Jeyamohan's Blog, page 876
November 26, 2021
எம்.டி.ராமநாதன் பற்றி அருண்மொழி நங்கை
சில குரல்களுக்கு ஞாபகங்களை எழுப்பும் திறன் உண்டு. எனக்கு மிகப் பிடித்த இசைமேதை எம்.டி. ராமனாதன் அவர்கள். முதல்முறை கேட்கும் எவரையும் சற்று திடுக்கிடச் செய்யும் அவரது குரல். அவர் குரல் சொகுசான குரல் இல்லை.
எஸ்.பொ பற்றி நோயல் நடேசன்
கொழுப்பில் வீ என்ற அவரது சிறுகதைத் தொகுப்பிற்கு நடந்த அறிமுகவிழாவில் சிறப்பு விமர்சன உரையாற்றிய சிவத்தம்பி முக்கால் மணி நேரம் சிறுகதை இலக்கிய போக்குகள் பற்றி பேசிவிட்டு முற்போக்கு இலக்கியவாதிகள் அந்த உரைகல்லில் வீயில் ஒரு கதையும் தேறமாட்டாது என முடித்தார் என்கிறார்
எஸ். பொன்னுத்துரையின் வரலாற்றில் வாழ்தல் – நடேசன்எம்.வி.வியின் இலக்கிய நண்பர்கள்- உஷாதீபன்
பெயருக்கேற்ப உண்மையான நண்பர்களாகவே இருந்திருக்கிறார்கள். ஆத்மார்த்தமாய் நேசித்திருக்கிறார்கள்.. படைப்பு வேறு. விமர்சனம் வேறு. நட்பு வேறு என்கிற பக்குவம் இருந்திருக்கிறது. விமர்சனங்களைக் கருத்தோடும் கண்ணியத்தோடும் எதிர்கொண்டு, அது காட்டமாக இருப்பினும், எதற்காக இப்படிச் சொல்கிறார் என்று சிந்தித்தும், உடன்பாடில்லையென்றால் அது அவர் கருத்து என்று மனதளவில் பக்குவப்பட்ட நிலையில் அடுத்துச் சந்திக்கும்போது பாசத்தோடும், நேசத்தோடும் எதிர்கொண்டிருக்கிறார்கள். அவரின் ஒப்புதலுக்கு என்றாவது ஆளாக மாட்டோமா என்று ஏங்கியிருக்கிறார்கள். ஒரே படைப்பை அடுத்தடுத்துப் படிக்கும்போது ஏற்பட்ட தெளிவில், முன்னம் தான் சொன்னதையே மறுத்து, சிறப்பாய்த்தான் இருக்கிறது என்று வெளிப்படையாய் மனமுவந்து பாராட்டியிருக்கிறார்கள். கருத்து மாறுபாடும், காலத்தால் ஏற்பட்ட பார்வை மாற்றமும், முதிர்ச்சியும் அவனவன் வளர்ச்சிக்கான அடையாளங்கள்தானே என்று வெளிப்படையாய்ச் சொல்லி, மனச் சமாதானம் பெற்று, பரஸ்பரம் கை கோர்த்து நட்பைப் பலப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இலக்கியம் வேறு, வாழ்க்கை வேறு என்று பிரித்துப் பார்த்து, மனதளவில் கொண்ட அன்பை அது எவ்விதத்திலும் பாழ்படுத்தி விடக் கூடாது என்பதற்கடையாளமாய் அடிக்கடி சந்தித்துக் கொள்வதும், ஒருவரையொருவர் உபசரித்துக் கொள்வதிலும் அக்கறை காட்டி, கால நீட்சியில் பரஸ்பரம் எப்படிப் பலப்பட்டிருக்கிறோம் என்பதை மானசீகமாய் உணர்ந்து, இவர்களின் தொடர்பெல்லாம் கிடைத்தது பெருமையே….என்று எண்ணி எண்ணி இறுமாந்திருக்கிறார்கள்.
இலக்கியப் பணியில் வறுமை ஒரு பொருட்டாகவே இருக்கவில்லை. அதைப் பொருட்படுத்தினால் நல்ல எழுத்து கை வராது என்று படைப்புகளின் மீதான பற்றில் பசியையும், பட்டினியையும் புறந்தள்ளி அறிவுக்கு விருந்தாகும் பணியில் ஆத்ம திருப்தி கொண்டிருக்கிறார்கள்.
படைப்பாளியாகவும், ரசிகனாகவுமே என்னை நிலை நிறுத்திக் கொள்கிறேன் என்று மேற் சொன்ன கருத்துக்களுக்கு இணங்க தன் ஸ்திரமான இயங்கு தளத்தை முன் வைக்கிறார் எம்.வி.வி. விமர்சனங்கள் என்னை விருத்தி செய்கின்றன, மேம்படுத்துகின்றன என்பதில் திருப்தியுறுகிறேன். இலக்கியச் சங்கதிகளில் எனக்கென்று அபிப்பிராயங்கள் உண்டென்றாலும், என் எழுத்தின் தரத்தை நிர்ணயிக்கும் மாற்றுத் தரப்பின் கருத்துக்களையே நான் எப்போதும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அதுவே என் தவறுகளைத் திருத்திக் கொள்ளவும், எதைச் செய்யக் கூடாது என்பதை நிர்ணயித்துக் கொள்ளவும், எப்படிச் செய்திருந்தால் இன்னும் சிறப்பாய் உணரப்படக் கூடும் என்பதை உணர்ந்து கொள்ளவும், தொடர்ந்து ஊக்கமாய் பயணப்படவும் பேருதவி புரிகிறது என்பதை அறுதியிட்டுப் புரிந்து கொள்கிறேன்.
இலக்கியச் சங்கதிகளில் எனக்கென்று தனிக் கருத்துகள் உண்டுதான். அவற்றிலிருந்து மாறுபடும் நண்பர்களோடு நான் கட்சியாடுகிறேன். அதுவே எங்கள் நட்பைப் பலப்படுத்துகிறது என்று பெருமையுறுகிறார். திரு.க.நா.சு. அவர்களோடு தனக்கேற்பட்ட நட்பும், பாசமும், காலத்தால் இவ்வாறுதான் பலப்பட்டு சகோதர வாஞ்சையோடு பயணப்பட வைத்தது என்று நெக்குறுகுகிறார்.
இந்தக் கட்டுரைத் தொடர் என் சகாக்களின் படைப்புக்கள் பற்றிய ஆய்வோ, விமர்சனமோ அல்ல. எங்கள் நட்புப் பயணம் எவ்வாறிருந்தது என்பதை விளக்கமாய் முன் வைக்கும் இனிய அனுபவமே…! என்று எம்.வி.வி. உள்ளன்போடு எடுத்துரைக்கையில் இன்றைய நவீன இலக்கியச் சூழலை, குழுக்களாய்ப் பிரிந்து நிற்கும் அவலங்களை நம்மால் நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.
இந்தக் கட்டுரைகளில் நான் முன் வைக்கும் விஷயங்கள் சற்று முன் பின்னாக இருக்கலாமே தவிர எதுவும் உண்மைக்குப் புறம்பானதல்ல. என்னோடு பழகிய இலக்கியப் படைப்பாளிகளின் குடும்ப விஷயங்கள் எதையும் நான் இதில் சொல்ல முற்படவில்லை. அவர்களாகவே என்னிடம் சொன்னவைகளையும் நான் சேர்க்கவில்லை. அவைகள் கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டியவைகள் என்றே ஒதுக்கியிருக்கிறேன் என்று தெளிவான மனநிலையில் எடுத்துரைக்கிறார் எம்.வி.வி.
