Jeyamohan's Blog, page 890

October 31, 2021

அமுதம், கடிதம்

கீதா செந்தில்குமார்

ஜெயமோகன் நூல்கள் வாங்க

ஆசிரியருக்கு வணக்கம்,

நீங்கள் நலமா?

உங்கள் புனைவுக் களியாட்டு கதைகளைப் படித்து குறிப்புகளை எழுதிக் கொண்டு வருகிறேன் (தங்களுடன் நான் உரையாடியது நினைவிருக்கும் என நினைக்கிறேன். அதன் விளைவு எனக் கூட இதைச் சொல்லலாம்). அப்படி எழுதியதில் இது நன்றாக இருக்கிறது என நான் நினைத்தது தங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

அமுதம்

இது என்னை மிக பாதிப்படைய வைத்த கதை. இதைப் பற்றி எழுத அல்லது தொகுத்துக் கொள்ள முடியவில்லை. காரணம் கதை பல தளங்களில் விரிந்து செல்கிறது.

முதல் தளம் மற்றும் எனக்கு முக்கியமான தளம் என்பது காமம் சார்ந்தது. அன்னை ஒரு பக்கம் என்றால் மனைவி மறுபக்கம். இருவருக்கும் இடையில் இருக்கும் புள்ளி காமம் இல்லாத பூஞ்யம் என கொள்வோம். மனைவி பக்கம் வர வர காமத்தின் அளவு ஏறிக்கொண்டே போகிறது. மறு எல்லையில் அது கருணையாக/அன்பாக/பாசமாக ஏறிக்கொண்டே போகிறது. நன்றாக யோசித்துப் பார்த்தால் அடிநாதம் காமம்தான். மனைவி அன்னையாகும் தருணம் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆணின் மனம் குழம்பும். இவளை எந்த இடத்தில் வைப்பது? அன்னையின் பக்கமா இல்லை மனைவியின் பக்கமா? எல்லா ஆண்களிடமும் இருக்கும் இந்த பிரச்சனை. ஒருவேளை அன்னைக்கும் மனைவிக்குமான மனப்போரட்டம் ஆணின் வாழ்க்கை முழுவதும் இருக்கும்(காமத்தைச் பொறுத்தவரை).

இரண்டாவது தளம் நேர்மறையான செயல்கள் செய்பவர்கள் மேலான சந்தேகம். சாதாரண மனிதர்களுக்கு இந்த சந்தேகம் இருந்து கொண்டே இருக்கும். மனித மனம்  எளிதாக எதிர்மறையான விஷயங்கள் நோக்கி செல்லும். கருணை, தன்னை சமூகத்துக்காக சமர்ப்பித்தல் போன்ற விழுமியங்கள் மீது சந்தேகம் எழுவதால் வரும் அச்சம்/பதற்றம், அவர்களை உறுத்திக்கொண்டே இருக்கும். காந்தியைப் போல. எப்படியாவது அவர்களை/அதை ஒழித்துவிட்டால் தான் நிம்மதியாக இருக்க முடியும். இல்லை என்றால் எப்படி இந்த எதிர்மறை பண்பில், சாதாரணத்தில் பன்றி போல படுத்து உருள முடியும்

மூன்றாவது தளம் பெண்கள் சார்ந்தது. இதுவும் ஒருவகையில் காமத்துடனே இணைத்துப் பார்க்கலாம். ஆணின் அகங்காரத்தை சீண்டும் பெண்ணை தாங்கி கொள்ள முடியாதவனாகிறான் ஆண். ஒருவேளை அகங்காரம் புண்பட்டுவிட்டாலும் அப்படித்தான் போல. ராமன் எப்படி சீதையை தீக்குளிக்க வைத்தானோ அப்படித்தான் அந்த காட்டுமாட்டையும் அந்த ஊர்மக்கள் செய்தார்கள்.

நான்காவது தளம் விழுமியங்கள் சார்ந்தது. காட்டுப்பசு காட்டின் தெய்வம். அதனை ஊருக்குள் கொண்டுவருவதென்பது தீங்கு விளைவிக்கும் என பூசாரி சொல்கிறான். அந்த பசு மாமிசம் உண்கிறது. தன்னைப் புணர்ந்த காளைகளை அடித்து உண்ணுகிறது. அதனாலே எல்லோரும் அதனிடத்தில் பயம் வருகிறது. குறிசொல்லுபவள், கதிர்மங்கலம் வீட்டுப் பெண்கள் எல்லோருக்கும் அது பெண்தெய்வமாகத் தெரிகிறது ஆனால் ஊரின் மற்ற எல்லோருக்கும் மாடு ரத்தம் உறிஞ்சும் காடேரியாகத் தெரிகிறது. அதனை எரித்து மகிழ்கிறார்கள். ஒருவகையில் இந்த காட்டுப்பசும் முதலாமன் தானே. தன்னை பலிகொடுத்து ஊரைக் காக்கிறது. அதனாலே அது தெய்வமாகிறது.  வேறு என்ன செய்யமுடியும் பலிகொடுத்த பின்?

மறுவாசிப்புக்கு உட்படுத்தினால். இன்னும் நிறைய தளங்கள் திறக்கும் என நினைக்கிறேன்.

நல்ல இலக்கிய வாசகனாக வேண்டுமென இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

நன்றி

மகேந்திரன். 

***

குமரித்துறைவி வான் நெசவு இரு கலைஞர்கள் பொலிவதும் கலைவதும் தங்கப்புத்தகம் “ஆனையில்லா” முதுநாவல் ஐந்து நெருப்பு மலைபூத்தபோது தேவி எழுகதிர் அந்த முகில் இந்த முகில் உடையாள் கதாநாயகி ஆயிரம் ஊற்றுகள் பத்துலட்சம் காலடிகள் ஞானி குகை சாதி – ஓர் உரையாடல் வணிக இலக்கியம் வாசிப்பின் வழிகள் இலக்கியத்தின் நுழைவாயிலில் ஒருபாலுறவு இன்றைய காந்தி சங்கச்சித்திரங்கள் ஈராறுகால் கொண்டெழும் புரவி நத்தையின் பாதை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 31, 2021 11:31

கேளாச்சங்கீதம், கடிதங்கள்- 4

கேளாச்சங்கீதம்

வணக்கம்

நலம் தானே! கேளாச்சங்கீதம் கதை படித்தேன். நீலி எனக்கு ஒரு கணம் காடு நாவலில் இருந்த platonic love ஐ நினைவூட்டியது. அற்புதம் என்பதை தாண்டி வட்டாரமொழி வழக்கை உங்கள் பலமாக நான் நோக்குகிறேன். நீங்கள் அதை உங்கள் பலவீனமாக எப்போதும் கருதியதுண்டா ? இந்த கேள்வி அபத்தமானது என்றால் மன்னியுங்கள்.

நன்றி

ஷாதீர் யாசீன்

 

அன்புள்ள ஷாதீர்,

தன்னை முற்றாக இழந்து இன்னொன்றில் தோய்வது என்பதுதான் பெருநிலை அனுபவம். அது காமம் தொடங்கி கடவுள் வரை செல்கிறது. அது வதையும் இன்பமும் அடிமைத்தனமும் விடுதலையுமான நிலை.

வட்டார வழக்கில் இருந்து ஓர் எழுத்தாளனால் விடுபடவே முடியாதென்றால் அது அவனுடைய பலவீனம். என்னால் வட்டார வழக்கை மிகச்சிறப்பாக கையாள முடியும். ஆனால் என் எழுத்துக்களில் மிகப்பெரும்பாலானவற்றில் வட்டார வழக்கு இல்லை.

மொழியில் எனக்கு தடைகளே இல்லை.என்னால் தொல்காப்பிய நடையிலேயே ஒரு நூலை எழுதிவிடமுடியும். நூறு கம்பராமாயணப்பாடல்களை எழுதி உள்ளே சேர்த்துவிடவும் முடியும். நாட்டுப்புறப்ப்பாடல்கள், பழமொழிகள், சித்தர்ப்பாடல்கள், சொலவடைகள் என என் படைப்பில் வரும் எல்லாமே நானே எழுதுவனதான்

வட்டார வழக்கு ஓர் யதார்த்தவாதக் கதையில் அந்த யதார்த்தத்தை நிறுவி வாசகனை நம்பவைக்கும் முக்கியமான கருவி. அதேபோல உருவகக்கதையில், மிகுகற்பனைக் கதையில், கவித்துவமான கதையில் அக்கதை அந்தரத்தில் நிலைகொள்ளாமல் வாழ்க்கையின் பகுதி என்று காட்டவும் அது உதவுகிறது.

இந்தக்கதையில் ஏன் வட்டார வழக்கு வருகிறது? அது ஒரு புனைவு உத்தி. கதை பேசும் விஷயம் அருவமான, என்றுமுள்ள ஓர் அதீத நிலை. அது எந்த அளவுக்கு abstract ஆக உள்ளதோ அந்த அளவுக்கு concrete ஆன கதைச்சூழலும் கதைமாந்தரும் தேவை. அதிலுள்ள உரையாடல்வரிகள் நேரடியாகவே கவிதைகள். ஆனால் அப்படி அல்ல, அவை கதையில் சிலர் பேசிக்கொள்வன தான் என நம்பவைக்கவேண்டியிருக்கிறது. அதற்கு வட்டார வழக்கு உதவுகிறது

ஜெ

 

மதிப்பிற்குரிய ஆசிரியருக்கு.

வணக்கத்துடன் தமிழரசி எழுதுவது

இந்த உலக நியதிப்படி ஒரு துளி அமிர்தம் போதும். தொண்டைக்கு உள்ள போயிருச்சின்னா அமிர்தமே ஆனாலும் செமித்து மலமா மாறியாகனும். செமிக்காம இருக்கறது எல்லாமே விஷம்தான்.  ஒரு துளி போதும் என்னுமிடத்தில் கணேசனுக்கு ஒரு கலமே கிடைச்சிருக்கு.  கணேசன் ஆசிர்வதிக்கப்பட்டவன். உலக நியதிப்படி சபிக்கப்பட்டவனும் கூட. இரண்டு தட்டுலயும் ஆசிர்வாதமும் சாபமும் சம அளவில் வைக்கப்பட்டு சின்ன காத்துக்குக் கூட கணேசனோட துலாமுள் நடுங்கிகிட்டே இருக்கிறது.

