Jeyamohan's Blog, page 882

November 15, 2021

கல்குருத்து – கடிதங்கள் 6

கல்குருத்து- சிறுகதை

அன்புள்ள ஜெ,

நலம் தானே? நானும் நலம். இப்போதுதான் கல்குருத்து கதை வாசித்து முடித்தேன். உங்கள் கதைகளுக்கெல்லாம் மிகச்சிறப்பான விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன. பலர் மிகமிக கூர்மையாக எழுதுகிறார்கள். என்னால் அப்படியெல்லாம் எழுதமுடியாது. என் வாழ்க்கையும் வாசிக்கும் பழக்கமும் எல்லாமே ரொம்பச் சின்னவை. ஆகவே நான் அக்கடிதங்களையெல்லாம் வாசிப்பதுடன் சரி. ஏதும் எழுதுவதில்லை. கல்குருத்து பற்றி எழுதலாமென்று தோன்றியது. ஏனென்றால் அந்தக்கதை என் வாழ்க்கையின் கதைதான். நான் அனுபவித்ததுதான். ஆகவே இதை எழுதுகிறேன்

நான் கல்யாணமாகி வந்தபோது என் கூட்டுக்குடும்பத்தில் இரண்டு வயதான ஜோடிகள் இருந்தன. என் கணவரின் தாத்தாவும் பாட்டியும். பிள்ளைகள் இல்லாத இன்னொரு ஜோடி. என் கணவரின் அத்தையும் மாமாவும். இரண்டு ஜோடிகளுமே அவ்வளவு அன்யோன்யமாக இருப்பார்கள். செல்லமாக கொஞ்சிக்கொண்டே இருப்பார்கள். அதிலும் பெரிய கிழவர் மனைவியை பாப்பா என்றுதான் அழைப்பார். அந்த குரலே அவ்வளவு இனிமையாக இருக்கும். அவர்கள் ஒருவருக்கொருவர் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்றே புரியாது. ஒருவர் எதையாவது சொல்ல மற்றவர் எங்கேயோ அந்த கான்டெக்ஸ்டை புரிந்துகொள்வார். மூன்றாம் நபர் உள்ளே போகவே முடியாது.

ஆனால் என் கணவருக்கும் எனக்கும் கல்யாணமான முதல் நாலைந்தாண்டுகள் எப்போதுமே சண்டைதான். பெரும்பாலும் ஈகோ சண்டை. நான் என்ன சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார். அதேசமயம் என்னுடைய எல்லா விஷயங்களிலும் தலையிட்டு ஏதாவது சொல்வார். அவருடைய பிடிவாதம் எனக்கு அப்படி எரிச்சலாக இருக்கும். ஆகவே எனக்கு கிழவர்களையும் கிழவிகளையும் பார்த்தாலே எரிச்சலாக இருக்கும். ஏக்கமாகவும் இருக்கும். பலமுறை அழுதிருக்கிறேன்.

ஆனால் இதெல்லாம் நாற்பதாண்டுகளுக்கு முன்பு. இன்றைக்கு நினைத்துப்பார்க்கையில் அதெல்லாம் தமாஷாக இருக்கிறது. இன்றைக்கு என் கணவர் இல்லை. நான் அன்னிய நாட்டில் இருக்கிறேன். ஆனால் கடைசி இருபது ஆண்டுகள் எங்களுக்குள் சண்டையே இல்லை. ஒருவருக்கு ஏற்ப இன்னொருவர் பதமாகிவிட்டோம். அவர் எதையெடுத்தாலும் சமாதானமாக போய்விடுவார். அந்த கிழவர்களும் கிழவிகளும்போல ஆகிவிட்டோம் என நினைத்துக்கொண்டேன். இன்றைக்கு இந்தக்கதை அப்படியே வாழ்க்கையை எழுதியிருக்கிறது. ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. ஆசீர்வாதங்கள்

லக்ஷ்மி

 

அன்புள்ள ஜெ

தேடிப் படிப்பவையெல்லாம் ஏற்கனவே படித்த மாதிரியும், ஒரே மாதிரியும், அலுத்துப் போன எழுத்தாகவும் இருப்பதாகத் தோன்ற, “வண்டியக் கட்டிக்கிட்டு மைலாடி போனா அம்மியும் குழவியுமா வாங்கிப் போட்டு அந்தாலே கொண்டு வரலாம்…”  என்று அழகம்மை சொல்வதைக் கேட்டு கூடவே கிளம்பி விடலாம் என்று சட்டென்று மனது தயாராகிவிட்டது.

வரிசையான பற்களோடு அழகாகச் சிரிக்கும் காளியம்மையைக் கண்டு மனசு சந்தோஷம் கொண்டது. அது எப்படித்தான் அந்த சனங்களுக்கு அமையுமோ….? ஒரு இண்டு இடுக்கு இல்லாமல் பளீரென்று கொள்ளை போகும் அந்தப் பல் வரிசை அந்த முகத்திற்குத்தான் எத்தனை சோபையைக் கொடுக்கிறது? பெரும் பணக்காரனுக்கும், தீராத சொத்து பத்து உள்ள கோமகன், கோமகளுக்கும் அமையாத பாக்கியம் அது.

அந்த மக்களின் பேச்சு மொழி ஆரம்பத்திலேயே உள்ளுக்குள் இழுத்துக் கொள்கிறதே…!

”அம்மிணியே …அது சந்தைக்குப் போயி பசுவையும் குட்டியையும் வாங்கிட்டு வாறது மாதிரியாக்கும். இது நம்ம வீட்டிலே பிறந்த கன்னுக்குட்டி  கொம்பும் குலையுமா  பசுவா மாறி வயறு தெறண்டு ஈனுகது மாதிரியல்லா…?

அம்மிணி…என்ற அந்த வார்த்தை எத்தனை சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது நமக்குள். பெண்களைத் தாயாக, தெய்வமாக மதிக்கும் சமூகம் அவர்கள் சார்ந்து இப்படி எத்தனை எத்தனை துதிகளை உள்ளடக்கியிருக்கிறது?

அதுவாக உருக்கொண்டிருக்கும் ஒரு அமைப்பை, இயற்கையை அப்படியே படிமமாக விவரிப்பதற்கும் பொருத்தமான வார்த்தைகள் வேணும்தானே?

“அவர்களின் தோட்டமே சரிந்து எங்கோ செல்வது போலிருந்தது. அங்கே எல்லாத் தோட்டங்களும் ஆற்றை நோக்கிச் சரிவன… – கண் முன்னால் அந்தக் காட்சியை நாம் கற்பனை செய்து கொள்கையில் அந்த இடத்தைக் காண வேண்டும்…தரிசிக்க வேண்டும் என்கிற ஆவல் உந்துகிறது.

இயற்கையை வணங்கும் மனிதர்கள். அவற்றைத் தெய்வமாகப் பார்க்கும் மக்கள். அகன்ற வானத்தை நோக்கிக் கும்பிடும் கைகள். ஐந்தாறு பறவைகள் கூடிப் பறந்து செல்கையில் கடவுளை அங்கே கண்டேன் என்று கையெடுத்துக் கும்பிட்டாரே பரமஉறம்சர்…! விடிகாலையில் மண்ணிலிருந்து வெளிப்பட்டு இந்த உலகைப் பார்க்கும் ஆவலில் துளிர்த்துப் பளபளக்கும் தளிரில் ஆண்டவனைக் காண முடியுமே…!

“தலையிலே மொட்டைப்பாறையை சுமந்துட்டு பச்சைச் சேலை கெட்டி தலையிலே தயிருபானை வைச்ச இடைச்சியம்மையாக்கும் மலை…“

அவள் அந்தக்கல்லை அம்மியாகப் பார்க்க முயன்றாள். கொஞ்சம் கண்ணு நிறுத்திப் பார்த்தாத் தெரியும்…! கல்லாசாரி தாணுலிங்கத்திற்குத் தெரிகிறது.    கலைஞனுக்கு அந்தக் கல்லில் என்னவெல்லாம் இருக்கிறது என்று உடனே தெரிந்து விடுமே…! கல்லிலே கலை வண்ணம் காணுவதும் கடவுளைக் காணுவதும் கலைஞனின், காண்பவனின் மனம் சார்ந்த விஷயம். அது அவன் ரசனை! உயிர்ப்பு…! உண்டென்றால் அது உண்டு…இல்லையென்றால் அது இல்லை…!

வயிற்றுக்குள் இருக்கும் குழவி, பூமிக்கு வர இருப்பதைச் சுட்டி, எல்லாக் கலைக்கும் உண்டு அதுக்கான சோசியம்….எங்க சோசியம் கல்லுலே….- இயற்கையோடு இயைந்த வாழ்வு. அந்த மக்கள் அறிந்து வைத்திருக்கும் விஷய ஞானம், உலகத்தைப் படித்த விழுமியங்களை உள்ளடக்கியது.

செய்யும் தொழிலே தெய்வம்தான். ஆனாலும் அந்தத் தொழில் விளங்க அடியெடுத்துக் கொடுப்பவன் இறைவன். “அம்மிணி…ஒரு மூணு வெத்திலை, ஒரு பாக்கு, ஒரணா துட்டு, ஒரு துண்டு கருப்பட்டி கொண்டு வாங்க…“ – இருக்கும் அவரவர் வசதி வாய்ப்பிற்கேற்ப எங்கும் எதிலும் எந்த அளவிலேனும் கருத்தில் அறியும் அந்தச் சக்தியை வணங்க முடியும்…! நம்பினாற் கெடுவதில்லை…! அதுதானே நான்கு மறைத் தீர்ப்பு…!!

அழகம்மை ஏன் அப்படிச் சிலிர்க்கிறாள்? தாணுலிங்கத்தின் கண்ணும் மனசும் அந்தக் கல்லை வெறும் மலையாகவா பார்க்கிறது? தெய்வம் உள்ளடங்கிய தோற்றம். காலமறியாது அதனுள் பொதிந்திருக்கும் இறைச் சக்தி. பக்தியோடு நோக்குபவனுக்குப் பார்க்கும் இடமெல்லாம் அந்தப் பரம்பொருள் கண்ணுக்குத் தெரியும்தானே? இயற்கை நம்மின் தெய்வ சக்தி…கல்லுக்குள் தெய்வம்…அதை ரூபங்களாக மாற்ற யத்தனிக்கையில்…அதை மண்டியிட்டு வணங்குதல் முறைதானே…!

வயசான சீவனுக்கு ஒரு சுக்கு வெள்ளம் கொடுக்க ஆளில்லையா? –கோபத்தில் அவன் கையை ஓங்கி விட்டான். ஆனால் அந்தக் கண்களைச் சந்திக்க முடியாமல்  ஏன் மனசும் உடம்பும் தணிந்து போனது. பெண்கள் தெய்வம். பெண்மை தெய்வம். சுற்றியுள்ளவற்றைக் காக்கும் காவல் தெய்வம். வளம் சேர்க்கும் இறைத்தன்மை.

