Jeyamohan's Blog, page 888

November 4, 2021

கேளாச்சங்கீதம்- கடிதங்கள்- 8

கேளாச்சங்கீதம்

பேரன்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

மீண்டும் உங்களிடம் இருந்து ஒரு அற்புதமான சிறுகதையை வாசிக்கும் பேறு பெற்றோம்.

கேளாச்சங்கீதம் என்ற கதையின் தலைப்பே ஆர்வத்தைத் தூண்டக் கூடியதாக இருந்தது. கேட்கப்படாத இசை என்பதற்கும் இசைக்கப்படாத இசை என்பதற்கும் தான் எத்தனை வித்தியாசம்? இந்த தலைப்புதான் கதையோடு எத்தனை அழகாக பொருந்திப் போகிறது. ஆழமாக சிந்தித்து பார்த்தால் மட்டுமே இது விளங்கும். அங்கே அந்த சங்கீதம் தொடர்ச்சியாக இருந்து கொண்டிருக்கிறது ஆனால் எதனாலோ அது கேட்கப்படாமலும் இருக்கிறது. தொடர்ச்சியாக ஒலித்துக் கொண்டிருக்கின்ற கோடிக்கணக்கான சங்கீதங்களின் நடுவே எவரோ ஒருவர் அந்த இதுவரை எவராலும் கேட்கப்படாத ஒரு சங்கீதத்தை தன்னுள் கேட்க நேரும் பொழுது அதிலிருந்து அவரால் விடுபட முடிவதேயில்லை.

ஒரு இடத்தில் பகவான் இரமணர் கூறுவார் மௌனம் என்பது இடைவெளியே இல்லாத தொடர்ச்சியான பேச்சு என்று. ஓரளவேனும் தியானப்பயிற்சி இல்லாதவர்களால் அவர் சொல்ல வருகின்றதன் ஆழ்ந்த பொருளை எளிதாக விளங்கிக்கொள்ள முடியாது. பேச்சற்ற ஒரு நிலையைத் தானே மௌனம் என்று சொல்கிறோம் அது எப்படி தொடர்ச்சியான பேச்சு என்பது மௌனமாகக் கூடும் என்ற கேள்வி எழும். புலன்கள் உட்பட மனம் இயங்கும் விதத்தை உற்றுநோக்குபவர்கள் இதை புரிந்து கொள்ளக்கூடும். அந்த அதிகாலை நேரத்தில் வந்த சிறு தன்நினைப்பு இடைவெளி நிகழாமல் இருந்திருந்தால் கணேசன் இன்னும்கூட முழுமையான இன்பத்தில் திளைத்திருப்பான் தானே?

ஏதோ ஒன்று ஏதோ ஒரு வழியில் நாம் அறியாத ஏதோ ஒரு கணத்தில் நெஞ்சின் ஆழத்தில் புகுந்து விடுகிறது. எல்லா புலன்களும் மனமும் பூரண விழிப்பு நிலையில் இருக்கின்ற அந்த கணத்தில் புகுகின்ற ஒன்று முழுமையின் அத்தனை கூறுகளையும் தன்னுள் முழுமையாக கொண்டிருக்கிறது அதனாலேயே அது மதுரமாய் அமிழ்தாய் திகட்ட திகட்ட தாங்க முடியாத இன்பத்தில் ஆழ்த்துகிறது. கூடுதல் குறைதல் இல்லாத மாற்றம் இல்லாத முழுமையான இன்பம் என்பது முழுதான துன்பமும் கூட. அந்த தேவ முகூர்த்தத்தில் நெஞ்சில் புகுந்த ஒன்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் அது முழுமையாக நம்மை வசியப்படுத்தி விடுகிறது. ஏதோ ஒரு இசைத் துணுக்காக, ஒரு கவிதையின் ஒரு வரியாக, ஒரு காட்சியின் படமாக, ஒரு பொருளாக அல்லது ஒரு நபரின் ஏதோ ஒரு உறுப்பாக என்று எதுவாக வேண்டுமானாலும் அது இருக்கலாம். ஆனால் அது நம்மை முற்றாக அடிமைப்படுத்தி போடுகிறது என்பதுதான் அந்த முழு விழிப்பு கணத்தில் நம்முள் நுழைந்து நம்மைப்பற்றிய அதன் பலம்.

ஒரே ஒரு பாடலை வெறி பிடித்தது போல ஆயிரக்கணக்கான முறை கேட்ட அனுபவங்களும், ஒரு திரைப்படத்தை அல்லது ஒரு குறிப்பிட்ட காட்சி தொகுப்பை மீண்டும் மீண்டும் பார்த்து ஆழ்ந்து கிடந்த அனுபவங்களும் அனைவருக்கும் இங்கே பொதுவானதே.

சாதாரணமான ஒரு நபர்கூட பேரழகியாக அல்லது பேரழகனாக தெரிகின்ற ஒரு கணம் ஒரு கோணம் எங்கோ ஒளிந்து இருக்கிறது. எவரோ ஒருவரின் உள்ளம் முழு விழிப்பு கொள்கின்ற அந்த கணத்தில் அந்தப் பேரழகு கோணம் கண்களின் வழியாக உள் நுழைந்து விட அவர் அவ(ளி/னி)ன் மீது முற்றாக பித்துப் பிடித்து தன்னை முழுதும் மறந்து அந்த நபரின் உணர்வில் தகித்து அலைகிறார்.

கைவிஷம், மந்திர உச்சாடனம், மை வைத்தல் அதுவும் கனவுக்குள்ளாக அதை வைத்தல் என்பதெல்லாம் கதைக்குள் நீங்கள் புகுத்திய மிகச் சிறந்த உத்திகள் என்றே பார்க்கிறேன். இப்படி உத்திகளை பயன்படுத்தாவிட்டால் இவைகளைப் புரிந்து கொள்வதுதான் எப்படி. மனதும் மனதும் ஒன்றை ஒன்று கவர்ந்து கொள்ளத்தான் எத்தனை எத்தனை ஆயிரம் உத்திகள். “மண்ணில் இந்த காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ?” என்ற பாவலர் வரதராஜனின் பாடலைத்தான் இங்கே நினைக்கத் தோன்றியது. அன்பு மயம் காதல் மயம் பிரேம மயம் என மனம் முற்றாக ஏதோ ஒன்றினால் நிறைந்து விடுவதைத் தானே மஹா யோகம் என்கிறோம். இங்குள்ள எல்லாமும் பிரம்மத்தின் வெளிபாடுகள் என்ற அத்வைத நோக்கில் பார்த்தாலும் இப்படி ஒன்றில் முழுமையாக ஆழ்ந்து போகக்கூடிய ஒன்று என்பது வரம்தானே!. நண்பர் அருணாச்சலம் மகாதேவன் இதை மிக அழகாக தொட்டுக்காட்டி கடிதம் எழுதியிருந்தார்.

“காவி உடை வேண்டா, கற்றைச் சடை வேண்டா, பாவித்தல் ஒன்றே போதுமடா பரமநிலை எய்துதற்கு” என்கிறான் பாரதி. பாவித்தலின் மூலம் பரமநிலையையே எய்த முடியுமென்றால் வேறு எதை அடைய முடியாது?. பிரபஞ்சத்தில் எங்கோ உள்ள எதைவேண்டுமானாலும் தீவிர பாவனை மூலமும், திராட்டக்(இமையா நோக்கு), சஞ்ஜன்(இடைவிடாமல் ஒன்றைக் குறித்து நினைத்தல்)என்ற பல்வேறுபட்ட யோகப் பயிற்சிகளின் மூலமும் அடைய முடியும் என்றால், பிறரை நம்மை விரும்பச் செய்தல் என்பதுவும் சாத்தியமே. இதை எதையுமே பயிலாத, எதையுமே அறியாத ஒரு மனமும் கூட, ஒருமுகப்பட்டு ஒரு சில கணங்களுக்கு ஒன்றையே அதிதீவிர விருப்போடு அடைய நினைக்குமானால் அதை என்றேனும் ஒரு நள் வசப்படுத்தியே தீரும். வசியப்படுத்த முயல்கின்ற மனதின் தீவிரத்தைப் பொருத்தும், வசப்படுகின்ற மனதின் மனோதிடத்தை பொருத்தும் இதில் வெற்றி தோல்விகளின் அளவுகள் மாறுபடலாம். இப்படி எத்தனையோ சிந்தனைகளை என்னுள் எழுப்பிய வண்ணம் இருந்தது இந்த கேளாச்சங்கீதம் கதை.

அளவுக்கு அதிகமான அமிர்தம் விஷமாகிறது. துளியினும் துளி விஷம் அமுதாகிறது. ஆலகால விஷத்தை நெஞ்சில் தேக்கியவனும், அமுதக் கடலின் மீது படுத்து துயில்பவனும் இருப்பது என்னவோ பரமானந்த நிலையில்தான் என்கிறது நமது தொன்மம். இதில் கொஞ்சம் அதில் கொஞ்சம் என்று அங்கும் இங்கும் அல்லாடிக் கொண்டிருக்கும் சம்சாரிக்குத்தான் இன்ப துன்பங்கள் எல்லாம். இவன் விஷத்தைக் குடிக்கவும் தயாராக இல்லை அமுத கடலில் குதிக்கவும் தயாராக இல்லை. வைத்தியர் மகன்களும் கணேசன்களும் நிச்சயமாக ஏதோ ஒன்றில் குதித்து விட்டவர்கள். பச்சாதாபம் துன்பம் துயரம் எல்லாம் வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு தான். துணிந்து குதித்து விட்டவனுக்கு வெளி உலகு எல்லாம் ஒரு பொருட்டா என்ன? ஆண்-பெண் இன்பத்தின் அதீத நிலைகளுக்கே இப்படி என்றால் யோகத்தின் பரமானந்த மௌனத்தில் குதித்தவர்கள் குகைக்குள் இருந்து நிர்விகல்ப சமாதியில் தொடர்ந்தவண்ணம் அப்படியே உடலை உகுத்து விடுவதை குறித்து என்ன சொல்ல?

“ஒருகணக்கிலே பாத்தா கடைசியிலே அந்த விடுதலை கிடைக்காமலேயே போறது நல்லதில்லியா?” என்ற ஆழமான ஒரு கேள்வியைக் கேட்டிருக்கிறீர்கள். எந்தக் கணக்கின் வழியாகப் பார்த்தாலும் உள்ளம் ஒன்றிலே ஒன்றி அதுவாகவே ஆகிவிடுதல் என்பது அந்த நிலையில் விழுந்தவர் பெற்ற பெறற்கரிய பேறு என்பதை அறியாதவரா என்ன நீங்கள்? தாளமுடியாத துன்பத்தில் விழுந்து அந்தத் துன்பமே அறிதலின் உச்சத்தில் ஆழ்த்தி ஞானி ஆனவர்களும் உண்டுதானே இங்கே.

முள்ளுநுனியிலே பனித்துளின்னாக்கும் மனுசனை பத்திச் ல்லியிருக்கு என்பது தான் எத்தனை ஆழ்ந்த வாசகம். எத்தனை நுண்ணிய முள் நுனி ஆயினும் எல்லாப் பனியும் வழிந்து ஓடிய பின்பும் அங்கே ஒரு மீச்சிறு பனித்துளியாவது நின்றே தீரும். ஆனால் அது அத்தனை சிறு துளியாக இருப்பதனால் சூரிய வெப்பத்தில் உடனடியாக ஆவியாகிவிடும். அதையும் தாண்டி இலைகளால் மறைக்கப்பட்ட ஏதோ ஒரு முள்ளின் நுனியில் ஒரு துளி பனி நின்றுவிடுகிறது! அதை ஆசீர்வதிக்கப்பட்ட துளி என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது!

மிக்க அன்புடன்

ஆனந்த் சுவாமி

அன்புள்ள ஜெ

கேளாச்சங்கீதம் கதையை திரும்பத்திரும்ப வாசிக்கிறேன். அது என்னை என்ன செய்கிறதென்று சொல்ல முடியாது. ஏனென்றால் அது என்னுடைய கதை. நான் ஒரு ஆறாண்டுக்காலம் வாழ்ந்த கதை. அதை விளக்கவே முடியாது. நீண்டநாளுக்கு பின்னால் எனக்கு ஆன்மிகம் கற்றுக்கொடுத்த சுவாமிஜி சொன்னார் அது கர்மாவின் தொடர்ச்சிதான் என்று. வேறு எதைக்கொண்டும் அதை விளக்கவே முடியாது.வேறொரு முறை சுவாமி சொன்னார். அந்தப்பெண் ஒரு நிமித்தகாரணம்தான். நமக்கு அப்படி ஒரு presence தேவைப்படுகிறது. பக்தனுக்கு அப்படித்தான் விக்ரகம் தேவைப்படுகிறது. அதை rathi என்று சொன்னார் அதை பகவான்மேல் அப்படியே திருப்பிக்கொள்பவர்களே மீட்சி அடைகிறார்கள் என்று சொன்னார். என்னால் அது முடியவில்லை.

ஆனால் கதையில் வந்ததுபோல அன்று நூறுகண்ணும் நூறு காதும் நூறு நாக்கும் அடைந்ததுபோல் இருக்கிறது. மொத்தமாக லாஜிக்கலான எல்லாமே மறந்துவிட்டது. ஆனால் பல காட்சிகளும் பாடல்களும் அப்படியே அச்சுஅசலாக இப்போது கண்முன் நிகழ்வதுபோல நினைவில் இருக்கின்றன. சிலபாடல்களை அதன் ஒவ்வொரு ஒலித்துணுக்கையும் தனித்தனியாகக் கேட்பதுபோல அன்றைக்குக் கேட்டிருக்கிறேன். ‘உன்னைத்தொட்டு அள்ளிக்கொண்ட’ என்றபாட்டு என்னை கொல்லும் அளவுக்கு தீவிரமாக இருந்திருக்கிறது. அதெல்லாம் தியானத்திலே வரவேண்டும் என்று சொன்னார். ஆனால் அதெல்லாம் எனக்கு பிராப்தம் கிடையாது. ஆனால் இன்றைக்கும் அதெல்லாம் ஒரு கனவுபோல இருக்கிறது.

எஸ்

 

கேளாச்சங்கீதம்- கடிதங்கள்1

கேளாச்சங்கீதம் – கடிதங்கள்-2

கேளாச்சங்கீதம், கடிதங்கள்- 4

கேளாச்சங்கீதம் – கடிதங்கள்-3

கேளாச்சங்கீதம்- கடிதம் 5

கேளாச்சங்கீதம், கடிதம்-6

கேளாச்சங்கீதம்- கடிதங்கள் 7

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 04, 2021 11:32

தமிழ்ச்சமூகத்தில் அறமும் ஆற்றலும்(ராஜ் கெளதமன்) -சக்திவேல் கோபி

அன்பு ஜெயமோகன்,

நீண்ட வருடங்களுக்குப் பிறகு ராஜ் கெளதமனின் தமிழ்ச்சமூகத்தில் அறமும் ஆற்றலும் ஆய்வுநூலை மறுவாசிப்பு செய்தேன். தமிழில் வெளியாகி இருக்கும் தலைசிறந்த அபுனைவு நூலாகவே இன்றைக்கும் தோன்றுகிறது. அந்நூலை அழகுறப் பதிப்பித்த விடியல் சிவாவுக்கு நன்றி சொல்லாமல் இருப்பது பண்பாகாது. அறம் தொடர்பான சமூகக்கருத்தோட்டங்களை தமிழிலக்கியங்கள் வழி அணுக விரும்பும் வாசகர்கள் நிச்சயம் அந்நூலை வாசிக்க வேண்டும் எனக்கேட்டுக் கொள்கிறேன்.