கவிஞர் ஞானக்கூத்தனின் கருத்துக்களோடு முரண்பட்டபோது, அது மனச் சங்கடத்தை ஏற்படுத்திய நிலையில், நீங்க பெரிய கவிஞர், பொயட்டிக்ஸ் பற்றியெல்லாம் எழுதற நல்ல கட்டுரையாளர், ஒரு ஞானஸ்த்தன் இப்படிப் பேசலாமாங்கிற ஆத்தாமைதான் என்று அவர் கைகளைக் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டு, தன் அன்பைப் பொழிகிறார்..நட்பைப் பலப்படுத்துகிறார்.
இலக்கியவாதிகள்ங்கிற பேர்ல சிலரை மட்டும் காலம் பூராவும் ஓகோன்னு கொண்டாடுறது ஒரு பக்கம்னா,இன்னொரு பக்கம் வாழ்க்கை முழுக்க ஒருத்தன் என்னதான் எழுதியிருக்கான்னு கூடப் பார்க்காமக் கழிக்கிறது எவ்வளவு கொடுமை? இதெல்லாம் எந்த வகைல சகிச்சிக்கக் கூடியதா இருக்கு? என்று தன் ஆதங்கத்தை ஆழமாய் வெளிப்படுத்துகிறார்.
கும்பகோணம் காலேஜ் நூற்றாண்டு விழாவுக்கு சொற்பொழிவிற்காகச் சென்றிருந்ததும் அங்கே தன்னையும், தி.ஜா வையும் எந்த ஆசிரியர்கட்கும் (தமிழாசிரியர் உட்பட) தெரியாமல் இருந்ததையும், மௌனி, நகுலன்,கு.ப.ரா., பிச்சமூர்த்தி என்று யாரையுமே அவர்கள் அறிந்திராமல் இருந்ததையும் கண்டபோது வியப்பும், வேதனையும்தான் மிஞ்சியது என்று கூறி குறைந்தபட்சம் அவர்களின் படங்களையாவது வைத்திருக்கக்கூடாதா என்று வெதும்புகிறார்.
க.நா.சு உடல் நலமில்லாமல் உறார்ட் அட்டாக்கில் படுத்திருந்தபோது நேரத்துக்குப் பொருத்தமில்லாமல் ஜோக் அடிக்கிறோமே என்ற உறுத்தலோடேயே “மௌனிக்கு ஒரு மாடம் கட்டி…ஆறுகால பூஜைக்கு.என்று துவங்கும்போதே, ஏன் சிலையே வச்சிற வேண்டிதானே என்று க.நா.சு பொங்கிட, என்ன சார்…இந்த நேரத்துல போய் இப்படி என்று மகள் வந்து சொல்ல முடியாமல் தவிக்க….அத்தோடு அந்தப் பேச்சு நின்றது என்றும், நல்லவேளை அவரது திருமதி அப்போது அங்கே இல்லை என்று தெரிவித்து அதற்குப் பிறகு 25 ஆண்டுகள் க.நா.சு இப்பூவுலகில் வாழ்ந்து கலகம் செய்தார் அன்பு பொங்கத் தெரிவிக்கிறார்.
சந்திக்கும் பொழுதெல்லாம் வாதமும் விவாதமும்தான் இருந்திருக்கிறது அவர்களுக்குள். ஆனால் உள்ளார்ந்து அமிழ்ந்து கிடந்த அன்பும் பாசமும் அவர்களது நட்பை உயர்த்திப் பிடித்திருக்கிறது. என்ன சண்டை போட்டா என்னய்யா…நீதான் எல்லாத்தையும் ஒரு அருமையான காபியோட சரி பண்ணிடுவியே…என்பாராம் க.நா.சு. கையில் காசில்லாவிட்டாலும், ஒரு நல்ல காபிக்காக சில மைல் தூரம் கூடச் சென்று சேர அவர் அஞ்சமாட்டார் என்று அவரை ஆதரவாக நினைவுபடுத்திக் கொள்கிறார். அப்படியான எழுத்தாள நண்பர்கள் இப்போது உறிருதய சுத்தியாக இருக்கிறார்களா என்று நினைக்க வேண்டியிருக்கிறது நமக்கு.
ஜாதி முத்து என்றொரு நாவலை க.நா.சு. துவக்கியிருந்ததையும், கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரி நூற்றாண்டு விழாவுக்கு வந்திருந்தபோது நான் தி.ஜா.வோடு பழைய மாணவர்கள் என்கிற உரிமையில் சுற்றித் திரிந்தபோது, எங்களோடு எதிர்பாரா நேரத்தில் வந்து சேர்ந்து கொண்டார் க.நா.சு. என்று கூறி ஒரு நாளைக்கு இருபது பக்கம் எழுதும் உங்கள் திட்டம் என்னவாயிற்று? என்று தி.ஜா.கேட்க…அது இருக்கு…ஆனா நாவல்தான் முடியலை…முடிக்கணும் என்று இவர் சொல்ல, தேனீ இதழில் வந்த அந்தத் தொடர்…இதழ் நின்று போக…அதுவும் நின்றதில், திருமணத்திற்கு வந்த கிழவிகளில் நாலில் ஒரு பங்குப்பேரைத்தானே சொல்லியிருக்கிறீர்கள், மீதி எத்தனை ஆயிரம் கிழவிகளும், கிழவர்களும் இன்னும் இருப்பார்கள்? குறைஞ்சது 5000 பக்கமாவது வேண்டாமா என்று தி.ஜா ஜோக்கடிக்க, க.நா.சு.வோடு நானும் சேர்ந்து விழுந்து விழுந்து சிரித்தோம் என்று அந்த மகிழ்ச்சிகரமான நேரங்களை மறக்க முடியாமல் தவிக்கிறார். முடிக்காத கதையாகிப் போனது அது என்ற தகவல் கிடைக்கிறது நமக்கு.
மௌனி பற்றிச் சொல்கையில் அவரிடம் பழகும்போதெல்லாம் என்னிடமிருந்த பயத்தை கடைசிவரை என்னால் விலக்கவே முடியவில்லை….நல்லா எழுதற….ஆனால் நான் நினைச்சதைவிட சின்னப் பையனா இருக்கே…என்றாராம் மௌனி. எழுதறதுக்காக குறிப்பு எடுத்து வச்சிருக்கேன் பார்த்தியா? என்று ஒரு நோட்டைக் காண்பித்திருக்கிறார். பி.எஸ்.ராமையாதான் மணிக்கொடியில் என் கதையைத் தேர்வு செய்து போட்டார் என்றும் ந.பி, கு.ப.ரா. மௌனி இவர்களோடு என் கதையும் வந்திருப்பது அப்போது எனக்கு அவ்வளவு பெருமையாயிருந்தது என்று மகிழ்கிறார்.
சகட்டு மேனிக்கு புதுமைபித்தன், ந.பி., ராமையா, கு.ப.ரா., சிதம்பர சுப்ரணியன் இவர்களெல்லாம் என்ன எழுதுகிறார்கள், சரியான அப்ரோச்சே இல்லை எதிலும் என்று சாடுவார் மௌனி. நான் வாயை மூடிக் கொண்டு பார்த்துக் கொண்டிருப்பேன் என்று பயத்தோடு தெரிவிக்கிறார். அத்தோடு மணிகொடி என்றொரு மாதப் பத்திரிகை மட்டும் தோன்றியிருக்காவிட்டால், தமிழ்மறுமலர்ச்சி என்பது இன்னும் பல ஆண்டுகள் பிற்பட்டிருக்கும் என்றும் புகழ்ந்துரைக்கிறார்.
இப்படி முத்து முத்தாகக் கோர்க்கப்பட்ட பலவிதமான அனுபவத் தகவல்கள் அடங்கிய அரும்பெரும் பொக்கிஷமாக விளங்குகிறது இந்தப் புத்தகம். இதை இத்தனை காலம் கழித்து, கண்டுபிடித்து வெளியிட்ட சிறுவாணி வாசகர் மையம், கோயம்புத்தூர் அமைப்பு மிகவும் நன்றிக்குரியதாகும். இல்லையெனில் மறுபதிப்பாக வராமல் இப்புத்தகம் காணாமலே போயிருக்கும் வாய்ப்பு நிறைய உண்டு.