அரைத்து அரைத்துத் தேய்ந்து படகு போல வடிவம் கொண்டுவிட்ட அம்மியில் சுக்கை வைத்து அடித்து உடைத்து அம்மிப் பரப்பில் வழுக்கி வழுக்கி அரைத்துப் பார்த்தால்தானே தெரியும்…? பொறுமை காக்கும் வீட்டுத் தெய்வங்களுக்கு சலித்துக் கொள்ளக் கூட உரிமையில்லையா என்ன? வேளா வேளைக்கு செய்து போடும் கைகளை எடுத்துக் கும்பிடாவிடினும் ஏசாமல் இருக்கலாமே…! அப்படியென்ன கோபம்?

வயசாச்சுல்லா…வயித்திலே அக்கினியில்லே…சுக்கு அக்கினியாச்சே…! – ஏசுவடியாளின் பாந்தமான வார்த்தை….அழகம்மையைத் தணிக்கிறதா? சுக்க கரைச்சு தலையிலே ஊத்தணும்….எரியட்டும்….

பாட்டா சுக்கு வெந்நி… – பாட்டாவுக்கும் பாட்டம்மைக்கும் காதில் விழுந்ததா என்ன? அது ஏதோ ஒரு திசையைப் பார்த்துக் கொண்டு காலத்தின் கோலத்தைத் தன் வாயில் விழும் வார்த்தைகளில் அர்சித்துக் கிடக்கிறது.

அழகம்மை தன் திருமணத்தின் போதுதான் பாட்டா பாட்டியைப் பார்த்தாள். ஆசீர்வாதம் வாங்கப் பணிந்தாள். கையை எடுத்து தலைல வையுங்க…அது போதும்….அங்கே நின்ற கால்களிலிருந்து வேறுபட்ட கிழவர் கிழவியின் பாதங்கள். பழைய மரத்தின் வேர்கள் போல…! ஆஉறா என்ன ஒரு ரசனை…!

கண்ணப்பனுக்க அம்மைக்க தாத்தாவும், பாட்டியுமாக்கும்…ரெண்டு பேரும் நல்ல தீர்க்காயுசு சோடி…அவுக ஆசீர்வாதம் தெய்வ அருளில்லா…. – முப்பிடாதி சித்தியின் முது மொழிகள். இல்லையா பின்னே…வாழ்வு சிறக்க வேண்டாமா? கண்கண்ட தெய்வங்களாயிற்றே…!

ரெண்டு கெழடுகளப் பார்த்துக்கத்தான் உன்னக் கட்டினேன்…தெரிஞ்சிக்க…- கண்ணப்பனின் உரப்பான வார்த்தைகள். முடியாதா? நீ கொண்டு வந்த அஞ்சு பவுனோட கௌம்பிடு…. – தீர்க்கமாகச் சொல்கிறானே…உண்மையில் அந்தப் பெரிசுகள் மீது அழகம்மைக்கு வெறுப்பா என்ன?

ரெண்டு பேரும் மலை மாடனும் மாடத்தியும் போல…..- இதற்கு மேல் என்ன ஒரு மதிப்பு வைக்கணும் மனதில்? அழகம்மை பாவம்தான்….-ஆனாலும் கண்ணப்பன் இந்த விரட்டு விரட்டலாமா? மனசு தவித்துப் போகிறது நமக்கு.

கல்லுக்கு ஒரு அடுக்கு  உண்டு. அதப்பார்த்துத் தட்டினா கண்ணாடிபோலப் பிளந்து வரும்.

இரண்டாய்ப் பிளந்த கல்லின் ஒன்றில் அம்மி கண்ணுக்குத் தெரிகிறது தாணுலிங்கத்திற்கு. இன்னும் நிறைய வேலை இருக்கு வடிவு பண்ண…

பழைய நினைவுகளில் மிதக்கும் கிழவனும் கிழவியும். கிழவி பாறைக்காவு பகவதியைப்பற்றி. கிழவர் பாம்பாடிக்கு வேட்டைக்குப் போனது. அவரவர் நினைவுகள் இப்போது கனவுகளாய் மகிழ்ந்து சிரிக்கும் தருணம்.

கவுச்சி இல்லாமல் கண்ணப்பனுக்கு சோறு இறங்காது. கடைக்குக் கொடுத்து அனுப்புகிறாள். அவர்களைக் கேட்கிறாள்.

இல்ல அம்மணி…கையிலே கலையுள்ள கூட்டமாக்கும். உசிருகொன்னு புசிக்கிறதில்லை…-தொழில் பக்தி. அதில் பொதிந்திருக்கும் கடவுள் நம்பிக்கைகள். அடிப்படை ஒழுக்கம் சார்ந்த விழுமியம்.

கொத்திக் கொத்தி…அம்மிக்கு ரூபம் வந்து விடுகிறது. இனி பரப்பு நேரா ஆகணும்….உருளைத் தடியில்துணியைச் சுற்றி அதன்மேல் நீலநிற மையை  ஊற்றி,  உருட்டு நிரப்பு பார்க்கும் பணி. கொத்திய அம்மியின் மேடான பகுதிகளை நீலமை காண்பிக்கும். மேடுகளைக் கொத்தி எடுத்து சமன் படுத்துதல். நாலைந்து முறை மேடுகளைச் செதுக்கி…நீலத்துணி உருட்டு மொத்தமும் பரவியிருந்தாலே அம்மி ரெடி என்று பொருள். உடனே அரைத்தால் கல் கடிக்கும். ஒரு வாரம் உமி போட்டு உருட்டி பிறகுதான் பயன்பாட்டுக்கு வரும். தொழில் நயமும் நுணுக்கமும் நம் முன்னோர்கள் சொல்லாததா…? குழவிக்கும் இந்த மாதிரி செதுக்கியாகணும்….இது அனுபவம் சார்ந்த தொழில் கை வண்ணம்.

கைத் தொழில் ஒன்றைக் கற்றுக் கொள். கவலை உனக்கிலை ஒத்துக்கொள்…என்று நம்பிக்கை அளித்த பொற்காலம். உருப்பெற்றிருந்த அம்மியையே பார்த்துக் கொண்டிருந்த அழகம்மைக்கு அப்படி ஏன் கண்கள் கலங்குகின்றன?

இது நம்ம வீட்டிலே பிறந்த கன்னுக்குட்டி  கொம்பும் குலையுமா  பசுவா மாறி வயறு தெறண்டு ஈனுகது மாதியில்லா…. – தாணுலிங்கத்தின் ஆத்ம ஒளி பொருந்திய வார்த்தைகள்.

கருப்பட்டி…கருப்பட்டி என்று புலம்பிக்கொண்டிருந்த கிழவியின் ஆசையை அறிந்த கிழவர். நான் கேட்கலை…அவளுக்குக் கொடு…என்கிறார். மனமொத்த ஒன்றிய வாழ்க்கையின் அர்த்தம் அங்கே புலப்படுகிறது.

கல் குருத்து தந்த கனிவில் நெஞ்சம் கழன்று நிற்கிறதே…! அழகம்மையோடு சேர்ந்து நாமும் மகிழ்ந்து போகிறோம்.

உஷாதீபன்

கல்குருத்து- கடிதம் -1 கல்குருத்து -கடிதம்-2 கல்குருத்து -கடிதம்- 3

கல்குருத்து -கடிதம்- 4

கல்குருத்து- கடிதம்-5

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 15, 2021 10:31

வசைபாடிகளின் உலகம்- கடிதங்கள்

அன்புள்ள ஜெ

அடிக்கடி இலக்கியச் சூழலில் வம்பர்களைப் பற்றி எழுதிக்கொண்டே இருக்கிறீர்கள். சமீபத்தில் ஒரு நிகழ்வு. ஒரு நண்பன் பயங்கர உற்சாகத்துடன் சொன்னான். “நாலுநாளா ஃபேஸ்புக்லே —க்கு செம மாத்து… அடிச்சு துவைச்சிட்டாங்க”

எனக்கு அந்த தன்னம்பிக்கை மிக்க சிரிப்பு எரிச்சலை அளித்தது. “ரொம்ப அடிச்சிட்டாங்களா?” என்றேன்

“செம அடி…” என்றார் “சின்னபின்னமாக்கிட்டானுக”

“சரி, அடிவாங்கினவரு என்ன பண்றார்? அப்டியே உடைனுசு போயிருப்பாரே? உசிரோடத்தான் இருக்காரா?”

நான் நக்கலடிப்பது தெரிந்து அமைதியாகிவிட்டான்.

“ஏண்டா, நீங்க பத்துபேரு ஃபேஸ்புக்லே ஒருத்தனை தாறுமாறா திட்டினா அவனுக்கு என்ன? அவன் பாட்டுக்கு அவன் வேலையை கவனிக்கப்போறான். நீங்க நாலஞ்சுநாள் சலம்பிட்டு அடுத்த ஆளை புடிச்சுக்குவீங்க..உங்களுக்கு வேற வேலையில்லைன்னு அர்த்தம்” என்றேன்

அவனுக்கு சுருக்கென்று இருந்திருக்கவேண்டும். “அதெல்லாமில்ல. ஒப்பீனியன் உண்டாக்கிறோமில்ல?”என்றான்

“யாருக்கு? அந்த எழுத்தாளர படிக்கிறவங்க அவங்களே ஒப்பீனியன உருவாக்கிக்கிறாங்க. படிக்காதவங்க என்ன நினைச்சா அவருக்கு என்ன? படிக்கிறவன் படிக்காத முட்டாக்கும்பல் சலம்புறத பாத்து அபிப்பிராயத்த மாத்திக்குவானா என்ன?”

அவன் என்னென்னவோ சொல்ல ஆரம்பித்தான். நான் கடைசியாகச் சொன்னேன். “உங்களுக்கு மனச்சிக்கல். அதுக்காக யாரையாவது புடிச்சு வசைபாடிட்டிருக்கீங்க. அப்பப்ப உங்களுக்கு யாராவது மாட்டுறாங்க. நீங்க இங்க கிடந்து காள் காள்னு கத்துறது உங்களுக்கு மட்டும்தான் கேக்கும். ஒருத்தர் குசுவ இன்னொருத்தர் மோந்து பாத்துட்டு சந்தோஷப்படுறீங்க…அவ்ளவுதான்”

நட்பே முறிந்துவிட்டது. ஆனால் மகிழ்ச்சியாக இருந்தேன்.

அருண்குமார்

 

அன்புள்ள ஜெ

இந்த இணைய வம்பர்களைப் பற்றி நிறைய எழுதிக் கொண்டிருக்கிறீர்கள். இதனால் அவர்களுக்கு ஒன்றுமில்லை. ஏனென்றால் அவர்கள் இதை வாசிக்கப்போவதில்லை. வாசித்தாலும் உறைக்காது. ஏனென்றால் அவர்களால் அந்த வசையும் கூச்சலும்தான் முடியும்.

