Jeyamohan's Blog, page 879
November 21, 2021
விஷ்ணுபுரம்வட்டம் இணையதளம்- கடிதங்கள்
அன்புள்ள ஜெ
விஷ்ணுபுரம் வட்டம் தளம் பற்றிய பதிவுக்கு மிக்க நன்றி. இது முழுக்க மீனாம்பிகை & சந்தோஷ் இருவரின் உழைப்பின் மேல் தொகுத்து கட்டப்பட்டது. தளத்தை நேரடியாக நிர்வாகம் செய்யும் குழு தவிர நிறைய பேர் பங்களிக்கிறார்கள். இவர்களின் உழைப்பையும் செயலூக்கத்தையும் நான் எந்த நன்றியும் சொல்லாமல் பயன்படுத்திக்கொண்டேன்.
தளத்தின் வடிவம் பற்றிய ஆலோசனைகளை செந்தில்குமாரும் மற்ற நண்பர்களும் சொல்லியிருக்கிறார்கள். தொடர்ந்து செய்ய எண்ணம்.
உங்கள் தளத்தில் இன்று பதினேழாயிரம் பதிவுகள் உள்ளன. அதிலிருந்து விஷ்ணுபுரம் வட்டத்தின் செயல்பாடுகளை தொகுக்க முயல்வது என்பது அறிவியக்கத்தை நோக்கி சில சாளரங்களை திறப்பது போல. அந்த வெளிக்காட்சி அற்புதமாக இருக்கிறது.
நன்றி
மது
அன்புள்ள ஜெ
விஷ்ணுபுரம் வட்டம் இணையதளம் அழகான வடிவமைப்புடன் நவீனமாக இருக்கிறது. ஜெயமோகன்.இன் தளம் வடிவமைப்பு பழகிவிட்டது. மாறுதல்கள் இனிமேல் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் இதன் வடிவமைப்பு வலைப்பூக்களுக்கு உரியது. வலைப்பூவாக இருந்து இணையதளமாக மாறியதனால் இப்படி இருக்கிறது என நினைக்கிறேன். விஷ்ணுபுரம் இணையதள வடிவமைப்பை உற்சாகமான வாசிப்புக்குரியதாக ஆக்கிய அனைவருக்கும் நன்றி
செந்தில்ராஜ்
அன்புள்ள ஜெ
விஷ்ணுபுரம் இணையதளம் பார்த்தேன். அழகான வடிவமைப்பு. அதைப்பார்க்கையில்தான் எத்தனை நிகழ்வுகள் சென்ற பத்தாண்டுகளுக்குள் என்ற பிரமிப்பு உருவாகிறது எவ்வளவு நிகழ்ச்சிகள். எவ்வளவு சந்திப்புகள். ஓர் இலக்கிய இயக்கமாகவே இது நிகழ்ந்திருக்கிறது. வாழ்த்துக்கள்
சுவாமி
அன்புள்ள ஜெ
விஷ்ணுபுரம் இணையதளம் ஓர் இனிய வாசிப்பனுபவம். சென்ற பத்தாண்டுகளின் இலக்கிய நிகழ்வுகள் வழியாகச் செல்வதுபோல. ஒரு நஸ்டால்ஜிக் அனுபவம். நிதானமாக உள்ளே சென்று ஒவ்வொரு நிகழ்ச்சியாக எடுத்து பார்த்து வாசித்துக்கொண்டிருக்கிறேன்
அருண்குமார்
November 20, 2021
விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் என்னும் இயக்கம்
[image error]
விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் இணையதளம்அன்புள்ள ஜெ
சென்னையில் சென்ற 14-11-2021 அன்று யாவரும் பதிப்பகம் சார்பில் நிகழ்ந்த எஸ்.ராமகிருஷ்ணன் ஒருநாள் கருத்தரங்குக்குச் சென்றிருந்தேன். நான் கூடுமானவரை சென்னையில் நிகழும் இலக்கியக் கூட்டங்களுக்கெல்லாம் செல்பவன். விஷ்ணுபுரம் இலக்கிய விழாவுக்கு 2013 முதல் நான்கு முறை வந்திருக்கிறேன்.
இலக்கியக்கூட்டங்கள் எப்படி நடக்கும் என்பது எனக்கு நன்றாகவே தெரியும் பெரும்பாலான இலக்கியக் கூட்டங்களில் ஒன்று தயாரிப்பில்லாமல் வந்து சகஜமாகப் பேசுகிறேன் என்ற பாவனையில் இலக்கியவம்பும் அரசியலும் பேசுவார்கள். அல்லது படைப்பிலுள்ள உள்ளடக்க என்னவோ அதையே விரிவாகப் பேசுவார்கள். ஆனாலும் இலக்கிய நிகழ்வுகளுக்குச் செல்வது அங்கிருக்கும் அந்த ‘மூட்’ எனக்கு மிகவும் தேவை என்பதற்காகத்தான். நான் மூளைசூடாகும் வேலை செய்பவன். ஆகவே ஒரு மாறுதலுக்காகச் செல்கிறேன். பெரிய எதிர்பார்ப்புகள் வைத்துக்கொள்வதில்லை
அன்றைக்கு எஸ்.ராமகிருஷ்ணன் கருத்தரங்கம் மிகச்சிறப்பாக நடைபெற்றது. ஆனால் விஷ்ணுபுரம் அமைப்பு ஒருங்கிணைத்ததா என்ற சந்தேகம் வந்தது. நான் விஷ்ணுபுரம் அமைப்பின் மேடைகளில் அமைப்பாளர்களாகவும் ஒருங்கிணைப்பாளர்களாகவும் பார்த்தவர்கள் பலர் பேசினர். இளம் எழுத்தாளர்களாக விஷ்ணுபுரம் மேடைகளில் தோன்றியவர்கள் பேசினர். விஷ்ணுபுரம் உறுப்பினர்களின் ஒரு பேச்சுகூட சோடைபோகவில்லை. எவருமே பேசுபொருளை விட்டு வெளியே செல்லவில்லை. எவருமே நூலைச் சுருக்கிச் சொல்லவில்லை. நூல்களை ஆழ்ந்து படித்து, அவற்றின்மேல் தங்கள் வாசிப்பையும் மதிப்பீட்டையும் முன்வைத்தனர்.
எஸ்.ராமகிருஷ்ணனுக்கு இந்த உரைகள் மிகப்பெரிய கௌரவம் என நினைக்கிறேன். சுரேஷ்பிரதீப், கடலூர் சீனு இருவருடைய உரைகளையும் கிளாஸிக் உரைகள் என்று தயங்காமல் சொல்லமுடியும். சௌந்தர்ராஜன், காளிபிரசாத், மயிலாடுதுறை பிரபு, சுரேஷ்பாபு ஆகியோரின் உரைகள் ஒவ்வொன்றும் ஒரு சொல்கூட மிகையோ குறையோ இல்லாத இலக்கிய உரைகள். வியப்பாக இருந்தது. அவர்களுக்கு வாழ்த்துச் சொல்லவேண்டியே இதை எழுதுகிறேன்
எம்.சந்திரசேகரன்.
அன்புள்ள சந்திரசேகரன்,
சென்னை விஷ்ணுபுரம் நண்பர்களின் இலக்கிய அமைப்பான நற்றுணை கலந்துரையாடல் குழுமம் யாவரும் பதிப்பகத்துடன் இணைந்து இக்கருத்தரங்கை ஒருங்கிணைத்தது. ஆகவே அவ்விழாவில் பார்வையாளர்களிலும் பாதிக்குமேல் விஷ்ணுபுரம் நண்பர்கள்தான்
இவ்விழா என்றில்லை, இன்று தமிழகத்தில் சில்லறை அரசியலுக்கு அப்பாற்பட்டு இலக்கியம் பற்றிப் பேசவேண்டும் என்றால் விஷ்ணுபுரம் நண்பர்களே இருக்கிறார்கள். இன்று எந்த இணைய இதழிலும் பாதிக்குமேல் அவர்களே எழுதுகிறார்கள். எந்த இலக்கியக்கூட்டத்திலும் அவர்களே பேசுகிறார்கள், பார்வையாளர்களாக அமர்ந்திருக்கிறார்கள்.
