Jeyamohan's Blog, page 880
November 19, 2021
கல்குருத்து -கடிதங்கள் 10
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்
மீண்டும் ஒரு ஆழமான அற்புதமான சிறுகதை.
அம்மியும் குழவியுமாக, இழைந்து இழைந்து வாழ்ந்து, இப்போது தேய்ந்து குழியானாலும் பழைய நினைவுகளின் கருப்பட்டித் தித்திப்பில் வாழ்ந்து கொண்டிருக்கும் கண்ணப்பனின் தாத்தா பாட்டியையும் அவர்களுக்கிடையில் இருக்கும் அந்த நினைவுகளின், உறவின், அன்பின் பிணைப்பையும் வாசிக்க வாசிக்க மனம் நிறைந்துகொண்டே இருக்கிறது. பல முறை வாசிக்கிறேன். ஒவ்வொரு முறையும் அழகம்மையை போலவே நானும் நிறைவாக புன்னகைக்கிறேன்.
ஒரு சிறுகதை, வாசிப்பு மனதிற்கு இத்தனை நிறைவையும், அமைதியையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும் என உங்கள் கதைகளை வாசிக்கும் முன்பு நான் நினைத்ததில்லை.
இரவில் அம்மிக்குழியில் நிலவு தேங்கி நீர்போல பளபளப்பது வாசிக்கையில் அத்தனை அழகாக இருந்தது. அந்த வயதான தம்பதிகளின் அத்தனை வருட இல்வாழ்க்கையை அந்த காட்சி அழகாக சொல்லி விடுகிறது
கதையை வாசிக்கையிலேயே மனம் அங்கிருந்து எப்படியோ தாவி அயினிப்புளிக்கறிக்கு போனது. ஆசானின் ஓலைக்கூரையிட்ட குடிசையில் கூரை வழியே சாணி மெழுகிய மண் தரையில் விழுந்துகிடந்த நிலவு வெளிச்சத்தை நினைத்துக்கொண்டேன்.
கிழவனும் கிழவியும் மட்டுமல்லாமல், இரவில் நெகிழ்ந்து கைவிரல்களை சொடக்கு எடுத்துவிடும், வெளிச்சம் வந்ததும் எரிந்துவிழும் கண்ணப்பனும் அழகம்மையும், மனைவியின் காப்பியையும் தான் வாங்கி குடிக்கும் தாணுலிங்கமும் காளியம்மையும் என்று இவர்களும் அம்மியும் குழவியுமாகத்தான் இருக்கிறார்கள். மேடுகள் சமமாகும் வரைதான் கரடும் முரடும் அதன் பிறகு ஒன்றோடொன்று இழையும் கனிவும் காதலுமாகிவிடுகிறது
அந்த பழைய அம்மியின் காலம் முடிந்து அது பயனற்றுப்போனாலும், வாழ்ந்த காலத்தின் நினைவுகள் அந்த குழியில் பளபளத்து தேங்கிக்கிடக்க இருவருமாக தமக்குள் பேசிக்கொள்வதும், காலடியில்அமர்ந்திருப்பதும் கிழவிக்கென்று கிழவர் இனிப்பு கேட்பதுமாக அழகான காதல்கதை.
அழகம்மை அன்று கல்லிலிருந்து அம்மியும் குழவியும் உருவாவதை பார்க்கிறாள், கன்று சொக்கி அகிடுமுட்டி பாலருந்துவதை மலர்ந்து கவனிக்கிறாள் தாணுலிங்கம் காளியம்மையையும் கவனிக்கிறாள், கல்லுக்குள் இருக்கும் கனிந்த இன்னொன்றை, ஒன்றுடன் ஒன்று இணைந்து வாழும் வாழ்வின் அர்த்தத்தை எல்லாம் அன்றுதான் அறிந்துகொள்கிறாள்
கண்ணப்பன் கல் மட்டுமல்ல அவனுக்குள்ளும் கனிந்து பளபளக்கும் அன்பிருப்பதையும், அக்குடும்பத்தின் வேர்களாக பெரியவர்கள் இருப்பதையும் உணரும் அவளுக்குள்ளும் முளைத்திருக்கிறது ஒரு கல் குருத்து.
அழகிய கதை அழகம்மையும் கண்ணப்பனும் கூட இப்படி ஒருவருடன் ஒருவராக இழைந்து தேய்ந்து குழியாகி பல ஆண்டுகள் வாழ்வார்களாயிருக்கும்.அந்த கருப்பட்டியின் தித்திப்பு கதையை மனதுக்கு நெருக்கமாக்கி விட்டது.
’’பழத்திலே இனிக்குததுதான் காயிலே புளிக்குது, இல்லேண்ணா கடுக்குது. புளிப்பும் கசப்பும் மூத்து கனிஞ்சா அது இனிப்பு…”
அயினிப்புளிக்கறியை மீண்டும் வாசிக்க வேண்டும்
அன்புடன்
லோகமாதேவி
அன்புள்ள ஜெ
கல்குருத்து அழகான கதை. பிரதமன், அயினிப் புளிக்கறி, என இத்தகைய கதைகளின் ஒரு வரிசையே ஞாபகத்துக்கு வருகிறது. எல்லாமே உறவின் நறுமணம் கொண்ட கதைகள். ஆனால் எவற்றிலுமே செண்டிமெண்ட் இல்லை. செயற்கையான சந்தர்ப்பங்களும் இல்லை. பிரதமனில் அந்தப் பாயசம் திரண்டு வரும் தருணம் போன்ற இனிமைதான் இந்தக்கதையிலும் அம்மி உருவாகும்போது உள்ளது. மனித உள்ளத்தில் அன்பு நிகழ்வும் உயர்ந்த நிலையை கலையால் சொல்லிவிட முடிகிறது. அதுதான் இந்தக்கதைகளை இத்தனை இனிமையானவையாக ஆக்குகின்றது
செல்வன் பிரகாஷ்
கல்குருத்து- கடிதம் -1 கல்குருத்து -கடிதம்-2 கல்குருத்து -கடிதம்- 3லொரென்ஸா டி மெடிசியும் கேதுமாலனும்
இமைக்கணத்தின் முன் பாகஙகளின் நரக வர்ணணைகள் தாந்தே அலிஜிரியின் டிவைன் காமெடி யோடும், கருட புராணத்தோடும் ஒப்பிட்டு படித்து பாருங்கள் என்று நண்பர்கள் சொன்னதை ஒட்டி தாந்தேயின் விண்ணோர் பாடலும், டான் ப்ரெளனின் இன்பர்னோவையும் படித்து கொண்டிருந்தேன்.
இன்பர்னோவில் லாங்டனும் , சியன்னாவும் ப்ளோரென்ஸின் நகர தெருக்களிலும், பபோலி தோட்டத்திலும், வாசரி தாழ்வாரத்திலும் , அதோடு வரலாற்றின் குறுக்கேயும், பொட்டிசெலி, மைக்கேல் ஏஞ்சலோ, Bernardo buotalenti, தாந்தே இவர்களின் படைப்புகளினூடாகவும் செல்லும் போது மெடிசி பற்றி பேராசிரியர் சொன்னதை தொடர்ந்து படித்தால், லொரென்ஸோ டி மெடிசியின் கலை தாகம், மறுமலர்ச்சியில் அவரின் பங்களிப்பு தன் செல்வங்களை கலைக்காக அர்ப்பணித்தது என்று வந்து கொண்டே இருக்கிறது.
மெடிசி பேணிய கலை பொக்கிஷஙகள் இன்றும் அமரத்துவத்தோடு இருக்கின்றன. அவர் பற்றிய டாக்குமென்டரிகள், இமைக்கணத்தின் கேதுமாலனை நினைவு படுத்துகின்றன. இருவரையும் ஓர் ஆழ்ந்த தாகம் அழகு , அழகு என்று தேடி தேடி செல்ல வைக்கிறது . கலை ஆர்வத்தின் பொருட்டு தன் வாழ்வைவே அர்ப்பணித்து வரலாற்றிலும், காலத்திலும் நிலை பெற்று ஒளிரும் மெடிசி அதன் வழியே மெய்மையை அடைந்தாரா என்று தெரியவில்லை. ஆனால் கிழக்கத்திய தத்துவ புலத்தில் மலரும் கேதுமாலன் அழகு வழியாக மெய்மையை, எது தூய அழகு என்பதை உணர்ந்து அருகராக மலர்கிறார்.
மெடிசி குடும்பம் மறுமலர்ச்சி கலையின் உருவாக்கத்திலும், மறுமலர்ச்சி ஓவியர்களை பேணியதிலும், களம் ஒருக்கி கொடுத்ததிலும் மிகுந்த தாக்கம் கொண்டது. ஆனால் மெடிசி குடும்பத்தில் நிகழ்ந்த கொடும் வன் முறைகள், நஞ்சூட்டல், அரசுசூழ்கையின் பெயரால் நிகழ்த்தப்பட்ட வஞ்சங்களும் அதே அளவு எதிர்மறை முக்கியத்துவம் வாய்ந்தவை. கிழக்கத்திய மனஙகள், கிழக்கத்திய சிந்தனைகள் ,கலைஞர்கள், கலை பேணுநர்கள் சிலர் தவிர்த்து கலையை ஆன்மீகமாக மாற்றிக்கொண்டு முன் நகர்ந்து தானே இருக்கிறார்கள்.