எல்லோருக்கும் இந்த ஒரு துளி அமிர்தம் ஏதோ ஒரு கால கட்டத்தில் ( முக்கியமா இளமையில்) கிடைச்சிருக்கும்.  அதோட தித்திப்பும் கிறக்கமும் மனசுக்குள்ள ரகசிய புத்தகமா தங்க எழுத்தில் எழுதி இருக்கும். அவ்வப்போது அதை திறந்து பார்க்காதவர் யார்.

இந்தத் துளி அமிர்தம் இல்லாத வாழ்க்கை வியாபார கணக்கெழுதிய பேரேடு.  துளி அமிர்தத்தை ருசிச்ச வாழ்க்கை காவிய புத்தகம். ’படிச்சிப் படிச்சி தீராது’ அது.

கேளாச்சங்கீதமங்ற வார்த்தையே கவிதை. நினைவுகளை எங்கெங்கோ கொண்டு செல்கிறது.

நன்றி.

தமிழரசி.

கேளாச்சங்கீதம்- கடிதங்கள் கேளாச்சங்கீதம் – கடிதங்கள்-2
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 31, 2021 11:31

விஷ்ணுபுரம் விழா பங்களிப்பு

 

vish

நண்பர்களே

2021 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருதுவிழா வழக்கம்போல நிகழ்த்தலாம் என நினைத்திருக்கிறோம். அப்போதைய சூழல் சார்ந்து முடிவெடுப்போம். சென்ற இரண்டு ஆண்டுகளாக ஏற்கனவே கையிலிருந்த நிதியிலேயே விருதுகள் வழங்கப்பட்டன, நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. நிதி திரட்டப்படவில்லை. இவ்வாண்டு நிதி தேவையாக உள்ளது. இந்த விருது ஆரம்பம் முதலே அணுக்கமான நண்பர்களின் நிதியுதவியால் நிகழ்ந்து வருகிறதென அறிவீர்கள். வாசகர்கள், நண்பர்கள் கூடி செய்யும் நிகழ்வாக இது இருக்கவேண்டும் என்னும் எண்ணம் எப்போதும் இருந்தது

சென்ற சில ஆண்டுகளாக விழா பெருகி இன்று இரண்டுநாள் இலக்கியத் திருவிழாவாகவே ஆகிவிட்டிருக்கிறது. கிட்டத்தட்ட இருநூறுபேர் இரண்டுநாள் தங்கி பங்கேற்கும் விழா. ஆகவே விஷ்ணுபுரம் அறக்கட்டளையை நிறுவி அனைவரிடமும் நன்கொடை பெறத் தொடங்கினோம். இவ்வாண்டும் நண்பர்கள், வாசகர்கள் அனைவரும் விழா நிகழ்ச்சிகளுக்கு நிதியுதவி அளிக்கவேண்டுமென கோருகிறேன்.

நிதியளிக்கவேண்டிய முகவரி

Bank Name & Branch:ICICI Bank, Ramnagar Branch, CoimbatoreAccount Name:VISHNUPURAM ILAKKIYA VATTAM TAMIL EZHUTHALARGAL ARAKKATTALAICurrent Account No:615205041358IFSC Code:ICIC0006152

வெளிநாட்டில் வாழும் நண்பர்கள் கீழ்க்கண்ட மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்

jeyamohan.writer@gmail.com

 

நன்கொடை அளித்தவர்கள் meetings.vishnupuram@gmail.com என்ற முகவரிக்கு மெயில் அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறேன்

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 31, 2021 11:30

ஸ்டாலின் ராஜாங்கத்துக்கு விருது

2021 ஆம் ஆண்டுக்கான விளக்கு விருது பெறும் ஸ்டாலின் ராஜாங்கத்திற்கும் , கவிஞர் சுகிர்த ராணிக்கும் வாழ்த்துக்கள்.

ஆய்வாளர் ஸ்டாலின் ராஜாங்கம் தமிழ்ச்சூழலில் இன்று செயல்படும் முக்கியமான ஆய்வறிஞர்களில் ஒருவர். தமிழக சமூகவியல், தலித் வரலாறு ஆகியவற்றில் முக்கியமான பங்களிப்புகளை ஆற்றியவர். இவ்விருது அவருக்கு பெருமை சேர்க்கட்டும்

ஜெ

சுவாமி சகஜானந்தர்- ஸ்டாலின் ராஜாங்கம்

வரலாறு என்னும் மொழி : ஸ்டாலின் ராஜாங்கம்

விஷ்ணுபுரம் விழா ஸ்டாலின் ராஜாங்கம்

ராஜ் கௌதமன் பற்றி ஸ்டாலின் ராஜாங்கம்

அயோத்திதாசரின் அந்தர – அர்த்த வாசிப்பு

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 31, 2021 11:14

October 30, 2021

மலையாளப் பாடல்களில் சம்ஸ்கிருதம்

எழுத்தச்சன்

அன்பு ஜெயமோகன்,

நீங்கள் விரும்பும் பழைய மலையாள திரைப்பாடல்களில் நிறைய சமஸ்க்ருத சொற்கள். நீங்கள் அதை மொழி பெயர்த்து தராவிட்டால், தமிழர்களுக்கு சுத்தமாக புரியாது.

ஆனால் புதிய மலையாள பாடல்களில் அங்கிங்கு சில சமஸ்க்ருத சொற்கள் இருந்தாலும், கிட்டத்தட்ட ஒரு சராசரி தமிழனால் புரிந்து கொள்ளும் அளவிற்கு உள்ளன. ஒரு சில மலையாள பாடல்கள் தமிழோ என்று மயங்கும் அளவிற்கு உள்ளன.

இது ஏன்? மலையாளத்தில் தமிழின் தாக்கம் (தமிழில் ஆங்கில தாக்கம் போல) அதிகரிக்கிறதா? அல்லது தமிழர்களுக்கும் (பெரிய சந்தை) புரிய வேண்டும் என்ற நோக்கில் எழுதப்படுகிறதா?

நன்றி.

ஸ்ரீராம் 

உண்ணாயி வாரியர்

அன்புள்ள ஸ்ரீராம்,

நீங்கள் சொல்வது உண்மை. அதைப் புரிந்துகொள்ள மலையாள இலக்கிய வரலாற்றை அறியவேண்டும். மலையாளத்தின் படிநிலைகள் என அறிஞர் வகுத்தவை நான்கு.

அ. கொடுந்தமிழ் காலகட்டம். அதாவது ஒரு தனித்தன்மைகொண்ட தமிழ் புழங்கிய காலம். இது பதிமூன்றாம் நூற்றாண்டில் சோழர் ஆட்சி வரை.

ஆ, மலையாண்மை காலகட்டம். கொடுந்தமிழ் பல்வேறு பழங்குடிமக்களின் உச்சரிப்புகள் கலந்து மலையாளத்தின் முன்னோடியான ஓர் அரைத்தமிழ் மொழி உருவான காலகட்டம். பதினேழாம் நூற்றாண்டுவரை.

இ. மலையாளம் உருவான காலம். பதினேழாம் நூற்றாண்டு.

பதினேழாம் நூற்றாண்டில் உருவான மலையாளம்  எளிமையானது. நேரடியானது. துஞ்சத்து எழுத்தச்சன் அதன் பிதா. அது மக்கள் மலையாளம். நாட்டார்ப் பண்புகள் கொண்டது. அதை அங்கே நாட்டுபாஷா என்கிறார்கள்.

மலையாண்மைக் காலகட்டத்தில் அந்த மொழிக்கு இணையாகவே கேரளத்தில் இருந்த மொழி இயக்கம் மணிப்பிரவாளம் எனப்படுகிறது. அன்று உயர்குடிகளின் மொழியாக சம்ஸ்கிருதம் இருந்தது. மதம் சார்ந்த படைப்புகளும் சம்ஸ்கிருதத்தில் இருந்தன. சம்ஸ்கிருதமும் மலையாளமும் கலந்த மொழியே மணிப்பிரவாளம். மணிமிடைபவளம் என்று தமிழில் சொல்லப்படுகிறது. பதினைந்தாம் நூற்றாண்டே மணிப்பிரவாள இயக்கத்தின் உச்சம்.

வள்ளத்தோள்

குமாரனாசான்

உள்ளூர்

பல்வேறு கூறுகளை ஒருங்கிணைத்துக்கொண்டு மலையாளம் உருவான பின்னர் மணிப்பிரவாளம் மலையாளத்திற்குள் ஓர் செவ்வியல் இழையாக நீடித்தது. அன்றுமுதல் இன்றுவரை மலையாளத்தில் இவ்விரு போக்குகளும் முயங்கியும் முரண்கொண்டும் செயல்படுகின்றன. செவ்வியல்தன்மை மணிப்பிரவாளச் சாயல்கொண்டது. புழக்கமொழி நாட்டுமலையாளத்தில் அமைந்தது.

எழுத்தச்சன் எழுதிய மொழி நாட்டுமலையாளம். அவர் பதினேழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்தவர். இருநூறாண்டுகளுக்கு பின் வாழ்ந்த உண்ணாயி வாரியர் எழுதியது மணிப்பிரவாள மலையாளத்தில். இருவரும்தான் மலையாளத்தின் பெருங்கவிஞர்கள்.

நவீன மலையாளம் பத்தொன்பதாம் நூற்றாண்டில் உருவானபோது இந்த இரண்டு போக்குகளும் இணைந்து ஓரு நவீன மொழியை உருவாக்கின. அடிப்படையில் நாட்டு மலையாளத்தின் கட்டமைப்பும் கலைச்சொற்கள் மற்றும் அணிச்சொற்களில் சம்ஸ்கிருதமும் நவீன மலையாளத்தின் இயல்புகளாயின.