எம்.வி.வி.யின் காதுகள் நாவல் ஒப்புமை சொல்ல இயலாத தமிழில் முன்னெப்போதும் யாராலும் இதுபோல எழுதப்படாத தனித்துவமான நாவல் என்றும் அவரது பரிசோதனை முயற்சிகள், யாரோடும் ஒப்பிட முடியாத நடை, உள்ளடக்கத் தேர்வு, அதைக் கையாண்ட விதம், செய்து பார்த்த புதுப் புது உத்திகள் இவை எல்லாமும் தமிழ் இலக்கியம் எப்போதும் அவரை உயர்ந்த ஸ்தானத்திலேயே வைத்திருக்குமென்பது தி்ண்ணம் என்று திரு ரவி சுப்ரமணியம் சொல்லும் கணிப்பு அவரது படைப்புக்களைத் தேடிப் படித்த தீவிர வாசகர்களுக்கு நிச்சயம் புரிபடும்.
என் கதைகளில் நான் என்னையே தேடினேன். நான் அறிந்ததை, கேட்டதை, பேசியதை, அனுபவித்ததை, தொட்டதை, விட்டதை, சிந்தித்ததையே எழுதினேன் எழுதி எழுதித் தீர்த்தேன்…பாதி எனக்காகவும், பாதி பசிக்காகவும் என்று சொல்லிவிட்டு இறுதியாக அவர் ஒன்று சொல்லிச் சென்றதை நினைக்கும்போது அதில் அடங்கியிருக்கும் அவரது வாழ்வின் தீர்க்க முடியாத வேதனைகளின் பிரதிபலிப்பாக அதை நாம் உணர்கிறோம். அது –
“தமிழ்நாட்டில் முழு நேர எழுத்தாளனாக வாழ்வது என்பது ஒரு மானங்கெட்ட பிழைப்பு…“
எம்.வி.வி.அவர்களின் நூற்றாண்டு நெருங்கும் இந்த வேளையில் அவரது அத்தனை சிறுகதைகளையும் ஒன்று சேர்க்கும் அரிய பணி பேராசிரியர் திரு கல்யாணராமன் அவர்களால் செயலூக்கம் பெறப்பட்டுள்ளது என்பதும், காலச்சுவடு வெளியீடாக அது வரவிருக்கிறது என்பதும் இங்கு முக்கியமான கூடுதல் செய்தியாகிறது.
உஷாதீபன்
“என் இலக்கிய நண்பர்கள்“-எம்.வி.வெங்கட்ராம் – வாசிப்பனுபவம் – உஷாதீபன் வெளியீடு:-சிறுவாணி வாசகர் மையம், கோயம்புத்தூர்.
November 25, 2021
யுடியூப் வானம்
இப்போதெல்லாம் நாம் யூடியூபில்தான் அதிகமாகப் பாட்டு கேட்கிறோம். முதன்மையான காரணம் அதன் பிரம்மாண்டமான பாடல்களஞ்சியம். அனேகமாக அதில் இல்லாததே இல்லை. ஏனென்றால் உலகமெங்கும் உள்ள நுகர்வோர் தான் அதன் நிகழ்ச்சி தயாரிப்பாளர்களும். பலகோடி நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் கொண்ட ஒரு நிறுவனம் அது. அத்துடன் அது மிக எளிதானது. எப்படித் தேடினாலும் பாடலை கண்டுபிடித்துவிடலாம். நானெல்லாம் தோராயமாக பாடல்வரிகளைப் போட்டே பாடலைச் சென்றடைவதுண்டு.
ஆனால் யூ டியூபில் பாட்டு கேட்பது எப்படி என்று மலையாள நடிகரான நண்பர் ஒருவர்தான் எனக்குச் சொல்லித்தந்தார். வழக்கமாக நாம் பாட்டு கேட்பது இரண்டு வழிகளில். சாதாரணமாக நினைவில் எழுந்து வரும் பாடல்களைக் கேட்போம். நினைவு ஒன்றில் இருந்து ஒன்றுக்குச் செல்லக்கூடும். அல்லது தொடர்ந்து யூடியூப் பரிந்துரைக்கும் பாடல்களைக் கேட்போம். இரண்டுமே எல்லைகள் கொண்டவை. நம் நினைவில் நாம் அதிகமாகக் கேட்கும் பாடல்கள்தான் வரும். யூடியூப் கொண்டிருக்கும் அல்காரிதம் நாம் பாட்டு கேட்கும் வரிசையை வைத்து பாடல்களை பரிந்துரைக்கும். அவற்றிலும் அறிந்த பாடல்களே வரும். அரிதாக சில புதியபாடல்கள் வரலாம். ஆனால் பொதுவாக ஒரு சின்னச் சுழலுக்குள்தான் சுற்றி வருவோம்.
இதைத் தவிர்க்க நண்பர் சொன்ன வழி இது. விக்கி பீடியாவில் ஏதேனும் ஆண்டில் வெளிவந்த தமிழ்ப்படங்கள் என தேடவேண்டும். [ஆனால் ஆங்கில விக்கியிலேயே சரியான தகவல்கள் உள்ளன] உதாரணமாக 1974 என்று கொள்வோம். படங்களின் பட்டியல் வரும். அதில் உள்ள படங்களை சொடுக்கினால் அந்தப் படங்களுக்கான விக்கி பக்கம் வரும். அதில் பாடல்களின் பட்டியல் இருக்கும். அதில் நம் நினைவில் எழும் பாட்டு உண்டா என்று பார்க்கலாம். பெரும்பாலும் மங்கலான நினைவு எழும். அந்த வரியை வெட்டி யூடியூபில் ஒட்டி தேடி முதல் வரியை கேட்கலாம். நாம் கேட்டுமறந்த பாடல் நம்மை பரவசப்படுத்தியபடி வந்து நின்றிருக்கும். நம்புங்கள், நள்ளிரவில் அது ஒரு பேரனுபவம்
அல்லது பிடித்த பாடகர் அல்லது இசையமைப்பாளரின் பாடல் உண்டா என்று பார்க்கலாம். அப்படிப் பார்க்கும்போதுதான் நாம் நமக்கு மிக நெருக்கமான பாடகர்கள், இசையமைப்பாளர்களின் பாடல்களிலேயே மிகப்பெரும்பகுதியை சென்ற பல ஆண்டுகளில் கேட்டிருக்கவில்லை என்று தெரியவரும்.அரிய பாடல்கள் எழுந்து வந்து நினைவைக் கொந்தளிக்கச் செய்யும்.
நண்பரின் வழி இன்னும் அரிது. அவர் மலையாளத்தில் வெளிவந்த அத்தனை படங்களின் அத்தனை பாடல்களையும் ஒருமுறையேனும் கேட்டிருக்கவேண்டும் என முயல்வார். ஆகவே சமகாலத்தில் இருந்து பின்னால் சென்று வரிசையாக கேட்டுக்கொண்டே செல்வார். ஒருநாளுக்கு பத்துப்பதினைந்து பாட்டு. அதில் பெரும்பகுதி சாதாரணமாகவே இருக்கும். ஆனால் சிலிர்க்கவைக்கும் ஆச்சரியத்துடன் மூளைக்காலத்தில் புதைந்துபோன ஓர் அரிய பாடல் சிக்கும். சிலசமயம் ஒருமுறைகூட கேட்டிராத பாடல்களை கேட்டு மெய்மறக்கநேரிடும்.