ஆனால் இலக்கியவாசகர்களுக்கு ஒரு செய்தியை ஆழமாகச் சொல்கிறீர்கள். அந்த அரசியல்சழக்கர்களுக்கும் அறிவியக்கத்துக்கும் சமப்ந்தமில்லை. அவர்களுடன் எந்தவகையிலும் அறிவியக்கவாதி உரையாட முடியாது. அவர்களை பொருட்படுத்தவே கூடாது. அது கொஞ்சம் கொஞ்சமாகச் சென்று சேர்ந்திருக்கிறது என்று இன்றைக்குப் பேசும் இளைஞர்களைக் கவனித்தால் தெரிகிறது.

நான் கண்டுகொண்ட இரண்டு விஷயங்கள். ஒன்று, இந்தக்கும்பல் எப்போதாவது ஏதாவது இலக்கியவாதி பற்றி ஒருவரியாவது பாராட்டிச் சொல்லியிருக்கிறதா என்று பார்க்கவேண்டும். எந்த நூலையாவது படித்து நாலு வரி எழுதியிருக்கிறார்களா?  ஆனால் அத்தனை எழுத்தாளர்களையும் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி திட்டி அவமானப்படுத்தியிருக்கிறார்கள். அப்படியென்றால் இவர்கள் யார்?

இன்னொன்று, சிறுபான்மையினர் பற்றி. இதைச்சொன்னால் சங்கி முத்திரை விழும். ஆகவே முதலிலேயே சங்கிகளின் காழ்ப்பை பற்றிச் சொல்லிவிடுகிறேன். அவர்கள் அரசியல் மனநோயாளிகள். ஆனால் இந்துக்களில் அவர்கள் பத்துசதவீதம்கூட இருக்க மாட்டார்கள். மிச்சமிருப்பவர்கள்தான் இலக்கிய வாசகர்கள். இங்கே அத்தனை பேருக்கும் அவர்கள்தான் வாசகர்கள்

ஆனால் சிறுபான்மையினரில் அனேகமாக அத்தனைபேருமே மதவாதக்கோணத்தில் மட்டும்தான் யோசிப்பார்கள். அரசியல், இலக்கியம் எதுவானாலும் அவர்களின் மதவெறி மட்டும்தான் வெளிப்படும். அவர்களுக்கு கலையோ இலக்கியமோ அழகியலோ ஒன்றுமே புரியாது. விதிவிலக்காக இணையத்தில் ஒருவர்கூட இதுவரை என் கண்ணுக்குப் படவில்லை. ஆனால் முற்போக்கு பேசுவார்கள். திராவிட அரசியல் பேசுவார்கள். தமிழ்த்தேசியம் பேசுவார்கள். அதெல்லாமே தங்கள் மதவாதத்தை மறைப்பதற்கான பாவலாக்கள்.

மிகச்சின்ன வயசிலேயே கடுமையான பிரச்சாரம் வழியாக இவர்களுக்குள் மதப்பற்று ஊட்டப்பட்டுவிடுகிறது. அது மாற்றுமதம் மீதான காழ்ப்பாக ஆகிறது. கடைசிவரை அதுதான் இவர்களின் சிந்தனைகளை ஆள்கிறது. அதைவிட்டு வெளியே செல்லவே முடிவதில்லை. இத்தனை முற்போக்கு பேசும் சிறுபான்மைக் கும்பலில் இருந்து அவர்களின் மதம் பற்றி ஒரு சிறு விமர்சனத்தை நீங்கள் பார்க்கமுடியாது. சரி, மதவாதம் பற்றியோ மதஅடிப்படைவாதம் பற்றியோகூட ஒரு வரி முனக மாட்டார்கள்.

மிகப்பெரிய சாபம் இது என்று படுகிறது. பத்துவயதுக்குள் மூளைச்சலவை செய்யப்பட்டு வேறெந்த சிந்தனையும் உள்ளே போகமுடியாமல் மூடப்பட்ட மண்டைகள். இந்துக்களில் பிராமணர்களுக்கு பிராமண மேட்டிமைவாதம் இப்படி சின்னவயசிலே புகுத்தப்படுகிறது. ஆனாலும் பலர் வெளியே வந்துவிடுகிறார்கள். சிறுபான்மையினருக்கு அது சாத்தியமே இல்லை என நினைக்கிறேன். எவ்வ்ளவு படித்தாலும் என்ன சிந்தித்தாலும் அடிப்படையான மனநிலை மதக்காழ்ப்பு மட்டும்தான்.

இந்தக்கும்பல்தான் இணையத்தில் உச்சகட்ட காழ்ப்பை கக்கிக்கொண்டிருக்கிறது

அர்விந்த்குமார் எம்

இதழியல்,இலக்கியம்,வம்புகள்

வெறுப்பெனும் தடை- கடிதங்கள்

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 15, 2021 10:30

November 14, 2021

காந்திமீதான விமர்சனங்கள்

காந்தியும் கறுப்பினத்தவரும்

அன்புள்ள ஜெ அவர்களுக்கு,

அரவிந்தர் காந்தியை விமர்சனக் கண்ணோட்டத்துடன் தான் அணுகினார் என நினைக்கிறன். காந்தியின் அஹிம்சை, சத்தியாகிரகம் யாவும் லியோ தல்ஸ்தோயின்  ரஷ்ய கிறிஸ்துவ கருத்துக்கள் தாம். இவை யாவும் இந்திய

முலாம் பூசப்பட்ட ருசிய நம்பிக்கைகள் எனச் சொல்லும்  அரவிந்தர், இந்திய தன்மை அரசியலில் இல்லாததால் தாம் அதில் பங்கேற்க முடியாது எனவும் தெரிவிக்கிறர்.  காந்தியின் வழி மேற்கத்தியது தானா? அவ்வாறு இருந்தாலும் அதில் என்ன தவறு?

என்றும்

கிருஷ்ணமூர்த்தி.

 

அன்புள்ள ஜெ

பெரி ஆண்டர்சன் Perry Anderson தன்னுடைய இந்தியன் ஐடியாலஜி The Indian Ideology நூலில் காந்தியையும் நேருவையும் கடுமையாக விமர்சிக்கிறார். அதை கவனித்திருக்கிறீர்களா? உங்கள் கருத்து என்ன?

பாலா வைத்யா

அன்புள்ள கிருஷ்ணமூர்த்தி, பாலா

காந்தியை பல கோணங்களில் பலர் விமர்சனம் செய்திருக்கிறார்கள். காந்தி மிகத்திட்டவட்டமான ஒரு பார்வையை முன்வைப்பவர். அதனூடாக ஒரு வரலாற்று நிகழ்வை முன்னின்று நடத்தியவர். ஆகவே அவரை விமர்சிக்கும் தரப்புகள் அவர் தொடங்கியபோதே, தென்னாப்ரிக்காவிலேயே வலுவாக எழுந்து வந்தன.இன்னும் வந்தபபடியேதான் இருக்கும். அவற்றை பரிசீலிக்கலாம். உங்களுக்கு எது உகந்தது என தோன்றுகிறதோ அதைக் கொள்ளலாம்.

அரவிந்தரின் கருத்தை வாசித்திருக்கிறேன். நாற்பதாண்டுகளுக்கு முன் வாயில் நுரைதள்ள ஆவேசமாக அவற்றை பேசி, பிரச்சாரம் செய்திருக்கிறேன். அரவிந்தரின் பார்வை இந்தியாவின் கடந்த கால நிலப்பிரபுத்துவ வரலாறு சார்ந்து உருவாக்கப்பட்ட பழமைவாத அணுகுமுறை, இந்துத்துவர்களுக்கு மட்டுமே உவப்பானது. இந்தியா ஷத்ரிய வீரத்தால் சுதந்திரம் பெற்றிருக்கவேண்டும் என்கிறார். அவருக்கு ஜனநாயகத்தில், பொதுமக்களின் திரள்விசையில் நம்பிக்கை இல்லை. அகிம்சை வழிமுறைகள் கோழைத்தனம் என்கிறார்.

அரவிந்தர் பேசுவனவற்றில் காலம்கடந்த ஆன்மிகமான சில தளங்கள் உள்ளன. யோகம் சார்ந்தவை ஒரு தளம். இந்திய மெய்யியலை கவித்துவம் வழியாக அணுகும் அறிவார்ந்த பார்வை இன்னொரு தளம். அவ்விரண்டுமே முக்கியமானவை. அரசியலில் அவர் காலாவதியான சென்ற யுகத்தைச் சேர்ந்தவர். நவீன மனிதனால் முழுமையாகவே நிராகரிக்கப்படவேண்டியவர். அதை கண்டடைய எனக்கு சில ஆண்டுகளே ஆயின.

பெர்ரி ஆண்டர்சனை நீங்கள் சொல்வது வரை படித்ததில்லை. நான் அவரைப்பற்றி கேள்விப்படும்போது அவரைப்போன்ற  மேலைமார்க்சியர்களை எல்லாம் ஒருவகையான கல்வித்துறை காளான்கள் என்னும் முடிவுக்கு வந்திருந்தேன். அவர்களுக்கு வறுமையோ சுரண்டலோ முக்கியமல்ல. மனிதர்கள் முக்கியமல்ல. மார்க்ஸியம்கூட முக்கியமல்ல. அவர்கள் தாங்கள் இருப்பதை அறிவிக்க மூளையை நுரைக்க வைக்கிறார்கள். அவர்களுக்காக நாம் அளிக்கும் உழைப்பும் பொழுதும் வீண். நீங்கள் அரசியல் கோட்பாட்டில் முனைவர் பட்டம் பெற்று கல்லூரியில் வேலைக்குச் சேர்வதென்றால் அவரையெல்லாம் வாசிக்கலாம்.

ஆனால் இப்போது இந்த ஒருநூலை மட்டுமே பார்க்கையில் அவர் ஒருவகை ’கோட்பாட்டு மூடர்’ என்னும் எண்ணமே உருவாகிறது. இந்திய மார்க்சியர்களே அவரை விமர்சனம் செய்திருக்கிறார்கள். அவரிடமிருப்பவை இரண்டு வகை கண்மூடித்தனங்கள். ஒன்று, இந்தியாவின் அரசியல் போராட்டத்திலுள்ள பிழைகளை தேடித்தேடிச் சேர்த்து, தனக்குத் தேவையானவற்றை மட்டுமே சேகரித்து, திரித்து, பொய்ச்செய்திகளையும்கூட பயன்படுத்திக்கொண்டு ஒரு கரிய சித்திரத்தை உருவாக்குகிறார். அவ்வாறு செய்வதிலுள்ள அறிவுமோசடித்தனம்கூட அவர் கண்ணுக்குப் படவில்லை. ‘கொள்கையின் பொருட்டு’ அவற்றைச் செய்யலாம் என்று நம்புவது மார்க்ஸியர்களின் வழி.

