்கிறார். முதலில் அவர் அவர்களை தலைமைதாங்கி வழிநடத்தவில்லை, அவர்களின் ஊழியரும் பிரதிநிதியுமாகவே செயல்பட்டார். மெல்லமெல்லத்தான் அவருக்குத் தலைமையிடம் உருவாகிறது. அதுவும் பல போராட்டங்களில் வென்றபின். அதற்கு மிகக்கடுமையான எதிர்ப்பும் இருந்தது என்பதை இந்நூல் காட்டுகிறது.

எந்த அரசியல்போராட்டமும் வெவ்வேறு மொழிபுகள் [Narrative] நடுவே உள்ள போராட்டமே என்பதை இன்றைய பின்நவீனத்துவ காலகட்டத்தில் பெரிதாக விளக்கவேண்டியதில்லை. ஓர் ஆதிக்கம் எப்படி உருவாகிறது? ஆதிக்கம் செலுத்துவதற்கான உரிமையும் திறனும் தனக்குண்டு என ஒரு சாரார் ஒரு மொழிபை உருவாக்குகிறார்கள்.  ஒடுக்கப்படுவோர் ஒடுக்கப்படவேண்டியவர்கள் என்றும், ஒடுக்குமுறை என்பது ஒருவகையில் அவர்களுக்குப் பாதுகாப்பளிப்பதே என்றும் அந்த மொழிபை விரிவாக்குகிறார்கள்.  அடக்குமுறையாலும் பிரச்சாரத்தாலும் அதை ஒடுக்கப்படுவோர் ஏற்கவைக்கிறார்கள்.

உரிமைப்போர் என்பது ஆதிக்கவாதிகளின் அந்த மொழிபுகளை உடைத்து ஒடுக்கப்பட்டோர் இன்னொரு மொழிபை உருவாக்குவதே. அது ஒடுக்கப்பட்டவர்கள் தங்களுக்குப் பெருமிதத்தையும் வரலாற்றையும் உருவாக்கிக் கொள்வது, தங்களை ஒன்றாகத் திரட்டும் அடையாளங்களைக் கட்டமைத்துக்கொள்வது ஆகியவற்றினூடாக நிகழ்கிறது. சிலசமயம் ஆதிக்கம் செலுத்துபவர்களின் சிறுமை அல்லது இழிவுகளைப் கண்டடைந்து பெருக்கிக்கொள்வது, அவர்களை தீய சக்திகளாகப் புனைந்துகொள்வது என அந்த மொழிபு விரிவடைகிறது. எந்த விடுதலைச்சமரிலும் நிகழ்வது இந்த மொழிபுகளின் போர்தான். அது கருத்தியல்தளத்தில் நிகழ்ந்து வலுக்கொண்ட பின்னரே உண்மையான போர் நிகழத்தொடங்குகிறது.

அன்றைய தென்னாப்ரிக்க வெள்ளையினத்தார் இந்தியர்களைப் பற்றி ஒரு சித்திரத்தை உருவாக்கியிருந்தனர். அதை இந்நூலில் நிறவெறிகொண்ட வெள்ளையினத்து அதிகாரிகள் எழுதிய அறிக்கைகளிலும் அன்றிருந்த வெள்ளையினத்தாரின் நாளிதழ்களின் செய்திகள், தலையங்கங்கள் மற்றும் வாசகர் கடிதங்களில் தொடர்ச்சியாக காண்கிறோம். இந்நூலிலேயே ஏராளமான பகுதிகள் எடுத்துத் தரப்பட்டுள்ளன. ஆப்ரிக்கர்களை வெள்ளையர்கள் பண்பாடற்ற பழங்குடிகள், வன்முறைத்தன்மை கொண்டவர்கள் என்று சித்தரித்துக்கொண்டார்கள். அவர்களுக்கு நவீனக் கல்வி, நவீனத்தொழில் மற்றும் உழைப்புமுறைகள், நவீன குடிமைச்சமூகப் பண்புகளைக் கற்பிக்கவே முடியாது என்று கூறினர். அவர்களால் வளமிக்க ஆப்ரிக்க நிலத்தில் வேளாண்மை செய்யவோ, கனிவளங்களைக்கொண்டு தொழில்களை உருவாக்கவோ முடியாது. அதற்குத் தகுதி கொண்ட வெள்ளையர் அவற்றைச் செய்து அச்செல்வத்தைக் கொண்டு கறுப்பினத்தவரை கட்டுப்படுத்திப் பாதுகாக்கவேண்டும். வெள்ளையினத்தவரின் சட்டத்தின் ஆட்சி இல்லையேல் கறுப்பினத்தவர் ஒருவரை ஒருவர் கொன்றே அழிப்பார்கள் என வாதிட்டனர்

தென்னாப்ரிக்க இந்தியர்களில் மிகப்பெரும்பாலானவர்கள் தென்னிந்தியர்கள், குறிப்பாகத் தமிழர்கள். நிறத்தால் அவர்கள் கறுப்பினத்தவரைப் போன்றவர்கள். அதோடு அவர்கள் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் கடும்சுரண்டலின் விளைவாக இந்தியாவில் உருவான பெரும்பஞ்சங்களில் இருந்து உயிர்தப்பி ஒப்பந்தக் கூலியடிமைகளாக தென்னாப்ரிக்காவுக்குச் சென்றவர்கள். அவர்கள் இங்கிருந்த கல்வியற்ற அடித்தள மக்கள். ஆகவே அவர்களிடம் சுற்றுப்புறத் தூய்மையோ சமூகஒருமையோ தற்கட்டுப்பாடோ இருக்கவில்லை. நடைமுறையில் அவர்களுக்கும் கறுப்பினத்தாருக்கும் பண்பாட்டிலும் வாழ்முறையிலும் பெரிய  வேறுபாடு ஏதுமில்லை. ஆகவே வெள்ளையர் இந்தியர்களையும் கறுப்பினத்தாரைப்போல பழங்குடிகள் என்றே கருதினர்.

அன்று ஆப்ரிக்கப் பழங்குடிகளிடையே வெள்ளையர் பாணியிலான நவீனச் சமூகக்கட்டமைப்புகளோ அரசியல்நெறிகளோ இல்லை. அவர்களின் சமூகக்கட்டமைப்பும் அரசியலும் வேறுவகையானவை. ஆகவே கறுப்பினத்தவரால் அரசியலமைப்புகளில் பங்குபெறவோ சிவில்சமூகமாகச் செயல்படவோ முடியாதென்று வெள்ளையர் நினைத்தனர். கறுப்பர்களான இந்தியர்களாலும் ஜனநாயகத்தில் ஈடுபட, அரசமைப்புகளை கையாள, குடிமைச்சமூகமாகச் செயல்பட இயலாது என்று வெள்ளையர் கூறினர்.

ராய் சந்த்

அந்த சித்தரிப்பை தென்னாப்ரிக்க இந்தியர்கள் எதிர்கொள்ளவேண்டியிருந்தது. அவர்களில் மிகச்சிறுபான்மையினரான உயர்மட்ட வணிகர்களே இந்தியர்களுக்கான உரிமைகளுக்குப் போராடும் இயக்கத்தை உருவாக்கி நடத்தினர். ஆனால் அது ஓர் அரசியலியக்கமாக ஆகவேண்டுமென்றால் அவர்கள் அடிமைக்கூலிகளாக இருந்துவந்த பெரும்பான்மையினரை இணைத்துக்கொண்டாகவேண்டும். இந்த ஒற்றுமைக்காக தென்னாப்ரிக்க இந்தியர்களின் இயக்கங்கள் தொடர்ந்து போராடிவந்ததை இந்நூல் காட்டுகிறது. கூடவே ’கூலி’ களும் கறுப்பர்களைப் போன்றவர்களே என்னும் வெள்ளையர்களின் மொழிபை எதிர்கொண்டாகவும் வேண்டும். அதுவே அன்றைய அரசியல் சூழல்

ஒருபக்கம் இந்திய வணிகர்குடியினர் அங்கிருந்த அடித்தள இந்தியர்களிடம் தூய்மை, குடிமைப்பண்பு, கட்டுப்பாடு ஆகியவற்றை வலியுறுத்திக்கொண்டிருந்தனர். காந்தி அதற்கென கடைசிவரைப் போராடினார். இந்தியர்கள் இன்னொரு பக்கம் பிரிட்டிஷாரிடம் இந்தியா என்பது மிகத்தொன்மையான ஒரு நாடு என்றும், அதன் பண்பாடு ஐரோப்பியப் பண்பாட்டுக்குச் சமானமானது என்றும், இந்தியாவில் மிகத்தொன்மையான காலகட்டத்திலேயே முன்மாதிரியான அரசியலமைப்புக்களையும் ஜனநாயகத்துக்கு நிகரான நிர்வாக அமைப்புகளையும் அவற்றின் அடிப்படையில் குடிமைச்சமூகத்தையும் உருவாக்கிக் கொண்டிருந்தார்கள் என்றும் வாதிட்டனர். இந்தியர்கள் கல்விகற்கும் திறன் மிக்கவர்கள், தொல்பழங்காலம் முதலே உயர்கல்வி இந்தியாவில் இருந்துள்ளது என்றும் கூறினர்.இன்று ஓர் இயல்பான வரலாற்று உண்மையாக நமக்குத் தோன்றும் இந்தக்கருத்து அன்று வெள்ளையர்களால் அபத்தமான ஒரு உரிமைக்கோரிக்கையாகவே கருதப்பட்டது. இதுவே அன்றிருந்த மொழிபுகளின் போர்.