திருக்குறளை ஒரு அறநூலாக மட்டுமே வாசித்திருந்த எனக்கு ராஜ் கெளதமன் உச்சபட்ச அதிர்ச்சியை அளித்தார். அதிகாரத்தின் மாயக்கரமாக அறம் செயல்படுத்தப்பட்டிருப்பதைத் குறட்பாச் சான்றுகளோடு அவர் முன்வைத்திருந்த விதம் ’அரசியல் இலாப’ நோக்கமற்றது. எனினும், அதை வாசிப்பவர்கள் திருக்குறள் அதிகாரத்தைக் காக்கும் பொருட்டுத்தான் எழுதப்பட்டதோ எனும் ’அரசியல் நிலைபாடுக்குள்’ சிக்கி அவதியுறவும் செய்துவிடும். அதனால், வாசகர்கள் கவனமாக இருக்க வேண்டுகிறேன். தவறாமல், அந்நூலின் முடிவுரையைப் படிக்க வேண்டும். அப்போதுதான் ராஜ் கெளதமன் அவர்களின் நோக்கம் விரிவாய்த் துலக்கமாகும்.

வன்முறையே கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் வள்ளுவர் ஒரு அரசன் தன்னைக் காத்துக் கொள்வதற்காகப் போரிடலாம் என்பன போன்ற கருத்துக்களைச் சொல்வதைக் குறிப்பிட்டு திருக்குறள் பற்றி நாம் கொண்டிருக்கும் ‘ஒற்றை வாசிப்பு’ முறையைப் பலத்த அதிர்ச்சிக்குள்ளாக்குகிறார் ரா.கெள. ’ஒற்றை வாசிப்பு’ முறையால் உருவாக்கி அளிக்கப்பட்டிருக்கும் ‘பொது வரலாற்றுச் சித்திரத்தையும்’ மறுபார்வைக்குள்ளாக்குகிறார். அச்சு முதலாளியத்தின் வழி நமக்களிக்கப்படிருக்கும் வரலாற்றுத் தகவல்களை இலக்கியச் சான்றுகள் துணைகொண்டு மறுவிசாரணைக்கு ஆயத்தப்படுத்துகிறார்.

பொதுவாகவே, அறநூல்களின் தோற்றம் பற்றி விரிவான சான்றுகளோடு பேசும் ராஜ் கெளதமன் அறத்தை அதிகாரத்தின் உறுப்பாகவே நமக்குக் காட்டுகிறார். இது ஒருவகையான ஆய்வுக்கோணம். இதுவே ’முடிந்த முடிபு’ என்பதான அழுத்தம் இல்லை. ஆக வாசகர்கள் வெகுகவனமாக இருக்க வேண்டும். மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம் போன்ற கோட்பாடுகளை மட்டும் வைத்துக் கொண்டு ஜல்லி அடிக்காமல் சிக்மண்ட் ஃப்ராய்டு, ஃபூகோ, நீட்ஷே, கிராம்சி போன்ற நவீனச் சிந்தனையாளர்களின் பங்களிப்புகள் வழியாகவும் தனது ’சிந்தனைப்புலத்தை’ வலுப்படுத்தி உள்ளார்.

வள்ளுவரின் காமத்துப்பால் எவ்வாறு ஆண்மையச் சமூகத்தின் ‘காப்பாக’ இருக்கிறது என்பது பற்றிய அவரின் விரிவான விளக்கங்கள் ‘பாலியல் அறங்கள்’ பற்றிய மீள்விசாரணையை முடுக்கி விடுகின்றன. பக்தி x சித்தி என்பதான சமயத்தளத்தின் கருத்தாடலை பெண்ணின் அலங்கார ரூபம் ஆபாச ரூபம் என்பதான கோணத்தில் அவர் வியாக்கியானம் செய்த அத்தியாயங்களில் நிமிர்ந்து உட்கார்ந்தேன். நூலின் மிக முக்கியமான பகுதிகள் அவை. நூலை மூடிவைத்துக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்ட பிறகே தொடர முடிந்தது.

பக்தியின் பெண்மை பெண்ணின் அலங்கார ரூபத்தை வியந்தோதி இருக்க, சித்தியின் நாயகர்கள்(சித்தர்கள்) பெண்களின் ஆபாச ரூபத்தைப் பகிரங்கப்படுத்தி இருப்பார்கள். சான்றுகளுக்கு, சைவ வைணவ பக்திப்பாடல்களையும் சித்தர்பாடல்களையும் ராஜ்கெளதமன் நூலில் அளித்திருக்கிறார். சித்தர் பாடலுக்குச் சான்றாக எத்தனை பேர் தொட்ட முலை / எத்தனை பேர் நட்ட குழி எனும் பட்டினத்தாரின் வரியைச் சொல்கிறேன்.

நவீனக் கோட்பாட்டாளர்கள் பொருளியல், பிராமணிய, சாதிய அதிகாரக் கருத்தியல்களாலே சமூகம் சீரழிந்து விட்டதாகக் கூப்பாடு போட்டு ‘போராடிக்’ கொண்டிருக்கும் இக்காலத்தில், ஆண்மையம் எனும் யோசனையை நோக்கி முன்நகரும் ராஜ் கெளதமன் நம்மை ’சிந்தனை முறைமையை’ உலுக்கி விடுகிறார்.

இன்னும் சொல்லப்போனால், சமூகம் என்பதை ஆணின் கோணத்தில் இருந்தே அணுகும் இலட்சியவாதங்களின் அபத்தப்போக்கைத் தோலுரித்திருக்கிறார். பொருளியல் மையம் பேசிய மார்க்சியமோ, பிராமணிய மையம் பேசிய பெரியாரியமோ, தாழ்த்தப்பட்டோர் மையம் பேசிய அம்பேத்கரியமோ, கிராம மையம் பேசிய காந்தியமோ ஆண்மையத்திலிருந்து அவற்றை யோசித்ததா எனும் திறப்பை ராஜ்கெளதமன் வைத்துச் செல்கிறார். மூலக்கோட்பாடுகளில் அவை பேசப்பட்டிருந்தாலும், அவ்வமைப்புகளின் நடைமுறை வடிவமான ’அரசியல் செயல்பாடுகளில்’ அவை எதிரொலித்திருக்கின்றனவா எனும் கேள்வியை அழுத்தமாக எழுப்புகிறார். எவ்விதக் கோட்பாடுகளையும் அவர் வீண் என்று உதறிச் செல்லவில்லை. அவற்றின் ‘அரசியல் வடிவங்களை’ மறுபரிசீலனைக்கு உட்படுத்தவே மன்றாடுகிறார். ஒரு தேர்ந்த சிந்தனையாளரால் அப்படியான மன்றாட்டை நிகழ்த்த இயலும்.

சமூகம் ஒருபோதும் ‘நிலையான’ வடிவத்தில் இருப்பதில்லை; இருக்கப்போவதுமில்லை. இயங்கியல் புரிந்தவர்களுக்கு இது தெளிவாகவே புரியும். இன்றைய வரலாற்றுப்பரப்பில் இருக்கும் நவீனச் சமூக வடிவை முந்தைய வரலாற்றுகாலச் சமூக வடிவங்களோடு ஒப்பிட வேண்டியதன் தேவையை இப்போது வரை சமகால அரசியல் அறிவுஜீவிகள் ஒப்புக்கொள்வதில்லை. அவர்களைப் பொறுத்தவரை, வரலாறு என்பது கிழித்த நேர்கோடு போன்றது. அதனால்தான் கோட்பாட்டாளர்கள் ’அரசியல் வடிவங்களின்’ வழி ’சமூக மாற்றத்தை’ உருவாக்கி விடலாம் எனத் உறுதியாக நம்புகின்றனர். அரசியல் வடிவம் அவசியம்தான். அது எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பது பற்றிய தெளிவு முக்கியம்.

அரசியல் அறிவுஜீவிகளைப் பொறுத்தவரை சமூகம் எப்போதும் இரு தரப்புகளை மட்டுமே உள்ளடக்கியது. ஒன்று ஒடுக்குகிற தரப்பு; மற்றது ஒடுக்கப்படுகின்ற தரப்பு. ஒடுக்கப்படுகின்ற தரப்பை எழுச்சி பெறச் செய்து ஒடுக்குகிற தரப்பைக் காலி செய்து விட வேண்டும் என்பதே அவர்களின் அரசியல் வடிவம். அதன்பொருட்டே கட்சிகள், தொண்டர்கள், ஆர்ப்பாட்டங்கள், முழக்கங்கள், போராட்டங்கள். உண்மையில், இவ்வகையான செயல்பாடுகள் பகுத்தறிவுக்கே முரணானவை.

சமூகத்தை ஒரு புறவய இயந்திரத்தைப் போன்று பார்ப்பதே, கோட்பாட்டாளர்கள் மற்றும் அறிவுஜீவிகளின் பலவீனம். சமூகத்தை நவீன மனிதர்களின் கோணத்தில் இருந்து மட்டுமே அணுகுவது, மற்றுமொரு பிழை. சமூகத்தைப் பிரபஞ்சத்தின்(இயற்கை) எல்லைக்குள் இருக்கும் மனிதக்குழுவாழ்வு(செயற்கை) என்பதாக என்றைக்காவது நாம் பேசி இருக்கிறோமா? மார்க்சியம் ஓரளவு அதைக் கண்டுணர்ந்திருக்கிறது. அதனால்தான் சமூக வடிவங்களை வேட்டை, மேய்ச்சல், வேளாண், உற்பத்தி மற்றும் நவீனம் என அடையாளம் காட்டி இருக்கிறது. அதுபற்றிய புரிதல் கொண்ட மார்க்சியர்கள் இன்று வெகுசிலரே இருக்கின்றனர். பெரும்பாலான கட்சி மார்க்சியர்களுக்கோ மார்க்சிய அடிப்படையே தெரியாது; அதன் இயங்கியலும் விளங்காது. அப்படித்தான் சமகாலத்தலைமுறை பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறது. இதில், வலைதள வம்புகள் வேறு.

வேட்டை > மேய்ச்சல் > வேளாண் > உற்பத்தி > நவீனம் என்பது கூட புரிந்து கொள்வதற்கான சங்கிலியே தவிர, உறுதியாக இப்படித்தான் சமூக வடிவங்கள் பரிணமித்திருக்கின்றன எனும் ’அறிவியல் நிரூபணம்’ கிடையாது. அது அவசியமும் இல்லை. இங்கு வேட்டைச்சமூகத்தில் மனிதன் இயற்கையை அதிகம் நம்ப வேண்டி இருந்தது. மேய்ச்சல் மற்றும் வேளாண் சமூகங்களில் இயற்கையுடனான தொடர்பிலிருந்து விலகத் துவங்கினான். உற்பத்தி மற்றும் நவீனச் சமூகங்களில் முழுக்கவே இயற்கைக்கு அந்நியமாகிப் போனான் அல்லது இயற்கையை அறியாது ‘தானே’ பிரபஞ்ச மையம் என்பதான எக்களிப்பில் மிதக்கிறான். அம்மிதப்பே சமூகம் என்பதை மாந்தசமூகம்(மனிதச்சமூகம்) என்பதாக மட்டுமே புரிந்து கொள்ள வைக்கிறது. அங்கிருந்தே சமூக மேம்பாட்டைக் குறித்து ‘சிந்திக்க’வும் வைக்கிறது. அவன் சிந்தனையில் எப்போதும் இருப்பது ‘மனிதர்களே’. இன்னும் சொல்வதானால், அவன் சார்ந்திருக்கும் கோட்பாடு முன்வைக்கும் ‘ஒடுக்கப்பட்டவர்களே’.

இயற்கைக்கு நெருக்கமாக இருந்தவன் வேட்டை மனிதன்; இயற்கையையே (அதிகம்) அறியாதவன் நவீன மனிதன். இக்கருத்தைக் கொண்டு நவீன மனிதன் மோசமானவன் என்றும், வேட்டை மனிதன் புனிதமானவன் என்பதான கற்பிதங்களை உருவாக்கி மடத்தனம் புரிபவர்களும் இருக்கிறார்கள். அப்படியும் ஆகிவிடக்கூடாது. வேட்டை மனிதனுக்கு நவீன மனிதன் புரியாமல் போகலாம். ஆனால், நவீன மனிதனால் அவனுக்குள்ளிருக்கும் வேட்டை மனிதனைக் கண்டுகொள்ள முடியும்தானே?

தான் யார் எனச் சிந்திப்பதன் வழியாக வேட்டை மனிதனைக்கண்டு கொள்ளும் நவீன மனிதன், இன்னும் பயணித்தால் தன்னை இயற்கையின் சிறுதுளியாக உணரும் வாய்ப்பைப் பெறலாம். அவ்வாறு உணரும் நவீன மனிதன் என்ன செய்வான் என நாம் பொதுவாகச் சொல்லி விட இயலாது. ஒன்று மட்டும் உறுதி. சமகால நடைமுறைக் கோளாறுகளுக்குக் காரணம் ’நவீனச் சமூகத்தின் அறிவுக்குறுக்கமே’ எனும் புள்ளியை நிச்சயம் வந்தடைவான். இப்போதைக்கு அது முக்கியம் என்பது என் தரப்பு.

சமயத்தின் வழி சமூகவாழ்வை விளங்கிக் கொள்வது எளிதாக இருக்கும். வேட்டை மனிதனின் வாழ்வியல் நிகழ்வுகள் மேய்ச்சல் மனிதனின் காலத்தில் பண்பாட்டுச் சடங்குகளாகின்றன. அவை வேளாண் மற்றும் உற்பத்தி மனிதன் காலத்தில் ஆன்மீகச் சமயமாகிறது. அதுவே நவீன மனிதனின் காலத்தில் தத்துவ நிறுவன மதமாகிறது. நிறுவன மதத்தின் உள்ளடக்கமாக ஆன்மீகம், சடங்குகள் போன்றவை இன்றைக்கும் இருக்கின்றன. ஆனால், அவை நிறுவன மதத்தின் அதிகாரச் சார்பால் திரிபுப்படுத்தப்பட்டிருக்கின்றன. அத்திரிபுகளும் நவீன காலத்தில் மட்டுமே உருகொள்ளவில்லை. அதன் வேர்கள், மேய்ச்சல் சமூகச் சடங்குகளுக்கு முன்பு இருந்தே கூட ஆரம்பித்து இருக்கலாம். கனகச்சிதமாக சமூக வரலாற்றை நாம் எழுதிவிட முடியாது.