இப்படி ஒரு மகத்தான கலையை பேணி , வாய்ப்பளித்து அமரத்துவம் பெற்ற கலைகளின் பாதுகாவலன் கொலைஞனும் கூட என்பது மிகப்பெரிய முரணாக இருக்கிறதே… இதன் ஆரம்ப பிரச்சினை மேற்கத்திய தத்துவ மூலத்தில் இருந்து தானே துவங்கி இருக்க வேண்டும். இங்கு பாகுபலி, மகாவீரன் மிகுந்த அமைதியும் புல், பூண்டுக்கும் தீங்கிழைக்காதவர். மேற்கே அறிவு அணுகுண்டாகவும், வீரம் போர்வெறியாகவுமே தானே மாறி இருக்கிறது. கிழக்கின் ஆன்மீகவயமான அனுபவத்திற்காக இருக்கும் பல நுழைவுகளில் கலையும் ஒன்று. ஆனால் மேற்கிலும் அது அப்படி தான் பொருள் கொள்ளப்படுகிறதா?
ராஜமாணிக்கம்
November 18, 2021
விஷ்ணுபுரம்வட்டம் இணையதளம்
விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் என்னும் அமைப்பு 2009ல் உருவாக்கப்பட்டது. 2007ல்தான் என்னுடைய இணையதளம் நண்பர் சிறில் அலெக்ஸ் அதை ஒரு வலைப்பூவாக எனக்காக ஆரம்பித்தார். ஆனந்த விகடன் உருவாக்கிய ஒரு வம்புப்பரபரப்பால் அதன் வருகையாளர் எண்ணிக்கை பத்து மடங்காக ஆகியது. நாள்தோறும் வெளிவரத் தொடங்கியது. பன்னிரண்டு ஆண்டுகளில் தமிழில் முதன்மையான இலக்கிய இணையதளமாக உள்ளது.
நண்பர் லண்டன் முத்துக்கிருஷ்ணன், ஆஸ்டின் சௌந்தர் ஆகியோர் அதை நடத்துகின்றனர். நண்பர் திருமலை, நண்பர் மதுசூதனன் சம்பத் ஆகியோர் அதன் தொழில்நுட்பத்தை பராமரிக்கின்றனர். நண்பர் லஓசி சந்தோஷ் அதை பராமரிக்க உதவுகிறார்.
2009ல் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் என்னும் அமைப்பை உருவாக்கினோம். பொறுப்பாளர்கள் ஏதுமற்ற ஒரு இயல்பான நட்புக்கூட்டமைப்பு இது. 2010 முதல் விருதுகள் வழங்கி வருகிறோம். இவ்வாண்டு விருதுபெறுபவர் விக்ரமாதித்யன். விஷ்ணுபுரம் அமைப்பின் சார்பில் விஷ்ணுபுரம்- குமரகுருபரன் நினைவு இலக்கிய விருது வழங்கப்பட்டு வருகிறது. விஷ்ணுபுரம் இலக்கியவிழா கோவையிலும், விஷ்ணுபுரம் – குமரகுருபரன் இலக்கியவிழா சென்னையிலும் நிகழ்கிறது. ஆண்டுதோறும் ஊட்டியில் குருநித்யா நினைவு கவிச்சந்திப்பு நிகழ்கிறது. ஆண்டுக்கு மூன்று அல்லது நான்கு வாசகர்சந்திப்புகளும் இலக்கியவிழாக்களும் ஒருங்கிணைக்கிறோம்.
இந்நிகழ்வுகளை எல்லாம் சிறிய ஒரு நட்புக்குழுவே நடத்தி வருகிறது. விஷ்ணுபுரம் அமைப்புக்கு என ஓர் வலைப்பூ மட்டுமே இருந்தது. இப்போது நண்பர் மதுசூதனன் சம்பத் அவரே முயற்சி எடுத்து ஒரு முழுமையான இணையப்பக்கத்தை உருவாக்கியிருக்கிறார். விருது குறித்த அனைத்து தகவல்களும் அடங்கிய முழுமையான தளம் இது. கணிப்பொறியாளரான மதுசூதன் சம்பத் விஷ்ணுபுரம் நட்புக்குழுமங்களில் தீவிரமாகச் செயலாற்றுபவர்.
ஒருங்கிணைப்புக்கும் செயல்திறமைக்கும் புகழ்பெற்ற ஓர் இயக்குநர் என்னிடம் சொன்னார். “இத்தனை திறமையாக ஒருங்கிணைக்கப்படும் ஒரு அமைப்பு தமிழகத்தில் இல்லை. இவ்வளவு பிழையில்லாமல், உச்சகட்ட தீவிரத்துடன் ஓரு வணிக அமைப்பு செயல்படவேண்டும் என்றால் லட்சக்கணக்கான ரூபாய் செலவாகும்” நான் சொன்னேன். “ஆமாம், பல லட்சம் செலவாகும். அல்லது ஒரு ரூபாய் கூடச் செலவாகாது. இரண்டு எல்லைகளில் ஒன்றில்தான் இது நிகழும். இது தலைமை என ஏதும் அற்ற அமைப்பு. மையம் என ஏதுமற்றது. செயல்புரிய ஆர்வம் கொண்டவர் எவராயினும் வந்து செயல்படுவதற்கான களம்”
உலகம் முழுக்கவே இதை நாம் பார்க்கலாம். மிகப்பெரிய தொழில்-வணிக நிறுவனங்களில் முதல்தர நிபுணர்கள் இருப்பார்கள். அல்லது வெறும் இலட்சியவாதம் மட்டுமே கொண்ட அமைப்புகளில் , பணமே இல்லாமல் பணியாற்றும் நிபுணர்கள் இருப்பார்கள். உண்மையில் இரண்டாம் வகை அமைப்புகளிலேயே ஒரு படிமேலான கலையும் திறமையும் வெளிப்படும். பாண்டிச்சேரி ஆரோவில்லின் அச்சுத்தொழில்நுட்பத்தை கோடிக்கணக்கில் செலவிடும் நிறுவனங்களில் காணமுடியாது. தமிழிலேயே தன்னறம் நூல்களின் அச்சு- வடிவமைப்பை எந்த வணிக நிறுவனமும் அருகே நெருங்க முடியாது.
விஷ்ணுபுரம் அமைப்பும் அத்தகையதே. எங்கள் நிகழ்ச்சிகளின் ஒழுங்கு, ஒவ்வொன்றிலும் வெளிப்படும் துல்லியமும் தரமும் எனக்கே எப்போதும் வியப்பளிப்பது. ஒவ்வொரு முறையும் சிறுசிறு குறைகளை கண்டடைந்து சரிசெய்தபடியே செல்வோம். இத்தனைக்கும் ஒரு வணிக நிறுவனம் ஒரு சராசரி நிகழ்ச்சிக்குச் செலவிடும் தொகைதான் எங்கள் வருடாந்தர பட்ஜெட்டே. மதுசூதனன் சம்பத் போன்ற நிபுணர்களுக்கான களமாக இது இருப்பதனால், பிறர் அவர்களால் பயிற்றுவிக்கப் படுவதனால் இவ்வமைப்பு வெல்கிறது.
விஷ்ணுபுரம் விருந்தினர்-7, ஜா.தீபா
விஷ்ணுபுரம் விருந்தினர்-1, கோகுல் பிரசாத்
விஷ்ணுபுரம் விருந்தினர்-2, காளிப்பிரசாத்
விஷ்ணுபுரம் விருந்தினர்-3, எம்.கோபாலகிருஷ்ணன்
விஷ்ணுபுரம் விருந்தினர்-4, பா.திருச்செந்தாழை
விஷ்ணுபுரம் விருந்தினர்-5, சுஷீல்குமார்
விஷ்ணுபுரம் விருந்தினர்-6, செந்தில் ஜெகன்னாதன்
ஜா.தீபா பலமுகம் கொண்ட படைப்பாளி. முதன்மையாக ஆவணப்பட இயக்குநர். தாமிரவர்ணியின் தோற்றம் முதல் கடலணைவு வரை பதிவுசெய்து அவர் எடுத்த ஆவணப்படம் புகழ்பெற்றது. மரபணு மாற்றக் கத்தரிக்காய் பற்றிய ஆவணப்படம் குறிப்பிடத்தக்கது. ஜா.தீபா திரைப்படங்கள் பற்றி தொடர்ச்சியாக எழுதிவருகிறார்.தமிழ் ஒளிப்பதிவாளர்கள், திரைமேதைகள் பற்றிய அவருடைய அறிமுகக்கட்டுரைகள் நூல்களாகியிருக்கின்றன. பெண்களின் பிரச்சினைகளைப் பற்றி பேசுபவராக மேடைகளில் தோன்றுபவர். சிறுகதைகள் வழியாக சென்ற சில ஆண்டுகளில் பரவலாக இலக்கியக் கவனம் பெற்று வருகிறார்.
ஜா.தீபா கதைகள்
மறைமுகம் நீ நான் வாடைக்காற்று
விவாதங்கள்
நித்யமானவன், மறைமுகம் – கடிதங்கள்
நலமே வாழ்க, மறைமுகம் -கடிதங்கள்
துயரத்தைப் பருகும் பெண்களின் கதைகள்
நீலம்பூக்கும் திருமடம்- விமர்சனம்
வியனுலகு வதியும் பெருமலர்- கடிதங்கள்
வணக்கம் ஜே.