இன்றைய செய்திகள் புழங்கும் மலையாளத்தை பார்த்தாலே இந்த இயல்பு தெரியும்.”ராஷ்ட்ரபோதத்தின்றே உஜ்வல ப்ரகடனம்” இன்றைய ஒரு செய்தி. இது அப்படியே சம்ஸ்கிருதம், மலையாளமாக ஆக்கப்பட்டிருக்கிறது. இதுதான் உயர்மட்ட மலையாளம். மார்க்ஸியக் கட்டுரைகளும் பின்நவீனத்துவக் கட்டுரைகளும்கூட இந்தமொழியில்தான் எழுதப்படுகின்றன. ’உத்தராதுனிகதையுடே விஸ்லேஷணமோ அபநிர்மாணம்?” [பின்நவீனத்துவத்தின் வெளிப்பாடா கட்டவிழ்த்தல்?] ஒரு கட்டுரையின் தலைப்பு. அப்படியே சம்ஸ்கிருதம்.

கலைச்சொல், அணிச்சொல் இரண்டுமே சம்ஸ்கிருதத்தைச் சார்ந்தே உள்ளன மலையாளத்தில். ஆகவே மலையாளத்தின் சிந்தனைச் செயல்பாடும் கற்பனாவாத இலக்கியமும் சம்ஸ்கிருதம் மண்டியவைதான். சிந்தனைத் தளத்திலேயே இரண்டு போக்குகள் உண்டு. இ.எம்.எஸ்.நம்பூதிரிப்பாடு, எம்.கோவிந்தன் இருவரும் நாட்டுமலையாளத்தில் எழுதியவர்கள். எம்.கோவிந்தன் நாட்டுமலையாள இயக்கத்தையே நடத்தியவர். ஆனால் கே.சச்சிதானந்தனோ கே.வேணுவோ கடுமையான சம்ஸ்கிருதக் கலப்புமொழியில் எழுதுபவர்கள்.

எம் கோவிந்தன்

 

இ.எம்.எஸ்

 

பத்தொன்பது இருபதாம் நூற்றாண்டில் மலையாளத்தில் கற்பனாவாதக் கவிதைகளின் ஒரு காலகட்டம் தொடங்கி இன்றும் நீடிக்கிறது. அதன் மையப்பெருக்கு சம்ஸ்கிருத மணிப்பிரவாளம்தான். ஏனென்றால் முதன்மையாக சம்ஸ்கிருத கற்பனாவாதத்தின் செல்வாக்கு. அடுத்ததாக அணிச்சொற்கள் எல்லாம் சம்ஸ்கிருதத்திலேயே இருந்தன. இன்னொன்று உண்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டில் கேரளத்தில் மொழிக்கல்வியில் சம்ஸ்கிருதக்கல்வி கட்டாயமாக இருந்தது.

கற்பனாவாதக் கவிதைகளிலும் இரண்டு போக்குகள் உண்டு. கற்பனாவாதக் கவிஞர்களில் இடச்சேரி கோவிந்தன் நாயர் போன்றவர்கள் எளிய நாட்டுமொழியில் எழுதியவர்கள். ஜி.சங்கரக்குறுப்பு போன்றவர்கள் சம்ஸ்கிருத மணிப்பிரவாளத்தில் எழுதியவர்கள். முதல் மூவர் எனப்படும் வள்ளத்தோள் நாராயணமேனன், உள்ளூர் பரமேஸ்வர அய்யர், குமாரன் ஆசான் ஆகியோரில் பொதுவாக மணிப்பிரவளச் சாயல் ஓங்கியிருந்தது. ஆனால் குமாரனாசான் நாட்டார்மொழியிலும் வலுவான படைப்புகளை எழுதியவர்.

சினிமாப்பாட்டு என்பது மலையாளத்தின் கற்பனாவாத கவிதை இயக்கத்தின் நீட்சியாக உருவானது. ஆகவே சம்ஸ்கிருத மணிப்பிரவாள மொழியே மைய இடம் வகித்தது. ஆனால் கூடவே நாட்டுமொழியிலும் பாடல்கள் இயற்றப்பட்டன. பொதுவாகச் சொன்னால் வயலார் ராமாவமா மணிப்பிரவாளத்தில் அதிகமாக எழுதியவர். பி.பாஸ்கரன் நாட்டுமொழியில் அதிகமாக எழுதியவர். ஆனால் இருவருமே இரு மொழிகளிலும் எழுதியிருக்கிறார்கள்.

வயலார் ராமவர்மா

பி.பாஸ்கரன்

சென்ற இருபதாண்டுகளில் கேரளத்தில் மலையாளக்கல்வி குறைந்து வருகிறது. மொழிக்கல்வி தளர்ச்சி அடைந்து புழக்கமொழியே போதும் என்னும் நிலை உருவாகிவிட்டது. பேச்சுமொழி மேலெழும்போது கொஞ்சம் கொஞ்சமாக சம்ஸ்கிருதம் மறைகிறது. இன்று பழைய செவ்வியல் படைப்பாளிகளை பாடப்புத்தகங்களில்கூட எவரும் படிப்பதில்லை.

அதுவே சினிமாவில் தெரிகிறது. பொதுவாக எளிமையான பேச்சுமொழியில் பாடல்கள் எழுதப்படுகின்றன. ஆனால் அவ்வப்போது செவ்வியல் மணிப்பிரவாள மொழியும் பாடல்களில் தோன்றுவதுண்டு. ஆனால் அந்த வகையான கதைத்தருணங்கள் மிகக்குறைவு.

இந்த மாற்றம் தமிழிலும் உண்டு. சினிமாப்பாட்டில் இங்கே அச்சுமொழி பயன்படுத்தப்படுவது மிக அரிதாகிவிட்டது. அன்றாடப் பேச்சுமொழியிலேயே சினிமாப்பாடல்கள் எழுதப்படுகின்றன. ஏனென்றால் அச்சுமொழித் தமிழ் இன்றைய தலைமுறைக்கு புரிவதில்லை. ஏனென்றால் அவர்கள் தமிழில் வாசிப்பது குறைவு. தமிழ் அவர்களுக்குப் பேச்சுமொழி மட்டுமே.

ஜெ

கேரளமும் பக்தி இயக்கமும்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 30, 2021 11:35

சொல் தெளியா இசை- கடிதங்கள்

சொல் தெளியா இசை

ஹேமந்த் குமார் என்று இந்திப்பட வுலகில் அறியப்படும் ஹேமந்த முக்கோபாத்யாய மிகச் சிறப்பாக பாடகர். இசை அமைப்பாளர்.‌ ரவீந்திர சங்கீதத்தில் மேதை. இந்தியில் அவர் இசையமைத்த பீஸ்சால்பாத், காமோஷி படப்பாடல்கள் சாகாவரம் பெற்றவை. வங்க கதாநாயகர் உத்தம் குமாருக்கு அவர் பாடிய பாடல்கள் ஏராளம். சலீல் சௌதுரியை விட சீனியர்.

இவர் இசையமைத்து பாடிய எய் ராத் துமார் அமார் எனற பாடல் (படம் தீப் ஜ்வலே ஜாய்) வங்க திரைப்பாடல்களில் தலைசிறந்த ரொமான்டிக் பாடலாகச் கருதப்படுகிறது. தெலுங்கில் இந்தப் படத்தை எடுத்தபோது அதே ட்யூனில் கண்டசாலா பாடினார்‌. சற்றே மாறுபட்டு ஹேமந்த்குமார் இசையமைத்து பாடிய இந்தி மறூஆக்கத்திலும் (காமோஷி) இந்த பாடல் மிக பிரசித்தி பெற்றது. புகார் லோ..துமாரா இந்தசார் ஹை..

அன்புடன்

எஸ் கணேஷ்

 

அன்புள்ள ஜெ

உண்மைதான். அந்த வங்கமொழிப்பாடல் அதன் ஒரு வார்த்தைகூட புரியாதநிலையில் ஒரு மர்மமான கவர்ச்சியை அளிக்கிறது . எங்கோ சம்பந்தமில்லாத ஏதோ ஓர் இடத்தில் அந்தப்பாடலைக் கேட்டதுபோன்ற ஓர் அனுபவம். இசை என்றாலே தெரியாத மொழியில்தான் இருந்தாகவேண்டுமோ என்றெல்லாம்கூட நினைத்துக்கொண்டேன்

அருண்குமார்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 30, 2021 11:34

காடு- எம்.கே.மணி

காடு அமேசானில் வாங்க காடு வாங்க

நூலகங்களுக்கு படையெடுத்து அலைபாய்ந்திருந்த காலத்திலேயே விபூதி பூஷனின் வனவாசி படித்து விட்டதாக நினைவு. பின்னால் படித்த போதிலும் அதில் இருந்த செவ்வியல் தன்மையை வியந்த போதிலும், கண்ணிலும் நெஞ்சிலும் ஓரளவு உள்வாங்கியிருந்த காட்டை அடைந்ததாக எண்ணம் வரவில்லை. தற்போதைய காடு சம்மந்தமுள்ள பல நாவல்களை முடியவில்லை என்றாலும் முழுசாக படித்தாயிற்று. எல்லாம் எழுதுகிறவர்களின் அறிவு தொடர்பானவை. ஒன்று, டேட்டாக்களை ஊறவைத்து மாவரைத்து சோடாமாவு கொட்டி நுரை கிளப்பிக் காட்டுகிறவை. மற்றும் ஒன்றை சொல்லலாம், சமீபத்தில் எங்கோ படித்த பத்தி ஒன்றில் காட்டின் உளவியல் அறியாததை மழுப்ப கவிதையால் பொதிந்து அலங்கரிக்கப்பட்டிருந்தது.

ஜெயமோகனின் காடு நாவலில் காடு இருப்பதற்கு முதன்மையான காரணம் அது சொல்லப்படுகிற மிக அரிதான தொழில் நுட்ப திறத்தினால் என்பதை அதன் கதைப்போக்கில் இருந்து அதன் அத்தியாயங்கள் வாரியாக அறிந்து கொள்ள முடியும். அது திட்டமிட்டதா, இயல்பான போக்கில் படிந்து வந்தவாறு இருந்ததா என்பதை முடிவு செய்ய ஆகாவிட்டாலும், எதுவாயினும் அது புதிய உச்சத்தை தொட்டு விட்டிருக்கிறது. எந்த இடத்தில் எதை சொல்ல முடியும் என்பதை கற்க விரும்புவோருக்கு இது பொக்கிஷம்.