இங்குதான் மார்க்சியம் நமக்கு கைகொடுக்கிறது. இயற்கையை பொதுவுடைமையாகக் கொண்டிருந்த வேட்டை காலச்சமூகத்தில் அதிகாரம் எனும் வார்த்தைக்குப் பொருளில்லை. தனியுடைமை உருவான மேய்ச்சல் சமூகக் காலகட்டத்தில் அதிகாரம் துலங்கத் துவங்கி இருக்கலாம். மெல்ல மெல்ல நவீனச் சமூகத்தில் அது எதேச்சதிகாரமாக வளர்ந்து நிற்கிறது. இவ்வாறாக அதிகாரத்தை விளங்கிக் கொள்வது முக்கியம். மேலும், அதிகாரம் எனும் கருத்தாக்கம் குறிப்பிட்ட மனிதக்குழுவுக்குச் சொந்தமானதும் அல்ல. மனிதக்குழுக்களுக்கு இடையே நிகழ்ந்த முரணியக்கங்களைப் புரிந்துகொள்ள உருவாக்கிக் கொண்ட சொல்லே அதிகாரம்.

வேட்டைச் சமூக மக்கள் முற்றிலும் அழிந்து, மேய்ச்சல் சமூக மக்கள் உருவாகவில்லை. உணவுக்குத் தானியத்தைப் பயன்படுத்தத் துவங்கும் பலர் விலங்குகளை வேட்டையாடுவதைக் குறைத்துக் கொள்கிறான்(சிலர் தொடர்ந்து வேட்டையாடுகின்றனர்). கூட, வேட்டையைக் குறைத்துக் கொள்பவர்கள் மேய்ச்சல் நாடோடிகளாக வாழ்வை மேற்கொள்கின்றனர். மேய்ச்சல் வாழ்விலிருந்து முரணியக்கம் கொள்ளும் குழுவினரால் வேளாண் சமூக வடிவம் உருவாகிறது. தொடர்ந்து, ஓரிடத்தில் நிலைத்த குடிகளாக வாழும் வேளாண் மற்றும் உற்பத்திச் சமூகக் கால கட்டத்தில் வேளாண்மையும் வேளாண் சார்ந்த உற்பத்தி நடவடிக்கைகளும் ‘தொழிலாக’ மாறுகிறது. நவீனச் சமூகத்தில் அதன் நீட்சியாக உற்பத்தி பொருட்கள் ‘வணிகமாகி’ இலாபத்தை முதன்மையாகக் கொள்கிறது.

நாம் இன்றைக்கு நவீனச் சமூகத்தில் வசிக்கிறோம். என்றாலும், நவீனச்சமூகத்தில் வேளாண், உற்பத்தி, மேய்ச்சல் மற்றும் வேட்டைச்சமூக மக்கள் உள்ளடங்கி இருப்பதைக் கவனிக்க வேண்டும். இன்றைக்கும் எங்கள் பகுதியில் வேட்டையை மட்டுமே நம்பி இனக்குழுவாக வாழும் நரிக்குறவர்களும், மேய்ச்சலை மட்டுமே நம்பி வாழ்வோரும், விவசாயத்தை மட்டுமே நம்பி இருப்போரும், இயந்திரத்தொழிற்சாலை அமைத்து தொழில் செய்வோரும், தரகு வணிகம் மேற்கொள்ளும் நவீனவணிகர்களும் இணைந்தே இருக்கின்றனர்.

கெடா வெட்டுதல், கூறுபோடுதல், அலகு குத்துதல்(வேட்டை மற்றும் மேய்ச்சல் சமூகப் பண்புகள்), முளைப்பாலிகை எடுத்தல், தீர்த்தக்குடம், வேண்டுதல், தேர் இழுத்தல், டிராக்டரில் சாமி நகர்வலம் வருதல்(வேளாண் மற்றும் உற்பத்திச் சமூகப்பண்புகள்), கோவில் கடைகள், அறங்காவலர் அல்லது அரசு நிர்வாகம்(நவீனச் சமூகப்பண்புகள்) எனச் சமூகப்பரிமாணத்தின் உள்ளுறையைக் கோவில் நிகழ்வுகளில் நேரடியாகக் காணலாம்.

நவீனப்பண்பாடு என்பது வேட்டைக்கு முன் துவங்கி நவீனத்தில் முழுமை பெறுவது. வெறுமனே நவீனம் மட்டும் அன்று. அப்புரிதலே இதுகாறும் நமக்கு வாய்க்கவில்லை அல்லது வாய்ப்பதற்கு அரசியல் குழுக்கள் விட்டதில்லை. அரசியல் குழுக்களின் நோக்கம் அதிகாரத்தைக் கைப்பற்றல் என்றாகும்போது அவர்களால் திரிபுகளையே சிந்தனைகளாகச் சமூகத்துக்கு அளிக்க முடியும். அதுவே கடந்த ஐம்பது ஆண்டுகளில் தமிழ்கத்தைக் கடும் சீரழிவுக்கு உள்ளாக்கி இருக்கிறது.

கொஞ்சம் எளிமையாக்க முயற்சிக்கிறேன். இன்றைக்கு இருக்கும் வாழ்வை நவீனம் என்றும், அதற்கு முந்தைய சமூகப் பண்பாடுகளை மரபு என்றும் கொள்வோம். மரபுக்குள்ளான முரணியக்கமே நவீனமாகி இருக்கிறது. மரபு அழிந்து நவீனம் உருவாகவில்லை. இதுவே புரிந்து கொள்ள வேண்டியது. விதை அழிந்து வேர் உருவாகவில்லை. வேரில் விதை சூட்சுமமாய் இருக்கிறது. கனியிலும் அது இருந்தே தீரும். நமக்கோ மரபு அறிவீனம் என்றும், நவீனமே அறிவு என்பதாகவும் கோட்பாடுகள் வழி பயிற்றுவிக்கப்படுகிறது. அதனாலேயே நவீனம் எதிர் மரபு என்பதான இருமையை உருவாக்கி அதில் நவீனம் பக்கம் நம்மை இருத்திக்கொண்டு மரபுக்கு எதிராக அல்லது அதை முற்றொழிப்பதையே முற்போக்கு என முடிவு செய்கிறோம். எப்பேர்ப்பட்ட அபத்தம் இது?

பன்மைகளை இருமையாக்கி அதன் வழி உலகை ஒற்றை அதிகாரத்தின் வழி கொண்டுவிட வேண்டும் எனும்படியான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அது உலகம் தழுவித் தீவிரமாக நடைபெறுகிறது; நாடு, மாநிலம், நகரம், கிராமம் எனும் சிறிய அலகுகளிலும் அதன் தாக்கம் ஊடுருவி இருக்கிறது.

மரபுச்சமூகங்களில் முரணியக்கம் நிகழ்ந்தது போன்று நவீனச்சமூகங்களிலும் முரணியக்கம் நிகழும். முரணியக்கங்களை விளங்கிக் கொள்வதே மெய்யறிதல்(திரும்பவும் சொல்கிறேன். முரணியக்கங்களை எதிரிடைகளாகப் புரிந்து கொண்டு விடாதீர்கள்). அந்நிகழ்வின் வழியாக நாம் விரும்பும் கனவுச்சமூகத்தை உருவாக்க இயலுமா எனத்தெரியவில்லை. ஆனால், கனவுச்சமூகம் பற்றிய கற்பனை அவசியம். கற்பனைகளே மனிதனின் தனித்துவம். அவையே அவனைச் சமகாலத்தில் உற்சாகம் குன்றாமல் செயல்படத் வைக்கின்றன.

நவீனச்சமூகம் அடுத்து என்னவாக இருக்கும் என்பதை இப்போது ஊகமாகக் கூடச் சொல்லிவிட முடியாது. அறிவியல்பூர்வமாகச் சொல்லிவிட முடியும் என மார்தட்டுபவர்கள் அறிவியல் அறியாதவர்களாகத்தான் இருக்க முடியும். இன்றைக்கு நம்முடைய தேவை, சமூக வடிவங்களின் பன்மைகளைக் குறித்து மேலதிகத் துலக்கத்திற்குத் தயாராக இருப்பதே.

ஐரோப்பிய அறிவொளி கால அறிவு நமக்கு அளித்திருக்கும் ’சிந்தனை முறைமை’  முழுக்கத் தவறானதன்று. ஆனால், அதையே ’முழுமுதல் உண்மை’ என்பதாக ஒப்புக்கொள்ளும் போக்கே ‘அறிவீனம்’ ஆகும். அதனாலேயே, பெரியாரால் சமூக உளவியலில் சிறிதளவு மாற்றத்தைக் கூடச் செய்ய முடியாமல் ஆனது. சமூக வடிவில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம். அது சமூக உளவியலில் எதிரொலித்திருக்கிறதா? நவீனச் சமூகத்தின் வடிவம்தான் நவீனமே தவிர அதன் உள்ளடக்கம் மரபைச் சூட்சும்மாகக் கொண்டிருக்கிறது. சமூகத்தைப் புறமாக மட்டுமே பெரியார் போன்றோர் கருதினர். அதனாலேயே புறமாற்றங்களே சமூக மாற்றங்கள் என நம்பவும் தலைப்பட்டனர். உண்மையில் சமூக மாற்றங்கள் அதன் உள்ளடக்கத்தையும், சமகால வடிவையும் கருத்தில் கொண்டோரால் மட்டுமே சாத்தியமாகி இருக்கிறது.

நவீனமே மேம்பாடு, மரபு குப்பை என்பதைப் போன்ற பெரியாரின் பார்வையே மிகக்குறுகலானது என்பது மட்டுமன்றி.. அது பகுத்தறிவும் ஆகாது. அவர் நவீன அறிவைப் பகுத்தறிவு எனச் சொன்னார். உண்மையில், பகுத்தறிவு என்பது நவீனத்தைப் பகுத்து அதில் மரபின் தேவை என்ன என்பதை விளங்கிக் கொள்வதும் அதை நவீனத்தின் வழி மேற்கொண்டு செல்வதும்தான். அங்கு பெரியார் பெரும்பிழை செய்துவிட்டதாகவே கருதுகிறேன்.

பெரியாரின் பார்வையில் சமூகப்பன்மைகள், பிராமணர் எதிர் பிராமணர் அல்லாதோர் என இருமைகளாகக் குறுக்கப்படுகிறது. மேலும், பிராமணர் அல்லாதோர் பக்கம் நின்று அவர்களுக்கு எதிரிகளாக பிராமணர்களைக் கட்டமைக்கும் வேலையைச் செய்வதைத் திராவிடர் கழகத்தின் அரசியல் வடிவமாக்குகிறார். அவ்வடிவத்துக்குச் செல்லும் ஒருவர் சமூகத்தைப் பிராமணியம் கடந்து யோசித்து விடவே முடியாது. அப்படியானால், ஆதிக்க பிராமணியம் சரியானதா? அப்படி இல்லை. ஆதிக்க பிராமணியமும் ஒரு காரணம். அதுமட்டுமே காரணம் என்பதான முழுமுதல் தத்துவம்தான் பேராபத்து.

இந்துமத அரசியலுக்கு வருகிறேன். இந்துத்துவர்கள் இந்துக்கள் எதிர் இந்துக்கள் அல்லாதோர் எனும் இருமைகளைக் கட்டி அதில் இந்துக்களுக்கு எதிரிகளாக இந்துக்கள் அல்லாதவர்களை நிறுத்துகின்றனர். குறிப்பாக, இஸ்லாமியச் சகோதரர்களை கொடும் எதிரிகளாகச் சித்தரிக்கின்றனர் (இஸ்லாமிய அடிப்படைவாதிகள் இந்துக்களை எதிரிகளாக முன்வைப்பது போல). இந்துக்கள் மட்டுமே இந்து ராஷ்டிரத்தில் இருக்க வேண்டும் என முழக்கமும் எழுப்புகின்றனர்.

பெரியாருடைய சிந்தனை முறைமையைக் கொஞ்சம் சீர்படுத்தினால், அது சமூகத்துக்குப் பயனுள்ளதாகும். அவ்வகையில் அவரின் நோக்கம் மானுடத்துக்கானது. அதனால்தான் கடவுளை மற மனிதனை நினை என உறுதிபடச் சொன்னார். ஆனால், இந்து அடிப்படைவாதிகளின் சிந்தனை முறைமையோ முழுக்கத் திரிபானது. அதனால் இந்தியாவுக்குக் கேடு விளையுமே தவிர நன்மை ஒருபோதும் சாத்தியமில்லை.

இன்றைய சூழலில், சமூகத்தின் பன்மைத்தளங்களை விளங்கிக் கொள்வதற்கான மேலதிகத் திறப்புகளை நிகழ்த்தும் கோட்பாடுகளும், ஆய்வுகளும் அவசியமாகின்றன. வலைதளச் சூழலில் வம்பரசியல் பேசும் சமகாலத் தலைமுறையினரை வலுக்கட்டாயமாக வாசிப்புக்குக் கொண்டு வர இயலாது. அது தேவையுமில்லை. கோட்பாடுகள், கலை இலக்கியங்கள் குறித்த உளப்பூர்வத் தேடலில் இருக்கும் ஒருவர் முதலில் திரிபுகளைக் கண்டறிய வேண்டும். ஏனென்றால், நவீனச்சூழலில் பண்பாட்டுத்திரிபுகளே கோட்பாடுகளாகவும், அரசியல் வடிவங்களாகவும் இருக்கின்றன.

நவீனச்சமூகத்தின் கோட்பாட்டுத்திரிபுகளை ஓரளவு கண்டுகொள்வதற்கு ராஜ் கெளதமன் போன்ற ஆய்வாளர்களே நமக்கு உதவக்கூடும். ராஜ் கெளதமன் வரிசையில் சோதிப்பிரகாசம்(மார்க்சிய அறிஞர்), கோ.கேசவன்(மண்ணும் மனித உறவுகளும் உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்), பொ.வேல்சாமி, அ.மார்க்ஸ், தோழர் தியாகு(கம்பிக்குள் வெளிச்சங்கள் நூலின் ஆசிரியர்), ந.முத்துமோகன்(மார்க்சியம் பயில்வோம் உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்), ஸ்டாலின் ராஜாங்கம், டி.தருமராஜ்(நான் ஏன் தலித்தும் அல்ல உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்), கோவை ஞானி, இராமானுஜம்(சந்நியாசமும் தீண்டாமையும் உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்), தமிழவன்(திராவிடம் தமிழ்த்தேசம் கதையாடல் உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்) போன்றோரையும் வைக்கிறேன். அப்படியான ஆய்வாளர்களைக் கண்டு கொள்வதும், வாசித்துத் தெளிவதுமே இப்போது அதிமுக்கியம்.

சத்திவேல் ,

கோபிசெட்டிபாளையம்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 04, 2021 11:30

November 3, 2021

மகிழ்வதே போதுமா?

மகிழ்ச்சியும் பொறுப்பும்

அன்புள்ள ஜெ

இன்னும் 18 மாதங்களில் நான் ஓய்வு பெற்று விடுவேன். இது எனது முடிவு. என் முதலாளி நான் சாகும் வரையில் என்னை வேலையில் வைத்திருக்க ஆசைப்படுவார் என்பது எனக்குத் தெரியும். எனினும் 58 முடிந்ததும் நான் மீண்டும் பிறக்க ஆசைப்படுகிறேன்.