இந்நோக்கிலேயே தென்னாப்ரிக்க இந்தியர் தங்களைக் கறுப்பர்கள் என கருதலாகாது என்றும், தாங்கள் மேம்பட்ட பண்பாட்டையும் தொன்மையான வரலாற்றையும் கொண்டவர்கள் என்றும் கூறினர். தங்களை எல்லா தருணங்களிலும் கறுப்பினத்தாரிடமிருந்து வேறுபடுத்திக்கொண்டனர். இன்றும்கூட வெள்ளையர் வாழும் நாடுகள் முழுக்க இந்தியர்களும் பாகிஸ்தானியர்களும் எகிப்தியர்களும் ஈரானியர்களும் இலங்கையரும் இதையே செய்கிறார்கள். எங்கும் தங்களை அவர்கள் கறுப்பினத்தவருடன் இணைத்துக்கொள்வதில்லை. எங்கும் தங்கள் வேறுபாட்டை, மேலான தன்மையை முன்வைப்பவர்களாகவே இருக்கிறார்கள்.

ஏனென்றால் இன்றும் இந்தியர்களை கறுபினத்தவருடன் இணைக்கும் ஒரு மொழிபு ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் மேலோங்கி உள்ளது. Coloured people என்னும் பொதுவழக்கு அந்த மொழிபின் தலைச்சொல். இன்று அமேரிக்காவிலும் ஐரோப்பாவிலுமுள்ள இந்தியர்களின் அரசியலே வேறு. அவர்களின் பிரச்சினைகளுக்கும் கறுப்பர்களின் பிரச்சினைகளுக்குமிடையே எந்த பொதுத்தன்மையும் இல்லை. குறிப்பாக கறுப்பினத்தவரை போதைப்பழக்கத்துடனும் குற்றச்செயல்பாடுகளுடனும் இணைக்கும் ஒரு மொழிபு வெள்ளையருக்கு உண்டு. இன்றைய அமெரிக்க- ஐரோப்பிய இந்தியர்கள் அங்குள்ள கறுப்பினத்தவருடன் எவ்வகையிலேனும் தன்னை இணைத்துக்கொண்டால், அந்த மொழிபுக்குள் அவர்கள் இழுக்கப்பட்டால் அவர்களுக்கும் அந்த அடையாளம் வந்துசேரும். இந்தியர்கள் மிகமிக அமைதியான, வன்முறையற்ற, தொழில்-வணிகப் பின்னணிகொண்ட மக்கள். அவர்களுக்கு அந்த அடையாளம் பேரழிவாக முடியும். அவர்களின் அரசியலே திரிபடையக்கூடும். ஆகவே இந்தியர்கள் வெள்ளையரின் அந்த மொழிபை திட்டவட்டமாக எதிர்க்கவேண்டியிருக்கிறது. எனவே அவர்கள் கறுப்பினத்தவருடன் தங்களை எல்லாவகையிலும் வேறுபடுத்திக்கொள்கிறார்கள். இதை அப்பட்டமாகவே அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் காணலாம்.

இதே அரசியல்தான் தென்னாப்ரிக்காவில் நூற்றைம்பதாண்டுகளுக்கு முன்பும் இருந்தது. அன்றிருந்த இந்தியர்கள் தங்களைப் பற்றிய வெள்ளையரின் மொழிபுக்கு எதிராகப் போராடியபோது தங்களை கறுப்பினத்தவர் என்று சொல்லக்கூடாது என்று தொடர்ந்து வாதிட்டனர். அது அன்றைய அரசியல். அன்றிருந்த இந்திய சமூகத்தின் மனநிலை. காந்தி அதை பிரதிபலித்தார், ஏனென்றால் அவர் அவர்களின் ஊழியர் மற்றும்  பிரதிநிதி

இந்தக்காலத்தில் காந்தியின் பணி என்பது மனுக்கள், அறிக்கைகள் தயாரித்து அரசுக்கு அனுப்புவது. வெள்ளையர்கள் நடத்திவந்த நிறவெறிகொண்ட இதழ்களுக்கு தொடர் வாசகர்கடிதங்கள் அனுப்புவது மற்றும் இந்தியர்களுக்காக நீதிமன்றத்தில் வாதிடுவது. இந்த மனுக்கள், அறிக்கைகள், கடிதங்கள் மற்றும் நீதிமன்ற வாதங்களில் அவர் இந்தியர்களின் பொதுக்கருத்தையே முன்வைக்கிறார். இந்தியர்களை பழங்குடிகளான கறுப்பர்களுடன் இணையாகக் கருதலாகாது என்றும், இந்தியர்கள் நவீன ஜனநாயகத்தில் செயல்படவும், அரசுப்பொறுப்புகளில் பணியாற்றவும் தகுதிகொண்டவர்கள் என்றும் அவர் வாதிட்டது இதனால்தான். அன்றைய தென்னாப்ரிக்க நாளிதழ்களில் எழுதிய வெள்ளையர்களுடன் ஓயாத கடிதப்போரில் கடைசிவரை காந்தி ஈடுபட்டிருப்பதை இந்நூல் மிக விரிவாக ஆவணப்படுத்துகிறது.

இன்னொன்றையும் சொல்லவேண்டும். அன்றைய கறுப்பினத்தவருக்கும் இந்தியர்களுக்கும் உரிமைக்கோரிக்கையில் பெரிய வேறுபாடு இருந்தது. ஆப்ரிக்கா கறுப்பினத்தவரின் நாடு.அவர்கள் வெள்ளைய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக வன்முறைப்பாதையில் போராடிக்கொண்டிருந்தனர். ஜூலு கலகம் போல தனிப்பட்ட இனக்குழுப்போராட்டங்களாகவே அவை இருந்தன. பேரழிவையும் உருவாக்கின. வெள்ளையர் அந்தக் கலவரங்களைப்பற்றி அச்சம் கொண்டிருந்தனர். அவர்கள் ஆப்ரிக்க நிலத்தை தங்கள் போர்வல்லமையால் வென்றெடுத்ததாகவும், ஆகவே அந்நிலம் தங்களுக்குரியது என்றும் நம்பினர். அன்றைய உலகளாவிய மனநிலை அது. படைவல்லமையால் எதையும் வெல்லலாம், வென்றெடுத்த எதையும் உரிமைகொள்ளலாம் என்றே உலகம் முழுக்க நம்பப்பட்டது. ஆகவே கறுப்பினக் கலவரங்களை தங்களுக்கு எதிரான போர் என்றே வெள்ளையர் நினைத்தனர். அவற்றைப் படைவல்லமையால் ஒடுக்கினர்.

ஆப்ரிக்க இந்தியர்கள் வெளியே இருந்து அந்நிலத்துக்கு வந்தவர்கள். கறுப்பினத்தவரால் அவர்களும் அந்நியராகவும், ஆக்ரமிப்பாளர்களாகவும்தான் கருதப்பட்டனர். கூடவே வெள்ளையர்களால் பண்பாடற்ற கறுப்பினத்தவர்களாகக் கருதப்பட்டு ஒடுக்கவும் பட்டனர். ஆகவே இந்தியர்கள் தங்களை மிகத்தெளிவாக வரையறை செய்யவேண்டியிருந்தது. தாங்கள் கறுப்பினத்தவர் அல்ல, கறுப்பினத்தவர்களுடன் எவ்வகையிலும் தொடர்புடையவர்களோ, கறுப்பினத்தவரின் வன்முறைப் போர்களுடன் எக்காலத்திலும்  ஒத்துழைக்கச் சாத்தியமானவர்களோ அல்ல என்று திரும்பத்திரும்ப தெளிவுபடுத்திக்கொண்டே இருக்கவேண்டிய கட்டாயம் அவர்களுக்கு இருந்தது. தாங்கள் எவ்வகையிலும் வன்முறையை நம்புபவர்கள் அல்ல என்றும், வெள்ளையர்களை விட பிரிட்டிஷ் ஆட்சிக்கு விசுவாசமானவர்கள் என்றும், ஜனநாயக நடவடிக்கைக்கும் சிவில்சமூக வாழ்க்கைக்கும் பலநூற்றாண்டுகளாக பயிற்சிபெற்றவர்கள் என்றும் அவர்கள் நிறுவிக்கொண்டே இருக்கவேண்டியிருந்தது.