அதற்கு அடுத்ததாக செய்யப்படுவதைக் காட்டிலும் அதற்கு ஆவேசமாக தொழிற்படுகிற, அசலான ஆவேசம். அதாவது இதைப் படிக்கக் கூடிய ஒரே ஒரு மனிதன் இல்லாமல் போனாலும் அது எழுதப்பட்டிருக்கும் என்பதில் முடிகிற கொந்தளிப்பு. வேறு ஒன்றையும் சொல்ல வேண்டியிருக்கிறது, அந்தக் கொந்தளிப்பைக் கட்டுப்படுத்தி தன்னுடைய ஆணைக்குள் வைத்துக்கொண்டு அதை வைத்து விளையாடிய லீலை.

நூறு வருஷம் காட்டில் இருந்து படிந்தவன் அதைப் பற்றி ஒரு நாவல் எழுதி விட முடியும் என்பது கற்பனை தான், ஏன் சொல்லுகிறேன் என்றால் ரத்தினங்களை ஜொலிக்க வைக்க வேறு தினுசான ரசவாதம் தெரிந்திருக்க வேண்டும். பெருங்கூட்டத்தில் தனது காதலியை கண்டடைய முடிகிற காதலைப் போல நல்ல எழுத்தாளனால் அது முடியும். ஜெமோ காட்டை விரும்புகிறவர் என்பதில் ஒன்றுமே இல்லை, காட்டின் அத்தனை மகத்துவங்களையும் எப்படி நிருபிக்க முடியும் என்கிற பிரயத்தனம் வெற்றி பெறுவதில் மொத்தமுமே இருக்கிறது.

நாவலின் நாயகன் கிரி, வாழ்வு ஆத்திரத்துடன் செலுத்தின வேகத்தில் நிலைகுலைந்ததை நாவல் எவ்வளவோ இடங்களில் சொல்லுகிறது. குருபியான அவனுடைய மனைவி, நாதியற்று தன்னை உணர்ந்த ஒரு திக்கில் மண்ணெண்ணை குடித்து தற்கொலை செய்து கொள்ள முயன்று மருத்துவமனையில் கிடக்கும்போது கிரி பிதுங்குவதை தான் முதலில் நினைத்துப் பார்க்கிறேன். அவன் அநேகமாக பிறந்ததில் இருந்து பச்சையான வாழ்க்கைக்கு தன்னைப் பொருத்திக் கொள்ளாமல் எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்ததின் விளைவு, அப்படி எப்போதும் பிதுங்கி நிற்கவே அவனால் முடிகிறது. தாயைக் கூட அவன் கவனித்து வைத்திருக்கிறான். அவளுடைய சாவுக்கு அப்புறம் தான் அவளுடைய பிடிமானம் கூட அவனது கவனத்துக்கு வருகிறது என்பதில் அவன் வாழக்கூடிய இவ்வுலகத்தின் சாத்தியப்பாடுகளை நாமே யோசித்துக் கொள்ளலாம்.

அவனுடைய அப்பா அவனுடைய மதிப்பில் இருந்து விழுந்து விட்டவர். அப்படி இருக்க அவனுடைய மாமாவின் நிழலில் அவனது வாழ்க்கை ஒதுங்குகிறது. அங்கே, எப்போதுமே வீழ்ச்சியின் பதட்டத்தில் இருக்கிற, வெறுமனே ஒரு முதலாளியின் முகத்தை எங்கனம் ஏறிடுவது ?கல்வெர்ட்டுகள் வழியாக, பாலங்கள் வழியாக, சாலைகள் வழியாக மனிதர்கள் காட்டை வென்றவாறு இருப்பது அதன் குருதி முழுவதையும் உறிஞ்சிக் குடித்து விட்டு அதை மழித்து முடிப்பதற்கு தான்.

அடர் வனத்தின் நடுவே முழுமை கொள்ளாத கொத்தலுடன் மல்லாந்து கிடந்த பாறையினாலான மூப்பன் அனந்த பத்மநாபன் ஆவதும் அவனைச் சுற்றிலும் திருவனந்தபுரம் என்கிற நகரம் உருவாவதும் யாரோ சொல்லி, கிரியால் கற்பனை செய்யப்படுவது நாவலில் உண்டு. எனினும் அவன் வாழ்வு முழுவதும் பார்த்துக் கொண்டிருப்பது ஒரு சீரழிவை. தந்திரமும், சதியும், துரோகமும், வலியும், அவமானமுமான நிர்க்கதிகளில் விளையாட உட்கார்கிற ஒரு சூதாட்டம்.

அவனுமே கூட அதில் ஈடுபட்டு வேடிக்கைப் பார்த்து நஷ்டமடைகிறான். அன்றும் இன்றும் சந்தனக்காடுகள் போன்ற இயற்கையின் தாய்மடியை குறி வைத்து சாலைகள் நகர்ந்தாலும் அதன் வழியாக தானே நாகரீகம் நம்மை வந்து அடைகிறது. முன்னேற்றம் பேசுகிற சூதாடிகளில் இருந்து பிதுங்கி அவன் சூதாடிய போது அவனால் வெற்றி பெற முடியவில்லை. முடியாது என்பது அவன் தன்னை வளர்த்துக் கொண்ட சித்தத்தின் காங்க்ரீட் விதி.

கிரி தனியன்.அவன் தனது தனிமைக்கு பாலூட்டினான். போற்றி வளர்த்தான். உலகின் யதார்த்தங்களாக இருக்கிற நாற்காலிகளில் உட்காரப் பழகுவதற்கு பதில் காதில் விழாத ரகசியங்களை எதிர்பார்த்து சொற்களில் புழங்கினான். அப்படி ஒருவன் பொருத்தப்படுவதற்கு உதவுகிற நிழல் மூலை அவனை அழிப்பதற்கே வரும். தனது காரியம் பார்த்து நடக்கிற பித்துக்குளிகளுக்கு பிரத்யட்ஷப்படாத தெய்வங்கள் அவனில் இறங்கி களிக்கும். அவனை சிதறடித்தவாறு அவனது ஊனுண்ணும். அவளே நீலியாக இருந்தாள்.

நான் அவளை சொல்லுவதில் இருந்து விலகுகிறேன்.முதல் ஒன்று, நீலியைப் பற்றி நான் எவ்வளவு சொன்னாலும் அது போதாது.இரண்டாமாவது, படிப்பவர்களுக்கு முன் முடிவு கொள்ள காரணம் வைத்து விடக் கூடாது.ஆனால் நீலி வரும் இடங்கள் எல்லாம் வெகு கவனமாக சொல்லப்பட்டிருக்கின்றன. அவை அதிகமோ, குறைவோ என்று சந்தேகம் கொள்ள முடியாத அளவிற்கு கச்சிதம். ஒரு திடுக்கிடலுடன் அவளை முதன்முறை பார்க்கும்போதும், கிரி ஆற்றாமையோடு அவளை தேடி காடு முழுக்க முட்டி மோதி தேடும்போதும், அடுத்த சந்திப்பில் நிலவும் போதும், ஒரு பெரிய இடைவெளியில் மனித வாழ்வு அலசப்பட்டு அதற்குப் பிறகு அவள் அவனைப் பார்த்தவாறு இருந்ததை சொல்லும்போதும் நமக்குள் இருந்து ஒருபோதும் போகாத, சிரஞ்சீவியான, நிர்மலுமுள்ள காதல் துடித்ததாக வேண்டும்.

காதலர்கள் குறிஞ்சி காண செல்லும் அந்த சஞ்சாரம் புனைவின் எல்லை. காடு மறைந்து மேகம் மட்டுமே சூழ்ந்த பாறை வெளியில் கிடைக்கிற வெறுமையுமே பேருண்மை. ஒவ்வொரு முறை அதைப் படிக்கும்போதும் நான் வெலவெலக்காமல் இருந்ததே இல்லை. இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு முன்னால் திரைப்பட விழாவில் அவ்வருடம் வெளியான ஒரு கறுப்பு வெள்ளைப் படம் இவ்விதமான முடிவை அடைவதைப் பார்த்தபோது நான் நாவலை தான் நினைத்துக் கொண்டேன். உணர்ச்சிகரமாக இருந்தது.

கபிலனுக்கு இந்நாவலின் சுவையில் பங்குண்டு.கம்பனுக்கு கூட உண்டு.இவர்களின் பாதிப்பு என்று கூட இல்லை, அதற்கும் மேலான பார்வை இருப்பதாலே இந்நாவலின் சொற்கள் பதப்பட்டு கூழாங்கற்களாக குளிர் கொள்கின்றன. அல்லவெனில் புளிப்பும் இனிப்புமான சுவையில் நெஞ்சில் இறங்கி விட்ட மலைத்தேன் மெதுவாக மயக்கம் தூண்டித் ததும்பி நினைவின் திரியில் சுடர் ஏற்றுகின்றன. நமக்கு ஆதரவான ஒரு வழுக்கலுடன் கூடிய ஒரு மலையிறக்கம். போத்தியோ, நாடாரோ, அய்யரோ நமது அகம் நோக்கி மட்டுமே பேசுகிறார்கள். குட்டப்பனும், சிநேகம்மையும் கூட. நமக்குள் இருக்கிற நூறு திசைகளுக்கு வாகான நியாயங்கள், யாருக்கு என்ன கிடைத்து, கிடைக்காமல் போனாலும் சொல்லி முடிக்கிறார்கள். அசைக்கவோ, ஆற்றுப்படுத்தவோ செய்கிறார்கள்.