நீங்கள் என்னிடம் கூறியது போலவே வாசித்தல் என்னுள் ஒரு அகவயமான தேடலை உருவாக்கி விட்டது. நீங்கள் ஒருமுறை சொன்னது போல இலக்கியத்தை வாழ்க்கையாக பின்பற்ற விரும்பும் எவரும் அதற்காக அவர்களின் நேரத்தையோ அல்லது அது தொடர்பான பயணத்தையோ அல்லது அவர்களின் நேர்மையான பங்களிப்பை அதில் கொடுக்க முன்வரவில்லை என்றால் அவர்கள் அதை லட்சியமாக கொள்வதில் என்ன பயன் இருக்க போகிறது என்று. இந்த கேள்வியின் தொடக்கம் தான் நீங்கள் கலந்து கொண்டு சிறப்பித்த கவிஞர் இளங்கோ கிருஷ்ணனின் வியனுலகு விரிநீர் பெருமலர் புத்தக வெளியீட்டு விழாவிற்கு என்னை கொண்டு வந்து நிறுத்தியது என்று நினைக்கிறேன்.
இலக்கியம் சார்ந்து நான் கலந்து கொள்ளும் முதல் நிகழ்ச்சி. உங்களை சந்திக்கும் வாய்ப்பும் உங்களிடமிருந்து கையெழுத்தும் கிடைக்க பெறுவேன் என்று எதிர்ப்பார்க்கவில்லை ஜே. இன்னும் அந்த மகிழ்ச்சியின் உச்சத்தில் திழைத்துக் கொண்டே இருக்கிறேன். உங்கள் எழுத்துக்கள் போலவே சொற் பொழிவும் என்னை அதே உயிர்ப்புடன் கடத்திக் கொண்டே இருத்தது. அந்த புத்தகத்தின் தலைப்பில் துவங்கி புத்தகம் உள்ளடக்கிய ஒவ்வொரு களத்தையும் நீங்கள் வரையறுத்த விதம், நவீனத்தில் மரபு கலத்தலை சிம்லா உணவக மேசையில் வைத்திருக்கும் சிறிய இமயமலை கொடுக்கும் சிலிர்ப்புடன், தோட்ட கலைகளில் ஒன்றான ரப்பர் ஒட்டு கட்டுதலுடனும் மிக அழகாக தொடர்பு படுத்தி கூறியது, இப்படி நீங்கள் பேசபேச திரு.மனோ மோகன் அவர்கள் குறிப்பிட்டது போல நீங்கள் எங்கள் தமிழ் இலக்கிய உலகின் பீஷ்மர் என்பதில் ஐயமே இல்லை என்று தோன்றியது.
உண்மையில் உங்களின் பல புத்தக வெளியீட்டு விழா சிறப்புரைகளை வலைதளங்களில் பார்த்திருகிக்றேன். நேரில் காண வேண்டும் என்ற ஆசை என் நண்பர்கள் உதவியுடன் அன்று நிறைவேறியது. நீதி உணர்வை பிரதிபலிக்கும் கவிதைகள் யாவையும் அரசியல் கவிதைகளே என்ற உங்களின் பார்வை அனைவரும் ஏற்றுக்கொண்டு வழிமொழிய வேண்டியவையே. உணவு என்பது விற்பனைக்குரியதாக இல்லாமல் இருந்த பாலை வன பகுதிகளும் இஸ்லாமிய பண்பாடும் இருந்த சமூகம் அப்படியே மறைந்து விடாமல் இன்றும் லிங்காயத் எனும் பசவ சமூக மக்கள் உணவிற்கு விலை வாங்குதில்லை என்பதை அப்பகுதியில் இருந்து வந்தும் நான் அறியாமல் இருந்தது பெரும் வருத்தமளித்தது.
இன்றைய கவிதைகளில் சமக்கால தன்மையின் ஈர்ப்பு மற்றும் அழகு குறித்து நீங்கள் மேற்கோள் காட்டிய டச் ஸ்க்ரீன், நான்கு வண்ண மாத்திரை என தொடக்கம் முதல் முடிவு வரை உங்கள் சொற்கள் ஒவ்வொன்றும் ஒரு தாக்கத்தை உள்ளூர தந்துக் கொண்டே இருந்தது. நேரம் கடந்தும் ஒரு நிறைவான நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட மனநிறைவுடன் விடைப் பெற்றேன். உங்களை காண விழைந்ததுடன் மற்ற சிறந்த கவிஞர்களையும் இத்தனை இலக்கிய ஆர்வலர்ளையும் பார்க்க நேர்ந்தது என்னுள் ஏற்படுத்திய பூரிப்பிற்கு எல்லையே இல்லை. வாழ்வின் ஒரு நிறைவான நினைவான நாளாக என் மனதில் பதிந்து போனது.
என் முதல் நன்றிகுரிய அன்புள்ள ஜெவுக்கு அத்துணை நன்றிகள்
நீனா
அன்புள்ள ஜெ
நான் கவிதை விமர்சகன் அல்ல. வாசகன் மட்டுமே. கவிதையை அதன் உத்திகள் மொழியழகு எதற்காகவும் நான் வாசிப்பதில்லை. என் வாழ்க்கையைப்பற்றிய ஒரு சின்ன அதிர்வையாவது கவிதை தரவேண்டும், எனக்கு ஒரு புன்னகையையாவது விட்டுத்தரவேண்டும் என்று எதிர்பார்ப்பேன். அந்தவகையில் இளங்கோ கிருஷ்ணனின் வியனுலகு வதியும் பெருமலர் அற்புதமான ஒரு தொகுதி. உண்மையில் கவிதைக்கு இன்று கவிஞர்கள்தான் வாசகர்கள். கவிஞர்களுக்கு வெளியே உள்ள வாசகர்களுக்காக நாம் பரிந்துரைக்கத் தகுதியான கவிஞர்களும் கவிதைத்தொகுதிகளும் மிகச்சில தான். அவற்றில் சமீபத்தில் வந்த முக்கியமான நிகழ்வு இந்த தொகுதி
நீ ஒளிவதற்கு என் அன்பே
இடமா இல்லை?
ஆத்மாநாமுக்கு வாய்த்தது ஒரு கிணறு
தேடு
எங்காவது இருக்கும்
எங்காவது இருக்கும்
பத்தாவது மாயியில் இருந்து
பூமிக்குப் பாயும் வழியிலும்
ஒரு கிணறுண்டு அன்பே
என்னும் கவிதையிலுள்ள இருட்டுக்கும் கசப்புக்கும் பிறகு திரும்பவும் பக்கங்களை துழாவிக்கொண்டிருந்தபோது இந்தக் கவிதையை கண்டுபிடித்தேன்
உதிர்ந்த இலையில்
தன் மரணத்தை
பார்த்துக்கொண்டிருக்கிறது
மரம்
குனிந்து
அந்த மரத்தைப்
பார்த்துக்கொண்டிருக்கிறது
வானம்
இந்தக்கவிதை சரியான பதிலாக அமைவதுபோலத் தோன்றியது.
ஆர்.ராகவேந்திரன்
சென்னை கவிதைவிழா- கடிதங்கள்கல்குருத்து கடிதங்கள்-9
அன்புள்ள ஜெ
கல்குருத்து சிறுகதை வாசிக்க வாசிக்க அம்மி மற்றும் குழவிக்கல்லுடன் பாட்டாவும், கிழவியும் எவ்வளவு ஒன்றிப்போகிறார்கள் என்றுதான் தோன்றியது. கதையின் மையமாக நான்கு பகுதிகள் ஒன்று அம்மிக்கல் குழவிக்கல், இரண்டாவது பாட்டாவும் கிழவியும், மூன்றாவது கண்ணப்பனும் அழகம்மையும் நான்காவது மாடும் கன்றும் இடையே தாணுமலாயன் தம்பதியையையும் சேர்த்துக்கொள்ளலாம்.
அந்த பழைய அம்மிகல்தான் பாட்டாவும் கிழவியும் குடும்பத்தை சுமந்து ஓடி ஓடி கல்லும் தேய்நத கதை. புதிதாக வரும் அம்மிக்கல் புதிதாக திருமணம் செய்து வரும் கண்ணப்பன் அழகம்மை தம்பதியைக் குறிப்பது பளபளப்புடன் இனி குடும்பத்தை நடத்தப்போகும் தம்பதியினர். அம்மிக்கும் குழவிக்கும் இருக்கும் அன்னோன்யம் போன்றது பசுமாட்டிற்கும் அதன் கன்றுக்கும் இருக்கும் அன்னோன்யம் போன்றது அம்மியும் குழவியும் பேசும் மௌன மொழி போன்றது பாட்டாவும் கிழவியும் பேசிக்கொள்வது அம்மிக்கல்லுக்கு மேலே குழவிக்கல் சம்மந்தமில்லாமல் பொருத்தம் இல்லாமல் இருப்பது போல் தோன்றும். அவ்வாறுதான் பாட்டாவும் கிழவியும் பேசிக்கொள்வது. ஆனால் அவர்களிடமிருக்கும் அன்னோன்யம் அம்மியும் குழவியும் சேர்ந்து அரைத்துத்தந்த சுக்குப்பொடி போன்றது. இரண்டறக் கலந்தது. புது கல்லில் நீலம் பாரித்துவிட்டதா எனக் காத்திருப்பது போன்று மரணத்திற்கு காத்திருக்கும் பழைய அம்மிக்கல்லும் குழவியும் பாட்டாவும் கிழவியும் சித்திரம் மனதில் அப்படியே இருக்கிறது.