இன்று எந்த ஓர் இலக்கிய ஆசிரியர் பற்றியும் ஒரு நல்ல கட்டுரையோ உரையோ தேவை என்றால் விஷ்ணுபுரம் நண்பர்கள்தான் முன்வந்தாகவேண்டும்.இதை கண்கூடாகவே பார்க்கலாம். ஏனென்றால் அத்தனை பேரையும் அவர்களே ஆர்வம்கொண்டு, ஊன்றி படித்திருப்பார்கள்.
வெறுப்பரசியலுக்கும் அசட்டுக் கோட்பாட்டுச் சலம்பல்களுக்கும் அப்பாற்பட்டு அழகியலை முன்வைத்து, இலக்கியத்தின் உலகளாவிய மரபை அறிந்து பேசுவதற்கு அவர்களன்றி வெளியே மிகச்சிலரே உள்ளனர் என்னும் நிலை இன்று மெல்ல உருவாகி வந்துள்ளது.
இது ஒரு தொடர்செயல்பாட்டின் விளைவு. இந்த தளத்தையே எடுத்துப் பாருங்கள். இன்று தமிழில் எந்த ஓர் இலக்கியப்படைப்பாளியின் பெயரையும், எந்த ஒரு தமிழறிஞரின் பெயரையும் இணையத்தில் தேடுங்கள். இந்த தளத்திற்கே பெரும்பாலும் வந்து நிற்பீர்கள். இடைவெளியே இல்லாமல் நாள்தோறும் பன்னிரண்டு ஆண்டுகளாக இது வெளிவந்து கொண்டிருக்கிறது. பதினேழாயிரம் வெளியீடுகள் இதிலுள்ளன. பல்லாயிரம் கட்டுரைகள். பல்லாயிரம் வாசகர் கடிதங்கள். அவற்றினூடாக நீளும் தொடர்ந்த இலக்கிய விவாதங்கள்.
இன்றுவரை தமிழில் வெளிவந்த எந்த ஓர் இதழிலும் இத்தனை விரிவான இலக்கிய அறிமுகம் நிகழ்ந்ததில்லை. இவ்வளவு இலக்கிய விவாதம் நடந்ததும் இல்லை.இது எந்த ஒரு பல்கலைகழகத்தின் கல்விநிரலையும் விட பலநூறு மடங்கு பெரியது. ஒவ்வொருநாளும் வெளிவருகிறது என்பது முக்கியமானது. அது இடைவெளியே இல்லாத உரையாடலை இயல்வதாக்குகிறது. தொடர்ச்சியான வாசிப்பை உருவாக்கி அடிப்படைப்புரிதலை உருவாக்குகிறது.
இவற்றுக்குமேல் ஆண்டுக்கு இரண்டு இலக்கிய விழாக்கள். ஒரு பயிலரங்கு. குறைந்தது ஐந்து வாசகர் சந்திப்புகள் மற்றும் இலக்கியக்கூட்டங்கள் விஷ்ணுபுரம் அமைப்பால் ஒருங்கிணைக்கப்படுகின்றன.இவை அளிக்கும் நட்பார்ந்த சூழல் தனிப்பட்ட இலக்கியத் தொடர்புகளை உருவாக்குகிறது. விஷ்ணுபுரம் அமைப்புடன் தொடர்புக்கு வந்த நண்பர்கள் இணையுள்ளங்களை கண்டடைந்து தொடர்ச்சியான இலக்கிய உரையாடல்களில் இருக்கிறார்கள்.
அவர்கள் உள்ளூர்களில் தங்களுக்கென சிறு இலக்கிய அமைப்புகளை உருவாக்கிக் கொள்கிறார்கள். அவ்வாறு உருவாக்கப்பட்ட இலக்கிய அமைப்புக்கள் பல ஆண்டுகளாகத் தொடர்ச்சியாகச் செயல்பட்டு வருகின்றன. சந்திப்புகளையும் உரையாடல்களையும் நடத்துகிறார்கள். நூல்களை விவாதிக்கிறார்கள். ஆசிரியர்களை வரவழைத்து பேசவைக்கிறார்கள்.
விஷ்ணுபுரம் அமைப்புக்கு அரசியல் இல்லை. அது மிகக்கறாராகவே வரையறை செய்யப்பட்டு பேணப்படுகிறது. இலக்கியக் கொள்கைகள் என்றும் ஏதுமில்லை. இலக்கிய அழகியலை முன்வைக்கும் பார்வை மட்டுமே பொதுவானது என்று சொல்லலாம். இதில் நண்பர்கள் மட்டுமே உள்ளனர். பொறுப்பாளர்கள் இல்லை. இறுக்கமான இன்னொரு நெறி உண்டு, நாங்கள் புண்படுத்தும் விமர்சனங்ககளோ கசப்புகளைக் காட்டுவதையோ தனிப்பட்ட விரோதங்களை முன்வைப்பதையோ அனுமதிப்பதில்லை.
ஏனென்றால் நட்புச்சூழல் இல்லாத எந்த விவாதமும் பயனற்றது. அது ஆணவங்களை மட்டுமே மேலெழச்செய்கிறது. அதன்பின் ஆணவம் மட்டுமே முன்நிற்கும். அங்கே மெய்யான உரையாடல் உருவாகாது, அங்கே எந்தக் கல்வியும் நிகழ்வதில்லை. கல்வி எந்நிலையிலும் பெருங்கொண்டாட்டமாகவே நிகழமுடியும்.
ஆகவே விஷ்ணுபுரம் நண்பர்கள் உருவாக்கியிருக்கும் அமைப்புக்கள் மேல் பொதுவான கட்டுப்பாடு என ஏதுமில்லை. அவை முழுக்கமுழுக்க சுதந்திரமானவை. முன்பு க.நா.சு வரையறை செய்ததுபோல இது இலக்கிய இயக்கமே ஒழிய இலக்கிய நிறுவனம் அல்ல. இக்காரணத்தால் நிலையான நிதி வைத்துக்கொள்ளவே தயங்குகிறோம்.
எஸ்.ராமகிருஷ்ணனுக்கு மட்டுமல்ல, தமிழில் இன்று எழுதிக்கொண்டிருக்கும் எந்த ஒரு முக்கியமான படைப்பாளிக்கும் மிகச்சிறந்த வாசகர்கள் இங்குதான் உள்ளனர். தொடர்ந்து சாரு நிவேதிதா, யுவன் சந்திரசேகர், தேவிபாரதி, இரா.முருகன், பாவண்ணன், இமையம், நாஞ்சில்நாடன், சு.வேணுகோபால், சோ.தர்மன் என அனைவருக்கும் தீவிர வாசகர் இங்குள்ளனர்.
ஓர் எழுத்தாளர் ஏதேனும் ஓர் ஊருக்குச் சென்றால் அங்கு அவரை எவரும் கவனிக்கவில்லை என்னும் நிலை வரக்கூடாது என்பது விஷ்ணுபுரம் நண்பர்களிடம் என் உறுதியான கோரிக்கைகளில் ஒன்று. ஆகவே எந்த இலக்கியவாதியானாலும் தங்கள் ஊருக்கு வந்தால் சென்று கண்டு உபசரித்து உரையாடுவது விஷ்ணுபுரம் நண்பர்களால் ஓரு கடமையாகவே கடைப்பிடிக்கப்படுகிறது.
படைப்பாளிகளுக்கான தனிப்பட்ட நிதியுதவிகளை தொடர்ந்து செய்து வருகிறோம். எங்களுக்கு கார்ப்பரேட் நிதியோ, தொழிலதிபர்களின் ஆதரவோ இல்லை. முழுக்க முழுக்க விஷ்ணுபுரம் நண்பர்களின் நிதியால் அவ்வுதவிகளைச் செய்து வருகிறோம். இந்த கோவிட் காலகட்டத்தில் இவ்வியக்கத்தின் தொடர்புகளே ஏராளமான எழுத்தாளர்களுக்கு ஆதரவளித்தன. பல தனிப்பட்ட உதவிகளையும் செய்யவேண்டியிருந்தது, தொடர்ந்து செய்யவேண்டியிருக்கிறது.