ஆனால் இந்த இந்தியக் கருத்தியல் பலகோடி பேரை ஆதிக்கத்தில் இருந்தும் வறுமையில் இருந்தும் விடுவித்து அரைநூற்றாண்டுக்குள் ஒரு நவீன உலகு நோக்கி கொண்டுவந்திருக்கிறது. கோடிக்கணக்கில் பொதுமக்களை பலி கொடுக்கவுமில்லை. அவர் நம்பும் மார்க்ஸியத்தின் எல்லா வெற்றிகளுமே கொடுங்கோல் அரசுகளை, அடிமைத்தனத்தை, பஞ்சங்களை, எளிய மக்களின் பேரழிவுகளை மட்டுமே உருவாக்கியிருக்கின்றன. அதைப்பற்றி அவருக்கு சமாளிப்புகளே உள்ளன. வழக்கம்போல ‘தியரி தெய்வீகமானது, நடைமுறையின் பிழைகளில் சிலகோடி மக்கள் செத்தழிந்தால் அது அவர்களின் தலையெழுத்து’ என்னும் பாவனை. எல்லா மதவெறிகளிலும் உள்ள பார்வை அது.

இரண்டு, இத்தனை முற்போக்குக்கு அடியிலும் அவரிடமிருப்பது வெள்ளை இன மேட்டிமைவாதம்தான். ‘அதெப்படி இந்தியா தனக்குரிய அரசியலை தானாகவே உருவாக்கிக் கொள்ள முடியும்? அதற்கான அறிவு அந்தப் பின்தங்கிய சமூகத்துக்கு எப்படி இருக்க முடியும்? நாங்கள் வெள்ளையர் இங்கே பிறகு என்னத்துக்கு இருக்கிறோம்?’ என்பதே அவருடைய அடியுள்ளம் சொல்வது. சராசரி பிரிட்டிஷாரின் அதே மேட்டிமைவாதமும் கசப்புமே இவரில் புரட்சிப்பூச்சுடன், பலவகை பசப்பல்களுடன் வெளிப்படுகிறது. கடந்துபோகவேண்டிய சொற்குப்பை என்பதற்கு அப்பால் அவர் எழுத்துகளைப் பற்றி பேசுவதே வீண்.

ஆனால் இ.எம்.எஸ் காந்தியின் வழிமுறைகளை மார்க்சியக் கோணத்தில் கடுமையாக விமர்சனம் செய்தவை கவனத்திற்குரியவை. ஏனென்றால் அவை நேரடியாகக் களத்திலிருந்து எழுந்த சிந்தனைகள். குறிப்பாக காந்தியின் தர்மகர்த்தா கொள்கை, நுகர்வுத்துறப்புக் கொள்கை இரண்டையும் இ.எம்.எஸ் முழுமையாக நிராகரிக்கிறார். உடைமையை உருவாக்கிக் கொள்ளும் உள்ளம் ஒரு குறிப்பிட்ட கட்டமைப்பு கொண்டது, ஆகவேதான் அது செல்வத்தை திரட்டுகிறது. அதன் வெற்றி, அடையாளம், மகிழ்வு எல்லாமே செல்வத்தைத் திரட்டலில்தான் உள்ளது. பகிர்வது என்பது அதற்கு நேர் எதிரான மனநிலை. அதைநோக்கி இயல்பாகவே உடைமையுள்ளம் வந்துசேரும் என்றோ சேரவேண்டும் என்றோ சொல்வது வெறும் கற்பனாவாதம் என்கிறார் இ.எம்.எஸ்.

நுகர்வு என்பதை காந்தி காணும் பார்வையும் இ.எம்.எஸ்ஸால் ஏற்கப்படுவதில்லை. நுகர்வு என்பது வெறும் கேளிக்கை அல்ல. அது வாழ்க்கைப் போராட்டத்தின் நுகத்தில் இருந்து விடுவிக்கிறது . அதன் வழியாக மனிதனை சிந்திப்பவனாக ஆக்குகிறது. அதுவே மேலும் சிறந்த பண்பாட்டை உருவாக்கும். நுகர்வு அற்ற சமூகம் தேங்கிப்போன ஒன்று. நுகர்வுமறுப்பு என்பது  பொருளியல் தேக்கத்தையே உருவாக்கும். அது சிந்தனைத் தேக்கத்தையும் கலாச்சாரத் தேக்கத்தையும் காலப்போக்கில் உருவாக்கும். காந்தியின் கிராம சுயராஜ்யம் என்பது ஆயிரமாண்டு காலமாக தேங்கிக்கிடந்த இந்தியக் கிராமத்தை முன்மாதிரியாகக் கொண்டது என்கிறார்  இ.எம்.எஸ். அது தேக்கத்தையே உருவாக்கும் என்கிறார். காந்தி வெறும் உழைப்பை மட்டுமே முன்வைப்பவர், கலாச்சார வளர்ச்சி கலைகள் சிந்தனைகள் ஆகியவற்றுக்கு எதிரானவர் என்கிறார்.

இ.எம்.எஸ் அவர்களை நான் முழுமையாக நிராகரிப்பதில்லை. அவை அவருக்கு முன்னரே எம்.என்.ராய் போன்றவர்களால் முன்வைக்கப்பட்டவையும் கூட. காந்தியை நாம் நடைமுறையில் நின்று மதிப்பிடவேண்டுமென்றால்  இ.எம்.எஸ் போன்றவர்களின் கருத்துக்கள் மிக அவசியமானவை. சிந்தனையில் என் இடம் காந்திக்கும் இ.எம்.எஸ் அவர்களுக்கும் நடுவில் எங்கோதான். திடமான நிலைபாடு கொண்டது அல்ல அது, நிரந்தரமாக ஊசலாடுவது.

எம்.என்.ராய்

மேலே சொன்ன அரவிந்தர், மார்க்ஸியம் என்னும் இரு தரப்புக்கும் பொதுவானதாக உள்ளது வன்முறையே தீர்வு என்னும் நம்பிக்கை. கம்யூனிஸ்டுகள் தங்கள் அரசியல் போராட்டங்களுக்காக பலகோடிபேரை கொன்றழித்தனர். ஒன்றும் அறியாத எளிய மக்கள் ஈசல்கள்போல மடிந்தனர்.  அதைப்பற்றிய எந்த குற்றவுணர்ச்சியும் அவர்களிடமில்லை. அந்தப் போராட்டமே தவறென்று நிரூபிக்கப்பட்டால் ‘அது ஒரு கொள்கைப்பிழை, அவ்வளவுதான்’ என கடந்துசென்றுவிடுவார்கள். ஷத்ரியவீரம் பேசுபவர்கள் சென்றகாலம் முழுக்க   அரசர்களின் பூசல்களில் செத்தழிந்த சாமானியர்களைக் கருத்தில் கொள்வதே இல்லை. இரு தரப்புக்கும் நம்பிக்கை, அடையாளம், கொள்கை, அதிகாரம், வரலாறு ஆகியவை முக்கியம். அவர்கள் சாமானியர்களை பொருட்படுத்துவதே இல்லை.

காந்தி சாமானியர்களைப் பொருட்படுத்தியவர். சொல்லப்போனால் வரலாற்றில் சாமானியர்களைப் பொருட்படுத்தி, அவர்களின் பார்வையில் அரசியலை அணுகிய முதல் அரசியல் கோட்பாட்டாளர் அவர்தான். மக்களை கொலைக்களத்துக்கு அனுப்பும் எந்தப் போராட்டத்தையும் அவர் வெறும் அழிவு என்றே எண்ணினார். ஒரு போராட்டத்தின் விளைவு என்ன என்பது நம் கையில் இல்லை. அது வரலாற்றின் ஒழுக்கில் எப்படியும் ஆகலாம். அந்நிலையில் அதன்பொருட்டு மக்களை காவு கொடுப்பது வெறும் மதியீனம் மட்டுமே

தான் நினைப்பதே அறுதி உண்மை, அதை நிறுவ எத்தனைகோடிபேர் செத்தாலும் சரியே என எண்ணும் அரசியல்தலைவன் அல்லது அரசியல்கோட்பாட்டாளன் வெறும் ஆணவக்காரன் மட்டுமே. வரலாறு மிகமிகப்பெரிய பெருக்கு. அதில் எல்லா மாமனிதர்களும் மாபெரும் சிந்தனையாளர்களும் வெறும் குமிழிகளே. அந்த வரலாறு மக்கள் வழியாகவே நிகழ்கிறது. மக்களின் எண்ணங்களை, வாழ்க்கைமுறையை மாற்றுவதே உண்மையான மாற்றம். அந்த மாபெரும் தரிசனமே காந்தியத்தின் அடிப்படை. அதுவே காந்தியை அரவிந்தரோ அல்லது இ.எம்.எஸ்ஸோ சொல்லும் கோட்பாட்டுநம்பிக்கை மற்றும் வன்முறைப்பாதை ஆகியவற்றை நிராகரிக்கச் செய்தது.

மக்களைப் பயிற்றுவிப்பது, அதற்கான அமைப்புகளையும் இயக்கங்களையும் உருவாக்குவது, அதனூடாக மக்களை தங்களுக்கு தேவையானவற்றை நோக்கிச் செல்லும்படி வரலாற்றினூடாக இயல்பாகச் செலுத்துவது ஆகியவையே காந்தியத்தின் அடிப்படை. மக்கள் என்பது ஒருவகை களிமண், தங்கள் கைவிரல்களால் பிசைந்து விருப்பப்படி சிற்பமாக்கலாம் என நம்பும் ஆணவம் எவருக்கு இருந்தாலும் அவர்களால் காந்தியை ஏற்கமுடியாது

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 14, 2021 10:35

விஷ்ணுபுரம் விருந்தினர்-3, எம்.கோபாலகிருஷ்ணன்

விஷ்ணுபுரம் விருந்தினர்-1, கோகுல் பிரசாத்

விஷ்ணுபுரம் விருந்தினர்-2, காளிப்பிரசாத்

எம்.கோபாலகிருஷ்ணன் தமிழிலக்கியச் சூழலில் முப்பதாண்டுகளாக செயல்பட்டு வருபவர். முதன்மையாக நாவலாசிரியர். அம்மன்நெசவு, மணற்கடிகை, மனைமாட்சி, தீர்த்த யாத்திரை ஆகிய நாவல்கள் தமிழில் பரவலாக பேசப்பட்டவை. சொல்புதிது இதழை ஜெயமோகனுடனும் நண்பர்களுடனும் இணைந்து நடத்தியவர்.