ஒருபகுதியில் வெறுமனே ஒரு செய்தியாக வந்து விட்டுப் போன கீறக்காதன் ஒரு பாத்திரமாக யாருடைய அபயத்திற்கோ இறைஞ்சுவது பெரும் துயர். அதற்கு பெருத்த விடுதலையாக இருந்திருக்கலாம் மேனனின் துப்பாக்கி குண்டு. ரொசாலத்தின் தேவாங்குக்கு அப்படி இருந்திருக்காது. எல்லாவற்றையும் விட இதில் வரக்கூடிய பெண்கள்! அவர்களில் சுழலுகிற ஆண்களின் வாழ்வு. நீலி வெளியே அழுது கொண்டிருக்க, கிரி அமிழ்ந்து கொண்டிருக்கிற அழிவின் புதைகுழிதான் என்ன? குறிஞ்சியில் புணர்வு நிமித்தம் இல்லாமல் எப்படி? அதன் நியாயங்களுக்கும் அவ்வளவு சுவை.

காடு பூத்த காலத்தின் வர்ணங்கள் சிதறுவது போல, நாவலில் காட்டுபன்றிகளின் மலத்தையும் மிதிக்க வேண்டி வரும். மழை மாமழையாகிப் பொழிவது பயமுன்டாக்கி ஏக்கம் நிறைக்கிறது. ஒரு முறை வழி தவறி காட்டில் தொலைகிற கிரி மெல்ல மெல்ல காடறிந்து அதன் மூலை முடுக்கெல்லாம் சென்று திரும்புவது போல நான் இந்த நாவலை அறிந்ததாக ஒரு எண்ணம் இருந்தது. அது அதிகமோ? ஆனால் இவ்வளவு முறை நான் படிப்பதில் அப்படி ஒரு எண்ணம் தான் வருகிறது. கொஞ்ச நாட்கள் போகும். படித்தது எல்லாம் மறந்தது போல மறுபடியும் படிக்கிற துடிப்பு படபடக்கும். அப்போதும் முதன்முறை படிப்பது போலவே படித்து, ஆவேசம் கொள்வேன். காட்டில் தொலைந்து மறுபடி திரும்பி விட்டதாக எண்ணிக் கொள்ளுவேன்.

ஜெயமோகன் எழுதிய காடு நாவலைப் பற்றின விமர்சனம் என்று இதை யாரும் தவறாக முடிவு செய்து விடக்கூடாது. படித்து முடித்த விறுவிறுப்பில் அதை பாராட்டி சொல்ல முயன்றேன். யாராவது படிக்கட்டும் என்பதை தூண்ட முடியுமா என்பதில் முயன்றேன். படிக்கவில்லை என்றாலும் ஒரு நஷ்டமும் இல்லை.

ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, மொழியைக் கடித்து வைத்து ஆதாயம் கொள்ளும் கொடிய காலத்தில் ஒன்றை சொன்னால் சரியாக இருக்கும் என்று படுகிறது.

எம் கே மணி

காடு,கடிதம்

காடு- கதிரேசன் கீழ்மையும் ஜென்ம ஈடேற்றமும் – காடு விமர்சனம் காடு இரு கடிதங்கள் காடு – ஒரு வாசிப்பும் மறு வாசிப்பும்- கலைச்செல்வி காடு- வாசிப்பனுபவம் கன்யாகுமரியும் காடும் காடு-முடிவிலாக் கற்பனை காடு -கடிதம் காடும் மழையும் காடு- கடிதங்கள் காடும் யானையும் கன்யாகுமரியும் காடும் காடும் குறிஞ்சியும் காடு- ஒரு கடிதம் காடு– ஒரு கடிதம் காடு – பிரசன்னா காடு -ஒரு பார்வை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 30, 2021 11:32

கேளாச்சங்கீதம் – கடிதங்கள்-3

 

கேளாச்சங்கீதம் [சிறுகதை]

அன்புள்ள ஜெ,

கேளாச்சங்கீதம் கதையையும், அதற்கு வந்த கடிதங்களையும் வாசித்தேன். இலக்கியம் என்பதன் அடிப்படை அலகு அதில் இருக்கும் நிஜ வாழ்வனுபவம். அதிலும் சிறுகதை என்பது ஒரு வாழ்க்கை துண்டு. எந்த ஒரு நல்ல  சிறுகதையும் அது முடியுமிடத்தில் இருந்து வாசகனிடம் வளரத் துவங்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி. அதிலும் உங்களின் சிறுகதைகள் அவற்றின் தலைப்போடு இணைத்து இறுதி வரியை வாசிக்கையில் வாசகனிடம் எழுப்பும் கேள்விகள் அசாதாரணமானவை. அவற்றைத் தொடர்ந்து செல்லும் வாசகன் அவற்றின் பதிலாகக் கண்டடைபவை அக்கதை உத்தேசிக்கும் தரிசனங்கள்.

இக்கதைக்கு வந்த கடிதங்கள் அனைத்தும் இக்கதையின் நம்பகத்தன்மையை, அவரவர் சுய அனுபவங்களோடு இணைத்து வாசித்தவற்றை முன்வைத்தன. உண்மையில் பெரும் திகைப்பே ஏற்பட்டது. கொச்சன் வைத்தியர் சொல்வது போல் மரணமாகி வரும் மதுரம். வெண்முரசில் விருத்திரனிடம் தோற்று தேனீயாக மாறி தேனிலேயே ஊறி, அதிலேயே கிடந்து மயங்கும் இந்திரனின் சித்திரம் தான் நினைவுக்கு வந்தது. வைத்தியருக்கு இந்த கைவிஷத்தின் குணங்களும், விளைவுகளும், அதை முறிக்கும் வழிகளும் நன்கு தெரிந்திருக்கின்றன. ஏனெனில் அவரே அவரது மகனை மீட்க போராடி தோற்றவர் தான். ஆனால் கதை உத்தேசிப்பது இவற்றைத் தான் என்றால் அதன் தலைப்பை கைவிஷம் என்றே வைத்திருக்கலாமே. கேளாச்சங்கீதம் என ஏன் வைக்க வேண்டும்?

வைத்தியரின் கடைசி வாக்கியம், “முள்ளு நுனில்ல பனித்துளின்னாக்கும் மனுசனப் பத்தி சொல்லிருக்கு”. முள்  தங்க விடாது. பனித்துளியோ ததும்பிக் கொண்டிருப்பது. அந்த ததும்பலே அதை அந்த முள் கிழித்து வடிவழிக்க வைப்பது. இப்படி நித்யகண்டம் பூர்ண ஆயுசு என இருக்கும் வாழ்வில் ஒரு சிலருக்கு மட்டுமே வாய்ப்பது தான் துன்பசாகரத்தில் வீழாமல் இன்பசாகரத்தில், ஆனந்தசாகரத்தில் விழும் விதி. கதையிலும் சரி, இதற்கு வந்த கடிதங்களிலும் சரி, இந்நிலைக்குச் சென்ற ஆண்களைக் கவர்ந்த பெண்கள் எவரும் பேரழகிகளோ அல்லது வசிகரிக்கும் யட்சி அம்சம் கொண்டவர்களோ அல்லர். பின் ஏன் அந்த ஆண்கள் இப்படி மாட்டிக் கொள்கிறார்கள்? கந்தர்வர்கள் ஆகிறார்கள்? இது அவர்களின் இயல்பு. நவீன நரம்பியல் இதை மூளையின் அமைப்போடும், ரசாயனங்களோடும் தொடர்பு படுத்தி விளக்கவும் கூடும். ஆனால் விளக்கங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு வசீகரம் இந்த நிலையில் இருக்கிறது.

இதில் சிக்கிய ஆண்களின் நிலை தெளிவாகவே தரப்பட்டிருக்கன்றது. ஆனால் அந்த பெண்களின் நிலை? இதில் கணேசனைக் கவர்ந்தவள் அவனை வெளிக்கொணர என்ன வேண்டுமானாலும் செய்கிறேன் எனத் தான் சொல்கிறாள். அப்படியெனில் இந்த கைவிஷம் எப்படி அவளிடமிருந்து கணேசனுக்கு வந்து சேர்ந்திருக்கும்? அதற்கும் ஒரு சாத்தியத்தை கொச்சன் வைத்தியர் சொல்கிறார். கனவில் நடந்திருக்கலாம் என்கிறார். மனம் குவிந்து பிற அனைத்தையும் விலக்கி கணேசனின் பெயரை மட்டுமே லட்சத்திஎட்டு முறை உருப்போட்டு அவள் செய்த கைவிஷம், அக்கனவிலேயே அவனுக்கு கைமாறுகிறது. எனவே தான் இதை உத்தம மந்திரம் என்கிறார் வைத்தியர். அதைச் செய்தவளை தவறாகப் பேசுவதைத் தடுக்கவும் செய்கிறார். ஆனால் நிஜ உலகில் இப்படி தன் மனதில் ஒரு ஆடவனை இப்படி, இந்த அளவு எண்ணியிருப்பதை அப்பெண்கள் அறியாமலேயே கூட இருந்திருக்கலாம். அல்லது அவர்கள் தங்களுடன் கல்லறைக்குக் கொண்டு செல்லும் ரகசியமாகவும் இருக்கலாம். எனவே தான் வைத்தியர் எட்டு வருடம் போராடியும் அவர் மகனை கந்தர்வனாக்கியவள், கொடூர வாதைகளை மட்டும் அனுபவித்தாலும் அவனை விடவில்லை. மானுட மனதின் செயல் வழிகளை நாம் முழுதறிந்து விட முடியுமா என்ன? பத்து லட்சம் காலடிகள் கதையில் இதே போன்றதொரு நிகழ்வு வருகிறது. அங்கும் ஹாஜி எம்.ஏ.அப்துல்லா அவர்களின் மகன் ஹாஷிம் இப்படி திருமணமான, அவனை விட நான்கு வயது மூத்தவளான ஒரு பெண்ணிடம் சிக்கிக் கொள்கிறான். அவளும் அவனை கடைசி வரை நினைத்துக் கொண்டிருப்பேன், அவள் கணவனின் அத்தனை குரூரங்களையும் சகித்துக்கொண்டு என்று தான் சொல்கிறாள். இதை எளிய பழிவாங்கும் உத்தி எனக் கடந்து விடலாகாது.