இவையனைத்தும் இலக்கியம் மீதான பெரும் பற்று கொண்ட வாசகர்களால் மட்டுமே நிகழ்த்தப்படுகின்றன. அவர்களை வெளியே இருக்கும் அரசியல் சழக்கர்கள் தொடர்ந்து வசைபாடுகிறார்கள். சிறுமதியாளர்களான சில்லறை இலக்கியவாதிகளும் இணைய வம்பர்களும் இழிவு செய்கிறார்கள். இலக்கியம் அளிக்கும் பெருமிதப் பார்வையால், தன்னம்பிக்கையால் அவற்றை மெல்லிய ஏளனச் சிரிப்புடன் கடந்துசெல்லவும் விஷ்ணுபுரம் நண்பர்களால் இயல்கிறது. அவ்வாறு இழிவுசெய்பவர்களுக்கே உதவிசெய்கையிலும் அவர்களிடம் அந்தப் பெருந்தன்மை வெளிப்படுவதை நான் பெருமிதத்துடன் பார்க்கிறேன்.
இங்கே ஓர் இலக்கிய ஆர்வலர் எளிய வாசகராக நட்புக்குழுமத்துக்குள் வந்தால் அவர் தொடர்ந்து வாசிக்க வேண்டியிருக்கிறது. ஏனென்றால் நூல்கள் தொடர்ச்சியாகப் பேசப்படுகின்றன. ஈரோடு, கோவை நட்புக்குழுமங்களில் நீடிக்க மாதம் ஒரு நூலையாவது படித்தாகவேண்டும். அந்நூல்களைப் பற்றி விவாதங்களில் பேசவேண்டும். பின்னர் அமர்வுகளில் பேசவேண்டும். சிறிய மேடைகள் அமைகின்றன.
வாசகர்களாக கடிதங்கள் எழுதுகிறார்கள். அக்கடிதங்களை குழுமங்களில் விவாதிக்கிறார்கள். மெல்ல கட்டுரைகளை எழுத ஆரம்பிக்கிறார்கள். அத்தனை எழுத்துக்களுக்கும் உடனடியான, நட்பான ஆனால் கறாரான எதிர்வினைகள் வருகின்றன. அவற்றினூடாக அவர்கள் வளர்ந்து எழுத்தாளர்களும் பேச்சாளர்களும் ஆகிறார்கள். தமிழகத்தின் மிகச்சிறந்த, மிகப்பெரிய இலக்கிய மேடை இதுவே.
ஆனால் இலக்கியம் மீதான பற்று இங்கே முதல்நி பந்தனை. இலக்கியத்தை வெறும் பொழுதுபோக்காக கொள்பவர்களுக்கு இடமில்லை. அல்லது வெற்றரசியல் பேசுபவர்களுக்கு இடமில்லை. இங்குள்ள தீவிரச்செயல்பாடு காரணமாக அவர்கள் உடனடியாக வெளியேற நேரும்.
இங்கே இலக்கியவாதிகளாக எழுந்தவர்களையே நீங்கள் காண்கிறீர்கள். தொல்லியல், நாட்டாரியல் துறைகளில் தொடர்ச்சியாக எழுதுபவர்கள் உள்ளனர். உயிரியல் தாவரவியல் விலங்கியலில் எழுதுபவர்கள் உள்ளனர். நிர்வாகவியலில் எழுதுபவர்கள் வந்துள்ளனர். இந்தியாவெங்கும் பயணம் செய்யும் பல நட்புக்குழுமங்கள் உள்ளன.
இது இலக்கிய இயக்கமே. ஆனால் இதனூடாக இயற்கைவேளாண்மை நோக்கிச் சென்றவர்கள் உண்டு. சமூகப்பணியாற்றுபவர்கள் பலர் உண்டு. அன்று பேசிய மயிலாடுதுறை பிரபுவே ஓர் உதாரணம். முழுக்கிராமத்தையே நண்பர்களுடன் தத்தெடுத்து பணிகள் செய்பவர். விருதுகள் பெற்றவர். அன்றுகூட புயலால் பாதிக்கப்பட்ட ஊர்களுக்கு நூற்றுக்கணக்கான உணவுப்பொட்டலங்களை அனுப்பிவிட்டுத்தான் பேச வந்திருந்தார்.
இத்தனையும் நிகழ்வதற்கு அடிப்படையாக அமையும் நெறி, நான் இதில் மையம் அல்ல என்பதும் என்னை எவ்வகையிலும் முன்னிறுத்திக் கொள்வதில்லை என்பதும்தான். என் நூல்களின் பொருட்டோ என் பொருட்டோ விஷ்ணுபுரம் அமைப்பு இன்றுவரை எந்த விழாவையும் ஒருங்கிணைத்ததில்லை. முழுக்கமுழுக்க மற்ற படைப்பாளிகளுக்காகவே விஷ்ணுபுரம் செயல்பட்டுள்ளது.
ஓர் இயக்கம், புதுமைப்பித்தன், க.நா.சு, செல்லப்பா, ஜெயகாந்தன், பிரமிள், சுந்தர ராமசாமி என பலர் கனவுகண்ட செயல்பாடு கண்கூடாக நிகழ்கிறது. முழுக்கமுழுக்க அதற்கு இணையம் என்னும் நவீனத் தொழில்நுட்பமே காரணம். அதை திறம்படப் பயன்படுத்திக்கொண்டதும், தொடர்ச்சியான நீடித்த செயல்பாடும், முற்றிலும் எதிர்மனநிலை கொண்ட தமிழ்ச்சூழலிலும் நாங்கள் எதிர்மறைப் பண்புகளை வளர்த்துக்கொள்ளாமல் எப்போதும் நேர்நிலையாகவே எண்ணம்கொண்டதும் காரணங்கள்.
ஒவ்வொரு தளத்திலும் நாங்கள் உருவாக்குவதே உச்சகட்ட அளவுகோல். எழுத்தாளர்கள் பற்றிய ஆவணப்படம் என்றால் கே.பி.வினோத் எடுப்பவையே மிகச்சிறந்தவை. இசையமைப்பு என்றால் ராஜன் சோமசுந்தரம். ஏனென்றால் அவர்கள் அத்துறையின் மிகச்சிறந்த நிபுணர்கள். பயில்முறையாளர்கள் அல்ல. முறையான பயிற்சி எடுத்தவர்கள். ஒரு நாளிதழுக்கு நிகரானது இந்த இணையதளம். ஆனால் இதற்கு ஊழியர் என எவருமே இல்லை. ஆனால் மிகமிகத்தேர்ந்த நிபுணர்களால் இது பராமரிக்கப்படுகிறது.
இன்று அமெரிக்காவில் விஷ்ணுபுரம் அமைப்பின் செயல்பாடுகள் பரவி வருகின்றன. நண்பர் ஆஸ்டின் சௌந்தர் ஒருங்கிணைக்கிறார். உலகின் பல நகர்களில் விஷ்ணுபுரம் நண்பர்குழு உண்டு. அங்கு செல்லும் எந்த தமிழ் எழுத்தாளரும் இன்று அவர்களாலேயே வரவேற்கப்படுகிறார். இனி பதிப்புத்துறையிலும் தீவிரமாக இறங்கவிருக்கிறோம். மேலும் பெரிய சில திட்டங்கள் ஒருங்கிணைப்பில் உள்ளன.
அனைத்துக்கும் அப்பால் ஒன்றுண்டு. அது குருவருள். நித்யாவின் சொல். அவ்வண்ணம் ஒரு பாதம் அமைந்து ,அதைப் பணியும் அடக்கமும் விவேகமும் நமக்கு இருக்குமென்றால் அது ஒரு நல்லூழ். சில சொற்கள் வீணாவதில்லை.
ஜெ
ஊர்த்துவ தாண்டவம் – ஜி.எஸ்.எஸ்.வி நவீன்
முப்படாதி கணியானோட ஆட்டத்துல பரிபூரணம் கூடி கூடி வருது. சப்த தாண்டவத்துல ஒன்னொன்னா ஒன்னொன்னா கூடி கூடி முப்படாதி ஆடிக்கிட்டே இருக்கான் ஆடி ஆடி அந்த ஊர்த்துவ நிலை நோக்கி போய்கிட்டே இருக்கான். அவனோட கண்ணு பொம்மியோட கண்ணயே பாத்துக்கிட்டு இருக்கு. அந்த கண்ணுலயும் அதே தாண்டவ நிலை.