தீவிர வாழ்க்கை ரசிப்புத்தன்மையில் இருக்க முடியுமா?

எனக்கு பாடவரும். இளமையில் நான் பெங்களூரில் இசைக்குழுவில் 15 வருடங்கள் பாடியிருக்கிறேன். 80 களில் கணையாழியில் சிறுகதை., கவிதை எழுதியிருக்கின்றேன். 300 புத்தங்கங்களுக்குமேல் எனது வீட்டில் வைத்திருக்கிறேன்.

58 வயதுக்குப்பிறகு எனது எண்ணமெல்லாம், வாழ்க்கையை ரசிக்க மட்டுமே. முன்னமே எழுதியது போல் 18000 கிலோ மீட்டர் இந்திய எல்லையை சுற்றிவருவது, எனது முன்னோர்களின் கோவிலை மீண்டும் சீரமைப்பது, எனது collection இருந்து எல்லா நூல்களையும் படிப்பது, எழுதிப்பார்ப்பது, எனது ZENITH மனுவல் கமெராவில் படம் பிடிப்பது, பாடி ஆல்பம் தயாரிப்பது, கௌஷிகா சக்ரபோர்த்தி கேட்பது, ஊர் ஊராகசுற்றி கோவில்களை எல்லாம் பார்ப்பது, கடைசியில் சும்மா இருப்பது.

ஆண்டவன் எனக்கு வாழ்க்கையை அருளியிருக்கின்றான். ஐந்து ரூபாயில் ஒரு நாளைக்கழிக்கும் காலம் எனது இளமையில் இருந்தது.இன்று இல்லை. நான் சாப்பாட்டுக்குக்கோ அல்லது இருக்கும் இடத்திற்கோ இன்று சிரமப்பப்படத் தேவையில்லை. எனது மகன்கள் நல்ல வேலையில் இருக்கிறார்கள். சொந்த வீடு இருக்கிறது.

நான் இப்போது என்ன செய்யவேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறேன் . ஆனாலும் ஒரு GUILTY பீலிங் இருக்கிறது. சோசியல் சர்வீஸ் செய்ய வேண்டுமா அல்லது என் இஷ்டப்படி வாழ்க்கையை நடத்தலாமா ?

வெங்கட்

அன்புள்ள வெங்கட்

முக்கியமான கேள்வி. வாசகர்களுடனான உரையாடலின் சிறப்பே இதுதான், வாழ்க்கையின் சில அடிப்படைகளை நேருக்குநேர் சந்திக்க வேண்டியிருக்கிறது. நான் இங்கே வெளியிடாத கடிதங்களும் ஏராளம். இக்கடிதங்கள் வழியாக என்முன் வந்தமையும் வாழ்க்கைச்சிக்கல்கள் முடிவில்லாத வேறுபாடுகள் கொண்டவை. தமிழ்ச்சூழலில் வேறெந்த எழுத்தாளரும் இத்தகைய நீண்ட உரையாடலை நிகழ்த்தவில்லை.

சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், அசோகமித்திரம், கி.ராஜநாராயணன் ஆகியோர் நானறிந்து இந்த உரையாடலில் இருந்தனர்.நானும் பலவற்றைப் பற்றி அவர்களிடம் பேசியிருக்கிறேன். ஆனால் இப்போதுதான் தொழில்நுட்பம் இத்தகைய விரிவான வாய்ப்பை வழங்குகிறது. புனைவிலக்கியவாதியாகவும் இது ஒரு பெரும் கொடையே.

உங்கள் வினாவுக்கே வருகிறேன். முதலில் கேள்வியைச் சந்தித்ததும் ‘இதிலென்ன ஐயம்? பயனுற வாழ்தல்தானே வாழ்தலாக இருக்க இயலும்?’ என்ற தயார்நிலைப் பதிலையே சென்றடைந்தேன். சமூகம் பயனுற வாழ்தலென்பது தனிமனிதனின் கடமைதானே? ஆனால் பின்னர் அதுவல்ல பதில் என்று தோன்றியது. அது அரசியல்சரி சார்ந்த பதில் வேதாந்தத்தின் பதில் அதுவாக இருக்க முடியாது. வேதாந்தம் சமூகத்தின் பார்வையில் அதைப் பார்க்காது. தனிமனிதனின் அகத்திலிருந்தே அக்கேள்வியை அணுகும்.

அப்படிப்பார்த்தால் எது உங்களுக்கு உவகையை நிறைவுணர்வை அளிக்கிறதோ அதைச் செய்யவேண்டும் என்பதே சரியான பதில். ஒரு சேவை அல்லது நற்பணியைச் செய்வதனால் மெய்யாகவே உங்கள் அகம் மகிழவில்லை என்றால் அதைச் செய்வது உங்களுக்கு மட்டுமல்ல சமூகத்துக்கே கூட பயனற்றது. நீங்கள் எரிச்சல்கொண்டவர்கள் ஆவீர்கள். அப்பணியை பிழையாக, போதாமைகளுடன் செய்வீர்கள். அதன் விளைவாக எதிர்விளைவுகளைக்கூட உருவாக்கக்கூடும். மகிழ்ச்சியை அளிக்காத செயல் முழுமையடையாது.

ஏனென்றால் மனிதர்கள் வெவ்வேறு இயல்புகொண்டவர்கள். அறிவார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடு கொண்டவர்களால் சேவை, நற்பணிகள் போன்றவற்றை முழுமையாக ஆற்ற இயலாது. அவர்களின் ஆர்வமும் இன்பமும் கற்பதிலேயே இருக்கும். கலைகளில் தோய்பவர்களாலும் அது இயலாது.பயண விழைவுகொண்டவர்களாலும் சேவைகளைச் செய்ய முடியாது. அத்தகையோர் வெறும் தற்காலிக ஆர்வத்தால், தங்களைப் பற்றிய மிகையான அல்லது பிழையான கணிப்பால் சேவைகளைச் செய்ய முற்பட்டு அவற்றை பாதியில் விட்டுவிட்டுச் செல்வது சாதாரணமாக நிகழ்கிறது. சேவை என்பதையே தவறானவையாக மக்கள் நடுவே காட்டிவிடுபவை அவை.

சேவை ஆற்றுபவர்கள் சேவையின் வழியாக நிறைவை அடைபவர்கள். ஆகவே அவர்கள் பொறுமையிழப்பதில்லை, பிறிதொன்றை நாடுவதில்லை. சேவையின் வழியாக தங்களுக்குக் கிடைக்கும்  புகழ் முதலிய பலன்களை கருத்தில் கொள்வதுமில்லை. சேவை செய்கிறோம் என்னும் உணர்வும், செயலில் உள்ள நிறைவுமே அவர்கள் அடையும் பெறுபயன்கள். அவ்வியல்பு உங்களுக்குள் இருந்தால், சேவை தொடர்ச்சியான மனநிறைவை அளித்தான் அதைச் செய்யுங்கள். நான் அவதானித்தவரை நேர்நிலை மனநிலையும், மக்கள்மேல் பிரியமும் கொண்டவர்கள் மட்டுமே சேவைகளைச் செய்யமுடியும்.

உங்களுக்கு இன்பமளிப்பதைச் செய்யுங்கள் என்று சொல்லும்போது ஒன்றை வலியுறுத்த விரும்புகிறேன். அந்த இன்பம் நிறைவையும் அளிக்கவேண்டும். கேளிக்கைகள் இன்பம் அளிக்கும், நிறைவளிக்காது. ஓய்வுபெற்றபின் சினிமா பார்ப்பது, பாட்டு கேட்பது, ஊர்சுற்றுவது என கேளிக்கைகளில் ஈடுபடுபவர்கள் சீக்கிரத்திலேயே சலிப்படைவார்கள். மெல்ல எதிர்நிலை இன்பங்களை நாடுவார்கள். அவற்றில் முதன்மையானது வம்பு. இன்றைக்கு ஊர்வம்புகள் குறைவு, இணையவெளி வம்புகள் பெரும்பங்கு. அரசியல், மதம் என ஏதேனும் ஒரு காரணத்தைக் கற்பித்துக்கொண்டு அந்த வம்புகளில் ஈடுபடத் தொடங்கினால் பின்னர் மீட்பில்லை.

இன்பமும் நிறைவும் அளிக்கும் செயல்களில் ஒரு தனித்தன்மை உண்டு. அவற்றில் ஒரு கொடுக்கல்- வாங்கல் இருக்கும். வாங்குதல் என்பது கற்றுக்கொள்ளுதல். கொடுத்தல் என்பது படைப்பது, கற்பிப்பது. இவையிரண்டும் நிகழ்கையிலேயே உண்மையான இன்பமும் நிறைவும் அமைகின்றன. நீங்கள் என்ன செய்தாலும் அது உங்களுக்கு எதையாவது கற்பிக்கிறதா, உங்களை முன்னெடுக்கிறதா என்று பாருங்கள். நீங்கள் எதையாவது உருவாக்குகிறீர்களா, படைப்பதன்  அல்லது கற்பிப்பதன் இன்பம் அமைகிறதா என்று பாருங்கள். ஆமென்றால் அதுவே உங்கள் வழி.

யோசித்துப்பார்த்தால் ஒருவர் படைப்பதும் கற்பிப்பதும்கூட பெரிய சமூகப்பங்களிப்புதான். ஒரு நல்ல இசையை ஒருவர் அமைத்தால், இசையை பரப்பினால் அது ஒரு கொடைதான். ஒரு படைப்பை உருவாக்கினால் அல்லது முன்வைத்தால் அதுவும் அறிவியக்கப் பணிதான். ஆக்கபூர்வமான எல்லா பணிகளும் ஏதோ ஒருவகையில் சேவைகளே.

மகிழ்ந்திருப்பதைப் பற்றிய ஒரு குற்றவுணர்ச்சி இந்தியர்களாகிய நம்மை ஆட்டிப்படைக்கிறது. ஆன்மிகமற்ற மகிழ்ச்சி குறித்த குற்றவுணர்வு என்பது முக்கியமான ஒன்றே. ஆணவ வெளிப்பாடான ஆடம்பரமும். வெறும் நுகர்வும், கற்றலோ படைப்போ அற்ற கேளிக்கையும் குற்றவுணர்ச்சி அடையத்தக்க செயல்கலே. ஆனால் நிறைவளிக்கும் செயல் என்பது யோகம். அதன் வழியாக அடையப்பெறும் மகிழ்ச்சி என்பது ஓர் அருள்.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 03, 2021 11:35

எங்கெங்கு காணினும் சக்தி- பாலசுப்ரமணியம் முத்துசாமி

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்.

சூரிய ஒளி மின்சார உற்பத்தி என்பது, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சூரிய ஒளித் தகடுகளை, நிலத்தில் நிறுவி உற்பத்தி செய்வதாகும்.

உலக நீர் மேலாண்மை நிறுவனத்தின் பேராசிரியர் துஷார் ஷா, இதை ஒரு உழவர் நலத்திட்டமாக வெற்றிகரமாக வடிவமைத்துள்ளார்.  உழவர்களின் நிலத்தில் ஒரு பகுதியில் (1000 சதுர அடி அளவில்) நிறுவி, அவர்கள் நீர் இறைக்கத் தேவையான அளவுக்கு உபயோகித்த பின்னர், மின் பகிர்வுக் கட்டுமானத்துக்கு அளித்தால், அந்த மின்சாரம், மற்றவர்களின் தேவையையும் பூர்த்தி செய்யும். அப்படி ஒரு அமைப்பை ஏற்படுத்தினால், உழவர்களுக்கு ஒரு மின் இணைப்புக்கு வருடம் 40-50 ஆயிரம் வரை கூடுதல் வருமானம் வரும் என தனது ஆராய்ச்சிகள் மூலம் நிறுவியுள்ளார்.

இது இன்று மத்திய அரசின் திட்டமாகவும் உருவெடுத்துள்ளது.

இது எல்லா உழவர்களுக்கும் கிடைக்கும் பட்சத்தில், சரிந்து, நஷ்டத்தில் இயங்கும் ஊரகப் பொருளாதாரம் மீண்டெழும்.

இதனால் வரும் நன்மைகள் இவை:

அரசு ஒரு உழவருக்கு வருடம் 30-40 ஆயிரம் வரை மின் மானியம் கொடுக்கிறது. அரசின் மீதான இந்த நிதிச்சுமை என்றென்றைக்குமாகநின்று விடும்.உழவர்களுக்கு வருடம் 40-50 ஆயிரம் வருமானம் கிடைக்கும். இது ஒரு சிறு உழவருக்குப்பெரும் உதவியாக இருக்கும்உழவர்களுக்குக்கிடைக்கும் கூடுதல் வருமானம், பொருளாதாரத்திற்கு அதிக ஊக்கம் தரும். This income at the hands of a poor farmer has a better multiplier effect on the economy than the tax concessions given to salaried middle class or to corporate companies.சூரிய ஒளி மின்சாரம் வழி வருமானம் என்பது, பருவ நிலைமாற்றங்கள், விலை வீழ்ச்சி போல வழக்கமாக உழவர்கள் எதிர்கொள்ளும் நஷ்டத்தில் இருந்து பாதுகாக்கும் ஒரு நிலையான வருமானம். அவர்களின் தொழில் ரிஸ்க்குகளுக்கான காப்பீடு என்று கூடச் சொல்லலாம்.பெரும் நிறுவனங்கள் பெரும் நிலப்பரப்பில் மெகா சூரிய ஒளிப் பூங்காக்களை நிறுவி, மின் உற்பத்தி செய்கையில், மொத்த நிலமும் வீணாகிறது. ஆனால், உழவர்கள், சூரிய ஒளித்தகடுகளுக்குக்கீழே நிழல் விரும்பும் பயிர்களைப்பயிர் செய்கிறார்கள். இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகமான நாட்டில், தேவையற்ற நில விரயம் தடுக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, தமிழகத்தில், 600 மெகா வாட் சூரிய ஒளிப் பூங்கா ஒன்று உள்ளது. அது 600 ஹெக்டேர் நிலப்பரப்பில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்த 600 ஹெக்டேர் நிலமும், வேறெந்தப் பயனும் இல்லாமல் உள்ளது. அதே அளவு மின் உற்பத்தி, ஒரு உழவருக்கு 10 கிலோ வாட் எனப் பிரித்துக் கொடுத்தால், 60 ஆயிரம் உழவர்கள் பயனடைவார்கள். 600 ஹெக்டேர் நிலப்பரப்பு வீணாகாமல், அதில் வேளாண்மையும் தொடர்ந்து நடக்கும்.இது பற்றி நான் சில ஆண்டுகளுக்கு முன்பு உங்களுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தேன். அதை நீங்கள் பிரசுரித்திருந்தீர்கள் (எங்கெங்கு காணினும் சக்தியடா.. | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in))நண்பர் சமஸ் புதிதாகத் தொடங்கியுள்ள, ‘அருஞ்சொல்’, மின்னிதழில், இது பற்றியவிரிவான கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறேன்(உழவர் எழுக! | அருஞ்சொல் (arunchol.com)).இது தொடர்பாக, இந்த பொதுநலக் கொள்கைகையை, வடிவமைத்து, வெற்றிகரமாக நிறைவேற்றி, அரசின் சூரிய ஒளித்திட்டஉருவாக்கத்தில் முக்கியப் பங்கு வகித்த பேராசிரியர்.துஷார் ஷா வுடன்ஒரு பேட்டி எடுத்து, அதை நண்பர் சமஸ் அருஞ்சொல்லில் வெளியிட்டார் (விவசாயிகளுக்கான சூரிய மின்சாரம்: துஷார் ஷா பேட்டி | அருஞ்சொல் (arunchol.com))பேட்டியைப் படித்த தகடூர் புத்தகப் பேரவை வழிகாட்டியும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான, மருத்துவர் செந்தில் குமார், ஒரு பின்னூட்டம் அனுப்பியிருந்தார். அதில் ஒரு பகுதியை அவர் அனுமதியுடன் இங்கே தருகிறேன்

“தோழர்,

துஷார் ஷாவின் பேட்டியை படித்தேன்.‌

எங்கள் மருத்துவ மனையின் மேல் மாடியில் இருபத்தி ஐந்து லட்ச ரூபாய் செலவில் சூரிய ஒளி உற்பத்தி செய்யும் அமைப்பை ஏற்படுத்தி இருக்கிறேன். ஷேர் மார்க்கெட், சிறு தொழில்கள் என்றெல்லாம் நான் முதலீடு செய்து இருக்கிறேன். இவை எதிலும் கிடைக்காத மிகப்பெரிய லாபத்தை சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி செய்வதற்காக செய்த முதலீடு எனக்குத் தருகிறது

ஒவ்வொரு மாதமும் மின்சாரக் கட்டணத்தில் ஒரு லட்ச ரூபாயை மிச்சம் பிடிக்கிறேன். இதற்குக் காரணம் ரிவர்ஸ் மீட்டர் வைத்திருப்பது தான். நாங்கள் உற்பத்தி செய்யும் மின்சாரம் மின் பகிர்மான கட்டமைப்புக்குச் சென்றுவிடுகிறது. எவ்வளவு மின்சாரம் உற்பத்தி செய்கிறோமோ அதைக் கழித்து கொண்டு மீதம் மின்சாரத்துக்கு மட்டுமே நாங்கள் கட்டணம் செலுத்துகிறோம்.