நாம் நினைப்பதைவிட பற்பல மடங்கு பெரியவை விக்கிப்பீடியாவும் யூடியூபும். அனேகமாக மண்ணிலுள்ள எல்லாமே அவற்றில் உள்ளன. உலகளவே அவை பெரிதாகிவிட்டன. நாம் அவற்றில் மிகச்சிறிய ஒரு பகுதியிலேயே சுற்றி வருகிறோம். என் வாசிப்பில் இன்று விக்கிப்பீடியா மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. எதை வாசித்தாலும் உடனே விக்கிக்குச் செல்வது என் வழக்கம். விக்கிப்பீடியா வாசிப்பு போல இன்று வேறேதும் ஆர்வமூட்டுவதாக இல்லை. விக்கி உதவியுடன் பழைய ஐரோப்பியப் புனைவுகளை வாசிக்க நேர்வது ஒரு பெரிய உலகையே திறப்பது. அதன் பின் யுடூப் என்னும் வானத்தில் இரவு அலைந்து திரிதல். அறியா இறந்தகாலத்தில் எங்கோ சென்று இளைப்பாறல்.
“தங்கச்சிமிழ் போல் இதழோ” என்னும் இந்தப்பாடல் இன்றைய கொடை. நான் சிறுவயதில் அடிக்கடிக் கேட்ட பாடல். சௌந்தர்ராஜ அலையில் அன்றே காணாமல் போன பாட்டுதான். ஜெயச்சந்திரன் குரல் மலையாளிகளுக்குப் பிடிக்கும் என்பதனால் மட்டுமே என் அம்மாவாலும் அம்பிகா அக்காவாலும் கவனிக்கப்பட்டிருக்கலாம். நானே நாலைந்து முறைதான் கேட்டிருப்பேன். இன்று நினைவுகளுடன் வந்து இவ்விரவை நிறைக்கிறது.
எரியும் தீ -சௌந்தர்
கவிதை முகாம்கள் ,பட்டறைகளில் , கலந்து கொள்வதிலுள்ள முதல் சவால், நாம் வாசித்த கவிதை நமக்கு முகிழ்ந்த தருணம் மிகவும் அகவயமானது, அதை அங்கே ஒருவருக்கும் புரிய வைத்துவிட முடியாது. என்று தெரிந்தும், ஒரு உந்துதலில் நாம் ஒன்றை சொல்ல , அவர்கள் அதை மறுக்க என, நமக்கு பிடித்த அல்லது பிடிகிட்டிய கவிதை கல்லடி பட்ட குழந்தை என பரிதாபமாக நின்றிருக்கும் .
கவிதையை கலந்தாலோசிக்கவே கூடாதா ? என்றால் அது மேலும் பரிதாபம். தோழமையற்ற அனாதையாய் அக்குழந்தை தனித்து விடப்படும்.
இந்த இரண்டு சிக்கல்களிலும் இருந்து மீட்டெடுக்க ஒரு விட்டேத்தியான மனம் கொண்ட , காதலும் ,கவிதையும் தெரிந்த ,அதி மானுடனும் , ஆதி மானுடனும் கலந்த சாருவாகன் என நின்றிருக்கும் நம்பிராஜன்களால் மட்டுமே முடிகிறது.
விக்ரமாதித்யன் கவிதை தொகுப்புகள் , கட்டுரை தொகுப்புகள் என எழுதி குவித்திருக்கிறார். அதே வேளையில் அந்த படைப்புகள் பற்றிய, பற்று, அங்கீகாரம் , என எதையும் எதிர்பார்த்துக் கொண்டு நில்லாமல், இதோ இந்த கட்டுரையை நாம் படித்துக்கொண்டிருக்கும் வேளையில் இரண்டு கவிதைகளை எங்கோ ஓரிடத்தில் எழுதி வைத்திருப்பார்.
எனினும் ,அவரிடம். கவிதை என்றாலே படிமங்கள் , உருவகங்களை, உற்பத்தி செய்யும் தொழிற்சாலை என்கிற வியாபார நேர்த்தியெல்லாம் செல்லவே செல்லாது.
படிமங்களை முன்னிறுத்தாமல் கவிதை புனைவதில் உள்ள சிக்கல், அன்றாடத்தையும் , எதார்தத்தையும் சோகமே உருவாக , சுய பட்சதாபமே, கச்சா பொருளாக கவிஞன் கைக்கொள்ள வேண்டி இருக்கிறது. ‘அமர்’ என தன்னை கவிதைகளினுடாக அறிவித்துக்கொள்ளும் விக்கிரமாதித்தன் அந்த சிக்கலிலும் மாட்டிகொள்ளாதவர்.
உதாரணமாக , நம்மை மறந்தாரை நாம் மறக்க மாட்டேமால்‘ எனும் தொகுப்பில் ஏமாற்றிவிட்ட எதிரி எனும் கவிதையில் படிமம் -உருவகம் என எதையும் வைக்காமல் மனித மன ஆழங்கள், எதை வைத்து விளையாடுகின்ற என்பதை, நேரடியாக உள்ளே சென்று தைத்திருப்பார் .
எதிரி
இறந்திருக்கக் கூடாது
இருந்திருக்க வேண்டும்
எதிரி இல்லாமல்
எப்படி
எதிரி தானே
இயக்கத்துக்கே காரண கர்த்தா
எதிரியே மறைந்துவிட்டால்
என்ன செய்ய
சுலபத்தில்
கிடைப்பானா எதிரி
எவ்வளவு காலமாய்
எதிரியோடு
எதிரி இருந்தவரை
எத்துணை சுவாரஸ்யம்
இப்போதோ சலிப்பு
இத்தனை சீக்கிரமே போயிருக்க வேண்டுமா ?
எதிரியில்லாமல்
எவ்வளவு காலம்
எப்படியொரு சூன்யம்
எதிரியின் சாமர்த்தியம் யாருக்கு வரும்.
ஏமாற்றிவிட்ட எதிரியை மன்னிக்க முடியாது –
இதில் நாம் ஒவ்வாத உறவுகளை , பற்றிக்கொண்டிருக்கும் உறவுகளை என யாவரையும் போட்டு வாசித்துப் பார்க்கலாம் ஒரு குறைவும் வந்துவிடாது .
அதேபோல் தன்னை முன்னிறுத்திக் கொள்வதில் , முதலிடம் பிடிப்பதில் மனிதர்கள் அடையும் உற்சாகத்தையும் , பரபரப்பையும், பார்த்து. அனுபவம் மிக்க சான்றோன் என ஒரு சிரிப்பை உதிர்த்துவிட்டு , ஒரு கவிஞன் என்ன செய்வான் தெரியுமா? என்கிற தோரணையில் செய்யப்பட்ட வரிகள் , விக்கிரமத்தியனின் சுய பிரகடனம்.
முன்வரிசை
——————-
முன்வரிசையில் இடம்பிடிக்க
மனம் சம்மதிப்பதில்லை
முன் வரிசைக்கு செல்லவே முயன்றதில்லை ஒருபோதும்
முன்வரிசையில் இருக்க பிரமுகரான வேண்டும்
பின்வரிசை தான்
பெரிதும் செளகரியம்
நினைத்த போது
எழுந்து போய்விடலாம்
தேனீர் குடிக்க ,சிகரெட் பிடிக்க, சலித்துப் போனால்
ஒயின் ஷாப் கூட சென்று விடலாம்
முன்வரிசை என்றால் இருக்கையை காபந்து பண்ணவேண்டும்
மிக முக்கியமானவர்கள் வருகைபுரிந்தால்
இடத்தை ஒழித்துக் கொடுக்கவேண்டும்
தோன்றினால் எழுந்து போக இயலாது
சம்பிரதாயம் , மரபு , நாகரீகம்
விடமுடியாது .