ஊர்த்துவ தாண்டவம்தன்மீட்சி – மைவிழிச்செல்வி
என்னால் என் பெற்றோர்கள் அடையும் மன உளைச்சல் மிக மிக அதிகம். பெற்றோர்களின் மன உளைச்சலால் நான் அதிக குற்ற உணர்ச்சியடைந்தேன். நான் வித்யாசமானவள் என்று தெரிந்தாலும், இந்த குற்ற உணர்ச்சி என்னை வதைக்கும். ஆனால் அந்த குற்ற உணர்ச்சியில் இருந்து என்னை மீட்டெடுத்ததே இந்த தன்மீட்சி.
மதக்காழ்ப்புகள், கடிதங்கள்
அன்புள்ள ஜெ
சூஃபிகள், மதக்காழ்ப்புகள் என்னும் கட்டுரை எனக்கு மிக முக்கியமான ஒன்று. ஞானிகளை புரிந்துகொள்வதிலுள்ள மிகப்பெரிய பிழை என்பது அவர்களின் எதிர்விமர்சனங்களை உணர்வதுதான். நான் பெரிதும் மதிக்கும் குணங்குடி மஸ்தான் சாயபு அவர்கள் கிறித்துமத கண்டன வச்சிர தண்டம் என்னும் நூலை எழுதியிருக்கிறார் என்னும் செய்தி என்னை மிகவும் கலங்க வைத்தது. எப்படி அவர் ஒரு மதகண்டனத்தை எழுதலாம் என்றே எண்ணியிருந்தேன். உங்கள் கருத்து மிக முக்கியமான ஒன்று.
எம்.நவாஸ்
அன்புள்ள நவாஸ்,
குணங்குடியாரின் காலம் ‘கண்டனநூல்கள்’ ஓங்கியிருந்த காலகட்டம். இதே போன்ற கிறிஸ்துமத கண்டனநூலை சட்டம்பி சுவாமிகள் இயற்றியிருக்கிறார். இத்தனை கண்டனநூல்கள் ஏன் கிறிஸ்துவ மதம் மீது வந்தன? ஏன் இஸ்லாமிய மதகண்டனங்கள் இந்துக்களாலும் இந்து மதகண்டனங்கள் இஸ்லாமியராலும் எழுதப்படவில்லை? ஏனென்றால் மதகண்டனம் என்பதை தொடங்கியவர்களே மதமாற்ற நோக்கம் கொண்டிருந்த கிறிஸ்தவப் போதகர்கள்தான். பதினெட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் அரசுப்பின்புலத்துடன் கிறிஸ்தவம் இந்தியாவுக்குள் நுழைந்து உச்சகட்ட பிரச்சாரங்களைச் செய்துகொண்டிருந்தது. ஆகவே அன்றைய ஞானிகள்கூட அதை மறுத்துரைக்க நேர்ந்தது. மற்றபடி அவர்கள் மதப்பூசல்களில் ஈடுபட்டவர்கள் அல்ல.
ஜெ
அன்புள்ள ஜெ,
அஜ்மீருக்கு நீங்கள் சென்ற செய்தியை ஒட்டிய விமர்சனங்களின்போது அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்ட கண்டனங்கள் வந்தபடியே இருந்தன. அவை எல்லாமே உள்நோக்கம் கொண்டவை என தெரிந்திருந்தாலும்கூட அவ்வாறு இந்துமதத்தை எதிர்த்து அழிக்க முனைந்த ஒருவரை வழிபடலாமா என்னும் கேள்வி எனக்குள் இருந்தபடியே இருந்தது. அந்தப் பதில் ஆணித்தரமான ஒன்று.
ரவிச்சந்திரன்
அன்புள்ள ரவிச்சந்திரன்,
பொதுவாக மதங்களின் தோற்றங்களின்போது கடுமையான மதப்பூசல்கள் இருக்கும். சமூகங்கள் நிலைபெயர்கையில், ஆக்ரமிக்கப்படுகையில் மதமோதல்கள் இருக்கும். அரிதாக தத்துவப்பூசல்கள் மதமோதல்களாக ஆகும். அவை மதங்களின் தனித்தன்மைகள் முன்வைக்கப்படும், முரண்பாடுகள் ஓங்கியிருக்கும் காலகட்டம்
நாம் இருக்கும் இக்காலகட்டம் மதங்களின் சாரம்கண்டு அவற்றை ஒருங்கிணைக்கவேண்டிய சமன்வயக் காலகட்டம். ஏனென்றால் இன்று உலகமே ஒற்றைப்பெரும்பரப்பாகச் சுருங்கிவிட்டது. ஆன்மிகமும் உலகளாவியதாகவே இருக்கமுடியும். ஆகவே அனைத்து மதங்களையும் இணைத்து நோக்கும் பார்வையே இன்று அவசியமானது
ஜெ
கல்குருத்து -கடிதங்கள் 11
அன்புள்ள ஜெ
கேளாச்சங்கீதத்தின் இனிமை என்பது ஒரு வாசகர் சொன்னதுபோல அதிமதுரத்தின் இனிப்பு. கசந்து துப்புவோம். இனிப்பு கடுமையாக ஆகி கசப்பாக ஆகிவிடுவது அது. பெரும் தவிப்பு. ஆனால் இந்தக்கதையான கல்குருத்து மென்மையான இனிப்பு உள்ளது. சின்ன பூக்களில் கொஞ்சம் தேன் இருக்கும். அதனைப்போன்ற இனிப்பு. கேளாச்சங்கீதம் தரும் இன்பம் உலகம் சார்ந்தது அல்ல. புறவுலகில் அதற்கு இடமில்லை. அது ஒரு ஆன்மிகமான நிலை. ஆனால் கல்குருத்து முழுக்க முழுக்க உலகம்சார்ந்தது. வாழ்க்கை சார்ந்த இன்பம் இது. இந்த இன்பம் சிற்றின்பம், அது பேரின்பம் என்று வேண்டுமென்றால் சொல்லலாம். ஆனால் இதுவும் தெய்வக்கொடைதான்
சுவாமி
அன்பு ஜெ,
பள்ளியில் வேதியலில் கனிமச் சேர்மம் (inorganic chemistry) மிகவும் பிடிக்கும் எனக்கு. பொருள் (matter) ஐ விரித்துக் கொண்டே உள் செல்லும் பயணம் எனக்கு வியப்பைத் தந்தது ஒரு காரணமாயிருக்கலாம். அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டக் கூடியளவு அதற்கு இருக்கும் வெளியைக் கண்டு பிரமித்திருக்கிறேன். அணுவில் நுழைந்து உள் செல்லச் செல்ல அதன் கருவில் உயிர்விசை அசைவாடுவது ஒரு திறப்பைத் தந்தது. நான் உயிரற்றது என்று கருதிய பொருள்களிலும் கூட அந்த உயிர்விசை இருந்திருக்கிறது. அசைந்தும் அசையாததும் யாவும் உயிர்விசையுடன் நிறைந்து ததும்பியிருப்பதாக எண்ணியிருக்கிறேன். தன்னில் தான் ஆழ்ந்து கிடக்கும் தனிமையைத் தவிர ஒரு போதும் தனிமையின் மீட்பு எனக்கில்லை என்றெண்ணியிருக்கிறேன்.
எங்கள் வீட்டின் முதல் அறையில் ஒரு துருப்பிடித்த இரும்பு மேசை உண்டு. என் மாமனிடம் அதை மாற்றிவிட்டு சில நாற்காலிகள் வாங்கிப்போட்டால் வீட்டுக்கு வருபவர்களுக்கு உட்கார வசதியாக இருக்கும் என்று பல முறை சொல்லியிருக்கேன். ‘அத எடுத்துட்டு தான் யாரும் உக்காரனும்னா அப்படியாரும் உக்காரவேணாம்’ என்பான். பைத்தியக்காரத்தனம் என்று நினைத்திருக்கிறேன். ‘சின்ன வயசுல இருந்தே கூட இருக்கு. அது இருக்கட்டுமே’ என்பான். காந்தியக் கலாச்சாரத்தின் மகத்துவம் தெரிவதற்கு முன் ‘பயன்படுத்து தூக்கியெறி கலாச்சாரம்’ மிக இளமையில் சுத்தமானதாக திறன்வாய்ந்தது என்று நினைத்தேன். இந்தியர்கள் பெரும்பாலும் பழைய பொருட்களுடன் உணர்வுப்பூர்வமாக தொடர்பிலிருக்கிறார்கள். பொருட்களும் மனிதர்களைப் போல உயிர்விசையுடன் இருப்பதாக அவர்கள் எண்ணிக் கொள்கிறார்கள் போலும்.