ஆனால் இன்னொன்று உண்டு. துயர்கள் மட்டுமே சாத்தியமான வாழ்வில் நித்திய ஆனந்தத்தை மட்டுமே நல்கும் இந்நிலையை ஏன் நாம் வியாதி என்கிறோம்? நம்மை விடுங்கள், அந்த நிலை விலகும் காலை வேளைகளில் கணேசனே ஏன் இதை வியாதி என நம்புகிறான்? அந்த நிலை என்பது தான் என்ன? ஒரு வார்த்தையில் சொன்னால் ‘பரவசம்’. நாமனைவரும் வாழ்வில் சில நிமிடங்களுக்காவது அந்த பரவசத்தை அனுபவித்திருப்போம். அவை சில நிமிடங்களே என்பதால் நம் வாழ்வின் அருங்கணங்களில் ஒன்றாக அவை இருக்கும். ஏனெனில் அவற்றை நாம் அறிந்திருக்கிறோம். இங்கே கணேசன் முதலானவர்களுக்கு அந்த அறிதலின் சாத்தியங்கள் இல்லை. யோக சாதனைகளில் சாதகன் இந்த நிலைக்கு வருவது உண்டு. அங்கே குருவின் துணை இல்லையேல் சாதகன் மீளவியலாது. அறியாத எதுவும் மானுடனுக்குத் துயர் தானே! துயரளிக்கும் எதுவும் நோய் தானே! நோய் என நம்பினால் மட்டும் தானே குணம் சாத்தியம்.

கேளாச்சங்கீதத்தை கேட்காமலே இருப்போமாக…. கேட்டால் அதை அறிந்து கொள்ள அருளிருக்கட்டும்… மீண்டும் ஒரு அபாரமான கதை ஜெ.

அன்புடன்,

அருணாச்சலம் மகாராஜன்

 

அன்புள்ள ஜெ

கேளாச்சங்கீதம் வாசித்தேன். இது உங்களுடைய ஒரு recurring theme என நினைக்கிறேன். முதன்முதலாக விஷ்ணுபுரத்தில் வரும் திருவடி ஆழ்வார் தான் இந்த நிலையில் இருக்கிறார். லலிதாங்கியின் ஒரு கணம் அவரை பித்துப்பிடிக்கச் செய்துவிடுகிறது. அது அவரை தூய ecstasy நோக்கி கொண்டு செல்கிறது. அதுவே இறையனுபவமாகவும் ஆகிவிடுகிறது. ஆனால் அதில் வரும் வைத்தியர் அதை ஒரு உடல்நிலைச் சிக்கல் என்றுதான் சொல்கிறார். வைத்தியரிடம் திருவடியை கொண்டுசெல்லும் ஒரு காட்சி இருக்கிறது. திருவடி அந்த பித்தில் வலிப்புகள் வந்து துடித்தபடியே இருக்கிறார். அந்த மாபெரும் இனிமையை அவர் உடல் தாளவில்லை என்று வைத்தியர் சொல்கிறார்.

அதன்பின் ஒரு நேரடி அனுபவக்குறிப்பு வாழ்விலே ஒருமுறை நாவலில் உள்ளது. நூறுகதைகளில் தங்கத்தின் மணம் குறிப்பிடத்தக்க படைப்பு. இது நீங்கள் கேட்டு அறிந்த கதை அல்லது அனுபவம் மட்டும் அல்ல. இது உங்கள் சொந்த அனுபவமாகவும் இருக்கும் என நினைக்கிறென். இந்த அனுபவத்தில் உள்ள mystic தன்மையும் உங்களை கவர்கிறது. கூடவே இதை வெறும் உடல்நிலைச்சிக்கலாக, நரம்புச்சிக்கலாக மட்டுமே பார்க்கமுடியுமா என்றும் முயர்ச்சி செய்கிறீர்கள். இந்த ஆதாரமான கேள்வியை உங்களால் தாண்டமுடியவில்லை என தோன்றுகிறது

சாரங்கன்

கேளாச்சங்கீதம் – கடிதங்கள்-2 கேளாச்சங்கீதம்- கடிதங்கள்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 30, 2021 11:31

அஜ்மீர்,பிருத்விராஜ்- கடிதம்

இனிய ஜெயம்

சிற்சில பயணங்கள். இன்றுதான் கட்டுரைத் தொடரை ஒரே அமர்வில் முழுமையாக வாசித்தேன்.

அஜ்மீர் யாத்திரையில் மானசீகமாக உங்கள் அருகே நானும் இருந்தேன். அந்த உணர்வுக்கு ஸ்தூலமான உருவம் அளித்தது உங்களது பயணக் கட்டுரை. சஸ்ய ஷியாமள கோமளம் என முகம் காட்டும் திணையிலிருந்து கிளம்பி, வெம்பாலை என முகம் காட்டும் திணைக்கு உங்களுடனும் ஷாகுல் உடனும் சென்று இறங்கி, அதன் கலை வரலாறு பண்பாட்டு குறுக்குவெட்டுக்குள் சுற்றிச் சுழன்று, மீண்டு மழையில் பசுமை செழித்து நிற்கும் குமரி நிலத்துக்கு வந்து சேர்ந்தேன்.

நீங்கள் பயணத்தில் இருக்கும்போதே நீங்கள் உள்வட்டத்தில் பகிர்ந்திருந்த ஞானி ஹாஜா மொய்னுதீன் அவர்களுக்கு உங்கள் சிரம் மேல் ஏந்தி சென்ற வணக்கக் கம்பள புகைப்படம் ‘கேஷுவலாக’ முகநூலுக்கு பரவி, முகநூல் சுண்டெலிகளும் இந்துத்துவ பூனைக்குட்டிகளும் சேர்ந்து கீச் மூச் மியாவ் வியாவ் என்று தங்கள் ஜலபுலஜங்ஸ் ஐ துவங்கி விட்டனர்.

பூனைக்குட்டிகள் அறியாத பலவற்றில் இதுவும் ஒன்று. அக்காணிக்கை ஒரு மரியாதை. சமர்ப்பணம். ஒபாமா உள்ளிட்ட  உலக தலைவர்கள் அதை இயற்றி இருக்கிறார்கள். இந்த வருடம் அக் காணிக்கையை செலுத்திய முக்கியப் பிரமுகர்களில் ஒருவர், இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோதி அவர்கள்.

கட்டுரையில் மிக முக்கிய அலகுகளில் ஒன்று அன்றைய சூழலில் நாயக உருவாக்கங்கள் குறித்த வரையரையும் அந்த வரிசையில் வரும் மகாராஜா பிரித்விராஜின் நாயக உருவாக்கமும், கோரி பிருத்வி இரு பக்கங்களிலாக அமைந்த நாணயம் சுட்டும் யதார்த்த தளமும். நிச்சயம் பூனைக்குட்டிகள் இந்த நாணயம் சுட்டும் யதார்த்தத்தை மியூட்டில் போட்டு விட்டு, ப்ரிதிவிராஜ காவியத்தில் நீங்கள் சுட்டிய சம்பவத்தை எடுத்துக்கொண்டு “ஐயையோ இந்த ஜெயமோகனே இப்புடித்தான்” என்று தங்கள் ஜலபுலஜங்ஸ் ஐ துவங்குவார்கள்.

எல்லா பெருங்கதையாடல் போலவே பிருத்விராஜ் ராஜாவின் கதையும் ப்ரிதிவிராஜ விஜயம் காவியத்தை அடிப்படையாகக் கொண்டே துவங்குகிறது. இங்கே நிச்சயம் குறிப்பிடப்பட வேண்டிய ஆளுமை திரு ஜான் ஜார்ஜ் புஹ்லர் அவர்கள். ஹனாவர் அவரது சொந்த மண். ஜெர்மன், கிரேக்கம், லத்தின், அரபி, சமஸ்க்ருதம் உட்பட பல மொழிகளை பண்டிதர் எனும் அளவு கற்றவர். முறையாக தொல்லியல் பயின்றவர். அன்றையதேதிக்கு அறிவுத்துறை கவனம் கொள்ளும் பல நூல்களை எழுதியவர்.

மாக்ஸ் முல்லர் வழிகாட்டுதலின் பேரில் இந்தியா வரும் ஜான் புஹ்லர் மும்பை பல்கலை கழகத்தில் இணைந்து ஆய்வுகள் மேற்கொள்கிறார். அவரது சமஸ்கிருத ஆய்வு, தேடல்கள் இதன் வழியாக அவர் கஷ்மீரில் 1875 இல் கண்டு பிடித்த பூர்ஜர மரப்பட்டையில் எழுதப்பட்டிருந்த சம்ஸ்கிருத கையெழுத்துப் பிரதியான முழுமையற்ற காவியமே ப்ரிதிவிராஜ விஜயம்.

அஜமேரு நகரத்தில் அவதரித்து முஸ்லிம்களின் கொட்டத்தை அடக்கும்படி பிரம்மன் விஷ்ணுவை பணிக்கிறார். அதற்கென அவதரித்தவரே பிருத்விராஜ். இப்படித் துவங்கும் காவியம், ராமரின் குணங்கள், ராமராஜ்யம் எனும் ஆட்சி முறை என்ரெல்லாம் அன்றைய லட்சியவாதம், காவிய இலக்கணம் ஆகியவற்றின் பின்னணியில் ப்ரிதிவிராஜ் ராஜாவை பொருத்தி அவரது சரிதத்தைப் பாடுகிறது.

இந்தக் காவிய உயர் நவிற்சி, உருவம் உத்தி, எழுதிய  ஆஸ்தான கவியின் சார்பு,  அதிலிருந்து எவ்வாறு ஊகித்தும் ஒப்பு நோக்கியும் புறவய வரலாறு ‘பிரித்து’ எடுக்கப்பட்டது என்பது சார்ந்து சில ஆய்வுக் கட்டுரைகள் archive இல் கிடைக்கின்றன.ஆக இந்த குறுகிய சார்பு எல்லைகள் வழியே தெரியும் பிருத்வியின் வன்முகத்தை விட அவரது வன்மைச் செயல்கள் அதிகமாக இருக்கும் என்பதே உண்மை. இந்த சாதாரண அடிப்படையான ஊகஉண்மையை அந்த பூனைக்குட்டிகள் வசம் சொல்லிப் பாருங்கள். மியாவ் கியாவ் என்று கதறி சாபம் விட்டு கண்ணீர்க் கடலில் மிதப்பார்கள்.

