அறிவுரைகளா?

அன்புள்ள ஜெ

நீங்கள் சமீபமாக அளிக்கும் பதில்களில் ஆன்மிகம் மற்றும் தனிநபர் வாழ்க்கை பற்றிய சிந்தனைகள் மிகுதியாக உள்ளன. உங்களிடம் வரும் கேள்விகளும் பெரும்பாலும் அத்தகையவையாகவே உள்ளன. நீங்கள் அளிக்கும் பதில்கள் என்னைப்போன்றவர்களுக்கு மிகமிக உதவியானவை. என் குழப்பங்களுக்கு  விடையாக அமைந்த பல அற்புதமான பதில்களைச் சொல்லியிருக்கிறீர்கள்.

ஆனால் என் இலக்கிய நண்பர்களுடன் பேரும்போது சிலர் ‘இலக்கியவாதிகள் அறிவுரைகள் சொல்லக்கூடாது’ என்று சொல்கிறார்கள். அறிவுரை சொல்வது இலக்கியவாதிகளின் பணி அல்ல என்கிறார்கள். இலக்கியவாதி நம்மை குழப்பிவிடுவானே ஒழிய திட்டவட்டமாகத் தெளிவுகளை அளிக்க மாட்டான் என்றும் சொல்கிறார்கள். இந்தக் கேள்வியை நான் ஏன் கேட்கிறேன் என்றால் இந்தக் கோணம் எப்படி உருவாகிறது என்ற சந்தேகம் எனக்கு வருகிறது என்பதனால்தான்.

மா.அகிலன்

 

அன்புள்ள அகிலன்,

சுந்தர ராமசாமி கணையாழி இதழில் ஒரு கேள்விபதிலை தொடங்கினார். அதில் அவர் இத்தகைய ஓர் உரையாடலையே நிகழ்த்த முனைந்தார், அது நீடிக்கவில்லை. அதற்கு முன்பு அவர் புதுயுகம் பிறக்கிறது உள்ளிட்ட இதழ்களில் இவ்வகை உரையாடலுக்கு முயன்றார். அன்றிருந்த சூழல் அதற்குச் சாதகமானது அல்ல. ஜெயகாந்தன் குமுதம் உள்ளிட்ட இதழ்களில் இதைப்போல நிறையவே எழுதியிருக்கிறார்.

உலகம் முழுக்க எழுத்தாளர்கள் வாழ்க்கை பற்றிப் பேசிய பல்லாயிரம் பக்கங்கள் வாசிக்கக்கிடைக்கின்றன. இலக்கியமேதைகளால் எழுதப்பட்டவை அவை. உலகம் முழுக்க மக்களிடையே வாழ்க்கைப் பார்வைகளை உருவாக்குவதில் அவையே முதன்மைப் பங்கு வகிக்கின்றன. நீங்கள் ‘சொந்தமாக’  ‘இயல்பாகச்’ சிந்திப்பதாக நம்பிக்கொண்டிருக்கும் பல கருத்துக்கள் சூழலில் இலக்கியவாதிகளால் ஏற்கனவே நிலைநாட்டப்பட்டவை என்பதை கொஞ்சம் கவனித்தால் அறிந்துகொள்ள முடியும்.

அச்சிந்தனைகள் பள்ளிப்பாடங்களாக, அன்றாட மேற்கோள்களாக வந்து சேர்ந்தபடியே இருக்கின்றன. உருமாற்றமடைந்து வெவ்வேறு குரல்களால் முன்வைக்கப்படுகின்றன. அவை நம் மொழிச்சூழலை கட்டமைத்து, மொழியை கற்கையிலேயே நாம் அவற்றையும் பெற்றுக்கொள்ளும் நிலை உருவாகிறது. ஆகவே நாம் அவற்றை இயல்பாக அடைந்திருப்பதாக எண்ணிக்கொள்கிறோம்.