மறுபக்கம் வெள்ளையர் இந்தியர் பற்றிய தங்கள் மொழிபை திரும்பத்திரும்ப முன்வைத்தார்கள். இந்தியர்களை கறுப்பர்கள் என்றும், கறுப்பினத்தவரின் கலககங்களில் மறைமுகமாகப் பங்கெடுப்பவர்கள் அல்லது பங்கெடுக்க வாய்ப்புள்ளவர்கள் என்றும் தொடர்ந்து வாதிட்டனர். இந்தியர்களின் ஜனநாயக வழியிலான அகிம்சைப்போராட்டங்களை எல்லாம் ‘கலகங்கள்’ என்ற சொல்லால் வரையறை செய்தனர். வெள்ளையினப் பொதுமக்கள் உண்மையில் அப்படி நம்பினர். அரசியல்வாதிகள் அதை ஓர் அரசியல் உத்தியாகக் கடைப்பிடித்தனர். அந்த கூற்றைத்தான் காந்தி தென்னாப்ரிக்க இந்தியர்களின் பொருட்டு மறுத்து வாதிட்டுக்கொண்டே இருந்தார்.

அன்றைய அந்த மொழிபு நுட்பமாக இன்றும் வெள்ளையர்களிடம் நீடிக்கிறது. வெள்ளையர்கள் தாராளவாதிகளோ முற்போக்காளர்களோ ஆக இருந்தாலும்கூட காந்தி அவர்களை விடவும் இயல்பாகவே நவீன ஜனநாயகத்துக்கு அணுக்கமானவராக, குடிமைவிழுமியங்கள் கொண்டவராக இருந்தார் என்பதை அவர்களால் தங்களின் ஆழுள்ளத்தில் உறையும் மேட்டிமைத்தனம் காரணமாக நம்பமுடிவதில்லை. ஆகவே காந்தியை ஒரு இந்திய தேசியவாதி, இந்து தேசியவாதி என்று நிறுவ முயல்கிறார்கள். அவருடைய போராட்டங்களில் வன்முறை உள்ளடக்கம் இருந்தது என்று வாதிடுகிறார்கள். அமைதிக்கான நோபல்பரிசு அவருக்கு வழங்கப்பட வாய்ப்பிருந்த காலங்களில் மேற்கண்ட காரணங்களைச் சொல்லியே அது தவிர்க்கப்பட்டது.இன்று காந்தியை இனவாதி என அவர்கள் நிறுவமுயல்வதும் இந்த இனமேட்டிமைப்பார்வையின் வெளிப்பாடுதான்.

தென்னாப்ரிக்க இந்தியர்களின் போராட்டங்களை முன்னெடுத்தவர்கள் முக்கியமாக வணிகர்கள். அவர்கள் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசின் கருணையில் வாழ்ந்தவர்கள். தங்களுக்கிடையேயான பூசல்களுக்குக் கூட அவர்கள் நம்பியது பிரிட்டிஷ் சட்டங்களைத்தான். தென்னாப்ரிக்க இந்தியர்கள் உண்மையிலேயே பிரிட்டிஷ் ராணுவத்தின் பாதுகாப்பில் இருந்தவர்கள், இல்லையேல் அவர்கள் கறுப்பினப் பழங்குடிப் படையினரால் முற்றாகவே அழிக்கப்பட்டிருப்பார்கள். அவர்கள் மேல் அத்தகைய வெறுப்பு அன்றைய கறுப்பினத்துப் போராளிக்குழுக்களால் வெளிப்படுத்தவும்பட்டது. அங்கே இந்தியர்கள் மிகச்சிறுபான்மையினரும்கூட. ஆகவே அவர்கள் பிரிட்டிஷ்ப்பேரரசின் மேல் ஆழ்ந்த நம்பிக்கையை வெளிப்படுத்திக்கொண்டே இருந்தனர். பெரும்பாலானவர்களுக்கு உண்மையிலேயே அந்நம்பிக்கையும் இருந்திருக்கலாம்.

எல்லா மனுக்களிலும் காந்தி ஆப்ரிக்க இந்தியர்களின் பொருட்டு முன்வைத்த நிலைபாடு ஒன்று உண்டு. அது இதுதான். ‘பிரிட்டிஷ் பேரரசு அடிப்படையில் மானுட சமத்துவத்தை கொள்கையாகக் கொண்டுள்ளது. பிரிட்டனின் பிரஜைகள் எல்லாருமே சமானமானவர்கள் என்று அது சொல்கிறது. ஆகவே இந்தியர்களை கீழானவர்களாக நடத்தும் தென்னாப்ரிக்க வெள்ளையினத்து ஆட்சியாளர்கள் பிரிட்டிஷ் பேரரசு முன்வைக்கும் விழுமியங்களை மீறுகிறார்கள். இந்தியர்கள் குடிமைப்பண்பு, தூய்மைப்பழக்கம் ஆகியவை இல்லாதவர்கள் என அதற்குக் காரணம் சொல்கிறார்கள், அது பொய். இந்தியர்களால் ஜனநாயக சமூகத்தின் குடிமக்களாக வாழமுடியும். இந்தியர்கள் கறுப்பர்களின் கலவரங்களில் பங்கெடுக்கக்கூடும் என்கிறார்கள், ஆனால் இந்தியர்கள் கறுப்பினத்தவர்கள் அல்ல, அவர்களுக்கும் ஆப்ரிக்கக் கறுப்பினத்தவர்களுக்கும் தொடர்பே இல்லை. தென்னாப்ரிக்க ஆட்சியாளர்களின் நிறவெறிப் பாகுபாடு பிரிட்டிஷ் ம

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 08, 2021 10:35

வாசகன் எழுத்தாளன் ஆவது- கடிதம்

ஒரு மலையாள வாசகர் மலையாள வாசகர், கடிதம் அன்புள்ள ஜெ

இன்று பதிவு பார்த்து நண்பர்கள் வாழ்த்தினார்கள்.  எழுத்தாளர் கிற ஸ்தானம் நான் பயத்துடன் நினைத்து பார்ப்பது, நிறைய நல்ல கதைகள் எழுதி அந்த இடத்தை அடைய வேண்டும் என்று எண்ணியிருந்தேன்.  நீங்கள் அவ்வாறு சொல்லி இருந்தது கூடுதல் பொறுப்பை அளித்தது.  கண்டிப்பாக நல்ல கதைகள் எழுதுவேன்.

ஒன்று மட்டும். நான் டிப்ளமோ படித்திருக்கிறேன், பத்தாம் வகுப்பு முடித்து மூன்றாண்டுகள் படிப்பு அது,  இந்திரவியல்தான் எடுத்து படித்தேன்.  நான் கருமான் என்பதால் இயல்பாக இந்த வேலையை தேர்ந்தெடுத்து வந்தேன்.  உங்களை பார்க்கும் பொழுது தற்காலிக வேலையாக எபாக்சி கோட்டிங் பெயின்டிங் வேலைக்கு போய் கொண்டிருந்தேன், அது தினசரி சம்பள வேலைதான்,  வார சம்பளம் அளிப்பார்கள்.  அந்த வேலை குழப்பம் மட்டும் என்ன மேற்கொண்டு செய்வது என்றறியாத குழப்பங்களில்  அந்த சமயங்களில் இருந்தேன், நான்கு வேடங்கள் கட்டுரை புரிதல் அளித்தது, நிரந்தர வருவாய் முக்கியம் என்று எண்ணினேன்,  சிறுவயதில் இருந்தே சொந்த தொழில் ஆர்வம் எனக்கிருந்தது,  அப்பாவுடன் வேலைக்கு சென்ற அனுபவம் இருந்தது, கூடவே படிப்பு ( DME) ம் கொஞ்சம் தைரியம் அளித்தது,  இரும்பு வண்ண கூரைகள் அமைக்கும் பணியில் நண்பருடன் கூட்டு சேர்ந்து இறங்கினேன், இந்த தொழில் எனக்கு ஒரு அடையாளமும் திருப்தியும் முக்கியமாக பணமும் அளித்தது, contract அடிப்படையில் செய்வதால் பண தட்டுப்பாடு எப்போதும் இருந்தாலும் வேலை தொடர்ந்து கிடைக்கிறது,  கடனில் சிக்குவேன், பிறகு அடைப்பேன் :) ஆனால் நிரந்தர வருவாய் கிடைக்கிறது. இனி எதிர்காலத்தில் இதில் அதிகம் சம்பாதிக்க இயலும் என்று நம்புகிறேன்.