பின்வரிசையில் எந்த பிரச்னையும் கிடையாது
யாரும் கவனிக்க மாட்டார்கள்
எழுந்து நின்று வணக்கம் போட வேண்டியதில்லை
அசதியாயிருந்தால் சற்றே கண்ணுறங்கலாம்
பின்வரிசை தான் பிடிக்கிறது
முன்வரிசைக்கு ஒருநாளும் முண்டி மோதியதில்லை
தொடக்கப்பள்ளியில் இருந்தே பின்வரிசை தன
கவிதையிலும் ,வாழ்விலும் அதே கதை தான்
முன்வரிசை விட்டுவிடுவதும்
பின்வரிசை இடமளிப்பதும் தாம்
இதுநாள் வரையில் சதாசிவா –
இங்கே வந்து விழுந்தவை லெளகீக வாழ்வில் தோல்வியுற்ற, ஒருவரின் புலம்பல்கள் அல்ல. மாறாக திருமூலரில் தொடங்கி பாரதி வரை வந்த, இங்கிருந்தே ”அவ்வுலகை’ வென்றோரின் குரல். ஆகவே கடைசி வரி நம்மிடமல்ல, அந்த சதாசிவத்திடம் சொல்லப்படுகிறது.
நமது மரபின் வரிகளாக ‘செயலின் பலனை எதிர்நோக்காது, செயல் புரிக” எனும் வரிகளை கவிஞர் ‘ஆட்டக்காரன்‘ எனும் கவிதையில்
ஆட்டக்காரனுக்கு அத்தனை அடைவுகளும், ஆட்ட வகைகளும் அத்துப்படி
ஆட்டம் உடம்பையும், மனசையும்,வைத்துதான் என்பான் ஆட்டக்காரன்
ஆடும் இடம்தான் அரங்கமென்று தெரியும் ஆட்டக்காரனுக்கு
ஆடும்வரைதான் எல்லா ஆட்டமுமென்று சொல்லிக்கொண்டிருப்பான் ஆட்டக்காரன்
ஆட்டம் ஆட்டத்துக்காகத்தான் என்பதே ஆட்டக்காரன் கொள்கை
ஆடுவதெல்லாம் தனக்காகவே என்பதுதான் ஆட்டக்காரன் கோட்பாடு
ஆட்டம் எப்படி வந்திருக்கிறதென்றெல்லாம் அலட்டிக்கொள்ள மாட்டான் ஆட்டக்காரன் ,
ஆட்டம் முடிந்தபின்னே ஆட்டத்தை மறந்துவிட்டு போய்விடுவான் ஆட்டக்காரன்.
மிக ஆச்சரியகரமாக இந்த மறைஞான கருத்து , வாழையடி வாழையென, ஒரு கவியின் வரிகள் வழியாக வந்து சேர்த்திருப்பது, நம் சிறார் விளையாட்டு வரை.
இன்றும் கூட நீங்க ஏதேனும் ஒரு சிறுவர் தொலைக்காட்சி தொடரை ஓடவிட்டால், பத்து நிமிடத்திற்குள் ஒரு எலியோ , பூனையோ , சோட்டாபீமனோ , பால கணேசனோ சொல்வது இந்த ‘ஆட்டக்காரன் ‘ கருத்தைத்தான். {எதப்பத்தியும் கவலப்படாம போட்டியில, வெளயாடிக்கிட்டிரு என் செல்லமே !!! }
எப்போதும் நம்மை புன்னகைக்க வைப்பவை இவை .
”மஹா கவிகள் ரதோற்சவம்” தொகுப்பில் தனது மரபு தொடர்ச்சியை, சங்கஇலக்கியம் முதல் நவீன கவிதை வரையான ஒரு கோட்டை இழுத்து , தனது விருப்பப் பட்டியல் ஒன்றை தருகிறார். அதில் அவர்களது பிடிமானத்தை சொல்கிறார். இந்த தொகுப்பில் தனக்கான பிடிமானம் என பல இடங்களில் ‘அமர்’ எனும் பெயருடன் வரும் கவிக்காரன் பேசிக்கொண்டே இருக்கிறான் .
பற்றுக்கோடு
——————–
ந . பிச்சமூர்த்தி வேதாந்தி
க . நா . சு அத்வைதி
நகுலன் அம்மாபிள்ளை
பிரமிள் சாதுக்கள் பிரியன்
ஞானக்கூத்தனுக்கு மரபு
தேவதேவனுக்கு பிரபஞ்ச விசாரம்
கலாப்ரியா சக்தி உபாசகர்
சுகுமாரன் இசை ரசிகர்
தேவதச்சனுக்கு தத்துவம்
சமயவேல்க்கு சித்தாந்தம்
பாலைநிலவன் பைபிள் விசுவாசி
லக்ஷ்மி மணிவண்ணன் பன்றிமாடசாமிக்கு கொண்டாடி
யவனிகா ஸ்ரீராமுக்கு லோகாயவாதம்
பிரான்சிஸ் கிருபா வேளாங்கன்னிமாதா பக்தர்
{பெண்கவிஞர்களுக்கு என்ன பிடி தரமோ தெரியாது}
எல்லோருக்கும் ஏதோ ஒன்றைப் பற்றிக்கொண்டு தான்
இருக்க முடியும் போல
நவீனமென்று வந்தபின்னும்.
இந்த கவிதையை தொடர்ந்து தன்னிலை விளக்கமாக அமர் சொல்வது, உலகம் எனும் மாபெரும் நிறுவனத்தின் முன் அவன் யார்? என்பது தான் .
அது ஒரு பெரும் நிறுவனம்
அமர் ஒரு சாதாரணன்.
எனில் அப்பெரும் நிறுவனத்தைக் காட்டிலும்
அமர் விஷேசமானவன் ……எனத்தொடங்கி
இறுதியில்
கபிலர் பாடல்கள் நின்ற சொற்கள்
இளங்கோவடிகள் காவியம்
திருநாவுக்கரசு பதிகங்கள் தீராத தென்றல் காற்று
பாரதியின் கண்ணன்பாட்டு
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு சாஸ்வதம்
சிறுகூடல்பட்டிக் கவிஞன் , செந்தமிழ் இசைப்பாடல்கள் நிரந்தரமானவை
அமர் ஒரு பெருங்கவிஞன் – என முடிகிறது .
இதில் அமர், கம்பனின் காவிய நாயகிபோல , கவிதை எனும் ‘ஒற்றைப்புல்லுடன்’ அமர்ந்திருப்பது, உலகியல் , பொருளியல் , இடதுசாரி , வலதுசாரி , ஆண் , பெண் , உயிருள்ள,உயிரற்ற பருப்பொருள்கள், ஆச்சாரம் , வர்த்தகம் எனும் பத்துத்தலை ராவணன் முன்.
இதை சொல்லவே ஒரு விடுபட்ட மனோநிலை தேவையாகிறது அதுவும் ஒரு அலைச்சல் மிக்க கவிக்கு இது எப்படி சாத்தியமாகிறது என்கிற கேள்வி எழுகையில், அமர் கைகாட்டுவது அவருடைய சிறு தெய்வங்கள் சார்ந்த கவிதையைத்தான் .
ஸ்ரீ காலராத்ரி, வராஹி , வாக்தேவி , கருப்பசாமி, காந்திமதியம்மையும் , நெல்லையப்பரும் , புட்டார்த்தி அம்மனும் , சாலைக்குமாரனும் , சங்கிலி பூதத்தானும் என கவிதைகள் நெடுகிலும் குறுக்கும், நடுக்குமாக உலாவிக்கொண்டு இருக்கிறார்கள். இருந்தும் பிரார்த்தனையும் , சன்னதமும் தீர்ந்தபின் யதார்த்தக்கவி விழித்துக்கொண்டு, சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் கண்டு வாய்பொத்தி சிரிக்கும் சிறு குழந்தையாகிறான் இந்த வரிகளில்
ஆயுஷ் ஹோமம்
————————-
முன்னம் இல்லாதது
மஹா ம்ருத்யுஞ்சய மந்திரம்
சொல்கிறான்
ஆயுஷ் ஹோமம் செய்கிறான்
அடிமனதில்
மரணபயம்
தீவிரமாக ஒன்றை செய்யாத நபரை, அதிலும் கவிஞனை எவ்வகையிலும் மதிக்க வேண்டியதில்லை. என்பதை சொல்லும் வரிகளாக ‘புத சுக்கிர யோகம்‘ எனும் கவிதையில்.