புதிது வந்ததும் பழையது தேவையில்லை குடும்பத்திற்கு அவ்வாறுதான் இவர்களும் ஒரு இடைசெருகல் போல் தெரிகிறார்கள் குடும்பத்தில். ஆனால் பசும்பாலில் இருந்து கறந்துவந்த புதுமணத்துடன் கசப்புடன் குடிக்கும் காபி போன்று பாட்டாவும் கிழவியிடமிருந்தும்தான் அழகம்மை புதுப்பொலிவு பெறுகிறாள். புதுப்பால் காபி கசப்பதுடன் மணமாக இருப்பது போன்று இவர்கள் இருப்பது கசப்பாக இருந்தாலும் அதை அவள் பாராமாக எடுப்பதில்லை. வயதானவர்கள் அந்த பழைய அம்மிகல்லும் குழவியும் போன்றவர்கள் அவர்களைத் தொடும்போது பச்சைக்குழந்தை மீது கைவைத்துவிட்டோமா என்றுதான் தோன்றும். அந்தளவு குழைந்து போனவர்கள். அம்மியும் குழவியும் போல் இந்தப் பாட்டாவும் கிழவியும் போல் இணைப்பிரியாமல் இருக்கதான் திருமணத்தில் அம்மி மிதிக்கும் சடங்கு இருக்கிறது போலும். கதை முழுவதும் ஊடும்பாவுமாக பொறுத்தி மிக ஆர்வமாக வாசிக்கத் தூண்டியுள்ளீர்கள். அருமையான கதைக்கு நன்றி.
அன்புடன்
ரா. பாலசுந்தர்
அன்புள்ள ஜெ
கல்குருத்து கதை முழுக்க வந்துகொண்டே இருக்கும் தாய்மையின் சித்திரங்கள் அழகானவை. அவை தான் கதைக்கு இன்னொரு இடத்தை அளிக்கின்றன. கல்லுக்குள் அம்மி இருப்பதுபோல அழகம்மைக்குள் மூன்று குழந்தைகள் இருப்பதை காளியம்மை சொல்கிறாள். அம்மை எந்த கல்லோ அதானே பிள்ளைக்கும் என்கிறாள். பால்குடிக்கும் கன்றுகுட்டி ‘பாய்ந்து அன்னையின் அகிடில் முகம் சேர்த்து முட்டி முட்டிக் குடிக்கத் தொடங்கியது. அதன் கடைவாயில் பாலின் நுரை எழுந்தது. பசு கண்சொக்கி குட்டியை நக்கிக்கொண்டிருந்தது’ என்ற வரி அழகமையின் மனம் ஏன் மாறுகிறது, ஏன் எல்லாவற்றையும் கனிவுடன் பார்க்க ஆரம்பிக்கிறாள் என்பதற்கான சான்று
சம்பத்குமார்
கல்குருத்து- கடிதம் -1 கல்குருத்து -கடிதம்-2 கல்குருத்து -கடிதம்- 3ஓராயிரம் பார்வை.. ஜா.தீபா
நீரின் நிறம் பழுப்பு தான் என்ற எண்ணம் வலுப்பட்டது. சந்தனத்தை நீர் உள்வாங்கும்போது கொண்டிருக்கிற நிறம் அங்கே எப்போதும் நிலைத்திருந்தது. நீரின் வண்ணத்தில் கவனம் கொண்டபோது தான் நதிக்குள் இழுபட்டேன். கால்களை நதியின் தரையில் உந்தி எழுந்தபோது எதிரில் தைப்பூச மண்டபம் தெரிந்து மறைந்தது. அதுகூட முழுக்கவுமே சந்தன நிறத்தைக் கொண்டது. மீண்டும் நீருக்குள் இழுபட்டிருந்தேன். அமலை போன்ற செடிகளும், மனிதர்களின் விசை கொண்ட கால்களும் தெரிந்தன. அவர்கள் நீந்துகிறார்கள். தேசலாய் கரையோரம் நின்றிருந்த மாடனும் தெரிந்தார். அந்த மாடனுக்கு என்னுடைய அப்பாவின் சாயல் இருந்ததை இத்தனை வருடங்களுக்குப் பிறகு இப்போது தான் முதன்முதலாகப் பார்க்கிறேன். மாடன் தண்ணீருக்குள் என்னையேப் பார்த்துக் கொண்டிருந்தார். மாடன் மறைந்து அப்பா மட்டுமே அங்கிருந்தார். பிறகு ஆனதை விழித்தபிறகு கோர்க்க முடியவில்லை. இவையுமே கூட கனவின் எச்சங்கள் தான். முழுமையல்ல.. முழுமையானதல்ல என்பதே கனவுகள். அந்த படித்துறையில் தான் அப்பா எனக்கு முதன்முதலாக நீச்சல் கற்றுத் தந்திருந்தார்.
அப்பா என்னுடைய கனவில் வந்தார் என்று அம்மாவிடம் சொல்லலாம் என்று தோன்றியது. இது போன்ற கனவுகளுக்கெல்லாம் அம்மா விதவிதமான காரணங்கள் வைத்திருப்பாள். அம்மாவை நோக்கித் திரும்பும் கால்கள் எப்போதும் சமையலறைக்கே சென்றிருக்கிறது. அங்கு ஒரு ஸ்டூலில் கேஸ் அடுப்பின் முன் அமர்ந்திருந்தாள். நிற்க இயலாத மூட்டு வலி அம்மாவை எந்நேரமும் அமரச் செய்திருந்தது.
“அம்மா …அப்பா கனவுல வந்தாரு”
“அப்பாவா? என்ன சொன்னாரு?”
“ஒண்ணும் சொல்லல..சும்மா வந்துட்டு போனாரு..திருநெவேலில கைலாசபுரம் ஆத்தங்கரையில அவரைப் பார்த்தேன்”
“அங்க ஏன் போனாரு?” என்றாள் அம்மா இயல்பாக.
“அது அவருக்கு பிடிச்ச இடம் தானே. அதனால தான் அங்க போயிருக்கணும்” என்றேன்.
இருக்கும் என்பதாய் தலையாட்டிக் கொண்டாள். அந்த நேரம் அம்மாவுக்கு அதை விட தேநீருக்காக சீவிய இஞ்சித்தோல்களை சிறிதும் மிச்சமில்லாமல் சேகரித்து குப்பையில் போட வேண்டியிருந்தது.
சுதந்தர உரிமை கேட்கப்பட்ட காலத்தில் பாரதியாரும், வ.உ சிதம்பரனாரும், வ. வே.சுப்ரமணியரும் மக்களிடையே அதே தைப்பூச மண்டபத்தில் உரைகள் ஆற்றியிருக்கிறார்கள் என்றும், பல ரகசியக் கூட்டங்கள் நடந்திருக்கிறது எனவும் அப்பா சொல்லியிருக்கிறார். வேறு சில ரகசியக் கூட்டங்கள் நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் அங்கு நடந்து கொண்டிருப்பதை சுவரில் கிறுக்கப்பட்ட கரித்துண்டுகள் சொல்லிக் கொண்டிருந்தன.
“அந்தக் கைலாசபுரம் ஆத்துக்கரையில் தானம்மா மாடன் கோயில் இருக்கு”
“ம்..ஏன்? உங்கப்பா உன்னை அங்கப் போகச் சொன்னாரா?”
“இல்ல..அந்த மாடன் முகத்தைப் பார்த்தா அப்பா முகம் மாதிரியே இருந்தது”
“இருக்கும்..இருக்கும்..எனக்கும் கூட அவரு கோபத்துல கண்ணை உருட்டி உருட்டி என் முன்னாடி நிக்கும்போது அவர் மேல மாடன் இறங்கின மாதிரி தான் தோணும்” என்றாள் கையில் தேநீரைத் தந்தபடி. இத்தனை எளிதாய் என் கனவுக்குள் அம்மா புகுந்து வருவாள் என்று எதிர்பார்த்திருக்கவில்லை. அப்பாவின் கோபம் மாடனின் கண்கள் போல எப்போதும் சுருங்காதது. ஒருவர் ஒரே செயலை அடிக்கடி செய்து கொண்டிருந்தால் வருகிற இலாவகம் அப்பாவின் கோபத்தில் உண்டு.
அப்பா எங்களை விட்டுத் தவறிய இந்த முப்பது நாட்களில் அவர் எங்கள் உரையாடல்களில் வார்த்தைகளாய் மாறியிருந்தார். அப்பாவின் நீட்சியான எனது மனமும் உடலும் சிறிது சிறிதாக அவராகவே மாறிக் கொண்டிருக்கிறார் போலத் தோன்றியது. அவர் குறித்து பேசுந்தோறும் அவை துடித்ததபடி இருந்தன.