இயற்கையில் முற்றிலும் மூழ்கும் தருணத்தில் அங்கிருக்கிருக்கும் மண்ணும் சிறு கல்லும் கூட அதிர்வதைப் போலேயிருக்கும். அதனுடன் உரையாடலாம். எந்தப் புது இடத்திற்குச் சென்றாலும் சிறு கல்லை எடுத்து வந்து சேமித்து வைக்கும் பழக்கம் எனக்கிருக்கிறது.
சென்ற வருடம் கலைஞர் விஜய் பிச்சுமணி அவர்களின் இம்பாசிபிலிட்டிஸ் (impossibilities) என்ற கலை அரங்கிற்குச் சென்றிருந்தேன். அவருடைய ஆற்றலின் கோடுகள் நுணுக்கமானவை. இந்தப் பிரபஞ்சத்தில் உயிரற்றதோ உயிரில்லாததோ யாவும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்ளும் ஆற்றலின் கோடுகளைத் தன் படைப்புகளில் தவழ விடுபவர். அதில் ‘மிகச் சிறிய கல்லைப் பிளந்த மெல்லிய விரிசலில் தவழ்ந்து கொண்டிருக்கும் காற்று’ அதை உற்று நோக்கும் அந்த கலையின் பார்வை மிகப் பிடித்திருந்தது எனக்கு.
“இது வித்து, உள்ள அவரு கருவடிவா கண்ணுறங்குதாரு” என்று சாத்தப்பன் ஆசாரி ஆகாயம் சிறுகதையில் சொன்னபோது அறிவியலையும் விஜய் பிச்சுமணியின் கலைப்படைப்புகளையும் அதனோடு இணைத்துக் கொண்டேன்.
கல்குருத்து சிறுகதையில் இவை யாவற்றையும் கோர்த்துக் கொண்டேன். “இந்தக்கல்லு இப்டி இந்த ரூபத்திலே இங்கிண இருக்கத்தொடங்கி ஆயிரம் லெச்சம் வருசமாகியிருக்கும். அதிலே காலமறியாம குடியிருக்குத தெய்வங்கள் உண்டு. இப்ப அதை நாம ரூபம் மாத்துறோம். அதுக்குமேலே காலதேவனுக்க கண்ணு விளப்போகுது… அதுக்கு நாம கல்லுக்க தெய்வங்கள் கிட்ட மன்னிப்பு கேக்கணும்லா?” என்ற கல்லாசாரியின் வரி நுண்ணிய உணர்ச்சிகளுடையது.
பார்ப்பதற்கு கல்லாயிருக்கும் எத்தனை மனிதர்கள். அவர்களையெல்லாம் கண்ணப்பன் வழி கண்டேன். யாவருக்குள்ளும் ஒரு வித்து உறங்குகிறது. இனிமையோ கடுமையோ நிரம்பிய வித்து. இரவில் கைகளைப் பிடித்துவிடும் வித்து, கருப்பட்டியை விரும்பிச் சுவைக்கும் பாட்டா பாட்டியின் வித்து.
இந்த நிலையில் வெண்முரசின் இளைய யாதவரை நினைத்தேன். கர்ணன் காணும் இளைய யாதவனின் புன்னகையின் ஆழம் அளப்பறியது. “இல்லாமலிருக்கக் கற்றவன் என்று எண்ணம் தோன்றியதுமே சித்தம் பல்லாயிரம் காதம், பல்லாயிரம் ஆண்டுக்காலம் கடந்து பின்னால் விரைந்தோடி அந்த விழிச்சந்திப்பை மீண்டும் அடைந்து திகைத்து நின்றது. யாதவனின் விழிகளின் ஆழத்தில் ஒரு புன்னகை இருந்தது. இருண்ட குளிர்ச்சுனையின் அடியில் கிடக்கும் நாணயம்போல.” ஒரு வகையில் மனிதர்களின் மனதை மறைத்திருக்கும் அனைத்துத் திரைகளையும் கலைந்து உடுருவிப் பார்த்து கனிந்து புன்னகைப்பவனாய் இருக்கிறான். கல்லுக்குள் இருக்கும் குருத்தை அறிந்தவன் எனலாம்.
அழகம்மையைப் போல கல்லிலிருந்து எழுந்து வந்த குருத்தை உணர்வுப்பூர்வமாக பார்த்துக் கொண்டிருந்தேன். “கல்குருத்து” என்ற வார்த்தைக்காகவும் அதன் வித்துக் காணித்ததற்காகவும் நன்றி ஜெ.
பிரேமையுடன்
இரம்யா.
இணைப்பு: விஜய் பிச்சுமணியின் படைப்பு.
கல்குருத்து- கடிதம் -1 கல்குருத்து -கடிதம்-2 கல்குருத்து -கடிதம்- 3November 19, 2021
விட்டல்ராவ் கருத்தரங்கம் , சேலம்
சேலத்தில் விட்டல்ராவ் படைப்புகள் பற்றிய ஒருநாள் கருத்தரங்கு. பாவண்ணன், க.மோகனரங்கன், எம்,கோபாலகிருஷ்ணன்,சுனீல்கிருஷ்ணன், சுரேஷ்பிரதீப் போன்ற எழுத்தாளர்கள் கலந்துகொள்கிறார்கள். நாள் 21 நவம்பர். இடம் சேலம், நேஷனல் ஓட்டல், நான்குரோடு.
மதம், மரபு, அரசியல்
அன்புள்ள ஜெ
ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் ஸ்ரீரங்கம் ஆலயத்திற்குள் பாரதிய ஜனதாக் கட்சியின் அண்ணாமலை மோடியின் உரையை ஒளிபரப்பியதைக் கடுமையாக கண்டித்து பேசியதை கவனித்திருப்பீர்கள். தனக்கு கடுமையாக மிரட்டல்கள் வருகின்றன என அவர் புகார் சொல்லியிருக்கிறார். நீங்கள் உங்கள் எதிர்வினையை எழுதுவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.
ஸ்ரீராம் ஆர்.
அன்புள்ள ஸ்ரீராம்,
முன்னரே இதைப்பற்றி பல கேள்விகள் வந்தன. செய்திகளுக்கு உடனடியாக எதிர்வினையாற்றவேண்டியதில்லை என்பது என்னுடைய நிலைபாடு. அத்துடன் அப்போது இதைப்பற்றி பேசிய நண்பரிடம் சொன்னேன். “ரங்கராஜன் நரசிம்மன் அவர்கள் பழமைவாதி. அவருக்கு அவர்களின் ஆதரவு இருக்கலாம். நான் அவருக்கு ஆதரவாகவே பேசப்போய் அது அவருக்கு சிக்கல்களை உருவாக்கலாம். அவரை என்னைப்போல ஒரு கிறிஸ்தவக் கைக்கூலி என்று சொல்லப்போகிறார்கள். அவருக்கு எதற்கு அந்த சிக்கல்?”
இன்று நண்பர் அனீஷ்கிருஷ்ணன் நாயர் பேசிக்கொண்டிருந்தபோது ரங்கராஜன் நரசிம்மன் போதிய அவதூறுகள் மற்றும் வசைகளுக்கு ஆளாகிவிட்டார் என்றார். அவர் ‘கிரிப்டோ கிறிஸ்தவர்’ என முத்திரை குத்திவிட்டார்கள். அவர்அமெரிக்காவில் சட்டைபோடாமல் சென்றபோது வெளியே நடமாடிவிட்டார் என்பதற்காக போடப்பட்ட ஒரு சிறு வழக்கை [இண்டீசன்ட் எக்ஸ்போசர்] அவர் ஒரு சிறார் பாலியல்குற்றவாளி என காட்டும்படி திரித்துச் சொல்கிறார்கள் என்றார். ஆகவே, இனி தயங்க வேண்டியதில்லை.
முதலில் ஒன்றைத் தெளிவாகச் சொல்கிறேன். ரங்கராஜன் நரசிம்மன் போன்ற பழமைவாத, ஆசாரவாதிகளுடன் நான் பொதுவாகக் கொள்ளக்கூடிய சிந்தனை ஏதுமில்லை. இந்து மதத்தின் ஆன்மிகம் அவர்களைப்போன்றவர்களை மீறித்தான் நிகழவும் முடியும்.