கொஞ்சம் பின்னால் திரும்பி பார்த்தால் இந்த பூனைக்குட்டிகள் உருவாக்கிய நாயகர்கள் எல்லோர் நிலையும் இப்படித்தான் இருக்கிறது என்பது தெரியும். யதார்த்த ஆளுமை வேறு, இவர்கள் அவர்கள் மீது சுமத்தும் நாயக பிம்பம் வேறு. சிறந்த கடந்தகால உதாரணம் வீர சிவாஜி. சில வருடங்கள் முன்பு பூனைக்குட்டிகள் கூடி மியாவ் கியாவ் வியாவ் என்று வெற்றி முழக்கம் எழுப்பி அஃப்சல் கான் கல்லறை மாடத்தை தரைமட்டம் ஆக்க இந்துக்களுக்கு அறைகூவி அழைப்பு விடுத்தன. இடதுசாரிகள் தலையிட்டு அந்தக் கல்லறை மாடத்தைக் கட்டியவரே வீர சிவாஜிதான் எனும் ‘ஆதார பூர்வமான’ வரலாற்றை சுட்ட, அதிசயமாக அது பூனைக்குட்டிகளும் விளங்க, அந்த அபாயம் அன்று நின்று போன சேதியை இப்போதும் இணையத்தில் எடுத்து வாசிக்கலாம்.

சிறந்த இந்தக் கால உதாரணம் ‘இந்துத்துவ’ அம்பேத்கார். அவர் எழுதிய, பெரியாருக்குக்கு கொஞ்சமும் சளைக்காத (ஆனால் ஆய்வு நூல்) இந்து மதத்தின் புதிர்கள் நூலை எப்படி மண் பறித்து மூடுவது என்று இன்னமும் பூனைக்குட்டிகளுக்குப் புரியவில்லை. அடுத்து சர்தார் வல்லபாய் படேல். மூவாயிரம் அடி உயர (அல்லது முப்பதாயிரமா) சிலையாக இன்று எழுந்தருளும் அதே வல்லபாய்தான், சுதந்திர இந்தியாவில் rss கு தடை விதித்தவர். இந்த பூனைக்குட்டிகளின் பரம எதிரி நேருதான் அந்த தடையை நீக்கியவர். பூனைக்குட்டிகள் அரசியலை அன்று நேரு கையில் எடுத்திருத்தால் அன்றைய காந்தி கொலைச்சூழலில் இந்தியா இருந்த கொந்தளிப்பு நிலையை, தனக்கிருந்த அதிகாரம் மக்கள் ஏற்பு இவற்றை பயன்படுத்தி, படேல் மற்றும் இந்துத்துவ தரப்புகளை அன்றே அவர் அரசியல் அனாதை என்று ஆக்கி இருக்க முடியும். நேரு தான் காந்தியின் மைந்தன் என்பதை மீண்டும் நிரூபித்தார்.

என்றுமுள்ள நாயகன் வீர சாவர்க்கர் கதை… வேண்டாம்…அப்பா சொல்லுவார் யானைக்கு ஒரு காலம்னா, பூனைக்கும் ஒரு காலம் வரும் என்று. இது பூனைகளின் காலம். எனக்கு பூனைக்கடி தாங்காது. ஆகவே இங்கே நிறுதிக் கொள்கிறேன் :).

 

கடலூர் சீனு

அஜ்மீர் பயணம்- 7 அஜ்மீர் பயணம்-6 அஜ்மீர் பயணம்- 5 அஜ்மீர் பயணம்- 4 அஜ்மீர் பயணம்-3 அஜ்மீர் பயணம்-2 அஜ்மீர் பயணம்-1

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 30, 2021 11:31

October 29, 2021

ஞானி, தத்துவஞானி, தத்துவவாதி எனும் சொற்கள்

எழுத்தின் இருள்

அன்புள்ள ஜெயமோகன்

சமீபத்தில் நீங்கள் எழுதிய “எழுத்தின் இருள்” என்ற கட்டுரையை படித்த பின் ஒரு சிறு குழப்பம். அந்த கட்டுரையில் நீங்கள் “தத்துவஞானியிலும் மெய்ஞானியிலும் அமையும் நேர்நிலையான நிறைவு ஒரு பெருங்கொடை. அதை தன் புனைவின் உச்சியில் கலைஞன் நிகழ்த்திக்காட்டிவிடமுடியும். காட்டியதுமே அவன் கீழிறங்கி தன்னியல்புக்கு மீளவும் வேண்டியிருக்கும்” என்று கூறிய இருந்தீர்கள்.

தத்துவவியல் பட்ட படிப்பில் தங்க பதக்கம் பெற்ற ஓஷோவும், தத்துவத்தை கற்று தேர்ந்த ஜெ.கிருஷ்ணமூர்த்தியும் மெய்ஞானி  என்பதை நான் மறுக்கவில்லை. அதே நேரத்தில் தத்துவம் பற்றி பெரிதாக நூல் அறிவு இல்லாத ரமணரும், ராமகிருஷ்ணரும் மெய் ஞானிகள் தானே? வெறும் நூல் அறிவு மட்டுமே கொண்ட யு.ஜி.கிருஷ்ணமூர்த்தி போன்றவர்களை தான் நீங்கள் தத்துவஞானி என்று சொல்கிறீர்களா? அப்படி பார்த்தால் நீங்களும் பல தத்துவங்களை நித்யா குருகுலத்தில் கற்று இருப்பீர்கள் என்று ஊகிக்கிறேன். ஆனால் ஏன்  “நான் வெறும் எழுத்தாளன் மட்டுமே தத்துவவாதி இல்லை” என்று உங்களை நீங்களே தாழ்த்துகிறீர்கள்?

எனது சந்தேகம் என்னவென்றால் ரமணரும், யு.ஜி.கிருஷ்ணமூர்த்தியும் சம நேர்நிலை கொண்டவர்கள் என்று நீங்கள் கருதுகிறீர்களா?(இதை நீங்களே ஏற்க மாட்டீர்கள் என்று தெரிந்தே கேட்கிறேன்) ஒருவேளை “யு.ஜி.கிருஷ்ணமூர்த்தி ஒரு தத்துவஞானியே இல்லை” என்று நீங்கள் சொன்னால், தத்துவஞானி என்ற வார்த்தையை என்ன பொருளில் பயன்படுத்துகிறீர்கள்? தத்துவஞானி என்பவருக்கு என்ன அளவுகோலை பயன்படுத்துகிறீர்கள்?

உங்கள் அளவுகோல் என்னவாக இருந்தாலும், உங்கள் அளவுகோலிலின் படி  பொருந்தக்கூடிய தத்துவஞானியை, ஒரு மெய்ஞானியுடன் ஒரே தட்டில் வைப்பீர்களா? அவர்கள் இருவரும் சம நேர்நிலை கொண்டவர்கள் என்று நீங்கள் கருதுகிறீர்களா?

அன்புபுடன்

கார்த்திகேயன்.J

அன்புள்ள கார்த்திகேயன்,

சில சொற்களை நாம் குறிப்பிட்ட வரையறையை அளித்து பயன்படுத்துகிறோம். தமிழ்ச் சூழலில் தத்துவ விவாதங்கள் மிகக் குறைவு. இலக்கிய விவாதங்களும் குறைவுதான். ஆகவே சொற்கள் ஒரு பொதுவான பொருளில் பயன்படுத்தப்படுவது மிக அரிது. இச்ச்சூழலில் ஒவ்வொரு ஆசிரியரும் அவருடைய மொத்த உரையாடலிலும் ஒரு சொல்லை எப்படிப் பயன்படுத்துகிறார் என்பதைக் கொண்டு அவர் கூறவருவது என்னவென்பதை தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும்.

நான் சில சொற்களை குறிப்பிட்ட வரையறையை அளித்து பயன்படுத்துகிறேன். ஞானி, மெய்ஞானி போன்ற சொற்களை seer, sage என்ற சொற்களுக்கு இணையான சொற்களாகப் பயன்படுத்துகிறேன். அவர்கள் கற்றறிந்தவர்கள் அல்ல. புனிதர்களுமல்ல. மதத்தலைவர்கள் அல்ல. அவர்கள் கற்றவர்களோ, புனிதர்களோ, மதத்தலைவர்களோ ஆக இருக்கலாம். ஆனால் அடிப்படையில் அவர்கள் மெய்ஞ்ஞானத்தை உணர்ந்தவர்கள்.

உணர்ந்தவர்கள் என்ற சொல்லைக் கூர்ந்து பயன்படுத்துகிறேன். அறிந்தவர்களல்ல. வேதாந்தத்தில் அறிவது, அறிவென்றாகி அறிவில் அமைவது இரண்டும் வேறு வேறு. அறிவதை ஞானம் என்றும் அமைவதை சாக்ஷாத்காரம் என்றும் சொல்கிறார்கள். தோராயமாக ஆங்கிலத்தில்  self-realization என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள். Realization என்ற வார்த்தையை மேலும் பொருத்தமாகப் பயன்படுத்தலாம் – அதுவாதல். இங்கனைத்தும் உள்ளது பிரம்மமே என்றறிவதற்கு இரண்டு நிமிடங்கள் போதும். அவ்வறிவை உணர்வாக்கி தன்னிருப்பாக்கி அதிலமைந்து பிறிதொன்றில்லாது எஞ்ச ஒரு வாழ்நாள் முழுவதும் நீளும் யோகம் தேவை. அதையே சாதனா என்கிறோம்.

அகப்பயிற்சியினூடாக அப்பயிற்சியைக் கொண்டு நிகழ்த்தும் ஆழ்ந்த நெடும் பயணத்தினூடாக அறிவென்றாகி அமைந்தவர்களையே ஞானி என்று சொல்கிறோம். அச்சொல்லை அத்தனை எளிதாக நாம் பயன்படுத்தி விடக்கூடாதென்ற தன்னுணர்வு நமக்கு வேண்டும். அதற்கு நமது உலகியலிலிருந்து எளிய வரையறைகளை நாம் அளிக்கக் கூடாது.  உலகியலாளனின் வரையறையின்படி ஒரு ஞானி திகழ வேண்டும் என்பதைப் போல் அபத்தம் வேறில்லை.