மிக அமைதியான விடைபெறல் அவருடையது. யாருக்கும் எந்த யூகத்தையும், அறிவிப்பையும் தராமல் அதிகாலைத் தூக்கத்தில் மரணித்திருந்தார். அவரின் குளிர்ந்த கைகளையும் விறைத்துப் போன விரல்களையும் நீவிவிடுகையில் நான் அழவில்லை. வியப்பாய், உள்ளுக்குள் அமைதியை உணர்ந்தேன். என் முன் ஒரு பெரும் வாழ்க்கையின் களைப்பைத் தீர்த்துக் கொண்ட ஒருவர் துயிலுருவதைப் பார்த்தபடி அமர்ந்திருந்தேன். அப்போது ஜன்னல் வழி வெளிச்சத்தில் என் நிழல் அவர் மேல் விழுந்திருந்தது.
அந்த நிழலை அவரோடு அனுப்பி வைத்திருந்தால் என்ன?
“அம்மா அப்பாவைத் தேடுது”
“அதனால தான் கனவுல வந்திருப்பாரு. உனக்கு அங்க தான நீச்சல் கத்துக் குடுத்தாரு..”
நான் கண்ட கனவினை அம்மா உள்ளுக்குள் இத்தனை நேரம் கட்டி எழுப்பி அர்த்தம் கண்டு கொண்டிருந்தாள் என்பது அவள் முகத்தின் தீவிரம் சொன்னது.
“ரொம்ப பிரியமனாவங்க யாரோ அவங்க கனவுல தான் இறந்தவங்க வருவாங்களாம்”
“உன் கனவுல வந்தாராம்மா?” என்றேன்.
அம்மா என் கையில் இருந்த காலியான டம்ப்ளரை ஸ்டூலில் இருந்து சிரமப்பட்டு இறங்கி வந்து வாங்கிப் போனாள்.
வாசல் பகுதியில் இருந்து குரல் கேட்டது. “பாட்டி…பாட்டி…”என்று அங்கிருந்து தடதடவென்று ஓடிவந்தான். அவன் முகம் பரவசமும், எதிர்பார்ப்பும் கொண்டிருந்தது. “பாட்டி..பிஸ்கட் வேணும்..உப்பு பிஸ்கட் இருக்கா?” என்றான். அவன் கால்கள் ஒரு சேர தரையில் நிற்கவில்லை. அப்பா உப்பு பிஸ்கட்டின் ரசிகர்.
“உப்பு பிஸ்கட் காலியா?” என்றான் அவனே ஒரு டப்பாவைத் திறந்து பார்த்து. “இப்ப தாத்தாவுக்கு என்ன கொடுக்கறது?” என்றான் பரணி.
“எந்தத் தாத்தாவுக்குடா?”
“என்னோட தாத்தாவுக்குத் தான். அவர் வாசல்ல வந்து நிக்கறாரே” என்றான். நானும் அம்மாவும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டோம். இரண்டு நாட்களாய் அவன் இப்படித் தான் ஏதேனும் சொல்லிக் கொண்டிருக்கிறான். ‘என் கூட வர்றீங்களா..தாத்தாவைக் காட்டட்டுமா” என்றான் என்னிடம் முந்தைய நாளின் மதியப் பொழுதில். நான் அவனுடன் போகவில்லை. ஏழு வயதுக்கு அவனுடைய கற்பனைத்திறனைக் கண்டு நாங்கள் எப்போதும் வியப்போம். என் அண்ணன் வாசித்த கதைகளின் தொகுப்பு போல அவன் மகன் பரணி யாவற்றுக்கும் எதையும் பதிலாக இல்லாமல் கதையாகவே சொல்லிப் பழகியிருந்தான். அடுத்தத் தெருவில் அண்ணன் வீடு. என் அப்பாவுக்கு சரியான சிநேகிதன். பல நேரங்களில் இருவரும் கோதாவில் சந்திக்கும் வீரர்களும் கூட.
“பாட்டி காசு குடுங்க..கடையில போய் நானே உப்பு பிஸ்கட் வாங்கிட்டு வர்றேன்..தாத்தா காத்துட்டு இருக்காரு” என்றான் பிடிவாதமாக. அவன் முகத்தின் தீவிரம் கண்டு நானும் அம்மாவும் சிரித்துவிட்டோம். “உனக்கு பிஸ்கட் வேணும்னா கேளேண்டா..எதுக்கு எதையோ உளர்ற? “ என்றாள் அம்மா. நானும் அதற்கு சிரித்து வைத்தேன், அவன் புருவம் சுருக்கி இடுப்பில் கை வைத்தான். அவன் கோபம் கொள்ளும் தருணத்தின் வெளிப்பாடு அது. எங்கள் இருவரையும் ஒரு பெரிய மனுஷத் தோரணையோடு பார்த்தான். ஒரு நொடி அவன் முகச்சாயலில் கனவின் மாடனும், என் அப்பாவும் வந்து போனார்கள். . அவனை சரிசெய்ய வேண்டி, “தாத்தா ஞாபகம் வந்துருச்சா? இங்க வாடா கண்ணா..” என்றதும் அவனுடைய அகம் கிளறப்பட்டுவிட்டது. “ஒண்ணும் வேண்டாம்” என்று போய்விட்டான்.
ஒரு ஆர்வம் ஏற்பட்டது. பெரும்பாலான நேரம் என் அப்பாவுடன் தான் பொழுதைக் கழித்தான். இருவருமாக தொலைகாட்சிக்கு சண்டை போடுவார்கள். சில நொடிகளில் இருவரும் ஒரு மான் புலியால் துரத்தப்படுவதை புலியின் மனநிலையில் இருந்து பார்த்துக் கொண்டிருப்பார்கள். இப்போது தான் தோன்றுகிறது, பரணி என் அப்பா இறந்த அன்றும் பிறகும் கூட அழவேயில்லை. உறவினர்களும், நண்பர்களுமாய் ஒவ்வொருவராய் வர, அவர்கள் மேல் கவனம் கொண்டிருந்தான். ‘உங்க தாத்தா உன்கிட்ட தானடா பிரியமா இருப்பாரு’ என்று யாரேனும் அவனைத் தன பக்கம் இழுக்கும்போது தன்னை விடுவித்துக் கொண்டு அவன் விலகிய காட்சி இப்போது தோன்றுகிறது. அவன் அன்றைய தினத்தில் இருந்து விடுபட நினைத்திருக்கிறான். எல்லாவற்றிலும் இருந்து அவன் தன்னை கழற்றிக்கொள்ள முயன்றிருக்கிறான். நாங்கள் எல்லோரும் எங்களுக்கும் அப்பாவுக்குமான உறவையும், பரிவையும், சண்டையையும், சமாதானங்களையும் நினைத்தும் பேசியும் உள்ளே ஒன்றுமில்லாமல் ஆகிக்கொண்டிருக்கையில் அவனை அழைத்துப் பேச நாங்கள் மெனக்கிடவில்லை. அப்படிப் பேசிய சொற்ப சந்தர்ப்பங்களையுமே கூட அவன் புறக்கணித்திருந்தான்.
பரணியிடம் பேச வேண்டும் போல் இருந்தது. அவனைத் தேடிக் கொண்டு போனபோது வீட்டின் சுற்றுசுவருக்கு அப்பால் குத்துகாலிட்டு சாலையின் ஓரம் அமர்ந்திருந்தான். அவன் எதிரே ஒரு நாய் படுத்திருந்தது. அது தன் கழுத்தையும் முகத்தையும் பரணியை நோக்கி நீட்டியிருந்தது. பரணி எதைச் சொன்னாலும் மறுக்காத ஒரு சேவகனின் உடல்மொழி அதற்கு.
“பரணி இங்க என்னடா பண்றே? வா கடைக்குப் போகலாம். என்ன பிஸ்கட்டோ வாங்கிக்கோ”
“அந்த நாய் நான் வந்ததும் என்னருகில் வந்தது. முகர்ந்தது.
“உன் புது பிரெண்டா?”
“இல்லை..என்னோட தாத்தா” என்றான். அவன் முகத்தின் தீவிரம் இதற்கு முன்பு கண்டிராதது.
நாய் தன் வாலை வேகமாக ஆட்டியது.
“இதைத் தான் தாத்தனு சொல்லிட்டு இருக்கியா? சரி தான்”
“இது நம்ம தாத்தாவே தான். இறந்தவங்க காக்காவாவும், நாயாவும் வருவாங்கன்னு உங்களுக்குத் தெரியாதா?”
“அப்படியெல்லாம் இல்லடா”
“அப்படித் தான்” என்றான்.
பேச்சை மாற்ற வேண்டி “வா கடைக்குப் போகலாம்” என்றேன்.
“வேண்டாம்..” என்றான். சுற்றுசுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த அவன் சைக்கிளில் ஏறினான். அந்த கருப்பு நாய் வாலை ஆட்டிக் கொண்டு எங்கள் இருவரிடையே நின்றது. என்னருகே வருவதா, அவனுடன் செல்வதா என்ற குழப்பம் கொண்டிருந்தது. பரணி சைக்கிளை அழுத்தத் தொடங்கியதும் என்னைத் திரும்பிப் பார்த்துவிட்டு அவன் சைக்கிளின் பின்னால் ஓடியது. என்ன காரணமோ அவர்கள் பின்னாலேயே நானும் சென்றேன். ஓடிய நாய் நின்றது. திரும்பிப் பார்த்தது. என்னை நோக்கி வந்தது. மீண்டும் என்னை முகர்ந்தது. திரும்ப பரணியின் சைக்கிளின் பின்னால் ஓடியது.