வால்வெள்ளி ,மாயப் புன்னகை ஆகிய குறுநாவல் தொகுதிகள், பிறிதொரு நதிக்கரை  முனிமேடு,  சக்தியோகம், மல்லி ஆகிய சிறுகதைத்தொகுதிகள் வெளிவந்துள்ளன. காதலின் துயரம் [கதே] ஆண்டன் செகோவ் கதைக ள் ஆகிய நூல்களை மொழியாக்கம் செய்திருக்கிறார். நாராயணகுருவின் ‘அறிவு’ நித்ய சைதன்ய யதியின் ‘ஈஸோவாஸ்ய உபநிடதம் உரை’ ஆகியவற்றையும் மொழியாக்கம் செய்துள்ளார்

எம்.கோபாலகிருஷ்ணனின் வலைப்பக்கம்,

 

 

எம்.கோபாலகிருஷ்ணன் நாவல்கள்

அம்மன் நெசவு பற்றி ராயகிரி சங்கர்

 

மணற்கடிகை பற்றி கா.சிவா

மணற்கடிகை – க.மோகனரங்கன்

கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது- ஜெயமோகன்

மனைமாட்சி வாங்க

மனைமாட்சி நாவல் பகுதி

மனைமாட்சி விமர்சனம் கோகுல்பிரசாத்

மனைமாட்சி நாவல் விமர்சனம் – காளிப்பிரசாத்

தீர்த்த யாத்திரை வாங்க

தீர்த்தயாத்திரை -நாவல் பகுதி

*

தமிழினி இணைய இதழ், எம்.கோபாலகிருஷ்ணன் படைப்புகள்

எம் கோபாலகிருஷ்ணன் நூல்பட்டியல்

நடனமகளுக்கு எம் கோபாலகிருஷ்ணன் ஒரு கவிதை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 14, 2021 10:34

கோவை கவிதை நிகழ்வு,கடிதங்கள்

கோவை கவிதைநிகழ்வு- கடிதம்

கோவை கவிதைவிவாதம் – கடிதம்

கோவையும் கவிதையும் ஒரு கோழியும்

அரங்கில் விவாதிக்கப்பட்ட படைப்புகள்

அன்புள்ள ஜெ,

வணக்கம். கோவை கவிதை விவாதக் கூட்டம் தொடர்பான இரம்யாவின் கடிதம் அதில் பங்கேற்காத குறையை ஓரளவு நிவர்த்தி செய்தது. விஷ்ணுபுரம் விருது விழா தவிர வேறெந்த இலக்கியக் கூட்டத்திலும் கலந்து கொண்டதில்லை; அது தொடர்பான பதிவுகளும் இந்தஅளவிற்கு  தவறவிட்டதிற்கான வருத்தமளித்ததில்லை. நீங்கள் முகாமில் சொன்னதுபோல இத்தகைய கவிதை முகாம்கள் தொடரவேண்டுமென விழைகிறேன்.

நன்றி,

விஜயகுமார்.

அன்புள்ள ஜெ

கோவை கவிதை நிகழ்வு பற்றிய செய்திகளை வாசித்தேன். கவிதையைப்பற்றி பேசிவிட முடியுமா என்று எப்போதுமே சிலர் சொல்வதுண்டு. நான் அதற்கெல்லாம் பதிலாக கவிதையைப்பற்றி தொல்காப்பிய காலம் முதல் பேசப்படுகிறது. கவிதையரங்குகள் உலகம் முழுக்க நிகழ்கின்றன. அவர்களெல்லாம் முட்டாள்கள் அல்ல என்று பதில் சொல்வேன்

நான் கவிதையரங்குகளில் அடையும் அனுபவம் என்னவென்றால் இரண்டுநாட்களும் கவிதையிலேயே இருந்துகொண்டிருப்பதன் பேரின்பம்தான். என்னால் வேறு எப்போதுமே இப்படி கவிதைக்குள்ளேயே இருந்துகொண்டிருக்க முடியாது. இத்தனை கவிதைகளை ரசிக்கவும் முடியாது. ஒரு கவிதை விதவிதமாக வாசிக்கப்படும்போது அது விரிந்துகொண்டே செல்கிறது. அது மிகப்பெரிய ஒரு கலையனுபவம்

இங்கே கவிதையரங்குகள் ஒரு காலத்தில் நிறையவே நடைபெற்றன. பிறகு அவை நின்றுவிட்டன. நின்றதற்குக் காரணம் கவிஞர்கள் என்ற பேரில் கவிதை தெரியாத அரசியல்கும்பலும் சில குடிகாரர்களும் ஆடிய ஆட்டம்தான் காரணம். இதனால் இழப்பு நல்ல கவிதை ரசிகனுக்குத்தான். ஆகவே இதைப்போல தேர்வுசெய்யப்பட்ட பங்கேற்பாளர்களுடன் நிகழும் அரங்குகள் மிகமிக அவசியமானவை

ராஜ்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 14, 2021 10:31

கல்குருத்து – கடிதங்கள் 5

கல்குருத்து- சிறுகதை

அன்புள்ள ஜெ

நல்ல ஒரு சிறுகதையின் இலக்கணம் என்ன என்று நான் யோசிப்பதுண்டு. அது கவிதையாக இருக்கவேண்டும். சமீபத்தில் மனுஷ்யபுத்திரன் ஓர் உரையில் சொன்னதுபோல கவிதையை நோக்கித்தான் இன்றைக்கு கதை சென்றுகொண்டிருக்கிறது. கேளாச்சங்கீதம் கவிதைதான். இதுவும் கவிதைதான்.

இது அடிபப்டையில் ஒரு படிமம். தேய்ந்து ஒன்றையொன்று தொடாமலாகிவிட்ட அம்மிகள். அவை அரைப்பதற்கு உதவாது. அவற்றுக்கு இந்த உலகச்செயல்களில் இனி இடமில்லை. ஆனால் அவை பல்லாயிரம் முறை ஒன்றுடன் ஒன்று உரசி உரசி எல்லா முரண்பாடுகளையும் களைந்துதான் அப்படி ஆகியிருக்கின்றன. அந்த உரசல்கள் வலி மிகுந்தவை. இழப்பு உடையவையும்கூட. ஆனால் ஒன்று இன்னொன்றை மென்மையாக்குகிறது. கடைசியில் கல்குருத்துகளாக மாறி நின்றிருக்கின்றன இரண்டும்.

அந்த படிமம்தான் கதை. அதை ஒரு கவிதை ஏழெட்டு வரிகளில் சொல்லிவிடும். அதன் அழகு வேறு. அது கதையாக ஆகும்போது கண்ணெதிரே அந்த வீடு, அம்மிகொத்த வந்த தம்பதிகள், அந்த கிழடுகள் எல்லாவற்றையும் பார்க்கமுடிகிறது. உண்மையில் சென்று அதைப்பார்த்தது மாதிரியும் இருக்கிறது. நானே இப்படிச் சொல்லிக்கொள்கிறேன். ஒரு கவிதை நிகழ்வதற்கு ஒரு கணம் முன்னால் அந்தக் கவிதையை நிகழ்த்தும் சூழலை நேரில் சென்று பார்ப்பதுபோல இருந்தால்தான் அது சிறந்த கதை

ஸ்ரீனிவாஸ்

திரு.ஜெயமோகன் அவர்களுக்கு

வணக்கம்.

கல்குருத்து சிறுகதையை வாசித்தேன்.

கணவனின் அம்மையின் தாத்தா பாட்டியை பராமரிக்கும் கடன் அழகம்மைக்கு. அது வரமாகும் அல்லது மனம் அதை விரும்பும் தருணத்தை  சொல்கிறது கதை. மூத்தது குருத்து ஆகும் என்பதை அழகம்மை உணர்கிறாள். உள்ளபடி அவளுக்கு அவர்கள் மீது வெறுப்பில்லை.  கணவனின் சிடுசிடுப்பும் கிழ தம்பதிகளின் தொணதொணப்பும் அவளுக்கு ஒருமாதிரியான எரிச்சலை கிளப்புகிறது. இதை என்னவென்று மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்வது? சொன்னாலும் புரிந்துக் கொள்ள இயலுமா என்றெல்லாம் எண்ணிக் கொண்டு  அவளுக்கு அழுகை வருகிறது.

கல்லுக்குள் இருக்கும் அம்மியை போல, அவளுக்குள் மூன்று குழவிகள் இருப்பதாக சொல்லும் கல்லாசாரி தம்பதிகளின் பேச்சு அவளுக்குள் சிலிர்ப்பாக ஓடி மறைகிறது. மனம் முதிய தம்பதிகளிடம் நெகிழ்ந்துப் போகிறது. அத்தனை அழகாக குழைந்து வருகிறது கதை. அதில் உள்ள நுணுக்கங்கள் வழக்கமான உங்கள் டச் என்றாலும் மீண்டும் மீண்டும் படிக்க வைக்கிறது.

‘பழைய அம்மியின் பரப்பு கன்னங்கரேலென்று உருகி வழிந்ததுபோல தெரிந்தது. படகு போலிருந்தது அம்மி. குழவியின் உருளைவடிவம் மெழுகுபோல கரைந்து குழிவாகியிருந்தது. அதனை கல் என்றே சொல்லமுடியாது. இரவில் கொல்லைப் பக்கம் வந்து பார்த்தால் அங்கே அண்டாவில் தண்ணீர் இருப்பதுபோல அதன் பளபளப்பு தெரியும்’  சித்திரம் போல, புகைப்படக்காட்சி போல அத்தனை தெளிவான வர்ணனை.

‘அது பாய்ந்து அன்னையின் அகிடில் முகம் சேர்த்து முட்டி முட்டிக் குடிக்கத் தொடங்கியது. அதன் கடைவாயில் பாலின் நுரை எழுந்தது’ அதே.. அதே… மனிதக்குழந்தை கடைவாயில் பாலோடு சிரிப்பும் வழிய தன் சொக்க வைக்கும் பளபளத்த விழிகளோடு தாயிடம் பேசும் முதல் மொழி அது.

மிக மிக பிடித்தமான கதை

அன்புடன்

கலைச்செல்வி

கல்குருத்து- கடிதம் -1 கல்குருத்து -கடிதம்-2 கல்குருத்து -கடிதம்- 3

கல்குருத்து -கடிதம்- 4

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 14, 2021 10:31

புத்தனாகும் புழுக்கள்-தங்கபாண்டியன்

அன்பின் ஜெ,

நலமுடன் இருக்க அருணைப்பித்தனின் ஆசீர்வாதம் என்றும் உங்களோடிருக்கட்டும்.

“அசைவென்பது அவன் கரங்களாக,

அதிர்வென்பது அவன் கால்களாக,

திசையென்பது அவன் சடைமுடிக்கற்றைகளாக,

ஒளியென்பது அவன் விழிகளாக,

இருளென்பது அவன் கழுத்துநாகமாக இருந்தது.

அவனென்பதை அவனே அறிந்திருந்தான்.