“படிம எரிபொருளை பயன்படுத்தக்கூடாது. புவி வெப்பமடைதலை தடுக்க வேண்டும்” என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் தமிழக அரசு சூரிய ஒளி மின்சாரத்தை உற்பத்தி செய்வதை ஊக்கப்படுத்துவதற்குப் பதிலாக தடைகளை ஏற்படுத்துகிறது. இப்பொழுது ரிவர்ஸ் மீட்டர் சிஸ்டம் கிடையாது. பெரிய அளவில் மானியம் எதுவும் கிடையாது”.

இது பற்றி ஆர்வம் காட்டிய நண்பரும் பாடலாசிரியருமான யுகபாரதி, அவர் நண்பரான தமிழ்க்கேள்வி செந்தில் அவர்களுடன் தொடர்பு கொள்ள வைத்தார். இது பற்றிய ஒரு தொலைக்காட்சிப் பேட்டியும்விரைவில் வர இருக்கிறது.அரசில்சம்மந்தப்பட்டவர்களிடமும்இது பற்றிப் பேசும் வாய்ப்புக் கிடைத்தது. அவர்களும் இதை நேர்நிலையான ஒன்றாகப் பார்க்கிறார்கள்.நண்பரும் இளம் காங்கிரஸ் தலைவருமான தாராபுரம் முருகானந்தம் அவர்களிடமும் பேசினேன் – அவர், இத்தகவலை உழவர் தலைவர்களிடம் கொண்டு செல்வதாகக்கூறியுள்ளார்.இது ஒரு சரித்திரத் தருணம். உழவர்கள் ஒன்றிணைந்து, இதை ஒரு லாபகரமான திட்டமாக, அரசிடம் கேட்டுப் பெற வேண்டிய தருணம். இதை விட்டுவிட்டால், உழவர்கள் தொடர்ந்து தில்லிக்கும், சென்னைக்கும் காவடி எடுத்து, மானியப் பிச்சை கேட்டுக் கொண்டிருக்கும் அவல நிலைதான் தொடரும்.இந்தத் திட்டத்துக்கு எதிராக, பெரும் தனியார் முதலாளித்துவ சக்திகள் விளையாடிக் கொண்டிருக்கின்றன.. ஏனெனில், சூரிய ஒளி மெகா பார்க்குகள் அவர்களுக்கு பெரும் லாபம். ஆனால், உழவர்களுக்கோஅது வாழ்வாதாரத்தையே மீட்டெடுக்கும் ஒரு புதுமையான தொழில் திட்டம்.

எனவே இது பற்றிய விழிப்புணர்வை எல்லாத் தளங்களிலும் கொண்டு செல்லுதல் அவசியமாகிறது. எனவே இந்தக் கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன்

 

அன்புடன்

பாலசுப்ரமணியம் முத்துசாமி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 03, 2021 11:32

அழிசியின் நான்கு நூல்கள் வெளியீட்டு விழா

நான்கு நூல்களும் எழுத்து இதழ்த் தொகுப்பும் அழிசி இணையதளம் 

நெல்லையில் சென்ற ஞாயிறு அழிசி பதிப்பகத்தின் நான்கு நுால்கள் வெளியிட்டு விழா நடைபெற்றது. புதுமைப்பித்தனின் நாரத இராமாயணம் நுாலினை நான் வெளியிட நண்பரும் இளம் படைப்பாளியுமான சிவசித்து பெற்றுக்கொண்டார்.

இவ்விழாவினால் எனக்கு இரு நன்மைகள். ஒன்று நாரத இராமாயணத்தை முதல் முதலாக வாசித்தே ஆகவேண்டிய நெருக்கடி. வாசித்து முடித்து மனதிற்குள் அசைபோட்டுக் கொண்டே தென்காசியில் இருந்து நெல்லைக்கு எண்ட் டூ எண்ட் பஸ் ஏறினேன்.

இரண்டு பகுதிகள் கொண்டது நா.இ. முதல் பகுதி முழுக்க அதிரடிப் பகடிதான். பட்டாபிசேகத்திற்கு பிறகான வாழ்வின் பொருள் குறித்து வெறுமை கொண்டு மீண்டும் ஒரு அரக்க துவம்சத்திற்காக ஆள்கள் தேடி இராமனும் அனுமனும் சீதையோடு வடக்கே செல்லும் காட்சிகள் மனதில் விரிந்து வந்தன. சீதையை அழைத்துச்சென்று குடில் அமைத்து இராவணன்கள் வந்து துாக்கிச்செல்ல மாட்டார்களா என்றும் அதன் பின்னர் சீதையை மீட்டெடுக்கும் ஒரு இலட்சியம் தனக்கு வாய்க்காத என்றும் மறைந்து நின்று காத்திருக்கிறார் இராமர். சித்திரங்கள் மனத்திரையில் விரிய உதடுகளுக்குள் பொங்கி வந்த சிரிப்பை அதக்கிக்கொண்டே பயணித்தேன்.

அதிகார மையத்தை உலுக்குதல் புதுமைப்பித்தனுக்கு சர்வசாதாரணமாக கை கூடுயிருக்கிறது. இராமன் சரயூ நதிக்குள் தற்கொலை முயற்சி மேற்கொண்டு, தோற்றுப்போவதாக கற்பனை செய்து எழுதுவது அதீத நெஞ்சுரந்தான். புதுமைப்பித்தனைப் போல இன்று நம்மால் எண்ணிப்பார்க்கக்கூட முடியாது. உண்மையை எழுதிவிடவும் முடியாது.

இரண்டாவது, நண்பரும் எழுத்தாளருமான சிவசித்துவை நேரில் சந்தித்தது. இராயகிரிதான் சொந்த ஊர் என்றார். இதை நான் எதிர்பார்க்கவில்லை. கெங்கை அம்மன்கோவில் தெரு என்றார். எனக்கு சட்டென்று தெருவை ஊகிக்க முடியவில்லை. தற்போது வாசுதேவநல்லுாரில் வசித்து வருகிறார். அவரின் முதல் சிறுகதை தொகுப்பை மணல்வீடு வெளியிட்டு உள்ளது. கூடவே வேட்டை நாய்கள் வளர்ப்பு சார்ந்த தனித்த அனுபவங்கள் அவரிடம் இருக்கின்றன. அவரை இதுவரை வாசித்திருக்க வில்லை. அவரின் அறிமுகம் மகிழ்ச்சி அளித்தது.

அன்றாடம் புழங்கிக்கொண்டிருந்த நெல்லை இன்று விருந்தினரைப்போல சென்று வரக்கூடியதாக மாறிவிட்ட வருத்தம். பழைய பேட்டையைத் தாண்டியதும் ஒட்டகச் சவாரிதான். அரவிந்த் கண் மருத்துவமனை நிறுத்தத்தில் இறங்கி நிகழ்வு நடக்க இருந்த இடத்திற்கு நடந்தே சென்றேன். அதற்குள் அழிசி ஸ்ரீ போனில் அழைத்து உறுதி செய்து கொண்டார்.

வாசலில் ஸ்ரீ நின்றுகொண்டிருந்தார். இரண்டாவது மாடியில் கூட்டம். மிகச்சிறிய அறை. பத்துப் பதினைந்து பேர்கள் அமரும் இடவசதி. மழை நசநசப்பு.

மெல்ல நண்பர்கள் வர ஆரம்பித்தனர். பி.கு. மதார் ஏற்கனவே அறிமுகம் ஆனவர்கள். மதார் புதுமாப்பிள்ளைக்கு உரிய திடீர் பூரிப்பில் காணப்பட்டார்.

முதல் நுாலினை வெளியிட்டு புதுமைப்பித்தனின் தனித்தன்மைகளில் ஒன்றான சீண்டும் தன்மை, புண்படுத்தும் தன்மை குறித்து சுருக்கமாக பேசினேன்.

எனக்கே இரண்டு சொந்த அனுபவங்கள் இருந்தன. சனிக்கிழமை ஒரு வாசக நண்பர் என்னை அழைத்துப் பேசினார். தற்போது சொந்தமாக விவசாயம் செய்து, தற்சார்பு வாழ்க்கையை மேற்கொண்டிருக்கிறார். இருபத்தைந்தை ஒட்டிய வயது. தமிழின் முக்கிய படைப்பாளிகள் அத்தனைப்பேரிடமும் வாசக அறிமுகம் உள்ளவர். நண்பர் கோவில்பட்டி சிவகுமாருக்கும் அவர் நண்பர்.

“அண்ணே..நீங்க கொடுத்த இன்டியன் பாலிட்டிதான் படிச்சிட்டு இருக்கறேன்..” என்றார் போனில் எடுத்த எடுப்பில்.

“ஏம்பா..மறுபடியும் வேதாளம் முருங்கை மரம் ஏறிடிச்சு.. தொழில் அதிபரா வருவேனு நான் எதிர்பார்த்திட்டு இருக்கேன். மறுபடியும் அரசு வேலை முயற்சி?” என்றேன்.

“இன்னைக்கு புதுமைப்பித்தனோட ஒரு வரியைப் படிச்சேன்னே..விவசாயம் சோம்பற் தொழில்னு எழுதியிருக்கார். ஷாக்காயிடுச்சு..அதான்” என்றார்.

 

அவர் யாரைக்குறித்து அவ்வரிகளை எழுதினார். அது யாருக்குப் பொருந்தும் என்று விளக்கினேன். நுாறாண்டு பழைய எழுத்து புதுமைபித்தனுடையது அது இன்றும் வாசிக்கப்படுகிறது. வாசிக்கின்றவரை நிலைகுலையச் செய்கிறது.நாள்தோறும் ஒரு பு,பி.கதை என்று மீண்டும் வாசித்துக் கொண்டிருக்கிறேன். ஆச்சரியமும் வியப்பும் அதிகரித்தபடிதான் இருக்கிறது. அவரின் எழுத்தில் உள்ள புத்தம்புதுத்தன்மை இன்னும் ஒரு நுாற்றாண்டு கழிந்தாலும் மங்கிவிடப்போவதில்லை. காலத்தின் களிம்பு ஏறும் சாத்தியமே இல்லை. காலத்தை வெல்லுதல் மேதைகளுக்கே உரியது.

நண்பர் பி.கு. கரையாளர் நுாலினை வெளியிட்டு விரிவாக ரசனை விமர்சனம் செய்தார். கொஞ்சம் குண்டாகி விட்டாரோ என்று தோன்றியது. அல்லது அவர் அணிந்திருந்த சட்டை அவ்விதம் காட்டியதோ? அரங்கம் நிறைந்து விட்டது. என் சார்பாக என் நண்பர்கள் மாரிராஜா, சொல்லுடையார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழா முடிந்தபோது மழை ஆரம்பித்து விட்டது. எனவே வந்திருந்தவர்கள் காத்திருந்தார்கள். அந்த காத்திருப்பின் போது ஸ்ரீ, சிவசித்து, பி.கு. மூன்று பேர்களையும் தங்களின் வாசிப்பு எழுத்து அனுபவங்கள் குறித்து சிறிது பேசக் கேட்டுக்கொண்டோம். சிறப்பாக பேசினார்கள்.

விழாவில் பங்கேற்றவர்களில் நான்கு ஐந்து பேர்கள் மட்டுமே ஐம்பதுகளை ஒட்டியவர்கள். மிகுதியும் இளைஞர்கள். வாசிப்பின் மீது ஆர்வமும் எழுதும் உத்வேகமும் கொண்டிருப்பவர்கள்.எழுதக்கூடியவர்கள் அதைவிட தீவிரமாக வாசிக்கக் கூடியவர்கள். அவர்களுக்கு சந்திக்கும் இடமாக ஓரிடம் என அச்சிறு அறையே விரும்பத்தகுந்ததாக இருந்தது.

நுால் வெளியீட்டினை ஸ்ரீ ஒருங்கிணைத்தார். அவரின் மெல்லிய அசோகமித்திரக் குரலும், உடல்மொழியும் ரசிக்கும் படியாக இருந்தன. கைகளைக்கட்டி, நின்று கொண்டே இருந்தார். அது ஒன்றுதான் தர்மசங்கடப்படுத்தியது.

வந்திருந்தவர்களில் சிலர் ஸ்ரீயை ஆச்சரியமாக விசாரித்தனர். அவர் பதிப்பாளராக வந்து சேர்ந்த முன்கதைச்சுருக்கத்தை அறிய ஆவல் கொண்டிருந்தனர். எனக்கே அவர் இன்னும் தீரா ஆச்சரியந்தான். முதல்நாள் இரவில்கூட நானும் நண்பர் சொல்லுடையாரும் அவரைக்குறித்துப் பேசி ஆச்சரியம் அடைந்திருந்தோம்.

சென்றாண்டு நடந்த புத்தகவிழாவில்தான் அவர் அறிமுகம். சுனில் கிருஷ்ணனை சந்திக்க ஸ்ரீ வந்திருக்கிறார். அவரின் தயங்கிய நடையும் சைக்கிளை உருட்டிக்கொண்டு வந்த நிதானமும் மாம்பலத்தில் அசோகமித்திரனைப் பார்த்ததைப்போல இருந்ததாம்.