இன்னொரு பக்கம் சிறுவயதிலேயே மதமோதல்களை ( கோவை கலவரம் ) பார்த்து அந்த மனநிலை வழியாக வந்தவன், இந்து மதம் பற்றி அறிந்து கொள்ள படிக்க போய்தான் உங்களை வந்தடைந்தேன், படிக்கும் ஆர்வம் சிறுவயதிலேயே இருந்தாலும் மத பற்று, அறிந்து கொள்ளும் ஆர்வம் எல்லாம் இருந்தது. உங்களை நீண்ட நாள் படிப்பதன் மூலமாக மத பார்வையில் அணுகும் இயல்பு மறைந்தாலும் இப்போதும் அவ்வப்போது என்னுள்ளில் இருந்து இந்து சார்பு பார்வை வெளிப்படும்.

உங்களை ஆரம்பத்தில் வாசிக்கும் போது எழுத வேண்டும் என்ற எண்ணம் வந்ததில்லை,  ஆனால் எனக்குள் இருந்த வாசிக்கும் இயல்பு உங்கள் புனைவுகளை தொடர்ந்து  தேடி தேடி வாசிக்க வைத்தது. உங்களை பற்றிய விமர்சன கட்டுரைகளை கூட தேடி தேடி வாசித்திருக்கிறேன். வெங்கட் ஸ்வாமிநாதன் உங்கள் சிறுகதை தொகுப்பிற்கு,  நவீன தமிழிலக்கிய அறிமுக நூலுக்கு எழுதிய கட்டுரை,  சுஜாதா உங்களின் திசைகளின் நடுவே சிறுகதை தொகுப்பிற்கு ( அதில் பல்லக்கு கதையை சிறுகதை வடிவத்திற்குள் சரியாக பொருத்திய கதை என்று சொல்லியிருப்பார், உங்கள் முன்னுரையை மெலிதாக ஓட்டியிருப்பார் ! ) எழுதிய கட்டுரை,  கார்த்திகேசு என்பவர் உங்கள் விஸ்ணுபுரம், பின்தொடரும் நூலுக்கு எழுதிய கட்டுரை எல்லாம் வாசித்திருக்கிறேன்.  பேட்டிகளில் உங்களை சொல்வதை கூட தேடி வாசித்திருக்கிறேன்.  ஜெயகாந்தன் பின்தொடரும் நிழலின் குரல் வந்த சமயத்தில் அதை பற்றி பேட்டியாளர் கேட்ட போது உங்கள் எழுத்தை பற்றி தேவதைகள் இல்லாத சமயத்தில் அங்கு பேய்கள் உலவும் என்பது போல சொல்லுவார் :) ஆனால் உங்களிடம் இன்னும் நிறைய எதிர்பார்ப்பதாகவும்  சொல்வார்,  சுஜாதா கூட ரப்பர் நாவல் பற்றி சொல்லி அது போல நாட்கணக்கில் அமர்ந்து தீவிரமாக எழுதும் நேரம் சூழல் தனக்கில்லை என்று சொல்வார். எனக்கு வேறு புனைவுகள் வாசிக்கும் ஆர்வம் பெரிதாக இருந்ததில்லை.  ரஷ்ய நாவல்கள் இப்போதும் கூட வாசித்ததில்லை.  ஆனால் உங்களை பழகி பின்பு விஷ்ணுபுர நண்பர்கள் பழக்கம் நிகழ்ந்த பிறகுதான் மற்றவர்களை வாசிக்க ஆரம்பித்தேன்.  இப்போது நானே சிறுகதை எழுதும் வரை இது வந்து நிற்கிறது.

எனக்கு சில நோக்கங்கள் உண்டு,  அதில் தொடர்ந்து பயணிப்பதற்கு, விவாதிப்பதற்கு,  பிறரிடம் கொண்டு செல்வதற்கு எழுத்து பயனளிக்கும் என்று நம்புகிறேன், நந்தனார் பற்றி நானே சமீபத்தில் எழுதி பார்த்த (புனைவின் சாத்தியம் கொண்டு ) கதை வழியாக அந்த நம்பிக்கையை வலுவாக அடைந்தேன்.  இந்த வகையில் எழுத்து எனக்கு வலுவாக பயனளிக்க கூடிய ஒன்று.

சிறுகதை எழுதுவது முற்றிலும் இன்னொரு விருப்ப உலகம் என்று தோன்றுகிறது. இது மதிப்பை எனக்கு அளிக்கிறது கண்டிப்பாக இதற்கு நன்றி உடையவனாக இருப்பேன் !

ராதாகிருஷ்ணன்

ராதாகிருஷ்ணன்கதைகள்

சுழல்

வலு

தெளிதல்

பிரிவு
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 08, 2021 10:32

தத்துவத்தின் பயன்மதிப்பு- கடிதம்

தத்துவத்தின் பயன்மதிப்பு

பேரன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,

தத்துவத்தின் பயன் மதிப்பு என்ற கட்டுரை மிகவும் அருமையான ஒன்று. படித்து, விவாதித்து, வரண்டு, வாழ்வில் இருண்டு கிடப்பதற்கானது அல்ல தத்துவம் என்று மிகத் தெளிவாக விளக்கி இருந்தீர்கள். அதுவும் மிக முக்கியமாக கீழை தத்துவங்கள் எவ்வண்ணம் பயில்கின்ற ஒருவரின் வாழ்க்கையை இங்கேயே ஒளியை நோக்கி நகர்த்துவதை மட்டுமே இலக்காகக் கொண்டுள்ளன என்ற விளக்கம் இன்றைய தலைமுறை தெளிவாக அறிந்துகொள்ள வேண்டிய ஒன்று.

நமது மரபில் வேதாந்த வகுப்புகளில் அடிக்கடி சொல்லப்படுகின்ற ஒரு வாசகம் “கவனமாக இருங்கள். வரட்டு வேதாந்தி ஆகிவிடாதீர்கள்” என்பதுதான். இன்னும் விளையாட்டாக ஒன்றும் சொல்லப்படும், “மூன்று காலங்களிலும் உலகம் இல்லவே இல்லை, பிரம்மம் மட்டுமே உள்ளது. இது மட்டுமே சத்தியம். ஐயமே இல்லை. ஆனால் நண்பரே! இப்போது நாம் உண்டு கொண்டிருக்கின்ற சாம்பாரில் உப்பு சற்று குறைவாக உள்ளது, தயவு செய்து முதலில் அதைக் கொண்டு வாருங்கள்”. இனிப் பிறவாநிலை, விடுதலை, முக்தி, பிரம்ம ஞானம் என்று பலவற்றை பேசுகின்ற பொழுதும் வேதாந்தத் தத்துவம் தன்னுடைய முதல் பயன் என முன்வைப்பது இங்கே இப்பொழுதே ஆன நிறைவான ஒரு வாழ்க்கையை. அதனாலேயே வேதாந்தக் கல்வியோடுகூட, மிகவும் கட்டுப்பாடோடு கூடிய எளிய வாழ்க்கை முறை (வைராக்கியம்), தொடர்ச்சியான உபாசனை மற்றும் சாதனைகள் நிறைந்த தினசரி வாழ்க்கை(அப்பியாசம்) என அனைத்தும் இங்கே தத்துவ கல்வியோடு சேர்த்து பயிற்றுவிக்கப்படுகின்றன.

“இங்குள்ளவை அனைத்தும் அதுவே” என்று பயில்கின்ற தத்துவத்திற்கு ஏற்ப “அது என்றாகி” வாழ முயல்கின்றபோதும் ஒரு வேதாந்த தத்துவ மாணவன் நிச்சயம் அறிந்து இருப்பான் ஒரு சிட்டுக் குருவிக்கும் பெரிய யானைக்குமான உலகியல் வேறுபாட்டை. தத்துவப் பார்வையில் அவை இரண்டும் அதுவே என்றான போதும் சிட்டுக்குருவிக்கு உணவான ஒரு கைப்பிடி அரிசி யானைப் பசிக்கு போதுமானதாகாது என்பதை அறிந்து யானைக்கு பல கவளம் உணவு அளிக்கத் தெரியாதவன் உலகியலில் கடமையாற்ற முடியாதவன். உரிய இடத்தில் உரிய வண்ணம் அறத்தின் வழி நின்று இயற்ற வேண்டிய கடமை ஆற்றி, உயர் தத்துவ தளத்தில் அனைத்தும் ஒன்றே என்ற மெய்மைத் தரிசனத்தில் திளைத்து, நிறைவில் வாழத் தெரியாதவன் ஒரு சரியான வேதாந்தி ஆவதில்லை.