ஆனால் அவரைப்போன்றவர்கள் நிலைச் சக்திகள். எந்த கருத்தியலுக்கும் நிலைச்சக்திகள் இன்றியமையாதவர்கள். இலக்கியத்திற்கு இலக்கணவாதிகளே நிலைச்சக்திகள். அவர்கள் பின்னுக்கு இழுப்பவர்கள். ஆனால் கட்டற்று பறந்துவிடாமல் காப்பவர்களும்கூட.
ரங்கராஜன் நரசிம்மன்அவர்கள் ஆலயப்பாதுகாப்புக்காக களம்நின்று போராடுபவர். ஆலயநிலங்கள் கொள்ளைபோவதற்கு எதிராக, ஆலயங்கள் கைவிடப்படுவதற்கு எதிராக, புதுப்பித்தல் என்னும் பெயரில் ஆலயங்கள் வடிவஅழிப்பு செய்யப்படுவதற்கு எதிராக, ஆலயச்சடங்குகளும் ஆகமமுறைகளும் மாற்றப்படுவதற்கு எதிராக சட்டப்போர்களை முன்னெடுப்பவர். அதில் அவர் மிகத்தெளிவான பல வெற்றிகளை ஈட்டியிருக்கிறார். இந்து மதம் மேல் பற்று கொண்ட எவரும் மதிக்கவேண்டிய செயல். இந்து பக்தர்களின் அமைப்புக்கள் செய்யவேண்டியவற்றை தனியாக நின்று செய்பவர் அவர்.
அந்தச் சட்டப்போர்களை அவர் முன்னெடுக்கையில்தான் அவருக்குத் தெரிகிறது, இந்து ஆலயங்களைச் சூறையாடுபவர்களில் பலர் இந்துக்களே. இந்து அறங்காவலர்கள், இந்து பிரமுகர்கள், இந்து அமைப்புக்கள். அவர் தன் அடிப்படைகளில் சமரசம் செய்துகொள்பவர் அல்ல. ஆகவே அவர்களையும் அவர் எதிர்க்கிறார். ஆகவே அவருக்கு எதிரான காழ்ப்புகள் திரள்கின்றன.
இதை என் பார்வையை தொடர்பவர்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டுமென விரும்புகிறேன். ஏனென்றால் இத்தகைய விஷயங்களில் உடனடியாக காழ்ப்பாளர்களின் திரிபுகள் மலைமலையாக வந்து குவியத்தொடங்கும்.
எந்த மதமும் இரண்டு எல்லைகள் கொண்டது. ஓர் எல்லையில் அது அமைப்புகளாக உள்ளது. மறு எல்லையில் அது தேடலாக உள்ளது. அமைப்புக்கள் நிலைத்தன்மை கொண்டவை. தேடல் கட்டற்றது, தன்னிச்சையானது. அமைப்பை மதம் என்றும் தேடலை ஆன்மிகம் என்றும் சொல்லலாம். இரண்டும் நேர் எதிரான திசைவழிகள் கொண்டவை. ஒன்றையொன்று எதிர்த்துச் செயல்படுவன எனத் தோன்றுபவை. ஆனால் அவை ஒன்றின் இரு நிலைகளே.அவை கொண்டிருப்பது முரணியக்கம்.
மத அமைப்புகள் என்பவை ஒரு மதம் நீண்டகாலமாகத் திரட்டிக்கொண்ட மெய்ஞானத்தையும் பண்பாட்டுக்கூறுகளையும் காலத்தில் நிலைநிறுத்தும் பொருட்டு உருவானவை. அவை மெய்ஞானத்தையும் பண்பாட்டுக்கூறுகளையும் படிமங்களாக, உருவகங்களாக,ஆசாரங்களாக, வழிபாட்டுமுறைகளாக, நம்பிக்கைகளாக மாற்றி நிலைநிறுத்துகின்றன. கலைகளாகவும் இலக்கியங்களாகவும் மாறுபவை அந்த படிமங்களும் உருவகங்களும்தான்.
அந்த அடித்தளத்தில் இருந்து முளைத்தெழுந்துதான் ஆன்மிகம் ஒவ்வொரு காலகட்டத்திலும் முன்செல்கிறது. வேர் நிலைத்திருக்க கொடியின் முனை புதிய கொழு தேடிச்சென்றுகொண்டே இருப்பதுபோல. அந்த அடித்தளம் அழியுமென்றால் காலப்போக்கில் அந்த ஆன்மிகத் தேடலும் அழிந்துபடும்.
ஏனென்றால் ஆன்மிகத் தேடலுக்கு அவசியமான குறியீடுகள், படிமங்கள், நுண்ணிய உளநிலைகள், பல்வேறு சடங்குச்செயல்பாடுகள், யோகமுறைகள் மதக்கட்டமைப்பில்தான் உள்ளன. அங்கிருந்து அவற்றை எடுத்து அகவயமாக்கிக் கொண்டு முன்செல்வதையே ஆன்மிகசாதகன் செய்கிறான். அவை மிக இளம்வயதிலேயே அவனை வந்தடைந்து, அவனுடைய ஆழுள்ளத்தில் [ஸ்வப்ன, சுஷுப்தி நிலைகளில்] உறைந்தால்தான் அவனால் அவற்றைக்கொண்டு தன் அகத்தின் கட்டற்ற பெருக்கை பற்றமுடியும், கையாள முடியும்.
மதம் அழிந்தால் அவையும் அழியும். ஆன்மசாதகன் வெற்றிடத்தில் தன் அகப்பெருக்கை நிலைகொள்ளச் செய்ய முடியாது. அதற்கு அவன் எப்படியும் படிமங்களையே நாடவேண்டும். இந்துமதம் அழிந்தால் அவன் மாற்று மதங்களையே நாடுவான். அவ்வண்ணம் செல்லக்கூடாதென்றில்லை, ஆனால் அவ்வண்ணம் செல்பவர்கள் இந்துமதம் மட்டுமே அளிக்கும் ஆழ்ந்த தனித்துவம் கொண்ட தளம் ஒன்றை இழக்கிறார்கள். எவரிடமும் அதை நான் உறுதியாகச் சொல்லமுடியும். இப்புவியில் மானுடன் உணர்ந்த மெய்மைகளில் தலையாயது வேதாந்தமே.
மதமே இல்லை என்றால் தேடல்கொண்டவன் நவீனப்படிமங்களை நாடவேண்டியிருக்கும். அறிவியலும் நவீனக் கலையும் உருவாக்கும் படிமங்கள். அவை பயனுள்ளவை என நிறுவப்படவில்லை. அவை நேர்நிலையான ஆற்றல்கொண்டவை என்றுகூட சொல்லிவிட முடியாது.
ஆகவே மதம் இங்கே இருந்தாகவேண்டும். அது பேணப்பட்டாகவேண்டும். மாற்றமின்மையே அதன் இயல்பு. நிலைத்தன்மையே அதன் பொறுப்பு. மாற்றமில்லாமல் அதை நீடிக்கவைப்பதற்காகவே மதம்சார்ந்த உளநிலை கொண்டவர்கள் பொறுப்பளிக்கப்பட்டிருக்கிறார்கள். ரங்கராஜன் நரசிம்மன் போன்றவர்கள் அதையே செய்கிறார்கள்.
முற்றிலும் மாற்றமே இல்லாமல் நீடிக்கலாமா? இல்லை, அவ்வண்ணம் நீடிக்கும் எந்த அமைப்பும் பழமைகொண்டு அழியும். மாறும் காலத்தில் தன்னை தக்கவைக்கவே அது மாற்றமில்லாமல் இருக்கவேண்டியிருக்கிறது. அதேசமயம் சில மாற்றங்களைச் செய்துகொள்ளாவிட்டால் அது முழுமையாக அழியநேரிடும். அந்த மாற்றங்களை அது செய்துகொண்டே ஆகவேண்டும். அடிப்படை மானுட அறத்துக்கு எதிரானவை, மாறும் காலத்தின் மாறிய அறத்துக்கு ஒவ்வாதவை, மாற்றப்படவேண்டும். அறம் ஒன்றின்பொருட்டு மட்டுமே அந்த மாற்றங்கள் நிகழவேண்டும்.