சமீபத்தில் எம்.யுவன் வியப்போடு பகிர்ந்து கொண்டதாக கோவில்பட்டி சிவக்குமார் எனக்கு ஒரு தகவல் சொன்னார். ஒரு ஜைனத்துறவியின் நிர்வாணத்தின் முன் யுவன் அடைந்த தரிசனம் அது. அந்த ஜைனத்துறவி அனைத்தையும் துறந்துவிட்டதன் மூலம் அனைத்தையும் அள்ளிச்சேர்க்க வாழ்ந்து கொண்டிருக்கும் நமக்கு ஒரு பெரிய அறைகூவலாக இருக்கிறார்.எனக்கும் அழிசி ஸ்ரீயை எண்ணிப்பார்க்க அந்த வியப்புதான் ஏற்படுகிறது.

ஒட்டுமொத்த உலகமும் பொருள் வெறி கொண்டு ஒரே திசையில் ஓடிக்கொண்டிருக்க ஸ்ரீயைப் போல அரிதாக சிலர் தங்களின் உள்ளார்ந்த இசைவிற்கு ஏற்ப வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது முக்கியமான காரியம்.

பொருளாதார ரீதியாக சவால்களும் கையறுநிலைகளும் இருக்கலாம். அது கால காலமாக தமிழ் இலக்கியம் அளிக்கச் சாத்தியமுள்ள தண்டனைகள். ஆனால் அவையெல்லாம் பெரும் தடைகளே அல்ல. இன்று இலக்கியத்தின் மீது இலக்கியப்பித்தை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு களப்பணியாற்றுபவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவு. பெரும்பாலானவர்களுக்கு இலக்கியம் ஒரு மவுசு. ஆடம்பர அடையாளம். ஒரு கோடியில் வீடு கட்டிடுவதைப்போன்ற ஸ்டேட்டஸ் இம்ரூவ்மெண்ட். சினிமாவிற்கான விசிட்டிங் கார்ட். அரசியல் எண்ரிக்கான லைசன்ஸ். ஆனால் அழிசிக்கு அவ்விதம் அல்ல.உ.வே.சா, சி.சு.செல்லப்பா, க.நா.சு அ.மி. என்று இடையறாத லட்சியவாதத்தின் தொடர்ச்சி. சமகாலக்கண்ணி.

ராயகிரி சங்கர்

https://mayir.in/

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 03, 2021 11:31

கேளாச்சங்கீதம்- கடிதங்கள் 7

கேளாச்சங்கீதம் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

கேளாச்சங்கீதம் பற்றி நண்பர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தேன். அவர்களில் பலபேருக்கு அந்தக்கதை என்ன உணர்வுநிலை கொண்டிருக்கிறது என்பதே புரியவில்லை. சிலர் அது ரொம்ப பழைய கதை, வசியம் என்பதெல்லாம் பழைய சமாச்சாரம் என்றார்கள். ஆணுக்கும் பெண்ணுக்குமான உறவில் ஏராளமான புதிய விஷயங்கள் வந்துவிட்டன என்று சொன்னார்கள் .டேட்டிங் போன்ற பல விஷயங்களைக் குறிப்பிட்டனர்.சிலர் மூடநம்பிக்கையைப் பேசும் கதை என்று சொன்னார்கள்.

நான் அவர்களிடம் சொன்னேன்.நல்ல கதை என்பது காலந்தோறும் மாறும் ஒரு விஷயத்தைப்பற்றிப் பேசுவது இல்லை என்று. என்றைக்கும் உள்ள ஒரு அடிப்படையான சிக்கலைத்தான் அது பேசும். இந்தக்கதை பேசும் இந்த பித்துப் பிடித்தது போன்ற காதல் எப்போதுமே இங்கே உள்ளதுதான். சங்கப்பாடல்களில் அதைப்பற்றி பேசியிருக்கிறது. காதல்பித்து பிடித்தவன் மடலேறுவதைப்பற்றிக்கூட சொல்லியிருக்கிறது.இன்றைக்கும் அது இருக்கிறது. காதலுக்காக கொல்கிறார்கள். சாகிறார்கள். அந்த பித்துநிலை என்ன என்பதும் அதன் இனிமையும் அவஸ்தையும்தான் கதையில் உள்ளது என்று சொன்னேன். வசியம் என்பது ஒரு குறியீடுதான் என்று சொன்னேன்.

அதன்பிறகு புரிந்தது, அவர்களுக்கு மனம் சார்ந்த காமமே இல்லை. அதை அவர்கள் அறிந்திருக்கவே இல்லை. அவர்கள் அறிந்த காமம் முழுக்கமுழுக்க உடலில்தான். ஒரு உடல் உபாதைதான் அது. அதோடு வெற்றிபெறுவதற்கான ஒரு போட்டி. அப்படிப்பட்டவர்களுக்கு இந்தக்கதை புரியாது.இப்போதெல்லாம் சின்ன வயசிலேயே போர்ன் பழகி விடுகிறது. அப்படியே மனம் உருவாகி விடுகிறது. எழுத்தாளர்களிலும் பெரும்பாலானவர்கள் எழுதுவது வெறும் சதைக்காமத்தைத்தான். இந்தக்கதை வேறொரு இடத்தில் இருக்கிறது.

ஆனால் இந்தவகையான மனிதர்கள் அன்றும் இன்றும் இருக்கிறார்கள். இன்றும் மனநலசிகிச்சைக்கு போய்க்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு தெரியும் இந்தக்கதையின் தீவிரம். ‘இனித்து இனித்துச் சாவது’ என்றால் என்ன என்று அவர்களுக்குத்தான் புரியும்

எம்.செந்தில்குமார்

 

அன்பு ஜெ,

புறத்துறுப்பெல்லாம் எவன் செய்யும் யாக்கை அகத்துறுப்பு அன்பிலவர்க்கு என்ற குறளை இக்கதை கொண்டு திறக்க முற்பட்டேன். புறமாகியதை எவன் யாத்ததோ என்று வியக்கும் வள்ளுவர் அகத்தை மட்டும் ஐயமேயில்லாமல் அன்பு என்ற உணர்வால் நிறைக்கிறார். அன்பு ஓங்கி ஓங்கி பிரேமையாகிறது. பிரேமையின் உச்சத்தில் பக்தியாகக் கனிந்து அது சரணடைகிறது. அங்கிருந்து மீளலாம். மீளாமலும் அந்த உச்ச நிலையிலேயே கிடந்து கரையலாம். “ஒருகணக்கிலே பாத்தா கடைசியிலே அந்த விடுதலை கிடைக்காமலேயே போறது நல்லதில்லியா?” எனும்போது சிலிர்த்துக் கொண்டேன். உங்கள் எழுத்தின் வழியான பயணம் கைவெஷம் கொடுத்தது போல தான் இருக்கிறது. எதர்க்கெடுத்தாலும் உங்கள் வரிகளை உதாரணம் காட்டுவதைப்பற்றி சில நண்பர்கள் குறைபட்டார்கள். இது என் குற்றமா? இல்லை. கைவெஷம் வைத்த உங்கள் குற்றம் தான். கம்பராமாயணம் படிக்கப் போனால் அங்கும் வெண்முரசு உதாரணங்கள், தருணங்கள், தத்துவங்கள் என சிலாகிக்கிறோம். கரமசோவ் சகோதரர்கள் வாசிக்கப்போனால் அங்கு நடக்கும் உச்சகட்ட விவாததத்தின் நுனியிலும் வெண்முரசைப் பேசுகிறோம்.

“இது ஒரு மதுரமாக்கும். இதிலே ஒரு சொட்டு குடிக்காத மனுசன் இல்லை. சிலருக்கு அந்த தேவமதுரம் கொடம் கொடமா கிட்டிருது. அமிருதம் மிஞ்சினா வெசம். அவ்ளவுதான்… மத்தவன் உங்களை நினைச்சு பொறாமைப்படத்தான் செய்வான்” என்பதை ஒரு நிலை எனலாம் ஜெ. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பித்து, ஒவ்வொன்றின் மேல் பித்து வருகிறது. ஒருவகையில் இந்த பித்து தான் நம்மை தீவிரமாக பயணிக்கச் செய்கிறது. சிறு வயது முதலே புத்தகங்களின் மீது கல்வியின் மீது தீராப்பித்து எனக்கு. இலக்கியம் பற்றியெல்லாம் அறிந்திராத போது பள்ளிப் புத்தகங்களே கற்றல் என்று நினைத்த அந்தப் பருவத்தில் கையிலிருந்த அனைத்து புத்தகங்களின் மீதும் காதல் கொண்டேன். என் தனிமையை அந்த புத்தகங்களால் நிறைத்தேன். சின்ன விடயம் அறிந்து கொண்ட கணந்தோறும் வியப்பின் உச்சிக்கு செல்வேன். தனியாக அதைப்பற்றிய புலம்பலைக் கொள்வேன். கல்லூரியிலும் இப்படித்தான் இருந்திருக்கிறேன்.

எனக்குப் புரியாத ஒரு கணக்கை தோழி ஒருத்தி விளக்கிக் கொண்டிருந்தாள். கணக்கு பாடத்தை கற்பனையில் விரித்து தவழ விட்டுக் கொண்டிருந்தாள். அதன் பொறி வந்து என்னை முட்டிய நேரம் அழுதேன். அவள் திகைத்துவிட்டாள். அவள் ஒரு பூனே பெண். ஏதும் மொழிச் சிக்கலோ என்று அவள் பயந்து “ஹே ரம்யா இஸ் எவ்ரிதிங் ஓகே” என்றாள். இல்ல இன்னைக்கு தான் இந்தக் கணக்கை என் வாழ்வோடு தொடர்பு படுத்தினேன்படுத்தினேன் என்றேன். அவள் சிரித்துவிட்டாள். அதே போல அபுனைவு புத்தகங்களை வெறி கொண்டு படித்துக் கொண்டிருந்த சமயம் ஐன்ஸ்டீன் பற்றிய புத்தகத்தை நண்பன் ஒருவன் கொடுத்திருந்தான். ஐன்ஸ்டீனின் தத்துவப்புள்ளியை E=MC2 ல் கண்டடைந்தேன். எல்லா அறிவியலாலரும் சென்று சேரும் தத்துவப்புள்ளியை கண்டடையுந்தோரும் உணர்வுப் பெருக்குக்கு ஆளானேன். வியந்து பலரிடமும் சிலாகித்திருக்கிறேன். போட்டித்தேர்வுக்கு படித்த காலகட்டம் எனக்கு ஒரு வாழ்க்கையை வாழ்ந்து முடித்த காலகட்டத்தைத் தந்தது. ஒவ்வொரு நாளும் புதிய விடயம் ஒன்று வந்து சேர்ந்தது. அது நான் காணும் உலகை வேறொன்றாகக் காட்டியது. முதல் இரண்டு வருடங்கள் பித்தின் உச்சத்தில் இருந்திருக்கிறேன். அறிதல்களைக் கோர்த்துக் கொண்டே வந்து காணும் சிறு விடயங்கள் தோறும் அதன் ஆதியைத் தொட்டு பிரமித்து நிற்பேன். ஒவ்வொன்றுக்கும் இடையே உள்ள நுண்ணிய சரடை கோர்த்துக் கொண்டே வருவேன். அறிவியலில் “சலனம்” என்ற கருத்துருவைக் கண்டு வியந்து அதை சமூகவியலில் கோர்த்திருக்கிறேன். இயற்கை மட்டுமல்ல மானுடமே சலனத்தால் இயங்குகிறது என்ற கருத்துருவை அடைந்தேன். உயர்வு தாழ்வு, மகிழ்ச்சி துக்கம், வளமை வறுமை, கல்வி பேதைமை என இருவேறு முனைகளுக்கு இடைப்பட்ட சலனமே சமூகத்தை இயக்குகிறது. இதையே அறிவியலில் அழுத்தம், வெப்பம், ஆற்றல், விசை, வீச்சு, முடுக்கம் என பல வகையான கோட்பாடுகளாகக் கற்கிறோம் என்று நானே அறிந்த கணம் சிலிர்ப்பானது. இது மிகச் சாதாரணமாக பிறருக்கு இருக்கலாம். பலரும் முன்னமே அறிந்திருக்கலாம். ஆனால் நான் கண்டடையும்போது பிரமிப்பு மேலோங்கியது. ஆனால் அவையெல்லாம் புனைவிலக்கியம் வாசிக்க ஆரம்பித்ததும் சிறிய உணர்ச்சிகளாக ஆனது.

இன்று கைவெஷம் என்று சொல்லுமளவுக்கு மூழ்கியிருப்பது உங்கள் படைப்புகளில் தான். வெளிவர விருப்பமில்லை. இந்த பித்தின் இனிமையை விளக்க இயலவுமில்லை. முதல் முறையாக அடைக்கலாங்குருவி உங்கள் அறையில் கூடு கட்டியதை வாசிக்கும் போது உணர்ச்சிகரமானேன். பிரபஞ்சப்பசி, என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருந்தீர்கள். அந்தக் குஞ்சு உங்கள் சன்னலின் விளிம்பில் நின்று ஆகயத்தை பார்த்துக் கொண்டிருந்ததை வானை நோக்கி அது ஊழ்கத்தில் இருந்ததாகக் கூறினீர்கள். “வாழ்வோ சாவோ அது வானுக்குரியது” என்றீர்கள். அந்த எஞ்சும் கூட்டில் என்னவெல்லாம் கரைத்தேன் என்று சொல்ல இயலவில்லை. படித்த அன்று அழுது கொண்டே இருந்தேன். ‘ஏன் இப்படி அழற’ னு வீட்டிலுள்ளவர்கள் கேட்டார்கள். ‘குருவி’ என்று அது இல்லாத ஜன்னலைக் காணித்தேன். “புரியல” என்றார்கள். “நம்ம ஜன்னலுக்கும் ஒரு குருவி வேணும்” என்று அழுதேன். சுற்றியும் பார்த்தேன். கூடு கட்டுவதற்கான எந்த சுவடுமல்லாத பால்கனி இது. அங்கு நின்று ‘இங்க ஒரு குருவிக் கூடு வேணும்’ என்று ஏங்கினேன். நாளடைவில் அதை மறந்தும் போனேன். சரியாக ஒரு வருடத்திற்குள்ளாக அதே மாதிரி ஒரு அடைக்கலாங்குருவி ஒரு அழகான கூட்டைக் கட்டியது. வெறுமே துணி காயப்போடும் கயிறுக்கும் சுவற்றுக்கும் நடுவில் “ஒரு அட்டைப்பாக்கு மாதிரி அம்பிட்டு சின்ன குருவி”. அதன் மூன்று குஞ்சுகள்  பிறந்திருக்கும்போதும் ‘டைனோசர் குட்டிகள்’ என்று கூறி அழுதேன். அழுதுகொண்டே இருந்தேன். இன்று பேருந்தின் பயணத்தில் காணும் சிறு செடி மனதை நிறைத்துவிடும். சின்ன தூரல் அகத்தை பொழியச் செய்யும். அலுவலக நேரத்தில் எப்போதாவது தென்படும் சிறு குழந்தையின் புன்னகை என்னை மூழ்கடித்துவிடும். கேளாச்சங்கீதத்தைக் கேட்டுக் கொண்டேயிருக்கிறேன். பொங்கிக் கொண்டே இருக்கிறேன். எதுவும் என்னை கவலைக்கு உள்ளாக்குவதில்லை. கையாளமுடியாத கவலைகளிலிருந்து என்னை உடனே விடுவித்துக் கொள்ள முடிகிறது. யாவற்றுக்கும் பதில் உங்களிடமிருந்து வருகிறது. பதில் என்பதை விட உங்கள் எழுத்துக்களுடன் உரையாடுகிறேன் எனலாம்.