“ஆரம்பத்திலும் நிறைவை அளிப்பது, முடிவிலும் நிறைவை அளிப்பது, பயில்கின்ற இந்தக் கணத்திலும் எந்தக் கணத்திலும் நிறைவை மட்டுமே அளிப்பது தம்மம்” என்கிறார் புத்தர். அப்படி நிறைவளிக்க முடியாத ஒன்று தம்மமாக இருக்கவே முடியாது என்றும் அவர் அறுதியிட்டுச் சொல்கிறார்.

முழுமுதல் பேருண்மை அல்லது சாரமற்ற வெறுமை எனப் பேசுகின்ற தத்துவமும் அதன் தரிசனமும் எது ஆன போதும் வேதாந்தமும்  பௌத்தமும் அனைத்திற்கும் மேலான உண்மை என்கின்ற மெய்யியலை விட்டு ஒருபோதும் விலகுவதில்லை. அறவாழ்வு என்று வருகின்ற பொழுது சொல்லவே வேண்டாம் கீழை தத்துவங்கள் அனைத்தும் அவற்றை ஒரு மிகமிக அவசியமான அடிப்படையாகவே வைத்து விடுகின்றன. அறவாழ்வு வாழ உறுதி ஏற்காத மற்றும் அதற்காக தொடர்ந்து முயலாத ஒருவன் தம்மத்தையோ அல்லது வேதாந்தத்தையோ பயிலத் தகுதியற்றவன். அத்தகைய ஒருவன் எத்தனை முயன்றாலும் கீழைத் தத்துவங்கள் காட்டுகின்ற துன்பமற்ற நிறைவான வாழ்க்கை என்பதை ஒருக்காலும் அடையவே முடியாது.

குரு நித்யாவின் அன்பு மாணவராய், நாராயணகுருவின் மரபில் வந்த நீங்கள் இவற்றை உங்கள் தனித்துவமான தமிழ் நடையில் விளக்கிச் செல்கின்ற அழகே அழகு!

வெண்முரசு முடித்து நீங்கள் உள்ளம் ஓய்ந்து இருக்கின்ற இந்த இனிய வாழ்க்கைத் தருணத்தில், நீங்கள் துவக்கி இடையில் நிறுத்தி வைத்திருக்கின்ற பதஞ்சலி யோகசூத்திரம் மற்றும் பகவத்கீதை போன்றவற்றுக்கான உரை எழுதும் பணியை மீண்டும் துவக்கி மிக விரைவில் முடிக்க வேண்டும் என்கின்ற அன்பின் கோரலை உங்கள் முன் வைக்கிறேன். தமிழ் உலகு உங்களுக்கு அதற்காக என்றென்றும் கடமைப்பட்டிருக்கும். ஒருவரின் தாய்மொழி வழித் தத்துவப் பயிற்சி செய்கின்ற ஆழுள்ள மாற்றத்தை வேறு எந்த மொழி வாசிப்பும் செய்துவிட முடியாது என்பதை நன்கு உணர்ந்திருப்பதினாலேயே இந்த அன்பான வேண்டுகோள். அதுவும் உங்கள் உன்னதமான தமிழ் நடையில் அவற்றை வாசிக்கும் பேறு பெறுகின்ற ஒருவர், நிச்சயம் சரியான தனக்கு உவந்த மெய்யியல் பாதையைத் தேர்ந்து, மெல்ல மெல்ல முழுமையை நோக்கி நகர்ந்து, தன் வாழ்வில் நிறைவை எய்துதல் திண்ணம்.

மிக்க அன்புடன்

ஆனந்த் சுவாமி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 08, 2021 10:31

இடம்,அருகே கடல்- கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்,

ஒருவரியில் சொல்லவேண்டுமானால் சிரிப்பு, சிரிப்பு , சிலவருடங்கள் கழித்து இப்படி ஒரு சிரிப்பு, வயிறு வலிக்க சிரிப்பு. நினைவிலெழுந்து மீண்டும் சிரிப்பு. ஒருநாள் அக்கிராமத்தில் வாழ்ந்துவிட்டேன்.இருந்தாலும் ஆண்களை கொஞ்சம் வீரமாய் காட்டியிருக்கலாம். ஆண்களின் சார்பில் கண்டனங்கள். அற்புதமான நையாண்டி கதை. நையாண்டி வழியாக அரசாங்கத்தை, சமூகத்தை, மதத்தை, மதக்கொள்கையை தன் தேவைக்கேற்ப வளைக்கும் மனிதனை, ஆண்களின் ஆதிக்க இயல்பை குட்டிவிட்டு செல்கிறது. வாசிக்கும்போது சிரிப்பு மட்டும், வாசித்தபின் யோசிக்கும்போது நையாண்டிவழி உணர்த்தும் செய்தி  மட்டும் கண்முன் நிற்கிறது.

சிரித்த பல தருணங்கள் சில இங்கு:

“வீட்டிலே ஆம்புளைங்க இருந்தாகளே அம்மிணி!” என்றாள் பொன்னம்மை”

“அதாருடீ நானறியாம?” என்றாள் ராஜம்மை

*

“உனக்க அப்பன வரச்சொல்லுடா எரணங்கெட்ட நாயே”

“நாயி உனக்க அப்பன்”

“எரப்பாளி… உறங்கிக்கிடந்தா இவன் நம்மள தின்னிருவானே” என்றார் கரடி

*

“ஏமான், சொறியுது”

“கொரங்கு சொறியாம பின்ன டான்ஸாலே ஆடும்? வெளங்காப்பயலாட்டு இருக்கானே”

*

கவட்டைக்குள் வாலை சுருட்டிக்கொண்ட கருப்பன்

“எளவு பயந்து பூனையா மாறிட்டுபோல!”

கரடி நாயைப் பார்த்தபின் அவமான உணர்வுடன் “அதுக்கு தேகசொகமில்லை” என்றார்.

அன்புடன்,

மோகன் நடராஜ்

 

அன்புள்ள ஜெயமோகன்,

தன் வாலை தானே விழுங்கியிருக்கும் சர்ப்பம்போல் நம்முள் நாம்மட்டும் புதைந்திருக்கும் தருணங்கள் உண்டு. அனைவர்மீதும் விலக்கம், எதிலும் பிடிப்பின்மை, தர்க்கம் தொலைந்த தருணங்கள். மனதின் பித்து கொந்தளிக்கும் காலங்கள். அந்த பித்தையும்தாண்டி ஏதோவொன்று நம்மை பிணைத்திருக்கும்.புவியில் உயிர்ப்புடன் வைத்திருக்கும். கருவில் உருவாகும்போது நம்முடன் இணைந்த தெய்வம். அது என்றும் நம்மை கைவிடுவதில்லை. நம்முடன் இருக்கும் தாய்போல. அவள் பொறுமையாகத்தான் நம்மை மீட்டெடுப்பாள். அவளின் பிணைப்பு ஆறுதலும், பலமும் தரும்.சிறுகச் சிறுக ஏதோவொன்று நமக்கும் நிறையும்.எதோ தருணம், யாரோ மனிதர், எதோ சப்தம், எதோ காட்சி மாயக்கணமென வரும். அது இருட்டில் எழுப்பப்பட்ட சிறு வெளிச்சம். வெளிச்சத்தின் வல்லமை அதை எத்தனை இருட்டு வந்தாலும் அணைக்க முடியாது. அந்த சிறு வெளிச்சம் பெரும் பாதையின் தொடக்கத்தைக் காட்டும்.