பரணி அவன் வீட்டு வாசலில் சைக்கிளை நிறுத்தினான், நாய் தன வாலாட்டலை நிறுத்தவில்லை. அதோடு ஒரு வித பரபரப்பில் முன்னும் பின்னும் நடந்து கொண்டிருந்தது.
பரணியின் கண் கொண்டு பார்த்தால் என் அப்பா பரபரப்படையும் பொது கொண்ட உடல்மொழியை அந்த நாய் நினைவுபடுத்தியது.
அவனுடைய சைக்கிளைப் பிடித்தபடியே அந்த நாயைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
“நீங்க நம்பலியா?” என்று அவனே பேச்சைத் தொடங்கினான்.
அவன் கேக்கும்போதும அந்த நாயையே பார்த்தபடி இருந்தேன். அது தன பரபரப்பை விட்டு எங்களருகில் வந்து நின்றது. மீண்டுமொரு முறை என்னை முகர்ந்து பார்க்கத் தொடங்கியது.
“நம்ம தாத்தா இறந்ததுக்கு மறுநாள் இந்த நாய் வந்தது. தாத்தா வீட்டு வாசல்ல தான் படுத்தே இருந்தது. நம்ம வீட்டையே பார்த்துட்டு இருந்தது. எது கொடுத்தாலும் அது சாப்படவே இல்ல”
“ஓ”
நாய்க்கு தன்னைப் பற்றிய பேச்சு என்று தெரிந்திருக்க வேண்டும். சைக்கிளின் கீழ் எங்கள் இருவருக்கும் இடையில் இன்னும் நெருக்கமாக வந்து நின்றது. எங்கள் இருவரின் முகத்தையும் மாறி மாறிப் பார்த்தது. வீட்டில் வளர்க்கப்படும் நாய்கள் மட்டுமே கொண்ட குணம் இது. தெருவில் வளரும் நாய்களுக்கு மனிதர்களின் உரையாடல் ஒரு பொருட்டேயல்ல. விதவிதமான் மனிதர்களின் ஒலிகளை கேட்டு அடைந்த சலிப்பாக இருக்கலாம். ஆனால் இந்த நாய் எங்களைக் கூர்ந்து கவனித்தது.
“தாத்தா கூட இப்படித் தான நாமள்லாம் பேசும்போது நம்ம முகத்தையே பார்த்துட்டு வந்து நிப்பாரு” என்று நான் சொன்னதும் அவன் சொல்லை நம்புகிறேன் என்பதான உற்சாகத்தை பரணிக்குக் கொடுத்தது.
“நான் தான் சொல்றேன்ல..சும்மா சொல்றேன்னு நினைச்சீங்களா எல்லாரும்?..இப்பப் பாருங்க என்றவன் “தாத்தா இங்க வாங்க” என்றான்.
என் கண் முன் அதிசயம் போல அந்த கருப்பு நாய் பரணியின் அருகில் நின்று அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தது. அவன் இடும் கட்டளைக்கு காத்திருந்ததை அதன் கண்கள் சொல்லின. பரணி சொல்லப்போவதை அடுத்த கணமே செய்யத் துடிக்கும் பரபரப்பை அது தன் கால்களில் காட்டிக் கொண்டிருந்தது. காதுகள் நீண்டு பரணியை நோக்கி திரும்பியிருந்தன.
அதன் கரிய நிற உடலில் கழுத்தில் இருந்து புறப்பட்ட வெள்ளை நிறம் அதன் வலது காலுக்கு இறங்கியிருந்தது. வயிறு நன்றாய் உள்ஒடுங்கிய தோற்றம். எல்லாமே நாய்க்கு உரிய இலட்சணங்கள் தான். ஆனால் அதன் பார்வையில் மட்டும் ஏதோ வித்தியாசம் தெரிந்தது, அலல்து தெரிந்தாற்போல் தோன்றியது.
பரணி அதனிடத்தில் வாஞ்சையுடன் சொன்னான். “இங்கேயே இருக்கணும். நான் போய் உப்பு பிஸ்கட் வாங்கிட்டு வர்றேன்”
அது சட்டென தன் காதுகளை தணித்தது. அதவாது செவிமடுத்தது. தன் நான்கு கால்களையும் பரப்பி தரையோடு தரையாக படுத்துக் கொண்டது. ஒரு சரணாகதி போல. அது தற்செயலென என்னால் சொல்ல இயலவில்லை. இதெல்லாம எங்களுக்குள் சகஜம் தான் என்பது போல பரணி என்னைப் பார்த்தான். “வாங்க கடைக்குப் போகலாம்” என்றான். நான் காசினைக் கொடுத்து அவனை மட்டும் அனுப்பி வைத்தேன்.
நாய் அதே நிலையில் பரணி சென்ற திசை பார்த்துப் படுத்திருந்தது. பரணி வரும்வரையிலும் அப்படியே தான் இருக்கும் போல இருந்தது. எதற்காக இதனுடன் தனித்து இருக்க விரும்பினேன் என்று தெரியவில்லை. ஒரு விளையாட்டு போல அதனை நோக்கி, “அப்பா” என்று அழைத்தேன். அது நொடியும் தாமதிக்காமல் என்னைத் திரும்பிப் பார்த்தது. உள்ளுக்குள் தூக்கி வாரிப்போட்டது.
இல்லை..இது தற்செயல்..என்னிடத்தில் இருந்து எந்த சொல் வந்திருந்தாலும் அது என்னைத் திரும்பிப் பார்த்திருக்கும்.
சோதிக்க விரும்பி, “சீசர்” என்றேன். ஒரு தீபாவளி நாளில் மழையில் நனைந்து கிடந்த தெருநாயின் குட்டியினை எடுத்து வளர்த்தோம். அப்போது எனக்கு ஐந்து வயது. அதன் பெயர் சீசர்.
நாய் என்னையே பார்த்தது.
நாயின் கவனத்தை வேறெங்கேனும் அனுப்பி மீண்டும் அழைக்கலாம் என்று தோன்றியது.
சும்மாவேனும் ‘ச்சூ..போ’ என்று யாரையோ பார்த்து சொல்வது போல கைகளை ஆட்டினேன். நாய் என்னிடத்தில் இருந்து கவனத்தை எங்கும் திருப்பவில்லை.
அது என் மேல் முன்னிலும் கூர்மையான பார்வையை செலுத்தியது. ஒரு கண்டிப்புடன் என்னைப் பார்க்கிறதோ, “நீ என்னை சோதிக்கிறாயா?” என்கிறதா?
நான் அமைதிய்டோன் அதைப் பார்த்துக் கொண்டிருக்க,அ துவும் என்னையே பார்த்தபடி அமர்ந்திருந்தது. அதன் உடல் அபப்டியே படுத்திருக்க, கண்களும், முகமும் மட்டும் உயர்ந்து என்னைப் பார்ததிருந்தது. இப்போது கூர்மை தணிந்து அதன் பார்வை சகஜமாயிருந்தது.
அதனுடனான சோதனையை இன்னும் கூர்படுத்த விரும்பினேன். என்னுடைய மொபைலில் அப்பாவுக்குப் பிடித்த ஒரு பழைய பாடலைத் தேடி ஒலிக்கவிட்டேன்.
“துயிலாத பெண்ணொன்று கண்டேன்..”
ஏ.எம் ராஜாவும் பி.சுசிலாவும் வலது காலில் வெள்ளை கோடு கொண்ட கருத்த நாய் ஒன்றிற்காகவே பாடுவது போல உருகிக் கொண்டிருந்தனர். ஏனெனில் நான் சோதிக்கும் மனதுடன் இருக்க, நாய் நீட்டிய காலின் மேல் கண்களை மூடி படுத்திருந்தது. அதன் காதுகள் உயர்ந்திருந்தன. சிறு பூச்சியை விரட்டுவது போல காதுகள் மெல்ல அசைந்து கொடுத்தன. அது ரசிப்பின் லயத்தில் உள்ளதோ..அது புன்னகைக்கிறது என்று கூட தோன்றியது. ‘இந்தக் கண் தந்த அடையாளம் போ…..தும்” எனுமிடத்தில் ஆஹா என்று சொல்லிவிடுமோ என அதையேப் பார்த்துக் கொண்டிருந்தேன். அது கண்களை மூடியபடி இருந்தது. பாட்டினை நிறுத்தினேன். அது அபப்டியே கண்மூடி இருந்தது. அதன் மூடிய கண்களையே பார்த்துக் கொண்டிருந்தேன். உள்ளுக்குள் சிறு அசைவு தெரிந்தது. அது மெதுவாகக் கண்களைத் திறந்து என்னைப் பார்த்தது.
இந்த மதிய வேளையில் யாருமற்ற தெருவில் ஒரு நாயுடன் என்ன பேசுவது என்று திண்டாடிக் கொண்டிருக்கிறேன். முந்தைய நிமிடங்கள் வரை இபப்டியான ஒரு செயல் நிகழும் என யோசித்திருக்கவில்லை.
“நீங்கள் என்னுடைய கனவில் வந்தீர்கள்? என்னவோ சொல்ல வந்தீர்களா? உண்மையிகுள் இது நீங்கள் தானா?” என்று கோர்வையாக இல்லாமல் எண்ணங்களாக உரையாடல் தொடங்கியிருந்தது. அதிசயம் போல நாய் என்னையே பார்த்தது. அதன் கண்கள் கூட பளபளப்பாக மாறியதோ என்ற எண்ணம் வந்தது. நீரின் மெல்லிய அசைவா அது என்று கண்களையே பார்த்தேன். ஒரு நாயின் கண்களை இப்படிப் பார்ப்பது இது தான் முதன்முறை.