ஆடுகையில் அவனில்லை என்பதையும் அவனறிந்திருந்தான்”.

(மழைப்பாடல்,வெண்முரசு)

புழு என்ன செய்துவிட முடியும்? புழு எனக்கு  இரண்டு ஆசான்களை அறிமுகப்படுத்தியது. என்னுடைய பணிநிமித்தம் புழு மண்டிய பிணங்களை இறப்பறி பரிசோதனை செய்ய நேரும். அந்த தருணங்களில் புழுக்கள் பல விஷயங்களை உணர்த்தும், அதனூடாக எவ்வாறு நோயறிதலுடன் அணுக்கமாவதை கற்பிக்கும் என்று போதித்த எனது முதல் ஆசான் சி. பாலச்சந்திரன்.

இரண்டாவது, 2007 ல் யானைடாக்டர் குறுநாவல் மூலம் அறிமுகமாகி வாழ்வியலாகவே மாறிப்போன ஜெயமோகன்.

நீங்கள் கூறியதுதான் “கங்கையை மதிப்பிடும் அளவுக்கு கரைமரங்களுக்கு வேர்கள் இல்லை”.   வெண்முரசோ யானை டாக்டரோ   புழுக்கள் வரும் தருணங்களை வாசிக்கும்போதெல்லாம் ஒரு நிலைகுலைவு உருவாகிறது. அதுவரை என்னைப்பற்றி கொண்டிருந்த எண்ணங்கள் மாறுபடுகின்றன. என்னை நானே உடைத்து மறு ஆக்கம் செய்துகொள்கிறேன். அவ்வாறு வெண்முரசு உருவாக்கிய கேள்விகளுடனும் அலைவுகளுடனும் நாட்கள் கடந்துகொண்டிருக்கின்றன.

புழு என்றெண்ணம் வரும்போதே நமக்கு கீழ்மையும் சேர்ந்தே நினைவில் வரும். பொதுவாக. பொருள், பதவி, புகழ், அதிகாரம், வசதிகள் ஆகியவற்றை மட்டுமே நோக்கி நகர்கின்ற லௌகீக வாழ்க்கை, கையூட்டு, குழைதல், புறம்பேச்சு, அகங்காரம், ஆணவம், கீழ்த்தர எண்ணங்கள், ஏமாற்றுதல், வஞ்சித்தல், காக்காபிடித்தல், கூழைக்கும்பிடு, சுயமிழத்தல், நம்பிக்கை துரோகம், நேர்மையின்மை, அழகியலின்மை,  மொண்ணைத்தனம் என ஓராயிரம் நிகழ்வுகள் புழு இயல்பு என நம்மை எண்ணவைக்கின்றன.

ஆனால் இவற்றையெல்லாம் கடந்தோ புறந்தள்ளியோ புழுக்களின் அறியா மற்றொரு முகம் எனக்கு கனவில் நனவெனவோ நனவில் கனவெனவோ அறிமுகமாகிக்கொண்டே இருக்கிறது. தங்களை எப்போதும் உளமெழச்செய்யும் படிமமான, குமாரசம்பவத்தில் காளிதாசன் சொல்லும் புகழ்பெற்ற உவமையாகிய  ‘யானைமத்தகத்தை அறைந்து பிளந்து உண்டு, உகிர்களிலிருந்து உதிர்ந்த குருதித்துளிகள் பனிப்பரப்பில் செம்மணிகள் என உதிர்ந்து மாலையென்றாக, நடந்துசென்ற சிம்மத்தின் பாதை”.  அந்தத் தடமும் அழியும். ஆனால் எளிய காலடித்தடங்களைவிட மதிப்புமிக்கது அது. புழுக்களின் தடங்களும் அவ்வாறே என எண்ணுகிறேன்.

நீந்தும் நெளியும் வளையும் துடிக்கும் பல்லாயிரம் கோடிப் புழுக்களே இப்புவியின் வலியனைத்தையும் அறிபவை. வலியறியும் அக்கணமே வாழ்வென்றானவை. மிதித்து மிதித்துச் செல்லும் உயிர்க்குலங்களுக்குக் கீழே நெளிந்து நெளிந்து வாழ்ந்து இறந்து பிறந்து இறந்து அவை அறிந்ததென்ன? சொல்லாத நாக்கு. உணர்வறியா நரம்பு. அறையாத சாட்டை. சுடாத தழலாட்டம். ஒழுகாத நீர்நெளிவு. முளைக்காத கொடித்தளிர். கவ்வாத வேர்நுனி. சுட்டாத சிறுவிரல். எழாத நாகபடம். கொல்லாத விஷம். இவற்றில் புழுவாகி வந்ததுதான் என்ன? [வண்ணக்கடல்]

நீந்தி நெளிந்து வளைந்து துடிக்கும் பல்லாயிரம்கோடிப் புழுக்களே இப்புவியின் உயிரானவர்கள். விழியின்மையில், செவியின்மையில், சிந்தையின்மையில், இன்மையில் திளைத்துத் திளைத்து அவைகளறியும் முடிவின்மையும் நெளிந்துகொண்டிருக்கிறது.

சிவமாகிய சீவம் புழு. ஆன்மாவுடைய சீவமா எனில், ஆம். புழுக்கள் ஆழத்தில் காத்திருக்கின்றன. குடல்மட்டுமேயான பெரும்பசியாக. பறப்பவையும் நடப்பவையும் நீந்துபவையும் அனைத்தும் வந்துவிழும் உதரத்தின் ஆழ்நெருப்பாக. சில தருணங்களில் அதன் கொஞ்சலோசை சிறு குழவிகள் தன்னை தூக்கிக்கொள்ளும் பொருட்டு எழுப்பும் குரல் போலிருக்கும். கொஞ்சலோசை எழுப்புமா எனக் கேட்பவன் அடுத்த பிறவியில் புழுவாக பிறந்து அறியட்டும். ஆம் அவ்வாறே!.

எரியும் ஈரம். நிலைத்த பயணம். பருவடிவக் கிரணம். தன்னைத் தான் தழுவி நெளியும் புழுக்களால் உண்ணப்படுகின்றன அனைத்தும். தன்னைத்தானேயும். வளைந்து சுழிக்கும் கோடுகளால் பசியெனும் ஒற்றைச் சொல்லை எழுதி எழுதி அழிக்கின்றன அவை. உடலில் ஆற்றலற்ற ஒருவனால் நேரான சிந்தனையை அடையவே முடியாது என்று துரோணர் சொன்னதை  நினைத்துக்கொண்டேன். ஆனால் நேரான சிந்தனைதான் வெல்லும் என்பதில்லை. நேரான சிந்தனையே பயனுள்ளது என்றுமில்லை. சிந்தனையில் வளைவு என்பது எப்போதும் முக்கியமானதே. வேறுபாடே அதன் வல்லமையாக ஆகமுடியும் என்பார் துரோணர் அல்லது ஜெயமோகன்.  அஷ்டவக்ரர் என்னும் ஞானியை போல. புழு அஷ்டவக்ரரோ?.

வெண்முரசில் ஒவ்வொருவரும் தங்கள் எதிரியைத்தான் பார்க்கிறார்கள். கர்ணன் ஒருவன் மட்டிலும் எவரையும் பார்க்காமல் தான் மட்டுமே இருப்பதுபோல தருக்கி நிமிர்ந்திருக்கிறான். எப்போதும்.  உண்மையிலேயே இப்புவியில் எதிரிகளற்றவனா அவன்? எதிரிகள்  அவனுக்கு ஒரு பொருட்டே இல்லையா?. நம்முள் இருக்கும் எச்சிறுமையும் அவனுக்குள் சிறிதும் இல்லையா என்ன? ஆம், நிச்சயமாக இல்லைதான். ஏனென்றால் அவன் எதையும் விழையவில்லை. நாட்டை, வெற்றியை, புகழை. எதை இழக்கவும் அவனுக்குத் தயக்கம் இல்லை. ஆகவே அவனுக்கு எதிரிகளே இல்லை. எதிரிகளே இல்லாதவனைப்போல விடுதலை பெற்றவன் யார்? புழு கர்ணனோ?.

கொல்லும்புலியுடன் கூண்டிலிருப்பவனின் காலம் எத்தனை செறிவானதோ அதேயளவு செறிவானது புழுக்களின் வாழ்வும்.

புழுவெளி!!!

ஒரு இனிய நாள் இப்படி ஆரம்பித்தது. மொத்தம் 28 நாய்களின் பிணங்கள். செத்து மூன்று நாட்களுக்கு மேலிருக்கும். எங்கள் இறப்பறி சோதனைக்கூடம் முழுவதும், மேலும் வழிநெடுகிலும் நெளியும் புழுக்கள். மரணத்தின் மேல் மரணமின்மையின் குதூகலம் என. கானல் நீர்போல. லேசான கருமை கலந்த வெண்புழுக்கள். உடைத்த உளுந்து ஊறவைத்து பரப்பி வைக்கப்பட்டது போல.  காற்றில் அலைந்து நெளியும் பட்டு வஸ்திரம் போல. இருள் சற்று கலந்து வெண்மை ஒரு பெருநதியாக மாறி அதன் வாய்வழியாக பீறிட்டு உள்ளே சென்றது போல. பொங்கி ஓடும் பாற்கடலின் நெய்போல. விரிந்து பரந்து கிடக்கிறது புழுப்பெருவெளி. உயிரின் இயல்பு ஆனந்தம் என்று கற்பித்துகொண்டே இருக்கின்றன. அகங்காரத்தை களைத்து ஆனந்தமாக இருப்பது எப்படியெனவும்.

எத்தனை எத்தனை புழுவேறியப் பிணங்கள். அந்தப் புழுக்கள் தரும் தகவல்கள் மிகமுக்கியமானவை.  புழுக்களின் வகை மற்றும் வயது கொண்டு  இறப்பு நடந்த இடம் மற்றும் நேரத்தை கணிப்பது (Forensic entomology) ஒரு இறப்பறி பரிசோதனையில் ஒரு பிரிவு.

பிறிதோர் புழு தருணம் உண்டு. மாடுகளில். வாலால் ஈ விரட்ட முடியாத இடங்களில் ஏற்படும் புண்கள் சரியாக கவனிக்கப்படாமல் விடும்போது புழு வைத்துவிடும். அவை அதிஅற்புதமானவை. ஈசல் புற்றுகள் போல.தேனடை போல அறைகள் கொண்டவை. அதனுள்ளிருந்து  புழுக்கள் தலைக்குமேல் நூறு சாளரவிழிகள் திறந்து தன்னை அர்த்தமின்றி வெறித்துநோக்கிக் கொண்டிருக்கும் என்னை ஏளனமாக பார்ப்பதுண்டு. பார்த்ததை நான் அறிந்திருக்கவில்லையெனினும்  என் ஆன்மா அறியும். பலசந்தர்ப்பங்களில் புழுவாக உணர்ந்தது அதனால்தானோ என்னவோ. பல நாட்களில் இரவின் தனிமையில் என் போர்வைக்குள் அவை புகுந்துகொள்வதுமுண்டு. சின்னாட்களில் அவற்றைக் காணுகையில் பெருவெளியில் கோள்களைச் செலுத்தும் பேராற்றலின் விசையுடன் ஒன்றோடொன்று முட்டிமோதி  நெளிவதுபோல் தோன்றும்.