அன்புடன்,

மோகன் நடராஜ்

ஜெயமோகன் மின்நூல்கள் வாங்க குமரித்துறைவி அச்சுநூல் வாங்க  வான் நெசவு அச்சுநூல் வாங்க விஷ்ணுபுரம் பதிப்பக நூல்கள்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 08, 2021 10:31

விஜய் பிச்சுமணியின் ‘கொல்வேல்’ கலைக்கண்காட்சி- ஜெயராம்

விஜய் பிச்சுமணி கொல்வேல் காடலாக்

அன்புள்ள ஆசிரியருக்கு,

நேற்று சென்னை வந்து இங்கே நுங்கம்பாக்கம் ஸ்டர்லிங் சாலையில் இயங்கும் ஆர்ட் ஹவுஸ் கலைக்கூடத்தில்(Art Houz gallery) நடந்து கொண்டிருக்கும் விஜய் பிச்சுமணி என்ற கலைஞனின் ‘கொல்வேல்'(Kolvel) கலைக் கண்காட்சிக்குப் போயிருந்தேன். இக்கொரோனா தொற்று காரணமாக பல மாதங்கள் இயக்கமில்லாமல் இருந்த கலைக் கூடங்கள் சார்ந்த செயல்பாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக இப்போது தான் இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது. எனக்கும் நீண்ட இடைவேளைக்குப் பிறகு கலந்து கொள்ள வாய்த்த ஒரு கலைக் கண்காட்சி. அரைநாள் கலைக்கூடத்திலேயே செலவழித்து படைப்புகளைப் பார்த்து விஜய் பிச்சுமணியுடனும் அப்படைப்புகளைப் பற்றி விரிவாக உரையாடவும் முடிந்தது. ஒரு காட்சிக்கலை ஆர்வலனாக அப்படைப்புகள் ஏற்படுத்திய அனுபவங்களை தொகுக்க முயன்றுள்ளேன்.

விஜய் பிச்சுமணி கன்னியாகுமரி மாவட்டம் திருவரம்பிற்கு அருகில் உள்ள ‘கொல்வேல்’ பகுதியைச் சேர்ந்தவர்(இக்கண்காட்சியின் தலைப்பே ‘கொல்வேல்’ தான்). சென்னை ஓவியக் கல்லூரியில் பதிப்போவியத் துறையில்(print making) இளங்கலையும், வண்ணக்கலையில்(painting) முதுகலை யும் படித்தவர். எனக்கு இருவருடம் முன்னால் படிப்பை முடித்தார். இப்போது சென்னையில் வசிக்கும் அவர் கல்லூரி காலத்தில் இருந்து இன்று வரை தொடர்ந்து படைப்புகளைப் படைப்பதிலும் அதை கண்காட்சியாக வைப்பதிலுமாக இத்தளத்தில் தீவிரமுடன் செயல்படும் சிலரில் ஒருவர். அவரது படைப்புகள் இந்திய மற்றும் வெளிநாடுகளில் நடந்த பல கண்காட்சிகளிலும் இடம் பெற்று ஒரு தேசிய விருது உட்பட விருதுகளையும் வென்றிருக்கிறது.

பள்ளிப் பருவத்திலும் இப்போது கொரோனா ஊரடங்கில் நெடுநாட்கள் ஊரில் இருக்க நேர்ந்த போதும் அவரது சூழல் உருவாக்கிய பாதிப்பை படைப்புகளாக மாற்றியிருக்கிறார். இவையாவும் பல சமகால கலைப் படைப்புகளைப் போன்று ‘ஓவியம்’ என்றோ ‘சிற்பம்’ என்றோ ஒரு வரை முறைக்குள் துல்லியமாக அடக்கமுடியாதவை. மரம் என்ற ஊடகம் இக்கண்காட்சியின் எல்லா படைப்புகளுக்கும் பொதுவாக இருக்கிறது. மரத்தில் உருவாக்கப்பட்ட சில படைப்புகளின் மேல் ஓவியக் கோடும் செதுக்கல்களும் இருக்கும். சிலவை பசையும் சுண்ணாம்பும் உபயோகித்து மரவடிவின் மேல் ஒட்டித்தேய்க்கப்பட்டு அதன் மேல் வண்ணம் தீட்டப்பட்டிருக்கும்.

கூடத்திற்கு உள்ளே வரும் போதே இடப்புறத்தில் பேப்பரில் வண்ண பென்சிலால் வரைந்து சுற்றி நீர் வண்ணத்தால் இடைவெளி விட்டு வரைந்த நரம்புகளுடன் கூடிய பச்சை திட்டுகளுடன் மரச்சட்டகம் போட்ட சுமார் நாற்பது சிறு ஓவியங்கள் தொங்கவிடப்பட்டுள்ளது. மேரி மாதா, தும்பைத் செடி, பசு மாடு, கையில் வைத்து நசுக்கினால் இரத்தம் வரும் விதைகளைக் கொண்ட செடி, தட்டான்கள், மரத்தடிகள் ஏற்றிச் செல்லும் லாரி, விட்டில், ரப்பர் பால் வெட்டும் தொழிலாளி முதல் ஊருக்குள் ஓடும் டிரக்கர் வரை. எல்லாம் அவர் ஊர் பகுதியில் பார்க்க முடியும் காட்சிகளின் பதிவுகள்.

விஜய்யின் ஊரான கொல்வேலுக்கு பக்கத்து ஊரான மாறப்பாடியில் தான் என் நான்கு வயது வரையான குழந்தைப் பருவம் கழிந்தது. இன்றும் என் பாட்டி-தாத்தா மற்றும் உறவினர்கள் அங்கே வசிப்பதால் அவ்வூருடன் நெருங்கிய தொடர்பு இருந்து கொண்டே இருக்கிறது. அதனால் இவ்வோவியங்கள் எல்லாம் என் நினைவுகளையும் மீட்டிச் சென்றது. இவர் படைப்புகளில் உள்ள கோடுகளும் நரம்புகளும் இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தையும் இணைக்கும் தொடர்புகளை நினைவுறுத்துபவை. செடியின் வேர்கள், மின்னல்கள், பறவைக் கோணத்தில் பார்க்கப்படும் ஆறுகள் செல்லும் பாதைகள் எல்லாம் உடலின் நரம்புகளின் வடிவத்தை கொண்டிருக்கிறது என்று அதை விவரிக்கிறார். இப்படி நாமெல்லாம் இங்குள்ள எல்லாவற்றுடனும் ஏதோ ஒரு விதத்தில் பிணைப்பைக் கொண்டிருப்பதை இது உணரச்செய்கிறது. இந்த ஓவியங்களைச் சுற்றியிருக்கும் பச்சை திட்டுகள் நாஞ்சில் நாட்டு மலைகளையும் பசுமையையும் ஞாபகப்படுத்துகிறது.

துல்லியமான வட்டவடிவ மரப்பலகைகளின் நடுவில் சிறு பகுதி வெட்டி எடுக்கப்பட்டு அதில் உருவங்களைச் செதுக்கி அதைச் சுற்றி அடர்த்தியான கோடுகளும் செதுக்கல்களும் உள்ள நான்கு படைப்புகள் ஒரு தொகுப்பாக அருகருகே வைக்கப்பட்டிருந்தது. ஒன்றின் நடுவில் நாயும்(SNIFFER என்று தலைப்பிடப்பட்ட படைப்பு), மற்றொன்றில் சிலோப்பிய மீனும்(SLOPIA), அடுத்த இரண்டில் வயதான மனிதர்களின் சிரித்த வாயும்(SMILE-1, SMILE-2) செதுக்கப்பட்டிருந்தது. இப் படைப்புகளில் உபயோகப்படுத்தப்பட்டிருந்த கோடுகளின் வண்ணங்கள் மற்றும் கோடுகள் உபயோகப்படுத்தப்பட்டிருந்த விதம், மரத்தின் நிறம் மற்றும் அதன் மேல் முருங்கை இலைச்சாறு, வண்ணப்பென்சில்கள் முதலியவைகளால் தேய்த்து சாயம் ஏற்றப்பட்ட விதம் மற்றும் அதில் ஒன்றில் உபயோகப்படுத்தப்பட்டிருந்த  ஊதுபத்தியால் ஓட்டையிடப்பட்ட காகிதத்தின் வடிவமைப்பு போன்றவற்றால் நான்கும் நான்கு நிறம் மற்றும் தன்மைகளைக் கொண்டு வேறு வேறு அர்த்தங்களை கொடுத்துக் கொண்டேயிருந்தது. மனிதனின் சிரிப்பு(அல்லது மகிழ்ச்சி) நாய், சிலோப்பியா போன்ற உயிரினங்கள் ஏற்படுத்தும் அதிர்வுகளாகவும் விளைவுகளாகவும் அவற்றைச் சுற்றியுள்ள கோடுகள் மற்றும் வடிவமைப்புகள் எனக்குப் பொருள் கொண்டது. அல்லது இவைகளைச் சுற்றி நடப்பவைகள் இவ்வுயிரினங்களின் போக்கை தீர்மானிப்பதாகவும் கொள்ளலாம். எப்படி கதைகள் நாவல்கள் வாசிக்க விவாதிக்க மேலதிகமாக திறப்புகள் கொடுத்துக் கொண்டே இருக்கிறதோ அதேபோல ஒவ்வொரு வரையையும் கோடுகளையும் உன்னிப்பாக கவனிக்கும் போது அவற்றை பற்றி பேசும் போது பல அர்த்தங்களை கொடுத்துக் கொண்டே இருக்கிறது. நல்ல காட்சிக்கலைப் படைப்புகள் வரைகளாலும் வண்ணங்களாலும் உருவங்களாலும் வடிவங்களாலும் எழுதப்படும் கவிதைகள்.