தத்துவவாதிகளின் சிந்தனைகள் அடிப்படைப்பார்வையை உருவாக்குவதில் முன்னின்றாலும்கூட இலக்கியவாதிகளின் சொற்களே புதியபார்வைகளை பரவலாகக் கொண்டு சேர்த்திருக்கின்றன. காரணம் இலக்கியவாதிகள் படைப்பினூடாக ஒரு நிகர்வாழ்க்கையை உருவாக்கி, அதன் பின்னணியில் நின்று பேசுகிறார்கள். உணர்ச்சிமிக்க மொழியில் , கச்சிதமான சொற்களில் உரையாடுகிறார்கள்.

இலக்கியவாதி வாழ்க்கை பற்றிப் பேசுவது என்பது ‘அறிவுரை’ சொல்வது அல்ல. அறிவுரை என்பது ஒருவர் ‘மேலே’ நின்றுகொண்டு கீழே நின்றிருப்பவருக்கு வழிகாட்டுவது. இலக்கியவாதி உருவாக்குவது ஒர் உரையாடலை மட்டுமே. அந்த உரையாடலில் கேட்பவர் மறுமுனையாக அமைகிறார். அவர் தன் எண்ணங்களை அந்த உரையாடலை ஒட்டியும் வெட்டியும் உருவாக்கிக் கொள்கிறார்.அறிவுரையுடன் எப்போதுமே அதிகாரம் இணைந்துள்ளது. உறவின், சமூகஅமைப்பின் அதிகாரம். அல்லது உணர்வுபூர்வமான அதிகாரம். உரையாடலில் அதிகார நோக்கு இல்லை. இலக்கியவாதிக்கு எந்த அதிகாரமும் இல்லை. நீங்கள் அவரை மறுப்பதை தடுக்க எந்த விசையும் இல்லை.

இலக்கியவாதியின் கருத்தை நீங்கள் எப்படி ஏற்றுக்கொள்கிறீர்கள் என்று பாருங்கள். அவை மிகச்சரியாக வகுத்துரைக்கப்பட்டிருக்கும். உடனே நீங்கள் ஆம் என்கிறீர்கள். நீங்களே உங்கள் நுண்ணுணர்வால் அறிந்து, ஆனால் சரியான சொற்களை கண்டடையாத கருத்துக்களாகவே அவை இருக்கும். இந்த அறிவெழுதலை  evocation என்று ஐ.ஏ.ரிச்சர்ட்ஸ் சொல்கிறார். ஒருவர் சொல்ல இன்னொருவர் ஏற்றுக்கொள்ளும் நிலை அல்ல இது. ஒருவர் சொல்ல இன்னொருவர் சொல்லப்படுவதை தன்னுள் தானே கண்டடையும் நிலை.

கருத்துரைப்பது, உரையாடுவது ஆகியவற்றை அறிவுரை என கொள்வோம் என்றால் இங்கே சிந்தனைத்தளத்தில் எந்தப் பேச்சுமே நிகழாது. வாழ்க்கை பற்றிய கருத்துக்களே பேசப்படாமலாகும். சரி, இலக்கியவாதி கருத்துரைக்கலாகாது என்றால் வாழ்க்கை பற்றி யார் கருத்துரைக்கலாம்? அரசியல்வாதிகளா? திரைப்படக்காரர்களா? சமூக ஆய்வாளர்களா? இலக்கியவாதியை விட வாழ்க்கையை அறிந்தவர்களா அவர்கள்?

உங்கள் நண்பர்களின் கருத்து எங்கிருந்து வருகிறதென்று பாருங்கள். அவர்களுக்கு இலக்கியவாசிப்போ இலக்கியத்தை உள்வாங்கிக் கொள்ளும் நுண்ணுணர்வோ இல்லை. அவர்களைப் பொறுத்தவரை இலக்கியவாதி என்பவன் அவ்வளவாக புகழ்பெறாமல், அவ்வப்போது  செவியில் விழும் ஒரு பெயர். ஏதோ கதை எழுதுபவன். இலக்கியத்தை உணராதவர்களுக்கு எழுத்தாளன் சாமானியனே. அந்த சாமானியன் கருத்துரைக்கக் கூடாது என்றே அவர்கள் சொல்கிறார்கள்.