இந்த வேறுபாட்டை நாம் புரிந்துகொள்ளவேண்டும். அனைவருக்கும் ஆலயநுழைவு உரிமை, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆதல் போன்றவை அறச்சார்பு கொண்டவை. மானுடசமத்துவம் என்னும் மெய்ஞானத்தின் அடிப்படை கொண்டவை. நித்ய பிரம்மசாரியாக உருவகப்படுத்தப்படும் தெய்வத்தின் சன்னிதியில் அத்தனை பெண்களும் செல்லவேண்டும், அந்த உருவகம் உடைக்கப்படவேண்டும் என்பது அவ்வாறல்ல.
இதையே எல்லா மதங்களுக்கும் சொல்வேன். சமீபத்தில் கத்தோலிக்க தேவாலயங்களுக்குள் கரிஸ்மாட்டிக் பிரேயர் எனப்படும் புதியவகை நோன்பு வழிபாடுகளைச் செய்யலாமா என்னும் விவாதம் எழுந்தது. அதுவும் வழிபாடுதானே என சிலர் கூறினர் [பெந்தேகொஸ்தே பாணியிலான வழிபாடு அது. கத்தோலிக்க வழுமுறைகளுக்கு வெளியே உள்ளது] ஓர் மலையாள இதழ் என் கருத்தைக் கேட்டது. வழிபடலாம், ஆனால் தனியாக மண்டபங்கள் அமைத்து அதைச்செய்யவேண்டும். கத்தோலிக்க வழிபாட்டுமுறை என ஒன்று உண்டு. அதை மாற்றினால் கத்தோலிக்க மதம் அழிகிறதென்றே பொருள் என்று நான் சொன்னேன்.
ரங்கராஜன் நரசிம்மன் சொல்லும் எதிர்ப்புக்கே வருகிறேன். திரு.அண்ணாமலை அவர்கள் செய்தது பெரும் பிழை, மீறல். அதை இந்துக்கள் எதன்பொருட்டும் ஏற்கவோ நியாயப்படுத்தவோ கூடாது. நீண்டகால அளவில் அழிவைக்கொண்டுவரும் ஒரு செயல்பாடு அண்ணாமலை செய்தது. ஆகவே திரு ரங்கராஜன் அவர்களின் எதிர்ப்பை மரபிலிருந்து எழுந்தேயாகவேண்டிய குரல் என்றே சொல்வேன்
இரண்டு காரணங்களால் அதைச் சொல்கிறேன். முதன்மையாக, ஸ்ரீரங்கம் வைணவ ஆலயம். அங்கே சிவ ஆலயமான கேதார்நாத் குறித்த காணொளியை காட்டியது பிழை.
இதை முதலில் சொல்வேன் என என் நண்பர்களிலேயே பலர் எதிர்பார்க்காமலிருக்கலாம். ஆனால் இன்று நிகழ்ந்து வரும் முதன்மை அழிவு இது. இந்துமதம் என ஒன்று உண்டு. ஆனால் அது ஒற்றைப்படையான ஒரே அமைப்பு அல்ல. பல மதங்கள் வரலாற்றின் போக்கில் இணைந்து உருவான ஓர் பண்பாட்டு – ஆன்மிக இயக்கம்தான் அது. அதற்குள் வைணவமும் சைவமும் சாக்தமும் தனித்தனியாக, தங்கள் தனித்தன்மைகளுடன், இயங்குவதே அதன் ஆதார இயல்புக்கு உகந்தது. அரசியல்தேவைக்காக அதை ஒற்றைப்படையாக ஆக்கி உட்பிரிவுகளை மழுங்கடித்தால் காலப்போக்கில் இந்துமதம் அழியும்.
ஆகவே சைவம் வேறு வைணவம் வேறுதான். அவற்றுக்கான நம்பிக்கைகளும், ஆசாரங்களும், குறியீட்டமைப்புகளும் வேறுவேறுதான். அவற்றை மனம்போனபடி கலக்கலாகாது. வேறுபாடுகளை அழிக்கலாகாது. முரண்பாடுகளைக்கூட இல்லாமலாக்கலாகாது. மோதலை தவிர்க்கலாம், உள்விவாதம் அழியக்கூடாது. ராமானுஜ வைணவர்களுக்கு சங்கர அத்வைதம் எதிர்நிலைதான். அவ்வாறே அது நீடிக்கவேண்டும்.
இந்து என பொதுவாக தன்னை உணரும் ஒருவர் எல்லா ஆலயங்களுக்கும் செல்லலாம். அத்வைதியான எனக்கு ராமானுஜரின் ஆலயங்களுக்குச் செல்ல எந்த உளத்தடையும் இல்லை. நாட்டார் தெய்வங்கள் எனக்கு உண்டு. அஜ்மீரும் எனக்கு ஏற்புடையதே. ஆனால் ஒரு தீவிர வைணவர் அவ்வாறு சங்கரரை ஏற்கமாட்டார். அதை புரிந்துகொள்கிறேன். அவருக்கான இடம் அழியக்கூடாது என்றும் சொல்வேன்.
வைணவத்திற்குள்ளேயேகூட ஒவ்வொரு ஆலயத்துக்கும் உரிய ஆன்மிகப்பாவனைகள் நீடிக்கவேண்டும். குருவாயூரில் பெருமாள் குழந்தை, பண்டரிபுரத்தில் சிறுவன், திருப்பதியில் அரசன், ஸ்ரீரங்கத்தில் யோகப்பெருநிலையில் கிடக்கும் கரியவெளி. அந்த வேறுபாடுகள் இருக்கும் வரையே ஆலயங்கள் நீடிக்கும், வழிபாடுகள் நீடிக்கும், இந்து மதம் நீடிக்கும்.
ஆகவே ஆகமமுறைகளை விருப்பப்படி மாற்றலாகாது. சடங்குகளை மாற்றலாகாது. ஆலயங்களுக்குள் செவ்வந்தி போன்று மரபில் இல்லாத மலர்களைக் கொண்டுசெல்வது, ஆப்பிள் கொய்யா போன்று வந்துசேர்ந்த கனிகளைக் கொண்டுசெல்வதுகூட தவிர்க்கப்பட்டாகவேண்டும் என்பதே என் நிலைபாடு.
ஆகவே வைணவம் அன்றி வேறொன்றுக்கு இடமில்லாத ஸ்ரீரங்கத்தில் சைவ ஆலயத்தின் காணொளி வெளியிடப்பட்டது பிழை. அதுவும் தூயசைவத்தின் பாசுபத -காளாமுக மரபினரின் ஆலயம் கேதார்நாத் . அந்தக் காணொளி எதன்பொருட்டும் ஸ்ரீரங்கத்தில் காட்டப்படக்கூடாது.நாளை அங்கே விபூதியுடன் செல்லவேண்டும் என சிலர் கிளம்பலாம். ஒரு தவறான தொடக்கம் எப்போதுமே கடுமையாகக் கண்டிக்கவேண்டியது.
அடுத்தபடியாகவே ஆலய வளாகத்தில் அரசியலை கொண்டுவந்தது கண்டிக்கத்தக்கது. எந்த அரசியலானாலும் அது ஆலயத்தின் ஒருமையை, மரபை அழிப்பதே. நாளை கே.என்.நேரு ஸ்டாலின் உரையை அதே வளாகத்தில் ஒளிபரப்பலாம். இன்று நடந்ததை முன்னுதாரணமாகச் சுட்டிக்காட்டலாம். இந்து அரசியல் என்பது இந்து மதத்தை சிதைப்பதற்கல்ல. இந்து மதத்தின்மேல் குறைந்தபட்ச நம்பிக்கையாவது அவர்களுக்கு இருக்கவேண்டும்.
நேற்று பேசிக்கொண்டிருந்தபோது மீண்டும் என் நிலைபாட்டைச் சொன்னேன். அவற்றை இப்போது தொகுத்துக்கொள்கிறேன்
அ. இந்து மெய்மரபும் இந்துமதமும் இதுகாறும் இயங்கி வரலாற்றில் திரண்டுவந்தது இன்றைய அரசையோ பாரதியஜனதா கட்சியையோ அதிகாரமையமாக ஆக்குவதற்காகத்தான் என எவரேனும் நினைத்தால் அவர் இந்து விரோதி, இந்துமதத்தை அழிப்பவர்.