“பிள்ளே, இங்க மனுசங்கள பாத்தா ஒவ்வொருத்தரும் தனித்தனியா அலையுத மாதிரி தோணும். ஆனா அத்தனைபேரையும் ஒண்ணாச் சேத்துக் கெட்டிப்பின்னி வச்சிருக்கு. சொந்தம், பந்தம், பாசம், அன்பு, காதல், காமம்னு என்னென்னமோ இருக்கு. அது ஒரு மாதிரி ஒரு பசைன்னு வையுங்க. இல்ல ஒரு வலைன்னு சொல்லுங்க. அதனாலேதான் மனுச வாழ்க்கை இங்க நடக்குது. மனுசங்கள்லாம் சேந்து ஒற்றைக்கெட்டா இங்கிண வாழுறாங்க… “ என்றீர்கள். அதை உணர்கிறேன். எல்லோரிலும் என்னைக் காண்கிறேன். என்னில் பிறரைக் காண்கிறேன். இன்னும் உங்களில் மூழ்கி முடியவில்லையான பயணமிது. “தேனுதான் தேனீயை ஒண்ணாச் சேந்து ஒற்றைக்கூடா வச்சிருக்குது. தேனீ தேனிலே பிறந்து வளருது. தேன் தேடி அலையுது. தேனிலே சாவுது… அந்த தேனுதான் இது. இது அமிர்த மதுரம். நோயா வரும். சாவா வரும். அப்பமும் இது மதுரம்தான்” என்ற வரிகளின் மதுரத்தை என் வாழ்விற்கு அளித்ததற்காக மிக்க நன்றி ஜெ. கைவெஷமாக்குமே. அது நல்லது என்று கண்டேன்.

பிரேமையுடன்

இரம்யா.

கேளாச்சங்கீதம்- கடிதங்கள்1

கேளாச்சங்கீதம் – கடிதங்கள்-2

கேளாச்சங்கீதம், கடிதங்கள்- 4

கேளாச்சங்கீதம் – கடிதங்கள்-3

கேளாச்சங்கீதம்- கடிதம் 5

கேளாச்சங்கீதம், கடிதம்-6

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 03, 2021 11:31

தவம் நிறைதல்- சக்திவேல்

தொடர்புக்கு: info@vishnupurampublications.com

அன்புள்ள ஜெ

புனைவு களியாட்டின் நூறு கதைகளை அவை வெளி வந்து கொண்டிருந்த நேரத்தில் பார்த்தாலும் நான் வாசிக்கவில்லை. இன்றுவரை அவற்றை மொத்தமாக வாசிக்கவில்லை. ஏறத்தாழ முக்கால்வாசி கதைகளை வாசித்துள்ளேன். இன்னும் இருபது கதைகளாவது இருக்கும் வாசிக்க.

இப்போது ஏன் அப்படி செய்தேன் என யோசிக்கையில் இயல்பாக எழுந்து வரும் விடையென்பது இளையவர்களுக்கு உரிதான அசட்டு ஆணவம் அன்றி வேறல்ல என்றே தோன்றுகிறது. அன்று ஒரு கதையை வாசித்தவுடன் அப்படியே உணர்வெழுச்சியும் கருத்துகளும் மண்டையில் இருந்து கொட்ட வேண்டும் என நினைத்தேன். அந்த நிலையை அடையும் வரை தொடர்ச்சியாக வாசிக்க வேண்டியதில்லை என நினைத்து கொண்டேன். இன்று பார்க்கையில் என்னை பார்த்து நானே சிரித்து கொள்கிறேன். எத்தனை மடத்தனமான விஷயம் அது !

எல்லா கதைகளும் வாசித்தவுடனே திறந்துகொள்ளுமளவுக்கு நமக்கு வாழ்க்கை அனுபவமோ வாசிப்பு பின்புலமோ இல்லாமல் இருக்கலாம்.  அவையிருந்தும் கதை கேட்கும் கூர்ந்த கவனத்தை கொடுக்காமல் போகலாம். சில கதைகள் அவற்றின் இயல்பினால் நமக்குள் விதையென விழுந்து வளர செய்யலாம். அதனால் ஒரு வாசகன் தொடர்ச்சியாக சிறுகதைகளை கூர்ந்து வாசித்து கொண்டே இருக்க வேண்டும். அதுவே வாசிப்பின் ரசனையும் கூருணர்வும் மேம்படுவதற்கான வழி.

இவையெல்லாம் உங்கள் கட்டுரைகளிலும் நவீன தமிழிலக்கிய அறிமுகம் நூலிலும் வெவ்வேறு சொற்களில் தாங்கள் கூறியவை தான். ஆனால் எப்போதுமே சொற்கள் நமது அனுபவமாகி பின் நமது அறிதலாக சொந்த சொற்களில் வெளிப்படுவதற்கு சிறிது காலம் தேவைப்படுகிறது. என்ன தான் ஆசிரியர் புத்தி சொன்னாலும் என்னை போன்றவர்கள் பட்டுகெட்டு தான் புரிந்து கொள்வோம் என அடம்பிடித்தால் யாரும் எதுவும் செய்வதற்கில்லை.

இப்போது வாசிக்காமல் இருக்கும் கதைகளில் இருந்து மனம் போனபோக்கில் எடுத்து வாசித்து வருகிறேன். அப்படி சமீபத்தில் வாசித்த கதைகளில் ஒன்று தான் ஆடகம். ஆடகம் கதையை வாசித்தவுடன் சட்டென்று வெண்முரசின் நீர்க்கோல தமயந்தியின் கான் வாழ்க்கை நினைவிற்கு வந்தது.

இந்த கதை வாசிப்பதற்கு சில நாள் முன் நம்முடைய வெண்முரசு இசை கொண்டாட்டம் நிகழ்ந்தது. அன்று நீங்கள் பேசுகையில் உங்களுடைய ஆசிரியர் கூறிய இரண்டு அறிவுரைகளை கூறினீர்கள். ஒன்று, வெண்முரசு போன்ற பெருங்காவியங்கள் சாந்தமும் இனிமையிலும் முடிய வேண்டும். இரண்டு, தவம் செய்பவன் தவத்தையும் உதறிவிட வேண்டும். முதல் விஷயம் பற்றி பேசுகையில் முதலாவிண் முடிந்தும் அந்த தத்தளிப்பு இருந்ததையும் பதினைந்து நாட்களுக்கு பிறகு கண்ணன் பிள்ளைத்தமிழ் நிகழ்ந்து அது இனிதே நிறைவடைந்தை கூறினீர்கள். இரண்டாவதை பற்றி சொல்கையில் நூறு கதைகள் எழுதி முடித்தவுடன் பெருமளவு வெளிவந்துவிட்டதையும் குமரித்துறைவி நிகழ்ந்தேறிய பின் முழுமையாக எச்சமில்லாமல் கடந்து சென்று விட்ட அனுபவத்தயும் பகிர்ந்து கொண்டிருந்தீர்கள்.

ஆடகம் வாசித்தவுடன் ஒன்று தோன்றியது. தவம் செய்பவன் உலகில் ஆடும் ஜெயமோகன் அல்ல, ஒவ்வொரு கலைப்படைப்பு பிறந்து வருகையிலும் எங்கோ தொலைவான் கோட்டில் அமர்ந்து கதை எழுதும் ஜெயமோகன் என்ற கலைஞன் தான். அந்த கலைஞன் வெண்முரசு எனும் தவத்தால் வண்ணத்துப்பூச்சியாக மாறியவன். நூறு கதைகள் என்பவை சிறகெழுந்த வண்ணத்துப்பூச்சி கூட்டை பிளந்து வெளிவரும் நிகழ்வு போன்றது. குமரித்துறைவி அஃது அருந்திய அமுதமாகி மண்ணில் பொழிந்த முதற்தேன் துளியாகும்.

இந்த நூறு கதைகளின் வழி பெருவிசை கொண்ட அந்த கலைமனம் ஒரு பெருங்காவியத்தின் வழி தான் கண்டடைந்த மெய்மையை நூறு வெவ்வேறு துண்டுதுண்டான வாழ்க்கை தருணங்களின் வழி கண்டடைகிறது. இன்னும் வெண்முரசையும் சரி நூறு கதைகளையும் சரி முழுமையாக வாசித்து முடிக்கவில்லையெனினும் வாசித்தவரை நினைவில் ஓட்டி பார்க்கையில் ஆடகம் போல நேரடி தன்மை இல்லாவிட்டாலும் சாரம்சத்தில் அத்தனை கதைகளும் வெண்முரசின் வெவ்வேறு கதைகளின் சாரம்சமும் ஒன்றென உணர முடிகிறது.

அன்புடன்

சக்திவேல்

ஜெயமோகன் மின்நூல்கள் வாங்க குமரித்துறைவி அச்சுநூல் வாங்க  வான் நெசவு அச்சுநூல் வாங்க விஷ்ணுபுரம் பதிப்பக நூல்கள் கதைகள் கடிதங்கள்

 

வான் நெசவு குமரித்துறைவி இரு கலைஞர்கள் பொலிவதும் கலைவதும் தங்கப்புத்தகம் ஆயிரம் ஊற்றுகள்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 03, 2021 11:30

November 2, 2021

தத்துவத்தின் பயன்மதிப்பு

வணக்கம் ஜெ

மருத்துவம் இறுதி ஆண்டு தேர்வுகள் சமயத்தில் விஷ்ணுபுரம் விழாவிற்கு வர முடியாமல் ஆனது. பிறகு தேர்வுகள் முடிந்து இன்டெர்ன்ஷிப் தொடங்கிவிட்டது. தொடர்ந்து இரண்டு நாட்கள் விடுமுறை என்பதே பெரிய விஷயமாக உள்ளது, சனி ஞாயிறென்ற சலுகைகளும் இனி ஒரு வருடத்திற்கு இல்லை.

கிட்டத்தட்ட ஒராண்டு கழித்து இன்று வெண்முரசை மீண்டும் கையில் எடுக்கிறேன். கீழே வைத்த காண்டீபத்தை மீண்டும் எடுத்து நாணேற்றி விட்ட இடத்தில் துவங்கினால் கதைகளின் தெய்வமாகிய புராணிகையின் சிறு குறிப்புடன் படிக்கச் ஆரம்பித்து ஃபால்குனையுடன் மணிப்பூரகம் சென்று கொண்டிருக்கிறேன்.

சென்ற ஓர் ஆண்டில் வெண்முரசுக்கு அளிக்க வேண்டிய சிந்தனை தேர்வுகள் சமயத்தில் சாத்தியம் இல்லை என்பதால் படிக்காமல் வைத்திருந்தேன். எனினும் ஆங்கில நூல்கள் படித்து கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் ஆங்கில மொழியை தமிழை விடவும் சுலபமாக எழுதவும் வாசிக்கவும் துவங்கி விட்டேன். பேசுவதிலும் அவ்வாறே. மேலை தத்துவம் அனைத்தையும் தொட்டு அறிந்து கேள்விகள் கேட்டு பகுத்து முன்னால் சென்று கொண்டே இருக்கிறது. இறுதியில் அது நிற்கும் இடம் சந்தேகம் எனும் கருஞ்சுவர் முன் தான். மாறாக நம் தத்துவம் அனைத்தையும் தொட்டு அறிந்து தொகுத்து தன்னுள் ஆக்கிக்கொள்கிறது. வெண்முரசின் ஒவ்வொரு வரியினூடும் கவித்துவமும் தத்துவமும் இலைகளின் நரம்பென விரிந்து செல்கின்றன. ஒரு வரியிலிருந்து நாம் மேற்கொண்டு பயணிக்கும் வழி பல தூரம் என்றாலும் அது திரும்ப வந்து சேரும் இடம் தொடக்கமே, அனைத்தையும் தன்னுள் கொண்ட ஒரு வட்டம்.

இந்த ஓர் ஆண்டில் சந்தேகத்தின் வழியில் அனைத்தையும் விலக்கி எங்கென்று ஏனென்று எதற்கென்று தெரியாமல் சென்றுகொண்டிருந்தேன். கலைகள் எதற்காக, அருங்காட்சியத்தில் குறிப்பிட்ட ஒளியில் தட்பவெட்ப நிலையில் சிறு மணி நேரங்களுக்கு மட்டுமே பார்க்க முடியும் என்றால் ஓவியங்கள் எதற்கு, தீயினால் எரிந்துவிடும் என்றால் தேவாலயங்கள் எதற்கு, தன் வாழ்நாளில் அறியப்படாமல் வரும்காலத்தை நோக்கி வேலை செய்பவன் தத்துவ அறிஞன் கலைஞன் என்றால் வரும் காலம் அவனை கண்டுகொள்ளும் என்ற நிச்சயம் ஏது, இவ்வாறான கேள்விகள் மூலம் அனைத்தையும் விலக்கி ஏதுமில்லா வெளியில் இருந்துகொண்டிருந்தேன்.

பின்பு ஓரிடத்தில் ரமண மஹரிஷியின் ஒரு மேற்கோள் படித்தேன்- “How do you treat others?” “There are no others” அனைத்துமாதல் என்பது எவ்வளவு மகத்தானது. முன்பு நீங்கள் சொன்ன ஒரு கதை நினைவுக்கு வந்தது. தன் வயலின் மேல் ஒரு கொக்கு அமர்ந்த போது உடல் விதிர்த்த விவசாயி அந்த வயலாகவும் கொக்காகவும் கூட இருக்கிறான்.

அனைத்தையும் தானாக்கி தன்னை அனைத்துமாக்கி என்றுமிருத்தலே விடை. வெண்முரசு என்றும் இருக்கும். அதை இயற்றியதால் நீங்களும்வாசிப்பதால் நானும் கூட.நன்றி.

ஸ்ரீராம்

அன்புள்ள ஸ்ரீராம்,

நவீன மேலைத்தத்துவம் உடைத்து ஆராய்கிறது, உடைசல்களை விட்டுச்செல்கிறது. அறிதலின் பொருட்டு மேலைத்தத்துவத்தை வாசிக்கும் எவருக்கும் இது ஒரு சிக்கல்தான். அதன் விரிவான தர்க்கமும், உள்ளுணர்வு ஒளிரும் வரிகளும் நமக்கு பெரும் ஈடுபாட்டை அளிக்கின்றன, நம்மை நிறைவடையவும் செய்கின்றன. ஆனால் எஞ்சுவதென்ன என்னும் வினா எப்போதும் சோர்வளிப்பது. மேலைத்தத்துவம் ஒருவனை சலிப்புற்ற தனியனாகவே ஆக்கும், பெரும்பாலும்.