நேரத்துக்கு சாப்பிக்கிடுகிறார்கள்
காலத்தில் தூங்குகிறார்கள்
நல்ல கால்சராய் சட்டை தான் போடுகிறார்கள் ….
என சொல்லிக்கொண்டே போய் …
..உண்மையான கவிஞனை கண்டதும்
பதைபதைத்து போகிறார்கள் குற்றவுணர்வுடன்.
தருமனையும் , துரியோதனையும் , சகுனியையும் ,
பீஷ்மரையும் , விதுரரையும் , துரோணரையும்
மாயக்கண்ணனே முழுதாய் அறிவான்
என்று முடிகிற இடத்தில ஒரு ‘பொழுதுபோக்குக்கவி’ கைகள் நடுங்க தானாகவே எழுந்து நின்றாக வேண்டும்.
தேர்த்தட்டில் அமர்ந்து மெய்ஞ்ஞானம் உரைத்தவனின் அறுபடாத கண்ணி நான் என்கிற பதாகையுடன் தான் இந்த கவி தன்னை அறிவித்துக்கொள்கிறார். இந்த கவிதையில்
மஹாகவிகள் ரதோற்சவம்
————————-
மஹாகவிகள் ரதோற்சவம் வருகிறது
வழிவிட்டு நில்லுங்கள்
புழுதி பறக்கிறதென்று
புகார் சொல்லிக்கொண்டிருக்காதீர்கள்
வாசல் பெருக்கி இட்ட கோலம்
அழிந்து விட்டதென வருத்தப்படாதீர்கள்……
இப்படி தொடங்கி …
மஹா கவிகளாலேயே
மழை பெய்கிறது
மகா கவிகளாலேயே
காற்று வீசுகிறது
மஹா கவிகளாலேயே
வானம் நிலைகொண்டிருக்கிறது
மஹா கவிகளாலேயே தீ எரிகிறது.
என்கிற வரிகளில், இந்த உலகில் எதையும் நிகர் வைக்க ஒப்பாத ஒரு தீவிர பைராகி எழுந்து நின்று கூத்தாடுவதை காணமுடிகிறது .
பெரும்பாலும் கவிகளின் மனம் உன்னதங்களிலிருந்து உன்னதங்களுக்கும் , உச்சத்திலிருந்து மேலும் உச்சங்களுக்கும் தாவிக்கொண்டிருந்தாலும் , அவர்களுடைய காலில் குடிகொள்ளும் பிரஞை தரையில் ஊன்றியபடியே இருக்கிறது, அது கவிதை வாசகனுக்கு ஒரு நூல் ஏணி. அந்த கவி மனதின் சிகரங்களை, இவனும் தொடமுடியும் என விடுக்கப்படும் ஒரு அழைப்பு . விக்கிரமாதித்தன் கவிதைகள் எங்கிலும் இருப்பது அப்படியான ஒரு அழைப்பிதழ் தான்.
விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள்-16
விக்ரமாதித்யன் -விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள்-15
விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 12
விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 11
விக்ரமாதித்யன் விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 10
விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 9
விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 8
விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 7
விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 6
விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 5
விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 4
விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 3
பி.கே.பாலகிருஷ்ணன் – கடிதங்கள்.
அன்புள்ள ஜெ
நலம்தானே?
பி.கே.பாலகிருஷ்ணனின் தஸ்தயேவ்ஸ்கி பற்றிய கட்டுரை மிகமிக ஆழமான ஒன்று. இங்கே நாம் தஸ்தயேவ்ஸ்கி பற்றி பேசுவதற்கும் அதற்கும் இடையே உள்ள வேறுபாடுதான் எனக்கு முக்கியமானதாகப் படுகிறது. இங்கே நமக்கு விமர்சகர்கள், ஆய்வாளர்கள் குறைவு. கல்வித்துறையாளர்களும் அரசியலாளர்களும்தான் இங்கே ஆய்வுமாதிரி எதையாவது எழுதுகிறார்கள். அதில் மேற்கோள்களும் கோட்பாடுகளும் குவிந்துகிடக்குமே ஒழிய எந்த அடிப்படையான புரிதலும் இருக்காது. அவற்றிலிருந்து வாழ்க்கையை முன்வைத்து இலக்கியப்படைப்புகளை வாசிக்கும் நுண்ணுணவுள்ள இலக்கியவாசகனுக்கு பெறுவதற்கு ஒன்றுமிருப்பதில்லை. பி.கே.பாலகிருஷ்ணனின் கட்டுரை ஆய்வுக்கட்டுரையின் ஆழமும் செறிவும் கொண்டிருக்கிறது. கூடவே அது அழகுணர்வும் வாழ்க்கைப்பார்வையும் கொண்டிருக்கிறது. நீங்கள் எங்கிருந்து எந்த ஆசிரியர்களிடமிருந்து வந்திருக்கிறீர்கள் என்று புரிகிறது
எம்.பாஸ்கர்
அன்புள்ள ஜெ
பி.கே.பாலகிருஷ்ணனின் தஸ்தயேவ்ஸ்கி பற்றிய கட்டுரையை படித்துக்கொண்டே இருக்கிறேன். மிகமிக ஆழமான கட்டுரை. ஆனால் ஆய்வுக்கட்டுரை அளிக்கும் சோர்வு சற்றுமில்லை.மூளையை மின்னல்கள் தீண்டிக்கொண்டே இருக்கின்றன “எல்லையில்லாதபடி மிகமிக விரிவான ஒரு போர்க்களத்தில்தான் தன் கலைமனம் முழுமையான வெளிப்பட முடியும் என்று கண்டுடைந்த டால்ஸ்டாய் ‘போரும் அமைதியும்’ நாவலை எழுத ஆரம்பிக்கிறார்” என்ற வரி என்னை அதிரவைத்தது. போரும் அமைதியும் எழுதியவர் போரில்தான் தன் கலைமனம் வெளிப்படும் விரிவும் உச்சமும் அமையும் என்று எண்ணி அதை எழுதினார் என்றால் போர் என்றால் என்ன? பகவத்கீதை ஏன் போரில்தான் சொல்லப்படமுடியும் என்பதை அங்கே பொருத்தி யோசித்துக்கொண்டேன்
அழகிய மணவாளன் மிக அருமையாக மொழியாக்கம் செய்திருக்கிறார். அவருக்கு வாழ்த்துக்கள்.
ஆர்.ஸ்ரீனிவாசன்
நாவலின் பேசுபொருள் -பி.கே.பாலகிருஷ்ணன்குருவி, கடிதம்
அன்பு ஜெ,
நலமா? தங்களைத் தொடர்பு கொண்டு நீண்ட நாட்கள் ஆகிறது. மின்னஞ்சல் வழி தொடர்பில் இல்லை என்றாலும் உங்கள் எழுத்தின் மூலம் தினமும் தங்களுடன் தொடர்பில்தான் உள்ளேன். அதைவிட ஒரு எழுத்தாளருடன் வாசகன் தொடர்பில் இருந்துவிட முடியாதல்லவா? தங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவது போன்றொரு கனவு நேற்று கண்டேன். மிக நீண்ட நாட்கள் ஆகிவிட்டதென கனவிலேயே வந்துவிட்டீர்கள் போலும்! நேற்று மிக எதேச்சையாக குருவி சிறுகதை வாசித்தேன். சரியான என்னுடைய பிறந்தநாளன்று தளத்தில் வெளிவந்துள்ளது. தன்னகங்காரம் கொண்ட வித்யா கர்வம் கொண்ட ஒரு கலைஞன் சிறு குருவிக்கு முன்பாக தன்னை முழுமையாகச் சமர்பணம் செய்யும் கதை. அந்தப் பகுதி கதையின் உச்சம். நேற்று மட்டுமே இரண்டு முறை வாசித்துவிட்டேன். புனைவு களியாட்டு சிறுகதைகள் அந்தக் காலகட்டத்தை மீறி மீண்டு புதிதாக வாசிக்கும்போது அதுதரும் ஒரு உயர் சித்திரம் மிக பிரம்மிப்பாக உள்ளது.