அந்த நாய் தன் உடலை அசைத்தது. மெதுவாக எழுந்தது. சோம்பல் முறித்தது. என் காலருகில் வந்து நின்றது.
அதைத் தொட்டு தடவவேண்டுமாய் தீர்மானம் உள்ளுக்குள் உருவானது. அதனை நோக்கி கைகளை நீட்ட, அது முகர்ந்து பார்த்தது. கால்களை ஒட்டியபடி நின்ற அதன் நெற்றியைத் தான் முதலில் தொட்டேன். மெதுவாக தடவிக் கொடுத்தேன். விலங்குகளின் கழுத்தைத் தடவினால் அதற்கு மிகப்பிடிக்கும் என்பார் என் அப்பா. இப்படி நான் நினைக்கையில் அது தன் கழுத்தை என்னை நோக்கி நீட்டியது. அதன் கழுத்துப் பகுதியை வருடிக் கொடுத்தேன். அது என்னையே பார்த்தது. அந்த மினுமினுக்கும் கண்களின் கருணை கொண்ட பார்வை என்னை நெகிழ வைத்தது.
“என்னப்பா” என்றேன் என்னையுமறியாமல்.
அது முதன்முதலாக குரல் கொடுத்தது.
மெல்லிய குரல். “ஒவ்’ என்றது.
உடல் சிலிர்த்தது. பின்னர் அதிரத் தொடங்கியது. யாரேனும் கூட இருக்க வேண்டும் போலத் தோன்ற திரும்பிப் பார்த்தேன்.
என்ன நடந்து கொண்டிருகிறது என எவரேனும் கூட அறிய வேண்டுமாய்ப்பட்டது.
நாய் கால்களை சுற்றி வந்து முகத்தையே நிமிர்ந்து பார்த்தது.
என்னுடல் அதிர்ந்தபடி இருப்பதை உணர்ந்தேன்.
“எனக்கு பயமாக இருக்கிறது” என்றேன் அதனிடத்தில்.
அதன் கண்களின் மினுமினுப்பு மறைந்தது. வெற்றுப்பார்வை பார்த்தது.. அந்த பார்வை என்னை என்னவோ செய்தது.
“தண்ணியைப் பார்த்து பயப்படாத..நான் இருக்கேன்ல..கையையும் காலையும் மட்டும் அசைக்கனும்..மீதியை தண்ணீர் பார்த்துக்கும் ..பயப்படாத” இது தான் என்னுடைய அப்பா முதன்முதலில் நீச்சல் சொல்லிக் கொடுத்தபோது எனக்கு சொன்னது. அவரது குரலும், நதியின் ஒலியும், நீரின் ஓட்டமும் துல்லியமாய் என்னைச் சுற்றி நிறைந்தது. நான் நின்று கொண்டிருபப்தே நீருக்குள் தான் என்பது போல ஒரு உணர்வு.
நாய் இரண்டடி திரும்பிப்பார்க்காமல் அப்படியே பின்நகர்ந்தது.
நான் அதையேப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
அது தெருமுனை வரை சென்றதைப் பார்த்தேன், ஒரு சாட்சி போல நின்றிருந்தேன். அந்தத் தெருவில் அப்போது வரை நடமாட்டம் எதுவுமில்லாமல் இருந்தது. நாய் மறைந்ததும் வயதான ஒருவர் சைக்கிளின் பின்னால் கூடையில் எதையோ வைத்துக் கொண்டு சென்றார்.
நடுரோட்டில் எந்த இலட்சியமும் இல்லாமல் நான் நின்று கொண்டிருப்பதை பார்த்தபடியே போனார்.
பிறகு ஒரு பைக்கில் தம்பதியினர் சென்றனர். அந்தப் பெண்ணின் கைகளில் குழந்தை தூங்கிக் கொண்டிருந்தது.
பரணி வந்து சேர்ந்தான்.
வந்ததும் நாயைத் தேடினான்.
“அது போயிடுச்சு” என்றேன். அவன் ஒருகணம் என்னை நம்பமுடியாமலும், சந்தேகத்துடனும் என்னைப் பார்த்தான். அந்த சந்தேகம் நாய் மேல் எழுந்ததல்ல, என் மேல் என்பது எனக்குத் தெரிந்தது.
“இங்கேயே இருக்கணும்னு சொன்னேனே” என்றான்.
“தெரியல… போயிடுச்சு”
“நான் போய்த் தேடிக் கூட்டிட்டு வர்றேன்”என்று சைக்கிளை அழுத்தினான்.
அப்பா இனி பரணியின் கனவுகளில் மட்டுமே வருவார் என்று அப்போது உறுதியாகத் தோன்றியது.
தினகரன் தீபாவளி மலர்
November 17, 2021
அழகிலமைதல்
அன்புள்ள ஜெ.
நலம் விழைகிறேன்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு நாராயணகுருகுலம்.வர்க்கலா சென்றேன்.(உங்களின் எழுத்துக்களை படித்துத்தான்) குரு முனி நாராயணபிரசாத்,சுவாமிதம்பான்,மற்றும் சில துறவிகளுடன் உரையாடினேன். நடராஜகுரு சமாதி மற்றும் அங்குள்ள நூலகத்தை பார்வையிட்டேன். அங்குள்ள புகைப்படம் ஒன்றை பார்த்தேன்.அது என்னை கவர்ந்தது.அது என்ன என்று கேட்டேன். அங்குள்ள துறவி ஒருவரிடம்.அது ஸ்ரீ சக்ரம் என்றார்.நித்யா நடராஜகுருவின் சவுந்தர்ய லஹரியைபடித்துக்கொண்டிருந்த நாளில் ஸ்ரீ சக்ரம் அவரின் கனவில் வந்ததாகவும் அதை அவரது அமெரிக்க மாணவரை கொண்டு வரைய சொன்னதாகவும் சொன்னார்.
மேலும் சவுந்தர்ய லஹரியை நீங்கள் படியுங்கள்.இந்த இடம் நடராஜகுருவின் சமாதி உள்ள இடம்.அவரின் வாக்காகவே எடுத்துக்கொள்ளுங்கள் இதை என்றார்.அன்றிலிருந்து இன்றுவரை சவுந்தர்ய லஹரி குறித்த சிந்தனைதான் என்னிடம்.ஆனால் என்னால் வாங்க இயலவில்லை அப்புத்தகத்தை. இப்போதுதான் வாங்க போகிறேன். (கொல்லூர் சென்று வந்தேன்)இதெல்லாம் ஆன்மீக அனுபவ பயிற்சி பெற உதவும் நூல்கள்.இது இவ்வாறுதான் அதற்குரிய நேரத்தில்தான் வந்தடையுமா?
சற்று அறிவுறுத்த முடியுமா?
நன்றி
க.சிவராமகிருஷ்ணண்.
சென்னை.
அன்புள்ள சிவராம கிருஷ்ணன்,
அத்வைதம் ஒரு முழுமைத்தரிசனம். மானுடம் அறிந்த ஞானங்களில் அதுவே முதன்மையானது. அனுபவம் என கொண்டால் அதுவே மானுடர் எய்தும் பெருநிலைகளில் அறுதியானது. ஆனால் அது அறிவார்ந்து, தர்க்கபூர்வமாகவே விளக்கப்படுகிறது. தனக்கான கலைச்சொற்களுடன் தத்துவார்த்தமாகவே இங்கே திகழ்கிறது. அதை ஓர் அறிவுத்தரப்பாக, ஒரு தர்க்கமுறையாக மட்டுமே பலர் அறிந்திருக்கிறார்கள்.
அத்வைதம் போன்ற அடிப்படையான மெய்மைத்தரிசனங்களுக்கு உள்ள சிக்கல் இது. அத்வைதத்தின் சாராம்சத்தை எவருக்கும் ஐந்து நிமிடத்தில் சொல்லிவிடமுடியும். ஐந்து அடிப்படையான சொற்றொடர்களால் [ஆப்தமந்திரங்களால்] வரையறை செய்துவிடவும் முடியும். அதை தர்க்கபூர்வமாக அறிவுக்குமுன் நிறுவவேண்டும் என்றால்தான் மிக விரிவான தத்துவக்கட்டமைப்பு தேவைப்படுகிறது. இதுவல்ல இதுவல்ல [நேதி நேதி] என மறுத்து மறுத்துச்செல்லவேண்டியிருக்கிறது. இது, இவ்வாறு, பிறிதல்ல என்று நிறுவவேண்டியிருக்கிறது.
அவ்வாறு நிறுவப்பட்டபின்னர் அது ஒரு மறுக்கமுடியா அறிவுநிலைபாடாக பேருருக்கொண்டு நம் முன் நிற்கிறது. அத்வைதத்தை முழுமையாக அறிந்துகொள்வது என்பது வழி உசாவி, அலைந்து திரிந்து, களைத்து மலையின் அடிவாரம் வரைச் சென்றுசேர்வதுதான். மலையேற்றம் அங்கிருந்துதான் தொடங்கவேண்டும்.