THE WAIT(காத்திருப்பு) என்பது மற்றுமொரு குறிப்பிடத்தகுந்த படைப்பு. இதில் மரத்தால் செய்யப்பட்ட பெரிய சிலோப்பிய மீன் ஒன்று பிளைவுட்டில் வடித்த பெரிய கூழாங்கல் மேல் வைக்கப்பட்டுள்ளது. தண்ணீரில் சாவகாசமாக நீந்தும் ஒரு மீனின் வாலின் சிறு அசைவின் நளினத்தை நிலைக்கச் செய்த ஒருங்கமைவு. கூழாங்கல்லின் வழவழப்பை அப்படியே பிளைவுட்டில் கொண்டுவந்துள்ளார். இம்மீனின் ஒரு பக்கம் மட்டும் நுண்ணிய செதில் வெள்ளைக் கோடுகளால் ஆன வடிவமைப்புகள் உள்ளன. இது தண்ணீரின் மேல் வரும் மீனின் மேல்புறத்தில் அல்லது ஒரு பக்கம் வெயில் ஒளி பட்டு மின்ன அதன் அடிப்புறம் அல்லது அதன் மறுபக்கம் நீரின் நிழலுடன் இருப்பதை ஞாபகமுட்டுகிறது. இதிலும் நாம் அசைந்து கொண்டிருக்கும் இவ்வாழ்க்கையில் நாம் கொண்டிருக்கும் கருப்பு-வெள்ளை(வெண்முரசின் முதற்கனலில் ஒளி-இருள்) தருணங்களை இணைத்துப் பார்த்தேன். ‘காத்திருப்பு’ என்ற தலைப்பு மீனைப் பிடிக்க தூண்டிலிடும் போது காத்திருப்பதுடன் இணைத்து படைப்பாளி சொன்னாலும் அதிலிருந்து மேலும் தூரம் சென்று சிந்திக்கத் தூண்டுகிறது. ஒரு கொக்கு மீனைக் கவ்வி காத்திருப்பதை, ஒரு மீன் அதைவிடச் சிறிய புழுவைக் கவ்வ காக்கும் தருணத்தை, மனித வாழ்வெனும் மீனை விடப் பெரியதான ஊழ் நம்மை விழுங்கிச் செரிக்க காத்திருப்பதை….. என்று இணைத்துக் கொண்டே செல்லலாம்.

Stop! Reflect(நில்! கவனி)…என்ற படைப்பு. பாதியாக வெட்டப்பட்ட ஒரு பெரிய திருஷ்டி எலுமிச்சையில் சிவந்த குங்குமம் பூசப்பட்ட இரு துண்டுகள். இதுவும் மரத்தால் வடிக்கப்பட்டு பின்னர் அதன் மீது சுண்ணாம்பு மற்றும் பசை, சிகப்பு வண்ண ரெசின்(resin) போன்றவை உபயோகப்படுத்தப்பட்டிருப்பதுடன் வண்ணங்களால் வரையவும் பட்டது. இப்படைப்பு குறியீட்டு ரீதியாக பல அர்த்தங்களை கொடுக்கிறது. சிவப்பு நம் மரபில் நிறைய அர்த்தங்களை தன் அகத்தே கொண்டுள்ளது. சக்தியின் பெண்மையின் நிறம். இரத்தத்தின் வீரத்தின் நிறம். ஆனால் திருஷ்டி கழிக்கப்பட்ட பூசையில் உபயோகப்படுத்தப்பட்ட எலுமிச்சையை அதில் பூசப்பட்டிருக்கும் சிகப்பு குங்குத்தை நாம் மிதிக்கவும் அருகில் செல்லவும் கூடாது என்று வளர்க்கப்பட்டிருக்கிறோம். அப்படியென்றால் எதை நின்று கவனிக்க படைப்பாளி சொல்கிறார். ஒரே நேரத்தில் இந்த எலுமிச்சை துண்டுகளைப் போல மாங்கல்யத்தின் அடையாளமாகவும் ஆனால் உள்ளே ஒதுங்கி வாழ பழக்கப்படுத்தப்பட்டிருக்கும் நம் மரபின் பெண்களின் இரத்தக் கண்ணீரையுமா? இல்லை இந்த வெட்டப்பட்ட எலுமிச்சையின் நிறங்களின் வடிவத்தின் அழகியலை மட்டுமா? இரண்டு வழிகளிலும் நம் பார்வையை நெடுந்தூரம் செல்ல வைக்கிறது…..

100% GOLD என்ற இரு படைப்புகள்- பழைய சொரசொரப்பான மரத்துண்டுகளை அடுக்கி உருவாக்கப்பட்ட ஒரு பெரிய கை மற்றும் பெரிய காலின் வடிவங்கள். மிக நேரடியான தலைப்போ என்று தோன்றினாலும் அப்படைப்பு கடத்தும் விஷயங்கள் நம்மை வெகுவாக பாதிக்கிறது. மண்ணில் உழைப்பவர்களின் கைகளையும் கால்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் படைப்புகள். பொதுவாகவே மரத்தடிகளின் நிறம் மண்ணின் நிறத்திற்கு நெருக்கமானது. இயற்கை மற்றும் மண் சார்ந்தவற்றை எடுத்துப் பேசுவதற்கு மரத்தை ஊடகமாக பயன்படுத்தியிருப்பது இக்கண்காட்சியில் உள்ள எல்லா படைப்புகளுக்கும் மிகவும் பொருத்தமாக இருக்கிறது. கை சிற்பத்தின் மேல் மிக மெல்லிய வெள்ளைக் கோட்டால் தொட்டாச்சிணுங்கி செடி வரையப்பட்டிருந்தது. தொட்டாச்சிணுங்கியைத் தவிர வேறு எந்த செடியின் ஓவியமும் அங்கே பொருத்தமாக இருந்திருக்காது. கல்லும் முள்ளும் பட்டு பழக்கமாகி சொரசொரப்பான கைகள் கூட முதன்முதலாக மாட்டிற்கு புல் அறுக்கப் போயிருக்கும் போது தொட்டாச் சிணுங்கியின் முள் பட்டு அதிர்ச்சியுடன் பல தடவை சுருங்கியிருக்கும் சிணுங்கியிருக்கும்…

SOUND ALERT-1 & SOUND ALERT-2 என்ற தாவர விதை வடிவப் படைப்புகள். பொதுவாக எல்லா படைப்புகளுமே கூர்ந்து நிதானமாக பார்க்கவில்லையென்றால் கோடுகளின் நுணுக்கங்களையும் அழகியல்களையும் அது உணர்த்துபவற்றையும் தவறவிடுவோம். அதிலும் இவ்விரு படைப்புகள் பளிச் நிறங்கள் எதுவும் இல்லாமல் மரப்பட்டையின் நிறத்துடன் கலந்து கண்ணுக்கு உறுத்தாமல் அதேசமயம் பக்கத்தில் போய் பார்த்தால் மட்டுமே தெரியும் அடர் கோடுகளைக் கொண்டுள்ளது. எரியும் ஊதுபத்தி கொண்டு போட்ட ஓட்டைகள் உள்ள காகிதங்கள் இக்கண்காட்சியின்  பல படைப்புகளில் வடிவமைப்பாக பயன்படுத்தப்பட்டுள்ளது. SOUND ALERT-2 படைப்பில் ஒரு விதையின் பகுப்பில் ஒரு பக்கம் ஆட்டின் உருவமும் மறுபக்கம் புலியின் உருவமும் நடுவில் ஆள்காட்டி பறவையின் உருவமும் உள்ளது. ஆள்காட்டிப் பறவை சத்தம் எழுப்பி வரப்போகும் அபாயத்தை பற்றிய எச்சரிக்கை எழுப்புவது. ஒன்று மற்றொன்றுடன் முட்டி மோதி வென்று வாழ்வது இயற்கையின் நியதி. அந்த செயல்பாட்டை முடிந்தவரை உரசலில்லாமல் கொண்டு செல்வதைப் பற்றி தான் காந்தி பேசினார் என்று காந்தி பற்றிய கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறீர்கள். நான் ஏதோ காரணத்தால் காந்தியை ஆள்காட்டிப் பறவையின் இடத்தில் வைத்துப் பார்க்கிறேன்.