விண்ணாளும் புள்ளுக்கு உணவாவது மட்டும் தானா மண்ணில் நெளியும் புழுவின் ஊழ் ?. இல்லைதானே?. அவை இருள்போல. விரைந்து பரவி நிறையும் ஆற்றல் கொண்டவை. ஆனால் ஒளி. [முதற்கனல்]

எண்ணிநோக்கினால் ஆரம்பகாலங்களில் புழுவை வெறுப்பேன். பிறகு அந்த வெறுப்பை நானே அஞ்சுவேன். ஏனெனில் என் வாழ்வின் அங்கமாக இருக்கப்போவது அவைகளே. அதன்பின் மெள்ள தெளிந்தேன். நூல்களின் எழுத்துக்களெல்லாம் புழுத்தடங்கள் போலாயின.

மக்கள் திரளில் மானுடரின் அற்பத்தனங்கள் மட்டும் ஒன்று திரண்டு வெளிப்படுவதை போல புழுத்திரளில் அற்பங்கள் வெளிப்படுவதில்லை. மாறாக அவை வெளிப்படுத்துபவை முக்கண்ணனின் அற்புத நடன அசைவுகள். மானுடர்களைப்போல அவை தங்கள் சிறுமையை கொண்டாடுவதோ சிறுமையைக் கொடுத்து சிறுமையைப் பெறுவதோ,  சிறுமையை நட்டு வளர்ப்பதோ இல்லை. தன்னுள் தான் என, பிறவெளி ஏதுமில்லையென மகிழ்ந்திருக்கின்றன புழுக்கள்.

அவை துயரம் கொள்வதில்லை. இறந்த காலம் இல்லை, எதிர்காலமும் இல்லை. அந்ததக்கணங்களே வாழ்க்கை என புழுந்திருக்கின்றன. கணமும் சோராத ஊக்கம் குன்றாத செயலாற்றலின் பேரின்பத்தை வெளிப்படுத்தும் புழுக்கள் எப்போதும் ஆர்வமூட்டுபவை.

முன்பொருமுறை நீங்கள் சொன்னீர்கள். வாழ்க்கையின் சாரமென்ன என்ற கேள்விக்கு சாராம்சமாக மிகப்பெரிய, மிக மர்மமான, முற்றிலும் தர்க்கபூர்வமான ஒரு பதில் இருக்கமுடியும் என்ற நம்பிக்கையே மனிதனின் மாயை. தன்னை பெரிதாக எண்ணிக்கொள்ளும் அகந்தையில் இருந்து முளைப்பதல்லவா அது? மிகச்சிறு விஷயங்களில் ததும்புகிறது வாழ்க்கையின் பொருள். ஒவ்வொரு தருணத்திலும். வெற்றியில், உச்சத்தில், மையத்தில் மட்டும் அது இல்லை. எங்கும் எக்கணத்திலும் உள்ளது. புழுக்கள் இவற்றை உணர்ந்திருக்கும்போல. மகிழ்வும் துடிப்பும் துள்ளலும் ததும்பலும் மட்டுமேயான குழவிபோல. [பனித்துளியின் நிரந்தரம்]

ஞானம் என்பது நிலைபெறுநிலை. துருவன்போல. ஆனால் நிலையற்ற புழுவால் ஞானமடைந்தவர் தாங்கள். புத்தனுக்கு தியானம். தங்களுக்கு காசர்கோடு  இரயில் தண்டவாளப் புழு. நிலையில்லாமை அளித்த நிலைபேறு. புழுக்கள் போதிசத்துவனாக, ஆசானாக, களித்தோழனாக, எவ்வாறும் ஆகலாம்.

நிகரற்ற செல்வத்தை  அளித்திருக்கிறீர்கள். அளித்துகொண்டிருக்கிறீர்கள்.  அதன்பொருட்டு  உங்களுக்கு என்றென்றும் கடன்பட்டிருக்கிறோம்.

பேரன்புடன்

தங்கபாண்டியன்,

செங்கல்பட்டு

[பி.கு: இதிலுள்ள பெரும்பாலான வரிகள் வெண்முரசில் இருந்து எடுக்கப்பட்டவை]

புழுக்களின் பாடல் சரவணக்குமார்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 14, 2021 10:30

November 13, 2021

தமிழக கிராமிய விளையாட்டுகள்

தமிழக கிராமிய விளையாட்டுக்கள் வாங்க

நான் வசதியான இடங்களில் ஓர் இலக்கியச் சந்திப்பை ஏற்பாடு செய்தால் அதில் ஒருமணிநேரமாவது ஏதேனும் விளையாட்டை ஒருங்குசெய்வேன். ஆனால் கிரிக்கெட், பேட்மிண்டன் போன்ற விளையாட்டுக்கள் அல்ல. தமிழக நாட்ட்ப்புற விளையாட்டுக்கள். அவை கிட்டத்தட்ட முழுமையாகவே மறைந்துவிட்டன. ஏதேனும் உள்கிராமங்களில் எவரேனும் கண்ணுக்குத் தெரியாமல் விளையாடிக்கொண்டிருந்தால்தான் உண்டு.

நண்பர்களிடம் பழைய விளையாட்டுக்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது கிளித்தட்டு என்னும் குமரிமாவட்ட விளையாட்டு பற்றிச் சொன்னேன். பல அடுக்குகளாக வரையப்பட்ட ஒரு களத்தில் முதலில் இருந்து கிளம்பும் ஓர் அணி ஒவ்வொரு அடுக்காக, அல்லது தட்டாக, வெட்டிக்கடந்து மறு எல்லையை அடைந்து திரும்பி வரவேண்டும். எதிர் அணி அந்த தட்டுகளின் கோடுகளில் ஒவ்வொருவராக நின்று கடந்துசெல்ல முயல்பவரை தடுக்கவேண்டும். கடந்துசெல்பவர் கடந்துசெல்லும் அக்கணத்தில் அவரை தடுப்பவர் தொட்டால்போதும், அவர் வெளியேறிவிடுவார்.

இது தவிர கிளி என ஒருவர் தட்டுகளின் புறக்கோடு வழியாக ஓடிக்கொண்டிருப்பார். அவர் எவரை தொட்டாலும் அவர் வெளியேறவேண்டும். மிக உற்சாகமான இவ்விளையாட்டை இன்று என் தலைமுறையினரான சிலரே நினைவில் வைத்திருக்கிறார்கள்.

நண்பர் குமரி ஆதவன் எழுதிய தமிழக கிராமிய விளையாட்டுக்கள் என்னும் நூல் இன்று மறைந்துகொண்டிருக்கும் விளையாட்டுக்களைப் பற்றிய குறிப்புகளால் ஆனது.

ஐந்தாண்டுகள் ஆய்வில் எழுதப்பட்ட இந்நூலை ஆசிரியர் அவற்றின் கருப்பொருட்களின் அடிப்படையில் அத்தியாயங்களாகப் பிரித்திருக்கிறார். மொத்தம் நூற்றி எழுபத்தொன்று விளையாட்டுக்கள். அவற்றை வாழ்வை பிரதிபலிக்கும் விளையாட்டுக்கள் அறநெறி சொல்லும் விளையாட்டுக்கள், அறிவுத்திறன் பயிற்சிக்கான விளையாட்டுக்கள், உடற்பயிற்சி விளையாட்டுக்கள், பொழுதுபோக்குக் கான விளையாட்டுக்கள், கலைவடிவு கொண்ட விளையாட்டுக்கள் என்னும் ஆறு பகுதிகளாக பகுத்திருக்கிறார்.

வாழ்க்கையை சித்தரிக்கும் விளையாட்டுக்களில் கடைவைத்தல், கூட்டாஞ்சோறு சமைத்தல், திருமணம் நடத்துதல் போல பல விளையாட்டுக்கள் உள்ளன. ஒரு சிவாரசியமான விளையாட்டு பூசணிக்காய். வரிசையாக குழந்தைகள் அமர்ந்துகொள்ள ஒரு குழந்தை பூசணிக்காய் வாங்க வருகிறது. பூசணிக்காய் இருக்கிறதா என்று கேட்கிறது. இப்பதான் முளைச்சிருக்கு என பதில் வரும். இப்படியே இப்பதான் பூத்திருக்கு என்று சென்று பூசணியின் பருவங்களைச் சொல்லி வரவேண்டும். கடைசியில் சொற்கள் இல்லாமலாகும்போது அங்கிருக்கும் குழந்தையை பூசணிக்காயாக தூக்கிச்செல்வார்கள்.

மிக எளிமையான ஒரு விளையாட்டை இந்நூலில் வாசித்தபோது அதைக் கண்டு எத்தனை நாளாயிற்று என நினைத்துக்கொண்டேன். நீளமான ஒரு மூங்கிலை விரித்த வலது உள்ளங்கையில் பிடிக்காமல் செங்குத்தாக நிறுத்தவேண்டும். இடதுகையை பின்னால் கட்டிக்கொள்ளவேண்டும். அதை எத்தனை நேரம் நிறுத்த முடியும் என்பதுதான் போட்டி. உடலை வளைத்து நெளித்து அதை நிலைநிறுத்தும் முயற்சி மிக வேடிக்கையான ஒன்று முழுநாளும் நிறுத்துபவர்களை நான் பார்த்திருக்கிறேன். அவர்களை ஆட்டத்திலேயே சேர்ப்பதில்லை. ’ஆட்டம் திகைஞ்சவன் ஆசான்’ என பழமொழி. அவன் ஆடவே வரக்கூடாது.

அட்டிக்கா தொட்டிக்கா

உப்பிள்ளா காட்டுமேலே கருங்குயிலு

காக்கா வெட்டா அவர துவர கிண்ணம்

கண்ணுக்குட்டி அக்கரமேலே கொக்கு

வெச்சா குன்றாலே குன்று

என்பது போன்ற வரிகளை வாசிக்கையில் ஒரு புன்னகை வந்தது. ஏதோ குழந்தையின் தன்னிச்சையான கற்பனைச்சொல்லோட்டம் இது. காலத்தில் நிலைகொண்டு அச்சு வரை வந்துவிட்டிருக்கிறது. பெரும்பாலான விளையாட்டுப்பாடல்களில் ஒரு ‘அர்த்தமற்ற’ தன்மை இருந்துகொண்டிருக்கிறது. அது ஒரு சொல்விளையாட்டு மட்டும்தான். ஐம்பதுக்கும் மேற்பட்ட விளையாட்டுப்பாட்டுக்கள் இந்நூலில் உள்ளன.