நீங்கள் தமிழ்ச்சூழலில் ஒன்றைக் கவனிக்கலாம்.எழுத்தாளனை ‘மிகையறிவு’ப் பாவனையில் விமர்சிக்கும் கும்பல் அப்படியே அதிகார அரசியலின் வெற்று  ஆளுமைகளுக்கு துதிபாடிக்கொண்டு, புல்லரித்துக்கொண்டு குப்புற விழுந்து கிடப்பார்கள். ’இலக்கியவாதியை நம்பாதே, சொந்தாமாகச் சிந்தித்துப்பார்’ என இலக்கியவாசகனிடம் அறிவுரை சொல்லும் கூட்டத்தினர் தாங்கள் நம்பி ஏற்கும் அரசியல்வாதிகள் மேல் விமர்சனமே இல்லா அடிமைகளாக இருப்பார்கள். அவர்கள் உருவாக்கும் காழ்ப்புகளை அப்படியே நம்பி தாங்களும் கக்கிக்கொண்டிருப்பார்கள்.

இலக்கியவாசிப்பு கொண்ட மிகச்சிலரிடமும் இலக்கியவாதி கருத்து சொல்லலாமா என்னும் குழப்பம் உண்டு. அது விரிவான உலக இலக்கிய அறிமுகமின்மை, இலக்கியத்திற்கும் இலக்கியவாதியின் உரையாடல்களுக்கும் இடையேயான வேறுபாடு பற்றிய தெளிவின்மை ஆகியவற்றின் விளைவு. உலக இலக்கியவாதிகளில் வாழ்க்கை பற்றிய கருத்துக்களை முன்வைக்காதவர்கள் மிகமிகக்குறைவு என்பதை வாசிப்பு வழியாக அறிந்துகொள்ளலாம்.

ஓர் இலக்கியவாதி தன் படைப்பை கருத்துசொல்லப் பயன்படுத்தினால் அப்படைப்பு அழகியல்ரீதியாக குறைபாடு கொண்டது. இலக்கிய ஆக்கம் கருத்துசொல்வதற்கான ஊடகம் அல்ல. அது நிகர்வாழ்க்கையை உருவாக்கி, அதில் வாசகனை வாழச்செய்து வாசகனே தன் கருத்தை தானே கண்டடையச்செய்யும் ஊடகம்.

ஆனால் இலக்கியப் படைப்பை உருவாக்கும் எழுத்தாளன் அந்த படைப்பாக்க அனுபவம் வழியாக சில தெளிவுகளை அடைந்திருப்பான். தன் தனிவாழ்க்கை, தன் தேடல்கள், தன் கல்வி ஆகியவற்றினூடாக அவன் சில புரிதல்களை வந்தடைந்திருப்பான். அவற்றை அவன் தன் கருத்துக்களாக முன்வைப்பது மிகச்சரியானதும் தேவையானதுமான ஒரு செயல்பாடு. உலகமெங்கிலும் நிகழ்வது. அவை அறிவுரைகள் அல்ல, விவாதப்புள்ளிகள் மட்டுமே.

நான் முன்வைப்பவை நான் என் வாழ்க்கையில் கண்டடைந்த உண்மைகளை மட்டுமே. சராசரி மனிதர்களைவிட நான் சந்தித்துள்ள மனிதர்களின் எண்ணிக்கை பற்பல மடங்கு. இன்றும் சந்தித்துக்கொண்டே இருக்கிறேன். நான் சென்றுள்ள ஊர்களும் பலமடங்கு. ஒரு சராசரி மனிதனை விட நுண்ணுணர்வும் எழுத்தாளனாக எனக்கு உண்டு. எல்லா அறிவுத்துறைகள் சார்ந்தும் வாசித்துக்கொண்டே இருக்கிறேன். நான் கருத்து சொல்வது இத்தகுதிகளினாலேயே.