மலை நமக்கு திகைப்பளிக்கிறது. அப்படி ஒன்று திட்டவட்டமான இருப்புடன், வானளாவும் பேருருவாக அங்கே இருப்பது நமக்கு பெரும் பரபரப்பை அளிக்கிறது. ’இதோ இங்கிருக்கிறது, நான் கண்டேன், எனக்குத் திட்டவட்டமாகத் தெரியும்’ என நாம் கூச்சலிட ஆரம்பிக்கிறோம். நாம் அடைந்த அந்த நீண்ட வழிப்பயணத்தை மேற்கொள்ளாமல் எவரும் அங்கே வந்து சேரமுடியாது என்பதை நாம் எண்ணுவதில்லை.
இந்த பரபரப்பிலேயே பெரும்பாலான அத்வைதிகளின் வாழ்க்கை போய்விடும். அவர்கள் அத்வைதத்தின் மாபெரும் தர்க்க அமைப்பில் சிக்கிக் கொண்டவர்கள். பேசிப்பேசியே அழிவார்கள். அத்வைதத்தை தத்துவமாக அறிந்துகொள்ளும் ஒருவர் இவ்வுலகிலுள்ள அனைத்துக்கும் தத்துவ விளக்கம் அளிக்கமுடியும். சோறு முதல் சங்கீதம் வரை எதையும் பேசமுடியும். ஒருவகையான மேட்டிமைத்தனம் உருவாகும். இதையே ‘திண்ணைவேதாந்தம்’ என நம் முன்னோர் நையாண்டியாகச் சொன்னார்கள்.
அத்வைதத்தைக் கற்பிக்கும் ஆசிரியர்கள் வலைபின்னி அமர்ந்திருக்கும் சிலந்திகள். சிலந்தி தன் வலையில் சிக்கிவிடக்கூடாது. ஆனால் அது எளிதல்ல. அத்வைத ஆசிரியர்கள் எங்கோ தங்களை மிகமிக தர்க்கபூர்வமானவர்களாக உணர்கிறார்கள். மிகமிகச் சிக்கலான இயக்கம் கொண்ட ஒரு மாபெரும் கணிப்பொறியாக தங்கள் மூளையை அறிகிறார்கள். அவர்கள் அதைக் கடந்தாகவேண்டும். மண்டைக்குள் இருக்கும் அந்த இயந்திரத்தை ஒரு மலராக ஆக்கிக்கொள்ளவேண்டும்.
அத்வைதிகளுக்கு அழகியல் தேவையாவது அங்குதான். உணர்வுப்பெருக்கு தேவையாவது அதன்பொருட்டுத்தான். அவையிரண்டுக்கும் அவர்கள் பக்தியையோ தாந்த்ரீகத்தையோ சென்றடைகிறார்கள். அனைத்து விபாசனைகளையும் உதறிவிட்டு சிலகாலம் தீவிரமான உபாசனைக்கு சென்று சேர்கிறார்கள்.
ஆதிசங்கரர் சௌந்தர்ய லஹரி முதலிய நூல்களை இயற்றியது இதற்காகவே என்பதுண்டு. [அது அவர் இயற்றியதல்ல பிற்கால சங்கரர் ஒருவர் என மொழியைக்கொண்டு கூறுவர் ஆய்வாளர்] நாராரயண குரு காளிநாடகம், சுப்ரமணிய அஷ்டகம் முதலிய பக்திநூல்களை இயற்றினார். ஆத்மானந்தர் சிறிதுகாலம் ராதையாகவே புடவை கட்டி கிருஷ்ணபக்தியில் திளைத்தார். ராதாமாதவம் போன்ற இசைநூலை இயற்றினார். நடராஜகுரு அவ்வண்ணம் செய்த ஒரு குறுக்குவாட்டுப் பயணம் சௌந்தர்ய லஹரி.
நடராஜகுரு தத்துவ ஆசிரியர். தத்துவமே அவருடைய மொழி. ஆனால் ஐந்தாண்டுக்காலம் சௌந்தரிய லஹரியில் திளைத்திருக்கிறார். அவர் வாழ்க்கையில் ஒரு பெருங்காதலனுக்குரிய பரவசம் மிகுந்த நாட்கள் அவை. ஐம்புலன்களும் கூர்கொண்டிருந்தன. உலகம் இனிய வண்ணங்களால், இசையால், சுவைகளால் ஆனதாக மாறியது. கனவுகளில் பூக்களும் கண்களும் நிறைந்திருந்தன. சௌந்தரிய லஹரி உரை அதன் விளைவு.
ஸ்ரீசக்ரம் என்பது சக்தி என்னும் கோட்பாட்டை ஒரு ஓவியவடிவமாக ஆக்குவது. சக்தி என்பது இப்புடவியின் இயக்கவிசை, இயக்க அழகியல். அதை ஒரு பெருஞ்சுழல் என உருவகித்தனர். ஒரு மையச்சுழி, முடிவில்லாமல் இதழ்விரியுமொரு மலர், உருவிலி அமரும் உருவடிவ பீடம். அதை சிற்பமாக ஆக்கினால் மேரு, ஓவியமாக ஆக்கினால் ஸ்ரீசக்ரம்.
ஸ்ரீசக்ரம் என்பது ஒரு வெளிப்பாடுதான். அதற்கு அடிப்படையான ஓர் இலக்கணம் உண்டு. அதற்கப்பால் அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு தனிவெளிப்பாடுகள். வெவ்வேறு ஆப்தமந்திரங்கள் போல. வெவ்வேறு கவிதைகள் போல. வெவ்வேறு தெய்வச் சிலைகள் போல. நடராஜ குருவின் ஆணைப்படி அக்காலத்தில் ஓரிரு ஸ்ரீசக்ரங்கள் வரையப்பட்டன. அவை ஊழ்கநிலையில் அவர் உணர்ந்தவற்றின் கலைவெளிப்பாடுகள். அன்றைய அவருடைய நிலையின் சான்றுகள்.
அவற்றை வழிபடுவதென்பது சக்திவழிபாடுதான். உபாசனைதான். அழகுணர்வினூடாக புடவிப்பெருக்கை அறியும் ஊழ்கம்தான். பல காலமாக அது இங்கே இயற்றப்பட்டு வருகிறது
சௌந்தர்யலஹரியின் வாசிப்பு மூன்று தளம் கொண்டது. ஒன்று, அந்நூலை பொருளுணர்ந்து கற்றல். இரண்டு, அந்நூலின் வரிகளை அழகுணர்வுடன் அறிதல். சொற்களாகவும் சொற்பொருளாகவும். மூன்று, கூடவே செய்யவேண்டிய அழகியல் சடங்குகள். உதாரணமாக, சௌந்தர்ய லகரி பயிலும்போது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மலர்க்கோலத்தை அமைக்கும் முறை உண்டு. அந்த மலர்களை பயில்பவரே தேடிச்சேர்க்கவேண்டும். அனைத்து வண்ணங்களிலும் மலர்கள் தேவைப்படும். அம்பிகையின் வடிவை வண்ணக்கோலமாக வரையும் வழக்கமும் உண்டு.
தர்க்கத்தின் சிக்கலை உதறிச்சென்று பெரும்பித்தில் திளைப்பதென்பது அத்வைதிக்கு விடுதலை. அத்வைதத்தையே புதுப்பித்து அளிப்பது. நடராஜ குரு போன்ற மாபெரும் ஆசிரியர்கள் அதில் திளைத்தனர். மிக எளிய அளவிலேனும் நான் நீலம் வழியாக அந்நிலைக்குச் சென்றிருக்கிறேன். முழுக்க மீளவுமில்லை. பெருங்களிப்பும் பெருவலியும் ஒன்றேயான ஒரு அதீதநிலை. இன்று அதை எழுதிவிடமுடியுமா என முயல்கிறேன். எழுதுவதனூடாகவே அதை கடக்கமுடியுமென நினைக்கிறேன்
ஜெ
விஷ்ணுபுரம் விருந்தினர்-6, செந்தில் ஜெகன்னாதன்
விஷ்ணுபுரம் விருந்தினர்-1, கோகுல் பிரசாத்
விஷ்ணுபுரம் விருந்தினர்-2, காளிப்பிரசாத்
விஷ்ணுபுரம் விருந்தினர்-3, எம்.கோபாலகிருஷ்ணன்
விஷ்ணுபுரம் விருந்தினர்-4, பா.திருச்செந்தாழை
விஷ்ணுபுரம் விருந்தினர்-5, சுஷீல்குமார்
செந்தில் ஜெகன்னாதன் திரைத்துறையில் பணியாற்றுகிறார். தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர். தமிழின் தொடர்ச்சியாக சிறந்த சிறுகதைகளை எழுதிவருபவர்.
செந்தில் ஜெகன்னாதன் கதைகள்
அம்மாவந்தாள் விமர்சனம்-செந்தில் ஜெகன்னாதன்
ரகசியத்தின் நிழல்- சங்கர் சதா
அம்மா என்னை நிமிர்ந்து பார்த்தபடி ‘ஒரு நெசத்தை சொல்லவா? உங்கப்பன் போனதுக்கு அப்றம் தான் நிம்மதியான சோறு’ ஒரு கவளத்தை விழுங்கினாள். தொண்டையில் நின்றுகொண்டிருந்த எச்சிலை எவ்வளவு முயன்றும் என்னால் உள்ளே கொண்டு போக முடியவில்லை.
ரகசியத்தின் நிழல்Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