SOUND ALERT-1 எனக்கு தனிப்பட்ட முறையில் மிகவும் நெருக்கமான படைப்பாக தோன்றியது. ஒரு விதையின் ஒரு பகுதி. SOUND ALERT-2 உடன் ஒப்பிடும் போது கொஞ்சம் சிவப்பு நிறத்தின் அடர்த்தி இதில் ஏறியிருக்கிறது. பிறகு அதன் மேல் உள்ள கட்டுக்குள் நிற்காத கிறுக்கல்களின் செறிவு. முந்தைய படைப்பில் ஆடு-புலி-ஆள்காட்டிப்பறவை என்பது தாய்கோழி-பருந்து-அணில் என்றாக இதில் உள்ளது. பிரபஞ்ச ஆடலின் வெவ்வேறு வடிவங்கள். அக்கிறுக்கல்களும் கோடுகளும் இவ்வடிவங்களின் மேல் ஏறி இறங்கி எல்லாத்தையும் இணைத்து ஒன்றோடொன்று கலந்து ‘அத்வைதம்’ ஆக உணரச் செய்தது.

துல்லியமான வட்டமில்லாத மூன்று மரப்பலகைகளின் நடுவில் சிறிது அகழ்ந்து அதில் முறையே தூங்கும் மனித உருவமும், விரியாத ஒரு மென்மையான மொட்டும், கத்தி கூப்பாடு போடும் கிரிக்கெட் பூச்சியும் வரையப்பட்டு அதற்கேற்ற தலைப்பும்(SLEEP, BUD-INNOCENCE, CRICKET) வைக்கப்பட்டுள்ளது. இம்மூன்றையும் சுற்றியுள்ள மரப்பலைகைகளில் இயற்கையாகவே உள்ள கோட்டடையாளங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு அர்த்தத்தை அளித்துக் கொண்டிருந்தது. தூங்கும் உருவம் கனவிற்குள் ஆழ்ந்து செல்லும் உணர்வையும், மிருதுவான பூ மொட்டை சுற்றியுள்ள கோடுகள் மிருதுவான எதையும் தக்கவைத்துக் கொள்ளும் பொருட்டு அதைச் சுற்றி உருவாகி வரும் கடினத்தன்மையை(ஆமையும் ஓடும், மரம் மற்றும் செடிகளின் விதைகள், பெண்மை….) கூறிக்கொண்டிருந்தது. கிரக்கெட் பூச்சி ஏற்படுத்தும் ஓசையின் அதிர்வுகளை அதைச் சுற்றியுள்ள வரிகள் கூறின.

மகிழ்ச்சியின் தருணம்(Moment Of Happiness) என்று தலைப்பிடப்பட்ட ஒரு படைப்பு வாகை மரத்தில் செதுக்கி விரித்தெடுக்கப்பட்ட ஏறத்தாழ மூன்றடிக்கு மேல் வரும் மூன்று தனித்தனி செம்பருத்தி பூக்களின் இதழ்களின் அடிப்புறத்தில் வண்ணம் தீட்டி சிவக்க வைத்து அதன் சிறு நரம்புகளும் பதிவு செய்யப்பட்டிருக்கும் தொகுப்பு.  மலர்ந்த பூக்களின் மகிழ்ச்சியை நம்மில் பகரும் படைப்பு இது. இப்பூக்களின் தனித்தன்மையே அது மரத்தில் செதுக்கப்பட்டாலும் ஒரு அழகான செம்பருத்திப் பூவின் குழைவும் நளினமும் மென்மையும் கைவரப் பெற்றிருக்கும். செம்பருத்திப் பூக்களில் உள்ள வரைகளையும் சுருக்கங்களையும் அவர் இதற்காகவே தேர்ந்தெடுத்திருக்கும் வாகை மரத்தடியில் உள்ள வரிகளே பிரதிபலிக்கிறது. விஜய் இப்படைப்பு பற்றி பேசுகையில் ‘அடர் பச்சை நிறப் பிண்ணனியில் மலர்ந்திருக்கும் ஒரு செக்கச்சிவந்த செம்பருத்தி பகிரும் மகிழ்ச்சியை நினைக்கும் போது ‘அப்படியே ஒரு நூறு பூவை பண்ணிப் போட்டு அந்த மகிழ்ச்சியை நம்மளும் மற்றவர்களுக்கு கடத்தணும்னு அந்த தருணத்தில தோணுச்சு. அப்புறம் மூணு மட்டும் பண்ணமுடிஞ்சது’ என்றார். தான் பார்த்து தன்னை மகிழ்வித்து கற்பனையை தூண்டிய அந்த மலரும் பூவை மூன்று மரப்பூவாக வடிக்க அவருக்கு மூன்று மாதங்கள் ஆகியது.

இதை யோசித்துக் கொண்டிருந்தேன். எது ஒரு கலைஞனை தான் உணர்ந்த ஒன்றை பிரம்மாண்டமாக ஆக்கி மற்றவர்களுக்குப் பகிர பல மாதங்கள் வருடங்கள் உழைக்க வைக்கிறது என்று. விஜய்க்கு நண்பரான கவிதைக்காரன் இளங்கோ தன் ஆறாம் வகுப்பு படிக்கும் மகள் தான்யா’வுடன் கண்காட்சி பார்ப்பதற்கு வந்திருந்தார். உரையாடலின் இடையில் விஜய் தான் கலைக்கூடத்தின் வெளியில் வரும் போது பார்த்த உதிர்ந்து போன ஒரு வாதுமை மரத்தின் இலையின் நிற வகைகளை விவரித்துக் கொண்டிருந்தார். அதை தானும் பார்த்திருந்த அந்த சுட்டிக் குழந்தை தான்யா திருப்பிப் போய் அதே இலையை எடுத்துக் கொண்டு வந்து காண்பித்தாள். அழகான சிகப்பு நிறம் கொஞ்சம் பச்சை நிறத்துடன் கலந்து அவ்விலையின் பெரும் பகுதியை ஆக்கிரமிக்க வலது ஓரத்தில் ஆங்காங்கே வட்டவட்டமாக மஞ்சள் கலந்த காப்பி நிறப் புள்ளிகள். இன்னும் கூர்ந்து பார்த்தால் நமக்குத் தெரிந்த பல நிறங்களும் கொஞ்சம் அவ்விலையில் நிறைந்திருப்பதை உணர முடியும். அப்போது நாம் பார்த்து வியந்த அந்த இலையின் நிறஅழகு சில மணிநேரங்களில் மாறிவிடும் என்பது பிரபஞ்ச நியதி. ஓரிரு நாட்களில் மட்கி மண்ணோடு மண்ணாகவும் கலந்து விடும்.

இது போன்ற பலரும் கவனிக்காமல் கடந்து போகும் சிறு தருணங்களையோ அல்லது பெரும்பாலானவர்களுக்குச் சாத்தியமில்லாத உச்ச தருணங்களின் மகிழ்ச்சியை(அல்லது வேறு உணர்வுகளை) தன்னிலும் இவ்வுலகத்திலும் கொஞ்சம் அதிக காலம் நிலைநிறுத்திப் பார்க்கவும் அதை மற்றவர்களுக்குப் பகிரவும் முற்படும் போது ஒரு கலைப்படைப்பு பிறக்கிறது. உண்மையில் மூன்று பூக்கள் செய்ய மூன்று மாதங்கள் செலவழித்தாரென்றால் அந்த பூக்கள் பகிரும் மகிழ்ச்சியை மூன்று மாதங்களும் உணர்ந்து அனுபவித்திருப்பார். கலைஞனின் வரம் அது. பார்வையாளன் அப்படைப்பின் வழி தானும் அதை உணரும் போது ‘கலாரசிகன்’ ஆகிறான். வெறும் ‘பார்வையாளன்’ என்பவனிலிருந்து வேறு படுகிறான்.

இவையாவும் விஜய் பிச்சுமணி கொரோனா ஊரடங்கு காலத்தில் சென்ற இருவருடங்களாக உருவாக்கிய படைப்புகள் ஆகும். பல மாதங்களுக்குப் பிறகு கலந்து கொண்ட நிறைவான கண்காட்சியாக இது அமைந்திருந்தது.

தொடர்புடைய இணைப்புகள்:

https://m.timesofindia.com/city/chennai/chennai-artist-presents-works-created-in-quarantine/articleshow/86780159.cms

https://youtu.be/v4IkICYNkLg

அன்புடன்,
ஜெயராம்

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 08, 2021 10:30

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.