குருவி சிறுகதையிலேயே கதை பின்னல் மிக மிக இயல்பாக ஒரு சாதாரண கதையாக செல்கிறது. வைர்மேன் மாடன் பிள்ளையின் வாழ்க்கை முறை அவன் எண்ண ஓட்டங்கள் இந்த சமூகத்தில், மற்ற மனிதர்களுடன் அவனுக்கிருக்கும் விலக்கம் அதை மறைக்கவும் மறக்கவும்தான் குடியுடன் இருக்கிறான். எந்நேரமும் கலை உள்ளத்துடன் இருக்கும் ஒருவன் சாதாரண மனிதர்களிடம் சாதாரணமாக அவனைப் போல் உரையாடிவிடுவது அவ்வளவு எளிதில்லைதான். தன்னுடைய தொழிலை தொழிலாக எண்ணாமல் கலையாக எடுத்துச் செய்யும் ஒருவனின் கலைத்திமிர் கையளவு கொண்ட ஒரு குருவிக்கு முன்பு முகத்திலறைந்ததுபோன்று தோற்று நின்ற இடம் இந்தக் கதையின் உச்சம். என் மனதில் மீண்டும் மீண்டும் அந்தக் காட்சிதான் ஓடுகிறது. பெரியோரைக் கண்டு வியத்தலும் இலமே அதனினும் சிறியோரைக் கண்டு இகழ்தலும் இலமே என்ற வரி அடுத்தடுத்து மனதில் தோன்றுகிறது. இதைவிட மிகப் பொருத்தமாக ஔவையாரின் பாடல்வரிகள் ஒன்றுள்ளது. இந்தக் கதையின் ஒட்டுமொத்த மையக்கருத்தையும் அதில் குறுகத்திரித்து கூறிவிட்டது போன்ற பாடல்.
வான்குருவி யின்கூடு வல்லரக்குத் தொல்கறையான்
தேன்சிலம்பி யாவர்க்குஞ் செய்யரிதால் – யாம்பெரிதும்
வல்லாமே என்று வலிமைசொல வேண்டாங்காண்
எல்லோர்க்கும் ஒவ்வொன் றெளிது
மாடன்பிள்ளைக்கு நிச்சயம் இந்தப் பாடல் தெரிந்திருக்காது. ஆனால் அவன் ஆத்மா வான்குருவியின் கூடைக் கண்டதும் உணர்ந்துவிட்டது. அந்தத் திருப்பம்தான் கதையை வாசிக்கும்தோறும் மனதை உலுக்குகிறது. அந்தக் கதையில் கலைஞனின் தினப்பாடு, அங்கலாய்ப்புகளை மாடன்சாமியின் குமறல்களாகவே வெளிப்பட்டுவிட்டது.
“சொல்லல்லா? இதுவரை மனசறிஞ்சு சொல்லல்லா? இந்த உலகத்திலே அத்தனை பேரும் எங்கிட்ட என்னவே சொல்லுறிய? ஒளுங்கா குளி, பல்லுதேயி, காலம்பற தோசை தின்னு, மத்தியான்னம் சோறு தின்னு, சாயங்காலம் டிவி பாரு, பொஞ்சாதிக்கமேலே ஏறு, பிள்ளைகள பெத்து அதுகளுக்கு சொத்து சேத்து வையி. எங்கள மாதிரி செத்து மண்ணாப்போ… அதைத்தானே? வே, நான் கேக்கேன். இந்த உலகத்திலே எனக்கு அட்வைஸ் மயிரச் சொல்லாத எந்த தாயோளியாவது உண்டாவே? எனக்க அப்பனுக்க ரூபமாக்கும் அம்பிடுபேரும். சொன்னேருல்லா, டிப்பாட்மெண்டு. அது அப்பனுக்கு அப்பன். அதிலே ஓரோருத்தனும் அப்பன்.”
“ஆப்பீசர பயப்படுதான். காசுள்ளவனை பயப்படுதான். கையூக்கு உள்ளவனை பயப்படுதான். ஆனா ஆர்ட்டிஸ்டுன்னா மட்டும் எல்லாவனுக்கும் அவனை நல்லாக்கி போடலாம், சீர்திருத்திப் போடலாம்னு தோணுது. போனவாரம் நம்ம ஆபீஸிலே தூத்துவாருத கோரன் சொல்லுதான், ஏலே மாடன் பிள்ளை, மனுசனாட்டு வாளுலேன்னு. அம்பிடு தாயோளிகளுக்கும் சொல்லுகதுக்கு ஒண்ணுதான் இருக்கு. மனுசனாட்டு வாளு…”
அவன் குரலைத் தூக்கி உரக்க சொன்னான் “வே, நான் மனுசன் இல்ல. நான் ஆர்ட்டிஸ்டு. நான் மனுசன் இல்லவே. நான் பாவி. நான் கேடுகெட்ட குடிகார நாயி. நான் அசிங்கம் பிடிச்ச மிருகம்.. பண்ணி. நான் புளுவாக்கும். பீயிலே நெளியுத புளு, நான் சாத்தானாக்கும். பேயாக்கும். சங்க கடிச்சு ரெத்தம் குடிக்குத மாடனாக்கும். என்ன மயிரானாலும் உம்மையும் உங்காளுகளையும் மாதிரி மண்ணாப்போன மனுசனா இருக்கமாட்டேன் வே…”
இந்த வரிகள் மிகவும் கணமும் வலியும் நிறைந்த வரிகள். அதை அப்படியே வாசகருக்கும் கடத்தக்கூடிய சக்திவாய்ந்த வரிகள். ஒரு கலைஞன், எழுத்தாளன் என அனைவரும் கண்டிப்பாக வாசிக்கக்கூடிய சிறுகதை. சமீபகாலத்தில் வெளிவந்த மிக மிக ஆகச்சிறந்த உன்னதமான கதை இது எனத் தயக்கமில்லாமல் சொல்லலாம்.
இந்த ஆண்டிற்குள் வெண்முரசை முடிக்கத் திட்டமிட்டுள்ளேன். மீண்டும் மறுவாசிப்பு செய்ய வேண்டும். குருவி சிறுகதை என்னை மிகவும் பாதித்துவிட்டது. நேற்று இன்று என என்னால் மீளமுடியவில்லை. இன்றைக்கான வெண்முரசு அத்தியாயத்தை இன்னமும் படிக்கவில்லை மனம் முழுவதும் வான்குருவியும் மாடன்பிள்ளையும் தான் நிறைந்து நிற்கிறார்கள். இனி மீண்டும் புனைவுக் களியாட்டு சிறுகதைகளை தினமும் ஒரு கதை வீதம் வாசிக்க வேண்டும். எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என விரும்புகிறேன். செயல்கூட வேண்டும்.
அன்புடன்
ரா. பாலசுந்தர்
ஜெயமோகன் மின்நூல்கள் வாங்க குமரித்துறைவி அச்சுநூல் வாங்க வான் நெசவு அச்சுநூல் வாங்க விஷ்ணுபுரம் பதிப்பக நூல்கள்வாசித்தல், கடிதம்
அன்புள்ள ஜெ,
வணக்கம்!