ஒருவன் நடுவே அமர்ந்திருக்க சுற்றிலும் நண்பர்கள் நின்று தங்கள் கைகளை பின்னால் வைத்து அதன் வழியாகவே விரைவாக ஒரு பழுக்காப் பாக்கை மாற்றிக்கொண்டிருக்க நடுவே அமர்ந்திருப்பவன் மிகச்சரியாக எவர் கையில் பாக்கு இருக்கிறது என்று சொல்லும் மாணிக்கச் செம்பபழுக்கா விளையாட்டு நான் விளையாடியது. கண்ணும் கவனமும் மிகக்கூர்மையாக இருக்கவேண்டிய இவ்விளையாட்டை நான் ஒருமுறைகூட சரியாக ஆடிய நினைவில்லை.

புலிக்கட்டம், புன்னக்காய் எடுத்தல், எறிபந்து என தெரிந்தும் தெரியாதவையுமான ஆட்டங்களை சுவாரசியமாக விளக்கிச்செல்லும் இந்நூல் ஒரு நாட்டாரியல் ஆவணமாக உள்ளது. கூடவே ஒரு சிறந்த புனைவை வாசிக்கும் நிறைவையும் அளிக்கிறது

கிராமிய விளையாட்டுக்களை நான் வெறும் பண்பாட்டு பதிவுகள், நினைவுபேணல்கள் என நினைக்கவில்லை. அவற்றில் உயர்தொழில்நுட்பம் இல்லை. கடும் போட்டிகள் இல்லை. அவற்றில் ஒருவர் முன்னரே பயிற்சிபெற்று தேர்ச்சி அடைந்திருக்க வாய்ப்பில்லை. அவை ஒருவரின் தன்னியல்பான உடல்திறனையும் உளத்திறனையும் வெளிப்படுத்துபவை. அவற்றிலுள்ள அந்த இயல்பான தன்மை, கள்ளமின்மையே அவற்றை உற்சாகமான விளையாட்டுக்களாக ஆக்குகிறது.

இந்நூலை வாசித்துக்கொண்டிருந்தபோது ஓர் எண்ணம் வந்தது. கடுமையான ‘கண்டெண்ட்’ சிக்கலில் இருக்கும் நம் தொலைக்காட்சிகள் ஏன் நாட்டுப்புற விளையாட்டுப்போட்டிகள், விளையாட்டுவிழாக்களை ஒருங்கிணைக்கக்கூடாது? சரியாக நடத்தப்படுமென்றால் அவை மிகப்பெரிய அளவில் மக்களை ஈர்க்கக்கூடும்.

குமரி ஆதவன்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 13, 2021 10:35

விஷ்ணுபுரம் விருந்தினர்-2, காளிப்பிரசாத்

விஷ்ணுபுரம் விருந்தினர்-1, கோகுல் பிரசாத்

விஷ்ணுபுரம் விருந்தினர் அரங்கில் இளம்படைப்பாளிகளுக்கான மேடையில் இம்முறை காளிப்பிரசாத் கலந்துகொள்கிறார். சென்னையைச் சேர்ந்த காளிப்பிரசாத் ஆள்தலும் அளத்தலும் என்னும் சிறுகதை தொகுதியை எழுதியிருக்கிறார். தொடர்ந்து இணைய இதழ்களில் கதைகளை எழுதி வருகிறார். இலக்கிய விமர்சனங்கள் எழுதுவதுடன் இலக்கிய உரைகளையும் ஆற்றிக்கொண்டிருக்கிறார்

ஆள்தலும் அளத்தலும் தொகுதி வாங்க

காளிபிரசாத் படைப்புகள், வலைப்பக்கம்

 

காளிப்பிரசாத் சிறுகதைத் தொகுதி குறித்த விமர்சனம்

’ஆள்தலும் அளத்தலும்’ எஞ்சுவதும்- அனங்கன்

ஆள்தலும் அளத்தலும்: செல்லும் தூரத்தை சுட்டும் சாதனை

இரண்டு இளம் படைப்பாளிகள் -எஸ்.ராமகிருஷ்ணன்

காளிப்பிரசாத் கட்டுரைகள்

இந்திரா பார்த்தசாரதி- காளிப்பிரசாத் உரை

ஷோஷா – காளிப்பிரசாத்

ஆள்தலும் அளத்தலும்- காளிப்பிரசாத்

கணப்பித்தம் கணச்சித்தம்- காளிப்பிரசாத்

முரசும் சொல்லும்- காளிப்பிரசாத்

கடல், வண்ணத்துப்பூச்சி, சுரேஷ்குமார இந்திரஜித்- காளிப்பிரசாத்

ராம்குமாரின் ‘அகதி’ – காளிப்பிரசாத்

அழகியபெரியவன் கதைகள் – காளிப்பிரசாத்

பகடி எழுத்து – காளிப்பிரசாத்

புலம்பெயர் இலக்கியம் – காளிப்பிரசாத்

நீரின்றி அமையாது – காளிப்பிரசாத்

சிவா கிருஷ்ணமூர்த்தியின் வெளிச்சமும் வெயிலும் – காளிப்பிரசாத்

சிலுவைப்பாடு – காளிப்பிரசாத்

ஞானக்கூத்தன் இறுதிநாள்- காளிப்பிரசாத்

சீ.முத்துசாமியின் மலைக்காடு – காளி பிரசாத்

சபரிநாதன் கவிதைகள் – காளி பிரசாத்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 13, 2021 10:34

கல்குருத்து – கடிதங்கள் 4

கல்குருத்து- சிறுகதை

அன்புள்ள ஜெ

வணக்கம். கல்குருத்து கதையை வாசித்தேன்.  அம்மிக்கல்லில் படியும் நீலச்சாயத்துக்கேற்ப கல்லைச் செதுக்கிச் சமன்படுத்துவதைப் போல வாழ்வையும் முன்னகர்த்துகின்ற விசையும் விருப்பும் ஓய்ந்த வேளையிலும் நினைவில் இருந்து தித்திக்கும் இனிப்பு எழுகிறது. அந்த இனிப்பன்றி  நிகழ்வாழ்வின் எதனோடும் நேரடித் தொடர்பற்றவர்களாக மூத்தோர்கள் இருவரும் இருக்கிறார்கள். கல்லில் கனிவு கூடும் பருவத்தை பிள்ளைகளின் மீதான துயராலும் ஆற்றாமையாலும் மூழ்கடித்துத் தேய்ந்தொழியும் மூத்தோர்களும் நினைவிலெழுந்தனர். கல்லில் குருத்தின் கனிவு கூடும் தருணம் வெளிப்படும் கதை.

அரவின் குமார்

மலேசியா

 

மதிப்பிற்குரிய ஆசிரியருக்கு வணக்கத்துடன் தமிழரசி எழுதுவது

கடையில போய் ஒரு பொருளை வாங்கி வர்றதுக்கும், நம்ம வீட்ல நமக்கு சொந்தமாயிருக்கறதுல இருந்து புதுசா ஒன்னை உருவாக்கி எடுக்கறதுக்கும் இடையில இருக்கற வித்தியாசம் இதை படிச்ச பிறகு பொட்டுல அறைஞ்ச மாதிரி புரிஞ்சிது.

கல்லாசாரி தாணுலிங்கம் “அம்மிணியே, அது சந்தைக்குப் போயி பசுவையும் குட்டியையும் வாங்கிட்டு வாறது மாதிரியாக்கும். இது நம்ம வீட்டிலே பிறந்த கன்னுக்குட்டி கொம்பும் குலையுமா பசுவா மாறி வயறு தெறண்டு ஈனுகது மாதிரியில்லா?”

ஓடித் தேஞ்சு மூத்து குருத்து ஆன மாதிரி தானே பாட்டனும் பாட்டியும் இருக்காங்க.

மூத்ததும் குருத்து ஆகும்னு ஒரு சொல்லு உண்டு” என்றார் தாணுலிங்கம். “கல்லு அப்டியே எளங்குருத்து மாதிரி ஆயிடும்.

அழகம்மையின் புன்னகை அவ புரிஞ்சிகிட்டான்னு காட்டுது. அவ இனி பாட்டனையும் பாட்டியையும் பற்றி சடைச்சிக்கிட மாட்டா.

குழவிக்கும் இந்த மாதிரி செதுக்கணும்” என்று தாணுலிங்கம் சொன்னார். “ஆனா அதுக்கு பிறவும் அரைச்சா கல்லுகடிக்கும். ஒரு நாலைஞ்சுநாளு உமி வைச்சு அரைக்கணும்… நல்லா பதம் வந்து பாலீஷாகி கிட்டின பிறவுதான் கறிக்கு அரைக்கணும் பாத்துக்கிடுங்க.”கண்ணப்பன் அரைச்சா கல்லுகடிக்கற மாதிரிதான் இருக்கான். அழகம்மை சடைச்சிக்கிடாம பாட்டனையும் பாட்டியையும் பார்த்துக்கிடறது உமி வைச்சி அரைச்சி பாலிஷ் போடற மாதிரி கண்ணப்பனுக்கு.

ஆமா கேட்டேன்… எனக்கு இல்ல. இவளுக்கு… குடு”

கிழவி ஆவலாகக் கருப்பட்டியை கைநீட்டி வாங்கிக்கொண்டது.

“நாலஞ்சு தடவை கருப்பட்டி கருப்பட்டின்னு பேச்சு வாக்கிலே சொன்னா.., செரி, சவத்துக்கு இனிப்பு ஞாபகம் வந்துபோட்டுது போலன்னு நினைச்சு கொண்டுவரச் சொன்னேன்” என்றார் கிழவர்.( வாவ்  கவிதை கவிதை கவிதை)

பாட்டனும் பாட்டியும் ஒருத்தர ஒருத்தர் பார்க்காம உட்கார்ந்திருந்தாலும் ஒன்னுக்கொன்னு தொடர்பேயில்லாம பேசினாலும் அவங்க இரண்டு பேருக்கும் இடையில கண்ணுக்குத் தெரியாம நூல் கட்டின மாதிரி ஒரு தொடர்பு இருக்கு. பாட்டனும் பாட்டியும் உண்மையாவே வாழ்ந்திருக்காங்க  ( கொஞ்சம் பொறாமையா கூட இருக்கு)

இருபது வருஷத்துக்கு முன்னால அம்மி பொளியறதுன்னு ரோட்ல கூவிக்கிட்டே போவாங்க.மிக்ஸி ,கிரைண்டர் பரவலா ஆனபிறகு இவங்களை காணோம்.

நன்றி.

தமிழரசி.

கல்குருத்து- கடிதம் -1 கல்குருத்து கடிதம்-2 கல்குருத்து கடிதம் 3
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 13, 2021 10:31

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.