ஆ. பாரதிய ஜனதாக் கட்சி இந்துமதத்தின் உருவாக்கம் அல்ல. அவர்கள் தங்கள் அரசியலுக்காக இந்து என்னும் அடையாளத்தை பயன்படுத்திக் கொள்பவர்கள். அவர்கள் எவ்வகையிலும் இந்துமதத்தின் காவலர்களோ பிரதிநிதிகளோ அல்ல. அவர்கள் இந்துமதத்தின் முகம் அல்ல.
இ. ஆகவே பாரதியஜனதா கட்சியின் செயல்களுக்கு இந்துமதம் எவ்வகையிலும் பொறுப்பு அல்ல. பிற அரசியல் கட்சிகளைப்போலவே அவர்களே அவர்களுக்குக் பொறுப்பு. அவர்கள் தேர்தலில் வெல்லலாம் தோற்கலாம். அது முற்றிலும் வேறொரு களம். மதமோ மத அமைப்புகளோ மதத்தலைவர்களோ அதில் தலையிடலாகாது.
இன்றைய சூழல் மிக இக்கட்டானது. ஆட்சியை கைப்பற்றியிருக்கும் ஒரு அரசியலியக்கம் உச்சகட்ட விசையுடன் பல்லாயிரமாண்டுக்கால வரலாறுள்ள ஒரு மதத்தையே தான் என்று காட்ட முயல்கிறது. அதை எதிர்ப்பவர்களை ஆளுமைக்கொலை செய்கிறது, வெறுப்பினூடாக எதிர்கொள்கிறது. அதை எதிர்க்கும் அமைப்புகள் வலுவாக இல்லை. மரபார்ந்த நிறுவனங்கள் அவற்றின் புறவய கட்டாயங்களால் அமைதி காக்கின்றன.
ஆகவே முடிந்தவரை திரும்பத்திரும்ப இந்துமதம் வேறு இந்து அரசியல் வேறு என சொல்லவேண்டியிருக்கிறது. பல்லாயிரமாண்டுகால வரலாறு கொண்ட இந்த மதம் இன்னும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நீடிக்கும். அதன் நோக்கம் ஆன்மிக நிறைவு, மானுட மீட்பு, பண்பாட்டை நீடிக்கச் செய்தல் மட்டுமே. ஞானியர் நிரை இதுகாறும் செய்தது அதுவே. எவரோ சிலர் ஆட்சியதிகாரத்தை அடையச்செய்யும் ஏணி அல்ல இந்துமதம். மதம் அரசியலுடன் கலக்காமலிருக்கும் வரைத்தான் அது மதம். கலந்த கணமே அது இன்னொரு அரசியல்பேரமைப்பு.
அந்த வேறுபாட்டை நாம் நமக்கே சொல்லி நிறுவாவிட்டால், அரசியலை அதில் கலக்கும் முயற்சிகளை ஆரம்பத்திலேயே தடுக்காவிட்டால், மதத்தை அரசியல்வாதிகளுக்கு விட்டுவிடுவோம். அரசியல்வாதிகள் செய்யும் அனைத்துக்கும் மதம் பழிசுமக்கும்படி ஆக்கிவிடுவோம். அவர்களின் ஊழல், சூதுகள், அழிவுகள், அடக்குமுறைகள் அனைத்துக்கும் உருவாகும் எதிர்வினைகளால் மதம் கறைகொள்ள நேரிடும். ஒருபோதும் பின்னர் மதத்தை நம்மால் மீட்க முடியாது.நம் முன்னோர். குருமரபென அமைந்த ஞானியர் அனைவரையும் கைவிட்டு ன் பெரும்பழியை ஈட்டிக்கொண்டவர்கள் ஆவோம்.
ஜெ
நீர் (சிறுகதை)- அருண்மொழி நங்கை
அருண்மொழி எழுதிய கட்டுரைகளையும் ஒருவகையில் சிறுகதைகள் என்றுதான் சொல்லவேண்டும். இப்போது முதல் சிறுகதையை எழுதியிருக்கிறாள். வழக்கம்போல ஜானகிராமனின் சாயல்கொண்ட நடை.
முதற்கதையை எழுதுபவர்கள் பெரும்பாலும் உணர்வுபூர்வமாக தங்களைப் பாதித்த நிகழ்வு ஒன்றை எடுத்துக்கொள்வது வழக்கம். அதில் இருந்து கண்டடைந்த ஓர் உண்மையை அல்லது கருத்தை முன்வைக்கும்படியாக கதையை அமைப்பார்கள். கதையில் நிகழ்வுகள் வழியாக மோதலும் உச்சமும் நிகழும்.
அருண்மொழி வழக்கம்போல மிகச்சிறிய அன்றாட அனுபவம் ஒன்றை இயல்பாகச் சொல்லிச்செல்லும் பாணியில் இக்கதையை எழுதியிருக்கிறாள். அந்த மென்மையான ஒழுக்கினூடாக ஒரு கவித்துவ உச்சம் நோக்கிச் செல்கிறாள். முதற்கதை என்று பார்க்கையில் மிக அரிதான ஒரு நிகழ்வு.
அன்னைவடிவாக ஒழுகும் நதியின் உள்ளே திகழும் பிறிதொரு ஆற்றல் வடிவை நுட்பமான இருவகை நிலக்காட்சிகள் வழியாகச் சித்தரிக்கும் கதை பாட்டியை அவற்றுடன் பொருத்திக் காட்டுவது காய்ப்பேறிய கை என்னும் ஒற்றை உருவகம் வழியாக. அதை மட்டுமே நம்பி, முழுக்கமுழுக்க குறிப்பமைதியுடன் கதையை அமைத்திருக்கும் துணிவும் வியப்பளிப்பதே.
காவேரி வாழ்வாக, இயற்கையாக, உயிர்ப்பெருவெளியாக திகழும் தஞ்சையை விவரிக்குமிடத்திலுள்ள குதூகலம் நான் எப்போதும் அறிந்த அருண்மொழி. எந்நிலையிலும் தஞ்சையின் மகள்.
நீர்- சிறுகதை- அருண்மொழி நங்கைவிஷ்ணுபுரம் விருந்தினர்-8, சோ.தர்மன்.
விஷ்ணுபுரம் விருந்தினர்-1, கோகுல் பிரசாத்
விஷ்ணுபுரம் விருந்தினர்-2, காளிப்பிரசாத்
விஷ்ணுபுரம் விருந்தினர்-3, எம்.கோபாலகிருஷ்ணன்
விஷ்ணுபுரம் விருந்தினர்-4, பா.திருச்செந்தாழை
விஷ்ணுபுரம் விருந்தினர்-5, சுஷீல்குமார்
விஷ்ணுபுரம் விருந்தினர்-6, செந்தில் ஜெகன்னாதன்
விஷ்ணுபுரம் விருந்தினர் -7, ஜா தீபா
விஷ்ணுபுரம் சிறப்புவிருந்தினர் சோ.தர்மன் தமிழிலக்கியத்தில் தன் இயல்புவாத எழுத்துக்காக தனியிடம் பெற்றவர். எழுத்தாளர் பூமணியின் மருமகன். கோயில்பட்டியின் இலக்கியச் சூழலில் உருவானவர். தொண்ணூறுகளில் உருவான இயல்புவாத இலக்கிய அலையில் இமையம், சோ.தர்மன் இருவரும் முக்கியமானவர்கள். பின்னர் ஜோ.டி.குரூஸ் அவ்வரிசையில் ஒருவரானார்.
சோ.தர்மனின் நாவல்கள் கூகை, சூல்,தூர்வை, பதிமூன்றாவது மையவாடி ஆகியவை தமிழிலக்கியத்தில் முக்கியமான ஆக்கங்களாகக் கருதப்படுகின்றன.ஈரம், சோகவனம், வனக்குமாரன், அன்பின் சிப்பி ஆகிய சிறுகதை தொகுதிகள் வெளிவந்துள்ன. வில்லிசைக்கலைஞர் பிச்சைக்குட்டி பற்றிய வாழ்க்கைவரலாற்று நூலும் எழுதியிருக்கிறார். 2019க்கான மைய அரசின் சாகித்ய அக்காதமி விருதைப்பெற்றார்.
சோ.தர்மன்: கண்மாயின் ஈரம் கொண்ட எழுத்துக்காரர்! -கோணங்கி
சோ தர்மன் பற்றி வெங்கட் சாமிநாதன்
சோ தர்மன் பேட்டி தலித்தியம் பற்றி
பதிமூன்றாவது மையவாடி – ஜெயஸ்ரீ
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