பெரும்பாலான தருணங்களில் உலகியலாளர்கள் தங்கள் மதநம்பிக்கைக்கு உகந்த பெரியவர்களை ஞானிகள் என்று சொல்ல விரும்புகிறார்கள்.  தாங்கள் உகந்ததென்று எண்ணும் ஆசாரங்களைக் கடைப்பிடிப்பவர்கள், நோன்புகளை பற்றி ஒழுகுபவர்கள் அவர்களுக்கு ஞானிகளாகத் தென்படுகிறார்கள்.

வயது முதிர்ந்தவர்களை ஞானிகள் என்று கருதும் ஒரு போக்கு உண்டு நமக்கு. நம்முடைய தந்தை வழிபாட்டின் விளைவு அது. ஒருவர் நூறாண்டுகளுக்கு மேல் வயது முதிர்ந்தவர் என்றால் இயல்பாகவே அவர்களுடைய அசைவுகளில், பேச்சுக்களில் ஒரு முதிர்வும் தளர்வும், அவர் இயல்பில் ஒரு அமைதியும் கூடிவிடும். நாம் நெடுங்கால தந்தை வழிபாடு கொண்டவர்களாதலால் அவரை இறைவடிவராக நினைப்போம், ஞானி என்போம்.

அத்துடன் உலகியலாளர் செய்ய முடியாத சிலவற்றை செய்பவர்களை ஞானி எனச் சொல்லும் வழக்கம் உண்டு. சித்து வேலைகள், முக்காலமும் உணர்தல், போன்ற சிலவற்றை ஞானிகளின் இயல்பாகக் கூறுவதுண்டு. ஒருவரை ஞானி என்று சொல்பவரிடம் எவ்வகையில் அதைச் சொல்கிறீர்கள் என்று கேட்டால் அவர் சொல்லும் ‘சான்றுகள்’ பெரும்பாலும் எளிய மாய மந்திரங்களாகவே இருப்பதைப் பார்க்கலாம்.

ஒருவர் ஆன்மிகப் பெருநிறுவனங்களை உருவாக்கி அதன் தலைமையில் இருப்பவர் என்றால் அந்நிறுவனங்களை சார்ந்தவர்கள் அவரை எளிதில் ஞானி என்கிறார்கள், அவ்வண்னம் ஏற்கிறார்கள். அவ்வாறே அவரை முன்னிறுத்துகிறார்கள். ஆகவே இன்றைய சூழலில் ஞானி, மெய்ஞானி என்னும் சொற்கள் மிகமிக பொருள்மழுங்கல் கொண்டவை.

ஒருவர் இன்னொருவரை ஞானி என்று சொல்லும்போது அவ்வாறு அல்ல என்று மறுப்பது, வாதிடுவது எளிதல்ல, நல்லதுமல்ல. ஏனெனில் ஞானியை  அளவிடுவதற்கு நம்மிடம் அளவுகோல்கள் இல்லை. உலகியலாளர்களாகிய நாம் அவ்வாறு அளவுகோல்களை உருவாக்கி வைத்துக்கொண்டிருப்பதும் பொருத்தமல்ல. ஆகவே ஞானி என ஒருவர் இன்னொருவரை சொல்லுவார் என்றால், அது அவருடைய முடிவு, அவருடைய நம்பிக்கை என்று விட்டுவிடுவதே உகந்தது.

நான் என்னளவில் ஞானி அல்லது மெய்ஞானி எனக் கருதுபவர் இங்கு ஆற்றுவது ஆற்றி, அறிவது அறிந்து விடுபட்டவர். நாராயண குருவை நான் ஞானி என்று நினைக்கிறேன். ரமணரை, வள்ளலாரை, ராமகிருஷ்ண பரமஹம்சரை ஞானியர் எனக் கருதுகிறேன். அவர்களை இங்கிருந்து அகன்று, அதன்பின்னரும் இங்குளோருக்கு தன்னை அறியக்காட்டித் திகழ்பவர்கள் என்று புரிந்துகொள்கிறேன்.

தத்துவ ஞானி என்று கூறுபவர்கள் தத்துவத்தின் வழியாக மெய்மையை அறிந்தவர்கள். அதை அறிவின் மொழியில் வரையறுத்துக் கூறுபவர்கள். ஜே.கிருஷ்ணமூர்த்தியோ, ஓஷோவோ, நித்ய சைதன்ய யதியோ, நடராஜ குருவோ அவ்வரிசையில் வருவார்கள். தத்துவம் அவர்களுக்கு அறிவதற்கும், அறிந்ததை உணர்த்துவதற்குமான கருவியாக உள்ளது. அறிந்து, கனிந்து தங்கள் முதிர்வின் கணத்தில் அவர்கள் பிறிதொன்றென ஆகிறார்கள்.

ஆனால் நாம் அவர்களை அறியும் காலம் முழுக்க அவர்களிடம் தத்துவம் இருந்துகொண்டே இருப்பதனால், அறிந்தவை அவர்களின் அகம் என்று ஆகி அவர்கள் பிறிதொன்றிலாது மாறாதிருப்பதனால் அவர்களை ஞானி என்று உரைப்பதற்கு மாறாகத் தத்துவ ஞானி என்கிறோம்.

தத்துவவாதி என்ற வார்த்தையை இன்னும் கவனமாகப் பயன்படுத்துகிறேன். தத்துவத்தைக் கற்றவர், அதில் அறிவுடையவர், அதை விரித்துரைக்கும் தகுதி கொண்டவர், தத்துவவாதி. ஒரு தத்துவக் கொள்கை மேல் நம்பிக்கை கொண்டவர். அதை முன்வைப்பவர். அவ்வாறு பல தத்துவவாதிகளை நம்மைச் சுற்றிப் பார்க்கலாம்.

எஸ்.என். நாகராஜனையும் கோவை ஞானியையும் தத்துவவாதிகளாகப் பார்க்கிறேன். அத்தத்துவத்தின் சாரமுணர்ந்து தெளிந்த நிலை அவர்களிடம் இல்லை என்பதனால் அவர்களைக் குறிக்க தத்துவ ஞானி என்ற சொல்லைப் பயன்படுத்துவதில்லை. தத்துவத்தைப் பயின்று மேலும் தேடி சென்றுகொண்டிருக்கும் நிலையில் நாம் அவர்களை அறிகிறோம்.

இச்சொற்களுக்கிடையேயான வேறுபாடுகளின் ஊடாக நாம் அறிதலின் படிநிலைகளை வகுத்துக் கொள்கிறோம். தத்துவத்தின் ஊடாக செல்பவர் தத்துவவாதி. தத்துவத்தைக் கடந்து அமைந்தவர் தத்துவ ஞானி. அறிவதறிந்து அதுவானவர் ஞானி.

எழுத்தாளன் இம்மூன்றும் அல்ல. அவனுடைய கருவி தத்துவம் அல்ல, அது புனைவே. புனைவின் வழி என்பது கற்பனை. தத்துவத்தின் வழி என்பது தர்க்கம். கற்பனையினூடாக ஓர் உலகை உருவகிக்கும் எழுத்தாளன் அதன் ஒட்டுமொத்தப் பார்வையை வகுத்துரைக்கும் பொருட்டு தத்துவத்தைக் கையாளக்கூடும், ஆனால் அது தத்துவம் அல்ல. புனைவின் ஒரு பகுதியாக இருக்கும் தத்துவம். புனைவுத் தத்துவம்தான். அது தத்துவத்தின் மொழியில் அமைந்திருப்பதில்லை. புனைவின் மொழியில் அமைந்திருக்கிறது.

தஸ்தாவெய்ஸ்கி ஆனாலும் தல்ஸ்தோய் ஆனாலும் தாமஸ் மன் ஆனாலும் சரி, விஷ்ணுபுரமோ வெண்முரசோ ஆனாலும் சரி அதில் உள்ளது நேரடியாகத் தத்துவம் அல்ல. புனைhttps://www.jeyamohan.in/wp-content/u... மறு ஆக்கம் செய்யப்பட்ட தத்துவமே.

புனைவிலக்கியவாதி எந்நிலையிலும் தத்துவவாதி ஆவதில்லை. புனைவிலக்கியத்தின் ஊடாகக் கனிந்து அதைக் கடந்து ஒரு முழுமையடைந்தவரை நாம் இலக்கிய ஞானி என்று சொல்லக்கூடும். தல்ஸ்தோய் அவ்வாறு ஒரு இலக்கிய ஞானி. பாரதியையும், தாகூரையும், பஷீரையும், சிவராம காரந்தையும் நான் அவ்வாறு வரையறுப்பேன்.அவர்களின் எழுத்து மட்டுமல்ல அவர்களின் ஆளுமையுமே அதற்குச் சான்று.

சரி,இலக்கியத்தின் ஊடாக மெய்ஞ்ஞானி ஆனவர்கள் உண்டா? நம்மாழ்வாரோ, கபீரோ,ரூமியோ, அவ்வாறு இலக்கியத்தின் ஊடாக மெய்ஞ்ஞானி ஆனவர்களாக நமக்கு வரலாற்றில் காணப்படுகிறார்கள். எந்தப் பாதையும் அறுதியாக சென்றடைவது மெய்ஞ்ஞானத்தையே. இலக்கியமும் அதற்கான வழி ஆகலாம்.

ஜெ

எழுத்தின் இருள் கடிதங்கள்

எழுத்தின் இருள்- கடிதங்கள் 2

தத்துவம் இன்று…

தத்துவம் மேற்கும் கிழக்கும்

தியானமும் ஜே.கிருஷ்ணமூர்த்தியும்

பார்ப்பான், பார்ப்பவன்- ஒரு திரிபு

கடவுளை நேரில் காணுதல்

மெய்ஞானம் டாட் காம்

குருவும் குறும்பும்

இந்துமதமும் ஆசாரவாதமும்

புலிக்காலடி

திருமந்திரம் பற்றி…

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 29, 2021 11:35

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.