தத்துவத்தின் நோக்கம் என்ன என்பது ஒரு முக்கியமான கேள்வி. அது இங்கே வாழ்வாங்கு வாழ வழியமைக்கவில்லை என்றால் அதனால் பயன் என்ன? இந்திய தத்துவத்தின் ஒவ்வொரு மரபும் தன் ‘பயன்’ என்ன என்பதையே முதன்மையாகச் சொல்கிறது. அறிவின்மூலம் தெளிந்து அகத்துயரை வெல்லுதல் என்று சாங்கியம் முதல் வேதாந்தம் வரை தன் பயனை வரையறைசெய்த பின்னரே பேச ஆரம்பிக்கின்றன.இந்த அம்சம் முக்கியமானது.

உண்மை அல்லவா முக்கியம், பயனுள்ளது என்றால் பொய்யும் ஏற்புடையதா என்று கேட்கலாம். ஆனால் இந்திய மரபின்படி ‘உண்மை’ என்பது இங்குள்ள அனைத்துக்கும் அப்பால் ஒரு சிறப்புத்தளத்தில் [விசேஷ தளத்தில்] உணரப்படும் ஒன்றுதான். இங்குள்ள அனைத்தும் மாறா உண்மைகள் அல்ல. சாராம்சங்கள் அல்ல. நாம் வகுத்துக்கொள்வனவும் எடுத்துக்கொள்வனவும்தான். மனிதனைப்பற்றி, இயற்கையைப்பற்றி நாம் அறிவன அனைத்துமே அவ்வாறு நமது ‘வியவகாரிக சத்யங்கள்’தான்.

அவை தர்க்கரீதியாக சரியானவையா என்பதல்ல முதன்மைக் கேள்வி. அவற்றால் பயனுள்ளதா என்பதுதான் கருத்தில்கொள்ளவேண்டியது. அவை மேலான அறவியலை உருவாக்குமா, மேலான வாழ்க்கையை உருவாக்குமா என்பதே கேட்டுக்கொள்ளவேண்டியது. பொய்யும் மெய்யுமென அங்கு ஏதுமில்லை. ‘அன்பு என்பது பொய்’ என ஒருவன் சொல்வான் என்றால் அதை நிறுவும்படி மேலைத்தத்துவம் கோரும். கீழைத்தத்துவம்  ‘அது பொய்யென உணர்பவனுக்குப் பொய், மெய்யென உணர்பவனுக்கு மெய். மெய்யென அன்பை உணர்பவன் மேலான வாழ்க்கையை வாழ்வான் என்றால் அது நடைமுறையில் ஓர் உண்மை’ என்று பதில் சொல்லும்.

மேலைத்தத்துவத்தின் அந்த நிரூபணத்தை எடுத்துக்கொண்டால் அது ஒரு குறிப்பிட்ட சொற்களத்தில், குறிப்பிட்ட தர்க்கச்சூழலில், ஒரு வட்டத்திற்குள் மட்டுமே நிரூபிக்கத்தக்கது அது. விளைவாக, ஏதோ ஒரு புள்ளியில் வெறும் தர்க்கவிளையாட்டாக ஆகிவிடுவது. ஆகவே மேலைத்தத்துவத்தை அது நிகழும் ஒட்டுமொத்தக் களத்தையும் கருத்தில்கொண்டே புரிந்துகொள்ளவேண்டும். ஒருவரை ஒருவர் முழுமையாக மறுக்கும் மேதைகளை இணைத்துத் தொகுத்து அறியவேண்டும்.

மேலைத்தத்துவத்தில் இருந்து மெய்யியல் அல்லது இறையியல் பிரிந்தது ஒரு பெரிய இழப்பு. அத்துடன் அதிலிருந்து அறவியலும் அகன்று சென்றது. மெய்காண்டல் என்னும் தர்க்கச் செயல்பாடு மட்டுமே இன்று அதில் எஞ்சியிருக்கிறது. எப்போது மெய்யியலும் அறவியலும் பிரிந்ததோ அப்போதே மேலைத்தத்துவத்தில் இருந்து அகவயப் பார்வையும் அகன்றது. எஞ்சியிருப்பது புறவயப்பார்வை. தர்க்கப்புறவயப் பார்வை, லாஜிக்கல் பாஸிட்டிவிஸம், வந்து அகவயப்பார்வைகள் அனைத்தையும் அடித்து நொறுக்கியபின் மேலைத்தத்துவம் அறிவியல் மற்றும் சமூக அறிவியலின் துணைத்தரப்பாக, அவற்றின் ஆய்வுக் கருவியாக நீடிக்கிறது. மேலைத்தத்துவத்தின் இறுதியான அகவயப்பார்வை என்பது இயற்கைமையவாதமும் [naturalism] ஆழ்நிலைவாதமும்தான் [Transcendentalism]. அவை அங்கே கிட்டத்தட்ட மறைந்துவிட்டன.

இந்திய சிந்தனையில் இன்றும் தத்துவம் மெய்யியலுடன் இணைந்தே உள்ளது. ஆகவே அது அகவயத்தன்மையுடன் நீடிக்கிறது. எனக்கு புறவயத் தத்துவம் என்பது மூளைப்பயிற்சி மட்டுமே என்னும் எண்ணமே இன்றுள்ளது. பல்லின் தினவால் கல்லைக்கடிக்கும் பூனைபோல அதைப் பயிலலாம், அவ்வளவுதான்.

ஜெ

தத்துவத்தைக் கண்காணித்தல்

தத்துவம் மேற்கும் கிழக்கும்

தத்துவம், தியானம்-கடிதம்

தத்துவம் பயில

கீழைத் தத்துவம்- எளிதாக

புறவயத்தர்க்கவாதமும் மெய்மையும்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 02, 2021 11:35

அருண்மொழி பேட்டியும் கட்டுரையும்

நவம்பர் மாத வல்லினம் இதழில் அருண்மொழியை சுசித்ரா எடுத்த நீண்ட பேட்டியும் அருண்மொழி எழுதிய கட்டுரைகளைப் பற்றி பவித்ரா எழுதிய கட்டுரையும் பிரசுரமாகியிருக்கின்றன. பேட்டி எடுத்தவரும் கட்டுரை எழுதியவரும் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்க விஷயம் என நினைக்கிறேன். அருண்மொழி எழுதும்போதே அது பெண்களுக்குரிய தனித்த நுண்ணுணர்வு வெளிப்படுவதாகவும், பெண்களால் விரும்பிப்படிக்கப்படுவதாகவும் இருந்ததை கவனித்திருந்தேன்

அருண்மொழி பேட்டியிலிருந்து…

இதை எழுதத்தொடங்கும் போதே என் மனதில் இரண்டு, மூன்று நிபந்தனைகளை நானே போட்டுக்கொண்டேன். முதல் விஷயம் இது அனுபவம், ஆனால் அனுபவம், அனுபவமாக மட்டும் சுருங்கிவிடக்கூடாது. இரண்டாவது நிபந்தனை, அருண்மொழியுடைய அனுபவம் வெறுமனே அருண்மொழியின் அனுபவமாக மட்டும் நின்றுவிடக்கூடாது. என்னதான் வட்டாரத்தன்மை இருந்தாலும் ஏதாவது ஒரு புள்ளியில் எல்லாருமே இணைந்து கொள்ளக்கூடிய விதத்தில் அது அமையவேண்டும், உலகளாவிய தன்மை ஒன்று அதில் இருக்க வேண்டும் என்று நினைத்தேன்

“முதன்முதல்ல எழுதுறவனுக்கு கச்சாப்பொருள் அவன் புழங்கின வாழ்க்கைதான்”- அருண்மொழி பேட்டி

பவித்ரா கட்டுரையிலியிருந்து…

அருண்மொழி அவர்கள் காட்டும் மனிதர்களின் ஆழமும் அடர்த்தியும் ஒரே இடத்தில் நின்று நிலைப்பவை அல்ல. அது நாவலில் காணும் மனிதர்களைப்போல வெவ்வேறு கட்டுரைகளிலும் வளர்ந்து வளர்ந்து உச்சம் செல்கிறது. ஒரு கட்டுரையில் மிக சராசரியாகத் தோன்றுபவர்களை அடுத்த சில கட்டுரைகளில் முற்றிலும் வேறொருவராக அறிய முடிகிறது.

பொன்னூல் வலைகள்-பவித்ரா

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 02, 2021 11:34

கேளாச்சங்கீதம், கடிதம்-6

கேளாச்சங்கீதம்

அன்புள்ள ஜெயமோகன் சார்,

கேளாச்சங்கீதம், நீர்க்கோலத்தின் இந்த பகுதியை நினைவுபடுத்தியது:

திரௌபதி புன்னகையுடன் “கனவுகள் முழுக்க நிறைவேறும் வாழ்க்கை தேவர்களுக்கும் அமைவதில்லை. என் கனவுகளில் ஒரு பகுதி நிறைவேறியது. ஆகவே எஞ்சியவற்றை அடைந்துவிடலாமென்று எண்ணினேன். இப்போது கனவுகளைத் துரத்துவதைப்போல வாழ்க்கையை வீணடிப்பது பிறிதொன்றில்லை என்று தோன்றுகிறது. கனவுகளில் அமர்ந்து திளைத்து மகிழ்ந்து அவற்றிலேயே மூழ்கி மறைய முடியுமென்றால் அதுவே பெருங்கொடை” என்றாள்.

அன்புடன்
கிருஷ்ணன் ரவிக்குமார்

 

அன்புள்ள ஜெ

கேளாச்சங்கீதம் கதையை ஒட்டி சில கடிதங்களில் சில அனுபவங்கள் சுட்டிக்காட்டப்பட்டிருந்தன. உண்மையில் வாழ்க்கையின் ஒரு விசித்திரமான விஷயம் இது. இதை எளிமையாக அப்செஷன் என்று சொல்லலாம். நோய் என்று சொன்னால் அப்ஸெசிவ் நியுரோசிஸ். ஆனால் இதெல்லாம் பெயர்கள். வரையறைகள். உண்மையில் இப்படி ஒரு மனநிலை, ஒரு வாழ்க்கைச் சந்தர்ப்பம் இருக்கிறது.

இந்தச் சிறுகதையில் பல நுட்பமான விஷயங்கள் இருக்கின்றன. அந்தப்பையனிடம் இருக்கும் பெண்மை அம்சம் பற்றிச் சொல்லியிருந்தீர்கள். பெரும்பாலும் இதே நிலைக்குப்போகிறவர்கள் பெண்மைச்சாயல் கொண்ட , கொஞ்சம் மென்மையான இளைஞர்கள்தான். Macho ஆண்கள் இந்த மனநிலைக்குப் போவதில்லை.

அதோடு இந்தவகையானவர்கள் கொஞ்சம் கலை இலக்கியம் ஆன்மிகம் போன்ற ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு ஒரு குணாதிசயம் உண்டு. வெளியே பேசக்கூச்சப்படும் அமைதியான இளைஞர்களாக தெரிவார்கள். Introvert என்று தோன்றுவார்கள். ஆனால் வீட்டுக்குள் தெரிந்தவர்கள் நடுவே பாட்டு டான்ஸ் என்று உற்சாகமாகக் கலக்கி எடுப்பவர்களாகவும் இருப்பார்கள். அவர்களை அவர்களின் குடும்பம் மிகமிக உற்சாகமானவர்களாகவே அறிந்திருக்கும். திடீரென்று அவர்கள் அபப்டியே இன்னொன்றுக்குள் சென்றுவிடுகிறார்கள்.இன்னொன்றும் சொல்லப்படுவதுண்டு. இந்தவகையான உச்சநிலைகளுக்குச் செல்பவர்கள் பெரும்பாலும் அம்மாவுடன் மிக நெருக்கமாக இருக்கும் ‘அம்மாப்பிள்ளை’கள்தான்.

இதெல்லாம் சேர்ந்து அவர்களை வீழ்த்துகிறது. அவர்களிடமிருக்கும் பெண்மை அம்சம், அவர்கள் தாயை தேடுவது, அவர்களிடமிருக்கும் அழகுணர்ச்சி எல்லாமே அவர்களுக்கு எதிரிகளாகிவிடுகின்றன. இது நடந்துகொண்டே இருக்கிறது. டீன் ஏஜ் முடிந்த பிறகு வரும் குழப்பமனநிலையில் இதற்குள் சென்றுவிடுகிறார்கள். ஏதோ ஒரு பெண் அவர்களை ஈர்த்துவிடுகிறாள். இங்கே அந்தப்பெண் முக்கியமே அல்ல. இவனுக்குள் இருக்கும் தேனைத்தான் இவனே உண்கிறான். தேனீயின் கைகளில் முடிவில்லாமல் தேன் சுரந்தால் என்ன செய்யும் என்று என் சீனியர் இதைப்பற்றிச் சொல்வதுண்டு.

இந்தமனநிலையில் கலைகள் இசை எல்லாம் அற்புதமான அழகு கொள்கின்றன. நிஜவுலகமே இல்லாமலாகிவிடுகிறது. உச்சகட்ட கவித்துவ மனநிலை அமைந்துவிடுகிறது. என்ன செய்கிறோமென்றே தெரியாமல் கனவிலேயே அலைகிறார்கள். ஒரு நல்ல போதைப்பொருள் என்ன செய்யுமோ அதை மூளையே தனக்குத்தானே செய்துகொள்கிறது. கிளினிக்கலாகப் பார்த்தால் மூளையில் உண்மையிலேயே செரட்டோனினை கொப்பளிக்க வைக்கும் பல என்சைம்கள் காணக்கிடைக்கின்றன. ஒரு பெரிய பரவச நிலை. அவர்களை நாம் நார்மலாக ஆக்கினால் அவர்கள் இழப்பது அந்த மொத்த பரவசநிலையையும்தான். அது ஒரு இழப்புதான். அப்படி பறந்து மேலே சென்றுவிட்டு பாதுகாப்பாக கீழே இறங்கிவிட முடியும் என்றால் அது ஒரு நல்ல அனுபவம்தான்

நம்முடைய பல பெருங்கவிஞர்கள் இந்நிலையில் இருந்திருக்கலாம். ஜெயதேவரைப்பற்றிச் சொல்வார்கள். அவர் புரி கோயிலில் இருந்த ஒரு தேவதாசியிடம் கொண்ட பித்துதான் அஷ்டபதியாக வெளியாகியது என்பார்கள். இந்த மனநிலையை ஒரு மனித உச்சம் என்றுதான் பார்க்கவேண்டும் என்று ஆர்.டி.லெய்ங் போன்றவர்கள் சொல்வார்கள். ஆனால் இதைப்போன்ற எந்த நிலைகுலைவும் உண்மையில் மிகப்பெரிய துன்பமாகவே உள்ளது.

 

ஆனந்த்ராஜ் கேளாச்சங்கீதம்- கடிதங்கள் 1 கேளாச்சங்கீதம் – க டிதங்கள்-2 கேளாச்சங்கீதம் – கடிதங்கள்-3 கேளாச்சங்கீதம், கடிதங்கள்- 4 கேளாச்சங்கீதம்- கடிதங்கள் – 5
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 02, 2021 11:31

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.