நூல்களை படிப்பதைப் பற்றிய பல குறிப்புகள் தளத்தில் உள்ளன. லாஓசி அவர்களின் ஒரு குறிப்பும் வெளியாகியுள்ளது. [தினமும் படிக்க வேண்டும், ஒரே நேரம் ஒரே இடம் நல்லது, படித்ததை சிந்திக்க வேண்டும், சிந்திப்பதன் வழிமுறைகள், குறிப்புகள் எடுக்காமல் அபுனைவை வாசிப்பது வீண், குறிப்புகள் எப்போதும் முழு சொற்றொடராக இருத்தல் அவசியம்…. இன்னபிற ]. முன்னொரு குறிப்பில் குரு நித்யாவிடம் இருந்து நூலின் சாரத்தை விரைவில் கிரகிப்பதற்கு கற்றதாக எழுதியிருந்தீர்கள். பத்தாயத்தில் எழுத்தாளர் இமையம் அவர்களுக்கு நடந்த பாராட்டு விழாவில் பவா அவர்கள் உங்களை அறிமுகப்படுத்தவும்(!) அதையேதான் சொன்னார். நூலை அப்படியே ‘தள்ளுவது’ எப்படி? (முழு உள்ளடக்கத்தையும் நினைவில் நிறுத்திக்கொண்ட பின்புதான்). விரிவாக எழுதினீர்கள் என்றால் பலருக்கும் பயன்படும் என்று நம்புகிறேன்.
நன்றியுடன்
யஸோ தேவராஜன்
அன்புள்ள யசோ
நான் பலமுறை எழுதியதுதான். வழிமுறைகள் என நான் சொல்பவை நானே கண்டடைந்தவை. வாசிக்கும் இடம், நேரம் போன்றவற்றை வகுத்துக்கொள்ளுதல். வாசிப்பதற்குரிய மனநிலையை உருவாக்கிக் கொள்ளுதல். வாசித்தவற்றை தொகுத்து எழுதிக்கொள்வதன் வழியாக நினைவில் நிறுத்தல்
ஆனால் அனைத்துக்கும் அடிப்படையானவை இரண்டு. ஒன்று வாசிக்கையில் கவனம் சிதறாமல் இருப்பது. செல்பேசிதான் இன்றைய வாசிப்பின் மிகப்பெரிய தடை. அது செயல்பாட்டில் இருந்தால் வாட்ஸப் செய்திகள் குறுஞ்செய்திகள் வந்துகொண்டே இருக்கும். அவற்றை பார்த்துக்கொண்டே கவனமாகப் படிக்க முடியாது. படிக்கும் நேரம் வீணாகும்.
படித்தவை உட்னடியாக மறந்துபோகும் என்றாலும் படிப்பதனால் பயன் இல்லை. ஆகவே அவற்றை குறிப்புகளாக எடுத்துக்கொள்ள வேண்டும். அவற்றை எவரிடமாவது பேசிப்பார்க்க வேண்டும். நான் நூல்களிடமும் மானசீகமாக விவாதிப்பவன். ஆகவே மறப்பதில்லை.
அரைக்கவனத்துடன் எதையும் செய்யாமலிருந்தாலே போதும். நிறைய செயலாற்ற முடியும். செய்யும் செயலில் முழுக்கூர்மையை செலுத்தவேண்டும் என்று நாமே முடிவுசெய்து அதற்காக முயன்றால் போதும். நமக்கான வழிமுறைகளை நாமே கண்டடைவோம்
ஜெ
வெண்முரசு, கோவை கூடுகை
நண்பர்களுக்கு வணக்கம்.
சொல்முகம் வாசகர் குழுமத்தின் பதினோராவது வெண்முரசு கூடுகை, வரும் ஞாயிறு அன்று கோவையில் நிகழவுள்ளது.
இவ்வமர்வில் வெண்முரசு நூல் தொகையின் ஐந்தாவது நாவலான “பிரயாகை” – யின் ஐந்து முதல் ஒன்பது வரையுள்ள பகுதிகளை முன்வைத்து கலந்துரையாட உள்ளோம்.
பகுதிகள்:
ஆயிரம் அடிகள்
கரும்புனல் கங்கை
பூநாகம்
மழைப்பறவை
உருகும் இல்லம்
வெண்முரசு வாசகர்கள் மற்றும் வெண்முரசை அறியும் ஆர்வமுள்ள வாசகர்கள் அனைவரையும் இவ்வமர்வில் பங்கேற்க அன்புடன் அழைக்கிறோம்.
நாள் : 28-11-21, ஞாயிற்றுக்கிழமை
நேரம் : காலை 10:00
இடம் : தொண்டாமுத்தூர், கோவை.
தொடர்பிற்கு :
பூபதி துரைசாமி – 98652 57233
நரேன் – 73390 55954
November 24, 2021
எழுதுவதை பயில்தல்
எழுதும்கலை வாங்க
நவீனத்தமிழிலக்கிய அறிமுகம் வாங்க
வணக்கம்,
என் பெயர் புஷ்பநாதன், பொறியியல் பட்டதாரி, புதுச்சேரி மாநிலம், பண்டசோழநல்லூர் கிராமம்…
நான் உங்களது அறம் மற்றும் உலோகம் எனும் இரண்டு புத்தகங்களை படித்திருக்கிறேன்.. தொடர்ந்து உங்கள் நாவல்களை வாங்கி வாசிக்கத் திட்டமிட்டுள்ளேன்.. தற்போது உங்களுடைய பேருரைகளை யூடியூபில் தொடர்ந்து கேட்டு வருகிறேன்.. உங்கள் உரைகளில் குறிப்பாக நவீன இலக்கியம் குறித்து எனக்கு ஒரு தெளிவு கிடைத்திருக்கிறது.. நான் அவ்வப்போது ஒரு சில சிறுகதைகள் எழுதி பார்த்திருக்கிறேன்.. நாவல் ஒன்று எழுதிப் பழகத் திட்டமிட்டு என் தந்தையின் வாழ்க்கை வரலாற்றை சிறு நாவலாக எழுதி வருகிறேன்….
எனக்கு உள்ள சில சந்தேகங்களை உங்களிடம் கேட்டு தெளிவு பெற விரும்புகிறேன்.. என் கேள்விகளுக்கு உங்களிடம் இருந்து பதில் வந்தால் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன்….
எழுத்தாளர் ஆவதற்கு ஒருவன் எப்படி தன்னை ஆயத்தப் படுத்திக் கொள்ள வேண்டும்?2. எந்த வகையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்?
புஷ்பநாதன்
அன்புள்ள புஷ்பநாதன்,
எழுத்தாளர் ஆவதற்கு முதன்மையானது வாசிப்பு. தமிழில் இதுவரை என்ன எழுதப்பட்டிருக்கிறது என்று வாசித்தால்தான் நீங்கள் மேற்கொண்டு எழுதமுடியும். தமிழில் எழுதப்பட்டிருக்கும் குறிப்பிடத்தக்க படைப்புகளை சில ஆண்டுகள் முழுமூச்சாக வாசியுங்கள்.
நவீனத்தமிழிலக்கிய அறிமுகம் என்று ஒரு நூல் எழுதியிருக்கிறேன். அதில் விரிவான இலக்கிய அறிமுகமும் குறிப்பிடத்தக்க நூல்களின் பட்டியலும் உள்ளது. பாருங்கள்.
எழுதுவதென்பது மொழியில் உங்களை வைத்திருப்பது. ஆகவே தொடர்ந்து எழுதிக்கொண்டிருங்கள். எழுத்தை தானே பரிசீலித்து மேம்படுத்திக்கொண்டே இருங்கள். எழுத்தின் வடிவங்களையும் எழுதுவதன் முறைகளையும் கற்றுக்கொள்ளுங்கள்
நான் எழுதும்கலை என ஒரு நூல் எழுதியிருக்கிறேன். உதவியானதாக இருக்கும்
ஜெ
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