வாழ்க்கை பற்றி நான் சொல்பவை அகவயமான கருத்துக்களே ஒழிய ஆய்வு உண்மைகள் அல்ல. இதை எப்போதுமே சொல்லிக்கொண்டிருக்கிறேன். ஆய்வுக்கருத்துக்கள் சமூகத்தின் சிந்தனைக்கு அவசியமானவை. அவை புறவயமானவை. ஆனால் அவற்றில் அவற்றை முன்வைக்கும் ஆய்வாளரின் நோக்கமும் பார்வையும் ஊடாடி அவற்றை வடிவமைத்துமிருக்கும். நான் கூறுபவை அகவயக் கருத்துக்கள். ஆனால் இவை சமூகத்தையும் மானுட உள்ளத்தையும் கவனிப்பதன் விளைவுகள். ஆகவே புறவயமதிப்பு கொண்டவையும்கூட.

நான் எழுதிய படைப்புக்களை வாசிப்பவர்கள், என்னால் சில நுட்பங்களைச்ச் சென்றடைய முடியுமென்று உணர்ந்தவர்கள் மட்டுமே இக்கருத்துக்களைப் பொருட்படுத்துகிறார்கள். நான் பேசுவது அவர்களுக்காக மட்டுமே. மற்றவர்களுக்கு இவை ‘யாரோ ஒருவன்’ சொன்ன கருத்துக்கள். அவர்களை நானும் என்னை அவர்களும் பொருட்படுத்துவதில்லை.

இதற்கு அப்பால் ஒன்று உண்டு. உலகச் சிந்தனை வரலாறெங்கும் ஒன்றைக் காணலாம். இலக்கியவாதிகளால் தத்துவங்களை மிகச்சிறப்பாக எடுத்துரைக்க முடியும். தத்துவப்பார்வையை வாழ்க்கையனுபவங்களுடன் இணைக்கவும் சரியான சொல்லாட்சிகளை அளிக்கவும் அவர்களால் இயலும். முன்னோடியான தத்துவஞானி ஒருவரின்  வழியை தொடரும் இலக்கியவாதி அம்முன்னோடியை மிகச்சிறப்பாக முன்வைக்கக்கூடும்.

தாமஸ் அக்வினாஸின் தத்துவம் தாந்தேயால்தான் நிறுவப்பட்டது. வால்டேரும் ரூஸோவும் முன்வைத்த ஜனநாயகக் கருத்துக்கள் விக்டர் யூகோவால்தான் நிலைகொண்டன. ஷோப்பனோவரைவிட அவரை அறிய தஸ்தயேவ்ஸ்கியே உகந்தவர். இது உலக இலக்கியமரபிலுள்ள ஒரு அரிய நிகழ்வுப்போக்கு.

நான் ஒரு சிந்தனை மரபைச் சேர்ந்தவன். அதை தெளிவான மொழியில் வாழ்வனுபவம் சார்ந்து முன்வைப்பவன். அதுவும் என் தகுதி. இத்தகுதிகள் எனக்கிருப்பதாக நம்புபவர்கள் மட்டும் என் கருத்துக்களை எண்ணிப்பார்த்தால் போதும்

ஜெ

எழுத்தாளன் வாழ்க்கை பற்றி அறிவுரைக்கலாமா?

எழுத்தாளன் வாழ்க்கை பற்றிஅறிவுரைக்கலாமா? -2

அறிவுரைத்தல் பற்றி மீண்டும்

எழுத்தாளனின் பார்வை

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 11, 2021 10:35
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.